[tamil] Tamil Glossary List, K. Ramanitharan
[tamil] Tamil Wor(l)ds (Was: Tamil word for Cheese)
From “K. Ramanitharan”
Date Thu, 30 Mar 2000 20:26:37 -0600
Delivered-To mailing list tamil@tamil.net
மொழி வளர்ச்சியிலே கலைச்சொல்லாக்கம் என்பது ஒரு முக்கியகூறு. அண்மையிலே இணையத்திலே கட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒக்ஸ்போர்ட் அகராதி (http://www.oed.com/) ஓராண்டுக்கு எத்தனை புதிய சொற்களை ஆங்கிலத்திலே உள்வாங்குகின்றது என்பதைக் காணும்போது, தமிழிலே அத்தகைய சீரான சூழல் இலை என்றேபடுகின்றது.
இரவீனின் கருத்து பொருத்தமானதே என்றே நினைக்கின்றேன். தமிழ்ச்சொல் ஆக்கத்துக்குப், உலகுபடப் பரந்திருக்கும் மொழி, அறிவியல்/கலை வல்லுநர்களை ஒன்று திரட்டிய ஒரு பொதுக்குழுவே அமைக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். வட்டாரவழக்கென்றாலும், அ·து எழுத்துவடிவிலே இடப்படும்போது, எல்லோர்க்கும் பொதுமொழியாகவே நிர்ணயிக்கப்படுதல் அவசியமாகின்றது. அந்த அளவிலே வேறுவேறு பிராந்தியங்களிலே ஒரே மொழியினைப் பேசுகின்றவர்களிடையே மொழி விலகலை அறிவியல்/ கலை சம்பந்தப்பட்ட அளவிலேனும் ஒன்றிணைத்து வைத்திருக்கும்.
ஆனால், இதிலே சில சிக்கல்கள் இருக்கின்றதை ஆங்காங்கே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று, இதுவரை நாள் இவ்வாறு பயன்படுத்திவிட்டோமே இனியெப்படி மாற்றுவது என்ற சிந்தை.
இரண்டாவது, பொருத்தமோ இல்லையோ, பெரும்பான்மை இதைத்தான் பயன்படுத்துகின்றது அவ்வாறே பயன்படுத்தவேண்டும் என்ற மனப்பாங்கு.
இன்னொன்று, தன்முனைப்பு ஓங்கிய தன்மையிலே ஒரு பொருந்திய முடிவுக்கு வராதிருத்தல்.
கணணி, கணிணி எது பொருத்தமானது என்பதைப் பற்றி தமிழின் பொருளடிப்படையிலே ஒரு முடிவுக்கு வருதலுக்கு முன்னர் () அது இப்படித்தான் என்றால் இப்படித்தான் என்ற தொனியிலும் அதட்டலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது (தமிழிணையத்தின் 97ம் ஆண்டின் சித்திரை, வைகாசி மாதச்சுவடிகள் இதற்குச் சான்று). கோ தற்போது இணையத்திலே இல்லாதபோதும், கண்ணன், அந்த தொடர், ‘கணிணி கணிணி கணிணிதான் ஐயா’ அஞ்சலை வாழ்க்கைமுழுவதற்கும் மறக்கமாட்டார் என்று எண்ணுகின்றேன்;-)))
http://www.tamil.net/list/1997-05/msg00547.html
நியூசிலாந்து நந்தன் இலங்கையிலே வழங்கியதைக் கணிணி என்று மாறுபடக் குறித்தாலும்,முனைவர். கல்யாணசுந்தரத்திடம் சிங்கப்பூரிலே கணிப்பொறிஞர் எஸ். ரங்கராஜன் கூறியதுபோலவே (http://www.tamil.net/list/1997-05/msg00498.html) கணிணி எனவே நிலைப்பட்ட வழங்கவேண்டுமென்று கூறினார்.
http://www.tamil.net/list/1997-05/msg00528.html
(சொன்ன சுஜாதா, கணிப்பொறி என்றே பின்னும் குறிப்பிடுகின்றார் என்பது வேறு விடயம்)
நான் கோவிடம் வாங்கிக்கட்டியதுடன் அரைச்சரணாகதியுடன்
http://www.tamil.net/list/1997-05/msg00520.html
கணக்கிடுவதினாலே கணணி என்றும் கணிப்பதாலே கணிணி என்றும் சொல்லி ‘பூ என்றும் சொல்லலாம் தம்பி சொன்னமாதிரி (புஷ்பம்) என்றும் சொல்லலாம்’ என்று வௌவால் விளையாட்டுக் காட்ட முயன்று கொண்டிருந்தேன்.
http://www.tamil.net/list/1997-05/msg00531.html
இது தொடர்பாக, திரு. ஜெயபாரதியின் தமிழாதாரத்துடன் விளக்கமான அஞ்சலொன்று வந்தது.
(இணையச்சுவடியிலே 97 வைகாசி, ஆனி மாதங்களிலே அதைக் காணமுடியவில்லை; அது சுவடியில் எம்மாதத்துக்குரியதென்று யாராவது தந்தால் பயனுடையதாக இருக்கும்).
தவிர, ஜெயபாலசிங்கம் electronics என்பதற்கு இலத்திரனியல் என்றும் அருண்மொழி மின்னணுவியல் என்றும் வாதாடியும் கொண்டிருந்தார்கள்
(http://www.tamil.net/list/1997-05/msg00611.html).
இது பிறகு electron என்பதற்குத் தமிழ் என்ன என விவாதமாய் விரிந்தது. data என்பதற்கு தரவு என்றும் விபரம் என்றும் civil engineering என்பதற்கு குடிசார் எந்திரவியலென்றும் வேறொரு பதமும் அவரவர் கற்கைக்கேற்ப மாறுபட்டிருக்கின்றன.
(இவ்வளவுக்கும் பின்னர், கணிணி என்பதனை இரண்டு வருடங்களாக, சென்ற ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். பின்னர், தமிழ்நாட்டு அரசினது ‘தானிட்டதே தமிழ்’ என்ற திணிப்புத் தோரணையை எதிர்க்குமுகமாக, மீண்டும் கடந்த ஒரு வருடமாக, கணணி என்பதையே பயன்படுத்துகின்றேன். மீள ஓர் ஒருங்கிணைப்புக்குழுவின் (குறைந்தபட்சம், க்ரியா தமிழகராதி/அகரமுதலி போல, ஒரு பல்நாட்டு அறிஞர்குழுவினைக் கருத்திலெடுத்து ஒரு முடிவுக்கு வரும்வரை அவ்வாறே பயன்படுத்தவும் திண்ணம்))
சாமுவேல் கந்தையா கூறிய தமிழ் கலைச்சொற்றொகுதிகள் பற்றி, அந்நிகழ்வுகளிலே ஈடுபட்ட ஒரு சிலரை அறிந்த குமாரபாரதி ஏதாவது கூறமுடியும்.
ஆயினும், இந்தச்சில அகராதிகள் பற்றி:
இவற்றிலே பௌதீகம், பிரயோக கணிதம், இரசாயனம் சம்பந்தப்பட்டவை சில க.பொ.த. உயர்தரம் கற்கும்போது, உலோனியின் திரிகோணகணித நூலின் தமிழாக்கம், பரட்டின் (??) பிரயோககணித நூல்களின் தமிழாக்கம் என்பவற்றுடன் (கருணாகரனின் பௌதீக கற்கைநூல்கள்) கையிலே அகப்பட்டிருந்தன. இந்த நூல்கள் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் இலங்கை அரசாங்க அச்சகத்தினால், அரசகரும மொழித் திணைக்களத்தினாலே வெளியிடப்பட்டவை. பின்னர், வழக்கொழிந்து போனவை (போக்கப்பட்டவைய அறியேன்).
சென்ற ஆண்டு பின்னரைப்பகுதியில் இவற்றினை வலையிலே இடத் தேடிக்கொண்டிருந்தபோது, இலண்டன் பத்மநாப ஐயர், எங்கிருந்தோ ஒளியச்சுப் பண்ணி வைத்திருந்த சில தொகுதிகளினைப் பெற்றுக் கொண்டேன். வேறு சிலவற்றினை யாழ் பல்கலைக்கழகத்திலிருப்பின், யாரிடமாவது ஒளியச்சுச் செய்து பெற்றுக் கொள்ள முயல்வதாகவும் அவர் கூறினார்.
(பலருக்கு மறந்து போயிருக்கக்கூடும்; ‘மதுரைத்திட்டம்’ தமிழ் இலக்கியங்களுக்கு என்று தொடங்கியபோது, ‘யாழ் திட்டம்’ என்பது தமிழிலே அறிவியற்படைப்புகளுக்காக ஆரம்பிப்பது பற்றி பேசப்பட்டது. (வேண்டுமானால், ‘ஒருதலைராகம்’ சந்திரசேகர் மாதிரி ‘வெள்ளை ரோஜா-குருவி’ கதை சொல்லிவிட்டு, உனக்குமா ரூபா?’ என்று பாலாவையும் கண்ணனையும் கேட்கலாம்;-))
பிறகு அப்படியே பேச்சேதுமின்றி நின்றுவிட்டது. அந்த அளவிலே, ஆரம்பத்துக்கு இவற்றை இடலாமோ என்ற எண்ணத்திலேதான் பெற்றுக்கொண்டேன். அதில், நான் தேடிய பௌதீக, பிரயோக கணித, இரசாயனச் சொற்றொகுதிகள் இல்லாதபோதும், வேறுபல இருந்தன). இலங்கையிலே இந்தவருடம் colorful தமிழிணையம் ’00 fancy show (as it was last year in Madras) [No business is like show business;-))] நடைபெறுவதாக இருந்தால், ஓரிரண்டை இலங்கைத்தமிழரின் தமிழிலே விஞ்ஞானத்துக்கான பங்களிப்பாகப் போட்டுக்கொள்ளுதல் அழகூட்டும் என்பதாக ஓர் எண்ணம் இருந்தது.
ஆயினும், அவை இரண்டு காரணங்களுக்காக வலையிலே இடவில்லை (என் சோம்பேறித்தனத்தினைத் தவிர;-)))
1. இலங்கை அரசாங்கத்தின் பதிப்புரிமை பெறவேண்டுமோ என்பது எனக்குத் தெரியவில்லை (தமிழிணையம் ’00 இன் இலங்கைப் பிரதிநிதிகளுடன் பேசிக்கொள்ளாமற் செய்வது நல்லதல்ல என்று பட்டது)
2. இலங்கை அரசு இந்தச் சொற்றொகுதிகளை எல்லாம் மீளாய்வு செய்து, புதிய சொற்களுடன் மேம்படுத்திய பதிப்புகளை இந்த கார்த்திகையிலே வெளியிடஇருப்பதாக, அதனுடன் சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஒருவர் கூறியதாகச் சொல்லப்பட்டது. (இந்தச்செய்தி வந்தது, தமிழிணையம் சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னராகும். தமிழிணையம் இலங்கையிலே நடக்காதது மிகவும் மனமகிழ்ச்சிக்குரிய விடயம் என்பது வேறு விடயம்)
தமிழ்நாட்டிலும் இதே போல எத்தனையோ சொற்றொகுதிகள் அப்படியே அறியாது தேங்கி பயன்படாது நிற்கலாம்.
ஆனால், இப்போது இத்தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது உண்மையானால், தமிழ்நாட்டு, மலேசிய சிங்கப்பூர் அறிஞர்களுடன் கலந்தாலோசிக்காமற் செய்யப்படுவது மிகவும் பயனற்ற ‘சுப்பற்றை கொல்லைக்குள் சுத்திச்சுத்தி’சகதி பண்ணும் சமாச்சாரமாகவே இருக்கும்.
(தமிழிணைய மகாநாடுகள் இணையத்திலே திறப்புவிழாக்களையும் பூனாவிலே
அரசுதயாரிக்கும் மென்பொருளின் விற்பனைக்கண்காட்சி விழாவாகவும் முடியாமல்,
இதற்கும் ஏதாவது செய்யுமா என்று யாரிடம் கேட்பது என்று யாராவது சொல்லமுடியுமா?
தான் அங்கீகரித்த உருத்திட்டத்தினையே நடைமுறைப்படுத்த முடியாத தமிழ் இணைய
கண்காட்சி ஒன்றுகூடல்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமோ தெரியாது:-(()
[போன வருடம் எழுதிய அதே மடலின் கருத்தைத்தான் மீளப் பேசவேண்டும்;
TAB (Tamil Encoding Scheme OR Tamilnadu Encoding Scam? No offence to any individual, but I wonder what the tamil nadu technical committee ‘boss’ does beyond acting as a salesman for C-DAC) கொண்டு வந்தாகி இத்தனை நாளாயிற்று; எத்தனை பேர் அரைத்திருப்தி முழுத்திருதியாக இருக்கின்றார்கள் என்பது வேறுவிடயம்; பல எழுத்துரு அமைப்பாளர்கட்கு இது நடப்பது பற்றி விபரமே தெரியவில்லை.])
இதேபோல, தமிழிலே ஓர் அகராதியை/அகரமுதலியை இணையத்திலே இடும் வேலை எத்துணை அவசியமாகின்றது. இல்லாவிட்டால், எழுபது எண்பதாண்டு பழைய கொலோன் அகராதியிலிருந்து நாளுக்கொரு சொல்லை யாராவது கிண்டி எடுத்து அறோ அறு என்று இனியும் அறுபட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
நாகு தொடங்கிய அகரமுதலி தொடர்ந்து வளர்ந்து கொண்டிந்தால், மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். ஏனையோரின் உற்சாகமின்மை, அவரினையும் சோர்வடையச் செய்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.
குறைந்தபட்சம், இத்தனை தமிழ் எழுத்துருக்களை வர்த்தகரீதியிலே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்கூட, இதனை எண்ணாமல் இருக்கின்றது ஏனென்று தெரியவில்லை. ‘மதுரைத்திட்டம்’ போல, பழைய + புது அகராதிகளை வைத்துக் கொண்டு, கொஞ்சப்பேர் சிரமதானம் செய்வதிலே ஆரம்பிக்கலாமோ? ஒன்று மட்டும் நிச்சயம்; அரசே அரசே என்றால், அகராதி வரப்போவதில்லை;
அதனால், அகராதியை இணையத்திலே உள்ளிட்டு முடிக்கும் ஒவ்வொருவருக்கும் இறுதியிலே கணிணிமாமணி பட்டம் அய்யன் அகராதிக்கு வலை கண்ட விழாவிலே வழங்கப்படும் என்று இத்தால் உறுதி செய்து முரசறைகின்றோம். (கூடவே, real audio இலே நேரடி ஒலி/ஒளி பரப்புமுண்டு என்பதையும் அறிக;-))
கீழே கையிலிருக்கும் இலங்கை சொற்றொகுதிப்பட்டியல்:
(பத்மநாப ஐயருக்கு என்றும்போல் நன்றி; if history on the survival of eelam tamil literature will be written in the future, it can be dedicated to this man, only to this man.)
1. மனையியற் சொற்றொகுதி: (Glossary of Home Science) 1959 [Eng->Tam] 265 pgs
2. உடற்றொழிலியலும் உயிரிரசாயனவியலும் (Technical terms in Physiology &
Biochemistry)
1965 [Eng->Tam] 122 pgs
3. உடலமைப்பியலும் இழையவியலும் (Glossary of technical terms in Anatomy and
Histology)
1965 [Eng->Tam] 106 pgs
4. நோயியற் சொற்றொகுதி (Glossary of Technical Terms in Pathology) 1965
[Eng->Tam] 58 pgs
5. உயிரியல் விஞ்ஞானம் (technical terms in biological sciences) 1961 [Tam->Eng]
290 pgs
(இத்தொகுதி, தாவரவியல், விலங்கியல், உடற்றொழிலியல்-உடனலவியல்,பயிர்ச்செய்கை
என்பவற்றினை உள்ளடக்கியது)
6. பிறப்புரிமையியல்-குழியவியல்-கூர்ப்பு (Glossary of Technical terms: Genetics-Cytology-Evolution)
1964 [Eng->Tam] 69 pgs
தமிழ் தரவுத்தாள் தளம்
http://www.tamildata.co.cc
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்