Home > Authors > Thenkachi Ko Swaminathan: Interview: Iniya Uthayam

Thenkachi Ko Swaminathan: Interview: Iniya Uthayam


இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன்படுத்துங்கள்!
தென்கச்சியார் நேர்காணல்

தென்கச்சியார் என்று வாசகர் களாலும், வானொலி நேயர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கை யைத் தொடங்கி, பின்னர் 24 ஆண்டுகள் சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தென்கச்சியார் தற்போது வசிப்பது சென்னை மடிப்பாக்கத்தில்.

விவசாய நிகழ்ச்சிகளை மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி யில், கொச்சை நீக்கி இவர் வழங்கி யதால், விவசாய நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி அடைந்த தோடு, கி. ராஜநாராயணனால் “இதுவே மக்கள் தமிழ்’ என்று பாராட்டப் பெற்று, இன்று அரசு வானொலி, தனியார் பண்பலை வானொலி என அனைத்து வானொலி நிலையங்களுக்கும் இலக்கணமாகவும் அமைந்து விட்டது. விவசாய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், சமூக வாழ்வில் ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றைத் தனது வாழ்க்கை முறையாகக் கடைப் பிடித்துவரும் தென்கச்சியார், இத்தகைய நற்பண்புகளை வானொலி மூலம் மனித மனங்களில் நடவு செய்ய விரும்பியவர். இதனால் அறிவுரையாக வலியுறுத்தித் திணிக்காமல், எளிய குட்டிக்கதைகள் மூலம், சக மனிதனின் தோள்மீது கைபோட்டுப் பேசும் உரையாடல் தன்மையைத் துணையாக வைத்துக் கொண்டு இவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சிதான் “இன்று ஒரு தகவல்’.

உலக வானொலி வரலாற்றில் மாபெரும் சாதனையாக மட்டுமின்றி, முன்னுதாரணமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர். பிறகு தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி.

இவர் 17 வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் “குயில்’ இதழில் (14. 07. 1959) வெளிவந்தது. அப்போது தொடங்கிய எழுத்துப் பயணம் இன்றும் தொடர்கிறது இவரிடம். தமிழ் குட்டிக்கதை இலக்கியத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கும் இவரை “இனிய உதயம்’ இதழுக்காகச் சந்தித்தோம்…

உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக் கும் “தென்கச்சி’யின் தாத்பரியம் என்ன? உங்கள் சொந்த ஊர், பால்யம், நீங்கள் சென்னைக்கு வந்த காலம், அன்றைய சென்னையின் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

“”தென்கச்சி என்பது இன் றைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் இருக் கிற சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். அது தான் காலப்போக்கில் தென்கச்சி ஆயிற்று. காஞ்சி என்பது கச்சி என்று ஆகும். “கச்சி ஏகம்பனே’ என்பது காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரரைக் குறிக்கும்.

எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். காஞ்சியில் பல்லவ மன்னர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள் கொள்ளிடக்கரை யில் குடியேறி தென்காஞ்சிபுரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். அதுதான் இன்றைய தென்கச்சி.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கத்தி, கேடயங்கள் இப்போதும் எங்களிடம் உண்டு. ஆயுத பூஜை சமயத்தில் அதை யெல்லாம் எடுத்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆயுதங்களைத் தொட்டு வணங்கச் சொல்வார்கள். அப்படியே செய்திருக்கி றேன்.

இப்போதெல்லாம் அந்தக் கத்திகளை எடுத்துக் கொண்டு யாரும் சண்டைக்குப் போவதில்லை. கொள்ளிடத்தில் மீன் வெட்டுவதற்குப் போவ துண்டு. வலை இல்லாமல் மீன் பிடிக்கிற கலையில் நாங்கள் வல்லவர்கள்.

இரவு பத்துமணிக்கு மேல் புறப்படுவார்கள். ஒருவர் கையில் கத்தி இருக்கும். ஒரு சிறுவன் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு இருக்கும். ஆற்றில் இறங்கி நடக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எதிரே வருகிற மீன்கள் கண்கள் பூத்துப் போய் அப்படியே நின்றுவிடும். வாள் வைத்திருப்பவர் அதை வெட்டுவார். கூடை வைத்திருப் பவர் அதன்மேல் கவிழ்ப்பார். மேல்புறம் இருக்கிற வளையம் வழியாக கையை உள்ளேவிட்டு மீன் துண்டுகளை வெளியே எடுப்பார். தன் தோளில் இருக்கிற சாக்குப் பையில் போட்டுக் கொள்வார். அவ்வளவுதான்.

இதில் வாள் வைத்திருப்பவர் மிகவும் புத்திசாலியாக இருப் பார். குறிபார்த்து வெட்ட வேண்டியவர் அவர். கூடை வைத்திருப்பவர் அவ்வளவு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. துண்டு மீனை எடுத்துத் தோளில் கிடக் கிற சாக்கில் போடத் தெரிந்தால் போதும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தலையில் சுமக்கிறவர் சுத்த மக்காக இருக்க வேண்டும். அவர் சுயமாகச் சிந்திக்கக்கூடாது. மற்றவர்கள் பின்னாடியே போகவேண்டும். அவ்வளவுதான். இதில் எனக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமக்கிற வேலைதான் கொடுப்பார்கள். அதில் புரமோ ஷன் கிடைப்பதற்குள் நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டேன். இவையெல்லாம் பழைய ஞாபகங்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமி நாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரை யும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்ப தாகக் குறிப்பிடுவார். என்னோடு தென்கச்சி ஒட்டிக் கொண்ட கதை இதுதான்.

ஆரம்பப்பள்ளி தென்கச்சியில். அப்புறம் ஆடுதுறை குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்புகள். பிறகு கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப்பள்ளி யில் 9, 10, 11-ஆம் வகுப்புகள். அதன் பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அப்புறம் கோவை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி. (விவசாயம்) பட்டப் படிப்பு.

1965-ல் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக்கான உத்தரவு வந்து விட்டது. பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங் களில் நான் பெயில்! வேலைக்கு லீவு போட்டுவிட்டு கோவைக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி “பாஸ்’ ஆனேன்.

பாளையங்கோட்டையில் ஒருவருடம் வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனிய னுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஒரு வருடம். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்பு றம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி பஞ்சா யத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஒரு வருடம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச் சிக்கு வந்துவிட்டேன். அங்கே பத்து வருடம் சொந்த விவசாயம் பண்ணினேன். டிராக்டர் எல்லாம் நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்றேன். வெற்றி கிடைத்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். ஏழு வருடங் கள் அப்படியே நீடித்தேன். அதன்பிறகுதான் வானொலிக்கு வந்தேன்.”

வானொலியோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

“”ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் தற்செயலாக செய்தித் தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி விவசாய ஒலிபரப் புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 ணீ வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். விண்ணப் பித்தேன். அதிகச் சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலையில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-லிருந்து 1984 முடிய திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. அப்புறம் ஒரு பதவி உயர்வு. ஆசிரியர் என்று ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வானொலியில் 2-1-1985 அன்று சேர்ந்தேன். அப்புறம் ஒரு பதவி உயர்வு- உதவி நிலைய இயக்குனர். 2002, ஜூன்- 30 அன்று பணி நிறைவு.”

“இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை எப்போது தொடங்கினீர்கள்? அந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று ஆரம்பத் திலேயே எதிர்பார்த்தீர்களா?

“”சென்னை வானொலியில் “இன்று ஒரு தகவல்’ என்கிற நிகழ்ச்சி 1988-ஆம் வருடம், ஜூலை மாதம், முதல் தேதி தொடங்கியது. அப்போது இயக் குனராக இருந்த கோ. செல்வம் அவர்கள் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, “நாளைமுதல் இன்று ஒரு தகவல் என்கிற நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். அதில் மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்.

“சார்… நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்றேன். “நீங்க ஒரு மாசம் இதை வழங்கி னால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்ப டைக்கலாம்!’ என்றார். “அப்படியானால் சரி!’ என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குனருக்கும் அதை வேறு யாருக்கும் மாற்ற விருப்பமில்லை. பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து அதை நானே வழங்கும்படி ஆயிற்று. பல தரப் பினரும் விரும்பிக் கேட்டார்கள். அது நான் எதிர்பாராத ஒன்று தான்.”

ஒரு நடமாடும் பேரகராதி யைப் போல நீங்கள் தரும் விஷயங்கள், குட்டிக் கதைகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கும் ரகசியம் என்ன? உங்கள் வாசிப்புத் தளம், கடைசியாகப் படித்த புத்தகம் பற்றி…

“”இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் எதுவும் என் சொந்த சிந்தனை இல்லை. மற்றவர்களின் சிந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்தி, வேடிக்கை சேர்த்து சொல்கிறேன்; அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதுபோல குட்டிக்கதைகள் என்னிடம் எதுவும் கொட்டிக் கிடக்க வில்லை. உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அதை எடுத்து ஊடகங்கள் வழியே மறுபடியும் உலகத்துக்கு வழங்கு கிறேன்; அவ்வளவுதான். என்னுடைய வாசிப்புத் தளம் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்தவை துப்பறியும் கதைகள் தாம்! சின்ன வயதிலிருந்து இன்றுவரை அவற்றைத்தான் விரும்பிப் படிக்கிறேன்.

மற்றபடி ஊடகத்தேவை- மக்கள் சேவை இவற்றிற்காக ஆன்மிகம், இலக்கியம், விஞ்ஞா னம், தத்துவம் இப்படி எல்லாவற் றையும் தேவைக்கு ஏற்ப படிப்ப துண்டு. கடைசியாக படித்த புத்தகம் “ஆகாய ஆசை கள்.’ ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லிசேஸ். ‘வர்ன்’ஸ்ங் ஞ்ர்ற் ண்ற் ஸ்ரீர்ம்ண்ய்ஞ்’ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்.”

ஒரு சின்னஞ்சிறு குட்டிக்கதையை ஒரு சிறுகதைபோல விரித்துச் சொன்னா லும், உங்களது ரசிகர்கள் பொறுமை யாக ரசிக்கிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியா? உங்களது வசீகரமான கனிவான குரலா?

“”பொதுவாக கதை கேட்கிற ஆர்வம் எல்லாருக்குமே உண்டு. ஆகவே எதைச் சொன்னாலும் அதை ஒரு கதை மாதிரி சொன் னால் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். சிறிய கதை யைப் பெரிய கதை மாதிரி சொன்னாலும் பொறுமையாகக் கேட்பதற்குக் காரணம், கடைசி யில் ஒரு நகைச்சுவை வரும் என் கிற எதிர்பார்ப்பாக இருக்கலாம். மற்றபடி குரலில் வசீகரம்- கனிவு என்பதெல்லாம் கேட்கிறவர் களின் மனதைப் பொறுத்தது. அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் விரும்புகிற பொருள் அழகாய் இருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்.

கேட்கிறவர்கள் அல்லது வாசிக்கிறவர்களை ஒன்றை எதிர்பார்க்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக ஒன்றைச் சொல்கிறபோது சுவாரசியம் வந்துவிடுகிறது. உதாரணத் துக்கு ஒன்றைச் சொல்ல லாம். “விபத்து’ என்ற தலைப்பைக் கொடுத்து பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதச் சொன் னார் வகுப்பு ஆசிரியர்.

ஒரு மாணவன் எழுதிய கட்டுரை இது:

“ஒரு முப்பது மாடிக் கட்டிடத் தின் மேல் மாடியில் வெளிப்புறமாக நின்றுகொண்டு ஒருவன் வெள்ளையடித்துக் கொண்டிருந் தான். துரதிருஷ்டவசமாக அவன் கால் நழுவிக் கீழே விழுந் தான். அதிர்ஷ்டவசமாக அப் போது தெருவில் ஒரு வைக்கோல் லாரி வந்து கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வைக்கோலின் நடுவில் ஒரு கடப்பாறை செருகப்பட் டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் அந்தக் கடப்பாறையில் விழவில்லை. துரதிருஷ்டவசமாக அவன் அந்த வைக்கோலிலும் விழாமல், தெருவில் விழுந்து செத்துப் போனான்.’

இதுதான் சுவாரசியம் என்பது.”

குழந்தைகளுக்கு வாய்வழி கதை சொல்லும் மரபை நாம் தொலைத்து விட்டதால் இன்றைய தலைமுறை எதை யேனும் இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

“”அப்படி நினைக்கத் தேவையில்லை. ஊடகங்கள் இல்லாத காலத்தில் வாயின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது தாத்தா, பாட்டி களுக்குப் பதிலாக ஊடகங்கள் கதை சொல்லுகின்றன. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். காலம் தோறும் சிலவற்றை இழப்போம். சிலவற்றைப் பெறுவோம். இது உலக மரபு. இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை.”

வானொலி ஊடகம் நம்மைப் போன்ற ஒரு வளரும் சமுதாயத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

“”உதாரணத்துக்கு ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

“ஆமாங்க.’

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’

“சொல்லுங்க டாக்டர்.’

“கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

“எங்கே டாக்டர்?’

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

“பெரிய விபத்தா டாக்டர்?’

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.’

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல் லாம் உடனடியா ரத்தம் செலுத் தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’

“சரி.’

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச் சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என் னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார் கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல் கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

“ஹலோ!’

“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

“என்ன ஆச்சு டாக்டர்?’

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’ மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கி றோம்.’

மறுநாள் மருத்துவமனைக் குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்க ளைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

ஹாரிபாட்டர், ஐரோப்பிய ஆங்கில காமிக்ஸ் கதைகள் என்று நம் கலாச்சாரத்தோடு ஒட்டாத கதைகளை இன்றைய வளரும் தலைமுறை வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டர் போல தமிழ்க் கதை வழி மரபுகள், நாட்டார் வழக் காறுகளைக் கதைக்கூறுகளா கவும் நம்முடைய மரபார்ந்த வரலாற்றிலிருந்து பாத்திரங் களையும் அமைத்து கதை யெழுதும் ஆற்றல் நம்மில் ஒருவருக்குக்கூட இல்லையா? அல்லது முடியாதா?

“”எது நல்லது, எது கெட்டது என்பதைக் காலம்தான் முடிவு செய் கிறது. எனவே மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்று மில்லை. ஊடகங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால் உலகக் கலாச்சாரம் என்ற ஒன்றே விரைவில் உருவாகிவிடும் என்று தோன்றுகிறது. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் பிடிக் காதவர்கள் “காலம் கெட்டுப் போச்சு’ என்று சொல்லிக் கவலைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.”

இன்றைய யுவன்- யுவதி களுக்கு முதலில் நட்பு பிறகு காதல் என்ற கண்ணோட் டமும், வாழ்க்கை முறையும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் காதலின் உண்மையான ஜீவனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே? குடும்ப நல நீதிமன்றத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த தமிழன் காலப்போக்கில் குடும்ப அமைப்பை இழந்து விடுவான் என்று நம்புகிறீர்களா?

“”முந்தைய கேள்விக் கான பதிலை மறுபடி யும் ஒருமுறை படித் துக் கொள்ளுங்கள்.

“இனவிருத்திக்காக இயற்கை செய்கிற தூண்டுதல் உணர்வின் தொடக்கம்தான் காதல் என்பது.’

காதலைவிட்டு விலகி நின்று பார்த்தால் தான் இந்த உண்மை புரியும். காதலில் தோற்றுப்போனவர்களைத்தான் தெய்வீகக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

நேற்றைய மனிதர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படி வாழ்ந்தார்கள். இன்றைய மனிதர்கள் எப்படி விரும்புகிறார் களோ அப்படி வாழ்கிறார்கள். நாளைய மனிதர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வாழ்வார்கள். உங்கள் ஆட்டத்தை நீங்கள் சரியாக ஆடி முடியுங்கள்; அது போதும். அடுத்த காட்சி யைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

உங்கள் பயண அனுபவங் களிலிருந்து “இனிய உதயம்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

“”பணிநிறைவுக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டே வாங்கினேன். சிங்கப்பூர், லண்டன், குவைத், தாய்லாந்து, இலங்கை இவை யெல்லாம் நண்பர்களுடன் போய் நான் பார்த்துவிட்டு வந்த நாடுகள். அந்த மானுக்கும் ஒரு முறை போய்விட்டு வந்தேன். சும்மா போய் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு சில கூட்டங் களில் பேசினேன். அவ்வளவு தான். சுவையான செய்திகள் என்று ஏதும் இல்லை.

என்னுடைய நீண்ட கால நண்பர் ச.ஆ. கேசவன் (இனாம் மணியாச்சி) அமெரிக்கா போய் விட்டு வந்தபிறகு சொன்ன வார்த்தைகள் சுவையானவை. “எப்படி இருக்கிறது அமெரிக்கா?’ என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

“அமெரிக்கா பணக்காரர் களின் நரகம். இந்தியா ஏழைகளின் சொர்க்கம்.’ ”

தானத்தில் சிறந்ததாக உங்கள் பார்வையில் உயர்ந்து நிற்பது?

“”ஆந்திராவில் புயல்… அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டி னார்கள்.

சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், “என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.

“ஆந்திராவில் வீடிழந்தவர் களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்’ என்று சொன்னார்கள். அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். “கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வ ளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.”

இரண்டாயிரமாண்டு தமிழர் இலக்கியத்தில் உங்கள் இதயம் நிறைந்த படைப்பு?

“”இதற்குப் பதில் சொல்கிற அளவுக்கு நான் நல்ல படைப்புகள் அனைத் தையும் படித்ததில்லை. இரண்டாயிரமாண்டு படைப்பு என்பதைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதயங்களில் நிறைந்து நின்று கொண்டிருக்கிற ஒரு படைப்பு திருக்குறள்.”

“காமத்தைக் கைவிட காமத் தில் மூழ்கு’ என்ற ஓஷோ- “அறிந்த தினின்றும் விடுதலை பெறு’ என்ற அறிஞர் கிருஷ்ண மூர்த்தி- இவர்கள் இருவரில் உங்கள் சாய்ஸ்?

“”காமத்தில் மூழ்கினால் அதை அறிந்துகொள்ளலாம். அறிந்து கொண்டபின் அது தேவை இல்லை; விட்டுவிடலாம். விடுதலை பெறலாம். இருவர் கருத்திலும் முரண்பாடு தெரியவில்லையே?

விடுதலை பெற்ற குரு ஒருவரி டம் சீடன் கேட்கிறான்: உங்களு டைய தெளிவான அமைதி நிலை யின் ரகசியம் என்ன?

குரு சொல்கிறார்: தவிர்க்க முடியாததோடு மனசார ஒத்துப் போதல்தான்!”

வாழ்வின் தலைசிறந்த தத்து வம் என்று நீங்கள் நினைப்பது?

“” ”இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!’ சீன ஞானி லாலோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை. “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!”

நம்மிடமிருந்து சென்ற சிலம்பம், களரி போன்றவை கராத்தே, குங்ஃபூ என்று நமக்கே திரும்பி வருகிறது. யோகக்கலையும் தியானமும் பணக்காரர்களுக்கு மட்டுமே வசமாகும் விலை உயர்ந்த விஷயங்கள் ஆகிவிட்டன. தமிழன் தனது அடையாளங் களை, மொழி உட்பட இழந்து வருவது பற்றி?

“”இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராவும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்கள் கையில் “தமிழ்’ பத்திர மாக இருக்கிறது.”

ஈ.வே.ரா. பெரியார் உலகம் முழுவதும் சென்ற டைந்திருக்க வேண்டிய தமிழர்களின் புரட்சிப் பெட்டகம். அவரது கருத்துகளை இத்தனை காலமாக முடக்கிவிட் டோம். இப்போது அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது பற்றி…

“”பெரியார் நாட்டுடைமை ஆகி விட்டார். பெரியாரின் கொள்கை கள் நாட்டுடைமை ஆகிவிட்டன. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆகவேண்டும். அதில் தவறில்லை. அவருடைய கருத்துகள் உருமாறி விடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுகி றார்கள். இரு தரப்புமே பெரியா ரின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள்தாம். இதில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.”

சிரிக்கச் சிரிக்க கதை சொல் கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?

“”நல்ல இதயமுள்ள வாசகர் களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

“ஈழத்தமிழர்கள்!”

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

  1. saminathan
    November 12, 2009 at 1:14 pm

    simple with great thinking.He made every person to in a simple way and understand humans and their needs.I and my family are consider him to b a great thinker.Moreover he gave a lot example from OSHO & osho s thinking has been popularised at a time when osho was misunderstood by the majority persons.

  2. Pazhani
    December 29, 2011 at 6:15 pm

    Truly Superrrrr………

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: