Home > Authors, Books > இரண்டாவது விமர்சகன் :: நா. பார்த்தசாரதி

இரண்டாவது விமர்சகன் :: நா. பார்த்தசாரதி


(ஆகஸ்ட் 1966)

தனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி – முடிவில் அந்தப் பொய்களும், அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் – அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப்புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. உணர்வினால் வாழ முடியாத உயரத்துக்குத் தங்களையே உயர்த்திக் கொண்டு விட்டவர்களுக்கு இப்படி ஒரு சலிப்பு வருவதும் இயற்கைதான். தனி அறிவினால் மட்டுமே வாழ்ந்தால் உணர்வின் ஈரப்பசையில்லாத அந்த அறிவு வாழ்க்கை ஒருநாள் காய்ந்து முறிந்து போகுமென்று தோன்றியது.

திருவாளர் பொன்னப்பாவும் அப்படிக் காய்ந்து முறிந்து போகிற நிலையில் தான் இருந்தார். இப்போது அவரை யாரும் கவனிப்பாரில்லை. அவருடைய அபிப்பிராயங்களையும் யாரும் இலட்சியம் செய்வதில்லை. சமுதாய வளர்ச்சி என்ற பாதையில் கருத்துக்கள் வளராமலும் மனம் விரிவடையாமலும் – முடமாகிப் போன சிந்தனையாளனைப்போல பின் தங்கிவிட்டார் அவர். பரந்த சிந்தனையும் மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற போது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகராகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன.

தான் சொல்கிற ஒரு கருத்து அல்லது அபிப்ராயம் நியாயமா, தனக்கே மனப்பூர்வமானதா, என்று சிந்தித்துச் செயற்படுவதைவிடத் தான் சொல்கிற கருத்து அல்லது அபிப்ராயத்தை – மற்றவர்கள் கவனிக்கிறார்களா – என்று சிந்தித்துச் செயல்படும் தாழ்வு மனப்பான்மை அவருக்கு வந்து விட்டது. தன் அபிப்ராயத்தால் பலரும் உடனே பாதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஒரு வக்கிர குணமும் அவருக்கு வந்திருந்தது. எதைப்பற்றி எழுதினாலும் தீவிரமாகத் தாக்கி எழுத வேண்டும் என்ற வெறியும் அவரிடம் முறுக்கேறியிருந்தது. சராசரியான நல்ல அறிவாளி ஒருவனுக்குச் சமூகத்தையும், மற்றவர்களையும் பொறுத்து இருக்க வேண்டிய குறைந்தபட்சமான சமூகபாவமும் இல்லாமல் வறண்டு போயிருந்தார் அவர்.

அப்பாவித் தமிழ்ப் பண்டிதர்கள் மேலும், புதிதாக முன்னேறும் இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் மேலும் அக்கினித் திராவகத்தை வாரி இறைப்பது அவருடைய பேனாவின் மரபாகிவிட்டது. பி.சு. பொன்னப்பா – என்பது அவருடைய முழுப் பெயராக இருந்தாலும் ஒர் இலக்கிய அரக்கனுக்காகப் பயப்படும் – பயங்கலந்த நிர்ப்பந்த மரியாதையோடு – ‘பி.எஸ்.பி’ என்று அன்பர்கள் மெதுவான குரலில் அவர் பெயரைச் சொல்லி வந்தார்கள்.

‘பி.எஸ்.பி’யின் விமரிசனம் சில சமயங்களில் பக்தர்கள் புரிந்துகொள்ள முடியாத ‘பரம்பொருள் தன்மை’ போல ஆகிவிடும். அவருடைய விமரிசனக் கணைகளுக்கு நிகழ்கால ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கடந்தகால மேதைகளும் ஆளாவதுண்டு. ஒருமுறை, “கம்பனில் சில பகுதிகளைத் தவிர மற்றவைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுதான்” — என்று ஒரு கருத்தை வெளியிட்டு அது காரசாரமான அபிப்ராய பேதங்களைக் கிளப்புவது கண்டு மகிழ்ந்தார். இன்னொரு முறை. திருக்குறளைத் தலையைச் சுற்றி நெருப்பில் போட வேண்டும்’ – என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

இவ்வளவுக்கும் திருக்குறளையோ கம்பனையோ அவர் முழுதும் படித்ததுகூட இல்லை. ஏனோ காரணமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள்மேல் ஏற்பட்டு விட்ட ஒரு வெறுப்பைப்போலக் கம்பன்மீதும் குறள் மீதும்கூட அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் கம்பனையும், திருவள்ளுவரையும் இப்படித் தூக்கி எறிந்து எழுதிய இதே பேனாவால் மறுநாள் ‘யாருக்கும் அதில் எந்த நயமிருக்கிறது’ என்றே புரியாத ஒர் ஏழாந்தரமான கொச்சைத் தமிழ் நாவலை – முதல் தரமானது என்று பாராட்டிப் புகழ் மாலை சூட்டுவார்.

‘பி.எஸ்.பி’ கம்பனை ஏன் குறை கூறுகிறீர்கள்?’ – என்று கேட்டால், “மில்டனைப் போலவோ, ஹோமரைப் போலவோ அவன் பாடவில்லையே?” – என்று விநோதமாக அதற்கும் ஒரு பதில் ரெடிமேடாய் வைத்திருப்பார். “அது ஏன்? கம்பன் எதற்காக மில்டனையும் ஹோமரையும் போலிருக்க வேண்டும்?” – என்று கேட்டால் பதில் வராது அவரிடமிருந்து.

“இன்ன நாவலைப் புகழ்கிறிர்களே; அது ரொம்பச் சுமாராக இருக்கிறதே?” என்று கேட்டாலோ,

“அதெப்படி? ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃகோ போன்று தமிழில் எழுத முயன்றிருக்கிறாரே அவர்?” என்பதாக அதற்கும் ஒரு விநோதமான பதில் தான் வரும் அவரிடமிருந்து. விநோதமில்லாத பதில்கள் அவரிடமிருந்து தான் வராதே.

தமிழை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்கிற அவர் – தெரியாத யாராவது இங்கிலீஷில் சிறு தவறுபட எழுதினாலோ பேசினாலோ, அசிங்கமாகக் கேலி செய்வார். அதற்கு என்பதை ‘அதுக்கு’ என்றும் ‘சிறியது’ என்பதைச் ‘சின்னது’ என்றும் தோன்றினாற்போலத் தமிழில் தாம் எழுதுவதை மற்றவர்கள் கேலி செய்ய முடியாதபடி மிரட்டி வைத்திருக்கும் அவர் – மற்றவர்களைத் தாராளமாகக் கேலி செய்வார். விதேசி மனப்பான்மையோடு சுதேசி மொழிகளையும் நூல்களையும் விமரிசனம் செய்து வந்தார் அவர். அவருடைய விருப்புக்கள் விநோதமானவை. வெறுப்புக்களும் கூட விநோதமானவைதான்.

பன்னீராயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்துக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானாமே ஒரு பைத்தியக்காரப் பாண்டியன். அதுபோல் முடிந்தால் தொண்ணூறாயிரம் தமிழ்ப் பண்டிதர்களைக் காவுகொடுத்துப் புதுமை இலக்கியத்துக்கு ஒரு விழாக் கொண்டாட வேண்டுமென்பது அவர் ஆசை. நல்ல வேளையாக அந்த ஆசை இன்று வரை நிறைவேற வில்லை. ஆனால் வேறு ஒர் ஆசை மட்டும் நிறைவேறியது. காரசாரமான அபிப்ராயங்களோடு – கடுமையான விமரிசனப் பத்திரிகை ஒன்று நடத்த வேண்டுமென்ற ஆசை அவருக்கு நீண்ட காலமாய் இருந்தது. பத்திரிகைக்கு ‘இலக்கிய் ராட்சஸன்’ – என்று பெயர் வைத்தார். பத்திரிகையின் இலட்சியங்கள் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன:

(1) இந்தப் பத்திரிகைக்கு முந்நூறு வாசகர்கள் போதும்.

(2) தமிழ்ப் பண்டிதர்கள், மரபுவழிக் கவிதை எழுதுவோர் ஆகியவர்கள் இந்தப் பத்திரிகையைப் படிக்கக் கூடாது.

(3) இந்தப் பத்திரிகை கடைகளில் தொங்காது.

(4) எல்லாப் பத்திரிகைகளும் அட்டையில் இளம் பெண்கள் படத்தைப் போடுவது போலல்லாமல் இந்தப் பத்திரிகையில் கிழவிகள், கிழவர்கள் படமே போடப்படும்;
இளம் பெண்கள்போல் தோன்றும் கிழவிகள் படம்கூடப் போடப்படாது.

(5) இந்தப் பத்திரிகையில் சோதனைகளுக்கே முதலிடம் உண்டு.

இத்யாதி நிபந்தனைகளுடன் பத்திரிகை வெளிவந்தது. இதழில் முதல் பக்கத்தில் பி.எஸ்.பி. எழுதிய புதுமுறை வசன கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. அக்கவிதை பின் வருமாறு:

விளக்கெண்கெண்யின் ‘வழ வழ’

“ஜிலு ஜிலுக்கும் விளக்கெண்ணெய்
சிவு சிவு பிசு பிசு –
சிவு சிவு வழ வழ
வழ வழ கொழ கொழ
கொழ கொழ விளக்கெண்ணெய்
கருகரு மயிர்க் கும்பல்
கருத்தடரும் உயிர்க்காடு – ”

இக் கவிதையில் மனத்தினால் எட்டிப் பிடிக்க முடியாத பல அரிய உண்மைகள் அடங்கியிருக்கும் மர்மங்களை இதைப் படைத்த கலைஞராகிய பி.எஸ்.பி அவர்களே அதே இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். துர்த் தேவதைகளுக்கும் பக்தர்கள் ஏற்படுவது போல் பி.எஸ்.பி.யின் ‘இலக்கிய ராட்சஸனுக்’கென்று சில வக்கிரமான வாசகர்களும் உக்கிரமாக மூளைக்கொதிப்படைந்த பக்தர்களும் கிடைத்தனர். ‘ஒட்டுமொத்தமாகத் தமிழ் நாட்டை அலசும் ஒரே ஏடு’ – என்ற நீடுமொழியுடன் ‘இலக்கிய ராட்சஸன்’ – பவனி வரத்தொடங்கினான். இலக்கிய ராட்சஸன் 250 பிரதிகள் தமிழ் நாட்டை அலசின.

”எஸ்ராபவுண்டின் கவிகளும் எழுத்தச்சனும்’, ‘உருஉத்திப்பார்வையும் கரு – அமைந்த சதைகளும்’, ‘மூட்டைக் கடை முகுந்தன்’, ‘கவிதை நூல் விமர்சனம்’ போன்ற சில மூளைக்குழப்பத் தலைப்புக்கள் இலக்கிய ராட்சஸனில் அடிக்கடி தென்படலாயின.

‘இலக்கிய ராட்சஸனில்’ எழுதும் எழுத்தாளர்களுக்கும் துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு வரவதைப் போல் பி.எஸ்.பியின் உயிரற்ற தமிழ்நடை வக்கிரத் தாக்குதல்கள் எல்லாம் ஏகலைவ நியாயமாகக் கைவந்தன. அதில் மர்ம – பலராமன் என்றொரு இளைஞர் அடிக்கடி வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தார். இலக்கிய ராட்சஸன் ஆசிரியர் கூட இந்த மர்ம – பலராமனின் குழப்பக் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டி வந்தார். மர்ம – பலராமன் எழுதாமல் ஒரு இலக்கிய ராட்சஸன் ஏடுகூட வராது என்ற அளவிற்கு ஒரு பிணைப்பு இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் ‘இலக்கிய ராட்சஸன்’ ஆசிரியர் பி.எஸ்.பி யைச் சந்திக்க மர்ம – பலராமன் வந்து சேர்ந்தார். பி.எஸ்.பி. மர்ம – பலராமனை உற்சாகமாக வரவேற்றார். “உங்க அபிப்ராயங்கள் எழுத்துக்களிலே முப்பதுகளுக்கு முந்தியதைப் பாராட்டியும் – இருபதுகளுக்குப் பிந்தியதைத் தாக்கியும் காரசாரமாக எழுதுறீங்க. ரொம்ப அழுத்தம் இருக்கு: ஆழமும் இருக்கு” என்று இரபத்தேழு வயது நிரம்பாத மர்ம – பலராமனைப் பாராட்டினார் பி.எஸ்.பி. மர்ம – பலராமனுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது. “கம்பனைக் குப்பையில் போடு” என்றொரு திறனாய்வு எழுதியிருப்பதாக உடனே பி.எஸ்.பியிடம் கூறினார். மர்ம – பலராமன். ”ஆகா!தாராளமாக வெளியிடலாம்!” என்று அதை வாங்கிக் கொண்டார். பி.எஸ்.பி. இருபத்தேழு வயது நிரம்பாத மர்ம – பலராமனை முழு வக்கிரமாக வளர்த்து ஊக்கப் படுத்தினார். பி.எஸ்.பி. மர்ம – பலராமனுக்குத் துணிவு குடம் குடமாகப் பொங்கலாயிற்று.

விமர்சகர் பி.எஸ்.பி. ‘விவாகரத்து’ என்று ஒரு நாவல் எப்போதோ எழுதியிருந்தார். ஒரு விதவை மாமி – மாவரைப்பதில் ஆரம்பமாகிற நாவல், அந்த மாமி மாவரைத்து முடிகிறவரை நூறு பக்கம் நினைவோட்டமாக வளர்கிற பாணி. அந்த நாவலைத் ‘தமிழிலக்கியத்தில் வெளிவந்துள்ள யதார்த்த இலக்கிய சிகரம்’ என்பதாக வர்ணித்து மர்ம – பலராமன் இலக்கிய ராட்சஸனிலேயே ஒரு கட்டுரை எழுதினார்.அதுவும் இலக்கிய ராட்சஸனில் அபாரமாக வெளிவந்தது. பி.எஸ்.பி. ஏதாவது ஸெமினார்கள். இலக்கிய அரங்குகளில் பேசினால்கூடத் தமிழ்இலக்கியத்தின் பிதாமகர்களாகக் குறிப்பிடும் பத்துப் பேர் மர்ம – பலராமனைப் போல் ‘இலக்கிய ராட்சஸ’னில் – வக்கிற கட்டுரைகளைப் படைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். மர்ம – பலராமனை பி.எஸ்.பி. உற்சாசப்படுத்த அவர் சிறுபிள்ளைத் தனமாக எழுதுவதில் கடைசி எல்லைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

ஒரு நாள் திடீரென்று மர்ம – பலராமனிடமிருந்து வந்த ஒரு கட்டுரையைப் படித்து பி.எஸ்.பி. திடுக்கிட்டார். ஏனென்றால், ”பி.எஸ்.பி.யின் சமீபகாலத்து நாவலான ‘அடுப்பங்கரை’ – யில் ஆழமோ – பாத்திரங்களின் வார்ப்படமோ – சரியாக இல்லை என்றும், பி.எஸ்.பி. இனிமேல் நாவலே எழுதக் கூடாது” என்றும் மர்ம – பலராமன் தனக்குத் துரோணர் போன்ற பி.எஸ்.பி யையே கடுமையாகத் தாத்கியிருந்தார். ‘இந்த இருபத்தேழு வயதுப் பயலுக்குத் தன்னைத் தாக்குகிற துணிவு வருவதாவது?” – என்று திகைத்துச் சீறினார் பி.எஸ்.பி. பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமானாக இருந்தார். அவர் இப்போது. மர்ம – பலராமனிடம் பெருகிய துணிவு வெள்ளம் பி.எஸ்.பி.யின் சமீப நாவல் ‘வெறும் குப்பை’ என்று அடித்துச் சொல்கிற அளவு முறுசி வளர்ந்திருந்தது.

அந்தக் கட்டுரையைப் போடாமல் நிறுத்தியதோடு உடனே ‘சமீப காலமாக உனக்கு மூளை குழம்பி விட்டது’ என்று கோபமாக மர்ம – பலராமனுக்குக் கடிதம் எழுதினார் குரு பி.எஸ்.பி.

”உங்களுக்குத்தான் மூளை குழம்பிருப்பதாக நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில்ருந்து தெரிகிறது.” – என்று உடனே அவருக்குக் காரமாகப் பதில் எழுதினான் மர்ம – பலராமன். ‘தான் மற்றவர்களைத் திட்டுவதற்குச் சரியான கருவியாகப் பயன்யடும் ஒர் ஆள் இவன்” என்று தானே தேர்ந்து எடுத்து முறுக்கிவிட்ட ஒரு பொடியன் ‘தன்னையே திட்டுவதா?” – என்று கொதித்தெழுந்தார் பி.எஸ்.பி. உடனே கொதிப்போடு கொதிப்பாக மர்ம – பலராமனின் கட்டுரையைத் திருப்பி அனுப்பியதோடு நிற்காமல், அந்த இதழ் ‘இலக்கிய ராட்சஸனில்’ ”இலக்கிய விமர்சனமும் சிறுபிள்ளைத்தனங்களும்”என்ற தலைப்பில் மர்ம – பலராமனைத் தாக்கு தாக்கென்று தாக்கித் தள்ளினார். அப்போது தான் தம்முடைய இணையற்ற குரு ஸ்தானம் நினைவு வந்தவர்போல். அவர் சீடனைத் தாக்கிய மூன்றாம் நாள் சீடன் ‘இலக்கியக் கொம்பன்’ – என்ற பேரில் புதிய விமர்சனப் பத்திரிகை ஒன்று தொடங்கியிருப்பது தெரியவந்தது. மர்ம – பலராமனை ஆசிரியாகக் கொண்ட ‘இலக்கியக் கொம்பனில்’ – ”பி.எஸ்.பியின் சமீபக் குப்பைகள்” – என்ற கட்டுரை முதல் இதழிலேயே வந்திருந்தது. அதில் பி.எஸ்.பி.யைக் காரமாகத் தாக்கியிருந்தார் மர்ம – பலராமன். பி.எஸ்.பி.க்குக் கோபமான கோபம் வந்தது. மர்ம – பலராமனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட வேண்டும் போலக் கோபம் அவ்வளவு அதிகமாக வந்தது பி.எஸ்.பி.க்கு.

வறண்டுபோன ஒரு விமர்சகன் அளவு மீறிக் கோபப்படும் போதுதான் இரண்டாவத விமர்சகன் பிறக்கிறானோ என்னவோ? ஆனால் இந்த பி.எஸ்.பிஎன்ற பரமசிவனிடம் வரம் வாங்கிய பஸ்மாசுரனோ இவர் தலையில் கையை வைத்துப் பொசுக்கியே விட்டான். எப்படி என்று கேட்கிறீர்களா? இரண்டே மாதங்களில் ‘இலக்கிய ராட்சஸன்’ நின்றுவிட்டது. புதிய பத்திரிகையாகிய ‘இலக்கியக் கொம்பன்’ பிரமாதமாக நடக்கத் தொடங்கிவிட்டது. இப்போது பி.எஸ்.பி.யின் துர்த்தேவதை ஸ்தாபனம் பறிபோயிற்று. புதிய விமர்சனத் துர்த்தேவதையாக இருபத்தேழு வயது நிரம்பிய மர்ம – பலராமனின் சீடர்களாகிவிட்டனர். மர்ம – பலராமன் ‘ தனக்கு முன்னும் தமிழே இல்லை, பின்னும் தமிழே இல்லை’ – என்ற பாணியில் ஹுங்காரச் சவால் விடலானான். ‘திருவள்ளுவர் ஆழமாகச் சொல்லத் தவறிவிட்டார்’, ‘கம்பர் வசன கவிதை எழுதத் தெரியாதவர்’ – போன்ற கண்டனக் கட்டுரைகள் ‘இ-கொம்பனில்’ வெளிவந்து தமிழர்களின் மூளையைக் குழப்பலாயின.

இனிமேல் ‘இ.கொம்பனின்’ கொழுப்பு எப்போது அடங்குமென்று தானே கேட்கிறீர்கள்?

இ.கொம்பனிலிருந்து இன்னொரு இரண்டாவது விமர்சயன் பிரியும்போது நிச்சயமாக இ.கொம்பம் பொசுங்கிப் போகும். கவவைப்படாதீர்கள். அதுவரை பொறுமையாயிருங்கள்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: