Archive

Archive for July 16, 2009

Carnatic vocalist Pattammal passes away: Anjali & Memoirs

July 16, 2009 Leave a comment

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

சென்னை, ஜூலை 16:

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் இன்று காலமானார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகிகளில் முக்கியத்துவம் பெற்று போற்றப்படுபவர்களில் இவரும் ஒருவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் கர்நாடக இசையின் முப்பெரும் தேவியராக விளங்கியவர்கள் ஆவர். இவர்களில் பட்டம்மாள் தவிர மற்ற இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான மேடைகளில் இசையை பரப்பிய டி.கே.பட்டம்மாள் மறைவுக்கு, இசைக் கலைஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக இசை மற்றும் திரை இசையில் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

டி.கே.பட்டம்மாள்: வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரத்தில் 1919-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்தார் டி.கே.பட்டம்மாள். அவரது தந்தை தாமல் கிருஷ்ணமூர்த்தி. அலுமேலு என்பது டி.கே.பட்டம்மாளின் இயற்பெயராகும். பட்டா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் சிறு வயதிலேயே தனது தாயார் காந்திமதியம்மாளிடம் இசை பயின்றார்.

கர்நாடக இசைக் கலைஞர் அம்பி தீட்சிதர், டி.எல்.வெங்கட்ராம ஐயர், பி.சாம்ப மூர்த்தி மற்றும் வித்யலா நரசிம்ம நாயுடு ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றார். பாபநாசம் சிவன் மற்றும் கோடேஷ்வர ஐயர் ஆகியோரது இசையில் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 1929-ம் ஆண்டு தனது 10வது வயதில் பட்டம்மாள் முதல்முறையாக சென்னை வானொலியில் பாடினார். பின்னர் 13வது வயதில் முதல்முறையாக ரசிக ரஞ்சன சபாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். கடந்த 1939ம் ஆண்டில் ஈஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த பட்டம்மாளை திரைப்படங்களில் பாட பாபநாசம் சிவன் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு திரைப்படங்களில் பாட அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும், பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களை மட்டுமே அவர் திரைப்படங்களில் பாட முன்வந்தார். பாரதியாரின் பல பாடல்களை அவர் பாடி அவை இன்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணியாற்றிய இவர், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்திய பட்டம்மாள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவரிடம் இசைக் கற்றவர்களில் இவரது இளைய சகோதரர் டி.கே.ஜெயராமனும் ஒருவர்.

கடந்த 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்ம பூஷண் விருது,  1998ம் ஆண்டில் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது இசைப் பணியை கெளரவிக்கும் விதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TV, Media Updates from Tamil Nadu: Magazines, Journals, Periodicals

July 16, 2009 Leave a comment

எனக்குப் பத்திரிகையும் பதிப்பகமும் மீடியாவும்தான் சந்தோஷத்தைத் தருவன. அதுவும் புதிய முயற்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பன. அந்த வகையில்,

1. நேற்று திரிசக்தி என்ற ஆன்மிக இதழும், தேவதை என்ற பெண்கள் இதழும் வெளியாயின. திரிசக்திக்கு, பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர். தயாமலர் தேவதைக்கு ஆசிரியர். இவர் அவள் விகடனின் முன்னாள் ஆசிரியர்.

2. நான் விரும்பிப் படிக்கும் ஆங்கில வணிக இதழான மிண்ட், சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. சென்ற திங்கள் (13.07.2009) முதல் சென்னைப் பதிப்பு வந்திருக்கிறது. பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் சாஃப்ட் லாஞ்ச். மிகவும் உபயோகமாக இருக்கிறது.

3. ஆகஸ்டு மாதத்தில், மாலனை ஆசிரியராகக் கொண்டு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கான ஓர் தமிழ் வார இதழைத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆங்கில இதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் வரவிருக்கின்றன.

4. விகடனின் அடுத்த குழந்தை – டாக்டர் விகடன். எஸ்.நாகராஜகுமார் பொறுப்பாசிரியர். இவர் மறைந்த எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் வளர்ப்பு மகன்.

5. ஆகஸ்டு 23 முதல், சேலத்தில் புகழ்பெற்ற லோக்கல் சேனலான பாலிமர், இப்போது உலகமெங்கும் தெரியும் அளவுக்குத் தன் பரப்பை விரிக்க இருக்கிறது. ஜெயா டிவியில் இருந்த முரளிராமன் மற்றும் அவரது நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர், பாலிமருக்கு வந்துவிட்டனர்.