Archive

Archive for August 27, 2009

ஈழத் தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும்

August 27, 2009 Leave a comment

ஈழத்தமிழரின் போர்க்கால இலக்கியம். உங்கள் குரல்: தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர், (தொகுப்பாசிரியர்: செ.சீனி நைனா முகம்மது, ஆசிரியர் உங்கள் குரல்) ஜனவரி 2007, ப. 269-284. (உங்கள் குரல், அறை எண் 2, முதல் மாடி, 22, சைனா சித்திரீட்டு, 10200, புலாவ் பினாங்கு, மலேசியா).

என்.செல்வராஜா,
நூலகவியலாளர், ஐக்கிய இராச்சியம்

1948 இல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் படிப்படியாகத் தீவிரமடைந்து வந்தது. தமிழரின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் சாத்விகப் போராட்டங்களின் வழியாக இந்த அடக்குமுறைகளுக்குத் தீர்வுகாண முயன்று தோல்வி கண்டமை இன்று வரலாறாகி விட்டது. இலங்கையில் தமிழரின் விடுதலைப் போராட்டம் சாத்வீகப் போராட்ட நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமுறைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்ற எழுபதுகளின் இறுதிப்பகுதிகளிலேயே போரியல் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே வெளிவர ஆரம்பித்து விட்டன.

1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில் பதினொரு அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்ப்பலியுடன் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தலானது, கல்வித்துறையின் திட்டமிட்ட தரப்படுத்தல்களால் எதிர்காலத்தையே இழந்துநின்ற தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் தள்ளியது. தொடர்ந்து சிங்கள அரசியல்வாதிகளால் 1977, 1983 ஆண்டுகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவர வன்முறைகளும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும் தனி நாடு ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தின.

1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை சிங்கள அரசின் கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்களின் வன்முறைப் போராட்டவடிவமாகக் கருதி வந்த புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.

அரசின் பாரிய கெடுபிடிகளுக்கு மத்தியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரசுரங்களை தாயக மண்ணில் வெளிப்படையாக அச்சிட முடியாத நிலை ஆரம்பத்தில் காணப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கிய தமிழரின் அச்சகங்கள் எவையும் பகிரங்கமாக இப்பிரசுரங்களை தாயக மண்ணில் அச்சிட முன்வரவில்லை. அச்சகங்கள் அனைத்தும் அரசின் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துணிச்சலுடன் முன்வந்த பல ஈழத்துப் படைப்பாளிகளும் அந்நாட்களில் புனைபெயரினுள் மறைந்திருந்தே இத்தகைய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பகால விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்;டிருந்த பல்வேறு போராட்ட அமைப்புக்களும் தமது தளங்களை தமிழகத்திலும் கொண்டியங்கியதால் அக்காலகட்ட வெளியீடுகள் அதிகளவில் தமிழகத்தில் அச்சிடப்பெற்று, தாயகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன. விடுதலைப் போராளிகளில் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாயிற்று.

ஈழத்தவரின் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் க.பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தன. தனி ஆட்சி என்ற நூல் கா.பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பெற்று, யாழ்ப்பாணத்திலிருந்து ஒக்டோபர் 1972 இல் வெளிவந்திருந்தது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் 1970-71 ஆண்டுக் காலப்பகுதியில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.

ஈழத்தவரின் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நூல் லங்காராணி என்பதாகும். அருளர் எழுதி சென்னை கனல் வெளியீடாக டிசம்பர், 1978 இல் 256 பக்கங்களில் இந்த வரலாற்று முக்கியத்துவமான நூல் வெளிவந்திருந்தது. இதன் இரண்டாவது பதிப்பு, யாழ்ப்பாணத்திலிருந்து ஈழப்புரட்சி அமைப்பினரால் (ஈரோஸ்) 1988 இல் வெளியிடப்பட்டிருந்தது. 1977 ஆகஸ்ட் இலங்கை இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்து ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர் லங்காராணி. லங்காராணியின் கடற்பிரயாணத்தின் பின்னணியில் அதன் பிரயாணிகளின் உணர்வலைகளின் ஊடாக ஈழத்து இனப்பிரச்சினையின் பூதாகாரத்தன்மை யையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அழகாகச் சித்திரிக்கும் நாவல்; இதுவாகும். விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக இளைஞர்களை ஈடுபடத் தூண்டிய நூலாக இந்நூல் கருதப்படுகின்றது.

ஈழப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட எண்பதுகளின் ஆரம்பப் பகுதியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன் என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. வெளியீட்டாளர் விபரமோ, அச்சக விபரமோ இந்நூலில் குறிப்பிடப்படவில்லை. மே 1985 இல் 365 பக்கங்களில் முதற்பதிப்பு வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு, கோவை, விடியல் பதிப்பகத்தினால் உப்பிலிப்பாளையத்திலிருந்து ஏப்ரல் 1997இல் மாணவர் மறுதோன்றி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. விடுதலைப் போராளியான இந்நூலாசிரியர் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்ட சில வாசகங்கள் நூலின் உள்ளடக்கத்தை தெளிவாக்குகின்றது. “பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது.” இந்நாவலைப் படைத்த கோவிந்தன் பின்னர் இனந்தெரியாதோரினால் கொல்லப்பட்டார்.

முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் நூலாசிரியரை படுகொலைக்குள்ளாக்கிய மற்றொரு நூலாகும். ராஜினி திரணகம, ராஜன் ஹ_ல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் ஆகிய நால்வர் இணைந்து இவ்வாவணத்தைத் தொகுத்திருந்தார்கள். யாழ்ப்பாணம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு இந்நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தது. 1வது பதிப்பு, 1996 இல் வெளிவந்திருந்தது. 576 பக்கங்கள் கொண்டதாக புகைப்படங்கள் சகிதம் வெளியான இந்நூல் இரு பகுதிகளாக அமைந்திருந்தது. இந்நூலின் முதற்பாகம் 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப்படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை-ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி அக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு புலனாய்வு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah  என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

எண்பதுகளில் வெளியான பல போராட்ட அறிவியல் நூல்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே விளைநிலமாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக்கழகம் என்ற மாணவர் அமைப்பு பல சிறுநூல்களை வெளியிட்டு அரசியலறிவை மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் ஜனரஞ்சகமாகப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

தான்பிரீன்-தொடரும் பயணம் என்ற நூல் ப.ராமஸ்வாமி என்ற புனைபெயரில் எழுதப்பெற்று மறுமலர்ச்சிக் கழகத்தினால் 1985இல் வெளியிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப்பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத்தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறே இந்நூலாகும்.

தெலுங்கானா போராட்டம் என்ற மற்றொரு நூலும் மறுமலர்ச்சிக் கழகத்தின் முக்கிய நூலாகும். சுகந்தம் வெளியீடாக 1986இல் 60 பக்கம் கொண்டதாக வெளிவந்திருந்தது. இந்நூல் தெலுங்கானா ஹைதராபாத் சமஸ்தானத்தி;ன் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில் (இன்று அது ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்) நடைபெற்ற நிலவுடைமைக்கு எதிரானதோர் போராட்டத்தின் வரலாற்றை விளக்குவதாக அமைந்திருந்தது.

அரசியல் விழிப்புணர்வினை ஒரு நீண்டகாலப் போராட்டத்துக்குத் தயாராகும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்குவதென்பது மிக முக்கியமான போராட்ட முன்னெடுப்பாக அந்நாட்களில் கருதப்பட்டது. அரசியல், கொள்கை பரப்பு நூல்களாக பல நூல்கள் அவ்வேளையில் வெளியிடப்பட்டன. அரச பாதுகாப்புப்படையினரின் கழுகுக் கண்களிலிருந்து தப்பி, மலிவு விலையிலும், இலவச வெளியீடுகளாகவும் இவை மக்கள் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூல் இவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்பு, வெளியீட்டுப் பிரிவினால் மாசி 1980இல் தமிழ்நாட்டிலிருந்து அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இரண்டு பகுதிகள் அடங்கியுள்ள இந்நூலின் முதலாம் பாகத்தில், சுயநிர்ணய உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் என்ற தலைப்பில் இலங்கையின் மார்க்சியவாதிகளின் குழம்பிய நிலையும், சுயநிர்ணய உரிமையும் பிரிந்துசெல்லும் உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடும், விடுதலைப் புலிகளும் வர்க்கப் போராட்டமும், தனித்தமிழ் ஈழம் சாத்தியமாகுமா ஆகிய விடயங்கள் ஆய்வுக்குள்ளாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில், சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சி என்ற தலைப்பில் 1971 ஏப்ரலில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன என்ற துஏP இயக்கத்தின் போராட்டம் தோல்வியில் முடிந்தமை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலும் இராணுவமும் என்ற நூலும் இந்த வகையில் குறிப்பிடத்தகுந்ததாகும். ஆசிரியர் விபரம் இல்லாத இந்நூல் தீப்பொறி வெளியீடாக மார்கழி 1985.இல் வெளிவந்திருந்தது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல்தன்மை, பொதுமக்கள், விடுதலை இயக்கங்கள் மத்தியிலுள்ள போராட்டம், இராணுவம் பற்றிய தவறான கருத்துக்களின் தன்மை, அவற்றால் விடுதலைப் போராட்டத்திலே ஏற்பட்டிருந்த மோசமான பின்னடைவுகள் போன்றவற்றை இச்சிறுநூல் ஆராய முற்படுகின்றது. தோழர் சந்ததியார் (வசந்தன்) நினைவு வெளியீடாக வெளியிடப்பட்ட தீப்பொறி வெளியீடு என்பதைத்தவிர வேறு எவ்வித பிரசுரத்தகவல்களும் அக்காலகட்டத்து அரசியல் நெருக்கடிகளின் காரணமாக நூலில் குறிப்பிடப்படவில்லை.

ஒன்றிணைந்து போராடுவோம் என்ற நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் மே 1985 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை அரசு, இஸ்ரவேலிய மொஸாட் அமைப்புடன் இணைந்து தமிழ்-முஸ்லீம் மக்களிடையே பெரும் மோதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியது. அவ்வேளையில் இவ்விரு இனங்களுக்குமிடையே ஒற்றுமையைப் பேணும் வகையில் ஈழப் போரியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானதொரு காலகட்டத்தில் இச்சிறுநூல் பிரசுரமானது.

சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் என்ற மற்றொரு நூலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இதன் 2வது பதிப்பு, டிசம்பர் 1984இல் 92 பக்கங்களில் வெளியானது. செ.குவேரா எழுதிய “கெரில்லாப் போராட்டத்தின் சாராம்சம்”, ரெஜி டெப்ரே எழுதிய “புரட்சியில் புரட்சி” என்ற கட்டுரையின் சில பகுதிகள், மாவோ சே துங் எழுதிய “கெரில்லா போர்முறை”, அமில்கார் கப்ரால் எழுதிய “தேசிய விடுதலையும் சமூக புரட்சியும்”, “மக்கள் மத்தியில் கெரில்லாக்கள்” ஆகிய நான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இதுவாகும். விடுதலைப் போராளிகளின் அரசியல் அறிவினை விருத்திசெய்யும் வகையில் இத்தகைய தேர்ந்த படைப்புகள் பல சிறுநூலுருவில் அக்காலத்தில் வெளிவந்தன.

தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும். என்ற தலைப்பில் கா.சிவத்தம்பி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்று சென்னையிலிருந்து ஈரோஸ் ஆவணக்காப்பக வெளியீடாக பெப்ரவரி 1986இல் வெளியிடப்பட்டிருந்தது. 1986 ஜனவரி 2ம் திகதி முதல் 8ம் திகதிவரை, ||ஈழமுரசு|| நாளேட்டில் தொடர்கட்டுரையாக வெளிவந்த இவ்வுரை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இது 31.12.1985இல் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் பேராசிரியர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய ||ஹண்டி பேரின்பநாயகம் நினைவுப் பேருரை||யின் தமிழாக்கமாகும்.

ஈழப்போராட்டத்தின் எழுச்சிக்கு கட்டியம்கூறும் வகையில் எம்மவரின் படைப்பிலக்கியங்களும் அந்நாளில் வீறுடன் எழுந்தன. அவை இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளன. தாயகத்தில் போரிலக்கியமாகப் படைக்கப்பட்ட பல கவிதை நூல்களை அடியொற்றிப் பின்னாளில் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் பரணிபாடுதலாக அது தொடரச் செய்தது.

மரணம் என்ற கவிதைத் தொகுதி செழியன் என்பவரால் படைக்கப்பெற்று சென்னை 94: சிவா பதிப்பகத்தினால் சூளைமேட்டில் அச்சிடப்பெற்று 40 பக்கங்களில் வெளியாகியிருந்தது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் வெளியான இந்த நூலின் முன்னுரையில் “தினமும் துப்பாக்கி வேட்டுக்களும் உயிரற்ற உடல்களும் எரிகின்ற மணமும் கொண்ட தேசத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அழகிய அந்திக் காட்சிகளை, பௌர்ணமி நிலாவைப்பற்றி எண்ணி எங்களால் எழுத முடியவில்லை. சிறையிடப்பட்ட எங்கள் இரவுகளை, அதிகாலைப் பொழுதுகளை, முட்களை ஏந்தும் பூக்களைப் பற்றியே எழுதமுடிகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே ஈழத்தவரின் போர்க்கால கவிதை இலக்கியங்களின் அடிநாதமாக அமைந்திருந்தது.

ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை என்ற தொகுப்பு செழியனின் மற்றொரு பிற்காலப் படைப்பாகும். கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீடாக, ஆகஸ்ட் 2002 இல் இது வெளிவந்திருந்தது. தேசிய விடுதலைப்போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாகவும் பல தளங்களில் முதன்மையானவையாகவும் அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். அனுபவத்தின் ஆழம், உணர்வின் செறிவு, கடப்பாட்டின் தீவிரம் என்பன அவரது கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளன.

மரணத்துள் வாழ்வோம் என்ற பெயரில் உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள். முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாக 1985 இலும் பின்னர் கோவை விடியல் பதிப்பகத்தின் வாயிலாக உப்பிலிபாளையத்திலிருந்து 2வது பதிப்பாக டிசம்பர் 1996 இலும் இந்த நூல் 170 பக்கங்களில் வெளிவந்திருந்தது. ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில் மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.

இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி சேரன், ஈழத்தின் புகழ்பூத்த முன்னோடிக் கவிஞரான “மஹாகவி” (அமரர் து.உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார். சேரன் ஈழத்தின் போர்க்கால படைப்பாளிகளுள் குறிப்பிடத்தகுந்தவர். இரண்டாவது சூரிய உதயம் என்ற சேரனின் முதலாவது கவிதைத் தொகுப்பு சென்னை பொதுமை வெளியீடாக ஜுன் 1983 இல் வெளிவந்தது. சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. 1978-82 காலப்பகுதியில் சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம் இக்கவிதைகளில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டிருந்தது. யமன் என்ற இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பு, இவரது சொந்தமண்ணான அளவெட்டியிலிருந்து படைப்பாளிகள் வட்டம் வெளியீடாக 1984 இல் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியாகியது. இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் ஜுலை 1983க்குப் பிறகு எழுதப்பட்டவை. ஈழத்தமிழரின் பல்வேறு இன்னல்களை உணர்வுகலந்து சொல்லிச் செல்பவை. கானல் வரி என்ற இவரது கவிதைத் தொகுப்பும் சென்னை, பொன்னி வெளியீடாக சென்னை இராசகிளி பிரின்டர்ஸ் வாயிலாக அச்சிடப்பெற்றிருந்தது. 1975 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் சேரன் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த 28 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். பின்னாளில் இவர் புலம்பெயர்ந்து கனடாவில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்னர் எலும்புக்கூடுகளின் ஊர்வலம் என்ற கவிதைத் தொகுப்பினை கனடா, தேடல் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். தாயக தேசத்தின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோல அரசியலையும் தாளலயங்;களைக் கடந்து வரலாறு ஆக்கும் முயற்சியாக எலும்புக்கூடுகளின் ஊர்வலம் அமைந்திருந்தது. காலம் காலமாக நின்று எமது துயரங்களையும் சொல்லில் மாளாத இழப்புக்களையும் மரணத்துள் வாழ்ந்த கதைகளையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் இவை. இதைத் தொடர்ந்து நீ இப்பொழுது இறங்கும் ஆறு என்ற தலைப்பில் சேரனின் 100 கவிதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ஓகஸ்ட் 2000 இலும் மீண்டும் கடலுக்கு என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பு டிசம்பர் 2004 இலும் வெளியாகியிருந்தன. அவருடைய கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை, ஒடுக்குமுறைகளை, சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் சமூக விமர்சனமாகவும் அது விரிந்தபோது, சமூகம் சார்ந்த பல அரசியல், அறவியல், சமூகவியல் விவாதங்களுக்கு இட்டுச்சென்றது. அந்த வகையில் கவிதையின் இன்னுமொரு முக்கியமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. கனடா யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பேராசிரியராகப் பணிபுரியும் சேரனின் கவிதைத் துறைப் பங்களிப்பு ஈழத்தின் போரியல் இலக்கியத்தின் வரலாற்றுப் பதிவாகின்றது.

சேரனைப் போன்றே ஈழத்தின் போர்க்கால இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த மற்றொரு படைப்பாளி, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்பவராவார். தற்போது புவம்பெயர்ந்த நோர்வேயில் வாழும் இவரது ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற கவிதைத் தொகுதி சென்னை காந்தளகத்தின் வாயிலாக 1986இல் வெளிவந்தது. இச்சிறு காவியம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் கோரத்தையும் கொடுமையையும் மட்டுமல்லாது தீரத்தையும் தியாகத்தையும் சித்திரிக்கின்றது. இதே ஆண்டு சூரியனோடு பேசுதல் என்ற மற்றொரு தொகுதியை வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் கோவை, யாழ். பதிப்பகத்தின வாயிலாக பெப்ரவரி 1986 இல் வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு ஜுலை 1987 இல் மைலாப்பூர் மிதிலா அச்சகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டுரையில் துரை மடங்கன் அவர்கள் “போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்த்த இவரது இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே” என்று குறிப்பிட்டிருந்தார்.

