Home > Authors > கு.ஞானசம்பந்தன்

கு.ஞானசம்பந்தன்


‘எனக்குப் பிடிக்கும்’ என்ற பொதுத் தலைப்பில் வாரம்தோறும் ஒருவர் தங்களது விருப்பங்களைச் சொல்கிறார்கள்!

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தமிழ்நாட்டின் நகைச்சுவைத் தென்றல். எந்த மன்றங்களிலும் தன்னுடைய ஜோக்குகளால் ஜொலிப்பார். வகுப்பறையோ, தெருமுனையோ, பட்டிமன்றமோ… நகைச்சுவைச் சரவெடிகள். அனைவரையும் காந்தமாகக் கவர்வதும் அதுவே!

”கலர் கலரா பஸ் விடுறாங்க. நான் ஒரு புது பஸ்ல உட்கார்ந்துஇருந்தேன். ஒரு பெரியவர் அதுல ஏறினார். பார்க்க ஏழை மாதிரி தெரிந்தார். ‘முன்னால ஒரு பஸ் நிக்குது பாருங்க… அதுல போனீங்கன்னா, ரெண்டு ரூபாதான். இதுல எட்டு ரூபா. அதனால அதுல ஏறிக்கோங்க’ன்னு சொன்னேன். அவரு கண்டுக்கலை. ‘அதுல போனீங்கன்னா ஆறு ரூபா உங்களுக்கு மிச்சமாகுமே’ன்னேன். என்னை நின்னு முறைச்சுட்டு சொன்னார், ‘அதெல்லாம் டிக்கெட் எடுக்கிறவன் பிரச்னை’னு. என்னால சிரிப்பை அடக்க முடியலை.

இது மாதிரி நம் வாழ்க்கையோடு கலந்துபோன விஷயம்தான் நகைச்சுவைங்கிறது. மனசுல நினைச்சதை ஓப்பனா போட்டு உடைச்சா, அது சூப்பர் காமெடியா இருக்கும். இதை மேடைக்குக் கொண்டுவந்து அசத்துன வங்கள்ல முதல் மனுஷன் வாரியார் சுவாமிகள். எனக்கு அவர்தான் குரு. அவருக்கு ‘சொல்லின் செல்வர்’னு பட்டமே உண்டு. அவரு பேசிட்டு இருக்கும்போது ஒருத்தர் ஏதோ அவசரம்னு எழுந்து போனார். உடனே வாரியார், ‘நான் சொல்லிட்டு இருக்கும்போது சிலர் போவாங்கங் கிறதுக்காகத்தான் இந்தப் பட்டமா?’ன்னு யோசிக் காமக் கேட்டார். டைமிங் ஜோக்குகளை வாரி இறைக் கிறதுனால அவர் வாரியார்.

திருக்குறளார்முனுசாமி யும் திருச்சி ராதாகிருஷ்ணனும் மேடைகளை நகைச்சுவை மன்றங்களாக மாற்றி அமைச்சவங்க.

‘சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே
சொந்தமான கையிருப்பு – வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்தச் சிரிப்பு’ன்னு எழுதினார் மருதகாசி.

எத்தனையோ புகழையும் பட்டங்களையும் வாங்கிய கதாநாயகர்களுக்குக்கூட சிலை வெச்சு இந்த மக்கள் பெருமைப்படுத்தலை. ஆனா, அமெரிக்காவுல சார்லி சாப்ளினுக்கும் இங்க நம்ம கலைவாணருக்கும் சிலை இருக்குன்னா… அதுக்குக் காரணம், அவங்க நடிப்பல்ல… சிரிப்பு.

பதற்றமான வாழ்க்கை இது. அவசர வாழ்க்கை யால வந்த அவஸ்தையைக் குறைக்க சிரிச்சுப் பழகுங்க. சிரிக்கிற மாதிரி சொல்லிப் பழகுங்க. அப்ளிகேஷனை நிரப்பிட்டு இருந்தான் ஒரு பையன். ‘அப்பா, மதர் டங்க்னு போட்டிருக்கு. என்ன எழுதணும்?’னு கேட்டான். உடனே அவரு, ‘ரொம்ப நீளம்னு எழுது’ன்னார். அதாவது மனைவி ரொம்ப பேசுவாங்கிறதை அப்படிச் சொன்னார்.

இப்படித்தான், ஒரு வீட்ல பையனை அப்பா திட்டிட்டு இருக்கும்போது சென்சஸ் எடுக்க வந்துட்டாங்க. ‘பையன் பேரு என்னங்க?’ன்னு அவரு கேட்டதும் கோபத்துல இருந்த அப்பா, ‘அவன் பேரு சனியன்’னார். சமையல்கட்டுல இருந்து ஒரு சத்தம் வந்துச்சு, ‘உங்க பேரைக் கேட்கலைங்க… நம்ம பையன் பேரைக் கேட்கிறாரு’ன்னு. ‘நான்சென்ஸ்’னு திட்டிட்டுப் போயிட்டாரு அந்த சென்சஸ் அதிகாரி. இந்த மாதிரி வீட்டுக்குள் சிரிச்சுப் பழகினால்தான் வெளியில சிரிக்க முடியும்.

சின்ன வயசுல இருந்தே எல்லாத்தையும் கூர்ந்து கவனிப்பேன். சோழவந்தான் ஊர்க்காரன் நான். பட்டிக்காடும் இல்லாம பட்டண மும் இல்லாம நடுத்தரமான ஊரு அது. அதனாலதான் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை எங்க ஊர்ல வெச்சு எடுத்தாங்க.நாடகம், கோயில் திருவிழான்னு எங்க கூடுனாலும் போயிடுவேன். கிராமத்துப் பசங்க பார்லிமென்ட் மாதிரி கூடுற இடம் சைக்கிள் கத்துக்கிற மைதானம். ஆள் ஆளுக்கு வந்து கூடி நின்னு கும்மி அடிப்பாங்க. சைக்கிள்ல ஏத்திவிட்டுடுவாங்க. ஆனா, இறங்கத் தெரியாது. எங்கயாச்சும் எலெக்ட்ரிக் கம்பம் இருந்துச்சுன்னாதான் அதைப் பிடிச்சுட்டு நிக்க முடியும். அந்த மாதிரி கம்பம் இல்லைன்னா சுத்திட்டே இருக்க வேண்டியதுதான். அப்படி நிறுத்தத் தெரியாம சுத்தினவங்கதான் இப்ப மெகா சீரியல் டைரக்டரா இருக்காங்க.

கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் கலைவாணர், காளி என்.ரத்தினம், ஏ.கருணாநிதி, தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன்னு சிரிப்புக்காரங்க படமாத் தேடித் தேடிப் பார்த்தேன். நம்பியாரை வில்லனாத்தானே தெரியும். ஆனா, அவரு நகைச்சுவை மன்னன். அவரும் ஏ.கருணாநிதியும் ஒரு குகைக்குள்ள போவாங்க. ‘இந்த சிவப்புக் கம்பளத்தில் கால் படாமல் உள்ளே போனால், உள்ளே இருக்கும் சிம்மாசனத்தில் உட்காரலாம்’னு போட்டிருக்கும். பறந்துதான் போகணும். உடனே இவங்க என்ன பண்றதுன்னு யோசிப்பாங்க. கீழ குனிஞ்சு அந்தக் கம்பளத்தைச் சுருட்டி கக்கத்துல இடுக்கிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுடுவாங்க. தியேட்டரே குலுங்கும். இது மாதிரியான படமா பார்த்ததுனால எல்லாத்தையும் எகனமொகனையா யோசிக்க வெச்சது.

சிரிக்கவைக்கிறவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா, அவனை மக்களுக்குப் பிடிக்கிறதுக்கு முன்னால படுற அவமானங்கள், சிரமங்கள் அதிகம். எதுவுமே காயப்படாம வராது. ஆனா நகைச்சுவையாளன், காயங்களை அதிகமாக வாங்கி வாங்கித்தான் வளர்றான். பெரிய பில்டப்போட சொல்ற கதையை முடிக்கும்போது, யாருமே சிரிக்காமப் போயிடலாம். என்ன ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுனவங்களை நாம எதுவும் பண்ண முடியாது. ஒரு ஊர்ல பட்டிமன்றம் பேசப் போனேன். முன்னால பத்துப் பதினஞ்சு பொம்பளைங்க உட்கார்ந்துட்டு இருந்தாங்க. நான் பேசினதைப் பார்த்துச் சிரிச்சாங்க. உடனே ஒரு கிழவி எந்திருச்சு, ‘ஐயா பேசிட்டு இருக்காக… பொம்பளைக ஏன் வெட்கமில்லாமச் சிரிக்கீங்க?’ன்னு தடை போட்டிருச்சு. என் பேச்சுக்குத்தான் சிரிக்கிறாங்கன்னு சொல்லி, அந்தக் கிழவிக்குப் புரியவைக்க நான் பட்டபாடு பெரும்பாடு.

சில ஆளுங்க சிரிச்சான்னா நிறுத்த மாட்டான். ஜோக் சொல்லலேன்னாலும் சிரிப்பான். ஒரு தடவை நான் பேசிட்டு இருந்ததைக் கேட்ட ஒரு பையனுக்குச் சிரிச்சு சிரிச்சு ஜன்னி வந்திருச்சு. அவனைத் தூக்கிட்டுப் போனாங்க. அதுக்குப் பிறகு எனக்குப் பேச்சே ஓடலை. அரை மணி நேரம் கழிச்சு அவனே வந்து உட்கார்ந்து, ‘பேசுங்க சார்’னப்பதான் மறுபடி ஆரம்பிச்சேன்.

வீட்டை வெச்சு எந்த ஜோக் சொன்னாலும் ஜனங்களுக்குப் பிடிக்கும். புருஷன்-பொண்டாட்டி சண்டை நடக்காத வீடு உண்டா? ஆனா, ஒரு வீட்டுல மட்டும் எப்பப் பார்த்தாலும் கணவன்-மனைவி சிரிப்புச் சத்தம்தான் கேட்டதாம். அந்தத் தெருவே பொறாமைப்பட்டு போய் அவங்ககிட்ட கேட்டப்போ… அப்ப புருஷன், ‘எனக்குக் கோபம் வந்தததும் அவ மேல ஒரு டப்பாவை வீசுவேன். மண்டையில விழுந்துச்சுன்னா நான் சிரிப்பேன். குறி தவறிடுச்சுன்னா அவ சிரிப்பா. அதுனாலதான் சிரிப்புச் சத்தம் எப்பவும் கேட்குது’ன்னானாம்.

ஒரு வீட்டுல அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை. ‘போடா நீதான் முட்டாள்!’, ‘போடி நீதான் முட்டாள்!’னு மாறி மாறித் திட்டியிருக்காங்க. பேப்பர் படிச்சுட்டு இருந்த அப்பா, ‘நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துடாதீங்க’ன்னாராம். மக்களுக்குப் புரியும் வார்த்தையில சொன்னா மட்டும்தான் ஜோக் ஜெயிக்கும். இல்லேன்னா… சொன்னதும் செத்துப்போகும்.

ஒரு கிராமத்தில் பட்டிமன்றம் போனோம். இரண்டு அணியினருக்கும் பெஞ்சு போட்டு இருந்தாங்க. நடுவரான எனக்குப் போட அந்த ஊருல யாரு வீட்டுலயும் நாற்காலி இல்ல. என்ன பண்றதுன்னு ரொம்ப யோசிச்சு… ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டாங்க. பார்த்ததுமே தெரிஞ்சது… சுடுகாட்டுக்குப் பொணம் தூக்கிட் டுப் போற நாற்காலி அதுன்னு. எத்தனை பேரைப் பார்த்ததோன்னு பயந்து நடுங்கிட்டேன். ரெண்டு பக்கமும் கை வெச்சு ஜம்முனு உட்காரவே தோணல. விறைச்சுப் போயி உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு ஒருத்தர் ரெண்டு பத்தியைப் பொறுத்தி, வாழைப்பழத்துல குத்தி எடுத்துட்டு வந்து என் முன்னாடி வெச்சார். பிணக்கோலம் பொருத்தமா தான் இருக்குன்னு நெனச்சேன். நாற்காலியை மறந்துட்டு ஜோக் சொல்வேன். அடுத்த நிமிஷமே அது ஞாபகம் வந்திரும். ஆனாலும் பட்டி மன்றம் சுவையாத்தான் போச்சு. ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு ஆள் ஓடி வந்து, ‘அப்பத்தா செத்துப்போயிட்டா!’ன்னு என் சேரைப் புடுங்கின காட்சியைத்தான் இன்னிக்கும் மறக்க முடியலை. விட்டுதுடா சனின்னு நின்னுட்டே தீர்ப்புச் சொல்லிட்டு, அந்த ஊரைத் திரும்பிப் பார்க்காம வந்துட்டேன்.

தனக்கு வந்த கஷ்டத்தை அடுத்தவங்ககிட்ட சொன்னா, பாதியாக் குறையும். அது மாதிரி நகைச்சுவையை இன்னொருத் தரிடம் சொன்னா, அது ரெண்டு மடங்காக் கூடும். அமங்கலமா பேசக் கூடாது. ஆபாசம் கூடாது. யாரையும் நோகடிக்கக் கூடாது… இந்த மூணுதான் நகைச்சுவைக்கு உள்ள கட்டுப்பாடு. பத்துப் பேர் இருக்கிற இடத்துல ஒன்பது பேரு சிரிச்சு, ஒருத்தன் மனம் புண்பட்டதுன்னா அது நல்ல நகைச்சுவை இல்ல. இந்த நாகரிகத்தைத்தான் நான் இத்தனை வருஷமும் ஒழுங்காக் கடைப் பிடிச்சுட்டு வர்றேன். எத்தனை பேரு காப்பி அடிச்சாலும், புதுசு புதுசா ஊறிக்கிட்டே இருக்கு. அது வற்றாத ஜீவநதி!”

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: