Home > Authors > புனிதன்: குமுதம் ஆசிரியர் குழு

புனிதன்: குமுதம் ஆசிரியர் குழு


நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ‘ஒட்டக் கூத்தன்’ என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘பொன்னி’யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார்.

அப்போதும் என் கவனம் அந்த நாள் ‘பிரசண்ட விகடன்,’ ‘ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் ’51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?

‘விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.’

விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், ‘ரேடியோ மெக்கானிஸம்’ துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.

தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.,

நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தமிழ்வாணன் சீண்டல்

உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘ இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,’ என்றார்.

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘என்ன எழுதுவீங்க’ என்று கேட்டார்.

‘கவிதைதான் எழுதுவேன்,’ என்றேன் மகா கர்வத்தோடு.

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, ‘இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,’ என்றார்.

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.

அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்!

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.

மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, ‘கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.

திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். ‘என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?’ என்றார்.

‘நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,’ என்றேன் விறைப்பாக.

மறுபடியும் அதே சிரிப்பு. ‘சரி, இப்பபார்,’ என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! ‘சண்முகம்’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது.

நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். ‘உம்… மேலே புரட்டு…’ புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. ‘சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் – என் இயற்பெயர்.

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.

கல்கண்டு உதவியாசிரியர்
ஒருநாள், ‘படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?’ என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

‘ஏதாவது வேலை தேடணும்…’ என்று இழுத்தேன்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது.

‘நீ என் கூடவே இருந்துடு,’ என்றார்.

‘சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,’ என்று விடைபெற்றேன்.

நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.

சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.

ஆசிரியரும், துணையாசிரியரும் ‘வா, போ’ என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் ‘சக்தி’ பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் ‘ரிசர்வ் டைப்,’ அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. ‘ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.

மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, ‘அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,’ என்றார்.

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.

சற்றுப் பொறுத்து, ‘சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,’ என்று கூட்டிப் போனார்.

அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். ‘தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார்.

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன்.

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார்.

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

குமுதம் நாற்காலி

தமிழ்வாணனிடம் பயிற்சி பெற்றுக் குமுதத்துக்கு வந்தால், தன் பளு ஓரளவு குறையும் என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி., கருதினார்.

குமுதம் மாதம் மூன்று இதழாக வந்துகொண்டிருந்தது அப்போது.

ஆசிரியருக்கு முழு நேரத் துணையாசிரியராய் ரா.கி.ர., பணியாற்றினாலும். ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த ஆனந்த தீர்த்தனும், வக்கீலாய் இருந்த ராம. நாரயணனும், இருவரும் பகுதி நேரத் துணைகளாய் இருந்து வந்தனர்.

நாங்கள் மூவரும்
கண்ணாடி
அணியாமல் ஒரு
காலத்தில்
இருந்திருக்கிறோமா?
இதில் நிற்கும் ஜ.ரா.சு.,
அன்று பிரம்மச்சாரி.
இப்போது தன் மூன்று
பிள்ளைகளுக்கும்
திருமணம்
செய்து முடித்துப்
பேரன்களும்
எடுத்து விட்டார்.

ஜ.ரா. சுந்தரேசன் நான் குடியிருந்த வெள்ளாளர் தெருவிலேயே ஓர் அறையில் தங்கி ரேடியோ அஸம்பிளிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கல்கண்டுக்கு கதைகள் நாடகங்கள் எழுதி வந்தார். அதனால், எனக்கு அவருடைய பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் ஒரே ஜில்லாக்காரர்கள் என்பதால் பாசம் சுரக்க, ‘டா’ உறவில் பழக ஆரம்பித்தோம். இன்று வரை அது நீடிப்பது வேறு விஷயம்.

குமுதத்தில் ’53 வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருற்தார்கள். அந்தப் போட்டியில் ஜ.ரா.சு., கலந்து கொண்டார். பரிசு பெற்றார். அலுவலகத்துக்கு ஜ.ரா.சு., வரப்போக, ஆசிரியர் அவரைக் கவனித்திருந்திருக்கிறார். அவரது எழுத்தும் பிடித்துப் போயிற்று. தமிழ்வாணனிடம் சொல்லிவிட்டுக் குமுதத்தில் இணைத்துக் கொண்டார்.

