Archive

Archive for August 21, 2009

கவிஞர் ஜெயபாஸ்கரன்

August 21, 2009 Leave a comment

நன்றி:- கல்கி

ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாட்டில் நடத்திவிட வேண்டுமென்று ஒவ்வொரு நாடும்
போட்டியிட்டு களத்தில் குதிக்குமே.. அது போல இருந்தது. தமிழ் விழாவை நடத்த
தமிழ்ச்சங்கங்களிடையே நடந்த போட்டி. எங்கே என்கிறீர்களா?

தமிழ் நாட்டிலில்லை.

வட அமெரிக்காவில், வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் ஆதரவில் (FETNA) இந்த
ஆண்டு ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் நடைபெற்றது அவ்விழா என்கிறார். அதில்
கலந்து கொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன்.

[image:http://img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_72759646178.jpg%5D
வடஅமெரிக்காத் தமிழ்ச்சங்க பேரவை {Federation of Tamil Sangams of North
America – FETNA} சுருக்கமாகவும், செல்லமாகவும், சொல்கிறார்கள். அமெரிக்கத்
தமிழர்கள்.

– வாஷிங்டன்
– நியூ யார்க்
– நியூ ஜெர்சி
– அட்லாண்டா மற்றும்
– கனடாவில்

உள்ள தமிழ்ச் சங்கங்களையும் சேர்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பத்தொரு
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது தான் வட அமெரிக்கத்
தமிழ்ச்சங்க பேரவை.

விழாவுக்கு ஆண்களும், பெண்களும், குடும்பங்களும், குழந்தைகளுமாக ஆயிரத்து
ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களில் இருந்தும்
வந்து குழுமிவிட்டார்கள். அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. விழா நடந்த
ஜார்ஜியா டெக் என்கிற உயர்கல்வி வளாகத்தின் அரங்கம். கோலங்களாலும், வாழை
மரங்களாலும் களை கட்டியது.

ஒவ்வொரு ஆண்டும் அழைப்பதை போலவே இவ்வாண்டும்,

– சிலம்பொலி செல்லப்பன்
– தமிழருவி மணியன்
– வைரமுத்து
– கோபிநாத் (நீயா, நானா)
– அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
– தமிழ் இணையப் பல்கலைக்கழக துணைவேந்தர் நக்கீரன் போன்றோருடன்
– நானும் (கவிஞர் ஜெயபாஸ்கரன்)

அழைக்கப்பட்டிருந்தேன்.

– ஜீவா
– பசுபதி
– அனுராதா ஸ்ரீராம்

போன்ற திரைக் கலைஞர்களோடு,

– ஜோதிக்கண்ணன் எனும் அதியற்புதமான சிலம்பாட்ட கலைஞரும்
அழைக்கப்பட்டிருந்தார்.

தமிழறிஞர் இரா.திரு.முருகன் (புதுச்சேரி) அழைக்கப்பட்டிருந்தர்களில்
முதன்மையானவர். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்து விட்டதால், அவரை நினைத்து
அவ்வப்போது மனம் கலங்கி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். FETNA தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.

மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்காக தங்களுக்கு தாங்களே பயிற்சியளித்து கொண்டு,
பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை வழங்கி, பார்வையாளர்களை உண்மையிலேயே வியக்க செய்து
விட்டார்கள் அமெரிக்க தமிழர்கள்.

– வாஷிங்டன் சங்கர பாண்டியன், பீற்றர் இரோனிமூஸ் இருவரும் சேர்ந்து
திட்டமிட்டு அரங்கேற்றிய அறிவியல் வினாடி வினா நிகழ்ச்சிக்கும்,
– அட்லாண்டா செல்வக்குமார் எழுதி அரங்கேற்றிய “பிரதிமை” எனும்
நாடகத்துக்கும்,
– ஈழத்தமிழர்களின் துயரங்களை எதிரொலித்த பா.சுந்தர வடிவேல் எழுதி இயக்கிய
“என்ன செய்யப்போகிறார்?” எனும் நாடகத்துக்கும்

ஏகப்பட்ட வரவேற்பு.

மனித உரிமைப்போராளியும், அமெரிக்கப் பெண்மணியுமான ஹெலன் ஷாண்டர் நிகழ்த்திய
இலங்கை இனப்படுகொலை பற்றிய ஆய்வுரையை சர்வதேச மனசாட்சி என்றே குறிப்பிடலாம்.
“வென்றாக வேண்டும்” தமிழ் எனும் தலைப்பில் என் தலைமையில் நடந்த
கவியரங்கத்துக்கு ஒன்றரை மணிநேரம் ஒதுக்கியிருந்தார்கள். பங்கேற்ற எட்டுக்
கவிஞர்களும் அமெரிக்காவில் இருப்பவர்கள். சும்மா சொல்லக்கூடாது. .. கவிதைகள்
மட்டுமல்ல, அவர்களின் நேர உணர்வும் வரவேற்கப்படக் கூடியதாகவே இருந்தது.

தமிழ் அன்னை என்னை பார்த்து பல கேள்விகள் கேட்பதை போல என் கவிதையை
எழுதியிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் அரங்கேறிய அக்கவிதையின் முடிவில்
அரங்கில் இருந்த அவ்வளவு பேரும் எழுந்து நின்று தொடர்ந்து கரவொலி எழுப்பியது.
எனக்கொரு புதிய நெகிழ்வுட்டக்கூடிய அனுபவம்.

வெற்றிலைக்குன்று எனும் வியத்தகு தமிழ் பெயரை, பத்தலக்குண்டு என்கிறாயே! பாவி
நீ விளங்குவாயா?

திருவள்ளுவர் தெருவை TV Street என்கிறாரே உன் TV மோகத்துக்கு ஒரு தீர்வே
கிடையாதா.

அடையாறு என்பதை அடையார் என்கிறாயே அடைய வேண்டியதை அடையவே மாட்டாய் நீ.

என்று நீண்ட என் வசன கவிதையின் பெரும்பான்மையான வரிகளுக்கு கிடைத்த வரவேற்பும்,
கரவொலியும் அமெரிக்கத் தமிழர்களின் தமிழுணர்வையே எதிரொலித்தது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் ஒரு பிரகடனத்தை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை
நடத்துகிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவாக அரங்கேறிய இவ்வாண்டு தமிழ் விழா,

“உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்” எனும் முழக்கத்தை அடிப்படையாக
கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் வெளியிடப்படுகிற மலரில் மிகவும் ஆய்வு
பூர்வமான, செழுமையான படைப்புகளை உலக அளவில் படைப்பாளிகளிடமிருந்து திரட்டி
வெளியிடுதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு மலரை விழா மேடையில்
தமிழருவி மணியன் வெளியிட, அதை பெற்றுக்கொள்கிற வாய்ப்பு எனக்கு கிட்டியது.
மிகவும் பொருட்செலவில் உயர்ரக தாளில் சொந்த செலவில் அச்சடித்து, அனுப்பி
வைக்கிறார் மதுரை மீனாட்சி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ந.சேதுராமன்.
அடுத்த ஆண்டு தமிழ் விழா – 2010 ஜூலை முதல் வாரத்தில் கனெக்டிக் நகரில் நடைபெற
இருப்பதால் அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். பேரவையின் தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.

அட்லாண்டா விமான நிலையத்தில் வாஷிங்டனுக்கு என்னை வழி அனுப்பும்போது, இது
மாதிரி நாங்க சந்தோஷமா இருந்து கூட்டம், கூட்டமாக நம்ம ஜனங்களை பார்க்க இன்னும்
ஒரு வருஷம் காத்து இருக்கணும் என இரவிக்குமார் (விழா பொறுப்பாளர்) சொன்ன போது
அவரது குரல் உடைந்திருந்தது.