Archive

Archive for July 9, 2009

Web Analytics: A Puzzle or A Mystery? | Occam’s Razor by Avinash Kaushik

July 9, 2009 Leave a comment
Categories: Uncategorized

தாயின் அருமை – Short Stories for Kids

July 9, 2009 Leave a comment
Thaiyin arumai-ponnammalThaiyin arumai-ponnammal

தாயின் அருமை:

விலை: ரூ-30.00

Ph: no: (044) 24342810

கிடைக்கும் இடம்: திருவரசு புத்தகநிலையம்,

23,தீன தயாளு தெரு,

தியாகராய நகர்,

சென்னை-600017.

குழந்தை நூல்களுக்காக பல பரிசுகள் பெற்றுள்ள திருமதி ஆர்.பொன்னம்மாள் குழந்தைகளுக்காக இந்நுலில் அரிய அறிவுரைகளை கதையோடு கலந்து கொடுத்திருக்கிறார். மொத்தம் 13 கதைகள். முதல் கதையில் சிறுமி வித்யா கிராமத்து மனிதர்களிடமிருந்து உதவும் குணத்தைப் புரிந்து கொள்கிறாள்.

அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை இரண்டாம் கதையின் நாயகன் நவீன் உணர்கிறான். மூன்றாம் கதையில் சங்கீதா நீதிக்கதையையும், சுமித்ரா அறிவாற்றலுடைய போட்டிக்கதையையும், விமலா பொன்வட்டில் கதையையும், மானஸா நாற்காலி கதையையும், பிரேமா தவளைக் கதையையும், கீதா மொட்டைத்தலைக் கதையையும் கூறி அசத்தியிருக்கின்றனர். பொய் சொன்னாள் தண்டனை தனக்குத்தான் என்பதை “யாருக்கு ஏமாற்றம்” சொல்கிறது. சுரேஷ் நடத்திய நாடகம் “சுதும், வாதும்” வேதனை செய்யும் என்கிறது. உருதுகவிஞர் மிர்ஜா காலிப் நட்பைப் போற்றிய சம்பவம், பூதத்தை விக்டர் வென்ற கதை இரண்டும் கதைக்குள் கதையாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.

மனதால் உயரமான பார்வதியின் படிப்பறிவு வெளிப்படும் விதம் நம்மை பிரமிக்க வைக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. “என்னால் முடியுமா!” புத்தகத்தலைப்பைக் கொண்ட ஒன்பதாவது கதை வருணையும், வர்ஷாவையும் திருத்துகிறது.

உபகாரம் அவதூறையும், அனாவசியச் செலவையும் தந்ததை அடுத்த கதையில் படித்து மனம் உருகுகின்றது.

குழந்தைகளிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று பெரியவர்களுக்கும், கூட்டுக் குடும்பத்திலுள்ள குழந்தைகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் மென்றும் “திரியாவரக்காரி” விளக்குகிறது.

“யார் அசடு” உம்மண மூஞ்சியையும் வாய் விட்டு நகைக்க வைக்கும். எளிமையாக மாறு வேடமிட்டாலும் திறமையாகப் பேசி முதல் பரிசைத்தட்டிச் சென்ற ஹரீஷ் கதை சிலிர்க்க வைகிறது. மொத்தத்தில் சிறுவர் சிறுமியரை பண்பாளராக மாற்றும் முயற்சி இந்நூல்.

Anandha Vikadan this week – Charu Nivethitha in ‘Enna Chethukkiya 7 Naatkal’

July 9, 2009 2 comments

http://www.vikatan.com/av/2009/jul/15072009/av0909.asp

இந்த வாரம்: சாரு நிவேதிதா — என்னைச் செதுக்கிய 7 நாட்கள்!

வாக்கிய அலங்காரங்களோ, வர்ணனை வார்த்தைகளோ எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு அடையாளம் அல்ல! வாழ்க்கையின் சுவையை – இனிப்போ, கசப்போ -‘உள்ளது உள்ளபடி’ உணர்த்துபவர் இங்கே தன் பெர்சனல் பக்கங்களைப் புரட்டுகிறார்…

———————————————————–

001 ”நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் குரு என்று ஒரு மாணவன் புதிதாக வந்து சேர்ந்தான். எங்களைவிட நாலைந்து வயது பெரியவன். சில புதிய ஆசிரியர்கள் அவனையும் ஓர் ஆசிரியர் என்றே நினைத்துவிடுவார்கள். அவ்வளவு பெரியவன். அது ஓர் ஆணின் வாழ்க்கையில் முதன்முதலாகக் காமம் எட்டிப் பார்க்கும் வயது. அதற்கேற்ப சரீரத்திலும், எண்ணங்களிலும் ஏற்படும் மாற்றங்கள்.

குருதான் எங்களுக்கெல்லாம் ஹீரோ. கொக்கோகப் புத்தகங்களைப் படித்து விட்டு வந்து கதை கதையாகச் சொல்லுவான். அவனுடைய கதைகளுக்குமாற்றாக நானும் அவ்வப்போது கதைகள் சொல்லுவேன். காதல் கதை, பேய்க் கதை, வீரதீர சாகசக் கதை என்று பலவிதமான கதைகள்! ஒரு கட்டத்தில் குருவிடம் சரக்கு தீர்ந்துவிட்டதால், நானே எல்லாக் கதைகளையும் சொல்ல நேர்ந்தது. அப்படிக் கதை சொல்வதற்காகவே நான் நிறைய கதைப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கும்படி ஆனது. குருவே என்னிடம் வாயைப் பிளந்தபடி கதை கேட்டதால், குருவுக்குக் கொடுக்கப்பட்டு இருந்த ஹீரோ பட்டம் எனக்கு வந்து சேர்ந்தது.

அந்தப் பட்டம் தந்த போதையால் மேலும் மேலும் புத்தகங்களைப் படித்து, மேலும் மேலும் கதைகள் சொன்னேன். பள்ளி நூலகத்தில் இருந்து 1001 அராபிய இரவுகளை எடுத்து வந்து பரீட்சைக்குப் படிப்பது போல் படித்தெல்லாம் கதை சொல்லி இருக்கிறேன். அப்போதுதான் கற்றுக்கொண்டேன் வசீகரமான கதைகளைச் சொல்வது எப்படி என்ற கலையை!”

———————————————————–

002 ”டெல்லியில் ஓர் அரசு அலுவலகத்தில் நான் ஸ்டெனோ வாக இருந்தபோது என் அதிகாரி ஒரு பெண். அரசு அதிகாரிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்பதாலோ என்னவோ(!), அவர்களுக்கு மட்டும் சில சலுகைகள் உண்டு. மாதாமாதம் அவர்களுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடிக்கு என்று அலவன்ஸ். அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து, அதற்கு அக்கவுன்ட்ஸ் பிரிவில் கணக்கும் கொடுக்க வேண்டியது ஸ்டெனோவின் பொறுப்பு.

அந்த அதிகாரி ஒரு பரம்பரைப் பணக்காரர். அரசியலில் பெரும் செல்வாக்கு உள்ளவர். ஆனாலும் மாதா மாதம் சோப்பு, சீப்போடு அவருக்கு இரண்டு பேக் சானிட்டரி நாப்கின்களும் வாங்கச் சொல்வார். இதை நான் சானிட்டரி நாப்கின்ஸ் என்று கணக்கு எழுதக்கூடாது. ‘வேறு ஏதாவது எழுதிவிடுங்கள்’ என்பார். அந்த வேறு ஏதாவதை மாதாமாதம் புதிது புதிதாகக் கண்டுபிடிப்பதற்குள் எனக்குத் தாவு தீர்ந்துவிடும். ஒரு பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்று கனவு கண்ட நாம், இப்படி ஓர் இளம் பெண் அதிகாரிக்கு சானிட்டரி நாப்கின்ஸ் வாங்கிக் கொடுத்து, அதற்கு பொய்க் கணக்கு எழுதுகிறோமே என்று வருத்தப்படாத நாளே கிடையாது.

ஒரு நாள்… அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து சுங்க வரி கட்டாமல் நகைகள் கடத்தி வந்து, விமான நிலையத்தில் சிக்கிச் செய்தியாகி இருந்தார். அழகிய அதிகாரி என்பதால் எட்டுக் கால முன்னுரிமை கொடுத்துப் பத்திரிகைகளில் பெரிய பெரிய புகைப்படங் களாக வெளியிட்டு இருந்தார்கள். திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டபோது, எனக்குப் பலவிதமான கேள்விகள் எழுந்தன.

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், இவர் ஏன் திகார் ஜெயிலில் அடைந்துகிடக்க வேண்டும்? அங்கு இனி இவருக்கு யார் சானிட்டரி நாப்கின் வாங்கித் தருவார்கள்?”

———————————————————–

003 ”எனக்கு விலங்குகள் மீது அக்கறையே இருந்தது இல்லை. அதெல்லாம் ஒரு தொந்தரவு என்றே எண்ணி வந்திருக்கிறேன். காக்காய் கத்தினால் பிடிக்காது (என்ன இது ஒரே சத்தம்?). பல்லி பிடிக்காது (ஏதாவது சமையலில் விழுந்துவிட்டால் என்ன ஆவது?). நாய் பிடிக்காது (கடித்துவிட்டால்?). ஈ, எறும்பு எதுவுமே பிடிக்காது. எல்லாமே மனிதனின் சத்ரு என்று ஓர் எண்ணம்.

எனக்குத் திருமணமான புதிது. காதல் திருமணம்தான் என்றாலும், என் மனைவி அவந்திகாவும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டு இருந்த காலகட்டம். ஒருநாள் கதவருகே நின்றிருந்த அவந்திகா, ‘அஜ்ஜு குட்டி, செல்லக் குட்டி, உனக்கு என்ன வேணும்?’ என்று எதையோ கொஞ்சியபடி பேசிக் கொண்டு இருந்தாள். பூனையாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் என்னவென்று கேட்டேன். பல்லி என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. பூனையைக் கொஞ்சிப் பார்த்திருக்கிறேன்; நாயைக் கொஞ்சிப் பார்த்திருக்கிறேன்; யாராவது பல்லியைக் கொஞ்சுவார்களா? ‘இல்லை. இது என் குழந்தை மாதிரி. தினமும் வரும்’ என்றாள். அப்புறம்தான் கவனித்தேன். இதை நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, தினந்தோறும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், அந்தப் பல்லி அங்கே வந்து அவள் பேசுவதைக் கேட்டுவிட்டுப் போனது.

அந்தச் சம்பவம் விலங்குகளையும், மற்ற ஜீவராசி களையும் குறித்த என் பார்வையை மாற்றியது. ‘உனக்கு இந்தப் பூமியில் வாழ எத்தனை உரிமை இருக்கிறதோ… அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கிறது தானே?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஜீவகாருண்யத்தை நேருக்கு நேர் கற்றுக் கொடுத்த நாள் அது!”

———————————————————–

004 ”நான் சிறிது காலம் நாத்திகனாகவும், பிறகு அக்னாஸ்டிக்காகவும் (கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ நம்பாத நடுவாந்திர ஜென்மங்கள்) இருந்திருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும், கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லத் தவறியதே இல்லை. பக்திக்காக அல்ல; அங்கே சென்றால் மனசுக்குப் பிடிக்கும். அதனால் போவேன். அப்படி ஒருமுறை ஜம்முவில் உள்ள வைஷ்ணவோ தேவி கோயிலுக்குச் சென்றேன். கீழே இருந்து மலை உச்சிக்கு ஏற ஏழெட்டு மணி நேரம் பிடித்தது. இரவு முழுதும் ஏறி காலையில் உச்சியை வந்து அடைந்தேன். ஆனால், அங்கே நான் எதிர்பார்த்தபடி எந்தக் கோயிலும் இல்லை. அவ்வளவு நேரம் நடந்து வந்து பயனில்லாமல் போய்விட்டதே என்று ஒரு கணம் தோன்றியது.

அப்போது அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகத்தைக் கண்டேன். ‘தேவி இங்கே இயற்கை சொரூபியாக விளங்குகிறாள்!’ பிறகுதான் அந்த இடத்தை நிதானமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இமயமலையின் ஆயிரக்கணக்கான சிகரங்களில் ஒன்று அது. சொர்க்கம் என்ற ஒரே வார்த்தை போதும் அதை வர்ணிக்க. அப்படி ஒரு பேரழகு. அப்போதுதான் கிடுகிடுவென்று யாரோ என் காதுகளில் உபதேசிப்பது போல் ஏராளமான விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. கோடிக்கணக்கான மனிதர்கள் இன்றும், நேற்றும், நாளையும் வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத் திருக்கும் இந்தப் பூமியை நாம் மதிக்கிறோமா? நன்றி பாராட்டுகிறோமா? பூமி பூஜை செய்தால் பகுத்தறிவு கொண்டு நகைக்கும் நாம், இந்தப் பூமியை மனித வாழ்வுக்குத் தகுதியானதாக ஆக்கியிருக்கிறோமா? சாயக் கழிவுகளைக் கொட்டி நொய்யல் நதியைக் கொன்றுவிட்டோம். 100 ஆண்டுகளுக்கு முன்பு படகுகள் ஓடிக்கொண்டு இருந்த கூவம் நதிஇன்று சாக்கடையாகிவிட்டது.

ஆனால், இவ்விஷயத்தில் மேற்குலகம் விழித்துக்கொண்டுவிட்டது. மேற்கைப் பார்த்துக் காப்பியடிக்கும் நாம், இந்த நல்ல விஷயத்தை மேற்கிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம். உதாரணமாக, ஒரே ஒரு குப்பையைக்கூடப் பார்க்க முடியாத சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’ என்ற இடம் மட்டும் நம் ஊரைப் போலவே குப்பையாக இருக்கிறது!”

———————————————————–

005 ”ஓர் இயக்குநர் நண்பர் என்னை அவருடைய படப்பிடிப்பைப் பார்க்க அழைத்திருந்தார். அது ஒரு பாடல் காட்சி. ஆட்டக்காரர்களில் பாதி பெண்கள்; பாதி ஆண்கள். ஒவ்வொருவராக டான்ஸ் மாஸ்டரின் கால் தொட்டு வணங்கிவிட்டு, ஒரு மதிலின் மேல் ஏறிக்கொண்டு இருந்தார்கள். பெண்கள் மினி ஸ்கர்ட் அணிந்திருந்தனர். அன்றைய தினம் அந்த மதில் சுவரின் மீதுதான் ஆட வேண்டும் போலிருக்கிறது.

நாம் ஒரு சினிமாவுக்குப் போகிறோம். சூர்யா நன்றாக ஆடினார், விஜய் நன்றாக ஆடினார் என்கிறோமே தவிர, அந்த ஹீரோ, ஹீரோயினைச் சுற்றி ஆண்களும் பெண் களும் ஆடுகிறார்களே, அவர்கள் யார்? கேமராவில் முகம்கூட சரியாகத் தெரியாத அவர்களுடைய பெயர் என்ன? அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள்? அவர் களுக்கும் காதல், கல்யாணம், குடும்பம், குழந்தை, துக்கம், சந்தோஷம் எல்லாம் இருக்கும்தானே? வியர்க்க விறு விறுக்க ஆட்டம் போடும் இவர்களுக்கும் இந்தப் படத் துக்கும் என்ன சம்பந்தம்?

‘அண்ணே, ஸ்கர்ட் பறக்குதுண்ணே!’ – ஒரு பெண் ணின் கீச்சுக் குரல் என் சிந்தனையைத் துண்டித்தது. குரல் வந்த திசையில் பார்த்தால், பெண்கள் எல்லாம் காற்றில் பறக்கும் ஸ்கர்ட்டோடு போராடிக்கொண்டு இருந்தார்கள். டான்ஸ் மாஸ்டர் அவர்களைக் கீழே இறங்கி வரச் சொல்லி, ஸ்கர்ட் பறக்காமல் இருக்க ‘பின்’ செருகிக்கொள்ளச் செய்து மீண்டும் மேலே போகச் சொன்னார். மீண்டும் பாடல் காட்சி துவங்கியது.

என்னைப் பொறுத்தவரை அந்த மூன்று வார்த்தைகள் கனவுத் தொழிற்சாலையின் குரூர நிஜத்தை உணர வைத்தன. அதில் இருந்துதான் எந்த விஷயத்திலும் அதன் மையத்தை மட்டும் பார்க்காமல், ஓரத்தையும் விளிம்பையும் கவனிக்க ஆரம்பித்தேன்!”

———————————————————–

006 ”ரமலான் மாதத்தின்போது நோன்பு இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய விருப்பம். அதில் எனக்கு ஒரே ஒரு பிரச்னைதான் இருந்தது. அதிகாலையில் நோன்பைத் துவக்குவதற்கு முன்னால் சிறிது சாப்பிட்டுக்கொண்டால், கொஞ்சம் தெம்பாக இருக்கும். சரி, அதையும் செய்துவிடலாம் என்று ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவு இரண்டரை மணிக்கே எழுந்து சிறிய அளவில் ஒரு சமையலைச் செய்தேன். நாலேகால் அளவில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதால், குளித்துவிட்டு மூன்றரை மணிக்கே சாப்பிட ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் சாப்பிட முடியவில்லை. அதனால், தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டேன். இனிமேல் மாலை ஆறு மணி அளவில் நோன்பு துறக்கும் வரை சாப்பிடக் கூடாது; தண்ணீர் அருந்தக் கூடாது; எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது.

வாழ்க்கையில் அப்படி ஒரு நோன்பு இருப்பது அதுவே முதல் முறை என்பதால், அந்த அனுபவம் கடுமையாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்கு மேல் சாப்பாட்டைத் தவிர வேறு எந்தச் சிந்தனையுமே வரவில்லை. இறைச் சிந்தனையில் மனதைச் செலுத்த முயற்சித்தேன். ம்ஹ§ம்… முயற்சி பலன் அளிக்கவில்லை. பழக்கமே இல்லாததால், மனமும் உடலும் சோறு சோறு என்றே பரபரத்தன. கிட்டத்தட்ட நான்கு மணிக்கு மயக்கமே வந்துவிட்டதுபோல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பட்டினி கிடந்திருக்கிறேன். ஆனால், அது பட்டினி. இது நீர்கூட அருந்தாமல் இருக்கும் நோன்பு. இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் இருந்தது.

அன்றைய தினம்தான் முதன்முதலில் பசி, தாகம் என்ற இரண்டு விஷயங்களையும் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். வார்த்தைக்கும், அதை அனுபவித்து உணர்வதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. இவ்வளவுக்கும் ஆறு மணிக்குச் சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்துமே என்னால் தாங்க முடியவில்லை. அப்படியானால் அந்த நம்பிக்கையே இல்லாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியையே அன்றைய நோன்பு எனக்குக் கற்றுக்கொடுத்தது!”

———————————————————–

007 ”ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் கோப்பைகளை உயர்த்திக் காண்பித்தபடி நிற்கும் காட்சி எனக்குப் பலவித சிந்தனைகளை ஏற்படுத்தியது. ஆஸ்கரைவிடவும் உயர்ந்த விருதுகள் வாங்குவதற்குத் தகுதியானவர் ரஹ்மான். ஆனாலும், அவருடைய வாழ்வில் நடந்த அதிசயங்களுக்கு ஒரு காரணம், ஆந்திராவின் கடப்பாவில் உள்ள பெட்டா தர்காவின் ஹஜ்ரத் ஆரிஃபுல்லா ஹ§சேனியின்ஆசி.

நான் பாபாவின் பக்தன் என்றாலும், கண் முன்னே ஒரு சூஃபியைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்குள் ஒரு விருப்பம். இந்த நிலையில்தான் மணலூர்ப்பேட்டையில் உள்ள உஸ்மான் சித்தர் என்ற பெரியவர் உதவியால் நான் அப்படி ஒரு சூஃபியைத் தரிசித்தேன். உஸ்மான் சித்தரே பல சித்து வேலைகள் தெரிந்தவர்தான். அவர் கைகளில் இருந்து விபூதியாகக் கொட்டுகிறது என்பதால், அவரை ‘விபூதிச் சித்தர்’ என்கிறார்கள். வள்ளலாரின் தீவிர பக்தர். ஆனால், முஸ்லிம். கடும் சைவ உணவுக்காரர். ஆன்மிகச் சொற்பொழிவாளர்.

இவர் என்னை பெட்டா தர்கா இருக்கும் அதே கடப்பா மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் இவ்வ ளவு காலமாக நான் தேடிக்கொண்டு இருந்த அந்த மகானைச் சந்தித்தேன். இந்த உலகத்தின் அருளை எல்லாம் தன் கண்களில் தேக்கிவைத்திருந்த அந்த ஹஜ்ரத் என்னைப் பார்த்தபோது, எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை எழுத்தில் வடிக்க முடியும் என்று தோன்ற வில்லை.

ஹஜ்ரத் ஒரு வள்ளல். மக்கள் எதைப்பிரார்த்தித்துக் கொண்டாலும் அதை அவர்களுக்கு வழங்குகிறார். அந்தக் கணத்திலிருந்து என் வாழ்க்கை வேறு திசையில் சென்றுகொண்டு இருக்கிறது. அந்த சூஃபி ஞானியின் பெயர்: ஸஹிருத்தீன் ஷா காதிரி. எனக்குள் இதுவரை சேகரித்துவைத்திருந்த அகங்காரம், திமிர், ஆணவம் எல்லாவற்றையும் அவர் பாதங்களில் வைத்துவிட்டு, அவர் அளித்த அருளையும் ஆசியையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன்!”