Archive
Traditional Tamil Food Festival: பாரம்பரிய உணவுத் திருவிழா – பூவுலகின் நண்பர்கள்..
பாரம்பரிய உணவுத் திருவிழா – பூவுலகின் நண்பர்கள்..
பாரம்பரிய உணவு விருந்து.. இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?..சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன? ‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழா-வில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது. பூவுலகு குழுவினருடன் இணைந்து பாக்கம் ஜெகன் மற்றும் ராஜசேகர் குழுவினர், ரொம்பவே மெனக்கெட்டு, கரிசனத்துடன் கரண்டி பிடித்து, இந்த சிறுதானிய விருந்தை படைக்க உள்ளனர். பானகம், நவதானிய கொழுக்கட்டை, தினை இனிப்பு, தேனும் தினைமாவும், வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும், கம்பு – வல்லாரை தோசை, நிலக்கடலை சட்னி, இயற்கை காய்கறிகளால் சாம்பார், பொரியல், வரகரிசியில் கூட்டாஞ்சோறு, குதிரைவாலியில் தயிர்சாதம், முக்கனி பழத்துண்டுகள்….வேறு என்ன வேண்டும்?… வாருங்கள்..29 ஞாயிறு மாலை ஐந்திணை விழா விருந்துக்கு..எங்களுடன் உண்டு மகிழ்ந்து, அதனதன் ரெசிபிகளையும், கேட்டறிந்து, இனி உங்கள் இல்லத்து சமையலறையை நலவாழ்விற்காக கூடுதல் கரிசனத்துடன் செதுக்கிடலாம்.. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. நபர் ஒருவருக்கு ரூ.100/- கொடுத்து முன்பதிவு மட்டுமே…விரைந்து பதிவீர்!..குறைவான இருக்கைகளே இன்னும் எஞ்சி உள்ளன….. ஜூலை 29 —- லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம். தொடர்புக்கு: 91765 33157
நண்பர்களே இந்த உணவுத் திருவிழாவுக்கு தயாராகுங்கள்… நமது பாரம்பரிய உணவை இப்போதுவாது சுவைத்து பாருங்கள். அவசியம் வாருங்கள் நண்பர்களே.
——————————————————————————–
Lyricist Pattukkottai Kaliyanasundharam sings ‘Aram’ to his Movie Producer
-“நாடகமும் சினிமாவும்’ நூலில், ஏ.எல்.எஸ்.வீரய்யா.
நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான அருணாசலம் பிள்ளையின் மகன் கல்யாணசுந்தரம், சின்ன வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணியில் ஈடுபட்டு புதிய வெளிச்சம் பெற்ற கவிஞராக உயர்ந்தார்.
நாடகக் கம்பெனியில் கல்யாணசுந்தரத்தின் நண்பன் நம்பிமாறன். இவரின் சிபாரிசில் “படித்த பெண்’ என்ற படத்திற்கு முதன் முதலாக பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தார். பாடல் பதிவாகியது. படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் படம் வெளிவரத் தாமதம் ஏற்பட்டது. பேசிய பணம் ரூ.150. “அந்தப் பணத்தையாவது கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தார்.
ஒரு நாள், அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டுக்குப் போனார். வீட்டுக்குள் விட உதவியாளர் மறுத்தார். மூன்றே வரிகளில் ஒரு கவிதை எழுதி, “”உன் முதலாளியிடம் கொடு” என்று சொல்லிவிட்டு, வந்து விட்டார் கல்யாணசுந்தரம்.
“”தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்.
நாயே, நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு?”
என்பதுதான் அந்தக் கவிதை! படித்துப் பார்த்தார். படத்தயாரிப்பாளர் கல்யாணராமய்யர். அவர் பழமையில் பக்தி கொண்ட பக்தர். “கவிஞன் அறம் பாடி விட்டானே’ என்று அரண்டு போய் ரூபாயை கொடுத்தனுப்பிவிட்டார்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெற்று வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி.’ அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியிருந்தார்.
Lal Bahadur Sastri: Why Kalainjar Karunanidhi did not become a Gandhian?
“ஆயிரம் நீதிக்கதைகள்’ என்ற நூலில் நாடோடி
1936-ம் ஆண்டு அலகாபாத் நகரசபை, நகருக்குப் பக்கத்தில் நிறைய நிலம் வாங்கி அதை வீடு கட்டும் மனைகளாக விற்கத் தீர்மானித்து. அதைக் கவனித்துக் கொள்ளும் கோஷ்டியின் அங்கத்தினர்களில் ஒருவராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார்.
ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரி வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நகரசபைத் தலைவரின் அனுமதி பெற்று தம் பெயரில் ஒரு மனையும் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் ஒரு மனையும் வாங்கி அதற்கான பணத்தையும் கட்டினார்.
ஊரிலிருந்து திரும்பி வந்த லால்பகதூர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிக்க வருத்தம் அடைந்தார். தன் நண்பரை அழைத்து “”நகர அபிவிருத்தி கோஷ்டியின் அங்கத்தினராக இருந்து கொண்டு நாமே வீட்டுமனைகளை வாங்குவது மிகவும் தவறு. ஆகவே அந்த இரண்டு மனைகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.
தமக்கென்று சாஸ்திரிக்கு வீட்டு மனை இல்லாதபோது அவர் வாங்கியதில் தவறே இல்லை என்று இதர நகர அபிவிருத்தி கமிட்டி அங்கத்தினர்கள் எவ்வளவோ சொல்லியும் லால்பகதூர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை!
“”பிறருக்கு மனைகள் விற்கும் நாமே நமக்கென்று மனைகளை ஒதுக்கி வைத்துக்கொள்வது தர்மமாகாது. அதோடு சொத்து சேர்க்கமாட்டேன் என்று மகாத்மா காந்திக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எனக்கென்று எந்த நாளும் சொத்து சேர்த்துக்கொள்ள மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறினார் லால் பகதூர் சாஸ்திரி!
உண்மை.
பின்பு அவர் பாரதத்தின் பிரதமராகச் செயயல்பட்டபோதும் எந்த ஒரு சொத்தும் சேர்க்காமல் ஒரு ஏழையாகவேதான் மறைந்தார்.
La Sa Ra on Manjari Thi Ja Ra
“நான்’ என்ற புத்தகத்தில் லா.ச.ராமாமிர்தம்
ஒரு சமயம் “சவரம் செய்துகொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் ஓர் ஆங்கிலக் கட்டுரையை மொழி பெயர்த்துத் தரும்படி பணித்தார்; செய்து தந்தேன். ஆனால் கட்டுரை வெளி வந்ததும் என்னுடையதாய் அது இல்லை. இல்லாமலும் இல்லை. இத்தனைக்கும் அங்கே ஒரு வார்த்தை கூட்டி, இங்கே ஒன்று எடுத்து, பாராக்களை மாற்றி அடுக்கிட அவ்வளவுதான் கட்டுரை கம்மென்று மணம் வீசிற்று.
என் தலைப்புக்குச் சிரித்து முதுகைத் தட்டிக் கொடுத்தார். “”உன்னுடைய பாஷைதாண்டா கொஞ்சம் பஞமஇஏ-மட, மஞ்சரிக்கு ஏற்றபடி”
அவர் சிரிக்கையில் பத்து வயது முகத்தினின்று உதிரும்; அந்தச் சிரிப்பில் எப்பவுமே ஒரு கள்ளத்தனம் இருக்கும். முத்துப் பல் வரிசை. தன் தோற்றத்தில் சற்றுக் கவனம் செலுத்தியிருந்தார் எனில் அவர் பார்வையானவர் என்றே சொல்வேன். குட்டையாய் வெட்டிய முடி. ஒழுங்காய் வாரிவிட்டு உடனேயே மெனக்கெட்டுக் கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் சிலிர்த்த மயிர். சிறு கூடு. கதராடை. எளிமையான தோற்றம்.
தி.ஜ.ர. என் குரு. நானாக வரித்துக் கொண்டேன். அந்த நாளில் என்னை தி.ஜ.ர.வின் சிஷ்யன் என்றே குறிப்பிடுவார்கள்.
Pongalo Pongal: Tamil Sangam Lit and Japanese Poems in Nihonshoki, Kojiki & Manyoshu
“பண்பாட்டுப் பயணங்கள்’ நூலில் ஆசியவியல் நிறுவன இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல்
தென்னிந்தியப் பண்பாடு பற்றிய ஆய்வு ஜப்பானில் தற்போது மிகப் பெரிய அளவிற்குக் கால் கொள்ளத் துவங்கியுள்ளது. 1973-ஆம் ஆண்டு ஜப்பானிய அறிஞர்களான சுசுமு சிதா, அதிரா பியுஜிவாரா, மினருகோ என்ற மூவரும் இணைந்து ஜப்பானிய மொழி திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்ற தங்களது ஆராய்ச்சி முடிவினை உலகிற்கு அறிவித்தனர்.
தமிழ் நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இடையே மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகிய நிலைகளில் காணப்படுவதை ஒப்புமைக் கூறுகளை ஆராயும் சீரிய ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளன.
மிகப் பழைய ஜப்பானியக் கவிதைத் தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில் உள்ள அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய உறவுகளைப் பெற்றுள்ளன.
ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிற்கும் தமிழகப் பொங்கல் திருநாளுக்குமிடையே மிகுந்த உறவுகள் உள்ளன. “ரோவிசுட்சு’ என்ற ஜப்பானிய அறுவடைத் திருநாளுக்கும் பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக் காட்டினார்.
இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன. ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் “ஹோங்காரா’ என்று ஒலி எழுப்புவது தமிழர் “பொங்கலோ பொங்கல்’ என்று ஒலி எழுப்புவதை நினைவுபடுத்துகிறது! தமிழில் உள்ள “ப’ ஒலி ஜப்பானில் “ஹ’ ஒலியாக மாறுவதையும், தமிழின் லகர ஒலி ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ விளக்கிச் சொல்கிறார்!
Science and Spirituality: A Vedanta Perception by V. Krishnamurthy
“கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி?’ நூலிலிருந்து பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி.
“கடவுளை அறிவதெப்படி?’ என்றொரு ஆங்கிலப் புத்தகம் (வெளியீடு 1953). அது பதஞ்சலியோக சூத்திரத்தை விளக்கும் நூல். நூலாசிரியர்கள் இருவர். சுவாமி பிரபவானந்தா, மற்றும் கிறிஸ்டபர் இஷர்வுட்.
மனதானது ஒரு பொருளில் இடைவிடாமல் 12 செகண்டுகளுக்கு இருந்து கொண்டிருந்தால் அது ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
இவ்விதம் ஒருமுகப்பட்ட மனது அதே பொருளில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால் அது தியானம் ஆகும்.
அந்த தியானத்தில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால், அதாவது 12x12x12 செகண்டுகள் (28 நிமிஷம் 48 செகண்டுகள்) அது சாதாரண சமாதியாகும்.
இந்த சாதாரண சமாதி அதைப்போல் 12 மடங்கு கால அளவு (அதாவது 5 மணி 45 நிமிடம், 36 செகண்ட்) நீடித்தால் அது நிர்விகல்ப சமாதியில் கொண்டுவிடும்.
வெறும் கால அளவைகளினால் மட்டும் தியானம், சமாதி, நிர்விகல்ப சமாதி முதலியவை கிட்டிவிடும் என்று நாம் நினைத்துவிடக்கூடாது.
ஒரு பொருள், ஒரு முகம், ஒரு முனை என்பதுதான் முக்கியம். தீரபொருளில் ஒருமுகப்பட்ட மனது சிறிதேனும் சிதறாமல் அவ்வொறே முனையில் லயித்திருப்பதுதான் தியானத்தின் உச்சி நிலையாகிய சமாதி நிலைக்குக் கொண்டு போய் விடும். தொடக்கத்திலிருந்து எவ்வளவு நிமிஷங்கள் ஆயின என்று கடிகாரம் பார்க்கத் துடிக்கும் மனது அக்கணமே தியானத்தைத் தவறவிட்டு விட்டதாகவே கொள்ள வேண்டும்.
Recent Comments