Home > Authors > வல்லிக்கண்ணன் :: வண்ணநிலவன்

வல்லிக்கண்ணன் :: வண்ணநிலவன்


ஆரம்பமாக.. – வண்ணநிலவன்

இப்போதுகூட எழுதுவதை விடவும் படிப்பதுதான் இதமாகவும், சந்தோஷமளிப்பதாகவும் இருக்கிறது. நதிமூலம், ரிஷிமூலம் மாதிரி ஒவ்வொரு மனுஷருக்குள்ளும் அந்தர்வாகினியாய் ஒரு பிரதான உணர்ச்சி பிரவாஹமாக ஓடும். அந்த மாதிரி திருநெல்வேலி எங்களுக்கெல்லாம் அந்தர்வாஹினி.

திருநெல்வேலியை ஒவ்வொரு இலக்கியகர்த்தாவும் ஒவ்வொரு விதமாகக் காட்டுகிறார்கள். குற்றாலத்தை திரிகூடராசப்ப கவிராயரை விட இன்னொருவர் அவ்வளவு நளினமாகக் சொல்லிவிட முடியுமா என்றுதான், வண்ணதாசனின் “ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்’ என்ற சிறுகதையையும், “ஒரு உல்லாசப்பயணம்’ என்ற சிறுகதையையும் படிக்கிறவரை நினைத்துக்கொண்டிருந்தேன். மந்தியெல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும் என்பது திரிகூடராசப்ப கவிராயரின் ஒரு கவிதை வரி. மொழியழகும், கவிராயரின் மனவுலகும் அதியற்புதமாக ஒன்றி லயப்பட்டிருக்கிற அந்த அனுபவத்தை அனுபவித்துதான் உணரமுடியும்.

ஆனால் கவிராயரிடம் கிடைத்த அதே சுகானுபவம் வண்ணதாசனின் மேற்கண்ட இரு சிறுகதைகளிலும் கூடக் கிடைக்கிறதே இது எப்படி? திரிகூட ராசப்பருக்கும் வண்ணதாசனுக்கும் பல தலைமுறைகளுக்கு மேற்பட்ட இடைவெளியாவது இருக்கும். ஆனால், இத்தனை வருஷ இடைவெளியையும் ஒன்றுமே இல்லாமல் போக்கிவிட்டுப் பிரவஹிப்பதன் பேர்தான் “இலக்கியம்’.

புதுமைப்பித்தனும் திருநெல்வேலியிலுள்ள கருப்பந்துறையைப் பற்றி எழுதியிருக்கிறார். தொ.மு. சிதம்பர ரகுநாதனும் அதே கருப்பந்துறையைப் பற்றி “ஆனைத்த¦’ என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார். வாசகனுக்கு இருவருடைய சித்தரிப்பிலும் சின்னச்சின்ன வித்தியாசங்கள், நுட்பமான வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால், புதுமைப்பித்தனுடைய கருப்பந்துறையிலும், ரகுநாதனுடைய கருப்பந்துறையிலும் உள்ளே நின்று ஒளிரும் சுடர் ஒன்றுதான். அந்தச் சுடரின் பேர்தான் இலக்கியம். ஒரு அடையாளத்துக்காக ஒன்றை குத்துவிளக்கின் சுடரென்றும் இன்னொன்றைப் பாவை விளக்கின் சுடரென்றும் வகைப்படுத்தும் வசதியை முன்னிட்டுச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், இரண்டுமே சுடர்தான்.

வால்ம¦கியின் ச¦தையும், இளங்கோவின் கண்ணகியும் காலத்தால் எத்தனையோ யுகங்கள் முன்னும் பின்னுமாக வாழ்ந்தவர்கள். இருவேறு வகைப்பட்ட துயரங்களை அனுபவித்தவர்கள். ஆனால், இருவருமே நெருப்பென வாழ்ந்து முடிந்தவர்கள். அந்த நெருப்புக் கனலைத்தான் இலக்கியம் என்கிறோம்.

“நான்’ என்ற சொல்லே வராமல் எழுத வேண்டும் என்று ஆசை. ஆனால், விஷயங்களை விட்டு ஒதுங்கி, அவற்றை மனதிலிருத்திச் சலிக்காத நிலையில்தான் “நான்’ என்பதைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எழாது. அந்த லட்சிய நிலையை அடையும் வரை “நான், எனது’ என்ற ஒட்டுதல் இருப்பதைத் தவிர்ப்பதற்கில்லை.

படிக்கிற ஆசையே எழுத்துலகத்திற்கு என்னை இட்டுச் சென்றது. எழுத்துலகில் மறக்க முடியாத சில படைப்புகள் மட்டுமின்றி சில மறக்க முடியாத நட்புகளும் கிடைத்தன. இவற்றையெல்லாம் சொல்லும் முயற்சியே இத்தொடர். இத்தொடரின் குறுகிய வடிவம் சில மாதங்களுக்கு முன் “துக்ளக்’கில் வெளிவந்தது. ஒரு சமூக, அரசியல் பத்திரிகையின் வரம்புக்குட்பட்டு, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புலகையும் பற்றித் துக்ளக் தொடரில் கோடி காட்டி எழுதுவதுபோல் எழுதி வந்தேன். அந்த வாய்ப்புக்காக துக்ளக் ஆசிரியருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது துக்ளக் தொடரில் விடுபட்ட சில எழுத்தாளர்களையும், அத்தொடரில் விரிவாக எழுத முடியாத பகுதிகளையும் எழுத உத்தேசம். இதற்காக நண்பர் ஆர்.வெங்கடேஷ¨க்கு என் அன்பு கலந்த நன்றி உரித்தாகிறது. இத்தொடரில் ஏற்படும் குறைகளுக்கு என் இயலாமையே காரணம். குறைகளை வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.

~oOo~

எனக்கு இந்தப் புனைபெயரைச் சூட்டிய ஒரு பிரபல படைப்பாளியை முன்வைத்தே ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது நான் வண்ணநிலவனில்லை. வெறும் ராமச்சந்திரன்.

இன்றைய இலக்கிய வாசகத் தலைமுறைக்கு காலச்சுவடு, தமிழினி, புதுமைப்பித்தன், காவ்யா போன்ற, புதுமையான படைப்புகளை வெளியிடும் பதிப்பகங்களின் பெயர்கள் அறிமுகமாகியிருக்கும். ஓரளவு அன்னம், அகரம், க்ரியா போன்ற பதிப்பகங்களின் பெயர்களும் நினைவுக்கு வரலாம். ஆனால், முப்பது வயதாகும் இன்றைய நவ¦ன இலக்கிய வாசகருக்கு வாசகர் வட்டம், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட், பெர்ல் பப்ளிகேஷன்ஸ், நவயுகப் பிரசுராலயம், ஸ்டார் பப்ளிகேஷன்ஸ், அமுத நிலையம், மல்லிகை பதிப்பகம், ஜோதி பிரசுராலயம் போன்ற பதிப்பகங்களின் பெயர்கள் அனேகமாகக் கேள்விப்படாததாகவே இருக்கலாம். இவையெல்லாம் 50க்கள் முதல் 70க்கள் வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்தவை. (இவற்றில் சில இன்றும் கூட இருக்கின்றன.) “பெர்ல் பதிப்பகம்’ பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. இப்பதிப்பகம் ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் ஃபாக்னர் போன்ற அமெரிக்க இலக்கிய கர்த்தாக்களின் பல முக்கியமான நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது. அப்படித் தமிழில் மொழியாக்கப்பட்ட நாவல்தான் “தாத்தாவும் பேரனும்’. இதை மொழிபெயர்த்தவர் வல்லிக்கண்ணன். ஃபாக்னரின் “மங்கையர் கூடம்’ என்ற நாவலை க.நா.சு. மொழிபெயர்த்திருந்தார் என்று ஞாபகம்.

பாளையங்கோட்டை கத¦ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் 60க்ஷக்களின் ஆரம்பத்தில் படித்துக்கொண்டிருந்தபோது பள்ளி நூலகத்தில் பெர்ல் பதிப்பக வெளிய¦டுகள் எல்லாம் இருந்தன. அவற்றை எடுத்துப் படித்த ஒரே அசட்டு மாணவன் நானாகத்தான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்படித்தான் வல்லிக்கண்ணன், க.நா. சுப்ரமண்யம் போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் எனக்குப் பரிச்சயமாகின.

ஒன்பதாவது (அப்போது ஃபோர்த் ஃபார்ம்) படித்துக்கொண்டிருந்தபோது கணக்கு வகுப்புகளுக்குப் போகப் பயந்து இரண்டு மாதமாகப் பள்ளிக்கூடமே போகவில்லை. மாவட்ட மைய நூலகமே கதி என்று கிடந்தேன். ஏராளமான நாவல்களைப் படித்தேன். நாவல் படிக்கிற பழக்கம் நாலாவது ஐந்தாவது படிக்கும்போதே தொற்றிக்கொண்டிருந்தது. அமுதசுரபி, கலைமகளில் வல்லிக்கண்ணனின் சிறுகதைகள் ஒன்றிரண்டு தட்டுப்பட்டன. கதைகள் எல்லாம் நெல்லைத் தமிழில், அந்த வட்டாரத்தைப் பற்றியே இருந்தன. ‘வல்லிக்கண்ணன்’ என்ற பெயரின் ம¦து மிகுந்த மனநெருக்கத்தை அந்தக் கதைகள் ஏற்படுத்தின. பின்னர் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளைப் படித்தபோதும் அவர்கள் கதைகளில் இருந்த வட்டார மொழியும், விவரங்களுமே என்னை அவர்கள் எழுத்தின் பக்கம் ஈர்த்தன. அழகிரிசாமி, ராஜநாராயணன் கதைகளைப் படித்தபோதும் ஆரம்பகால வாசகனான எனக்கு, அவர்கள் எழுத்துக்களின் ம¦து ஒரு பிடிப்பும், இலக்கியத்தின் ம¦து ஒரு அபிமானம் ஏற்படவும் இதுவே காரணம்.

1965ல் “த¦பம்’ பத்திரிகையை நா.பார்த்தசாரதி ஆரம்பித்தார். ஏற்கெனவே முத்துக்கிருஷ்ணன் என்ற நண்பரின் மூலம் தாமரை அறிமுகமாகியிருந்தது. “த¦பம்’ இதழை முத்துக்கிருஷ்ணன் தவறாமல் வாங்குவார். ஜங்ஷன் ஹிந்து ஹைஸ் கூலுக்கு எதிரே இருந்த இளங்கோ ஸ்டோர்ஸ§க்குத்தான் தாமரையும், த¦பமும் வரும். த¦பத்திலும் வல்லிக்கண்ணனது சிறுகதைகள் வெளிவந்தன.

வல்லிக்கண்ணன்க்ஷஒன்று, திருநெல்வேலிக்காரராகத்தான் இருக்க வேண்டும் அல்லது, திருநெல்வேலிப் பகுதி பற்றி நன்கு பரிச்சயமானவராகவாவது இருக்க வேண்டும் என்பது என் முடிவு. திருநெல்வேலியில் எந்தத் தெருவில் இருப்பார்? தாமிரவருணி பற்றியெல்லாம் அவர் கதைகளில் வர்ணனைகள் வருகின்றன. ஒருவேளை, வண்ணார்பேட்டைக்காரராக இருப்பாரோ? இல்லை, கொக்கிரகுளத்துக்காரரா? சிக்கிலிங் கிராமத்துக்காரராகவோ, சிந்து பூந்துறைக்காரராகவோகூட இருக்கலாம். மனம் அவ்வப்போது வல்லிக்கண்ணனை நினைத்து அலைபாய்ந்து தானே ஓய்ந்துவிடும். 62 வாக்கில் துவங்கிய இந்த மனத்தேடல் 70 வரை தொடர்ந்தது. த¦பமும் தாமரையும் வாங்குகிற இளங்கோ ஸ்டோர்ஸ்காரரிடமே கூட கேட்டால் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால், ரொம்பப் பழகிய ஆட்களைத் தவிர அடுத்த மனுஷர்களிடம் வாய்திறந்து பேசத்தான் முடியாதே. நம் கொன்னல் (திக்குவாய்) வெளியே தெரிந்துவிடுமோ என்ற கூச்சம், பயம்.

பாளையங்கோட்டை வக்க¦ல் ஒருவரிடம் 69க்ஷலிருந்து வேலைபார்த்து வந்தேன். 69 ஜுன் வாக்கில் ஒரு கட்டுக்குத்தகை வழக்கு சம்பந்தமாக தென்காசியைச் சேர்ந்த த¦ப நடராஜன் என்ற கட்சிக்காரர் வக்க¦லிடம் வந்தார். வருவாய்த்துறை அதிகாரிதான் அந்த வழக்கை விசாரித்து வந்தார். த¦ப. நடராஜனுக்காக எங்கள் வக்க¦ல் ஆஜரானார். பத்துப் பதினைந்து நாட்களுக்கொரு தடவை வாய்தா வரும். வாய்தா சம்பந்தப்பட்ட தகவலை தென்காசிக் கட்சிக்காரருக்குத் தெரியப்படுத்துவோம்.

ஒருநாள் தென்காசிக்காரர் த¦ப. நடராஜனிடமிருந்து டி.கே.சி. நினைவு நாள் என்று குறிப்பிட்டு ஒரு அழைப்பிதழ் வந்தது. அப்போதுதான் தெரியும் அந்தத் த¦ப. நடராஜன் வேறு யாருமில்லை டி.கே.சி.யின் பேரன் என்று. அழைப்பிதழில் டி.கே.சி.யின் அத்யந்த ச¦டர்களான வித்வான் ல. சண்முக சுந்தரம் போன்றோரின் பெயர்களுடன் வல்லிக்கண்ணன் – ராஜவல்லிபுரம் என்று போட்டிருந்தது. பல வருஷங்களாகத் தேடிக்கொண்டிருந்த வல்லிக்கண்ணன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்துவிட்டது. ராஜவல்லிபுரத்தில்தான் இருக்கிறார். ராஜவல்லிபுரம் பக்கத்தில்தான். 9-ம் நம்பர் டவுன் பஸ் ராஜவல்லிபுரம் போகும் தாழையூத்திலிருந்து கிழக்கே செல்லும் ச¦வலப்பேரி சாலையில், தாழையூத்து ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு இரண்டு மைல் போனால் ராஜவல்லிபுரம் வந்து விடும்.

அப்போது இன்லேண்ட் லெட்டர் பத்து பைசாதான். ஒரு இன்லேண்டில் வல்லிக்கண்ணனுக்குக் கடிதம் எழுதினேன். முகவரி, என்ன எழுதுவது? வ¦ட்டுக் கதவிலக்கம், தெருப்பெயர் எதுவும் தெரியாது. அழைப்பிதழில் அதெல்லாம் எப்படி இருக்கும்? வெறுமனே திரு. வல்லிக்கண்ணன், எழுத்தாளர், ராஜவல்லிபுரம் திருநெல்வேலி தாலூகா என்று முகவரி எழுதித் தபாலில் சேர்த்தேன். எப்படியோ, நாலாம் நாளே முத்தான கையெழுத்தில் (இன்றும் வ.க.வின் கையெழுத்து அப்படியேதானிருக்கிறது.) வல்லிக்கண்ணனிடமிருந்து பதில் வந்துவிட்டது. சந்தோஷம் பிடிபடவில்லை. அன்று அந்த கடிதத்தை எத்தனை தடவை படித்தேனென்று நினைவில்லை. திரும்பத் திரும்பப் படித்துச் சந்தோஷப்பட்டேன். நான் பதிலெழுத, வ..க. பதிலெழுதவென்று எங்கள் நட்பு கடிதம் மூலம் தொடர்ந்து கொண்டிருந்தது. தேடுங்கள் கண்டடைவ¦ர்கள். என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. இது முக்காலும் உண்மை. என் வாழ்வில் நிதர்சனமாகப் பல சந்தர்ப்பங்களில் கண்டுணர்ந்த ஒரு பேருண்மை இது. நம்முடைய விருப்பம் ஆத்மார்த்தமானதாக இருந்தால், அது அப்படியே நிறைவேறத்தான் செய்கிறது. யாரோ நம் கையைப் பிடித்து அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவது போல், நாம் விருப்பம் நிறைவேறுகிறது. நான் வல்லிக்கண்ணனுடன் தொடர்பு கொண்டபோது அவர்களுக்கு ஐம்பது வயதிருக்கலாம். எனக்கு இருபது இருப்தோரு வயது. எங்கள் ஸ்நேகம் ஒரு ஆச்சரியமான ஸ்நேகம்தான்.

ஒரு விதத்தில் பார்த்தால் வல்லிக்கண்ணன் மூலம்தான் நம்பிராஜன் (விக்கிரமாதித்யன்), வண்ணதாசன், கலாப்ரியா, தி.க.சி., போன்ற இலக்கிய சிநேகம் எல்லாம் கிடைத்தது. வல்லிக்கண்ணனோடு கடிதத் தொடர்பு தவறாமல் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தையெல்லாம் வெகு காலத்திற்குப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். (பிறகு அவற்றை நண்பர் விக்கிரமாதித்யன் பெரிய மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றார்.)

வ.க.வுடன் கடிதத் தொடர்பு ஏற்பட்டு, சில மாதங்கள் கழிந்த பிறகுதான் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, வ.க.வைப் பார்ப்பதென்று பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டேன். பெருமாள்புரத்துக்கும் ராஜவல்லிபுரத்துக்கும் ஒரு டவுன் பஸ் உண்டு. ஆனால் அது எப்போது வருமென்று நிச்சயமில்லை. ஜங்ஷனிலிருந்து அடிக்கடி 9க்ஷம் நம்பர் பஸ் இருந்தது. அதனால் ஜங்ஷன் போய் பஸ் ஏறினேன். பஸ் புறப்படச் சற்று நேரமிருந்தது. மனமெல்லாம் இனம் புரியாத படபடப்பு. ஜங்ஷனிலிருந்து ராஜவல்லிபுரத்துக்கு 25 பைசாவோ, முப்பது பைசாவோதான்.

ரயில்வே கேட்களில் காத்திருப்பது ஒரு அருமையான, மனதுக்கு பிடித்தமான அனுபவம். ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கோவிலுக்கும், தெருவுக்கும் ஒரு தனி முகமிருக்கிற மாதிரி, ரயில்வே கேட்களுக்கென்று ஒரு தனி அடையாளமுண்டு. ஒவ்வொரு ரயில்வே கேட்டுக்கும் ஒவ்வொரு அழகுண்டு. இக்கால வேகமான, சௌகரியம் தேடும் வாழ்வு பல அபூர்வமான விஷயங்களை இழந்து மூளியாகிவிட்டது. அவற்றிலொன்று ரயில்வேகேட்கள். குறுக்குத்துறை போகிற வழியிலிருக்கிற ரயில்வேகேட்டில் இரண்டு புறமும் மணல், செங்கல் ஏற்றி வருகிற மாட்டு வண்டிகள் காத்திருக்கும். அவற்றிலிருந்து குளித்து விட்டு வருகிற ஆண்களும் பெண்களும் ஈரத் துணிகளுடன் கேட்டுக்குள் நுழைந்து வருவார்கள்.

திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து ராஜவல்லிபுரம் போகிறபோது ஒவ்வொரு பயணியும் இரண்டு கேட்களைக் கடக்க வேண்டியதிருக்கும். அவற்றில் ஒன்று தச்சநல்லூர் ரயில்வே கேட் (இந்த இடத்தில் மேம்பாலம் வந்துவிட்டது.) இன்னொன்று தாழையூத்து ஸ்டேஷனருகே உள்ள கேட். ஜம்பதுகளில் தினமலர் திருநெல்வேலியிலிருந்து அச்சாகி வந்தது. தினமலர் அலுவலகம் தச்சநல்லூர் ரயில்வே கேட்டினருகே உள்ள பழைய பிரிட்டிஷ் காலத்திய பிரம்மாண்டமான கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. இந்தக் கட்டிடம் இன்றும் இருக்கிறதென்று நினைக்கிறேன். ரோட்டரி இயந்திரம் அதனுள் நிறுவப்பட்டிருந்தது. காம்பவுண்டினுள் இலவம் பஞ்சு மரங்கள் இருந்தன. கட்டிடத்தைப் பார்த்தாலே பழைய ஹிந்திப் படங்களில் வருகிற வில்லன்களின் ஜாகை போலிருக்கும். அப்போது அந்தக் கட்டிடம் மட்டுமே அந்த இடத்தில் தனியாக இருந்தது. எதிரிலும், பக்கத்திலும் வயல்கள். மேற்கே காம்பவுண்டுச் சுவரையட்டி ரயில்வே தண்டவாளம் சென்றது. கேட்டின் மேற்குப் பகுதியில் தச்சநல்லூர் ஊர் ஆரம்பமாகும்.

ஒரு ஜதை தண்டவாளங்கள்தான் இருந்தன. வடக்கே மதுரை, சென்னை செல்லும் ரயில்களும், கிழக்கே தூத்துக்குடி செல்லும் ரயில்களும் அந்தத் தண்டவாளத்தைத்தான் பயன்படுத்தி வந்தன. எப்போதாவதுதான் ரயில்கள் போகும். சாயந்திர நேரங்களில் கொஞ்சம் ரயில் போக்குவரத்து பரபரப்பாக இருப்பது போலிருக்கும். மற்றபடி அந்தத் தண்டவாளங்கள் சும்மாத்தான் கிடந்தன. ராஜவல்லிபுரம் பஸ் தச்சநல்லூர் கேட்டில் நின்றுவிட்டது. கேட் சாத்தப்பட்டிருந்தது. வயல் பக்கமிருந்து குளிர்ந்த காற்று வ¦சியது. பத்திரிகை, எழுத்து, கதை என்றாலே சிறு வயது முதல் கொள்ளை ஆசை. ஒரு அலாதியான சந்தோஷம். படிப்பில் ஏற்படும் லாகிரி, போதை என்றே சொல்ல வேண்டும். அந்தப் போதை இந்த ஐம்பத்தைந்து வயதிலும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பக்கத்திலிருந்த தினமலர் அலுவலகத்தையும் பரவசத்துடன் பார்தேன்.

கல்யாண வ¦ட்டுச் சளம்பல்களில் எரிச்சலில்லாத ஒரு பாந்மான உணர்வு ஏற்படும். தெளிவாக இல்லாத அந்தப் பேச்சுக் குரல்கள் இல்லையென்றால் கல்யாண வ¦டே களை கட்டாது. அந்த மாதிரித்தான் பஸ்களில் பயணம் செய்யும் போது பயணிகள் பேசிக்கொள்ளும் சளம்பல்களுமர, வயல்காட்டுக் காற்றும், பிரயாணிகளின் சளம்பல்களும், வ.க. வைப் பார்க்கப் போகும் பரவசமும் இனம் காண முடியாத, கலவையான உணர்வுப் பெருக்காக உள்ளே பிரவஹித்துக் கொண்டிருந்தது. வ.க. எழுதிய கதைகளெல்லாம் மாறி மாறிச் சித்திரம் போல் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தன. வ.க. கதைகளில் வரும் வயதான மனிதர்கள், குழந்தைகள், பெண்கள், திருநெல்வேலிப் பேச்சு வழக்கு எல்லாம் மனதில் புரண்டு கொண்டிருந்தன.

நாலு வார்த்தை பேசுவதற்குள் கொன்னல் வந்து பாடாய்ப் படுத்தும். இதனால் யாருடனும் பேசவே பயம். பஸ்ஸில் ஸ்டாப்பிங் பெயரைச் சொல்லி டிக்கெட் வாங்கிவிட்டாலே என்னைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய சாதனைதான். இரண்டே இரண்டு வேட்டிதான். 77க்ஷ வரை அநேகமாக ஸ்நேகிதர்களின் சட்டைதான் போடக் கிடைத்தன. அதனால் என் சட்டைகள் எல்லாமே தொள தொளவென்றிருக்கும். ஏற்கனவே உபயோகிக்கப்பட்டதால் சாயம் போயிருக்கும். ஆனால், எனக்கு அந்தச் சட்டைகள் கிடைத்ததே பெரும் பாக்யம். முப்பது ரூபாய் சம்பளம். இரண்டு வேளைச் சாப்பாடு. இரவு படுக்க இடம். இதுதான் என் வக்க¦ல் குமாஸ்தா வாழ்க்கை.

எஸ்.எஸ்.எல்.சி.யில் வெறும் 236 மார்க்தான். கத¦ட்ரல் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் சொர்ணபாண்டியன் சர்ட்டிபிகேட் புஸ்தகத்தை கையில் கொடுக்கும்போது, “ஏலே, தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் போலிருக்கேல்லே” என்று என் மார்க்கைப் பார்த்துவிட்டு வருத்தத்துடன் சொன்னது இன்னமும் காதுக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலியில் ஆயிரக்கணக்கான பேர் எந்த கதியுமில்லாமல், இரண்டு வேளை சாப்பிடுவதே பெரிய சாதனையாக, யோகமாகக் கருதி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடையனிலும் கடையன். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கடிதங்கள் எழுதிய அந்தப் பெரிய மனுஷரை நினைத்து நினைத்துக் கண்களில் ந¦ர் பெருகிக் கொண்டிருந்தது.

ராஜவல்லிபுரத்தில் ஊருக்குள் நுழைந்ததும் ஒரு நிறுத்தம் உண்டு. அதேபோல் ஊரின் கிழக்கொல்லையிலும் ஒரு நிறுத்தம் உண்டு. கடைசி நிறுத்தம்தான் வ.க. வ¦ட்டுக்குச் சற்றுப் பக்கம். ஆனால், எனக்கு இது தெரியாததால் ஊரினுள் நுழைந்ததும், முதல் நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டேன். “”எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வ¦டு எது” என்று விசாரித்தேன். சரியாகத் தெரியவில்லை. இறங்கிய இடத்திலிருந்து நேரே தெற்கு நோக்கி நடந்தேன். சற்று அகலமான தெருதான். பாதையெங்கும் மழையில் கரைந்து போன கருங்கல் ஜல்லிகள், மேலே ஆட்டுப் புழுக்கைகளின் கொச்சை வாடை. வலதுபுறம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைப் பசலேன்ற வயல்வெளி. இடதுபுறம் மட்டுமே வ¦டுகள். ஓட்டுக்கை, மட்டப்பா போட்ட வ¦டுகள். பழைய கதவுகள், சிறு சிறு ஜன்னல்கள். ஆடுகளும், கோழிகளும் ஒரு அந்நியோன்ய உணர்வுடன் தெருவோரத்தில் திரிந்தன. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் தென்பட்டனர்.

ஒரு பழைய, சிதிலமாகித் தரையோடு தரையாய் உட்கார்திருந்த தேருடன் அந்தத் தெரு முடிந்துவிட்டது. திருநெல்வேலி கோர்ட்டில் காப்பியிஸ்ட் (நகலெடுக்கும் அலுவலகம்) தனது வ¦ட்டுக்கு அருகில்தான் இருக்கிறார் என்று வ.க. கடிதத்தில் எழுதியிருந்த நினைவு. அனேகமாகத் தினசரி ஒரு தடவையாவது வழக்குகள் சம்பந்தப்பட்ட த¦ர்ப்பு நகல்கள் காப்பியிஸ்ட் ஆபிஸ் போக வேண்டியதிருக்கும். பார்த்தால் ஏ.ஜி.எஸ். பிரியத்தோடு விசாரிப்பார். “மாமா (வ.க.) கிட்டே ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்று கேட்பார். தினசரி சைக்கிளில் ராஜவல்லிபுரத்திலிருந்து அவர் வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் வ¦ட்டைத் தெரிந்துவிட்டால் கூட வ.க. வ¦ட்டுக்குப் போய்விடலாமே?

நினைத்துக் கொண்டிருந்தபோதே ஒரு வயதான பெரியவர் தோளில் துண்டுடன் வந்துகொண்டிருந்தார். “இங்கே எழுத்தாளர் வல்லிக்கண்ணன்னு..” என்று தயங்கிக்கொண்டே கேட்டேன். ஒரு க்ஷணம் யோசித்தார். பக்கத்தில் ஆறேழு வ¦டுகள் தள்ளித் திரும்பும் ஒரு முடுக்கைக் (சந்து) காட்டி “”அதிலேதான் இருக்காஹ கேட்டாச் சொல்லுவாங்க” என்றார். ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். சிறு முடுக்கின் இறுதியில் வ.க. வ¦டு இருந்தது. மட்டப்பா (மேல்தளம் செங்கற்கள் பதிக்கப்பட்டது) போட்ட வ¦டு. ந¦ளமான திண்ணை. நன்றாக கொழுக்க கரைத்த சாணக்கரைசல் தெளிக்கப்பட்ட முற்றம். திண்ணையில் ஒரு ந¦ளமான பெஞ்ச் கிடந்தது. அதன் ம¦து ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார்.

“வல்லிக்கண்ணன் சார் வ¦டுதானே?”

“தம்பியைப் பார்க்கனுமா? உக்காருங்க வந்திடுவான்.. ஆத்துக்குப் போயிருக்கான்” என்று சொல்லிக்கொண்டே தோளில் கிடந்த துண்டினால் தட்டி பெஞ்சில் பக்கத்தில் உட்காரச் சொன்னார். உள்ளேயிருந்து தினமணி, த¦பம் எல்லாம் எடுத்து வந்து தந்தார். வ¦ட்டினுள்ளிலிருந்து வெள்ளைச் சேலை கட்டிய ஒரு வயதான அம்மாள் கூன் விழுந்த முதுகுடன் மெதுவாக வந்து கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார்.

“தம்பியை பார்க்க வந்திருக்காரு..” என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னிடம்
“எங்க அம்மா” என்றார் அந்த முதியவர். அவர் வல்லிக்கண்ணனின் மூத்த அண்ணன். கல்யாணி அண்ணாச்சி.

“உக்காருங்க ஐயா.. வார நேரந்தான்” என்றார் அவர்கள் தாயார்.

“எசக்கி போயிட்டாளா?” என்று மகனிடம் கேட்டார்.

“வ¦ட்டுக்குத்தான் போயிருக்கா வந்துடுவா” என்றார் வ.க.வி.ன் அண்ணாச்சி. எல்லோருக்கும் மூத்தவர் அவர்தான். அவருக்கு அடுத்ததுதான் “அசோகன்’ என்ற ரா.சு. கோமதிநாயகம். மூன்றாவது கடைக்குட்டி தான் “வல்லிக்கண்ணன்’ என்ற ரா.சு. கிருஷ்ணசாமி. “இசக்கி’ என்பது அவர்கள் வ¦ட்டில் ஒரு நபராகவே ஆகிவிட்ட இசக்கியம்மாள்.

சிறிது நேரத்தில் வ.க. வந்துவிட்டார். வேட்டியும் துண்டும்தான். கல்யாணி அண்ணாச்சியை விடக் கொஞ்சம் மாநிறம். நான் எழுந்து நின்று கை கூப்பினேன். “உக்காருங்க.. ந¦ங்க பாளையங்கோட்டை உ.நா. ராமச்சந்திரனா?” என்று கேட்டார். “ஆமாமா..” எப்படி இவ்வளவு சரியாகச் சொன்னார் என்று ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் பெஞ்சிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “வாங்க உள்ள போயி உக்காருவோம்” என்று அழைத்துச் சென்றார். வலது புறம் ந¦ளவாக்கில் ஒரு அறை இருந்தது. சுவரோடு சுவராக புஸ்தக ஷெல்புகள். துண்டு மர நாற்காலிகள். நாற்காலிகளிலும் வெள்ளை வெளேரென்று தூசி. தன் துண்டினால் தூசியைத் தட்டித் துடைத்துக் கொண்டே.. “ம், உக்காருங்க. சிமெண்ட் பேக்டரி தூசி.. ஊரெல்லாம் இப்பிடித்தான். வர்ற வழியிலே பாத்திருப்ப¦ங்களே மரம் மட்டை, வயக்காடெல்லாம் வெள்ளை வெளேர்னு இருந்திருக்குமே.. உக்காருங்க” என்றார் (தாழையூத்து சிமெண்ட் பேக்டரியை வைத்து தாமரையில் “காளவாய்’ என்ற அருமையான சிறுகதையை வ.க. எழுதியிருக்கிறார்.)

ஷெல்பில் புஸ்தகங்கள் எல்லாம் காக்கி அட்டை போடப்பட்டு அழகாக வைக்கப்பட்டிருந்தன. நான் கையெழுத்துப் பத்திரிகை நடத்துகிறேன் என்றதும். வ.க. தான் நோட்டில் எழுதி வைத்திருந்த கையெழுத்துப் பத்திரிகையை என்னிடம் காண்பித்தார்கள். “அப்பப்போ தோணுகிறதை எழுதி நானே பத்திரிகை மாதிரி பண்ணிடுவேன்” என்றார்.

அவர்கள் வ¦ட்டில் எப்போதும் ரவா உப்புமா விசேஷம். கல்யாணி அண்ணாச்சி சாப்பிடக் கூப்பிட்டார்கள். பட்டகசாலையை அடுத்து இரண்டாங்கட்டு மாதிரி சிறு அறை. அதற்கு கிழக்கே சமையலறை. இரண்டாங்கட்டிலிருந்து இறங்கினால் ந¦ளமான தாழ்வாரம். கிழக்கு மூலையில் கிணறு. சாப்பிட்டு விட்டு வந்து திரும்பவும் உட்கார்ந்து பேசினோம். ரொம்ப கூச்ச சுபாவமும் தயக்கமும் உள்ள நான் கூட ரொம்ப சகஜமாகப் பேசினேன். எனக்கே அது ஆச்சரியமாக இருந்தது.

வ.க.வின் உரையாடல்களில் ஏராளமாகத் தகவல்களும், ஞாபகசக்தியை வியக்க வைக்கும் பல பழைய சம்பவங்களும் நினைவுகளும் இடம் பெறும். புதுமைப்பித்தன், கு.ப.ரா.வின் கதைகளில் பலவற்றைத் தலைப்புடன் வ.க.வினால் அப்படியே ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியும். இன்றும் இத்தனை வயதிலும் அவர்களது நினைவாற்றல் அப்படியேதானிருக்கிறது. (இதேபோல அபாரமான நினைவாற்றலுள்ள இன்னொரு இலக்கிய உலக நண்பர் ஜி.எம்.எல். பிரகாஷ். பிரகாஷ், மௌனியின் பல கதைகளை அப்படியே வரி பிசகாமல் சொல்வார்.)

பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள்கூட வ.க.வுக்குத் தெரிந்திருக்கும். சினிமா குறித்து ஹிந்துவில் அவ்வப்போது எழுதும் “ராண்டர்கை’ பற்றி 70க்ஷக்களின் தொடக்கத்திலேயே வ.க. விபரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்களது “ஆண்சிங்கம்’ என்ற சிறுகதைத் தொகுப்பைப் படிக்கக் கேட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டேன். பஸ் நிறுத்தம் வரை உடன் வந்து வழியனுப்பி வைக்கும் பழக்கம் வ.க.வுக்கு எப்போதும் உண்டு. ராஜவல்லிபுரம் பஸ் முப்பது, நாற்பது நிமிடங்களுக்கு ஒரு முறைதான் வரும். எவ்வளவு நேரமானாலும் பஸ் வரும் வரை நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது.

பிறகு பலமுறை வ.க.வைச் சந்தித்தேன். சமயங்களில் கல்யாணியும் (வண்ணதாசனும்) நானும் கூடச் சேர்ந்தே போவோம். அப்போது எனக்கு இலக்கியம் பற்றிப் பெரிய அபிப்பிராயமெல்லாம் எதுமில்லை. இப்போதும் கூட இப்படித்தான். பொதுவாக வ.க. எந்தப் படைப்பை பற்றியும் நன்றாக இல்லை என்று சொன்னதில்லை. “இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்’ என்று சமயங்களில் சொல்வதுண்டு. அதுதான் அப்படைப்பைப் பற்றிய விமர்சனம். பொதுவாக நல்ல அம்சங்களைப் பாராட்ட வேண்டும் என்பார்கள். இது அவர்களது வழிமுறை. வாசகனுக்குப் படைப்பிலுள்ள அம்சங்களை எடுத்துச் சொல்வதுதான் விமர்சகனின் வேலை என்பது வ.க. கட்சி.

“எழுத்து’ பற்றி, சி.சு. செல்லப்பா பற்றியெல்லாம் வ.க.தான் சொன்னார்கள். ஒரு புது உலகத்தை “எழுத்து’ இதழ்கள் என் முன்னே வரித்தன. அதுவரை நான் படித்த சிறுகதைகள், கவிதைகளுக்கும் “எழுத்து’ சிறுகதைகள், கவிதைகளுக்குமர பெரும் வித்தியாசம் இருந்தது. பள்ளிநாட்களில் படித்த பெர்ல் பப்ளிகேஷன்ஸ், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் மொழிபெயர்ப்பு நூல்களில் விட்ட கண்ணிகளை எழுத்து இதழ்கள் இணைப்பது போலிருந்தது. வ.க.வைப் பார்க்க செல்லும் போதெல்லாம் மனம் சிறகடித்துப் பறந்தது. ஏதோ ஒரு அபூர்வமான உலகினுள் நுழைந்துவிட்டது போலிருந்தது. 58, 59க்ஷல் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து லைப்ரரியில் படித்த எமிலி ஜோலாவின் “நாணா, நாணாவின் தாய்’, ஜெர்மினால் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களில் தரிசித்த உலகுக்கும், எழுத்து இதழ்களின் பக்கங்களில் தரிசித்த படைப்புலகுக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பது புகைமூட்டம் போல் தெரிந்தது. அது என்ன தொடர்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு ஒற்றுமை மனதில் தட்டுப்பட்டது.

சி. கனகசபாபதி பிச்சமூர்த்தி கவிதைகளைப் பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை எழுத்துவில் படித்துவிட்டு, பிச்சமூர்த்தி ம¦து ஒரு பிரேமையே எழுந்தது. அந்த பிரைமை அவரது கதைகளில் இன்னும் இந்த 55 வயதிலும் அப்படியே இருப்பது விளங்கிக்கொள்ள இயலாத மனப்புதிராகத்தான் தோன்றுகிறது. பாளையங்கோட்டை மத்திய நூலகத்தில் படித்த நேருவின் தங்கை கிருஷ்ணா ஹத்திசிங்கின் அந்த தலைப்பு மறந்து போன புஸ்தகம், ஜிம் கார்பெட்டின் “குமாவும் புலிகள்’ இதெல்லாம் ஏதோவொரு எழிலும் பரவசமுமிக்க வாசக அனுபவத்தை, அபூர்வமான லாகிரியை மனதில் மூட்டியிருந்தன.

அவையெல்லாம் தனித்தனிக் கண்ணிகளாக மனதில் புரண்டு கொண்டிருந்தன. வ.க.வுடனான தொடர்பும், அவர்கள் தந்த எழுத்து இதழ்களும், புஸ்தகங்களும் அந்தக் கண்ணிகளை இணைத்தன. இணைத்த அந்த ஆரம் என்னது? அந்தச் சங்கிலி என்னது? பதில்தான் தெரியவில்லை. சித்திரை வெயிலில் வந்தவுடன் ஒரு செம்பு தண்ண¦ரைக் குடித்ததும் மனதில் படரும் அந்தப் பேருவகை மாதிரித்தான் இதுவும்.

உரையாடல்கள் என்பவை பலவகைப்பட்டன. சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, பேச்சுக்குப் பேச்சு தங்களுடைய அபிப்பிராயத்தை சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் எதிரே இருப்பவருடைய அபிப்பிராயம் எவ்வளவுதான் வித்தியாசப்பட்டாலும் அதை வெளியே சொல்லாமல் மௌனமாக இருப்பார்கள். சிலர் நாசூக்காகத் தாங்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டுச் சும்மா இருப்பார்கள். சிலருடன் பேசும்போதே, உரையாடல் என்பது முறுக்கேறி விவாதமாகி, இனி நேரில் பார்த்துப் பேச முடியாதபடி, பகையாகவே முற்றி விடும்.

வ.க. எதையும் ஆணித்தரமாக, முகத்திலடிக்கிற மாதிரி பேசவே மாட்டார்கள். அவர்களது கட்டுரைகள் கூட இப்படித்தான் இருக்கும். கட்சி கட்டி நிற்கிற உத்தேசமே வ.க.வுக்கு கிடையாது. எதையும் ஸ்தாபிக்க வேண்டும், தன் வாதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே வ.க.வுக்குக் கிடையாது.

வ.க.வின் கட்டுரைகள் மேம்போக்கானவை, ஆழமில்லாதவை என்று கூறப்படுவதற்குக் காரணம், வ.க.விடம் வாதம் செய்கிற போக்கு அறவே இல்லாமல் போனதுதான். பெரும்பாலும் எல்லாவற்றையும் ரசிக்கிற மனோபாவம் வல்லிக்கண்ணனுடையது. தன்னைப் பற்றிய தகவல்களைக் கூட ஒரு மூன்றாவது மனிதன் சொல்வதைப் போலத்தான் வ.க. சொல்வார்கள். ஒரு விட்டேற்றியான மனம். அதேசமயம் பிறருடைய கஷ்டங்களைக் கண்டு உருகிவிடும் மனம் வ.க.வுடையது.

ஞாயிற்றுக்கிழமைகள்தான், அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல்தான் எனக்குச் சொந்தமான நேரம். வ.க. தினசரி சாயந்திரம் ஆற்றங்கரை வரை வாக்கிங் போவது தப்பாது. ராஜவல்லிபுரம் ஊருக்கும் ஆற்றுக்கும் ஒரு மைலாவது இருக்கும். நான் ச¦க்கிரமாகப் போய்விட்டால், அவர்களுடன் சேர்ந்தே ஆற்றுக்குப் போவேன். தாமதமாகிவிட்டால் வ¦ட்டில் போய் தேடிவிட்டு ஆற்றங்கரைக்குச் செல்வதுண்டு. சில சமயம் பாதி வழியிலேயே ஆற்றிலிருந்து திரும்பும் அவர்களை எதிர்கொள்ளவும் நேர்ந்திருக்கிறது.

ராஜவல்லிபுரம் ஆற்றுப் பகுதிக்குச் “செப்பரை’ என்று பெயர். ஆற்றின் கரை ம¦து அழகான சிவன் கோவிலும், கோவிலின் முன்னே ஒரு ஓடாத தேரும் உண்டு. கோவிலைச் சுற்றி ஏராளமான பனைமரங்கள். அந்தக் கோவில் திருவாதிரை விழா ரொம்ப விசேஷம். அந்தக் கோவில், ஓடாத தேர், பனை மரங்கள், ஆறு இவற்றைத் தவிர அங்கே மனித சஞ்சாரமே கிடையாது. எப்போதாவது ஆடு மேய்க்கிறவர்களோ, வயல்களில் வேலை செய்வபர்களோ தென்படுவார்கள். மற்றபடி அவ்வளவு அமைதியான ஆற்றங்கரையைப் பார்ப்பது அபூர்வம். தூரத்தில் ஏதாவது பனையிலிருந்து, காய்ந்த ஓலை க¦ழே விழுகிற சத்தம் கூடத் துல்லியமாகக் கேட்கும் அமைதி அது. “நான், எனது’ என்ற நம் மனதின் இருப்பையே அழித்துவிடும் பேரமைதி அது.

அப்படியரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜவல்லிபுரம் சென்றிருந்தபோதுதான் வ.க.வின் வ¦ட்டிலிருந்த கல்யாணி அண்ணாச்சி “”ஊர்லேருந்து செல்லப்பா வந்திருக்கார். அவரோட தம்பி ஆத்துக்குப் போயிருக்கான்” என்று சொன்னார்கள். வேக வேகமாக ஆற்றை நோக்கி நடந்தேன். வழக்கமாக வ.க. குளிக்கும் இடத்தில் வ.க.வும் அவருடன் இன்னொரு முதியவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்தும் வ.க.வுக்கு ஓரே சந்தோஷம். செல்லப்பாவைக் காட்டி, “”இவர்தான் சி.சு. செல்லப்பா”, என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். “”இவர் ராமச்சந்திரன். பாளையங்கோட்டையில் இருக்கார்”. அவர்கள் குளித்துக் கரையேறும் வரை எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. “எழுத்து’ என்ற அந்த மகத்தான பத்திரிகையின் ஆசிரியர் இந்த மனிதர்தானா? அவ்வளவு பெரிய மனிதரை இவ்வளவு சர்வ சாதாரணமாக ஆற்றங்கரையில் பார்க்கிறபோது, இது சொப்பனமா, நிஜமா என்ற பரவசம் என்னை ஆட்கொண்டிருந்தது.

செல்லப்பா தொடங்கியிருந்த “எழுத்து பிரசுர’த்தின் புஸ்தகங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விற்பதற்காகத்தான் அவர் வந்திருந்தார். ஒரு வாரமோ, பத்து தினங்களோ செல்லப்பா, வல்லிக்கண்ணன் வ¦ட்டில் தங்கியிருந்தார். இருவரும் நெல்லை பகுதிகளிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று எழுத்து பிரசுர நூல்களை விற்பனை செய்தனர்.

ஒருமுறை ராஜவல்லிபுரம் சென்றிருந்த போது, நான் எழுதி வைத்திருந்த இரண்டு சிறுகதைகளை எடுத்துச் சென்று வ.க.விடம் கொடுத்தேன். “கதை சரியாக வந்திருக்கிறதா?’ என்று தெரிந்துகொள்ள ஆசை. ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு எனக்குத் தபாலில் தூத்துக்குடியிலிருந்து வெளிவரும் “சாந்தி’ என்ற (அந்நாளைய பிளிட்ஸ், கரண்ட் போன்ற டேபுளாய்ட் சைஸ்) பத்திரிகை வந்திருந்தது. அதைப் புரட்டினேன். நான் வ.க.விடம் கொடுத்திருந்த சிறுகதையன்று “மண்ணின் மலர்கள்’ என்ற தலைப்பில் சாந்தியில் வெளிவந்திருந்தது. எழுதியவர்: வண்ணநிலவன் என்று இருந்தது. கொடிய வறுமை, சரியான படிப்புமில்லை. உயிரோடு வாழ்வதே பெரிய சமாச்சாரம் என்ற நிலையிலிருந்த ஒரு மனிதன், கதை எழுதி அது பிரசுரமும் ஆகும் என்றால் அதை எப்படி நம்புவது என்ற நிலையில்தான் இருந்தேன். வ.க.வுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவர்கள் உற்சாகப்படுத்தி ஒரு ந¦ண்ட கடிதம் எழுதியிருந்தார்கள். ராமச்சந்திரன் வண்ணநிலவனாகி விட்டான்.

நான் எழுதுவது இலக்கியமா அல்லது வெறும் பிதற்றலா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஏதோ கொஞ்சம் தெரிந்து வைத்திருந்த எழுத்துதான் இன்றும் ஏதோவொரு வடிவில் எனக்குச் சோறு போடுகிறது. அதற்காக இந்த பாஷைக்கும், “வண்ணநிலவன்’ என்று ஒரு விலாசத்தைக் கொடுத்த வல்லிக்கண்ணனுக்கும் என்றென்றும் நான் கடன்பட்டவன்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: