Archive

Archive for August 2, 2009

பாரதியார் ஆத்திசூடி – விளக்கக் கதைகள்

August 2, 2009 4 comments

பாரதியார் ஆத்திசூடி-விளக்கக் கதைகள்.

ஆசிரியர்-லட்சுமி அம்மாள்.                                                    விலை- Rs. 250

இந்நூலுக்கான உரைகல் இதோ……..

கே.ரவி

வழக்கறிஞர்

பாரதி ஒரு மஹாகவி என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கவே முடியாது. “குயில்பாட்டு”, “பாஞ்சாலி சபதம்” போன்ற அவருடைய காவியப் படைப்புகளில் மட்டுமன்றி, கேட்போர் நெஞ்சில் கிளர்ச்சி உண்டாக்கும் அவருடைய விடுதலை பாடல்களில் மட்டுமன்றி, பக்திப் பரவசத்தோடு அவர் பாடிய காளி,கண்ணன் பாடல்களில் மட்டுமன்றி, குழந்தைகளுக்காக அவர் எழுதிய எளிய பாடல்களில் கூட அவருடைய கவித்துவமும் மகத்துவமும் வெளிப்படும் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியாது. அவர் படைப்பு ஒவ்வொன்றும் பறைசாற்றும் தனிச்சிறப்பை மறுப்பதற்கில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அவ்வை எழுதிய ஆத்திசூடி வரிகளைப் படித்துத்தான் தமிழ்நாட்டுக் குழந்தைகள் வளர்ந்தனர். திடீரென்று “புதிய ஆத்திசூடி” எழுத வேண்டும் என்று பாரதிக்கு ஏன் தோன்றியது? இந்த கேள்விக்கான விடையும் அவருடைய புதிய ஆத்திசூடியிலேயே உள்ளது.

“வேதம் புதுமைசெய்” என்பது புதிய ஆத்திசூடியின் 108 ஆவது வரி. அவ்வையின் படைப்புகளைத் தமிழ் வேதமாகவே மதித்த பாரதி அதைப் புதுமை செய்யத் துணிந்ததற்குக் காரணம், வேதமே ஆனாலும் கால மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பிக்கப் படவேண்டும் என்ற எண்ணமே.

பாரதியின் “புதிய ஆத்திசூடி” குழந்தைகள் மட்டு மன்றிக் கற்றறிந்த பெருமக்களும் படித்து, ரசித்துப் பயனடைய வேண்டிய ஒரு மகத்தான படைப்பு.

பாரதியின் “புதிய ஆத்திசூடி” ஒவ்வொன்றுக்கும் விளக்கமாக ஒரு கதை அதுவும் கற்பனைக் கதையாக அன்றி இதிகாசங்கள் வேத, உபநிடதங்கள் ஆகியவற்றில் இருந்தும், சமீபத்திய வரலாற்று உண்மை நிகழ்வுகளில் இருந்தும் ஒரு கதை

சொல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த நூல். இதன் ஆசிரியர் “லட்சுமி அம்மாள்” அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

“அச்சம் தவிர்” என்ற வரிக்கு எடுத்துக்காட்டாக இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த வீரம்மாள் என்ற தலித் பெண்மணியின் வாழ்க்கையில் தொடங்கி, டாக்டர் ரங்காச்சாரி அவர்க்களுடைய மனிதாபிமான வாழ்க்கை நெறியைப் போற்றி, சர் சி.வி ராமன் போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக் காட்டக நிகழ்வுகளை அடுக்கி, வால்ட் டிஸ்னி போன்ற அயல்நாட்டு பெருமக்களின் உயரிய வாழ்க்கை முறைக்களையும் படம் பிடித்து காட்டி அடுக்கடுக்காகப் படிப்பவர் மனத்தில் உயர்ந்த கருத்து விதைகளைத் தூவி, உழுது, அறுவடையும் செய்து காட்டும் அற்புதமான நூல் இது என்று சொன்னால் மிகையாகாது.

ஆசிரியரின் மொழியறிவு பாராட்டுக்குரியது. “செளரியம் தவறேல்” என்ற ஆத்திசூடி வரியில் “செளரியம்” என்பதற்கு “வசதி” என்று பண்டிதர்கள் கூட தப்பர்த்தம் செய்துகொள்ளும்போது, மிக சரியக இவர் ”செளரியம் என்றால் வீரம்” என்று சுட்டிக் காட்டுகிறார். அடிப்படையில், “செளரியம்” என்றால் “ஒளி”  என்றே பொருள். “சூரர்கள்” என்றால் “ஒளி பொருந்தியவர்கள்”. ஒளிமிக்கது தானே வீரம்.

“வேதம் புதுமைசெய்” என்ற வரிக்கு எடுத்துக் காட்டாக சத்தியபாமா, கைகேயி போன்ற இதிகாச வீராங்கனைகளையும், மைத்ரேயி, கார்க்கி, வாசக்னவி போன்ற அறிவுச்சுடர் வீசிய மங்கையர் திலகங்களையும் இவர் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது, மகளிர் சம உரிமை முழக்கத்திற்கு ஊக்கமளிப்பது.

இந்த நூல் படிக்கப்படவேண்டிய நூல், ஆனால் ஒரு முறை மட்டும் படித்து முடிக்கப்பட வேண்டிய நூலில்லை. வாழ்க்கையில் ஐயப்பாடுகள் தோன்றும் போதெல்லாம் வழிகாட்டிகளாக வாழ்ந்து சென்ற மனிதர் குல மாணிக்கங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவு கூர மீண்டும் மீண்டும் உதவும் வகையில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நூல் இது.