நமக்கென்றொரு புல்வெளி என்ற கவிதைத் தொகுதியையும் இவர் சென்னை, க்ரியா வெளியீடாக மார்ச் 1987இல் வெளியிட்டிருந்தார். ஒரு அகதியின் பாடல் என்ற கவிதைத் தொகுதியில் வ.ஐ.ச.ஜெயபாலன் தான் வாழுகின்ற காலத்தின் நெருக்கடியைப் பல்வேறு தளங்களில் அனுபவித்துக் கவிதையாக்கியிருந்தார். அவை போரிலக்கியத்தில் ஒரு அகதியின் குரலாகத் துயரங்களைச் சொல்லி நிற்கின்றது. கனடா: தேடல் பதிப்பகம், ரொரன்ரோவிலிருந்து மார்ச் 1991 இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெரும்பாலானவற்றைத் தொகுத்து 320 பக்கங்களில் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள்: பெருந்தொகை என்ற பெயரில் சென்னை ஸ்நேகா வெளியீட்டகம் ஒரு பாரிய தொகுதியை ஏப்ரல் 2002இல் வெளியிட்டிருக்கின்றது. நேரடித்தன்மையும் உள்ளுறை உவமமும் ஒருசேரவாய்க்கப்பெற்ற எளிமையான, எனினும் செறிவான மொழிவளம் கொண்ட வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெருந்தொகுப்பு இதுவாகும். ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற இவரது குறுங்காவியம் உள்ளிட்ட பெரும்பான்மையான கவிதைகள் இதில் அடங்கியுள்ளன. ஈழத்தமிழரின் போரியல் வாழ்வின் கணிசமான காலப்பகுதியின் குறுக்குவெட்டுமுகத்தை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது.

ஈழத்து போரியல் கவிதை இலக்கியத்தில் காசி ஆனந்தனின் பணி குறிப்பிடத்தகுந்ததாகும். அவரின் பாதிப்பில் இன்றும் பல இளங்கவிஞர்கள் எழுச்சிக் கவிதைகளைப் பாடி வருகின்றார்கள். காசி ஆனந்தனின் ஆரம்பகாலக் கவிதாவரிகள் இன்றைய பல கவிதைகளில் பொது வாசகங்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. ஈழப்போராட்டத்தின் இலக்கியத் தடத்தை இன்று வழிநடத்திச் செல்பவராக புதுவை இரத்தினதுரை இனங்காணப்படுகின்றார்.

இரத்த புஷ்பங்கள் என்ற கவிதைத் தொகுப்பு புதுவை இரத்தினதுரை அவர்கள் ஆரம்ப காலங்களில் எழுதி கண்டி கலைஞர் பதிப்பகத்தின் வாயிலாக மார்ச் 1980 இல் வெளியிட்ட கவிதைத் தொகுதியாகும். வானம் சிவக்கிறது, ஒரு தோழனின் காதல் கடிதம் என்ற இரு கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே தந்த புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது நூலாக வெளிவந்த 27 கவிதைகளைக்கொண்ட தொகுப்;பு இதுவாகும்.

பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. பங்குனி 2005இல் 432 பக்கங்களுடன் வெளியான இத்தொகுப்பில், வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த “தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே” என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான “இருந்ததும் இல்லையென்றானதும்” என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்நூலையும் நூலாசிரியரையும், நூலாசிரியரின் கவித்துவ வளர்ச்சிப்படிநிலைகளையும் கவிஞரின் இலக்கிய வரலாற்றினையும் ஆழமாக அறிமுகம் செய்வதாக அமைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் 28 பக்கங்கள் கொண்ட விரிவான விமர்சனக் கட்டுரை, இந்நூலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது.

வியாசனின் உலைக்களம் புதுவை இரத்தினதுரை அவர்களின் மற்றொரு பரிமாணத்தை வித்தியாசமான ஈழத்துப் போராட்டக்கால இலக்கிய வடிவத்தில் தரிசிக்க வைக்கின்றது. தாயகத்திலிருந்து தமிழ்த்தாய் வெளியீடாக ஜுலை 2003இல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தின் வாயிலாக 256 பக்கங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வியாசன் என்ற புனைபெயரில் ||விடுதலைப்புலிகள்|| அதிகாரபூர்வ ஏட்டில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். போரியலையும் அது சார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளையும் சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகத் தனது பேனாமுனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டுவரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் ஏட்டில் இக்கவிதைகள் வெளியான போது, விடுதலைப் போரின் அந்தந்தக் காலங்களிலான சமூக அரசியல் நிலைமைகளையும் ஒரு கவிஞனின் அதன் மீதான பார்வையையும் தரிசிக்க வைப்பதாக அமைந்திருந்தன. காலத்தின் பிரதிபிம்பமாக இக்கவிதைகள் விளங்குகின்றன.

ஈழத்தின் கவிதை இலக்கியத்துறையில் நினைவுகொள்ளத்தக்க மற்றொரு கவிஞர் கி.பி.அரவிந்தன் ஆவார். புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் தற்போது வாழ்கின்ற இவர் ஈழப் போhட்டத்தில் விடுதலைப் போராளியாக இருந்தவர். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. முத்தான மூன்று படைப்புக்களை தமிழகத்திலிருந்து வெளியீடு செய்தவர் இவர்.

இனி ஒரு வைகறை கி.பி.அரவிந்தன் எழுதிய முதலாவது கவிதைத் தொகுப்பாகும். சென்னை அடையாறிலிருந்து பொன்னி வெளியீடாக மார்ச் 1991இல் சென்னை இராசகிளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. தனது முகவுரையில் இவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். “இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான்”. முகம்கொள் கி.பி.அரவிந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சென்னை கீதாஞ்சலி வெளியீடாக, நவம்பர் 1992 இல் இந்நூல் வெளிவந்தது. இத் தொகுதியிலுள்ள கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. கனவின் மீதி. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். சென்னை, மடிப்பாக்கம் பொன்னி வெளியீடாக ஆகஸ்ட் 1999 இல் இந்நூல் வெளிவந்தது. “ஒரு நாட்டில் வாழுகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்” என்று இந்நூலுக்கான முன்னுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.

ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்துக் கவிதைகளும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், போராளிகளின் வீரதீரங்கள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், வன்மங்கள், உடைமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை நுணுக்கங்கள் என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன. ஈழத்தமிழரின் தனித்துவமான இலக்கியமாக உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்புக்களில், நின்று நிலைத்திருக்கப்போகும் வலிமைபெற்ற போரியல் இலக்;கியத்துக்குக் கதியால் போட்டு நீரூற்றி வளர்த்த ஈழத்துக் கவிஞர்கள் அனைவரையும் இச்சிறு கட்டுரைக்குள் அடக்குவது என்பது இயலாத காரியமாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரிக்கு ஒன்றாகவே இப்படைப்பாளிகளை உதாரணமாக இங்கு காட்டக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த மேலும் சில படைப்புக்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

அந்த விடியலுக்கு என்ற கவிதைத் தொகுப்பினை க.இளங்கோ. சென்னை சூளைமேட்டிலிருந்து சிவா பதிப்பகத்தின் வாயிலாக 1985இல் வெளியிட்டிருந்தார். “தான் பார்த்து-தான் ரசித்து-தான் வெதும்பி-தான் பாடிய சுதந்திர கீதங்கள் ஈழப்போர்முனைக்கு இசையமைக்க வருகின்றது. மக்களே! மக்களே!! என்பதே இந்தக் கவிதைக்குப் பின்னால் கேட்கும் மிருதங்கம். எழுக! எழுக! என்பதே இந்தக் கவிதையோடு இயல்பாகப் பின்னப்பட்ட வயலின் இசை.|| என்று முல்லையூரான் அவர்கள் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதைத் தொகுதி யாழ்ப்பாணம்: தர்க்கீகம் வெளியீடாக வைகாசி 1982இல் வெளிவந்தது. ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களான குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய ஈழத்துக் கவிஞர்களின் விடுதலைக்கவிதைகளின் தொகுப்பாக இது அமைந்திருந்தது.

இந்த மழை ஓயாதோ? என்ற கவிதைத் தொகுப்பு கனகரவி (இயற்பெயர்: கனகரத்தினம் இரவீந்திரன்) அவர்களால் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட வெளியீடாக 2001இல் வெளிவந்திருந்தது. சமகால மக்களின் அவலங்களும் அலட்சியங்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான ஒன்று என்ற அடிப்படையில் இக்கவிதைத் தொகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. இடப்பெயர்வு, மீள்குடியேற்றம், நாடுவிட்டு ஓடுவோர், குண்டு போடும் அரசு, துப்பாக்கி ஏந்தியோரின் அநியாயச் செயல்கள், மண்ணோடு போராடும் மனிதர்கள், அமைதி விருப்பம், சிறையினில் வாடுவோர் துயரம், பிந்துனுவௌ முகாம் அழிப்பு, காணாமல் போனவர்கள் என்று பல்வேறு சமகால ஈழத்துப் போராட்ட வாழ்வியலை இக்கவிதைகள் படம்பிடிக்கின்றன. ஊடகவியலாளரான கவிஞரின் பாடுபொருள் பரந்துபட்டதாக உள்ளது இத்தொகுதிக்கான சிறப்பம்சமாகும்.

இலக்குத் தெரிகிறது என்ற தொகுதி தூயவன் என்ற விடுதலைப் போராளியின் படைப்பாகும். (இயற்பெயர்: சு.தனேஸ்குமார்). தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவு இத்தொகுப்பினை சித்திரை 1993இல் வெளியிட்டிருந்தது. கவிஞர் தூயவன், ஈழவிடுதலைப்போரில் களத்தில் நின்று போராடும் ஒரு போராளி. விடுதலையை அவாவி நிற்பவர். வாழ்வில் மற்றவரின் கண்களுக்குப் புலப்படாத பக்கங்கள் இவரின் பார்வைக்குக் கிட்டுகின்றன. அவை இங்கு கவிதைகளில் பதிவுக்குள்ளாகியுள்ளன.

அக்கரைக்குப் போன அம்மாவுக்கு என்ற தொகுதி ஹம்சத்வனி என்ற முக்கியமான படைப்பாளியின் கவிதைத் தொகுப்பாகும். சென்னை: தமிழியல் வெளியீடாக ஓகஸ்ட் 1985 இல் இது வெளிவந்தது. நூலாசிரியரின் முன்னுரையில் குறிப்பிடும் வாசகங்களே இந்நூலுக்கான விளக்கத்தைத் தருகின்றது. “தமிழ் ஈழத்தின் மிகப்பயங்கரமான கணங்கள் என்னுள்ளே ஏற்படுத்திய ஆழமான அதிர்வின் பிரதிபலிப்புக்களே எனது கவிதைகள். எனது கிராமங்களும் வீதிகளும் பச்சை வயல்வெளிகளும் ஒரு நாள் சிறைமீட்கப்படும். அந்த மீட்சிக்கு ஒரு உரமாக எனது கவிதைகள் அமையுமாயின் நான் மகிழ்வேன்” என்று தன் ஆதங்கத்தை இந்நூலில் கவிஞர் ஹம்சத்வனி வெளிப்படுத்தியுள்ளார். 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் துயர்மிகு அவல வாழ்வை இக்கவிதைகள் பதிவு செய்கின்றன.

அனுபவ வலிகள் என்ற தொகுதி இரணையூர் பாலசுதர்சினி அவர்களால் வவுனியா: விண்மணி வெளியீட்டகத்தினூடாக வெளியிடப்பெற்ற கவிதைத் தொகுப்பாகும். இதன் 1வது பதிப்பு, 2004இல் வெளியிடப்பட்டது. வன்னி மண்ணின் இரணையூரிலிருந்து புறப்பட்ட பெண் எழுத்தாளரான பாலசுதர்சனியின் கவிதைகள் இவை. மண் பற்றியும், மனிதர்கள் பற்றியும் இவை பேசுகின்றன. சமாதான சாபங்கள், எழு பெண்ணாய், வெற்றி நிச்சயம், சுதந்திர ஒளி, சீதனம், அகதியாய் எனப் பல்வேறுபட்ட விடயங்களினூடாக பெண்களின் முடக்கி வைக்கப்பட்ட அனுபவ வலிகளைத் தன் கவிதைவரிகளினூடாக வெளிக் கொண்டுவரும் கவிதைத் தொகுதி இது. போரியல் வாழ்வில் ஈழப்பெண்களின் பார்வை இக்கவிதைகளில் முனைப்புப்பெற்றுள்ளன.

ஆனையிறவு என்ற தொகுப்பு 42 கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டது. வவுனியாவிலிருந்து வெளிச்சம் வெளியீடாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் பண்பாட்டுக் கழகம், நடுவப்பணியகம், ஜுன் 2000 இல் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாம் ஆக்கிரமிப்பு வெற்றியைக் களத்திலேயே நின்று தரிசித்த பாட்டுத் திறத்தோர் எழுதிய கவிதைகள் இவை. ஆனையிறவு மீட்புச் சமர்களில் இதுவரை வீரமரணமடைந்த மாவீரர்களுக்;குக் காணிக்கையாக இக் கவிதைத் தொகுதி வெளிவந்தது.

செம்மணி. என்ற தலைப்பில் வெளியான நூலி;ல் 24 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வெளிச்சம் வெளியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகத்தின் நடுவப் பணியகம், செப்டெம்பர் 1998இல் இத்தொகுப்பை வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவை. 1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், தென்மராட்சியிலும்; வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில்; சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.

சிறுகதை, நாவல் இலக்கியத் துறையில் போரியல் பதிவுகள் ஏராளமாக ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 1980களிலிருந்து ஈழத்தில் வெளியாகும் சிறுகதைகளில் இதன் பாதிப்பு பெரிதளவில் இருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக வன்னி மண்ணிலிருந்து வெளியாகும் படைப்பிலக்கியங்கள் அனைத்திலும் இதன் பாதிப்பு துலக்கமாகத் தெரிகின்றது.

வாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை அவர்கள் கருணாகரன் என்பவருடன் இணைந்து சிறுகதைத் தொகுதியொன்றினையும் வெளியிட்டிருந்தார். கோயம்புத்தூர் விடியல் பதிப்பகம், இந்நூலை டிசம்பர் 2001இல் 160 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் இலக்கிய இதழான வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த பத்தொன்பது படைப்பாளிகளின் 19 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் இது இரண்டாவது தொகுப்பாகவும் அமைகின்றது. இரு தசாப்தங்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் யுத்தசூழலின் அவலங்கள், அது மனித வாழ்விலும், மனிதவிழுமியங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், நம்பிக்கை, தோல்வி, வெறுப்பு, கோபம் உள்ளிட்ட மனித உணர்வுகளின் ஆதிக்கம், அவற்றில் தொழிற்படும் தன்மை என்பன பற்றிய இயல்பான வெளிப்பாடுகளாக அமைந்துள்ள கதைகள் இவை.

வெளிச்சம் சிறுகதைகள் 1. என்ற பெயரில் வெளிச்சம் ஆசிரியர் குழுவினரால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு உதாரணமாகின்றது. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் இத்தொகுப்பினை மேற்கொண்டிருந்தது. மார்ச் 1996 இல் வெளியான இந்நூலில் வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 15 சிறுகதைகள் உள்ளன. தாயக விடுதலைப் போரின் பல்வேறு பரிணாமங்கள், இலக்கிய வடிவில் பிரதிபலிக்கின்றன. சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் எழுச்சியையும், மன உணர்வுகளையும் போராட்டக் கால அனுபவங்களையும் இக்கதைகள் பேசுகின்றன.

அதிர்ச்சி நோய் எமக்கல்ல என்ற உருவகக் கதைத் தொகுதி நாக.பத்மநாதன் அவர்களால் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக புரட்டாதி 1993இல் வெளிவந்திருந்தது. மண்பற்றும், இன விடுதலையும்-இதற்கான தியாகங்களும் அலை வீசி நிற்கும் 34 உருவகக் கதைகளின் தொகுப்பு இதுவாகும்.

அம்மாளைக் கும்பிடுறானுகள் சிறுகதைத் தொகுதி, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கால உண்மைக் கதைகளைக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு ஓகஸ்ட் 1994இல் முதற் பதிப்பையும், ஆகஸ்ட் 1997இல் 2வது பதிப்பையும் மேற்கொண்டிருந்தது. இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புக் காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங்களையும் சித்திரிக்கும் படைப்புக்களாக 14 கதைகளும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத்தினைச் சித்திரிப்பதாக ஒரு கதையும் இத்தொகுதியில் அமைகின்றன. இத்தொகுப்பின் இரண்டாவது பாகமாக வில்லுக்குளத்துப் பறவைகள் என்ற தலைப்பில் மேலும் பல உண்மைக் கதைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவினால், ஆடி 1995இல் வெளியிடப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் உண்மை நிகழ்வுகள் கதைவடிவில் தொகுக்கப்பட்ட இரண்டாம் பகுதியாக இந்நூல் அமைகின்றது. 17 உண்மைக் கதைகளைக் கொண்ட இத்தொகுதியில் இந்திய அமைதிப்படையின் வேட்டைக்குப் பலியான அப்பாவித் தமிழ் மக்களின் கதைகள், போராட்டத்தில் தம்மைப் பலியாக்கிய மக்களின் கதைகள், போராளிகளை நேசித்து அவர்களைக் காப்பாற்றத் துணிவுடனும் சாதுரியத்துடனும் செயற்பட்;ட மக்களின் கதைகள் எனப் பலவாறாகப் பதிவுபெறுகின்றன.

ஈழத்தின் போர்க்கால இலக்கியத்தில் தாமரைச் செல்வியின் (ரதிதேவி கந்தசாமி) பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. அழுவதற்கு நேரமில்லை என்ற இவரது சிறுகதைத் தொகுதி, பரந்தன் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக டிசம்பர் 2002இல் வெளியானது. ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை. 1995இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்ச்சி-வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் ஏற்படுத்தியது. இதனூடாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை மோசமடைந்து மிக உக்கிரமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலைமையைச் சுட்டிக்காட்டும்வகையில் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன.

போரியல் இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த ஈழத்து இளந்தலைமுறைப் படைப்பாளிகள் வரிசையில் ஷோபாசக்தி குறிப்பிடத்தகுந்தவராகின்றார். தேசத் துரோகி; என்ற ஷோபாசக்தியின் (இயற்பெயர்: அந்தோனிதாசன்) சிறுகதைத் தொகுப்பு அடையாளம் வெளியீடாகத் தமிழகத்திலிருந்து மே 2003இல் வெளிவந்துள்ளது புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ஷோபாசக்தி. நிகழ்கால ஈழத்து அரசியலைப் புனைவாக்கிய கொரில்லா இவரது முதல் நாவல். தேசத்துரோகி இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. எக்சில், அம்மா ஆகிய சஞ்சிகைகளிலும் இருள்வெளி, இனியும் சூல்கொள், கறுப்பு ஆகிய தொகுப்பு நூல்களிலும் வெளியான இவரது சிறுகதைகளும், பிரசுரமாகாத சூக்குமம், குரு வணக்கம் ஆகிய இரு பிரசுரமாகாத கதைகளையும் கொண்டதாக மொத்தம் 14 கதைகளுடன் தேசத்துரோகி என்ற நூல் வெளியாகியுள்ளது.

நீலமாகி வரும் கடல் முல்லை யேசுதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீடாக வெளிவந்த இச்சிறுகதைத் தொகுப்பு ஒக்டோபர் 2003இல் முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது. கடலோர வாழ்வின் அழியாத ஞாபகங்களும் நிகழ்காலமுமாக முல்லை யேசுதாசனின் கதைகள் அமைகின்றன. பழகிய கடலும், கரையும் மனிதர்களும் இவரது கதைகளில் ஊடாடுகின்றனர். காயங்களோடும் குருதியோடும் போர் நாட்களின் கடலாகிப் போன நீர் மீதும் அலைமீதும் தத்தளித்த நிகழ்காலத்தையும் வாழ்வையும் தனது கதைகளில் சொல்கிறார். கடலோடியாகவும், கடலோடும் கலங்களைக் கட்டும் கலைஞனாகவும், அரங்கக் கலையில் ஈடுபாடு கொண்டு தாயகத்தில் பல குறும்படங்களின் உருவாக்கத்தில் உழைத்தவருமான யேசுதாசனி;ன் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொரு போரியல் சிறுகதைகளிலும் அவரது வாழ்வனுபவத்தின் வழியே பளிச்சிடுகின்றன.

புதிய கதைகள்; என்ற தொகுதி மலைமகள் அவர்களால் எழுதப்பட்ட கதைகளைக் கொண்டது. கிளிநொச்சி, கப்டன் வானதி வெளியீட்டகம் ஏப்ரல் 2004இல் இந்நூலை வெளியிட்டது. இத்தொகுப்பிலுள்ள 15 கதைகளும் ஈழப்போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பெண் போராளிகளின் களநிலை அனுபவங்களின் பிழிவாக அமைகின்றன. ஈழப் பெண்கள் பற்றிய புதிய பார்வையை இவை தருகின்றன. இந்த மண்ணின் பெண்கள் யார், இவர்கள் எத்தகையவர்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் பங்கு, அவர்களது மனோதிடம், அர்ப்பணிப்பு, களமுனை வாழ்க்கை என்பனவற்றையும் கருப்பொருளாகக் கொண்டு அமையும் இக்கதைகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக நெருக்கமானதொரு காட்சிப் படிமத்தை வாசகரின் மனக்கண்முன் நிறுத்துகின்றன. இது கப்டன் வானதி வெளியீட்டுத் தொடரின் ஐந்தாவது வெளியீடாகும்.

தீபா குமரேஷ் எழுதிய புரிதல் என்ற சிறுகதைத் தொகுதி முல்லைத்தீவு ஆரண்யம் வெளியீட்டகத்தால் மார்ச் 2003இல் வெளியாகியது. தாயகமண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களைக் கருவாக்கித் தரும் முயற்சியில் விளைந்த ஆசிரியரின் கன்னிப் படைப்பு இதுவாகும். போராட்ட மண்ணின் பகைப்புலத்தில் நின்று எழுதப்பட்ட 13 சிறுகதைகள் இந்நூலில் காணப்படுகின்றன.

ஈழத்தின் ஜனரஞ்சக நாவலாசிரியரான செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). அவர்களும் மண்வாசனை கலந்த போர்க்கால இலக்கியங்கள் சிலவற்றை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்து இராத்திரிகள் யாழ்ப்பாணம், யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக ஒக்டோபர் 1993இல் வெளியானது. இருபத்திமூன்று சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஆசிரியர் தான் வாழும் யாழ்ப்பாணத்துச் சூழலை, மக்களின் மன ஓட்டங்களை, அவர்களது ஆசாபாசங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்துள்ளார்.

அக்கினிக் குஞ்சு என்ற இவரது குறுநாவல் ஜனவரி 1983இல் யாழ்ப்பாணம் விவேகா னந்தா அச்சகத்தில் அச்சிடப்பெற்று வெளியாகியது. யாழ். இலக்கியவட்டத்தின் 29வது வெளியீடு. தினகரன் நடத்திய குறுநாவல் போட்டியில் 1978இல் பரிசில் பெற்றது. தமிழ்மக்கள் மீதான இனவெறிக் கொடுமையும், தமிழர்களிடையே புரையோடிப்போன சாதிப்பாகுபாட்டுக் கொடுமைகளும் ஒப்பீட்டுரீதியில் பிணையப்பெற்ற குறுநாவல். 1976களில் யாழ்ப்பாணத்தில் தீவிரவாத இளைஞர்களைத் தேடி இராணுவமும் பொலிசாரும் வலைவீசித் திரிந்த காலத்தினைச் சித்திரிக்கும் கதையம்சம் கொண்டது.

இரவு நேரப் பயணிகள் செங்கை ஆழியானின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பு. இதுவும் யாழ்ப்பாணம் கமலம் பதிப்பகத்தின் ஜனவரி 1995இல் வெளிவந்தது. செங்கை ஆழியானின் மூன்றாவது சிறுகதைத்தொகுதி இதுவாகும். போராட்டச் சூழலில் தமிழ்மக்கள் படுகின்ற அவலங்களையும் அந்த அவலங்களைச் சந்திப்பதால் வன்மம் பெறுகின்ற உள்ளங்களையும் சித்திரிக்கும் கதைகள். டொமினிக் ஜீவாவின் முன்னுரையுடன் கூடிய இந்நூலில் உள்ள சிறுகதைகள் மல்லிகை, வீரகேசரி, வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு(பாரிஸ்) ஆகியவற்றில் பிரசுரமானவை. ராத்திரிய நொனசாய் என்ற தலைப்பில் சிங்களத்திலும் சிறுகதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.

கொழும்பு லொட்ஜ் என்ற நாவல் செங்கை ஆழியானால் எழுதப்பட்டு யாழ்ப்பாணம் யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக டிசம்பர் 1998இல் வெளிவந்தது. இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை சந்திரிகா அரசு ஏற்றுக்கொண்ட ஆரம்பகாலவேளையில் எழுதப்பட்டதும், சமகால வாழ்வியல் இடர்பாடுகளின் ஓர் அம்சத்தைச் சித்திரிப்பதற்காக எழுதப்பட்டதுமான ஒரு நாவல் இது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பெருநிலப்பரப்புக்கும் இடையிலான ஆனையிரவுப்பாதை அடைக்கப்பட்ட நிலையில் கிளாலிக்கடலேரியூடாக யாழ்ப்பாண மக்கள் இரவுநேரங்களில் பயணம்செய்து, பல இடர்ப்பாடுகளினூடாகக் கொழும்பு வந்து, அங்குள்ள விடுதிகளில் பல்வேறு கனவுகளோடும் ஏக்கங்களோடும் தங்கி வாழ்ந்த துயரங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது. இன்றைய அவலச் சூழ்நிலையில் நமது மக்கள் பாரம்பரியமான பண்பாட்டு இறுக்கங்களையும் மரபுக் கட்டுப்பாடுகளையும் உதறிவிடும் மீறல்களை இந்த நாவல் விபரிக்கின்றது. தினக்குரல் ஞாயிறு மலரில் 1997இல் தொடராக வெளிவந்தது. வடக்குக் கிழக்கு மாகாண இலக்கியப்பரிசில் பெற்ற நூல்.

ஈழத்தில் எண்பதுகளின் பின்னர் வெளிவந்த நாவல்களின் கதைக்களம் பெரும்பாலும் போராட்டமும் அது சார்ந்த அனுபவங்களுமாகவே உள்ளன. ஈழத்தவர் புலம்பெயர்ந்து வாழும் மண்ணிலிருந்து அவர்களால் படைக்கப்பட்ட நாவல்களும் கூட கணிசமான அளவில் எமது விடுதலைப்போராட்டம் சார்ந்ததாக இனம்காணப்படுகின்றது.

பச்சை வயல் கனவு தாமரைச்செல்வியின் பெயர் சொல்லும் ஒரு நாவலாகும். இது பரந்தன் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக ஆகஸ்ட் 2004இல் வெளிவந்தது. பச்சை வயல் கனவுகளுடன் கிளிநொச்சியில் வந்து குடியேறிய குடியேற்றவாசிகளின் கதை. கிளிநொச்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழ் ஈழ விடுதலைப் பயணத்தில் கிளிநொச்சி மண்ணின் பாத்திரமும் இந்நாவலில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. கிளிநொச்சி மக்களின் வாழ்க்கை முறைகள், எதிர்பார்ப்பகள், போராட்டங்கள், நம்பிக்கைகள், நலந் தீங்குகள், கலைகள், விழாக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் சுவையான நாவல். கடந்த 30 வருடங்களாக சிறுகதைகள், நாவல்கள் எனக் கூடுதலாக எழுதியிருக்கும் தாமரைச்செல்வியின் எட்டாவது நூல் இது. சிறுகதைகள் பல பிறமொழிகளிலும் பயணித்திருக்கின்றன. சில தேர்ந்த கதைத் தொகுப்புகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்ப் படைப்புலகிலும், பெண் படைப்பாளிகளிலும் தாமரைச் செல்வி பெறும் இடம் முக்கியமானது.

வீதியெல்லாம் தோரணங்கள் என்ற நாவலும் தாமரைச்செல்வியின் மற்றொரு போரிலக்கியப் படைப்பாகும். கொழும்பு 5 மீரா பதிப்பகம் இந்நாவலை நவம்பர் 2003இல் வெளியிட்டது. மீரா வெளியீட்டகத்தின் 40ஆவது வெளியீடான இந்நாவல், இந்திய இராணுவம் இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏற்கெனவே நொந்து போய்க்கிடந்த மக்களின் வெந்தபுண் மீது ஐPமுகு என்ற பெயரில் இந்திய அமைதிகாக்கும் படை வந்து வேல் பாய்ச்சிய காலம் அது. ஈழமண்ணில் ஓரிடத்தில் ஏற்படும் போரின் அனர்த்தங்களின் விளைவுகளை அதன் வலிகளைச் சுமந்தவாறு இன்னோரிடத்தில் வாழ்கின்ற மனிதர்களை இந்நாவலில் சந்திக்க முடிகின்றது. 1989இல் யாழ் இலக்கிய வட்டம்- வீரகேசரியுடன் இணைந்து நடத்திய போட்டியில் 2ம் பரிசினைப் பெற்ற நாவல். 1.3.1992 முதல் 3.5.1992 வரை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகவும் இது வெளிவந்திருந்தது.

ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாக ஒரு மகா நாவலில் உள்ளடக்கும் பாரிய முயற்சியை மேற்கொண்டவர் தேவகாந்தன் ஆவார். கனவுச்சிறை என்ற மகா நாவலை 5 பாகங்களில் தந்தவர் இவர். இத்தொகுதியை சென்னை இலக்கு நூல்கள் வெளியீடாக ஜுன் 1998 முதல் தேவகாந்தன் வெளியிட்டார்.

1 ஐந்து தொகுதிகளாக விரியும் கனவுச்சிறை மகாநாவலின் திருப்படையாட்சி என்ற முதற்பாகம் 1981-1983 காலகட்டத்தை களமாகக் கொண்டது. 1981இல் அக்கினிப் பொறி போன்ற மையச் சம்பவமொன்றின் உந்திப்புடன் ஆரம்பிக்கும் நாவலில் 1983 கறுப்புஜுலை, தேசம் தாண்டுதல், அகதிமுகாம் அவலங்கள், மேற்குலகின் அடையாளச் சிக்கல்கள், சமூக நிலை மாற்றங்களும் தேசமளாவிய கருத்துருவின் புத்தாக்கமும் என்று வியாபிக்கும் சரித்திர வெளியில் இன்னொரு சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. ஈழத்துடன் இணைந்த சிறுதீவான நயினாதீவின் வடகரையிலிருந்து தொடங்கும் கதை. கட்சிப் பூசல்கள், கூட்டணி அமைப்பு, தமிழீழத்தின் தத்துவார்த்த உதயம், போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி என்பவற்றின் இலக்கியச் சாட்சியமாகின்றது கனவுச்சிறை. இந்நாவல் நகரும் காலத்தை பிரதானப்படுத்தி 5 பாகங்களில் எழுதி முடிக்கப்பட்டதாகும். 1981 தொடக்கம் 2001 வரையிலான காலப்பகுதிக்குரிய 21 ஆண்டுக்கால இலங்கையின் வாழ்நிலைக்களத்தில் நின்று 5 பாகங்களிலும் கதை நகர்த்தப்படுகின்றது. 1981-1983காலப்பகுதியைக் கூறும் திருப்படையாட்சி, 1985-1987 காலப்பகுதியைக் கூறும் வினாக்காலம்;, 1989,1991,1993 காலப்பகுதிகளைக் கூறும் அக்னி திரவம், 1995-1999 வரையிலான காலப்பகுதியை கதைக்களமாகக் கொண்ட உதிர்வின் ஓசை, 1999-2001 வரையான கதைக்களனைக் கொண்ட ஒரு புதிய காலம் என்றவாறாக இந்நாவல் யுத்தத்திற்கானதாகவோ அன்றி சமாதானத்துக்கானதாகவோ எழுதப்படாது சமகால அரசியல் நியாயமொன்றை விசுவாசமாகச் சொல்லியிருக்கின்றது. 1981-2001வரையான 21 ஆண்டுகளில் 21 நூற்றாண்டுகளின் இலங்கைச் சரித்திரத்தை புல்லின் தலைப் பனித்துளியின் பிரபஞ்சப் பிரதிபலிப்பாக இந்நாவல் மீளுருவாக்கம் செய்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்ற நாவல், கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகத்தினால் 2003 இல் வெளியிடப்பட்டது. சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருடம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக்காலச் சமூக வரலாற்றுப் புலத்தில் இந்நாவல் விரிகிறது.

இனி வானம் வெளிச்சிடும் என்ற நாவல் தமிழ்க்கவி என்ற வன்னி எழுத்தாளரால் படைக்கப்பட்ட நாவல். கிளிநொச்சி அறிவமுது பதிப்பகம் செப்டெம்பர் 2002இல் இந்நாவலை வெளியிட்டிருந்தது. இந்நாவல் பற்றி படைப்பாளியின் சுயவிமர்சனம் இது: “இது எனது முதலாவது கதை. இது என்னுடன் இருந்து என்னைத் தாக்கி என் உணர்வுகளைக் கிழித்துத் தைத்த ஒரு விவகாரம். என் அனுபவங்களைக் கலந்து இக்கதையை எழுதினேனா? இக்கதையில் எனது அனுபவங்களைக் கலந்தேனா என்பதும் புதிரல்ல. இனவாத அரசின் செயற்பாடுகளால் எழும் வன்முறைகள், அடிமனதின் ஆழத்தில் புதையுண்டு போய், அதுவே சந்ததி வழியாகக் காவிச் செல்லப்பட்டு இயலுமை உண்டான போது வெளிப்போந்து வீரியம் பெறுகின்றது. என் மகனும் இவ்வெளிப்பாட்டின் ஒரு குறியீடே. இவன் போராடப் போனபோது நான் எனக்குள் வருந்தியதுண்டு. எனக்குச் சொல்லாமல் போய்விட்டான் என்பதற்காக. ஓவ்வொரு போராளியின் பின்னணியிலும் ஒரு சரித்திரம் உண்டு. அந்தப் பிஞ்சு உள்ளத்தின் ஆதங்கத்தை மதித்தேன். ஒரு நாள் அவனைத் துப்பாக்கி ஏந்தியவனாய் சீருடையில் பார்க்கத் துடித்தேன். ஆகாயக் கடல் வெளிச் சமரில் அவன் ஆகுதியான செய்திதான் கிடைத்தது. இது எனது மகனின் கதை”

கொரில்லா என்ற நாவல் ஷோபாசக்தியின் அற்புதமான படைப்பாகும். தமிழகத்தில் புதுநந்தனம் அடையாளம் வெளியீடாக நவம்பர் 2001இல் வெளிவந்த நாவல் இது. பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து, எழுத்தைத் தன் பிரத்தியேக ஊடகமாகக் கொண்டு செயற்படும் ஷோபாசக்தி, பல நல்ல சிறுகதைகளையும், ஓரிரு நாடகங்களையும், தமிழ்மொழிக்குத் தந்தவர். அவரது முதல் நவீனம் இதுவாகும். இலங்கைப் போர்ச் சூழலினால் ஏற்படும் சம்பவங்கள், இடம்பெயர்வுகள், இடம்பெயர்ந்த தேசங்களில் ஏற்படும் அவலங்கள் ஆகியன இந்நவீனத்தின் அத்திவாரமாக அமைகின்றன. விடுதலைப் போராட்ட அமைப்புகளின் உள்ளகப் பார்வையில் விரியும் சம்பவக் கோர்ப்புக்கள் வாசகரை போர்க்கால யாழ்ப்பாணத்தின் தீவக மண்ணுக்கே அழைத்துச் செல்லும் வல்லமை மிக்கதாக அமைந்துள்ளது.

ம் என்ற ஒற்றைப் பெயரிலான ஷோபா சக்தியின் மற்றொரு நாவல் சென்னை கருப்புப் பிரதிகள், வெளியீடாக அக்டோபர் 2004இல் வெளிவந்துள்ளது. “கொரில்லா”வை அடுத்து ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் இது. பேரினவாதக் கொடுமைகள், இயக்க நடவடிக்கைகள், ஆகியவற்றினூடாக அகதியாக ஐரோப்பாவில் வாழும் ஒருவனின் வரலாறு இது. ஆழம் காட்டமுடியாத மனித சுயத்தின் வேறுசில பரிமாணங்களை அடையாளம் காட்டும் முயற்சியாக இது அமைகின்றது. வெலிக்கடை சிறைப் படுகொலை, மட்டக்களப்புச் சிறை உடைப்பு, இயக்கப் படுகொலைகள் என்கின்ற வரலாற்றுப் பின்னணியில் மனித இருப்பைப் புரிந்துகொள்ள முயலும் சிக்கலான பணியை வேகம் குன்றாமல் செய்கின்றது இந்நாவல்.

போரே நீ போ செங்கை ஆழியானின் நாவலாகும். கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம் இதை ஜுன் 2002இல் வெளியிட்டது. தாயகத்தின் சமகாலப் பிரச்சினையைக் கூறும் நாவல் இது. 1995இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின்போது, இடம்பெயர்ந்த மக்களையும், இடம்பெயராத மக்களையும் இணைத்த நூலாக இது அமைகின்றது. மானிடவாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர்களையும் இளமைக் கனவுகளையும் போர் எவ்வளவுதூரம் நாசப்படுத்தி வருகின்றதென்ற அவலநிலைகளை போரே நீ போ சித்;;திரிக்கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.

ஈழப் போராட்டத்தில் தாயக மண்ணில் ஏற்பட்ட அழிவுகளைக் கதைக்களனாகக் கொண்டு அந்தச் சம்பவத்தை வரலாறாகப் பதிந்துவைக்கும் நோக்கில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. இவை கற்பனை கலவாத சம்பவக்கோப்புகள். படைப்பாளியின் கைவண்ணத்தில் இவை விறுவிறுப்பான கதையாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட லங்காராணி, புதியதோர் உலகம் போன்றே இவையும் ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஏதோவொரு சம்பவத்தை வரலாறாக்குகின்றன.

இருபத்திநான்கு மணிநேரம் என்ற நூலை நீலவண்ணன் என்ற புனைபெயரில் செங்கை ஆழியான் எழுதியிருந்தார். யாழ்;ப்பாணம்: கமலம் வெளியீடாக ஒக்டோபர் 1977இல் வெளிவந்தது. பல பதிப்புக்களை பின்னாளில் கண்டது. 1977 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இலங்கையில் ஆரம்பமான இனக்கலவரத்தின் முதல்; நாள் யாழ்ப்பாணத்தில் நடந்தது என்ன என்பதைச் சித்திரிக்கும் வரலாற்றுப் பதிவு இது. வரதர்; வெளியீடாக 16.10.1977இல் வெளியிடப்பட்ட முதற்பதிப்பு 15 நாட்களில் விற்பனையாகி விட்டநிலையில் 31.10.1977அன்று மீள்பதிப்புச் செய்யப்பட்டது. இந்நூலின் வரலாற்று முக்கியத்துவம் கருதி 25வருடங்களின் பின்னர் 3வது பதிப்பையும் 2003இல் கண்டுள்ளது.

எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன என்ற நூல் உண்மை நிகழ்வுகளின் மற்றொரு விவரணமாகும். நாவண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டக வெளியீடாக ஒக்டோபர் 1995 இல் வெளியாகியது. ||முன்னோக்கிப் பாய்தல்|| இராணுவ நடவடிக்கை இலங்கை அரசு 9.7.1995 முதல் 16.7.1995 அதிகாலை வரை வலிகாமம் மேற்கு பகுதியில் நடாத்தியது. அவ்வேளையில் படுகொலை செய்யப்பட்ட 239 பேரில், விமானக்;குண்டுவீச்சசுக்கு இலக்காகி நவாலித் தேவாலயச்சுற்றாடலில் பலியான 141பேரின் துயரச் சம்பவங்கள் உட்பட அந்தப் படையெடுப்பின் போது குறித்த நிலப்பகுதியில் பரவலாக நடந்த படுகொலைகள் விவரண வடிவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வலிகாமம் மேற்குப் பகுதியில் புலிகளின் எதிர்நடவடிக்கைகளைத் தொடர்ந்து தாம் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இராணுவம் பின்வாங்கிய ஒரு சில நாட்களில் அவ்விடங்களுக்குச் சென்று நேரடியாகச் சேகரித்த தகவல்கள் இவை.

அக்கினிக் கரங்கள் நாவண்ணனின் மற்றுமொரு போரிலக்கியமாகும். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக மலர்ந்துள்ள இது ஐப்பசி 1995இல் முதற்பதிப்பைக் கண்டது. ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவுசெய்து வைக்கும் பணியிலேயே திரு நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அக்கினிக்கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 21ம், 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிகாக்கும் படையினர் புகுந்து புரிந்த படுகொலைகளை மையமாக வைத்து இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.

நாவண்ணனின் பெயர்சொல்லும் மற்றொரு படைப்பு கரும்புலி காவியம்: பாகம் 1. கிளிநொச்சி அறிவு அமுது பதிப்பகம் மார்ச் 2003இல் இந்நூலை வெளியிட்டது. விடுதலைப் போராட்டத்தில், சிங்கள இராணுவத்தின் சிம்மசொப்பனமாகக் கருதப்படும் கரும்புலிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் எழுச்சியையும் கூறும் கரும்புலி காவியத்தை இந்நூல் தருகின்றது. இதில் கரும்புலிகளின் உள்ளத்து உணர்வுகளையும் அவர்களது அளவு கடந்த அர்ப்பணிப்புகளையும் மிகவும் நுட்பமாகவும் சாதுர்யமாகவும் சொற்களை நெகிழ்த்திச்சென்று தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

நாவண்ணன் போன்று போரியல் சம்பவங்களை வரலாறாகப் பதியும் மற்றொரு முயற்சியை மேற்கொள்பவர் வல்வை ந.அநந்தராஜ் அவர்கள். வல்வைப் படுகொலைகள் என்ற இவரது நூல் வல்வெட்டித்துறை நந்தி பதிப்பக வெளியீடாக 1989இல் வெளிவந்தது. இந்திய இராணுவத்தினர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வேளையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளில் உலகையே உலுக்கிய படுகொலைகளாக வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம் பெற்றிருந்தன. 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியபின் இந்திய இராணுவத்தினரால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான விபரங்கள், கதைகளாக நெஞ்சைஉருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. மக்களின் அவலங்களைச் சித்திரிக்கும் கறுப்பு வெள்ளை, வண்ணப் புகைப்படங்களுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட வல்வைமக்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களை உள்ளடக்கியதாக ஐNனுஐயு’ளு ஆலுடுயுஐ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான அணிந்துரை முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டசினால் மிக உணர்வுபூர்வமாக வழங்கப்பட்டிருந்தது.

வல்வை அநந்தராஜ் அவர்கள் வல்லை ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய மற்றொர வரலாற்றுப் பதிவு உதிரம் உறைந்த மண்: ஒரு மாணவப் படுகொலையின் அழியாத சுவடுகள் என்ற நூலாகும். கிளிநொச்சி: தமிழ்த்தாய் வெளியீட்டகம் வெளியிட்ட இந்நூலில்22.9.1995 அன்று வடமராட்சியில் நாகர்கோயில் மஹா வித்தியாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தின் வான்படை குண்டுவீசியதை அடுத்து அங்கு பலியான, காயமடைந்த பள்ளிச் சிறுவர்களின சோக நிகழ்வை உணர்ச்சி ததும்ப விபரித்துள்ளார். பத்திரிகைத் தணிக்கை அமுலிலிருந்த இக்காலத்தில் இந்தப் பாரிய கொடுமை வெளியுலகத்திற்கு எடுத்துச் சொல்லப்படுவதில் இருந்த தடங்கலை இந்நூல் நீக்கி, அந்நிகழ்வை வரலாற்றில் பதிந்துள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த நூல்கள் பற்றிப் பேசும்போது, அவ்விடுதலைப் போராட்டக் களத்தின் அரசியல் தத்துவார்த்த நெறியாளராக நின்று செயற்பட்டவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் குறிப்பிடல் வேண்டும். உதாரணமாக ஈழவர் இடர்தீர என்ற தலைப்பில் இ.இரத்தினசபாபதி அவர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஒர நூலை வெளியிட்டிருந்தார். Eelam Research Organisation என்ற நிறுவனத்தின் மூலம் செப்டெம்பர் 1984இல் இந்நூல் வெளிவந்திருந்தது. ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) நிறுவனரான இந்நூலாசிரியர், இவ்வமைப்பின் அதிகாரபூர்வ ஏடான தர்க்கீகம் இதழ்களின் வாயிலாக வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். மொழிவெறியாகவும், மாணவர் உயர்கல்விப் பிரச்சினையாகவும் 1975ம் ஆண்டுவரை அணுகப்பட்ட ஈழப்பிரச்சினையை இவரது கருத்துக்கள், மார்க்சிய பார்வையில் தமிழ்பேசும் மக்களின் உடைமைப்பாட்டுப் பிரச்சினையாக அணுகியிருந்தது.

ஈழ விடுதலை அரசியல் சார்ந்த நூல்கள் பற்றிக் குறிப்பிடும்போது அன்ரன் பாலசிங்கம் – அடேல் பாலசிங்கம் தம்பதியினரின் எழுத்தியல் பங்களிப்பு முக்கியமானதாகும். இரண்டு தசாப்தங்களும் புலிகளும் என்ற நூல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆகஸ்ட் 1992இல் வெளியிடப்பட்டது. 1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்திய முத்தமிழ் விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்ற ஒரு அரசியல் கட்டுரையின் நூல் வடிவமாக இது அமைந்துள்ளது. இருபது வருடகால புலிகளின் வரலாற்றை சித்திரிக்கும் ஆரம்பகால ஆவணம் என்ற வகையில் இந்நூலும் வரலாற்ற முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூல் போலவெ பின்னாளில் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம், ஆங்கிலத்தில் ஒர நூலை எழுதினார். Will to Freedom என்ற அந்நூல் பின்னாளில் ஓகஸ்ட் 2002இல் ஏ.சீ.தாசீசியஸ், அன்ரன் பாலசிங்கம் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு சுதந்திர வேட்கை: தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு என்ற பெயரில் வெளிவந்தது. இந்நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வாழ்வினை உள்ளிருந்த பார்வையாக, ஆழமாகத் தரிசிக்கின்றது. சுயதரிசன விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட இந்த நூலில் விடுதலைப்புலிகள் பற்றி இதுவரை வெளிவராத பல்வேறு சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுக்காலமான தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளர்ச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் திருப்பங்கள் இந்நூலில் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியரான திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்து தமிழ் சமூகக் கட்டமைப்புப் பற்றி நன்கறிந்தவர். விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பற்றியும் யாழ்ப்பாணச் சமூக சீதன முறை பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

விடுதலை என்ற தலைப்பில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றும் நொவெம்பர் 2003இலலண்டனிலிருந்து வெளிவந்துள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பும், 1987 ஜுலையில் புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின்போது ராஜீவ்-பிரபாகரன் இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்களையும் தெளிவுபடுத்தும் 11 கட்டுரைகள் இதில் உள்ளன. மனிதவாழ்வு பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலைபற்றியும் புதுமையான, புரட்சிகரமான சிந்தனைகள் இந்நூலில் அறிமுகமாகியுள்ளன. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மிக அண்மைக்கால வெளியீடாக றுயச யனெ Pநயஉந என்ற நூலும், அதன் தமிழாக்கமான போரும் சமாதானமும் என்ற நூலும் குறிப்பிடத்தகுந்த மற்றொரு நூலாகும்.

ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் யாழ்ப்பாண மண்ணில் பல இடையூறுகளுக்குள் வெளிவந்த பிராந்தியப் பத்திரிகை ஈழநாடு என்ற நாளிதழாகும். 1984ம் ஆண்டுக்காலப்பகுதியில் தமிழ்ப் பிரதேசங்களில் நீண்டகால ஊரடங்குச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு அரசின் நெருக்கடிகளால் விடுதலைப் போராட்டத்தின்பால் மக்களின் ஈடுபாட்டைநசுக்கும் கீழ்த்தரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்கால கட்டங்களில் ஈழநாடு நாழிதளில் வெளியான ஆசிரியத் தலையங்கங்கள் சில ஊரடங்கு வாழ்வு என்ற பெயரில் தனிநூலாக மீளப் பிரசுரமாயிருந்தது. ஈழத்தமிழருடைய போராட்ட வரலாற்றில் உண்மையாய் எழுதப்பட்ட பதிவேடுகள் இவை. இக்கட்டுரைகளின் ஆழத்தையும் சமூகப் பின்னணியையும் விரிவாக ஆராய்ந்து அச்சிடக்கூடிய நிலை அன்றிருக்கவில்லை. வரலாற்றுப்பதிவான அந்த ஆசிரியத் தலையங்கங்கள் எதிர்காலத்தில் ஈழ வரலாறு பற்றிய பல ஆய்வுகளுக்கு மூலாதார நூலாக விளங்கக்கூடும்.

பத்திரிகையாளர்கள் பலர் போராட்ட பூமியிலிருந்தும், பின்னர் அங்கிருந்து நெருக்கடிகளால் புலம்பெயர்ந்த வந்து புகலிட தெசத்தில் நிலைகொண்டிருந்தும் பல நூல்களை தமத அனுபவங்களாக எழுதி வெளியிட்டிரந்தார்கள். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் இவ்வகையில் உதாரணமாகக் குறிப்பிடலாம். எஸ்.எம்.கோபாலரத்தினம். மட்டக்களப்பிலிருந்து ஆகஸ்ட் 2000த்தில் இந்நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் இந்நூலாசிரியர் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை அனைத்தும் பதிவுக்குள்ளாகியுள்ளன.

போரியல் சார்ந்த படைப்பிலக்கியங்களைச் செறிவாகக் கொண்ட சிறப்பிதழ்கள் பல தாயக மண்ணிலிருந்து காலத்திற்குக் காலம் வெளியாகியுள்ளன.

வெளிச்சம்: பவள இதழ் 2001. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், நடுவப்பணியகம் இத்தொகுப்பினை 2002இல் வவுனியா வடக்கு பல நோக்குக் கூட்டுறவுச்சங்கப் பதிப்பகத்தின் வாயிலாக புதுக்குடியிருப்பிலிருந்து வெளியிட்டுள்ளது. 300 பக்கம் கொண்ட இம்மலர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் பருவ இதழாக வெளிவரும் வெளிச்சம் சஞ்சிகையின் 75வது இதழாகும். இது கார்த்திகை–மார்கழி 2001இல் பவள இதழாக மலர்ந்துள்ளது. இச்சிறப்பிதழில் ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பான கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன.

இத்தொடரில் குறிப்பிடத் தகுந்த மற்றொரு மலர் புலிகளின்குரல் வானோசை பத்தாவது ஆண்டு நிறைவு மலராகும். புலிகளின் குரல் நிறுவனம் இம்மலரை நவம்பர் 2000இல் புதுக்குடியிருப்பு: சந்திரன் பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருந்தனர். 332 பக்கம் கொண்ட இத்தொகுப்பு பல்வேறு புகைப்படங்கள் சகிதம் வெளியிடப்பட்டிருந்தது. 1990ம் ஆண்டு நவம்பர் 21இல் தமிழீழ மாவீரர் நாளில் தொடங்கப்பட்ட புலிகளின்குரல் வானொலிச்சேவையின் 10வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வெளியான சிறப்பிதழ் இதுவாகும். வே.இளங்குமரன், நா.தமிழன்பன், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், இ.இராஜேஸ்வரன், வை.சச்சிதானந்தசிவம், ராதேயன், ப.வசந்தன், ஆகியோரை மலர்க்குழுவாகக் கொண்டு இது வெளிவந்துள்ளது. 52 கட்டுரைகளும், 67 கவிதைகளும் கொண்ட பாரிய தொகுப்பு. இவை புலிகளின்குரல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் உள்ளிட்ட ஆக்ககர்த்தாக்களின் ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த ஆக்கங்களாகும்.

போர் நடவடிக்கைகளால் உளவியல்ரீதியில் பாதிப்புற்ற தாயக மக்களின் உளவியல் பிரச்சினைகளை ஆராயும் வகையிலும் சில நூல்கள் போர்க்கால ஈழத்தில் மலர்ந்துள்ளன.

மனவடு: நெருக்கீட்டின் உள விளைவுகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் என்ற நூல் வைத்திய கலாநிதி தயா சோமசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாக 1993 இல் வெளிவந்தது. 230 பக்கம் கொண்ட இந்நூல் விளக்கப்படங்கள் சகிதம் வெளிவந்துள்ளது. தாயகத்தின் இன்றைய போர்ச் சூழலில் மக்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கு உட்படுகிறார்கள். பரபரப்பு, பதகளிப்பு, அச்சம், தவிப்பு, போன்ற உளப்பாதிப்புக்கும் நெருக்கீடுகளுக்கும் உள்ளாகின்ற இவர்கள் இவற்றை எதிர்கொள்ள எவ்வகையான வழிமுறைகளைக் கையாளலாம் என்பதை விளக்கும் முக்கிய நூல் இதுவாகும்.

தமிழ் சமுதாயத்தில் உளநலம் என்ற மற்றொரு நூலும் தயா சோமசுந்தரம், சா.சிவயோகன் ஆகிய இருவராலும் எழுதப்பட்டு, சாந்திகம் என வழங்கப்படும் யாழ்ப்பாணம், பண்பாடுகளினூடான உளசமூக நிறுவனம் என்ற தொண்டர் நிறுவனத்தால் 2000ம் ஆண்டில் 246 பக்கம் கொண்டதாக புகைப்பட விளக்கப்படங்கள் சகிதம் வெளியிடப்பட்டது. இது பின்னர் 2004இலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டது. ஈழத்தமிழருடைய வாழ்வில் நிகழும் இடப்பெயர்வுகள் அவர்களில் பாரிய உளப்பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகளுள் உளநலத்தைப் பேணுதலும் இன்றியமையாதது. இந்தப் பின்னணியில் உருவான நூல் இது. உளச் சமூகத் தொண்டர்கள், உளநலம் விரும்பும் ஆர்வலர்கள் படித்துப் பயனடையும் வகையில் அரிய பல தகவல்களைக் கொண்டது. பல்வேறு உளநலப் பிரச்சினைகளும் அவை தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளும் இங்கு எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.

போரியல் சார்ந்த நூல்களில் படைப்பிலக்கியங்களுக்கு அப்பால் போர்ச்சூழலில் வெளியான இரண்டு நூல்கள் பற்றிய பதிவையும் இங்கு மேற்கொள்வது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகின்றேன்.

இலங்கை அரசபடைகளின் அட்டூழியங்களின் உச்சகட்டமாக வான்படையால் எரியூட்டும் குண்டுகள் வீசும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்கம் வகையில் எமது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களிடையே தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்பெறச் செய்யும் வகையில் எரியூட்டும் குண்டிலிருந்து பாதுகாப்பு என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு இந்நூலை செப்டெம்பர் 1986இல் வெளியிட்டது. மக்கள் பாதுகாப்பு என்னும் தொடர் வரிசையில் இரண்டாவது சிறுநூலாக வெளிவந்துள்ளது. போர்க்காலச் சூழலில் இலங்கை அரசபடையினரின் உயர்சக்தி மிக்க எரிகுண்டுத் தாக்குதலிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் தம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்ற அடிப்படைத் தகவல்களை விளக்கப் படங்களின் உதவியுடன் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. எரியூட்டும் குண்டு வகைகள், இரசாயனச் சேர்க்கைகள், அதன் பாதிப்புக்கள் என்பனவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. போர்க்காலத் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான பதுங்குகழிகளை அமைத்தல் தொடர்பான சிறு பிரசுரங்களும் அக்கால கட்டத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டன.

சமரும் மருத்துவமும்: போர்க்களப்பதிவுகளும் புதிய புதினங்களும் என்ற நூல் தூயவன் என்ற மருத்துவப் போராளியால் எழுதப்பட்டது. (இயற்பெயர்: சு.தனேஸ்குமார்). கிளிநொச்சி தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் மே 2003 இல் வெளியிடப்பட்ட இந்நூல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தில் அச்சிடப்பட்டது. 108 பக்கம் கொண்ட இந்நூலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறையைச் சேர்ந்த தூயவன், தன்னுடைய களமருத்துவப்பணிகளை நூலாக்கித் தந்துள்ளார். இதில் கடந்த 10 வருடகாலத்தில் களங்களிலும், தள சத்திரசிகிச்சைக்கூடங்களிலும் ஏற்பட்ட தனது நேரடி அனுபவங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். 1993-2003 வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ஏடு, வெளிச்சம் சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றில் வெளியானவை இவை.

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் தமிழில் போரியல் இலக்கியங்கள் பல உருவாகுவதற்கு வழிகோலியுள்ளது. புலம்பெயர்ந்து திக்கெட்டும் சென்ற ஈழத்தவரால் இவ்விலக்கியங்கள் உலக மொழிகளிலும் சேர்க்கப்படுகின்றன. இலங்கையின் தமிழர்களின் இனப்படுகொலைகள், வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள், பாரிய இடப்பெயர்வுகள் என்பனவற்றை எதிர்காலத்தில் ஆராய முற்படுவோருக்கு இக்கட்டுரை ஒரு சிறு பொறியேயாகும். பெருங்கடலுள் ஆழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முகட்டை மாத்திரம் இங்கு காட்டமுடிகின்றது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்கள் மட்டுமே ஈழத்து தமிழ் படைப்புலகத்தை அழகு படுத்துகின்றனவென்றோ, இங்கு குறிப்பிட்ட படைப்பாளிகள் மாத்திரம் தான் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் இன்று ஈடுபட்டுழைக்கிறார்கள் என்றோ வாசகர் பொருள் கொள்ளலாகாது.

ஈழத்துத் தமிழ் நூல்களில், குறிப்பாக போர்க்கல வெளியீடுகளை, அவற்றின் ஆழ்ந்தகன்ற இருப்பினை பதிவுக்குள்ளாக்கும் முயற்சி ஏற்கெனவே தொடங்கப்பெற்றுள்ளது. ஈழத்தமிழரின் படைப்புக்கள் பற்றிய விரிவான தேடலை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இக்கட்டுரையாளர் (என்.செல்வராஜா) தொகுத்துவரும் நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் வெளியீடுகளின் குறிப்புரையுடனான நூல்விபரப் பட்டியல் துணைபுரியும். தொகுதியொன்றுக்கு ஆயிரம் நூல்கள் என்ற வகையில் மூன்று தொகுதிகளில் 3000 ஈழத்தமிழ் நூல்கள் பற்றிய விபரங்கள் இதுவரை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பின் நான்காவது தொகுதி 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெளிவரவுள்ளது. ஒவ்வொரு நூலினதும் விரிவான நூலியல் அம்சங்களை பதிவு செய்வதுடன் அந்நூல் பற்றிய சிறுகுறிப்புரையும் இப்பதிவுகளில் காணப்படுவது சிறப்பாகும். இத்தொகுப்பின் பிரதிகளை இலங்கையிலுள்ள பிரபல புத்தக விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Categories: Authors Tags: , , , , , , ,

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’

August 27, 2009 1 comment

1. கொரில்லாவை முன் வைத்துச் சில …. ப.வி.ஸ்ரீரங்கன்

2. ஷோபா சக்தியின் கொரில்லா-சில குறிப்புகள் :: பிரம்மராஜன்

குமுதம் தீராநதி நேர்காணல்

தீராநதி: ‘கொரில்லா’ நாவல் உங்கள் சொந்தக் கதையா?

ஷோபாசக்தி: கொரில்லா என்னுடைய சொந்தக் கதை மட்டுமல்ல. நான் சந்தித்த பிரச்னைகள், பார்த்து, கேட்ட பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே அலைவரிசையில் ‘கொரில்லா’வில் நிரல் படுத்தியுள்ளேன்.

அல்லைப்பிட்டி என்றவொரு சின்ன மணல் கிராமம் எங்கள் கிராமம். அங்கு என் ‘செட்’டில் முப்பது பொடியன்கள் இருந்தார்கள். எல்லோரும் மாமன் மச்சான்தான். ஒன்றாகவே பள்ளிக்குப் போனோம். ஒன்றாகவே மாலை வேளைகளில் கிளித்தட்டு விளையாடினோம். 1990 ஆகஸ்ட் மாதம் யாழ் கோட்டையை மீட்பதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் எங்கள் கிராமத்தில் தரையிறங்கியபோது, அந்த முப்பது பொடியன்களில் இருபத்துமூன்று பொடியன்கள் இராணுவத்தினரால் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டார்கள்.

இன்று அந்த கிராமமே அழிந்து கிடக்கிறது. அரச கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என் கிராமம் அதிஉயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என் ‘செட்’டில் நாங்கள் ஐந்தாறு பேர்தான் இன்று உயிரோடு இருக்கிறோம். அதுவும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்ததால் தப்பித்தோம்.

அனுபவித்தவை, அறிந்தவை, பட்டவை, பார்த்தவை என்று ஆயிரக்கணக்கான கதைகள் இதுபோல் என் வாழ்வில் உண்டு. அவை எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமென்றும் விரும்புகிறேன். ஆனால், அதற்கான ஒரு சனநாயகச் சூழல் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஒரு வேளை நான் விரும்புவதுபோல் சுய தணிக்கை இன்றி எழுதுவதற்கான ஒரு சனநாயகச் சூழல் இருந்திருந்தால் என்னுடைய பிரதிகள் வேறுமாதிரி எழுதப்பட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

தீராநதி: ‘கொரில்லா’வுக்கு தமிழ்நாட்டிலிருந்து சாதகமாகவும் பாதகமாகவும் மிகப் பெரிய அளவில் எதிர்வினைகள் வந்தன. அது எங்களுக்குத் தெரியும். இலங்கை எழுத்தாளர்களிடமிருந்து என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தன என்று சொல்ல முடியுமா?

ஷோபாசக்தி: இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது. எனவே இலங்கையிலிருந்து ‘கொரில்லா’ குறித்த திறந்த மனது விமர்சனங்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சிறு குறிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நிச்சயம் அது பற்றி யாரும் அச்சமின்றி வாயைத் திறந்திருக்க முடியாது. நானும் சுகனும் இணைந்து தொகுத்த விளிம்புநிலைக் குரல்களின் தொகுப்புகளுக்கும் இதே கதிதான். நாங்கள் தொகுத்து வெளியிட்ட ‘கறுப்பு’ என்ற நூலின் விற்பனை பிரான்சில் தடை செய்யப்பட்டது.

தீராநதி: உங்கள் நண்பரான எழுத்தாளர் கற்சுறா ‘கொரில்லா’வை இன்னொரு ‘ஹே ராம்’ என்றும் விடுதலைப்புலிகள் சார்பு நாவல் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மற்றொரு நண்பரான சாரு நிவேதிதா சென்னையில் நடந்த விமரிசனக் கூட்டத்தில் ‘அது இலக்கியமே அல்ல’ என்றார். இந்த விமர்சனங்கள் பற்றி?

ஷோபாசக்தி: கற்சுறாவினது வாசிப்புக்கும் சாத்தியமுள்ளது. நம்முடன் இணைந்து பல வருடங்களாக சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தோழர் அவர். அது அவருடைய பார்வை.

சென்னையில் நடந்த கூட்டத்தில் சாருநிவேதிதா, ‘‘இந்நாவலின் அரசியலுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் இது இலக்கியமல்ல. வெறும் செய்திப் பதிவாக இருக்கிறது’’ என்றார். அது அவரது பார்வை, வாசிப்பு. அதற்கும் சாத்தியமுள்ளது. எல்லோரும் நம்முடைய பார்வையையும் அறிதல் முறையையும்தான் கொண்டிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

ஒவ்வொருவருக்கும் தன்னிலைச் சார்ந்த பார்வைகள் சாத்தியம்தானே. ஆனால் இலக்கியம் என்றால் இதுதான், இலக்கியத்திற்கான முறைமைகள் இதுதான் என்ற அளவுகோல்களைத் தீர்மானித்துவிடும் அதிகாரம் படைத்த தனி ஒருவரை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு தனி நபருக்கும் தனித் தனியான அளவுகோல்கள் இருக்கலாம். ஒருவரிடமே பல்வேறு அளவுகோல்கள் இருப்பதும் சாத்தியமே.

இந்தப் புலத்தில் என்னுடைய அளவுகோல்தான் சரியானது என்று எவரும் சொல்லவும் முடியாது. மற்றதின் அளவுகோல்களை காலி செய்யவும் முடியாது. எனக்கு சொற்ப காலங்களாக, துல்லியமாகச் சொல்லப் போனால் ஏழு வருடங்களாகத்தான் இலக்கியப் பரப்பில் நெருங்கிய பரிச்சயமுண்டு.

ஷோபாசக்தி என்ற பெயரில் எனது முதலாவது சிறுகதை 1997ல்தான் வெளியானது. எனக்கு ஆங்கிலமோ பிரெஞ்சோ படிக்கத் தெரியாது. ஆயினும் என்னிடமும் உங்களுக்குச் சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உண்டு. அந்தக் கதைகளை நான் உங்களுக்கு அச்சில் தருகிறேன்.

என் கதையையும் நான்கு பேர் படிக்கிறார்கள். சாருவின் கதைகளையும் நான்கு பேர் படிக்கிறார்கள்; அவ்வளவுதான்.

நான் என்னுடைய புத்தகங்களின் விமர்சனக் கூட்டங்களில் ஏற்புரையோ, பதிலுரையோ நிகழ்த்துவது கிடையாது. மேடையில்கூட அமரமாட்டேன். கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன். இதுவரை என் புனைவுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த எந்த விமர்சனத்துக்கும் நான் பதில் சொன்னது கிடையாது.

என் புத்தகம் குறித்து, என் புத்தகம் சொல்லாத எதையும் நான் சொல்லிவிட முடியாது என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கையுண்டு. மேலும் ஒரு நாவல் அல்லது சிறுகதை எழுதுவதையும் நான் அவ்வளவு முக்கியமான நிகழ்வாகக் கருதுவது கிடையாது. எனக்குச் சில கதைகள் தெரியும். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி வேறெந்த கோட்பாடுகளோ, திட்டங்களோ என்னிடம் இல்லை. எனவே, விமரிசனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை நான் அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஏனெனில், நான் உங்களுக்கு மற்றொரு கதையைச் சொல்வதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.


நாவலிருந்து சில பக்கங்கள்

5. குஞ்சன்வயல் கடக்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது. ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால நிலத்தில நிக்கக் கூட ஏலாமலுக்கு தலை சுத்தி அப்பிடியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமான், ஆம்பிளையள், பொம்பிளையள் எண்டு எல்லாமாய் ஐம்பத்து சொச்சப் பிரேதங்கள்.

6. எல்லோரையும் வெட்டித்தான் கொலை செய்திருக்கிறாங்கள். கையில்லாமல், காலில்லாமல், தலையில்லாமல், கைக்குழந்தையைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணிகளில ஏத்தினாங்கள். தோணியள் நாவாந்துறையைப் பார்த்து போகுது. நாவாந்துறையில் இருந்து பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்கு அங்கயும் வாகனங்கள் றெடியாய் நிக்குதெண்டு செய்தி கிடைச்சுது. குஞ்சன்வயல் சனங்கள் ஒரே ஆத்திரமும், அழுகையுமாய் பிரேதங்களை தோணியில ஏத்திறதுக்கு உதவி செய்தவை.

7. காலையில வழமை போல நெடுந்தீவிலையிலிருந்து குமுதினி லோஞ்சு வெளிக்கிட்டிருக்கு. அது நேராய் புங்குடுதீவு குறிகட்டுவான் ஜெற்றிக்கு வரவேண்டும். ஆனால் இப்ப அப்படி வர ஏலாது. இடையில பாதையை மாத்தி நயினாதீவு நேவிகாம்புக்கு போகவேணும். நேவி செக் பண்ணி பிடிக்கிற பொடி பொட்டையளை பிடிச்சுக்கொண்டு விட்டாப்பிறகுதான் குறிகட்டுவானுக்கு வர ஏலும். எப்பிடியும் காலையில பத்து மணிக்குப் பிந்தாமல் குமுதினி லோஞ்சி குறிகட்டுவான் ஜெற்றிக்கு வந்திரும்.

8. ஆனால் அண்டைக்கு குமுதினி நயினாதீவு நேவிக் காம்புக்கு வரமுன்னமே நேவிக்கப்பலுகள் குமுதினியை தேடிப்போய் நடுக்கடலில் மறிச்சுப் பிடிச்சுக்கொண்டுதுகள்.

9. ஒரு பச்சப்பாலகனுக்கு – பிறந்து ஆறு மாசம் கூட இருக்காது- நெஞ்சில வாளல குத்தி அந்தப் பிள்ளையின்ரை வாயுக்குள்ள ஆணுறுப்பை அடைஞ்சு வைச்சிருக்கிறாங்கள். லோஞ்சியல பயணம் செய்த ஒருத்தரும் உசிரோடு தப்பயில்ல. எல்லாரையும் வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறாங்கள்.

10. பத்து மணிக்கு வரவேண்டிய குமுதினி வரயில்ல. அது மத்தியானத்துக்குப் பிறகு குறிகட்டுவான துறையில நிண்ட சனங்களின்ர கண்ணில தெரிஞ்சுது. குமுதினி ஜெற்றியைப் பார்த்து வராமல் கடலுக்குள்ளேயே அலையிறதைக் கண்டு போட்டு துறையிலயிருந்த சனம் வள்ளத்தில ஏறிப்போய் குமுதினியைப் பார்த்தால் இந்தக் கொடூரம். ஒரு மாதிரி போன ஆக்கள் குமுதினிய ஜெற்றிக்கு கொண்டுவந்து சேர்த்திச்சினம்.

11. எல்லாப் பிரேதங்களையும் தோணியில ஏத்தி அனுப்பினாப் பிறகு அப்படியே கடலுக்குள்ள இறங்கி எல்லாப் பொடியளும் கால், முகம் கழுவிச்சினம். பிறகு, ஓஷிலா “நேவிக்கு அழிவு காலம் கிட்டுது” எண்டு சொன்னான்.

12. பொடியள் சொன்ன மாதிரி செய்து காட்டினாங்கள். ஒருநாள் நயினாதீவு நேவியின்ர ஜெற்றியையும் ஜெற்றியில நிண்ட வள்ளங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிளப்பினாங்கள்.

13. “எல்லாம எத்தின நேவி முடிஞ்சிருப்பாங்கள்?” எண்டு ரொக்கிராஜ் கேட்கவும் ஓஷிலா ஒர் செக்கன் கண்ணை மூடித் திறந்து போட்டு “கிட்டத்தட்ட கணக்கு சரியா வந்திருக்கும்” எண்டான்.

14. “அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை” எண்டு சடாரெண்டு ரொக்கிராஜின்ர வாயில் வந்திற்று. ஓஷிலா ஒரு மாதிரி சொண்டைச் சுழித்துக் கொண்டே ரொக்கிராஜைப் பார்த்து, “எனக்கே அரசியலா?” எண்டு கேட்டான். சுத்தி நிண்ட பொடியள் சிரிச்சாங்கள்.


‘மாத்யமம்’ மலையாள வார இதழில் 2005 மார்ச்25 ல் வெளியாகிய நேர்காணலின் தமிழ் வடிவம்

கொரில்லா என்ற நாவல் பற்றிச் சொல்லலாமா ?

கொரில்லா என்னுடைய முதலாவது நாவல். அது தன்வரலாறும் புனைவும் கலந்த முறையில் எழுதப்பட்டது. நான் விடுதலை இயக்கத்தில் இயங்கிய நாட்களையும் எனது அகதி வாழ்வையும் மட்டும் அல்ல, என் போன்ற மற்றும் சிலருடைய அனுபவங்களையும் தொகுத்து அந்த நாவலை எழுதினேன். அது மிக நேரடியான ஒரு அரசியற் பிரதிதான். எனினும் நிலவும் ஈழ அரசியல் நிலைமைகளைக் கருதி பல இடங்களில் நாவலில் சுய தணிக்கைகள் செய்திருந்தேன், என்பதையும் நான் வெட்கத்தை விட்டு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வேறு என்ன சொல்ல? என் நாவல் பற்றி நாவலில் சொல்லாத எதை நான் நாவலுக்கு வெளியே சொல்லிவிட முடியும் ?…

உங்கள் எழுத்தின் அரசியல் என்ன ?

நான் இப்போது எந்தவொரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவனல்ல. அதற்காகக் கவிஞர் சேரன் சொல்வது போல “அமைப்புக்களுக்குள் கட்சிகளுக்குள் கட்டுப்படாமல் விட்டு விடுதலையாகிக் கலைஞனாக நிற்கிறேன்” என்று சொல்லக் கூடியவனும் அல்ல. நான் “விடுதலை” இயக்கத்திலும் கொம்யூனிஸ்ட் இயக்கத்திலும் நீண்ட காலங்களை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன், மக்களுக்கு விடுதலையை அளிப்பார்கள் என நான் விசுவாசித்த அந்த அமைப்புகள் மக்களுக்கு அதிகாரங்களையும் ஒடுக்குமுறைகளையுமே பரிசளித்தன. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான, அதிகாரங்களை மேலிருந்து திணிக்காமல் கீழிருந்து எளிய மனிதர்கள் அதிகாரங்களைச் செலுத்தும், மக்கள் விடுதலையை நேசிக்கும், ஓர் இயக்கத்தையோ ஒரு கட்சியையோ நான் கண்டடையும் போது கண்டிப்பாக, நான் ஒரு உறுதியான இயக்கக்காரனாகவோ கட்சிக்காரனாகவோ ஆகிவிடுவேன். அதுவரைக்கும் நான் தனியனாக அதிகாரங்களுக்கு எதிராக எனது பலவீனமான குரலைத் தன்னும் ஒலித்துக் கொண்டேயிருப்பேன். மெளனம் என்பது சாவுக்குச் சமம்!

உங்களுக்கும் விடுதலை இயக்கத்துக்கும் தொடர்பு வந்தது எப்படி ?

நான் என் நினைவு தெரிந்த பருவத்தில் இருந்தே தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களுக்கு இடையில் வாழ்ந்தேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின்பு விடுதலை இயக்கங்களும் ஈழப் புலத்திலே மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தார்கள். 1977 மற்றும் 1981, 1983 ல் தமிழர்கள் மீது இலங்கை இனவாத அரசு பெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்திய காலத்தில் நான் வாழ்ந்தேன். ஆயுதந் தாங்கிய தமிழ் இயக்கங்களின் எழுச்சிக்கு பின்பாக அதுவரை கணிசமான மக்கள் ஆதரவோடு இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும சாதியொழிப்பு இயக்கங்களும் துப்பாக்கிகளால் மெளனமாக்கப்பட்டன. தமிழ்க் குறுந்தேசியத்துக்கு எதிரான எந்தவொரு கருத்தும் போராளிகளால் அனுமதிக்கப்படவில்லை. இன, பண்பாட்டு, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கான தீர்வும், விடுதலையும் தனித் தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நாங்கள் நம்ப வைக்கப்பட்டோம். வெலிகடச் சிறையில் 53 அரசியல் கைதிகள் அரசின் சதியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் தெற்கு, மேற்குப் பிரதேசங்களிலிருந்து வடக்குக்கு தமிழர்கள் கப்பல்களில் அகதிகளாய் வந்து சேர்ந்த தருணங்களும் என்னை இயக்கின. இயக்கத்தில் இணைந்து கொண்டேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது -குழந்தைப் போராளி- எனினும் இயக்கத்தின் சுத்த ஆயுதக் கண்ணோட்டத்தினுள்ளும் அவர்களின் அப்பட்டமான வலது சாரித்தனத்தினுள்ளும் ஒரு பாஸிஸ இயக்கத்தை ஒத்த அவர்களின் இயக்க ஒழுங்கு முறைகளுக்குள்ளும் என்னால் மூன்று வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இயக்கத்தை விட்டு வெளியே வந்த பின்பு என்ன செய்தீர்கள் ?

எதுவுமே செய்ய முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல இருந்தேன்.அப்போது எனக்குப் பதினெட்டு வயது. என் முன்னே எந்த வழிகளும் இருக்கவில்லை. அடுத்த வருடம் இந்திய அமைதிப்படை அங்கு வந்து சேர்ந்தது. இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூண்ட உடனேயே தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் கூட அனுபவித்திராத அடக்குமுறைகளை இந்திய இராணுவம் தமிழர்கள் மீது ஏவியது. அதுவரையில் இலங்கை இராணுவம் செய்திருந்த கொடுமைகளை இந்திய இராணுவம் ஒரே வருடத்தில் செய்து முடித்தது. இந்திய இராணுவத்தால் இரண்டாயிரத்துக்கும் அதிகமான அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவம் கணக்கற்ற பாலியல் வல்லுறவுகளை சிறுமிகள் மீதும் பெண்களின் மீதும் நிகழ்த்தியது.பொதுமக்களின் குடியிருப்புகள் மீது விமானங்களில் இருந்து குண்டு பொழிந்தது. காரணங்களே இல்லாமல் மக்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவமானப் படுத்தப்பட்டார்கள். உண்மையில் இலங்கை இராணுவத்தாலோ புலிகளாலோ செய்யப்பட முடியாத ஒன்றை என் விடயத்தில் இந்திய இராணுவத்தினர் நிகழ்த்தினார்கள். இந்திய இராணுவத்தாலேயே அப்போது நான் நாட்டை விட்டு வெளியேறினேன். அவர்களின் காட்டாட்சியின் கீழ் எங்கள் கிராமங்கள் இருந்த காலங்களில் தான் நான் என் நாட்டிலிருந்து துரத்தப்பட்டேன்.

பிரான்சுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் ?

அப்போது பிரான்சுக்கு வருமளவுக்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. இலங்கையிலிருந்து முதலில் தாய்லாந்துக்குத் தான் போனேன். அய்க்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் பராமரிப்பின் கீழ் அரசியல் அகதியாகச் சில வருடங்கள் பாங்கொக்கின் புறநகர் ஒன்றில் வாழ்ந்தேன். அப்போது ஆசியாவில் இருந்து அய்ரோப்பா அமெரிக்காவுக்கு புலம்பெயரும் அகதிகளின் -வெள்ளையர்களின் மொழியில் சொன்னால்- சட்ட விரோத குடியேற்றவாசிகளின் ஒரு சந்திப்பு சந்திப்பு மையமாக, இடைவழியாக பாங்கொக் இருந்தது. அங்கிருந்து 1993 ல் பிரான்சுக்கு வந்தேன்.

இப்போது L.T.T.E அமைப்பு குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் உங்கள் கருத்து என்ன ?

சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது?

இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை.

இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு இது சமாதான காலமாக இரு தரப்பினராலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமாதான காலத்தில் மட்டும் மாற்று இயக்க உறுப்பினர்களில் 300 பேர் வரையில் புலிகள் கொன்றிருக்கிறார்கள்.

நடந்த பேச்சு வார்த்தைகளில் வடக்கு கிழக்குக்கான அதிகாரத்தை தமது இயக்கத்திற்க்கு பெற்றுக் கொள்வதே புலிகளின் நோக்கமாக இருந்தது. அதாவது இன்று நிலவும் சமூக ஒழுங்குகளுக்குள் தமக்கான அதிகாரம். இன்று இலங்கை மீதான அமெரிக்காவின் வல்லாண்மை சந்தேகத்திற்க்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது. அமெரிக்க இராணுவத்துடன் இலங்கை இராணுவம் கூட்டுப்பயிற்சிகளில் – இந்தியா கூட – ஈடுபடுகிறது.

தாய்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் பேச்சு நடந்த போது இரு தரப்புக்கும் அமெரிக்கப் படையினர் தான் பாதுகாப்பு வழங்கினார்கள், அல்லது கண்காணித்தார்கள். ஏகாதிபத்தியத்தினதும் புலிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மேட்டுக்குடியினரதும் வர்க்க நலன்கள் ஒன்றானவை. இந்த இடத்தில் புலிகளைச் சில மேற்கு நாடுகள் தடை செய்துள்ளனவே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதே மேற்கு நாடுகள் தான் புலிகளை ஈழத் தமிழ்-முசுலீம்களின் ஏகப்பிரதிநிதிகளாக அங்கீகரித்துப் பேச்சுவார்த்தை மேசைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள், பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளர்களாக இருக்கிறார்கள்

என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் மேற்கு நாடுகளினதும் இலங்கை ஆட்சியாளர்களினதும் விடுதலைப் புலிகளினதும் வர்க்க நலன்கள் பொதுவானவை.எந்த நேரத்திலும் புலிகள், அவர்களைத் தடைசெய்த அதே நாடுகளின் செல்லப் பிள்ளைகளாக எடுபிடிகளாக ஆகச் சாத்தியங்கள் உருவாகாது எனறு கூறி விடுவதற்கான அரசியல் தருக்கங்கள் ஏதாவது நம்மிடம் உள்ளனவா? அதற்கான தடயத்தைத் தன்னும் புலிகள் நமக்கு விட்டு வைக்கவில்லையே! தமது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளின் மூலம் தம்மையொரு ஏகாதிபத்தியச் சாய்வுள்ள சிறு முதலாளிய இயக்கமாகவே விடுதலைப் புலிகள் அடையாளம் காட்டியுள்ளார்கள். மாற்று இயக்கங்களின் மீதும், மாற்றுக் கருத்தாளர்கள், எழுத்தாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மீதும் முஸ்லீம், சிங்களக் குடியானவர்கள் மீதும் நிகழ்த்திய ஒடுக்குமுறைகள், கொலைகள் மூலம் தம்மைப் பாஸிஸ்டுகளாக நிறுவியிருக்கிறார்கள்.ஆகவே நாம் விடுதலைப் புலிகள் மீது அபிமானம் கொள்ள எந்தவொரு காரணமும் கிடையாது.

மாறாக இலங்கை அரசோ தமிழர்கள் மீதான தனது ஒடுக்குமுறையை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்கள மக்கள் மத்தியில் J.V.P, ஹெல உருமய போன்ற இனவாதக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது. தனியார் மயமாக்குதல் அதி வேகத்தோடு நடக்கிறது. உண்மையில் இலங்கையில் தமிழ் மக்களும் சரி சிங்கள மக்களும் சரி முஸ்லீம்களும் சரி ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனம் கொண்ட ஒரு அரசியல் தலைமை இல்லாமல் தான் இருக்கிறார்கள். தமிழர் மத்தியில் அவ்வாறான ஒரு புரட்சிகர அரசியற் தலைமை தோன்ற தமிழ்த் தேசிய வாதமும் புலிகளும் பெரும் தடைகள்.

உங்கள் புதிய நாவல் பற்றிச் சொல்லுங்கள் ?

‘ம்’ என்னுடைய இரண்டாவது நாவல். 1983 ஜீலை 25 -27 ம் திகதிகளில் இலங்கை அரசாங்கம் வெலிகட சிறையில் நடத்திய கொலை வெறியாட்டத்தை ஆவணமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந் நாவலை எழுதினேன். இன்னொரு புறத்தில் தமிழ்ப் போராளிகள் பற்றி வீரம், தியாகம், இலட்சியம் போன்ற ஹீரோயிஸப் படிமங்கள் எழுந்துள்ளதையும் விசாரணை செய்ய முயன்றேன்.


திண்ணையில் யமுனாவின் கொரில்லா விமர்சனத்துக்கு மறு விமர்சனம்: ஜீவமுரளி

(18.01.2002)

கொரில்லா நாவல் பற்றி சாமானிய அறிவு வாசகனாகி எனது கருத்தையும், நண்பர் யமுனா ராஜேந்திரனின் கொரில்லா நாவல் பற்றி ஆழமும் விரிவும் தேடுகின்ற விமர்சனப் பார்வைமீது சில கருத்துக்களையும், எண்ணங்களையும் சொல்ல விளைகிறேன்.

யமுனா ஒரு பன்முக வாசிப்பு செய்த பின், கொரில்லா நாவல் பற்றி ஒரு மொழிபெயர்ப்பை திண்ணையில் தந்திருக்கின்றார். கடந்த காலங்களில் எங்களின் நண்பர்களும், தோழர்களுமாகியவர்கள் யமுனாவை பனைமரத்தில் கட்டிவைத்து பச்சைமட்டையால் அடித்த வடுவும், வலியும் இன்று பூத்துக்குலுங்குகின்றது. அதே பச்சை மட்டையால் ப+க்களைப் பறித்து எங்களின் நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் யமுனா மாலைசூடிலயிருக்கிறார்.

யமுனாவுக்கு ஏற்பட்ட வடுவையும் வலியையும் புரிந்து கொள்ள முடிகிறது. விமர்சனம் என்பது வடுக்களையும், வலிகளையும் ஏற்படுத்துவதற்கென்றே மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட சாமான் என தமிழ் இலக்கிய உலகத்தால் இன்றளவும் நம்பப்படுகிறது. முடிந்த வரைக்கும் வடுக்களையும், வலிகளையும் ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்கிறேன். முடியாவிட்டால் ஐ யஅ வநசசiடிடல ளழசசல.

யமுனா சார்! கொரில்லா நாவல் பற்றிய தங்களின மொழிபெயர்பும், விமர்சனமும் அபத்தமானவை சார். இடம், காலம், விடயம், பரிமாணம் எல்லாவற்றையும் தாண்டி இன்னொரு காலத்தையும் விடயத்தையும் பரிணாமத்தையும் உருவாக்கியிருக்கிறீர்கள். அதாவது கொரில்லாவை மரத்தில் கட்டிவைத்து விட்டு மரத்தைப் பற்றி பேசியிருக்கிறீர்கள்.

கொரில்லா நாவல் பற்றி எனது வாசிப்பும் புரிதலும் எண்ணமும்:

என்னைப் போன்ற முன்னைநாள் போராளிகளுக்கு நாவலில் ஓடிச்செல்லும் அனுபவங்கள் புதியவை அல்ல. ஆனால் தகவல்களும், சம்பவங்களும் புதியவை. ஆயிரம் முன்னைநாள் போரளிகளும் ஆயிரம் கதைகள் வைத்திருக்கின்றார்கள். சில சொல்லப்படாமலே போய்விடுகின்றன. சில சொல்ல வந்தும் தவறிவிடுகின்றன, சில திரும்பத் திருப்ப திரிக்கப்பட்டு உண்மைகளாக்கப்பட்டு விடுகின்றன.

சோபாசக்தியின் அகதி விண்ணப்பக்கதை, போராளியான கதை, அவனைச் சுற்றியோடிய உறவுகளும், குடும்பமும், துன்பங்களும், பின் புனைவும் நிகழ்வுகளும் வந்துபோகின்றன.

இயக்க்துக்குப் போன பிள்ளைகள் திரும்பி தங்களிடம் வந்துவிட மாட்டார்களா என ஏங்கும் பெற்றேரின் மனநிலையை, சமூக ஒழுக்க நெறிகளை மீறிய தந்தை கொரில்லா மூலம் அற்புதமாக கொண்டு வந்திக்ருகிறார். கீரியும் பாம்பும் போல உள்ள தந்தை மகன் உறவுக்குள்ளும், மகன் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின் சேட்டும் காற்சட்டையும் வாங்கிக் கொடுக்கும் தந்தை கொரில்லா செயல் உண்மையில் நெகிழ்சியான விடம்.

தாயின் பாத்திரம் வழமை போல இங்கு அடக்கியே வாசிக்ப்படுகின்றது.

எனது தந்தை ஒரு தமிழ் வாத்தியார். 1984 பங்குனி 15ம் எனது தாயின் பிறந்தநாளன்று நான் வீட்டைவிட்டு இயத்தத்துக்கு ஓடிப்போனேன். அன்றிரவு வீட்டிலுள்ள வாழ் ஒன்றை தேடி எடுத்து எனது நண்பனையும், மச்சானையும் தெருத்தெருவாக வெறிகொண்டு கலைத்தார், தமிழ் வாத்தியார். அதாவது என் தந்தையார். அவர்களின் பெற்றேர்களும் தங்களின் பிள்ளைகளை இழந்தனர். தமிழ் வாத்தியாரிடமிந்து தப்பியோடி இயக்கத்தில் வந்து சேர்ந்தனர். மூன்று வீடுகளியும் செத்தவீடுதான் நடந்தது நாட்கணக்கா பெற்றோர் அழுதனர், சாப்பிடாமலிருந்தனர்.

ஒரு சமூகத்தில் தமிழ் வாத்தியாரக உள்ள ஒரு தந்தைக்கும், திருடனாகவும், சண்டியனாகவும், குடிகாரனாகவும் உள்ள ஒரு தந்தைக்கும் உணர்வு நிலைகளும், அங்கீகாரங்களும், ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் எத்தனை கிலோ அல்லது கிறாம்களில் வித்தியாசப்படுகின்றன என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

யமுனா குறிப்பிபும் விடயம், இடம், காலம், பரிமாணம் எல்லாவற்றையும் கூட்டிக்களித்து பார்த்தால் கூட அவரால் இவற்றை புரிந்து கொள்ள முடியமோ தெரியவில்லை.

நாவலின் பிற்பகுதி நிகழ்வுகளும் புனைவுகளுமாக செல்கின்றன. புனைவுகள், அபத்தமானவை ஆபத்தானவை என்றால் யமுனா சார்! உலகில் உள்ள அத்தனை நாவல்களும் அபத்தமானவையும் ஆபத்தாவையும் என்றாகிவிடும். நிகழ்வுகளையம், புனைவுகளையும், தவிர்ப்புகளையும் பிரித்தறியும் வல்லமை வாசகர்களுக்கு உள்ளதென்றே நம்புவோம். ஒரு நாவலால் சமூகத்துக்கெல்லாம் ஆபத்து வந்துவிடாது மாறாக புரட்சியும் வந்துவிடாது.

இனி நாவலில் மறைக்கப்ட்டவையும், மறக்கப்பட்டவையும், தவிர்க்கப்பட முடியாது, மன்னிக்கப்பட முடியாது என காட்டப்பட்டவையையும் பார்போம்.

குமுதினி படகில் நடந்த கொலை வெறியையும், குரூரத்iதுயும் கனவிலும் வலியை தருகின்ற பதிவைச் செய்திருக்கிறார் சோபா சக்தி. அவர் வாழ்ந்த காலத்தில் புலிகளால் நடத்தப்பட்ட மற்றைய இயக்கப் படுகெலைகள் விரட்டப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் பற்றியும் வசதியாக மறந்துவிட்டார். இன்றும் கூட இது புலிகளால் செய்யப்பட்ட புனித வேள்வி என்றே விசுவாசிகளால் நம்பப்படுகிறது. ஒருக்கால் சகோதர இயக்கப் படுகொலைகள், சகோதர விரட்டியடிப்பு என்று கருதப்படுவதால் மன்னிக்கப்பட்டு விட்டனவோ தெரியவில்லை.

அடுத்தது இலங்கை அகதிகளெல்லாம் பொருளாதார அகதிகளே என பத்திரிகைக்கு பேட்டி கொடுத்ததாக நம்பப்படும் மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகத்தையும், குற்றத்தையும் செய்த கலாமோகன் பற்றியவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு நாவலில் தவிர்க்க முடியாதபடி இதை சோhபா பதிவு செய்திருக்கின்றார். இது இங்கே மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகமகவும், தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையாகவும்; அவர் முன்னிருந்திருக்கிறது.

அதே நாவலில் புலிகளால் செய்யப்பட்ட புனித வேள்விகள் மறக்கப்பட்டு விட்டன. அல்லது மன்னிக்கப்பட்டுவிட்டன. இடம், காலம், விடயம், பரிணாமம் என்ற ஒவ்வொரு தலைப்புக்களிலும் இவை எங்களால் புரிந்து கொள்ளக் கூடியவை. இதற்காக சோபவை வரலாற்றுத் துரோகி என நாங்கள் எக்காலத்திலும் சொல்லப் போவதில்லை. என்னதான் விமர்சனங்களிருந்தாலும் இராஜினி, செல்வி, சபாலிங்கம் இவர்களின் கொலைகளுக்கு பின்னும் துணிச்சலாக பல விடயங்களை சோபா வெளிக்கொணர்ந்திருப்பது தான் இந்த நாவலுக்கான முக்கியத்துவம்

எனது பாடசாலை நாட்களில் ஒருநாள் பத்தாவது வகுப்பில் வாத்தியார் சுந்தரகாண்டம் படிப்பித்துக் கொண்டிருந்தார். அதில் சீதை அசோக வனத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த பொழுது அவள் குளிக்காமல், மாற்று ஆடைகள் அணியாமல் இராமனையே நினைத்துக் கொண்டிருக்கிள்றாள் என்று வருகிறது. மாணவர் சிலருக்கு பதினைந்து வயதுக்குரிய சந்தேகங்கள் வந்துவிட்டன. ஆனல் வாத்தியாரைக் கேட்க முடியாது. அதாவது ஆண்டுக்கணக்காக சிறையிருந்த சீதைக்கு ஓருநாளும் மாதவிலக்கு வரவில்லையா என்பது தான் அக்கேள்வி. இந்த மாதிரிக் கேள்விகளைத்தான் யமுனா இவ்வளவு வயது வந்த பின்னும் சோபாவைப் பார்த்து கேட்கிறார்.

தலைவரின் கடிதத்தை இன்னும் பொக்கற்றுக்குள்ள கொண்ண்டுதான் திரியிறாரோ? கடிதத்தோட கொழும்பிலை திரியேக்க பொலிஸ் பிடிக்கேல்லையா? சபாலிங்கத்தை கொல்லும் பொழுது பக்கதில் நின்ற இவரை பிரஞ்சு பொலிஸ் பிடிக்காதா? என குழந்தைத்தனமாகவும் அசட்டுத்தனமும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்பது பட்ட வடுவினதம் வலியினதும் எதிர் வினை.

அடிப்படையில் யமுனாவின் வாதங்கள் எங்கிருந்து வருகின்றதென்றால் அவர் உண்மையில் நம்பிக்கை வைத்திருக்கும் வர்கப்போராட்ட கொள்கையில் இருந்தும், இன்னும் பிறவிலிருந்தும். அவரின் சமூக அக்கறை, நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவை. சொந்த வேலையை விட்டுவிட்டு அடிகளும் வாங்கிக்கொண்டு ஈழத்தமிழன் போராட்டங்களில் அக்கறைகாட்டுகிறார். தலித் பற்றி பேசுகிறார். குறும்படங்களாக வந்துள்ள தலித்துகளுக்கு இழைக்கப்படுகின்ற குரூரங்களை காட்டுகிறார்.

ஆனால் தலித் எழுற்சியையோ, போராட்டங்களையோ ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கின்றது. ஒருபக்கம் வர்கபோராட்டத்தின் மீதான நம்பிக்கையா என்றும் மறுபக்கம் சாதி பற்றிய பற்றுறிதியா எனவும் கேட்கத் தோன்றுகிறது.

இன்னும் யமுனாவுக்கு எரிச்சலையும், வலிகளையும் விடாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தடாலடி பின்னவீனத்து வாதிகளும், தலித்தல்லாத அதிதீவிர தலித் பற்றாளர்களும் கோட்பாடுகளை முன்வைக்கிறார்கள். முறைமீறல்கள் எப்படிச் செய்வது என்பது பற்றியும், கலகங்கள்; செய்வது பற்றியும், தலித்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும் எழுதியும், பேசியும் வருகிறார்கள். இதிலும் இவர்களின் சமூக அக்கறைகள், போராட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை.

ஆனால் தன்நிலை உயர்த்தலும், கொண்ட கொள்கையில் பற்றுறுதியும், வன்மமும், பழிவாங்கலும் அரசியற் பிழைப்பில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. இது தலித்துக்ளின் எழுச்சியும் போராட்டமும் தவறானவை என்ற அபிப்பிராயங்களை ஏற்படுத்திவிடுகின்றன. கலகக்குரல் என்பது சராயத்தின் பெயரால் விளக்கப்படுவதாலும் விளங்கிக் கொள்ளப்படுவதாலும், முறைமீறல்களும் மரபுடைப்புகளும் தனியே நிறைவேறாத ஆண்களின் என்றுமே நிறைவு பெற்றுக்கொள்ள முடியாத ஆழ்மன பாலியல் விருப்புக்களின் பெயரால் விளக்கப்படுவதாலும், விளங்கிக்கொள்ளப்படுவதாலும்; சம்மந்தப்பட்டவர்கள் நெட்டித்தள்ளப்படுகின்றனர். பெண்கள் குழந்தைகள் மீது செய்யப்படும் பாலியல் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கும் சாருநிவேதிதா போன்றவர்களுக்கும், பெண்களுடனான மிகசாதரண உறவுமுறைகளே குதிரைக் கொம்பான இந்த புகலிட வாழ்வில், நிறைவேறாத சதா வலியைத்தருகின்ற, பாலியல் விருப்பங்களை வெளியிடுபவர்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஆழ்மனமும், சமுக அக்கறையும் அலைக்களித்துக் கொண்டிருக்கின்றன.

யமுனா போன்ற பின்நவினத்துவ எதிர்ப்பாளர்களும், பின்நவீனத்துவ தடாலடி தலித் ஆதரவளர்களும் முடிவில் ஒரே புள்ளியில் வந்து சேரும் போக்கை மிக இலகுவாக கண்டு கொள்ள முடிகிறது. அது தலித் எழுச்சியின் மீதும், போராட்டங்களின் மீதும் சாணி அடிப்பதில் போய் முடிகிறது.

இன்னும் டானியல் எழுதியவை நாவல்களே இல்லை என சிவசேகரம் அவர்கள் இன்றும் பிடிவாதம் சாதிக்கிறார். இதற்கு பழையை வலிகளும் வடுவும் தான் காரணம் யமுனா சார்.

அடுத்ததாக செங்கள்ளுச்சித்தன் அவர்கள் கொரில்லா நாவல் பற்றிய தத்துவ விசாரணைகளை மிகவும் அற்புதமாக திண்ணையில் செய்திருக்கின்றார். அவரின் கைகளினுடகவோ, கால்களினுடாகவோ, கவட்டினுடாகவோ நகர்ந்து சென்ற புழுப்போலானது கொரில்லா நாவல் என்ற புதினமென்றும், கால்மாக்சைப் பற்றிப் பேசுபவர்களும், அவரின் கள்ளக் காதலியை பற்றி பேசுபவர்களும், சும்மா தாங்களும் ஒரு ஆக்களெண்டு எழுதுகினம் என்றும், தத்துவ விசாரணைகள் இல்லாமல் தன்னிலை விளக்கத்திற்கு மட்டுமே எழுதியும், பேசியும் வருகிறார்களென்றும் அற்புதமான ஆய்வென்றை செய்திருக்கின்றார்.

சித்தர்களில் பெரும்பாலானோர் சமூகமுறை மீறல்களை செய்திருக்கின்றனர். சாதிமுறைகளுக்கு எதிராக பாடி எதிர்புணர்வை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த செங்கள்ளுச்சித்தன், பனங்கள்ளுச்சித்தன் போன்ற நாமங்களின் பிறப்பே சாதிமுறமை பற்றுறதியின் விளைவான பிறப்பு. இது தலித்போராட்டங்ளை பற்றி கால ஓட்டத்திற்கு வசதியாகப் பேசிக்கொண்டு உள்ளே நையாண்டி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஒழித்திருந்து ஒரு படைப்பின் மேலும் படைப்பாளியின் மேலும் பீமுட்டி மட்டும் தான் அடிக்க முடியும், இந்த மாதிரி பன்னாடை விமர்சனங்களும் வயிற்றெரிச்சல் விமர்சனங்களும் தான் இந்த நாவலுக்கான முக்கியத்துவத்தை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றன.


(ஷோபா சக்தி) படங்காட்டுபவர் அல்லது தலித் நகல் போலி

யமுனா ராஜேந்திரன்

‘கொரில்லா’ நாவலில் வரலாறும் புனைவும் தொடர்பான பிரச்சினையை நான் பேசியிருந்தேன். புனைவில் வரலாறு தொடர்பான எனது நிலைபாடு இதுதான் : வரலாற்றின் வெற்றிடங்களையும், இருண்ட, புதிரான இடங்களையும் புனைவாளன் தனது கற்பனையாற்றலுடன் நாவலில் சித்தரிக்கலாம்.

அதற்கான அற்புதமான உதாரணங்கள்

  • இத்தாலிய நாவலான வால்ட்டர் பெஞ்ஜமின் பற்றிய ‘த ஆஞ்சல் ஆப் ஹிஸ்டரி’ மற்றும்
  • ரோஸா லக்ஸம்பர்க் வாழ்வு பற்றிய ‘ரோஸா’ எனும் ஆங்கில நாவல்.

முதல் நாவலில் வால்ட்டர் பெஞ்ஜமனின் ‘காணாமல் போன கையழுத்துப் பிரதி’ எனும் ‘புதிரின்’ அடிப்படையில் நாவலாசிரியர் தனது புனைவை முன்வைக்கிறார்.

இரண்டாம் நாவலில் ரோஸா லக்ஸம்பர்க் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் வரையிலும் அவரது உடல் ‘காணாமல் போயிருந்த’ காலங்களின் ‘புதிர்’ குறித்து நாவலாசிரியர் தனது புனைவை முன்வைக்கிறார். இந்த நாவல் முற்றிலும் ஒரு துப்பறியும் நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நாவல்கள் இரண்டும் ‘இடதுசாரி பின்நவீனத்துவ’ வகையிலான நாவல்கள் என்பதுதான் எனது மதிப்பீடு.

ஆனால், ஓப்புக் கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை, ஆத்திரமூட்டும் நோக்கில் ‘திருகி’ எழுதிய பல பகுதிகள் ‘ஷோ’வின் ‘கொரில்லா’ நாவலில் உள்ளது. கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட நிலையில் மரணமுற்ற சீனர்களைக் கடத்தியவர்கள் நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு தகவல் ‘ஷோ’வின் நாவலில் வருகிறது.

ஆனால், அந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொழில்முறையிலான ஆள் கடத்தல்காரர்கள் என நீருபிக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோ’ இங்கு செய்திருப்பது பின்நவீனத்துவப் புனைவு அல்ல, அதிர்ச்சி மதிப்புக்காக மார்க்சியர்களைக் கொச்சைப் படுத்தும் ஒரு விவரணை. இதன் வழி ஜெயமோகனைப் போன்ற ‘வலதுசாரிகளின்’ பாராட்டைப் பெறும் ஒரு புனைவு சார்ந்த அயோக்கியத்தனமான ‘யுக்தியே’ அது என்பதுதான் எனது பார்வை.

மேலாக, அந்நாவலில் சுந்தர ராமசாமி (ஜே.ஜே.சில குறிப்புகள்), சாருநிவேதிதா (ஸீரோ டிகிரி மற்றும் ராஸலீலா) போன்றோர் தொடர்ந்து செய்யும் ‘எதிரி’ எழுத்தாளர்கள் மற்றும் ‘எதிரி’ மனிதர்கள் மீதான அவமானத்தையும் கொரில்லாவில் ‘ஷோ’ சுமத்தியிருக்கிறார். சம்பந்தமில்லாமல் எழுத்தாளர் கலா மோகன் மீதான காழ்புபணர்வை அவர் நாவலில் தீர்த்துக் கொண்டிருக்கிறார். நாவலின் கட்டமைப்பு எனும் அளவில் ‘நிரவப்படாத’ பல இடைவெளிகள் கொண்டது அந்த நாவல்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முழுமையான பின்னணியோ அல்லது உலக விடுதலை இயக்கங்கள் குறித்த பின்னணியோ அறியாத தமிழக விமர்சகர்கள், விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்பணர்வு எனும் ‘பிரகாசத்தில்’ உழலும் இந்திய ‘வெகுஜன ஊடகங்களின்’ பாலான கவர்ச்சி கொண்ட தமிழக விமர்சகர்கள், பொதுவாகப் புரட்சிகர இயக்கங்கள் மீது வெறுப்புக் கொண்ட விமர்சகர்கள், ‘கொரில்லா’வையும் ‘ம்’மையும் ‘நாவல்கள்’ என மதிப்பிடலாம். ஆனால், 25 ஆண்டு கால ஈழப் போராட்ட வரலாறு தெரிந்தவன் எனும் அளவில், அதே விதமாக இந்த நாவல்களை மதிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை.

நாவலாசிரியானாக அந்த நாவலுக்குள் தன்னைப் பற்றி ‘ஷோ’ பல்வேறு ‘பில்ட்-அப்’கள் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கொரில்லா நாவல் குறித்த எனது விமர்சனமாக அமைந்தது. அப்படி நாவலைப் பார்ப்பதற்கான முழு உரிமையும் உலக இலக்கிய வாசகனாக எனக்கு உண்டு.

Writer A Muttulingam

August 27, 2009 Leave a comment

அ முத்துலிங்கத்தை எனக்கு முன்பே தெரியும். ‘அக்கா’ தொகுப்பு வெளிவந்த 1964 என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். சில பல காலமாகவே பொஸ்ரன் பக்கம் நடமாடுவதாக ஈழத்து இணைய நண்பர் தெரிவித்திருந்தார். அப்பொழுது நடந்த வலைப் பதிவர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வரவழைக்க எண்ணினேன். அவர் அலிஸ் மன்றோவின் நேர்காணலுக்கு அலைந்ததை “ஆயிரம் பொன்” என்று எழுதியது, என் நினைவுக்கு வந்ததாலோ, அல்லது என்னுடைய மின்னஞ்சல் எரிதமாகவோ மாறியதாலோ அது சித்திக்கவேயில்லை.

ஒருவரை சந்திக்க செல்லுமுன் அவரின் எழுத்தை படித்து, கேள்வி தயாரித்துக் கொள்ளும் என்னுடைய வழக்கப்படி, முத்துலிங்கத்தையும் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு தெரு தள்ளிதானே இருக்கிறார்… என்றாவது பேரங்காடியிலோ, பொருட்காட்சியிலோ, அகஸ்மாத்தாக சிக்கிவிடுவார் என்னும் நம்பிக்கை இருந்தது.

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் புத்தக விமர்சனம் எழுதுவார்கள். இசையை ரசித்ததை பதிவார்கள். வம்பு, சண்டை, கிசுகிசு, பகிடி, குத்து எல்லாம் சம அளவில் கலந்து விவாதம் புரிவார்கள். நாவல் புனைவார்கள். சிலர் அதன் மேற்சென்று காப்பியம் படைப்பார்கள். ஒரிருவர் அதனினும் அடுத்த கட்டமாக பின்நவீனத்துவம் தருவார்கள். இவற்றில் ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு, ‘ஏன் புரியாமல் எழுதுகிறீர்கள்?’, ‘தற்கால இலக்கிய போக்கு குறித்த உங்கள் கருத்து!’ என்று நேர்காணலைத் துவங்குவது எளிது.

ஆனால், முத்துலிங்கத்துடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. எழுதிய கதைகள் புரிந்தது. ‘பூமிக்கு பாதி வயது’ என்று எழுதிய ‘உண்மை (மட்டுமே) கலந்த நாட்குறிப்புகள்’ சம்பவங்களில் உள்ளடி, காட்டமான கருத்து என்று எதுவும் கிடைக்கவில்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் நிலவும் தண்மைக்கும் மின்விசிறி மட்டும் இயங்கும் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் இருந்தது. மின்விசிறி சத்தம் போடும்; வேகமாக சுழலும்; பக்கங்களை பறக்கடிக்கும்; காற்றடித்து மேலே பலமாக உரசும்; எனினும் வெப்பத்தைக் குறைக்காமல் வெறும் ஓசையாக மட்டுமே வியர்க்கும். ஏர் கண்டிஷனரோ அமைதியாக இயங்கி சாந்தமாக்கி, சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து.

இவரைப் போய் சந்திப்பதா என்று சந்திப்பதற்கு முன்பே ஏமாற்றம் வந்து, அவரை மின்மடலில் தொல்லைப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வரும் அறிவிப்பு வந்தது. பாஸ்டன் பக்க ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்வதால், ஜெயமோகனின் பயணத்திட்டம் குறித்து — அ முத்துலிங்கத்தின் வினாவுடன், இ-மெயில் கிடைக்கப் பெற்றேன். கனடாவில் இருந்து முத்துலிங்கம் பதினாறாம் தேதி வருவதாக விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறார். அவர் இந்தப் பக்கம் வரும்போது, அந்தப் பக்கம் டொரொண்டோவிற்கு செல்லுமாறு ஜெமோவின் சுற்றுலா அமைந்திருந்தது. பாஸ்டனில் சந்திக்க இயலாது என்பதில் இருவருக்கும் வருத்தம்.

எல்லோருடனும் மொத்தமாக பகுளத்தில் சந்திப்பது போர் வகை. காரின் தனிமையில், பயண குஷியில் மனதிற்குப் பிடித்த எழுத்தாளரை மடக்கிப் போட்டு, அவரின் மூளையை குடைவது சுவாரசிய வகை. அதிர்ஷ்டவசமாக இரண்டாம் வகை அமைந்தது. அ முத்துலிங்கத்தை பொஸ்டனில் இருந்து கனெக்டிகட்டுக்கு மூன்று மணி நேர பயணமாக அழைத்து செல்வதற்கு ஒத்துக் கொண்டார்.

சென்னைத் தமிழர்களோடு தொலைபேசுவது, எனக்கு கை வந்த கலை. ஆங்கிலத்திற்கு நடுவே தமிழ் வரும். நாகர்கோவில்காரர்களோடு பேசுவதற்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். காலச்சுவடு கண்ணனோடு முதன்முறையாக உரையாடும்போது, அந்த சுகத்தை அறியப் பெற்றேன். மூன்றாவதாக, ஈழத்தமிழரோடு ‘புரியலியே’ என்பதை தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்ச்சியோடு முனகுவது வாடிக்கை. இவரிடம் அந்தப் பிரச்சினை எனக்கில்லை. எழுத்தைப் போலவே, நிறுத்தி நிதானித்த குரலில், தமிழகத்திற்கும் ஓரளவு பொதுவான நடை. நான் விழிப்பதை விழியமாக பார்த்தது போல், சமயோசிதமாக ஆங்கிலத்திற்கு மாறுதல் என்று உரையாடலை செலுத்தினார்.

‘கூட எத்தனை பேர் வருகிறார்கள்?’, ‘உங்களின் மகளுக்கு எத்தனை வயது?’, ‘இரவு திரும்பி விடுவோம் அல்லவா?’ என்று எதிர்பார்ப்புகளை கேள்விகள் வாயிலாக விடையறிந்து கொண்டார். இந்திய நேரப்படி நாங்கள் தாமதமாக சென்றபோதும், பதற்றமடைந்து ஒரு தடவை கூட செல்பேசியில் அழையாத பாங்குடன், பொறுமை காத்திருந்தார். வந்திருந்த அனைவரையும் அறிமுகம் வாங்கி, அதன் பிறகு பேசத்துவங்கும்போது, ஒவ்வொருவரின் பெயர் சொல்லியே, உரையாடலைத் துவங்கினார்.

சாதாரணமாக ஆறு பேர் செல்லும் பெரிய ஜீப்புகளில், ஓட்டுநரும், அவரின் முன்பக்க சகாவும் தனி ஆவர்த்தனம் நடத்த, பின்பக்கம் இருவர் சயனித்துவிட, நடுவில் வருபவர் ஏதாவது வேடிக்கை பார்ப்பது சகஜம். பின்னிருக்கையில் அமர்ந்த வெட்டிப்பயலின் கேள்வியை, தான் மட்டும் உடனடியாக பதிலாக்காமல், முன்னிருக்கையாளர்களை நோக்கி அதை வீசினார்.

‘என்ன பாலா, வார்த்தைகளுக்கு முக்கியத்துவமே வேண்டாமென்கிறாரே? கதையின் அடர்த்தியும் போக்கும் முடிவும்தான் தூக்கி நிறுத்தும்கிறாரே (வெட்டி) பாலாஜி! நீங்க அவ்வாறு நினைத்ததுண்டா?’

மகாராஜாவின் ரயில் வண்டி‘யின் முன்னுரை நிழலாடுகிறது:

ஜீன் ஜெனே என்ற பிரபல பிரெ…ஞ்சு எழுத்தாளர் சொல்கிறார்: ‘வார்த்தை என்று ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோக மானது. உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்.’

முன்பின் அறியாதவர்களைப் பார்த்தவுடன் கையை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், வலதுகை விரல்கள் வாயை சுற்றி மூடியவாறு அமைதி காப்பதும் இயல்பு. பல காலமாக பழகிய நண்பர்களுடன் பேசுவது போல் முத்துலிங்கத்திடம் அந்த பாதுகாப்பு + எச்சரிக்கை உணர்வு செய்கையில் இல்லை.

‘இந்த GPS கனிவான பெண் குரலில் பேசுகிறது. கனடாவில் தமிழில் பேசும் வழிகாட்டி வந்துவிட்டது தெரியுமா?’ என்று தெரியாத செய்தியை நுழைத்து தயங்கும் பேச்சை தழைக்கவைத்தார். ‘தமிழ் இலக்கியத்தை மேற்கத்திய புழக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னும் நிறைய பேர் தேவை.’ என்று வழிகாட்டியாக உற்சாகமூட்டினார். தன் வாசிப்பு, பழக்கவழக்கம், இணைய செயல்பாடு எல்லாவற்றிற்கும் சுருக்கமாகவும் விவரமாகவும் பதில்களை யோசித்த பிறகு வழங்கினார்.

காலையில் இரண்டு மணி நேரமாவது எழுதுகிறார். வலையில் இருப்பது பெரும்பாலும் மின்னஞ்சல்களுக்காக மட்டுமே. பதிவுகள், சஞ்சிகைகள் போன்றவை தொடர்ந்து வாசிக்க எழுத்துருக்களும் ஒளிர்திரைகளும் ஒத்துழைப்பதில்லை. அடுத்த சந்திப்புக்கு எவ்ரைத் தொடர்பு கொள்ளலாம் என்பதில் சிறப்பு கவனம், எப்போதும் இருக்கும். ஆப்பிரிக்க அனுபவங்களைத் தொகுத்து நூலாக்க வேண்டும். புனைகதை எழுதியவுடன் செதுக்கல் தொடங்கும். ஒவ்வொரு வரியிலும், வார்த்தைகளும் அமைப்பும் மாறும்; நீக்கப்படும்.

“சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்”, என்கிறார்.

இப்பொழுது ‘வம்ச விருத்தி’ யில் அ முத்துலிங்கம் சொன்னது பொருத்தமாகப் படுகிறது. சொல்கிறேன்:

அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் ‘என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?’ என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் ‘ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறினாராம்.

நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன்.

வெகு அரிதாகவே புன்னகைக்கிறார். எளிய கருத்தை தடாலடியாக சொன்னாலும் ‘அப்படியா?’ என்னும் ஆச்சரியம் மேலோங்க, மேல்விவரங்களை ஆர்வத்துடன் கொக்கி போட்டு, மற்றவர் எண்ணங்களை முழுமையாக்கி, ஒத்துக் கொள்கிறார். மாற்று சிந்தனை இருந்தாலும், கடுமையாக முரண்பட்டு வாக்குவாதங்களுக்குள் நுழையாமல், சொன்னவரின் சிறுகுறிப்பை, விரிவாக்கி, கிரகிக்கிறார்.

ஒரு நல்ல நாவல் எழுதிவிட்டு, வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை நிறைவாகப் பெற்றுவிடும் மேற்கத்திய எழுத்தாளரோடு தமிழகத்தின் நிலையை எண்ணிக் கவலை கொள்கிறார். வறுமை என்னும் அவலமே அவரை வருத்தப்பட வைக்கிறது. அவரின் பேட்டியை மேற்கோள் காட்டினால்:

‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ பாடலில் வரும் ‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் ‘ என்ற வரிகள் சொல்லும் தத்துவத்தை யாரால் மறக்கமுடியும். வறுமையின் காரணம் தெரியாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை.

சினிமா பற்றி பேச்சு திரும்புகிறது. தினமும் ஒரு திரைப்படம். இரவில் இரண்டு மணி நேரம் அதற்காக ஒதுக்குகிறார். தமிழ்ப்படம், இரானிய கலைப்படம், சமீபத்திய ஹாலிவு சூப்பர் ஹிட் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் பார்க்கிறார். திரைக்கதை எழுத வந்த வாய்ப்புகளை ஒத்துக்கொள்ளவில்லை. சினிமாவில் நுழைவது குறித்து பெரிய அளவில் ஆர்வம் இல்லை.

‘யாரை தற்போது வாசிக்கறீர்கள்?’

மூன்று பேரை சொல்வேன்:
1. Sadia Shepard – The girl from Foreign
2. Ameen Merchant: The Silent Raga
3. The Toss of a Lemon by Padma Viswanathan

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்து தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

சந்திப்புக்கு சென்றுவிட்டோம். முப்பது பேருக்கு மேல் நிறைந்த வரவேற்பறை. ‘திண்ணை’ கோபால் ராஜாராம் வரவேற்று பேசுகிறார். ஜெயமோகன் அறிமுகம் முடிகிறது. முத்துலிங்கம் ஆரம்பிக்கிறார்:

“தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன்”, என்னும் தடாலடி துவக்கம். தொடர்ந்து தொடர்ந்து ‘சுவருடன் பேசும் மனித’ரில் குறிப்பிட்ட தனி நாடு இருந்தால்தான் மொழி தழைத்தோங்கும் கருத்து விவாதிக்கப்படுகிறது.

பத்தாயிரக் கணக்கில் மேகங்கள் இருக்கிறது. ஒன்றில் விமானத்தை செலுத்தினால் வேகம் கொள்ளும்; இன்னொன்று கீழே இறக்கிவிடும்; மற்றொன்று அனைத்தையும் மறக்கடிக்கும்; பிறிதொன்று அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும். முத்துலிங்கத்தின் எழுத்து தெளிந்த நீல வானத்திற்கு நடுவே பல்வேறு மேகங்களைக் கொண்டது. எழுத்தாளரை முழுவதுமாக வாசித்துவிட்டால் அவரைப் புரிந்து கொள்வோம் என்றில்லை. ஆனால், அ முத்துலிங்கம் விஷயத்தில் அவரின அனைத்து ஆக்கங்களும் வாசித்தால், அவரைக் குறித்த முழுமையான ரேடார் சித்திரமாவது கிடைக்கும்.

முந்தைய நேர்காணலில் முத்துலுங்கம் எழுதியது:

சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். அதிலே ஒரு கோமாளி மேசையை தாண்டி பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்கு பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்கு தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், தண்ணீர் ஆற்றில் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.

ஜெயமோகன் பிறிதொரு சந்திப்பில் சொன்னதுடன் முடிப்பது பொருத்தம்: ‘சிலர் கரடுமுரடா மட்டும் சொன்னா இலக்கியம்னு நெனச்சு ஏமாந்துடறாங்க. எளிமை வெல்லும்.’

Writer Muttulingam
Writer Muttulingam

Categories: Uncategorized

Jeyamohan

August 27, 2009 Leave a comment

விமானத்தில் இருந்து இறங்கி வருபவர்களுக்கென்று சில சாமுத்ரிகா லட்சணங்கள் உண்டு. கலைந்த சிகை; பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்ட 24 மணி நேரமும் விண்ணிலும் மண்ணிலும் சுற்றிய களைப்பு; கசங்கிய ஆடை என்று பயணங்களில் உங்களை கவனித்திருப்பீர்கள். ஜெயமோகனிடம் ஏனோ இதெல்லாம் காணக்கிடைக்கவில்லை. விமானம் வந்துசேர்ந்த பதினைந்தே நிமிடங்களில் வெளியே வந்துவிட்டார். விட்டால் அப்படியே நேரடியாக சென்று கீநோட் பேச்சுக் கொடுக்க தயாராக இருக்கும் பாவத்துடன் வந்திருந்தார்.

அன்றாடம் இந்தியா சென்று திரும்பும் என்னிடம் ஐம்பது பவுண்டுக்கு சற்றும் குறைவைக்காத இரு பெரும் பெட்டிகளும், கைமாடாக இன்னும் இரு பைகளும் என இந்து தெய்வங்களைப் போல் நாலு கை நிறைந்து இருக்கும். ஜெயமோகன் எளிமையான பயணி. உள்ளே ஒன்று; கையில் ஒன்று; கூடவே மடிக்கணினிப் பை. அம்புட்டுதான். எழுத்திலும் இந்த மாதிரி சிக்கனம் காட்டலாம் என்று தோன்றியதை சொல்லாமல் அடக்கிக் கொண்டேன்.

காதோரம் நரை. பேசும்போது ஊடுருவும் கண்; விறைப்பான அமைதியான நடை; பிறர் சொல்லும் விஷயம் தெரிந்திருந்தாலும் கேட்டுக்கொள்ளும் பொறுமை; ‘அடுத்து என்ன’ என்று அவசரப்படாத, பதட்டம் கொள்ளாத தன்மை; ‘எனக்கு இதுதான் வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொள்ளாத, கொடுத்தால் மட்டும் பெற்றுக் கொள்ளும் நாணல் சுபாவம்; தலையணை வைத்துக் கொள்வதில்லை; எந்த உணவாக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி முயற்சிக்கிறார்.

எனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுபிடிப்பது முக்கியமாகப் பட்டது. அவரும் தமிழை ஃபோனெடிக் முறையில், அஞ்சல் கொண்டு தட்டச்சுகிறார். ‘நேரமாச்சு’ என்று குரல் கொடுத்தபின்னும் அசராமல், இணையத்தில் 30 நிமிடமாவது மேய்கிறார். ‘இன்னும் கிளம்பலியா’ என்றபிறகு 15 நிமிடம் எடுத்துக் கொள்கிறார். அப்பொழுது மனைவியிடமிருந்து ‘உங்களைப் போலவே ஜெயமோகன் இருக்கிறார்’ என்று பெருமிதப்பட வைத்த தருணம்.

கண்ணாடியை மூக்கின் நுனியில் தள்ளிக்கொண்டு நோக்கும் பார்வையில் அவரிடம் கதைவிட முயல்பவர்களுக்கு கொஞ்சமாய் அச்சம் கலந்த தற்காப்புணர்ச்சி மேலிடுகிறது. எதைக் குறித்துக் கேட்டாலும் அதற்கு பதில் வைத்திருக்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் வராவிட்டாலும், மேலும் கேட்க நிறையக் கேள்விகள் தோன்றும்.

ஒரு வருடத்திற்கு ஜெயமோகன் சற்றேறக்குறைய ஆறு மேடைப் பேச்சுக்கள் தருகிறார். இந்த வருடம் ஆஸ்திரேலியாவோடு சேர்த்து ஒன்றிரண்டுதான் முடிந்திருக்கிறது. மற்றவற்றை ஈடுகட்ட, அமெரிக்கா வருவதற்காக, சிந்தனையைத் தூண்டும் சிதறல் எண்ணங்களையும் செறிவான தகவல் நிறைந்த கருத்துக்களையும் தயாரிக்கும் வேலை பின்னணியில் நடந்திருக்கும். அந்த உழைப்பு பேச்சில் தெரியாதவாறு எளிமையாக்கிக் கொடுக்கிறார்.

தமிழ் ஈழம் குறித்த வினாவா? நடந்து முடிந்த தேர்தல் களமா? ஜான் அப்டைக்கின் எழுத்து நடையும் Paula Coelhoவின் புத்தகங்களும்… எதைப் பற்றியும் ஆணித்தரமான நம்பிக்கையை உண்டாக்கும் விதத்தில், ஆதாரபூர்வமான தரவுகளுடன், மனதில் பதியும் எடுத்துக்காட்டுகளுடன், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, வாதிடும் லாவகமும், புத்தியில் நிறையும் வீரியமும் வியக்க வைக்கிறது.

ஜெயமோகன் மட்டும் பேசுவதை எல்லாம் எழுதிவந்தால், தமிழ் தகவற் களஞ்சியம் தயார். கைவசம் குறிப்புகள் இல்லாமலோ, பவர்பாயின்ட் ஸ்லைடுகள் போடாமலோ, கோர்வையாக, விஷய அடர்த்தியுடன், தெளிவாகப் பேசுவதை ஒலிப்பதிந்து ஆடியோ பதிவுகளாக இட வேண்டும். ஒலிப்புத்தகங்களாக்கி பரவலாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கேட்டதில் எதிரொலியாக அலையடிக்கும் சில ஜெமோண்ணங்கள்:

நந்திகிராம்: கலவரம் நடந்தவுடன் அங்கே சென்றிருந்தேன். பல இடங்களுக்கு, குடியிருப்புகளுக்குள், கிராமங்களுக்குள் இந்தியர்கள் செல்ல அனுமதியே கிடையாது. மொத்த ஊரும் பங்களாதேஷில் இருந்து ஊடுருவியிருக்கு. அரசாங்க அனுமதியுடன், மார்க்சிஸ்ட் அரசின் ஆசியுடன் இந்த அத்துமீறல், குடிபுகல் நடந்தேறியிருக்கு. நன்றிக்கடனாக, உள்ளே வந்த பங்களாதேஷியர்களும் கம்யூனிஸ்ட் வாக்கு வங்கியாகவே இருந்தார்கள். கொஞ்ச நாளில் காஷ்மீர் மாதிரி வங்காளமும் ஆசாதி கோரலாம்.

இளையராஜாவோடு நேசம் கலந்த நட்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். எந்த ட்யூனை கொடுத்தாலும், அதன் அசலை எங்கிருந்தோ கொணர்ந்து ஒத்திசைவை காட்டுகிறார். புது மெட்டாக இருக்கட்டும், இந்திப் பாட்டாக இருக்கட்டும். அவரின் அனுபவம் பிரமிக்க வைக்கிறது.

நீர் மேலாண்மை: காவிரியில் டிஎம்சிங்கிறோம்; வீராணம் ஏரின்னு ரொம்ப காலமாக சொல்லிண்டு இருக்கோம்; ஆந்திரா அணை கூடாது; பெரியார் பாலம் என்று ஆயிரக்கணக்கில் தேவையில்லாத பிரச்சினைகளை பூகம்பமாக்கி, அரசியல்வாதி அறிக்கைப் போரிலும், மாநில பூசல்களாகவும் வளர்த்து வாக்குப் பெட்டி நிரப்புவதுதான் நடக்கிறது. காவேரி கடலில் வீணாகாமல் இருக்க ஆயிரக்கணக்கான ஏரிகள் தஞ்சாவூர் ஜில்லாவில் சோழ இராச்சியத்தில் கட்டப்பட்டது. அவையெல்லாம் இன்று பட்டா போடப்பட்டு, அரசியல் தலைவர்களின் நிலங்களாக மாறி, அடுக்கு மாடி வீடாகி விட்டது. கர்னாடகத்தில் போராடி வாங்கும் தண்ணீர், கடலில் சென்று கலக்கிறது. வீராணம் ஊழல் பிரசித்தி பெற்றது. இருக்கிற நீர்வளத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு, அணைகளை செப்பனிட்டு, குளங்களை மீட்டெடுத்து, ஏரிகளைத் தூர்வாரினாலே தமிழகம் செழிக்கும்.

குறிப்பாக ஷங்கர் படம் பார்ப்பது போல் தமிழ்நாட்டின் தண்ணீர் வீணடிப்பைக் காட்சிப்படுத்தினார் ஜெயமோகன். சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, பூறம்போக்கு நில ஆக்கிரமிப்பு, அரசியல் சதுரங்கம், தலைவர்களின் அலட்சியம் என்று ஒவ்வொரு நிகழ்வையும் முடிச்சுப் போட்டு, கல்லணை காலத்தில் இருந்து ஆளுங்கட்சிகளின் ஊழல் மகாத்மியம் தொட்டு, குடியானவனின் இன்றைய தேவையை புள்ளிவிவரங்களாக்கி ஜெயமோகன் கொடுத்தவிதம், கோபமும் வேகமும் ஆதங்கமும் எழவைத்தது.

கனமான களங்களை ஆராயும் கேட்போரின் ஆசுவாசத்திற்கு சீமான் நகைச்சுவை, தமிழ் சினிமா இயக்குநர்களின் உழைக்கும் ஸ்டைல் போன்ற கொசுறு சமாச்சாரங்களும் கொடுத்தார்.

அசோகமித்திரனை முதன்முதலாக தமிழ் நாவல் உலகின் முன்னோடியாக முன்னிறுத்தியது, சுந்தர ராமசாமி இல்லத்தில் பயணித்த தருணங்களை ‘நினைவின் நதியில்’ ஆக்கியது, எழுத்தாளர் நகுலனை திருவனந்தபுரத்தில் சந்திக்கச் சென்றது, ஜெயமோஹன்.இன் வலைக்கட்டுரைகளின் விரிவாக்கமான கருத்தோட்டங்கள் என்று மனிதர்களையும் அவர்கள் முன்னிறுத்திய இலக்கணங்களையும் இலக்கியத்தரமாக, தத்துவார்த்தமாக, சம்பவங்களாக, விவரித்த விதம் ‘இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சம்’ என்று சொக்குப்பொடியிட்டு பல இரவுகளை நள்ளிரவு தாண்டியும் ஆர்வமாக்கியது. அதன் பிறகும், அவர் மின்னஞ்சல் பார்த்து, பதிலிறுத்து, அதன் பின்னே உறங்கினார். அதிகாலை ஐந்தரைக்கெல்லாம் அலாரம் எதுவுமில்லாமல் எழுந்தும் விடுகிறார்.

ஜெயமோகனுக்கு மிகவும் பிடித்ததாக மூன்று துறைகளை சொல்கிறார். இலக்கியம், வரலாறு/கலாச்சாரம், தத்துவம். முதல் இரண்டையும் ஜெமோ உரையாடினால், அதன் தொடர்பான விவாதங்களை சாதாரணர்களிடமும் எழும்புவதை கவனிக்கலாம். தத்துவத்தை ஞானம் x கர்மம்என்று பாரத நாடு சித்தாந்தம் சார்ந்து மேற்கத்திய கொள்கைகளோடு ஒப்பிட்டு, ஜெயமோகன் முன்வைக்கும்போது, ‘கற்றது கைமண்ணளவு’ என்று சரஸ்வதி இவரைப் பார்த்துதான் சொன்னாளோ என்று எண்ண வைக்கும்.

ஒருவரின் வாசிப்புத் திறத்தை அறிய அவரை புத்தகக் கடைக்கு அழைத்து சென்று இரண்டு மணி நேரமாவது விட்டுவிட வேண்டும். இவரையும் அப்படி செய்தேன். சிலர் புத்தகத் தலைப்பை பார்த்து செல்வார். அவற்றுள் படித்ததை நம்மிடம் நினைவு கூர்வார். வேறு சிலர், அதை எடுப்பார்; விலையைப் பார்ப்பார்; பின்னட்டையை பார்ப்பார்; உள்ளடகத்தைப் பார்ப்பார்; வைத்து விடுவார். வெகு சிலர், தான் தேடும் நூல் இதுதான் என்று அறுதியிட்டுக் கூறிவிடுவார்; மற்றவற்றை ஏறெடுத்தும் பாரார்.

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

மேகமூட்டமான வானிலையை அமெரிக்கர்கள் ரசிப்பதில்லை. அவர்களுக்கு நீல வானம் பளிச்சென்று தெரியும் சூரியன் கொளுத்தும் தினங்கள்தான் ராசி. எழுத்தாளரைச் சுற்றியிருக்கும் மேகமூட்டத்தை நீக்கி, அவரின் முழு வீரியத்தையும், சுட்டெரிக்கும் ஆளுமையையும் முழுமையாக கவனிக்கக் கிடைக்கும் நாள்கள் பாஸ்டன்வாசிகளுக்கு மிகக் குறைவு. கிடைத்த ஒளியை, நிலாவாக வாங்கி பிரதிபலிக்க முடிவது வேறு விஷயம்.

ஜெயமோகன் முத்துலிங்கததை சந்தித்தது இன்னொரு சுவாரசியமான கதை. அதை இன்னொரு நாள்தான் அசை போடவேண்டும்.

Categories: Authors Tags: