Archive

Archive for August 4, 2005

கல்கியில் தமிழோவியம்

August 4, 2005 1 comment
Categories: Uncategorized

அ.கி. வேங்கட சுப்ரமணியன்

August 4, 2005 Leave a comment

மெலியார் முன் தன்னை நினைக்க ::

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் ஒரு முக்கியமான உறுதி மொழி – ‘எல்லா மானியங்களும் நகர்ப்புற ஏழை மக்கள், விவசாயக் கூலிகள், சிறு, குறு விவசாயிகள் போன்ற உண்மையிலேயே தேவையுள்ள ஏழை மக்களைத் துல்லியமாக குறி வைக்கும்’ (Targeted Sharply at the Poor and the Truly Needy) என்பதாகும். இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் (National Institute of Public Finance and Policy) ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஓர் அறிக்கையையும் தயாரித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதி அமைச்சகமும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. பொதுமக்களும் தங்கள் கருத்தை ஜூன் 28-ம் தேதிக்குள் தெரிவிக்கக் கோரியது. ஆனால் இதைப் பற்றி அதிக விளம்பரம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

அரசு மானியங்கள் என்பது வளர்ந்த நாடுகளிலும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள முக்கியப் பிரச்சினை மானியங்கள் எதற்கு, எவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம், நோய் தடுப்பு, சத்துணவு, நீர் மேலாண்மை போன்ற அனைத்து மக்களுக்குத் தேவையான இனங்களில் மானியம் அளிப்பது தேவைப்படலாம். இவை அனைத்துமே, மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டவை. மைய அரசு அளிக்கும் மானியங்களில் முக்கியமானவை, உணவு, உரம், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவையாகும்.

உணவு மானியம் அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

1990-1991ல் உணவு மானியம் – ரூ. 2,450 கோடி.
2003-2004ல் உணவு மானியம் – ரூ. 25,800 கோடி.

உணவு மானியத்தின் இரு முக்கிய அம்சங்கள் –

 • பொது விநியோகத் திட்டத்திற்காகக் கோதுமை, நெல் கொள்முதல் செய்யும்பொழுது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் விலை;
 • பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு தானியத்தின் விலை ஆகியவையாகும்.

  கொள்முதலைப் பொறுத்தவரை அரசு ஒவ்வோர் ஆண்டும் விவசாயச் செலவு மற்றும் விலைகள் ஆணையம் (Commission on Agricultural Costs and Prices) நிர்ணயிக்கும் விலைக்கு மேலேயே கொள்முதல் விலையை அறிவிக்கிறது. கொள்முதலும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலேயே நடக்கிறது. நாட்டிலேயே அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் மேற்கு வங்காளம், மையத் தொகுப்பிற்கு அளிக்கும் அரிசி மிக மிகக் குறைவு. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் மேற்கு வங்கத்திற்கு பஞ்சாபிலிருந்து 6 – 7 லட்சம் டன் அரிசி அனுப்பப்படுகிறது.

  கொள்முதல் செய்யும் மாநிலங்கள் பல்வேறு வரிகளையும் விதிக்கின்றன. அனைத்து மாநில மக்கள் மீதும் இந்த வரிப்பளு விழுகின்றது. இந்த மாநிலங்களில் உபரியாக நெல், கோதுமை வைத்திருக்கும் விவசாயிகளே கொள்முதலில் அதிகப் பயனடைகிறார்கள்.

  கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகத்திற்கு, விவசாயிகள் அளிக்கின்ற அனைத்து தானியங்களையும் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தேவைக்கு மேலாகத் தானியங்களைக் கையிருப்பில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்காக உணவுக் கழகத்திற்கு ஆகும் செலவும் உணவு மானியத்தில் வரும்.

  கொள்முதல் விலை ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே போனாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலை ஆண்டுக்காண்டு உயர்த்தப்படுவதில்லை. இதனால் உணவு மானியம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. குறைந்த விலையில் உணவு தானியம் வழங்கப்பட்டாலும் பல வட மாநிலங்களில் அதை வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை. இதனால் உணவுக் கழகத்தின் கையிருப்பு பெருத்த அளவில் கூடி அதைக் குறைக்க, உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட விலையிலே உணவு தானியத்தை அரசு வழங்கியுள்ளது. எனவே மக்களிடையே வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளிலே மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்‘, ‘கீழ் உள்ளவர்கள்‘ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் மைய அரசு நிச்சயித்த விலையை விட குறைவாக, கிலோவிற்கு ரூ. 3.50 என்று அரிசி வழங்கப்படுகிறது. வெளிச்சந்தை விலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கணிசமான அளவுக்குப் பொது விநியோக அரிசி வெளிச்சந்தைக்குக் கடத்தப்படுகிறது.

  1998 டிசம்பர் மாதம் ஒரு வாரப்பத்திரிகையில் ரேஷன் பொருள்களை வெளி மார்க்கெட்டில் விற்பதால் ரேஷன் கடைக்காரர்களுக்கு ஒரு மாத ‘லாபம்’ ரூ. 21,800 என்றும் அதில் அரிசியில் மட்டும் லாபம் ரூ. 12,000 என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்கு மறு மொழியாக ரேஷன் ஊழியர்கள்

  ‘எல்லா அரசியல் கட்சிகளும், எந்த ஒரு கூட்டம் அல்லது அரசியல் தலைவர் வருகை என்றால் முதன்முதலில் வசூல் செய்வது ரேஷன் கடைகளில்தான். இதை எந்த அரசியல் கட்சியாவது மாற்ற முடியுமா?’

  என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் ரேஷன் அரிசியின் விலை கிலோ ரூ. 2 என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகத் தோன்றவில்லை. இதனால் ரேஷன் கடை ‘லாபம்’, கடத்தல், அதை ஒட்டிய இதர முறைகேடுகள் அதிகரிக்கும்.

  உர மானியத்தைப் பொறுத்தவரை
  1980 – 81ல் ரூ. 500 கோடியாக இருந்தது.
  2004 – 05ல் ரூ. 12,662 கோடியாக உயர்ந்துள்ளது.

  இந்த மானியத்தில் ஒரு பகுதி, உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும், ஒரு பகுதி விவசாயிகளுக்கும் போகிறது. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி 1980-81 முதல் 2003-2004 கால அளவில்

  விவசாயிகளுக்குக் கிடைத்தது 62 சதவிகிதமும்,
  ஆலைகளுக்குக் கிடைத்தது 38 சதவிகிதமும் ஆகும்.

  இந்த உரமானியம் ஒரு முற்போக்கான மானியம் அல்ல. அதிக நிலம் உள்ளவர்கள், அதிக உரம் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு அதிக மானியம் கிடைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 75% விவசாயப் பண்ணைகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவானவை. அவர்களிடம் இருக்கும் நிலம், மொத்த விளைநிலங்களில் 30 சதவிகிதம்தான். எஞ்சியுள்ள 25 சதவிகித பண்ணைகள் 70 சதவிகித நிலங்களைக் கொண்டுள்ளன. அவர்கள்தான் உரமானியத்தால் அதிகம் பயனடைவார்கள்.

  மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு இரண்டும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. இதில் ஏற்படும் இழப்பை பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஈடு செய்கின்றது.

  மண்ணெண்ணெயில் மானியம்
  1993-1994ல் ரூ. 3,773 கோடி.
  1999-2000ல் ரூ. 8,151 கோடி.

  சமையல் எரிவாயுவின் மானியம்
  93-94ல் ரூ. 1,261 கோடி.
  00-01ல் ரூ. 6,724 கோடி.

  தற்போது இவை சற்றுக் குறைந்துள்ளன. சமையல் எரிவாயு, பெரும்பாலும் ஓரளவு வசதி படைத்தவர்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. மண்ணெண்ணெயும் அதிக அளவில் நகர்ப்புறங்களிலேயே வினியோகிக்கப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால் வெளிச்சந்தையில் கலப்படத்திற்காகக் கடத்தவும்படுகிறது.

  இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது மானியத்தைத் துல்லியமாக, ஏழை மக்களே பயனடையும் வகையில் வரையறுப்பது நடைமுறையில் மிகக் கடினமாகத் தோன்றுகிறது. தற்போது உள்ள நிலையின் மூலம் பல்வேறு பயன்களைப் பெறுவோர் அனைவரும் எந்தச் சீர்திருத்தத்தையும் ஏற்பதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் இதைப் பற்றி மக்களிடையே அதிகம் பேசுவதில்லை. சீர்திருத்தம் வரவேண்டும் என்றால் ஓரளவு வசதி படைத்தவர்கள், வசதியற்றவர்களுக்கு வழிவிட்டு மானியம் பெறுவதிலிருந்து விடுபட வேண்டும். இதற்கு அவர்களின் மனப்பாங்கு மாற வேண்டும்.

  ‘தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
  அம்மா பெரிதென்று அகமகிழ்க’

  என்கிறது நீதிநெறி விளக்கம். இவ்வாறு அகமகிழ்ந்து ‘மெலியார் முன் தன்னை நினைக்க’ ஒவ்வொருவரும் ஆரம்பித்துவிட்டால் மானியங்களை, உண்மையிலேயே அவை தேவைப்படும் ஏழை மக்களுக்கு அளிக்க முடியும்.

  | |

 • Categories: Uncategorized

  பாஸ்டன் கலை விழா

  August 4, 2005 16 comments
  Categories: Uncategorized