Home > America, Experiences, Sujatha, USA > அறுபது அமெரிக்க நாட்கள் (17)

அறுபது அமெரிக்க நாட்கள் (17)


சுஜாதா
தமிழன் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 25-31, 96

அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும் சில நல்வாக்குகள். உங்களுக்கு விசா கவலை இல்லை. மகனோ, மகளோ சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்சர் செய்திருப்பார்கள். மனு செய்து, வரும் நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல் காத்திருந்து, விசா வந்தபின் புறப்படுவீர்கள்.

முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/மருமகன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்ட், டிஸ்னிலாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட் கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.

டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில வினோத சப்தங்கள் கேட்கும். பயப்பட வேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும் சப்தம்.

அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்திலிருந்து பார்க்கலாம். எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள் இருக்கும். உங்கள் மனைவிக்கு ‘ப்ரைஸ் இஸ் ரைட்’; உங்களுக்கு ‘ஜெனரல் ஹாஸ்பிட்டல்’; இப்படி எதாவது பிடிக்கலாம். தினம் முழுவதும் பண்டங்களை விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை நியுஸ¤ம் ஒரே மாதிரிதான் இருக்கும். ‘ஹிந்து’ மாதிரி, ‘The Almighty alone is worthy of obeisance’ போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு அந்த ஊர் பேப்பரில் வராது.

டி.வி.யில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தொருக்கொருத்தர் சகஜமாக பேசிக் கொண்டே ந்யூஸ் சொல்வார்கள். வானிலை இவர்களுக்கு ரொம்ப முக்கியம். போர்ட்டோரிக்காவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்து விடுவார்கள்.

காலையிலும், மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச் செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை. கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக் குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும். எதற்கும் பைக்குள் அட்ரஸ் வைத்துக் கொள்வது நல்லது.

சில நகரங்களில் பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது. யாராவது ‘மக்’ பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை உடைத்து விடுவார்கள்.

முதல் வருஷங்களில் தனியாகப் போவதை தவிர்க்கவும். போஸ்ட் ஆபீஸ், லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக் கொண்டு செல்லவும். திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.

அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால் டாக்டர்கள் தீட்டி விடுவார்கள். போன கையோடு இன்ஷ¥ர் செய்து கொள்வது நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள். இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிள்ளையைப் பிடுங்கி எடுத்து இன்ஷ¥ர் செய்து கொள்வது நல்லது. இங்கே வியாதி வருவது மிகவும் பணச்செலவாகும் சங்கதி.

எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், மைக்ரோவேவ், வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது எப்படி என்பது தெரிந்தே ஆக வேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ் இருக்கும்; திறந்தாலே எரியும்.

நம் ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில் முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும். சில வீட்டில் எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது. அக்கம் பக்கத்தில் புகார் செய்வார்கள். அதேபோல், இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது. நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போக முடியாது. கிளம்பும்போது அதையெல்லாம் முடித்துக் கொண்டு போவது உத்தமம்.

ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழக வேண்டும். பீட்ஸா பிடித்தே ஆகவேண்டும். அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான பரீட்டோ, டோர்ட்டியோ; எட்டு நாள் ·ப்ரீஸரில் வைத்திருந்து, சுட வைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும் பழக வேண்டும்.

அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்குப் பஞ்சமே இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும், சிரிப்பு நாடகக் குழுக்களும், கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி பண்ணிவிட்டுப் போவார்கள்.

இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் நாற்பது மைல் தூரத்தில் கட்டப்பட்ட முருகன் – பிள்ளையார் – மீனாட்சி – சீனிவாசர் ஆம்னி பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை சந்திக்கும் வாய்ப்பு வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கை அச்சு, உங்கள் வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.

‘பாப்’ சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை. வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப் பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை காலை வேளைகளில் அனைத்து டி.வி. சானல்களிலும் கிறித்துவ போதகர்கள் பேசுவார்கள். கேட்டுப் பார்க்கலாம். கடவுளைப் பற்றிய சில விஷயங்கள் நமக்கும் பொதுவாக இருக்கும்.

உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க பூமி. சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள் தள்ளிக் கொண்டு வரலாம். அதேபோல், ‘பார்ன்ஸ் அண் நோபிள்’ போன்ற புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள். உட்கார நாற்காலி கூட எடுத்துப் போகலாம்.

அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக் கூட கார் வேண்டும். உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமக்களில் யாரையாவது நாட வேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப பிசி.

(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது)

தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக் கொள்ளவும் பழகி விட்டால், நமக்கு எந்தவித கலாசார சம்பந்தமும் இல்லாத டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும் பழகி விட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.

மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகை வகையாக ப்ரேக் ·பாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள், உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால், தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்ட நாள் வாழ்வீர்கள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக் கொண்டு.

(இளம்பெண்களுக்கான அறிவுரையுடன் இந்த கட்டுரைத் தொடரை முடிக்கிறார்; யாராவது இளம்பெண்ணுக்குத் தேவையென்றால் சொல்லவும். அதை, ஸ்பெஷல் தட்டச்சில் அனுப்புகிறேன் 🙂

Categories: America, Experiences, Sujatha, USA
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: