Archive

Archive for July 6, 2012

Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews

July 6, 2012 1 comment

Jeyamohan

http://www.jeyamohan.in/?p=6321

ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .

1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?

2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா

3. இது எனக்கு ஏன் தோணல்லை?

மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.

மதியம் திங்கள், ஜனவரி 11, 2010

எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)

வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.

‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.

எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?

தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.

இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.

இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.

‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.

ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.

கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.

சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:

”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”

7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”

தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.

கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”

தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.

கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?

தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?

இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.

‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.

வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.

இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:

”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”

இறுதியில் இப்படி வருகிறது.

”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”

பதில் சொல்லவில்லை.

”வரலையா?”

”வந்துச்சு.”

”என்ன செஞ்சே?”

”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”

”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”

இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.

”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.

நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”

கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…

எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.

கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.

சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?

இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.

இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?

இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.

அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.

நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.

Posted by பைத்தியக்காரன் at

34 comments:

நர்சிம் said…
மிக நல்ல பதிவுண்ணா.. நன்றி..

//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//

//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //

எஸ்.ரா. Yes.Rocks.

சுரேஷ் கண்ணன் said…
சிவராமன், நல்ல,நுட்பமான பதிவு மற்றும் வாசிப்பு. வெகுஜனப் பத்திரிகைகள் சிறுகதை என்னும் வடிவத்தை ஆணுறை அளவிற்கு ஆக்கி சீரழித்தக் கொண்டிருக்கும், இவ்வடிவத்தை ரசிப்பதற்கு பிற்காலத்தில் யாராவது இருப்பார்களா என்று நினைக்கும் போது இம்மாதிரியான துளிர்ப்புகள் நம்பிக்கையளிக்கின்றன.

எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.

எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂

//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//

அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.

பைத்தியக்காரன் said…
‘எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்’ அவரது மொத்தமான சிறுகதை தொகுதி. தடிமனான புத்தகம். இதற்கு பிறகு ’18ம் நூற்றாண்டில் பெய்த மழை’ சிறுகதை தொகுப்பு வந்திருக்கிறது. இந்த தொகுப்புக்கு பிறகும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தொகுப்பாக அவை இந்தாண்டு வெளியாகலாம்.

2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.

இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுரேஷ் கண்ணன் said…
//கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது.//

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.

இராஜ ப்ரியன் said…
நல்ல பகிர்வு ………

மோகன் குமார் said…
நண்பர் சிவா,

படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))

நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி

பைத்தியக்காரன் said…
அன்பின் நர்சிம், யெஸ்,ரா. Rocks.

அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.

அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமர பாரதி said…
நல்ல பதிவு. ஆனால் இப்படியெல்லாம் யோசித்தால் மண்டை குழம்பி விடாதா? இவ்வளவு சிந்தித்தால் சிக்கல்தான். நேரடியான உரையாடல்களை அப்படியே சொன்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டு படித்தால் போதாதா?

குசும்பன் said…
அண்ணே ஒரு ஸ்மால் டவுட்!

பிளீஸ் ஹெல் மீ…

கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,

அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…

முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…

நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?

பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)

தாமோதர் சந்துரு said…
//நல்ல பதிவு. ஆனால் இப்படியெல்லாம் யோசித்தால் மண்டை குழம்பி விடாதா? இவ்வளவு சிந்தித்தால் சிக்கல்தான். நேரடியான உரையாடல்களை அப்படியே சொன்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டு படித்தால் போதாதா?// அய்யா அமரபாரதி அவர்களே பூட்டு உங்க கிட்டதான் இருக்கு
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//

மகேந்திரன்.பெ said…
yes answer his (kusumban) kostinu ..

பைத்தியக்காரன் said…
அன்பின் அமரபாரதி, மண்டை குழம்புவதற்காக எந்தப் பிரதியும் எழுதப்படுவதில்லை. பிரதி விரிக்கும் நூலை பிடித்து இழுத்துக் கொண்டே செல்கையில் ஒவ்வொருவருக்குள் இருக்கும் சிடுக்கு, வன்மம், அன்பு, நெகிழ்ச்சி ஆகிய பல ஊற்றுகளை கண்டடையலாம். ஒருவேளை வாழ்க்கைப் புதிருக்கு அதில் விடையும் கிடைக்கலாம்.

அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂

அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.

அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அனுஜன்யா said…
அந்த இரண்டு கதைகளையும் படித்து இருக்கிறேன். எஸ்ராவின் எழுத்து மிகப் பிடிக்கும் என்பதால், அந்த கதைகளை மறக்க வில்லை. கூடுதலாக ‘எல்லா நாட்களையும் போல’, மற்றும் ‘இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன’ என்னும் இரு சிறுகதைகளும், ‘இல்மொழி’ என்னும் குறுங்கதையும் நினைவில் தங்கிவிட்டவை. நல்ல பகிர்வு சிவா.

அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.

அனுஜன்யா

சங்கர் said…
அண்ணா, இதுவரை எஸ்ராவின் சிறுகதைகளை அதிகம் படித்ததில்லை, அவரின் விகடன் கட்டுரை தொடர்களின் ரசிகனாகத்தான் இதுவரை இருந்து வருகிறேன், உங்கள் விவரிப்பை படிக்கும் போது, புத்தக காட்சியில் வாங்கத் தவறிவிட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது, நன்றி,

முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது

Starjan ( ஸ்டார்ஜன் ) said…
நல்ல பகிர்வு ………

சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .

நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க

அன்புடன் அருணா said…
நல்ல பகிர்வு நன்றி!

குப்பன்.யாஹூ said…
மிக அருமையான பதிவு.

இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,

ஜனவரி 11, 2010 10:06 PM
அமர பாரதி said…
சந்துரு அண்ணா,

////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////

என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?

ஜனவரி 11, 2010 10:18 PM
மாதவராஜ் said…
எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து, அதன் நுட்பமான மனிதவெளிக்குள்ளிருந்து மீளமுடியாமல் இருந்திருக்கிறேன். வாழ்வை இத்தனை இரத்தமும், நரம்புகளுமாய் இவரால் சொல்ல முடிந்திருக்கிறதே என பிரமித்திருக்கிறேன். பின்பு கோணங்கியின் பரிச்சயம் ஏற்பட்டு வாசிப்பிலும், மொழியின் அடர்த்தியிலும் தன்னை பரிசோதித்துப் பார்த்து, கபாடபுரம், தாவரங்களின் உரையாடல் என பலவாறு கதைசொல்லிப் பார்த்து, மீண்டும் ஒரு குளவி போல தன் கூடு கண்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷணன்.

அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!

பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!

ஜனவரி 11, 2010 11:39 PM
நேசமித்ரன் said…
மிக நுட்பமான பார்வை

வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது

இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….

வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு

வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்

ஜனவரி 12, 2010 12:21
பைத்தியக்காரன் said…
அன்பின் அனு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. அடுத்த முறை சென்னை வருகையில் சொல்லுங்கள். எஸ்ரா கதைகள் தொகுப்பை அன்பளிப்பாக தருகிறேன்.

அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.

அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 12, 2010 9:44
KaveriGanesh said…
பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2

http://www.kaveriganesh.blogspot.com

ஜனவரி 12, 2010 9:56
நிலாரசிகன் said…
அற்புதமான இடுகை அண்ணா. 2008ல் எஸ்.ரா எழுதிய இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன,விசித்திரி கதைகள் தரும் அனுபவம் அலாதியானது. தொடர்ந்து எழுதுங்கள் 🙂

ஜனவரி 12, 2010 10:15
rama said…
இந்த பின்னூட்டம் “சார், ஆமா சார்”, “எஸ்ராமகிருஷ்ணன் ராக்ஸ்”, “எனக்கும் பிடிக்கும் சார்”, “எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரி டேஸ்ட்…ஹி ஹி ஹி” என்பது போன்ற சடங்கான வார்த்தைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரை சில ஆண்டுகளுக்கு முன்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படிக்கும் பொது அவர் செய்யும் சொற்களின் கோர்வை என்னை வசப்படுத்தியது. பின்னர் அவர் தரும் புதிய இத்தியாதிகள் உபயோகமாய் இருந்தன. பின்னர் அவரை படிக்கும் போது ஒரு சலிப்பு உருவாகிறது. ஏதோ ஒரு சலிப்பு என்று சொல்லி தப்பித்து கொள்ள மாட்டேன். காரணமான சலிப்புதான். அவர் திரும்ப திரும்ப உபயோகிக்கும் சொற்கள், எடுத்து காட்டாக, “வெயில்”, “சொற்களற்ற அமைதி”, “ஒரு விதமான”, “தனித்து”, “காரணம் என்ற”, “அவன் போய் கொண்டே இருந்தான்”, “சொற்கள் இல்லாத வெளி”, “அப்படி தானே முடியும்”, “நாமும் அப்படிதானே”, “நிழல்கள் அவ்வழியே” இது போன்ற கவித்துவமான வரிகள் பல அவரது கட்டுரையில் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு வேளை சுஜாதா ஸ்டைல் போல் எஸ்ராமகிருஷ்ணன் ஸ்டைலோ என்னவோ. ஆனாலும் அவரது எழுத்துகளை தவறாமல் வசிக்கிறேன். இன்னுமொரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சலிப்புடன் தான் வசிக்கிறேன் அவர் தரும் புதிய செய்திகளுக்காக.

ஜனவரி 12, 2010 10:36
செ.சரவணக்குமார் said…
எஸ்.ராவின் கதைகளை நீங்கள் அணுகியிருந்த விதம் மிகப் பிடித்திருக்கிறது. ‘சௌந்தரவல்லியின் மீசை’ என்றொரு சிறுகதை விகடனில் வந்ததாக நினைவு. ஒரு சிறுகதைக்கான அத்தனை அழகியலையும் கொண்டிருக்கும். எஸ்.ராவின் மொத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் பகிர்வு வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
நல்ல பகிர்வுக்கு நன்றி

ஜனவரி 12, 2010 10:39
நந்தவேரன் said…
நிகழ் களத்தில் அழுந்திக் காலூன்றுவதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.

சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.

எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.

ஜனவரி 12, 2010 10:52
அமிர்தவர்ஷினி அம்மா said…
நுட்பமான வாசிப்பின் ஆழத்தை எஸ்.ராவின் சிறுகதைகள் வாயிலாக அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி.

ஜனவரி 12, 2010 11:47
பைத்தியக்காரன் said…
அன்பின் காவேரி கணேஷ், நிலாரசிகன், செ.சரவணக்குமார், நந்தவேரன், அமித்து அம்மா… வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 12, 2010 12:11 PM
நட்புடன் ஜமால் said…
இதை படிக்க துவங்கியதிலிருந்து ஒரு நண்பர் பிங்கிகிட்டே இருக்கார்.

படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.

ஜனவரி 12, 2010 12:12 PM
நட்புடன் ஜமால் said…
வெகு சமீபத்தில் எஸ்.ராவின் வாசகரானேன்.

விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை

உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …

ஜனவரி 12, 2010 12:21 PM
rajasundararajan said…
நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் இரண்டு கதைகளையும் வாசித்து இருக்கிறேன். உங்கள் வாசிப்பு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்படியே எழுதிக் காட்டுங்கள், எங்களுக்குப் புரியாத செய்திகளும் செய்நேர்த்திகளும் புரியட்டும்.

எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.

ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.

அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.

– ராஜசுந்தரராஜன்

ஜனவரி 12, 2010 8:28 PM
ROSAVASANTH said…
அன்புள்ள பைத்தியக்காரன்,

உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.

இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.

̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.

ஜனவரி 12, 2010 11:58 PM
பைத்தியக்காரன் said…
அன்பின் நட்புடன் ஜமால், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.

அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.

எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.

//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 13, 2010 10:44
rajasundararajan said…
என்னங்க நடக்குது நாட்ல? இதுக்கு முந்தின பதிவிலேயே வந்திட்டேனுங்க. ஆனா உங்க selected amnesia பிடிச்சிருக்குங்க. மகாகவியெல்லாம் வேண்டாமுங்க உங்க வாசகனா இருகிறதுக்கு அனுமதி கொடுங்க, போதும்.

ஜனவரி 13, 2010 2:59 PM

Indian Philosophy Discourses and Lectures: Schedule of Sri Velukkudi Krishnan Sami’s vist to USA

July 6, 2012 Leave a comment

 Śrīḥ
logo
Śrīmate Rāmānujāya Namaḥ
Śrīmad Varavaramunaye Namaḥ  

Velukkudi Sri.U.Ve.Krishnan Swami's Visit to Boston area

Dear Devotees

We are pleased to inform you that Velukkudi Sri Krishnan swami will be visiting the Boston area between July 25 through 29 2012.

Finalized schedule for Boston visit can be found at the following link or in this link  or in the attachment found in this email.

Admission is FREE for the entire series.

Please mark your calendars for the above dates and immerself yourself in Bhagavath Katha.

Please pass this information to all the devotees that you may know.

Sri Krishnan swami's entire USA Tour program can  be found at www.vedics.org 

For any questions/assistance please send emails to boston@vedics.org

VEDICS Foundation

azhvAr emberumAnAr jeeyar thiruvadigalE saranam

Categories: Uncategorized