என்னதான் கல்கண்டில் ‘தேசபந்து’வாகக் கொட்டி முழக்கினாலும், பெரியவர்களுக்கு எழுதவேண்டும்; காதல் கதைகள் தரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளுர இருந்து வந்தது.

நான் கொஞ்சம் வெள்ளை. எதையும் மனசுக்குள் மறைத்து வைக்கத் தெரியாதவன். பட்டதைப் பட்டென்று சொல்லி, கேட்டு, கண்டித்துப் பலரின் வெறுப்புக்கு ஆளான அனுபவம் உண்டு.

அப்படித்தான் ஆசிரியரிடம் நேரில் சென்று, ‘எனக்கும் குமுதத்தில் இடம் வேணும்,’ என்று கேட்டுவிட்டேன்.

அப்புறம் எனக்கும் ஒருவழியாய் குமுதத்தில் துணையாசிரியர் நாற்காலி போடப்பட்டது.

நானும், சுந்தரேசனும் ஏதும் பிரச்சனை கிளாப்பா விட்டாலும், எங்களை வைத்துக் கொண்டு ஆசிரியரும் ரா.கி.ர.,வும் சிண்டு முடியும் தோரணையில் கலாட்டா செய்வது வேடிக்கையாய் இருக்கும்.

‘சீனியர் ஜ.ரா.சு., என்ன சொல்றார்?’ என்பார் ரா.கி.,

‘அதெப்படி? குமுதம் ஆபீஸ்ல முதல்ல சேர்ந்தவர் புனிதன்தானே? அதனால அவர்தான் சீனியர்,’ என்று வக்காலத்து வாங்குவார் ஆசிரியர்.

இது பல சந்தர்ப்பங்களில் பலவித சீண்டல்களாய் வெளிவரும்.

நாம் மூவர்

அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அமர்வதற்கு ரா.கி.ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் ஆகிய நாங்கள் மூவரும் முக்காலியானோம். முக்காலியில் எந்தக் காலுக்குப் பொறுப்புக் குறைச்சல்?

வெளியுலகத்தில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் அத்தனை பேர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று, தனித்தனி அறைகள், எடுபிடிகள், ஆளம்புகள் என்று அமர்க்களப்படும்போது, இங்கு ஒரே ஒரு ஹாலில் மூன்று மேசை நாற்காலியைப் போட்டுக் கொண்டு, எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் எப்படி இந்தியாவிலேயே அதிக வினியோகம் உள்ள பத்திரிகை என்று பாராளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டும் அளவுக்குக் கொண்டு செலுத்த முடிந்தது?

முதல் காரணம் ஆசிரியர் வியத்தகு மேதையாய் இருந்து, வேறு எவருக்கும் கட்டுப்படத்தேவை இல்லாத உரிமையாளராகவும் அமைந்தது. கால நேரம், சொந்த விருப்பு வெருப்பு, உடலுபாதை ஏதும் பொருட்படுத்தாமல் ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்றி வைப்பதே குறிக்கோளாய்க் கொண்டு, பாடுபட்டு உழைத்தோமே நாங்கள் மூவர், அது இரண்டாவது காரணம்.

ஆசிரியரின் கூர்ந்த மதியாகட்டும், அவரது படிப்பறிவாகட்டும், அனுபவங்களைக் கிரகித்துச் சொல்லும் நுணுக்கமாகட்டும், இந்தக் காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் கணிப்பாகட்டும், அவருக்கு முன்னால், நாங்கள் சிசுக்கள்தான்.

‘உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம். நான் வழிகாட்டுகிறேன். நீங்கள் சும்மா என் பின்னால் வந்தால் போதும்,’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுவே, எங்களுக்குச் சுமையேதும் இல்லை என்று எண்ண வைத்து லேசாக்கியது.

ஓர் இதழை ஒருவர் கவனித்தால் போதும், மற்ற இருவரும் இதழ் பொறுப்பிலிருந்து விடுபட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்று கழற்றி விட்டு விட்டார். இதனால் ஒவ்வொருவரும் ஒரு வாரம் பணியாற்றினால், இரண்டு வாரம் ஓய்வு என்ற பிரமையில், அந்த ஒரு வார வேலையில் முனைப்பாக ஈடுபட ஒரு தார்மீக உந்து சக்தி பிறந்தது. ஈடுபட்டோம்.

எவரிடம் எந்தத் திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்வதில், அவருக்கு இணையாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட இயலவில்லை.

தினமும் காலையில் வந்ததும், ஒரு ‘பெப்டாக்’ கொடுப்பார். அதிலே பத்திரிகை பற்றிய கனவுகளை விதைப்பார். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற ஆவலை, நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்வார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் அவருக்குப் பிடித்த மாதிரியில் நாங்கள் ஏதாவது எழுதி முடித்தால், தட்டிக் கொடுத்து மனசாரப் பாராட்டிப் புகழ்ந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இன்று வரை நினைத்துப் பெருமிதப்பட வைக்கிறது.

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டும்தான் என்னால் தர முடியும். இதுதான் அந்தக் காலத்துக் குமுதம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதோ சில அனுவங்கள்.

மக்கள் படிப்பு

இதழ் முடித்த நேரத்தில் ஒரு விச்ராந்தி முகத்தில் தெரியும். அதை ‘விடாயேற்றி உற்சவம்’ என்று வேடிக்கையாய் குறிப்பிட்டுச் சிரிப்பார் ஆசிரியர்.

இந்த உற்சவம் எங்களுக்கு மட்டும்தானே தவிர, ஒவ்வோர் இதழிலும் அவர் முகம் தெரியத் தனிப்பட அவர் படும்பாடு ஏதும் எங்களுக்குத் தெரியாது. தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்.

அந்த ஓய்வு நாட்களில் எங்களுக்கு நோகாமல் அப்படியரு பயிற்சி கொடுப்பார். படிப்றிவுப் பயிற்சி. எனக்கு ஸ்டீன்பெக், பி.ஜி.உட்ஹவுஸ், ஓ ஹென்றி சிறுகதைகள் அவரது நூலகத்திலிருந்து எடுத்துக்கொடுப்பார். இவற்றை ஆபீஸ் நேரத்திலேயே- மாடியில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து படிக்க வேண்டும். அடுத்த நாள் அதில் ரசித்த கட்டங்களைச் சொல்லி, எந்த எழுத்து முறையால் அது எடுபடுகிறது என்று சுட்டிக் காட்டி ஒரு விவாதம் நடக்கும். அடுத்து எழுதும் கதையில் அந்த உத்திகையாளப்பட வேண்டும்.

இதோடு நிறுத்தாமல் வெளியுலகத் தொடர்பு தேவை என்று இன்னொரு நாள் ஊர்சுற்ற அனுப்புவார்! வெறுமனே சுற்றிப் பார்த்து நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது வித்தியாசமான மக்களைக் கவனியுங்கள் அவரை பேட்டி எடுங்கள். படம் எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள். இரண்டொரு பக்கம் போடலாம்,’ என்றார்.

மக்களை பேட்டி முடித்த பிறகு, படம் எடுப்பதற்காக அப்புறமாய் ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அனுப்பி, நேரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட முன் அனுபவம் எனக்கு இருந்தது.

அப்போது எனது நண்பர் ஒருவர் யாஷிகா கேமரா ஒன்று எனக்காக சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். நான் அதற்குமுன் படம் எடுத்ததில்லை. யாஷியா கிடைத்ததும், உற்சாகம் பிய்த்துக் கொண்டது. தோளில் காமெராவை மாட்டிக் கொண்டு, தென் சென்னைப் பகுதியில் சுற்றினேன். சினிமாத் தொழிலாளர்களின் குடிசைக் குடியிருப்புப் பகுதியிலே ஒரு போர்டு கண்ணில் பட்டது.

இங்கே பாம்புகள் படப்பிடிப்புக்கு வாடைகைக்கு விடப்படும்.

‘நம்ம பச்சா கூடப் பாம்பு புடிப்பான் சார்!’ என்றார்.

இப்போது அவரது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘கூப்பிடு, கூப்பிடு,’ என்று காமெரா விரித்தேன்.

மூன்று வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. சும்மா ‘கொழுக் மொழுக்’கென்று இருந்தான். பாவா ஒரு பெரிய நல்ல பாம்பு ஒன்றை அவன் கையில் கொடுத்தார்.எனக்கே பயம். அவர், ‘விஷப் பை எடுத்தாச்சு சார். பயப்படாதே,’ என்றார்.

பையன் பாம்பைத் தூக்கிப் பிடித்தான். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாம்பை இறக்கி விட்டானோ என்னவோ! பையன் கன்னத்தில் ஓங்கி ஒரு போடு போட்ட அதே தருணம், என் காமெரா ‘கிளிக்’ செய்து விட்டது.

பிரிண்ட் போட்டுப் பார்த்தால், அந்த உயிர்த் துடிப்பான காட்சி அந்தி வெளிச்சத்தில் காண்ட்ராஸ்ட்டாய் அற்புதமாய் வந்திருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்து அடைந்த சந்தோஷம்… நண்பர்கள், ஓவியர்வர்ணம் அனைவரையும் கூப்பிட்டுக் காட்டிப் பாராட்டி, ‘யார் எடுத்தது தெரியுமா? நம்ம கார்ஷ் ஆப் ஒட்டாவா,’ என்றது நேற்றுப்போல் இருக்கிறது.

அந்தத் தெம்பிலே குமுதம் அட்டைக்காகவும் நான் அவ்வப்போது வண்ணப் படங்கள் எடுத்தேன். ‘தணிகை’ என்ற பெயரில் அவை அன்றைய குமுதம் இதழ்களில் இடம் பெற்றன.

சுந்தர பாகவதர் ஆனேன்

நாங்கள் முவரும் கட்டாயம் ஆளுக்கு ஒரு கதை ஒவ்வோர் இதழுக்கும் எழுதியாக வேண்டும். எல்லாரும் எல்லாவிதமான கதையும் எழுத வேண்டும்.

மொத்தம் ஐந்து கதைகள் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசம். நகைச்சுவை, கிராமம், இளைமைத் துள்ளல், க்ரைம் விஞ்ஞானம் அல்லது இவற்றில் காதல் ரசம் தூக்கல். இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் மட்டுமே வெளியாருக்கு ஒதுக்கியது. மற்ற மூன்றும் நாங்கள்.இந்த இதழுக்கு எழுதிய கதை வகை, அடுத்த இதழுக்கு எழுதலாகாது. நாங்கள் எழுத வேண்டிய கதைக்கருவைக் கையகலச் சீட்டில் எழுதிக் கொடுத்து ‘அப்ருவல்’ பெற்றுக் கொண்ட பிறகு, அதை ஆசிரியர் அவர்களுடன் பேசி விளக்கம் பெற்று, எந்த உத்தியில் எழுதுவது என்று தீர்மானித்து, பிறகே எழுத வேண்டும். ‘இது நம்ம பத்திரிகை. நமக்குப் பிடிச்ச கதையை நாமதான் எழுதணும். நம்மாலதான் கதைகள்’ என்றே அறிவிப்புக் கொடுத்தார்.

ஜ.ரா. சுந்தரேசன்

ஒருமுறை என் பங்காக நகைச்சுவைக் கதை எழுத வேண்டும். ஆசிரியருடன் பேசி முடித்தக் கதை உருவாக்கியாயிற்று. என்ன உத்தியில் எழுதுவது? அன்று காலை ஒரு காலட்சேபம் பற்றி விரிவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை நினைவூட்டி, அதே காலட்சேப உத்தியில் எழுதும்படி சொல்லிவிட்டார்.கதைப் பிரதியை அவர் படித்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவது வழக்கம். அன்று கதைப் பேசி முடித்ததும், அவர் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், ‘நான் பார்க்க வேண்டியதில்லை. கம்போசுக்கு அனுப்பி விடுங்கள் வந்து பார்த்துக் கொள்கிறேன்,’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாளை மறுநாள் வருவதாய்ச் சொல்லியிருந்தார்.

நானும் எழுதி அனுப்பி விட்டேன். ‘மீசா புராணம்’ என்பது கதைப் பெயர். மனசுக்குள் ‘பக் பக்’தான். அவர் நினைத்தபடி கதை இல்லாவிட்டால், நிர்தரட்சண்யமாய் நிறுத்தி விடுவார். நாளை மறுதினம்தான் பேஜ் தயாராகும். எப்படியும் மெஷின் புரூப் பார்க்க வந்து விடுவார். என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். இரவு போயிருந்திருக்கும்.

அன்று நான் ஆபீஸ் போனபோது, என்னைப் பார்த்து ஒரேயடியாய்ச் சிரித்தார். ‘நல்லாருந்தது. நடுநடுவே இந்த ஸ்டைல்ல கதை எழுதுங்க, என்றார்.

இந்த மாதிரிக் கதைகளுக்காக ‘சுந்தர பாகவதர்’ நாமகரணம் சூட்டிக் கொள்ளப் பெயர் கொடுத்தவர், சீனியர் ரா.கி.ர.தான்.

‘எங்களுக்கு எதற்கு நகை?’ என்று ஒரு சுந்தர பாகவதர் கதை. பேசிப் பேசி எழுதியதில் நீண்டு, அடுத்த இதழில் முடித்து விடலாம் என்று சொல்லி, அதிலும் முடியாமல் கட்டாயம் அடுத்த இதழில் முடியும் என்று அறிவித்து… இப்படித் தொடர்ந்து ஐந்து இதழுக்கு நீண்டது.

வெள்ளாளத் தெருவில் குடியிருக்கும் போது, அதே தெருவில் குடி இருந்த நடிகர் வி.எஸ்.ராகவன் எனக்கும், சுந்தரேசனுக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒருநாள் ஆபீஸ் வந்து, சுந்தரேசன் எதிரில் உட்கார்ந்து, அவர் கதையை நாடகமாக்கப் போவதாகக் கேட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

எந்தக் கதை என்று சுந்தரேசன் கேட்டபோது, ‘சுந்தர பாகவதர்னுட்டு எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேளாக்கும்? அதான் எங்களுக்கு எதற்கு நகை?’ என்றதும் சுந்தரேசன் சிரித்தார்.
அதை எழுதியது நான்தான் என்று அறிந்தபோது, வி.எஸ்.ராகவன் நம்பவில்லை அப்புறம் உறுதி செய்து கொண்டு ஒருவிதமாய் கதை வாங்கிச் சென்று, ‘நகையே உனக்கொரு நமஸ்காரம்!’ என்ற பெயரில் நாடகமாக்கி மேடையேற்றி, எம்.ஜி.ஆர்., கையால் எனக்கும் கேடயம் வாங்கித் தந்தார். வானொலியில் தொடர் நாடகமாய் அது இடம்பெற்றது. அப்புறம் தொலைக்காட்சி நாடகமாகவும் இடம் பெற்றது.

என்னை உசுப்பி விட்டு ஒரு சவால் உணர்வை ஏற்படுத்தி, சுந்தர பாகவதர் ஆக்கியது, ஆசிரியரின் வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

கவிதையிலே கதை

குமுதத்தில் இணைகையில் நான் வித்துவான் தேர்வு முதலாண்டு எழுதியிருந்தேன். தனியாகப் படித்து வித்துவான் பட்டம் பெற ஆவல். இந்த ஏக்கத்தை ஆசிரியரிடம் சொன்னேன்.

அவர் சற்றுப் பதறிப் போய், ‘வேண்டாம் வேண்டாம். பத்திரிகைக்கு உங்கள் தமிழறிவே அதிகம். இதற்கு மேல் வேண்டாம். ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டுங்கள்,’ என்று அறிவுரை வழங்கயதோடு, ‘உங்களுக்குக்கென்ன கவிதை எழுதணும். அவ்வளவுதானே? நடுநடுவே எழுதுங்க,’ என்று சமாதானம் செய்தார்.

அதன்படி ‘கண்ணம்மா’ என்ற பெயரில், மரபுக் கவிதைகளாய் அவ்வப்போது (அறுபதுகளில்) எழுதி வந்தேன். ஒரு முறை கதையன்று பேசும்போது, ‘இது கொஞ்சம் கவிதைத்தனமாக இருக்கே. கவிதையிலே எழுதிப் பாருங்களேன்,’ என்றார்.

பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு, ‘எதிர்பாராத முத்தம் போன்ற கதைக் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை அந்தத் தூண்டுதலில் நானும் ஒரு கவிதைத் கதை தயாரித்தேன்.

பாராட்டி வெளியிட்டார். அதன் பிறகுதான் பகுதி நேரக் கவிஞனின் கவிதைக் கதையே இந்த அளவுக்கு இருக்கும் போது, முழுநேரக் கவிஞரைக் கொண்டு கவிதைக் கதை செய்யச் சொன்னால், இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று ஆசிரியருக்குத் தோன்றியிருக்கும் போலும்.

கவிஞர் சுரதாவை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரிடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையன்றைத் தந்து, இதைக் கவிதையிலே மாற்றித் தர இயலுமா என்று கேட்டார். அவரும் பெருமையோடு ஒப்புக் கொண்டார்.

அலுவலகத்து மாடியிலேயே கவிஞர் சுரதா மீட்டிங் ஹாலில் அமர்ந்து அந்தக் கதைக் கவிதை எழுதித்தர, குமுதத்தில் இடம்பெற்றது பசுமை நினைவு.

பொள்ளாச்சியில் புனிதன்

ஒருமுறை நா.மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியில் விவேகானந்தர் விழா நடத்தினார். அதில் சென்னையிலிருந்து கி.வா.ஜ.,வுடன் ஆசிரியரையும் அழைத்திருந்தார். அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுண்டு. பேச்சுக்காக அவர் மெனக்கெட்டு ஆயத்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது இத்தனை மெனக்கெடல் தேவையா? என்று தோன்றும்.

அப்படி அவர் பொள்ளாச்சியில் சென்று வந்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். நினைவு கூர்ந்து, கூடுமானவரை அவர் வார்த்தையிலேயே தருகிறேன்.

‘நான் மேடையிலே உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்திலேயே, அந்தக் காலேஜ் பிரின்சிபால் உட்கார்ந்திருந்தார். அவர் என் காதுகிட்ட வந்து. ‘இப்ப உங்க புனிதன் வரப் போறார்,’ என்றார்.

‘நான், ‘வரமாட்டார்,’ என்றேன்.

ஏன் அப்படிச் சொல்றீங்க? நான் இங்க வர்றதுக்கு முன்னால அவரைப் பார்த்தேன். பின்னாலேயே வரதா சொன்னாரே,’ன்னார்.

நான், பார்த்திருக்க முடியாது. ஏன்னா, நான் ரயில் ஏர்றப்ப புளிதன்தான் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பிச்சார். என்கிட்ட சொல்லாம அவர் எப்படி வர முடியும்? என்றதும் முகம் ஒருமாதிரியாயிடுச்சு.

‘எனக்கு அப்பவே சந்தேகம்தான்னு சொன்னார்.

அவங்க காலேஜ் ஸ்டாப்பாம் அந்த ஆள். தான்தான் புனிதன்னு சொல்லிக்கிட்டு குமுதத்திலே வர்ற கதையை எடுத்து வச்சிட்டு அதைத்தான் எப்படி எழுதினேன், இன்ஸ்பிரேஷன் எது, காரெக்டர் எப்படி உருவாச்சுன்னெல்லாம் லெக்சர் வேற கொடுப்பாராம். எப்படியிருக்கு?

‘அதுக்கப்புறம் யாராவது புனிதன்னு சொன்னால், ‘யாரு, பொள்ளாச்சி புனிதனா?’ என்று கிண்டலடிப்பார்.

சொல்லச் சொல்ல எழுதுவேன்

அந்த நாளில் ஆசிரியரின் நாவல்கள் குறிப்பாக ஓவியம்- அவர் சொல்லச் சொல்ல நான்தான் பிரதியெடுப்பது வழக்கம்.

அவர் வீட்டுக்கு அழைக்கிறார் என்றால், பெரும்பாலும் எழுதுவதற்காகத்தான் இருக்கும். நீண்ட கைப்பிடியில் பலகை வைத்து, சாய்ந்து உட்கார்ந்து எழுதுவதற்கென்றே டிஸைன் செய்த அந்தப் பிரம்பு நாற்காலியில்தான், அவர் வீட்டில் என்னைப் பார்க்கலாம்.

அவர் டிக்டேட் செய்யும் அழகே அழகு! நடமாடிக் கொண்டு, நடித்துக் கொண்டுகொச்சயாய் அவர் பேசுவதை நான் இலக்கண சுத்தமாய் எழுதி விடுவேன் என்ற அவரது நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றி விட்டேன்.

நான் முறைப்படி 1988ல் ஓய்வு பெற வெண்டியிருந்தது. இருந்தம், ரா.கி.ர.,வைப் போல நானும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

முதல் ரிடையர்மெண்ட்

அந்த நேரத்தில் குமுதத்தில் அக்கறையுள்ள பலர், ‘உங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் உதவியாளர்களும் ஓய்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குமுதத்தின் எதிர்காலம் என்ன?’ என்கிற மாதிரி கேட்டு யோசிக்க வைத்தர்கள்.

அப்போதுதான் நிர்வாகத்தினர், புது ரத்தம் புகுத்த மாலன், பிரபஞ்சன் ஆகிய இலக்கியவாதிகளையும், ப்ரஸன்னா, ப்ரியா கல்யாணராமன் ஆகிய இளைஞர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இலக்கியவாதிகள் இருவருக்கும் குமுதம் சரிப்பட்டு வரவில்லை. விலகி விட்டனர். நானும் கண்ணியமாய் விலகிக் கொண்டு விட்டேன். உடனடியாய் தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.

அதே நேரத்தில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களும் என்னை கவுரவித்தார். கோகுலம் கவுரவ ஆசிரியராய் இருந்த அழ. வள்ளியப்பா அவர்கள் திடீர் மரணமடைந்திருந்த தருணம் அது. நான் துவக்கத்தில் தேசபந்துவாக கல்கண்டில் மிளிர்ந்ததை அவர் அறிவார். எனவே, அழ. வள்ளியாப்பா அவர்களின் இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். ஏதோ ஒருவகையில் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. வாரமலர் இதழில் அடுத்தடுத்து மேலும் மூன்று தொடர்கதைகள் எழுதினேன்.ஆனந்த விகடனில் ‘அப்புறம் என்ன ஆச்சு?’ என்று சுந்தர பாகவதரின் முதல் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. கல்கியில் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்தேன் பி.எஸ்.எஸ்., என்ற பெயரில்.

நான் குமுதத்தை விட்டு விலகிய பிறகும், ஆசிரியரை விட்டு விலகவில்லை, வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு மேல் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவேன்.

இரண்டாம் அப்பாயின்ட்மெண்ட்

அப்போதே ஆசிரியர் பேச்சில் தெளிவு காணாமல் போயிருந்தது. அவரது உடல் நிலை குறித்து வருத்தம் ஏற்பட்டது.

அக்டோபர் 1990ல் ஜ.ரா.சு., வீட்டுக்கு வந்தார். ஆசிரியர் என்னை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்ததாகச் சொன்னார்.

ஜ.ரா.சு., ஓய்வு பெறப் போவதாகவும், ஊரில் தமது நிலபுலன்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால். தொடந்து பணியாற்ற இயலாது என்றும், ரா.கி.ர.,வுக்கும் அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் என் துணையை ஆசிரியர் எதிர்பார்ப்பதாயும் சொன்னார்.

வீட்டில் உள்ள எவருக்கும் நான் திரும்பக் குமுதத்துக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. வீட்டிலிருந்தவாறே நான் சுதந்திரமாய் எழுவதுதான் எனக்கும் சுகம், அவர்களுக்கும் வசதி என்று நினைத்தார்கள். இரண்டாண்டு காலத்தில் நான் இதற்கு முன் இத்தனை தொடர்கதைகள் எழுதியதில்லையே!

இருந்தாலும் நான் நன்றி மறக்கவில்லை. முகவரி இல்லாமல் இருந்த எனக்கு, முகவரி கொடுத்தவர் ஆசிரியர். தந்தை ஸ்தானத்திலிருந்து நமது குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காட்டியது மறக்க முடியாதது. அவரை இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்தே மதிக்கிறேன். அவரே என் உதவி தேவை என்று ஆள் விட்டிருக்கும்போது, நான் அதைத் தட்டிக் கழிக்கத்தயாரில்லை,’ என்று மீறிக் கொண்டு சென்றேன்.

போகப் போகத்தான் தெரிந்தது, ஆசிரியர் எதை எதிர்பாத்து என்னை மீண்டும் அழைத்தார் என்பது.

பத்திரிகைக்கு இளரத்தம் தேவை என்று இன்றைய ஆசிரியர் குழுவினர் மூவரையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த மூரில் ஒருவரை நான் கொண்டுவந்து சேர்த்தேன்.

மூவருக்கும் பத்திரிகைத் தொழிலில் பயிற்சி தர எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். ரா.கி.ர.,வும் ஓய்வு பெற்று வீடு திரும்பி விட்டார். தொடர்ந்து ப்ரஸன்னாவும் விடைபெற்றுக் கொண்டார்.

ப்ருப் ரீடிங்கிலிருந்து பேஜ் மேக்கப் அமைப்பு முறை வரை அவர்கள் என்னிடம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டார்கள். புரிய வைத்தேன். புரிந்து கொண்டார்கள்.

‘சரியான நேரத்தில் நீங்கள் திரும்ப வந்து பெரிய ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாது,’ என்று மனம் திறந்து எனக்குப் புகழ் மாலை சூட்டினார் ஆசிரியர்.

எனக்கு அதுபோதும். ஆசிரியர் இடறி விழுந்து விட்டதாய்க் கேட்டு ஏப்ரல் 6ம் தேதி அவரைக் காண வீடு சென்றேன். மூக்கிலே கொஞ்சம் சிராய்ப்புத் தெரிந்தது.

இன்னும் இரண்டு நாளில் ஸ்டேட்ஸ் போவதாயும். அதுவரை குமுதத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைத்துச் செல்வதாயும் சொன்னார். அனேகமாய் எனக்கு விடைதரும் விதமாய் இருந்தது அவர் பேச்சு. ஏப்ரல் 17 ஞாயிறு இரவு ப்ரியா கல்யாணராமன் போன் செய்து ஒரு சகாப்தம் முடிந்த செய்தி சொன்னார்.

ஆசிரியர் என்னை ஆளாக்கியதற்கு பிரதியாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு செய்து விட்டதாகவே நிறைவடைகிறேன்.

ஆசிரியர் அழைத்ததற்காக குமுதம் அலுவலகத்திற்குள் திரும்ப நுழைந்தேன். இதற்கு மேல் எனக்கு அங்கு வேலை இல்லை என்று இரண்டாம் முறையாக ஓய்வு பெற்று திரும்பி விட்டேன்.

ஆசிரியர் இல்லாத அலுவலகத்துக்குள் எட்டிப் பார்க்கவும் இப்போது மனசு இடம் தர மாட்டேன் என்கிறது.

பின்னுரை

நாற்பது ஆண்டுகள்! குமுதத்தில் எனது நாற்பது ஆண்டு கால நீண்ட பயணம் ஆசிரியர் அவக்ளின் இறுதிப் பயணத்துடன் நிறைவெய்தி விட்டது.

எத்தனை எத்தனையோ இன்ப-துன்ப அனுபவங்கள். அவற்றில் கசப்பையெல்லம் விழுங்கிக் கெண்டு, எண்ணிப் பார்த்துப் பெருமிதம் கொள்ளத்தக்க இன்ப நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு நினைவு கூர்ந்தேன்.

அதில் ஓரளவு தம்பட்ட ஓசை எழுப்பியிருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. அது சாமானியனாய் இருந்த என்னை, இந்த அளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தக்கவனாய் மாற்றிய ஆசிரியரின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகத்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  1. August 20, 2012 at 8:12 am

    குமுதத்தின் சரித்திரத்தை படித்த உணர்வு – உங்கள் வளர்ச்சியும், குமுதம் இதழின் வளர்ச்சியும் பின்னிப் பிணைக்கப் பட்டவை, அல்லவா?
    குமுதத்தைப் படித்துத் தான் நாங்கள் வளர்ந்தது. பழைய நினைவுகள் அருமை.

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: