An Interesting Debate – Thamizsasi
கொள்கை அரசியல் பற்றிய, விரிவான அலசலை சசி வழங்குகிறார். பதிவு எத்தனைக்கெத்தனை சுவாரசியமோ, வந்து விழும் மறுமொழிகள் அத்தனை சுவாரசியம்.
விவாதத்தில் இருந்து சில துளிகள் :
சசி :
இன்றைய இந்திய/தமிழக சூழலில் மக்களுக்கு தேவை கொள்கைகள் அல்ல. யாருடைய கொள்கைகளும் யாருக்கும் தேவையில்லை. மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை.
சுந்தரமூர்த்தி :
முதல் பிரிவினர் தேவையில்லாமல் புலம்புகிறார்கள். இது பலவீனம். இரண்டாவது பிரிவினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறார்கள். வைகோவும், திருமாவும் அம்மா பக்கம் வந்தது ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் அடுத்த பேட்டைக்காரன் தன் பேட்டைக்கு வரும்போது எக்காளத்துடன் சிரிக்கும் பேட்டை ரௌடித்தனம். வீட்டுக்கு வரமாட்டார்களா என்று ஏங்கிவிட்டு வந்தபின் குறைந்தபட்ச நாகரிகம் கூட காட்ட முடியாத கோழைத்தனம்
டி.சே.தமிழன் :
பெரியாரின் கருத்துக்களை தீவிரமாய் மக்கள் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பெரியாரின் பாதிப்பால்தான் தமிழக மக்கள் தீவிர இந்துத்துவத்துக்குள் போகவில்லை என்றும், இந்துத்துவக் கட்சிகளால் தமிழகத்துக்குள் ஆழமாய் வேரூன்றமுடியாது இருக்கிறது என்றும் நினைக்கின்றேன். சரியா தெரியவில்லை
தங்கமணி :
பெரியார் வழி என்று கடைப்பிடிக்க அதில் எந்த நம்பிக்கையும் இல்லை. அப்படிக் ‘கடைப்பிடிப்பவர்கள்’ தான் சில பிரச்சனையைகளை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஒரு நம்பிக்கை அளவுக்கு அதை கீழிறக்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் அறிந்த பெரியார் உதவியால் உண்மையைக் கண்டுகொண்ட சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் கடைப்பிடிப்பதில்லை
ஜெயஸ்ரீ :
இதைத்தான் இணையத்தனமான விவாதம் என்று சொன்னேன். என்னை பாதிக்கவில்லை என்றால் நான் (ஸ்ரீரங்கத்தில் பிறந்ததால்) புரிந்துகொள்ளவில்லை என்று ஒரு ஸ்வீப்பிங் வாக்கியம். பெரியார் புரிந்துபோனதற்குக் காரணம் நீங்கள் நெய்வேலி. புல்லரிக்கிறது. ஒரு காம்பவுண்டை கட்டிக்கொண்டதுபோல் இருக்கும் நெய்வேலியைவிட ஸ்ரீரங்கம் பன்முகத்தன்மை கொண்டதை ஒருமுறை போய்வந்து அறியவும். பிறந்தது ஸ்ரீரங்கமானாலும் வாழ்க்கை அங்கேயே நின்றுவிடவில்லை. பல இடங்களில் கால்பதித்து பலமனிதர்களோடு கலந்து வாழ்ந்தே வருகிறேன். பெரியார் என்னைப் பாதிக்கவில்லை என்று நான் சொன்னால் என்னை (நல்லதாகவோ கெட்டதாகவோ)பாதிக்கவில்லை என்றுமட்டும்தான் அர்த்தம். புரியவில்லை என்று அர்த்தமில்லை. They didnt impress me anyway என்பதை எப்படி தமிழில் சொல்வீர்கள்?
அருள் :
குடும்பத்தாரும் மற்றவரைப் போலத்தான். நாம் உளறுவதை பிடித்திருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். இல்லாவிட்டால் கேலிசெய்துவிட்டுப் போய்விடுவார்கள்.
இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலத் தோன்றும். இங்கே சென்று வாசித்தால் முழுதும் விளங்கும்.
Recent Comments