Archive

Archive for February 11, 2009

காதலென்பது…- ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 1 comment

இரண்டு பஸ்கள் நிற்கவில்லை. தீப்தி அடுத்த வந்த பஸ்ஸை நிறுத்த இன்னும் அதிகம் முனைப்பு எடுத்துக்கொண்டாள். மணியும் சாலையின் பாதிக்கே போய் நின்றுகொண்டான். சரியாக அவர்களைக் கடக்கும்போதுதான் பஸ்கள் வேகமெடுத்தன. டிரைவர் முகங்களில் ஒருவித வன்மம் போல் ஏதோவொன்று தெரிந்தது.

அடுத்த பஸ்ஸும் நிற்கவில்லை. தீப்தி முகம் கூம்பிப் போய்விட்டது. கல்லூரி வாசலில் இருந்து இன்னும் தெரிந்த முகங்கள் வெளியே வந்தன. இவர்களைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். கெஸ்மிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். கம்பைண்ட் கிளாஸ்களில் பார்க்க முடியும் கூட்டம்.

மீண்டும் மரநிழலில் வந்து நின்றுகொண்டான் மணி. தார் உருகும் வெயில். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆட்டோ வந்தாலாவது இவளை அழைத்துக்கொண்டு போய்விடலாம். அவ்வப்போது லாரிகள் உறுமிக்கொண்டு போயின. தீப்தி இன்னும் நடுத்தெருவில் தலையில் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு நின்றாள்.

சின்ன உருவம். சொப்பு பொம்மை மாதிரி. நிறைய கூந்தல். அதைப் பின்னி மாளாததுபோல், கீழ்முனையில் கட்டாமல் அவிழ்ந்துகிடந்தது. சட்டெனத் திரும்பி, மணியைப் பார்த்துச் சிரித்தாள். பஸ் வருகிறது, வாவா என்று சைகையில் அழைத்தாள். இந்த பஸ்ஸும் நிற்காது என்று மணிக்குத் தோன்றியது. எல்லாம் எல்.எஸ்.எஸ். பஸ்கள். கல்லூரி வாசலில் இவற்றுக்கு நிறுத்தம் இல்லை.

வழக்கப்போல், டிரைவர் தீப்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அடித்துக்கொண்டு போனார்.

“என்னய்யா பஸ்காரன் நிறுத்தவே மாட்டேங்கறான்?”

நொடிக்கொரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மணி கையில் கடிகாரம் இல்லை. பத்து இருக்கலாம். முதல் வகுப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தாயிற்று.

“ஆஸ்பிட்டல் உனக்குச் சரியா தெரியுமா? போயிட்டு மத்தியானத்துக்குள்ள வந்துட முடியுமா?”

மணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காலையில் கல்லூரிக்கு வந்ததில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறாள். முதல் வகுப்பையும் தியாகம் செய்துவிட்டுக் கிளம்புவதுதான் திட்டம். முதல் வகுப்பு, துறைத் தலைவர் எடுக்கும் வகுப்பு. அவ்வளவு சீக்கிரம் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது.

“வந்துடலாம்மா. எதுக்குக் கவலைப் படறே? பஸ் கிடைச்சா, இங்கேயிருந்து அடுத்த பதினஞ்சு நிமிஷம். திரும்பிவர இன்னொரு அதிகபட்சம் அரைமணி நேரம். போயிட்டு வந்துடலாம்.”

அவளுக்கும் இந்த கணக்கின் எளிமை புரிந்திருக்கவேண்டும். ஆனாலும் சந்தேகம். முடியுமா என்ற அச்சம். நண்பர்களிடம் இருந்து பைக்கை வாங்கிக்கொண்டு போய்வந்துவிடலாம் என்று மணி முதலில் யோசனை சொன்னான். அதை அப்போது ஒப்புக்கொண்டவள், என்ன தோன்றியதோ, அப்புறம் வேண்டாம் என்றுவிட்டாள். வீணா எதுக்கு வம்பு?

மீண்டும் வெயிலில் போய் நின்றுகொண்டாள் தீப்தி. வகுப்பைவிட்டு இந்த நேரத்துக்கு மணி வெளியே வந்ததில்லை. பொதுவாக மூன்று நான்கு வகுப்புகளுக்குப் பின் தான் வெளியே வருவான். மணி பனிரெண்டு பனிரெண்டரை மணி அளவில் ஒன்றன் பின் ஒன்றாக பஸ்கள் வர ஆரம்பிக்கும்.

எதிர்பார்க்கும்போது வராமல் போவதுதான் பஸ்ஸின் மகத்துவம். இந்தப் பூந்தமல்லி ஐரோடு போகும் பல பஸ்களை அவன் தொடர்ந்து பார்த்திருக்கிறான். தீப்தி குறிப்பிடும் மருத்துவமனையை அவன் பல முறை கடந்திருக்கிறான். சொல்லப்போனால், எல்லா பஸ்களுமே அந்த மருத்துவமனையைக் கடந்துதான் போகவேண்டும்.

அதுவுமில்லாமல், மனத்தில் அவசரம். பதற்றமில்லாமல் இருக்குமா?

“எங்க ஆஸ்சிடெண்ட் ஆச்சு?”

மணி தீப்தியைப் பார்த்துக் கேட்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தவள், மணி பக்கம் திரும்பினாள்.

“நெல்லூர்லேருந்து திரும்பிவரும்போது, இவங்க வந்த காரை ஒரு லாரிக்காரன் பின்னாலேயிருந்து மோதியிருக்கான்.”

“எதுக்கு நெல்லூர் போனார்?”

“அவர் சர்வீஸ் எஞ்சினியர்தானே. அங்கே ஏதோ கிளையண்ட் இருக்காங்களாம். இவரும் இன்னொரு எஞ்சினியரும் போயிருக்காங்க. வேலையை முடிச்சுட்டு அடுத்த நாளே திரும்பியிருக்காங்க. வரும்போதுதான் இந்த ஆஸ்சிடெண்ட்.”

ஜன்னல் வெளியே தீப்தி பார்வையை விலக்கிக்கொண்டாள். பஸ் தடதடவென சத்தம் கொடுத்துக்கொண்டு ஓடியது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னே இருந்த வரிசைகளில் யாருமே இல்லை. டிரைவர் அருகே இரண்டு மூன்று கூடைகள் அடுக்கப்பட்டு, பக்கத்தில் சில் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கண்டெக்டரும் முன்னால் உள்ள சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

“நாலு நாள் ஆச்சு ஒரு விவரமும் தெரியல. போனும் இல்ல. அவங்க வீட்டுப் பக்கமே போக முடியல. முந்தாநேத்து ராத்திரி அவரோட தம்பிதான் வந்து விஷயம் சொன்னான். காலு கை எல்லாம் ஃப்ராக்சராம். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. நேத்தே போய் பார்க்கணும்னு பார்த்தேன். முடியல…”

பேசப் பேச குரல் மெல்லிதாகிக்கொண்டே வந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பிக்கொண்டாள். வெளியில் இருந்து வெப்பக்காற்று மட்டுமே உள்ளே வந்தது. ஜன்னல் ஓரமெல்லாம் தகித்தது. இவளோடு பழக ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் இருக்குமா? இருக்கலாம். இன்றுவரை அவள் உற்சாகம் குன்றி, குரல் கம்மி அவன் பார்த்ததில்லை.

“நேத்து ஃபுல்லா, அவரோட அம்மாதான் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தாங்க. போயிருந்தாலும் பார்த்திருக்க முடியாது. இன்னிக்குத் தம்பி கூட இருக்கானாம். “

அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பத்து நாற்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தது. ஒரு மணிக்குள் திரும்பிவிட முடியும் என்றுதான் மணிக்குத் தோன்றியது.

“அவங்கம்மாவுக்கு என்னைக் கண்டாவே பிடிக்கல. ரெண்டு மூணு முறை என்னையும் அவரையும் பார்த்திருக்காங்க. வீட்டுல போய் ஓரே காச்மூச்சுனு கத்தலாம். என்கிட்ட என்ன கொறையக் கண்டாங்களோ, தெரியல..”

அடுத்து வந்த நிறுத்தத்தில் கூடைக்காரர்கள் இறங்கிக்கொண்டார்கள். பஸ் இன்னும் தடதடத்தது. அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கவில்லை. கண்டெக்டர் டபுள் விசில் கொடுத்தார். இவர்களைப் பார்த்து, அடுத்த ஸ்டாபிங்கில் இறங்குகிறீர்களா என்பதுபோல் சைகைக் காட்ட, ஆமாமென தலையாட்டினான் மணி.

பஸ்ஸை விட்டு இறங்கிப் பின்னால் நடக்க வேண்டும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். தீப்தி எழுந்து படிக்கட்டின் அருகே போய் நின்றுகொண்டாள். மணி குனிந்து அந்த மருத்துவமனை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தான்.

“அண்ணா எதுவும் சொல்லவேண்டாம்னு சொன்னான். நான்தான் மனசு கேக்காம, தீப்திகிட்ட போய் சொன்னேன். தீப்தி அழவே அழுதுட்டா. பயப்பட ஒண்ணுமில்லை. பிராக்சர்தான், இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாயிடும்னு சொன்னேன்.”

“டாக்டர் என்ன சொன்னார்?”

“மருந்து மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க. இன்னும் பத்து நாள் இங்க இருக்கச் சொல்வாங்கன்னு நினைக்கறேன். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”

மணி அந்த மருத்துவமனை வரண்டாவைப் பார்தான். எதிரெதிர் அறைகள். ஒவ்வொரு அறை வாசலிலும் இரண்டு மூன்று சேர்கள் போடப்பட்டிருந்தன. சில காலியாக இருந்தன. தூரத்து அறை வாசலில் ஒரு பெண் தூங்கிக்கொண்டு இருந்தாள். சவரில் ஆங்காங்கே வண்ண ஓவியங்கள். உடல் நோய் இருக்கும்போது, யார் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? தெரியவில்லை.

“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”

“ஆமா. நேத்து ஃபுல்லா அம்மா இருந்தாங்க. ராத்திரி அப்பா இருந்தாங்க. அம்மா சமைச்சு எடுத்துகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் நான் இருப்பேன். சைக்கிள் டெஸ்ட் வேற வருது. வீட்டுல போய் படிக்கணும்.”

“இங்க படிக்க முடியலையா?”

“ஐயே.. இந்த ஆஸ்பத்திரி நாத்தம் தாங்கவே முடியலை. முதல் நாளெல்லாம் பயம் வேற. இவனை பார்க்கவே முடியாது. ஐசியூல இருந்தான்.”

இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே சுவரில் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருந்தது. இடதும் வலதுமாக அது போய் போய் வரும்போது, வெப்பக்காற்றோடு, பினாயில் வாசனையையும் தெளித்துவிட்டுப் போனது. மேலே ஃபால்ஸ் சீலிங்.

டியூட்டி நர்ஸுகள் உட்காரும் இடம் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள். அல்லது, கையில் ஒரு காகிதக் கட்டுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகப் போய் வந்தார்கள். நடுநடுவே இரண்டு வார்த்தைகள். ஒரு சிரிப்பு. ஒரு அவசரக் கிறுக்கல்.

அடுத்த இரண்டாவது அறையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு முதியவர் சாப்பாட்டுக் கூடையை எடுத்து வந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்தவர், ஒரு கணம் நின்றுவிட்டு, அப்புறம் உள்ளே நுழைந்தார். எங்கேயாவது மணியைப் பார்த்தவராக இருக்கலாம்.

“சங்கர், உன்னை அண்ணா கூப்பிடறாரு.”

அடுத்திருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு தீப்தி வெளியே வந்தாள். மணி முகத்தைப் பார்த்துவிட்டு, தன் கைக்கடிகாரத்தையும் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்ததைப் போல் தோன்றியது.

“ஃபை மினிட்ஸ் மணி. இதோ சொல்லிட்டு வந்துடறேன். போய் சேர்ந்துடலாம் இல்லியா?”

பேராசிரியர் தனபால் சாரின் ஸ்கூட்டர் கல்லூரி அருகே வந்து நின்றபோது மணி மதியம் 1.10. தீப்தி பின்னால் போய் உட்கார்ந்துகொண்டாள். மணியையும் ஏழுமலையையும் பார்த்து மையமாகப் புன்னகைத்தார்.

“செமஸ்டருக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சா?”

“இனிமேதான் சார்.” எதற்கும் இருக்கட்டும் என்று புன்னகைத்து வைத்தான் மணி. ஏழுமலை வாயே திறக்கவில்லை. சென்ற ஆண்டு வரைக்கும், அவனுக்கு இயற்பியல் வகுப்பெடுத்தவர். அப்புறம் ரிடையரானார்.

தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அவர் ஸ்கூட்டரை வேகப்படுத்தினார். தீப்தி தலைகவிழ்ந்திருந்தாள்.

“எங்கடா, ரெண்டு பேரும் அவசரமா போயிட்டு வந்தீங்க?”

“தீப்தி லவ்வர் ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தார். அவரைப் போய் பார்த்துட்டு வந்தோம்.”

தற்செயலா இல்லை இயல்போ தெரியவில்லை. ஏழுமலை தன்னைக் கூர்மையாகப் பார்ப்பதுபோல் இருந்தது மணிக்கு. அவன் ஏதேனும் சொல்லிவிடுவானோ என்றும் பயமாக இருந்தது. ஒரு கணம் அவன் பார்வையை மணியால் சந்திக்க முடியவில்லை.

தலையைத் திருப்பிக்கொண்ட ஏழுமலை, “பைத்தியம்டா நீ” என்று மட்டும் சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க எதிர்பக்கம் நடக்கத் தொடங்கினான்.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

தொடரும்… – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 Leave a comment

நந்தினி பால்கனிக் கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெறுக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும்.

ஜன்னல் கர்ட்டன்களைக் கூட விலக்கி வைக்கவில்லை.

எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம்வரை மழை பெய்துகொண்டிருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலைமேல் பூக்கள் சிதறிக்கிடந்தன. தெருவின் இருபுறமும் வரிசைகட்டிய கார்கள். சிவப்பும் மஞ்சளுமாய் பூக்கள்.

இன்று ஞாயிறாக இருக்கவேண்டும். தெருவில் மனித சப்தமே இல்லையே. தெருவில் காலை அகலப்போட்டு நடக்கலாம். எவரும் பார்க்கமாட்டார்கள்.

அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பார்த்தால்தான் என்ன? அடையாளம் காண்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அடையாளம் காண்பவர்களும் அதிகபட்சம் உதிர்ப்பது சின்னப் புன்னகை. இயல்பாக மறுபுன்னகை சிந்திவிட்டு நகர்ந்துவிட முடிகிறது. பெரும்பாலும் கேள்விகள் இல்லை. விசாரிப்புகள் மட்டும் தெரிந்தவர்களிடமிருந்து வரும். “பொண்ணு எங்க படிக்கறா?”, “மெட்ராஸ்லேயே வந்து செட்டிலாகிட்டீங்களா?”. கீழ் ஃப்ளாட் எம்.எம். குடுவா மட்டும் அம்மையும் அச்சனையும் சேர்த்துக் கேட்பார்.

இதெல்லாம் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இல்லை. விசாரிப்புகள். இந்த விசாரிப்புகள் மூலம் மட்டுமே பெறப்பட்ட பல செய்திகள், முன்னர் பத்திரிகைகளை அலங்கரித்தது உண்டு. இப்போது நான் செய்திப் பொருளில்லை. அதனால் விசாரிப்புகளும் இல்லை.

அறைக்குள் வந்து துப்பட்டாவை மேலே எடுத்து அணிந்துகொண்டாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தாள். காலை முதல் ஓடுகிறது. ஒன்று மாற்றி ஒன்றாகக் குழந்தைகளின் சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு சேனல்கள்! எவ்வளவு கற்பனைகள்! தன் வயதுக் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகளைக் கண்டது இல்லை.

கதவைப் பூட்டிவிட்டு, சாவியைக் கையடக்கப் பர்ஸுக்குள் வைத்துக்கொண்டாள். உள்ளே அதிகப் பணம் இல்லை. என்ன செலவு இருக்கிறது? ஒன்றும் வாங்கப் போவதில்லை. கடைகளும் இந்த மழையில் திறந்திருக்கப் போவதில்லை. வாங்கிக் குவித்தக் காலங்கள் இப்போது அபத்தமாகத் தோன்றுகின்றன. வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனவை ஏராளம்.

வாசல் கூர்க்கா எழுந்து நின்றான். பக்கத்தில் அவன் மனைவி தேசலாகத் தெரிந்தாள். சிரித்தாள். கொஞ்சம் தள்ளி குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டு இருந்தது. சப்பை மூக்கு, வெளிறிய வெண்மை நிறம். ரோஸ் நிறத்தில் அவள் கட்டியிருந்த புடைவை, அவ்வளவு இணக்கமாக இருந்தது.

“சாவியைக் கொடுங்கள், காரை வெளியே எடுத்துத் தருகிறேன்” என்றான் கூர்க்கா. சாவியைக் கொண்டு வரவில்லை. பரவாயில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு கேட் அருகே போய் நின்றுகொண்டாள். சும்மா காலார நடக்க எதுக்கு கார்? சாலை முழுவதும் பூக்கள் கொட்டிக் கிடந்தன. எதிர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்கள் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தெருவெங்கும் மரங்கள் மூடி வெளிச்சத்தை மையிட்டுக்கொண்டு இருந்தன.

“குழந்தைக்கு ஸ்வெட்டர் போடு. அப்புறம் சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள் கூர்க்காவிடம். அவன் அரைஉதடு விரித்துச் சிரித்தான். மனைவியிடம் என்னவோ கூறினான். அவள் லேசாக நந்தினியைப் பார்த்தபடி குழந்தையை அள்ளிக்கொள்ள எழுந்துகொண்டாள்.

அகலமான சாலை. இருபுறமும் கார்கள் நிறுத்திவைத்து, சாலையைக் குறுக்கியிருந்தார்கள். அதிசயமாக இந்த இருபது ஆண்டுக் காலத்தில் அதிக மரங்கள் வெட்டப்படவில்லை. அவள் அந்தப் ஃப்ளாட்டை வாங்க வந்தபோது, எதிர்ப்புறம் முழுவதும் காலி மனைகள். வந்து இங்கே வாழ்வோம், இப்படியொரு மாலைப்பொழுதில் நடப்போம் என்று யார் அன்று நினைத்துப் பார்த்தார்கள்? முதலீடு. அவ்வளவுதான்.

பல மாதங்கள், ஆண்டுகள் கூட, ஃப்ளாட் பூட்டிக் கிடந்தது. வாடகைக்கு விடவும் பயம். வாடகையே தரமாட்டான், ஏமாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்புறம் யார் அவன் பின்னால் அலைவது? அதுவும் ஓர் முன்னணி நடிகை, எவனோ குடித்தனக்காரன் பின்னால் அலைவதா? அந்த வாடகை வந்து என்னவாகிவிடப் போகிறது? பூட்டி வைப்பதே சாலச் சிறந்தது. இன்னொரு நடிகையும் ஃப்ளாட்டை வாடகைக்கு கேட்டாள். அவள் இங்கே காலூன்றத் தொடங்கியிருந்த நேரம். சாதாரண ஆள்களுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம், சினிமாக்காரர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றார் அச்சன். பயம்.

சொல்லப்போனால், பயம்தான் எங்கும் எப்போதும் ஆட்டி வைத்தது. இதெல்லாம் உழைப்பின் சம்பாத்தியம் என்பதைவிட, ஏதோ அனாமத்தாக வந்ததைப் போன்றதொரு எண்ணம். அதனால், எப்போதும் இதையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் இவை அபகரித்துக்கொள்ளப்படலாம் என்றும் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

எதிரே கார் ஒன்று அவசரமாகப் போய்க்க்கொண்டு இருந்தது. இவள் ஓரம் ஒதுங்கிக்கொண்டாள். ஞாயிறு மாலையிலும் யாருக்கோ இன்னும் அவசரம் மிச்சமிருக்கிறது. தன்னைப் போல பல சினிமாக்காரர்கள் இந்தத் தெருவிலும் அடுத்திருந்தத் தெருக்களிலும் வீடும் ஃப்ளாட்டும் வாங்கிக் குடியிருந்தார்கள். தங்கள் தலைமேல்தான் சினிமா உலகமே நடக்கிறது என்ற எண்ணமும் அதுதரும் அவசரமும், அழகிய கற்பனை. தெரிந்த முகங்கள் கூட, சட்டென ஓர் அவசரத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, விரைவாக விடைபெறுவது, இந்தக் கற்பனையின் தொடர்ச்சிதான்.

இந்த சுயமோகமும் முக்கியத்துவமும் இல்லையெனில், பலருக்கு இங்கே வாழ்க்கைச் சப்பென்று இருக்கும்.

திருமணமாகி அமெரிக்க போய், விசாலமான ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தத் தொடங்கியபோதுதான், வெறுமை உறைத்தது. சுற்றி யாருமே இல்லை. உங்களை அறிந்த முகம் ஒன்றுகூட இல்லை. தூர தூர வீடுகள். அமெரிக்க முகங்களுக்கு நீ யாரென்றே தெரியாது. விழாக்கள் இல்லை. அழைப்புகள் இல்லை. பரிசளிப்புகள் இல்லை. அதனால் முகப்பூச்சு தேவையே இல்லை. கண்ணாடி ரொம்பக் குரூரமாகத் தெரிந்தது. உச்சிவரை ஏறியிருந்த மயக்கத்தை, யாரோ தண்ணீர் தெளித்து, கலைத்துவிட்டாற்போ இருந்தது. சட்டெனப் புற உலகில் வந்து விழுந்த குழந்தையில் வலி.

கண் திறந்து பார்க்க, விஸ்வம் மட்டுமே இருந்தான், காதலுடன், அரவணைப்புடன். பல ஆண்டுகள் அமெரிக்க வாசம் அவனை சுயசார்பு உள்ளவனாக ஆக்கியிருந்தது. கனவுகளை எங்கே நிஜத்தோடு பிணைக்கவேண்டும் என்று தெரிந்திருந்தது. மீண்டும் இந்தியா ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தடுத்து நிறுத்தியது விஸ்வம்தான். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளியை அவனது காதலால் நிரப்ப முயன்றான். புரியவைக்க முயன்றான். புரிந்தும் ஏற்கமுடியாமல் தவித்த தவிப்பு சொல்லில் வராது.

அதையும் மீறி, மீண்டும் இந்தியா வந்தது, உடனே நடிக்க வாய்ப்பு கோரி அலைந்தது, நேற்றுவரை புகழோடு பார்த்த ஒருத்தி, இன்று வாசல் வந்து நிற்கிறாள் என்றவுடன் வன்மம் கொப்பளிக்க, எடுத்தெறிந்து பேசியது, வேண்டுமென்றே இழுத்தடித்தது, காக்கவைத்து கழுத்தறுத்தது எல்லாம் மற்றொரு மூன்றாண்டுக் கதை. தன்னைக் காலம் பழைய குப்பையில் அள்ளிப் போட்டுவிட்டது என்று புரிய அந்த மூன்றாண்டுகள் தேவைப்பட்டன.

நெஞ்சு முழுக்க வெறுப்பு. எரிச்சல். கையாலாகாத்தனம். நடிக்க வந்தபோது இருந்ததைவிட, இப்போது நடிப்பு பற்றி நன்கு தெரியும். ஒவ்வொரு வசனத்தின் பொருள் உணர்ந்து, பாவத்தோடு இன்று திரையில் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பு மட்டும் வரவே இல்லை. பத்திரிகைகளின் பத்திகளில் நக்கல் தொனித்தது. நேர்ப்பேச்சுகளில் சமத்காரம் வழிந்தோடியது. உன் காலம் முடிந்தது என்பதை இவையெல்லாம் சொல்லாமல் தெரிவித்தன.

பிணக்குகள் மறந்து, விஸ்வம் சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா அழைத்துப் போனான். வலிக்கும் ரணத்துக்கும் அன்பென்னும் அருமருந்தால் நீவிவிட்டான். எந்த ஆர்வம் இந்தப் பதற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்ததோ, அதற்கு மீண்டும் மடைமாற்றிவிட்டான். வீணை.

தோளில் தாங்கி, தந்திக் கம்பிகளைப் பிடித்தபோது, தனக்கான சாதனமாக வீணையை உணரத் தொடங்கினாள். மீண்டும் சந்தித்த தோழி போல் வீணை கொஞ்சத் தொடங்கியது. பதினைந்து பதினாறு வயது குறைந்துபோய் துள்ளல் காலங்கள் திரும்பிவரத் தொடங்கின. ஆதூரத்துடன், ஆவேசங்களை, அலைக்கழிப்புகளை, அபத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டது அவ்வீணை.

இசை மெல்ல அவளை ஒருமுகப்படுத்தியது. கூர்மைப்படுத்தியது. தன் தேடலின், அவசரத்தின், ஓட்டத்தின் லகானை இனம்காட்டியது. இழுத்துப் பிடித்து நிறுத்த வலுகொடுத்தது. முப்பத்தாறாவது வயதில், அந்த உண்மை விளங்கியது: காலகட்ட மாறுதல். இனி தன்னால் எப்படிக் குழந்தையாக ஆக முடியாதோ அதுபோலவே மீண்டும் நடிகையாக ஆக முடியாது. அதன் தன்மையைத் தான் கடந்துவிட்டோம். கடந்துபோன ஒன்றை நினைத்து நினைத்து அசைபோடலாம். பெருமைப்படலாம். ஆனால், மறுகுவதில் என்ன பயன்?

வாழ்க்கை, சிலருக்கு தன் அக்குளில் சினிமாவை வைத்துக் காத்திருக்கலாம். எப்போது வந்தாலும் திறந்துகொள்ளும் கதவாக அது இருக்கலாம். தன்னைப் பொறுத்தவரை அது கடந்து வந்துவிட்ட வாசல். திரும்பவும் யாராவது எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு படிக்கிறோமா என்ன?

தெருமுனையில் வந்து நின்றுகொண்டாள். இங்கே ஒரு பாக்குமரம் இருந்தது ஞாபகம் வந்தது. பெரிய பெரிய இலைகள், காம்பவுண்ட் சுவரை மீறி வெளியே நீண்டிருக்கும். கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். எதிரே உயர்ந்த மேம்பாலம் எழுந்து நின்றது. விளக்குகள் போடப்பட்டிருந்தன. ஓரிரு மோட்டார்பைக்குகள் மேம்பாலத்தின் மேலே போய்க்கொண்டு இருந்தன.

பெரிய மேம்பாலம். இரண்டு முனைகளை இணைக்கும் மேம்பாலம். விரைவாகக் கடக்க் உதவும் மேம்பாலம். அரை மணி முக்கால் மணி நேரம் நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள், மேம்பாலத்தில் ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் மனைவி குழந்தைகளோடு மேம்பாலத்தில் போய்கொண்டிருந்தார். தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றியது. அவருடைய நினைவு மடிப்புகளில் என் இளமை முகம் ஞாபகம் வரலாம். வராமலும் போகலாம்.

வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெறுவதற்கும் இல்லை, இழப்பதற்கும் இல்லை. அவருக்கு நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது. கையை அசைத்தார். அவசரமாகத் தன் மனைவியிடம் சொல்கிறார். அவளும் ஞாபகம் வந்தவள் போல் ஆச்சரியம் பொங்கப் புன்னகைத்தாள். இவளும் புன்னைத்தாள். வண்டி போய்கொண்டிருந்தது.

“ ரசிகர்கள் உங்களை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் நடிக்க வரலாமே” என்றாள் அந்த ஆங்கில நாளிதழின் சினிமா பெண் நிருபர். பழைய நட்பு. இந்த முறை சென்னை வந்தவுடன், ஒரு பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் என்று வந்து பார்த்தாள்.
சினிமாவும் வேண்டாம், பேட்டியும் வேண்டாம் என்றுவிட்டாள். நட்பாகச் சந்திக்க வருவதென்றால், எப்போதும் தன் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும் என்று மட்டும் சொல்லி அனுப்பினாள்.

நண்பர்களை எல்லாம் போய் சந்தித்தாள். தன்னை வைத்துப் படம் எடுத்தவர்களையும் டைரக்டர்களையும் போய் சந்தித்தாள். சிலர் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். ஏனென்று அவள் யோசிக்கவில்லை. கற்பனையில் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. சந்தித்தவர்களும் பெரிதாக ஏதும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

அவளை அறிமுகப்படுத்திய இயக்குநர் முரளி மட்டும் அதிகநேரம் பேசினார். கணவர், குழந்தைகள், ஆர்வங்கள் என்று எல்லாம் விசாரித்தவர், சென்ற முறை தன்னால் உதவ முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார். தான் தொலைக்காட்சித் தொடர்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் நடிக்க வரமுடியுமா என்றும் கேட்டார் முரளி. புன்னகைத்தபடி மறுத்தாள். உன்னைப் போல் நடிகையின் பங்களிப்பு வேஸ்டாகப் போகக்கூடாது என்றார். அவள் மறுபடி புன்னகைத்தாள். சட்டெனத் தோன்றிய கோபத்தை, என்ன நினைத்துக்கொண்டாரோ, மறைத்துக்கொண்டார் முரளி.

தான் நடிக்க வாய்ப்பு கேட்டு வரவில்லை, நண்பர்களை எல்லாம் சந்திக்கவே வந்ததாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபரும் இதையே சொன்னார். தொலைக்காட்சி இன்று பெரிய ஊடகமாக வளர்ந்து நிற்கிறது. உன் நடிப்பு ஆசைக்கு, திறமைக்கு, இங்கே நல்ல வாய்ப்பு என்றார். அப்போதும் புன்னகை சிந்தி மறுத்துவிட்டாள்.

உண்மையில் இது நிர்மலமான பயணம். எதிர்பார்ப்புகள் அற்ற பயணம். கற்பனைகள் அற்ற பயணம். எதார்த்த வாழ்வில் காலூன்றிய பின் மேற்கொண்ட பயணம். தன்னைத் தானே சோதித்துக்கொள்ள மேற்கொண்ட பயணம். எதிர்பார்ப்புகளோடு வந்த முந்தைய பயணங்கள் தந்தது வலியும் வேதனையும்தான். இம்முறை அப்படி இல்லை. மகிழ்ச்சியும் இனிய நினைவுகளுமே மிச்சம்.

வாசல் கேட் அருகே இருந்த அறையில் கூர்க்காவின் மனைவி குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கியிருந்தாள். கம்பளிக் கதகதப்பில் அம்மாவின் அரவணைப்பில் தன்னை மறந்து அக்குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. நிம்மதியான உறக்கம்.

ஃப்ளாட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். செல்போனில் நான்கைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அமெரிக்க எண்கள். கணவர், குழந்தைகள். புதிதாக ஒரு எண்ணும் மூன்று நான்கு முறை அழைத்திருந்தது. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் காத்திருந்தது. அதைத் திறந்தாள் அவள்:

Call immediately. You are my next heroine – Murali.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

அழகான பெண் வேண்டும்! – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 2 comments

சுந்தருடைய கால்கள் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதோ, தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்போதோ, அந்த ஆட்டம் தெரியும். வளைந்த மூங்கில் கழிபோன்ற நீண்ட கால்கள் அவனுக்கு. தாமரை இலையென பாதங்கள் படர்ந்திருக்கும். பலமுறை அவனது அம்மா, அவனிடம் எடுத்துச் சொல்லியும் அவனது கால்கள் நின்றதில்லை. வேட்டியோ கால்சராயோ எதுவானாலும் அவனது கால்கள் தனித்து தென்படும்.

மரியாதையே தெரியவில்லை என்பதுதான் வீட்டில் உள்ளோருக்கு அவன்மீது இருந்த குறை. பெரியவர் உயர்ந்தவர் என்று எவர் வீட்டுக்கு வந்து கூடத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் சுந்தரும் போய் எதிரே உட்கார்ந்துவிடுவான். உட்கார்ந்தவுடன் அவனை அறியாமலே அவனது கால்கள் லேசாக ஆட ஆரம்பிக்கும். பேச்சு சுவாரசியம் கூடும்போது, அந்த ஆட்டம் தாளலயத்தை எட்டிவிடும்.

பேச்சு சுவாரசியம் என்பது அவனைப் பொறுத்தவரை, திருப்பதி மலையின் படியேறுவதுதான். ராஜஸ்தான் பாலியில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் பார்வதி அக்கா, வந்தவுடன் சுந்தரைத் தேடுவாள். கணவரோடு வந்தாலும் குழந்தைகளோடு வந்தாலும் தனியே வந்தாலும் மறக்காமல் திருப்பதி படியேறி போய் பெருமாள் தரிசனம் செய்வது அவளது வழக்கம். துணை சுந்தர்.

அவள் சென்னை வரும்முன்பே, அம்மாவுக்கு கடிதம் போட்டுவிடுவாள். சுந்தரைத் தயாராக இருக்கச் சொல்லி. ”அவனது தயாருக்கு என்ன? எப்போதும் தயார்தான்” என்பாள் பெரியம்மா. அவனுக்கு வேலை இல்லை, படிப்பு இல்லை என்பது பெரியம்மாவின் குறைகளில் தலையானது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள்.

சுந்தர் உடனே மாம்பலத்தில் இருக்கும் தேவஸ்தான அலுவலகம் போய் திருப்பதியில் உள்ள கூட்டம் பற்றி விசாரித்து வந்துவிடுவான். இத்தனைக்கும்,
அதற்கு ஒரு வாரம் பத்து நாள்களுக்கு முன்புதான், திருப்பதி போய்விட்டு வந்திருப்பான் சுந்தர். ஏதேனும் ஒரு உறவினர் கூப்பிட்டிருப்பார். அல்லது, நண்பர்களாகச் சேர்ந்து போயிருப்பார்கள். அக்கா வரும் செய்தி வந்தவுடன், அடுத்த பயணத்துக்குத் தயாராகிவிடுவான்.

விடிகாலை வந்து சேரும் ரயிலுக்கு அதற்கு முன்பே கிளம்பி, சென்ட்ரல் ரயில் நிலையம் போய் நிற்பான். ஆட்டோவோ டாக்ஸியோ, அக்கா கொண்டு வரும் பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப வண்டியை அமர்த்திக்கொண்டு, வீட்டுக்கு அழைத்து வருவான். வந்ததில் இருந்து ஆரம்பிக்கும் புராணம்.

கடந்த முறை பார்வதியோடு படியேறினபோது என்னானது என்று தொடங்கும் பேச்சு. அது ஆறு மாதங்களோ ஒரு வருடமோ முந்தையக் கதையாகக் கூட இருக்கும். ஆனால், அன்றுதான் அக்காவோடு படியேறினதாகத் தொடங்கும். பெரும்பாலும் படியேற முடியாமல் ஒவ்வொரு இடத்திலும் அக்கவும் அத்திம்பேரும் உட்கார்ந்தது, காளி கோபுரத்தில் சூடான பஜ்ஜி சாப்பிட்டது, முழங்கால் முட்டியில் ஏற முடியாமல் திண்டாடியது என்று போய், கடைசியாக பெருமாளைச் சேவித்தது வரை வந்து சேரும்.

கேட்பவருக்கு கொஞ்சம் எரிச்சல் வரவே செய்யும். ஆனால், காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். பல காரணங்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக திருப்பதி படியேறி வந்து வழிபடுகிறேன் என்று வேண்டிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டில் வளரும் குழந்தைகளின் நலன் கருதியே இந்த வழிபாடு, வேண்டுதல் செய்யப்பட்டிருக்கும். அதுவும் உடல்நலன் இதில் மிகவும் முக்கியம். பல சமயங்கள், அவர்கள் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துண்டு துணியில் முடித்து வைத்துவிடுவார்கள்.

இன்னொரு அக்கா டாட்டா நகரில் இருந்து சென்னை வருவாள். அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறை. திருப்பதி படியேற அவளுக்கு பல ஆண்டுகளாக அந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்தது. வீட்டுக்கு வரும் சம்பந்தி வீட்டார், தூரதேச நண்பர்கள் எல்லாம் மறக்காமல் போகுமிடம் திருப்பதி.

அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் திருப்பதிக்கு மட்டும் படியேறி வருவதாகவே வேண்டிக்கொண்டு இருப்பார்கள். முடியிறக்குகிறேன் என்று வேண்டிக்கொள்பவர்களைவிட, இவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

கீழ் திருப்பதி வரை எந்த பஸ்ஸில், எந்த ரயிலில் எப்படிப் போனால், சரியாக இருக்கும்; அப்புறம் மேல் திருப்பதி படியேற எவ்வளவு நேரம் பிடிக்கும்; அல்லது திருப்பதிக் கோவில் முறையில் இருக்கும் தரிசன நேரங்கள் என்னென்ன; அதற்கு எப்படிச் சரியாக திட்டமிட்டால் போய்ச் சேரலாம், முக்கியமாக கீழ்த் திருப்பதி மற்றும் மேல் திருப்பதியில் என்னென்ன உணவகங்களில் நல்ல உணவு கிடைக்கும் போன்ற அத்தனை விவரங்களும் சுந்தரிடம் துல்லியமாக உண்டு.

என்ன ஒரு பிரச்னை என்றால், இதையெல்லாம் அவனிடம் உட்கார்ந்து கேட்டால், ஒன்றும் புரியாது. கோவையாக அவனுக்குச் சொல்லத் தெரியாது. இங்கே ஒன்று சொல்லுவான், திடீரென்று வேறொன்று சொல்வான். இரண்டுக்கும் உள்ள தொடர்பை சேர்க்கவே முடியாது. ”பேசக் கூடச் சரியாத் தெரியல, சரியான அச்சுபிச்சு” என்று பெரியம்மா குறைபட்டுக்கொள்வாள். அதனாலேயே அவனை உடன் அழைத்துப் போய்விடுவது ரொம்பவும் சுலபமான வழியாக வீட்டில் கருதப்பட்டது.

பெரியவர்கள் படியேறும்போது, சுந்தரைப் போல் உதவியானவர்கள் எப்போதும் தேவை. உடலை மட்டும் தூக்கிக்கொண்டு மற்றவர்கள் ஏறினால் போதும். தேவைப்படும் பிற பொருள்கள் எல்லாவற்றையும் சுந்தர் தோளில் சுமந்துகொள்வான். ஒரு கட்டத்தில், கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறவும் உதவுவான். அவசரம் கிடையாது. பரபரப்பு கிடையாது.

ஒவ்வொருவரும் படியேற எவ்வளவு நேரமாகும் என்று வருபவர்களின் உடல்வாகைப் பார்த்தே சுந்தர் சொல்லிவிடுவான். அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பார்வதி நினைத்துக்கொள்வாள். எந்தப் போட்டியாக இருந்தாலும் முதல் ஆயிரம் படிகளுக்குள்ளேயே முடிந்துபோய்விடும். அதற்குமேல் எந்த உடலும் அசதியும் நோவும் கண்டுவிடும்.

பார்வதி அக்காவின் அப்பா, சுந்தருக்குச் சித்தப்பா. அவருக்குத் தம் வக்கீல் தொழிலில் பிரச்னை ஏற்பட்ட போது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்றும் திருப்பதி செல்லத் தொடங்கினார். அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர், திருமலைக்குப் படியேறி வந்து வணங்குகிறேன் என்று வேண்டிக்கொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றாராம். கிட்டத்தட்ட 21 அமாவாசைகள் அவர் படியேறினார். அவரோடு சுந்தரும் துணைக்கு போக ஆரம்பித்தான்.

கீழ்த் திருப்பதியில் இருந்து மேலே ஏற குறைந்தபட்சம் நான்கரை மணி நேரம் ஆகும். சித்தப்பா மெதுவாக ஏறுவார். அவருக்கு அப்போதே வயது ஐம்பதுக்கும் மேல். அவருக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே மலையேறுவார். சுந்தர் அவரோடே இருப்பான். முதலில் ஐந்நூறு படிக்கட்டுகள் வரை உற்சாகம் மிதக்கும், விறுவிறுவென ஏற முடியும். அதன்பிறகுதான் உடலின் உபாதைகள் தெரியத் தொடங்கும்.

அதன்பிறகு நூறு படிக்கட்டுகளுக்கு ஒருமுறை நின்று, உட்கார்ந்து, தண்ணீர் குடித்து, நான்கு வார்த்தை பேசி, சட்டைகளைத் தளர்த்தி விட்டு, காற்றை நெஞ்சுக்குள் வாங்கி, பசுமையைப் பருகி மீண்டும் நடக்கத் தொடங்கும்போது, ஒருவித ஆசுவாசம் வரும். அடுத்த நூறு படிக்கட்டுகளுக்குள் மீண்டும் முட்டுகள் நோகத் தொடங்கும். சித்தப்பா நின்றுவிடுவார்.

சுந்தர் சிரித்துக்கொண்டு நிற்பான். அவன் தோளிதான் தண்ணீர் பாட்டில், ஒரு மாற்று உடை, துடைக்கும் டவல் எல்லாம் கொண்ட பை இருக்கும். அவர்களை கடந்து எண்ணற்ற ஆந்திர கிராம பக்தர்கள் படியேறிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆந்திரப் பெண்கள், ஒவ்வொரு படிக்கட்டாக பொட்டு வைத்துக்கொண்டும், தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கிடுகிடுவென படியேறுவார்கள்.

காளி கோபுரம் தாண்டியபின், ஓரளவுக்கு தரைமட்டமான சாலைப் பயணம் தொடரும். ஒரு கட்டத்துக்குப் பின் சாலையோரம் நடக்கவேண்டும். நடக்க நடக்க மாளவே மாளாதோ என்னும்படியான நீண்ட பயணம் அது.

சித்தப்பாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் நூறு படிக்கட்டுகள்வரை கூட நடக்க முடியவில்லை. நூறு ஐம்பதும் ஆயிற்று. பின்னர் அரை மணி நேரம் ஒரு மலையோரத்தில் அமர்ந்து காற்று வாங்கத் தொடங்கினார். உண்மையில் கடவுள் தன்னைச் சோதிப்பதற்காகவே இத்தனை கடுமையான பயணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவருக்குத் தோன்றியது.

வாழ்வில் இத்தனை நாள் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு படிக்கட்டுகளாயினவோ என்னவோ? கடக்க நடக்க மாளவே இல்லையே? அதைக் கடக்கும் உறுதியும் திண்மையும் தளர்ந்துபோய்விட்டதே? காற்று இன்னும் பலமாக வீசிக்கொண்டிருந்தது.

என்ன விரும்புகிறார் கடவுள்? என் உறுதி, என் முயற்சி, என் கர்வம், என்னுடைய நான் எல்லாவற்றையும் இந்தப் படிக்கட்டுகளில் சமர்ப்பித்துவிட்டு மேலே வரச் சொல்கிறாரோ? சட்டென தான் நிறைய யோசிக்க, இந்த நீண்ட நடை உதவுவதை அவரால் உணர முடிந்தது. இப்படி ஒரே சீராக நான்கு மணி நேரம் யோசிக்கவே முடிந்ததில்லையே.

சுந்தர் காலை ஆட்டிக்கொண்டு படிக்கட்டு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். மேலே படியேறுவோரை அவன் பார்வை தொடர்ந்துகொண்டிருந்தது. நான்கைந்து பையன்கள் எதிர்புறம் கீழே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். சுந்தர் முகத்தில் தெரிந்த அபரிமிதமான அமைதி அவரை வியப்பில் ஆழ்த்தியது. வலி, வேதனை என்று இதுநாள்வரை ஒருமுறை கூட அவன் பாயை விரித்துப் படுத்ததில்லை என்பது ஏனோ அப்போது ஞாபகம் வந்ததுபோல் தோன்றியது.

”கால் வலிக்கலியாடா சுந்தர்?”

”இல்ல சித்தப்பா. நடந்து நடந்து பழக்கமாயிடுச்சு. ”

”நீ மட்டும் வந்தா எவ்வளவு சீக்கிரம் மலையேறுவே?”

”ரெண்டரை மணி நேரம் போதும் சித்தப்பா.”

இவனை இத்தனை ஆண்டுகளாக ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது அவருக்கு மனத்தில் உறைத்தது. எத்தனை ஆண்டுகளாக மலையேறுவான்? அவருக்கு நினைவு தெரிந்து பத்து, பனிரெண்டு ஆண்டுகளாக இருக்கலாம். இவனும் தன்னுடைய சின்ன மகளும் ஒரே வயது.

ஆறாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. கடலூர் பக்கம் ஏதோ ஒரு ஊரில் அவன் அப்பாவுக்கு அரசு வேலை இருந்தது. அவர் காலமானபின்பு, இவனை அழைத்துக்கொண்டு இவனது அம்மா சென்னை வந்து சேர்ந்தது, அவர்களது பெரிய வீட்டின் ஒரு சிறு அறையில் பின்னால், இவர்களைக் குடிவைத்தது எல்லாம் ஒரு கனவுபோல் அவருக்கு ஞாபகம் வந்தது.

இன்றுவரை, இவனது அம்மா தனக்கென்றோ, இவனுக்கென்றோ எதுவுமே வந்து கேட்டதில்லை. வக்கீல்கள் நிறைந்த குடும்பத்தில், இப்படி ஒரு ஜீவன் இருப்பதே யார் கவனத்திலும் படவில்லை. ஆனால், அலுவலகத்தில் அவன் நிற்பதையும் ஏதோ உதவுவதையும் அவர் கவனித்திருக்கிறார். எல்லாம் வெளுத்துப் போன சித்திரம் போலிருந்தது.

அவ்வப்போது, அவன் ஒரு அச்சுபிச்சு, பேசத் தெரியவில்லை, காரிய சாமர்த்தியமில்லை என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை காதில் வாங்கியிருக்கிறார். ஆனால், அது மூளையின் ஏதோ ஒரு அடுக்கில் போய் உட்கார்ந்திருப்பது இப்போது நினைக்கும்போது வெளியே வரத் தொடங்கியது. யாரும் அவனைப் பள்ளிக்கூடம் போவென்றோ, படியென்றோ வற்புறுத்தியதில்லை. பலருக்கும் சுந்தர் செளகரியமாக இருந்திருக்கிறான். எதுவேண்டுமானாலும் ஓடிப்போய் செய்துதரக்கூடிய செளகரியம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.

”மாசத்துக்கு எத்தனை தடவைடா திருப்பதி வருவே?”

”ரெண்டு மூணு தடவை வந்துடுவேன் சித்தப்பா..”

”பெருமாள்கிட்ட என்ன வேண்டிப்ப?”

”எங்கம்மா மாதிரி அழகான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கணும்.”

வீட்டினர் நடுவே இவன் இப்படிப் பேசியிருந்தால், அவன் அம்மாவே கோபப்பட்டு இருக்கக்கூடும். இப்படி வளர்ந்து நிற்கும் ஒருவன் பேசும் பேச்சாக இது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. அசட்டுத்தனம் என்றிருப்பார்கள். சித்தப்பா அப்போதும் எதுவும் பேசவில்லை.

அடுத்த அமாவாசைக்குத் திருப்பதி பயணம் அவர் மேற்கொள்ளும்முன் வேறொரு விஷயம் நடந்தது. ஒரு நாள் மாலை அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, கூரியர் எடுப்பவன் ஒருவன் கதவுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். அவன் போனபின்பு, அலுவலக குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.

”தினமும் எத்தனை கூரியர் அனுப்புவீங்க கணேசன்?”

”கட்சிக்காரங்களுக்கு லெட்டர் போட்டுடுவோம் சார். கூரியர்ல அனுப்பறது ஒரு நாலைஞ்சு கவர்ங்க இருங்க சார். ”

”நாளைலேருர்ந்து மெட்ராஸ்குள்ள அனுப்பற கூரியரையெல்லாம் சுந்தர்கிட்ட கொடுத்துடுங்க. அவன் போய் டெலிவரி பண்ணட்டும். ”

அப்போது ஆரம்பித்தது அவன் பயணம். இப்போதும் நீங்கள் அவனை ஏதேனும் ஒரு சாலையில் பார்க்கலாம். மழையோ வெயிலோ எதுவானாலும், வேட்டியை கொஞ்சம் மேலே கட்டிக்கொண்டு, இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகள் நிறைய கடிதங்கள் தொங்க, விறுவிறுவென உங்களை ஒருவர் கடந்து போனால், ஒரு நிமிடம் நின்று பாருங்கள். கால்கள் கொஞ்சம் வளைந்து மூங்கில் கழி போல் இருக்கும். தாமரை இலையென பாதங்கள் படர்ந்து இருக்கும்.

இப்போதும் பேச்சில் கொஞ்சம் அச்சுபிச்சுத்தனம் உண்டு. ஆனால், அவன் ஆசைப்பட்டதில் இரண்டாவது நடந்துவிட்டது. விரைவில் முதலாவதையும் நடத்திவிடவேண்டும் என்று அவன் அம்மா மெனக்கட்டுக் கொண்டிருக்கிறாள். நல்ல அழகானப் பெண் இருந்தால், கொஞ்சம் சொல்லுங்களேன், பிளீஸ்!

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,