Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்
ஆசிரியர் பற்றி :
இவர் விருதுநகரில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர். சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார். இதுவரை 3 சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும், லத்தீன் அமெரிக்க மேதையான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் பற்றிய ஒரு நூலும் `உப பாண்டவம்’ என்ற நாவலும் வெளிவந்திருக்கின்றன. இது தவிர சிறுகதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் என இலக்கியத்தில் தனக்கென ஒரு ஸ்டைலையும், சுயமுகமான பார்வைகளையும் வைத்திருப்பவர். இணைய தளங்களிலும் நேரம் கிடைக்கும்போது, எழுதிவருகிறார். சமீபமாக சென்னைக்கு `மின்பிம்பங்கள்’ வேலையாக வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடினோம், அதன் பேட்டி வடிவமே இங்கு கொடுக்கப்படுகிறது. `கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’ என்று முன்பு ஒரு நேர் பேச்சில் குறிப்பிட்டது, இவரை எங்கள் இணையத்திற்காக சந்திக்கத் தூண்டியது எனலாம்.
கேள்வி : உங்கள் கதைகள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு – வாழ்வனுபவமாக இல்லாமல் – படிப்பு அனுபவமாகப் போயிருப்பதாக உணர்கிறேன். படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஏஸ். ரா : முதலில் படிப்பு / படைப்பு பேதத்தை நான் மறுக்கிறேன். அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே நேர்வது என்பது மட்டுமே அல்ல, உங்களுக்கு நேராத ஒன்றும் வேறு வழியாக உங்களை வந்து சேர்கிறது. குடும்ப உறவுகள், வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் நாம் எல்லாவற்றையுமே நேரடியாக அனுபவிப்பதில்லை. ஆகவே அனுபவம் என்பது உங்களுக்கு நேர்ந்த மற்றும் நேராதவைகளின் திரட்சியேயாகும். அனுபவம் என்பது அதன் திரும்ப திரும்ப நடக்கும் தன்மையிலேயே நம்மிடம் வடிவம் பெற்றுக் கொள்கிறது, பல லட்சம் முறை ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடக்கும்போது அது யாருக்கு நடக்கிறதோ அதை வைத்து தன்னை அது வடிவமைத்துக் கொள்கிறது.
சாலையில் ஒரு புறம் சைக்கிள் வருகிறது – மறுபுறம் பைக் ஒன்று வருகிறது. இது ஒரு மூன்றாம் மனிதனுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் அங்கு ஒரு விபத்து ஏற்படும்போது மூன்றாவது மனிதனுக்கு அதில் ஒரு அதிர்ச்சி அல்லது வேறு ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இங்கு தான் அனுபவம் சாத்தியமாகிறது. ஆனால் பைக் ஓட்டுபவனுக்கோ – சைக்கிளில் வந்தவனுக்கோ அது வேறு மாதிரியான பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது, உதாரணமாக பைக் ஒட்டுபவர் இனிமேல் இன்டிகேட்டரை ஒழுங்காக உபயோகிப்பான், சைக்கிள்காரன் ஒரு பெல் வாங்கி வைப்பான். நுஒயீநசநைnஉந ளை டநயசniபே. அனுபவம் க்ஷல யீசடினரஉவள – களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆகவே `அனுபவம்’ சந்தர்ப்ப செயலாகவோ, அல்லது திட்டமிட்டதாகவோ இருப்பதன் உணர்வு நிலையின் திரட்சி.
இன்னொரு உதாரணம் சொல்லணும்னா – நீங்க வீட்டுக்கு போவதற்கும், செங்கல்பட்டு ரயில்வேலைனில் மாடு மேய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை – உங்கள் அனுபவத்தில், ஆனால் அந்த மாடு அடிபட்டு, அதனால் ரயில்நின்று, கேட் திறக்காமல் போனால், நீங்கள் வீட்டுக்குப் போக ஏற்படும் தாமதம், உங்கள் உணர்வு நிலையை பாதிக்கக்கூடியது. அப்போது இந்த நிகழ்ச்சி ஒரு அனுபவமாகிறது. நிகழ்ச்சிகள் அதனதன் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கென்று ஒரு `ஒழுங்கமைவு’ இருக்கிறது. இந்த ஒழுங்கு `Disturb’ ‘ ஆகும்போது உங்க அனுபவமும் மாத்தி அமைக்கப்படுகிறது.
-
June 26, 2012 at 6:29 pmWriter S Ramakrishnan: 20 Links « 10 Hot
Recent Comments