Home > Uncategorized > Icarus Prakash Notes from RKK – Rayar Kaapi Klub

Icarus Prakash Notes from RKK – Rayar Kaapi Klub


முதல் கதை (1) | (2)


Entrance with a Bang – சுய அறிமுகம்

ராயர்களே வணக்கமுங்க.இங்கன சேந்து கொஞ்ச நாள்தா ஆனபடியால, நேத்தைக்குத்தான் உங்க ‘சின்ன வாத்தியார்’ தேதிய மறந்துபுட்டு எழுதுன குறிப்பையெல்லாம் படிச்சேனுங்க.ரொம்ப சந்தோசங்க.எனக்கு உங்க ஆள்ட்ட பிடிச்ச விசயமே அவுரோட நடைதானுங்க.நடை வசீகரம்ங்றதுக்கு முழு அர்த்தத்தையும் அவர்ட்ட பார்க்கலாங்க. ஆனா நா சொல்ல வந்த விசயமே வேறங்க. அதுக்கு இந்த prologue போதுன்னு நினைக்கிறேங்க.

அதுக்கு முன்னாடி என்னோட ஒரு வாக்குமூலத்தை கொஞ்சம் கேளுங்க. நா ரொம்ப சாதாரண, நீங்க எங்கெயும் கண்டுபிடிச்சுறக் கூடிய ஒரு economy class
வாசகன். அஞ்சாம்ப்பு படிக்கறச்சே அம்புலிமாமால தொடங்கி அப்புறமா வெகுசன பத்திரிகைங்க மூலமா நல்ல எழுத்தாளர்களோட பரிச்சயம்னு, வாசக வாழ்க்கைய தொடங்கினவன். எங்க ‘பெரிய வாத்தியார்’ காமிச்சு குடுத்த பல பொஸ்தவங்கள படிச்சிருக்கேங்க. உங்க ஆளையும் படிக்க (பிடிக்க) ஆரம்ப்ச்சது அப்பதான்.

தேதியில்லா டைரிய படிக்கறச்சே எனக்கு தோணினது… அத ஏமாத்தமுன்னு சொல்ல முடியாது. வேற ஏதோ ஒண்ணு. அத விட்ருவம். எழுத்துக்கு நோக்கம் என்னவாயிருக்கணுமின்னு நீங்க நெனைக்கிறீங்க? நடை முக்கியந்தான். ஆனா உள்ளடக்க்கம் அப்டின்னு ஒரு மேட்டர் இருக்கு இல்லீங்களா? இங்கதா கொஞ்சம் உதைக்குது. தகவல் மேல தகவல் குடுத்து, ஒண்ணோடொண்ணு overlap ஆகற அளவு வேகம், எதிர்பார்க்காத உவமை, detailing ( இந்த டெக்னிக் பேர் cataloguing அப்டின்னு எங்க ‘பெரிய வாத்தியார்’ சொல்லுவாரு) இப்படியாப்பட்ட ஸ்டைலை வெச்சுக்கிட்டு இருக்கிறவர், என்னை மாதிரியான
பாமரர்களும் identify பண்ணக்கூடிய விசயங்கள எழுதலாம் இல்லீங்களா?

உதாரணமா ‘ அப்பத்தா பிசுநாரி ‘ அல்லது அது மாதிரி ஒர் பேர் உள்ள ஒரு சப்பானிய கவிஞர் பத்தின சேதிய சொல்லலாம். ( இது மாதிரி எப்படி சொல்லப்போச்சு என்று ஆக்ரோஷமாக கீபோர்டை நோக்கி பாயறதுக்கு ரெடியா நிக்கிற ராயர்களே , நா சொல்றதுல துளிக்கூட உண்மையில்லயான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க). அய்யா நா குத்தஞ்சொல்றேன்னு நெனைக்காதீங்க. இந்த மாதிரியான ‘Random Thinking’ பல பேர் பலவிதமா பண்ணியிருக்காங்க. ‘பெரிய வாத்தியார், குஷ்வந்த் சிங், ·பர்சானா வெர்சே (Mid-Day), அஞ்சு அழகான பொண்ணுகளை பெத்த என் அத்தை ஷோபா டே ( அட ! சும்மா ஒரு பேச்சுக்குத்தாங்க) இப்படி பல பேர். இவங்கள்ளே இருந்து கொஞ்சம் தனிச்சு தெரிஞ்சா நல்லாயிருக்கும் இல்லீங்களா?

மேலும் இன்னும் பல விசயங்கள சொல்லணுமின்னு ஆசப்படறேங்க.

(இப்பமே பல கண்டன குரலுங்க காதுல கேக்குது. நா முழுசா சொல்லி முடிச்சப்புறம் , எல்லா விதமான retort டையும் சந்திக்க தயாரா இருக்கேங்க)

– ஜெ.பி


அறிவுஜீவிகளும் அற்பாயுளுக்கும் … (ஆதவன்)

அறிவுஜீவிகளுக்கும் , அற்பாயுளுக்கும் எதோ தொடர்பு இருந்து வந்திருக்கிறது.
Probably, கள்ளத்தொடர்பு. அறிவு ஜீவிகள் அனைவரும் அகாலத்தில் மாண்டுவிடுகிறார்கள் என்றோ, அல்லது அகால மரணம் அடைகிறவர்கள் அனைவரும் அறிவுஜீவிகள் என்றோ இதற்குப் பொருளில்லை. இன்னும் சில காலம் இவர்கள் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணும் சிலரைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பே இது. ஆதவன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆத்மாநாம், ஏ.கே.ராமானுஜம், க.மேதை ராமானுஜம், சங்கர் நாக், என்கிற ஒரு சிலரைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம்.

ஆதவன் :

பொதுவாக படைப்பிலக்கியம் சார்ந்த விஷயங்களில், வெகுஜன ரசனைக்கும் , என் ரசனைக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைந்ததாகவே இருக்கும். நான் வாசிக்கும் எழுத்தாளர்களும், படைப்புக்களும், பெரும்பான்மையாக சிற்றிதழ்களிலும், பெரும் பத்திரிகைகளிலும் பிரலாபிக்கப்பட்டவையாகவே இருக்கும். ஆதவன் தவிர்த்து. இதுவரை நான் தேடிப்பார்த்ததில், ‘நான் ஆதவனை விரும்பி வாசிப்பேன் என்று என்று சொன்னவரைக் கண்டதில்லை. ஒருமுறை தொலைக்காட்சியில், எழுத்தாளர் ம.வே.சிவகுமார் ( ‘வேடந்தாங்கல்’ ஞாபகம் வருகிறதா?) ஆதவனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி, அவர் புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கங்களை அருமையாக விவரித்தார்.

‘வா… வாத்யாரே…! நீயும் நம்ம ஜாதிதானா… என்று கேட்டு, அவருடன் மானசீகமாக கைகுலுக்கிக் கொண்டேன். இது தவிர ‘அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்பில் ஆதவனின் காகித மலர்கள் பற்றிய ஒரு மதிப்புரையும், திருப்பூர் கிருஷ்ணன், தமிழ்சி·பியில் ஆதவன் பற்ற எழுதிய ப்ரொ·பைல் மாதிரியான கட்டுரை ஒன்றும் கிடைக்கிறது. பெரிய வாத்தியார் கூட, இவரைப் பற்றியோ, அல்லது இவரது கதை, நாவல் குறித்தோ எழுதியதாகத் தெரியவில்லை.

திருப்பூர் கிருஷ்ணன், பாரா பாலியல் நாவல் என்று வருணிக்கும் ‘காகித மலர்களை’ நான் வாசித்தது, 13 ஆண்டுகளுக்கு முன்னால். பாரா பாலியல் என்றால் என்ன என்று திரு.கிருஷ்ணனுக்கு தனியாக மெயில் தட்டி விசாரிக்க வேண்டும்.

தில்லியில் வசிக்கும் ஒரு உயர்மட்ட beauracrat குடும்பம், அவர்களுடன் தொடர்புள்ள ஒரு நடுத்தரக் குடும்பம், ஆகியவற்றைச் சுற்றி பின்னப்பட்டக் கதை. மிகக் குறைவான உரையாடல்களைக் கொண்டு, நனவோடை உத்தியில் , ஒரு சில குடும்பத்தின் உறவுச் சிக்கல்கள், ஏற்றதாழ்வுகளை சொன்ன நாவல் இது.

இது தீபத்தில் தொடராக வந்தது. நாவலின் முடிவில் எழுத்தாளர் ஆதவனும், வாசகர் ஆதவனும் சந்தித்து உரையாடி, கதையின் பல்வேறு பாத்திரங்களைப் பற்றி அலசுகின்றனர். இந்நாவலில் நம்மைக் கவருவது, அவருடைய சரளமான நடையும் , அவரது அறிவின் பரப்பளவும், உள்மன அலசல்களை நுணுக்கமாக விவரிக்கும் பாங்கும்தான். கதையில் மெலிதாக இழையோடும் taboo சமாசாரங்கள், மேல்மட்டத்தில் subtle ஆக இருக்கும் சோரம் போதல் போன்றவை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டும்தான் என, சமீபத்தில் அதை திரும்ப வாசிக்கும் வரை எண்ணியிருந்தேன். இவரது கதாநாயகர்கள் அனைவரும், ஒரு விதமான கோழைகள் போலவும், தாழ்வுமனப்பான்மை உடையவருமாகவே பெரும்பாலும் காட்சியளிக்கின்றனர். (சில எ.கா: என் பெயர் ராமசேஷன் – நாவல், ஒலி – சிறுகதை, புதுமைப்பித்தனின் துரோகம்- சிறுகதை, etc).

சிறுகதைகளில் ‘புதுமைப்பித்தனின் துரோகம்’ சொல்லக்கூடிய ஒரு சிறுகதை. எழுத்தாளக் கதாநாயகனும், அவரது பணக்கார, இலக்கிய ஆர்வலன் போல பாசாங்கு செய்யும் நண்பனும் சந்தித்து பேசுகின்றனர். நண்பனுக்குக் வேண்டியது, தன்னுடைய இலக்கிய அரிப்பை சொறிந்து கொள்ளுவதற்கு எழுத்தாளர் .

அவன் பேரில் பெரிதாக மதிப்பு ஏதுமில்லாவிட்டாலும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் டிபனுக்காக அதை பொறுத்துக்கொண்டு, அவனுடைய பிதற்றல்களை கேட்கிறார் எழுத்தாளர். புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றி விவாதம் நடக்கிறது. நண்பன் , புதுமைப்பித்தனின் பாத்திரங்களையெல்லாம் அலசி, அவருடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, அவருடைய நிறைவற்ற திருமண உறவு காரணமாக இருக்கலாம் என்று சொல்வதை ஒரு மசால் தோசையின் பொருட்டு கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. தன்னிரக்கம் மேலிட்டு, வீட்டிற்கு வந்து மனைவியை வைகிறான். புதுமைப்பித்தன் மேல் அவருக்கு கோபம் வருகிறது.

” பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன ஸ்டைர் வேண்டிக்கிடக்கிறது? ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துகாக, தன் வர்க்கத்தினரைக் கோமாளியாக்குதல்….. துரோகி! உனக்கு வேண்டியதுதான்.

ஸோ·பிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டிதானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லை·பைக் கூட இவர்கள் விட்டுவைக்கப் போவதில்லை……”

என்று எழுத்தாளர் நினைத்துக் கொள்வதாக கதை முடிகிறது.

அவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாம்.

அன்பன்
ஜெ.பி,சென்னை

பி.கு. அடுத்த வாரம் ஏ.கே.ராமானுஜம்.



ஜெ.ஜெ. சில குறிப்புகள்

ஜெ.ஜெ. சில குறிப்புகள் பற்றிய ஜெ.பி யின் சில குறிப்புகள்:

இதை நூல் அறிமுகம் என்றோ, விமரிசனம் என்றோ கருத வேண்டாம். ஜெ.ஜெ.வை வாசித்துமுடித்த பின் எழுந்த எண்ண அலைகளின் பதிவு மட்டுமே. ஜெ.ஜெ வை வாங்கியது மூன்று ஆண்டுகளுக்கு முன் என்றாலும், அதை பற்றிய மதிப்புரைகள், விமர்சனங்கள் பலவற்றை படித்து, சற்று பீதி ஏற்பட்டு ,அதன் காரணமாகவே, அதை வாசிப்பதை ஒத்திவைத்திருந்தேன். சுமார் 180 பக்கம் கொண்ட அந்நாவலை( அதை நாவல் என்று ஒத்துக்கொண்டால்) சற்று நேரத்திற்கு முன்பே வாசித்துமுடித்திருந்தேன்.

இனி அலைகள்.

இது ஜோசப் ஜேம்ஸ் என்கிற, ஒவிய, நாடக நடிக, கால்பந்தாட்டக்கார, தொழிற்சங்க,எழுத்தாள, தச்ச முகங்கள் கொண்ட ஒரு protagonist இன் அரைகுறை வரலாறு.

அலை ஒன்று :
“புரியாத எழுத்துக்கள் இரண்டு வகை. ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வத்தைத் தூண்டக்கூடியது”. இதில் ஜெ.ஜெவின் எழுத்துக்கள் இரண்டாவது வகை என்று சு.ரா ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். சு.ராவின் எழுத்துக்களும் இரண்டாவது வகை என்பதை என் தரத்திலிருக்கும் எந்த வாசகனும் புரிந்து கொள்வான். மேலும், புரிந்தது, புரியாதது என்கிற கட்டங்களைத் தாண்டி நம்மை ஜெ.ஜெ.வினுள் இழுப்பது சு.ராவின் ஆற்றொழுக்கு நடை. ஜெ.ஜெ வின் எழுத்துகளைப் பற்றிய விமரிசனங்கள் பல்வேறு பாத்திரங்கள் மூலமாக தெரிய வரும் போது , இவரும் ஜெ.ஜெவும் ஒருவர் தானோ என்ற எண்ணம் எழாமலில்லை.

அலை இரண்டு :
ஜெ.ஜெ வின் மரணச்செய்தியுடன் தொடங்குகிறது கதை. பின் பின்னோட்டமாக சென்று, மலையாள இலக்கிய உலகில் ஜெ.ஜெ வின் பங்களிப்பு ( ஒரே ஒரு நாடகமும், தவளைகள் என்னும் கவிதையும்தான்), அவனது நண்பர்கள், சம்பாதித்த விரோதிகள், அவனது வறுமை, பார்த்த வேலைகள் மற்றும் பலவவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தார்போல் பதிவு செய்கிறார். ஒரு எழுத்தாள மாநாட்டின் போது ஜெ.ஜெ. இறக்கிறான். கதை இங்கு முடிவதில்லை. மீண்டும் ஜெ.ஜெ வின் குழந்தை பருவத்தில் தொடங்கி, அவனது படிப்பு, கால்பந்தாட்டம் உபயத்தால் கிடைக்கும் பட்டப்படிப்பு, எழுத்து முயற்சிகள் , சக எழுத்தாளர்கள் மீதான வெறுப்பு , அவனது உயர்வு மனப்பான்மையை வெளிப்படுத்தும் சம்பவங்கள், என்று ஒரு unconventional structure இல் கதை கொண்டு செல்லப்படுகிறது. இதில் குழப்பம் ஏற்படாமலிருப்பதற்கும், சு.ராவின் எழுத்து லாவகத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அலை மூன்று:
ஜெ. ஜெ. கதையினுள் வருவதே இல்லை. ( சு.ரா வும் அவனும் நேரடியாக சந்திக்கும் ஒரு இடத்தைத்தவிர). எல்லாமே அவனைப் பற்றிய செய்திகள்தாம். ஜெ.ஜெ உடன் பழகிய பல பாத்திரங்களான சேர்த்தலை கிருஷ்ணய்யர்,முல்லக்கல் மாதவன், ஒமனக்குட்டி,அரவிந்தாட்ச மேனன், சாராம்மா போன்றவர்களிடமிருந்து ஒரு குழப்பமான வடிவம் நமக்கு கிடைக்கிறது. இந்த குழப்பம் தான் ஜெ.ஜெ வின் அடையாளம் என்று சு.ரா சொல்லும் போது நம்மால் மறுக்க முடியாமல் போவதற்கு காரணம், இரண்டாவது பாகத்தில் வரும் ஜெ.ஜெ வின் டயரி குறிப்புகளும் அதிலிருக்கும் செய்திகளும்.

அலை நான்கு :
ஜெ. ஜெ வை தான் உபாசித்தோடல்லாமல், இன்னும் பலரும் அவ்வாறே செய்யவேண்டும் என்பதற்கான விழைவு புத்தகம் நெடுகிலும் தென்படுகிறது. சு.ராவின் ஆசைக்கு குறைந்த பட்சம் நானாவது இணங்கினேனா என்பதை , மீண்டும் ஒரு முறை வாசித்த பிறகு ஒரு வேளை சொல்லக்கூடும்.

அலை ஐந்து:
சு.ரா வின் நடையும் சில எதிர்பாராத சொற்பிரயோகங்களும் உயர்தரம். உதாரணம்.

” ஒரு நண்பன் சொன்னான், ” உன் சிறுகதைகள் இலக்கியமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைப் படித்தால் நிம்மதியைப் பிடுங்கிக் கொள்வாய்”, என்று. இதை கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஜெ.ஜெ. பற்ற வைத்த நெருப்பு பரவுகிறது. பேரிலக்கியம் பேரமைதியை ஏற்படுத்தும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆஹா!. பேரமைதி. ஊழிக்கூத்துக்குப் பின் உறையும் பேரமைதி, மகான்கள் பேரமைதிகளை உருவாக்கட்டும், எனக்கு இதில் நாட்டமில்லை. என்னுடைய நோக்கம் ஊழிக்கூத்துக்கு உடுக்கடிப்பது”.

” டிமிட்ரி ருஷ்ய பாஷையில் பேசுவான். நான் முழிக்க வேண்டும். எனக்கு மூன்று பாஷைகள் தெரியும். தனக்கு அவை தெரியவில்லையே என்று டிமிட்ரிக்கு தோன்றவே செய்யாது. நான் தான் வெட்கப்படவேண்டும் அவன் பாஷை தெரியாததற்கு. இதுதான் இந்திய எழுத்தாளனின் விசித்திரத் தலைவிதி. ”

” நீரில் வாழ வேண்டிய பிராணி, படிக்கட்டுகள் ஏறி, முதல் மாடிக்கு எப்படி வந்தது என்ற தோரணையில் என்னைப் பார்த்தாள்”.

அலை ஆறு :
சு.ரா, ஜெ.ஜெ வைப் பற்றிய குறிப்புகள் சேகரிப்பதற்கு, பல ஆண்டுகள் கழித்து அவனுடன் ஒட்டி உறவாடிய பலரை சந்த்திக்கிறார். அவர்கள் அனைவரும் ஜெ. ஜெ வுக்கு புகழ் மாலை தவிர்த்து வேறொன்றை சூட்டுவதாயில்லை. அவ்வாறு ஆராதிக்கப்பட்ட ஜெ.ஜெ, தன் எழுத்துகளை புத்ததவடிவில் பார்க்காமல், வறுமையில், இளமையில் இறந்ததற்கும், புகழ்மாலை மாலை சூட்டியவர்கள் லௌகீக வாழ்க்கையில் compromises செய்து ஷேமமாக இருப்பதற்கும் இடையில் பொதிந்திருக்கும் செய்தி என்னவாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சு.ராவே வேறொருகட்டத்தில் இதைப் பற்றி சொல்கிறார். ” கலையின் ஊற்றுக்கண் கவலைகள் தான் என்றால், எனக்கு கவலைகளும் வேண்டாம், கலையும் வேண்டாம்”

அனபன். ஜெ.பி.
சென்னை.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செயப்பிரகாசா

My Encounter with Balakumaran

1990 அல்லது 19991 என்று நினைக்கிறேன். எனக்கு அப்பொழுது வயது பதினெட்டுக்குள்ளாகத்தான் இருந்தது. பாலகுமாரனின் பல நாவல்களை வாசித்து, எனக்குள் இலக்கிய ஜுரம் ( என்று நான் நினத்திருந்தேன்) பரவியிருந்த நேரம்.

எனக்கு அவரை சந்தித்து பேசி, நான் உங்களின் மகா வாசகன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் உத்வேகம் இருந்தது. அத்தருணத்தில், அவரது அனைத்து படைப்புகளையும் வாசித்துவிட்டிருந்தேன். அவர் வசித்து வந்தது, என் வீட்டிலிருந்து ஒரு 60 பைசா தூரத்தில்தான், எனினும் நேரடியாகச் செல்ல தைரியம் வரவில்லை. ” சரி, இப்ப எதுக்கு வந்தே?” என்று எழக்கூடிய கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

இதற்கான மார்க்கம் ஒரு நாள், ஹிண்டு பத்திரிகை மூலமாக வந்தது. engagements பகுதியில், ஞானக்கூத்தன் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில், பாலகுமாரன், ‘பெரிய வாத்தியார்’ , மாலன் , பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெரிய எழுத்தாளர் போன்றோர் பேசுவதாக மூன்று வரியில் செய்தி வந்திருந்தது. இடம் திருவல்லிக்கேணியில் எதோ ஒரு மாடா தெருவில் என்பதாக நினைவு. போனால் உள்ளே விடுவார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதில் முழு முகவரி இல்லாததால் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதுதான் என் கவலை. பாலகுமாரனுக்கே போன் செய்து கேட்டால் என்ன என்றொரு யோசனை. உடனே செயல்படுத்தினேன். டைரக்டரியில் எண் கண்டுபிடித்து சுழற்றியவுடன்,

” வணக்கம். பாலகுமாரன் பேசறேன்” என்றார்.

படபடப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, வணக்கம் சொல்லி விஷயத்தைக் கூறி
யதும், ” அந்த விழா இன்னிக்கு இல்லயே சார்” என்றார். ஹிண்டு செய்தியைக் கூறியதும், அருகில் இருந்தவரிடம் ” ஏம்மா, ஞானக்கூத்தன் புத்த்க வெளியீடு இன்னிக்கா?” என்று கேட்டது லேசாக காதில் விழுந்தது. அருகில் இருந்தவர் அதை ஆமோதித்தார் போலும். என்னிடம், ” ஆமா. இன்னிக்குத்தான் சார். என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டதும், நான் சொன்னேன். முகவரி தந்து, வரும் வழியையும் தெளிவாகக் கூறினார்.

இடத்தைக் கண்டுபிடித்து, சென்று சேர்வதற்குள், விழா துவங்கிவிட்டிருந்தது. சுமார் 75 பேர் உட்காரக்கூடிய ஹால் அது. சரியாக முப்பத்து நான்கு பேர் தான் இருந்தனர். நாலைந்து பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேடையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. கண்ணாடி அணிந்திருந்த ஒருவர் மேடையில் பிரதானமாகத் தெரிந்தார். ( அவர்தான் ஞானக்கூத்தன் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்). “பெரிய வாத்தியாரும், இன்னும் சில பேரும் மேடையில் இருந்தனர். வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். மேடையில் பாலகுமாரன் இல்லை. சரி, ‘டகால்ட்டி’ கொடுத்து விட்டாராக்கும் என்று நினத்துக் கொண்டு,
கண்களை இப்படியும் அப்படியுமாக அலையவிட்டால், ஒரு மூலையில் பாலகுமாரன், மாலன் இருவரும் தரையில் சம்மணமிட்டு தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘ம்… மாட்டிகினாரு’ என்று நினத்துக் கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தேன். நீலநிற டெனிம், வெள்ளை நிற ஜிப்பா. வலது கைவிரலில் புகை. இடது கையில் கிங் சைஸ் பாக்கெட். பக்கத்தில் மாலன். இப்போது டிவியில் பார்க்கிறோமே, அதே மாதிரி.

( என்ன காயகல்பமோ?). மாலன் எழுதிய சிலவற்றை வாசித்து இருக்கிறேன். ‘ஜன கன மண’ மிகவும் விருப்பம். ( அவரது யட்சிணி என்ற sci-fi நாடகத்தை ரேடியோவில் கேட்டதுண்டா? நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய அந்நாடகத்தில் இரண்டு பிரதான பாத்திரங்கள் மட்டுமே. நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஒரு ரோபாட்.).

மும்முரமாக இருவரும் பேசிக்கொண்டிருந்ததால், எப்படி குறுக்கிடுவது என்று சிந்தித்துக் கொண்டே அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கலானேன். இலக்கியம் பற்றியும், ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றியும், எழுதிக்கொண்டிருக்கும் கதைகள் குறித்தும் சீரியசாக பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது என் எண்ணம்.( அப்ப என் வயசும் அனுபவமும் அப்படி) அது அவ்விதமில்லை என்பது சற்று நேரத்திலேயே புரிந்தது. பாலகுமாரன் தன் ஆஸ்துமா குறித்து பேச, மாலன் அது பற்றி தனக்குத் தெரிந்த வைத்திய முறைகள், இதில் பிரபலமான மருத்துவர்கள் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தத்தமது குடும்பத்தினர் குறித்த விசாரிப்புகளும் நடந்தன.

எழுத்தாளன் என்பவன் எழுத்தாளன் தவிர வேறொருவனில்லை என்றும், அவன் கவலைப் பட இலக்கியம் தவிர யாதொரு விஷயமுமில்லை என்ற என் எண்ணம் தவறாய்ப்போனதில் அதிர்ச்சி எதும் ஏற்படவில்லை. காரணம், இது இவ்வாறாகத்தான் இருக்கும் என உள் மனத்தில் ஊகித்திருந்தேனோ என்னவோ. எனினும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வது என்ற எண்ணத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

அடுத்து மாலன் பேசவேண்டிய முறை வந்ததும், எழுந்து மேடைக்கு சென்றார். தனியாக அமர்ந்திருந்த பாலகுமாரனிடம் வணக்கம் சொன்னேன். ” நாந்தான் சார் காலையிலே உங்களுக்கு போன் பண்ணேன்” என்றதும் அவர் ” அப்படியா?” என்றார்.

” என்ன பண்றே?”

” பிளஸ் டூ பரிட்சை எழுதிட்டு, TNPCEE க்கு தயார் பண்ணிட்டு இருக்க்கேன் சார்.
உங்க கதையெல்லாம் படிச்சிடுவேன் சார்”

பேசிக்கொண்டிருந்த போதே, என்ன என்னவோ சொல்ல வேண்டும் என்று பரபரக்கின்றது, காயத்ரி, சியாமளி, விஸ்வநாதன், இன்னும் எவ்வளவோ பாத்திரங்கள் பற்றியும், மெர்குரிப்பூக்களில் ஸ்ட்ரைக்கில் உயிரிழக்கும் கதாபாத்திரத்தின் மனைவி சாவித்திரி, உண்மையில் என் நண்பனின் சித்தி என்பது போன்றவற்றையும் சொல்லத்துடிக்கிறேன்.

” கதை படிக்க நேரமிருக்கா?”

” பாட்டிக்கு தெரியாம லெண்டிங் லைப்ரரியிலேந்து எடுத்து படிச்சிடுவேன் சார்”

” ஒழுங்கா பாடத்த படி. கதை புஸ்தகமெல்லாம் அப்புறமா படிக்க்கலாம்”

சரிங்க சார் என்று கூறிய நேரம், மேடையில் இருந்து பெரிய வாத்தியார், ‘பாலகுமாரன், அடுத்து நீங்க தான். வாங்க” என்று அழைத்தார். ( பெரிய வாத்தி
யாரையும் அப்பத்தான் நேரில் பார்க்கிறேன். அப்பா, என்ன உசரம் என்று நினத்துக் கொண்டேன்).

பாலகுமாரன் பேசும் போது, கவிதையைப் பற்றி பேசாமல், எழுதிய ஞானக்கூத்தன் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். தான் அப்போதுதான் ஊரிலிருந்து வந்ததால் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை என்று சொன்னார் . அவர் முடித்ததும் கூட்டமும் முடிந்தது.

கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பாலகுமாரனைச்சுற்றியும் நாலைந்து பேர். என்னிடம் ஒருவர் , நாற்பது பக்க நோட்டுடன் வந்து எதற்கோ பெயர் விலாசம் கேட்டு எழுதிக்கொண்டார். இலக்கிய உள்வட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக மிதப்பு ஏற்பட்டது.

பாட்டி இரண்டு மணி நேரந்தான் பர்மிஷன் தந்திருந்தது நினவுக்கு வரவும் கிளம்பினேன். ‘தில்லகேணி’யிலிருந்து மந்தைவெளி தூரம் குறைவானாலும், நேர் பஸ் இல்லை என்ற எரிச்சலுடன் பசியும் சேர்ந்து கொண்டது.

என் முதலும் கடைசியுமான எழுத்தாள சந்திப்பு அதுவே. அதன் பிறகு எனக்கு எற்பட்ட தொடர்பெல்லாம் அவரவர்களின் எழுத்து மூலமாக மட்டுமே.

பிறகு படிப்பு, மேல்படிப்பு, உத்தியோகம், சொந்தத் தொழில் என்று ஆனபடியால், என் மனங்கவர்ந்த எந்த எழுத்தாளர்களுடனும் ( பெரிய வாத்தியார் உட்பட) நேரடி மற்றும் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள சமயம் கிட்டியதில்லை. வாசிப்பதை மட்டும் விடாமல் தொடர்கிறேன். ரா.கி.கி மூலம் எனக்கு ஏற்பட்டிருப்பது ‘interactive writing’ என்னும் புதிய அனுபவம். Thanks RKK.

பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ், ஆங்கில புத்தகங்கள், கவிதைகள் வாசித்த பிறகு, பாலகுமாரனின் எழுத்துகளைப் பற்றி இன்றைய மனநிலையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முற்பட்டால், கிளப்பின் பல ராயர் மற்றும் ராயைகளின் விரோதத்தை பெற வேண்டிவரலாம் என்பது என் எண்ணம். இந்த எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.

Please correct me if i am wrong.

அன்று ஏற்பட்ட சந்திப்பு 12 வருடங்கள் கழித்து இன்று ஏற்பட்டால், அது எவ்விதமாயிருக்கும் என்று யோசிக்கும் பொழுது, இதழ்க்கடையோரம் எழும் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை.

அவ்வளவே

அன்பன்
ஜெ.பி, சென்னை.


ஓ…. கல்கத்தா! (3/2/03)

தலைப்பைப் பார்த்து, இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வந்த ஒரு விவகாரமான நாடகம் பற்றிய சமாசாரம் என நினைத்து உள்ளே வந்தவர்கள் மன்னிக்கவும். இது வேறு. கல்கத்தாவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அது கொல்கொத்தாவாக மாறவில்லை. படியளக்கும் முதலாளியின் கட்

 

கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை (2/23/03)

எனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம், அச்சிடப்பட்ட ஒரு வடிவமாகவும், முன் எப்போதோ தொடராக வெளிவந்து, பக்கங்க

 

ஆடம் ஸ்ட்ரீட் அழகி (2/23/03)

ப்ரசாத் ———- நான் சுரேஷின் வீட்டிற்கு சென்ற போது , சுரேஷின் அம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள். அது என்னை இல்லை என்று தெரிந்ததும், காரை ஓரமாக பார்க் செய்து விட்டு தைரியமாக உள்ளே நுழைந்தேன். கிளம்புவதற்கான ஏற்பாட்டு ஏதும் காணோம். இன்றைக்குத் தா

  1. January 19, 2011 at 10:50 am

    it was so good

  1. January 19, 2011 at 3:11 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: