Home > Authors, Books > மேலும் படிக்க

மேலும் படிக்க


15

11.01.09 தொடர்கள்

எப்படியும் சுதந்திரம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த உடனேயே இலங்கை விஷயத்தில் ஒரு காரியம் செய்தார்கள். 1944-ம் வருடம் அது.
பூரண சுதந்திரம் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசாமல், சும்மா இலங்கைக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தினை ஒழுங்கு செய்து வைப்பதற்காக லார்ட் ஸால்பரி (Lord Soulbury) என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தார்கள்.

இந்தக் குழு என்ன செய்ய வேண்டும்? இலங்கைக்கென ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தினை வடிவமைக்க வேண்டும். இலங்கை அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைத்துத் தரப்பு மக்கள், அவர்களுடைய மதம், கலாசாரம், இன வேறுபாடுகள் தொடங்கி அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, தேசத்தின் தன்மைக்கேற்றவாறு அந்தச் சட்டம் அமையவேண்டுமென்பது முக்கியம்.

ஆனால், ஸால்பரி கமிஷன் நியமிக்கப்பட்டவுடனேயே சிங்கள அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். எக்காரணம் கொண்டும் தமிழர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது. ஒரு மைனாரிட்டி இனமாக அவர்கள் சுட்டிக்காட்டப்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சம உரிமை, அந்தஸ்து என்று பேசத் தொடங்கிவிட்டால் பிரச்னை. பின்னால் சமாளிக்க முடியாது போய்விடும். எனவே ஜாக்கிரதை.

மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர்கள் இந்த ஒற்றை இலக்கை முன்வைத்துத் தங்கள் பிரசாரங்களை முடுக்கிவிடத் தொடங்கியபோது, தமிழர்களுக்காகப் பேசுவதற்கு அங்கே இருந்த ஒரே இயக்கம் All Cylon Tamil Congress..

1944-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கம் இது. கணபதி பிள்ளை கங்கேசர் பொன்னம்பலம் என்னும் ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தொடங்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களின் தொடக்க கால வரலாற்றில் ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு முக்கியமான புள்ளி. 1901-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒரு போஸ்ட் மாஸ்டரின் மகனாகப் பிறந்தவர் பொன்னம்பலம். கொழும்புசெயிண்ட் ஜோசப் கல்லூரியில் அடிப்படைப் படிப்பை முடித்துவிட்டு ஸ்காலர்ஷிப்பில் லண்டனுக்குச் சென்று அங்கே கிங்ஸ் காலேஜில் இயற்கை அறிவியல் படித்துப் பட்டம் பெற்றார். பிறகு கேம்பிரிட்ஜில் சட்டப்படிப்பு.

இலங்கை திரும்பிய பிறகு தீவிரமாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். அந்நாளில் அங்கே தேசிய அளவில் புகழ்பெற்ற கிரிமினல் லாயர் அவர்.

வழக்கறிஞர் தொழிலில் இருந்தபடியேதான் அரசியலில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். 1934-ல் இலங்கை மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடங்கி சுதந்திர இலங்கையின் டி.எஸ். சேனநாயகா தலைமையிலான முதல் அவையில் அங்கம் வகித்தது வரை வெகு நீண்ட சரித்திரம் உண்டு அவருக்கு.

1956 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் மதிப்பு மிகு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் பொன்னம்பலம். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பின்னர் படிப்படியாகச் சரிந்து போய்விட்டது. அவர் ஆரம்பித்த இலங்கைத் தமிழ் காங்கிரஸில் உறுப்பினராகச் சேர்ந்தவர்தான் பின்னாளில் `தந்தை செல்வா’ என்று அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.

செல்வநாயகம் வந்த பிறகுதான் தமிழர்கள் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுக்கக்கூட ஒரு வழி உண்டானது. அதுநாள் வரை பொன்னம்பலம் சொன்னதுதான் எடுபட்டது. விருப்பமிருந்தாலும் இல்லாது போனாலும் அவர் பேசியது மட்டுமே தமிழ்க்குரலாக அங்கீகரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அரசியலில் அவருக்குப் போராட்ட குணம் போதுமான அளவு இல்லாது போய்விட்டது.

அரசியல் சாசனம் எழுதப்படத் தொடங்கியபோது, பொன்னம்பலமும் அவருடைய இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சகாக்களும் மிகத் தெளிவாகத் தமிழர்களுக்குச் சரிபாதி உரிமை கோரினார்கள். சிங்களர்களுக்கு ஐம்பது சதம். ஆதிகுடித் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ்ச் சமூகத்துக்கு மீதி ஐம்பது சதப் பிரதிநிதித்துவம்.

ஆனால், சிங்கள அரசியல்வாதிகளுக்குச் சமமாக பிரிட்டிஷ் அரசு இதனை நிராகரித்தபோது, தொடர்ந்து போராடாமல் போய்விட்டதுதான் அவர் செய்த முதல் மற்றும் மிகப்பெரிய தவறு.

சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தபோதிலும் 1948 குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்காது போனது அடுத்த பெரும் தவறு. லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் முகவரியற்றுப் போனபோது செய்வதற்கொன்றுமில்லை என்னும்படியாகப் பார்த்துக்கொண்டிருந்ததில்தான் தமிழர்கள் கொதித்துப் போய்விட்டார்கள்.

1949 டிசம்பரில் இலங்கைத் தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கியதன் அடிப்படை இதுவே.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் குரல் எழுப்பியவர் தந்தை செல்வாதான். 1956 வரை இலங்கை அரசியலில் ஈடுபட்டுவிட்டு, இனி சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகு மலேசியாவுக்குப் போய் பழைய வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்தான். ஆனாலும் பதவி ஒரு பொருட்டில்லை என்பதையே தன் வாழ்நாள் செய்தியாக வைத்துவிட்டுப் போனவர், செல்வா.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கையில் பிறந்தவரில்லை. அவர் பிறந்தது மலேசியாவில். தனது நான்கு வயதில் இலங்கைக்கு வந்து சேர்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் காலேஜிலும் பிறகு செயிண்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார். பொன்னம்பலத்தின் இலங்கைத் தமிழ் காங்கிரஸில் சேர்ந்த நாள் தொடங்கி மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்.

செல்வநாயகம், பொன்னம்பலத்தைவிட மூன்று வயது மூத்தவர். தொடக்கத்தில் இருவருக்கும் மிக நல்ல, மேலான நட்புறவும் புரிந்துணர்வும் இருந்தது. கட்சியின் துணைத்தலைவராக செல்வாதான் இருந்தார். ஆனால், பொன்னம்பலத்தின் விட்டுக்கொடுக்கும் அரசியல் செல்வநாயகத்துக்குப் பிடிக்கவில்லை.

எதற்காக சிங்களர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்? ஏன் எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்க வேண்டும்? எந்த உரிமையும் இல்லாமல் வெறுமனே அவர்களை ஆதரித்துக்கொண்டு குறைந்தபட்சம் எதிர்க்காமலேனும் இருப்பதில் என்ன லாபம்? அரசியல் அமைப்பில் பிரதிநிதித்துவம் இல்லை. ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. சமூகத் தளத்திலும் சம உரிமை இல்லை. அப்புறம் எதற்கு அவர்களுக்குக் காவடி தூக்க வேண்டும்?

1947 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று செல்வநாயகம் பொன்னம்பலத்துடன் அவைக்குச் சென்றபோது, பின்னால் இப்படியெல்லாம் நேரும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஒரு துரோகம் புரிந்த கட்சியாக வருணிக்கப்படும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. தனது தலைவருக்கு எதிராகத் தானே ஒரு கட்சி தொடங்கவேண்டி வரும் என்று எண்ணியிருக்கவில்லை. அந்தக் கட்சி இலங்கை அரசியலில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனைக்கு வழி வகுக்கும் என்றும் நினைத்திருக்கவில்லை.

அவர் அமைதியானவர். அதிகம் பேசுகிற வழக்கம் இல்லாதவர். அதிகமென்ன, பெரும்பாலும் பேசவே மாட்டார். எழுதுவதும் வெகு சொற்பம். பேச்சல்ல, செயல் என்பதே அவரது கொள்கையாக இருந்தது. வன்முறை என்கிற ஒன்றை எண்ணிக்கூடப் பார்த்திராத தலைமுறையைச் சேர்ந்தவர்.

அதற்கான அவசியத்தை அந்தக் காலம் உருவாக்கியிருக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

மைனாரிட்டிகள் ஒடுக்கப்படும்போது அதற்காகப் போராடவேண்டும் என்பதையே முதன்முதலில் அவர்தான் அங்கு சொல்லிக் கொடுத்தார். இலங்கையின் அரசியல் ஒழுங்காக நடைபெற வேண்டுமானால் கூட்டாட்சி முறைதான் சரிப்படும் என்று மிகத் தொடக்க காலத்திலிருந்தே வற்புறுத்தி வந்தவர் செல்வா.

ஆனால், எந்தக் காலத்திலும் சிங்கள அரசியல்வாதிகள் அவரது கோரிக்கையைப் பொருட்படுத்தியதில்லை. அவர்களுக்கு பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகளே சௌகரியமாக இருந்தார்கள். கேளுங்கள், கொடுக்கமாட்டோம்; சரியென்று ஒப்புக்கொண்டு அடுத்த வேலைக்குப் போய்விடுங்கள். நீ கேட்கவில்லை என்றும் இருக்காது, நான் கொடுத்தேன் என்றும் இருக்காது. எத்தனை வசதி! இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். நட்புணர்வு. புரிந்துணர்வு.

சுதந்திரம் அடைந்தபின்பு எட்டாண்டுகள் வரை ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு பார்லிமெண்டேரியனாக இலங்கையில் செயல்பட முடிந்திருக்கிறது எந்தவிதச் சிக்கலும் இல்லாமல். கடைசி வரை சிங்கள அரசியல்வாதிகள் யாரும் அவரை அரசியலில் இருந்து விரட்ட முயற்சி செய்யவில்லை. தமிழரசுக் கட்சியின் தோற்றம்தான் இலங்கைத் தமிழ் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளியது. இது சரித்திரம்.

1956-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் செல்வாவின் தமிழரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றி கண்டது. தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் செல்வா, செல்வா என்று ஒரே பெயர்தான் ஓங்கி ஒலித்தது. ஒரு முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கமாக அடையாளம் காணப்பட்ட தமிழரசுக் கட்சியை ஒரு தேசிய இயக்கமாகவே வழி நடத்தவேண்டுமென்று செல்வா நினைத்தார்.

தமிழர் உரிமைக்காகப் போராடுவது செயல்திட்டம். ஆனால் ஒரு பிராந்திய இயக்கமாக அது அடையாளம் காணப்பட்டுவிடக் கூடாது. அது ஆபத்தானது மட்டுமல்ல. செல்வாவின் விருப்பமும் அதுவல்ல.

அவர் ஒரு பிறவி தேசியவாதி. காந்தியைப் போல் அறப் போராட்டங்களில் நம்பிக்கை கொண்டவர். போராடிப் பெறுவதுதான் வழியென்றால், அமைதியாகப் போராடுவோம் என்பதுதான் அவரது கொள்கையாக இருந்தது.

1956 தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைத்த சாலமன் பண்டாரநாயகா (Solomon West Ridgeway Dias Bandaranaike) முதல் காரியமாக இலங்கையின் ஒரே மொழி சிங்களம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். தேசிய மொழி, ஆட்சி மொழி, அதிகார மொழி எல்லாம் அதுவே.

எனில் தமிழ்?

கண்டுகொள்ளவில்லை. பார்ப்போமே, என்னதான் செய்வார்கள்?

போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்று செல்வநாயகம் சொன்னார். லங்கா சம சமாஜக் கட்சியினர் (கம்யூனிஸ்டுகள்) நீங்கலாக, இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் மக்கள் இயக்கங்களும் ஒருமித்து ஆதரித்துக் கைதட்டிய இந்தச் சட்டத்துக்கு வரக்கூடிய எதிர்ப்பு எப்படி இருந்தாலும், அடங்கிவிடக் கூடியதாகவே இருக்கும் என்று பண்டாரநாயகா நினைத்தார்.

ஏனெனில், சிங்களம் பேசுவோர் பெரும்பான்மையினர். அநேகமாக எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள். தவிரவும் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்திருந்த இடங்களும் அவர்களைக் கவலை கொள்ளச் செய்திருந்தன. செல்வா, பொன்னம்பலம் போல் இல்லை. சரிப்பட்டு வராதவர். ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். மொழியில் தொடங்கலாம். விழியைப் பிடுங்க அதுவே வசதி.

சுதந்திர இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, மிகக் கொடூரமான நடவடிக்கை அதுதான்.

அதிர்ந்து போனார்கள் தமிழர்கள். தமிழ் பேசும் மாகாணங்களில்கூடத் தமிழ் ஆட்சி மொழி கிடையாது. கடைப் பலகைகள் முதல் கவர்ன்மெண்ட் ஆபீஸ் ரெக்கார்டுகள் வரை சகலமும் சிங்களம். தமிழாவது, வெங்காயமாவது? வேண்டுமானால் வீட்டுக்குள் பேசிக்கொள். வெளியே வந்தால் சிங்களம்தான்.

போராடலாம் என்று செல்வா சொன்னார்.

1956 ஜூன் 5-ம் தேதி இந்த சிங்களம் மட்டும் சட்டத்தை விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியபோது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும், கொழும்பு நாடாளுமன்றக் கட்டடத்துக்கு எதிரே கூடி சத்தியாகிரகத்தில் இறங்கினார்கள்.

விபரீதம், கருங்கல் வடிவில் முதன்முதலில் பறந்து வந்து நடுவே விழுந்தது.

16

15.01.09 தொடர்கள்

மொழி என்றில்லை. எதையுமே திணிப்பது என்பது பெரும்பாலும் பலன் தராது. கட்டாயத்தின் பேரில், அச்சத்தின் பேரில் ஒரு விஷயத்தைச் சுமப்பது மனிதகுலத்துக்கு ஆதிமுதலே ஒத்துவராதது. இங்கே, தமிழகத்திலும் பஞ்சாபிலும் அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாகாணங்களிலும் ஐம்பதுகளில் மேற்கொள்ளப்பட்ட ஹிந்தித் திணிப்பு என்ன ஆனது என்பது நினைவிருக்கிறதல்லவா? அடுத்து வந்த ஒரு பெரும் தலைமுறையே கவனமாக ஹிந்தி அறியாத தலைமுறையாக வார்த்தெடுக்கப்பட்டதையும் நினைவுகூரலாம்.

இந்தியாவில் ஹிந்தி படியுங்கள் என்று அன்று சொல்லப்பட்டதற்கும் இலங்கையில் சிங்களம்தான் தேசிய மொழி என்று அறிவிக்கப்பட்டதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உண்டு. ஆனாலும் இதனை இங்கே நினைவுபடுத்தக் காரணம், `திணிப்பு’ என்கிற நிலைக்குச் செல்லாதபோதே நாம் அதனை எத்தனை தீவிரமாக எதிர்த்தோம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதன்மூலம் இலங்கைத் தமிழர்களின் ஆவேசத்தின் நியாயத்தைப் புரியவைப்பதற்குத்தான்.

சிங்களம் மட்டும் என்று அரசு அன்று சட்டம் கொண்டுவந்ததற்கு `தமிழ் இல்லை’ என்பது தவிர, இன்னொரு காரணமும் உண்டு. தமிழர்களையும் படிப்படியாகச் சிங்களம் படிக்கவைப்பது என்பது இதன் உள்ளுறை செயல் திட்டம். வாழ்ந்தாக வேண்டும். வேலை வாய்ப்புகள், கல்வி அனைத்தும் சிங்களம் சார்ந்தே இருக்கும் பட்சத்தில் அம்மொழியைக் கற்பது தவிர வேறென்ன வழி?

முதலில் எதிர்த்தாலும் போக்கிடமில்லாமல் வந்து சேரத்தான் வேண்டும் என்றும் சிங்கள அரசு நினைத்தது. ஏதோ கணக்குப் போட்டு, சிங்களம் அன்றைக்கு அழிந்துகொண்டிருக்கும் மொழி என்றும் ஒரு புலம்பல் பாடல்இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. வாழவைக்க வேறு வழியேது? எனவே சிங்களம் மட்டும்.

அரசுக்கு எதிரான தமிழர்களின் அந்த முதல் எதிர்ப்பு என்பது அற வழியில்தான் ஆரம்பித்தது. சத்தியாகிரகம். செல்வநாயகம் தலைவராக இருக்கும்போது வேறு வழிகள் குறித்துச் சிந்திக்க இயலாது. அதற்கான அவசியமும் அப்போது உருவாகியிருக்கவில்லை என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

எனவே, கொழும்புவில் நாடாளுமன்றத்துக்கு எதிரே அறப்போரைத் தொடங்கினார்கள். பதிலுக்குக் கருங்கற்கள் பறந்துவந்தன.

அடித்தது யார், தூண்டியது யார், நாடாளுமன்ற வளாகக் காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருப்பதில் பொருளில்லை. சரமாரியாக வந்து தாக்கிய கற்கள் பல தமிழர்களின் தலையைப் பதம் பார்த்தன. ரத்தப் பெருக்குடன் விழுந்தவர்கள் மேலும் மேலும் தாக்கப்பட்டார்கள்.

ஒரு பதில் தாக்குதல், தொடர்ந்து ஒரு பெரும் கலவரம் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக அது நடக்காதபடியால் மேலும் சினமடைந்து தங்கள் தாக்குதலின் எல்லைகளை விஸ்தரித்தனர்.

தமிழர் வாழும் பகுதியெங்கும் பரவலாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. கோயில்கள் தாக்கப்பட்டன. குடியிருப்புகளில் புகுந்து வலுக்கட்டாயமாக மக்களை இழுத்துப்போட்டு அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின. தப்பியோடிய பலரைத் தேடி இழுத்து வந்து அடித்தார்கள்.

முதன் முதலாக, எந்தத் தமிழரை அடித்தாலும் காவல் துறை கைது செய்யாது, வழக்குப் போடமாட்டார்கள், அனுமதியுள்ளவரை அடித்துத் தீர்க்கலாம் என்பது சிங்கள வன்முறையாளர்களுக்குத் தெரிந்த சம்பவம் அது. எனவே, விளையாடிப் பார்க்கும் மனோபாவமும் அவர்களது வெறியில் கலந்திருந்தது. தமிழர்கள் மீதான பலநாள் வன்மத்துக்கு முதல் முறையாக ஒரு வடிகால் கிடைத்த திருப்தி சேர்ந்துகொள்ள, தேசமெங்கும் தமிழர் பகுதிகளில் இந்த அநாகரிகம் தடையற்று அரங்கேறியது.

பண்டாரநாயகாதான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார் என்றபோதிலும், அன்றைய சூழலில் பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகள் தமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால் முதலில் செய்யவேண்டிய வேலை என்று இதைத்தான் மனத்தில் வைத்திருந்தார்கள். சிங்கள மக்களையும் புத்தபிக்குகளையும் திருப்திப்படுத்துவது என்பதைத் தாண்டி, தமிழர்களை ஒதுக்கி ஓரம் கட்டுவது என்கிற அணையாத வன்மத்தின் வெளிப்பாடே இது.

நீ அரசு ஊழியனா? உனக்குக் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். தெரியாதா? கற்றுக்கொள். கற்றுக்கொள்ள மாட்டாயா? உனக்குப் பதவி உயர்வு கிடையாது. சம்பள உயர்வு கிடையாது. ரொம்ப எதிர்க்கிறாயா? வேலையே கிடையாது.

நடந்தது. இப்படித்தான் செய்தார்கள். மட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் சிங்களம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. கல்வி முழுதும் சிங்கள வழியே என்று சொல்லப்பட்டது. தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் சிங்களம் போதிக்கும்படி சர்க்குலர் அனுப்பினார்கள். மறுத்தால் பள்ளி நடத்த அனுமதி ரத்து. தவிரவும் புதிய தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எதுவும் திறக்க முடியாதவாறு பார்த்துக்கொள்ள சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

இன்னொரு காரியமும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது. சட்டம் அமலான உடனேயே பள்ளிப் பாடப்புத்தகங்களில் சில விசேஷப் பாடங்கள் சேர்க்கப்பட்டன. இலங்கையின் வரலாறு. அது சிங்களர்களின் தேசம். பூமி தோன்றிய தினத்திலிருந்து சிங்களக் கொசுக்கள், சிங்களக் கரப்பான்பூச்சிகள், சிங்களப் பசுக்கள் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள்தான் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்கள் இடையில் எப்போதோ வந்து ஒட்டிக்கொண்டவர்கள். எனவே அவர்கள் இரண்டாம் குடிமக்கள். சிங்கள அரசு மிகவும் பெருந்தன்மையுடன் அவர்களும் வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறது. இதைப் பாராட்ட வேண்டாமா? கொண்டாட வேண்டாமா? மும்முறை வலம் வந்து விழுந்து சேவித்து எழவேண்டாமா?

தமிழ் மாணவர்கள் மத்தியில் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான் என்னும் எண்ணத்தை அழுத்தந்திருத்தமாக ஏற்படுத்துவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. எதிர்ப்பு, வெறுமனே அரசியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமானதாக இருந்தது.

ஏராளமான ஊர்வலங்கள், பேரணிகள், சத்தியாகிரக வழிமுறைகள்.

எல்.எச்.மேதானந்தா என்பவர் அப்போது சிங்கள மொழிப் பாதுகாப்புப் பேரவை என்னும் அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பினர், சத்தியாகிரகத்தில் ஈடுபடும் தமிழர்களை அடித்து நொறுக்குவது ஒன்றே சிங்களப் பாதுகாப்புக்குச் சிறந்த வழி என்று கருதினார்கள்.

சொல்லிக்கொண்டே போவதில் பொருளில்லை. தமிழர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்றால், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணத் தொடக்கமாக அமைந்தது.

ஆனால் எந்த விதமான தாக்குதலுக்கும் தமிழர்கள் தரப்பில் மனச்சோர்வு ஏற்படவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தொடர்ந்த அவர்களது போராட்டங்களின் விளைவால், வேறு வழியில்லாமல் பண்டாரநாயகா சற்றே இறங்கி வந்தார். சரி, பேசலாம்.

1956-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி பண்டாரநாயகாவுக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பண்டா – செல்வா ஒப்பந்தம் என்று இதனைச் சரித்திரம் சொல்லும்.

சிங்களம் மட்டும் சட்டத்தில் அதிகம் கைவைக்காமல் தமிழுக்கு ஓர் ஓரத்தில் சிறு இடம் கொடுக்க ஒரு முயற்சி. சிறுபான்மையினர் மொழி என்பதாக. தவிரவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் (தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இவை) அரசு அலுவலகங்களில் தமிழும் பயன்படுத்தப்படலாம் என்னும் நிலையை எட்டுவதற்கான முயற்சியாக அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அடக்கடவுளே! இதென்ன அக்கிரமம்? என்ன ஆயிற்று பண்டாரநாயகாவுக்கு? கூப்பிடுங்கள் புத்த பிக்குக்களை.

அது அவர் எதிர்பாராதது. தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்காக, பிரியாணி பொட்டலம்கூடக் கேட்காமல் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்த புத்தபிக்குகள் எல்லோரும் பண்டாரநாயகாவின் வீட்டு வாசல்முன் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள்.

வெட்கமாக இல்லை? கேவலம் தமிழர்களுக்கு பயந்துவிட்டாய். அவர்களுடைய சத்தியாகிரகத்துக்கு அடிபணிந்துவிட்டாய். நீயெல்லாம் ஆண்மகனா? வீரமில்லையா? உடம்பில் ஓடுவது என்ன ரத்தம்? சுத்த சிங்கள பிராண்ட் என்றால் இப்படியா செய்திருப்பாய்? உனக்காகவா தேர்தல் வேலைகள் செய்தோம்? இதற்காகவா உன்னை ஆட்சியில் உட்கார வைத்தோம்?

பிக்குகள் மட்டுமல்ல. பண்டாரநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த நிலைத் தலைவராக அப்போதிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனது அரசியல் கிராஃபில் மேலே ஏறுவதற்கான ஒரு சரியான சந்தர்ப்பமாகக் கருதினார்.

என்ன செய்யலாம்?

ஆ, பாதயாத்திரை! சரித்திரம் தோறும் பல சாகசக்காரர்களுக்கு உதவிய வழிமுறை. காந்தி வழிதான் என்றாலும் காத்திரமான வழி. தேசம் முழுதும் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், இதனைக் காட்டிலும் சிறந்த வழியில்லை.

உண்ணாவிரதம் உட்காரலாம். பிரச்னையில்லை. ஆனால் ஒழியட்டும் சனியன் என்று ஆரஞ்சு ஜூஸ் கூடக் கொடுக்காமல் சாகடித்துவிடும் அபாயம் இருக்கிறது. தர்ணா செய்யலாம். ஆனால் ஒரே கட்சியில் இருந்து கொண்டு அப்படியெல்லாம் செய்வது ரசாபாசமாகிவிடும். பாதயாத்திரை என்றால் பிரச்னையே இல்லை. நடந்துகொண்டே இருக்கும் கணங்களில் எல்லாம் செய்தியில் விழுந்துகொண்டே இருக்கலாம்.

வேண்டியது அதுதான். மக்கள் கவனிப்பார்கள். மதிக்கத் தொடங்குவார்கள். பண்டாரநாயகாவுக்கு அப்புறம் என்று யோசிக்க ஒரு வேளை வரும்போது, தயங்காமல் தன் பெயரை நினைவுகூர்வார்கள். சரித்திரம் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருப்பெற ஒரு சந்தர்ப்பம்!

ஜெயவர்த்தனா முடிவு செய்தார். பாத யாத்திரை. குறுகிய தூர யாத்திரையல்ல. நீதி கேட்டு நெடும்பயணம். கண்டி முதல் கொழும்பு வரை. போதாது?

அது ஒரு சிறப்பான முடிவு என்று காலம் பிறகு தீர்ப்பு வழங்கியது அவருக்கு. கண்டியில் அவர் பாதயாத்திரை தொடங்கியபோது உடன் வந்த கூட்டம், ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் அதிகரித்துக்கொண்டே போனது.

சிங்கள மொழி உணர்வு என்பதை தேசிய உணர்வாக்கப் பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், ஓர் ஆதிக்க உணர்வாக அழுத்தந் திருத்தமாக அதனை மக்கள் மனத்தில் பதியச் செய்வதுதான் ஜெயவர்த்தனாவின் நோக்கமாக இருந்தது.

நாம் ஆளப் பிறந்தோம். நமது மொழிதான் தேசிய மொழி. இரண்டாவது மொழி என்கிற பேச்சுக்கே இடமில்லை. இன்னொருத்தனுக்கு சிறு துளியேனும் இடமளிக்க அவசியமில்லை. இது நம் மண். இது நம் மொழி. ஒண்ட வந்தவர்களை ஒதுக்கித் தள்ளு.

உலகம் முழுதும் சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் சிறுபான்மையினரிடமிருந்துதான் கோஷங்களும் கோரிக்கைகளும் போராட்டங்களும் பெரும்பாலும் புறப்படும். குரல்வளை நசுக்கப்படுவதும் அங்கேதான்.

முதன் முதலாக, பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்படுவதாக ஒரு மாயையை உருவாக்கிப் படரவிட்டு, அதை ஒரு வன்மப் பெருநெருப்பாகப் பரிமாண வளர்ச்சி கொள்ளச் செய்ததில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு நிகரென்று யாரையுமே சொல்லமுடியாது.

ஜெயவர்த்தனாவின் அன்றைய நடைப்பயணம் என்ன சாதித்தது?

சுலபம். பண்டாரநாயகா, தாம் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அறவே தலைமுழுகினார்.

மன்னித்துவிடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன். எனக்குச் சிங்களர்கள்தான் முக்கியம். அவர்களுடைய உணர்வுகள்தாம் முக்கியம். புத்தபிக்குகளைக் காட்டிலும் முக்கியமானவர்கள் வேறு இல்லை. பதவி எல்லாவற்றைக் காட்டிலும் அதி முக்கியம். ஆகவே, திரு. செல்வநாயகம், உமக்குப் பன்னிரண்டு திருமண் சாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்கள் உண்மையுள்ள..

17

18.01.09 தொடர்கள்

காந்திக்கு தண்டி யாத்திரை. ஜெயவர்த்தனாவுக்குக் கண்டி யாத்திரை. அடக்கடவுளே. விட்டால் இவரையும் மக்கள் மகாத்மா என்று சொல்லிவிடுவார்களோ? அன்றைய பண்டாரநாயகாவின் அமைச்சரவையில் இருந்த பிற அமைச்சர்களுக்கே இந்தக் கவலை வந்துவிட்டது. ஏதாவது செய்தாக வேண்டும். ஜெயவர்த்தனாவின் யாத்திரையின் விளைவாக மட்டும் பண்டாரநாயகா தனது ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டுவிட்டால் வேறு வினையே வேண்டாம். எல்லா புகழும் ஜெ.வுக்கே. இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க பைத்தியமா பிடித்திருக்கிறது அமைச்சர் பெருமக்களுக்கு?

விட்டேனா பார் என்று, அவர்கள் தம் பங்குக்கு இன்னொரு எதிர்ப்பு நடவடிக்கைக்குத் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.

ஜெயவர்த்தனா மாதிரி ஊர்வலம்தான் சரி. சுற்றிலும் அழகு சேர்க்க புத்தபிக்குகள். நடுவே நடந்து வரும் அமைச்சர்பிரான்கள். ஆனால் ஏதேனும் ஒரு வித்தியாசம் வேண்டும். ஜெயவர்த்தனா நினைத்துப் பார்த்திராதது. மக்களைப் புருவம் உயர்த்தச் செய்யக்கூடிய விதமாக. பண்டாரநாயகா பதைத்துப் போகும் தரத்தில்.

ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்கள். சவப்பெட்டி ஊர்வலம்!

பண்டா – செல்வா ஒப்பந்தப் பிரதி ஒன்றை எடுத்து ஒரு சவப்பெட்டியில் போட்டு மூடுவது. அதை இழுத்துக்கொண்டு பண்டாரநாயகாவின் வீட்டு வாசலுக்கு வந்து ஒப்பாரி வைப்பது. பிறகு சவத்தை எரிப்பது.

சவப்பெட்டி கலாசாரத்துக்குள் புகுந்தால் புதைப்பதுதான், எரிப்பதில்லை என்பதெல்லாம் முக்கியமில்லை. இது காட்சி அரசியல். எனவே, அதன் தீவிரத்தில் எள்ளளவும் சமரசத்துக்கு இடமில்லை.

புறப்பட்டார்கள். சில அமைச்சர்கள். பின்னணியில் நிறைய புத்தபிக்குகள். பின் தொடரும் நிழலின் குரலாக ஏராளமான தொண்டர்கள். ஆர்வம் மேலிட்டு ஊர்வலத்தில் பங்குகொண்ட பொதுமக்கள்.

பண்டாரநாயகாவை இன விரோதியாகச் சித்திரித்துக் கோஷங்கள் எழுந்தன. துண்டுப் பிரசுரங்கள் பறந்தன. அனல் வீசும் மேடைப்பேச்சுகள். ஆதரவாளர்களின் கைதட்டல்கள். தேசம் முழுதும் திரும்பி நின்று வேடிக்கை பார்த்தது.

பண்டாரநாயகாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் வீட்டு வாசலில் சவப்பெட்டியில் வைத்து எரிக்கப்பட்ட ஒப்பந்தப் பிரதியையே பார்த்துக்கொண்டிருந்தார். தன் அரசியல் எதிர்காலம் இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்ற கவலை அவரைப் பற்றிக்கொண்டது.

கையெடுத்துக் கும்பிட்டார். ஐயா மன்னியுங்கள். பிக்குகளே மன்னியுங்கள். தொண்டர்களே, தோழர்களே, ரத்தத்தின் ரத்தமான சிங்கள உடன்பிறப்புகளே மன்னியுங்கள். ஏதோ பலவீனமான தருணத்தில் செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இந்தக் கணமே அதைத் தலை முழுகினேன். என்னை நம்புங்கள். இதையேதான் ஜெயவர்த்தனாவுக்கும் சொன்னேன். உங்களுக்கும் சொல்கிறேன். என்னை நம்புங்கள்.

பண்டாரநாயகாவுக்கு எதிரான போராட்டங்கள் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தன. ஆனால், அந்தச் சம்பவம் தமிழர்களுக்குப் பல உண்மைகளை மிகத் தெளிவாக விளக்கிவிட்டன.

எக்காலத்திலும் சிங்கள அரசு தமிழர்களுக்குச் சாதகமான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது என்பது அவற்றுள் முதலாவது. சிங்கள அரசியல்வாதிகளுள் நியாய தர்மம் பார்க்கக்கூடியவர்களென்று யாருமில்லை என்பது அடுத்தது. மெஜாரிட்டி சிங்கள மக்களிடையே தமிழர்கள்பால் சற்றேனும் அன்போ, சகோதரத்துவமோ இல்லை என்பது மூன்றாவது. இனி தொட்டதற்கெல்லாம் தாங்கள் போராடித்தான் தீரவேண்டியிருக்கும் என்பது நான்காவது.

இந்த ஒப்பந்த மீறல் சம்பவம் ஓர் அப்பட்டமான அரசியல் துரோகம். அன்றைக்கு பண்டாரநாயகா எதிர்ப்புகளுக்குப் பணியாது இருந்திருந்தால், சிங்கள மக்கள் மிகச் சிறிய அளவேனும் யோசித்திருக்கக் கூடும். எதிர்த்து ஒரு சத்தம் போட்டதுமே தொடைநடுங்கிப் போனதன் காரணமாக, தமிழர்களுக்குச் சாதகமாக எந்த ஒரு விஷயத்தையும் எக்காலத்திலும் அனுமதிக்கவே கூடாது என்னும் எண்ணம் மிக ஆழமாக அவர்கள் மனத்தில் வேரூன்றக் காரணமாகிப் போனது.

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான அந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் தமிழினத்துக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தூக்கிக் கொடுத்துவிடக்கூடிய மாபெரும் அம்சங்கள் ஏதேனும் இருந்ததா என்றால், அதுதான் இல்லை! சொற்பமான சமாதானங்கள். அற்பமான சமரசங்கள். மிகச் சுருக்கமாக ஒப்பந்தத்தின் சாரத்தை இங்கே பார்த்துவிடுவோம்.

றீசிங்களம்தான் தேசியமொழி. இதில் சமரசமில்லை. சட்டத்தை மாற்றுவதற்கில்லை.

றீ தேசிய சிறுபான்மையோர் மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்படும். ஆனால், இது அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்துத் தளங்களிலும் ஆளும் மொழியாக சிங்களம் இருப்பதைப் பாதிக்காது.

றீவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் ஆளும் மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்படும்.

றீதமிழர்களின் பகுதியான இந்த இரு மாகாணங்களில் வசிக்கும் தமிழர் அல்லாதோருக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இருக்கலாகாது.

றீ மலைத்தோட்டத் தொழிலாளர்களுக்கு (இந்தியாவிலிருந்து சென்றவர்கள்) குடியுரிமை அளிப்பது பற்றிப் பரிசீலனை.

றீ வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வரி விதிக்க, கடன் வாங்க அனுமதி.

றீ குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மாகாண சபை எடுக்கும்.

இவை தவிர இன்னும் ஒன்றிரண்டு அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்தன. என்ன இருந்து என்ன? சவப்பெட்டிதான்.

எனவே, தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் என்றால் பொதுக்கூட்டம் என்று பொருள். சத்தியாகிரகம் என்று அர்த்தம். கோஷங்கள், புலம்பல்கள், கோரிக்கை மனுக்கள், உண்ணாவிரதங்கள், கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், துயரத் தீர்மானங்கள்.

இவை ஒருபுறமிருக்க, இந்த ஒப்பந்த நாடகச் சம்பவத்துக்குப் பிறகு சிங்கள மக்களிடையே தமிழர் விரோத மனப்பாங்கு மிகத் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. யூதர்களை ஹிட்லர் பார்த்ததற்கு ஒப்பாக இதனைச் சொல்ல முடியும். இந்தக் காரணமற்ற விரோத மனோபாவம் மிகக் குறுகிய காலத்தில் தனது அடுத்த பரிமாணத்தைத் தொடத் தயாராக இருந்ததை, அந்நாளைய சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

தமிழர் தலைவர்களுக்கும் தெரிந்தேதான் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அமைதி வழியில் போராட்டம் என்று செல்வநாயகம் சொல்லியிருந்தார். அவர் அதில் மிக உறுதியாக இருந்தவர். அன்றைய தேதியில் இலங்கைத் தமிழர்களின் ஒரே பெரிய தலைவர் அவர்தான் என்பதால், ஒரு பிரச்னை என்று வருமானால் எதிர்த்து ஆயுதம் ஏந்தலாமா என்று கேட்கக்கூட யாருக்கும் திராணியில்லை.

ஆனால் ஒன்று நிச்சயம். பிரச்னை வரும். மிகப் பெரிதாகவே வரும். அதன் கோர முகம் எப்படி இருக்கும் என்பதுதான் தெரியாத ஒரே விஷயம். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எந்தக் கணத்திலும் மோதல் வெடிக்கலாம், விபரீதம் விளையலாம், கலவரம் சூழலாம் என்பது மாதிரியே நிலவரம் இருந்தது. அப்படியொரு சூழல் வராமல் தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையிலும் பண்டாரநாயகாவின் அரசு இறங்கவில்லை. ஒரு பக்கம் புத்தபிக்குகள் தங்கள் மடாலயங்களை விட்டு வெளியே வந்து மக்கள் மத்தியில் பேசத் தொடங்கியிருந்தார்கள். சிங்களர், தமிழர் வேறுபாடுகள். தங்கள் இனத்தின் மேன்மையும் உன்னதங்களும். தமிழனைப் பார்க்காதே. தமிழனுடன் சேராதே. தமிழனை அண்டவிடாதே. நீ இடத்தைக் கொடுத்தால் அவன் மடத்தைப் பிடுங்குவான்.

இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக இதையே இன்னொரு விதமாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்தன. வர்த்தகத் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர்களைச் சுட்டிக்காட்டி, உங்களுக்கு ரோஷமில்லையா, மானமில்லையா, வக்கில்லையா, வழியில்லையா என்று திரும்பத் திரும்பப் பொதுக்கூட்டங்கள் தோறும் சிங்கள மக்களை அவர்கள் தூண்டிக்கொண்டிருந்தார்கள். அரசுத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் வீதியில் அலைந்துகொண்டிருக்க, தமிழர்கள் எத்தனை சொகுசாக வாழ்கிறார்கள் பாரீர் பாரீர் என்று கோலி சோடா குடித்துவிட்டு முழங்கினார்கள்.

தோதாக சிங்கள மீடியா இத்தகைய சொற்பொழிவுகளையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து வெளியிட்டு, துவேஷத்துக்கு பெட்ரோல் ஊற்றத் தொடங்கியது. வெகு சாதாரண நாலாம்தர அரசியல்வாதிகளின் பொதுக்கூட்டங்களுக்கெல்லாம் கூட நாளிதழ்களில் முக்கியத்துவம் கிடைத்தன. இதில் கட்சி வேறுபாடுகளே கிடையாது. ஆளும் கட்சிப் பேச்சாளர் சொற்பொழிவானாலும் சரி, எதிர்க்கட்சிப் பேச்சாளர் சொற் பொழிவானாலும் சரி. தமிழர்களைத் தாக்குகிறார்களா? போடு முதலில்.

பலன் வெகு சீக்கிரத்தில் கிடைத்தது.

அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மத்திய மாகாணப் பகுதியில் உள்ள பொலன்னறுவை என்கிற நகரத்தில் முதன் முதலாகக் கலவர நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.

சோழர் காலத்தில், தலைநகரமாக விளங்கிய இடம் அது. கி.பி. 13-ம் நூற்றாண்டு வரை பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு பல சிங்கள மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். இலங்கை புதைபொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு வெகு முக்கியமான களம். தோண்டத்தோண்ட, பல சரித்திரப் பொக்கிஷங்கள் அகப்பட்டுக்கொண்டே இருக்கும் பூமி. உலகப்புகழ் பெற்ற உறங்கும் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது பொலன்னறுவையில்தான்.

புத்தர் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பொழுதில்தான் அங்கே 1958_ம் ஆண்டு கலவரம் வெடித்தது. இனக்கலவரம்.

இத்தனைக்கும் ஒப்பீட்டளவில் அந்தப் பகுதியில் மக்கள் அடர்த்தி குறைவு. குறிப்பாகத் தமிழர்கள் குறைவு.

அதனாலென்ன? கொளுத்திப் போட ஓரிடம் வேண்டும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது இருப்பதில் தவறொன்றும் இல்லையே?

இன்னதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பொலன்னறுவையில் இனக்கலவரத்தின் முதல் கல் வீச்சுகள் ஆரம்பித்தன. சட்டென்று அது தீ வைப்புகளாகவும் படுகொலைகளாகவும் கற்பழிப்புகளாகவும் பரிமாண வளர்ச்சி கொண்டது. அடடே, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நம் ஊரில் இந்தத் திருவிழா வேண்டாமா என்று கொழும்புவில் இருந்த சிங்களர்கள் கவலை கொண்டார்கள்.

அதன்பின் நடந்ததெல்லாம் அழிக்கமுடியாத ரத்த சரித்திரம்.

Categories: Authors, Books Tags: , , , , ,
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: