அ முத்துலிங்கம்
Stories:
அ.முத்துலிங்கம்
தமிழ் ஆளுமைகளில் அற்புதமான எழுத்தாளர் அ.முத்துலிங்கம். கனடாவில் வாழும் ஈழத் தமிழர். 76 வயது என்றால், நம்ப முடியாது. உறவுகள், உணர்வுகள் மீட்டும் படைப்பாளி
அ.முத்துலிங்கம் பற்றிய ஸ்கேன் இங்கே…
தினமும் காலையில் முக்கால் மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி. வசிக்கும் கனடா பகுதி குளிர் தேசம் என்பதால், மூன்று நான்கு மாதங்கள் தெருவில் நடக்க முடியாது. அந்தச் சமயங்களில் வீட்டின் உள்ளே டிரெட்மில் பயிற்சி எடுப்பார்.
”நம் உடம்புக்கு ஏற்ற உணவுமுறையைத் தேர்வு செய்யவேண்டும். என் உடம்புக்கு ஏற்ற, பிடித்த உணவு அரிசிச் சோறுதான். அதைத் தவிர இடியாப்பம், புட்டு, தோசை பிடிக்கும். ஆனால், இவற்றை வீட்டில் செய்வது இல்லை. அதை நிறுத்தி ஐந்து வருடம் ஆகிறது. எங்கேயாவது விருந்துக்கு வெளியே போனால், நான் விரும்பும் உணவை சாப்பிடுவேன்.”
காலை உணவு ஓட்ஸ் கஞ்சியும், முட்டையின் வெள்ளைக் கருவும்தான். காலை 11 மணிக்கு, பாதி ஆப்பிள். அல்லது பாதி வாழைப்பழம் (மீதிப் பாதி மனைவிக்கு). மதியம் வேக வைக்காத கீரை சாலட். அத்துடன் அவித்த கோழிக்கால் ஒன்று. மாலை, பிஸ்கட்டும் தேநீரும். மறுபடியும் இரவு ஒரு சப்பாத்தியும் தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் மரக்கறி. இரவு படுக்கும் முன், ஒரு பிஸ்கட், ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு. இதுதான் அவரது உணவுப் பட்டியல்.
தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பார். ”இளமையாக இருக்கும்போது, உடம்பில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கும். இது வயதாகும்போது, 60 சதவிகிதமாகக் குறையும். அதை ஈடுகட்ட, தாகம் எடுக்காத போதும், தண்ணீர் குடிக்க வேண்டும்” என்பார்.
”மனதில், தீய குணங்கள், பொறாமையை விட்டொழித்தாலே மனம் அமைதியாக இருக்கும். இதற்கெனத் தனியாக தியானம் தேவையே இல்லை” என்பது இவர் மந்திரம்.
– உமா ஷக்தி
இலக்கியப் பணிகள்
1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் சபையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் கடமையாற்றி தற்சமயம் ஓய்வுபெற்று தன் மனைவி கமலரஞ்சினியுடன் வசிப்பது கனடாவில். இவரின் மகன் சஞ்சயனும், மகள் வைதேகியும் வசிப்பது அமெரிக்காவில்.
அ.முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் லாப நோக்கற்ற குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
எழுத்தாளர் அறிமுகம் – மதுரபாரதி
சூரிய வெப்பத்தில் (கடல் ஆமையின்) முட்டைகள் பொரிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழிதேடி கடலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி நம்பிக்கை’ இப்படிச் சொல்கிறார் முத்துலிங்கம் ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ சிறுகதைத் தொகுதிக்கான சமர்ப்பணப் பகுதியில். அதுமட்டுமல்ல, அந்த வாசகருக்கும் அந்த உலகத்துக்கும் தனது நூலைச் சமர்ப்பிக்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பு, அக்கறை, உள்ளுணர்வு, செழுமையான மொழி, துல்லியமான சித்திரிப்பு–இவைதாம் அ. முத்துலிங்கம்.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம் தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் மேற்கொண்ட பணிகள் இவரை உலகின் பல நாடுகளுக்கும் இட்டுச் சென்றன. இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது ‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. அதே தலைப்பிலான இவரது இளவயதுக் கதைகளின் தொகுப்பு நூல் 1964ல் க. கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளியானது.
இவரது நூல்களில், ‘திகடசக்கரம்’ (1995), ‘வம்சவிருத்தி’ (1996), ‘வடக்கு வீதி’ (1998), ‘மகாராஜாவின் ரயில் வண்டி’ (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள்; ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ (சிறுகதைகளின் முழுத்தொகுப்பு; 2004), அங்க இப்ப என்ன நேரம்? (கட்டுரைகள்; 2005) ஆகியவை அடங்கும். இவருடைய கதைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப் பரிசுகளை வென்றுள்ளன. தமிழ்நாட்டில் இவரது கதைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
‘வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். ஒரு நடுநிசியில் அபூர்வமான ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும்; சிந்திக்க வைக்கும்; பிறகு ஆட்கொள்ளும். அப்படித்தான் தொடக்கம்’ என்று கதை உருவாகும் செயல்முறையை ஒரு சொற்காதலனுக்கே உரிய ஈர்ப்போடு முத்துலிங்கம் விவரிக்கிறார்.
முத்துலிங்கத்தின் ‘புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங் களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டி விடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகி யிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப் போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன’ என்று தனக்கே உரிய வகையில் முத்து லிங்கத்தின் எழுத்துகளை வர்ணிக்கிறார் தமிழின் முதுபெரும் எழுத்தாளரான அசோகமித்திரன். ஒரு வகையில் அசோகமித்திரனுக்கும் முத்துலிங்கத்துக்கும் எழுத்து ரீதியான ஒற்றுமையைப் பார்க்கிறேன். இருவருமே சாதாரணச் சொற்களில் அசாதாராணமான விளைவுகளைக் கொண்டுவந்து விடுபவர்கள். அசாதாரணமான நிகழ்வுகளைக் கூட அலட்டிக் கொள்ளாமல், சீண்டிவிடாமல், போகிற போக்கில் சொல்லி வாசகனை அதிர வைப்பவர்கள். எங்கே சிரிக்கிறார்கள் எங்கே அழுகிறார்கள் என்பதை வாசகனின் மனம்தான் சொல்லுமே தவிர, அறிவு சொல்லாது. இது வெகு அரிதாகவே கை கூடும் கலை. ‘நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது’ என்று அசோகமித்திரன் முத்துலிங்கத்தைப் பற்றிச் சொல்லுவது அவருக்கே பொருந்துமே!
முத்துலிங்கத்தின் கதைக்களம் ஆ·ப்ரிக்கா வாக இருந்தாலும் ஆ·ப்கனிஸ்தானமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அந்த இடங்களையும் மனிதர்களையும் சம்பவங் களையும் முன்பே பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ‘இதை நானே கூட எழுதியிருக்கலாமே’ என்று தோன்றாமல் இருக்காது. ஆனால், அந்தப் பரிச்சயமும் எளிமையும் மிக ஏமாற்றுபவை. எல்லாப் பேனாக்களுக்கும் அகப்படுபவை அல்ல. ‘வாழ்க்கையில் கதையாக்க முடியாதது எதுவும் இல்லை’ என்று சாமர்செட் மாம் சொல்வதை முத்துலிங்கம் உண்மையாக்குகிறார். அதே சமயம், வாழ்க்கை அப்படியே கதை ஆவதில்லை என்பதை உணர்ந்து, தனது கற்பனையால் அதற்கு மெருகூட்டிவிடுகிறார். வாழ்க்கை எது, கற்பனை எது பிரித்தறிய முடியாதபடிக் கதைசொல்லும் திறன் அவருக்கே உரியது.
சிறு பத்திரிகைகளில் தொடங்கி வெகுஜனப் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் எழுதும் முத்துலிங்கம் எந்தக் கூடாரத்திலும் அகப் பட்டுச் சேற்றை வாரிப் பூசிக்கொள்ளவில்லை என்பது மற்றோர் அதிசயம். மனிதருக்குப் பட்டயம் எழுதிச் சார்த்தாமல், அவர்களை முழுமையாகப் பார்த்து, கருணை பூத்து, அரவணைக்கும் இவரது கதைகளைப் போலவேதான் இவருமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவருக்குக் கொள்கை அல்லது கட்சி ரீதியான அங்கீகாரங்களுக்கு அவசியம் கிடையாது.
‘அ. முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச்செல்பவை. நாம் அறியாத உலகங்களின் கதவுகளையும், சாளரங் களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை’ என்று அம்பை கூறும்போது நாமும் நமது மூச்சின் அடியில் ‘ஆமாம்’ என்கிறோம், மகிழ்ச்சியோடுதான்.
சூரியன் அதிகப் பிரகாசமாக எரிந்தது!
எனக்கு 17, 18 வயது இருக்கும். இலங்கையில் சுதந்திரன் பத்திரிகை ஞாயிறு தோறும் சிறுகதை பிரசுரிக்கும். பிரபல எழுத்தாளர்கள் அதில் எழுதுவார்கள். நான் ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். ஒவ்வொரு ஞாயிறும் ஆவலாகப் பத்திரிகையை பிரித்துப் பார்ப்பேன். கதை பிரசுரமாகும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
ஒரு ஞாயிறு காலை முடிவெட்டுவதற்காகச் சலூனுக்குப் போயிருந்தேன். எனக்கு முன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் சுதந்திரன் பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியே அதிர்ச்சிதான். என் கதை பிரசுரமாகியிருந்தது! முழுக் கதையையும் வேறு யாரோ எழுதியதுபோல படித்தேன். மற்றவர்களைப் பார்த்தேன் அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இத்தனை பெரிய விசயம் நடந்திருக்கு, ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. சூரியன் வெளியே அதிகப் பிரகாசமாக எரிந்தது. ரோட்டிலே கார்கள் அதிக வேகமாக ஓடின. ரேடியோ இசை அதிக இனிமையுடன் ஒலித்தது. முடிவெட்டும் கத்தரிக்கோல் அதிக ஓசையுடன் வெட்டியது. இந்த மூடர்கள் ஒன்றுமே அறியாது பேசாமல் இருந்தார்கள்.
புதியதைச் சொல், புதுமையாக எழுது
நான் புதுமைப்பித்தனை முதலில் படித்தபோது கற்றது தேய்வழக்குளை தவிர்ப்பது. தேய்வழக்குகளைத் தவிர்த்தாலே நல்ல எழுத்து வந்துவிடும். இன்றைக்கும் சிலர் ‘அவள் முகம் அன்றலர்ந்த தாமரைபோல சிவந்தது’ என்று எழுதுவதைப் பார்க்கலாம். சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் இடத்தில் மூடியைத் தள்ளிக்கொண்டு பொங்கும் தோசை மாபோல அவள் முகம் மலர்ந்து காணப்பட்டது என்று எழுதினார். அதுதான் எழுத்து. ஓர் எழுத்தாளர் சொல்வது வித்தியாசமானதாக இருக்கவேண்டும். ‘நாலாம் வகுப்பு மாணவனுக்குப் புரியும் தமிழில் எழுதவேண்டும் ஆனால் 4ம் வகுப்பு மாணவனின் தமிழில் அல்ல.’ மாணவன் எழுதுவான். ‘நானும் தம்பியும் அனாதைகள்.’ இதை ஓர் எழுத்தாளர் இப்படி எழுதுவார்: ‘நான்தான் என் தம்பியை வளர்த்தெடுத்தேன். என்னையும் நான்தான் வளர்த்தெடுத்தேன்.’
சேக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட்டில் ஓர் இடம் வரும். அவன் காதலி ஒஃபீலியாவிடம் பேசுகிறான். ‘God has given you one face and you make yourself another face.’ இன்றுவரை இந்த வசனத்தைப் பற்றி விமர்சகர்கள் பேசுகிறார்கள். மேற்சொன்ன வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நாலாம் வகுப்பு மாணவி எழுதக்கூடியது. ஆனால் சொல்லிய முறை எழுத்தாளனுடையது.
‘புதியதைச் சொல்; புதுமையாக எழுது’ என்று சொல்வார்கள். ‘என்னுடைய அம்மா ஒடிப்போன நாலாவது நாள் அவன் வந்தான்.’ இது ஒரு சிறுகதையின் ஆரம்பம். இதன் பின்னே சொல்லப்படப்போகிற விசயம் புதியதாகத்தான் இருக்கும். வாசகர் உடனே வாசிக்கத் தொடங்கிவிடுவார்.
வலியைப் பகடியில் கடக்கும் கதைகள் – நூல் விமர்சனம்: க.வை. பழனிசாமி
பிள்ளை கடத்தல்காரன்
(சிறுகதைகள்)
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில் – 629 001
பக்கம்: 192
விலை: ரூ.175
கடந்த 20 ஆண்டுகால அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இலக்கியத்திலும் கலையிலும் பெரிய மாற்றங்கள் நடந்துவிடவில்லை. இலக்கியம் வாழ்விலிருந்தே தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது. மனிதனின் மனவினை அதை வேறு வேறாக ஆக்கிக் காட்டுகிறது. அழகியல் சார்ந்தும் உண்மை சார்ந்தும் புனைவால் மயக்க வல்லது இலக்கியம். இந்த இடத்திலிருந்து நவீன வாழ்க்கையை எழுதுகிற வெகு சிலரில் கவனிக்கத்தக்கவராக அ.முத்துலிங்கத்தை உணர்கிறேன்.
நவீனமாக எழுத முயன்ற சுஜாதா இலக்கியத்தில் தோற்ற இடத்தில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். முத்துலிங்கத்திடம் இருப்பது பொதுவான தமிழ் அனுபவமல்ல. அவரின் தனிப்பட்ட அனுபவமும் அல்ல. புலம்பெயர்ந்த மக்களின், கடந்து வந்த வாழ்க்கையின் சாறு கலந்த அனுபவம். இவரது நவீன மொழியாடல் சுட்டும் இடமும் இடம் சார்ந்த வினைகளுமே இவருக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கின்றன.
சுஜாதா எழுதும்போது செயற்கையான வண்ணம் அதில் ஏறிக்கொள்ளும். முத்துலிங்கம் கதை சொல்லும் போது மண்ணை இழந்த துக்கமும் வலியும் ஏக்கமும் வார்த்தைகளில் படிகின்றன. சுஜாதா வசீகரமான மொழி நடையைப் பயன்படுத்தினாலும் அவரது எழுத்தை இலக்கியமாக எவரும் கொண்டாடவில்லை. இலக்கியம் குறித்த புரிதல் அவருக்குப் பெரிதாக இருந்தபோதும் அவரால் அதை நடைமுறைப் படுத்த இயலவில்லை. அவர் கண்டடைந்த மொழி நவீனமாக இருந்தபோதிலும் எழுத்தில் வாழ்க்கை வேர்களைத் தீண்டிய சுவடு இல்லை.
‘தமிழ்ஈழம்’ ‘அகதி’ ‘கள்ள பாஸ்போர்ட்’ ‘மரணம்’ இந்த வார்த்தைகள் தொகுப்பில் உள்ள பல கதைகளை முன் கேட்டிராத இடத்திற்கு நகர்த்துகின்றன. புத்தகத்தில் உள்ள மொழிதான் தமிழ். அவரது அனுபவம் முற்றிலும் வேறானது. புலம்பெயர்ந்த மக்களின் வலியில் வேரூன்றிய தமிழ். அதனால் இந்தச் சிறுகதைகள் பழக்கமான நமது தமிழ் வாழ்க்கையைப் பேசவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் இருத்தல் சார்ந்த அதிர்வுகளே எழுத்தின் சக்தியாக மாறுகின்றன.
போர்களால் குடும்பம் சிதைந்த இடத்திலிருந்து தொடங்கும் கதையின் நிகழ்வுகள் முடிவில்லாத மாறுதல்களைத் தந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை, யாழ்ப் பாணம், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என்று காலூன்ற மண் தேடி அலைகிறார்கள். மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையிலிருந்து ஜனிக்கிறது எழுத்து. இவரது சிறு கதையை வாசகன் இந்த இடத்திலிருந்தே வாசிக்க வேண்டும்.
இறுதிப் போரின் கடைசி நேரத்து வாழ்க்கை, மரணத்திலிருந்து மீள்வது, மரணம் பார்த்து, மீண்டும் மரணம் தீண்டி ஓடுவது… பிழைத்துப் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைக்க எல்லா நேரமும் போராடுவது. இந்த இடங்களில் தத்துவம், சிந்தனைகளுக்கு வேலை இல்லை. இவரது கதைகள் அவற்றைத் தூக்கி வெளியே எறிகின்றன. வாழ்தலை மட்டுமே யாசிக்கின்றன. வாழ்தலின் மேன்மையைப் பேசுகிற எழுத்தல்ல. எப்படியாவது உயிர் பிழைத்து வாழ்ந்தால் போதுமென ஓடுகிறவர்களின் துயரங்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் பேசுகிற எழுத்து.
கள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களைத் தீவிர வாதியாகப் பார்த்தே பழகியிருக்கிறோம். அதுதான் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் என்று கதைகளை வாசிக்கும்போது அறிந்துகொள்கிறோம். கள்ள பாஸ்போர்ட் ஒவ்வொன்றிலும் வலியின் கதைகள் நிரம்பியிருக்கின்றன. இதனால் இவரது பல கதைகளில் வலியே எழுத்தாகிறது. முத்துலிங்கம் அந்த வலியை உரக்கப் பேசாது சம்பவங்களின் வழியாக வலியை வாசகனிடம் கடத்திவிடுகிறார். இவரது எழுத்து சிறுகதையாக மாறுகிற இடமும் இதுவே.
‘பிள்ளை கடத்தல்காரன்’ புத்தகத் தலைப்பிலிருக்கும் கதை. கதைக்கும் பிள்ளைக் கடத்தலுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் ஏதோ ஒரு தொடர்பு. மாலில் அழுதுகொண்டிருக்கும் பிள்ளை சோமாலிய காவல் காரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. குழந்தையைச் சமாதானப்படுத்திவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும்போது லோகநாதன் அங்கு வந்துசேர்கிறான். லோகநாதன் கனடாவில் காத்திருப்பு அகதி. குழந்தையை மையமிட்ட கதையாகத் தோன்றினாலும் உண்மையில் அது அகதியின் கதையே. அகதியின் இடம் மனதில் மோதி மனம் கலைகிறது. சிறுகதை அதன் வேலையைச் செய்து முடிக்கிறது.
‘சூனியக்காரியின் தங்கச்சி’ கதையில் தங்கையைக் கணவன் மணந்ததால் தனித்திருக்கும் அமண்டா ஒருநாள் சிங்கள அகதி ஒருவனைச் சந்திக்கிறாள். அவன் கனடாவில் அகதியாக வாழ அனுமதி கேட்டு காத்திருக் கிறவன். ‘கனடாவின் புதிய சட்டம் அமுலுக்கு வந்து விட்டது. அது அகதிகளுக்கு எதிரானது. ஒரு வழக்கு அப்பீலில் இருக்கும்போதே அகதியை நாடு கடத்தலாம். வழக்கறிஞர் எனக்கு அச்சமூட்டுகிறார்’ என்று ஒரு கட்டத்தில் அவளிடம் சொல்கிறான். கதை முடிவதற்குள் ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள். இடையே இக்கதைக்குள் அவள் வாசித்த நாவலிலிருந்து கதைசொல் கிறாள். இதுவும் அவளின் கதையும் அகதியின் மனதில் மோதி உருவாகும் கதையே ‘சூனியக்காரியின் தங்கச்சி.’
‘ரயில் பெண்’ தலைப்பில் ஒரு கதையை யோசியுங்கள். தமிழ் வாசக மனத்தில் பொதுவான கதையொன்று ஓடும். மனதில் ஓடும் கதைக்கும் முத்துலிங்கம் சொல்லும் ‘ரயில் பெண்’ணுக்கும் சம்பந்தமே இருக்காது. ஒருநாள் ரயிலில் பயணம் செய்கிறபோது ஒரு பெண்ணைப் பார்க்கிறான். ஒருமுறை கண்களை எறிந்து அவனைப் பார்த்தாள். அப்போது முடிவு செய்துகொண்டான், கனடாவில் தற்கொலை செய்துகொள்வதாக இருந்தால் இந்தப் பெண் பயணிக்கும் பாதாள ரயிலுக்குக் கீழேதான் என்று. கொஞ்ச நேரமே பார்த்த பெண் அகதியாக ஏற்றுக்கொள்ளும் காத்திருப்புக்கு வலு சேர்க்கிறாள். அகதிக்கு ரயிலில் பார்க்கிற ஒரு பெண்ணின் முகம் போதுமானதாக இருக்கிறது. அவளை மனதில் நினைத்தபடியே துயரமான கணங்களை அவனால் கடக்க முடிகிறது. ரயில் பெண் அவனுக்குக் கடவுளின் முகம். நம்பிக்கையின் இடம்.
கதைக்குள் இவர் கொண்டு வரும் நிலப்பரப்பும் நிகழ்வுகளுமே கதையாகிவிடுகின்றன. ‘உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது’ கதையின் தலைப்பே வாசிக்கத் தூண்டுகிறது. கணவன் மனைவி இருவர்தான் கதைக்குள் இருக்கிறார்கள். சிறுகதையின் ஒழுங்கிற்குத் தொகுப்பில் உள்ள இந்தக் கதையை முதன்மையாகச் சொல்லலாம். கணவன் இயல்பான மனநிலையில் இருக்கிறான். மனைவி புதிரில் மறைந்திருக்கிறாள். ரூபவதி புனைவின் உச்சமாகக் கதைக்குள் வருகிறாள். மூன்றாவது ஒரு ஆள் இக்கதையில் வருகிறான். அவன்தான் கதைசொல்லி. “ரூபவதியிடம் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான்;” இப்படித் தொடங்குகிற வரியில் உனக்கு என்பதைக் கவனியுங்கள். கணவனைச் சுட்டிப் பேசுகிற கதை வாசிக்கும்போது நாமே அறியாது நம்மைக் கதைக்குள் தள்ளிவிடுகிறது. ரூபவதி கணவனிடம் எழுப்பும் ஒவ்வொரு கேள்வியிலும் புனைவின் ஈரம். அதனால் கதை முற்றிலும் புனைவின் தளத்திலேயே இயங்குகிறது. வாசித்து முடிக்கும்வரை புதிர் புனைவின் ஈரம் படிந்தே இருக்கிறது. தமிழின் கதைப் பரப்பை முன் வாசித்திராத இடத்திற்கு நகர்த்துகிறார்.
இலங்கைவாழ் தமிழ் மக்களின் 100 ஆண்டுகால வாழ்க்கையின் போக்கை ஒரு பாத்திர நகர்வில் அதிரவிட்டு நகர்கிற எழுத்து, ‘நிலம் எனும் நல்லாள்’. இந்த நூற்றாண்டின் தமிழ்க் கதை என்று இதை நான் தேர்வு செய்வேன். உலகச் சிறுகதைகளைத் தேடித்தேடிப் படிக்கும் நம் தமிழ்ப் படைப்பாளிகளில் எவ்வளவு பேர் இந்தக் கதையைப் படித்திருப்பார்கள் என்று தெரியாது. போராளியாக வாழ்ந்து போரில் தப்பித்து வந்த சைமனின் மன அவஸ்தைதான் கதையின் கரு. காட்டில் மறைந்து போரில் வாழ்ந்து கழித்த நினைவிலிருந்து மீள முடியாத மனதின் போராட்டத்தை முத்துலிங்கம் தனது சொல்முறையில் கலா உருவாக்கி வாசக மனத்திற்குக் கடத்துகிறார். தமிழ் ஈழம் என்ற சொல்லின் பின் இருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் நூறாண்டு வாழ்க்கை வேர்கொண்டிருந்த இடத்தைப் பேசுகிற கதை இது. போர் முடிந்ததும் நிறைய பணம் செலவுசெய்து தாய்லாந்து வழியாக மகனை மீட்கிறார். கனடாவில் பெற்றோரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை. கடந்துவந்த வாழ்க்கையை மறந்தால் கிடைத்திருக்கும் வாழ்க்கையைக் கொண்டாடி மகிழலாம். அவனால் முடியவில்லை.
“பழைய ஞாபகங்கள் தேடிவரும். பொருட்படுத்தக் கூடாது. புதிய வாழ்க்கைக்கு நீ தயாராக வேண்டும்” என்று அம்மா சொல்கிறாள். அவன் சொல்கிறான். “தயாராவதா? நான் எவ்வளவு இழந்துவிட்டேன். நான் போர் செய்துகொண்டு இருந்தபோது கொசோவோ என்று ஒரு புதிய நாடு உண்டாகிவிட்டது. அது எனக்குத் தெரியாது. யாராவது 23-20 என்று சொன்னால் அது புரியாது. இங்கே நாலு மணி என்றால் உலகத்தின் வேறு எங்கெங்கே நாலு மணி. அதுவும் தெரியாது. ‘வண்ணத்துப்பூச்சி காலிலே ஒரு காட்டை காவுகிறது’ என்று ஓர் அருமையான கவிதை வரி நேற்று சொன்னீர்கள். நான் காலிலே எந்தக் காட்டைச் சுமக்கிறேனோ? 20 வருடத்துக்கு மேலாக ஒரு நிலத்துக்காகப் போராடிய பின்னர் என்னிடம் மிஞ்சியது இரண்டு பழைய உடுப்புகள், ஒரு சோடி சப்பாத்து, ஓடாத கடிகாரம். புதிய எதிரிகள்” என்கிறான். இறுதியில் அவன் வீட்டைவிட்டு வெளியேறி இறந்துபோகிறான். மரணத்தைப் பலமுறை நெருங்கியவன் மரணமற்ற இடத்தில் இறந்துபோகிறான். கதையின் தலைப்பு நம்மைவிட ஈழ அகதிக்கு மிகவும் பொருள் சார்ந்தது.
‘கடவுச்சொல்’, பாஸ்வேர்ட் என்று நாம் அறிந்திருக்கும் சொல், ஒரு சிறுவனின் பாட்டியோடு கதைக்குள் தொடர்புபடுத்தப்படுகிறது. இலங்கையில் சாதாரண வாழ்தலில் இருக்கும் பெண் அமெரிக்கா சென்று புலமைப் பரிசலில் படித்து ஒரு யூத வாலிபனை மணந்துகொள்கிறாள். ஆப்பிரஹாம் அவள் பேரனின் பெயர். கதை தொடங்கும்போது பாட்டி சிவபாக்கியம் நியூயார்க்கிலிருந்து 80 மைல் தொலைவிலுள்ள முதியோர் காப்பகத்தில் இருக்கிறார். இந்தக் கதை எதைப் பேசுகிறது என்பதே கதையின் அழகியல் புதிர். பாட்டியின் தனிமையா? மகளின் மரபுப் போராட்டமா? செல்வச் செழிப்பான வாழ்க்கையை இழந்துவிடும் மகளின் அச்சமா? கடவுச் சொல்லாகப் பாட்டியின் பெயரை வைத்திருக்கும் பேரனின் இடமா? நவீன வாழ்தலில் எல்லாமுமே நவீனம்தானா? பணம் மனதில் எந்த எல்லைவரை ஊடுருவுகிறது என்பதையா அல்லது வேறு எதையோவா? கேள்விகளே இந்தச் சிறுகதையின் வெற்றி.
ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் கண்களில் கூச விமான நிலையத்தை நோக்கி காரில் பயணிக்கிறான் வசந்தகுமாரன். “அது நான்தான்”, கதை இப்படித் தொடங்குகிறது. மனைவி விநோதினி ரத்தினராசாவின் முகம் அவ்வளவாக வேரூன்றாத நினைவிலிருந்து அவளை அழைத்துப் போகக் காத்திருக்கிறான். சிறிது நேரத்தில் அவன் முன் ஒரு பெண் நிற்கிறாள். நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிடுகிறான். ஒன்றுமே பேசாமல் அவளுக்கு என்ன வேண்டும் என்பதுபோலப் பார்க்கிறான். அவள் சொல்கிறாள் “தெரியவில்லையா? நான்தான் உங்கள் மனைவி விநோதினி ரத்தினராசா” என்கிறாள். அவனுக்கு நன்றாகத் தெரிகிறது இவள் அவள் அல்ல என்று. ஆனால் நான்தான் அவள் என்கிறாள் தொடர்ந்து. மீள முடியாத சுழல் ஒன்றில் சிக்கிக்கொள்கிறான் வசந்தகுமாரன்.
ஒரு முடிச்சு விழுகிறது. அவன் எவ்வளவு முயன்றும் அந்த முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. அவிழாத புதிரில் வாசகனையும் மாட்டிவிடுகிற கதை. அவிழ்க்கப்படாத முடிச்சின் அதிர்வோடு கதை நகர்கிறது. இலங்கையிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. நான்தான் பேசுகிறேன். உங்களோடு மூன்று நாட்கள் வாழ்ந்தவள் என்கிறாள் வேறு ஒரு பெண். என்னைத் தேடி நீங்கள் வரலாம், வர வேண்டாம். நான் நிரந்தரமாக வெளிநாடு போகிறேன் என்கிறாள். அவன் பார்த்ததில் விநோதினி ஆகப் பெரிய புதிராக உருக் கொள்கிறாள். மின்னல் வேகத்தில் கதையை நகர்த்த மனதைத் தூண்டுகிற வார்த்தைகள். கதைக்குள்ளிருக்கும் அவள் நிதானமாகவும் தெளிவாகவும் அவசரமில்லாதும் இருக்கிறாள். இவரது பகடி, முன் வாசித்திராத பகடி. பகடியல்ல என்று நினைக்கிற இடத்தில் நிகழ்கிற பகடி. இது முத்துலிங்கத்தின் முத்திரை.
‘சின்னச் சம்பவம்’, அது சின்னச் சம்பவம் இல்லை என்று வாசித்துமுடிக்கும்போது உணர்த்துகிற கதை. சின்னச் சம்பவம் என்று எதுவும் உலகத்தில் கிடையாது என்ற ஆரம்ப வரிகளை நோக்கி நகர்கிறது கதை. டாக்ஸி ஓட்டமாக பயணிகளைப் பற்றிய தனது அனுபவங்களைக் கதைக்குள் கொட்டுகிறார் ஒரு சாரதி. சிகரெட் கேட்டு வாங்கிப் பிடித்துவிட்டு இரண்டு டாலரை தூக்கிப் போட்டுப் பிடித்தபடி நகரும் அல்காவை கதை முடிவில் புதிரில் தேடுகிறோம். வலிமிகுந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை இவரது எழுத்தில் எல்லாப் பெண்களின் வலியையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.
தொகுப்பிலிருக்கும் பல கதைகள் ஈழத் தமிழரின் போராட்டத்தை விவரிக்கவில்லை. குடும்பம் சிதைந்த நாடிழந்த மக்களின் வலியைக்கூட உரக்கப் பேசவில்லை. முத்துலிங்கம் காட்டுகிற கதைமுக நிகழ்வுகள் பேசாமல் எல்லாவற்றையும் பேசிவிடுகின்றன. வலியை, துயரங்களை, மரணத்தை, இழிவை, பசியை எழுத்தின் ஊடாக வரும் பகடியால் கடந்து போகிறோம். வாசிக்கும்போது குற்ற உணர்வில் அலைக்கழிக்கப்படுகிறோம்.
அ. முத்துலிங்கத்தின் எழுத்து, வாசிப்பில் ஏன் ஈர்க்கிறது? 100 ஆண்டுகள் தீவிரமாகப் போராடி வாழ்ந்து சிதைந்த தமிழ் மக்களின் இன்றைய இருத்தலுக்கான அதிர்வாக அவரது எழுத்து, வாசிப்பில் மாறிவிடுகிறது. அதனால் ஒவ்வொரு வார்த்தையும் இலக்கிய மொழியாக மாறுகிறது. அவரது நவீன சொல்முறை சிறுகதைகளைத் தற்கணத்தில் நிறுத்தி வாசிக்க வைக்கிறது.
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
கட்டுரைத் தொகுப்பு
- அங்க இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
***********************************************
பிறப்பு : சனவரி 19, 1937(1937-01-19)
கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை
துணைவர்(கள்) கமலரஞ்சினி
பிள்ளைகள் சஞ்சயன்,வைதேகி
மூளைசெத்தவன் – தென்றல்
நியூயோர்க் நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் டொக்ரர் ஒருவர் சமீபத்தில் சொன்ன உண்மைக் கதை இது. சொன்னவர் இலங்கைக்காரர். இந்த மருத்துவமனையில் அவர் சேர்ந்த புதிதில் அவருக்கு வயது முப்பது இருக்கும். இவரிலும் பார்க்க ஒரு சில ஆண்டுகளே வயதில் மூத்த அமெரிக்க வெள்ளை டொக்ரரும் அங்கே வேலை பார்த்தார். இந்த அமெரிக்கர் அதிநுட்பமான புத்திசாலி, மயக்கவியல் நிபுணர் (anesthesiologist). உலகத்தில் சிறந்த பத்து டொக்ரர்களை இந்தத் துறையில் எண்ணினால் அதில் இவரும் ஒருவராய் இருப்பார். அப்படிப் புகழும், திறனும் பெற்றவர்.
ஆனால் இவரிடம் மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. யாரையும் மதிக்கமாட்டார். இவருடன் வேலை செய்யும் பெரும் தகுதி பெற்ற டொக்ரர்களையும், சகாக்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார். இவர் வாயிலே இருந்து வெளிப்படும் வசைச்சொற்கள் ஒரு மருத்துவ மனையின் சுவர்களுக்குள் ஒலிக்கக் கூடாதவை. சிறு வயதில் இருந்து அவர் சேர்த்து வைத்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் தயக்கமில்லாமல் வெளியேவிட்டு அந்த இடத்தின் காற்றை அசுத்தப்படுத்துவார். அதிலும் அவருடைய எதிராளி ஒரு வேற்று நாட்டவனாகவோ அல்லது நிறம் குறைந்தவனாகவோ இருந்து விட்டால் அவருடைய சொற் பிரயோகங்கள் இன்னும் ஒரு மோசமான லெவலுக்கு கீழே இறங்கும்.
ஆனால் இதுவெல்லாம் தன்னுடன் வேலை செய்யும் சக டொக்ரர்களிடமும், அலுவலகக்காரர்களிடமும்தான். நோயாளிகளின் முன்னிலையில் அவர் குழைவதை கண்கொண்டு பார்க்க முடியாது. தன் உடம்பில் உள்ள எலும்புகளை எல்லாம் மறந்துபோய் வீட்டிலே விட்டுவிட்டு வந்தது போல உடம்பை நாலாக வளைப்பார்; ஐந்தாகச் சுருக்குவார். வசைபாடும் அதே வாய் கரிசனமான புகழ் உரைகளை அள்ளி வீசும். இலங்கைக்காரர் இவரிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். இவருடைய செயல்பாடுகள் அவருக்கு எரிச்சல் தரும். உலகத் தரமான ஒரு மருத்துவ மனையில், பிரமிக்க வைக்கும் தொழில் நேர்த்திகொண்ட இந்த டொக்ரர் செய்யும் நேர்மையற்ற காரியங்களை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஒரு முறை இந்த அமெரிக்கர் சாதாரணரண சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரிடம் அந்த வியாதியின் தீவிரத்தைப் பத்து மடங்கு அதிகமாக விவரித்து பயமூட்டினார். பிறகு பத்து நிமிடம் எடுக்கும் சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் இழுத்தெடுத்து நோயாளியைப் பிழிந்துவிட்டார். நோயாளியின் பையில் பணம் இருந்தால் அது இவர் பைக்கு மாறவேண்டும். அப்பொழுதுதான் திருப்தி. அவர் அறைக்குள் ஒரு நோயாளி நடந்து வந்தால் அவர் ஒரு பணப்பொதி நடந்து வருவதையே காண்பார்.
ஒருமுறை இலங்கைக்காரர் இந்த விஷயத்தைத் தயங்கியபடி எடுத்தபோது அமெரிக்கர் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார். “எட்டாயிரம் மைல் தூரத்தில் இருந்து நீ படித்து வந்ததை அங்கேயே போய் பிராக்டிஸ் பண்ணு. அதைச் செய்யமுடியாவிட்டால், உன்னு டைய தாயுடன் அலுவல் பார்த்து அதைச் சரிப்படுத்து” என்று யோசனை சொன்னார். அதற்குப் பிறகு இலங்கைக்காரர் தீயாரைக் கண்டால் தூர விலகு என்ற மாதிரி ஓடி ஒளிந்துகொள்வார்.
இந்த டொக்ரரிடம் இன்னொரு பலவீனம் இருந்தது. ஆடம்பரப் பிரியர். ஒவ்வொரு வருடமும் கார் மொடல் மாறியவுடன் புதிய கார் வாங்கிவிடுவார். அது விலை அதிகமான, மற்றவர் கண்கள் பார்த்துப் பொறாமைப்படும்படி உயர்ரக வாகனமாக இருக்கும். அவர் அணியும் ஆடைகளும் அப்படியே. மடிப்புகள் கலையாத, அளவெடுத்துத் தைத்த பளபளக்கும் உடைகள்.
அவர் அலுவலகத்தில் அவருக்கென்று பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட சுழல் நாற்காலி ஒன்று இருக்கும். ஸ்வீடன் நாட்டில் இருந்து வரவழைத்தது. மெல்லிய, பதப்படுத்தப்பட்ட மென்சிவப்பு ஆட்டுத் தோல் மூடிய இருக்கை. ஆசனத்தை மடிக்கவும், நிமிர்த்தவும், சரிக்கவும் இன்னும் பல கோணங்களில் அசைவதற்கும் ஏற்ற மாதிரி இவருடைய உயரத்துக்கும், பருமனுக்கும் இசைவாகச் செய்யப்பட்டது. அவர் அதில் சில பாகைக் கோணத்தில் சாய்ந்திருந்து, ஒரு சங்ககாலத்துச் சிற்றரசன் போல ஆட்சி புரிவார்.
சில வருடங்கள் கழித்து அவர்கள் டிப்பார்ட்மெண்டில் ஒரு கறுப்பு இன டொக்ரரும் சேர்ந்துகொண்டார். அந்தக் கணத்தில் இருந்து அமெரிக்கருக்கு அந்தக் கறுப்பு டொக்ரரைப் பிடிக்காமல் போனது. பலர் முன்னிலையில் அவரை இழிவு படுத்திப் பேசுவார். அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் ‘braindead’. ‘அவன் மூளைசெத்தவன், அவன் மூளைசெத்தவன்’ என்று காதுபடத் திட்டுவார்.
ஒரு நாள் நடந்த சத்திர சிகிச்சையின் போது அமெரிக்க டொக்ரரின் செய்முறையில் உள்ள ஒரு தவறைக் கறுப்பு டொக்ரர் சுட்டிக் காட்டியபோது அது பெரும் வாக்குவாதத்தில் போய்முடிந்தது. கறுப்பு டொக்ரரும் விட்டுக்கொடுக்கவில்லை. அப்பொழுது அமெரிக்கர் சொன்னார் “மறந்துவிடாதே! நீ ஆப்பிரிக்காவில் மரத்தில் ஏறும்பொது நான் இங்கே மயக்கவியல் நிபுணனாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். ஒரு நாளைக்கு நீ இந்த ரோட்டைக் கடக்கும்போது உன்னை ஒரு வாகனம் அடித்துவிட்டுப் போகும். அப்பொழுது உன்னை எடுத்துக்கொண்டு இந்த ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். அன்று பார்த்து இங்கு டியூட்டியில் நான் மட்டுமே இருப்பேன். இறந்துபோன உன் மூளையை திருப்பி மண்டை ஓட்டில் திணிக்கும் காரியம் என் மேற்பார்வையிலேயே நடக்கும். என்னைப் பகைக்காதே. என்னைப் பகைக்காதே!” என்று சத்தமிட்டார். பிறகு ஒரு மாதிரி அந்தச் சண்டை அடங்கிவிட்டது.
இது நடந்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. ஒரு நாள். முழு இரவு படிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. பனியும் மழையும் சேர்ந்து விழுந்த தினம். இந்த அமெரிக்க டொக்ரர் எதிர்ச் சாலைக்கு ஒரு காரியமாகப் போவதற்காக ரோட்டைக் கடந்தார். அந்தச் சிறு அவகாசத்தில் எங்கிருந்தோ விரைந்து வந்த ஒரு கார் அவரை அடித்துத் தூக்கி எறிந்தது.
ஆஸ்பத்திரிக்கு அவரைக் கொண்டு வந்தபோது அங்கு கடமையில் இருந்தது கறுப்பு டொக்ரர்தான். அவர் மூளை நிபுணர். எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை. அடிபட்டவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது. அதாவது கிட்டத்தட்ட அவர் ஒரு தாவரம் மாதிரித்தான். உடம்பில் உயிர் இருந்தது, ஆனால் மூளையின் செயல்பாடு நின்றுவிட்டது. சிறிது காலம் சென்று அவர் ஒரு மூளை இறந்தோர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். சில வருடங்களில் அங்கேயே இறந்தும் போனார்.
இப்பொழுது அந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பு அந்தக் கறுப்பு டொக்ரரிடம்தான். ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பெற்ற, பல கோணங்களில் மடிக்கவும், சரிக்கவும், சாய்ந்து கொடுக்கவும் பழக்கப்பட்ட அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது அந்த இலங்கைக்காரர்.
கண்முன் நடந்தது
உன் குதிரைகளை இழுத்துப்பிடி
எனக்கு முன்பு அங்கு வேலையில் இருந்தவர் ஒரு தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரர். அவர் ஒரு காலத்தில் அங்கே உயர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர், இப்பொழுது சோமாலியாவில் ஒரு பொறுப்பான பதவியில் கடமையாற்றினார். ஆனால் வாழ்நாள் முழுக்கக் கறுப்பின மக்களை ஆட்டிப் படைத்த அவருக்கு சோமாலியா மீதோ, அந்த மக்கள் மீதோ ஒருவிதக் கரிசனமும் இருக்கவில்லை. தன்மானத்தையும், தனித் துவமான சிந்தனையையும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத சோமாலியர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார். அவர் “உமக்குத் தெரியுமா, இந்த சோமாலியா மொழியில் ‘நன்றி’ என்ற பதத்திற்கு வார்த்தை கிடையாது. ஒரு சாக்கு நிறையத் தங்க நாணயங்களைக் கொடுத் தால் நன்றி கூறமாட்டார்கள். சாக்கைத் து¡க்கிப்போக ஒட்டகக்கூலி கேட்பார்கள்” என்பார்.
சோமாலியாவுக்குப் பணி நிமித்தம் வருபவர்கள் அங்கே ஒரு வருடம்கூடத் தங்குவதில்லை. இது விதி. சில நிறுவனங்கள் திறக்கும் வேகத்திலேயே மூடிவிடும். நான் வந்து சில வாரங்களிலேயே இந்தத் தென்னாப்பிரிக்கர் ஒருநாள் திடீரென்று சோமாலியாவைவிட்டு வெளியேறினார்.
வல்லரசான அமெரிக்காவின் பிளாக் ஹோக் ஹெலிகாப்டரை வீழ்த்தி, பதின் மூன்று அமெரிக்கப் படையினரைக் கொன்ற சம்பவம் சோமாலியாவில் நடந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. அந்தக் காலகட்டத்தில் இரண்டு பெரும் பிரச்சினை கள் சோமாலியாவை ஆட்டிப்படைத்தன. கண்ணிவெடிகள். இவை லட்சக் கணக் காகப் புதையுண்டு கிடந்தன. எவ்வளவு முயன்று இவற்றை அகற்றினாலும் ஆகக் குறைந்தது பத்து வருடங்கள் பிடிக்கும் என்று நிபுணர்கள் அபிப்பிராயப் பட்டார்கள்.
மற்றது சனப்பெருக்கம். இந்த உலகத்திலே உள்ள 192 தேசங்களிலும் ஆகக்கடைசியான வறுமை நிலையில் இருப்பது மொஸாம்பிக் நாடு. சோமாலியா அதற்கு வெகு நெருக்கமாக இருந்து கடைசி நிலைக்கு போட்டியிட்டது. இது தவிர, உலகத்தி லேயே அதிவேகமான சனத்தொகைப் பெருக்கம் கொண்ட நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. ஐ.நா.வின் கணிப்பின்படி அந்த நாட்டின் சனத்தொகை பத்து மில்லியனில் இருந்து ஐம்பது வருடங்களில் 40 மில்லியனாக பெருகும் சாத்தியக்கூறு இருந்தது. வறுமையும், சனத்தொகை வேகமும் மிகவும் மோசமான இணைப்பு.
இதைச் சரிப்படுத்துவதற்காகக் குடும்பக் கட்டுப்பாடு அலுவலகம் முனைப்போடு வேலை செய்தது. சோமாலியா கிளை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி ஏற்றிருந்தார். சாம்பல் நிறக் கண்களில் கனிவான பார்வை கொண்டவர். கறுப்புச் சால்வையால் தன் வைக்கோல் நிறத் தலைமயிரை மறைக் காமல் வெளியே புறப்படமாட்டார். விடாமுயற்சிக்குப் பேர்போன இவர் சோமாலியப் பெண்களைக் கொண்ட ஓர் அணி திரட்டி கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சார வேலைகள் செய்தார். தாய்சேய் நலனில் இவர் வெளிக்காட்டிய அதே அக்கறையைக் குடும்பக் கட்டுப்பாட்டிலும் காட்டினார். நிறையப் பெண்களை கூட்டங்களுக்கு இழுப்பதற்காக குழந்தை உணவுகளை இலவசமாக வழங்குவார். ஆனால் நாளடைவில் இவர் செய்யும் பிரச்சாரச் செய்திகள் ஆண்கள் காதுகளிலும் விழுந்து எதிர்ப்பு வந்தது. பிறகு அவருக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்களும் வரத் தொடங்கின.
என்னுடைய பல பணிகளில் ஒன்று விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பது. சோமாலியாவில், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கண்ணிவெடி விபத்துக்களில் செத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அலுவலகத் தில் வேலை பார்த்த அத்தனைபேரும் காப்பீடு செய்யப்பட்டிருந்தார்கள். எங்கள் அலுவலகத்தை சேர்ந்த சோமாலியர் ஒருத்தர் பணி நிமித்தமாக ஒரு கிராம அதிகாரியைப் பார்க்கப்போன இடத்தில் மிதிவெடியில் மாட்டி இறந்துபோனார்.
காப்பீட்டில் இருந்து அவருக்கு பணம் பெற்றுக்கொடுக்கும் வேலையை நான் துவக்கினேன். இன்சூரன்ஸ் நிறுவனம் சட்டென்று பணத்தைத் தூக்கிக் கொடுத்து விடாது. பாரத்துக்கு மேல் பாரமாக நிரப்பவேண்டும். வரைபடம் வரைந்து விபத்து வர்ணனையை முழுமையாகக் கூறவேண்டும். இன்னும் பல அத்தாட்சிப் பத்திரங்களை இணைக்கவேண்டும். இதற்குமேல் பல கேள்விகள் வரும். அதற்கெல்லாம் பதில் சொல்லி அந்தப் பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கிடையில் பெரும் அலுப்பு வந்து மூடிவிடும்.
இந்த இழப்பீடு சம்பந்தமாக ஒரு பெண் அடிக்கடி அலுவலகத்துக்கு வருவாள். இறந்தவர் வயதுக்கு இவள் மிகவும் இளமையானவள். அழகாக வேறு இருந்தாள். அந்த மனிதரின் சாவில் பெரும் துக்கம் அனுபவித்தவள்போல இல்லாமல் மலர்ந்த முகத்துடன் வந்து போனாள். ஒரு நாள் பணம் வந்துவிட்டது. இறந்துபோனவர் அவளுடைய பெயரையே வாரிசாகப் போலிசியில் குறிப்பிட்டிருந்தார். அவள் பெற்ற பணம் அவருடைய இருபது வருடச் சம்பளத்துக்கு ஈடானது. முகத்தில் ஒருவித ஆச்சரியத்தையோ, மகிழ்ச்சியையோ அவள் காட்டவில்லை. அந்தப் பெரிய தொகையைப் பெற முன் எப்படி நடந்து வந்தாளோ அதே மாதிரி அதைப் பெற்றபின்னும் நடந்து போனாள்.
இது நடந்து சில மாதங்கள் கழித்து ஒரு நடுத்தர வயதுப் பெண், துக்க ஆடை அணிந்து, மூன்று பிள்ளைகளை இழுத்துக் கொண்டு அலுவலகம் வந்தாள். தான் இறந்து போனவரின் மனைவி என்று சொல்லிக் கண்ணீர் விட்டாள். கணவரின் இழப்பீட்டுப் பணம் இன்னொரு பெண்ணுக்குப் போய்விட்டது அவளுக்குத் தெரியாது. போலிசியை மீண்டும் ஆராய்ந்தபோது மனைவியின் பெயர் அதில் குறிப்பிடப்படவே இல்லை. பணம் போனதுகூடப் பெரிய அதிர்ச்சியாக இல்லை, அவளுக்குத் தெரியாமல் ஒரு பெண்ணுடன் சகவாசம் வைத்திருந்ததும், அவளுக்கே முழுப்பணத்தையும் எழுதி வைத்ததையும் இந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சூரியன் கீழே போகுமட்டும் அலுவலக வாசலில் குழந்தைகளைக் கட்டிப்பிடித்தபடி அவள் இருந்ததாகப் பின்னர் பலர் என்னிடம் சொன்னார்கள்.
என்னுடைய வேலையில் இன்னும் சில துக்கமான பகுதிகளும் இருந்தன. அதில் ஒன்று கண்ணிவெடி அகற்றுவது சம்பந்தப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் பல இந்த ஒப்பந்தங்களுக்கு போட்டி போட்டன. கண்ணிவெடி அகற்றுவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. கிராமம் கிராமமாகக் கண்ணி வெடிகள் புதையுண்ட இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, எல்லைகளும் வகுக்கப்பட்டிருந்தன. மண்டை ஓட்டுக்குக் கீழே எலும்புகள் வரைந்த எச்சரிக்கைப் பலகைகள் அங்கங்கே மாட்டப்பட்டன. கிராமத்து மக்கள்நலக் குழுக்களை ஒன்றுகூட்டிக் கண்ணிவெடி அகற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டம் தயாரிப்பதில்தான் பிரச்சினை முளைத்தது. அவர்கள் சீக்கிரத்தில் இணைந்து ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. நாலு நாட்களுக்கு ஒருவர் என்று அந்த வருடத்தில் மட்டும் இறந்தவர்களின் தொகை 94. அப்படியும் மூப்பர் குழுக்களுக்கிடையில் ஒரு தீர்வும் ஏற்படவில்லை.
இந்த கிராமத்துக் குழுக்களைக் கூட்டி அரசாங்கம் சார்பில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரியின் பெயர் அப்துல் ஜாமா. ஒரு ஆமை ஊர்ந்து வருவது போல இவர் நடந்து வருவார். இவர் பேசுவதும் மெதுவாகவே இருக்கும். காதுகளை அவர் வாயிலிருந்து ஒரு அங்குலம் து¡ரத்தில் வைத்தால் ஒழிய அவர் சொல்வது ஒன்றும் புரியாது. அடிக்கடி ‘அவசரப்படவேண்டாம், உங்கள் குதிரைகளை இழுத்துப்பிடியுங்கள்’ என்று சொல்வார். சட்டென்று ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாதவர், ஆனால் எல்லாக் குழுக்களும் ஒருமனதாக முடிவு எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கண்ணிவெடி அகற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் பல மாதங்கள் தள்ளிக்கொண்டே போனது.
இப்படியான சமயத்தில்தான் ஒரு சம்பவம் நடந்து, அது முதல்முறையாக ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. கூனாகபாட் என்ற ஒரு கிராமம், வடமேற்கு சோமாலியாவில் ஹர்கீஸா என்ற நகரத்தில் இருந்து முப்பது மைல் து¡ரத்தில் இருந்தது. மிகவும் பின்தங்கியதும், ஏழைகள் நிறைந்தது மான இந்த கிராமத்தில் ஸ¥க்ரி என்ற பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய தகப்பன் 40 ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்டு அவளை நாலாவது மனைவியாக ஒரு கிழவனுக்கு விற்று விட்டான். அவள் கிழவனுடன் வாழ முடியாது என்று துணிச்சலாக முடிவெடுத்து ஒரு ஒதுக்குப் புறமான குடிசையில் வசித்தாள். கிழவனுடைய மூத்த மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் தான் வேலைக்காரியாகிவிடும் சாத்தியத்தை அவள் தீவிரமாக எதிர்த்தாள்.
ஸ¥க்ரியிடம் ஆடுகளும், ஒட்டகங்களும் இருந்தன. குர்ரா மரம் முண்டு கொடுக்கும் து¡ண்களும், களிமண் சுவர்களும், காட்டுப்புல் வேய்ந்த கூரையும் கொண்ட குடிசைதான் அவளுடைய உறைவிடம். அவளுக்கு முப்பது வயது தாண்டு முன்னரே மூன்று குழந்தைகள். இப்பொழுது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் அவள் சுறுசுறுப்பாக வேலை செய்தாள். அவளுடைய ஆடுகளையும், ஒட்டகங்களையும் இரண்டு பிள்ளைகள் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய்விட்டார்கள்.
அவளுடைய சின்ன மகன் தாஹிர் உடைந்துபோன டயர் ஒன்றை உருட்டி உருட்டி வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அந்த நேரம் ஸ¥க்ரிக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. அன்று பார்த்து அவளுக்குத் துணையாக யாரும் இல்லை. பக்கத்துக் குடிசைப் பெண்கூடத் தண்ணீர் எடுக்க வெகுது¡ரம் போய்விட்டாள்.
தாஹிரைக் கூப்பிட்டு மருத்துவச்சியை அழைத்துவர அனுப்பினாள். எப்படி அந்த இடத்துக்கு போகவேண்டும் என்பதை விளக்கமாகக் கூறினாள். அவனுக்கோ எட்டு வயது. தாய் கூறும்போது புரிந்தது, அவள் அடுத்த வாக்கியத்துக்குப் போனதும் முதலில் சொன்னது மறந்துபோனது. என்றாலும் இது ஒரு முக்கியமான சமாச்சாரம் என்பதில் அவனுக்குச் சந்தேகமில்லை. தாய் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே அவன் பிய்த்துக் கொண்டு ஓடினான்.
அவனுக்குத் தாய் தன்னை மெச்சும்படி இந்தக் காரியத்தைச் செய்யவேண்டும் என்பதில் விருப்பம். அவள் சொன்ன திசையில் வேகமாக ஓடினான். சிறிது து¡ரம் போன உடனேயே அடுத்த விவரம் ஞாபகத்துக்கு வர மறுத்தது. என்றாலும் திசையை மாற்றாமல் ஓடியதில் ஒரு சோளக்காடு வந்தது. அந்த அடையாளம் ஞாபகத்தில் இருந்தது. அங்கே பாதை இரண்டாகப் பிரிந்ததும் கொஞ்சம் தடுமாறிவிட்டான். இவன் நேராகப்போன பாதையைத் தெரிவு செய்தான்.
ஒரு நீளமான மரத்தில் மரங்கொத்தி ஒன்று செங்குத்தாக இருந்து கொத்தியது. அது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இஸ்க் என்று கையை உதறிக் கலைத்த போது அது விர்ரென்று எழும்பிப் பறந்து போனது. சந்தோசம் தாங்காமல் தலைக்கு மேலே ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டு ஒரு ஒட்டக நடனம் ஆடினான். அதைப் பார்க்க ஒருவருமே இல்லை. அவன் கண்களுக்கு முன்னே மண்டை ஓடு கீறி, கீழே இரண்டு எலும்புகள் குறுக்காக வரைந்த ஒரு படம் கம்பத்தில் நின்றது. அந்த மண்டை ஓடுதான் அவன் ஆட்டத்தை பார்த்தது. அதற்குக் கீழே கறுப்புப் பலகையில், வெள்ளை எழுத்தில் வலது பக்கம் தொடங்கி இடது பக்கமாக ஏதோ எழுதியிருந்தது. அவன் இன்னும் வாசிக்கப் பழகவில்லை. பள்ளிக்கூடமே போகவில்லை. சிறிது நேரம் மண்டை ஓட்டையே பார்த்தான். அதில் ஏதோ வசீகரமாக அவனை நிறுத்தியது. பின்பு வயிற்றை அமுக்கிப் பிடித்த தாயின் நினைவுவர மேலும் ஓடினான். வேகமாகப் போனவனை சூரிய ஒளி தடுத்தது. ஒரு சுருட்டு போன்ற வடிவத்தில் இருந்த ஏதோ ஒரு பொருள் அவனை இழுத்தது. அது உலோகமா யிருந்தது. அதைக் கையிலே எடுத்து உருட்டிவைத்து பார்த்தான். அந்த நேரத்தில் அவனுக்குத் தாயின் ஞாபகம் முற்றிலும் மறந்துபோனது.
ஸ¥க்ரி வலியில் துடித்தாள். தாஹிர் வந்துவிட்டானா என்று அடிக்கடி வாசலைப் பார்த்தாள். நெற்றியில் இருந்து தொடங்கிய வேர்வை வெள்ளமாக வழிந்து அவள் ஆடைகளை நனைத்தது. இது அவளுக்கு நான்காவது பிரசவம். முன் அனுபவம் இருந்தபடியால் அவள் தைரியத்தை இழக்கவில்லை. இரண்டு முழங்கால் களையும் மடித்து ஒரு வில்லுப்போல அவள் வளைந்துபோய் இருந்தாள். அடிக்கடி ‘ஹ¥யா, ஹ¥யா’ என்று அலறினாள். உடல் எடையின் மையம் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. சிரசு திரும்பிய குழந்தை எட்டு அங்குல து¡ரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் தாஹிர் இரண்டு மைல்களைக் கடந்துவிட்டான். எதிர்பாராத விதமாக அந்தக் குடிசையில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் எழும்பியது. அந்தச் சத்தத்திலும் இனிமை யான ஒன்றை ஸ¥க்ரி அவள் வாழ்நாளில் கேட்டதில்லை.
ஆனால் அவள் கேட்கக்கூடாத ஒரு சத்தம் இரண்டுமைல் தொலைவில் உண்டாகியது. அவளுக்கு குழந்தை பிறந்த அதே நேரம் டயர் விளையாட்டை நிறுத்திவிட்டு மருத்துவச்சியை தேடிப்போன அவளுடைய மகன் துண்டு துண்டாக வெடித்து சிதறினான்.
அங்கே பிரசுரமாகும், நாலு பக்கங்களுக்கு மேல் அச்சடித்தால் கட்டுபடியாகாத ஒரு சாணித்தாள் சோமாலி பேப்பர், மேற்கூறிய விபரங்களை ஒன்று விடாமல் 16 போயிண்ட் சைஸில் எழுதியது. அந்தக் கிராமத்து சனத்தொகை ஒரு தானம் கூடிய அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் ஒரு தானம் குறைந்து கணக்கு சரியானதையும் சுட்டிக்காட்டியது. கிராமத்து குழுக்களுக்குள் நடக்கும் உள்சண்டைகளால் கண்ணி வெடி அகற்றும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படாமல் இழுபடும் அவலத்தை உடைத்து வைத்தது. குதிரையை வெகு நேரம் இழுத்துப் பிடித்தால் அது ஓடவேண்டும் என்பதையே மறந்துவிடும் என்று சொல்லி அந்தச் செய்தியை முடித்திருந்தது.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் குடும்பக் கட்டுப்பாடு நிறுவனம் தன் அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியது. வைக்கோல் முடிப் பெண்ணும் வெளியேறினாள். கண்ணி வெடி அகற்றும் ஒப்பந்தக்காரர்கள் பல மாதங்கள் முடிவுக்காக காத்திருந்து வெறுத்துப்போய் வெளியேறினார்கள். 1999ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நான் வெளியேறினேன். மண்டை ஓடு போட்டு, பெருக்கல் குறிபோல இரண்டு எலும்புகள் கீழே கீறி, எச்சரிக்கை படம்போட்டு காப்பாற்றப்பட்ட பிரதேசம் அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கிடந்தது. குடும்பக் கட்டுப்பாடு அலுவலகத் தின் வேலையையும் சேர்த்து அது செய்தது.
இரவாகவே விடிந்தது
தற்செயலாகத்தான் அன்று நாட்டுக்கூத்துக்கு போவதென்று முடிவானது. விஜய மனோகரன் என்னும் தென்மோடி நாட்டுக்கூத்து கனடிய கிறிஸ்தவக் கல்லூரி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை, 11 ஆகஸ்ட் அன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் கனடாவில் மேடையேறிய நாட்டுக்கூத்துகள் என் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. ஆகவே அரைமனதோடுதான் நிகழ்ச்சியைப் பார்க்கப் போனேன். அன்று நான் போகத் தவறியிருந்தால் அந்த இழப்பு எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என இப்போது உணர்கிறேன்.
கிராமங்களில் கூத்து இரவு நேரத்தில் தொடங்கி அடுத்தநாள் காலைதான் முடியும். நடிகர்கள் எட்டுக்கட்டை சுருதியில் பாடும் குரல்வளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்; பாடவும் ஆடவும் நடிக்கவும் வசனம் பேசவும் தெரிவது அவசியம். இந்த நிலைமையில் கனடாவில் எப்படி கூத்துப் போட முடியும்? ஆனால் இத்தனை பிரச்சனைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார் இலங்கையில் தேசியவிருது பெற்ற பிரபல நெறியாளர் ம. ஜேசுதாசன். நாட்டுக்கூத்தை இரண்டரை மணி நேரத்துக்குச் சுருக்கி வழங்கிவிட்டார் இவர். நடிகர்களை தேர்வுசெய்து நாலு மாத காலமாகத் தீவிர பயிற்சி கொடுத்த பின்னர் கூத்தை மேடையேற்றியிருக்கிறார். ஒவ்வொரு நடிகரின் உடையிலும் கண்ணுக்குத் தெரியாமல் ஒலிவாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் அரங்கத்தின் கடைசியில் இருந்தவருக்கும் குரல் கணீரென்று கேட்டது. மிகச்சிக்கலான மின்விளக்கு அமைப்புக் கொண்ட மேடையை நாடகத்துக்கு பொருத்தமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.
விஜய மனோகரன் நாட்டுக்கூத்து யாழ்ப்பாணக் கரையோரப் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. கதைச்சுருக்கம் இதுதான்: ராச்சிய பரிபாலனத்தில் சோர்வடைந்த கோதி மன்னன் ஒருநாள் நாட்டின் விடிவுக்காகத் தவம் செய்ய எண்ணி ஆட்சியை ஆஞ்சலோ பிரபுவிடம் ஒப்படைத்துவிட்டுக் காடு செல்கிறான். அரசனாகப் பதவியேற்ற ஆஞ்சலோ நாட்டின் சட்டதிட்டங்களை மாற்றி மக்களை வதைத்து கொடிய ஆட்சி புரிகிறான். இவனது ராச்சியத்தில் விக்கிரமசிங்கன், உக்கிரமசிங்கன் என்னும் நண்பர் இருவர் கொலை கொள்ளை கற்பழிப்புகளை அரசனின் அனுசரணையுடன் செய்து வந்தனர். விஜயன், மனோகரன் ஆகிய இருவர் நேர்மை நெறி தவறாது வாழும் நண்பர்கள். விக்கிரமசிங்கன், விஜயனின் தங்கையான ஞானத்தைத் திருமணம் செய்ய வெறிகொண்டிருக்கிறான். இதற்கு விஜயனும் அவனது தங்கையும் சம்மதம் கொடுக்காத காரணத்தால் ஞானத்தைக் கடத்திச் செல்ல முயன்றபொழுது விஜயனின் நண்பன் மனோகரன் அவளைக் காப்பாற்றுகிறான். இதனால் கோபமடைந்த விக்கிரமசிங்கனும், உக்கிரமசிங்கனும் அரசன் ஆஞ்சலோவிடம் விஜயனும் மனோகரனும் அரசனுக்கெதிராகச் சதிசெய்கிறார்கள் எனப் பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆஞ்சலோ விஜயனையும் மனோகரனையும் தூக்கிலிடக் கட்டளையிடுகிறான். வனம் சென்ற கோதி மன்னன் இதையறிந்து மீண்டும் நாட்டிற்கு வந்து விஜயனையும் மனோகரனையும் காப்பாற்றி நாட்டையும் மீட்டெடுக்கிறான்.
நடிகர்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்ததால் பெயர் சொல்லிப் பாராட்டத் தேவையில்லை. எனினும் ஓரிருவரின் நடிப்பைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆஞ்சலோவாக நடித்த ஜோசப் அந்தோனிப்பிள்ளை, கண்களை உருட்டி, நெஞ்சை நிமிர்த்தி மிடுக்குடன் கால்களை தாளக்கட்டுக்கு உதைத்து ஆடியது நினைவில் நிற்கிறது. விஜயனாக நடித்த அன்ரன் அருக்கன்சிப்பிள்ளை வசனம் பேசும்போது அத்தனை நறுக்காகவும் உச்சரிப்பு சுத்தமாகவும் பேசினார். விக்கிரமசிங்கனாக நடித்த அல்ஃபிரெட் பிலிப்புபிள்ளையின் அகலமான உடற்கட்டும், ஆடையலங்காரமும், காத்திரமான குரலும் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்து, அவர் மேடையில் தோன்றும் போதெல்லாம் சபையில் சலசலப்பு ஏற்படக் காரணமாயிருந்தது. விஜயன் நீண்ட வசனம் பேசி நிறுத்த விக்கிரமசிங்கனிடம் பதிலாக ‘ஊம்’ என்ற உறுமல் மாத்திரம் வரும். சபையில் கரகோஷம் எழும். கதாநாயகி ஞானமாக நடித்த பெண் லெஃபன்ரா அந்தோனிப்பிள்ளை. கனடாவில் பிறந்து வளர்ந்த இவர், அருமையான தமிழ் உச்சரிப்பில் பேசியும், பாடியும் ஆடியும் நடித்தும் சபையோர் மனத்தில் இடம்பிடித்தார்.
ஒரு காட்சி முடிந்து திரை விழுந்ததும் ‘அட, இத்தனை அழகாகச் செய்திருக்கிறார்களே! அடுத்த காட்சி என்னவாயிருக்கும்?’ என்று யோசனை எழும். உடனேயே அடுத்த காட்சி தொடங்கும். அதைப் பார்த்தால் முந்திய காட்சியிலும் பார்க்க ஒருபடி மேலானதாகத் தோன்றும். அடுத்த காட்சிக்கு தயாராவோம். அது இன்னும் மெருகேறிக்கொண்டு போகும். இப்படி ஒவ்வொரு காட்சியும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு நிற்கும். என் நண்பர் ஒருவர் பனிக்காலத்தில் ஐஸ்லாந்துக்கு போனார். அங்கே இரவு முடிந்து அடுத்த நாளுக்குக் காத்திருந்தபோது அடுத்த நாளும் இரவாகவே விடிந்தது என்றார். அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
கோதி மன்னன் காட்டுக்குத் தவம் செய்யப் புறப்பட்டபோது ராணி அவனைப் போகவேண்டாம் என்று தடுப்பார். மன்னனோ மனம் மாறவில்லை, ஆனால் ராணி தொடர்ந்து கெஞ்சுவார். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் சீஸரை அரசவைக்குச் செல்லவேண்டாம் என மன்றாடும் கல்பூர்னியாவை இந்த இடம் ஞாபகமூட்டும். சொற்ப நேரமே ராணி மேடையில் தோன்றினாலும் நாடகம் உயிர்பெறுவது அங்குதான். ராணியின் அழகும், உணர்ச்சி பாவமான நடிப்பும், பாட்டும், ஆட்டமும், வசனமும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன. இதிலே எல்லோரையும் ஆச்சரியப்படவைத்த விசயம் ராணியாக நடித்தவர் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்.
ஒரு மேடை நிகழ்வு நல்லது என்று முடிவு செய்வதற்கு அதில் ஆகக் கடைசியான பாத்திரம் எப்படி நடித்தது என்பதையும் பார்க்கவேண்டும். உதாரணத்துக்குக் கதாநாயகி ஞானத்தின் தோழியாக வந்த பெண். அவருக்கு வசனமே இல்லை. கதாநாயகியின் பின் செல்வதுதான் அவர் வேலை. இருந்தும் கண்களாலும், கைகளாலும், உடல் அசைவுகளாலும் தன் இருப்பை முக்கியமாக்கி சபையோரின் கவனத்தை ஈர்த்துவிட்டார். நெறியாளரின் நுணுக்கமான கவனிப்பு சிறுசிறு பாத்திரங்களையும் மெருகேற்றிவிட்டது.
‘இந்த வெற்றியின் ரகசியம் என்ன?’ என்று இசைத்தென்றல் ம. ஜேசுதாசனிடம் கேட்டபோது அவர் சொன்னார், ‘வடமோடி நாட்டுக்கூத்தில் ஆட்டத்திற்குத்தான் முக்கிய இடம். ஆனால் தென்மோடி நாட்டுக்கூத்தில் இசைதான் அதன் ஆதாரம். ஆகவே எல்லா நடிகர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்தே இசைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இசை அறிவுக்கு ஏற்றமாதிரிப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. இதில் ரகசியம் ஒன்றுமில்லை. ராகசுத்தம், சுருதி, தாளம் அவ்வளவுதான். இவை சரிவந்தால் கூத்து சரிவருகிறது என அர்த்தம்.’
இந்தக் கூத்தின் வெற்றிக்கு காரணம் பிரபலமான அண்ணாவியார் ம. ஜேசுதாசன் நெறியாள்கை மற்றும் பிற்பாட்டு வந்து இணைந்து நடிகர்களை அணைத்துக்கொண்டு போனதுதான். ஜேசுதாசன் கீபோர்டில் வாசிக்க அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அன்ரன் சுவகீன்பிள்ளை, ஜூட் நிக்கொலஸ், கலாசினி பரமநாதன், மனுவல் ஜேசுதாசன்; டோலக் ஜெகதீஸ் மற்றும் தபேலா டின்சன் வன்னியசிங்கம்.
இதைத் தயாரித்த எஸ்.ஜே.வி. ஆனந்தன், பாரம்பரியக் கலையை அதன் ஆத்மா கெடாமல் நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தியிருந்தார். மேடையமைப்பு, உடையலங்காரம், ஒப்பனை ஆகியவற்றைத் தனியொருவராகப் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருப்பது இவரது சாதனை. இதன்மூலம் திரட்டப்பட்ட நிதி கனடா சன்னிபுரூக் மருத்துவ நிலையத்தின் கேன்சர் பிரிவுக்கு வழங்கப்படுகிறது. தென்மோடி நாட்டுக்கூத்து கலையை மேலும் வளர்த்தெடுத்து இன்னும் பல மேடையேற்றங்களை ஆனந்தன் செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் – சிறுகதை
அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது.
ஆணா? பெண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண், பெண் பேதம் இருப்பது எனக்கு கன நாளகத் தெரியாது. அதைக்கண்டு பிடிப்பதற்கு என்ன குறுக்குவழி என்பதையும் அப்போது யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை. சில நிபுணர்கள் பார்த்த வாக்கிலேயே சொல்லிவிடுவார்களாம். பெண்ணென்றால் வழிக்குக் கொண்டு வர கனநாள் ஆகும். பிகு செய்துகொண்டே இருக்குமாம். ஆனால் அணைந்துவிட்டால் உயிர் உள்ளவரை விசுவாசமாக செயல்படும். ஆண் அப்படியில்லையாம். ஆரம்பத்தில் அளவுக்கதிகமாக ஒத்துழைக்கும்; நாள் போகப்போக காலை வாரி விட்டுவிடுமாம். முன்பின் தெரியாத விவகாரத்தில் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று நொந்து கொண்டேன். ஒரு திடீர் உந்துதலால்தான் கம்புயூட்டர் ஒன்று வாங்குவதாக முதல்நாள் இரவு எங்கள் வீட்டில் முடிவாகியது. என் ஒன்பது வயது மகன் அரவிந்தன் தன்னுடைய சிநேகிதர்கள் எல்லாரிடமும் கம்புயூட்டர் இருப்பதாக அளந்தான். என் ஆசை மனைவியோ ஆர்மோனியப்பெட்டிபோல இதையும் வளைத்துவிடலாம் என்று ஆர்வமான கனவுகளுடன் காத்திருந்தாள். இது என்ன வெண்டைக்காயா, நுனியை முறித்துப் பார்த்து வாங்க? கம்புயூட்டர் முந்திப்பிந்தி வாங்கியும் அனுபவமில்லை. கடைக்காரனுடைய முகலாவண்யம் கதைப்பதற்கு ஆசையூட்டுவதாகவும் இல்லை. வீர்யம் நிறைந்தவன் போல காணப்பட்டான். அவன் தலையில் இருக்கவேண்டிய முடியெல்லாம் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் வந்து கொண்டிருந்தது. எனக்கு அவன் சொன்ன விளக்கங்களும், கேட்ட கேள்விகளும் தலைகால் புரியவில்லை. நான் நியூயோர்க்கில் பட்டபாடு இங்கேயும் படவேண்டி வந்ததுவிட்டதே என்று யோசித்தேன்.
அமெரிக்காவுக்கு நான் முதன்முதலாகப் போனபோது வாய்விட்டு கேளாத நண்பர் ஒருத்தர் தூண்டில் ஒன்று வாங்கி வரும்படி கூறியிருந்தார். தூண்டிலில் மீனைப்பிடிப்பது தலையிலா, வாலிலா என்பது போன்ற அடிப்படை விஷயம்கூட எனக்கு தெரியாது. நண்பருக்கு `சரி’ என்று வாக்குக் கொடுத்துவிட்டேன். அமெரிக்காவில் தூண்டில் வாங்குவதற்காக ஒரு கடைக்குப் போனபோதுதான் எனக்கு பிரச்சனையின் பிரம்மாண்டம் வெளிச்சமானது. கடையென்றால் அது சாதாரண கடையல்ல. ஒரு கிரிக்கட் மைதானம் அளவில் மிகப்பெரிய சமாச்சாரம். இதிலே விசேஷம் என்னவென்றால் இந்தக் கடையிலே தூண்டில் மட்டும்தான் விற்பனை செய்தார்கள். மீன்பிடி சாதனங்களுக்கென்றே ஏற்படுத்தப்பட்ட பிரத்தியேகமான நிலையம். எத்தனையோ விதமான உபகரணங்கள்; முன்பின் பார்த்திராத வினோதமான தூண்டில்கள் சிறிதும் பெரிதுமாக கடையை நிறைத்துக்கிடந்தன. நான் அங்குமிங்கும் அண்ணாந்து பார்த்துக்கொண்டு அநாதையாகத் திரிந்தபோது, ஏங்க வைக்கும் வனப்புள்ள பணிப்பெண் ஒருத்தி தென்பட்டாள். குதி உயர் காலணியில் நறுக் நறுக்கென்று அவள் கத்தரிக்கோல் வெட்டுவதுபோல நடந்து வந்து `உங்களுக்கு ஏதும் உதவி தேவையா’? என்று மழலையில் கேட்டாள். நான் வந்த விஷயத்தை விளக்கினேன்.
அவளுடைய முதல் கேள்வி `உங்களுக்கு எப்படி வேண்டும்? வலது கை தூண்டிலா? அல்லது இடது கையா?’ என்றாள். `ஹா! அப்படியா சங்கதி? என்று நான் ‘வலது கை’ என்று பதில் சொன்னதும், இரண்டாவது கேள்வி எழுந்தது. ‘ஆற்றிலேயா? கடலிலேயா?’ என்றாள். ‘இது என்னடா வில்லங்கம்?’ என்று நான் யோசிப்பதற்கிடையில் அடுத்த கேள்வி வந்து விழுந்தது. ‘ஆழ்கடலா? கரை ஓரத்திலா?’ என்றாள். ‘தூண்டிலிலே இத்தனை விசயங்கள் இருக்கா?’என்று நான் தியானத்தில் இருந்தபோது மிகவும் முக்கியமான ஒரு கேள்விக்கணையை வீசினாள். ‘சிறுவனா? இளைஞனா? அல்லது முழு மனிதனா?’ என்றாள். நான் என்னுடைய நண்பருடைய உடல்வாகை மனத்தினால் அளவெடுக்க முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.
இப்படியாக அவள் கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டாள். ‘நின்று கொண்டு பிடிப்பதற்கா? இருந்து பிடிப்பதற்கா? படகில் போய் பிடிப்பதற்கா? படுத்திருந்து பிடிப்பதற்கா?’ என்றாள். (மரியாதை கருதி ‘சிறுநீர் பெய்து கொண்டு பிடிப்பதற்கா?’ என்பதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்). ‘சிறிய மீனா? பெரிய மீனா? என்ன எடை தாங்கும் தூண்டில் தேவை?’ இது மாதிரியாக ‘இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம்’ கேள்விகள் வந்து விழுந்தன. தலை சுற்றிவிட்டது. ‘டிக்கட் வேண்டாம் கையை விடு’ என்று ஆகிவிட்டது. (யாழ்பாணம் வெலிங்டன் தியேட்டரில் கவுண்டர் ஓட்டைக்குள் கையை நீட்டினால் டிக்கட் கொடுப்பவர் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார். பின்னுக்கு சனம் நெருக்கியபடியே இருக்கும். டிக்கட் கேட்டவருடைய கையோ முறிந்துபோகும் நிலை. அப்போது இவர் ‘டிக்கட் வேண்டாம் கையைவிடு’ என்று கத்துவது வழக்கம்). கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று பட்டது எனக்கு. அடுத்த முறை வரும்போது இவளுடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலை ஒரு புத்தகமாக அடித்துக்கொண்டு வருவது என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
இப்படியாக சந்தி பிரிக்காத பாடல்போல தலை சுற்றியது விவகாரம். மறுபடியும் நான் அந்தக் கடைக்கு கம்புயூட்டரை கொத்துக்கொத்தாக ஆராய்ச்சி செய்து வித்துவான் பட்டம்பெற்ற ஒரு நண்பரோடு படையெடுத்தேன். நண்பர் கம்புயூட்டருக்கு தலபுராணம் எழுதியவர். விடுவாரா? இப்போது வட்டியும் முதலுமாக அவர்களைப்போட்டு குடை குடையென்று குடைந்தார். அவர்களுடைய சம்பாஷணை முற்றிலும் ஒரு புதிய பாஷையில் நடைபெற்றது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இரண்டு பேருடைய வாயையும் மாறி மாறிப்பார்த்தேன். ‘ஹார்ட்ட்ரைவ், ப்ளொப்பி, மெகா பைட், சொப்ட்வேர், இண்டாபேஸ், யூபிஎஸ்’ என்ற வார்த்தைகள் எல்லாம் எனக்கு சிதம்பர சக்கரமாக இருந்தது.
ஒருமுறை கவி காளமேகம் பெயர் தெரியாத ஒரு ஊரில், பாஷை தெரியாத திம்மி என்கிற தாசியுடன் இரவைக் கழிக்கவேண்டி வந்ததாம். இரவு முழுக்க தாசி ‘ஏமிரோ வோரி’, ‘எந்துண்டி வஸ்தி’ என்றெல்லாம் இவரிடம் சரசம் செய்தாள். அவள் சொன்னது இவருக்கு புரியவில்லை. இவர் சொன்னது அவளுக்கு விளங்கவில்லை. ‘எமன் கையில் பட்டபாடு பட்டேன்’ என்கிறார் காளமேகம்.
‘எமிரோ வோரி’ என்பாள் ‘எந்துண்டி வஸ்தி’ என்பாள் தாம் இராச் சொன்ன வெல்லாம் தலைகடை தெரிந்ததில்லை போம் இராச் சூழம் சோலைப் பொருகொண்டைத் திம்மி கையில் நாம் இராப் பட்ட பாடு நமன் கையில் பாடுதானே அந்தக் கஷ்டம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர்களுடைய கதையில் அடிக்கடி ‘ராம், ராம்’ என்ற வார்த்தை அடிப்பட்டது. நான் மேலே இருப்பது ‘ராம்’ என்றும் கீழே இருப்பது ‘லட்சுமணன்’ என்றும் எனக்கே உரிய சாதுர்யத்துடன் ஊகித்துக்கொண்டேன்..
இவர்கள் இந்தச் சந்தடியில் இருக்கும்போது நான் எனக்காகத் தோதாக ஒருவரைக் கண்டுபிடித்தேன். அவருடைய கெமிஸ்ரி எனக்கு சரிவரும்போல் தோன்றியது. விஷயம் தெரிந்தவர்போலக் காணப்பட்டார். அவரிடம் போய் மெல்லப்பேச்சுக் கொடுத்தேன்.
‘கம்புயூட்டர்வாங்கும்போது நாங்கள் என்ன பாவிப்புக்கு அதை வாங்குகிறோம் என்பதை நிச்சயிக்க வேண்டும்’ என்றார். ‘ஒரு நெல்லுமூட்டை மாத்திரம் கொண்டுபோவதற்கு ஒரு திருக்கல் வண்டிபோதும், நூறுமூட்டை என்றால் ஒரு லொறி தேவைப்படும். குடும்பத்தோடு சுகமாகப் பயணம்செய்ய கார் வசதியாக இருக்கும். இல்லை, விசையாகப் போவதுதான் நோக்கம் என்றால் ரேஸிங்கார்தான் வாங்கவேண்டும்’ என்றார். இது என்னை யோசிக்க வைத்ததோடு குட்டையை மேலும் குழப்பிவிட்டது.
இதுதவிர ராட்சச கம்புயூட்டர்களும், தனித்தியங்கும் கம்புயூட்டர்களும் இருந்தன. மேசையில் வைப்பது, மடியில் வைப்பது (இதுபெண்ணாகத்தான் இருக்க வேண்டும்), கக்கத்தில் வைப்பது இப்படியாகப் பல. தலையில் வைப்பது இன்னமும் வரவில்லை என்றே நினைக்கிறேன். அது வந்துவிட்டால், பெண்கள் தலையில் மல்லிகைப்பூ வைப்பதற்கு பதிலாக இதை வைத்துக்கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடைசியில் நண்பருடைய ஆக்ஞைப்படி ‘486 கம்புயூட்டர்’ வாங்குவதென்று தீர்மானமாகியது. கம்புயூட்டர் என்றால் அதை மாத்திரம் தூக்கிக்கொண்டு வர முடியுமா? அதற்கென்று சில உபகரணங்கள் இருக்கின்றன. நான் கணக்குப்போடும் போது அதை மனதில் எடுக்கவில்லை. மெளஸ், மெளஸ் பாட், டிஸ்குகள், பேப்பர், ரிப்பன் என்று ஊருப்பட்ட சாமான்கள். பில் போடும்போது கணக்கு எக்கச்சக்கமாகிவிட்டது. பொங்கல் பானை வாங்கும்போது அதற்கென்று திருகணி, இஞ்சி இலை, கரும்பு என்று வாங்குவதில்லையா? அப்படித்தான் இதுவும் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.
நாங்கள் எல்லாவற்றையும் காரிலே ஏற்றி திரும்பி வரும்போது நண்பர் ‘486 கம்புயூட்டர், 486 கம்புயூட்டர்’ என்று உச்சாடனம் செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப் பற்றி ஒரு பரணி பாடினார். எங்கள் ஊர் சிவக்கொழுந்து 1008 வேட்டி வாங்க வண்டில் கட்டி பெரியகடைக்கு போனதைப்போல் நானும் ‘எனக்கு 486 கம்புயூட்டர்கள் கிடைக்கப் போகிறது’ என்று மடைத்தனமாக ஒரு கணம் கணக்குப்போட்டதை எண்ணி வெட்கினேன். லத்தி எடுக்க நிற்பதுபோல் ஆவலோடு வாசலில் காத்திருந்தாள் என் மனைவி, மேகலா. அவளுக்கு பக்கத்தில் என் மகன். நிறை பொங்கல் பானையை இறக்குவதுபோல மெத்த மெதுவாக கம்புயூட்டரை இறக்கி உள்ளே கொண்டுபோய் ராகுகாலம் தவிர்த்த நல்ல வேளையில் ஒரு மேசையில் இருத்தினோம். முதல் வேலையாக சாமிக்கு தீபம் காட்டிவிட்டு வந்து கணிப்பொறியின் நெற்றியில் ஒரு குங்குமப்பொட்டு வைத்தாள் என் மனைவி. கைவியளத்துக்கு அரவிந்தன் அதில் ‘ஓம் ஸ்ரீராம்’ எழுதினான். இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு பரபரப்புடன் கம்புயூட்டரை இயக்கிப் பார்த்தோம்; தட்டிப்பார்த்தோம்; அதன் புது மணத்தை நுகர்ந்தோம். அது ‘கிர்ர், கிர்ர்’ என்று உயிர் பெறும் அதிசயத்தை வாய் திறந்து பார்த்து ரசித்தோம். அன்றுமுதல் அந்த கம்புயூட்டர் எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது.
முதல் நாளே நான் ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடித்தேன். கணிப்பொறி என்பது ஒரு ராட்சச வேலைக்காரன். சொல்லும் வேலைகளை எல்லாம் கச்சிதமாகச் செய்யும், எஜமானன் ஆகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமைதான். இன்னொன்று. பயந்து பயந்து இதை அணுகினால் அது எட்ட எட்டப்போய்விடும். எனது ஒன்பது வயது மகன் மீன் குஞ்சு நீந்துவதுபோல உற்சாகமாக அதனோடு ஒட்டிப்பழகிவிட்டான். கணிப்பொறியை அவனுக்க நிரப்பவும் பிடித்துக் கொண்டது. அதுவும் தன்னுடைய ரகஸ்யக் கதவுகளை அவனுக்கு தங்கு தடையின்றி திறந்துவிடத் தயாராகிவிட்டது.
எல்லோருக்கும் அவசரமாகச் செய்வதற்கு அதில் கனவேலை இருந்தது. என் மனைவிக்கு வீட்டுக் கணக்குகளும், சீட்டுக் கணக்குகளும் காத்திருந்தன. அரவிந்தனுக்கு பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பயிற்சி ஏற்கனவே இருந்தது. படங்கள் கீறவும், கேம்ஸ் விளையாடுவதற்கும் அவன் பறந்தான்.
அரவிந்தனுடைய நண்பர்கள் இப்பவெல்லாம் அடிக்கடி வந்து போகத்தொடங்கினார்கள். கம்புயூட்டருடன் அவர்கள் பொழுது முக்காலும் கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்று செய்து பாவித்தார்கள். கைதேர்ந்த நிபுணர்கள்போல் புதிய தலைமுறை கணிப்பொறி பற்றி நீண்ட விவாதங்களும், பட்டிமன்றமும் நடத்தினார்கள்.
என் மனைவியின் பொழுதுபோக்கு திசை மாறிவிட்டது. வீட்டுக்கணக்கு விவரங்களை எல்லாம் கணிப்பொறியில் நுணுக்கமாக பதித்துவந்தாள். அடிக்கடி அவளுக்கு தொலைபேசி வரும். ஒருமுறை சிநேகிதி ஒருத்தி என்னவோ கேட்க ‘கொஞ்சம் இரு; எனக்கு ஞாபகத்தில் இல்லை. கம்புயூட்டரைப் பார்த்து சொல்லுறன்’ என்று இவள் பெருமையாகச் சொன்னாள்.
புதிசாய் பிறந்த குழந்தை வீட்டை அடியோடு மாற்றுவதுபோல இந்தக் கணிப்பொறி எங்கள் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை கொண்டுவந்தது. நாங்கள் ஒருவருடன் ஒருவர் கம்புயூட்டர் பரிபாஷயிலேயே பேசப் பழகிக் கொண்டோம். பள்ளிக்கு எடுத்துப்போக மகனுக்கு சாப்பாடு தரும்போது அவன் ‘அம்மா, give me a Mega Byte’ என்று கத்துவான்.
மனைவியிடம் இது வேறுவிதமாக வெளிப்படும். ‘மேகலா’ என்ற பெயரை அவள் இப்போதெல்லாம் ‘Megaலா’ என்றே எழுதுகிறாள். காரணம் தெரியாமல் இதயத்தில் சந்தோசம் பொங்கும். அந்த நேரங்களில் என் விரல்கள் சில்லென்று குளிர்ந்திருக்கும் அவள் இடையைப் போய் தொட்டுவிடும். நளிப்பு காட்டிக்கொண்டே மெல்ல விலகிவிடுவாள். எட்டத்தில் நின்று ‘Press any key to Enter’ என்று சொல்லி விட்டு ஓடுவதற்கு தயாராக நிற்பாள். நான் எட்டிப்பிடித்து ‘If you want to Escape, press here’ என்ற என் உதட்டைத் தொட்டுக்காட்டுவேன். இந்த நேரங்களில் எல்லாம் ஒரு புதிய அன்னியயோன்னியம் எங்கள் குடும்பத்துள் வந்து பரவியதுபோல எனக்குப்பட்டது.
சமயங்களில் ‘அரவிந்தா! அரவிந்தா ! இஞ்ச வா ! என்று யானை ஆதிமூலத்தை கூப்பிட்டது போல ஓலமிடுவாள் என் மனைவி. ‘கம்புயூட்டர் இந்தக் கூட்டலை தப்பு தப்பாய் போட்டிருக்கு. இதை ஒருக்கா பார்’ என்பாள். என்னுடைய மகனும் ‘என்னம்மா, நீங்கள் சும்மா, சும்மா கூப்பிட்டு ட்ரபிள் போய் கொடுக்கிறீங்கள்’ என்று நடப்பு விட்டுக்கொண்டே போய் அந்தச் சில்லரை தகராறை சரிசெய்துவிட்டு வருவான். இப்படியாக அந்தக் கணிப்பொறியின் வருகைக்குப் பிறகு எங்கள் வீடு ஒரு விஞ்ஞானத் துள்ளல் துள்ளி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தது.
கன நாளாக ஒரு சிறுகதை என் மனதிலே ஊறப்போட்டுக் கிடந்தது. இப்போது முட்டியில் கள்ளுப்பொங்குவது போல அது பொங்கிக்கொண்டு வந்தது. இனியும் எழுதாமல் தாவரிக்க ஏலாது என்ற நிலைமை.
இரண்டு காதலர்களைப் பற்றியது அந்தக்கதை. காதலிக்கு மாற்றல் கிடைத்தது இன்னொரு ஊருக்கு போய்விடுகிறாள். தொலை தூரத்துக்கு போனாலும் அவளுடைய காதல் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் சூடுகுறையாமல் வளருகிறது. புது ஊரில் காதலிக்கு இன்னொருவனிடத்தில் மையல் ஏற்படுகிறது. பழைய காதலன் அவளை நம்பி, தபால் நிலையத்துக்கும், தொலைபேசி அலுவலகத்துக்குமாக காசை விரயம் செய்து கொண்டு இருக்கிறான். அவர்களுடைய தொலைதூரக் காதல் தொலைந்துவிடும் அபாயத்தில் இருந்தது. கதைக்கும் நான் ‘தொலை’ என்றே தலைப்பு கொடுத்திருந்தேன்.
சிறுகதையாகத் தொடங்கி நெடுங்கதையாக அது வளர்ந்துவிட்டது. ஆறாயிரம் வார்த்தைகளுக்கிடையில் அதை மடக்கி வைத்திருந்தேன். நான் நினைத்ததிலும் பார்க்க கதை நல்லாக வந்திருந்தது. காதல் வர்ணனை ஒரு புதுப்புயலை கிளப்பிவிடும் என்று எதிர்பார்த்தேன்.
.இதிலே ஒரு வசதி என்னவென்றால் கணிப்பொறியில் காகிதம் மிச்சப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவோ நன்மை. கையினால் எழுதுவதுபோல அடித்து அடித்து எழுதி, திருத்தங்கள் செய்து காகிதத்தை விரயமாக்கத்தேவையில்லை. எல்லா திருத்தங்களையும் கம்புயூட்டரில் ஒரேடியாகச் செய்துவிடலாம். எத்தனை மரங்கள் நிம்மதிப்பெருமூச்சுவிடும்!
ஒரு நாள் ஒரே மூச்சில் எட்டு பக்கங்களை அடித்து முடித்திருந்தேன். வேண்டிய திருத்தங்களை கணிப்பொறியிலேயே செய்துகொண்டேன். எழுதி, அடித்து அடித்து கைமுறியும் அவசியம் இப்போதெல்லாம் இல்லை. வேலையை முடித்து கைகளைத்தூக்கி, நாரியை நிமிர்த்தியபோது மின்சாரம் நின்றுவிட்டது. அடித்த அவ்வளவும் பாழாகி என்னுடைய ஆர்வம் கசங்கிப்போனது. முதலில் இருந்து திரும்பவும் இன்னொரு முறை அடிக்க வேண்டும்.
அடுத்த நாள் நண்பர்வந்தபோது இதைச்சொல்லி அழுதேன். எனக்கு சாதகத்தில் நம்பிக்கை இல்லை. கும்பராசிக்காரர் எல்லாம் அப்படித்தான். இருந்தும் என்னுடைய சாதகத்தில் ‘கம்புயூட்டர் தத்து’ இருப்பதாக சுதுமலை சாத்திரியார் சொன்னது என்னைக்கொஞ்சம் கவலைப்பட வைத்தது. அப்போது நண்பர் எனக்கு இரண்டு புத்திமதிகள் சொன்னார்.
ஒன்று, தலைபோகிற காரியம் என்றாலும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் டைப்செய்வதை சேமித்து வைக்க வேண்டும். இரண்டு, எங்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு டைரக்டலி உண்டாக்கி அதிலே எங்கள் வேலைகளை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதை எப்படிச்செய்ய வேண்டுமென்பதையும் விபரமாக விளக்கினார்.
அன்றிலிருந்து பொயிலைக் கன்றுக்கு பாத்தி கட்டுவதுபோல கணிப்பொறி தளத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் நானும், இன்னொரு பகுதியில் மனைவியும், மீதியில் அரவிந்தனுமாகப் பயிர் செய்தோம். எங்கள் படைப்புகளை இந்த வரப்புக்குள் வைத்துக் கொண்டோம். இதற்குப் பிறகு ஒரு ஒழுங்கு முறை வந்தது. ஆரம்பத்தில் எனக்கு கம்புயூட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஒரு இணக்கம் ஏற்பட்டது.
அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெள்ள மெள்ள அவிழ்த்து விடத்தொடங்கியது. என்னுடைய வேலையை வெகு சுலபமாக்கியது. அந்த மாயா விநோதங்களில் நான் என்னுடைய மனதைப்பறிகொடுத்தேன்.
உருக்கி எடுத்த இரும்பினால் செய்த ‘ரெமிங்டன்’ தட்டெழுத்து பொறியில் நான் ஆரம்பகாலத் தீட்சை பெற்றவன். அதைக் தூக்க இரண்டுபேரும், வைக்க நாலு பேரும் வேணும். நகல் எடுக்கும் மெசின்கள் வருவதற்கு முன்னரான ஒரு காலம் அது. எழு கார்பன் தாள் வைத்து, கைகளை தலை உயரத்துக்கு தூக்கி, மூச்சைப்பிடித்து ‘தேடி குத்தி’ டைப் செய்வதில் நான் ஒரு விண்ணன் என்று பேர் வாங்கியவன். இப்படி ஒரு ஆழ்ந்த பரவசத்தோடு நான் தட்டெழுத்து லீலைகள் செய்யும்போது அம்மி பொளிவதுபோல ஒரு விதமான சத்தம் வரும் என்று சொல்வார்கள்.
என்னுடைய மகன் அப்படியல்ல. அவனுடையள விரல்கள் பட்டுத்துணியில் படுவதுபோல் மெல்லப்பட்டு நகரும். விசைக்கட்டைகளில் அவன் விரல்கள் வண்ணத்துப்பூச்சி, பறப்பதுபோல தொட்டு தொட்டு பறந்தபடியே இருக்கும். எழுத்துகள் திரையிலே மின்னி மின்னி கை கோத்துக் கொண்டு வரும்பேது பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.
இதில் பல ரகஸ்ய பாதைகளை என் மகனே கண்டு பிடித்துக்கொடுத்தான். நான் முன்பே அவற்றை அறிந்திருந்தது போல ஓர் அலட்சியத்துடன் ஏற்றுக்கொண்டேன். எப்படி நகல் எடுப்பது, கத்தரித்து ஒட்டுவது, தேடுவது, அழிப்பது, எழுத்துகளை பெரிதாக்குவது, சிறிதாக்குவது போன்ற நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன்.
சொற்பிழைகளைக் கண்டுபிடிக்கவும், ழ, ள மயக்கங்களை நீக்கவும் சீக்கிரத்தில் பழகிக் கொண்டேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் அடித்தது ஒரு வார்த்தையைத் தேடிக்கண்டு பிடிப்பதும், பிறகு அதை மாற்றுவதும்தான். கதாநாயகனுடைய பெயர் ‘சந்திரன்’ என்று இருந்தது. அதை ‘ரமே’ என்று ஒரு கணத்தில் மாற்றிவிட்டது.
இதிலும் பார்க்க இன்னொரு அதிசயம் காத்துக் கிடந்தது. கதை ஆறாயிரம் வார்த்தைகளுக்கு மேல் நீடிக்கக்கூடாது. கணிப்பொறியில் கட்டளை கொடுத்தும் அது நொடியில் வார்த்தைகளை எண்ணிக் கூறிவிடும். அது மாத்திரமல்ல, எத்தனை பக்கம், எத்தனை வரிகள், எத்தனை பாராக்கள் என்று கச்சிதமாகச் சொல்லிவிடும். இது எனக்கு நல்ல வசதியாக இருந்தது.
இருதுபர்ணன் என்ற அரசன் தமயந்தியுடைய இரண்டாம் சுயம்வரத்தில் கலந்து கொள்ள தேரில் விரைகிறான். தேரை நளன் ஓட்டியபடியால் அது மின்னல் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. தேர் ஒரு சம தரையைக் கடக்கும்போது அங்கே தான்றிக்காய்கள் கூடைக்கூடையாகக் காய்த்திருப்பதைக் கண்டார்கள். அப்போது இருதுபர்ணன் தலையைத் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘பத்தாயிரம் கோடி காய்கள்’ என்று சரிகணக்காகச் சொன்னானாம். அவன் ஒரு பார்வையில் எண்ணும் ‘அட்ச இருதயம்’ என்ற கலையைப் படித்து இருந்தான். இந்தக் கம்புயூட்டரும் அப்படித்தான் அட்ச இருதயக் கலையில் கைதேர்ந்ததாக இருந்தது. ஆனால் இதையெல்லாத்தையும் சாப்பிடக்கூடிய ஓர் அதிசயத்தை அது எனக்காக அந்தரங்கமாக வைத்திருந்தது. அப்போது நான் அதனுடைய வஞ்சத்தையும். சூழ்ச்சியையும் கண்டு கொள்ளவில்லை.
நான் அந்த நெடுங்கதையை எழுதி முடிக்கும்போது இரவு இரண்டு மணி இருக்கும். திருத்தங்களுக்கு மேலாக திருத்தங்கள் செய்து கதை ஓர் அபூர்வ அழகுடன் வந்திருந்தது. இப்படியான கதைகள் ஆயிரம் வருடத்திற்கு ஒரு முறையே பிறக்கும் என்று சொல்வார்கள். மனைவியைப் பார்த்தேன். அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மகன், பால் வடியும் முகத்தைக்காட்டியபடி ஏதேதோ கனவில் மிதந்து கொண்டிருந்தான். இப்பொழுது அச்சடித்தால், பிரின்டர் ‘கர்க், கர்க்’ என்று ஊரையே கூட்டிவிடும். நாளை காலை அதைச் செய்யலாம் என்று நினைத்து கணிப்பொறியை மூடிவிட்டு படுத்துக்கொண்டேன். ஹா! என்ன மடத்தனமான முடிவு அது?
அடுத்தநாள் அதிகாலையில் எழுப்பி கணிப்பொறிக்கும், பிரின்டருக்கும் இணைப்பு கொடுத்தேன். கம்புயூட்டரை எழுப்பினேன். நல்ல பாம்பை உசுப்பி விடுவதுபோல ‘ஸ், ஸ்’ என்ற அது உயிர்த்தது. அந்தச் சத்தத்தை கேட்டுக்கொண்டு இருப்பதே ஒரு தனி ஆனந்தம். கதை சேமித்துவைத்த பைலைக் கூப்பிட்டேன். அது பேசாமல் கம்மென்று இருந்தது. இன்னொரு முறை விளித்தேன். அதற்கு கோபம் வந்துவிட்டது. ‘அப்படி ஒரு கோப்பே இல்லை!’ என்று ஒரே போடாகப் போட்டது. இந்த கம்புயூட்டரில் ஒரு சனியன் என்னவென்றால் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருக்கும். ஒருவருக்கும் இல்லாத நேரமாகப் பார்த்து ஒரு நண்பர் வந்து நூறு ரூபா உங்களிடம் கடனாக வாங்குகிறார். அடுத்த நாள் உங்களைப் பார்த்ததேயில்லை என்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் எனக்கும் இருந்தது.
முப்பத்தாறு பக்கத்தையும் சாப்பிட்டு ஏப்பம்விட்டுவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிபோல என்னைப்பார்த்தது. எனக்கு சாட்சிக்குகூட ஒருவருமில்லை. துருவித் துருவி தேடினேன். என்னுடைய யுக்தி ஒன்றும் பலிக்கவில்லை. அந்த கோப்பு இருந்த சிலமன்கூட இல்லை. எனக்கு அழுகை வந்துவிடும் போல் இருந்தது. ‘தொலை’ என்ற தலைப்பில் நான் கணிப்பொறியில் எழுதிய முதல் கதை உண்மையிலேயே தொலைந்து போய்விட்டது. ஒரு ஏழைப்புலவர். அவருடைய பரம்பரைச் சொத்து ஒரு பாக்குவெட்டி. உயிருக்கு அடுத்தபடி அவருக்கு அதுதான் எல்லாம். விறகு வெட்ட, கறி நறுக்க, பாக்குச்சீவ என்று எல்லாத்துக்கும் அதைத்தான் நம்பியிருந்தார். ஒருநாள் அதைக் காணவில்லை. புலவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவவில்லை. தேடு தேடு என்று தேடினார்.
விறகு தறிக்க, கறி நறுக்க, வெண் சோற்றுப்புக்கு அடகு வைக்க, பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலாறாகப் பிளக்க, பிறகு பிறகென்றே சொறியப், பதமாயிருந்த பாக்கு வெட்டி இறகு முளைத்துப் பறந்ததுவோ? எடுத்தீராயிற் கொடுப்பீரே!
இந்த கதிதான் எனக்கும். பக்குவமாக பணியாரம் செய்து பனை நார்ப்பெட்டியில் மூடி மாடாவில் மறைத்து வைத்ததுபோல இவ்வளவு கவனமாக இந்தக்கதையை கோப்பிலே செருகி வைத்தேனே ! எங்கே போனது. இறக்கை முளைத்து பறந்துவிட்டதா? பனி மூடிய அந்த அதிகாலையிலும் நான் நண்பரைத் தேடிக்கொண்டு ஓடினேன். ஆத்திரத்தோடு நண்பர் அவுக்கென எழுப்பி ‘இரண்டில் ஒன்று பார்ப்பது’ என்று பாய்ந்து வந்தார். அவர் கொடுத்த அந்தரங்க மந்திர விதத்தையெல்லாம் செய்து பார்த்தார். அது அசையவில்லை. குழையடிப்பது ஒன்றுதான் பாக்கி. எல்லாத்தையும் விழுங்கிவிட்டு ஒரு கெப்பரோடு இருந்தது. இறுதியில் பெண் கம்புயூட்டர் என்றும் பார்க்கமல் நண்பர் ‘குலுக்கல் முறையில்’ தன் சாமர்த்தியத்தைக் காட்டினார். அது அப்போது ஓர் அசிங்கமான பார்வையை அவர் பக்கம் வீசியது.
நான் அந்தச் சம்பவத்திற்கு பிறகு கணிப்பொறியை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. அதைப்பார்த்தால் கொன்றுவிட வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்கு வந்துவிடும். முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு போய்விடுவேன். அது செய்த நம்பிக்கைத் துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது. பவித்திரமான
எங்கள் குடும்ப சந்தோஷத்திலும், அன்னியோன்னியத்திலும் இப்படியாக ஒரு கீறல் விழுந்து விட்டதே என்று எனக்கு வேதனையாக இருந்து. தொன்றதொட்டு வந்த பாரம்பரியப்படி கதையை திரும்புவும் கையினால் எழுதுவதென்று தீர்மானித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் கதை ‘வர மாட்டேன்’ என்றது. கம்புயூட்டரைப் படைப்பதற்கு முன்பாகவே கடவுள் கைகளைப் படைத்திருக்கிறார் என்பது என் நம்பிக்கை. இருந்தும் எனக்கு கையினால் எழுத முடியவில்லை. கம்புயூட்டர்தான் தேவைப் பட்டது. அது இப்படிக் காலை வாரியும் எனக்கு புத்திவரவில்லை.
முந்திய கதை முற்றிலும் மறந்துவிட்டது. எழுத எழுத கரு மாறிக்கொண்டே போனது. என்ன எழுதுகிறோம் என்று எனக்கே புரியவில்லை. இப்படியாக என்னுடைய எழுத்து ஊழியம் கடவுளின் காருண்யத்தாலும், வாசகர்கள் முற்பிறவியில் செய்த நற்பயனாலும், அவசரத்தில் இழுத்த ‘ஸிப்’ போல தடைப்பட்டு அந்தரத்தில் நின்று போனது.
இந்தக் கஷ்டகாலத்திலும் என் மகன் அதனுடன் மிகவும் வாஞ்சையாகப் பழகினான். மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருப்பான். நீல நிறயானையும், சிவப்பு நிறக்குதிரையும் வரைவான். பள்ளியில் கொடுக்கும் வீட்டு வேலைகளை கணிப்பொறியில் செய்வான். கதை சொல்லும் போது ‘ம்’ சொல்லுவதுபோல, கம்புயூட்டரும் ‘ங்ம், ங்ம்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும். அவன் ஏதாவது தப்பாச் செய்யும் போதுதான் அப்படி எச்சரிக்கும். என் மகன் அந்த நேரங்களில் ‘கோவிக்காதே, கோவிக்காதே’ என்று சொல்லி அதைச் சமாளிப்பான்.
ஒருநாள் நான் வழக்கம்போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். மகன் கணிப்பொறியுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தான். விளையாடுவதும், அடிக்கடி சிரிப்பதுமாக சமவயது நண்பர்கள் இருவர் பழகுவதுபோல இருந்தது இந்தக் காட்சி. தொலைக்காட்சி கதாநாயகியின் தொப்புள் பிரதேசத்தில் மெய்மறந்து இருந்த நான் திரும்பி மகனுடைய கம்புயூட்டர் திரையைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நீத்துப் பூசணிக்காய் போல கொழுத்து திரை முழுக்க அடைத்துக்கொண்டு கிடந்தது என்னுடைய கதை. குண்டு குண்டான எழுத்து; தடித்த தலைப்பு. அதேதான் . என்னுடைய கதைதான்.
நான் இரண்டு தரம் வாயைத்திறந்து திறந்து மூடினேன். காற்றுத்தான் வந்தது. ‘விட்டிர்ராதே! விட்டிர்ராதே! பிடி’ என்று கத்தினேன். ஏதோ கன்றுக்குட்டி ஒன்று அறுத்துக்கொண்டு ஓடுகிறது போலவும் ‘தும்பைப் பிடி’ என்று நான் கத்துகிறது போலவும் அது இருந்தது. என்னுடைய மகன் குவளை மலர்போன்றகரு. நீலக் கண்களை இன்னும் அகல விரித்து என்னைப்பார்த்தான். அவனுடையள கை ‘மெளஸை’ அழுத்திப்பித்தபடியே இருந்தது. நான் பாய்ந்து கிட்டப்போய்விட்டேன்.
‘இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?” என்றேன்.
‘எனக்கு ஒண்டும் தெரியாது. நான் என்ரை டைரக்டரியில் தேடிக்கொண்டே வந்தேன். இது வந்திருக்கு. இது உங்கடையா?’ என்றான். எனக்கு அப்படியே அவனை எடுத்து கொஞ்ச வேண்டும் போல இருந்தது. நான் இன்னொரு தரம் பார்த்தேன். இவ்வளவு நாளும் என் கதையை தன் வயிற்றிலே வைத்திருந்து இரைமீட்டு தந்திருந்தது இந்தக் கம்புயூட்டர்.
பெற்றோரை ஏமாற்றி களவாக ஓடிவந்த காதலியைக் கண்டதுபோல ஆசை தீரப்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனந்தத்தில் என் கண்ணில்நீர் துளும்பி நின்றது. ‘வந்து விட்டாயா ! வந்துவிட்டாயா !’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். நான் கம்புயுட்டரைப் பார்த்தேன்.அதுவும் பார்த்தது. அதன் பார்வையில் இப்போதுகொஞ்சம் நட்பு தெரிந்தது.
அபாயத்தை தேடுவோர் – உயிர்மை
நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் கிராமத்தில் ஒருவர் தட்டச்சு மெசினில் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். அவருடைய விரல்கள் பரபரப்பாக வேலை செய்யும். ஓங்கி உயர்ந்து விசைகளைத் தட்டும். அதிலே செருகியிருக்கும் பேப்பர் ஒவ்வொரு வரியாக உயரும். உருளை வலது பக்க எல்லையை அடைந்ததும் மறுபடியும் இடது பக்கம் தள்ளிவிட்டு வேகமாக அடிப்பார். ஒவ்வொரு எழுத்தும் பேப்பரில் விழுந்து வார்த்தையாக மாறும். சிலசமயம் எழுத்துக்கள் தப்பாக விழுந்து வேறு வார்த்தையாகிவிடும். அப்பொழுது அந்த எழுத்துகளுக்கு மேலே xxxxx என்று அடித்து அந்த வார்த்தையை இல்லாமலாக்கிவிடுவார். எந்தக் காரியமானாலும் ஏதாவது தப்பு ஏற்பட்டால் அதைத் திருத்துவதற்கு ஒரு வழி இருக்கும்.
ஆனால் சில ஆபத்தான பொழுதுபோக்கு விளையாட்டுகள் இருக்கின்றன. அவற்றிலே ஏதாவது தப்பு ஏற்பட்டால் அவற்றைத் திருத்துவதற்கு வாய்ப்பே கிடைக்காது. பாராசூட்டில் இருந்து குதிப்பவர் ஒரேயொரு சின்ன பிழைவிட்டாலும் அவர் உயிர் போய்விடும். மலை ஏறுபவர் ஒரு கல்லிலே கையைப் பிடித்து தொங்கிக்கொண்டு அடுத்த கல்லுக்குத் தாவுவார். அதிலே ஒரு சின்னத் தவறு அவர் உயிருக்கு ஆபத்தானதாக முடிந்துவிடும். பனிச்சறுக்கு விளையாட்டில் எட்டும் வேகம் நம்பமுடியாதது. உலக சாதனை மணிக்கு 151 மைல் வேகம். கனடாவில் இந்த வேகத்தில் கார்கூட ஓட்ட முடியாது. சட்டவிரோதம். இந்த வேகத்தில் சறுக்கும் ஒருவர் சிறு தவறிழைத்தால் அதை அடுத்த சறுக்கலில் திருத்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் உயிரோடு இருக்கமாட்டார். இப்படியான பொழுது போக்கு விளையாட்டுகளில் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுவது கயாக் படகு ஓட்டம்.
உலகத்தில் வெவ்வேறு துறைகளில் மிக ஆபத்தான சாதனைகள் செய்த உச்சமான பத்து பேரின் பெயர்களை சமீபத்தில் ஓர் அமெரிக்கப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் காணப்பட்ட சில பெயர்கள்:
பாராசூட்டிலிருந்து குதிப்பது: லோயிக் ஜீன் அல்பெர்ட்.. இவர் 11,000 தடவை குதித்திருக்கிறார்.
பாறைகளில் ஏறுவது: – லின் ஹில் என்ற பெண். இவர் பாறை ஏறுவதில் ஆண்களையும் தோற்கடித்தவர். முப்பதுக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகள் பெற்றவர். கயிற்றிலே தொங்கியபடி திருமணம் செய்து சாதனை படைத்தவர்.
மலை ஏறுவது: ரெயின்ஹோல்ட் மெஸ்னர். இவர் உலகத்தில் உள்ள 26,000 அடி உயரத்துக்கு மேலான 14 மலைகளையும் ஏறி வெற்றி கண்டவர்.
தென்துருவத்தை அடைவது: ரொனால்ட் அமண்ட்ஸன். நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளைப் பயன்படுத்தி தென் துருவத்தை முதலில் கைப்பற்றியவர்.
கயாக் படகு ஓட்டம்: டக் அம்மன்ஸ்
உலகத்திலே கயாக் படகு ஓட்டுவதில் அதி திறமை பெற்று முதலாம் இடத்தில் இருக்கும் (Doug Ammons) டக் அம்மன்ஸ் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். நான் கைகொடுத்தேன். நோபல் பரிசு பெற்றவர், ஒஸ்கார் பரிசு பெற்றவர், ஒலிம் பிக் தங்கம் வென்றவர் இவர்களோடு கைகுலுக்குவதற்கு எனக்குள்ள விருப்பம் சொல்ல முடியாதது. சிலருடன் கைகுலுக்கியிருக்கிறேன். சிலருடன் பேசியிருக்கிறேன். ஏழு பில்லியன் மக்கள் வாழும் இந்தப் பூமியில் ஒருவர் ஒரு துறையில் முதல் இடத்தில் இருக்கிறார் என்றால் அது எத்தனை பெரிய சாதனை.
டக் அம்மன்ஸ் பார்ப்பதற்கு 50 வயதுக்காரர்போல தோற்றமளித்தார். ஆனால் அவருடைய வயது அதற்கும் மேலே இருக்கலாம். அகலமான நெஞ்சுதான் முதலில் கண்ணில் படும். கைகளும் கால்களும் உறுதியாக சதை உருண்டு வலிமை மிக்கவையாகத் தெரிந்தன. கயாக் படகு ஓட்டக்காரருக்கு படகு ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. மலை ஏறவும், நீந்தவும் தெரியவேண்டும். இரண்டு பக்கமும் செங்குத்தான மலைகளுக்கு நடுவில் ஓடும் ஆற்றில் படகில்போய் விபத்தில் மாட்டிவிட்டால் நீந்தி அல்லது மலை ஏறித்தான் தப்பமுடியும். 25 வருடங்களாக கயாக் படகு ஓட்டுகிறார். எண்ணற்ற விபத்துகளில் உடம்பில் பல எலும்புகள் முறிந்திருக்கின்றன. ஆனாலும் அவருக்கு ஆர்வம் குறைவதாயில்லை. கராத்தேயில் கறுப்பு பெல்ட் வென்றவர். கித்தார் வாசிப்பார், முனைவர் பட்டம் பெற்ற இவர் ஒரு பத்திரிகை நடத்தி நிறைய எழுதவும் செய்கிறார். இவருடைய சாதனைகளைக் கேட்கக் கேட்க ஆச்சரியம்தான் அதிகமாகும்.
“உங்களுக்கு என்னுடன் கயாக் படகுச் சவாரி செய்ய விருப்பமா? நான் கூட்டிப்போகிறேன்” என்றார் டக் அம்மன்ஸ். இப்படித்தான் என் வாழ்க்கையில் ஆக அதிர்ச்சி தந்த அந்த மாலை ஆரம்பமானது. நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். பின்னர் மகளின் முகம். மகனின் முகம். அப்ஸராவின் முகம். ஒன்றிலும் பதில் எழுதியிருக்கவில்லை. நானாகத்தான் எதையாவது கண்டுபிடித்துச் சொல்லவேண்டும். “எந்த ஆறு?” என்று கேட்டேன். இதைவிட மொக்குத்தனமான ஒரு பதில் கேள்வியை ஒருவர் உருவாக்க முடியாது. ஆற்றின் பெயரை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அதில் எத்தனை எழுத்துக்கள் என்று எண்ணிக் கூட்டிப்பார்த்து எண்கணித சோதிடப் பிரகாரம் முடிவு எடுக்கப் போகிறேனா?
நல்ல காலமாக அவர் Clark Fork river என்றார். அந்த ஆற்றைக் கண்ணால் கண்டது கிடையாது, ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தோமஸ் ஜெஃபர்ஸன் 200 வருடங்களுக்கு முன்னர் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் வரைக்கும் தரைவழிப்பாதை உண்டாக்குவதற்காக இரண்டு அனுபவப்பட்ட ஆராய்ச்சியாளர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களுடைய பெயர்கள் லூயிஸ் மற்றும் கிளார்க். அவர் ஞாபகமாகத்தான் ஆற்றுக்கு இந்தப் பெயர். அதில் கொஞ்சம் உற்சாகமாகி “ஆபத்தானதா?” என்று கேட்டேன்.
“ஆறுகளின் ஆபத்து நிலையை 5 பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். 5ம் நிலை மிக மிக ஆபத்தானது. திடீரென்று செங்குத்தாக தண்ணீர் விழும். நுரை எழும்பி மூடும். போகும் திசை தெரியாமல் அடுக்கடுக்காக ஆபத்துகள் வந்தபடி இருக்கும். அதற்கு அடுத்த கீழ் நிலை 4; பின்னர் 3. அப்படிக் கடைசி நிலைதான் ஒன்று. கிளார்க் ஃபோர்க் ஆற்றின் நிலை ஒன்று. அதாவது ஆபத்து மிகமிகக் குறைவானது.”
“அப்படியா? நிலை ஒன்றுக்குக் கீழே வேறு ஆறு ஏதாவது உண்டா?” என்றேன்.
“இருக்கிறதே. உங்கள் வீட்டுக் குளியல் தொட்டியில் தண்ணீரை நிறைத்து அதற்குள் ஏறி உட்கார்ந்தால் அது முதல் நிலைக்குக் கீழாக இருக்கும்.
“சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு அவர் வருவதாகச் சொல்லியிருந்தார். என்னை மூன்று பேர் தயார் செய்தார்கள். தண்ணீரில் நனையாத சப்பாத்துகள், உடைகள், கையுறை, தொப்பி எல்லாம் அணிந்து பார்க்க நான் ஆரோ மாதிரி தோற்றமளித்தேன். படகிலே உட்காருவதற்கு இரண்டு பள்ளங்கள் முன் பின்னாக இருந்தன. நான் ஏறி உட்காருவற்குத் தயாராக இருந்தேன். நான் அணிந்திருந்த உடை போதுமானது என்றுதான் நினைத்தேன். போதவில்லை. ஆற்றின் கரையிலே என்னை நிற்கவைத்து மாப்பிள்ளையை சோடிப்பதுபோல டக் என்னை அலங்கரித்தார். மஞ்சள் நிற மிதவைகளை என் நெஞ்சிலே கட்டினார். பின்னர் ரப்பரினால் செய்த அரைப்பாவாடை போன்ற ஒன்றை என் இடையிலே கட்டி என்னை கயாக்கின் பள்ளத்திலே உட்காரவைத்தார். நான் படகுக்குள் கால்களை நீட்டி அமர்ந்ததும் என்னுடைய பாவாடை விளிம்புகளைப் பள்ளத்தின் ஓரங்களில் சுற்றிவர இணைத்துவிட்டார். அலை அடித்தாலும் மழை பெய்தாலும் எவ்வளவுதான் நாங்கள் நனைந்தாலும் படகுக்குள் ஒரு சொட்டு நீரும் புகாது. நான் படகின் ஓர் அங்கமாக மாறியிருந்தேன். எனக்குப் பின்னால் டக் அமர்ந்து தன்னுடைய ரப்பர் பாவாடை யைப் பள்ளத்தின் விளிம்புகளில் பொருத்திக் கொண்டார். இப்பொழுது எங்கள் உடல்கள் படகுடன் பொருத்தப் பட்டுவிட்டதால் ஓர் ஆபத்து இருந்தது. விபத்தில் படகு கவிழ்ந்தால் நாங்கள் தலைகீழாகத் தண்ணீருக்குள் அமிழ்ந்து மூச்சுவிட முடியாமல் போகும். அப்படியான சமயம் ஒரு கைப்பிடியைப் பிடித்து இழுத்தால் பாவாடை கழன்று விடுதலையாகி மேலே வந்து மிதப்போம். நான் கைப்பிடி இருக்கும் இடத்தை மனனம்செய்து மனதில் நிறுத்திக்கொண்டேன்.
இரண்டு துடுப்புகளில் ஒன்றை என்னிடம் தந்தார். டக் பின்னுக்கு இருந்ததால் நான் அவரைத் திரும்பிப் பார்க்க முடியாது. ஆனால் அவர் சொல்வதைக் காதால் கேட்டு நிறைவேற்றலாம். ஆறு என்னை நோக்கி வரத்தொடங்கியது. அவர் இடது பக்கம் என்றால் நான் இடது பக்கம் வலிப்பேன்; வலது பக்கம் என்றால் நானும் வலது பக்கம் வலிப்பேன். இரண்டு மணிநேரப் பயணம் என்று முன்பே சொல்லியிருந்தார். பாறைகள் வரும் இடங்களில் தண்ணீர் நுரைத்துப் பொங்கி எழும். சில இடங்களில் தண்ணீர் வேகமாகக் கீழே இறங்கும். வேறு இடங்களில் பழுதுபட்ட திசைகாட்டி முள்போல சுழலும். டக் முன்கூட்டியே எச்சரிக்கை செய்வார். ஆனால் நான் துடுப்பு போட்டது முதல் ஐந்து நிமிடம் மட்டுமே. ஆறாவது நிமிடம் ஆறு துடுப்பைப் பறித்துக்கொண்டு போனது. நாங்கள் அதைத் தேடிப் போகவில்லை. மீட்கவும் முயற்சி செய்யவில்லை. என் ஞாபகமாக இன்றைக்கும் அது எங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கும் அல்லது ஆற்றின் அடியில் கிடக்கும். மீதி நேரம் நான் ஒரு பயணிதான்.
டக் ஒரு திறமையான பயிற்சியாளர் என்று சொல்லலாம். கயாக் ஓட்டும் நுட்பங்களை ஒன்றுக்குப்பின் ஒன்றாகச் சொல்லிக்கொண்டு வந்தார். எல்லா தகவல்களையும் ஒரே மூச்சில் சொல்லி என்னைத் திணறடிக்கவில்லை. நியூசிலாந்தில் ஒரு பறவை இருக்கிறது. அதன் பெயர் ரூயி. அது கீக் ஆ இக் என்று கத்தும். தன் குஞ்சுக்கு எப்படிக் கத்துவது என்பதைக் கற்றுக்கொடுக்கும். முதலில் கீக் கீக் என்று கத்தும். குஞ்சு அதைக்கற்றதும் அடுத்ததாக ஆ ஆ என்பதைக் கற்றுக்கொடுக்கும். இறுதியாக இக் இக் என்பதைச் சொல்லிக் கொடுக்கும். அதுபோலத்தான் டக்கும். படிப்படியாகக் கற்றுத் தந்தார். சில இடங்களில் பாறைகள் தண்ணீருக்கு மேலாகத் தெரியும். அவற்றை லாவகமாகத் தவிர்த்து ஓட்டுவார். சில தண்ணீருக்கு அடியில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். அவற்றுடன் படகு மோதினால் கவிழ்ந்துபோகும் அபாயம். எனவே கண நேரமும் கவனம் குறையாமல் ஓட்டினார்.
இவருடைய உச்சபட்ச சாதனை என்றால் அது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஓடும் 5ம் நிலை ஸ்டிக்கீன் ஆற்றை கயாக்கில் கடந்ததுதான். 60 மைல் தூரமான இந்த ஓட்டம் எவரெஸ்ட் சாதனைக்கு சமன் என்று கூறுவார்கள். ஆற்றின் அகலம் 600 அடியாக இருப்பது சில இடங்களில் ஏழு அடியாகச் சுருங்கிவிடும். இருபக்கமும் செங்குத்தான மலைகள் 900 அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இந்த ஆற்றில் மிகக்கடினமான 60 மைல் தூரப் பகுதியைக் கடக்க முயன்று தோற்றவர்கள் பலர். இறந்தவர்கள் அதிகம். 1990 ம் ஆண்டு டக் இந்தச் சாதனையை செய்கிறார். இரண்டுவருடம் கழித்து இன்னொருமுறை தனியாளாகக் கடக்கிறார். “மனித மனம் கற்பனை செய்யமுடியாத வேகத்தில் தண்ணீர் நுரைத்து எழும்பி மூடும். இந்தப் பூமியில் மனிதனுடைய திறமைக்குச் சவாலாகப் படைக்கப்பட்டது இந்த ஆறு” என்கிறார் டக் அம்மன்ஸ். இன்றுவரை அந்த ஆற்றில் கயாக் ஓட்டி வெற்றிபெற்றவர்கள் 15 பேர்தான்.
தண்ணீர் சுழிப்பதும் சுழலுவதும் திடீரென்று கீழே விழுவதுமாக ஆறு ஓடியது. அவருடைய திறன் உச்சத்துக்கு இந்தப் பயணத்தில் வேலையே இல்லை. ஆனாலும் பொறுமையாக ஓட்டினார். ஒவ்வொரு தடையையும் கடக்கும்போது ஆரம்பத்தில் பயமாகவிருந்தது. பின்னர் பழகிவிட்டது. ஒரு கட்டத்தில் ஆனந்தமாகக்கூட இருந்தது. இவர் கயாக் படகை ஓட்டுவதைப் பார்க்க அழகாக இருக்கும். ஒரு மூன்று வயதுக் குழந்தையை அணைத்துப் போவதுபோல. அந்தப் படகுக்கு அவர் ஒரு பெயர் வைத்திருந்தார். ஒருவரும் அவருடைய கயாக்கை இழிவாகப் பேச முடியாது. அவருக்குக் கோபம் வந்துவிடும். அர்ச்சுனனுக்கு யாராவது காண்டீபத்தைப் பழி சொன்னால் அடக்கமுடியாத சினம் பொங்கிவிடும் என்று படித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.
நாங்கள் எங்கே திரும்பவும் கரை சேருவோம் என்று ஏற்கனவே சொல்லி வைத்துவிட்டுத்தான் புறப்பட்டிருந்தோம். என் மனைவி காத்துக்கொண்டு நின்றார். மூன்று மாதம் பிரிந்து போனதுபோல என்னை முற்றிலும் சோதித்து மறுபடியும் ஏற்றுக்கொண்டார். முகத்திலும் பெரிய சிரிப்புடன் அவர் நின்றபோது எனக்குத் தோன்றிய முதல் எண்ணம், இந்தப் பெரிய சிரிப்பைத் தாங்கிக்கொள்ள இந்த முகம் காணாது. இன்னும் பெரிய முகம் ஒன்று தேவை என்பதுதான். நான் நெஞ்சிலே அணிந்திருந்த மிதவைகளையும் மற்றும் ரப்பர் பாவாடையையும் கழற்றி டக்கிடம் ஒப்படைத்தேன். ஒற்றைக் கையால் படகைத் தூக்கி தோளிலே சுமந்துகொண்டு யேசு சிலுவையைக் காவியதுபோல தரையைப் பார்த்தவாறு தன் வாகனத்தை நோக்கி நடந்து போனார். எனக்கு என்னவோ செய்தது. ஒரு பிரயோசனம் இல்லாத என்னுடன் நாலுமணி நேரம் செலவழித்திருந்தார். இந்த அன்பை எப்படி அவருக்குத் திருப்பிக் கொடுப்பது என்று நினைத்தேன்.
டக் அம்மன்ஸ் அபூர்வமான மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை. கடவுள் இத்தனை அற்புதங்களைப் படைத்திருப்பது மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று சொல்கிறார். “ஒவ்வொரு கணமும் உயிர்போய்விடும் என்ற நிலையில் மனதின் குவிப்பு சக்தி அபாரமானது. நாள் முடியும்போது என்னை அது ஒருபடி மேலே நல்ல மனிதனாக மாற்றுகிறது. வாழ்க்கையின் பொருள் பற்றி நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. வெளியே பயணம் நிகழும் அதே சமயம் ஆத்மாவுக்குள்ளும் ஒரு பயணம் நிகழ்கிறது. உங்கள் சிந்தனை கூராகிறது. அதற்காகத்தான் மனம் மறுபடி மறுபடி கயாக் பயணத்துக்காக ஏங்குகிறது” என்றார்.
ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார். “ஐயா, உங்கள் சாதனை பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் முன்பு ஒருவரும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறீர்கள். உங்கள் உணர்வு அப்போது எப்படியிருந்தது?” இதுதான் கேள்வி. டக் அம்மன்ஸ் கூறிய பதிலில் அவருடைய தன்னடக்கமும், எளிமையும், வாழ்க்கை தத்துவமும் அடங்கியிருக்கிறது. “என்னிலும் சாதனை படைத்தவர்கள் உலகில் எத்தனையோ பேர் உள்ளார்கள். என்னுடைய சாதனை உலகத்து வறுமையை நீக்காது. கான்சர் நோயைக் குணப்படுத்தாது. உலக மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க வழி செய்யுமோ என்றால் அதுவும் இல்லை.”
நான் ரொறொன்ரோ வந்து சேர்ந்ததும் முதலில் ஒரு நண்பர் விசயத்தை எப்படியோ கேள்விப்பட்டு கயாக் படகு ஓட்டம் பற்றி விசாரித்தார். அதன் பின்னர்தான் மற்றவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின.
“அவர் சொன்னார், நான் நம்பவில்லை. நீங்கள் கயாக் படகில் போனீர்களாமே?”
“எந்த ஆற்றில் போனீர்கள்? உண்மையாகவே கயாக் சவாரி ஆபத்தானதா?”
“Doug Ammons ஆ? கயாக் ஓட்டத்தில் அவர் உலகின் number one அல்லவா? அவருடனா போனீர்கள்?”
இவர்கள் எல்லோருக்கும் என்னிடம் பதில் இருந்தது. ஒரே பதில்.
“ஆமாம், டக் அம்மன்ஸ் என்னுடன்தான் வந்தார்.”
உங்கள் பெயர் என்ன? – உயிரோசை
ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து ‘உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது’ என்றார். ‘1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளி வந்த ‘உளியின் ஓசை’ திரைப்படத்தின் டிவிடி. இந்தப் படத்தில் வரும் ஏழு பாடல்களுக்கும் இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.’ அவர் இசைபற்றிச் சொன்னாரே ஒழிய படத்தைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை. சரியென்று காசைக் கொடுத்து டிவிடியை வாங்கிக் கொண்டு திரும்பினேன்.
கனடாவில் தமிழ் டிவிடிக்கள் பார்ப்பதில் ஓர் ஆபத்து உண்டு. முதலில் போட்டுப் பார்க்கும்போது நன்றாக ஓடும். இரண்டாவது தடவை அங்கங்கே நின்று இளைப்பாறும். மூன்றாவது தடவை சதுரங்கள் தோன்றித் தோன்றி மறையும். படம் நகரும் ஒலி வராது; ஒலி வரும் படம் நகராது. கொடுத்த காசுக்குப் பெறு மதியானதை வாடிக்கையாளர் பார்த்துவிட்டார் என்றதும் அது நின்றுவிடும். தொழில் நுட்பத்தின் உச்சத்தை இந்த டிவிடி வர்த்தகர்கள் தொட்டிருந்தார்கள்.
படத்தைப் பற்றி நான் இங்கே ஒன்றும் எழுதமுடியாது. ஆனால் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக இருந்தன. பின்னணி வாத்தியங்கள் பாடல்களை மூழ்கடிக்காமல் பின்னுக்கே நின்றன. பாடல்களின் வார்த்தைகள் காதில் விழுந்து எத்தனை வருடங்களாகி விட்டன. அந்தப் படத்தில் சிற்பி சிலை செதுக்கும்போது சிலை உயிர் பெறுவதுபோல ஒரு காட்சி வரும். ‘கல்லாயிருந்தேன், சிலையாய் ஏன் வடித்தாய்’ என்ற அந்தப் பாடல் வித்தியாசமாக இருந்தது. பழநிபாரதியின் வரிகளில் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்தது. இசையும், பாடலும், பாடலைப் பாடிய நேர்த்தியும் ஓர் அபூர்வ கலவையாக வெளிப்பட்டிருந்தது. பாடலின் உச் சரிப்பு மிகச் சுத்தம். அந்தப் பாடகி ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அல்லது மலையாளத்திலோ எழுதி வைத்துப் பாடவில்லை. அதிசயமாகத் தமிழிலே எழுதி வைத்துப் பாடியிருக்கிறார்.
ஒரு நண்பன் அந்தச் சமயத்தில் சொன்னது அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘பாடலைப் பாடிய பெண் கனடாவில் வசிக்கிறார். அவர்தான் முதன்முதலாக இசைஞானி இளைய ராஜாவின் இசையில் பாடிய ஒரே ஈழத்துப்பெண்’ என்றார். நான் அந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ சம்பாதித்து அவரைத் தொடர்புகொண்டேன். என் பெயரைச் சொல்லிவிட்டு ‘உளியின் ஓசை’ படத்தில் பாடிய பெண்ணுடன் பேசமுடியுமா?’ என்றேன். ‘பேசுகிறேன்’ என்றார். இளம் குரலாக இருந்தாலும் அந்தப் பாடலைப் பாடிய இனிமையான குரலுக்கும் இதற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லை. ‘உங்களுடைய பாடலை மிகவும் ரசித்தேன். அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டபடியே இருக்கிறேன்.’ அப்படியா என்று கேட்டுவிட்டு ஒரு சலங்கைச் சிரிப்பை உதிர்த்தார். அவர் சிரிக்கும்போது அது பாட்டுக் குரலில் இருந்தது. பேச்சுக் குரலுக்கும், பாட்டுக் குரலுக்கும் இடையில் இவ்வளவு வித்தியாசமா என்று நான் வியந்து கொண்டேன்.
தர்ஸினி இலங்கையில் திரு கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மூன்று வயதில் இவர் ஒரு சினிமா பாட்டின் பல்லவி வரிகளை சுருதி சுத்தமாகப் பாடியதைக் கேட்ட அவருடைய தந்தை ஆச்சரியப்பட்டார். அந்த வயதிலேயே அவரை மேடையில் ஏற்றிப் பாடச் சொல்லுவார்கள். சிலநேரங்களில் பாடுவார்; பல சமயங்களில் அழுதுகொண்டு இறங்கி ஓடிவிடுவார். ஒரு பாட்டை ஒரு முறை கேட்டால் போதும், தர்ஸினி அந்த மெட்டைப் பிடித்துவிடுவார். அது ஒரு அபூர்வமான திறமை என்பது அவருக்குத் தெரியவில்லை. எல்லோரிடமும் அப்படிப்பட்ட திறமை இருப்பதாகவே நினைத்தார். ஒரு நாள் இவருக்கு நாலு வயது நடந்தபோது கலவரத்தில் இவர் தகப்பனைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அதன் பின்னர் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம், கொழும்பு என்று அலைந்து திரிந்ததில் அவரால் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை; முறையாகச் சங்கீதம் கற்கவேண்டும் என்ற ஆசையும் நிறைவேறவில்லை.
2001 ஆம் ஆண்டு, இரட்டைக் கோபுரங்கள் வீழ்வதற்கு முன்னர், கனடாவுக்கு அகதியாக வந்தார். இசையை முறையாகக் கற்றுக்கொள்வது அங்கேயும் சாத்தியமாகவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் இவருக்கு ஹிந்துஸ்தானி இசை மீது நாட்டம் விழுந்து அதைக் கற்கவேண்டும் என்ற கனவு வலுவானது. இந்தியாவுக்குப் போய் இசை கற்பது என்று தீர்மானித்தார் தர்ஸினி. கணவருடன் இந்தியா போனவருக்கு அங்கே ஒருவரையும் தெரியாது. சென்னையில் இந்துஸ்தானி சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் ஒருவர் ஷெனாய் வாசிப்பில் பிரபலமானவர். அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். தர்ஸினி அப்பொழுது மனதில் தோன்றிய ஒரு சினிமாப் பாடலைப் பாடினார். இரண்டு வரிதான். போதும் என்று சைகை காட்டிவிட்டு இந்துஸ்தானி சங்கீதம் கற்றுத்தருவதற்கு ஒப்புக்கொண்டார், ஆனால் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தர்ஸினியால் நம்ப முடியவில்லை.
‘என்னுடைய குரு நான் நினைத்தது போல ஆரம்பத்தில் இருந்து அடிப்படை விசயங்களை எனக்குக் கற்றுத்தரவில்லை. ஒரு தேர்ந்த பாடகிக்குரிய ஸ்தானத்தை எனக்குக் கொடுத்து சங்கீதத்தில் உள்ள பிரயோகங்களையும் பாவங்களையும் நுணுக்கங்களையும் சொல்லித்தரத் தொடங்கினார். ‘நீங்கள் நல்லாய் பாடுறீங்கள். உங்களை இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகப்படுத்துகிறேன்’ என்று சொல்வார். அந்த வார்த்தைகளைக் கேட்டு சந்தோசப்படுவேன். ஆனால் அப்படியான ஒரு வாய்ப்பு சீக்கிரம் கிடைக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.’
இவ்வளவு விசயத்தையும் தர்ஸினி எனக்கு டெலிபோனிலேயே சொன்னார். ‘உங்களை நேரிலே சந்திக்க முடியுமா?’ என்று கேட்டேன். அவர் சம்மதித்தார். நான் ஒரு பொது இடத்தைச் சொன்னேன். அவர் நேரத்தைச் சொன்னார். ‘உங்களை எப்படி அடையாளம் காண்பது?’ என்று தர்ஸினி கேட்டார். ‘நீங்கள் கண்டுபிடிக்கவேண்டாம். நான் அதைச் செய்வேன். ஓர் இளம் பாடகி எப்படி இருப்பார் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது.’ தர்ஸினி மறுபடியும் ஒரு சலங்கைச் சிரிப்பைச் சிரித்தார். ‘உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?’ நான் மறுபடியும் சொன்னேன்.
அடுத்த நாள் குறிப்பிட்ட இடத்துக்கு கணவனுடன் வந்தார். அவரை அடையாளம் காண்பதில் எனக்கு பிரச்சினையே இல்லை. மெலிந்த ஒடிசலான தோற்றம். கறுப்பு நிறக் கால்சட்டை, வெள்ளை நீளக்கை சேர்ட்டை முழங்கை மட்டும் உருட்டி விட்டிருந்தார். தோள்களின் கீழே புரண்ட தலைமுடி. நெற்றியிலே சின்னதாகச் சிவப்புப் பொட்டு. நாங்கள் வணக்கம் சொல்லிக் கொண்டோம்.
நான் ‘இளையராஜா 4000 பாடல்களுக்கு மேலாக இசையமைத்தவர். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். உலகப் பிரபலமானவர். அண்ணாமலை பல்கலைக்கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியிருக்கின்றன. How to Name it, Nothing but Wind திருவாசகம் போன்ற இசைத்தொகுப்புகளைத் தந்தவர். பஞ்சமுகி என்ற புதிய ராகத்தைக் கண்டுபிடித்தவர். பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். அந்த மேதையைச் சந்திக்கும் பகுதியை நான் நேரடியாகக் கேட்க வேண்டும், அதுதான் உங்களைச் சந்திக்கவேண்டும்’ என்றேன்.
‘ஒருநாள் என்னுடைய குரு முன்பின் அறிவிக்காமல் என்னை இசைஞானியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். அவர் வெள்ளை ஆடையில் தரையிலே ஒரு மெத்தையில் சாய்ந்துபோய் உட் கார்ந்திருந்தார். நான் வணங்கினேன். அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். என் உடம்பு உள்ளுக்குள் நடுங்கியது. ஆனால் குரல் நடுங்காமல் பதில் சொன்னேன். ஆர்மோனியத்தில் ஒரு சுருதியை வைத்து என்னைப் பார்த்து ‘ஏதாவது பாடம்மா’ என்றார். நான் அவர் இசையமைத்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்த, தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி’ என்ற பாடலைப் பாடினேன். பாட்டு முடிய அழகான ஒரு சிரிப்பைச் சிரித்தார். புதிதாக மெட்டுப்போட்ட வேறு ஒரு பாடலை உடனுக்குடனே பாடிக் காட்டி அதையும் பாடச் சொன்னார். நான் பல்லவியைப் பாடினேன். அவரோ தொடர்ந்து சரணத்தைப் பாட, நான் பாடுவதை நிறுத்திவிட்டு அவரைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாட்டை முடித்துவிட்டு மறுபடியும் என்னைப் பார்த்து அழகாகச் சிரித்தார். நானும் சிரித்தேன்.
‘சில நாட்கள் தள்ளி என்னுடைய கணவர் கனடாவுக்குத் திரும்பினார். பரீட்சை மறுமொழியைப் பார்த்திருப்பதுபோல நான் காத்திருந்தேன். இசைஞானி கேட்டபோது நான் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி, சொல்லடி இந்நாள் நல்ல தேதி’ என்ற பாடலைப் பாடினேன். எனக்கும் அப்படி ஒரு நல்ல சேதி வரும் என்று நினைத்தேன், ஆனால் நான் கனடாவுக்குத் திரும்பவேண்டிய தேதிதான் வந்தது. ஒருநாள் எனக்கு நல்ல காய்ச்சல். அன்றிரவு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு. அடுத்த நாள் காலை நான் பிரசாத் ஸ்டுடியோவில் நிற்கவேண்டும், இசைஞானி இளையராஜாவின் ஒரு பாடல் ரிக்கார்டிங்குக்காக. என்னால் நம்பவே முடியவில்லை. இரவு முழுக்க நித்திரை கிடையாது, சாப்பிடவும் பிடிக்கவில்லை. உணவைக் கண்டால் வயிற்றைப் பிரட்டியது. என்னுடைய இடத்திலிருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஓட்டோவில் போக ஒரு மணி நேரம் எடுக்கும். காலையானதும் நான் அவசரமாய் வெளிக்கிட்டுக் கொண்டு ஒரு ஓட்டோவைப் பிடித்துப் புறப்பட்டேன். அவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்தது அதுவே எனக்கு முதல் தடவை. வழிநெடுக பதற்றத்துடன் போய்ச்சேர்ந்தேன்.
‘நான் குருவுடன் ஏற்கனவே அங்கே போயிருந்தாலும் இம்முறை ஸ்டுடி யோவின் பிரமாண்டத்தைப் பார்த்த போது அச்சமாகவிருந்தது. வாசலிலே உள்ள பதிவேட்டில் என் பெயரை எழுதிவிட்டு உள்ளே நுழைந்தேன். இரண்டு பெரிய இளையராஜாவின் படங்கள் மாட்டியிருந்தன. அதிலே ஒன்று பார்த்திபன் வரைந்தது என்று சொன்னார்கள். பசியினாலும், நித்திரையில்லாததாலும் எனக்கு மயக்கமாக வந்தது. நான் வந்திருப்பதை அறிந்த ஒருவர் ஸ்டுடியோவுக்குள் போகச் சொன்னார். ஒரு நிமிடம் கூட அங்கே வீணாக்க முடியாது. வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் இளையராஜாவுக்குச் சொந்தமானது. அவர் ஏதாவது கேள்விகள் கேட்பார் என்று நினைத்து பதில்களைத் தயாரித்து வந்திருந்தேன். அவர் ஒன்றுமே பேசாமல் நேராக பல்லவியைச் சொல்லித்தந்தார். பாடினேன். என் உடல் நடுக்கம் எப்படியோ குரலில் நுழைந்துவிட்டது. இளையராஜா ‘என்னம்மா’ என்று கையைத் தூக்கி விரித்துக் காட்டினார். நான் ‘இரவு தூங்கவில்லை. காலையிலும் சாப்பிடவில்லை. ஒரே பதட்டமாயிருக்கு’ என்று ஒளிக்காமல் சொன்னேன். ‘சரி, ஓடு ஓடு சாப்பிட்டுவிட்டு வா’ என்று துரத்தினார். எனக்கு இடம் வலம் தெரியவில்லை. இந்த நேரம் பார்த்து எனக்குப் பக்கத்தில் ஒரு வரும் இல்லையே என்று வருத்தமாகவும் இருந்தது. பிரெட் வாங்கி ஒரு துண்டைப் பிய்த்து வாய்க்குள்ளே திணித்து விழுங்கினேன். தண்ணீரை அவசரமாகக் குடித்து கொஞ்சம் தெம்பு வந்ததும் திரும்பினேன்.
‘நான் பாடவேண்டிய பாட்டுக்கு மெட்டுப் போட்டு வாத்திய இசை ஏற்கனவே ரிக்கார்ட் ஆகிவிட்டது. நான் பாடவேண்டிய இடம் மட்டும் வெறுமையாக இருந்தது. பாடல் வரிகளை என்னிடம் தந்தார்கள். அந்த வரிகளை சரியாக அந்த இடத்தில் நான் பாடவேண்டும். என்னோடு பாடவேண்டிய பார்த்த சாரதியும் பக்கத்திலேயே நின்றார். ‘கல்லாயிருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்.’ இதுதான் பல்லவியின் முதல் வரி. அந்த வரியை எப்படிப் பாடுவதென்று இளையராஜா சொல்லித் தந்தார். அவர் சொல்லித் தந்ததை அப்படியே காதால் கேட்டு திருப்பி பாடினேன். அதுதான் ஒத்திக்கை. அடுத்து ‘டேக்’ என்றார் இளையராஜா.
‘பார்த்தசாரதி அனுபவம் வாய்ந்தவர். இளையராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியவர். அவர் தன்னுடைய பாடலின் கீழ் இசைக் குறிப்புகளை எழுதிவைத்துப் பாடினார். பாடலின் மெட்டை உடனுக்குடன் மாற்றினால்கூட அதற்கான ஸ்வரங்களைக் கீழே எழுதிவைத்து பாடக்கூடியவர் அவர். என் விசயம் அப்படி இல்லை. யாராவது பாடிக்காட்டவேண்டும். பாடுவதை உள் வாங்கி நினைவில் வைத்து அப்படியே பாடவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ரிக்கார்டிங் நடந்தது. ஒவ்வொரு வரியையும் இசைஞானி பாடிக்காட்ட, லீமீணீபீஜீலீஷீஸீமீ -ஐ மாட்டிக் கொண்டு அதில் ஒலிக்கும் வாத்தியக் குழுவின் பின்னணி இசைக்கு நான் பாடினேன். எங்கள் மூன்று பேரையும் தவிர அங்கே ரிக்கார்டிங் இஞ்சினியர் மாத்திரமே இருந்தார். மதிய இடைவேளைக்குப் பிறகு தயக்கத்துடன் ஸ்டுடியோவுக்குள் நுழைந்து ‘நான் திரும்பலாமா? ஏதாவது திருத் தங்கள் உண்டா?’ என்று கேட்டேன். இசைஞானி சற்றுமுன் பதிவுசெய்த பாடலை ஒருமுறை போட்டுக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்து போகலாம் என்றார். ‘அடுத்த சில நாட்களில் விமானம் ஏறி கனடா வந்து சேர்ந்தேன். இது நடந்தது 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம். 2008ஆம் ஆண்டு மே மாதம்தான் நான் உளியின் ஓசையில் பாடிய பாடல் இசைத் தட்டாக வெளிவந்தது. ஆனால் நான் பாடலை முதன்முதலாக இணையத் தளத்தில்தான் கேட்டேன்.’
‘படம் எப்பொழுது பார்த்தீர்கள்?’ என்றேன். ‘உங்களைப் போலத் தான் நானும் சமீபத்தில் டிவிடியில் பார்த்தேன்.’
‘பாடலைக் கேட்டபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?’
‘ரிக்கார்டிங் நடந்து முடிந்த பிறகு என் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். ‘நீ நல்ல பாட்டுக்காரியாய் வருவாய் குஞ்சு’ என்று சொல்லி அவர் தலையைத் தடவினார். அதை மறக்க முடியாது. என்னுடைய பழைய சிநேகிதிகள் யாராவது பாட்டைக் கேட்பார்களா, என் குரலை அடையாளம் காண்பார்களா என்றெல்லாம் நினைப்பேன்.’
‘இங்கே கனடாவில் யாராவது உங்களைப் பாராட்டினார்களா?’
‘ஒருவருக்குமே தெரியாது. நான் முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்பவும் இருக்கிறேன்.’
‘உங்கள் பெயர் தர்ஸினி என்று சொன்னீர்கள். ஆனால் திரைப்படத்திலும் சரி, இசைத்தட்டிலும் சரி உங்கள் பெயரை தான்யா என்று மாற்றியிருக்கிறார்களே?’
‘ஓம், மாற்றப்பட்டுள்ளது’ என்றார் சிரித்துக்கொண்டே.
‘அதற்கென்ன? பெயரில் என்ன முக்கியம்? பாடல் அழகாக அமைந்திருக்கிறதே! அதுவும் இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுமா?’ என்று நான் சொன்னேன்.
‘அப்ப நான் புறப்படலாமா?’ என்றார் தர்ஸினி. நானும் சரி என்றேன்.
திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு ‘இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?’ என்றார்.
‘சும்மாதான், ஒரு ஆர்வத்தில் கேட்டேன்.’
‘நீங்கள் எழுத்தாளரா?’ என்றார். ‘ஏதோ அவ்வப்போது எழுதுவேன்.’
‘யார் வேண்டுமானாலும், எந்தப் பத்திரிகைக்கும் எழுதி அனுப்பலாமா?’ என்று கேட்டார், ஒரு குழந்தைப் பிள்ளையைப்போல.
‘அனுப்பலாமே.’
‘உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?’ என்றார்.
மீண்டும் என் பெயரைச் சொன்னேன். மறுபடியும் சலங்கை கிலுங்கியது. நீளமான கருவிழிகளைச் சுழற்றி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
இப்படித்தான் முழுநேர எழுத்து வேலையாக எழுதிவரும் எனக்கும், தமிழக முதல்வர் கலைஞர் கருணா நிதி கதை வசனத்தில் உருவான ‘உளியின் ஓசை’ திரைப்படத்தில், மூன்று தேசிய விருதுகள் பெற்ற வரும், உலகப் புகழ் கிட்டியவரும், Royal Philharmonic Orchestra வுக்கு இசையமைத்தவரும், மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய தான்யா என்று பெயர் சூட்டப்பட்ட தர்ஸினிக்குமான சந்திப்பு ஒரு முடிவுக்கு வந்தது.
எந்திரன் பார்த்தேன் – கட்டுரை
நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை ‘இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்’ என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள் அந்தப் படம் பார்த்ததையே அப்போது மறந்துவிட்டிருப்பார்கள்.
கனடாவில் ‘எந்திரன்’ வருகிறது என்றதும் வழக்கம்போல பெரிய பரபரப்பும் ஆயத்தங்களும் தெரிந்தன. பகல் காட்சி, இரவுக்காட்சி, நடுஇரவுக்காட்சி என்று பல காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ஒக்டோபர் முதல் தேதிதான் படம் ஆரம்பம், ஆனால் கனடாவில் செப்டம்பர் 30ம் தேதியே பார்த்துவிடலாம். முன்பதிவு செய்யவேண்டும் என்று பயமுறுத்தியபோது சிறிது தயக்கம் ஏற்பட்டது. வாழ்நாள் சாதனை என்று தொடங்கியபின்னர் இதையெல்லாம் பார்க்கக்கூடாது. முதல் நாள், முதல் காட்சி சாதாரணமானதா, நான் பார்த்த பின்னர்தான் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பார்க்கப் போகிறார்கள்.
படத்துக்குப் பெரிய கூட்டம் வரும் என்று நினைத்தேன். படம் தொடங்கியபோது 600 ஆட்கள் இருக்கக்கூடிய வசதிகள் கொண்ட அரங்கில் நூற்றைம்பது பேர் வந்திருந்தார்கள். அதிலே ஒரு பத்துப்பேர் ரஜினி திரையில் தோன்றியபோது விசில் அடித்தார்கள். உலக அழகி வந்தபோது அதுவும் இல்லை. படத்தைப் பற்றி நான் ஒன்றுமே எழுதப் போவதில்லை. அதை எழுதுவதற்காக இரண்டு வருடங்களாகத் தங்களைக் தயார் செய்துகொண்டிருந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவார்கள். சுஜாதாவின் கதை என்பது தெரிகிறது. ஒவ்வொரு திருப்பமும், ஒவ்வொரு புத்திசாலித்தனமான காட்சியும், அவரை நினைவூட்டுகிறது. அந்த வகையில் நல்ல கதை. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை விறுவிறுப்பு குறையவில்லை. படம் ஓடும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் பத்து வயதுக்குக் குறைந்தவராக இருந்தால் நிறைய இடத்தில் சிரிப்பீர்கள்.
படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருக்கிறார்கள். விஞ்ஞானி ரஜினி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அது அடிமை போல புத்திசாலித்தனமாகவும், நட்பாகவும் வேலை செய்கிறது. பல இடங்களில் எதிரிகளை அடித்து நொறுக்கி கதாநாயகியை உற்சாகமாகக் காப்பாற்றுகிறது. ரோபோவுக்கு விஞ்ஞானி உணர்ச்சிகளைக் கொடுத்தவுடன் பிரச்சினை ஆரம்பிக்கிறது. ரோபோவும் ஐஸ்வர்யா ராயைக் காதலிக்கிறது. ரஜினி சொல்வதைக் கேட்க மறுக்கிறது. ரஜினி வெறுத்துப்போய் அதைப் பிரித்து குப்பையில்போட, அது எதிரிகள் கையில் சிக்கிக்கொள்கிறது. ரோபோவாக வரும் ரஜினி செய்யும் தந்திரங்களும், சாகசங்களும் ரசிகர்களுக்கு நிறையப் பிடித்துப்போகிறது. ரோபோவுக்கும் விஞ்ஞானிக்குமிடையில் நடக்கும் சண்டையில் ரசிகர்கள் ரோபோ பக்கம்தான். ஒரு கட்டத்தில் ரோபோ ஒரு ஹெலிகொப்டரையே விழுங்கிவிடுகிறது. நம்பமுடியாதது என்று ஒன்றுமே இல்லை. ரோபோதானே, அது எல்லாம் செய்யும். இழுபறிப்பட்டு கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ரசிகர்களுக்கு இரண்டு ரஜினியுமே வேண்டும்.
ஒரு விசயத்தில் நிறைய பெருமைப்படலாம். இவ்வளவு தொழில்நுட்ப நேர்த்தியுடன் ஒரு தமிழ்ப் படம், ஏன் இந்தியப் படம் வந்ததில்லை. ஹொலிவுட்டில் செய்யாததைக்கூட செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதன் உச்சம் வியக்க வைத்திருக்கிறது. இன்னும் பத்துவருடங்களில் திரைப்படம் சம்பந்தமான கணினி தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு ஹொலிவுட்டுக்கு சவாலாக வரும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பாடல், நடனம், இசை பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. ஒளிப்பதிவு, ஒப்பனையும் அப்படியே. இப்படியான பெரிய பட்ஜெட் படத்தில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அவை இருக்கின்றன. இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது, நடிப்பைப் பற்றி ஏதாவது சொல்லவேண்டும். ஆனால் அது படத்தில் வரவில்லை. எது ரஜினியின் நடிப்பு, எது கம்ப்யூட்டரின் நடிப்பு என்பதைக் கண்டு பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
படம் முடிந்து வெளியே வந்தபோது இரண்டு விசயங்கள் தோன்றின. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படம். அது படத்துக்குப் போகும் முன்னரே தெரிந்த விசயம்தான். ஆனால் ஓர் உயர்ந்த படத்தைப் பார்க்கும்போது உங்கள் உள்ளத்தில் ஏற்படும் ஒரு மாற்றம், ஒரு நெகிழ்ச்சி, ஒரு வெளிச்சம் அது தோன்றவில்லை. அதை எதிர்பார்க்கவும் முடியாது. மனித உணர்வுகளை முந்திக்கொண்டு தொழில்நுட்பம்தான் நிற்கிறது.
இரண்டாவது, எதிர்காலத்தில் புதிதாக வரும் தமிழ் கதாநாயகர்களுக்கு ஏற்படப்போகும் பரிதாபம். புகழின் உச்சியில் இருக்கும் முதிய நடிகர்கள் எல்லோரும் கணினி தொழில்நுட்ப உதவியால் இருபது வயதுக் காளைகளாகவும், பத்து வயது சிறுவனாகவும், மூன்று வயதுக் குழந்தையாகவும் நடித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். அவர்கள் வீட்டுக்குப் போகப் போவதில்லை. அவர்கள் நடிப்பைக்கூட கணினியே செய்துவிடும். இது எல்லாவற்றையும் தாண்டித்தான் புது நடிகர்கள் தங்களை நிலைநாட்டவேண்டும். முடிகிற காரியமா? ரஜினியை இவ்வளவு இளமையாகக் காட்டியவர்கள் பாவம், ஐஸை விட்டுவிட்டார்கள். அவரையும் ஒரு பத்து வயது குறைந்தவராகக் காட்டியிருக்கலாமே. 162 கோடி ரூபா பட்ஜெட்டில் அவ்வளவு செலவா ஆகியிருக்கும்.
நீங்கள் போய்ப் பாருங்கள். முடிந்தால் உங்கள் பிள்ளைகளையும் கூட்டிப் போங்கள். பேரப்பிள்ளைகள் இருந்தால் அவர்களையும் கூட்டிப் போங்கள். தவறவிடக்கூடாது. இது ஒரு சாதனைப் படம். கிட்டத்தட்ட என்னுடைய வாழ்நாள் சாதனை போலத்தான்.
மூன்றாம் சிலுவை
உமா வரதராஜன் எழுதிய ‘மூன்றாம் சிலுவை’ நாவல் வெளியான சில நாட்களிலேயே அதை நான் வாங்கிப் படித்துவிட்டேன். ஏனென்றால் அவர் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவருடைய எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆகவே புத்தகத்துக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்து அதைப் படிக்கவில்லை. அந்த வேலையை விமர்சகர்களுக்கே விட்டுவிடுகிறேன். சொமர்செட் மோம் சொல்வார், விமர்சகர்கள் உழவு மாட்டு இலையான்கள்போல என்று. அவை மாட்டைச் சுற்றி தொந்தரவு செய்துகொண்டே இருக்கும், உழவு மாட்டை உழ விடவேண்டும். எழுத்தாளர்களை எழுத விடவேண்டும். புத்தகம் என்னிடத்தில் ஏற்படுத்திய உணர்வலைகள் பற்றி எழுதுவதுதான் என்னுடைய நோக்கம்.
இது ஒரு சின்ன நாவல். முன்னுரையைக் கழித்தால் 110 பக்கங்கள்தான். அது ஒன்றும் பிரச்சினை இல்லை. நாவல் என்றால் இத்தனை பக்கங்கள் இருக்கவேண்டும் என்ற விதியெல்லாம் கிடையாது. யசுனாரி கவபட்டா எழுதிய The house of sleeping beauties 130 பக்கம் வரும். அதற்கு நோபல் பரிசு கிடைத்தது. ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயுடைய The old man and the sea நாவலும் அப்படித்தான், 127 பக்கம். அதற்கும் நோபல் பரிசு கிடைத்தது. நாவல் என்றால் அதில் ஆழமும் அகலமும் நுண்ணுர்வும் வெளிப்படவேண்டும். அதுதான் முக்கியம். ஒற்றை மாட்டு வண்டியில் ஓர் ஒடுக்கமான ஒழுங்கையில் பயணம் செய்வதுபோலத்தான் இந்த நாவல். ஒரு திருப்பமோ திடுக்கிடலோ ஆச்சரியமோ இல்லாமல் நேராகச் சொல்லப்பட்ட கதை. அதன் முழுமூச்சு சுவாரஸ்யம்தான்.
கிராமம் ஒன்றில் ஒரு கம்பனி அதிகாரி. அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிமார், அத்துடன் மூன்று மகள்கள். அந்தக் கம்பனியில் வேலை பார்ப்பதற்கு ஓர் இளம்பெண் வருகிறாள். அதிகாரியிலும் பார்க்க 22 வயது குறைவு. ஒல்லியாக, ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த பாவப்பட்ட பெண்ணாக இருக்கிறாள். அவள் வந்தபிறகு அலுவலகத்தில் மாற்றம் பிறக்கிறது. கெட்டித்தனமாகவும் அனுசரணையோடும் வேலைபார்க்கிறாள். அதிகாரி அவளிடம் ஒருவிதமான நெருக்கத்தை உணர்கிறார். மெல்ல மெல்ல அவர்கள் ரகஸ்யமாக கையைப் பிடிக்கிறார்கள், தழுவுகிறார்கள், முத்தமிடுகிறார்கள். ஒருநாள் அதிகாரி கேட்கிறார் ‘எப்போது உம்மை முழுசாக எனக்குத் தரப்போகிறீர்.’ அவள் சொல்லுகிறாள் ‘எப்பொழுதாவது மாட்டேன் என்று சொன்னேனா.’ அப்படி ஆரம்பிக்கிறது அவர்களுடைய அந்தரங்கக் காதல்.
இந்த நாவலில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தருணங்களில் ஐந்து தடவை அவர்கள் உடலுறவு கொள்வது வர்ணிக்கப்படுகிறது. அவளுடைய அன்பு குறையும் சமயங்களில் எல்லாம் அவர் ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுப்பார். பிரிஜ் வாங்கிக் கொடுக்கிறார். பணமாகக் கொடுக்கிறார். தங்க வளையல்கள், நெக்லஸ் என்று கொடுத்து காதல் கைநழுவிப் போகாமல் பாதுகாத்துக் கொள்கிறார். இந்த உறவு எட்டு வருடம் நீடித்துப் பின்னர் கசக்கத் தொடங்குகிறது. அவளுக்கு ஒரு வைப்பாட்டியின் நிலைதான். அவள் சொந்தமாகச் சிந்திக்க தொடங்கியபோது தன்னுடைய நிலைமையை எண்ணித் தன்னையே வெறுக்கத் தொடங்குகிறாள். ‘என்னை என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று அவரிடம் அடிக்கடி கேட்பாள். அவரிடம் தீர்வு இல்லை. இறுதியாக அவள் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரகசியமாக லண்டனில் இருக்கும் ஒருவரை மணப்பதற்காகப் பிரிகிறாள். இதுதான் கதை.
‘என்னை என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று அவள் அடிக்கடி கேட்டதுபோல நாங்கள் இந்த நாவலை என்ன செய்யவேண்டும். இதன் மொழிக்காகவும் நடைக்காகவும் நுண்ணிய பார்வைக்காகவும் படிக்கலாம். புறநானூறில் ‘கைவேலினால் நெற்றி வியர்வையை வழித்துக்கொண்டு நிற்கும் அரசனே’ என்று ஒரு வரி வரும். உடனேயே ஒரு படிமம் எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. அதுபோல நுட்பமான பல காட்சிப் படிமங்கள் நாவலில் வருகின்றன. ஒருமுறை இவர்கள் உடலுறவு கொள்ளும்போது பக்கத்து மைதானத்தில் கைப்பந்தாட்டம் நடக்கிறது. பெரிய ஆரவாரமும் கைத்தட்டலும் மகிழ்ச்சிக் கூப்பாடும் கேட்கிறது. அது எல்லாம் தங்களுடைய உடலுறவு வெற்றிக்கே என்று காதலர்கள் நினைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அந்தப் பெண் ஒருநாள் தாயாரை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு வருவாள். காதலன் அவளுக்காகக் காத்திருந்து அவளைத் தழுவிவிட்டு திரும்பும் போது அவனிடத்திலும் ஆஸ்பத்திரி மணம் எழும்புகிறது. இன்னொரு இடத்தில் ‘இனிய கனியைப் புசிக்க தோலை அகற்றுவதுபோல’ அவர்கள் ஆடைகளை அகற்றினார்கள்’ என்று வரும். இப்படி நிறைய இடங்களில் வெளிப்படும் நுண்ணிய அவதானிப்புகளால் வாசிப்பு இனிய அனுபவமாக மாறிவிடுகிறது.
பெண்விடுதலை பற்றி யோசிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அவ்வளவு சம்மதமாயிராது. ஒரு பெண்ணை விலைமகள்போல மதித்து பணமும் பொருளும் கொடுத்து அவள் உடலை அனுபவிப்பதுதான் திரும்பத் திரும்பக் கிடைக்கும் காட்சி. அவள் விடுதலை கேட்கும்போதும்கூட அதைக் கொடுக்காமல் இந்தத் தொடர்பை நீடிக்கவே அதிகாரி விரும்புகிறார். பெண்ணுடைய மேலாளர் என்ற வகையில் இதை அதிகார துஷ்பிரயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையான காதல் என்ற எண்ணம் நாவலை வாசிக்கும்போது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படவே இல்லை.
காதலியின் தாயார் ஒருசில பக்கங்களில் வந்துபோனாலும் அவர் முக்கியமான, சுவாரஸ்யமான பாத்திரம். அவர் நல்ல பெண்தான், அவர் வருவதும் போவதும் தெரியாது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அவர் முகத்தில் ஒரு வாய் இருந்தது. சாப்பாட்டுக்குக்கூட அவர் வாய் திறக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு பேச்சுக்குப் பதில் பேச்சு பேசாமல் அவரால் இருக்கமுடியாது. வெடி மருந்து திரியை ஓர் இடத்தில் கொளுத்தினால் அது வேறு இடத்தில் வெடிப்பதுபோல அவர் இங்கே ஒன்று சொன்னால் அதன் விளைவு வேறு எங்கோ இருக்கும். காதலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இவர் முக்கிய காரணியாக இருக்கிறார்.
இந்த நாவலை ஆசிரியர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது கையினால் எழுதியதாக அறிகிறேன். சமீபத்தில் அவருடன் தொலைபேசியில் பேசியபோது நான் அவரிடம் ‘எதற்காக நாவல் ஒருபக்கம் சார்ந்து நிற்கிறது, அந்தப் பெண்ணின் தரப்பையும் கொஞ்சம் சொல்லியிருந்தால் நாவல் பூரணமாக இருந்திருக்கும்’ என்றேன். அவர் சொன்னார், ‘செய்திருக்கலாம்தான், ஆனால் நான் இதை எழுதியது இதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்துக் கிடந்தபோது. நாவல் முடியும் முன்னர் நான் முடிந்துவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தபடியால் வேகவேகமாக எழுதவேண்டி நேர்ந்தது. கடிகாரத்துக்கு எதிராக எழுதியபோது எத்தனையோ விவரங்கள் விடுபட்டுவிட்டன.’ இதைக் கேட்டபோது என் மனம் துணுக்குற்றது. எழுத்தாளன் ஒரு படைப்பைத் தருவதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும், எவ்வளவெல்லாம் பாடுபடவேண்டியிருக்கிறது.
மூன்றாம் சிலுவை என்பது தலைப்பு. முதலாவது மனைவி ஒரு சிலுவை. இரண்டாவது மனைவி ஒரு சிலுவை. மூன்றாவதாக காதலிக்கக் கிடைத்த பெண்தான் மூன்றாவது சிலுவை. ஆனால் அந்தப் பெண் ஒரு நாவல் எழுதினால் அவளும் மூன்றாம் சிலுவை என்றே தலைப்பு வைக்கலாம். அவளை விட்டுவிட்டு ஓடிய முதல் காதலன் முதலாம் சிலுவை. அதிகாரி இரண்டாவது சிலுவை. மணக்கப்போகும் கணவன் மூன்றாவது சிலுவை.
இந்த நாவலைப் படிக்கும்போது எங்கள் பழைய இலக்கியங்களில் சொல்லப்படும் பெருந்திணை அதாவது பொருந்தாக் காதல் நினைவுக்கு வருகிறது. வயது வித்தியாசத்தினால் இது பொருந்தாக் காதல் ஆகவில்லை. பணத்தினால் பெற்ற உடலின்பத்தைக் காதல் என்று நினைத்த அதிகாரியின் அறியாமை வாசகர் மனதில் கொஞ்சம் ஈரத்தை உண்டாக்கும். கையிலே எடுத்த கணம் தொடங்கி கீழே வைக்காமல் படிக்க வைக்கும் நாவல். கதையைச் சொல்லிய முறையும் மொழியழகும் நாவலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். படிக்கும்போது இன்பம் தருவதுதானே ஒரு நாவலின் வேலை. அதைத் தராவிட்டால் அதை யார் படிக்கப் போகிறார்கள்.
யானையின் படிக்கட்டு
இம்முறையும் நான் மொன்ரானா போனபோது ஒரு சம்பவம் நடந்தது. சூப்பர் மார்க்கெட்டில் சில சாமான்கள் வாங்கி அவற்றை ஓடும் பெல்ட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். காசாளர் பெண்மணி படுவேகமாக ஒவ்வொரு பொருளாக எடுத்து சிவப்புக் கோட்டில் காட்டி விலையைப் பதிந்துகொண்டு வந்தார். அவருக்கு ஓர் ஐம்பது வயது இருக்கும். அவர் பொருளை எடுத்துப் பதிந்த விதம் அவரை அனுபவப்பட்டவராகக் காட்டியது. வேகமாக வேலைசெய்த அவருடைய கைகள் ஒரு பொருளை எடுத்ததும் சிறிது தயங்கின. அந்தப் பொருளின் ரகஸ்யக் கோடு அழிந்திருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பயனில்லை. உடனே அவர் ஞாபகத்திலிருந்த ரகஸ்யக் கோடு எண்ணை அழுத்தியதும் கம்ப்யூட்டரில் விலை பதிவானது. எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ‘எப்படி பொருளின் ரகஸ்ய எண் உங்களுக்கு ஞாபகமிருக்கிறது?’ என்று கேட்டேன். அவர் சிரித்தார். நீண்ட காலமாக அங்கே வேலை செய்பவர். ‘எனக்கு இங்கே விற்பனையாகும் எல்லா பொருள்களின் ரகஸ்ய எண்களும் தெரியும்’ என்றார். ‘உண்மையாகவா?’ ‘உண்மையாகத்தான். வேண்டுமென்றால் பரீட்சித்துப் பாருங்கள்.’
அன்று அவ்வளவு கூட்டமில்லை. ‘நீங்கள் சொல்வது மனிதனால் முடியாத காரியம். என்றாலும் பார்ப்போம். சரி, முந்திரிப் பருப்புக்கு என்ன ரகஸ்ய எண்?’ என்றேன்.
‘பாக்கெட்டா அல்லது உதிரியா?’
‘உதிரி.’
‘உப்பு போட்டதா அல்லது போடாததா?’
‘போடாதது.’
‘உடைந்ததா அல்லது உடையாததா?’
‘உடையாதது.’
அவர் ரகஸ்ய எண்ணைப் பதிந்தார். உடனேயே விலை வந்தது. அது சரியாகத்தான் இருந்தது. ரகஸ்ய எண் பதினொரு ஸ்தானங்களில் இருந்தது. இன்னொரு பொருளைச் சொன்னேன். அதற்கும் சொன்னார். இன்னொன்றைச் சொன்னேன். அதையும் சொன்னார். எந்தப் பொருளைச் சொன்னாலும் அதன் ரகஸ்ய எண்ணைத் தயக்கமில்லாமல் சொன்னார். அந்த சூப்பர் மார்க்கெட்டில் 10,000 பொருள்களுக்கு மேலே இருந்தன. 80 வீதம் பொருள்களின் பதினொரு ஸ்தான எண்கள் அவருக்கு மனப்பாடம். பல வருடங்களாக அவர் அங்கே வேலை செய்கிறார். 1974ல் அமெரிக்காவில் ரகஸ்ய கோடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுடைய சூப்பர் மார்க்கெட்டில் 25 வருடங்களாக இந்த முறை பாவனையில் இருக்கிறது. முதலில் ஒரு விளையாட்டாக எண்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். பின்னர் ஓர் ஆர்வம் வந்தது. அதற்குப் பின்னர் ஒரு வெறி. எந்த புதுச்சாமான் சூப்பர் மார்க்கெட்டில் வந்தாலும் அதைப் பாடமாக்கத் தொடங்கினார். ‘ஒரு வருடத்தில் குறைந்தது 500 புதுப்பொருட்களின் எண்களைப் பாடமாக்கி விடுவேன். ஒருமுறை மனதிலே போட்டால் அதை என்னால் மறக்க முடிவதில்லை’ என்றார். நான் வீட்டுக்குத் திரும்பும் வழி முழுக்க அவரையே நினைத்தேன். எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை; பரிதாபம்தான் ஏற்பட்டது. ஒரு மனித மூளை 20 சதவீதம்தான் வேலை செய்கிறது. அந்த மூளைக்குள் இப்படித் தேவையில்லாத தகவல்களைப் போட்டு இந்த அம்மா இப்படி நிரப்புகிறாரே என்று தோன்றியது.
பக்கத்து வீட்டுச் சிறுமி வந்திருந்தாள். அவள் கையிலே ஒரு செல்பேசி இருந்தது. இந்த வயதிலேயே பெற்றோர் அவளுக்கு செல்பேசி ஒன்றை வாங்கிக், கொடுத்துவிட்டார்கள். அதனுடன் எப்பவும் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளைப் பிரிக்க முடியாது போலிருந்தது.
‘உங்கள் பள்ளிக்கூடத்திலே வாய்ப்பாடுகள் மனப்பாடம் செய்ய சொல்லித் தருகிறார்களா?’ என்று கேட்டேன். அவள் தான் ஒன்றுமே மனப்பாடம் செய்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்றாள். அப்படியா என்றுவிட்டு, அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்கள் என்னவென்று கேட்டேன். அரை நிமிடம்கூட எடுக்கவில்லை. செல்பேசியில் பார்த்துவிட்டு 50 மாகாணங்களையும் அகர வரிசையில் ஓப்புவித்தாள். ‘உன்னுடைய கைபேசியில் எல்லாவற்றுக்கும் விடை இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘இருக்கிறதே’ என்றாள்.
ஒரு பூச்சி இருக்கிறது. அதற்கு ஒரேயொரு காது. அது என்ன பூச்சி?
கும்பிடு பூச்சி.
சனிக்கிரகத்துக்குள் எத்தனை சந்திரன்கள் உள்ளன?
உக்ரெய்ன் நாட்டின் தலைவர் யார்?
விக்டர் யானுகோயிச்.
ஒரு கணித நிபுணர் 20 வயதில் இறந்துபோனார். அவர் யார்?
அவர் பிரெஞ்சுக்காரர். பெயர் Evariste Galois. இன்னொருவருடன் ஏற்பட்ட மானப் பிரச்சினையில் இருவரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டபோது கணித நிபுணர் வயிற்றில் குண்டுபட்டு இறந்துபோனார்.
1962ல் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜோன் ஸ்டீன்பெக்.
அடிலெய்ட் நகரத்துக்கும் அடிஸ் அபாபாவுக்கும் என்ன நேர வித்தியாசம்?
ஏழு மணி முப்பது நிமிடம்.
மனிதர்களுக்கு இரண்டு பெயர் என்பது எப்போது, எங்கே ஆரம்பித்தது.
இங்கிலாந்தில், 1066ம் வருடம்.
கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் சிறுமி பதில் சொன்னாள். தமிழிலக்கியத்தில் ஒரு கேள்வி கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றியது. ‘சேக்கிழார் என்பவர் யார்?’ என்று கேட்டேன். சிறுமி அந்தப் பெயரை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டச் சொன்னாள். சொன்னேன். உடனேயே ‘சேக்கிழார் என்பவர் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவர். 4253 பாடல்கள் கொண்ட பெரிய புராணத்தை இயற்றியவர்’ என்றாள்.
சிறுமியின் கைபேசியில் கிடைக்காத ஒன்றைக் கேட்கவேண்டும் என நினைத்தேன். ‘ஆண்கள் உடையில் பட்டன்கள் வலப்புறம் இருக்கும். பெண்கள் உடையில் அவை இடப்புறம். அது ஏன்?’ அவள் சிறிது செல்பேசியில்
செல்பேசி தகவல்களைத் தரும். உங்களுக்காக அது யோசிக்க முடியாது. விடைகளை மனனம் செய்ய வேண்டிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அது தேவையில்லை.
எதை எதையோ தட்டினாள். பின்னர் சொன்னாள். ‘பட்டன் உடைகள் வந்த காலம் செல்வந்தர் மட்டுமே அவற்றை அணிந்தனர். ஆண்கள் தாங்களாகவே உடை அணியும்போது பட்டன்களைப் பூட்டினர். பெண்களின் பட்டன்களை அவர்களின் ஏவல்காரிகள் பூட்டினர். அவை ஏவல்காரியின் வசதிக்காக வலது பக்கம் (பெண்ணின் இடது பக்கம்) பொருத்தப்பட்டன.’
‘எதற்காக பானம் அருந்தும்போது இரண்டு நண்பர்கள் கிளாஸ்களை கிளிங் என்று முட்டிக்கொள்கின்றனர்?’ ‘ஆரம்பத்தில் அறிமுகமில்லாத இருவர் சந்திக்கும்போது ஒருவர் தன் கிளாஸில் இருந்து சிறிது பானத்தை மற்றவர் கிளாஸில் ஊற்றிய பின்னர் இருவரும் ஒரே நேரத்தில் பானத்தை அருந்துவர். பானத்தில் ஒருவித நஞ்சும் கலக்க வில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடு. நாளடைவில் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துகொண்ட நண்பர்கள் கிளாஸ்களை வெறுமனே கிளிங் செய்து தங்கள் நட்பைப் பேணிக்கொண்டார்கள்.’
எந்தக் கேள்வியைக் கேட்டாலும் சிறுமியிடம் பதில் இருந்தது. உலகத்தில் நீளமான ஆறு, உயரமான மலை, அதி வேகமாக ஓடும் மிருகம், ஆகச் சின்ன நாடு, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை, இலக்கியம், சரித்திரம் ஆகிய எல்லா விவரங்களும் அவளிடம் இருந்தன. கேட்டுப் பிரயோசனமில்லை. உலகத்து தகவலின் கூட்டுத் தொகை அவள் சின்னக் கையில் இருந்தது. செல்பேசியில் இல்லாத ஒரு விசயத்தைக் கேட்கவேண்டும்.
‘அகிலாவின் தாயாருக்கு ஐந்து பெண் குழந்தைகள். அவர்களுடைய பெயர்கள் அம்பா, சம்பா, மும்பா, ரம்பா. ஐந்தாவது பெண் குழந்தையின் பெயர் என்ன?’ அவளுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அது செல்பேசியில் அகப்படாது. ஐந்தாவது பெண்குழந்தையின் பெயர் அகிலா என்று சொன்னேன். நான் அவளை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லிக் கோபித்துக்கொண்டு ஓடிவிட்டாள்.
செல்பேசி தகவல்களைத் தரும். உங்களுக்காக அது யோசிக்க முடியாது. விடைகளை மனனம் செய்ய வேண்டிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அது தேவையில்லை. உலகத்து அனைத்துத் தகவல்களும் விரல் நுனியில் கிடைக்கின்றன. அந்தத் தகவல்களை வைத்து அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பதுதான் கேள்வி. இந்தத் தகவல் களஞ்சியம் நியூட்டனின் கையிலோ, டார்வினின் கையிலோ அல்லது எடிசனின் கையிலோ கிடைத்திருந்தால் அவர்கள் எத்தனை தூரம் மனித அறிவை எடுத்துப்போயிருப்பார்கள். இனி வரும் காலத்தில் தகவல்களை வைத்துக் கேள்விகளை உண்டாக்கத் தெரியவேண்டும்.
நீல நிறத்தில் ஏன் மிருகம் இல்லை?
ஆரம்பத்தில் பூமிக்கு மூன்று சந்திரன்கள் இருந்தனவே? அவற்றில் இரண்டுக்கு என்ன நடந்தது? மூன்றாவது சந்திரன் நிலைத்து நிற்குமா? அது இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
உலகத்தின் முதல் மனிதர்கள் பேசிய மொழி என்ன?
பிரபஞ்சம் விரிந்துகொண்டே போகிறது. ஒருகட்டத்தில் அது நின்று மறுபடியும் சுருங்க ஆரம்பிக்குமா?
பூமியின் காந்தமுனை வடக்கு தெற்காகவும், தெற்கு வடக்காகவும் மாறும் சாத்தியக்கூறு உண்டா? மாறினால் என்ன ஆகும்?
அநேகமாக எல்லா நாடுகளிலும் சமிக்ஞை விளக்குகள் இருக்கின்றன. இவை ஏன் தாங்களாகவே முடிவெடுப்பதில்லை. உதாரணமாக, இரவு இரண்டு மணிக்குக் காரோட்டிக் கொண்டு வருகிறீர்கள். ரோட்டிலே ஒரு வாகனமோ பாதசாரியோ கிடையாது. சிவப்பு விளக்கு எரிகிறது. நீங்கள் அரை நிமிடம் நின்றுதான் போக வேண்டும். சமிக்ஞை விளக்குகளுக்கு ஏன் கண்கள் இருக்கக்கூடாது. வாகனங்களையும் பாதசாரிகளையும் எண்ணக்கூடிய சமிக்ஞை விளக்குகள் தேவை. அவை அந்தந்த நேரம் வாகனங்களின் எண்ணிக்கைக்கு தக்க மாதிரி முடிவெடுத்தால் இன்னும் நல்லாயிருக்குமே!
எதிர்காலத்தில் மாணவர்கள் பரீட்சைகளில் கேள்விகளுக்கு விடை எழுத மாட்டார்கள். அவை ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்ததுதான். அவர்கள் கேள்விகளை உண்டாக்குவார்கள். அதுதான் பரீட்சை.
தெரிந்த தகவல்களை வைத்து தெரியாத உண்மைகளைத் தேடிப்போவதுதான் விஞ்ஞானம். எறாரொஸ்தீனிஸ் என்று ஒரு கிரேக்க விஞ்ஞானி யேசு பிறப்பதற்கு 270 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தார். நடு மத்தியானத்தில் ஒருநாள் சூரியனுடைய கிரணங்கள் ஒரு கிணற்றுக்குள் சரி நேராக விழுந்தன. அதே நாள் அதே நடு மத்தியானம் சில மைல்கள் தூரத்திலிருந்த இன்னொரு கிணற்றில் சூரியனுடைய கிரணங்கள் ஒரு கோணத்தில் விழுந்தன. அந்தக் கோணத்தை அளந்தார். இரண்டு கிணறுகளின் தூரத்தையும் அளந்தார்.
அவரிடம் இப்போது இரண்டு உண்மைகள் இருந்தன. இவற்றை வைத்து அவர் மூன்றாவது ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். பூமியின் சுற்றளவு. தன் நாட்டைவிட்டு வெளியே செல்லாமல் பூமியின் சுற்றளவை முதன்முதலாகக் கணித்த விஞ்ஞானி அவர்தான்.
1639ம் ஆண்டு ஹொறொக்ஸ் என்ற விஞ்ஞானி வெள்ளிக்கிரகம் சூரியனைத் தாண்டி குறுக்காகப் போகும்போது ஒரு புள்ளியாகத் தெரிவதை அவதானித்தார். அந்தக் கறுப்புப் புள்ளி சூரியனைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தை அளந்தார். அதை வைத்து பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை அவரால் ஓரளவுக்குக் கணிக்க முடிந்தது. அவருக்குப் பின்னர் வந்த விஞ்ஞானிகள் அந்தக் கணிப்பை மேலும் மேம்படுத்தினர். உலக அறிவு வளர்வது அப்படித்தான்.
உண்மைகள் இலக்கியவாதியின் கைகளில் எப்படி இலக்கியமாக மாறுகின்றன என்பதை ஜெயமோகனின் ‘காடு’ நாவலில் பல இடங்களில் பார்க்கலாம். குறிஞ்சி மலர் 12 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும். இது ஓரு தகவல். ஒரு வண்டின் ஆயுள் 15 நாள். இது இரண்டாவது தகவல். ஜெயமோகனின் வார்த்தைகளில் இந்த உண்மைகள் எப்படி இலக்கியமாக மாறுகின்றன என்பது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ‘குறிஞ்சிமலர் 12 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும். வண்டின் ஆயுள் அதிகபட்சம் பதினைந்து நாள். இந்த வண்டிற்குத் தெரியுமா திரும்பவும் இது இந்த மலர்மீது அமரவே முடியாது. இதன் பலநூறு தலைமுறைகளுக்குப் பிறகுதான் இன்னொரு வண்டு இம்மலர் மீது அமர முடியுமென.’
1904ம் ஆண்டு நியூயோர்க் கிழக்கு ஆற்றிலே நீராவிக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்த விபத்திலே ஏறக்குறைய 1000 பயணிகள் உயிரிழந்தனர். செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்னர் நியூயோர்க் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆகக்கூடிய பேரழிவு இதுதான். சரித்திரத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வைச் சிறிது காலம் சென்றபின்னர் மக்கள் மறந்துவிட்டனர். ஜேம்ஸ் ஜோயிஸின் யூலிஸிஸ் நாவலில் இந்த விபத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. இன்றும் மக்களிடையே இந்த விபத்து நினைவில் இருப்பது ஜேம்ஸ் ஜோய்ஸ் படைத்த அழியா இலக்கியம் மூலமாகத்தான்.
மொன்ரானா பெண்மணி இந்த வருடம் முடிவுக்கு வரும்போது மேலும் 500 பொருட்களின் எண்களை மனனம் செய்து முடித்திருப்பார். இதனால் உலக அறிவின் கூட்டுத்தொகை ஒருபோதும் மாறிவிடப் போவதில்லை. நான் பாகிஸ்தானில் வேலைசெய்த காலத்தில் அக்பர் கட்டிய லாகூர் கோட்டைக்குப் போயிருக்கிறேன். 13 வாசல்களும் இரண்டு கோபுரங்களும் கொண்ட பெரிய அரண்மனை. அரசனுடைய சபா மண்டபத்துக்குள் நுழைய பிரம்மாண்டமான படிக்கட்டுகள் உள்ளன. அவை சாதாரண படிக்கட்டுகள் போன்றவை அல்ல. நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏறி நாலைந்து அடிகள் நடந்த பின்னர்தான் அடுத்த படிக்கட்டில் ஏறவேண்டும். அத்தனை அகலமானவை. மிகவும் சிரமப்பட்டுத்தான் மேலேறிச் செல்லலாம். எதற்காக இப்படி படிக்கட்டுகள் அமைந்திருந்தன என்பது முதலில் எனக்குப் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. அது மனிதர்களுக்கான படிக்கட்டுகள் அல்ல. யானைகளுக்கானவை. அரசனும், மந்திரி பிரதானிகளும் யானைகள் மீது அமர்ந்தபடி சபா மண்டபத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஏற்பாடுதான் அந்தப் படிகள்.
இன்றைய மனிதகுல மொத்த அறிவு பழைய காலம்போல சின்னச் சின்னப் படிகளாக வளர்வதில்லை. யானைப் படிக்கட்டுகள்போல பெரும் பாய்ச்சலாக முன்னேறுவது. மனித சரித்திரம் முன்எப்பொழுதும் சந்தித்திராத அற்புதமான புள்ளியில் நாம் இன்று நிற்கிறோம். எங்கள் விரல் நுனியில் ஆதியிலிருந்து சேகரித்த அத்தனை தகவல்களும், மனித மூளை அவற்றைப் பயன்படுத்தும் கணத்துக்காகக் காத்திருக்கின்றன. இனிவரும் காலங்களில் பல்வேறு துறைகளிலும் மனிதனுடைய அறிவுப் பாய்ச்சல் பிரமிக்கவைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். இந்த அறிவை மனிதகுல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவதா அல்லது அழிவுக்குப் பயன்படுத்துவதா என்பது மனிதன் கையில்தான் இருக்கிறது.
இடம் மாறியது
பிரபஞ்சன் எழுதிய ‘வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை அவர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான் வரும் வழியில் கவனம் செய்த பாடல் ஒன்றை பிள்ளையின் முன் பாடி அதற்கு பொருளையும் சொல்கிறார். கவிராயருக்கு யாசகம் கேட்டு பழக்கமில்லை. கூச்சத்துடன் நிலத்தை பார்த்தபடி நிற்கிறார்.
பிள்ளை உடனே பதில் சொல்லவில்லை. அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பெரிய தட்டிலே பூ, பழம், வெற்றிலை, பாக்கு, பட்டு வஸ்திரத்துடன் பொற்காசுகளாக ஆயிரம் வராகன் பரிசளிக்கிறார். கவிராயர் முகம் பரவசமடைந்து கண்ணீர் துளிர்க்கிறது. அவரை பரிசுகளுடன் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கிறபோது பிள்ளை சொல்வார், ‘இப்போதைக்கு ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது. கவலைப்படாதீரும்.’
பிரபஞ்சன் படைப்புகளில் நான் முதலில் படித்தது இந்த நாவலைத்தான். அது படித்து இன்றைக்கு 15 வருடம் ஆகியிருக்கும். அந்த நாவலில் எனக்குப் பிடித்த வசனம் இதுதான். இன்றுவரை ஞாபகத்தில் நிற்கிறது. ‘ஏழ்மையை இடம் மாற்றியாகிவிட்டது.’ உலகத்திலே ஏழ்மையை ஒழிக்க முடியாது. ஓர் இடத்தில் ஒழித்தால் இன்னொரு இடத்தில் முளைத்துவிடும். இடம் மாற்றத்தான் முடியும். John Steinbeck என்ற அமெரிக்க நாவலாசிரியர் எழுதிய The Grapes of Wrath நாவலிலும் இப்படி ஓர் இடம் வரும். இந்த உலகில் செல்வந்தர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் ஏழைகள் நிரந்தரமானவர்கள். அவர்களை ஒழிக்க முடியாது. இந்த இரண்டு நாவல்களிலும் காணப்பட்ட ஒற்றுமை என்னை வியப்படைய வைத்தது.
பிரபஞ்சனைப் பற்றி அந்தக்காலம் தொட்டு எனக்குள் பெரிய மதிப்பிருந்தது. ஆனால் புத்தக அட்டையில் காணப்படும் அவருடைய சதுரக் கண்ணாடி படத்தை பார்க்கும்போது ஓர் அச்சம். கடுமையானவராக இருப்பார் என்றே தோன்றியது. நான் அவரைச் சந்தித்தது கிடையாது. சமீபத்தில் உதயன் விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது. ஸ்டைலாக தொப்பி அணிந்து, கறுப்புத்தோல் அங்கி மாட்டி வந்த அவர் அப்படியே என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். இருபது வருடமாக பிரிந்திருந்த நண்பர்கள் சந்தித்ததுபோல அது இருந்தது. இரண்டு நிமிட நேரத்துக்கு பிறகு அவர் பேசப் பேச நானும் நண்பர்களும் நிறுத்தாமல் சிரித்தபடியே இருந்தோம். அவர் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வெளியேபோய் சிகரெட் பிடித்துவிட்டு வருவார். நாங்கள் கொஞ்சம் ஓய்வெடுப்போம். மறுபடியும் உள்ளே வந்து அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கத் தொடங்குவோம்.
பேச்சு ’வானம் வசப்படும்’ நாவலைப்பற்றி திரும்பியது. அது சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சரித்திர நாவல். அதை எழுதுவதற்கு எப்படி தூண்டுதல் கிடைத்தது. சரித்திர நாவல் என்றால் வரலாறு படிப்பதில் நிறைய நேரம் போய்விடும். ஆராய்ச்சிக்குறிப்புகள் எழுதி வைக்கவேண்டும். எப்படி அந்த நாவலை எழுதி முடித்தார் எனக் கேட்டோம். அவர் ஆனந்தரங்கம்பிள்ளை நாட் குறிப்பை படித்திருக்கிறார். அப்போதே விதை விழுந்துவிட்டது. அந்த நாட்குறிப்பு வித்தியாசமானதாக இருக்கும். 18ம் நூற்றாண்டு பேச்சுத் தமிழுக்கு ஒரே உதாரணம் அந்த டைரிதான். பல இடங்களில் தமிழா அல்லது வேறு மொழியா என ஐயம் தோன்றிவிடும். அந்த டைரியை முழுக்கப் படித்து, புரிந்து அது சம்பந்தமான வரலாற்று நூல்களையும் ஆராய்ந்து முடித்த பின்னரே நாவல் சாத்தியமானது. பத்து வருடத்து உழைப்பு என்று கூறினார்.
அந்த நாவலில் பானு என்றொரு தாசி வருவாள். விருந்து ஒன்றில் அலாரிப்பு ஆடிய பின்னர் பதம் ஆடுவாள். ‘ஆறுதலாரடி? அந்த மாதொருபாகனைத் தவிர’ என்று தொடங்கும் அருமையான பாடல். இதை யார் எழுதினார்கள் என்று கேட்டதற்கு அவர் தானே அதை எழுதியதாகக் கூறினார். பல வருடங்களாக என் மனதில் கிடந்த சந்தேகத்தை அன்றுதான் என்னால் போக்க முடிந்தது.
பிரபஞ்சனிடம் எழுத்து துறைக்கு எப்படி வந்தீர்கள்? எந்த வயதில் எழுதத் தொடங்கினீர்கள்? என்று கேட்டேன். ஒரு நண்பர் வீட்டு இரவு விருந்துக்கு அவர் வந்திருந்தார். அதே விருந்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபஞ்சன் வெளியே சென்று சிகரெட் பிடித்துவிட்டு திரும்பினார். பெரிய கதை பிறக்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்தது. விருந்துக்கு வந்திருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.
பிரபஞ்சனிடம் காணப்பட்ட முக்கியமான வித்தியாசம் அதுதான். அவர் ஓர் எழுத்தாளரைப் போலவே இல்லை. அந்த வீட்டு செல்ல நாய்களுடன் விளையாடினார். குழந்தைகளை இழுத்து வைத்து பேசினார். பெண்களுடன் சினிமா பற்றியும், புதுமுக நடிகைகள் பற்றியும் தொலைக்காட்சி தொடர்கள் பற்றியும் பேசினார். அவர்கள் எல்லோரும் ஒருவர் தவறாமல் அவர் பேச்சில் மயங்கியிருந்தது தெரிந்தது. என்னுடைய மனைவி அடுத்தநாள் காலை சொன்னார். ‘பிரபஞ்சன் பெரிய எழுத்தாளர். ஆனால் என்ன நல்ல மனுசன். அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சுவாரஸ்யமாக வேறு பேசுகிறார். பெரிய அறிவு ஜீவிபோல முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பயமுறுத்தவில்லை. எல்லோரையும் சக மனுசராகப் பார்க்கிறார்.’ என் மனைவி தன் மனதில் தொகுத்து வைத்திருந்த எழுத்தாளர் பிம்பத்தை பிரபஞ்சன் போட்டு உடைத்துவிட்டார். என் மனைவியிடமிருந்து ஒரு நற்சான்றிதழ் லேசாகப் பெறக்கூடியது அல்ல. நாற்பது வருட காலமாக நான் அதற்காகத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்.
சிகரெட்டை முடித்துவிட்டு பிரபஞ்சன் உள்ளே நுழைந்தார். அவருடைய மதுக் கோப்பையை யாரோ நிறைத்திருந்தார்கள். ‘எனக்கு பதினாறு வயதானபோது அப்பா ஒரு நல்ல நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதன் பளபளப்பான ஒற்றைகளைக் கிழித்து காதல் கடிதங்கள் எழுதத் தொடங்கினேன். அப்படி காதல் கடிதங்கள் எழுதியே அரைவாசி நோட்டுப் புத்தகம் முடிந்து போனது. காரணம் நான் அப்பொழுதெல்லாம் ஒரு கொள்கை வைத்திருந்தேன். எந்தப் பெண்ணை பார்த்தாலும் ஒரு காதல் கடிதம் கொடுக்க வேண்டும் என்று. ஒரு பெண் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கோயிலை ஒருதரம் சுற்றிவிட்டு வீட்டுக்கு போவாள். இவளை எப்படியோ தவறவிட்டு விட்டேன். இவளிடம் கடிதம் கொடுப்பதற்கு சரியான இடம் கோயில்தான் என்று தீர்மானித்தேன். நோட்டுப் புத்தகத்தில் பக்கங்களை கிழித்து ஆறு பக்க காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். ஐந்தே முக்கால் பக்கம் அவளை வர்ணித்தது. மீதியில் என் காதலைச் சொல்லியிருந்தேன்.
கோயிலில் அவள் சுற்றியபோது நானும் சுற்றினேன். முதல்நாள் கடிதம் கொடுப்பதற்கு போதிய தைரியம் வரவில்லை. இரண்டாவது நாள் அவள் பின்னாலேயே போய் பின்னுக்கு நின்றபடி கடிதத்தை நீட்டினேன். அவள் பெற்றுக்கொண்டாள். அதுவே பெரிய வெற்றி. வழக்கம்போல என்னுடைய முகத்தில் எறியவில்லை. துணிச்சலாக கடிதத்தை பெற்றுக் கொண்டவளுக்கு அதை ஒளித்து வைக்கும் சாமர்த்தியம் இல்லை. பிடிபட்டுப் போனாள். கடிதத்தை தூக்கிக்கொண்டு அவளுடைய அப்பா என் வீட்டுக்கு வேகமாக வந்ததை நான் பார்த்துவிட்டேன். நான் அதே வேகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறி முதல் வந்த பஸ்ஸை பிடித்து காசு தீருமட்டும் பயணம் செய்து கடைசி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நின்றேன். இருட்டிக்கொண்டு வந்தது, போக இடமில்லை. எப்படியோ சித்தப்பா தேடி அங்கே வந்து என்னை பிடித்து திரும்ப வீட்டுக்கு அழைத்துப் போனார்.
என்னை நிற்கவைத்து ஆறுபக்க கடிதத்தையும் அப்பா வாசித்து முடித்தார். இந்த பூலோகத்தில் நான் அனுபவித்த அவமானத்தில் அதனிலும் கீழான ஒன்று என் வாழ்கையில் பின்னர் நடக்கவில்லை. கடிதத்தை வாசித்து முடித்த பிறகு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தேன். அவர் சொன்னார், ‘இவ்வளவு நல்லாய் எழுதுறாயே. இதுவெல்லாம் உனக்கு தேவையா?’ அவ்வளவுதான். என்னை தண்டிக்கவில்லை, என் எழுத்து திறமையை பாராட்டினார். எனக்குள் ஏதோ படைப்பாற்றல் இருக்கிறது என்று என்னை உணரவைத்த தருணம் அதுதான்.
‘உங்களுடையது காதல் திருமணம்தானா?’ இது அடுத்த கேள்வி. ‘எனக்கு வீட்டிலேதான் பெண் பார்த்தார்கள். சொந்தத்துக்குள்ளே. அப்பா இதுதான் பெண் என்றார். நான் சரி என்றேன். உடனேயே மணமுடித்து வைத்துவிட்டார்கள். எனக்கு வேலை இல்லை. நானா கல்யாணம் வேணும் என்று கேட்டேன். திருமணம் ஆன பின்பு அப்பா என் குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கொண்டார். நான் எழுத்து வேலையில் மும்முரமானேன்.’
கனடா வந்த பின்னர் அவருடைய மனைவியிடம் பேசினாரா என்று கேட்டேன். வந்த மறு நாளே தொலைபேசியில் அழைத்ததாகவும், மறுபடியும் அடுத்தநாள் காலை (சனிக்கிழமை) பேசப் போவதாகவும் சொன்னார். இரவு நடுநிசியாகிவிட்டது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினார்கள். நானும் மனைவியும் விருந்துக்கு அழைத்த தம்பதியினரிடம் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். பிரபஞ்சனிடம் மூன்று நாட்கள்தான் பழகியிருந்தேன். ஆனால் நீண்ட வருடங்களாக அவரை தெரியும் என்பதுபோல ஓர் உணர்வு. அவரிடம் விடை பெற்றோம். இரண்டு கைகளையும் விடாமல் பற்றிக்கொண்டு விடை தந்தார்.
விருந்து நடந்தது வெள்ளிக்கிழமை இரவு. ஒரு நாள் கழித்து பிரபஞ்சனுக்கு ஒரு தொலைபேசி வந்தது. பிரபஞ்சனின் மனைவி பாண்டிச்சேரி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டார். பிரபஞ்சன் அந்தச் செய்தியை யாருடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. அந்தச் செய்தியுடனே முழு இரவையும் கழித்தார். தன்னை ரொறொன்ரோவுக்கு அழைத்தவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்திருக்கலாம். அது அவருடைய பெருந்தன்மை. திங்கள் காலை ரொறொன்ரோவிலிருந்து புறப்படும் விமானத்தை பிடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தியை அழைத்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இடிபோல வந்திறங்கிய மரணச் செய்தியை கேட்டு அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும். விமானத்தில் பயணம் செய்த அந்த நீண்ட தூரத்தை எப்படி அவர் தனிமையில் கழித்திருப்பார்.
அந்த வெள்ளிக்கிழமை இரவு விருந்தில் பிரபஞ்சனை சுற்றியிருந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் அவர் மனைவி என்ன செய்திருப்பார். அவர் உடல் நலமாக இருந்தாரா அல்லது அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதியாகிவிட்டாரா? தான் மனைவியிடம் சனிக்கிழமை காலை பேசப்போவதாக பிரபஞ்சன் சொன்னார். ஆனால் பேசினாரா என்பது தெரியவில்லை. நான் அவருக்கு என்ன ஆறுதல் கூறமுடியும். முதன்முதல் சந்தித்தபோது அவர் என்னை ஆரத் தழுவி கட்டிக்கொண்டதை நினைத்துக்கொண்டேன். அதையே அவருக்கு திருப்பித் தருகிறேன்.
பிரபஞ்சனின் நாவலில் வரும் ஆனந்தரங்கம் பிள்ளை சொன்னதுபோல உலகத்தில் நிச்சயமானது ஏழ்மைதான். அதை ஒழிக்க முடியாது, இடம் மாற்றி வைக்கலாம். மரணமும் அப்படித்தான், நிச்சயமானது. ஆனால் ஒரே இடத்தில் தங்காது. இடம் மாறிக்கொண்டே இருக்கும்.
உடனே திரும்ப வேண்டும்
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக் குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அடுத்து அவளுக்கு நுளம்பு கடித்து மலேரியாக் காய்ச்சல் பிடித்தது. மருத்துவமனைக்கு ஓடினோம். குழந்தை மெலிந்து உருக்குலைந்து கொண்டு வந்தது. அந்த நேரம் பார்த்து என்னை நைரோபி அலுவலகத்துக்கு அவசரமாக வரும்படி பணித்தார்கள். சியாரா லியோன் ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் என்றால் நைரோபி கிழக்குகரை. நீண்ட தூரம். நேரடியான விமான பறப்பு இல்லை. போவதற்கும் வருவதற்கும் மூன்று நாள் எடுக்கும். மனைவியை எப்படியும் சமாளிக்கச் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நான் திரும்பி வர எட்டு நாட்கள் ஆகும் என்பது எனக்கு தெரியாது. வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு பயணமாக அது அமையும் என்பதும் நான் நினைத்தும் பார்க்காத ஒன்று.
நான் போன விசயம் இரண்டு நாளில் முடிந்து மூன்றாவது நாள் புறப்பட்டேன். எத்தியோப்பிய விமானம் அழகான பணிப்பெண்களுக்கு பேர் போனது. அமைதியான உபசாரம். நீண்ட பயணம், ஆனால் ஏதோ பிரச்சினை காரணமாக எங்களை அபிட்ஜானில் இறக்கிவிட்டு அடுத்தநாள் போகலாம் என்றார்கள். அடுத்தநாள் விமானம் புறப்பட்டு நேராகப் போய் நைஜீரியாவின் லேகொஸ் தலைநகரத்தில் இறங்கியது. ‘விமானம் பழுது, நாளை தான் புறப்படும்’ என்றார்கள். அப்படித்தான் பிரச்சினை ஆரம்பமானது.
ஒருவராவது எதிர்ப்பு தெரிவிக்காமல் தங்கள் தங்கள் பெட்டிகளையும், பைகளையும் தூக்கிக்கொண்டு போய் வரிசையில் நின்றார்கள். எனக்கு நைஜீரியா விசா இல்லையா கையால் அதிகாரி என்னை மறித்துவிட்டார். கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்தார். ‘நானாக விரும்பி வரவில்லை. பிளேன் பழுதாகி நின்றுவிட்டது, நாளை புறப்படும். ஓர் இரவு மட்டுமே அனுமதி வேண்டும்’ என்றேன். அந்த அதிகாரி நம்ப மறுத்தார். ஏதோ நானே சதிசெய்து பிளேனை பழுதுபடுத்தியதுபோல என்னைப் பார்த்தார். என்னுடைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு ஒரு பழைய தபால் உறை பின்பக்கத்தில் ஏதோ மொழியில் கிறுக்கி என்னிடம் தந்தார். அதுதான் பற்றுச்சீட்டு. நாளைக்கு திரும்பும்போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும் கவலை பிடித்தது. வெளியே நூற்றுக்கணக்கான வாடகைக் கார்கள் நின்றன. ஒரு சாமான் தூக்கி நிலத்திலே கிடந்த என் பெட்டியை தூக்கி வாகனத்தில் வைத்தான். அதற்கு கூலியாக 100 டொலர் கேட்டான். காசை குடு குடு என்று சாரதி விரட்டினான். நான் மறுத்தேன். அங்கே நின்ற அத்தனை சாமான் தூக்கிகளும் முற்றுகை இட்டனர். தரையிலே சும்மா கிடந்த பெட்டியை தூக்கி காரிலே வைப்பதற்கு கூலி நூறு டொலரா? பிரச்சினை பெரிதானது. வேறு ஒன்றும் செய்யத் தெரியாமல் காசை கொடுத்துவிட்டு வண்டியில் ஏறி விமான நிலையத்துக்கு கிட்டவாக உள்ள ஒரு விடுதிக்கு போகச் சொன்னேன். உடனே சாமான் தூக்கியும் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான். ஏன் என்று கேட்டேன். ‘என் சாமானை விடுதியில் இறக்குவதற்கு’ என்று சொன்னான் சாரதி. நைஜீரியாவில் இப்படி வழக்கம் இருக்கும்போல என்று நினைத்துக்கொண்டேன். சாலை நீண்டு கொண்டே போனது. ஆள் அரவம் அற்ற ஒரு வீதியில் கார் போனபோது எனக்கு பயம் பிடிக்க தொடங்கியது.
உலக வங்கியில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவரை லேகொஸ் நகரில் சமீபத்தில் கார் சாரதி கொள்ளையடித்து அவருடைய விலை உயர்ந்த ஆடைகளையும் சப்பாத்துகளையும்கூட கழற்றிக் கொண்டு நடுவீதியில் விட்டிருந்தான் என்ற செய்தியை தினப் பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் படித்திருந்தேன். ஆகவே கிலி பிடித்து நடுங்கிக்கொண்டிருந்தேன். அவ்வளவாக மனித நடமாட்டமில்லாத ஒரு விடுதியில் சாரதி காரை நிறுத்தினான். நான் நேராக மனேஜரிடம் சென்று ‘என்னிடம் பணம் இல்லை, காசோலைதான் இருக்கிறது. எனக்கு தங்க இடம் வேண்டும், வாடகை சாரதிக்கும் பணம் கொடுக்கவேண்டும்’ என்றேன். அவரும் சம்மதித்து எனக்கு தங்குவதற்கு ஓர் அறையை ஒதுக்கி வாடகைக் காருக்கும் பணம் கொடுத்தார். ஒருவாறாக சாரதியிடமும், சாமான் தூக்கியிடமும் இருந்து தப்பி பெட்டியுடன் அறைக்குள் நுழைந்தபோதுதான் எனக்கு அப்பாடா என்று ஆறுதல் ஏற்பட்டது.
அறையிலே டிவி, குளிர்பெட்டி, காற்றாடி என்று எல்லா வசதிகளும் இருந்தாலும் அறை மிக மோசமான நிலையில் இருந்தது. நிலக்கடலைக் கோதுகள் காலில் தட்டுப்பட்டன. எனக்கு முன்பு தங்கியிருந்தவருடைய தலை அடையாளம் தலையணையில் இன்னும் இருந்தது. தரையில் ஊர்ந்த கரப்பான் பூச்சிகள் அணுகியதும் ஒரு குருவிபோல பறந்துபோயின. வீட்டு நிலைமை பற்றிய பதற்றம் எனக்கு கூடியது. எழுபதுகளில் நெடுந்தொலைவு தொலைபேசி அழைப்புக்கு பல மணி நேரம் காத்திருக்கவேண்டும். ஒருவழியாக தொடர்பு கிடைத்து மனைவியுடன் பேசியபோது அவர் திரும்ப திரும்ப ‘சுறுக்க வாங்கோ, சுறுக்க வாங்கோ’ என்று சொன்னாரே ஒழிய வேறு ஒன்றும் சொன்னாரில்லை.
பெரும் அவதியாக இருந்தது. ஒருவர்கூட அறிமுகம் இல்லாத பெரிய நாடு. ஒரு மனித சீவன்கூட அன்பாகப் பேசவில்லை. வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த பெண்மணி பெரிய ஒப்பனை எல்லாம் செய்திருந்தாளே ஒழிய அவள் உதடுகள் சிரிப்பதை மறந்து பல வருடங்கள் ஆகியிருக்கலாம். யன்னல் வழியாகப் பார்த்தேன். தரைப் புற்கள் நிறைய மின்மினிப் பூச்சிகள். அவ்வளவு மின்மினிகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை. சில இருப்பதும் சில பறப்பதுமாக ஒரு மின்விளையாட்டு அங்கே நடைபெற்றது. அந்தக் காட்சியில் சற்று மகிழ்வதுகூட கடவுளுக்கு பிடிக்கவில்லை. திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு அறை இருட்டானது. சிறிது நேரம் அப்படியே அசையாமல் நின்றேன். உதவிக்கு வருவாரில்லை. நான் தடவித்தடவி கட்டிலை அடைந்து படுத்தபோது காலை வீடு போய்ச் சேர்ந்து விடலாம் என்று என்னை தேற்றிக் கொண்டேன்.
இரவு இரண்டு மணிக்கு திரும்பவும் மின்சாரம் வந்தபோது படபடவென்று விசிறி சுழன்றது. விளக்குகள் எரிந்தன. தொலைக்காட்சி சத்தமாக பேசியது. குளிர்பெட்டி உயிர்பெற்றது. நான் திடுக்கிட்டு விழித்தேன். மீதி இரவு நான் தூங்கவே இல்லை. எப்போது விடியும் என்று காத்திருந்து விடிந்ததும் குளித்து தயாரானேன். தலைமுடிகள் நட்டுக்கொண்டு நின்றன. சீப்பினால் சீவியபோதும் படியாமல் சரசரவென்று ஒலி உண்டானது. நான் முதல் நாள் தரித்த அதே உடையை அணிந்துகொண்டு, காலை உணவுகூட சாப்பிட நேரம் இல்லாமல் விடுதி மனேஜரிடம் சொல்லி ஒரு கார் பிடித்து விமான நிலையத்துக்கு போய்ச்சேர்ந்தேன்.
தபால் உறையின் பின்பக்கத்தில் கிறுக்கிய துண்டை கையிலே பிடித்துக்கொண்டு குடிவரவு அதிகாரியை தேடினேன். சீருடையில் எல்லோரும் ஒரே மாதிரியான உடலமைப்புடன் தெரிந்தார்கள். ஒருவருக்கும் அந்த துண்டு என்ன சொன்னது என்பது தெரியவில்லை. அது யார் எழுதியது என்பதும் மர்மமாகவிருந்தது. அந்த மனிதர் பேசிய போது அவருடைய தொண்டை நரம்புகள் புடைத்து நின்றன. இந்த ஓர் அடையாளத்தை வைத்துக் கொண்டு அந்த அதிகாரியை எப்படி தேடிக்கண்டுபிடிப்பது.
இரண்டு மணிநேரம் கழித்து அந்த மனிதரே என்னை தேடி வந்து ‘நூறு டொலர் எடு’ என்றார். நைஜீரியாவில் எல்லோரும் காசை நூறு நூறாகத்தான் எண்ணுவார்கள் போலும். அதனிலும் குறைவான ஒரு தொகை அவர்களுக்கு தெரியவில்லை. அவர் தந்த துண்டையும் நூறு டொலரையும் கொடுத்தேன். சாவியைப் போட்டு லாச்சியை திறந்து ஒரு குவியல் கடவுச்சீட்டுகளை அள்ளி மேசைமேல் போட்டார். இன்னும் துளாவி மீதியையும் மேசையில் குவித்தார். சில நழுவி மேசைக்காலில் விழுந்தன. நான் பதறியபடி ஒவ்வொன்றாக ஆராய்ந்தேன். என் கைகள் நடுங்கியபடியால் என்னால் சீராகத் தேடமுடியவில்லை. எத்தனை நாடுகள், எத்தனை அளவுகள், எத்தனை வண்ணங்கள்.’வணுவாட்டு’ என்றுகூட ஒரு நாடு இருந்தது. ஒருவாறாக என்னுடைய கடவுச்சீட்டை கண்டடைந்தபோது மகிழ்ச்சியால் உடல் விம்மியது. அவர் மீதியை கைகளால் வழித்து அப்படியே லாச்சியினுள் தள்ளினார். பெரிய காரியத்தை செய்துமுடித்தவர்போல கைகளை அகல விரித்து நடந்துபோனார். நான் கணக்குப் பார்த்தேன். அன்றைய நாள் முடிவதற்கிடையில் அவருக்கு நாலாயிரம், ஐயாயிரம் டொலர்கள் வியாபாரம் ஆகிவிடும்.
டிக்கட் கவுண்டரை தேடிப் போனேன். அங்கே பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். அந்த விமான நிலையத்தில் முக்கியமான வேலைகளுக்கு பெண்களையே நியமித்திருந்தார்கள். இந்தப் பெண் சிக்கலான ஆனால் நாகரிகமான முடியலங்காரம் செய்திருந்தாள். அந்த அலங்காரங்களை முடிப்பதற்கு அவளுக்கு அரைநாள் கூட ஆகியிருக்கலாம். நைஜீரிய விமான நிறங்களான கடும் பச்சை, வெள்ளை கலந்த சீருடை. செதுக்கப்பட்ட புருவம். ஒப்பனை செய்த முகம். அழகான உதடுகள். ஆனால் அந்த உதடுகளை அவள் வீணாக்கவில்லை. ஒரு வார்த்தை பேசாமல் காரியத்தை கவனித்தாள்.
அவளுடைய வேலை பயணிகளுக்கு விமான இருக்கை எண் அட்டைகளைக் கொடுப்பது. பக்கத்து மேசை லாச்சி திறந்து கிடந்தது. பயணிகள் ஒவ்வொருவராக வந்து அவளிடம் இருபது டொலர் கொடுத்தார்கள். அவள் காசை வாங்கி லாச்சியில் போட்டுவிட்டு ஓர் அட்டையை எடுத்து அதில் இருக்கை எண்ணை எழுதி நீட்டினாள். பிறகு அடுத்தவரிடம் 20டொலர் பெற்றுக்கொண்டு அவரைக் கவனித்தாள். ஒரு பயணியிடம்கூட அவள் பேசவில்லை. எனக்கு முன்னால் நின்றவர் இரண்டு கைகளிலும் சாமான்கள் வைத்திருந்தபடியால் அவர் கைகளை விரிக்க அவருடைய அக்குளில் இருக்கை அட்டையை செருகினாள். என் முறை வந்தபோது ஒரு பேச்சுப்பேசாமல் காசை நீட்டினேன். என் இருக்கை எண் D6 என்று குறித்து தந்தாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. தங்குமிடத்திற்கு சென்று அறிவிப்பு வருவதற்காகக் காத்திருந்தேன்.
ஒரு விசயம் எனக்கு ஆச்சரியமளித்தது. பயணிகளில் ஆண்கள் குறைவு, பெண்களே அதிகமாக விருந்தனர். அவர்கள் எல்லாம் ஆறடி உயரமாக வாட்டசாட்டமாக பெரிய பெரிய பொதிகளுடன் தரையில் உட்கார்ந்திருந்தனர். சிலர் குழந்தைகளையும் முதுகில் கட்டியிருந்தார்கள். முதல் பார்வைக்கு நூற்றுக்கணக்கான கறையான் புற்றுகள் தரையிலே முளைத்துவிட்டது போலவே தோன்றியது. ஒரு விமானம் வந்து நின்றது. எல்லோரும் மூட்டை முடிச்சுகளுடன் அதை நோக்கி ஓடினர். நான் அறிவிப்புக்காக காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அந்த பிளேன் புறப்பட்டு போனது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அடிக்கடி மேல் சட்டையை உயர்த்தி உள்ளே கையை விட்டு கோலாபாக்கு எடுத்துச் சப்பிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது வார்த்தைகளுடன் பாக்குத்தூளும் பறக்கும். ஆகவே தயங்கியபடி பேச்சுக் குடுக்காமல் என்னுடைய அட்டையை எடுத்துக் காட்டினேன். அவர் பறந்துகொண்டிருந்த விமானத்தை சுட்டிக்காட்டி ‘அதுதான் என்னுடைய விமானம்’ என்று சொன்னார்.
அடுத்து வந்த பிளேன் நிற்கத் தொடங்க முன்னர் எல்லோரும் ஓடினர். நானும் ஓடினேன். அந்த தொக்கையான பெண்கள் எல்லாம் இடித்து தள்ளி மூட்டை முடிச்சுகளுடன் வேகமாக ஓடினர். என்னால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு மாதிரி ஒடுக்கமான பிளேன் வாசலுக்குள் நுழைந்துவிட்டேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டார்கள். இடம் கிடைக்காமல் இருபது பேர் நின்றார்கள். அதில் நானும் ஒருவன். என்னுடைய எண் D6. எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்மணியின் அட்டையில் D6 என்றே எழுதியிருந்தது. எனக்கு பின்னால் நின்றவருடைய அட்டையும் D6. விமானி எங்களை விமானத்திலிருந்து இறங்கும்படி விரட்டினார். நாங்கள் திரும்பவும் தங்குமிடத்துக்கு வந்தோம். என்னோடு திரும்பியவர் எனக்கு நிலைமையை விளங்கப்படுத்தினார். அந்த ஒப்பனைப் பெண் காசு உழைப்பதற்காக ஒரே இருக்கை எண்ணை மூன்று நான்கு பேருக்கு குறித்து கொடுப்பார் என்றார். உங்கள் இருக்கையை முதலில் அடைவது உங்கள் கெட்டித்தனம். இது ஒரு பந்தயம் போல என்றார். எனக்கு பகீரென்றது.
மேலும் இரண்டு விமானத்தை அன்று தவறவிட்டேன். மறுபடியும் இரவு அதே விடுதிக்கு சென்று தங்கினேன். மனைவியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசினேன். மனைவி ஒரே வார்த்தையை திருப்பி திருப்பி சொன்னார். ‘சுறுக்கு வாங்கோ, சுறுக்கு வாங்கோ.’
அடுத்த நாளும் விமானங்களை தவறவிட்டேன். அதற்கு அடுத்த நாளும். அந்தப் பெண்களுடன் போட்டி போட என்னால் முடியவில்லை. எனக்கு பயிற்சி போதாது. பெரிய மூட்டைகளை தூக்கிக் கொண்டு நைஜீரிய விமானச் சின்னமான பறக்கும் யானைபோல வேகமாக பறக்கும் பலசாலிகளாக அவர்கள் இருந்தார்கள். ஒரு முறை நான் பாய்ந்து ஏறி எனக்கு குறிக்கப்பட்ட இருக்கையில் உட்காரப்போன சமயம், ஒரு பாரிய பெண்மணி, தலையிலே பொதி தனியாக ஆட, வலது கையால் பெரிய மூட்டையை காவிக்கொண்டு இடது கையால் என்னை இழுத்தெறிந்தார். நான் பிளேன் வாசலில் போய் விழுந்தேன்.
திடீர் திடீரென்று பயணிகளுக்கிடையில் சண்டைகள் மூளும். இரண்டு மலைகள் பொருதத் தயாராவதுபோல மூக்குகள் முட்ட பெருத்த குரலில் மோதல்கள் ஆரம்பிக்கும். அவர்கள் வசவுகள் எப்படியிருக்கும் என்றறிய எனக்கு ஆசை. ஆனால் மொழி புரியாது. தொடங்கிய மாதிரியே உடனே சமாதானமாகிவிடுவார்கள். தொழுகை நேரம் வந்தால் எல்லோரும் ஒரே திசையை நோக்கி திரும்புவார்கள். மறுபடியும் கறையான் புற்றுபோல காத்திருத்தல் நடக்கும்.
மூன்றாவது நாள் நான் முதல் விமானத்தை தவறவிட்டேன். நெளிவுசுளிவுகள் எல்லாம் எனக்கு பரிச்சயமாகிவிட்டன. விமானம் புள்ளியாகத் தெரியத் தொடங்கியதும் ஓட ஆரம்பித்தேன். நானும் மற்றவர்களை இடித்து மிதித்து முன்னேறினேன். அப்படியும் எனக்கு முன்னால் ஓடிய பத்துப்பேர்களில் ஒற்றைக்கொம்பு போல வளைந்துபோன ஒரு கிழவிகூட இருந்தார். எனக்கு மூச்சு வாங்கியது. என்னுடைய இருக்கையை கண்டுபிடித்தபோது அதில் ஏற்கனவே வாட்டசாட்டமான ஒரு கறுப்பு மனிதர் நைஜீரிய தொப்பி அணிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். எனக்கு அதிர்ச்சி. இவர் என்ன காற்றிலிருந்து உண்டாகினாரா? ஒன்றுமே புரியவில்லை. என் சுவாசப் பையில் இன்னும் கொஞ்சம் காற்று மிச்சம் இருந்தது. ‘உங்கள் இருக்கை எண் என்ன?’ என்றேன். அவர் அட்டையை காட்டினார். அவருக்கும் எனக்கு கிடைத்த அதே எண்தான். சீட் கிடைக்காதவர்கள் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார்கள். விமானி வந்து துரத்தும் வரைக்கும் நிற்பதுதான் வழக்கம். விமானி வந்து எங்களைக் கலைந்துபோகச் சொன்னார். அப்போது இருக்கையைப் பிடித்த மனிதர் ஒரு காரியம் செய்தார். எழுந்து அவர் இருக்கையில் என்னை உட்காரவைத்து சீட்பெல்ட்டையும் அவரே கட்டிவிட்டார். சீட் பெல்ட்டை கட்டாவிட்டால் வேறு யாராவது என்னை இழுத்துப்போட்டு உட்கார்ந்துவிடும் அபாயம் இருந்தது. ‘நல்ல பயணமாக அமையட்டும்’ என்று வாழ்த்திவிட்டு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு அந்த மனிதர் மறைந்தார். உடனேயே எனக்கு தெரிந்தது அவரை நான் இனிமேல் என் வாழ்நாளில் சந்திக்க மாட்டேன் என்று. என் வாயிலிருந்த வார்த்தைகள் எல்லாம் வெளியேறிவிட்டதால் என்னால் நன்றிகூட சொல்லமுடியவில்லை. இன்றும் அந்த மனிதரை எந்தக் கூட்டத்தில் கண்டாலும் என்னால் அடையாளம் காட்ட முடியும்.
எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினேன். ஒரு குட்டித் தலையணையில் குட்டித் தலையை வைத்து குழந்தை உறங்கியது. சரியாக எட்டு இரவும் எட்டு பகலும் கழித்து வந்திருந்தேன். அப்படியும் என் முகத்தை மகள் மறக்கவில்லை. மெல்லிய ஒரு புன்னகை வெளிப்பட்டது. அதனிலும் பெரிய சமிக்ஞை தருவதற்கோ சந்தோசத்தை வெளிப்படுத்துவதற்கோ அவள் உடம்பில் பலம் இல்லை. மலேரியா குணமாகிவிட்டது என்று மனைவி சொன்னார். குழந்தை உடலை சற்று திருப்பி ‘உம் உம்’ என்று தன் தோள்மூட்டை காட்டியது. தும்பு இலையான் முட்டையிட்ட இடம் வீக்கம் குறைந்து ஆனால் கறுத்து கிடந்தது. சிறு குருவி வாய் பிளந்ததுபோல சதை பிரிந்துபோய் காணப்பட்டது. புழு வெளியே வந்துவிட்டது என்றார் மனைவி. இப்போது அது செட்டை முளைத்து எங்கோ பறந்துகொண்டிருக்கலாம். ஒன்றும் அறியாத என் மகளின் உடம்பை கூடாக்கி அங்கே ஒரு புழு நீண்ட காலம் வசித்தது என்பதை நினைக்கவே மனம் துணுக்குற்றது.
எங்கள் மருத்துவர் ஆப்பிரிக்காவில் புகழ் பெற்றவர். மருத்துவமனையை விட்டு வேறு எங்கும் நோயாளிகளைப் பார்க்க போகமாட்டார். என் மகளைப் பார்க்க காலையிலும் மாலையிலும் வந்து போனதாக மனைவி சொன்னார். நம்பமுடியவில்லை. என் குழந்தையை அவர் காப்பாற்றிவிட்டார். விமானத்தில் தன் ஆசனத்தை எனக்கு விட்டுத் தந்த தொப்பி போட்ட நெடிய கறுப்பு மனிதரை நினைத்துக்கொண்டேன். மனித ஈரம் இன்னும் பூமியில் ஒட்டிக் கொண்டிருந்தது.
மனைவி என்னைப் பார்த்து ‘என்னால் இனிமேல் ஒரு நிமிடம் கூட இங்கே தங்க முடியாது. நாங்கள் கெதியாய் திரும்பவேண்டும்’ என்றார். அவருடைய இமைகள் நனைந்திருந்தன. என் மன நிலையும் அப்படித்தான் இருந்தது. ‘அதைத் தான் நாளைக்கு முதல் வேலையாகச் செய்யப்போகிறேன்’ என்றேன்.
நான் ஆப்பிரிக்க மண்ணை விட்டுக் கிளம்ப மேலும் 21 வருடங்கள் பிடித்தன.
பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை – அஞ்சலி
எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.
காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.
ஒரு காலத்தில் இப்படித்தான் சிவத்தம்பியுடன் நான் பல நாட்களைக் கழித்திருக்கிறேன். அவர் எனக்கு ஒரு மூத்த அண்ணரைப்போல. நான் அன்றைய காலகட்டத்தில் எழுதிய சிறுகதை ஒன்றை விமர்சிப்பார். எப்பொழுதும் பாராட்டுத்தான். கைலாசபதி என்றால் நிறையுடன் குறைகளையும் சொல்வார். சிவத்தம்பி உணர்ச்சிவசப்படுபவர், அவரால் அழகைத்தான் காணமுடியும். எங்கள் பேச்சு புதுமைப்பித்தன், பாரதி என்று விரிவாகப் போகும். ஆங்கில இலக்கியம் என்றால் எங்கள் இருவருக்கும் அப்போது பிடித்தது ஜேம்ஸ் ஜோய்ஸ்தான். சில சமயங்களில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றுகூடுவதுண்டு. அனைவரும் இலக்கியக்காரர்கள்தான். மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் ஒருவரை ஒருவர் ‘பூசை’ என்று அழைத்துக்கொள்வோம். இது சிவத்தம்பி கண்டுபிடித்த புதிய வார்த்தை. எர்னெஸ்ட் ஹெமிங்வே எந்த ஒரு வார்த்தையைப் பார்த்தாலும் அதை ஒரு புதிய வார்த்தை போல பார்ப்பார் என்று சொல்வார்கள். சிவத்தம்பிக்கு அந்த பிரச்சினை கிடையாது. வார்த்தைகளைப் புதிது புதிதாக உண்டாக்கிவிடுவார். ‘என்ன பூசை! கன நாளாகக் காணேல்லை?’ என்பார். அன்பு நிறைந்துவிட்டபோது அப்படி அழைப்பார்.
அந்தக் காலங்களில் பாரதியாருக்கு அடுத்தபடி அவரைக் கவர்ந்தவர் ஆண்டாள்தான். ’கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற வரிகளை உணர்ச்சிபூர்வமாகக் கூறி சிலாகிப்பார். சில பாடல்களைச் சொல்லும்போது அவருக்குக் கண்ணீர் வந்திருக்கிறது. நாங்கள் ஒருவரும் ஆண்டாளைப் படித்ததில்லை. அதற்குப் பிறகுதான் ஆண்டாள் படிக்கத் தொடங்கினோம். 1960 களில் ஒரு புத்தகம் நண்பர்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது. அதை அறிமுகப்படுத்தியது சிவத்தம்பிதான். Paul Potts என்ற எழுத்தாளர் எழுதிய Donte Called You Beatrice என்ற நூல் அப்பொழுதுதான் வெளிவந்திருந்தது. சிவத்தம்பி அதைப் படித்துக் கரைத்துக் குடித்துவிட்டார். அவர் படித்த பின்னர் நான் படித்தேன். அதன் பின்னர் நண்பர்கள் படித்தார்கள். புத்தகம் ஒரு சுற்றுப் போனது. திரும்பவும் சிவத்தம்பியிடம் போய்ச் சேர்ந்ததா தெரியாது. அது பரவாயில்லை. அவர் பேசும்போது பல வசனங்களை அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்து விடுவார். அப்படி அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? டான்ரே என்பவர் 13ம் நூற்றண்டு இத்தாலியின் புகழ்பெற்ற கவி. 9 வயதுச் சிறுமியைக் காதலித்து, நிறைவேறாத காதலைப் பெருங்காவியமாகப் படைத்தார். பாரதியாரும் ஒன்பது வயதுச் சிறுமியின் காதலில் விழுந்து கவிதை எழுதியது நினைவுக்கு வரும். Paul Potts என்பவர் நிறைவேறாத தன் காதலைப் பற்றி நூல் முழுக்க புலம்பியிருப்பார். அது ஒரு சுயசரிதைத் தன்மையான புத்தகம். காதலியின் அழகை முடிவில்லாமல் வர்ணித்து தள்ளுவார். அது எங்கள் எல்லோருக்கும் பிடித்துக்கொண்டது. ஏனென்றால் அந்த வயதில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறைவேறாத ரகஸ்யக் காதல் இருந்தது. புத்தகத்தில் ஒரு வசனம் வரும். ‘ காதல் என்பது ஆற்றைப்போல. திருப்பிக் காதலிக்கப்படாத ஒருவனின் காதல் கடலை அடையாத ஆற்றைப் போன்றது.’ சிவத்தம்பி அதை அடிக்கடி தன் பேச்சிலே மேற்கோள் காட்டுவார்.
சிவத்தம்பிக்கு யாழ்ப்பாணத்திலே அவருடைய ஊரிலேயே மிகச் சிறப்பாக கல்யாணம் நடந்தது. நாங்கள் நண்பர்கள் எல்லோரும் கொழும்பிலே இருந்தோம். சிலர் படித்தார்கள், சிலர் வேலையில் இருந்தார்கள். எப்படியும் கல்யாணத்திற்குப் போவதென்று முடிவுசெய்தோம். எல்லோரும் காசுபோட்டு திருமணப் பரிசு வாங்கிக்கொண்டு கொழும்பிலிருந்து போனோம். சிவத்தம்பி மிகவும் மகிழ்வாகக் காணப்பட்டார். நாங்கள் பார்த்தது ஒரு புதிய மனிதரை. எங்களுக்கு விமரிசையாக விருந்து படைத்தார். பக்கத்தில் இருந்து ‘சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ என்று உபசரித்ததை மறக்க முடியாது. மணப்பெண்ணை எங்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைத்துப் பெருமைப்பட்டார்.
நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மூன்று நாடகங்கள் எழுதினேன். சிவத்தம்பி அந்த நாடகங்களை இயக்கி மேடையேற்றினார். நாடகம் எழுதுவதுதான் என் வேலையே ஒழிய, அதில் நடிப்பவர்களைத் தெரிவு செய்வது, நடிப்புச் சொல்லிக்கொடுப்பது, காட்சி அமைப்பது அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார். ஒருமுறை எனக்குப் பிடிக்காத ஒருவர், அவருக்கு நடிப்பு சுத்தமாக வராது, அவருக்கு சிவத்தம்பி முக்கியமான பாத்திரம் ஒன்றைக் கொடுத்துவிட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவசர அவசரமாக நாடகத்தில் இரண்டாவது சீனை மாற்றி எழுதினேன். மேடையில் கதாநாயகனிடம் அந்தப் பாத்திரம் கன்னத்தில் அடி வாங்கும். பாத்திரமும் எறும்பு சைசுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. ஏதோ என்னால் முடிந்ததை செய்து நாடகத்தைக் காப்பாற்றினேன்.
கொழும்பில் தமிழ் விழா நடந்தபோது சிவத்தம்பி ஒரு நாடகத்தில் நடித்தார். அதைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள். மகாபாரதத்தில் ஒரு பகுதிதான் நாடகம். சிவத்தம்பி பீமனாக வேடம் தரித்தார். அவருடைய உயரமும் அகலமும் அந்தப் பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. ஆனால் பிரச்சினை அவருக்கு ஒப்பனை செய்தவருக்குத்தான். ஒப்பனைப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பது என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருந்தது. பட்டு வேட்டிகளும், பட்டுச் சேலைகளும் பீமனுடைய அரச உடையாகவும், அங்கவஸ்திரமாகவும் மாற்றம் பெற்றன. ஆனால் கழுத்திலும், கையிலும், இடையிலும், மார்பிலும் அணிவதற்கு ஆபரணங்கள் தேவை. அரசகுமாரனின் கம்பீரம் அப்படித்தான் வரும். நான் அப்பொழுது ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தேன். அந்தப் பெண் பரதநாட்டியத்தின் தீவிர காதலி. அவருடைய பரதநாட்டிய நகைகளைக் கடன் வாங்கி ஒப்பனை செய்பவரிடம் ஒப்படைத்தேன். பீமனாக வேடம் போட்டவர் அத்தனை நகைகளையும் உடம்பில் தூக்கிக்கொண்டு, கதாயுதத்தை வலது கையில் தூக்கிக்கொண்டு மேடையில் தோன்றினார். ’கூறைச்சீலை கடன்கொடுத்தவள் பாயுடன் பின்னால் அலைவாள்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. நான் நாடகத்தைப் பார்க்கவில்லை. நான் கடன் கொடுத்த நகைகளை வைத்த கண் மாறாமல் பார்த்து பாதுகாத்தேன். நகைகளை அதே நிலையில், அதே எண்ணிக்கையில், அதே உருவத்தில் திருப்பாவிட்டால் காதல் சேதமாகிவிடும். அப்படியும் ஒட்டியாணம் இழுபட்டு வேறு உருவத்துக்கு மாறிவிட்டிருந்தது. பீமனுக்கும் ஒட்டியாணத்துக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு இன்றுமட்டும் புரியாத புதிர். இந்த நகை கடன் சம்பவத்தால் காதல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்பு ஒருவாறு சரிபண்ணப்பட்டது.
சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் கனடா வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது தன்னிடம் 250 பொன்னாடைகள் இருப்பதாக அவர் கூறினார். அவர் சொல்லி வாய் மூடூமுன் இன்னொரு எழுத்தாள நண்பர் தன்னிடம் 25 பொன்னாடைகள் இருப்பதாகச் சொன்னார். நாங்கள் ஒருவரும் அவர் வீட்டுக்குப் போய் எண்ணிப் பார்க்கமாட்டோம் என்ற துணிச்சல்தான். இன்னொருவர், அவர் எழுத்துத் துறைக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது, தன்னிடம் 5 பொன்னாடைகள் சேர்ந்துவிட்டதாகப் பெருமையடித்தார். அப்பொழுது நான் ’என்னிடம் ஒரு பொன்னாடையும் கிடையாது. அது சரி, பொன்னாடை எப்படியிருக்கும்?’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.
இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு ஒரேயொரு முறை பொன்னாடை போர்த்தப்பட்டது. அதைச் செய்தது சிவத்தம்பி. அது நடந்து 25 வருடங்கள் ஆகியிருக்கும். இலங்கையில் ஓர் எழுத்தாளர் சந்திப்பு. 40 பேர் கூடியிருந்தோம். என்னுடைய மூத்த அண்ணர் நான் ஆப்பிரிக்காவில் இருந்து கொழும்பு போன சமயம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்பில் சிவத்தம்பி பொன்னாடை போர்த்தும்போது ஒரு படமும் எடுக்கப்பட்டது. பேப்பரில் படமும் வந்தது. அதைப்பற்றி யாரோ எழுதியும் இருந்தார்கள். இப்பொழுது அந்தப் படம் இல்லை. ஞாபகத்தில் எஞ்சியிருப்பது சிவத்தம்பி கட்டிப்பிடித்து ‘பூசை, எப்படியிருக்கிறாய்?’ என்று கேட்டதுதான். அவரை வாசல் வரை சென்று ஓட்டோவில் ஏற்றி வழி அனுப்பினேன். அவரிடம் இன்னும் ஏதாவது அன்பாகப் பேசியிருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் கடைசி சந்திப்பு என்பது அப்போது தெரியாது.
எங்கள் நண்பர் குழாத்தில் சிவத்தம்பி உண்டாக்கிய அந்தப் புதிய வார்த்தையை சொல்லிக் கூப்பிடுபவர்கள் இன்று யாராவது மிச்சம் இருக்கிறார்களா எனத் தெரியாது. இல்லையென்றுதான் நினைக்கிறேன். என்னை ‘பூசை’ என்று அழைக்கக்கூடிய கடைசி ஆளாக சிவத்தம்பி இருந்தார். இன்று அவர் மறைந்துவிட்டார். அவர் உண்டாக்கிய வார்த்தையும் மறைந்தது.
பழைய நண்பர்
ஒரு பழைய நண்பரைச் சந்திப்பது எப்பவும் மகிழ்ச்சியூட்டும் விசயம் என்று சொல்லமுடியாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவரை யதேச்சையாகச் சந்தித்தேன். எங்களிடம் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. ரிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடைக்குள் நுழைந்து ஆறுதலாக அமர்ந்து பேசு வோம் என்று அவர் சொன்னார். உடனேயே நான் சம்மதித்தேன். அது முதலாவது பிழை.
“காலையில் ஏன் அப்படி அவசரமாக ஓடினீர்கள்?’’ என்று அவர் கேட்டார். நான் சொன்னேன். ‘”மனைவி என்னை தக்காளி வாங்கிவர அனுப்பியிருந்தார். ஒரு கண வனின் கடமை நேராக தக்காளிக் கடைக்குப் போவதுதானே. அதற்குப் பக்கத்தில் ஒரு கடையில் மலிவு விலையில் புத்தகங்கள் விற்றார்கள். சும்மா பார்க்கலாம் என அதற்குள் நுழைந்தேன். புதுப் புத்தகங்கள் பழைய புத்தகங்கள் என்று குவிந்திருந்தன. புத்தகத்தை தட்டிலே அடுக்கிவைக்கும் முறையெல்லாம் அங்கே கிடையாது. குவியல் குவியலாக இருக்கும். கையை புத்தகக் குவியலின் அடி யிலே விட்டு இழுத்து இழுத்து எடுக்கவேண்டும். சிலவேளை அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல புத்த கம் ஒன்றிரண்டு கிடைக்கக்கூடும்.
’கையிலே ஒரு புத்தகம் அகப் பட்டது. நான் எதிர்பார்க்கவில்லை. ரே பிராட்பெரி என்பவர் எழுதிய திணீக்ஷீமீஸீலீமீவீt 451புத்தகம். பலகாலமாகப் படிக்கவேண்டும் என்று நினைத்துப் படிக்க முடியாமல்போனது. கதையின் கதாநாயகன் ஒரு தீயணைப்பு படைவீரன். வழக்கமாக தீயணைப்பு படையின் வேலை தீயை அணைப்பது. ஆனால் இந்தக் கதையில் வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை புத்தகங்களுக்குத் தீ மூட்டுவது.
’புத்தகத்துக்கு காசைக் கொடுத்துவிட்டு வீடு போய்ச் சேர்ந்தேன். புத்தகத்தைப் பாதி முடித்த பின்னர் மனைவி “தக்காளி எங்கே?’ என்று கேட்டார். நான் செல்பேசியைத் தேடுவதுபோல இடமும் வலமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். எப்படி சொல்வது மறந்துவிட்டேன் என்று. மறுபடியும் புறப்பட்டுப்போய் தக்காளி வாங்கினேன். அப்பொழுதுதான் உங்களைச் சந்தித்தேன்.”
விலை உயர்ந்த மதுவை மிடறு மிடறாக அருந்துவதுபோல நண்பர் கோப்பியை சுவைத்துப் பருகியபடியே நான் சொன்னவற்றைக் கேட்டார். பழைய கதைகள் பல பேசி னோம். அப்போதெல்லாம் நண்பர் ஊரிலே புகைப்படம் எடுத்துக்கொண்டு திரிவார். இப்ப அதை விட்டுவிட்டார் போல இருந்தது.
“முன்பு மாதிரி புகைப்படம் எடுப்பதில்லையா?” என்று கேட்டேன். “இலக்கக் காமிரா வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது. சின்னப்பிள்ளைகள்கூட காமிரா வைத்து கண்டபடிக்கு எடுக்கிறார்கள். புத்திக்கு வேலை இல்லை” என்று அங்கலாய்த்தார். ‘‘அது எப்படி? இலக் கக் காமிரா வந்து எளிமையாக்கிவிட்டது அல்லவா?’ Òஎன்னுடைய குரு சொல்வார்’’ “சூரியன் வெளியே வந்தால் காமிராவை உள்ளே வை’ என்று. புகைப்படம் என்றால் அது சூரியனை ஏமாற்றுவதுதான். நிழலையும் வெளிச்சத்தையும் வைத்து விளையாடுவது. சூரியனுடைய ஒளியை எம் வசப்படுத்துவது. ஓடிவிடும் ஒரு தருணத்தைப் பிடித்து நிறுத்தி வைப்பது. அது இப்போது இல்லை.”
நண்பரில் பெரிய மாற்றம் தெரியவில்லை. அவருக்கு 55 வயது இருக்கலாம். நெஞ்சுக்குக் கிட்டவாக பெல்ட் டைக் கட்டியிருந்தார். தலையின் நடுப்பகுதியில் மயிர் முளைப்பது நின்றுவிட்டது. கல்லை தரையில் காலால் உருட்டுவதுபோல ஒரு முழங்காலை மடிக்காமல் சற்று இழுத்து நடந்தார். முப்பது வருடமாக ஒரே இடத்தில் ஒரே தொழிற்சாலையில் ஒரே வேலையை பார்க்கிறார். நான் கேட்டேன். “ஒரே வேலையைப் பார்ப்பது அலுப்பு தரவில்லையா?” அவர் சொன்னார், “சரியாக அளவெடுத்துத் தைத்த பழைய உடுப்பைப் போடும்போது ஒரு சௌகரியமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அப்படித்தான் இந்த வேலையும்” என்றார். இன்னும் மணமுடிக்காமல் அவருடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருக்கிறார். நான் கேட்டேன் “ஏன் நீங்கள் மணமுடிக்கவில்லை?” திங்கள் வியாழன் சனி நாட்களில் மனைவிக்கு தக்காளி வாங்கி கொடுக்கும் இன்பம் அவ ருக்கும் கிடைக்கவேண்டும் என நான் நினைத்தேன்.
“நீங்கள் கனடா புள்ளி விவரப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?” என்றார். நான் “இல்லையே” என்றேன்.
“இதைக் கேளுங்கள். கனடா புள்ளி விவரத்தின்படி 1000 பேரில் இங்கே 495 ஆண்கள், 505 பெண்கள். உங்களால் நம்பமுடிகிறதா?”
“முடிகிறது.”
“பிரச்சினை இதுதான். 495 ஆண்களுக்கு 505 பெண்கள். அதாவது உபரியாக 10 பெண்கள்.”
“இருந்துவிட்டுப் போகட்டும்.”
“இந்த 10 பெண்கள் எங்கே? அவர்களைத்தான் 30 வருடகாலமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதிலே ஒரு பெண் அகப்பட்டாலும் மணமுடிக்கலாம் என்று இருக்கிறேன். நான் மணமுடிக்காததற்கு இதுதான் காரணம். இது மோசமான நாடு” என்றார்.
சிறிது நேரம் கழித்துக் கேட்டார் “நீங்கள் எழுதுகிறீர் களாமே. அது நல்ல பொழுதுபோக்கு.”
“சீட்டாடுவது பொழுதுபோக்கு. கேரம் விளையாடுவது பொழுதுபோக்கு. தபால்தலை சேகரிப்பது பொழுது போக்கு. எழுதுவது அப்படியல்ல.”
“அதுவும் சரிதான்.”
‘”நீங்கள் என்ன எழுதுவீர்கள்?”
நான் சொன்னேன்.
“உங்கள் மனைவி நீங்கள் எழுதுவதைப் படிப்பாரா?”
‘”எழுத்தாளர்களுக்குப் பலவிதமான மனைவிகள் அமைவதுண்டு. ரோல்ஸ்ரோய் என்ற எழுத்தாளருக்கு சோஃபியா என்று மனைவி இருந்தார். ரோல்ஸ்ரோய் எழுதுவதை முதலில் படிப்பது அவர்தான். திருப்பித் திருப்பி அவர் எழுதும் நாவல்களை நகல் எடுப்பார். ஜேம்ஸ் ஜோய்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளருக்கு அமைந்த மனைவி பெயர் நோரா. அவ்வளவு படிப்பு இல்லாதவர். ஆனால் ஜேம்ஸ் ஜோய்ஸ் அவரில் காதலாக இருந்தார். அவர் நோராவைச் சந்தித்த நாள் யூன் 16. அந்த நாள் முழுக்க நடக்கும் சம்பவம் என புனைந்ததுதான் அவருடைய யூலிசிஸ் நாவல். நோரா அடிக்கடி அவருடைய கணவர் எழுத்தை “படிக்கவேண்டும் படிக்கவேண்டும்’ என்று சொல்லியபடியே இருப்பார். ஆனால் இறுதிவரை படிக்கவே இல்லை. என்னுடைய மனைவி செக்கோவ் வர்ணித்ததுபோல. “சந்திரன் ஆகாயத்தில் தினமும் தோன்றுவதில்லை. அதுபோலத்தான் மனைவி என்னுடைய ஆகாயத்தில் இருக்கவேண்டும்.”
“உங்கள் எழுத்தை எங்கே படிக்கலாம்?” என்று கேட் டார். அந்த வாரம் வெளியான என்னுடைய கட்டுரை ஒன்று என் செல்பேசியில் கிடந்தது. அதைத் திறந்து கட்டுரையைக் காட்டினேன். அது இரண்டாவது பிழை.
செல்பேசியை வாங்கிப் பார்த்தவர் முதல்வரி, முதல் வார்த்தையைப் படித்ததும் உரத்து சிரிக்கத்தொடங்கினார். பக்கத்து மேசைகளில் இருந்து கோப்பி குடித்தவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். இவர் சட்டை செய்யவில்லை.
“என்ன நகைச்சுவை என்று சொல்லுங்கள். நானும் சிரிக்கிறேன்” என்றேன்.
“ஆப்பிரிக்கா” என்றுவிட்டு மறுபடியும் சிரித்தார். அவருடைய முகம் உணர்ச்சியைக் காட்டாத முகம். வாய்விட்டுச் சிரித்தாலும் முகம் சிரிக்காமல் சாதார ணமாகத்தான் இருக்கும். சிரிப்புச் சத்தம் மட்டும்தான் வெளியே வந்தது. ‘ஆங்கிலத்தில் கியீக்ஷீவீநீணீ என்று சொல்வார்கள். அதை நீங்கள் எப்படி ஆப்பிரிக்கா என்று எழுதமுடியும்? இதுதான் பிரச்சினை. தமிழில் தி எழுத்து கிடையாது. இப்படிப்பட்ட ஒரு மொழியை நாம் எப்படி சிறந்த மொழி என்று சொல்லமுடியும்?’’
‘‘ஆங்கிலத்தில் ‘ழ’ எழுத்து கிடையாது ஆனால் தமிழில் இருக்கிறது. ஆகவே ஆங்கிலம் குறைந்த மொழியா? தமிழ் உயர்ந்த மொழியா? தமிழ் வார்த்தை களை எழுதுவதற்குத்தான் தமிழ் எழுத்துரு கண்டு பிடிக்கப்பட்டது. ஆங்கில வார்த்தைகளை எழுதுவதற்கு அல்ல. England என்பதை தமிழாக்கி இங்கிலாந்து என்று தான் எழுதுகிறோம். ஆங்கிலேயரும் அப்படித்தான் யாழ்ப்பாணத்தை Jaffna என்றும் தூத்துக்குடியை
Tuticorin என்றும் எழுதுகிறார்கள்.’
‘ஆனாலும் தமிழில் தி இல்லாதது ஒரு குறை தான்.’
‘‘தி தேவைப்படும் ஒரு தமிழ் வார்த்தைகூட இல்லையே. எதற்காக அப்படி ஓர் எழுத்து எங்க ளுக்குத் தேவை. உலகத்தில் எல்லா மொழியினரும் பிறமொழி வார்த்தைகளை தங்கள் வார்த்தைகளாக மாற்றிவிடுகிறார்கள். உதாரணமாக, போர்த்துக் கீய மொழியில் ‘அல்மாரி’ என்று சொல்வார்கள். தமிழில் நாங்கள் அலுமாரி என்று எழுதுவோம். ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக almirah என்று மாற்றிவிட்டார்கள்.’
“ஒன்றிரண்டு அப்படி இருக்கலாம்.”
“ஒன்றிரண்டு அல்ல, நிறைய உதாரணங்கள் உள்ளன. தமிழில் மிளகுத்தண்ணீர் என்று சொல் வோம். ஆங்கிலேயர்கள் அதை mulligatawny என மாற்றிவிட்டார்கள். அப்படித்தான் கட்டுமரத்தை catamaran என எழுதுகிறார்கள். இரண்டு விதமாக புதுவார்த்தைகளை தமிழ் மொழியில் உண்டாக் கலாம். ஒன்று காரணப்பெயர். மற்றது தமிழ்ப்படுத்தப் பட்ட வார்த்தை. ஆப்பிரிக்க மொழியில் சிபோ என்றார்கள். ஆங்கிலத்தில் அது க்ஷ்மீதீக்ஷீணீ ஆகியது. தமிழில் நாங்கள் சீபிரா என்று எழுதியிருக்கலாம். ஆனால் அது வசதியாக வரிக்குதிரை ஆகிவிட்டது. இதேபோலத்தான் 200 வருடங்களுக்கு முன்னர் காப்டன் குக் ஒரு மிருகத்தைப் பார்த்து ஆதிவாசிகளிடம் அது என்ன மிருகம் எனக் கேட்டார். அவர்கள் கங்குரு என்றார்கள். ஆங்கிலத்தில் kangaroo ஆகியது. தமிழிலும் கங்காரு என்று பெயர் பெற்றது.”
“தமிழ் எழுத்துக்களைக்கூட மாற்றி விட்டார் களே?”
‘‘2000 வருடங்களாக தமிழ் எழுத்துருக்கள் மாற்றம் பெற்றபடியேதான் இருக்கின்றன. இனிமேலும் மாறும். மொழி வளர வளர எழுத்து மாறுவது இயற்கைதானே. எட்டு வயதில் போட்ட உடுப்பை 20 வயதில் போட முடியாது அல்லவா? ஆ, ஊ, ஏ போன்ற எழுத்துருக்கள் 250 வருடங்களுக்கு முன்னேதான் உண்டாக்கப்பட்டன. அவற்றைச் செய்தவர் பெஸ்கி என்ற இத்தாலியப் பாதிரியார்.”
“இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு புத்தகம் சொல்லுங்கள். படித்துப் பார்ப்போம்” என்றார். நான் புத்தகத்தின் பெயரைச் சொன்னதும் “இல்லை, இல்லை, ஆங்கிலப் புத்தகம் வேண்டாம். தமிழ்ப் புத்தகம்” என்றார். நான் சொன்னேன், “தமிழிலே பெரிய பெரிய மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. படித்துப் புரிந்துகொள்வது கடினம். எழுத்துக்கள் மாறிவிட்டன. புது வார்த்தைகள் வந்துவிட்டன. உலங்கு வானூர்தி, ஒவ்வாமை, மின்னேற்றம், மரபணு, தகவமைத்தல், முகநூல் இப்படிப் பயமுறுத்தும். ஆங்கிலம்தான் உங்களுக்கு சரி. ‘‘அப்படியானால் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் சொல்லுங்கள்” என்றார். “இன்றைக்கு நான் வாங்கிய புத்தகத்தை நீங்களும் படிக்கவேண்டும். உங்களுக்குப் பிடிக்கும்’’ என்றேன். “படிக்க சுவாரஸ்யமாக இருக்குமா?”
“புத்தகம் சுவாரஸ்யமோ என்னவோ, அதை எழுதியவர் கதை சுவாரஸ்யமானது. இதை எழுதியபோது அவருக்கு 33 வயது. 1953ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் சில நூலகங்களில் தட்டச்சு மெசின் வாடகைக்குக் கிடைக்கும். அதாவது பொது டெலிபோனில் காசு போட்டுவிட்டுப் பேசுவதுபோல தட்டச்சு மெசின் துளையில் காசு போட்டவுடன் அது வேலை செய்யத்தொடங்கும். காசு முடிந்தவுடன் அது வேலையை நிறுத்திவிடும். ரே பிராட்பெரி பத்து சதக் காசை போட்டுவிட்டு அதிவேகமாக அடிப் பார். ஒரு மணித்தியாலம் அது வேலை செய் யும். காசு முடிவதற்குள் அவர் மனதிலே கவனம் செய்து வந்ததை அடித்து முடிக்க வேண்டும். இப்படியாக தினமும் காசு போட்டுவிட்டு அடிப்பார். இந்தப் புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு அவர் மொத்தமாக 10 டொலர் செலவழித்தார். அந்தக் காலத்திலே ஓர் இளைஞனுக்கு அது பெரிய காசு. இன்றைக்கு அந்தப் புத்தகம் உலகம் முழுக்கப் பரவி விட்டது. 10 மில்லி யன் பிரதிகள் விற்றுவிட்டன. 33 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது.’’
“புத்தகத்தில் எத்தனை பக்கங்கள்?”
“158 பக்கங்கள்.”
“இதை எழுதிய ஆசிரியரின் பெயர் என்ன?”
மறுபடியும் சொன்னேன். “ரே பிராட்பெரி.”
“எங்கே விற்கிறது?” அதையும் சொன்னேன்.
“ஆசிரியர் இன்னும் இருக்கிறாரா?”
“சமீபத்தில்தான் அவருடைய 92வது வயதில் இறந்துபோனார்.”
யார் பதிப்பித்தது, என்ன தாள், என்ன அளவு, அட் டைப்பட விவரம் போன்றவற்றை அவர் கேட்கவில்லை. கோப்பை விளிம்பில் கைவிரலைச் சுற்றிச் சுற்றி கீ சத்தம் எழுப்பியபடி அடுத்த கேள்வியை யோசித்தார்.
அவர் கேட்பார் கேட்பார் என்று நான் காத்திருந்த கடைசிக் கேள்விக்கு வந்தார்.
“‘என்ன விலை?”
“ஒரு டொலர்” என்றேன்.
“என்ன? ஒரு டொலரா?” என்று கத்தினார். மறுபடியும் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஆக மலிவு என ஏளனப்படுத்துகிறாரா அல்லது விலை கூடிவிட்டது என்று ஆச்சரியப்படுகிறாரா என்பதை அவர் முகத்திலிருந்து என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பழுப்பு இனிப்பு – சிறுகதை
எங்கள் வீட்டுக் குழாயில் நீர் கொட்டியது. அதுதானே அதன் இயல்பு எனச் சிலர் நினைக்கலாம். ஆனால் குழாயை இறுக்கிப் பூட்டிய பின்னரும் அது ஒழுகியது. மணிக்கூடு நேரத்தை அளப்பதுபோல குழாயின் வாயிலிருந்து தண்ணீர் டக் டக்கென்ற ஒலியுடன் விழுந்தது.
ரொறொன்ரோவில் மஞ்சள் பக்க புத்தகத்தை வீடு வீடாக இலவசமாகத் தந்திருப்பார்கள். நான் அப்படிக் கிடைத்த புத்தகத்தை திறந்து குழாய் திருத்துபவரை அழைப்பதற்காகப் பெயர்களைத் தேடினேன். அதிலே இருந்த ஒரு பெயர் என்னை ஆச்சரியப்படுத்தியது. மகிழ்நன். இன்னொரு முறை படித்தேன். மகிழ்நன். என்ன அருமையான பெயர் இது. பெயரிலேயே மகிழ்ச்சி இருந்தது. இவருடைய பெற்றோர் எத்தனை எதிர்பார்ப்புடன் இந்தப் பெயரை வைத்திருப்பார்கள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு பணியை அல்லவா அவர் செய்தார். தொலைபேசியில் அவரை அழைத்துப் பிரச்சினையை சொன்னதும் இரண்டு மணி நேரத்தில் வருவதாகச் சொன்னார். அப்படியே வந்தார்.
வீட்டு மணியை அடித்தவுடன் கதவைத் திறந்தேன். அவருக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். தலைமயிர் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டு போனது. உதட்டுக்குள் இருந்து வெளிவந்து உடனேயே மறைந்துபோன ஒரு சின்னச் சிரிப்பு. பலவிதமான ஆயுதங்களை ஒரு பெட்டியில் காவிக்கொண்டு வாசலில் நின்றார். உள்ளே நுழைந்தவுடன் என் பெயர், ஊர், எங்கே படித்தேன், எங்கே வேலை செய்கிறேன், எப்பொழுது கனடாவுக்கு வந்தேன் ஆகிய சகல விருத்தாந்தங்களையும் கேட்டு அறிந்துவிட்டார். தன்னுடைய சப்பாத்துகளைக் கழற்றி வாசலில் விடும் முன்னரே என்னுடைய மெய்கீர்த்தியில் பாதியைத் தெரிந்துகொண்டார். அதன் பின்னர்தான் எந்தக் குழாய், எங்கே, எப்படி ஒழுகுகிறது என்ற கேள்வியைக் கேட்டு விடையையும் பெற்றார்.
படுத்துக் கிடந்தபடி ஆயுதம் ஒன்றினால் எதையோ திருக முயன்றார். பல நிமிடங்கள் ஆகியிருக்கும். அப்படியே கிடந்தார். என்ன நினைத்தாரோ உருண்டு எழும்பி இது சரியான ஆயுதம் அல்ல, போய் வேறு எடுத்து வருகிறேன் என்று புறப்பட்டார். நான் சரி என்றேன். வீட்டிலே பாதி அறையை அடைத்து அவருடைய ஆயுதங்கள் ஒடியல் காயப்போட்டதுபோல பரவிக் கிடந்தன. புதிய ஆயுதத்தைக் கொண்டுவந்து திறக்க வேண்டியதைத் திறந்தார். குழாயைக் கழற்றி ஆராய்ந்துவிட்டு இந்தப் பாகம் உடைந்திருக்கிறது என்று சொல்லி அதை வாங்கி வரப் புறப்பட்டார். நான் சரி என்றேன். புதிய உதிரிப்பாகத்தைக் கொண்டுவந்து பூட்டினால் அது பூட்டுப் படவில்லை. ‘இது பழங்காலத்துக் குழாய். சரியான உதிரிப்பாகம் கிடைக்கவில்லை. நான் வேறு இடத்தில் பார்க்கிறேன்’ என்று விட்டுக் கிளம்பினார். நான் சரி என்றேன். அன்றைய காலையிலிருந்து பல சரிகளைச் சொல்லியபடியே நின்றேன். கடைசியாகக் கொண்டுவந்த பாகம் பொருந்திப் போனது என நினைக்கிறேன். மகிழ்நன் வேலை முடிந்ததென மகிழ்ச்சியுடன் பகர்ந்தார். ‘எவ்வளவு?’ என்று கேட்டேன். தூரத்துச் சத்தத்தை உற்றுக் கேட்க முயல்வதுபோல தலையை சாய்த்துப் பிடித்து யோசித்துவிட்டு என் வருமானத்தில் பாதியைக் கேட்டார். பின்னர் இரங்கி என்னுடைய ஊர் அவருடைய ஊரிலிருந்து 17 மைல் தூரம் மட்டுமே என்பதால் ஒரு சின்னக் கழிவு தந்தார். நானும் காசைக் கொடுத்து அவரை அனுப்பிவைத்தேன்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் ஒரு சின்னப் புயல் அடித்து முடிந்ததுபோல சேதமுற்றுக் கிடந்த அறையைக் கூட்டித் துப்புரவாக்கினேன். ஒரு சிறிய ஆயுதத்தை மறந்துபோய் விட்டுவிட்டுப் போனது தெரிய வந்தது. அவசரமாக அவருடைய செல்பேசியை அழைத்தேன். பார்த்தால் மணி வீட்டுக்குள்ளேயே அடித்தது. அவர் செல்பேசியையும் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டார். வேறு வழியில்லாதபடியால் அவர் அழைக்கும்வரை காத்திருந்தேன். அன்றைய நாள் முடிவதற்குள் அவர் திரும்பவும் வந்து செல்பேசியையும் ஆயுதத்தையும் மீட்டுச் சென்றார்.
எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் நேர்த்தியோடும் கச்சிதமாகச் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும். இவர்கள் வேலை செய்யும்போது பாடிக் கொண்டு செய்வார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சிதரும் வேலை அது. பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் பார்ப்பது போலவே இருக்கும். ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்.
பல வருடங்களுக்கு முன்னர் கனடாவில் பிரபலமான நாடக இயக்குநர் டீன் கில்மோரை ஒரு முறை சந்தித்தேன். அவருடைய நாடகத்தில் ஒரு பாத்திரம் செங்கல்லை எடுத்து வீசுவான். அது மேடையில் சரியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து விழுந்து நிற்கும். 200 தடவைக்குக் குறையாமல் செங்கல்லை எறிந்து ஒத்திகை பார்த்ததாக அந்த இயக்குநர் கூறினார். ‘மேடையில் சற்று தள்ளி அது விழுந்தால் என்ன ஆகும்?’ என்று நான் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஒன்றுமே ஆகாது. சபையில் ஒருவருக்குமே அது தெரியவராது. ஆனால் எனக்குத் தெரியுமே’ என்றார். எடுத்த எந்த ஒரு காரியத்தையும் உத்தமமாகச் செய்யவேண்டும். மற்றவர்களுக்காக அல்ல. அது உனக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரவேண்டும். அதுவே லட்சியம்.
எழுத்தாளர்கள் தாங்கள் எழுதுவதில் உடனே திருப்தி அடைந்து விடுவதில்லை. ரோல்ஸ்ரோய் தன்னுடைய புகழ்பெற்ற ‘போரும் அமைதியும்’ நாவலை ஏழு தரம் திருத்தி எழுதினார். அவர் திருத்தங்களைச் செய்து வைக்க அவருடைய மனைவி சோஃபியா நாவலை மறுபடியும் முதலில் இருந்து எழுதி வைப்பார். மறுபடியும் ரோல்ஸ் ரோய் திருத்துவார். இப்படி 1400 பக்க நாவலை அவர் மனதுக்குத் திருப்தி தோன்றும்வரை திருப்பித் திருப்பி எழுதினார். சுந்தர ராமசாமி ஒருமுறை அவருடைய குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் வெளிவந்த காலத்தில் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். ஒரு 500 பக்க நாவல் எழுதுவதற்கு தான் 5000 பக்கங்கள் எழுதுவதாக. ரேமண்ட் கார்வருடைய எழுத்தை 40 வீதம் வெட்டி விட்டுத்தான் பிரசுரிப்பார்கள். ஹெமிங்வே கூட அப்படித்தான். அவர் சில பக்கங்களை 20, 30 முறை திருப்பித் திருப்பி எழுதியிருக்கிறார். பிரபல இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் கார் கதவு சாத்துவதை 70 தடவை படம் பிடித்தார் என்று படித்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு கார் கதவைச் சாத்துவதை எதற்காக 70 தரம் படம்பிடிக்கவேண்டும் என்று கேட்கலாம். அவர் மனதிலே ஏற்கனவே இந்தக் காட்சி உட்கார்ந் திருந்தது. அது கிடைக்கும்வரை அவர் அப்படித்தான் திருப்பித் திருப்பி அந்தக் காட்சியை எடுப்பார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் ஓர் இடம் வரும். ‘என்னை ஞாபகம் வைச்சிருக்கிற ஆளுகூட இருக்காங்களா?’ ஒரு முக்கியமான பெண் பாத்திரம் இப்படிக் கேட்கும். நாவலில் அதைத் தொடர்ந்து வந்த வசனம்தான் உச்சமானது. ‘அந்த ஆதங்கத்தில் அவளுடைய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.’ மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரேயொரு வசனத்தில் கொண்டுவந்திருப்பார் ஆசிரியர். இந்த இடத்தை எஸ்.ரா. எப்படி எழுதியிருப்பார்? எழுதிக் கொண்டு போகும்போது சாதாரணமாக வந்து விழுந்த வார்த்தைகளா அல்லது திருப்பித் திருப்பி செதுக்கி எழுதிய எழுத்தா? எப்படி இவ்வளவு கச்சிதமாக, சொற்ப வார்த்தைகளில் ஒரு பெண்ணின் வாழ்நாள் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்க முடிந்தது?
சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அமெரிக்க ஆசிரியர் எழுதிய முதல் நாவலுக்கு வாசிங்டன் புத்தகப் பரிசு கிடைத்தது. ஆசிரியருடைய பெயர் ஜொனாதன் எவிசன். பத்திரிகைகள் அவரை overnight success என்று புகழ்ந்து தள்ளின.. நிருபர் அவரைப் பேட்டி கண்டபோது “உங்களை ‘ஓர் இரவு வெற்றி’ என்று சொல்கிறார்களே, அது உண்மையா?” என்று கேட்டார். ஆசிரியர் “ஆமாம், 20 வருட ஓர் இரவு வெற்றி” என்று கூறினார். அவர் ஆறு வயதில் இருந்தே தான் எழுத்தாளராக வரவேண்டும் எனக் கனவு கண்டவர். நாள் கூலியாக வேலை செய்துகொண்டு இரவுகளில் தொடர்ந்து எழுதியவர். அவருடைய வெற்றி இலகுவாகக் கிடைத்த ஒன்றல்ல. வெற்றிக்குப் பின்னால் அத்தனை உழைப்பு இருந்திருக்கிறது. எஸ்.ரா. போகிற போக்கில் அந்த வசனத்தை எழுதியிருந்தால்கூட அதற்குப் பின்னர் இருபது, முப்பது வருடப் பயிற்சி இருப்பது தெரியும். 525 பக்க நாவலில் அந்த வரிகளை மாத்திரம் மறக்க முடியவில்லை என்றால் காரணம், செதுக்கி செதுக்கி அப்படி அழகூட்டப்பட்டிருந்தது. நல்ல படைப்பின் அடையாளம் அது.
குறுந்தொகையில் ஒரு பாடல். தலைவி தோழியிடம் சொல்கிறாள். ‘பார் என் நிலைமையை. அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்துவிட்டுப் போய்விட்டார். நான் இப்படி ஆகிவிட்டேன். யானை முறித்த கிளைபோல தொங்கிக்கொண்டு கிடக்கிறேன்.’ மரக்கிளை முன்பு போல இல்லை; முறிந்து நிலத்திலும் விழவில்லை. அதுபோல தானும் பாதி உயிரோடு இங்குமங்குமாக ஊசலாடிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறாள் (குறுந்தொகை 112). புலவர் இந்த உவமையை எப்படி எழுதியிருப்பார். எழுதும்போது அப்படி வந்ததா, அன்றி நிறைய யோசித்துப் பின்னர் எழுதினாரா? இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரும் அந்த வரிகள் இன்னொருவரால் நகல் செய்ய முடியாதவாறு இருக்கும் ரகஸ்யம் வியப்பைத்தான் தருகிறது.
சேக்ஸ்பியரின் புகழ் இன்றுகூட ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அவரைப் பற்றி ஏற்கனவே வந்துவிட்டன. இனிமேலும் வந்துகொண்டே இருக்கும். சமீபத்தில்கூட என்னுடைய நண்பர் ஒருவர் எழுதிய For the Love of Shakespeare என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது. நண்பர் தன்னுடைய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது. எப்படியும் சேக்ஸ்பியரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது அவர் வாழ்நாள் கனவு. சேக்ஸ்பியரைப் போல அவருக்கு முந்தி எழுதியவரும் கிடையாது, பிந்தி எழுதியவரும் கிடையாது. அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும்போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும். Tempest நாடகத்தில் ஓர் இடம். புரஸ்பரோதன் மகளுக்கு, தான் நாட்டை இழந்துவிட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான். அவளால் நம்பமுடியவில்லை, அதிர்ச்சியடைகிறாள். ‘Your tale. Sir. Would cure deafness’ என்று சொல்கிறாள். ‘உங்களுடைய கதை, ஐயா செவிட்டுத்தன்மையைக் குணமாக்கும்.’ என்ன ஒரு சொல்லாட்சி! இந்தக் கற்பனையையும், கவித்துவத்தையும் முழுமையாக செரித்துக்கொள்ள நீண்ட நேரம் தேவைப்படும்.
‘ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூ பூத்தது. மூன்று குடம் தண்ணீர் ஊற்றி மூன்று பூ பூத்தது.’ இப்படி ஒரு பாடல் இருக்கிறது. எத்தனை குடம் தண்ணீர் ஊற்றினாலும் ஐந்து இதழ் பூ ஆறு இதழாக மாறுவதில்லை. எட்டு இதழ் பூ ஒன்பது இதழ் பூவாக மாறாது. பூ இதழ்கள் கூட ஒரு கணக்காகத்தான் பூக்கின்றன. இயற்கைகூட ஒரு கணக்குப்படிதான் வேலைசெய்கிறது. ஒரு இதழ், இரண்டு இதழ், மூன்று இதழ், ஐந்து இதழ், எட்டு இதழ் , 13 இதழ், 21 இதழ் ( அடுத்தது 34, அடுத்தது 55, அடுத்தது 55+34 = 89) என்று அதுவும் ஓர் இயற்கை நெறிப்படி கூடிக்கொண்டு போகிறது. இதை Fibonacci தொடர் என்று சொல்கிறார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். எதற்காக இப்படி என்று கேட்டால் விஞ்ஞானிகளிடம் பதில் இல்லை. ‘எல்லாமே ஒரு பிரபஞ்ச நியதியின்படிதான் இயங்குகிறது. பிரபஞ்சம் ஓர் உத்தமத்தை நோக்கிய அமைப்பு. எங்குமே அழகியல் நிறைந்து கிடக்கிறது’ என்று பதில் வருகிறது.
பிரபஞ்சமே அழகாய்த்தான் சிருட்டிக்கப்பட்டிருக்கிறது. கிரகங்கள் ஓர் ஒழுங்குடன் கதி மாறாமல் சுற்றி வருகின்றன. கிரகங்களும் சந்திரன்களும் வால்நட்சத்திரங்களும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்வதில்லை. ஒரு பறவை கூடு கட்டும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கவனம் எள்ளளவும் பிசகுவதில்லை. எத்தனை சிக்கனம், எத்தனை நேர்த்தி. ஒரு சிறுத்தை வேட்டையாடும்போது அதன் உடல் அசைவுகளில் வெளிப்படும் கலைத்தன்மை வேறு ஒன்றிலும் தென்படுவதில்லை. ஒரு யானை நடக்கும்போதும் அதுதான். ஒரு கோலாக்கரடி தூங்கும்போதும் அதுதான். ஆனால் மனிதன் ஒரு வேலை செய்யும்போது அநேகமாக அவன் முழுமனமும் அங்கே இருப்பதில்லை. அதில் நேர்த்தியும் இல்லை; கலையும் இல்லை.
குழாய் திருத்தக்காரரை நான் அழைத்தபோது நடந்தது அதுதான். நான் அவரிடம் சொன்னதெல்லாம் அவர்மேல் உருண்டுகொண்டு போனது. நேர்த்தியாக வேலை செய்யும் தகுதி அவரிடம் இல்லை. மகிழ்நன் என்ற பெயரைப் பார்த்து நான் ஒரு முடிவு எடுத்தேன். அது தவறானது. நல்ல பெயர் உள்ளவர் நல்ல வேலை செய்வார் என்பது என்ன நிச்சயம்? ஒரு மருத்துவரிடம் போகுமுன்னர் இவர் நல்ல மருத்துவரா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்கு ஏதாவது சோதனை செய்யவேண்டும். ஒரு புத்தகம் வாங்கும் முன்னரே அது எப்படியான புத்தகம் என்று தெரிந்து வாங்குவது எவ்வளவு அவசியம். புத்தகத்தை வாங்கிய பின்னர் 20 பக்கங்கள் படித்துவிட்டு அதைத் தூக்கிப்போடுவது சரியாக ஆராய்ச்சி செய்து புத்தகத்தை வாங்காதபடியால்தான்.
எண்பதுகளில் அமெரிக்காவில் பிரபலமான ஓர் இசைக்குழு இருந்தது. பெயர் வான் ஹெலன் இசைக்குழு. இவர்களின் இசைத்தட்டுகள் ஒரு கோடி விற்பனை செய்து சாதனை படைத்தவை. இந்தக் குழு அமெரிக்காவின் பிரபல நகரங்களில் எல்லாம் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறது. இவர்களின் மேடை உபகரணங்கள், மேடை அமைப்பு சாமான்கள், இசை வாத்தியங்கள் போன்றவை 18 ட்ரக் வண்டிகளில் இவர்கள் போகும் இடங்களுக்குப் போகும். அப்படியென்றால் இவர்களின் இசை நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒப்பந்தம் போட்டவர்களிடமிருந்து இந்தக் குழுவினருக்கு சில வேளைகளில் போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அப்படியான சமயங்களில் இசை நிகழ்ச்சிகள் தோல்வியில் முடியும். இவர்கள் எவ்வளவுதான் திறமையாக இசை நிகழ்ச்சியை நடத்தினாலும் இவர்களை அழைத்தவர்களின் முழு ஒத் துழைப்பும் இல்லாமல் போனால் தோல்வி ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே இப்படியான தோல்விகளைத் தவிர்க்க இந்தக் குழுவின் தலைவர் ஒரு புதுவிதமான ஒப்பந்தத்தை உருவாக்கினார். அந்த ஒப்பந்தம், விழாக்காரர்கள் செய்யவேண்டிய நிபந்தனைகளை நீண்ட பட்டியலாகப் போட்டது. அதில் ஒன்று இப்படி இருந்தது. ‘இசைக்குழு தங்கும் ஹொட்டல் அறையில் 5 றாத்தல் எம்&எம் இனிப்பு வகை எல்லா நிறங்களிலும் (பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம்) இருக்கவேண்டும். ஆனால் பழுப்பு நிறத்தில் இருக்கக்கூடாது.’ இதுதான் அந்த நிபந்தனை. இசைக்குழுவுக்கும் இந்த நிபந்தனைக்கும் என்ன தொடர்பு என்பது ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
குழுவின் தலைவர் ஹோட்டலுக்கு வந்ததும் செய்யும் முதல் வேலை ஐந்து றாத்தல் இனிப்பு எல்லா நிறங்களிலும் இருக்கிறதா என்று பார்ப்பது. பின்னர் பழுப்பு நிற இனிப்பு ஒன்றாவது அகப்படுகிறதா என்பதைக் கிளறிக் கிளறிப் பார்ப்பார். தப்பித் தவறி ஒரு பழுப்பு நிற இனிப்பு அகப்பட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு போய்விடுவார். பலருக்கு இது ஏன் என்று அப்போது புரியவில்லை. இசை நிகழ்ச்சிக்கும், ஒரு பெறுமதி இல்லாத பழுப்பு நிற இனிப்புக்கும் அப்படி என்ன சம்பந்தம். பல வருடங்களுக்கு பிறகு இந்தப் புதிரை இசைத்தலைவர் விடுவித்தார். “நாங்கள் கொடுக்கும் இசை நிகழ்ச்சி உத்தமமாக இருக்கவேண்டும். எங்களுக்குத் திருப்தியாக அமைய வேண்டும். ஆனால் அழைப்பவர்களின் மேடை ஒத்துழைப்பு இல்லாமல் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் நிகழ்ச்சி வெற்றிபெறுவதில்லை. ஆகவே இதைத் தவிர்ப்பது எப்படி? அதற்காகத்தான் பழுப்பு இனிப்பு நிபந்தனை. பழுப்பு இனிப்பு தட்டுப்பட்டால் நிகழ்ச்சியை நடத்த மாட்டோம். அவர்கள் ஒப்பந்தத்தை நுணுக்கமாகப் படிக்கவில்லை என்று அர்த்தம். ஒரு சின்னக் காரியத்தை செய்ய முடியாதவர்கள் ஒரு பெரிய காரியத்தை எப்படி சரியாகச் செய்வார்கள்? இந்த விதியை ஒப்பந்தத்தில் புகுத்திய பிறகு எங்களை அழைப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட ஆரம்பித்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளும் வெற்றி பெற்றன.”
‘பழுப்பு இனிப்பு பரீட்சை’ என்றால் அமெரிக்கர்கள் பலருக்கு இன்றைக்கு அது என்னவென்று தெரியும். எங்களுக்குத் தேவை ஒரு பழுப்பு இனிப்பு பரீட்சை. அப்படியான பரீட்சை இருக்குமாயின் நாங்கள் வாங்கும் புத்தகம் திருப்தியானதாக அமையும். பார்க்கப் போகும் நாடகம் மனதுக்குப் பிடிக்கும். சினிமாவுக்குப் போய் ஏமாற்றமுடன் திரும்பத் தேவை இல்லை. முக்கியமாக குழாய்க்காரரை அழைக்கும் போது அவருடைய திறமையை அவருடைய பெயரின் இனிமையை வைத்து தீர்மானிக்கமாட்டோம்.
இனிமேல் ஒப்பந்தம் செய்வதற்கு ஒரு நல்ல பெயர் மட்டும் போதாது. ஏதாவது பரீட்சையிலும் அவர் தன் தகுதியை நிரூபிக்கவேண்டும். எதிர்வரும் காலங்களில் மகிழ்நன், கபிலர், தமிழ் பற்றாளன், பொற்றாமரைக் கண்ணன், இனியதோழன், அன்புக்கனி போன்ற எந்தப் பெயரைப் பார்த்தாலும் எச்சரிக்கையாக இருப்பேன். தமிழ்ப் பற்றுக்கும் வேலைத் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது.
முதலில், மறுபடியும் ஒழுகத் தொடங்கிய குழாயை நிப்பாட்ட ஏதாவது செய்யவேண்டும்.
நினைத்தபோது நீ வரவேண்டும்
அதிகாலை ஐந்து மணிக்கு டெலிபோன் அடித்தது. அழைத்தவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகம் ஒன்றில் கடமையாற்றும் இயற்பியல் பேராசிரியர். பெயரை செல்வேந்திரன் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம். அவரிடம் ‘என்ன?’ என்று கேட்டேன். ‘நினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடலைப் பாடியவர் டி. எம். சௌந்தரராஜன் என்பது தெரியும். பாடலை எழுதியவர் யார்?’ என்றார். இதனிலும் பார்க்க முக்கியமான கேள்வியை காலை ஐந்து மணிக்கு வேறு எவரும் எழுப்பியிருக்க முடியாது. அடுத்து ‘அது என்ன ராகம்?’ என்ற வினா கிளம்பும் என்பது என் ஊகம். இயற்பியல் பேராசிரியருக்கும் இந்தப் பாடலுக்கும் என்ன சம்பந்தம்? இப்படியான கேள்விகள் என்னிடம் வரும்போது நான் கூகுளில் தேடி நேரத்தை விரயம் செய்வதில்லை. பேராசிரியர் ஏற்கனவே அதைச் செய்திருப்பார். இசை சம்பந்தமான என்ன கேள்வி எழும்பினாலும் அதை மனநல மருத்துவர் ராமானுஜம் பக்கம் திருப்பிவிடுவேன். அவர் எப்படியோ விடை கண்டுபிடித்து சொல்வார். பாடலை எழுதியவர் பெயர் என்.எஸ்.சிதம்பரம்; ராகம் ஆரபி.
இயற்பியல் மாணவர்கள் பேராசிரியருக்கு ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள். சொந்தமாக ஒருவர் வீடு வைத்திருப்பதுபோல, சொந்தமாக ஒருவர் கார் வைத்திருப்பதுபோல, பேராசிரியர் சொந்தமாக புவியீர்ப்பு வைத்திருக்கிறார் என கேலி செய்வார்கள். எடை அவரை ஒன்றும் செய்வதில்லை. மெலிந்த உயரமான உருவம். இரண்டு காதுகளுக்கு மேலே மிசியிருக்கும் முடி சின்னக் காற்றுக்கும் நடுங்கும். பனியோ வெயிலோ மணிக்கட்டை தாண்டி விரல்கள் வரை நீண்ட நீளக்கை சட்டை அணிந்திருப்பார். இறகு காற்றிலே மிதப்பதுபோல தரையில் கால் பாவாது. அவசரமாகப் போகும்போது இரண்டு கைகளும் பின்னுக்கு நீண்டிருக்க தரையிறங்கும் பெலிக்கன் பறவைபோல அவர் மிதந்துகொண்டு செல்வார்.
செல்வேந்திரன் தற்செயலாக இயற்பியல் பேராசிரியர் ஆனவர். அவர் மூளையிலே இயற்பியல் சூத்திரங்களும், தேற்றங்களும் நிறைந்திருக்காது, மாறாக, அங்கே இசைதான் நிரம்பியிருக்கும். ஓய்வான ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் இசையிலே செலவழித்தார். கடந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் வெளியான இசைத்தட்டுகளையும், ஒலி நாடாக்களையும் ஒரு காலத்தில் தீவிரமாக சேகரித்தார். அவை எல்லாம் இப்போது பிரயோசனப்படாது என்பதால் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணியமாக மாற்றி குறுந்தகடுகளாக சேமித்து வைத்திருக்கிறார். தற்போது அவரிடம் நாலாயிரத்துக்கும் அதிகமான குறுந்தகடுகள் சேகரமாகிவிட்டன. நிறைய தமிழ் சினிமாக்கள் வருடம்தோறும் வருவதால் அவருக்கு வேலை கூடிவிட்டாலும் பாடல்களைச் சோர்வில்லாமல் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து குறுந்தகடுகளாக எரித்து வைத்துக்கொள்கிறார். பாடல்களுக்கு குறிப்புகளும் இருக்கும். பாடல் இடம் பெற்ற சினிமா, அதைப் பாடியவர், எழுதியவர், இசையமைத்தவர், ராகம் போன்ற விவரங்கள். ஒரு பாடலைக் கேட்க அவரிடம் விருப்பம் தெரிவித்தால் தலைமை நூலகர்போல நிமிடத்தில் அதைத் தேடிப்பிடித்துப் போட்டுக் காண்பிப்பார். இப்பொழுதெல்லாம் பாடல்கள் இலகுவாக இணையத்தில் கிடைத்துவிடுகின்றன. ஆனால் அவர் சேகரித்தது தேடல் யந்திரங்கள் வருவதற்கு முன்னர். Ôநினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடல் அவருக்கு சமீபத்தில் கிடைத்ததாக இருக்கவேண்டும். அதுதான் அந்த அதிகாலை தொலைபேசி அழைப்புக்கான காரணம்.
அத்தனை ஆயிரம் பாடல்கள் இருந்தாலும் ‘ஞானசௌந்தரி’யில் வரும் ஜிக்கி பாடிய ‘எனையாளும் மேரி மாதா’ இருக்கிறதா என்று கேட்டால் உடனேயே இல்லை என்பார். கொஞ்சம் இருங்கள் தேடிப்பார்க்கிறேன் என்று சொல்ல மாட்டார். அவ்வளவு நிச்சயம். எஸ்.ஜி.கிட்டப்பா பாடிய ‘தசரத ராஜகுமாரா’ பாடல் இருக்கிறதா என்று கேட்டால் உடனே இருக்கிறது என்று சொல்லி குறுந்தகட்டை எடுத்துக் காட்டுவார். அந்தக் காலத்து டி.ஆர் .மகாலிங்கம் பாடிய ‘பாட்டு வேணுமா’ பாட்டில் இருந்து வானம் படத்தில் வரும் ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ வரை சேகரித்து வைத்திருக்கிறார். ஒருமுறை யாரோ எம்.எம்.தண்டபாணி தேசிகர் ‘நந்தனார்’ படத்தில் பாடிய ‘ஐயே மெத்தக் கடினம்’ பாடலைக் கேட்டபோது இரண்டு மூன்றுமாதமாக இணையத்தில் அலைந்து தேடி எப்படியோ கண்டுபிடித்து நகல் எடுத்துவிட்டார்.
இசைதான் அவருடைய உயிர் என்று நினைத்திருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஓர் அதிர்ச்சி கிடைத்தது. அவருடைய வாழ்நாள் ஆசை என்ன தெரியுமா? என ஒருமுறை என்னிடம் கேட்டார். எனக்கு எப்படித் தெரியும்? சொன்னால்தானே தெரியும். ஏ.ஆர். ரஹ்மானுடன் சுற்றுலா போவதாக இருக்கலாம். இளையராஜாவுடன் காலை உணவு சாப்பிடுவதாக இருக்கலாம். யார் கண்டது? அவர் சொன்ன பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ‘எப்படியும் ஒரு தமிழ் சினிமாவில் நடிப்பது’ என்றார். இந்த ஆசை எப்போது பிறந்தது எனக் கேட்டேன். தன்னுடைய ஆசை ஆகச் சின்னவயதிலேயே தொடங்கிவிட்டதாகக் கூறினார். அவர் எங்கேயாவது, எப்போதாவது நடித்திருக்கிறாரா எனக் கேட்டபோது தன் சின்ன வயதில் பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் தான் நடித்திருப்பதாகவும் அப்போதுதான் இந்தச் சிந்தனை தோன்றியதாகவும் கூறினார்.
பள்ளிக்கூடத்தில் நடித்தது என்ன நாடகம் என்ற கேள்விக்கு அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் வேடம் என்று பதில் கூறினார். அப்பொழுது அவருக்கு வயது 10. அட்டையினால் செய்த பாம்பு கொத்த அவர் காட்டுக்குள் செத்துப்போய்க் கிடந்திருக்கிறார். மேடையில் உயிரோடு ஐந்து நிமிடமும் இறந்த பிறகு பத்து நிமிடமும் நடித்திருக்கிறார். இறந்ததுபோல நடித்தபோது பெரும் சிரமப்பட்டிருக்கிறார். அதுதான் அவருடைய முதலும் கடைசியுமான நாடக அனுபவம். ஓர் இயற்பியல் பேராசிரியருக்கு எத்தனை பெரிய லட்சியம் என நினைத்துக்கொண்டேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடைய வாழ்நாள் ஆசையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று கேட்க நான் தவறியதில்லை. அவர் ‘ஒன்றுமே நடக்கவில்லை, நேரம் அமையும்போது சந்தர்ப்பம் தானாகவே என்னைத் தேடி வரும்’ என்பார்.
‘உண்மையாகவே உங்களைத் தேடி வாய்ப்பு வரும் என்று நம்புகிறீர்களா?’ என்று ஒருமுறை கேட்டேன். ‘உங்களுக்கு ஒரு கதை தெரியுமா? கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் டேனே எனப்படும் கனடாவின் முதல் குடிமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பிரதான உணவு கரிபோ மான். அவை இல்லாவிட்டால் டேனே இனம் அழிந்துபோகும். 25 லட்சம் கரிபோ மான்கள் வசந்த கால தொடக்கத்தில், தெற்கிலிருந்து வடக்காகவும், இலையுதிர்காலத்தில் வடக்கிலிருந்து தெற்காகவும் குடிபெயரும். டேனே மக்கள் உணவுக்காக அதன் பின்னே அலைவார்கள். அவர்கள் பட்டினியால் இறப்பதில்லை. ஒருவர் பசியில் வாடி கரிபோ மானைப் பற்றி நினைப்பாரேயானால் மான் அவரைத் தேடி வந்து அவர் பசியை நீக்கும். எங்கிருந்தோ எப்படியும் வந்துவிடும். இது ஓர் ஐதீகம். நானும் டேனே குடிமகன் போலத்தான். நான் நினைக்கும்போது என் விருப்பமும் நிறைவேறிவிடும்’ என்றார். ‘நீங்கள் நடிக்கப்போவது தமிழ்ப் படம் அல்லவா? லோகிதாசனாக நடித்தபோது இறந்துபோய்க் கிடந்ததால் வசனம் பேசும் சிரமத்திலிருந்து தப்பிவிட்டீர்கள். ஆனால் தமிழ் படத்தில் நீண்ட நீண்ட வசனங்கள் வருமே. அவற்றை எல்லாம் மனப்பாடம் செய்யவேண்டும். எப்படிச் சமாளிப்பீர்கள்?’ என்று கேட்டேன்.
பேராசிரியர் அல்லவா? அத்தனை காலம் அதுபற்றி சிந்திக்காமல் இருந்திருப்பாரா? ‘நீங்கள் மார்லன் பிராண்டோ நடித்த Last Tango in Paris படம் பார்த்திருப்பீர்கள். மார்லன் பிராண்டோவுக்கும் என்னுடைய பிரச்சினைதான். அவரால் வசனங்களை மனப்பாடம் செய்ய முடியாது. ஆகவே அந்தப் படம் எடுத்தபோது ஒரு யுக்தி செய்தார் எனப் படித்திருக்கிறேன். அவர் நடித்த செட் முழுக்க பேப்பர் துண்டுகளில் வசனத்தை எழுதி ஒட்டிவைத்துவிடுவார். மேசை, கதிரை, தூண் எல்லாவற்றிலும் அவர் பேசவேண்டிய வசனம் துண்டு துண்டாக ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் மார்லன் பிராண்டோ கண்களை உருட்டி தலையை சாய்த்து நடிப்பார். பார்ப்பவர்கள் அற்புதமான நடிப்பு என்று புகழ்வார்கள். உண்மையில் அவர் அவருடைய அடுத்த வசனத்தை தேடினார். பிறந்த மேனியாக நடித்த கதாநாயகியின் முதுகில் ஒரு துண்டு வசனம் எழுதி ஒட்டவேண்டும் என விரும்பினார் ஆனால் இயக்குநர் மறுத்துவிட்டார். நானும் மார்லன் பிராண்டோ வழியைப் பின்பற்றுவேன்’ என்றார். ஏதோ நடிப்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே கிடைத்துவிட்டதுபோல அத்தனை நம்பிக்கை அவர் பேச்சில் தெரிந்தது.
ஒருமுறை அவரிடம் கேட்டேன். ‘இத்தனை ஆயிரம் பாடல்கள் சேகரித்து வைத்திருக்கிறீர்களே. உங்களுக்கு ஆகப் பிடித்த பாடல் எது?’ இந்தக் கேள்விக்கு ஏற்கனவே நூறுதடவை பதில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். தயங்காமல் பாதாள பைரவி படத்தில் கண்டசாலா பாடிய ‘அமைதியில்லா என் மனமே’ என்றார். ‘அதிலே என்ன தனியீர்ப்பு’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘அந்தப் பாடலை நான் முதல்தரம் கேட்டபோது இருந்த சூழ்நிலையும், மனநிலையும்தான் காரணம். அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் இன்றைக்கும் பெண்வேடமிட்ட ஒரு மனிதனின் பொய்க்கால் குதிரையாட்டம் நினைவுக்கு வருகிறது. இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பது புரியாத புதிர். குதிரையாட்டம்போல மனமும் ஆடுகிறது. அற்புதமான குதிரையாட்டத்திற்குப் பின்னர் அந்த மனிதன் கையை நீட்டிக்கொண்டு காசுக்கு நின்றது நினைவில் வருகிறது. சிலநாட்களில் அதிகாலையில் அந்தப் பாடலைப் போடுவேன். 60, 70 தடவை விடாமல் தொடர்ந்து கேட்பேன். எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காத பாடல் அது. அந்த நாள் முழுக்க அது மனதில் ஓடியபடியே இருக்கும். குலைந்த மனதை அமைதிப்படுத்தும். அமைதியான மனத்தைக் குலைத்துவிடும்.’
இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வெடுக்கப் போவதால் தனக்கு விரைவில் படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வரும் என்று சொன்னார். ‘எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். டேனே குடிமக்களுக்கு பசிக்கும்போது ஒரு மான் அவர்களைத்தேடி வருவதுபோலத்தான் நான் நினைக்கும்போது அழைப்பு வரும் என்றார். தான் விரும்பிய பட்டப்படிப்பு, உதவித் தொகை தன்னைத் தேடி வந்ததைச் சொன்னார். தான் விரும்பிய வேலை தன்னைத் தேடி வந்ததைச் சொன்னார். தான் விரும்பிய பெண் தன்னைத் தேடி வந்து மணந்துகொண்டதைச் சொன்னார். அதுபோலவே இதுவும். ‘அழைப்பு எப்படி வரும்? கடிதமாகவா அல்லது மின்னசலாகவா அல்லது நேரிலே வந்து அழைப்பார்களா?’ ‘இல்லை, இல்லை. தொலைபேசியில் அழைப்பு வரும்’ என்று எண்கணித சோதிடக்காரர் போல நிச்சயமாகச் சொன்னார். Ôயார் அழைப்பார்கள்?’ ‘பாரதிராஜா, பாலு மகேந்திரா அல்லது பாலா.’ ‘அது என்ன பானா வரிசை?’ ‘அது அப்படித்தான். பானாவுக்கும் எனக்கும் நல்ல பொருத்தம்’ என்றார்.
வெகு சீக்கிரத்தில் எனக்கு செல்வேந்திரனிடமிருந்து அதிகாலை தொலைபேசி அழைப்பு ஒன்று வரும். எங்கள் உரையாடல் அப்போது இப்படிப் போகலாம்.
என்ன?
பாரதிராஜா கூப்பிட்டார். எனக்கு ஒரு வேடம் கிடைத்திருக்கிறது.
வாழ்த்துக்கள். என்ன வேடம்?
வில்லனுக்கு அப்பாவாக நடிக்கவேண்டும்.
வசனம் இருக்கிறதா?
நீண்ட நீண்ட வசனம் வரும் என்று சொல்கிறார்கள்.
எப்படி சமாளிக்கப் போகிறீர்கள். ஈழத்து தமிழ் வந்து தொலைக்கப்போகிறதே.
அது செய்யலாம். மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ் எல்லாம் பேசுவேன். நீண்ட காலம் பயிற்சி எடுத்திருக்கிறேன்.
அப்படியா?
உச்சகட்ட சீனில் காமிரா என் மீது ஐந்து நிமிடம் நிற்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.
நல்லது. நல்லது.
செட் முழுக்க நாலு பக்கமும் துண்டு துண்டாக வசனம் எழுதி ஒட்டிவிட்டு, மெலிந்த உடல் காற்றில் அசைய, அவர் பேசுவதைக் கற்பனை செய்ய முடிந்தது. மேசையிலே ஒரு துண்டு வசனம். வில்லனின் துப்பாக்கி அடிக்கட்டையிலே ஒரு வசனம். தூணிலே கட்டிப் போட்டிருக்கும் கதாநாயகியின் வெற்று முதுகிலும் கட்டாயம் ஒரு வசனம் ஒட்டியிருக்கும்.
தென்றல் நேர்காணல் – பேட்டி
இலங்கையில் பிறந்து, பணி நிமித்தமாக உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து, கனடாவில் தற்போது வசித்துவரும் அ. முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. (இவரைப்பற்றிய அறிமுகம் பார்க்க: தென்றல், மே, 2006. மனதிலிருந்து சொல்லும் நல்ல கதைகளின் பதிவாளர். மானுட சாரத்தை எழுத்தில் பிழிந்து கொடுத்து மயக்கும் ஜாலம் கைவரப் பெற்றவர். ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பைத் தொடங்கித் தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களுக்கும் உலக அளவில் கௌரவம் தருபவர். அவருடன் தென்றலுக்காக உரையாடியதில்…..
இதற்கு முன்னும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி, ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வாய்க்க வாய்ப்பு இல்லாத அனுபவங்களைப் பெற்றிருப்பவர் அ. முத்துலிங்கம். ஏறக்குறைய உலகின் பல இடங்களில் பணியாற்றி அதன் வழி தனக்கு வந்து சேர்ந்த, தான் தேடிச் சென்ற அனுபவங்களை மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதும் அ. முத்துலிங்கம் அழகுணர்வும் மெல்லிய சிரிப்பும் இழையோடும்படியான படைப்புகளை அளித்த கதை சொல்லி. நடைக்காக (Narration) மெனக்கெடக்கூடியவர் என்பது தெரிகிறது. அதனாலேயே அவர் கண்ட மனிதர்களின் சித்திரங்களைச் (புனைவுகளிலும் புனைவல்லாதவற்றிலும்) சிறப்பாகத் தீட்டிக்காட்டுகிறார்.
*****
மதுரபாரதி: நீங்கள் எழுதிய ‘குதிரைக்காரன்’ சிறுகதைத் தொகுப்பு 2012க்கான ஆனந்த விகடன் பரிசை வென்றுள்ளது. வாழ்த்துக்கள்.
முத்துலிங்கம்: நன்றி. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் 50 பேர்களை வெவ்வேறு துறைகளில் தேர்வு செய்து ‘திறமைக்கு விருது’ என்று அவர்களைக் கௌரவிக்கிறது. இந்த வருடத் தேர்வில் என் பெயரும் இடம்பெற்றது. மகிழ்ச்சிதான்.
ம.பா: பரிசு வெல்வது உங்களுக்குப் புதிதல்ல. 1961ல் பரிசு பெற்ற முதல் சிறுகதையான ‘அக்கா’வை எழுதிய பின்னணியைச் சொல்லுங்கள்.
மு.லி: என்னுடைய ஆரம்ப வாசிப்பு கல்கிதான். அவரைத் தொடர்ந்து மு.வ., காண்டேகர் என்று கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்துத் தள்ளினேன். ஒருநாள் எனக்கு புதுமைப்பித்தன் புத்தகம் ஒன்று கிடைத்தது. அப்படியே ஆச்சரியப்பட்டு நின்றேன். தமிழில் அப்படி எழுதலாம் என்று எனக்குத் தெரியாது. எழுதிய விசயம் புதிதாக இருந்தது. சொன்ன முறையும் புதுமையானது. பின்னொருநாள் ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய Dubliners கிடைத்தது. அதைப் படித்த பின்னர் இன்னொரு அதிர்ச்சி. இப்படியும்கூட எழுதலாம் என்ற வியப்புத்தான். உள்மன ஓட்டம் என்று சொல்வார்கள். ஒரு சிறுவனின் கண்களால் கதை சொல்லப்பட்டிருக்கும். என்னுடைய மனதுக்குள் பூட்டியிருந்த கதவு ஒன்று வெடித்துத் திறந்தது.
இன்னொரு நாளில் நான் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் சுயசரிதையை படித்தபோது அவர் ஓரிடத்தில் தன் வாழ்க்கையை மாற்றிய தருணத்தை வர்ணிப்பார். ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் கதையைப் படித்தபோது அவர் உலகம் மாறியது. அதன் பின்னர் அவர் எழுதிய எல்லாமே வித்தியாசமாகத்தான் இருந்தது.
அக்கா சிறுகதையும் இப்படியான ஒரு தருணத்தில் எழுதியதுதான். கதை ஒரு சிறுவனின் மனதினுள் விரியும். தமிழ் விழாவின்போது தினகரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
ம.பா:அதே தலைப்பில் உங்கள் முதல் தொகுப்பு 1964ல் வெளியானது. அதன்பின் 1995ல்தான் மீண்டும் எழுத்துலகில் நுழைகிறீர்கள். இடைப்பட்ட காலத்தில் உங்கள் கற்பனை தேவதை என்ன ஆனாள்?
மு.லி: அறுவடை செய்யும்போது மட்டும்தான் ஒருவன் விவசாயியா? நிலத்தை உழும்போது, விதை விதைக்கும்போதும், நாற்று நடும்போதும், பூச்சி மருந்து அடிக்கும்போதும்கூட அவன் விவசாயிதான். ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்யமுடியாது. அதற்கென்று ஒரு காலம் உண்டு. ரொறொன்ரோவில் என் வீட்டில் பூக்கும் ட்யூலிப் பூவை நான் இந்தக் கேள்வி கேட்பவர்களுக்கு உதாரணமாகச் சொல்வேன். இதன் முளையை நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடுவோம். அதன்மேல் நிறையப் பனி விழும். மூன்றடி ஆழப் பனிக்கு கீழே புதைந்து கிடக்கும். ஏப்ரல் மாதம் பிறக்கும்போது மண்ணைக் கீறிக் கிளம்பி வெளியே வரும் முதல் பூ இதுதான். அந்தப் பனிக்காலத்தில் அது என்ன செய்தது? தனக்கான தருணத்துக்காக ஏங்கிச் சக்தியை சேகரித்துக்கொண்டு காத்திருந்தது. சிலநேரம் எழுத்தாளர்கள் ஒன்றுமே எழுதாமல் சும்மா உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் உள்ளே பெரும் பாய்ச்சலுக்கான ஒத்திகை நடக்கும்.
சமீபத்தில் ஒரு நீச்சல்போட்டி பார்க்கப் போயிருந்தேன். நூறு பேர் பங்கேற்றார்கள். எல்லோரும் நீரிலே விழுந்து அலை எழும்பித் தெறிக்க ஓயாமல் பயிற்சி செய்தபோது ஒருவர் மட்டும் அமைதியாக நீண்ட நேரம் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். போட்டி துவங்கியபோது முதலாவதாக வந்தார். அவர் சக்தியைச் சேகரித்துக்கொண்டு இருந்தார் என்று நினைக்கிறேன்.
ம.பா: இலங்கையில் கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர் நீங்கள். அதைப் பற்றிய உங்கள் முதல் நினைவு என்ன?
மு.லி: முதல் நினைவு என்றால் அம்மா சொன்ன கதைதான். ஒருமுறை அம்மாவிடம் கேட்டேன் ‘எங்கள் ஊருக்கு எப்படி கொக்குவில் என்று பெயர் வந்தது? அம்மா சொன்னார். ராமர் இலங்கைக்கு வந்து ராவணனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்புமுன்னர் நடந்தது. ஒரு காலை நேரத்தில் சோலை ஒன்றில் ராமர் தன் வில்லை ஊன்றிவிட்டு அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்தபோது அவர் முன்னே ஒற்றைக்காலில் ஒரு வெள்ளைக் கொக்கு நின்று தவம் செய்தது. ராமர் மனமுருகி கொக்கின் முதுகில் தடவிக் கொடுத்தார். ‘கொக்கையுமா? அதற்கு மூன்று குறி இல்லையே?’ என்றேன். அப்படியல்ல. அணிலுக்குத் தடவியதோடு குறிகொடுக்கும் திறன் ராமர் விரல்களுக்கு முடிந்துபோனது. ஆனால் நிறைய கருணை இருந்தது. அன்றிலிருந்து அந்த இடம் ‘கொக்குவில்’ என்று அறியப்பட்டது என்றார். அம்மாவிடம் வேறு குறுக்கு கேள்வி கேட்காமல் அவர் சொன்னதை நம்புவது என்று தீர்மானித்தேன்.
ம.பா: உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் பற்றிக் கூறுங்கள்?
மு.லி: எனக்கு 13 வயது நடக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். ஆனால் 50 வயது காலத்துக்குத் தேவையானவற்றை எனக்கு சொல்லித் தந்துவிட்டுத்தான் இறந்தார். மகாபாரதம், ராமாயணம் முழுவதும் அவருக்கு மனப்பாடம். ஒவ்வொரு சின்ன விவரமும் தெரியும். கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது அவர்தான்.
என்னுடைய ஐயாவிடம் சிறுவயதிலேயே பயம். அவர் மடியில் ஏறி இருந்ததோ அவர் என்னைத் தூக்கியதோ ஞாபகம் இல்லை. இப்போது யோசித்துப் பார்க்கும்போது மகத்தான மனிதர். நாங்கள் பிள்ளைகள் ஏழு பேர். நான் ஐந்தாவது. நான் வளர்ந்த சமயம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. விலைவாசி உயர்வு; சாமான் தட்டுப்பாடு. எங்கள் அன்றைய உணவுக்கு ஐயா எப்படியோ சம்பாதித்தார். ஒருநாள்கூடப் பட்டினி கிடந்தது கிடையாது. எங்கள் கிராமம் ஏழைப்பட்ட கிராமம். ஒரு மாடும் இரண்டு ஆடும் இருந்தால் பணக்காரன். பத்து மாடு இருந்தால் செல்வந்தன். இந்த நிலையில் எங்களை வளர்த்தெடுத்தது ஒரு சாதனை என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது.
ம.பா: இலங்கைத் தமிழர் படும் அல்லல்களைக் கதைகளில் சித்திரித்துள்ளீர்கள். அங்கு நிலவும் கொடூரத்தின் ஆழம் உங்களுக்கு அனுபவமாவது எப்படி?
மு.லி: பல வருடங்களாக இலங்கைப் போர் குறித்த பதிவுகள் என் எழுத்தில் இல்லை. பத்திரிகைத் தகவல்களையும் ரேடியோச் செய்திகளையும் வைத்து எழுதுவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. காரணம், போரை நேரில் பார்த்தவர்களால்தான் அதை முறையாகப் பதிவு செய்யமுடியும் என்று நான் நினைத்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் ‘இப்படியான போர் அவலச் சூழ்நிலையில் எழுத்தாளரான நீங்கள் அதைப் பதிவு செய்யவேண்டியது கடமையல்லவா? உங்கள் பேரப்பிள்ளை ஒருநாள் உங்களைக் கேட்கக்கூடும். அதற்குப் பதில் என்ன?’ என்றார்.
புதுமைப்பித்தன் இலங்கைக்குப் போனது கிடையாது. ஆனால் இலங்கை தேயிலைத்தோட்டத்தில் நடப்பதாக ‘துன்பக்கேணி’ என்ற நீண்ட சிறுகதையை எழுதியிருக்கிறார். பிரான்ஸ் காஃப்கா அமெரிக்கா போனது கிடையாது. ஆனால் அங்கே குடியேறி அல்லல்படும் ஓர் இளைஞனுடைய கதையை ‘அமெரிக்கா’ என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். நானும் தீர்மானித்து பல கட்டுரைகளும் சிறுகதைகளும் நேரடியாக அனுபவித்தவர்களைக் கண்டு பேசி குறிப்பெடுத்து எழுதினேன். நாற்பது வருடங்களாக நான் என் கிராமத்துக்குப் போனது கிடையாது. ஆகவே தகவல்களை இரண்டுதரம் உறுதி செய்யவேண்டியிருந்தது.
சில வாரங்களுக்கு முன் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் போர் நடந்த சமயம் அதை நேரடியாகப் பார்த்தவர். பல இன்னல்களைச் சந்தித்தவர். அவர் ஒரு சம்பவம் சொன்னார். உடனே 2500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த வரலாற்றுப் பிதாமகர் ஹெரொடோரஸ் ஞாபகத்துக்கு வந்தார். சடாயட்டஸ் என்ற மன்னன் மிலேட்டஸ் என்ற நாட்டின்மீது அறுவடை நேரம்பார்த்துப் படை எடுப்பான். ஆனால் போர் புரிய மாட்டான். மக்களை சிறைபிடிக்க மாட்டான். வீடுகளை எரிக்க மாட்டான். பயிர்களை மட்டும் அழித்துவிட்டுத் திரும்பிவிடுவான். இப்படி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் படையெடுத்தான். அந்த மக்களைப் பொருளாதார ரீதியில் வதைத்து அடிமைப்படுத்தி ஆள்வதுதான் அவன் நோக்கம்.
என் நண்பர் சொன்ன கதையும் அதுதான். அவருடைய வாழைத் தோட்டத்தை ராணுவம் பீப்பாக் குண்டுபோட்டு அழித்தது. அடுத்த வருடமும் அழித்தது. மீண்டும் அழித்தது. போர் உத்தி 2500 வருடமாக மாறவே இல்லை. ம.பா: இனிச் சம்பாதிக்கவோ, சாதிக்கவோ ஏதுமில்லை என்ற வாழ்க்கை நிலையில், எழுத்துக்கான உந்துதலை எதிலிருந்து பெறுகிறீர்கள்? எப்படித் தக்க வைத்துக்கொள்கிறீர்கள்?
மு.லி: ஐஸாக் அசிமோவ் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அவர் 500 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மிக வேகமாக டைப் செய்வார். காலையில் எழுந்து இரவு படுக்கப் போகும்வரைக்கும் தட்டச்சிக்கொண்டே இருப்பார். அவரிடம் இதே கேள்வியை கேட்டார்கள். அவர் சொன்ன பதில். ‘என்னுடைய தட்டச்சு மெசினில் அடுத்து என்ன வசனம் வருகிறது என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன்.’ அதில் பெரிய உண்மை இருக்கிறது. எழுத்தாளர் சிருஷ்டி வேலையில் இருப்பவர். உலகத்தில் ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாகப் படைப்பவர். சிருஷ்டியின் மகிழ்ச்சி தனி. அதை அனுபவிப்பதற்காகத்தான் பலர் எழுதுகிறார்கள். பணத்துக்காகவோ புகழுக்காகவோ அல்ல. கனடாவின் முக்கிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ. இன்று அவருக்கு வயது 81. உலகத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் இவர் முன்வரிசையில் இருக்கிறார் என்பது பலருடைய கருத்து. ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசினார். அங்கே நான் இருந்தேன். அந்தக் கூட்டத்தில் ஒரு பிரகடனம் செய்தார். ‘இன்றிலிருந்து நான் எழுதப்போவதில்லை. ஓய்வெடுக்கப்போகிறேன்’ பார்வையாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஆனால் அந்தப் பேச்சுக்குப் பின்னர் மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கும்போது நான் அவருடைய பேச்சை மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.
உண்மையில் ஓர் எழுத்தாளர் படைப்புச்சம் தரும் இன்பத்துக்காகவே எழுதுகிறார். வாசகனுக்குக் கிடைக்கும் இன்பம் இரண்டாம் பட்சம்தான். நான் ஒரு சிறுகதை எழுத உட்காரும்போது மனதில் ஒரு திட்டம் இருக்கும். ஆனால் அச்சாகி வெளிவருவது வேறு ஒன்று. அதுதான் படைப்பு. சில எழுத்தாளர்கள் ‘கதை தன்னைத்தானே எழுதுகிறது’ என்று கூறுவார்கள். எழுத்தாளர் தள்ளி நின்றாலே போதும், நல்ல கதை பிறந்துவிடும்.
ம.பா: கனடாவில் ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பின் வழியே தமிழின் பலதுறைப் பங்களிப்பாளர்களையும் கௌரவித்து வருகிறீர்கள். அதற்கான விதை விழுந்தது எப்படி?
மு.லி: தமிழில் உலகத் தரமான பல நூல்கள் வருகின்றன ஆனால் அவற்றை ஒருவருமே கவனிப்பதில்லை. எழுத்தாளருக்கான மதிப்பும் கிடைப்பதில்லை. உலகத்தில் 80 மில்லியன் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் ஒரு மில்லியன் பேர் நியூசீலாந்தில் இருந்து அலாஸ்கா வரைக்கும் பரவியிருக்கிறார்கள். சூரியன் மறையாத தமிழ்ப் புலம் என்று சொல்வார்கள். ஆனால் தமிழ் படைப்புகளை ஊக்குவிக்கவோ அதைப் படைத்தவர்களுக்கு மரியாதை செய்யவோ உலக அளவில் ஓர் அமைப்பு கிடையாது.
அமெரிக்க எழுத்தாளர்களுக்கு புலிட்சர் பரிசு இருக்கிறது. கனடிய எழுத்தாளர்களுக்கு கில்லர் பரிசு இருக்கிறது, பொதுநல நாட்டு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு இருக்கிறது. ஆங்கில எழுத்துகளுக்கு உலகளாவிய ரீதியில் நோபல் பரிசும் உண்டு. தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்தியாவிலும், இலங்கையிலும் சாகித்திய அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் உலகப்பொது அமைப்பு இல்லை. அந்தக் குறையைப் போக்கத்தான் 2001ல் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கனடாவில் தமிழ் இலக்கியத்துக்காக இயங்கும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு அறக்கட்டளை இதுதான். அவர்களுடைய வலைமனை: www.tamilliterarygarden.com
இதன் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் உலகளாவி உள்ளனர். இதன் நடுவர்கள் உலகத்தின் பல நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள். இதன் செயல்பாடு வெளிப்படையானது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து விரிவுரைகள் ஒழுங்கு செய்வதும் அவ்வப்போது நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் என நடுவர் குழு கருதும் ஒருவருக்கு ‘இயல் விருது’ என்னும் வாழ்நாள் சாதனை விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். இது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்: சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன். இது தவிர புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, கணிமை, மாணவர் கல்வி உதவித் தொகை பரிசு ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஆங்கிலத்துக்கு நோபல் பரிசு நிறுவனம் இருப்பதுபோல தமிழுக்கு உலகளாவிய விதத்தில் தமிழ் இலக்கியத் தோட்டம் அமையவேண்டும் என்பதே நோக்கம். இந்த முயற்சியில் தென்றலும் ஆதரவாக இருப்பது பெருமைக்குரிய விசயம்.
ம.பா: புலம்பெயர்ந்தோரிடையே தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் உங்களைப் போலவே வட அமெரிக்காவில் பணி செய்கிறது ‘தென்றல்’. அது குறித்த உங்கள் அவதானிப்பு என்ன?
மு.லி: தென்றல் 12 வருடங்களாக வெளிவருகிறது. பத்து வருடத்துக்கு முன்னர் இந்த இதழ் ஒன்று எனக்கு கிடைத்தது. பின்னர் தென்றலைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் உள்ளடக்கம், அமைப்பு, அட்டைப் படம், தாள், அச்சு இவற்றை எல்லாம் பார்த்து வியந்துபோனேன். என்னுடைய முதல் எண்ணம் இது தொடர்ந்து வருமா என்பதுதான். பல தமிழ் இதழ்கள் வேகமாகத் தோன்றி அதே வேகத்தில் மறைவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் தென்றல் தொடர்ந்து மாதா மாதம் வருவதுடன் அதன் தரமும் உயர்ந்துகொண்டே போகிறது. அதன் தலையங்கம், இலக்கியம், நேர்காணல்கள், மருத்துவம், சமையல், சினிமா, புதிர்கள், சிறுவர் பகுதி ஆகியவை எல்லா வகையான வாசகர்களையும் ஈர்த்திருக்கிறது. முக்கியமாக நிகழ்வுகள் பகுதி மூலம் வட அமெரிக்காவில் கலை, இலக்கியம் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இதுதவிர அவர்களுடைய அறக்கட்டளை மூலம் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவுகிறார்கள். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் நிரந்தர ஆதரவாளராகத் தென்றல் இருக்கிறது. அவர்கள் தொண்டு வளர என் வாழ்த்துக்கள்.
ம.பா: நீங்கள் ஓர் எழுத்தாளராக இயங்குவதில் உங்கள் மனைவி, மக்களின் பங்கு என்ன?
மு.லி: ரோல்ஸ்ரோய் என்ற பெரிய ரஸ்ய எழுத்தாளருடைய மனைவி சோஃபியா நல்ல வாசகி. ரோல்ஸ்ரோய் எழுதுவதை முதலில் படிப்பவர் அவர்தான். தமிழிலும் சில எழுத்தாளர்களுக்கு வாசகி மனைவிமார் அமைந்திருக்கின்றனர். என்னுடைய மனைவி பெரிய வாசகி இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். சிலசமயம் ஏதாவது நான் எழுதியதை படித்துவிட்டு ‘இது சரியில்லை’ என்று சொல்லியிருக்கிறார். கணவனிடம்கூட உண்மை பேசவேண்டும் என நினைப்பவர். என்னுடைய எழுத்துக்குப் பெரும் உதவியாக இருப்பார். ஏதாவது புத்தகம் கேட்டால் என்ன பாடுபட்டும் வாங்கித் தந்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். நான் பத்து புத்தகங்களை ஒரே சமயத்தில் படிப்பவன். அவை எல்லாம் சரியான பக்கத்தில் திறக்கப்பட்டு வெவ்வேறு திசைகளில் குப்புறக் கிடக்கும். அவற்றை எடுத்து மடித்து தூசிதட்டி புத்தகத்தட்டில் அடுக்கிவிடுவார். அவற்றை மீண்டும் தேடி எடுத்துப் படிக்க எனக்கு அரைநாள் செலவாகும். ஆனாலும் அவர் சோர்வில்லாமல் உழைப்பார். இது பெரிய பேறல்லவா?
என்னுடைய மகன் ஒரு மாதத்தில் பத்து புத்தகங்கள் படிப்பார். அவர் சொல்லித்தான் பல புத்தகங்களை வாங்கி நான் படித்திருக்கிறேன். மகளும் சிறந்த வாசகி. அவர் படிக்கும் புத்தகம் எதையாவது நான் தொட்டால் ‘அது உங்கள் டைப் புத்தகம் இல்லை’ என்பார். எப்படியோ தவறான புத்தகங்களை நான் படிக்கிறேன் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.
ம.பா: எழுத்தாளர் என்ற முறையில் நீங்கள் பெற்ற மறக்க முடியாத அனுபவங்களை எங்களுக்காக நினைவுகூர முடியுமா?
மு.லி: நிறைய அனுபவங்கள். இதுவரை எழுதாத ஒன்றிரண்டைச் சொல்கிறேன். ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியம். நான் அங்கே போனது 1972ல். இலங்கையில் மோசமான பொருளாதார நிலை. அத்தியாவசியமான பொருட்களுக்குகூட தட்டுப்பாடு. பாண் வாங்குவதற்கு காலை ஐந்து மணிக்கே போய் வரிசையில் நிற்கவேண்டும். ஆப்பிரிக்காவில் இறக்குமதிப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஒரு பார்சல் செய்து சிலோனுக்கு அனுப்புவதற்காக தபால் நிலையத்துக்கு எடுத்துச் சென்றென். போஸ்ட்மாஸ்டர் பார்சலை நிறுத்துப் பார்த்துவிட்டு 20 பிரிட்டிஷ் பவுண்டு என்றார். பார்சல் பண்ணிய பொருட்களின் விலை 2 பவுண்டுதான். நான் வேண்டாமென்று விட்டு திரும்பினேன். என்னைத் துரத்திக்கொண்டு போஸ்ட் மாஸ்டர் ஓடிவந்தார். ‘இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு போகலாமா. வாருங்கள், வாருங்கள்’ என்றார். ஏதோ கல்யாண வீட்டு விருந்துக்கு அழைப்பதுபோல. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘சரி. பார்சலுக்கு எவ்வளவு தருவீர்கள்?’ என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். ஒரு தானத்தை சொன்னேன். அவர் ஒன்றைச் சொன்னார். நான் ஒன்றைச் சொன்னேன். அப்படியே படிப்படியாக் பேசி கடைசியில் பேரம் படிந்தது. அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். தபால் தலைகளை பார்சலில் ஒட்டி முத்திரையால் குத்தினார். ‘சரி போய் வாருங்கள்’ என்று விடைகொடுத்தார். பார்சலை அனுப்பிவிட்டேன் என்று மனைவியிடம் சொன்னாலும் அது போய்ச் சேராது என்பது எனக்கு தெரியும். ஒரு மாதம் கழித்து பார்சல் சிலோனில் கிடைத்துவிட்டதாக கடிதம் வந்தது. நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. அதுதான் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முதல் ஆச்சரியம். ஆனால் அதற்கு பின்னர் ஏற்பட்ட ஆச்சரியங்களை எல்லாம் யோசித்துப் பார்த்தபோது அந்த முதல் ஆச்சரியம் தூசி என்றுதான் எனக்கு இப்போது படுகிறது.
இரண்டாவது அனுபவம். சமீபத்தில் ரொறொன்ரோவின் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியக் குழுவில் ஒருவரை சந்தித்தேன். ‘நீங்கள் என்ன மொழியில் எழுதுகிறீர்கள்’ என்று கேட்டார். தமிழ் என்று சொன்னேன். அவருக்குப் புரியவில்லை. ‘அந்த மொழி எந்த நாட்டைச் சேர்ந்தது?’ என்று கேட்டார். எனக்கு முகம் விழுந்துவிட்டது. ‘அதற்கு ஒரு நாடு இல்லை. ஆனால் இந்தியாவில், இலங்கையில், மலேசியாவில் இன்னும் புலம்பெயர்ந்த பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள்’ என்றேன். அவர் முகத்திலிருந்து அவர் நம்பவில்லை என்பது தெரிந்தது. உலகத்தின் இரண்டாவது பெரிய தேசமான கனடாவின் சனத்தொகை 33 மில்லியன் மட்டுமே. நான் தொடர்ந்து உலகத்தின் ஆதி ஆறுமொழிகளில் தமிழும் ஒன்று. அது செம்மொழி, இன்றும் அழியாமல் வாழ்கிறது. 2000 வருடங்கள் பழமையான இலக்கியங்கள் இருக்கின்றன என்று சொன்னேன். அவர் நம்பாமலே விடைபெற்றுச் சென்றார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாங்கள்தான் மூச்சுவாங்கத் தமிழின் பெருமையை பேசுகிறோம். உலகில் பலருக்கு தமிழ்மொழி பற்றிய அறிவே கிடையாது.
ம.பா: தமிழ் நாட்டின் வெகுஜன இதழ்களில் சிறுகதைகள் மிகவும் நலிவுற்ற காலம் இது. ஆனாலும் உங்கள் கதைகளுக்கு வரவேற்புக் குறையவில்லை. எப்படி?
மு.லி: தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் புலம்பெயர் சூழலிலும் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய கதைகள் மூன்று வகைப்பட்டவை. இலங்கைப் பின்னணியில் கதை புனைவது ஒன்று. வெளிநாட்டில் அதாவது அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாட்டில் நிகழும் கதை ஆனால் கதைமாந்தர்கள் தமிழர்களாக இருப்பார்கள். மூன்றாவது வகை வெளிநாட்டில் நிகழும், கதைமாந்தர்களும் வெளிநாட்டவர்களாகவே இருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் எழுத்தில் பொதுவாக முதல் இரண்டு வகையும் இருக்கும். அவரைச் சுற்றி இருக்கும் மற்ற உலகத்தைப் பற்றி அவர்கள் எழுதுவதில்லை.
உதாரணமாக இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் மைக்கேல் ஒண்டாச்சி என்ற ஆங்கில எழுத்தாளருக்கு இப்போது வயது 69. இவருக்கு புக்கர் பரிசு, கில்லர் பரிசு, ஜனாதிபதி பரிசு எல்லாம் கிடைத்திருக்கிறது. இவருடைய சமீபத்திய நாவலின் பெயர் The Cat’s Table. 60 வருடத்துக்கு முந்திய இலங்கையை பற்றியும், இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பல் பயணத்தையும் பற்றிய கதை. அதைப் படித்தபோது எனக்கு தோன்றியது ‘இவர் 12 வயதில் இலங்கையை விட்டு வெளியேறியவர். ஆனால் இலங்கை இவரை விட்டு வெளியேறவில்லை.’ நான் சிறுவனாக யாழ்ப்பாணத்தில் வசித்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு காகம் தினமும் வரும். நாங்கள் வீசும் தானியத்தைச் சாப்பிட்டுவிட்டு பறந்துபோகும். மறுநாளும் வரும். வருடம் முழுக்க வரும். அதன் சுற்று வட்டாரம் இரண்டு மைல்தான். இன்னொரு பறவையும் வரும். மிக அழகான பறவை. மஞ்சள் சிவப்பு பச்சை நிறம் கொண்டது. கோடை தொடங்கும்போது பறந்துபோய்விடும். எங்கே போகிறது என்றால் இமயமலைக்கு. பின்னர் அங்கே குளிர்காலம் தொடங்கும்போது மறுபடியும் என் கிராமத்துக்கு வந்துவிடும். அதன் பெயர் ‘ஆறு மணிக்குருவி’. ஆங்கிலப் பெயர் Indian Pitta bird. சரியாகக் காலை ஆறு மணிக்கு சத்தம் போடும். காகத்துக்கு இரண்டு இறக்கைகள். அது இரண்டு மைல் தூரத்தை தாண்டுவதில்லை. ஆறுமணிக் குருவிக்கும் இரண்டு இறக்கைகள். அது ஆயிரத்துக்கும் அதிகமான மைல்கள் பறந்து இமயமலைக்குப் போய் திரும்புகிறது.
புலம்பெயர் மக்கள் ஆறுமணிக் குருவிபோல. அவர்கள் தங்கள் செட்டைகளை விரித்து உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகமே கதைப்பொருள். அவர்கள் செல்லவேண்டிய தூரம் காகம்போல இரண்டு மைல் அல்ல.
ம.பா: தமிழ் எழுத்துலகில் ‘இது நடந்திருக்க வேண்டும்; ஆனால் நடக்கவில்லை’ என்ற குறை உங்கள் மனதில் உண்டா? அது என்ன?
மு.லி: பலவருடங்களாக ஒரு குறை என் மனதில் உண்டு. இதைப்பற்றிப் பேசியும், எழுதியும் வருகிறேன். நான் தமிழ் புத்தகங்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் படிக்கிறேன். தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலப் படைப்புகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. படைப்பாளிகள் உச்சத்தில் இருக்கிறார்கள். உதாரணம் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன். இன்னும் பலர். ஆனால் நல்ல மொழிபெயர்ப்புகள் (தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு) வெளிவருவதில்லை. ஒன்றிரண்டு மொழிபெயர்ப்புகள் வெளிவந்தும் பெரிய வரவேற்பை பெற்றதில்லை.
Constance Garnett என்பவர் ஆங்கிலப் பெண். 100 வருடங்களுக்கு முன்னர் ரஸ்ய மொழியிலிருந்து பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். ரோல்ஸ்ரோய், டோஸ்ரோவ்ஸ்கி, செக்கோவ் எல்லோரையும் ஒரு வெறியுடன் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு பிரதிபலன் எதிர்பார்த்ததில்லை. அவர் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது அவர் காலடியில் டைப் செய்த தாள்கள் குவிந்துபோய்க் கிடக்கும் என்று சொல்வார்கள். ஓர்ஹான் பாமுக் என்பவர் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர். இவரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் எர்டாக் கோக்னர். இவர் மொழிபெயர்க்காவிட்டால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது. இவருடன் நான் பேசியிருக்கிறேன். தன் வாழ்நாள் முழுக்க ஓர்ஹானின் நூல்களை மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். அத்தனை அர்ப்பணிப்பு. இஸ்மாயில் காதர் என்பவர் அல்பேனியர். அந்த நாட்டின் சனத்தொகை 3.3 மில்லியன். அவர் அல்பேனிய மொழியில் எழுதிய நூல் பிரெஞ்சு மொழி வழியே ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது. அதற்கு புக்கர் சர்வதேச பரிசு கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியம். அவர்கள்தான் நூல்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவர்கள்.
ம.பா: இந்தக் குறையைச் சரி செய்ய என்ன வழி?
மு.லி: நான் ஒரு ஆங்கிலப் புத்தகம் வாங்கியதும் அது எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். 20 மொழிகள், 30 மொழிகள் என்று எழுதியிருப்பார்கள். அந்தப் பட்டியலைப் பார்த்தால் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என்று பல மொழிகள் இருக்கும் ஆனால் தமிழ் இராது. எனக்குத் தீராத ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு பட்டியலிலும் ஐஸ்லாண்டிக் மொழி இருக்கும். ஐஸ்லாண்டின் சனத்தொகை 3 லட்சம், அதாவது கனடாவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையும் அதுவே. 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களிடைய 1000 பிரதிகள் விற்றால் அது பெரும் வெற்றி. ஆகவே ஐஸ்லாண்டில் எத்தனை புத்தகம் விற்கும். 20 விற்றாலே ஆச்சரியம்தான். எப்படி அவர்களுக்கு கட்டுபடியாகிறது? அந்த ரகஸ்யம் என்னவென்றால். ஐஸ்லாண்ட் அரசு உதவி செய்கிறது. அந்த மொழிக்கு ஒரு நாடு இருப்பதால் அது சாத்தியமாகிறது. ஓர் ஆங்கில எழுத்தாளர் சொன்னார் இன்றைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் சேக்ஸ்பியரை பரப்புவதற்கு வருடம் தோறும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் பவுண்டுகளை செலவழிக்கிறது என்று. அரசாங்கம் உதவி செய்யாவிட்டால் அரசுசாரா அமைப்புகள் உதவலாம். தனியார் நிறுவனங்கள் உதவலாம்.
இந்தக் குறையைச் சரிசெய்ய இப்போது ஓரளவுக்குச் சிறிய ஒளி கிடைத்துள்ளது. ரஸ்ய இலக்கியத்துக்கு ஒரு Constance Garnett கிடைத்ததுபோல எங்களுக்கு வைதேஹி ஹேர்பர்ட் என்பவர் கிடைத்திருக்கிறார். இவர் அமெரிக்கர். சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதை தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். நாளுக்கு 16 மணிநேரம் வேலை செய்கிறார். சங்க இலக்கியங்கள் 18 நூல்களையும் 2014ம் ஆண்டு முடிவதற்குள் மொழிபெயர்த்துவிடுவதாக சங்கல்பம் செய்திருக்கிறார். ஏற்கனவே ஆறு நூல்களை மொழிபெயர்த்துவிட்டார். ஏழாவது நூல் இன்னும் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். இதைத் தமிழ் இலக்கியத் தோட்டம் கனடாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. வைதேஹி போல இன்னும் பலர் முன்வரவேண்டும்.
உரையாடல்: மதுரபாரதி
காலச்சுவடு: மே 2009: அமெரிக்கக்காரி
ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.
பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ முக ஒப்பனைகளோ அவள் செய்துகொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப் போலப் பேசுகிறாள் என்று சொல்ல முடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்குப் புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள் sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அவையெல்லாம் ஆரம்பத்திலேதான். ஆனால் வெகு விரைவிலேயே அவள் தன்னைத் திருத்திக்கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.
கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோலப் பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும் கறுத்துச் சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள் அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். ‘யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?’ அவள் எப்படிப் பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக் கூடத்துக்குப் போனாள், வந்தாள். அதைத் திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்குப் பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.
அன்று நடந்த கூடைப்பந்துப் போட்டியைப் பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை. கூடைக்குள் பந்தைப் போட வேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும் நீளமான சிவப்புக் காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து ஆரவாரித்தார்கள்; சிலவேளைகளில் பந்தைக் கூடையில் போடாதபோதும் கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளைத் திகைப்படையவைத்தது. அவளைப் போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.
இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்குத் தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒரு நாள் அவள் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையைச் சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. ‘பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வர வேண்டும்’ என்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது ‘நீ உங்கள் நாட்டு இளவரசியா?’ என்றான். ‘இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டைத் தேட வேண்டும்’ என்றாள். ‘நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் தன் அறையில் தங்க முடியுமா என்று கேட்டான். அதற்குப் பிறகு அவனும் மறைந்துபோனான்.
இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரும் முன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் வீதியிலும் அவளை ‘அமெரிக்கக்காரி’ என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளைத் தன் வகுப்புத் தோழிகளுக்குச் சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறித் தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.
சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், ‘நான் அமெரிக்கக்காரியா?’ தாய் சொல்வார், ‘இல்லை, நீ இலங்கைக்காரி.’ ‘அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?’ ‘அது முடியாது.’ ‘நான் அமெரிக்காவுக்குப் போனால் ஆக முடியுமா?’ ‘இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.’ ‘நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?’ ‘நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.’ அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்குப் பெரிய ஏமாற்றமாகப்போய்விடும்.
மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளைப் பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர் போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.
அவன் காரில் இருந்து இறங்குவது விசித்திரமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தரையில் ஊன்றி எழுந்து நடந்து வருவான். நேற்று வகுப்பில் என்ன பாடம் நடந்தது, இன்று என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்ற கவலையே அவனிடம் கிடையாது. பல்கலைக் கழகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பது அவன் எண்ணம். அவள் பின்னாலேயே அவன் திரிந்தான். ஒரு நாள் அவளைக் கண்ணை மூடச் சொன்னான். அவன் ஏதாவது பரிசுப் பொருள் தரும்போது அப்படித்தான் செய்வான். அவள் மூடினாள். வாயைத் திற என்றான். ஏதோ சொக்லட்டோ இனிப்போ தரப் போகிறான் என்று நினைத்து வாயைத் திறந்தாள். அவளுடைய அம்மா மருந்து தரும்போதும் அப்படித் தான் திறப்பாள். அவன் குனிந்து அப்படியே திறந்த வாயில் முத்தம் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. ‘இது என்ன பெரிய விசயம். நான் உன் கையிலே முத்தம் கொடுத்திருக்கிறேன். உன் நெற்றியிலே முத்தம் தந்திருக்கிறேன். நெற்றியில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உன் வாய் இருக்கிறது. இது இரண்டு அங்குலத் தவறுதான்’ என்றான்.
நன்றிகூறல் நாள் விருந்துக்குத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்குப் போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.
அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கைச் செய்தித் துணுக்குகளை அவளுக்காக வெட்டிவைத்து அவளிடம் தந்தது அவள் மனத்தைத் தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரைப் பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடிக் கடிதம் எழுதும் விலாசத்தைத் தான் மாற்ற வேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாகப் போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.
இரவானதும் சோபாவை இழுத்துக் கட்டிலாக்கி அதில் அவளைப் படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச் சாமம்போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்குப் பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனைத் துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.
அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சாரக் கலைநிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். ‘பாரம்பரிய நடனம்’ என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையைக் கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனைசெய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவுசெய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாகப் பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.
அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையைக் கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன் 16 கம்பிகள் கொண்ட அந்தப் பெண்கள் வாத்தியத்தைத் தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாகத் தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் தன்னுடைய பெயர் லான்ஹங் என்றான்.
அடுத்த நாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்தப் பல்கலைக்கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். ‘உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?’ என்றான். அவள் ‘மதி’ என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்’ என்றாள். ‘அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?’ அவள் ‘புத்தி’, ‘சந்திரன்’ என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். ‘வியட்நாமியருக்குச் சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கியப் பங்கு உண்டு’ என்றவன் தொடர்ந்து ‘நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது’ என்றான். ‘அப்படியா? நன்றி’ என்றாள். ‘தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?’ இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காகக் கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.
‘கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாயே’ என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு ‘அந்தத் தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டிவைத்தால் அந்தத் தாயைச் சிசுவதைச் சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்’ என்று சொல்லிவிட்டுப் பெரிய பற்களைக் காட்டிச் சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோலப் பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியவில்லை.
இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்குப் பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்க வேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ உட்காரும்போதோ பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப்படுத்த அவள் வேறு எவ்வித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.
ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்குக் கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருதடவை வெளிக்கிட்டுப் பட்டணத்துக்குப் போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களைச் சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டிச் சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அது பற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். ‘அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்குப் பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்றுக் குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாதக் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னைத் திரும்பவும் பார்க்க வேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’
லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘என்னை ஆச்சரியப்படுத்து.’ இரவு நேரத்தில் இருவரும் உணவருந்தச் சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான். சினிமாவுக்கு போவார்கள். ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்பாள் இவள். அவன் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என்பான்.
ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல கணினியில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகுநேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதைப் பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையைத் தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்துக் கையில் வைத்துத் தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.
மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக் கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்குப் படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனத்தில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சிச் சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரைக் கண்டதும் ஒரு பழங்காலத்துப் போர்வீரன்போலத் துள்ளிப்பாய்ந்து அவள் முன் வந்து குதித்தான். ‘இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?’ என்றாள் மதி. உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித் தன்மையான ஆடையில் வசீகரமாகக் காட்சியளித்தாள் அவள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்து விட்டு ‘இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது’ என்றான். ‘அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து’ என்றாள்.
‘இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?’
‘எனக்குத் தெரியாது, நீ சொல்’ என்றாள் அவள். ‘ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்குப் பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்குத் தெரியுமா?’
‘இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.’
‘பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.’
‘இதை ஏன் எனக்குச் சொல்கிறாய்?’
‘நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.’
அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.
‘பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.’
அவள் முனைவர் படிப்பைத் தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்குப் பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியைச் சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். ‘வியட்நாமியச் சடங்கு இல்லையா?’ என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்துக் கடித்துக் சாப்பிட்டான். மீதியை அவள் கடித்துக் சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.
மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்கப் பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும் நோட்டுப் புத்தகங்களும் குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்க முடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணிநேரமாக வீட்டைத் துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.
முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்க வேண்டியிருந்தது. சில நாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். ‘அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.’
ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக் கட்டுரையைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களைத் தள்ளிப் படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். ‘இந்த உலகத்தில் ஆகச் சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. நமக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்க வேண்டும். நாம் ஒரு மருத்துவரை பார்க்கலாம்’ என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.
மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ‘என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து’ என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தைப் பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளே போனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டு போனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்க வேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.
அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்னும் வெறி உண்டானது. மதியின் தாயாருடைய கடிதங்கள் ‘நீ கர்ப்பமாகிவிட்டாயா?’ என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில் படுத்திருந்த அவளிடம், ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாள முடியாமல் இருந்தது. ‘இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்துச் சங்கிலியில் பேனாவைக் கட்டி வைப்பதுபோல நான் உன்னைக் கட்டிவைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்துப் பிள்ளை பெற்றுக்கொள்’ என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் தலையை மேலும் அழுத்திபடுத்துக்கொண்டாள்.
அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் – மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆய்வுக் கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய்விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார் சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து மாணவர்களும் மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.
அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காகச் சேமித்துவைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து மிக்ஷிதி கருத்தரிக்கும் முறையைப் பரிசோதிப்பது எனத் தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களைத் தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறையச் சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளைத் தயார்செய் தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவளுக்குள் செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவமனையில் போய்ச் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். ‘நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.’
அவளுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவப் பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளைச் சொன்னாள். ஒரு நாள் கேட்டாள், ‘இலங்கைப் பெண்ணுக்கும் வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்கக் கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாகப் பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்துத் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். ‘எனக்கு ஒரு அமெரிக்கப் பிள்ளை பிறந்திருக்கு.’ ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்கத் தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்கக் கிராமத்தில் அலைவாள்.
இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சைப் பிடித்துப் பட்டணத்துக்குப் போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.
இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. ‘மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?’
‘பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.’
‘அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?’ குழந்தையைத் தூக்கி டெலிபோனுக்குக் கிட்டப் பிடித்தாள். ‘மகளே, குழந்தைக்கு என்ன பேர் வைத்தாய்?’ அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பைச் சத்தம்தான் கேட்டது.
‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளைப் பார்க்க வேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’
இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன.
அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப் போலக் கொண்டையைச் சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டைப் பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டுப் பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.
‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லித் தப்பியோட முயலமாட்டாள்.
பல்கலைக்கழகக் கலாச்சார ஒன்றுகூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டிவந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக் கொள்வாள்.
காலச்சுவடு: ஜூன் 2012 – கண்ணாடியைப் பார்ப்போம்
சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசியபோது அவர் சொன்ன ஒரு விடயம் ஆச்சரியம் தந்தது. அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில நாவலையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள் பிரெஞ்சு மொழியில் நாவல் மேலும் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றார். நான் கேட்டேன் ‘உங்களுக்கு வருத்தமாய் இருந்திருக்குமே?’ அவர் ‘ஏன் வருத்தமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சிலும் புகழ் எனக்குத்தானே?’ என்றார்.
அவர் அப்படிச் சொன்னது நான் பலகாலமாக நினைத்துவந்த ஒரு விடயத்தை உறுதிசெய்தது. எத்தனை மொழியில் ஒரு நாவல் மொழிபெயர்க்கப்பட்டாலும் புகழ் போய்ச் சேருவது எழுத்தாளருக்குத்தான். மொழிபெயர்ப்பாளருக்கு அல்ல. அடுத்து, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது சேதாரம் உண்டு. அதைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் மூலநூலிலும் பார்க்க ஒரு மொழிபெயர்ப்பு சிறந்ததாக இருக்கிறதெனச் சொன்னால் அதை எப்படி நம்புவது? எப்பொழுதும் ஒரு மொழிபெயர்ப்பில் எஞ்சுவது 80 சதவீதமே என்று பலர் எழுதியிருக்கிறார்கள். நான் டேவிட் டங்கன் சொன்னதைச் செவிமடுத்தாலும் முழுதாக நம்ப மறுத்துவிட்டேன். என்னுடைய எண்ணத்தை விரைவிலேயே மாற்ற வேண்டியிருக்குமென்று நான் அப்போது நினைக்கவில்லை.
ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த என் பெயர் சிவப்பு நாவலைப் படித்தபோது எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. இத்தனை உழைப்பைக் கொடுத்து மிகத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார். இதே மாதிரித்தான் ஆங்கிலத்திலும் ஒருவர் துருக்கி மொழியிலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர்களை ஒருவரும் கவனிப்பதில்லை. அவர்களுக்குப் பாராட்டுகள் இல்லை; சன்மானம் இல்லை. இந்த இரு மொழிபெயர்ப்பாளர்களின் அனுபவங்களை, அவர்களது நேர்காணல் கண்டு, வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்குமெனத் தோன்றியது.
ஆனால் நினைத்ததைச் செயல்படுத்துவது அப்படி ஒன்றும் எளிதாக இல்லை. ஓரான் பாமுக்கின் நாவலை ஆங்கிலத்தில் My Name is Red என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் எர்டாக் கோக்னர் (Erdag Goknar). மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் எழுதுவதில்லை. தொலைபேசி அழைப்புகள் தகவல் பெட்டியில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக விழுந்துகிடக்கும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் திடீரென்று ஒரு நாள் மின்னஞ்சலில் சம்மதம் தெரிவித்தார். ஜி. குப்புசாமியைத் தொடர்புகொண்டபோது அவரும் நேர்காணலுக்கு உடன்பட்டார்.
முதலில் எர்டாக் கோக்னரிடம் தொலைபேசினேன்.
மொழிபெயர்ப்பில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
சிறுவயதில் இருந்தே இரண்டு மொழிகளிலும் நான் மாறி மாறிப் பேசுவேன். ஆரம்பத்தில் சில கவிதைகளையும் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.
அமெரிக்காவின் டபிள்டே பதிப்பகம் நூறு வருடப் பாரம்பரியம் கொண்டது. அவர்கள் ஓரானின் நூலை ஆங்கிலத்தில் வெளியிட முடிவுசெய்தபோது எப்படி அந்தப் பணியை உங்களிடம் கொடுக்கத் தீர்மானித்தார்கள்?
ஓரான் பாமுக் என்னை ஒரு நாள் அழைத்தார். அப்போது எனக்கு வயது 32. அவருடைய நூலின் ஓர் அத்தியாயத்தைக் கொடுத்து மொழிபெயர்க்கும்படி கூறினார். டபிள்டே பதிப்பகம் மேலும் மூன்று பேரிடம் அதே வேலையைக் கொடுத்திருந்தது. ஒரு பரீட்சை போலத்தான். அதில் எப்படியோ நான் தேறி மொழிபெயர்ப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டேன்.
ஓரானின் பல நாவல்களை ஏற்கனவே திறம்பட மொழி பெயர்த்திருந்த Maureen Freelyயும் பரீட்சையில் பங்கு பற்றினாரா?
இல்லை. அவரைத் தவிர்த்துவிட்டார்கள்.
உங்களுடைய மொழிபெயர்ப்பு நடைமுறை ஒழுங்கு தினம் எப்படி இருந்தது?
முழு நாவலையும் 5 தொகுதிகளாக, ஒரு தொகுதிக்கு 100 பக்கங்கள் என்று பிரித்தேன். இரண்டு பக்கங்களுக்கு ஒரு தாளாக ஒளிநகலில் பிரதி எடுத்துப் பெரிதாக்கி வைத்துக்கொண்டு மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பாமுக் நீண்ட வசனப் பிரியர். அந்த வசனங்களைத் துண்டு துண்டாகப் பிரித்து அடிக்கோடிட்டு, குறிப்புகள் குறித்துவைத்துக் கையாலேயே எழுதி மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அதன் பின்னர் மடிக்கணினியில் அவற்றைத் தட்டச்சு செய்தேன். அப்படிச் செய்தபோதே மேலும் திருத்தங்கள் செய்தேன். மொழிபெயர்ப்பைப் படித்துப் படித்துத் திருத்துவதை நிறுத்த முடியவில்லை. மிகை இல்லாமல் சொல்வதானால் 100 தடவைகள் திருத்தியிருப்பேன்.
உங்களுக்கும் பதிப்பகப் பிரதி மேற்பார்வையாளருக்கும் இடையிலான உறவு எப்படி இருந்தது?
உறவு சுமுகமாகவே இருந்தது. அவருக்குத் துருக்கி மொழி தெரியாது ஆகவே அவர் மொழிபெயர்ப்பு பற்றிக் கருத்து சொல்லவில்லை. ஆங்கில வசன அமைப்பில் அவர் செலுத்திய கவனம் பிரதியை மேலும் துல்லியமாக்கியது. மேம்படுத்தியது. சில வார்த்தைகள் தேவையா முன்பின் முரணாக இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்த்தார். ஆகவே பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. புத்தகத்தின் தலைப்பாக நான் பரிந்துரைத்தது ‘My Name is Crimson.’ துருக்கிய நாவல் தலைப்புடன் அது மிகவும் ஒத்துப்போனது. ஆனால் மேற்பார்வையாளர் My Name is Red என்பதை விரும்பினார். அப்படியே நடந்தது.
ஓரான் பாமுக் பிரதியைப் படித்துப் பார்க்கவில்லையா?
இல்லாமலா? அவரும் நானும் ஒன்றாக மொழி பெயர்ப்பைச் சரிபார்த்தோம். நாளுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து வேலைசெய்தோம். இந்த முயற்சியில் லாபம் அடைந்தது நான்தான். ஒரு மாபெரும் படைப்பாளிக்கு அருகாமையில் இருந்து பணிபுரிய நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவருடைய கற்பனையின் வேகமும் ஆழமும் என்னை ஆச்சரியப்படவைத்தன. அவரிடமிருந்து நுட்பமான பல விசயங்களை நான் கற்றுக்கொண்டேன்.
நீங்கள் மொழிபெயர்த்த நாவலின் ஆசிரியருக்கு நோபல் பரிசு கிடைத்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? அந்தச் செய்தி எப்படி உங்களை அடைந்தது?
2006ஆம் ஆண்டு, ஒக்டோபர் 12ஆம் தேதி மாலை. அவசரமாக ஒரு நேர்காணலுக்காக டர்ஹாம் நகரத்து வீதி ஒன்றில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது ஓரானிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது. நோபல் பரிசு தனக்குக் கிடைத்திருக்கும் செய்தியைச் சொல்லி எனக்கு நன்றி கூறினார். அத்தனை மகிழ்ச்சியை நான் அதற்கு முன்னர் அனுபவித்தது கிடையாது. செல் பேசியைத் துண்டித்த பின்னரும் அந்தச் செய்தி என் நெஞ்சுக்குள் கிடந்து துள்ளியது. அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள மனம் துடித்தது. ஆனால் வீதியில் ஒருவருமே இல்லை. வெறும் கட்டடங்களும் வாகனங்களும் மரங்களும்தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு நாட்களில் அந்த நாள் ஒன்று.
இரண்டு நாட்களா? அந்த இன்னொரு நாள் என்ன?
இப்பொழுது நான் பேராசிரியராகப் பணியாற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எனக் கூடியிருந்த சபையில் ஒருமுறை ஓரான் பாமுக் பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தான் எழுதிய துருக்கி மொழி நாவலிலும் பார்க்க அதன் ஆங்கில மொழி பெயர்ப்பான My Name is Red சிறப்பாக வந்திருப்பதாகக் கூறினார். அவருடைய பெருந்தன்மை, அப்படிச் சொன்னார் என்று நினைக்கிறேன். வேறு யாரும் அப்படி ஒரு சபையில் அப்படியான புகழ் வார்த்தைகளைப் பேசியிருக்கமாட்டார்கள்.
டபிள்டே வெளியிட்ட உங்கள் மொழிபெயர்ப்பு நாவலின் விற்பனை எப்படி இருந்தது? நாவல் வெளிவந்த பின்னர் உங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லியிருக்கிறீர்களே!
ஆங்கிலத்தில் இந்த நூல் 20,000 படிகள் மட்டுமேவிற்கும் எனத் திட்டமிட்டுத்தான் பதிப்பகத்தினர் வெளியிட்டார்கள். ஆனால் நோபல் பரிசு அறிவித்ததும் விற்பனை 2,00,000 இலக்கத்தைத் தாண்டி அமோகமாக விற்கத் தொடங்கியது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஓரானும் எதிர்பார்க்கவில்லை. இதில் நடந்த இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நோபல் பரிசு அறிவித்த பின்னர் ஓரான் ஏற்கனவே எழுதி மற்ற பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களும் அமோகமாக விற்க ஆரம்பித்துவிட்டன. என்ஜினில் தொடுத்த பெட்டிகள்போல என் பெயர் சிவப்பு மற்ற நூல்களையும் இழுத்துக் கொண்டு ஓடியது.
மொழிபெயர்ப்பாளர்களுக்கு சன்மானம் உண்டா?
நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ஒருவர் எப்படி வாழ முடியும்? ஓரானின் மொழிபெயர்ப்பை முடித்த பின்னர்தான் ஒரு விசயத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன். நான் மொழிபெயர்த்த My Name is Red நாவல் ‘Dublin IMPAC’ இலக்கிய விருதைப் பெற்றது. உலகத்தில் புனைவு இலக்கியத்துக்குக் கிடைக்கும் ஆகப் பெரிய விருது என்பது பரிசுப் பணம் அறிவித்தபோது தான் எனக்குத் தெரிந்தது. ஏறக்குறைய 1,30,000 அமெரிக்க டொலர்கள். இதில் விசேடம் என்னவென்றால் பரிசு அறிவிக்கப்பட்டபோதே மொத்தப் பணத்தில் 25 சதவீதம் மொழிபெயர்ப்பாளருக்கு என்று குறிப்பிட்டிருந்ததுதான். அதை ஒரு விதியாகவே பரிசளிக்கும் நிறுவத்தினர் கடைப்பிடித்தனர். இதை மற்றைய பரிசு வழங்கும் நிறுவனங்களும் கவனத்தில் வைத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.
இன்னொரு விசயம் கூறியிருந்தீர்கள். ஓரானின் நாவல் வசனங்களைப் படிக்கும்போது அவை ஓர் இசை லயத்துடன் ஒலிக்கும், அந்த லயத்தையும் அப்படியே ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்குப் பெருமுயற்சி எடுத்திருக்கிறீர்கள். அது முக்கியமானதா?
மொழிபெயர்க்கும்போது நான் நாள்தோறும் ஒரு திட்டத்துடன்தான் செயல்பட்டேன். குறைந்தது ஒரு நாளுக்கு 3 பக்கங்கள் மொழிபெயர்க்க வேண்டும். இந்த நியதியில் இருந்து நான் ஒரு நாள்கூடத் தவறியது கிடையாது. நாளுக்கு குறைந்தது 4 மணிநேரம், சிலவேளை 8 மணிநேரம்கூட வேலை நீண்டதுண்டு. இரவிலே வேலை முடித்துப் படுத்தால் வசனங்கள் மூளைக்குள் ஓடும் சத்தம் எனக்குக் கேட்கும். காலையில் எழும்பி முதல்நாள் மொழிபெயர்த்ததைப் படித்தால் அவை புது ஆங்கில வசனங்கள்போல இருக்கும். இரவு அவற்றுடன் போராடியது மறந்துபோகும். ஓரளவுக்கு மூலநூலில் சொன்ன கருத்து பேப்பரில் வந்த பின்னர் வசன அமைப்பை ஒரு லயத்துடன் ஒலிக்கவைப்பதற்காக முயல்வேன். துருக்கியில் வசனங்கள் படிக்கும்போது ஓர் இசை வடிவமாகவே இருக்கும். அதை ஓரளவுக்கு ஆங்கிலத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.
இந்த மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஏற்பட்ட நூதனமான சம்பவம் ஏதாவது உண்டா?
19ஆம் அத்தியாயத்தில் முதல் வசனம் மொட்டையாகத் தொடங்கியது. துருக்கி மொழியில் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ஆங்கிலத்தில் தொடக்கம் சரியாக வரவே இல்லை. ஆகவே ஒரேயொரு சொல்லை – Behold என்ற வார்த்தையை – ஆரம்பத்தில் நுழைத்ததும் எல்லாம் சரியாகிவிட்டது. மொழிபெயர்ப்பாளருக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தேன். இந்த நூல் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். அதிலே 19ஆம் அத்தியாயத்தில் முதல் வார்த்தையாக நான் புகுத்திய வார்த்தையே இருந்தது. துருக்கியில் இருந்து ரஷ்ய மொழிக்கு நேரடியாக மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்திலிருந்து அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது எனக்கு உடனே புரிந்தது.
இந்த நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்த்தவர் பெயர் ஜி. குப்புசாமி. உங்களைப் போலவே அதிசிரமமெடுத்து அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்.
‘அப்படியா? அந்த வார்த்தை தமிழில் இருக்கிறதா பாருங்கள்’ என்றார். ( நான் பார்த்து அந்த வார்த்தை இருப்பதாகச் சொன்னதும் சந்தோசப்பட்டார்.)
துருக்கி தேசத்தின் பிதா அட்டர்துக் 1928ஆம் ஆண்டு பழைய துருக்கி மொழியை ஒழித்துப் புதிய துருக்கி மொழியை உண்டாக்கினார். பழைய துருக்கி மொழி அரபு எழுத்துரு கொண்டது. புதிய துருக்கி மொழி லத்தீன் எழுத்துமுறை கொண்டது. அத்துடன் பழைய துருக்கியில் புழங்கிய அரபு மற்றும் பாரசீக வார்த்தைகளும் ஒழிக்கப்பட்டன. நூறு வயதுகூட ஆகாத ஒரு புது மொழியில் இலக்கியம் படைத்ததும் அந்த எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றதும் சாதனைகள் அல்லவா? 1000 வருடத்துக்கு மேலான பழைய துருக்கி இலக்கியங்கள் அழிகின்றனவா?
ஓரான் புதிய துருக்கி மொழியில்தான் படித்தார். அவர் எழுதியதும் புதிய துருக்கி மொழியில்தான். ஆனால் பழைய அரபிக் வார்த்தைகளையும் பாரசீக வார்த்தைகளையும் அவ்வப்போது பயன்படுத்தத் தவறவில்லை. நாவலை வாசிக்கும்போது இசை ஒலி எழுவது அந்தக் காரணத்தால்தான். ஓரானின் அபரிமிதமான கற்பனை வளமும் மொழி ஆளுமையும்தான் அவருக்கு நோபல் பரிசை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. பழைய துருக்கி இலக்கியங்கள் இளம் தலைமுறையினரால் படிக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றைப் புதிய துருக்கியில் மொழிபெயர்க்கும் வேலை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.
கேள்விகளுக்குக் கோக்னர் பொறுமையாகவும் உண்மையாகவும் பதிலளித்தார். நான் அவருடைய நேரத்துக்கு நன்றி கூறி விடைபெற்றேன்.
ஜி. குப்புசாமி
ஜி. குப்புசாமி தமிழில் மொழிபெயர்த்த என் பெயர் சிவப்பு நாவலை அதன் ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபடியே படித்தேன். அதிலே எனக்கு ஓர் இடைஞ்சல் இருந்தது. ஆங்கில நாவலை மின்புத்தகத்தில் (கிண்டில்) படித்ததால் பக்க எண் என்னவென்று பார்க்க முடியாது. 3 சதவீதம், 7 சதவீதம், 34 சதவீதம் என்று எவ்வளவு படித்து முடிக்கப்பட்டிருக்கிறது என்னும் கணக்கு விவரத்தையே அது கொடுக்கும். சிரமம் எனினும் தமிழில் ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து அதை ஆங்கில வரியுடன் ஒப்பிடுவதைத் தொடர்ந்து செய்தேன். ஆங்கிலத்தில் மிக நீளமான வசனங்களைப் படித்துத் திகைத்துப்போய் இதை எப்படித் தமிழில் மொழிபெயர்ப்பது என்று யோசித்துக்கொண்டே அந்தத் தமிழ் வசனத்தைத் தேடிப் படித்தால் மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல் வசனம் கச்சிதமாக அமைந்திருக்கும். நெடுங்காலமாக மொழிபெயர்ப்பு நூல்களை மூலத்துடன் ஒப்பிட்டுப் படிக்கும்போது எந்த வாசிப்பு எளிமையாகவும், கூடிய இன்பம் தருவதாகவும், படைப்பின் ஆத்மாவைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது என்பதைக் கூர்ந்து பார்ப்பதுண்டு. அந்த விதத்தில் ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் எனக்கு அதிக மரியாதை இருந்தது ஆனால் அவருடன் பேசியது கிடையாது. ஒரு நாள் அதிகாலை அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். கேள்விகளுக்கு உடனேயே பதில் அளித்தார். சில விவரங்களை மின்னஞ்சலிலும் அனுப்பினார்.
நீங்கள் மொழிபெயர்ப்பு துறைக்கு எப்படி வந்தீர்கள்?
ஆரம்பத்திலிருந்தே புத்தக வாசிப்பு, அதிலும் குறிப்பாகத் ‘தற்கால உலக இலக்கிய’ங்கள் என் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் புத்தகங்கள் படிப்பதுதான் வாழ்க்கையாக இருந்தது. 2000ஆம் வருடம் என் மனைவி அகால மரணமடைந்த பிறகு வெறுமை என்னைத் தாங்க முடியாத அளவுக்கு அழுத்தி இரண்டு வருடங்கள் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கக் கூட இயலாதிருந்தது. திருவண்ணாமலையில் உள்ள என் உற்ற நண்பரும் எழுத்தாளருமான பவா செல்லதுரை அந்த நாட்களில் என்மீது காட்டிய அக்கறை மறக்க முடியாதது, உடல்ரீதியாக என்னைக் கடுமையாக உழைக்கவைத்தால் மட்டுமே நான் புத்துணர்வடைவேன் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது,
2002ஆம் வருடம். கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்கள் குறித்துத் திருவண்ணாமலையில் தமுஎச சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, அக்கூட்டத்தில் அருந்ததி ராய் அப்போது அவுட்லுக் இதழில் எழுதியிருந்த கட்டுரையை மொழிபெயர்த்து விநியோகிக்கலாம் என்று யோசனை வந்தது, அக் கட்டுரை என்னை ஆழமாகப் பாதித்த ஒன்று. ஓர் அரசியல் விமர்சகரின் கட்டுரையைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கலைஞனின் உக்கிரமான படைப்பைப் போல அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதை நான் மொழிபெயர்க்க ஆரம்பித்ததும் அருந்ததிராயின் கோபமும் கிண்டலும் அச்சு அசலாக என் மொழியில் உருமாற்றமடைந்து வெளிவந்ததைக் கண்டு நானே வியப்படைந்தேன், எனக்கே தெரியாத இன்னொரு பரிமாணம் எனக்குள்ளே இருந்ததை அப்போதுதான் உணர்ந்தேன். அற்புதமான தரிசனம் அது. அக்கட்டுரையை மொழி பெயர்த்த அந்த நேரத்தில் முற்றிலும் வேறுமனிதனாக உணர்ந்தேன். இந்த உருமாற்றம் எனக்குப் பெரும் ஆறுதலை அளித்து வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியதால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆரம்பித்தேன், அப்போது நான் வெகுவாக ரசித்துப் படித்திருந்த ஜூலியன் பார்ன்ஸ், ஏ. எஸ். பையட், காசுவோ இஷிகுரோவின் சிறுகதைகளை மொழிபெயர்த்தேன், எனக்குள் நிகழ்ந்த இந்த மாற்றம் தீப்பற்றுவதுபோல என்னை ஆகர்ஷித்துக்கொண்டது,
எதற்காக My Name is Red நாவலைத் தேர்ந்தேடுத்து மொழிபெயர்த்தீர்கள்?
பத்து வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த நாவலைப் பற்றி மிக உயர்வாகப் பேசிக்கொண்டிருந்தார். அடுத்த வாரமே அந்நூலை வாங்கிப் படிக்க ஆரம்பித்ததும் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டிய நாவல் என்று ராமகிருஷ்ணன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. இந்த நாவலை மொழிபெயர்த்தே தீர வேண்டுமென்ற வெறி அப்போதே உருவாகிவிட்டது, இதைத் தொடர்ந்து பாமுக்கின் மற்ற நாவல்களைத் தேடித் தேடி வாசிப்பது முழுநேரத் தொழிலாகவே மாறிவிட்டது, அந்த வாசிப்பனுபவம் என்னைப் பாமுக்கோடு மேலும் மேலும் இறுக்கமாகப் பிணைத்தது,
இந்த நாவல் தமிழில் வந்தாக வேண்டுமென்று நினைத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. துருக்கிக்கும் இந்தியாவுக்கும் மொகலாயப் பேரரசு காலம் தொடங்கிப் தொடர்பு இருந்திருக்கிறது. மொகலாய ஓவியங்கள், கட்டடக்கலை போன்ற கலை வடிவங்கள் துருக்கியப் பின்புலம் கொண்டவை. எனவே என் பெயர் சிவப்பு நாவலில் வரும் ஒட்டாமன் காலத்து நுண்ணோவிய மரபுக்கு இந்தியாவிலும் தொடர்பு இருக்கிறது, மேலும் (விட்டல்ராவின் ‘காலவெளி’ நாவலைத் தவிர) ஓவியக் கலை. ஓவியர்களின் உலகம் குறித்து எழுதப்பட்ட நாவல் தமிழில் எதுவும் இல்லை. இந்த மொழிபெயர்ப்பு தமிழுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்துவைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது,
மொழிபெயர்ப்புக்கு அனுமதி இலகுவில் கிடைத்ததா?
கலைஞனின் படைப்புச் சுதந்திரத்திற்குக் குறுக்கே அவன் சார்ந்திருக்கும் மதமும் கலாச்சார மரபுகளும் வரும்போது அவனுக்கு நேர்கிற ஆன்மீக, உளச்சிக்கல்கள் இவ்வளவு அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது இந்த நாவலில்தான். இது எப்படியும் தமிழில் வந்தாக வேண்டுமென்று நினைத்தேன். 2006 இல் பாமுக்கிற்கு நோபல் பரிசு கிடைத்ததும் அவரது பெயர் தமிழ் இலக்கிய உலகிலும் பிரபலமாகியது, காலச்சுவடு கண்ணனிடம் இந்த நாவலுக்கான மொழிபெயர்ப்பு உரிமையைப் பெற்றுத்தருமாறு தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தேன். 2008இல் உரிமை கிடைத்தது,
உங்கள் மொழிபெயர்ப்பு முறை பற்றிக் கூறுங்கள்? எத்தனைமுறை திருத்தி எழுதுவீர்கள்?
இந்த நாவலை மொழிபெயர்த்து முடிக்க 18 மாதங்கள் பிடித்தன. எனவே மொழிபெர்ப்புச் சடங்குகளை இங்கே சொல்லியாக வேண்டும். மொழிபெயர்க்கத் தொடங்குவதற்கு முன்பே அந்த நூலைக் கட்டாயமாக முதலிலிருந்து கடைசிவரை மூன்றுமுறை வாசித்துவிட்டேன். முதல் வாசிப்பு சாதாரணமானது. அப்போது அந்த நாவலை மொழிபெயர்ப்போமா எனத் தெரியாத நிலையில் வெறும் வாசிப்பனுபவத்திற்காக மேற்கொண்டது. மொழிபெயர்ப்பதற்காகப் படித்தது இரண்டுமுறை. பின் ஒவ்வொரு அத்தியாயத்தை மொழிபெயர்க்கத் தொடங்கும்போதும் அந்த அத்தியாயத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பேன். மூலநூலின் தாக்கம் மனத்தில் ஊறியிருக்கும்போது, அந்தப் படைப்பாளியிடமிருந்து கடன்பெற்ற படைப்பெழுச்சியில் என் முதல் வரைவை எழுதி முடிப்பேன்,
இரண்டாவது வரைவில் மூலப்பிரதியை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு வரியையும் ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தங்கள் செய்வேன். சிக்கலான இடங்கள் என்றில்லாமல் சாதுவாகத் தோற்றமளிக்கும் வாசகங்கள்கூடச் சில நேரங்களில் மொழிப்பெயர்ப்பதில் திணற அடித்துவிடும், எத்தனை முறை அடித்துத் திருத்தி எழுதினாலும் மூலவாக்கியத்தின் spirit மொழிபெயர்ப்பில் வராது. சுவரில் தலையை முட்டிக்கொள்வதற்கு ஒப்பான அவஸ்தை அது. சில நேரங்களில் சரியாக வராத இடத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பத்திக்குச் சென்றுவிடுவேன். அதன்பின் பணிக்குச் செல்லும்போதும் சாப்பிடும் போதும் இதே ஞாபகம் ஊசலாடிக்கொண்டிருக்கும். பிறகு பாதி வேலைக்கு நடுவில் திடீரென்று விளக்கு எரியும். இவ்வளவு நேரம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த வாக்கியம் அல்லது சொல் அல்லது வாக்கிய அமைப்பு சட்டென்று துலக்கமாகும். உடனே அதை டைரியில் குறித்துவைத்துக் கொள்வேன். மூச்சு சீராகும்.
நான் கணினியில் தட்டச்சுசெய்வதில்லை என்பதால், கையால் எழுதித் திருத்தி மாற்றியமைத்து அனுப்பும் கைப்பிரதியைப் பதிப்பாளர் அலுவலகத்தில் தட்டச்சு செய்து அனுப்பிவைப்பார்கள். சாதாரணமாக மொழிபெயர்த்து சில மாதங்கள் கழித்தே தட்டச்சுப் பிரதி கைக்கு வருவதால், மேலும் படிக்கும்போது புதிய திருத்தங்கள் தோன்றும். பொதுவாக இந்த revision சடங்கு மூன்றுமுறையாவது எனக்கும் பதிப்பாளருக்கும் இடையே நடக்கும். மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே பரிபூரணத்துவத்தை எட்ட முடியாது என்பதை ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் அறிந்தே இருக்கிறார். உங்கள் மொழிபெயர்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியளிக்குமேயொழிய திருப்தியளிக்காது,
இந்த நாவலுக்கு விமர்சனங்கள் வந்தனவா? மொழி பெயர்ப்பாளரைத் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டு ஏதேனும் வெளியானதா?
என் பெயர் சிவப்பு நாவலைப் பொறுத்தவரை கவிஞர் சுகுமாரன் எழுதிய விமர்சனம் மட்டுமே வெளி வந்துள்ளது. ஆனந்த விகடன் வரவேற்பறைப் பகுதியில் ஸ்டாம்ப் சைஸில் ஒரு குறிப்பு வந்தது. என்னுடைய எழுத்தாள நண்பர்கள் சிலர் படித்து விட்டுத் தொலைபேசியில் பாராட்டினார்கள், எஸ். ராமகிருஷ்ணன் என் மொழிபெயர்ப்பைப் பக்கம் பக்கமாக எடுத்து அலசி வெகுநேரம் பேசினார். இந்திரனும் சிலாகித்துப் பேசினார், ஜெயமோகனைச் சந்தித்தபோது பேசினார். புத்தகத்தில் தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டிருந்ததால் நான்கைந்து பேர் தொலைபேசினர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் எல்லோருமே இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருப்பதாகவும் படித்து முடித்துவிட்டு மீண்டும் பேசுவதாகவும் சொன்னார்கள் பின்பு வரவேயில்லை,
தமிழில் விமர்சனம் என்பதே காணக் கிடைப்பதில்லை. இந்த நாவலை விடுங்கள். ஜெயமோகனின் கொற்றவை மிக உன்னதமானதொரு படைப்பு, இதற்கு எனக்குத் தெரிந்து சோமசுந்தரம் எழுதிய விமரிசனம் மட்டுமே வந்திருக்கிறது. ஆனால் என் மொழிபெயர்ப்புகளுக்கு எதிர்வினை வருவதை விரும்புவேனே தவிர எதிர்பார்ப்பதில்லை. நான் மொழிபெயர்ப்பது எனது தேர்வு சார்ந்தது. ஒரு கதை அல்லது நாவல் என்னை வெகுவாகப் பாதித்து தமிழுக்கு அதைக் கொண்டு வந்தாக வேண்டுமென்ற துடிப்பில் செய்கிற காரியம். நிச்சயம் பலர் படிப்பார்கள் எனத் தெரியும். விமரிசனமோ பாராட்டோ வந்தாலும் வராவிட்டாலும் நான் தொடர்ந்து என் மொழிபெயர்ப்பில் உன்னதமான படைப்புகளை அறிமுகப்படுத்திக்கொண்டேதான் இருப்பேன். இது எனக்கு நானே விதித்துக்கொண்ட கடமை. ஒருவிதக் கிறுக்குத்தனமென்றுகூடச் சொல்லிக்கொள்ளலாம்.
மொழியெர்க்கும்போது உண்டாகும் சந்தேகங்களை எப்படித் தீர்த்துக்கொள்கிறீர்கள்?
Ideally, ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரியனோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்? ஐரிஷ் நாவலாசியர் ஜான் பான்வில்லின் The Sea நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. Ireland Literature Exchange என்ற அந்த நாட்டின் இலக்கிய கலாச்சாரத் துறை என்னை டப்ளினுக்கு அவர்கள் செலவில் வரவழைத்து நாவல் நடக்கும் கதைக் களனை ஒரு மாதம் சுற்றிப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு மொழிபெயர்க்க நல்கை வழங்கினார்கள். அந்த ஒரு மாதகாலமும் பான்வில்லை சந்திக்க முயன்றுகொண்டேயிருந்தேன், அவரிடம் கேட்பதற்கு ஒரு நோட்டுப் புத்தகம் நிறையக் கேள்விகள் என்னிடம் இருந்தன. கடல் நாவல் ஓர் உள்முகமான நாவல். பல நுட்பமான உணர்வுகள் சிக்கலான வாக்கிய அமைப்பில் நாவல் முழுக்க விரவியிருக்கும். பல இடங்களில் பான்வில் தன் சுயநிலை இழந்து ஆழ்மன வெளிப்பாட்டில் எழுதிச்செல்கிறாரோ எனத் தோன்றும். இவற்றைப் பற்றியெல்லாம் எனக்கு ஆயிரம் கேள்விகள் இருந்தன. பான்வில் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் வழங்கவேயில்லை. அவரைப் பார்க்காமலேயே ஊர் திரும்பினேன். ஆறு மாதங்கள் கழித்து என் நண்பரும் கலைவிமரிசகருமான இந்திரன் டப்ளின் சென்றிருந்தபோது பான்வில்லை ஒரு விழாவில் சந்தித்திருக்கிறார். என்னைச் சந்திக்க மறுத்ததற்கு அவரிடம் காரணம் கேட்டபோது. ‘மொழிபெயர்ப்பாளர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் அசூயை ஏற்படுத்தும் விஷயம். அவர்களை என் அந்தரங்கத்திற்குள் பிரவேசிப்பவர்களாக உணர்கிறேன். அவர்களை நான் சந்திப்பதே இல்லை’ என்றாராம்.
திரும்பத் திரும்ப வாசித்து. என் வாசிப்பு அனுபவத்தை வைத்தேதான் என் ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.
மொழிபெயர்ப்பால் உங்களுக்குப் பணம், விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா?
காலச்சுவடு பதிப்பகம் மட்டும் ராயல்டி தருகிறது. மூன்று வருடங்களாகியும் இரண்டாவது பதிப்பு வராத புத்தகத்திற்கு எவ்வளவு ராயல்டி வந்துவிடப்போகிறது? இலக்கிய இதழ்களுக்கு அனுப்பிய எந்தக் கதைக்கும் பெரும்பாலும் சன்மானம் வந்ததில்லை. உங்கள் கதைக்குப் படம் போடுபவருக்குக்கூடச் சன்மானம் தருவார்கள். எழுத்தாளன் மட்டும் விஷயதானம் செய்கிறவனாகத்தான் இருக்க வேண்டும். விருது என்றால் அயர்லாந்து அரசு வழங்கிய Bursary மட்டும்தான். உள்ளூரில் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலொன்றும் வருத்தமில்லை. என்னைப் போன்ற கிறுக்குகளுக்கு வருத்தமும் ஏற்படாது.
நீங்கள் நாளை ஓரான் பாமுக்கை நேரில் சந்திக்க நேர்ந்தால்?
ABBA – The Movie என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அபா இசைக்குழுவைப் பேட்டிகாணப் படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டேயிருப்பான். கடைசியில் யதேச்சையாக ஒரு லிஃப்ட்டில் ஏறும்போது உள்ளே அபா குழுவினர் இருப்பதைப் பார்ப்பான். பேச்சே வராது அவனுக்கு. அதேபோலத்தான் என்னாலும் ஒரு வார்த்தைகூடப் பேச முடியாது என நினைக்கிறேன். அவரது ஒவ்வொரு நாவலிலும் இடம்பெறும் எனக்குப் பிடித்தமான வரிகள் மனத்தில் ஓடுமேயொழிய வாயில் வராது, ஒருவேளை இரண்டாம்முறை சந்தித்தால். அவரிடம் இரண்டாயிரம் சந்தேகங்கள் கேட்பேன். Snow நாவலில் வரும் நெஸிப்பைப் போல.
அதிகாலை, ஜி. குப்புசாமி அலுவலகத்துக்குப் புறப்படும் நேரத்தில் அழைத்திருந்தேன். இருந்தாலும் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாகவும் விரிவாகவும் பதிலளித்தார். பல இடங்களில் அவருடைய அனுபவம் கோக்னருடைய அனுபவத்தை ஒத்ததாகவே இருந்தது. ஒரு வசனம் அல்லது வார்த்தை சரியாக வரவேண்டுமென்பதற்காக இருவருமே நேரங்காலம் பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள். கோக்னர் தூங்கும்போது மூளையில் வசனங்கள் ஓடும் என்று கூறியிருக்கிறார். திடீரென்று ஒரு சரியான சொற்றொடர் தோன்றும். அது போலக் குப்புசாமி பஸ்ஸில் பயணம் செய்யும்போது அவர் தேடிய வார்த்தை ஒன்று வந்துவிழும்.
மொழிபெயர்ப்புகளைப் பதிப்பகங்கள் விரும்புவதில்லை. மொழிபெயர்ப்பதற்கும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு அதனால் பெரும் பயனோ லாபமோ கிடையாது; புகழும் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவுவதற்குச் சில நிறுவனங்கள் உள்ளன. National Endowment for the Arts போன்ற அமைப்புகள் மொழிபெயர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக முன் பணம் கொடுத்து உதவும். கோக்னர்கூட இப்படி யான அமைப்புகளிடம் உதவித்தொகை பெற்றவர்தான்.
தமிழ்நாட்டில் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பண உதவி செய்வதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் கொடுப்பார் இல்லை. அரசாங்கம் செய்ய வேண்டும் என்று இல்லாமல் தனியார் நிறுவனங்கள் மொழிபெயர்ப்புகளுக்கு உதவலாம். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் இலக்கிய அமைப்புகளும் கவனம் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு நூலுக்குப் பரிசு வழங்கும்போது ஒரு தொகை மொழிபெயர்ப்பாளருக்குப் போகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்புகளை ஊக்குவிக்க இதுதான் வழி.
குப்புசாமியுடன் பேசியபோது அவர் மொழிபெயர்ப்பு என்பது மூல நூலை ஒருபோதும் தரத்தில் தாண்டாது என்பதில் உறுதியாக இருந்தார். நான் பேசிய எழுத்தாளர் டேவிட் டங்கன் தன்னுடைய நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஆங்கில நூலிலும் பார்க்கச் சிறந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஓரான் பாமுக் பல்கலைக்கழக அரங்கில், கோக்னர் முன்னிலையில், கோக்னரின் ஆங்கில மொழிபெயர்ப்பு துருக்கி நாவலிலும் பார்க்கச் சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். குப்புசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் ஆங்கிலத்திலும் பார்க்க அழகாகவும் எளிமையாகவும் சுவையாகவும் அமைந்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. ஓரான் பாமுக்குக்குத் தமிழ் தெரியாது. ஆகவே அவர் தமிழில் என் பெயர் சிவப்பு நாவலைப் படிக்கும் வாய்ப்பில்லை. படித்திருந்தால் அவர் தமிழ் நாவல் துருக்கி நாவலிலும் பார்க்கச் சிறப்பாக வந்திருக்கிறது என்று சொல்லியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.
மொழிபெயர்ப்பது என்றால் அது ஒரு சாதாரண விசயம் என்று நாங்கள் நினைக்கிறோம். அது அப்படியல்ல. நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. கோக்னரின் முயற்சியால் ஓரானுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் புகழ் முழுக்க ஓரானுக்குத்தான்; பரிசுப் பணமும் அவருக்கே. எதற்காக ஒருத்தர் மெனக்கெட்டு இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்? நிச்சயமாக ஓர் அர்ப்பணிப்பு உணர்வுதான். இது மொழிபெயர்ப்பவர்களிடம் பேசும்போது தெரியும். பல சமயம் அவர்களுக்கு மொழி பெயர்ப்பைப் பாதியில் நிறுத்திவிடத் தோன்றியிருக்கிறது. தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற மெல்லிய வருத்தமும் உண்டு. மொழிபெயர்ப்பாளருக்குப் பரிசோ விருதோ கிடையாது. டேவிட் டங்கன் சொன்னதுபோலப் புகழ் முழுக்க எழுத்தாளருக்குப் போகுமே ஒழிய மொழிபெயர்ப்பாளருக்கு அல்ல.
ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது கண்ணாடிக்கு முன் நின்று உருவத்தைப் பார்ப்பதுபோல என்று சொல் வார்கள். நீங்கள் பார்க்கும் பிம்பம்தான் மொழிபெயர்ப்பு. ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளர் தெரியக் கூடாது. எழுத்தாளர்தான் தெரிய வேண்டும். உங்கள் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது பிம்பம்தான் தெரியும்; கண்ணாடி தெரிவதில்லை. அப்படித்தான். இதனாலோ என்னவோ நாங்கள் கண்ணாடியைப் பார்க்காமல் விடுவதுபோல மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கத் தவறிவிடுகிறோம். இனிமேல் பிம்பத்தைப் பார்ப்போம். ரசிப்போம். அத்துடன் தவறாமல் கண்ணாடியையும் பார்ப்போம். ஏனென்றால் கண்ணாடிதான் மொழிபெயர்ப்பாளர்.
காலச்சுவடு: நவம்பர் 2008 – தாழ்ப்பாள்களின் அவசியம்
அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம்.
ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வரவேற்பு அறையில் விருந்தாளிகள் உட்கார்ந்து சம்பாசணை செய்யும்போது அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியும் கலந்துகொண்டது. அதற்கு அடிக்கடி உயிர் வந்து சத்தம் எழுப்பும். பிறகு மௌனமாகிவிடும். அந்தக் குளிர்சாதனப் பெட்டியில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த அம்சம் அதில் தொங்கிய பூட்டுத்தான்.
விருந்து நடந்துகொண்டிருந்தபோது வீட்டுக்கார அம்மா வந்து சாவிபோட்டுக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து வேண்டிய சாமான்களை எடுத்துப்போனது ஆடம்பரமாக இருந்தது. கனடாவில் பார்த்தால் அதற்குப் பூட்டு இல்லை. அதை வேறு மறைத்துவைத்திருந்தார்கள். சமையலறையில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் விசயம் மற்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்பதுதான் அம்மாவின் பெரிய கவலை.
அடுத்த சங்கதி குளியலறை. அதற்குப் பூட்டு இல்லாதது அம்மாவுடைய மூளையின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. சரி, பூட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை. கதவையும் சாத்த முடியாது. கதவைச் சாத்தினால் அது மெல்ல மெல்ல உயிர் பெற்றதுபோலத் தானாகவே அசைந்து நகரும். குளித்து முடித்து வெளியே வரும்போது கதவு ஆவென்று திறந்தபடி இருக்கும். கதவுக்கு அவசரமாக ஒரு பூட்டு வாங்க வேண்டும் அல்லது குளிக்காமல் இருக்க வேண்டும்.
என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அம்மா நேராக என்னுடைய புத்தகத்தட்டுக்குப் போய், சி. சு. செல்லப்பா எழுதிய ‘சுதந்திர தாகம்’ மூன்று பாகத்தையும் எடுத்துவந்தார். எனக்கு அம்மாவிடம் இருந்த மதிப்பு மூன்று மடங்கு அதிகமாகியது. மூன்று பாகத்தையும் ஒரேயடியாகப் படிக்கப்போகிறாரா என்று நினைத்தேன். அவருடைய நோக்கம் வேறு. அட்டையில் எழுதியிருந்த தலைப்பைக்கூட அவர் பார்க்கவில்லை. குளித்துவிட்டுத் திரும்பி வரும்போது பெரிய நிம்மதி அவர் முகத்தில் தோன்றியது. ‘புத்தகம் நல்லதா?’ என்று கேட்டேன். ‘இந்தப் புத்தகம் தொக்கை காணாது. கதவுக்கு முண்டு கொடுப்பதற்கு இதனிலும் மொத்தமான புத்தகம் இருக்கிறதா?’ என்றார்.
அம்மா தங்கியிருந்த மீதி நாள்கள் சுகமாகக் கழிந்தனவா என்றால் அதுவுமில்லை. ஒரு வீட்டின் வெளிக்கதவுக்குத் தாழ்ப்பாள் முக்கியம் என்ற விசயம் அம்மா சொல்லும்வரைக்கும் எனக்கு மறந்துபோனது. எங்கள் கொழும்பு வீட்டுவீதியில் எல்லா வீடுகளுக்கும் தாழ்ப்பாள் இருந்தது. உள்ளுக்கு ஒன்று, வெளியே ஒன்று. இரவு படுக்கப்போகும்போது உள்தாழ்ப்பாளைப் போடுவோம். வெளியே போகும்போது வெளித் தாழ்ப்பாளை இழுத்துப் பூட்டுவோம். நாங்கள் குடும்பமாகப் பயணம் புறப்படும்போது எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். கதவை இறுக்கிச் சாத்தி, தாழ்ப்பாள் போட்டு அம்மா ஆமைப்பூட்டைக் கொழுவிப் பூட்டுவார். அந்த ஆமைப் பூட்டு ஒரு தேங்காயளவு பெரியது. அம்மா அதை இழுஇழுவென்று இழுத்துப் பார்த்த பிறகு புறப்படுவார். நாங்களும் தொடருவோம். ஒரு நூறு அடி போனபிறகு ஐயா ஏதோ யோசித்துத் திரும்பிவருவார். ஆமைப் பூட்டில் தன் முழுப்பாரத்தையும் போட்டுத் தொங்கிப் பார்ப்பார். அதன் பிறகுதான் எங்கள் பயணம் தொடங்கும்.
அம்மா வெளிக்கதவுக்குத் தாழ்ப்பாள் வாங்கிப் பூட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். தன்னால் இரவுகளில் தூங்க முடியவில்லை என்றும் கெட்ட கனவுகள் துரத்துகின்றன என்றும் முறைப்பாடு வைத்தார். ‘கனடாவில் ஒருவரும் தாழ்ப்பாள் போடுவதில்லை. எங்கள் வீட்டுப் பாதுகாப்புக்கு அபாயமணி பூட்டியிருக்கிறது. திருடர்கள் வந்தால் இலகுவில் காட்டிக் கொடுத்துவிடும்’ என்றேன்.
‘அது எப்படி? அபாயமணி எப்போது ஒலிக்கும்? திருடன் உள்ளே வருமுன்னரா அல்லது வந்த பின்னரா?’ எனக் கேட்டார். ‘உள்ளே திருடன் நுழைந்த பிறகுதான் அபாயமணி அடிக்கும்’ என்றேன். அம்மா ‘என்ன பிரயோசனம், திருடன் உள்ளே வராமல் அல்லவா பார்க்க வேண்டும்’ என்றார். அதற்கு என்னிடம் பதில் இல்லை.
அம்மாவுடன் பல கடைகள் ஏறி இறங்கினேன். சிலருக்குத் தாழ்ப்பாள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் கதவுகளைப் பூட்டப் பயன்படுத்தும் தாழ்ப்பாள்கள் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. கடைசியில் பழைய சாமான்கள் விற்கும் ஒரு கடையில் கடந்துபோன நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பெரிய தாழ்ப்பாள்களைக் கண்டு பிடித்தோம். அம்மாவுக்கு மெத்தப் பிடித்துப்போனது. அவற்றைப் பூட்டிய பிறகுதான் அம்மாவுக்கு நிம்மதியாக நித்திரை வந்தது.
ஆனால் என்னுடைய நிம்மதி குலைந்துபோனது. டெலிபோன் மணி அடித்தால் அம்மாவால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. ஓடிவந்து அதை எடுக்க வேண்டும். கனடாவில் ஒருவரும் டெலிபோனை எடுப்பதில்லை. அது ஒரு அழகுக்காகத்தான் வீட்டில் இருக்கிறது. அது அடிக்கடி மணியடித்து வீட்டைக் கலகலப்பாக்கும். இதை அம்மாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவில்லை. எங்கள் வீடு ஒடுக்கமானது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்கு நீளமாக நிர்மாணித்திருந்தார்கள். வீட்டின் தொடக்கத்தில் இருக்கும் காலநிலையும் வீட்டின் அந்தலையில் இருக்கும் காலநிலையும் வேறு வேறாக இருக்கும். அவ்வளவு நீளம். அம்மாவும் விடுவதில்லை. மணிச்சத்தம் கேட்க ஆரம்பித்ததும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல மூச்சைப் பிடித்து ஓடிவந்து தொலைபேசியைத் தூக்குவார். தூக்கிய வீச்சில் தொலைபேசியின் வாயில் ‘ஹா’ என்று கத்தி நிறுத்தி மூச்சை ஒருதரம் உள்ளே இழுத்த பிறகு ‘லோ’ என்று சொல்வார்.
என்னிடம் ஒரு செல்பேசி உண்டு. நண்பர்கள் என்னுடன் அதிலே உரையாடினார்கள். வீட்டுத் தொலைபேசி என்ற ஒன்றை நான் பாவிப்பதில்லை. அடித்தால் அதை எடுக்கமாட்டேன். விற்பனைக்காரர்களுக்காகவும் தவறான எண் டயல் பண்ணுகிறவர்களுக்காகவும் நன்கொடை யாசிப்பவர்களுக்காகவும் வேண்டாதவர்களுக்காகவும் அதைப் பராமரித்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணிக்கு நான் டெலிபோனில் அந்த வாரம் சேர்ந்திருக்கும் தகவல்களை எல்லாம் ஒவ்வொன்றாகச் செவிமடுத்துப் பின்னர் அழிப்பேன். அதற்கு எனக்கு அரைமணி நேரம் எடுக்கும். அம்மாவால் அதைத் தாங்க முடியவில்லை. தொடர்ந்து வேகமாக ஓடி டெலிபோன் மணி நிற்பதற்கிடையில் அதைக் கையிலே தூக்குவதை அவர் கடமை என்றே நினைத்தார். எதற்காக இப்படி அடித்துப் பிடித்து ஓடுகிறார் என்று கேட்டேன். ‘மகனே, நீ என்னைக் கூப்பிடலாம் அல்லவா? இன்றைக்கு வெந்தயக்குழம்பு வைத்தீர்களா என்று நீ கேட்கக்கூடும் என்று நினைத்தேன்.’
‘தொலைபேசி மணி அடித்தால் அதைத் தொட வேண்டாம்.’ ‘தொலைபேசி மணி அடித்தால் அதைத் தொட வேண்டாம்’ என்று அம்மாவிடம் திருப்பித் திருப்பிச் சொன்ன நான், கதவு மணி அடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தரவில்லை.
ஒருநாள் நான் வெளியே போய்விட்டுத் திரும்பி வந்தபோது வீட்டில் பெரிய ஆரவாரமும் சத்தமும் சிரிப்பும் கேட்டன. நான் ‘தவறான வீட்டுக்கு வந்துவிட்டேனோ?’ என்று வீட்டு நம்பரைச் சரிபார்த்துக்கொண்டேன். விருந்தினர் அறையில் அம்மாவோடு மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆண் சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தார். மடிப்புகள் கலைந்த கோட்டும் விளிம்புகள் தேய்ந்துபோன கழுத்துப்பட்டியுமாக உட்கார்ந்திருந்த அவருக்கு ஐம்பது வயது மதிக்கலாம். மனைவிபோலத் தோற்றமளித்த குள்ளமான பெண் சாம்பல் நிற உடையில் தலையிலே சண்டியர்கள் லேஞ்சி கட்டுவதுபோலக் கட்டியிருந்தார். பெரிய சோபாவைப் பாதி நிறைத்து ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். இரண்டு பெண்களின் உடைகளும் சாம்பல் கலரில் சாக்குத் துணியில் தைத்ததுபோல வெட்டு இல்லாமல், உருவம் இல்லாமல், சுருக்கு இல்லாமல் கவர்ச்சியே இன்றிக் காணப்பட்டன.
அறிமுகப்படுத்தும்போது அந்த இளம்பெண் தன் பெயரைச் சொன்னாள். அவளுடைய பாதங்கள் ஒரு முதலையினுடைய தலைபோல முன்னுக்கு ஒடுங்கிப்போய் இருந்தது எனக்கு விநோதமாகப்பட்டது. நான் கேட்காமலே தனக்குப் பதினான்கு வயது நடக்கிறது என்றாள். நான் பார்த்ததில் ஆக வயதுகூடிய பதினான்கு வயதுப் பெண் அவள்தான். கைகள் இரண்டையும் குவித்துவைத்துக் கண்களை ஒரு கணத்துக்குக் கீழே இறக்கி நாடகத்தனமாக மேலே தூக்கினாள். ஒரு விரலால் தோள் மயிரைச் சுண்டிவிட்டாள். அவளுடைய சாக்குத் துணி உடையைத் தாண்டி ஒரு கவர்ச்சி அந்த நொடியில் வெளிப்பட்டது. என்னுடைய ரத்தம் உயிர்பெற்றுச் சுழலத் தொடங்கியது.
அந்த மனிதர் அடிக்கடி இருமலால் குரல்வளையை நிறைத்தார். பேசியபோது நாய் நக்கிக் குடிக்கும்போது ஏற்படுவது போன்ற ஓர் ஒலி அவர் தொண்டையிலே உருவானது. பிரசாரகர்களுக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருந்தன. அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அம்மாவிடம் பேசினார். எங்கள் வீட்டுக்கு எனக்கு அறிவிக்காமல் வந்திருந்த விருந்தினர்களுக்கு அம்மா பாசத்தோடு பணிவிடை செய்தார். மேசையிலே புத்தகங்களும் சஞ்சிகைகளும் துண்டுப் பிரசுரங்களுமாகப் பரவியிருந்தன. அந்த மனிதரின் கண்களையே அம்மா உற்று நோக்கிக்கொண்டிருந்தார். அது ஒரு கன்றுக்குட்டியின் பார்வை.
வீட்டுக்கு விருந்தாளிகளை வரவிடக் கூடாது. அப்படி அவர்கள் தப்பித்தவறி வந்துவிட்டால் அவர்களை உபசரிப்பதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதில் தவறாமல் இருக்கவே நான் முயன்றேன். அந்தப் பிரசாரகர் சளசளவென்ற குரலில் ஒரு நீளமான வசனத்தைச் சொல்வார். பிறகு பரிசோதிப்பதற்காக ‘நான் என்ன சொன்னேன்?’ என்று அம்மாவிடம் வினவுவார். அம்மா அவர் சொன்னதை மூன்றாம் வகுப்பு மாணவிபோலத் திருப்பி அப்படியே ஒப்பிப்பார். வசனத்தின் கடைசிப் பகுதியில் குரலை அவர் ஏற்றுவதுபோல் அம்மாவும் ஏற்றுவார். பிரசாரகருக்கு ஒரு புதிய அடிமை கிடைத்துவிட்டதுபோலவே எனக்குத் தோன்றியது. அந்த இளம்பெண் மரத் தரை சப்திக்க அடிக்கடி காலை மாற்றி அமர்ந்தாள். அப்படியே கண்களை ஒருமுறை கீழே இறக்கி மேலே தூக்கலாம் என்று நான் காத்திருந்தேன். என் கோபத்தை அந்த ஒரு காரணத்துக்காக நான் தள்ளிவைத்துக்கொண்டே போனேன்.
அவர்கள் போனதும் நான் அம்மாவைப் பிடித்தேன். ‘ரோட்டிலே போறவாற ஆட்களை எல்லாம் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே அழைப்பீர்களா?’ என்று கேட்டேன். அம்மாவின் முகம் வாடிவிட்டது. ஒன்றுமே புரியாமல் திகைத்துப்போனார். ‘நீ என்ன சொல்லுறாய். போறவாற ஆட்களா? அவர்கள் வெள்ளைக்காரர்கள்’ என்றார். அம்மாவின் அசைக்க முடியாத கருத்துப்படி வெள்ளைக்காரர்கள் என்றால் திருடமாட்டார்கள், பொய் சொல்லமாட்டார்கள். கொலை செய்ய மாட்டார்கள். பெண்களின் உறுப்புகள் எல்லாம் அவர்கள் கண்களுக்குத் தட்டையாகவே தெரியும்.
நான் முற்றிலும் கோபம் தணிந்த பிறகு ஒருநாள் இரவு உணவுக்காக மேசையின் முன் அமர்ந்தேன். வழக்கம்போல் அம்மா நின்றுகொண்டிருந்தார். அரைமணி நேரத்தில் சமைக்க வேண்டிய உணவுக்கு அம்மா அரைநாள் எடுத்திருப்பார். எவ்வளவு சொன்னாலும் உட்காரமாட்டார். ஒரு அடி தூரத்தில் இருக்கும் உணவை அவர்தான் எடுத்து, கோப்பையில் வைப்பார். அதை ரசித்துச் சாப்பிடும்போது என் முகம் எப்படிப் போகிறது என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதே அவர் வேலை.
அம்மா மெதுவாக என்னிடம் ‘மகனே, உனக்குப் பரவச நிலையை எட்டிய இவர்களின் கடவுள் பெயர் தெரியுமா?’ என்றார். நான் ‘தெரியாது’ என்று சொன்னேன். ‘உலகத்தின் ஆதிக் கடவுள் யாவே. அது ஹீப்ரு வார்த்தை. அந்த மொழியில் உயிரெழுத்துக் கிடையாது. எல்லாமே மெய்யெழுத்துதான். ஆகவே அந்த வார்த்தையை உச்சரிக்கும்போது எப்படியும் உச்சரிக்கலாம். ஆனால் கடவுளின் உண்மையான பெயர் ஹீப்ரு மொழி தோன்றுவதற்கு முன்னரே தோன்றி விட்டது. அந்தப் பெயர் தெட்ராகிரம்மட்டன். ஆதிக் கடவுளை ஆராதிப்பவர்கள் இறக்கும்போது நேராகச் சொர்க்கம் செல்வார்கள். எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.’
அந்த வருடம்தான் புளூட்டொ கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அந்த வருடம்தான் சமாதானப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் முறிந்தது. அந்த வருடம்தான் பனிக்காலம் முன்னறிவித்தல் இன்றி ஒரு மாதம் முந்தி வந்தது. மரங்கள் அவசர அவசரமாக இலைகளைக் கொட்டின. அம்மா தடித்த குளிர் ஆடை அணியாமல் குழம்பு தெறித்துக் கறைபட்ட மெல்லிய மேலாடை தரித்திருந்தார். அவருடைய உடம்பு மெல்ல நடுங்குவதை அவர் பொருட்படுத்தவில்லை. இரண்டு கைகளையும் கழுத்து எலும்பில் வைத்துக்கொண்டு என் முழங்கால்களைப் பார்த்துத் தான் திரும்பப் போக வேண்டும் என்று சொன்னார். நான் மறுக்கவில்லை. காரணம் தெட்ராகிரம்மட்டன் அல்லது சமையல். பாவாடையாகவும் இருக்கலாம். சமைப்பதை அம்மா அளவுக்கதிகமாக நேசித்தார். அதிகாலை எழும்பி அடுப்பு பற்றவைப்பதுபோல இங்கேயும் செய்ய விரும்பினார். மனிதனுக்குக் கிடைத்த 24 மணித்தியாலத்தில் அரைமணிக்குமேல் கனடாவில் யாரும் சமையலுக்குச் செலவிடுவதில்லை என்பதை நம்ப மறுத்தார். சமையல் சாமான்களுடைய விலையை உடனுக்குடன் இலங்கைக் காசில் மாற்றி ஒரு நிமிடம் ஆச்சரியப்படாமல் அவர் கரண்டியைத் தூக்கியது கிடையாது. அன்றைய சமையலைக் குறிப்பிடும்போது அதன் விலையையும் சேர்த்தே சொல்வார். ‘எட்டாயிரம் ரூபா இறைச்சியை வதக்கி இன்றைக்குக் கறி வைத்தேன்’ என்பார்.
அம்மா திரும்பிப்போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. எவ்வளவு ஆர்வத்துடன் என்னைப் பார்க்க 10,000 மைல் தூரம் கடந்து வந்தாரோ அந்த ஆர்வம் எல்லாம் வடிந்து குழம்பிப்போய்த் திரும்பினார். மிகக் கடுமையாக நடந்துகொண்டுவிட்டேனோ என்று சில சமயம் நான் நினைத்ததுண்டு. ஒருநாள் அம்மா பின் தோட்டத்தில் பாவாடை காயப்போட்டதற்குப் பக்கத்துவீட்டுக்காரன் முறைப்பாடு செய்து அது பெரிய விவகாரமாகிப்போனது. அம்மாவின் கண்கள் நனைந்து பளபளத்தன. போவது என்ற தீர்மானம் அன்றே அவர் மனத்தில் உருவாகியிருக்க வேண்டும். கடைசித் துரும்பு என்று சொல்வார்கள், அப்படியும் இருக்கலாம்.
டெலிபோன் அடித்தால் எடுக்கக் கூடாது என்ற விதியும் அம்மாவைப் பெரிதும் வருத்திவிட்டது. குளிர்பானப் பெட்டியைப் பூட்டக் கூடாது, கதவுகளைத் திறக்கக் கூடாது. பாவாடை காயப்போடக் கூடாது. விருந்தினரை உள்ளே அழைக்கக் கூடாது. இப்படியான பல சட்டதிட்டங்களை அம்மாவால் எதிர்கொள்ள முடியவில்லை.
அவர் கடைசியாக விடைபெறும்போது விமான நிலையத்தில் கேட்ட கேள்வி இன்னும் மனத்தில் நிற்கிறது. ‘ஒவ்வொரு ஞாயிறு காலையும் பத்து மணிக்கு நீ டெலிபோன் தகவல்களை அழிக்கிறாயா?’ நான் ‘ஓம்’ என்றேன். ‘மறக்காமல் செய்’ என்றார். ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. முத்தமிடும்போது என் முதுகைத் தடவி ‘யாவே உன்னை ஆசீர்வதிக்கட்டும்’ என்றார். நான் அவர் கன்னத்தைத் தொட்டேன். என்ன இது ஈரம் என்று கையைப் பார்த்தபோது அவர் பாதுகாப்பு வளையத்துக்குள் மஞ்சள் கைப்பையுடன் நுழைந்துவிட்டார். ஒரு கணத்துக்கு அந்த மெலிந்துபோன தோள்மூட்டு ஓரத்தில் தெரிந்து, பின்னர் மறைந்தது.
மாலை ஏழு மணி இருக்கும். கதவை யாரோ தட்டினார்கள். இது யார் மணியை அடிக்காமல் கதவைத் தட்டுவது என்று யோசித்தேன். அந்த நேரத்தில் ஒருவருமே என் வீட்டுக்கு வருவதில்லை. அவசரப்பட்டுக் கதவைத் திறந்தபோது மூன்று பேர் கதவை ஒட்டிக்கொண்டு நின்றார்கள். வேறு யாருமில்லை. எனக்கு முன்பே பரிச்சயமான பிரசாரக்காரர்கள்தான். அவரும் மனைவியும் வயது பதினான்கு என்று சொல்லிக்கொண்ட அந்தப் பெண்ணும்தான்.
மூவரும் அதே நிறத்தில் அதே உடையை அணிந்திருந்தார்கள். அவர் கையிலே பெண்கள் காவும் பை ஒன்றை வைத்திருந்தார். என் வாய்க்கு கிட்டவந்து ‘அம்மா இருக்கிறாரா?’ என்றார். திருத்த வேலைகள் முற்றுப்பெறாத அவருடைய பற்கள் பெரிதாக்கப்பட்டுத் தெரிந்தன. நான் காலை மடித்துக் கதவுக்குக் குறுக்காக வைத்துக்கொண்டு ‘அம்மா இலங்கைக்குப் போய் விட்டாரே’ என்றேன். ‘அப்படியா’ என்று அதிசயப்பட்டவர் என்னை இன்னும்கூட அதிசயப்படவைக்க நினைத்தோ என்னவோ காலைத் தூக்கி கடவையைக் கடப்பதுபோலத் தாண்டி உள்ளே வந்தார். சற்று முன்னர் நான் உட்கார்ந்து குளோப் பேப்பர் படித்த அதே இருக்கையில் அமர்ந்து என்னையும் அமரலாம் என்பதுபோலப் பார்த்தார். அவர் மனைவி கையோடு கொண்டுவந்திருந்த புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் அமைதியாக மேசைமேல் அடுக்கினார். பதினான்கு வயது என்று அறிமுகமாகிய பெண் அங்கேயிருந்த பெரிய சோபாவை அமுக்கி அமர்ந்தாள். அது ஒரு அடி ஆழம் கீழே புதைந்தது. விருப்பமில்லாத இடத்துக்கு அவளை யாரோ இழுத்து வந்துவிட்டதுபோல முழங்கால்களை ஒட்டவைத்து, தோள்மூட்டுகளைப் பின்னே தள்ளி முதலைக் காலை முன்னுக்கு நீட்டி உட்கார்ந்திருந்தாள்.
பிரசாரகர் ‘உங்கள் தாயார் பெருந்தன்மையானவர்’ என்றார் துடக்க வசனமாக. மற்ற இருவரும் ஆமோதிப்பதுபோலத் தலையை ஆட்டினார்கள்.
‘அவருக்கு யாவேயைப் பற்றித் தெரியும்’ என்றார்.
‘அப்படியா?’
‘உங்களுக்குச் சொர்க்கம் போக விருப்பம் உண்டா?’ அவரிடம் அதிகப்படியாக ஒரு டிக்கட் இருப்பதுபோல என்னைப் பார்த்தார்.
‘நிச்சயமாக.’
‘எப்படிப் போக வேண்டும் என்பது தெரியுமா?’
‘என்ன intersection?’ என்று சொன்னால் நான் எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன்.
அவருடைய முகம் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தபோது பார்த்த முகம் அல்ல. மாறிவிட்டது. கண்கள் நொடியில் இரவுப் பிராணியின் கண்கள்போலச் சிவப்பாகப் பளபளத்தன. மனைவி குனிந்தபடி வதவதவென்று புத்தகங்களையும் இதழ்களையும் துண்டுப் பிரசுரங்களையும் மறுபடியும் அள்ளிப் பையினுள் அடைத்தார். யாரோ ரகஸ்ய பட்டனை அமுக்கியது போல் பதினான்கு வயது என்று சொல்லிக்கொண்ட பெண் சோபாவில் இருந்து துள்ளி எழும்பி அமுங்கிய இருக்கை பழைய நிலைக்கு வருமுன்னர் அந்த நெடுந்தூரத்தைக் கடந்து வாசல் கதவருகில் போய் நின்றாள்.
அந்த மனிதரின் உடம்பு கீழே கீழே போனது. நாய் கோபம் கூடக்கூடப் பதிந்துகொண்டே போவது ஞாபகத்துக்கு வந்தது. மூச்சு என் காது கேட்கச் சத்தமாக வெளிவந்தது. அவர் தன்நிலை இழக்காமல் இருப்பதற்குப் பெரும் பிரயத்தனம் செய்தாரென்று நினைக்கிறேன். ‘உங்கள் தாயார் அருமையான பண்பு நிறைந்தவர். அவருடைய சொர்க்கத்தை உறுதி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்.’
நான் ‘கட்டணம் ஏதாவது உண்டா?’ என்று கேட்டேன். அவர் டக்கென்று எழுந்து நின்றார். அவருடைய முகச் சதைகள் தனித்தனியாகத் துள்ளின. உதடுகளைத் திறக்காமல், என்னைப் பார்க்காமல், பற்களினால் விடை சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். என் வீட்டுக் கதவைத் திறந்து சொர்க்க வாசலை என் முகத்தில் அறைவதுபோலச் சத்தத்துடன் சாத்தினார். மூவரும் மறைந்துவிட்டார்கள்.
அம்மா போனபின் முதன்முதலாக உள்கதவுத் தாழ்ப்பாளை அன்றிரவு தூங்கப்போகுமுன் இழுத்துப் போட்டுக்கொண்டேன்.
காலச்சுவடு: ஜனவரி 2012 – ரயில் போய்விடும்
நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்துக் கணக்காளர். அங்கு எந்தக் கணக்குப் பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்துவைப்பார். நான் போனபோது ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம் அவரிடம்தான் இருந்தன. முக்கியமாகப் பெண்சாதிக் கணக்குகள். ஒருவருக்கு நாலு பெண்சாதிகள்வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒருத்தியை விலக்கிவிட்டு இன்னொரு பெண்ணை மணமுடிப்பார்கள். அந்தப் பெண் வேறு ஒருவரை மணந்துகொள்வாள். மறுபடியும் விலக்கு ஆகலாம். ஆகவே அந்தக் கணக்குகள் முக்கியம். உண்மையில் அவர்தான் கிராமத்துப் புள்ளிவிவரத் திணைக்களம். அப்பொழுதே கால்குலேட்டரும் கணினிகளும் வந்துவிட்டன. இருந்தும் கிழவரிடம்தான் அதிகாரம் இருந்தது. அவரிடம் ‘என்ன முணுமுணுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் இருபது வருடங்களாக வாய்ப்பாடுகள் பாடமாக்குவதாகக் கூறினார். அப்பொழுது 67ஆம் வாய்ப்பாட்டில் நின்றார். ‘எதற்காக 67ஆம் வாய்ப்பாடு?’ என்று கேட்டேன். ‘ஒரு காலத்தில் அது உதவலாம் அல்லவா?’ என்றுவிட்டு மறுபடியும் முணுமுணுப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் பழமையை விட முடியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். பழமை உயர்ந்தது என்று வாதிடுபவர்களும் உண்டு. அதுவும் இலக்கியத்தில் நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. உலகின் ஆகப் பழைய இலக்கியம் என்றால் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கில்காமேஷ் அரசன் பற்றிய காவியம் என்று சொல்வார்கள். பன்னிரண்டு களிமண் ஓடுகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட அந்தக் காவியம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இன்றுவரை அதை மிஞ்சிய ஒரு காவியம் படைக்கப்படவில்லை என்கிறார்கள். ஷேக்ஸ்பியர் 400 வருடங்களுக்கு முன்னர் 38 நாடகங்களை எழுதினார். இன்றைக்கும் அந்த இலக்கியத்தைத் தாண்டி வேறு படைப்பு எதுவும் ஆங்கிலத்தில் வரவில்லை என்று சொல்கிறார்கள். 2000 வருடம் பழமையான சங்க இலக்கியத்தின் உயர்வை நாங்கள் அறிவோம். ஏ. கே. ராமானுஜன் சங்க இலக்கியம் பற்றி இப்படிச் சொல்கிறார். ‘இந்தப் பாடல்கள் தமிழரின் மேதமையைச் சொல்லும் சாட்சியம் மட்டுமல்ல. கடந்த 2000 ஆண்டுகளில் தமிழர்கள் அவர்கள் முயற்சியில் இவற்றிலும் மேலான ஒன்றைப் படைத்ததில்லை.’ விஞ்ஞானிகள் ஒருவர் தோளுக்குமேல் இன்னொருவர் ஏறி நிற்பார்கள். விஞ்ஞானம் வளர்ந்தது அப்படித்தான். ஜொஹனெஸ் கெப்ளருடைய புவியீர்ப்புக் கோட்பாட்டை நியூட்டன் விரிவாக்கினார். நியூட்டனுடைய கண்டுபிடிப்பை ஐன்ஸ்டையின் மேம்படுத்தினார். இப்பொழுது ஐன்ஸ்டைனின் தேற்றத்தைச் சீன விஞ்ஞானி ஒருவர் மேலும் கூர்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். இது ஏன் இலக்கியத்தில் நிகழ்வதில்லை. எத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், களிமண் ஓடுகளிலிருந்து பேப்பருக்கு மாறினாலும், இறகுப் பேனாவில் தொடங்கிக் கம்ப்யூட்டருக்கு முன்னேறியிருந்தாலும் பழைய இலக்கியங்களை நவீன இலக்கியங்களால் முந்த முடியவில்லை.
எழுதுவது இன்று முந்தைய காலத்தைப் போலச் சிரமமான காரியம் அல்ல. நிறைய வசதிகள் வந்துவிட்டன. தகவல்கள் இணையத்தில் குவிந்துகிடக்கின்றன. வேகமாக எழுதலாம், அழிக்கலாம், வெட்டலாம், ஒட்டலாம், திருத்தலாம். வெளியிடலாம். அகராதி கூடக் கம்ப்யூட்டரிலேயே கிடைக்கிறது. ஆனாலும் இலக்கியம் இந்த வசதிகளால் உயர்வது கிடையாது. சமீபத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவர் கண் மருத்துவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். நான் படிக்கவென்று கையிலே கொண்டுபோயிருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு ஆர்வத்துடன் அது என்ன புத்தகம் என்று கேட்டார். நான் பதில் பேசாமல் புத்தகத்தைத் தூக்கி முன் அட்டையைக் காட்டினேன். அவர் தன்னால் எழுத்தைப் படிக்க முடியவில்லை, கண் பார்வை மங்கிவருவதாகக் கூறினார். நான் புத்தகத்தின் தலைப்பைச் சொன்னதும் அதன் ஆசிரியரின் பெயரையும் அவர் எழுதிய நூல்களின் தலைப்புகளையும் வரிசையாகக் கூறினார். சிறிது நேரம் அந்த நாவலாசிரியர் பற்றி பேசியபோது அந்தப் பெண் முக்கியமான ஒரு பதிப்பகத்தில் எடிட்டராகப் பணியாற்றியிருந்தது தெரிந்தது. இப்போது அவரால் வாசிக்க முடியாது. அவருக்கு வேலைபோய்விட்டது.
‘எடிட்டர் வேலை மிகவும் சிரமமானது அல்லவா? ஒரு வாரத்தில் எத்தனை பிரதிகளைப் படித்து முடிப்பீர்கள்?’ என்று கேட்டேன். அவர் வாரத்தில் 20 பிரதிகள் படிப்பதாகச் சொன்னார். எனக்குத் தலை சுற்றியது. ‘வாரத்தில் 20 புத்தகங்களா? என்னால் ஒரு புத்தகம்கூடப் படித்து முடிக்க முடியாதே’ என்றேன். அவர் சொன்னார், ‘முதல் 20 பக்கம்தான் படிப்பேன். அதற்குள் ஓரளவுக்குப் புத்தகத்தின் தரத்தைத் தீர்மானிக்க முடியும். நிராகரிப்புக் கடிதத்தை எழுதி அனுப்பிவிடுவோம். சுவாரஸ்யமாக இருந்தால் முழுவதையும் படித்துப் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்வோம்.’
சில நாட்களாக எனக்குள் தோன்றியிருந்த ஒரு கேள்வியைக் கேட்க அவர் பொருத்தமானவராகப் பட்டார். கேட்டேன். ‘சமீபத்தில் Karl Marlantes வியட்நாம் போரைப் பின்னணியாகவைத்து எழுதிய Matterhorn என்னும் நாவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பரிசுகளை வென்றது. நியூயோர்க் டைம்ஸின் அதிவிற்பனைப் புத்தகப் பட்டியலில் இடம்பிடித்தது. ஆசிரியர் இந்த நாவலை 30 வருடங்களாகத் திருத்தித் திருத்தி எழுதினார். பதினைந்து பதிப்பகங்கள் நாவலை நிராகரித்தன. 16ஆம் பதிப்பகம் அந்த நாவலை வெளியிட்டபோது அது இத்தனை வெற்றிபெற்றது. இதன் அர்த்தம் என்ன? 15 எடிட்டர்கள் ஒரு புத்தகத்தின் உண்மையான தரத்தைக் கணிக்கத் தவறிவிட்டார்கள் என்பதுதானே! இது எப்படி நடந்தது?’
அவர் சொன்ன பதில் நான் எதிர்பார்க்காதது. ‘இதற்கெல்லாம் காரணம் கம்ப்யூட்டர்கள்தாம். நிறையப் பேர் எழுதுகிறார்கள். நிறையப் பிரதிகள் வருகின்றன. எடிட்டர்கள் படித்துப் படித்துக் களைத்துப்போகிறார்கள். முதல் இருபது பக்கத்தில் புத்தகம் வாசகரை உள்ளே இழுக்க வேண்டும். நாவலாசிரியர்கள் அதில் தவறிவிடுகிறார்கள். சும்மா எழுதிக்கொண்டேபோகிறார்கள். இலக்கியம் அல்ல, வெறும் எழுத்துதான். இப்படியான சூழலில் சிலவேளைகளில் எடிட்டர்கள் நல்ல புத்தகங்களை அடையாளம் காணத் தவறிவிடுகிறார்கள்.’ இதில் வேடிக்கை என்னவென்றால் புத்தகப் பிரதியைப் படித்து நிராகரித்த எடிட்டர் ஒருவர் நாவலாசிரியரிடம், ‘இப்பொழுது யார் வியட்நாம் போரைப் பற்றிப் படிக்கப்போகிறார்கள். இதே கதையை வைத்துக்கொண்டு போர் நடக்கும் இடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிவிடுங்கள்’ என்று அறிவுரை கூறினாராம்.
சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜேன் ஒஸ்டின் என்ற ஆங்கில எழுத்தாளரின் பிரசுரிக்கப்படாத நாவலின் கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம் மட்டும் அகப்பட்டு அது ஏலத்துக்கு வந்திருந்தது. அது ஏறக்குறைய ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு விலை போனது. நாவலின் அந்தப் பக்கப் புகைப்படத்தைப் பத்திரிகை பிரசுரித்திருந்தது. அந்தக் கையெழுத்துப் பிரதியைப் பார்த்து நான் திகைத்துப்போனேன். ஒருவருக்குமே புரியாத மாதிரிப் பல இடங்களில் வெட்டியும் திருத்தியும் அடித்தும் மீண்டும் எழுதியும் காணப்பட்டது. ஒரு வசனத்தை அடித்துவிட்டு அதற்கு மேல் புது வசனம் இருக்கும். அந்தப் புது வசனத்தில் நான்கு வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கும். ஒரு நாவலை நேர்த்தியாக எழுதி முடிக்கும்போது மூன்று நான்குதடவை கையெழுத்துப் பிரதி திருத்தப்பட்டிருக்கும். சு. ரா. பதினைந்து பக்கக் கதையைத் திரும்பத் திரும்பத் திருத்துவதால் நூறு பக்கங்கள் எழுதிவிடுவார் என்று அவர் மனைவி கமலா நெஞ்சில் ஒளிரும் சுடர் நூலில் கூறியிருக்கிறார். பேராசிரியர் கைலாசபதி திருத்தி எழுத எழுதக் கட்டுரை வளர்ந்துகொண்டே போகும். மூன்று நான்குதடவை திருத்தி எழுதியதாக அவர் மனைவி கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் கம்ப்யூட்டர் வந்தபோது தீர்ந்துபோயின. தமிழில் மாத்திரமல்ல. உலகில் எந்த மொழியில் எழுதினாலும் கம்ப்யூட்டர் அதை இலகுவாக்கியது. எத்தனை பெரிய கற்பனைவாதியாக ஒருவர் இருந்தாலும் சிந்தனைவாதியாக இருந்தாலும் உடலுழைப்பு இல்லாமல் ஒருவரால் நூல் எழுத முடியாது. எழுதுவதையும் திருத்துவதையும் மேம்படுத்துவதையும் கம்ப்யூட்டர் இலகுவாக்கிவிட்டது. முன்பெல்லாம் ஓர் எழுத்தாளர் நான்கு வருடங்களுக்கு ஒரு புத்தகம் எழுதினார். இப்பொழுது ஒரு வருடத்தில் நான்கு புத்தகங்கள் எழுதக்கூடியதாக இருக்கிறது.
தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதற்கு மாதக் கணக்கு ஆகும். உரிய புத்தகங்களை வாங்க வேண்டும் அல்லது நூல்நிலையங்களில் அலைந்து குறிப்புகள் எடுக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியல்ல. அநேகமான புத்தகங்கள் இணையத்திலே கிடைக்கின்றன. மதுரைத் திட்டம், நூலகத் திட்டம் போன்றவற்றின் உதவியால் நிறையப் புத்தகங்களை இலவசமாகப் பெற முடிகிறது. தமிழ் விக்கிபீடியா, தமிழ் கூகிள் இன்னும் எண்ணற்ற இணையதளங்கள் ஆராய்ச்சியை இலகுவாக்குகின்றன. இந்த வசதிகளையெல்லாம் 20 வருடங்களுக்கு முன்னர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது.
தகவல்களைப் பெறுவது மட்டும் இலக்கியத்தை வளர்த்துவிடாது. சொந்தமாகச் சிந்திக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எங்கள் ஊரில் ஒரு புலவர் இருந்தார். நான் சிறுவயதாயிருந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். சால்வையின் ஒரு நுனி தோளில் தொங்க அடுத்த நுனி புழுதியில் இழுபட நடந்து போவார். கால்கள் தவளையின் கால்கள்போல மடிந்திருக்கும். பிங்கல நிகண்டு முழுவதையும் அவர் கரைத்துக் குடித்திருக்கிறார். தமிழ் அகராதிகளுக்கு முன்னோடி நிகண்டுதான். ஒரு சொல்-பல்பொருள்கள், ஒரு பொருள்- பல பெயர்கள் என மனனம் செய்தவர். ஆனால் அவர் படைத்த ஆகச் சிறந்த இலக்கியம் திருமண வாழ்த்துப் பாடல்தான். அவ்வப்போது கல்வெட்டுப் பாடல்களும் இயற்றியிருக்கிறார். அத்தனை அறிவுப் பெட்டகத்தை அவர் தன்னுடன் வாழ்நாள் முழுக்கக் கொண்டு திரிந்தாலும் அவரால் தமிழுக்குப் பெறுமதியான ஒன்றைக்கூடப் படைக்க முடியவில்லை.
எந்த மொழியாய் இருந்தாலும் இலக்கிய வளர்ச்சிக்கு விவாதங்கள் அவசியம். எதிரெதிர்த் திசைகளில் வாதங்களைத் தொடங்கி ஒரு மையத்தை நோக்கி நகர்த்துவதுதான் இலக்கியத்தை முன்னெடுப்பதற்கான வழி. மற்றைய மொழிகளைப் போலவே தமிழிலும் இலக்கிய விவாதங்களுக்குப் பெரும் பாரம்பரியம் உண்டு. தமிழ் இலக்கியம் படித்தவர்கள் தருமிக்கும் நக்கீரருக்கும் இடையில் நடந்த விவாதம் பற்றி அறிவார்கள். மகாபாரதத்தைத் தமிழில் பாடிய வில்லிபுத்தூரர் தன்னுடன் விவாதித்துத் தோற்ற புலவர்களின் காதுகளைக் குறட்டால் பிடுங்கிவிடுவார். தமிழில் மாத்திரமல்ல மற்றைய மொழிகளிலும் இதே கதைதான். ரஷ்ய இலக்கியத்தில் டோஸ்ரோவ்ஸ்கிக்கும் துர்க்கனேவுக்கும் இடையில் கருத்து மோதல்களுக்குக் குறைவில்லை. ஆங்கில அகராதி தயாரித்த மேதை சாமுவெல் ஜோன்ஸன் விவாதங்களில் பெரும் நேரத்தைச் செலவழித்தார். தமிழில் நாவலருக்கும் வள்ளலாருக்கும் இடையில் நடந்த அருட்பா-மருட்பா விவாதம் நீண்டநாள் தொடர்ந்தது. நீதிமன்றத்தில் வழக்குப் போடும்படியும் ஆனது. புதுமைப்பித்தன்-கல்கி விவாதமும் பேர்போனதுதான். யார் அதிகமாக இலக்கியத் திருட்டு செய்தார்கள் என்பதுதான் விவாதப் பொருள். புதுமைப்பித்தன் களவாணி இலக்கியம் என்று குறிப்பிட்டார். ஆனால் ஆரம்பத்தில் கண்ணியமாகவும் இலக்கியத் தரத்தோடும் ஆரம்பிக்கும் விவா தங்கள் இறுதிக் கட்டங்களில் தனிமனித வசைகளில் முடிவதுதான் வழக்கம்.
கம்ப்யூட்டர்கள் வந்த பின்னர் இணையதளங்களிலும் முகநூல்களிலும் விவாதங்கள் சூடுபிடித்தன. முந்தைய காலத்தில் ஒருவர் பத்திரிகையில் ஒன்றை எழுத அதற்கு மறுப்பு இன்னொருத்தர் எழுத நாலு மாதம் ஓடிவிடும். நாலைந்து கட்டுரைகள் எழுதி இறுதி நிலை வரும்போது இரண்டு மூன்று வருடங்கள் முடிந்து, ஆரம்ப வேகமும் மட்டுப்பட்டுவிடும். இப்போதெல்லாம் அப்படியல்ல. நூற்றுக்கணக்கான வாசகர்கள் நூற்றுக்கணக்கான நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவாதங்களில் உடனுக்குடன் பங்குபற்றிக் கருத்துகள் பரிமாறி மோதிக்கொள்கிறார்கள். விவாதங்களும் பதில் விவாதங்களும் சுவாரஸ்யமாக இருக்கும். இலக்கியம் வளர்வதென்பது இப்படித்தான். நிறையப் பேர் உலகின் பல பாகங்களில் இருந்தும் விவாதங்களை உடனுக்குடன் தொடர்ந்து படிப்பர். தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்வார்கள்.
ஆனால் இதில் உள்ள துரதிர்ஷ்ட அம்சம் என்னவென்றால் வழக்கம்போல இந்த விவாதங்கள் தனிமனித வசைகளுடன்தான் முடிவுக்கு வரும். பத்திரிகைகளில் வெளியாகும் விவாதங்களில் கொஞ்சம் தணிக்கை முறை எதிர்பார்க்கலாம். இணையத்திலும் முகநூலிலும் இப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. எதை வேண்டுமானாலும் எழுதலாம். உடனுக்குடன் பதிலடிகள் என்பதால் வாசகர்கள் ஆர்வமுடன் விவாதத்தின் போக்கைக் கவனிப்பார்கள். வசை கூடக்கூட வாசக எண்ணிக்கையும் கூடும். புகழ்பெற்ற எழுத்தாளர் Tom Wolfe க்கும் இன்னொரு பிரபல எழுத்தாளர் Norman Mailer க்கும் இடையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த விவாதம் இப்படித்தான் வசையில் முடிந்தது. Tom Wolfe இறுதியில் சொன்னார். ‘எப்பொழுதும் முதலில் போகும் நாயைப் பின்னால் வரும் நாய்கள் கடிப்பது வழக்கம்தான்.’ அதற்கு Norman Mailer இப்படிப் பதில் சொன்னார். ‘நாயின் பின்பகுதியில் ரத்தம் ஒழுகினால் அது முதல்தரமான நாய் என்று அர்த்தமல்ல.’
உ. வே. சாமிநாதையர் தன்னுடைய என் கதை நூலில் ஒரு சம்பவம் சொல்கிறார். பல வருடங்களாக, பல ஏடுகளைச் சோதித்துச் சிந்தாமணி நூலை அச்சிடுவதற்குத் தயாரித்துவிட்டார். ஆனால் எப்படிப் பணமில்லாமல் பதிப்பு வேலையைச் செய்து முடிப்பது என்பது தெரியாமல் குழம்பிப்போய் நின்றார். பின்னர் அவர் நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி தமிழன்புள்ள கனவான்கள் 70 பேரை அணுகி அவர்களிடம் கையொப்பமும் முன்பணமும் பெற்று நூலை வெளியிட்டார். ஒரு காலத்தில் நூல் வெளியிடுவதற்கு இதுதான் ஒரே வழிமுறையாக இருந்தது. இது நடந்தது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்; கம்ப்யூட்டர்கள் பிரபலமாக வருவதற்கு 100 வருடங்களுக்கு முன்னர். இப்பொழுது கம்ப்யூட்டர்கள் பதிப்புத் துறைக்கு வந்த பின்னரும் இதே முறை பின்பற்றப்படுவது தமிழில் மட்டுமாகத்தான் இருக்கும். ‘முன்வெளியீட்டுத் திட்டம்’ என்று இதற்குப் பெயர். இணையத்தின் மூலம் அறிவிக்கப்படுகிறது. உலகளாவியரீதியில் வாசகர்கள் முன்கூட்டியே பதிவுசெய்து சலுகை விலையில் பணம் செலுத்துகிறார்கள். இந்த ஏற்பாட்டால் வாசகரும் பதிப்பாளரும் எழுத்தாளரும் ஒருசேர லாபம்பெற முடிகிறது.
கம்ப்யூட்டர்களின் வருகையால் தமிழ்ப் பதிப்புத் துறை இருபது வருடங்களில் பெரிய மாற்றம் பெற்றுவிட்டது. நான் ஒருமுறை இந்தியாவுக்குப் போனபோது நண்பர் ஒருவர் தான் வெளியிட்ட புத்தகம் எப்படி விலைபோகிறது என்பதைப் பார்த்துவரச் சொன்னார். பதிப்பாளர் மகிழ்ச்சியுடன் என்னை இருட்டான கீழ் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே நண்பரின் புத்தகங்கள் வரிசையாக, கட்டுக் கட்டாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. நண்பர் இரண்டாம் பதிப்பு பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். ஒரு வருடமாகியும் புத்தகங்கள் விற்பனை நிலையங்களுக்கோ நூலகங்களுக்கோ அனுப்பப்படவில்லை. வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குத் தபால் செலவு கட்டுபடியாகாது என்றார். யாராவது வாசகர் தேடிவந்து வாங்கிப்போவார் என்ற நிலையில் அவை பாதுகாக்கப்பட்டன. கம்ப்யூட்டர் பதிப்பு முறை வந்த பின்னர் இந்தச் சங்கடம் நீங்கியது. புத்தக வடிவம் குறுந்தகட்டில் சேமிக்கப்பட்டிருக்கும். அவ்வப்போது வேண்டிய புத்தகங்களை அச்சடித்து பைண்டிங்செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். தேவைக்கு அதிகமான புத்தகங்கள் அச்சடிப்பது தவிர்க்கப்படுகிறது. பேப்பர் செலவில்லை. மைச் செலவில்லை. புத்தகம் அடுக்கிவைக்கும் இடம் மிச்சப்படுகிறது. முக்கியமாகச் சுற்றுச்சூழல் கேடு இல்லை.
மாற்றங்களில் முக்கியமான இன்னொன்று எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையேயான உறவு. எழுத்தாளர் கையெழுத்துப் பிரதியைப் பதிப்பாளருக்கு அனுப்புவார். அவர் சில மாதங்கள் காத்திருக்கவைத்துப் பின்னர் பிரதியை நிராகரிப்பார். எழுத்தாளர் இன்னொரு பதிப்பாளருக்கு அதை அனுப்பிவைப்பார். அவரும் நிராகரிப்பார். இப்படி ஒரு புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு 4, 5 வருடங்கள்கூட ஆகலாம். இதனால் வாசகருக்கு நட்டம்; எழுத்தாளருக்கு இன்னும் கூடிய நட்டம். 90களில் ஒரு புதுமுறை வந்தது. எழுத்தாளருக்கு அனுகூலமான முறை. இந்த ஏற்பாட்டில் எழுத்தாளர் ஒரு புத்தகத்தை முழுவதுமாக எழுதி முடிக்கக்கூடத் தேவையில்லை. முதல் இரண்டு அத்தியாயங்களை எழுத்தாளர் தனது கம்ப்யூட்டரில் இருந்து நேரடியாகத் தெரிவுசெய்யப்பட்ட பதிப்பாளர்கள் பத்துப் பேருக்கு அனுப்பிவைப்பார். அந்தப் பதிப்பாளர்கள் பத்துப் பேரும் ஏல முறையில் ஒருவருடன் ஒருவர் புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமைக்குப் போட்டியிடுவார்கள். ஆகக் கூடிய விலை கொடுக்க முன்வரும் பதிப்பகம் எழுத்தாளருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும். அதன் பிறகுதான் எழுத்தாளர் நூலை எழுதி முடிப்பார். இங்கிலாந்தில் சில வருடங்களுக்கு முன்னர் Zadie Smith என்ற பெண்மணி எழுதிய முதல் நாவல் இப்படித்தான் அச்சேறிப் பெரும் வெற்றியீட்டியது. அந்தப் பெண்மணி புத்தகத்தை ஏலத்துக்கு விட்டபோது அவருடைய வயது 22. முன்பணமாக அவருக்குக் கிடைத்த தொகை 2,50,000 பவுண்டுகள். இம்முறை சமீப காலங்களில் தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் வெற்றி கிட்டினால் அதனால் எல்லோரும் பயன்பெறுவார்கள்.
வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு விடயம் கிண்டில் (Kindle) என அறியப்பட்ட புதிய சாதனம். இது புத்தக அளவுதான் இருக்கும். எடையும் கிட்டத்தட்ட அப்படித்தான். நீங்கள் உங்களுக்கு என்ன புத்தகம் தேவை என்று தீர்மானித்து முடித்த ஒரு நிமிட நேரத்துக்குள் அந்தப் புத்தகத்தை உங்களுடைய கிண்டிலில் பதிவிறக்கம்செய்து, கடன் அட்டை மூலம் அதற்கான கட்டணத்தையும் கட்டிவிடலாம். ஒரு புத்தகம் படிப்பதுபோலவே மடியில் வைத்துப் படிக்கலாம். இருட்டில் படிப்பதற்கு வசதியாக விளக்கும் இருக்கிறது. எழுத்துருவைப் பெரிதாக்கலாம்; சிறிதாக்கலாம். 1,000 புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துவைத்து உங்களுடனேயே எடுத்துச் செல்லலாம். புத்தகங்களை அடுக்குவதற்கு வீட்டிலே புத்தகத் தட்டு தேவைப்படாது. ஒரு சொல்லின் அர்த்தம் புரியவில்லை என்றால் அதைத் தேடுவதற்கு அகராதியும் உண்டு. அச்சடித்த புத்தகத்திலிலும் பார்க்க மலிவு. பயணிக்கும்போது 1,000 புத்தகங்களை உங்களுடன் காவிச் செல்வது என்பது எத்தனை பெரிய வசதி!
சமீபத்தில் நான் பொஸ்டனில் இருந்து ரொறொன்ரோவுக்குத் திரும்பி வரும் வழியில் நண்பர் ஒருவர் தொலைபேசியில் ஒரு புத்தகத்தைப் பற்றி மெச்சிப் பேசினார். உடனேயே அதைக் கிண்டிலில் இறக்கிக்கொண்டேன். விலையும் மலிவு. ஜோசப் கொன்றாட் என்ற எழுத்தாளர் எழுதிய Typhoon நாவல். ரொறொன்ரோ வந்து இறங்கியபோது புத்தகத்தில் பாதி முடித்துவிட்டேன். இந்த வசதி இன்னும் தமிழில் வரவில்லை. ஆனால் விரைவில் அது வந்து சேர்ந்துவிடுமென்று நம்புகிறேன். பதிப்பாளர், வாசகர், எழுத்தாளர் மட்டும்தான் மின்புத்தகங்கள் மூலம் பயனடைவார்கள் என்றல்ல. அச்சிடும் தாள் மிச்சப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் நன்மை.
கணினியும் இணையதளங்களும் முகநூல்களும் துரிதர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பதாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். எழுதுவதும் பிரசுரிப்பதும் இலகுவாக்கப்பட்டுவிட்டதால் மோசமான புத்தகங்கள் நிறைய வெளிவருகின்றன. அதனால் தரமான புத்தகங்களை வாசகர்கள் அடையாளம் காண முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு. முன்பெல்லாம் பத்துப் புத்தகம் வெளிவந்தால் அதில் இரண்டு நல்லது இருக்கும். இப்பொழுது 100 புத்தகங்கள் வெளிவருகின்றன. அதிலே 20 நல்ல புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 18 புத்தகங்கள் லாபம். வலியது வாழும். நல்ல புத்தகங்கள் எப்படியும் அடையாளம் காணப்பட்டு வாசகர்களைச் சென்றடையும். அதில் சந்தேகமே இல்லை.
கணினியின் வரவால் கிடைத்த முக்கியமான அனுகூலம் பழைய நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் பேணிப் பாதுகாத்து அவற்றை இணையத்தில் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது. விலை மதிக்க முடியாத பழைய ஏட்டுச் சுவடிகளை முன்பெல்லாம் கையால் பிரதியெடுத்துப் பின்னர் அச்சேற்றுவார்கள். இப்பொழுது அப்படியல்ல. நேரடியாக அவற்றை ஒளிப்படங்களாக மாற்றி இணையத்தில் இட்டுவிடுகிறார்கள். உலகம் முழுவதும் அவை அகப்படும். வேண்டியவர்கள் தனியாகவோ கூட்டாகவோ ஆராய முடியும். அவை தொலைந்து விடுமோ உதிர்ந்துவிடுமோ எரிந்துவிடுமோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்ன விசயம் அவருக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இணையதளத்தில் கட்டுரைகள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று முதலில் எழுதுகிறார்கள். பின்னர் அவை புத்தகங்களாக வெளி வருகின்றன என்றேன். அவரால் நம்ப முடியவில்லை. அவருக்குத் தெரிந்து எந்த மொழியிலும் அப்படி நடப்பது தெரியாது என்றார். வசதி உள்ளவர்களிடம் கம்ப்யூட்டர் இருக்கிறது. அவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் காசு கொடுத்துப் புத்தகமாக வாங்கிப் படிக்கிறார்கள். இது சரியாகப்படவில்லை என்றார். என்னிடம் அதற்குப் பதில் இல்லை. ஆனால் இது தற்காலிகமான பிரச்சினையாகவே பட்டது. நாளடைவில் எல்லோருக்கும் இணைய வசதி கிடைக்கும். அச்சில் புத்தகம் வாங்கும் பழக்கம் குறைந்துகொண்டுவரும். மின் புத்தகங்களைக் காசு கொடுத்துப் பதிவிறக்கம் செய்வார்கள். வாசகர்கள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் எல்லோருமே பயன்பெறும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
ஒரு காலத்தில் ஓலையில் எழுத்தாணியால் எழுதினார்கள். பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டபோது பேப்பரில் பேனாவால் எழுத நேர்ந்தது. அச்சு எந்திரம் வந்தபோது தமிழ் அச்சுக்கு மாறியது. பின்னர் வந்த தட்டச்சில் தமிழ் ஏறியது. இன்று கம்ப்யூட்டரில் முன்னேறுகிறது. தமிழில் பிரதியைக் குரலாக்கும் வேலையும் குரலைப் பிரதியாக்கும் வேலையும் நடந்துகொண்டிருக்கின்றன. கணினிமூலம் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் தொடர்கின்றன. உலகத் தொழில்நுட்பம் பாய்ந்து செல்லும் வேகத்தில் தமிழும் விரைய வேண்டும். புறநானூற்றுப் பாடலில் ஒரு வரி ‘எல்லார் புறனும் தான் கண்டு’ என வரும். நவீனத் தொழில்நுட்பத்தை உடனுக்குடன் பயன்படுத்தத் தவறினால் தமிழ் எல்லா மொழிகளின் புறனையும் காண நேரிடும். தமிழ், ரயிலைத் தவறவிட்ட பயணிபோலத் தனித்து நிற்கும்; ரயில் போய்க்கொண்டேயிருக்கும்.
கம்ப்யூட்டர் அறிவோ தேடுபொறியோ இணைய தளமோ முகநூலோ துரிதரோ தமிழ் இலக்கியத் தரத்தை அதிகரிக்கப்போவதில்லை. அவை செய்வது தமிழை உலகெங்கும் பரப்புவது, இலக்கியங்களைப் பாதுகாப்பது, தகவல்களை உடனுக்குடன் கிடைக்கச் செய்வது. திருத்தமாக எழுதும் நூலை விரைவாக வாசகர்களிடம் குறைந்த செலவில் கொண்டுசேர்ப்பது. இலக்கியம் படைப்பது நிகண்டைப் பாடமாக்குவது போலவோ 67ஆம் வாய்ப்பாட்டை மனனம் செய்வது போலவோ அவ்வளவு எளிதானதல்ல. எத்தனை உயர்தரக் கம்ப்யூட்டராக இருந்தாலும் அது உங்களுக்காகச் சிந்தித்து இலக்கியம் படைக்க முடியாது. நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.
காலச்சுவடு: ஜனவரி 2015: பதினொரு பேய்கள்
ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்?
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் எட்டுக் குழுக்கள் இயங்கின. அவர்களுடைய குழுவை ஒருவருமே கணக்கில் எடுப்பதில்லை. யாழ்ப்பாண நூல் நிலையத்தை அரச படையினர் எரித்த அடுத்த மாதம் சுந்தரம் குழுவினர் ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர். அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வெலிக்கட சிறையில் 18 போராளிகளை சிங்கள அதிகாரம் கொன்றொழித்தது. அவர்கள் இயக்கம் என்ன செய்தது? வேறொரு இயக்கம் திருநெல்வேலியில் தாக்குதல் நடத்தி 13 ராணுவத்தினரைக் கொன்றது. ஆயுதமே இல்லாமல் எப்படி ராணுவத்தோடு போராடுவது? அவர்களைப் பார்த்துப் பின்னாலும் சிரித்தார்கள், முன்னாலும் சிரித்தார்கள்.
‘நேற்று நான் உரும்பிராய் காவல் அரணைக் கடந்தபோது இயக்க காவல்காரர்கள் என்னிடம் அடையாள அட்டையை கேட்டார்கள். அவர்களுக்கு நான் இயக்கத்தில் வேலை செய்வது தெரியும். காட்டினேன். கால்சட்டை பொக்கற்றுகளைக் காட்டச் சொன்னார்கள். நான் இழுத்து வெளியே விட்டேன். அவை மாட்டு நாக்குகள்போலத் தொங்கின. வாகன இலக்கத்தைக் கேட்டார்கள். சைக்கிளுக்கு எங்கே இலக்கம் இருக்கு? எனக்கு வெட்கமாய் போய்விட்டது. அவர்களிடம் துப் பாக்கி இருந்தது தோழர். நாங்களும் ஈழ விடுதலைக்காகத் தானே போராடுகிறோம். எங்களை மதிக்கிறார்கள் இல்லை.’
இதைக் கேட்டுக்கொண்டு நின்ற மற்றொரு தோழர் சொன்னார். ‘இதுவாவது பரவாயில்லை. எனக்கு நடந்ததைக் கேளுங்கள். என்னுடைய இயக்கத்தின் பெயரைக் கேட்டார்கள். நான் சொன்னேன். ஐந்து எழுத்துகளா என்று கேட்டார்கள். ஓம் என்றேன். ஆங்கிலத்தில் எத்தனை எழுத்துக்கள் என்று கேட்டார்கள். குத்துமதிப்பாக 26 என்று சொன்னேன். மிச்சம் 21 எழுத்துகள் சும்மாதானே இருக்கின்றன. அவற்றையும் சேர்ப்பதுதானே என்று ஒருவன் சொன்னான். மற்றவர்கள் சிரித்தார்கள். எல்லா இயக்கங்களுக்கும் சிரிப்பு காட்டுவதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்.’
தோழர் சிவாவுக்கு இது புதிதல்ல. அவரை ஒருமுறை சைக்கிளை உருட்டிக்கொண்டு ஒரு மைல்தூரம் நடக்கவைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு அவர் பொறுப்பாளர் என்பது அந்த இயக்கக்காரர்களுக்குத் தெரியும். அவர் காதுபட ஒருவன் மற்றவனுக்குச் சொன்னான். ‘அண்ணை, மூக்கிலே குறுக்காக எலும்பு சொருகிக்கொண்டு, கையிலே கம்பைச் சுழட்டிக் காட்டு நடனம் ஆடக்கூடத் தகுதியில்லாத ஆட்கள் எல்லாம் இயக்கம் நடத்தினம். கொஞ்சம் நடந்து போனால் உடற்பயிற்சி கிடைக்கும்.’ அந்த அவமானத்தை மறக்க முடியாது. அவர்கள் எல்லாம் வெட்கித் தலை குனிகிறமாதிரி பெரிசாக ஏதாவது செய்யவேண்டும்.
ஒரு வருடம் முன்னர் சொப்பனா, இயக்கத்தில் சேர வந்தபோது தோழர் சிவா மறுத்துவிட்டார். ‘நான் எப்படி முடிவு செய்யமுடியும். கமிட்டிதான் முடிவு செய்யும்’ என்று சொல்லிக் கடத்தினார். பெண் விடுவதாயில்லை. ‘என்ன கமிட்டி? நீங்கள்தானே கமிட்டி’ என்று பிடிவாதம் பிடித்தாள். தன் வளைவுகளை மேலும் விஸ்தரித்துக்கொண்டு நின்றாள். தோழர் சிவா பார்த்தார். ‘நல்ல அலங்காரம்தான். நெற்றியிலே பொட்டு. காலிலே கொலுசு. கூந்தலிலே மல்லிகைச் சரம். போர்க் கோலத்தில்தான் வந்திருக்கிறீர்.’ அவள் முகம் சிறுத்துப் போனது; ஆனாலும் பிரகாசம் குறையவில்லை. ‘உங்கள் இடுப்பில் ஒரு துப்பாக்கிகூட இல்லை. எப்போது போர் துடங்கி நீங்கள் புறப்படுவீர்களோ அப்போது நானும் போர்க்கோலத்தில் வருவேன்.’ தோழர் சிவாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் நினைவு பின்னர் அவருக்கு அடிக்கடி வந்து போனது.
இன்னொரு பிரச்சினை இருந்தது. இயக்கத் தோழர்களுக்குப் புத்திஜீவிகளைப் பிடிக்காது. மூன்று வருடங்களுக்கு முன்னர் அரவிந்தன் இயக்கத்தில் சேர வந்தபோது எல்லோரும் அவனைத் துரத்திக் கேலி செய்தனர். காரணம் அவன் நடக்கும்போது இறகு பறப்பது போலிருக்கும். அப்படி மெலிந்து நீண்ட குச்சிபோலத் தேகம். ‘ஏகே 47ஐ அவன் தோளில் தூக்கிவைக்க இன்னொருவர் தேவைப்படும்’ என்று பகிடி செய்தார்கள். ஏ லெவல் சோதனையில் நாலு பாடங்களிலும் ஏ எடுத்தவன், படிப்பு வேண்டாமென்று இயக்கத்தில் சேர வந்திருந்தான். உடல் வலுவானவர்கள் போர் செய்ய ஒன்றையுமே கண்டு பிடித்ததில்லை. அவர்கள் உடலை நம்பியிருந்தார்கள். பலசாலியை வெற்றிகொள்ள ஆயுதம் கண்டு பிடித்தவன் புத்திசாலி. கல்லாயுதத்தை முறியடிக்க கத்தியைக் கண்டுபிடித்தவன் உடல் வலுவில்லாதவன்தான். கத்தியை வெற்றிகொள்ள துப்பாக்கியைக் கண்டுபிடித்தவனும் புத்திஜீவிதான். ‘அவனைச் சேருங்கள், எங்களுக்குப் பலமாயிருப்பான்’ என்று தோழர் சிவா பரிந்துரை செய்தார்.
ஒன்றுமே செய்யாமல் இருந்தால் அவர்கள் இயக்கத்தைப் பற்றி எப்படி வெளியே தெரியவரும்? வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று ஒருவர் சொன்னார். தோழர் சிவாவுக்கு அது விருப்பமில்லை. அப்படி முடிவெடுத்தாலும் எப்படி? அவர்களிடம் ஒரு கறள் பிடித்த துப்பாக்கிகூட இல்லையே. ஒரு துப்பாக்கி இடுப்பில் இருந்தால் ரகஸ்யக் குரலில் பேசினாலும் அது இடிமுழக்கம்போலக் கேட்கும். ஏ லெவல் அரவிந்தன் அருமையான யுத்தி ஒன்று சொன்னான். ‘யாழ்ப்பாணம் கோர்ட்டிலே லைசென்ஸ் இல்லாததால் பொதுமக்களிடம் பறிமுதல் செய்த 8 வேட்டைத் துப்பாக்கிகள் உள்ளன. அதைப் பூட்டி வைத்திருக்கும் இடமும் எனக்குத் தெரியும். ஓர் இரவிலே அதைக் கொள்ளையடித்துவிடலாமே.’
அந்த இடத்துக்குக் காவலே இல்லை. மறுநாள் இரவு பூட்டை உடைத்து உள்ளேபோய் 8 துவக்குகளையும் கைப்பற்றி விட்டார்கள். ‘தோழர், தோட்டாக்கள் இல்லை. கொஞ்சம் கறள் பிடித்துப்போய் இருக்கு. என்ன செய்யலாம்?’ ‘அது பரவாயில்லை. குழாயில் பாதியை வெட்டுங்கள். காவுவதற்கு வசதியாயிருக்கும். தோட்டா இல்லை என்பது எங்களுக்குத்தான் தெரியும். துப்பாக்கிக்கும் தெரியும். குறிபார்க்கப்படும் ஆளுக்குத் தெரியாது அல்லவா?’ என்றார் தோழர் சிவா. 11 பேருக்கு 8 துப்பாக்கிகள். இதுதான் ஆரம்பம். உடனேயே செயற்குழுவைக் கூட்டினார்கள். இந்தியாவிலிருக்கும் மேலிடத்துக்கு அறிவிக்காமல் காரியம் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
‘துப்பாக்கிதான் கிடைத்துவிட்டதே, வங்கியைக் கொள்ளையடிப்போம்.’ இவர் வங்கியைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாய் இருந்தார். இன்னொருவர் ‘சிறையை உடைப்போம். ஆறுமாதம் முன்பு மட்டக்கிளப்பு சிறையை உடைத்து போராளிகள் வெளியேறினார்கள். அவர்கள் துணிச்சலில் பாதியாவது எங்களுக்கு வேணும்’ என்றார். ‘ராணுவ வாகனத்துடன் மோதுவோம்’ என்றார் இன்னொரு தோழர். அவர் தோட்டா இல்லையென்பதை மறந்துவிட்டார். ‘ராணுவத்துக்கு உதவும் தேசவிரோதிகளைப் பிடித்து வந்து அடைத்து வைப்போம்’ என்றார் ஒருவர். அப்பொழுதுதான் தோழர் சிவாவுக்குப் புதிதாக மூளையிலே பொறி உண்டாகியது. ‘நாங்கள் செய்வது உலகச் செய்தியாக வேண்டும். இலங்கை, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் எங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தோட்டா இல்லாத துப்பாக்கியால் செய்யக்கூடிய ஒரே காரியம் ஆட்களைக் கடத்துவதுதான். அமெரிக்காவிலிருந்து சுற்றுலா வரும் ஆளைக் கடத்தினால் உலகப் பிரபல்யம் உடனேயே கிடைத்துவிடும். என்ன கோரிக்கை என்பதைப் பிறகு தீர்மானிக்கலாம்’ என்றார். எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. ஜனாதிபதி ரேகன் டெலிபோனில் அவர்களை அழைத்துக் கெஞ்சுவது கண் முன்னே வந்தது. பாதிவெட்டிய துப்பாக்கிகளைத் தூக்கித் தலைக்குமேலே பிடித்துக்கொண்டு எல்லோரும் நடனமாடினார்கள்.
இத்தனை சுலபமாகத் திட்டத்தைச் செயலாக்கலாம் என ஒருவருமே நினைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அலென் தம்பதிகள் வசித்தனர். ஒரு மாதம் முன்புதான் திருமணம் செய்து குடிநீர் ஆராய்ச்சி செய்வதற்காக வந்திருந்த ஸ்டான்லி அலெனுடன் புது மனைவி மேரியும் இருந்தார். இருவரும் அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தின் ரூஃலின் கம்பனிக்காக வேலைசெய்தனர். ‘சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருக்கத் தேவையில்லை, இவர்களையே கடத்தலாம்’ என்று ஏ லெவல் அரவிந்தன் சொன்னான். அப்படியே முடிவும் எடுக்கப்பட்டது.
வியாழக்கிழமை, 10 மே 1984 அன்று மாலை ஆறுமணிக்கு இருவர் தம்பதிகள் வசித்த குருநகர், பீச் ரோட் 19ஆம் வீட்டுக்கதவைத் தட்டினார்கள். நூலகத்துக்கு நன்கொடை பெற வந்ததாகச் சொன்னதும் அலென் அடுத்தநாள் காலை வந்து சந்திக்கச் சொன்னார். மறுபடியும் இரவு 10 மணிக்குப்போய் கதவைத் தட்டினார்கள். அவர்கள் திறக்கவில்லை. தம்பதிகள் ஜேம்ஸ்பொண்ட் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் முன்கதவைத் தட்டிக்கொண்டிருக்க இருவர் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்கள். துப்பாக்கிகளைக் கண்டதும் தம்பதிகள் வெலவெலத்து விட்டார்கள். அலென் கட்டை கால்சட்டையும் ஒரு பனியனும் அணிந்திருந்தார். மனைவி மெல்லிய வெள்ளை உடையில் காணப்பட்டார். இருவருடைய கண்களையும் கட்டி அவருடைய வாகனத்திலேயே அவர்களை ஏற்றிக் கடத்தினார்கள்.
மாறனுக்கு காரோட்டத் தெரியும் ஆனால் லைசென்ஸ் கிடையாது. மைக்கேல் கொழும்புக்காரன். அவனிடம் லைசென்ஸ் இருந்தது, ஆனால் யாழ்ப்பாண வீதிகள் பழக்கமில்லை. மைக்கேல் ஓட்ட மாறன் பக்கத்தில் இருந்து வழிசொல்லிக்கொண்டு வந்தான். போராளிகள் காரிலே முகமூடிகளைக் கழற்றினார்கள். மைக்கேல் சொன்னான் ‘நாங்கள் முகமூடி அணிந்தது வீண். இவர்கள் எங்களை அடையாளம் காணவே முடியாது. எல்லா முகங்களும் இவர்களுக்கு ஒன்றுதான்’ என்றான். மண்டை தீவு, மணல்வீதி 18ஆம் நம்பர் வீடு ஒரு தோழருடையது. அங்கே தம்பதிகளை அடைத்துவைத்தனர். இரண்டு காவலாளிகள் துவக்குகளுடன் வீட்டிலேயே தங்கினர். மற்ற இருவரும் வாகனத்தை ஓட்டிச்சென்று சேந்தன்குளம் கடற்கரையில் நிறுத்திவிட்டு மெதுவாக வீடு போய்ச் சேர்ந்தனர். மாறன் 200 றாத்தல் எடை இருப்பான். காலையும் மாலையும் உடற்பயிற்சி செய்து உடம்பை பயில்வான்போல முறுக்கி வளர்த்து வைத்திருப்பான். முதலைக் கண்ணீர் தெரியும். இவனுக்கு முதலைச் சிரிப்பு. சும்மா இருக்கும்போதே சிரிப்பது போன்ற முகம். கழுத்துக்கு மேலே அவன் உடம்பு வேலை செய்வதில்லை. ஆனால் அன்று அவன் கடற்கரையில் வாகனத்தை நிறுத்தியது அவன் வாழ்க்கையில் அபூர்வமாகப் புத்தியை உபயோகித்து செய்த முதல் காரியமாகும்.
அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஒரு பையன் யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் சென்று ஒரு கடிதத் தைக் கொடுத்துவிட்டு ஓடினான். அவர் கடிதத்தைத் திறந்து பார்த்ததும் நடுநடுங்கிவிட்டார். அது இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கு எழுதப்பட்டிருந்தது. சொற்குற்றம் பொருட்குற்றத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் சொல்லப்பட்ட விசயம் மட்டும் குற்றமற்றதாக இருந்தது. அதன் சுருக்கம் இதுதான்.
1. அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்த ஸ்டான்லி அலென் தம்பதியினரைக் கடத்தியிருக்கிறோம். அவர் களை விடுதலை செய்வதற்கான நிபந்தனைகள்.
2. மட்டக்கிளப்பு சிறையில் அடைத்துவைத்திருக்கும் 20 விடுதலைப் போராளிகளை உடனே விடுதலை செய்யவும். போராளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.
3. இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை காசாகவோ தங்கமாகவோ தமிழ்நாடு அரசின் வசம் எங்கள் சார்பில் ஒப்படைக்கவேண்டும்.
4. அவகாசம் 72 மணி நேரம் மட்டுமே. தவறினால் தம்பதிகள் சுட்டுக் கொல்லப்படுவர்.
இப்படிக்கு
மக்கள் விடுதலைப் படை
கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே விசயம் உலகச் செய்தியாகிவிட்டது. இலங்கை பத்திரிகைகள் எழுதின. ரேடியோக்கள் அலறின. திருச்சி வானொலி முதலில் செய்தியை அறிவித்தது. பிபிசி தமிழோசை தொடர்ந்தது. இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதாக அமெரிக்காவிலிருந்து ஓர் அனுதாபி டெலிபோனில் தகவல் சொன்னார். இலங்கை பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதி புத்திசாலி லலித் அத்துலத்முதலி, நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேட்ட கேள்விக்கு ‘‘கடத்தல்காரர்களுக்கு என்னுடைய பதில் காதைப் பிளக்கும் மௌனம்’’ என்றார். பின்னர் அவருடைய புத்தி சாதுர்யத்தின் கனம் தாங்க முடியாமல் வாயைத் திறந்தார். ‘கடத்தல்காரர்களின் வாகனம் சேந்தன்குளம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலென் தம்பதியினரை இந்தியாவுக்கு கடத்திவிட்டார்கள். இங்கே தேடுவதில் என்ன பிரயோசனம்? இந்தியா கடத்தல்காரர்களுக்குத் துணைபோய்விட்டது’ என முதல் கணையை ஏவினார்.
அமெரிக்க உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இந்திரா காந்தியை சந்திப்பதற்காக டெல்லி வந்திருந்தார். ‘தமிழ்நாடு அரசு கடத்தல் பணத்தை அவர்கள் சார்பாக பெறும்’ என்று எழுதியது இந்திரா காந்திக்கு அவமானகரமாக இருந்தது. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா இந்திய தூதர் சாட்வாலை நெருக்கினார். உலகம் முழுக்கப் பரபரப்பாகியிருந்தது. ஆனால் ஒருவருக்கும் மண்டைதீவு, மணல்வீதி 18ஆம் நம்பர் வீட்டை சோதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அது மிக மிக அமைதியாக இருந்தது. உரும்பிராய் வேம்பன் ஒழுங்கையில் இருக்கும் கல்வீட்டைச் சோதிக்கலாம் என்றும் ஒருவருக்கும் தோன்றவில்லை. அங்கேதான் தோழர் சிவா இருந்தார். அது கலகலப்பாகவும் கொண்டாட்டத்துடனும் இருந்தது. காரணம் ஒரு வருடம் முன்னர் இயக்கத்தில் சேர வந்த சொப்பனா வீட்டைவிட்டு வெளியேறி இயக்கத்தில் இணைந்துவிட்டார். திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தோழர் சிவா கேட்டபோது ‘போர் துடங்கி விட்டதே’ என்றார். திருச்சி வானொலியைக் கேட்டதிலிருந்து சொப்பனா வானிலிருந்து கீழே இறங்கவில்லை.
தோழர் சிவா ரேடியோவை ஒரு காதில் வைத்தபடியே இருந்தார். துப்பாக்கிதாரிகள் கடத்தியதாக பிபிசி சொன்னது அவர் வாழ்நாளில் கிடைத்த பேறு. மூன்று நாள் முடியும்முன்னரே அவர் நினைத்ததுபோல உலகப் புகழ் கிடைத்துவிட்டது. ‘அது என்ன, சொப்பனா? உம்முடைய அப்பாவுக்கு வேறு பெயர் கிடைக்க வில்லையா?’ இறுக்கமான அவர் முகத்தில் நிரந்திர புன்னகை வந்துவிட்டது. அவள் தலைகுனிந்தாள். ‘பிடிக்கவில்லையா?’ ‘அப்படிச் சொல்லுவேனா? நல்ல பெயர்தான், பொருள் தெரியவில்லை.’ ‘சொப்பனம். சொப்பனம் என்றால் கனவு. கனவானவளே என்று அர்த்தம். கனவிலேதான் நான் ஒருத்தருக்கு கிடைக்கக் கூடியவள்’. ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ என்ற பாடலைக் கேட்டதில்லையா? ‘சிவகவி’ படத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியது. அந்தப்படத்தை அப்பா 9 தடவை பார்த்தாராம். அதுதான் சொப்பனா என்று வைத்திருக்கிறார்.’ ‘அப்பாடி, உம்முடைய பெயரில் இத்தனை விவரம் இருக்கா?’ ‘அடுத்தவரியில் உங்கட பெயர் வருகுது.’ ‘அது என்ன?’ ‘சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தேன்.’ அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு ‘என்னை மறப்பீர்களா?’ என்றாள். எட்டுத் துப்பாக்கிகளையும் யாரோ பறித்துவிட்டதுபோல நிராயுதபாணியாக நின்று முத்தமே படாத அவள் முகத்தை ஆராய்ந்தார். எங்கே தொடங்கலாம் என்று தோழரால் முடிவுக்கு வரமுடிய வில்லை.
ஞாயிறு பகல் முடிந்து இரவு தொடங்கியது. விடிந்தால் திங்கள் காலையாகிவிடும். 72 மணி நேரம் கெடு நெருங்கியது. பிணைக் கைதிகளைச் சுடவேண்டும் அல்லது விடுவிக்க வேண்டும். ஞாயிறு இரவு அலென் தம்பதியினரைப் பார்க்க தோழர் சிவா போனார். மிகப் பரிதாபமான காட்சி. அவர்கள் இருவரும் நிலத்திலே உட்கார்ந்து ஐஸ்கிரீம் கூம்பை நக்கிக்கொண்டிருந்தனர். ஒரு போராளியின் மனைவி பக்கத்திலே நின்று சுளகினால் விசுக்கிக்கொண்டிருந்தார். அவர்கள் உடம்பிலே வியர்வை ஆறாக ஓடியது. பயமாக இருக்கலாம். தாங்கமுடியாத வெக்கையாகவும் இருக்கலாம். ‘எல்லாம் வசதியாக இருக்கிறதா?’ ‘ஆமாம் இருக்கிறது. நன்றி.’ என்றார்கள். இரண்டு நிமிடத்தில் 15 தடவை நன்றி சொன்னார்கள். ஐஸ்கிரீம்தான் அவர்களின் கடைசி உணவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே சாப்பிட்டார்கள். தோழர் சிவா சொன்னார். ‘உங்களைக் கொல்லமாட்டோம். நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. உரிமைக்காகப் போராடுகிறோம். ஒருகாலத்தில் ஜோர்ஜ் வாஷிங்டன் தலைமையில் பிரிட்டிஷ்காரரை எதிர்த்து உங்கள் தேசம் விடுதலைக்காகப் போராடினது அல்லவா? அதுபோலத்தான் இதுவும். பொறுத்துக்கொள்ளுங்கள்.’
அன்று இரவு இந்திரா காந்தி அமெரிக்க தம்பதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். எம்ஜிஆர் பொலீஸ் மா அதிபரை அழைத்து விவகாரத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும்படி கட்டளையிட்டார். கே. மோகன்தாஸ் செயல்வீரர் என்று பெயர் எடுத்தவர். இயக்கத் தலைவர் பத்மநாபாவையும் அவருடைய உதவியாளர்களையும் கைது செய்து சென்னை ஹொட்டல் அறை ஒன்றில் அடைத்தார். ‘அங்கே அலென் தம்பதிகள் கொலை செய்யப்படும் அதே நேரம் இங்கே நீங்கள் அனைவரும் கொல்லப்படுவீர்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுத்தார்.’ ‘அலென் தம்பதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்’ என்று பத்மநாபா உத்தியோகபூர்வ மாக ரேடியோவில் அறிவித்தார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆள் கடத்தல் விவகாரம் முற்றுப் பெற்றது.
வேறு வழியில்லை. 14 மே 1984 திங்கள் இரவு சரியாக 8.45 மணிக்கு அலென் தம்பதிகளை யாழ்ப்பாணம் தேவாலயத்தின் ஆயரிடம் இயக்கத்தினர் ஒப்படைத்தனர். தம்பதிகளுக்கும் இயக்கத்தினருக்கும் ஆயர் இஞ்சிக் கோப்பி வழங்கி கொண்டாடினார். அதே சமயம் உரும்பிராய் வேம்பன் ஒழுங்கை கல்வீட்டில் தோழர் சிவா அளவுமீறிய உற்சாகத்தில் இருந்தார். இயக்கம் உலகச் செய்தியாகிவிட்டது. மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தைப் பிளந்து உள்ளே நுழைந்துவிட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்துப் பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள்.
தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள். அவள் கன்னமும் உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. ‘ஓ சொப்பனா, சொப்பனா’ என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரைப் பலதடவை உச்சரிக்க வேண்டும்போலத் தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலைப் பிடித்தார். ‘என்ன? என்ன?’ என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்தபோது காயம் என்றார். ‘இங்கேயா?’ என்று பெருவிரலை தடவினாள். ‘ஓமோம்’ என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’’ என்று கணுக்காலைத் தடவினாள். அவர் ‘ஓமோம்” என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். ‘இங்கே?’ முழங்காலைத் தடவினாள். ‘ஓமோம்’. அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல்நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன.
புத்திஜீவிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. சமய சந்தர்ப்பம் தெரியாது. ஏ லெவல் அரவிந்தன் பதற்றமாக உள்ளே நுழைந்தான். ‘நீங்கள் ஆள் கடத்தல் வெற்றி என்று சொல்லி கொண்டாடுகிறீர்கள். இது முழுத்தோல்வி அல்லவா? வெளியிலே தலைகாட்ட முடியவில்லையே?’
‘என்ன தோழர் இப்படிச் சொல்கிறீர்? எங்களுடைய வெற்றியை குறைவாக எடைபோடுகிறீர். இன்று நாங்கள் உலகச் செய்தி. இலங்கை பேப்பர்கள், இந்திய பேப்பர்கள், அமெரிக்க பேப்பர்கள் எல்லாம் இதே செய்திதான். பெருமைப்படும் நாள் இது.’
‘பெருமை கிடக்கட்டும். நாங்கள் எதற்காகக் கடத்தி னோம்? அந்தக் காரணம் நிறைவேறியதா? அதுவல்லவா முக்கியம் தோழர்.’
‘அதிலென்ன சந்தேகம். உலக நாடுகள் எமது இயக்கத்தின் செயல்பாடுகளைக் கண்டு வியப்பு மேலிட்டு நிற்கின்றன. இது சாதனையல்லவா? ஆக 11 பேருடன், 8 வெட்டிய பாதி துப்பாக்கிகளுடன், 12,400 ரூபாய் செலவில் உலக சாதனை படைத்திருக்கிறோம். தோழரே, நீர் ஒரு வரலாற்றுப் புள்ளியில் நிற்கிறீர்.’
தோழர் அரவிந்தன் கீழே பார்த்தார். அவருக்குப் புள்ளி தெரியவில்லை. ‘உங்களுக்குப் புளியமரத்து பேய் கதை தெரியுமா?’ என்றார்.
‘இது கதை பேசும் நேரமில்லை. கொண்டாடும் நேரம் தோழர். சுருக்கமாகச் சொல்லுங்கள்.’
‘ஒரு வீட்டுக்காரர் முன் வளவில் இருந்த புளிய மரத்தில் 10 பேய்கள் குடியிருந்தன. ஒருநாள் வீட்டுக்காரர் புளியமரத்தை வெட்டி எள் விதைக்கத் தீர்மானித்தார். அவருக்கு 10 மூட்டை எள் கிடைக்கும். இதைக் கேள்விப்பட்ட பேய்கள் அலறியடித்துக்கொண்டு அவரிடம் வந்தன. ‘ஐயா, மரத்தை வெட்டவேண்டாம். நாங்கள் எங்கே போவோம்? உங்களுக்கு வருடத்துக்கு 10 மூட்டை எள் தந்துவிடுகிறோம்.’ வீட்டுக்காரர் சம்மதித்தார். சில வருடங்கள் ஓடினதும் ஒரு புதுப்பேய் வந்து சேர்ந்தது. அது சொன்னது, ‘இது கேவலம். மனிதன் அல்லவா பேய்க்குப் பயப்படவேண்டும். நான் அந்த மனிதப் பதரிடம் பேசுகிறேன்’ என்று வீறாப்பாய்ப் போனது. வீட்டுக்காரர் மாட்டுக்கு சூடுபோட இரும்புக் கம்பியை நெருப்பில் பழுக்கக் காய்ச்சிக்கொண்டு இருந்தார். பேயைக் கண்டதும் அவர் கையில் சூட்டுக் கம்பியுடன் பேச வந்தார். பேய்க்கு நாக்குழறியது. ‘நான் புதுப்பேய். நாங்கள் 11 பேய்கள். இனிமேல் 11 மூட்டை எள் – இல்லை, இல்லை – இனிமேல் 11 மூட்டை எள்ளை எண்ணெயாகவே தருகிறோம்.’
‘என்ன சொல்ல வருகிறீர், தோழர்? விளக்கமாகச் சொல்லலாமே.’
‘நாங்கள் கேட்ட பணயப் பணம் 2 மில்லியன் டொலர். அது கிடைக்கவில்லை. சிறையில் இருந்து 20 போராளிகளை விடுவிக்கவேண்டும். அதுவும் நிறைவேறவில்லை. மாறாக சிறையில் அடைத்த போராளிகளின் தொகை 22 ஆக கூடியிருக்கிறது.’
‘அது எப்படி?’ ‘நாங்கள் விடுதலை செய்யக் கோரியவர்களின் பட்டியலில் சிலர் ஏற்கனவே விடுதலையாகி வெளியே இருந்தனர். அவர்களையும் இன்னும் சிலரையும் பொலீஸ் மறுபடியும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டது. எதற்கு என்று கேட்டதற்கு அப்பொழுதுதானே உங்களை விடுதலை செய்யலாம். அதுதானே கோரிக்கை’ என்றார்களாம். இப்பொழுது சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 22.’
‘அது இருக்கட்டும், தோழர். போராட்டத்தில் ஒன்றிரண்டு பின்னடைவுகள் ஏற்படும். அது இயற்கை. இலங்கை சரித்திரத்தின் திசையை உடைத்திருக்கிறோம்.’
‘ஓம் தலைவா.’
‘இனிமேல் எங்கள் போராட்டம் உலகமயமாக்கப்பட்டு விடும். நகர்வுகள் இல்லை. பாய்ச்சல்தான்.’
‘ஓம் தலைவா.’
‘புதிய பெண்கள் அணி துவங்கப்பட்டுவிட்டது. அதன் தலைவி இவர்தான், சொப்பனா.’
அவசரமாகத் தலையை ஒதுக்கி, சேலையை நேராக்கி, உதட்டுக் காயத்தை மறைத்தவாறு சொப்பனா உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு செருப்புக் காலில் நின்றார்.
‘ஓம் தலைவா.’<
டிசம்பர் 2016: என்னைத் திருப்பி எடு
ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம்போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலதுகையால் போட்டுக்கொண்டு, இடதுகையால் கைப்பையைத் தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும்.
அவன் ஒன்றுமே கேட்கக்கூடாது. ஆனால் அவன் பற்றிய விசயம் எல்லாம் அவளுக்குத் தெரியும். ஒரு தடவை அவளிடம் கேட்டான், ‘நீ பல்கலைக்கழகத்தில் என்ன படிக்கிறாய்?’ சாதாரண கேள்விதான். அவளுடன் கடந்த ஆறுமாத காலம் ரொறொன்ரோ நடு மையத்தில் உயர்ந்து நிற்கும் 21 மாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் 716ஆம் எண் வீட்டில் ஓர் அறையில் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கிறார்கள். நீ என்ன படிக்கிறாய் என்று அவன் கேட்கக்கூடாதா? அவள் பதில் சொன்னாள். ‘தண்ணீரின் ஈரத்தன்மை பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்.’ அவனை அவள் கேலி செய்கிறாள். அவன் மேல்படிப்புப் படிக்காமல் சுப்பர்மார்க்கெட்டில் சாதாரண எடுபிடியாக வேலை செய்வது அவளுக்கு அவமானமாக இருந்தது. அதை இப்படித்தான் அவனுக்கு உணர்த்துவாள். ஆனால் அந்த வீட்டு முழு வாடகையையும் அவன் சம்பளத்தில்தான் கட்டுகிறான். வீட்டுச் செலவுக்கும் உணவுக்கும் மட்டும் அவள் பாதிப் பணம் தருகிறாள்.
சரி, சமையல் வேலையில் சரிசமமாக இருவரும் பங்கேற்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவனுக்குத் தெரிந்த மாதிரி சமைத்து வைப்பான். அவளுக்கு என்ன மாதிரி உணவு பிடிக்கும் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? தினம் புதிதாக ஏதாவது செய்வான். பழைய உணவு அவனுக்குப் பிடிக்காது. அது மிதிலாவுக்குத் தெரியும். அவனுடைய அம்மா முதல்நாள் சமைத்த உணவைத் தந்ததற்குக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடியவன். 19 வயதுப் பையன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு அது போதிய காரணம் இல்லை என்று அவனுக்கு இப்போதுதான் தெரிகிறது.
கதவுக் கைப்பிடியில் அவள் கையை வைத்துவிட்டாள். முதுகுப் பை முதுகிலே தொங்கியது. ‘நான் இப்ப என்ன சொன்னேனென்று இத்தனை கோபம். பதில் சொல்லிவிட்டுப் போனால் நல்லது. எப்போவோ
வாங்கிய ‘பேகிளை’ சிப்லொக் பையில் போட்டு, அதை இன்னொரு சிப்லொக் பையில் போட்டு மீண்டும் இன்னொரு பையில் மூடி குளிர்ப்பெட்டியில் வைப்பதில் என்ன பிரயோசனம்? இந்தச் சின்னக் கேள்விக்குப் பதில் சொல்வதில் என்ன கஷ்டம். எங்கள் சிறிய வருமானத்தில் சிப்லொக் பை விற்பனையை ஏன் கூட்ட வேண்டும்?’
அவர்கள் ஆறுமாதமாக ஒன்றாக வாழ்கிறார்கள். முதல் மாதம் அதி இன்பம் தந்த மாதம். அவள் கையை உயர்த்திச் சொறிந்தபோதும் கொட்டாவி விட்டபோதும் பல் துலக்கியபோதும் அபூர்வ அழகுடன் இருந்தாள். இரண்டாவது மாதம் முதல் சண்டை வந்தது. மூன்றாவது மாதம் மூன்று சண்டை. சண்டை முடிந்து சமாதானம் ஆனபோது பெரிய கொண்டாட்டமாக இருந்தது. நாலாவது மாதம் வாரத்துக்கு இரண்டாக உயர்ந்தது. இப்போதெல்லாம் தினம்தினம் சண்டைதான். அவன் ஏதாவது சொன்னால் அவள் ஏதாவது உடனே சுருக்கென்று சொல்லிவிடுவாள். ஒரு சண்டை முடிந்து சமாதானம் ஆவதற்கிடையில் இன்னொன்று தொடங்கிவிடும்.
யார் என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுக்கொண்டுதான் ஆரம்பித்தார்கள். அவன் சமையல் செய்வது. அவள் பாத்திரம் கழுவுவது. வீட்டுக் கணக்குகள் பார்ப்பது அவன். சாமான்கள் வாங்குவது அவன். சலவை அவள் பொறுப்பு. குப்பை அகற்றுவது அவன். வீடு துப்புரவாக்குவது அவள். துடைப்பக்கட்டையின் பத்துப் பயன்பாடுகளை அவள் கண்டுபிடித்திருக்கிறாள். இப்படி பங்கு போட்டுக் காரியங்கள் செய்தாலும் சண்டை வந்தது. இரவில் யார் கடைசியாக விளக்கை அணைப்பது? யார் சுட்டுப்போன பல்ப்பை மாற்றுவது? யார் பூக்கன்றுக்குத் தண்ணீர் ஊற்றுவது? கதவு மணி அடித்தால் யார் திறப்பது?
கதவைத் திறந்து வெளியே போகுமுன்னர் அவள் தன் செல்பேசியைப் பார்த்தபடியே சொன்னாள், ‘நான் போகிறேன்.’ ‘எங்கே?’ ‘வெளியேதான்.’ ‘திரும்பிவர மாட்டீரா?’ ‘இரவு வருவேன். என் சாமான்களை எடுத்துப் போவதற்கு.’ ‘நிரந்தரமாகப் பிரிகிறீரா?’ ‘நிரந்தரமாகத்தான்.’ ‘மூன்று சிப்லொக் பைகளில் எதற்காக பேகிளை சேமித்து வைக்கிறீர் என்று கேட்டதற்காகவா? இது சரியான காரணமா? தண்ணீரில்தான் ஈரத்தன்மை குறைந்தது என்று நினைத்தேன். உம்முடைய இதயத்திலும் ஈரத்தன்மை போய்விட்டதா?’ ‘இரவு சொல்கிறேன். எட்டு மணிக்கு என்னைக் கொண்டுபோய் விட வேண்டும்.’ ‘ஏன் நான் கொண்டுபோய் விட வேண்டும்? வாடகைக்காரில் போகலாம்தானே.’ ‘அது எனக்குத் தெரியாதா? என்னை எங்கே, எந்த இடத்திலிருந்து அழைத்து வந்தீர்களோ அதே இடத்தில் என்னைக் கொண்டுபோய் இறக்கிவிட வேண்டும்.’ அவன் ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தான். கதவு படக் என்று சத்தம் செய்து மூடியது. அவனும் மூடினான்.
சுப்பர்மார்க்கெட்டில் அவனுடைய மேலாளரை அவனுக்குப் பிடிக்காது. அவருக்கும் அவனைப் பிடிக்காது என்றே நினைத்தான். மனேஜர் பேசத் துவங்கினால் நிறுத்தமாட்டார். வார்த்தைகள் மந்திரக்காரனின் வாயிலிருந்து ரிப்பன் வருவதுபோல நிறுத்தாமல் வந்து வசனம் நீண்டுகொண்டேயிருக்கும். அவன் ஆச்சரியத்துடன் அவருக்கு ஓர் அடி பின்னால் பார்ப்பான். முற்றுப்புள்ளி இளைக்கஇளைக்க அவருக்குப் பின்னால் ஓடிவருவது அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஐந்து நட்சத்திரக் கட்டளைத் தளபதி என்று மனேஜர் தன்னை நினைத்திருந்தார். கேள்விகளை யூகித்துப் பதில்களை யோசித்துத் தயாராக அவன் வைத்திருக்க வேண்டும். மணித்தியாலத்துக்கு அவனுக்கு டொலர் 11.40 சம்பளம். அதனிலும் குறைய அவனுக்குச் சம்பளம் தர மனேஜருக்கு விருப்பம்தான். ஆனால் முடியாது. ரொறொன்ரோவில் இதுதான் ஆகக் கடைசியான சட்டம் அனுமதித்த சம்பளம். அவனை ‘அரை மூளை’ என்றும் அவர் சமயாசமயங்களில் அழைத்திருக்கிறார். அதையும் சட்டம் அனுமதித்தது.
பழைய கால ஆங்கிலப் பேய்ப்படங்களில் உயரமாக ஒருவர் வருவார். போரிஸ் கார்லொஃவ் என்று பெயர். பல்லுக்கொதி வந்து கன்னம் ஒரு பக்கம் வீங்கினால் போரிஸ் கார்லொஃவ் எப்படித் தோற்றமளிப்பாரோ அப்படியே மனேஜர் இருந்தார். இரண்டு வருடகாலமாக அவருடன் வேலை செய்கிறான். இந்த இரண்டு வருடங்களில் நாலு தடவை வீட்டிலிருந்து துப்பாக்கி கொண்டுவந்து அவரைச் சுட்டுவிட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் அவன் செய்யவே இல்லை.
அந்த சுப்பர்மார்க்கெட்டில் 12 காசாளர்கள் ஒரே சமயத்தில் வேலை செய்வார்கள். ஒவ்வொரு காசாளர் முன்பும் வண்டில்களுடன் நிறையப் பேர் வரிசையில் நிற்பார்கள். ஓடும் பெல்ட்டில் சாமான்கள் வரும். அதன் கோடுகளை மந்திரக் கண்கள் கண்டுபிடித்து விலைகளைத் தானாகவே பதியும். சாமான்களை பைகளில் போட்டு வாடிக்கையாளருக்குக் கொடுத்துப் பணம் பெற வேண்டும். சிலர் தங்கள் செல்பேசிகளை நீட்டிக் கணக்கைத் தீர்ப்பார்கள். சிலர் கடனட்டையோ உடன் அட்டையோ பாவிப்பார்கள். சிலர் காசுத்தாள்களைக் கொடுப்பார்கள். அப்போதுதான் பிரச்சினை முளைக்கும். அவனுக்கு கணக்கு அப்படி இப்படி. சிலவேளைகளில் கணக்கு ஒப்புவிக்கும் சமயம் காசு குறைந்திருக்கும். சொந்தப் பணத்தைக் கட்டிச் சமாளித்திருக்கிறான்.
ஒரு நாள் வண்டிலைத் தள்ளிக்கொண்டு பச்சைக் கண் அழகி ஒருத்தி வந்தாள். அன்று மட்டும்தான் பச்சைக் கண். சிலவேளைகளில் அவளுக்குச் சாம்பல் கண். ஒரு நாள் நீலக் கண்ணுடன் வந்திருந்தாள். அத்தனை அழகு. பார்த்தபின் கண்ணை விலக்க முடியாது. கண் நிறத்துக்கு ஏற்ப உடை அணிவதுதான் அவளின் விசேஷம். அன்று நிறையப் பொருட்கள் வாங்கியிருந்தாள். அவன் சாமான்களைப் பையில் அடுக்கும்போது பிழை நேர்ந்துவிட்டது; அது அதற்கு ஒரு முறை உண்டு. ஒழுகக்கூடிய சாமான்களைத் தனிப்பையில் வைக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட பொருட்களை வேறு குளிரூட்டப்பட்ட பொருட்களுடன்தான் இட வேண்டும். வீடு சுத்தமாக்கும் வேதியல் பொருட்களை உணவுகளுடன் கலக்கக்கூடாது. இப்படிப் பல விதிகள். சிலவேளை நினைவில் இருக்கும்; பல வேளை மறந்துவிடுவான். அவள் நன்றி என்று அழகாக உச்சரித்துவிட்டுச் சாமான்களைத் தள்ளிக்கொண்டு போனாள். வீட்டுக்குப்போய்ச் சரி பார்த்தபோது ஒரேயொரு முட்டை உடைந்துவிட்டது. அவள் 20 மைல் தூரம் காரை ஓட்டிவந்து முட்டை உடைந்துவிட்டது என்று முறைப்பாடு செய்தாள். பல்லுக்கொதி பிசாசு மனேஜர் அவனைத் திட்டினார். அடுத்த நாள் அவனுக்குத் தண்டனை என்று சொன்னார்.
அப்படித்தான் வாடிக்கையாளர் சேவையில் அவன் வேலை செய்ய நேர்ந்தது.
அதைவிடப் பெரிய தண்டனை கிடையாது. வாங்கிய பொருளைத் திருப்புவதற்காக நீண்ட வரிசை நிற்கும். ‘எதற்காக சாமானை திருப்புகிறீர்கள்?’ என்று கேட்டுப் பதிலைக் கணினியில் பதிவுசெய்த பின்னரே காசைத் திருப்பிக் கொடுக்க முடியும். அல்லது புதிய சாமான் எடுத்துப்போக அனுமதி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் சொல்லும் காரணங்கள் வேடிக்கையாக இருக்கும். ‘முடிவு தேதி முடிந்துவிட்டது.’ ‘அழுகிவிட்டது.’ ‘உடைந்துவிட்டது.’ ‘பூசணிக்காய் வேலைசெய்யவில்லை.’ ‘பழுதானது.’ ‘மணக்கிறது.’ ‘ருசி சரியில்லை.’ காதலிக்குப் பிடிக்கவில்லை எனப் பாதி சாப்பிட்ட பீட்சாவைக் காதலியின் பல் அடையாளத்துடன் ஒருவன் கொண்டுவந்திருக்கிறான். ‘சேர், இந்தரக வெண்ணெய் நாங்கள் விற்பதில்லை. வேறு எங்கோ வாங்கியிருக்கிறீர்கள்.’ ‘இல்லையே இங்கேதான் வாங்கினேன்.’ ‘நாங்கள் இங்கே இவ்வளவு மோசமான மலிவான வெண்ணெய் விற்பதில்லை.’ சிலர் எரிச்சல் படுத்துவார்கள்; சத்தமிடுவார்கள். ஆனால் அவன் வாயை சிரித்தமாதிரியே வைத்திருக்க வேண்டும். சமயங்களில் வீட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்துவந்து இந்தப் பொய்யர்களைச் சுடத் தோன்றும். பின்னர் அவனிடம் துப்பாக்கி இல்லை என்பது நினைவுக்கு வரும்.
சுப்பர்மார்க்கெட்டில் 6340 பொருட்கள் தத்தமது மந்திரக்கோடுகளுடன் இருந்தன. சனங்கள் இரவும்பகலும் வந்து வாங்கிப் போனார்கள். அதிகமான உணவு வகைகள் சமைக்கவே தேவையில்லை. அவற்றை இரண்டு நிமிடம் நுண்ணலை அடுப்பில் வேகவைத்தால் உணவு தயார். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் மனிதன் காலை எழும்பியதும் உணவைத் தேடத் துடங்குவான். சூரியன் மறையும் வரைக்கும் தேடுவான். அன்று உணவு கிடைத்தால் உண்பான். கிடைக்காவிட்டால் பட்டினி தான். இப்பொழுது அவசரஅவசரமாக வந்து ஐந்து நிமிட உணவை வாங்கிக்கொண்டு ஓடுகிறார்கள். எத்தனை வசதி. ஆனாலும் முறைப்பாடுகளுக்குக் குறைவில்லை.
இரண்டு வாரம் முன்பு மிதிலா இரவு எட்டு மணிக்கு வந்து தன் சாமான்களை எடுத்துப்போனாள். அவள் அவனுடன் சேர்ந்து வாழ வந்தபோது அவளிடம் ஒரு மெலிந்த சூட்கேஸ்தான் இருந்தது. திரும்பிப் போகும்போது இரண்டு சூட்கேசுகள், நாலு அட்டைப்பெட்டிகள் சேர்ந்துவிட்டன. ஆறு மாதத்தில் அவன் அவளுக்கு நிறையப் பரிசுகள் கொடுத்தான். உடுப்புகள் வாங்கினான். அவை பெட்டிகளை நிரப்பிக் கிடந்தன. பெட்டிகளை எடுத்துப் போக அவன் உதவி செய்தான். வேலைக்காரனுக்குக் காட்டும் மரியாதை அவனுக்குக் கிடைத்தது. காரிலே ஏறியதும் எங்கே என்றான். ‘அந்த உணவகம்’ என்றாள். ‘எந்த உணவகம்?’ ‘நான் எங்கேயிருந்து உன் காரில் ஏறி உன் வீட்டுக்கு வந்தேனோ அந்த உணவகம்.’ ‘உணவகத்திலா நீ இனிமேல் தங்கப் போகிறாய்?’. அவள் பதில் கூறவில்லை.
உணவகம் வந்தது. நெருப்பில் இருந்து தப்பி ஓடுவதுபோல காரில் இருந்து பாய்ந்து இறங்கிக் கைப்பையை எடுக்காமல், கதவைச் சாத்தாமல் வீதியைக் கடந்து மறுபக்கம் ஓடினாள். அங்கே ஒருவன் நின்றான். மூன்றுநாள் சாப்பிடாததுபோல முகம். தலை வாரியிருக்கவில்லை. ஒரு வாரம் முன்பு சுத்தமாயிருந்த சேர்ட். அவன் விரித்த கைகளுக்குள் ஒரு கோழிக்குஞ்சு ஓடுவதுபோல நுழைந்து அவனைக் கட்டிக்கொண்டாள். மிதிலா ஒரு நாளும் அவனிடம் அப்படி ஓடிவந்தது கிடையாது. கட்டிப்பிடித்ததும் இல்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். பின்னர் அவனாகவே சாமான்களை இறக்கிவைத்துவிட்டுக் காரை கிளப்பினான். அவள் பாய்ந்து கடந்த அந்தக் காட்சி சினிமாபோல பலதடவை மீண்டும்மீண்டும் அவன் மனதில் ஓடியது.
மனேஜர் அவனைக் கூப்பிட்டபோது அவனுக்கு விசயம் ஓர் அளவுக்கு விளங்கிவிட்டது. இன்னொரு முறைப்பாடு வந்திருக்கிறது. வேறு எதற்குக் கூப்பிடுவார்? உன்னுடைய அர்ப்பணிப்பான, புத்திசாலித்தனமான, கடும் உழைப்புக்கு மாட்சிமை பொருந்திய கனடிய ஆளுநர் உனக்கு விருதளிக்கப் போகிறார் என்று சொல்லப் போகிறாரா? மனேஜரின் கதவிலே அவர் பெயர் எழுதியிருந்தது. உள்ளே நுழைந்து கொலை செய்தவன் தீர்ப்புக்குக் காத்து நிற்பதுபோல தலையைக் குனிந்துகொண்டு நின்றான். மனேஜர் அவன் முகத்தைப் பார்க்காமல் மேசையில் கிடந்த கண்ணாடி உருண்டையை உருட்டியபடி நீண்டநேரம் பேசினார். இரண்டு நிமிடம் கழித்து விசயத்துக்கு வந்தார். அவன் வாடிக்கையாளருடைய பையிலே தக்காளியைக் கீழேபோட்டு அதற்குமேல் கனமான பொருளைப் போட்டதால் தக்காளி நசுங்கிவிட்டது. இந்த சுப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்தான் முக்கியம். அவனல்ல. தக்காளியுமல்ல. ‘இனிமேல் நீ வீட்டுக்குப் போகலாம்,’ என்றார். ‘வீட்டுக்கா?’ ‘ஆமாம்.’ ‘இப்போதா?’ ‘இப்போதுதான்.’ அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு டொலர் பெறுமதியான தக்காளிக்காக அவனை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தன் சேர்ட்டிலே குத்தியிருந்த ‘மாயன்’ என்ற பெயர் அட்டையைக் கழற்றி மேசையில் வைத்தான். இனிமேல் பெயர் அட்டை இல்லாமலே அவன் தன் பெயரை ஞாபகத்தில் வைக்க வேண்டும். போரிஸ் கார்லொஃவ் எழும்பி நின்று கை நீட்டினார். அவன் கவனிக்காமல் வெளியே வந்தான்.
அவன் அம்மா சொல்லுவார். ‘உன் பெயர் உன் சேர்ட்டிலே குத்தியிருக்கக் கூடாது. கழுத்திலே மாலையாகத் தொங்கக்கூடாது. கதவிலே உன் பெயர் இருக்க வேண்டும்.’ அம்மாவுக்கு அவன் சுப்பர்மார்க்கெட்டில் வேலை செய்வது பிடிக்கவே இல்லை. ‘உன்னுடைய தகுதிக்கு நீ ஓர் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். வீட்டுக்கு வா. மறுபடியும் படி’ என்று பலதடவை சொல்லிவிட்டார். அம்மாவை உடனே அழைக்க வேண்டும்போல இருந்தது. அவர் அடிக்கடி சொல்வார். ‘இந்த உலகத்தில் எல்லோ ரும் உன்னைக் கைவிட்டாலும் கடைசிவரை கைவிடாத ஒரே ஆத்மா உன் அம்மாதான். அதை மறக்காதே.’
காரை வேகமாக ஓட்டினான். அவனுக்கு முன்னால் இன்னொரு பெரிய வாகனம் போனது. பின்னால் இப்படி எழுதியிருந்தது. ‘இந்த எழுத்துக்களை உன்னால் வாசிக்க முடியும் என்றால் நீ அளவுக்கு அதிகமாகக் கிட்ட வந்துவிட்டாய் என்று அர்த்தம். தூர விலகு.’ வாகனம் மிக மெதுவாக நகர்ந்தது. அவனால் முன்னேற முடியவில்லை. எரிச்சல் எரிச்சலாக வந்தது. திடீரென்று யோசனை எழுந்தது. ‘வேகமாகப் போய் என்ன சாதிக்கப் போகிறேன். வீட்டிலேதான் மிதிலா இல்லையே. அவளுக்குச் சமைக்கத் தேவையில்லை. மூன்று சிப்லொக் பைகளில் சேமித்துவைத்த ’பேகிளை’ அவள் தன் காதலுனுடன் பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பாள்.’
லோரன்ஸ் வீதியில் அவன் பிறந்த மருத்துவமனை எதிர்ப்பட்டது. எப்போது அந்த வழியால் போனாலும் அவனுடைய அம்மா அவன் பிறந்த மருத்துவமனையைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. எட்டு மாடிகள் கொண்ட உயர்ந்த நீலக் கட்டடம். திடீரென்று மருத்துவமனைக்குள் காரை வெட்டித் திருப்பினான். வரவேற்பறையில் இரண்டு பெண்கள் சீருடையில் உட்கார்ந்திருந்தார்கள். இன்னொரு பெண் சற்றுத் தள்ளி அமர்ந்து ஏதோ கணினியில் தட்டச்சு செய்தாள். சும்மா உட்கார்ந்திருந்த பெண்ணின் முன் சென்று நின்றான். அவள் நிமிர்ந்து பார்த்து மருத்துவமனைப் புன்னகை ஒன்று செய்தாள்.
‘நான் என்னைத் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறேன்.’
‘மன்னிக்கவும். புரியவில்லையே.’
‘நான் இங்கேதான் பிறந்தேன். நான் என்னைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.’
‘ஏன்?’
‘பழுதான சாமானைத் திருப்பிக் கொடுக்கலாம்தானே.’
எல்லோருடைய கவனமும் அவன்மீது விழுந்தது. ஒன்றும் பேசாமல் ஒருவரை யொருவர் பார்த்தனர்.
கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்த பெண் திரும்பி அவனைப் பார்த்து ‘கொடுக்கலாம். ஆனால் உங்கள் தாயார் வந்துதான் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறினாள். பெண்கள் ரகஸ்யமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அவனுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி ஆவேசம் வந்ததுபோல உள்ளே நுழைந்தான். யாரோ சிரித்தது அவனுக்குக் கேட்டது. வெட்கமாகிவிட்டது. அவனுடைய அம்மா ‘உனக்கு விசர் பிடித்துவிட்டது’ என்று திட்டுவது நினைவுக்கு வந்தது. அம்மாவை அழைத்து வேலை போனதைச் சொல்வோமா என்று நினைத்தான். அவன் எப்பொழுது அம்மாவை அழைத்தாலும் அது ஏதாவது சோகச் செய்தியைச் சொல்வதற்காகவே இருக்கும். ஒரு நல்ல செய்தி வந்த பிறகு அழைக்கலாம். விரைவில் அவன் வேலையைத் தேடிவிட்டு அழைத்தால் எத்தனை சந்தோசப்படுவார். அப்படி நினைத்தபோதே அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் அம்மாவை நினைத்தாலே அவருக்கு எப்படியோ தெரிந்துவிடும். அப்படி பலமுறை நடந்திருக்கிறது.
‘என்ன அம்மா?’
‘நீ ஏன் கூப்பிடவில்லை.’
‘செல்போன் தண்ணீரில் விழுந்து சில நம்பர்கள் கரைந்துவிட்டன.’
‘என்னுடைய நம்பர் உனக்கு ஞாபகம் இல்லையா?’
‘இல்லையே. இப்போது கிடைத்துவிட்டது. தவறாமல் இனிமேல் அழைப்பேன்.’
தாயாருக்குப் பொய் சொன்னது என்னவோபோல இருந்தது. தாயாரைத் தான் கொடுமைப்படுத்தியதற்கு இது தண்டனையோ என யோசித்தான். ஒரு தடவை அவர் மருத்துவமனையில் கிடந்தபோது அங்கே போகாமல் மிதிலாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது நினைவுக்கு வந்தது. அவள் சொன்னாள். ‘18 வயதுப் பிறந்த நாள் ஒருமுறைதான் வரும்.’ உடனேயே மனம் மாறியது. பெரும் சோகம் அவனை மூடியது. துயரத்தை மறக்க குதிரை ஓடும் சத்தத்தை வாயினால் உண்டாக்கியபடியே காரை ஓட்டினான். மனது கொஞ்சம் அமைதியடைந்தது.
ஓர் உயரமான பெண் நாயைச் சங்கிலியில் பிடித்தபடி நடந்தாள். அழகான காட்சி. அவளுடைய காதலனுடன் செய்த ஒப்பந்தப்படி நாயை நடைக்குக் கூட்டிச் செல்வது அன்று அவள் முறையாக இருக்கலாம். மிதிலாவை நினைத்தான். எங்கே தவறு நடந்தாலும் அதைத் திருப்பி வளைத்துக்கொண்டு வந்து அவன் தலையில் போட்டுவிடுவாள். சிறந்த வழக்கறிஞராகும் தகுதி அவளுக்கிருந்தது. அவள் பக்கத்தில் நிற்கும்போது அவன் போதாமை பெரிதாகத் தெரியும். தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தான். ஒரு சத்தமும் இல்லாமல் அது அமைதியாக இருந்தது. மேல்கோட்டைக் கழற்றி மாட்டினான். காலணிகளை உதறினான். கார்ச் சாவியை மேசையில் வைத்தான். செல்பேசியை மின்னேற்றியில் பொருத்தினான். அவன் நிழல் சுவரில் விழுந்தது. என்ன அழகான நிழல்? என்ன ஒய்யாரம்? அதைப் பார்க்க ஒருவரும் இல்லை.
கதவு நீக்கல் வழியாகக் கடிதம் ஒன்று உள்ளே தள்ளப்பட்டுக் கிடந்ததைக் கண்டான். ஆச்சரியமாக இருந்தது. அவனுக்குக் கடிதங்கள் வருவதில்லை. பழுப்பு உறை. அரசாங்கக் கடிதமாக இருக்க வேண்டும். கனடிய சட்டமா அதிபரிடம் இருந்து வந்திருந்தது. கை கொஞ்சம் நடுங்கியது. அவன் ஒரு குற்றமும் செய்யவில்லையே. சுப்பர்மார்க்கெட்டில் ஒருமுறை 12 டொலர் கணக்குக் காட்டாமல் விட்டதாக இருக்குமா?
பயத்துடன் கடிதத்தைப் பிரித்தான். அவன் கண்கள் விரிந்தன. அவனை ஒரு வழக்கில் ஜூரியாகக் கடமையாற்ற அழைத்திருந்தார்கள். கடவுள் யன்னலை மூடினால் கதவைத் திறப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாலு கதவுகளை அல்லவா திறந்துவிட்டிருக்கிறார். கொண்டாட வேண்டிய பெரும் சந்தோசத்துக்குரிய விசயம். வழக்கு விவரம் தெரியாது, ஆனால் இரண்டு வாரத்துக்குள் போக வேண்டும். சம்பளம் நாளுக்கு 40 டொலர்கள். வழக்கு இழுத்தடித்தால் நாளுக்கு 100 டொலராக உயர்ந்துவிடும்.
அவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. யாரோடு அந்த நல்ல செய்தியைப் பகிரலாம் என்று யோசித்தால் ஒருவரும் இல்லை. அம்மாவுக்குச் சொன்னால் பெருமைப்படுவாரே என்று நினைத்தான். என்ன வழக்காக இருக்கும்? கொலைக்குற்றமா அல்லது கள்ளக்கடத்தலா? ஜூரிமாருக்குப் பெயரை எழுதி சேர்ட்டிலே குத்துவார்களா? அல்லது பெயர் அட்டையைக் கழுத்திலே தொங்கவிடுவார்களா? ஒருவேளை ஜூரி மேசையிலே பெயர்ப் பலகைகளை அவர்கள் வைக்கக்கூடும். ஒரு மாதத்துக்கு மேல் வழக்கு நீண்டால் நல்ல தொகை கிடைக்கும். அம்மாவுக்கு பிடித்த ஏதாவது விலை உயர்ந்த பரிசுப் பொருளை வாங்கிக்கொடுக்கலாம்
ஒரு பேச்சுக்குக் குற்றவாளி மிதிலாவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். கூண்டிலே நின்றாலும் அவள் வாள் சுழற்றுவதுபோல வேகமாகப் பேசுவாள். குரல் உச்சத்துக்குப் போகும்போது அவள் பேச்சுக்குரல் நாய் குரைப்பதுபோல ஆகிவிடும். ஒரு பேச்சுக்கு அவள் திருடியாக இருக்கலாம். அரசாங்கத்தை ஏமாற்றியவளாக இருக்கலாம். மூன்றுநாள் சாப்பிடாமல் இருந்தவனைக் கொலை செய்தவளாகவும் இருக்கலாம். ஒரு பேச்சுக்கு அவள் குற்றவாளி என்று அவன் கையைத் தூக்கும்போது அவனுடைய மகிழ்ச்சி எத்தனை மடங்கு பெருகியிருக்கும். இந்த உலகத்தில் பழிவாங்கும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு ஈடே கிடையாது.
ஆகஸ்ட் 2014: நான்தான் அடுத்த கணவன்
பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்… அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன்.
நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜன்டைப் பிடித்துப் பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு அனுப்பிவிடும்படி சொன்னார். எங்கள் கிராமத்திலிருந்து ஏற்கனவே பலர் அங்கே போயிருந்தார்கள். இந்த ஏஜன்ட்தான் அவர்களை அனுப்பியவர் என்பதால், அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஏஜன்ட் என்னை சென்னைக்கு அனுப்பி அங்கே ஒரு வீட்டில் தங்கவைத்தார். அங்கிருந்து பம்பாய் போய்க் கியூபா, அமெரிக்கா வழியாக கனடா போவதுதான் திட்டம்.
சென்னையில் என்னைத் தங்கவைத்ததுதான் பிரச்சினை. அந்த வீட்டுக்கார அம்மாவுக்கு 16 வயது மகள் ஒருத்தி இருந்தாள். பெயர் பத்மப்ரியா. அந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் ஓர் உருவம் தோன்றுமே, அதுதான் அவள். டிவி விளம்பரங்களில் வரும் பெண்களை அவள் அழகு சாதாரணமாக்கிவிடும். மலிவு ஆடையிலும் பேரழகியாய்த் தெரிவாள். தான் அழகு என்று தெரிந்த பெண் காட்டும் ஒயில் அவளிடமிருந்தது. நகைகள் அணியமாட்டாள். அவளுடைய ஒவ்வொரு அங்கமும் ஒரு நகைபோலத்தான். அபூர்வமாக அவள் சிரிக்கும்போது உங்கள் மனம் உங்களையே மறந்துவிடும்.
ஆனால், நான் காதலிக்க முடிவு செய்த சில நிமிடங்களிலேயே இடி விழுந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். பெயர் அபி. சினிமாவில் ஒளிப்பதிவாளருக்கு உதவியாளாக இருந்தான். சினிமாப் பிரபலங்களை எல்லாம் அவனுக்குத் தெரியும். அவளை வைத்து முதலில் விளம்பரப் படம் எடுப்பான். பின்னர் அவள் சினிமாவில் கதாநாயகியாவாள். அவனே படத்தை இயக்குவான். இப்படியெல்லாம் ஆசை காட்டினான். அடிக்கடி வீட்டுக்கு வந்து அவளைச் சந்தித்தான். அவளுடைய அம்மாவுக்கும் பரிபூரண சம்மதம். இந்த நிலைமையில் கனடாவுக்கு அகதியாகக் கள்ளப் பாஸ்போர்ட்டில் போகத் திட்டமிடும் ஒருவன் எப்படி அந்தப் பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது? அவர்களை ஒன்றாகப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். என்னுடன் ஒரு வார்த்தை அவள் பேசினால் அன்று முழுக்க அந்த வார்த்தையை நினைத்தபடியே நாளைக் கழிப்பேன்.
அந்த வீட்டில் நான் இரண்டு மாதம் தங்கினேன். அவளைத் தினமும் பார்க்கவும் அவளுடன் பேசவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒளிப்பதிவாளரின் உதவியாளர் பாவம். வாரத்தில் மூன்று நாட்கள்தான் வருவார். நானோ ஏழு நாட்கள், 24 மணிநேரம் அங்கேயே கிடந்தேன். எனக்கு அது பெரிய அனுகூலம். நான் கனடா போகிறேன், அங்கே விரைவில் எஞ்சினியர் ஆவேன். வசதியான வாழ்வு கிடைக்கும். உலகத்தின் பல இடங்களுக்கும் சுற்றுலா போகலாம் என்றெல்லாம் பேசினேன். அவள் மனதில் முதலாவது இடத்தில் அபியும் இரண்டாவது இடத்தில் நானும் இருந்தோம். அப்படி அவள்தான் சொன்னாள்.
நான் கடவுளிடம் தினம் வேண்டியதற்கு ஒரு பலன் கிடைத்தது. ஒருநாள் அபிக்கும் அவளுக்குமிடையில் பெரும் சண்டை மூண்டது. அவன் கோபித்துக்கொண்டு ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பிப் போய்விட்டான். மூன்று நாள் அவள் தொடர்ந்து அழுதாள். நாலாவது நாள் என்னுடன் சிரித்துப் பேசினாள். ‘‘நான் உன்னை மணமுடிப்பேன். உலகத்துக் காதலர்கள் எல்லாம் பொறாமைப்படும்படி நாங்கள் வாழலாம்’’ என்றெல்லாம் சொன்னேன். ‘‘எப்பொழுது நான் கனடா வரலாம்?’’ என்றாள். ‘‘நான் அங்கே போய் எஞ்சினியராகிவிடுவேன். விசா கிடைத்ததும் உம்மைக் கூட்டிப்போவேன். நயாகரா நீர்வீழ்ச்சிக்குக் கிட்டவாக நாங்கள் பெரிய வீடு எடுத்து வாழலாம்’’ என்றேன். அவள் ‘‘அப்படியா, எனக்கு நீர்வீழ்ச்சி பிடிக்கும். குற்றாலம் அருவியிலே குளித்திருக்கிறேன்’’ என்றாள். நான் ‘‘நாங்கள் நயாகரா போய் அடிக்கடி குளிக்கலாம்’’ என்று சொன்னதும் சம்மதம் சொன்னாள்.
‘இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறீர்?’
கேளுங்கள் ஐயா. நீங்கள் என் முதலாளி. பத்மப்ரியாவின் தாயாருக்குக் கனடா மாப்பிள்ளை கிடைப்பதில் பெருமைதான். ஆனால், நான் என் பெற்றோருக்கு இது பற்றி ஒன்றுமே அறிவிக்கவில்லை. லண்டனில் இருந்த என் அண்ணருக்கு மாத்திரம் சொன்னேன். நான் என்ன கேட்டாலும் அவர் செய்வார். என்னிலே அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ‘‘அண்ணை, இந்தப் பெண் மட்டும் எனக்குக் கிடைத்தால் வாழ்க்கையில் உள்ள சகல ஐஸ்வரியங்களும் கிடைப்பதற்குச் சமம். நீ அவளைப் பார்க்க வேண்டும். பேரழகி’’ என்றேன். ‘‘சரி, அவசரப்படாதே நான் வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்றார். அதுதான் என் அண்ணர். தங்கக் கட்டி. நான் கேட்டதை அவர் மறுத்ததே கிடையாது.
அடுத்த வாரம் கோயிலில் கல்யாணம் என்று ஏற்பாடு. அண்ணர் மறுநாள் காலை சென்னை வருகிறார். முதல்நாள் இரவு அபி அவளை ஸ்கூட்டரில் கடத்திக்கொண்டு போய்விட்டான். அவள் ஒரு கடிதம்கூட எனக்கு எழுதி வைக்கவில்லை. அவர்கள் வேறு கோயிலில் அதே முகூர்த்தத்தில் மணமுடித்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. அண்ணர் வந்து எனக்கு ஆறுதல் கூறினார். ‘‘இப்படியான பெண் உனக்குக் கிடைக்காமல் போனது நல்லதுதான். இவள் மோசமானவள். உன்னை இப்படி அவமானப்படுத்தியவளை மறந்துவிடு.’’
நான் கனடாவுக்கு வந்து அகதியாகப் பதிவு செய்தேன். அட்லாண்டிக் சமுத்திரத்தைத் தாண்டி வந்தாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. நான் நினைத்த மாதிரி எஞ்சினியரிங் படிப்பு அவ்வளவு இலகுவானதில்லை. ஒருவிதத் திறமையும் தேவைப்படாத, பலவித வேலைகள் செய்தேன். உணவகங்களில் கோப்பை கழுவுதல். துப்புரவுப் பணி. சில சமயம் தொழிற்சாலையில் நாள்கூலி வேலை. காதலில் தோல்வி. படிப்பில் தோல்வி. வேலையில் தோல்வி. ஆனால், மிகப் பெரிய வெற்றி ஒன்று கிட்டியது. கனடியக் குடியுரிமை.
இந்த நாலு வருடங்களில் ஒருநாள்கூட நான் அவளை மறந்தது கிடையாது. என்னுடைய பெற்றோர்களை மறந்துவிட்டேன். அண்ணரை வாரத்தில் ஒருதடவை நினைப்பேன். ஆனால் இந்தப் பெண்ணை ஒவ்வொரு நிமிடமும் நினைத்தேன். என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. இவள் யார்? என்னை ஏமாற்றியவள். இவளை ஏன் நான் நினைக்க வேண்டும். கனடிய பாஸ்போர்ட் கையில் கிடைத்த அன்று அதை முத்தமிட்டேன். நான் அகதி இல்லை. எனக்கு ஒரு நாடு கிடைத்துவிட்டது. நாலு வருடங்களாகத் திட்டமிட்டதைச் செய்தேன். சென்னைக்குப் போகும் விமானத்தில் ஏறினேன். சென்னை வந்து இறங்கிய பின்னர்தான் அண்ணருக்கு அறிவித்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை.
நான் கேள்விப்பட்டது சரிதான். அவளுக்கும் அபிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவள் ஒரு விளம்பரக் கம்பனியில் வேலை செய்தாள். நான் அவளை வீட்டிலே
பார்க்கப் போனபோது ஒன்றுமே நடக்காததுபோலத் தாயும் மகளும் என்னை அன்பாக வரவேற்றார்கள். முதல் கேள்வியாக நான் கனடியன் ஆகிவிட்டேனா என்று கேட்டாள். நான் ‘‘ஓம்’’ என்று சொன்னேன். கருநீலக் கலரில் இருந்த என்னுடைய பாஸ்போர்ட்டை வாங்கித் தடவிப் பார்த்தாள். ‘‘எனக்குக் கருநீலம் பிடிக்கும்’’ என்றாள். அதிலே இருக்கும் படத்தைப் பார்த்துப் பின்னர் என்னுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். குடிவரவு அதிகாரி பார்ப்பதுபோல அவள் பார்வை ஊடுருவியது.
வயது அதிகமாக அழகும் அதிகமாகும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். கண் மை, முகப்பூச்சு, உதட்டுச் சாயம் என்று அவள் அழகு பன்மடங்கு பெருகியிருந்தது. அவள் அணியும் ஆடம்பரமான ஆடைகளோ, அணிகலன்களோ தெரிவதில்லை. அவள்தான் தெரிந்தாள். இருபது வயதாகியிருந்த அவளை இன்னும் சினிமாக்காரர்கள் விட்டுவைத்தது ஓர் அதிசயம்தான். நான் அவளைக் கூர்ந்து பார்த்தபோது அவள் முகம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது. ‘‘உங்களை மணமுடித்தால் எனக்கு எப்போது கனடிய பாஸ்போர்ட் கிடைக்கும்?’’ என்றாள். எனக்கு அப்போது ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. என்னிடம் படிப்பு இல்லை. வேலை இல்லை. பணம் இல்லை. என்னுடைய ஒரே தகைமை, என்னிடம் கனடிய பாஸ்போர்ட் இருந்ததுதான்.
தினமும் நாங்கள் வெளியே போனோம். உணவகத்தில் உணவருந்தினோம். சினிமா பார்த்தோம். பார்க்குகள், கடற்கரை என்று சுற்றினோம். ஆனால் அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஏதோ கடினமான மனக்கணிதத்துக்கு விடை தேடுவதுபோல இருந்தாள். ஒருநாள் ‘‘உங்கள் அண்ணருக்குத் தினம் தொலைபேசி எடுத்துப் பணம் கேட்கிறீர்களே. வெட்கமாயில்லையா? நீங்கள் கனடாவில் பெரிய எஞ்சினியர். ஆனால் சாதாரண ஹொட்டலில் தங்கியிருக்கிறீர்கள். மலிவான உணவகங்களுக்கு அழைத்துப் போகிறீர்கள். நீங்கள் தரும் பரிசுகள் விளையாட்டுத்தனமாக இருக்கின்றன. ஒன்றுமே புரியவில்லை’’ என்று முகத்தில் ஈரத்துணியால் அடித்தது போலக் கேட்டுவிட்டாள்.
இந்தப் பேரழகியை மறுபடியும் இழந்துவிடுவேனோ என்ற பயம் என்னை ஆட்டியது. பணம்தான் பிரச்சினைக்குக் காரணம். என்னுடைய மூளை இரவும் பகலும் இதையே யோசித்தது. எப்படியும் அவளை மணமுடிக்காமல் கனடாவுக்குப் புறப்படக்கூடாது. அந்த நேரம் பார்த்து ஹொட்டல் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். என்னைத் தேடி வரக்கூடிய நண்பர் ஒருவர்கூட எனக்கு இல்லை. கதவைத் திறந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என்னை நாலு வருடம் முன்பு கனடாவுக்கு அனுப்பிய பழைய ஏஜன்ட். ‘‘வாருங்கள்’’ என்று சிரித்தேன். என்னுடைய வாழ்க்கையில் நான் என்றென்றுமே மறக்க முடியாத இரண்டு வருடங்கள் ஆரம்பமாகின.
ஏஜன்ட் சுற்றி வளைக்காமல் நேராக விசயத்துக்கு வந்தார். ‘‘ஒரு கணவனும் மனைவியும் அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார்கள். நான்தான் அவர்கள் பாஸ்போர்ட்டைத் தயாரித்துக் கொடுத்தேன். உண்மையான பாஸ்போர்ட்டுகள்; ஆனால் அவர்களுடைய படம் மாற்றப்பட்டது. கண்டுபிடிக்கவே முடியாது, அசல்போலவே இருக்கும். உங்களிடம் கனடிய பாஸ்போர்ட் இருப்பதால் பிரச்சினையே கிடையாது. நீங்கள் இந்தத் தம்பதியினருடன் அமெரிக்கா போகவேண்டும். அவர்கள் நியூயோர்க்கில் இறங்கியதும் அவர்களிடமுள்ள பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்று சென்னைக்குக் கொண்டு வரவேண்டும். உங்களுக்கு 4000 டொலர் கிடைக்கும்.’’ ‘‘இதுதானா? எதற்காக நான் போகவேண்டும்? பாஸ்போர்ட்டுகளை கூரியர்மூலம் அனுப்பலாமே.’’ ‘‘இதைப்பற்றி யோசிக்காமல் இருப்போமா? பயணிகளை நம்ப முடியாது. பாஸ்போர்ட்டைத் திருடி விடுவார்கள். ஒவ்வொரு பாஸ்போர்ட்டின் விலை 25,000 டொலர். இதை நீங்கள் திரும்பக்கொண்டு வந்து கொடுத்தால் போதும். இதை வைத்து இன்னும் பத்துப்பேரை அமெரிக்காவுக்கு அனுப்பலாம்.’’ ‘‘ஆபத்து இல்லையா?’’, ‘‘என்ன ஆபத்து? நீங்கள் கனடிய பாஸ்போர்ட்டில் போகிறீர்கள், வருகிறீர்கள். உங்களை என்ன கேள்வி கேட்க முடியும்? திருடுகிறீர்களா? ஏமாற்றுகிறீர்களா? இல்லையே!’’
அண்ணருக்கோ பத்மப்ரியாவுக்கோ நான் ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு நாள்தானே. போனதும் உடனே திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. 19 நவம்பர் 1995, ஞாயிற்றுக்கிழமை. 18 நவம்பர் புறப்படுவதாக இருந்து ஏஜன்டின் எண் சாஸ்திரப் பிரகாரம் 19ஆம் தேதி மாற்றப்பட்டது. கணவனும் மனைவியும் டெல்லி விமான நிலையத்தில் குடிவரவைத் தாண்டி உள்ளே நுழைந்துவிட்டார்கள். அதை உறுதி செய்துவிட்டு நான் புறப்பட்டேன். தம்பதிகளை நான் தொடர்பு கொள்ளவே கூடாது. அவர்களுக்கும் என்னைத் தெரியாது. நியூயோர்க் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த பின்னர் நான் அவர்களிடம் பாஸ்போர்ட்டைப் பெற்று மறுபடியும் விமானத்தில் டெல்லி திரும்ப வேண்டும். பேசியபடி ஏஜன்ட் 4000 டொலர் தருவார். பத்மப்ரியா விரும்பிய மாதிரி ஆடம்பரமாகத் திருமணத்தைக் கொண்டாடிவிடலாம்.
டெல்லியில் முதலில் தம்பதிகளைக் கைது செய்தார்கள். பின்னர் என்னைக் கைது செய்தார்கள். கணவன் மனைவியைப் பார்த்து அதிகாரிகளுக்குச் சிரிப்பு வந்தது. அவனுக்கு 18 வயது, அவளுக்கு 40 வயது. கள்ளப் பாஸ்போர்ட் என்றபடியால் அவர்களைக் கைது செய்யக் காரணம் இருந்தது. நான் என்ன குற்றம் செய்தேன்? என்னுடைய பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்தார்கள். ஆள்கடத்திய குற்றம் என் மேல் சுமத்தப்பட்டது. ‘‘நீங்கள் எப்படி என்னைக் கைது செய்ய முடியும்? நான் கனடியக் குடிமகன். நியூயோர்க் போகிறேன்’’ என்றேன். ‘‘ஒரே ஏஜன்ட் உங்கள் மூவருக்கும் டிக்கட் போட்டிருக்கிறார். அவரே பணம் கட்டியிருக்கிறார். உங்கள் டிக்கட் நம்பர்களின் ஓடர் அடுத்தடுத்து வருகிறது. முதலில் சனிக்கிழமை டிக்கட் போட்டு, பின்னர் ஞாயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. கள்ளப் பாஸ்போர்ட்டில் ஆள் கடத்துவது கடுமையான குற்றம். சரி, 200 டொலர் தாருங்கள் விட்டுவிடுகிறேன்’’ என்றார் அதிகாரி. முட்டாள்தனமாக நான் மறுத்துவிட்டேன்.
எதிர்பாராத திருப்பங்கள் பல நிகழ்ந்தன. ஏஜன்ட் திரும்பியும் பார்க்கவில்லை. மறைந்துவிட்டார். திகார் ஜெயிலில் என்னை அடைத்தார்கள். அது எத்தனை பிரபலமானது? சில வருடங்களுக்கு முன்னர்தான் கிரண் பேடியால் ‘திகார் ஆச்ரமம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 7000 பேர் தங்கக்கூடிய சிறையில் அப்போது 12,000 கைதிகளை அடைத்து வைத்தார்கள். தென் கிழக்கு ஆசியாவில் ஆகப்பெரிய ஜெயில் என்று சொன்னார்கள். என்னுடைய அறையில் நாலு சிமெண்ட் படுக்கைகளும் ஒரு திறந்த கழிப்பிடமும் இருந்தன. முதல் நாள் இரவு ஒரு தலையணையுடனும், போர்வையுடனும் நிலத்தில் படுத்தேன். போர்வையால் காலை மூடினால் தலையை மூட முடியவில்லை. டெல்லியில் நவம்பர் குளிர் மோசமாயிருக்கும். நடுங்கியபடி முழு இரவையும் கழித்தேன். அன்றிரவு என் வாழ்க்கை பற்றியே யோசித் தேன். பத்மப்ரியாவுக்கு ஒன்றுமே தெரியாது. அண்ணருக்கும் தெரியாது. எப்படி அவர்களிடம் முகத்தைக் காட்டுவேன்?
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிறைக்கதவு திறந்ததும் எல்லோரும் வெளியே ஓடினார்கள். நானும் ஓடினேன். முதல் இரண்டு நிமிடத்துக்கிடையில் கழிப்பறைகளைப் பாவிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். காலைச் சாப்பாடாக ரொட்டியும் தண்ணீர்போல ஓடிய சப்தியும் கிடைத்தது. சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். பசி என்ற ஒன்று என்னுடன் சிறைக்குள்ளும் வந்துவிட்டது. முதல் நாளே என்னைப் புல்லு வெட்ட அனுப்பினார்கள். சரியாக ஏழு மணிக்கு தேசியகீதம் உரத்து ஒலிக்க அரிவாள்களைப் போட்டுவிட்டு சல்யூட் அடித்தார்கள். நானும் செய்தேன். ஒரு வாரம் அப்படியே கழிந்தது. ஏஜன்ட் வந்து பார்ப்பார் என்று நினைத்தேன், வரவில்லை. கோர்ட்டிலே என்னை நிறுத்தினார்கள். 2 லட்சம் பிணை கட்டினால் வெளியே வந்துவிடலாம். அண்ணரைத் தொடர்புகொள்ளுவதா அல்லது பத்மப்ரியாவைத் தொடர்புகொள்வதா என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை.
காவலாளி ஒருத்தன் என்னுடைய நிலைமையைப் பார்த்து இரங்கி வாசுதேவ் என்ற வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினான். அவர் பார்ப்பதற்கு அப்பொழுது சினிமாவில் பிரபலமாயிருந்த ஜாக்கி ஷ்ராஃப் போலவே இருந்தார். ரூபா 35,000 கொடுத்தால் என்னை வெளியே எடுத்துவிடுவதாகச் சொன்னார். வேறுவழி இன்றிப் பத்மப்ரியாவை டெல்லிக்குக் கூப்பிட்டேன். அவள் பதறியபடி வந்து சேர்ந்தாள். என்னுடைய கதையைக் கேட்டு அழுதாள், ஆனால் நம்பவில்லை. அப்படியும் பாதி உண்மைதான் சொல்லியிருந்தேன். என் அண்ணரைப்போல ஒருவரை இந்த உலகத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஒரு கேள்வி கேட்காமல் பணத்தை அனுப்பிவைத்தார். பத்மப்ரியா பணத்தை எடுத்துப்போய் லோயரிடம் கொடுத்தாள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. டெல்லி சிறையைப் பார்த்த போது அங்கே நிறைய ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள், கொலைகாரர்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் லோயர்கள் ஏமாற்றுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
‘என்ன பிரயோசனம்? இதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்கிறீர்?’
ஐயா, உங்களுக்குத் தெரியவேண்டும். வேறு யார் என் கதையைக் கேட்பார்கள்? தயைசெய்து கேளுங்கள். ஒரு மாதம் ஆகிவிட்டது. என்னை வெளிநாட்டுக்காரர் சிறைக்கு மாற்றினார்கள். இங்கே நாங்கள் வேலைக்குச் செல்லத் தேவையில்லை. சிறையிலே இருக்கலாம். புத்தகம் படிக்கலாம். ஹிந்தி வகுப்பு நடக்கும் அதற்குப் போகலாம். ஆனாலும் சிறை சிறைதானே. பலவிதமானவர்கள் இருந்தார்கள். இத்தாலியர், ஆர்ஜண்டீனியர், அரேபியர், அமெரிக்கர், பிலிப்பினோக்காரர். ஏறக்குறைய 22 வருடமாக அங்கே வாசம்செய்த 40 வயது ஆப்பிரிக்கரும் இருந்தார். பிரெஞ்சுதான் அவருடைய மொழி. கொஞ்சம் ஆங்கிலமும் கொஞ்சம் ஹிந்தியும் தெரியும். இரண்டுதரம் தப்ப முயற்சிசெய்து பிடிபட்டதில் தன்னுடைய சிறை நாட்களைத் தானாகவே கூட்டிக்கொண்டார். 1978இல் இந்திரா காந்தி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது தானும் இருந்ததாகப் பெருமையுடன் சொல்வார். ‘‘என்ன செய்தாய்?’’ என்று கேட்டேன். அவருக்கு 18 வயது நடந்தது. படிக்க ஆசை; ஆனால் பணமில்லை. அவருடைய தாயாரைப் பிணையாக வைத்துக்கொண்டு அவரிடம் போதைப்பொருள் கொடுத்து அனுப்பினார்கள். அவர் பிடிபட்டுவிட்டார். தப்பியிருந்தால் அவருக்கு 1000 டொலர் கிடைத்திருக்கும். வாழ்நாள் முழுவதும் படித்திருக்கலாம்.
‘‘நீர் எங்கிருந்து வருகிறீர்?’’ என்று கேட்டேன். ‘‘ஓக்கடொக்கு’’ என்றார். எனக்குச் சிரிப்பு வந்தது. இந்த 40 வயதுக்காரர் எனக்குச் சிரிப்பு மூட்டுகிறார். மறுபடியும் கேட்டேன். ‘‘ஓக்கடொக்கு’’ என்றார். ‘‘அது எங்கே இருக்கிறது?’’, ‘‘புர்க்கினஃபாஸோவில். அந்த நாட்டின் தலைநகரம் ஓக்கடொக்கு’’ என்றார். ‘‘புர்க்கினஃபாஸோ என்று ஒரு நாடா? அதன் பொருள் என்ன?’’ என்று கேட்டேன். ‘‘நேர்மையான மனிதர்களைக் கொண்ட நாடு’’ என்றார். ‘‘மிகப் பொருத்தம்தான். நேர்மையான நாட்டிலிருந்து கள்ளக்கடத்தல் செய்கிறீர்.’’ அவர் சொன்னார். ‘‘எனக்கு வேறு வழி தெரியவில்லை. படிக்கவேண்டும் என்ற வெறி. இப்பொழுது படிப்பும் இல்லை. அம்மாவும் இல்லை. வாழ்வும் இல்லை.’’
நான் வெளிநாட்டுச் சிறையில் இருப்பதைக் கேள்விப்பட்டுத் தானாகவே அங்கே வந்து சேர்ந்தான் சந்திர போஸ். இவன் இலங்கைக்காரன். பார்த்தவுடனேயே இவனை யாருக்கும் பிடிக்கும். 30 வயது மதிக்கலாம். குழந்தைப்பிள்ளை முகம். விளையாட்டுக் குணம். ஒருவருக்கும் துரோகம் செய்யமாட்டான். இரண்டு பக்கமும் சாய்ந்து சாய்ந்து நடப்பான். தூரத்தில் வரும்போது உருண்டு உருண்டு வருவதுபோலத் தோன்றும். பத்து வருடமாக அதே சிறையில் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தான். எல்லாச் சிறையதிகாரிகளும் அவனிடம் நட்பாகப் பழகினர். இவனுடைய கதையும் என்னுடையது போலத்தான். ஜேர்மனி போவதற்கு இலங்கையிலிருந்து புறப்பட்டான். டெல்லியில் அவனுக்குக் கடன் அட்டை திருடும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அங்கேயே தங்கிவிட்டான்.
வீட்டிலே இருப்பதுபோல மிக மகிழ்ச்சியாக இருந்தது அவன் ஒருவன்தான். காலையில் ஒரு சுற்றுப்போய் சிறையதிகாரிகளையும் சிறையில் அடைபட்டுக் கிடப்பவர்களையும் பார்ப்பான். என்ன தேவையோ அவனிடம் கேட்கலாம். எப்படியோ வருவித்துத் தருவான். என்னிலும் பார்க்க அவனுக்கு வயது கூட. ஆனால் என்னை ‘மச்சான்’ என்று அழைப்பான். நான் ‘‘டேய் போசு’’ என்று கூப்பிடுவேன். ‘‘டேய் போசு. ஏன் வாழ்க்கையைப் பாழாக்குகிறாய். மறுபடியும் உன் பெற்றோரிடம் போய்விடு.’’ அவன் சிரித்தான். ஆட்களை மயக்கும் சிரிப்பு. அவனுக்கு இந்த வாழ்க்கை பிடித்துக்கொண்டது.
எங்களுடன் தங்கிய இத்தாலியர்கள் இருவரும் மல்யுத்த வீரர்கள்போல இருந்தார்கள். இருவரும் போதைப் பொருள் கடத்திப் பிடிபட்டவர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் சுறுசுறுப்பாகி விடுவார்கள். இத்தாலியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகள் வந்து அவர்களை நலம் விசாரிப்பார்கள். சொக்கலெட், சிகரெட் போன்றவற்றைக் கொடுப்பார்கள். போதைப் பொருள் கடத்தினாலும் ஏதோ தேசப்பிதாக்கள் போலத்தான் அவர்கள் மதிக்கப்பட்டார்கள். போசு சொல்வான் ‘‘மச்சான் நீயும் கனடியக் குடிமகன். நீ ஒரு குற்றமும் செய்யவில்லை. உன்னைப் பிடித்து அடைத்துவிட்டார்கள். உன்னை கனடியத் தூதரகத்திலிருந்து ஒருவரும் வந்து பார்ப்பதில்லை. சும்மா கனடிய குடிமகனாக இருந்து பிரயோசனம் இல்லை. உன் தோல் வெள்ளையாகவும் இருக்கவேண்டும்’’.
நான் சிறையில் இருந்த அதேசமயம் மிகப் பிரபலமானவர்கள் எல்லாம் சிறையில் இருந்தார்கள். என்னைக் கைது செய்த சமயம் பிரதம மந்திரியாக இருந்தவர் நரசிம்மராவ். அதன் பின்னர் தூங்கும் பிரதமர் தேவகவுடா பிரதமரானார். அவரைத் தொடர்ந்து குஜ்ரால். வாஜ்பாய் வந்தபோது நான் விடுதலையாகிவிட்டேன். நாலு பிரதமர்கள் என்னை ஆண்டார்கள். என் சிறைவாச ஆரம்பத்தில் பிரதமராக இருந்த அதே நரசிம்மராவ் கைதியாகப் பிடிபட்டு எங்கள் சிறையில் அடைக்கப்பட்டது எங்களுக்குப் பெருமையான விசயம். அவருடன் அவருடைய குரு சந்திராசாமியும் கைதுசெய்யப்பட்டிருந்தார். வாழ்நாள் முழுக்க நான் அதைச் சொல்லித் திரியலாம்.
சந்திராசாமி அப்பொழுது உலகப் பிரபலமாக இருந்தார். சிவப்பு, பச்சை சால்வை அணிந்து பெரிய குங்குமப்பொட்டுடன் கம்பீரமாகக் காட்சியளிப்பார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரெட் தாட்சர் சந்திராசாமியை ஆலோசித்துதான் காரியங்கள் செய்தார். சந்திராசாமி சிவப்பு ஆடை அணியச் சொன்னால் தாட்சர் அணிவார். தாயத்துக் கட்டுவார். நரசிம்மராவ் வழக்கமான வெள்ளைச் செருப்பு வெள்ளைச் சால்வையில் காணப்பட்டார். ஓக்கடொக்கு ஸொங்கோதான் அவர்கள் கைது விவரத்தை எனக்குச் சொன்னான். முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் மகன் தகப்பனுடைய பெயரில் சென்ற்கிட்ஸ் தீவு வங்கியில் 21 மில்லியன் டொலர் கட்டியதாகக் கள்ள ஆவணம் தயாரித்ததாக வழக்கு. நரசிம்மராவ் கோர்ட்டிலே நின்றபோது நீதிபதி அவரைப் பார்த்து இப்படிச் சொன்னாராம். ‘ஓ, நீங்கள் உச்சத்திலும் அதி உச்சத்தில் இருக்கலாம். ஆனால் சட்டம் அதனிலும் உயரமானது.’ அந்த வழக்குத் தள்ளுபடியாகி எனக்கு முன்னரே அவர்கள் விடுதலையானார்கள். ஒரு நாட்டின் பிரதம மந்திரிக்கே இந்தக் கதி என்றால் என் நிலைமையைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?
ஆனால் இவர்கள் இருவரிலும் பார்க்க மிகப் பிரபலமான இன்னொருவனும் அப்போது அங்கே சிறையில் இருந்தான். அவன் பெயர் சார்ள்ஸ் சோப்ராஜ். சர்வதேசத் திருடன், ஏமாற்றுக்காரன். 12 கொலைகள் செய்தவன். கோடுபோட்ட சிறை உடுப்பில் இருந்தாலும் அவனை மரியாதையுடன் நடத்தினார்கள். சிறையிலிருந்து தப்பி ஓடுவதும் பின்னர் பிடிபடுவதும் அவனுக்கு வழக்கம். அவன் தன்னுடைய கதையை பத்திரிகைகளுக்கும் சினிமாவுக்கும் விற்றுப் பணம் சேர்த்தான். அவன் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடமும் அவனுடைய வருமானம் ஒரு மில்லியன் டொலர் என்று பேசிக்கொண்டார்கள். இவனை மணந்த கனடியப் பெண் இறுதிவரை அவனுக்கு விசுவாசமாக இருந்தாள். இந்தக் கொலைகாரனும் எனக்கு முன்னரே சிறையிலிருந்து விடுதலையானான்.
என்னுடைய பிணையை ரூபா 100,000ஆகக் குறைத்ததும் அண்ணர் எப்படியோ உழைத்துக் காசு சேர்த்துக்கொண்டு லண்டனிலிருந்து வந்து என்னைப் பிணை எடுத்தார். நான் வெளியே வந்து டெல்லியிலேயே ஒரு சிறிய அறை வாடகைக்கு எடுத்து வசித்தேன். வழக்கு முடியும்வரை நான் அங்கேயே இருக்கவேண்டும். அண்ணர் மாதா மாதம் செலவுக்குப் பணம் அனுப்புவார். வெளியே இருந்தாலும் இந்த வாழ்க்கை எனக்கு நரகமாயிருந்தது. பத்மப்ரியா தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டாள். அவளுக்கு அனுப்பும் கடிதங்கள் திரும்பி வந்தன. என்னில் வெறுத்துப்போய் என்னைக் கைவிட்டுவிட்டாள். திகார் சிறையில் அடைபட்டுக் கிடந்தவனை எந்தப் பெண்தான் விரும்புவாள்?
என்னுடைய ஒரே நண்பன் சந்திரபோஸ்தான். ஒவ்வொரு வாரமும் அவனைச் சென்று பார்ப்பேன். அவனைப் பார்த்தால் அவனுடைய குதூகலம் கொஞ்சம் என்னிலும் தொற்றிவிடும். நான் வெளியே இருந்து துக்கமாயிருந்தேன். அவன் உள்ளேயிருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தான். ஒருநாள் அவன் சொன்னான். ‘‘எனக்கு வெளியே இருப்பதும் உள்ளே இருப்பதும் ஒன்றுதான்’’ என்று. ‘‘எப்படி நீ சொல்லலாம்?’’ என்று கேட்டேன். அவன் சொன்னான் ‘‘இங்கே எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். வேண்டியது கிடைக்கும். அடுத்த வேளை உணவு எங்கேயிருந்து வரும், எப்போது வரும் என்ற கவலை கிடையாது. ஆனால் நீ இப்போது வெளியே இருக்கிறாய். எனக்கு வெளியே வந்து உன்னுடன் வாழ ஆசை’’ என்றான்.
நான் திடுக்கிட்டுவிட்டேன். யாரோ சவுக்கினால் அடித்ததுபோலப் பட்டது. இத்தனை நாளும் நான் அவனிடம் அவனுடைய வழக்குப் பற்றி விசாரித்ததே இல்லை. ‘‘என்னுடைய பிணைப்பணம் ரூபா 1500. உன்னால் கட்டமுடியுமா? நான் வெளியே வரவேண்டும்.’’ எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைச் சொல்லமுடியாது. வெறும் ரூபா 1500. என்னால் நம்பமுடியவில்லை. இதை நான் எப்போவோ கட்டியிருக்கலாம். ‘‘இந்தச் சின்னத் தொகையைக் கட்ட உனக்கு நண்பர்கள் ஒருவரும் இல்லையா?’’ என்றேன். ‘‘இருந்தார்கள். அப்போது வெளியே வரவேண்டும் என்று தோன்றவில்லை. இப்போது தோன்றுகிறது’’ என்றான்.
அன்றே ரூபா 1500 பிணைகட்டி அவனை வெளியே எடுத்தேன். அவன் என்னுடன் தங்கினான். நான் மகிழ்ச்சியாக இருந்த சில நாட்கள் அவை. ‘என்னுடன் இருக்கும்போது நீ கள்ளக் கடன் அட்டை, ஏமாற்று வேலை செய்யக்கூடாது’ என்று கேட்டுக் கொண்டேன். அவனும் சம்மதித்தான். என்னுடைய வழக்கு பல தடவை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லியில் அவனுடன் சுற்றினேன். எங்கே சென்றாலும் அங்கே அவனுக்கு ஆட்கள் இருந்தார்கள். சில உணவகங்களில் காசு வாங்க மாட்டார்கள். அவனை அத்தனை மரியாதையுடன் நடத்தினார்கள். எனக்கு அது புரியவே இல்லை.
ஒருநாள் வேலையாக வெளியே கிளம்பிப்போன போஸ் பாதியிலேயே அவசரமாகத் திரும்பினான். ‘‘உன்னுடைய பத்மப்ரியா என்ன செய்தாள் தெரியுமா?’’ என்றான். ‘‘தெரியாதே. இன்றைக்கும் அவளைத் தேடிக்கொண்டுதானே இருக்கிறேன்’’ என்றேன். ‘‘மூடனே, நீ ஒரு லோயரிடம் ரூபா 35,000 கொடுத்து ஏமாந்தாயே ஞாபகம் இருக்கிறதா?’’ என்றான். ‘‘தெரியும். அவன் பெயர் வாசுதேவ். பத்மப்ரியா பணத்தை அவனிடம்தான் கொடுத்தாள்.’’ ‘‘உன்னை ஏமாற்றி இருக்கிறார்கள். பத்மப்ரியா அவனை மணந்து இங்கே டெல்லியில்தான் வாழ்கிறாள்.’’ என் நெஞ்சு பதைக்க ஆரம்பித்தது. அவள் செய்த துரோகத்திலும் பார்க்க அவளைக் கண்டு பிடித்ததில் ஏற்பட்ட ஆனந்தம்தான் பெரிதாக இருந்தது. ‘‘இங்கே இருக்கிறாளா? பத்மப்ரியாவா? நான் அவளைப் பார்க்கவேண்டும்’’ என்றேன். போஸ் என்னை உற்றுப் பார்த்தான். அப்படி அவன் என்னைப் பார்ப்பதில்லை. ‘‘அவள் உனக்குத் துரோகம் செய்தவள். நீ சிறையிலிருந்து அவளுக்காக உருகினாய். அவளோ உன்னை ஏமாற்றிய லோயரை மணந்து சந்தோசமாக வாழ்கிறாள். நீ வெளியே வரக்கூடாது என்றுகூட அவள் நினைத்திருக்கலாம் அல்லவா? அவளை மறந்துவிடு’’ என்றான்.
அவன் சொன்னதில் நியாயம் இருந்தது. அதன் பின்னர் என்னால் அங்கே இருக்க முடியவில்லை. எப்பொழுது வெளியே போனாலும் என் கண்கள் அவளைத் தேடியபடியே இருந்தன. இங்கேதான் எங்கோ அவள் இருக்கிறாள். என்ன உடை உடுத்தியிருப்பாள். டெல்லிக்காரர்போல சுரிதார் அணிவாளா? அல்லது நாகரிகமாக ஜீன்ஸ் அணிந்து உலவுவாளா? எந்தச் சனக்கூட்டத்தைக் கண்டாலும் என் கண்கள் அவளைத் தேடி அலைந்தன.
என்னுடைய நிலைமையைப் பார்த்து சந்திரபோஸ் இரக்கப்பட்டான். ஒரு நாள் என்னைக் கூட்டிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு லோயரிடம் போனான். வழக்கு விவரங்களைப் படித்த லோயர் திகைத்துப்போனார். குற்றம் செய்யத் தொடங்காத ஒருவனுக்குச் சட்டத்தின் பல பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரிவு 120 சதிக்குற்றம், பிரிவு 419 தேசத்துரோகம், பிரிவு 420 ஏமாற்று இப்படித் தாறுமாறாகக் குற்றம் பதிவு செய்யப் பட்டிருந்தது. லோயர் சொன்னார், ‘‘இந்த வழக்கிலிருந்து விடுபட பல வருடங்கள் ஆகும். லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். அப்பொழுதும் நிச்சயமில்லை. எனக்கு நீதிபதியைத் தெரியும். 2000 டொலர் கொண்டு வாருங்கள். நான் வழக்கைச் சரிபண்ணிவிடுகிறேன்.’’ ஆரம்பத்தில் அவர்கள் கேட்டது வெறும் 200 டொலர். இப்பொழுது 2 வருடங்களுக்குப் பின்னர் நான் 2000 டொலர் கொடுத்தால்தான் விடுதலையாவேன்.
இரண்டு நாளில் போஸ் 2000 டொலருடன் வந்தான். வாக்குக் கொடுத்த மாதிரியே லோயர் வழக்கைத் தள்ளுபடி செய்து என்னுடைய கனடிய பாஸ்போர்ட்டையும் மீட்டுக் கொடுத்தார். சந்திரபோஸ் விமான டிக்கட்டைத் தந்து என்னை ரொறொன்ரோ விமானத்தில் ஏற்றி
விட்டான். அவனுக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதுபற்றி நிறைய மூளையைச் செலவழிக்கத் தேவை இல்லை. விமானம் தரையைவிட்டு மேலெழும்பியபோது டெல்லி நகரம் கையளவு சிறிய படமாகத் தெரிந்தது. அந்தக் கணத்தில் சந்திரபோஸை என் மனம் மறந்தது. எனக்குத் துரோகம் செய்வதையே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட பத்மப்ரியா நினைவுக்கு வந்தாள். என்னுடனேயே அவள் ரொறொன்ரோவுக்குப் பயணம் செய்தாள்.
‘என்னுடைய அருமையான நேரத்தை வீணாக்கிவிட்டீர். இதையெல்லாம் எனக்கு ஏன் சொல்கிறீர்?’
‘உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன். நீங்கள்தானே எஜமானன். ஆறு மாதமே உங்களிடம் வேலை செய்திருந்தாலும் நான் விசுவாசமான ஊழியன். என்னுடைய எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. ஐயா, எனக்கு முக்கியமான கடிதம் வந்திருக்கு.’
‘அதற்கு என்ன?’
‘என்னவா? ஆதரவான ஐயா! நீங்களல்லவோ என் முதலாளி. நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்.’
‘என்ன செய்யவேண்டும்?’
‘இரண்டு வாரம் லீவும், 2500 டொலர் முன்பணமும் வேண்டும்.’
‘முன்பணமா? எதற்கு?’
‘கடிதம் வந்திருக்கு. பத்மப்ரியா. பத்மப்ரியாவிடமிருந்து…’
‘வரட்டுமே!’
‘இது என்ன? கருணையானவரே! இத்தனை நீண்ட கதை கேட்டபின்னரும் உங்களுக்குப் புரியவில்லையா? அடுத்த பிளேனில் நான் சென்னைக்குச் செல்லவேண்டும். பத்மப்ரியா சொல்லிவிட்டார். சொல்லிவிட்டார். நான்தான் அடுத்த கணவன்.’
நவம்பர் 2011: குதிரைக்காரன்
அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று சொல்லத் தொடங்கியிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னர் பழைய சந்தையில் வாங்கிய கோட்டை அணிந்திருந்தான். வயது ஏறும்போது கோட்டும் வளரும் என்று எண்ணினானோ என்னவோ அது அவன் உடம்பைத் தோல்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டது. விளிம்புவைத்த வட்டத் தொப்பி ஒன்றைத் தரித்திருந்தான். சாமான்கள் நிரம்பிய முதுகுப்பை பாரமாகத் தொங்கியது. லராமி ஆற்றை ஒட்டிய பாதையில் நடந்து போனால் மார்க் ஓகொன்னருடைய பண்ணை வரும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் எத்தனை மணி நேரம் அப்படி நடக்க வேண்டும் என்பதை எவரும் சொல்லவில்லை. மரப் பாலங்கள் அடிக்கடி வந்தன. மிகவும் எச்சரிக்கையாக அவற்றைக் கடக்க வேண்டும். ஒன்றிரண்டு பலகைகள் உடைந்து தண்ணீர் மினுங்கிக்கொண்டு கீழே ஓடுவது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பாதை இரண்டாகப் பிரிந்த ஒவ்வொரு சமயமும் பிலிப்பைன் நாட்டில் இருக்கும் தன் தகப்பனை நினைத்துக்கொண்டான். அவருடைய அறிவுரை பயனுள்ளதாகத் தோன்றியது. வழிதெரியாத புதுப் பிரதேசத்தில் நடக்கும்போது எப் போதும் பாதை பிரிந்தால் இடது பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வழி தவறினால் திரும்பும்போது வலது திருப்பங்களை எடுத்துப் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்துவிடலாம். இடம், வலம் என்று மாறி மாறிச் சென்றால் திரும்பும் வழி மறந்து தொலைந்துபோய்விட வேண்டியதுதான். எத்தனை நல்ல புத்திமதி. மான் கூட்டம் ஒன்று அவனைத் தாண்டிப் போனது. கொம்புவைத்த ஆண் மான் பாதையின் நடுவில் நின்று ஒருவித அச்சமும் இல்லாமல் எதையோ தீர்மானிக்க முயல்வதுபோல அவனை உற்றுப் பார்த்தது. அது வெள்ளைவால் மான் என்பது அவனுக்குப் பின்னாளில் தெரியவரும். கறுப்புவால் மான்கள் இன்னும் பெரிதாக இருக்கும். கீழே தூரத்தில் பைஸன்கள் பள்ளத்தாக்கிலே மேய்ந்துகொண்டிருந்தன. ஆனால் அவன் பயப்படுவது கரடிகளுக்குத்தான். அவை ஆபத்தானவை என்று கேள்விப்பட்டிருந்தான். ஓநாய்களும் அவனுக்கு அச்சம் ஊட்டுபவை.
பனிக்காலம் முடிந்துவிட்டாலும் இன்னும் சில இடங்களில் கடைசிப் பனி உருகாமல் தரையை ஒட்டிப் பிடித்திருந்தது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஐஸன்ஹோவர் தனது இரண்டாவது தவணை ஆட்சியைத் தொடங்கி நாலு மாதங்கள் ஆகிவிட்டன. அவனுடைய நாட்டு ஜனாதிபதி மகசெசெ விமான விபத்தில் இறந்துபோய் இரண்டு வாரங்கள் ஆகின்றன. பின்னாளில் உலகப் பிரபலமாகப் போகும் ஒசாமா பின்லாடன் பிறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. இது ஒன்றும் அவனுக்குத் தெரியாது. முதுகுப்பையில் பத்திரமாக அவன் காவிய மரக்கன்றுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் அவன் கவனம் இருந்தது. பண்ணை எப்போது வரும் என அலுத்துப்போய்ச் சற்று நின்று வானத்தை நிமிர்ந்து பார்த்தபோது கண்களை அவனால் நம்ப முடியவில்லை. மஞ்சள் தலை கறுப்புக் குருவிகள் ஆயிரம் ஆயிரமாகத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. இவை என்ன பறவைகள் எனக் கண்டுபிடிக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். மீண்டும் பார்வையை நேராக்கியபோது ‘ஓகொன்னர் பண்ணை’ என எழுதிய பெயர்ப் பலகை கண்ணில் பட்டது..
ஓகொன்னர் நீண்ட பொன்முடி விழுந்து கண்களை மறைக்கத் தட்டையான அகன்ற நெஞ்சுடன் ஆறடி உயரமாகத் தோன்றினார். மாலை ஆறு மணி ஆகிவிட்டதால் தூரத்தில் தெரியும் இரண்டு மலை முகடுகளைப் பார்த்தபடி ஓய்வெடுத்தார். சூரியனுடைய கடைசிக் கிரணங்கள் அவர் முகத்தைச் சிவப்பாக்கின. அவருக்கு முன் இருந்த இனிப்பு மேசையில் நுரை தள்ளும் பானம் இருந்தது. பியர் ஆக இருக்கலாம். மரநாற்காலிகள் நிறைய இருந்தும் அவர் அவனை உட்காரச் சொல்லவில்லை. மார்ட்டின் தொப்பி விளிம்பில் ஒரு விரலை வைத்து அது போதாதென்று நினைத்தோ என்னவோ இடுப்புவரை குனிந்து வணக்கம் சொன்னான். ‘பண்ணையில் என்ன வேலை செய்யத் தெரியும்?’ என்று அவனிடம் கேட்டார். மார்ட்டின் ‘எல்லா வேலைகளும் தெரியும். கோழி வளர்ப்பு, பன்றிகள், ஆடுகள், மாடுகள் எல்லாம் பராமரிப்பேன். தச்சு வேலையும் கொஞ்சம் கற்றிருக்கிறேன்’ என்றான். அவனுடைய தகப்பன் ‘தச்சுவேலை உனக்கு உதவும். அது யேசுநாதருடைய தொழில்’ என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘குதிரை பராமரித்து உனக்கு ஏதாவது அனுபவம் உண்டா?’ என்றார். ‘இன்னும் இல்லை ஐயா. ஆனால் எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்வேன்’ என்றான். ‘அப்ப சரி. உனக்குத் தச்சு வேலை வரும் என்பதால் நீ வேலிகளைச் செப்பனிடலாம். குதிரைப் பராமரிப்பாளன் தொம்ஸனுக்கு உதவியாளாக இரு’ என்றார்.
‘நன்றி, ஐயா. ஒரு சின்ன விண்ணப்பம். ஒரு செடி கொண்டு வந்திருக்கிறேன். அதை நடுவதற்கு அனுமதி வேண்டும்’ என்றான். ‘செடியா? என்ன செடி?’ என்றார் ஓகொன்னர். ‘அஸ்பென் செடி ஐயா. அதிவேகமாக வளரும். தன் இனத்தைத் தானே பெருக்கிக்கொள்ளும். பண்ணைக்குச் சுபிட்சத்தையும் மனிதர்களுக்கு அமைதியையும் கொடுக்கும்’ என்றான். ‘அப்படியா, மிக்க மகிழ்ச்சி. அஸ்பென் செடி ஒன்றை நானும் தேடிக்கொண்டிருந்தேன். நீ கொண்டுவந்துவிட்டாய், நன்றி. வராந்தாவுக்கு முன் நட்டுவிடு. நான் தினம் தினம் பார்க்கலாம்’ என்றார். மார்ட்டின் ‘ஆகட்டும்’ என்றான்.
தொம்ஸன் ஒரு கறுப்பின அமெரிக்கன். அறுபது வயதில் சற்றுக் கூன் விழுந்து ஆறடி உயரமாக இருந்தான். யோசித்துப் பார்த்தபோது மார்ட்டின் அமெரிக்காவில் ஆறடிக்குக் குறைவானவர்களை இன்னும் சந்திக்கவில்லை. நேரம் இருட்டிவிட்டதால் சமையல் அறை பூட்டு முன்னர் தொம்ஸன் அவனுக்கு இரவு உணவு வாங்கிவந்து கொடுத் தான். வாட்டிய மாட்டிறைச்சி, பீன்ஸ், ரொட்டி. குதிரை லாயத் துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு அறையை அவனுக்கு ஒதுக்கி அங்கே படுத்துக்கொள்ளச் சொன்னான். மரக்கட்டிலின் மேல் பரப்பிய வைக் கோல் மெத்தை ஒன்று கிடந்தது. அதிலே கால்களை நீட்டிப் படுத்த போதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனுக்கு மேல் சரி நேரே பழுப்பு நிறத்தில் பெரிய வௌவால் ஒன்று தலைகீழாகத் தொங்கியது. அவன் அதை பார்த்துக்கொண்டிருந்தபோது அது கால்களை விடுவித்து நேரே விழுந்து பாதியில் செட்டையை அடித்து வெளியே பறந்துபோனது. அவன் நியூயோர்க்கில் ஒருவாரம் தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அமெரிக்காவில் காலடிவைத்த அந்த முதல் நாள் அவனுக்கு ஐந்தாவது மாடியில் தங்க இடம் கொடுத்தார்கள். எவ்வளவோ அவன் மறுத்தும் அவர்கள் சம்மதிக்கவில்லை. கழிப்பறை போவதற்கு 5 மாடிகளும் இறங்கிக் கீழே வந்தான். மறுபடியும் மேலே ஏறினான். மூன்றாம் நாள்தான் கழிப்பறை ஐந்தாம் மாடியிலேயே இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தான். தரையில் கழிப்பறை இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் ஐந்தாவது மாடியில் ஒரு கழிப்பறையை உருவாக்க முடியும் என்பது அவனுக்குப் பெரும் புதிராகவே இருந்தது. எப்படி யோசித்தும் அதைக் கற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் முதல் அதிசயமாக அது மனத்தில் பதிந்துபோய்க் கிடந்தது.
குதிரைகள் கால் மாறி நிற்பதும் அவற்றின் கனைப்புச் சத்தமும் அவனை மறுநாள் காலை எழுப்பியது. தொம்ஸன் அவனை அழைத்துச் சென்று குதிரைகளை அறிமுகப்படுத்தினான். அவற்றின் பெயர்கள் எலிஸபெத், தண்டர்போல்ட், ஸ்கைஜம்பர், ரப்பிட்ஸ்டோர்ம் என்று பலவிதமாக இருந்தன. குதிரைகளைப் பார்த்தவுடனேயே அவனுக்கு அதீதப் பிரியம் ஏற்பட்டுவிட்டது. அவற்றைப் பராமரிப்பது பற்றித் தொம்ஸன் சொல்லித் தந்தான். மார்ட்டின் ஒவ்வொரு குதிரையையும் தொட்டு அதன் பெயரைச் சொல்லி சிநேகப்படுத்திக்கொண்டான். குதிரை வளர்ப்பு பற்றி நிறையக் கேள்விகள் கேட்டான். உயர்ஜாதிக் குதிரை ஒன்று மட்டும் கூடிய பாதுகாப்புடன் பிரத்தியேகமாகப் பராமரிக்கப்பட்டது. பகலிலும் மின்சார பல்புகள் எரிந்தன. ‘குதிரையின் கர்ப்பகாலம் 11 மாதம். கருத்தரிக்கக்கூடிய சிறந்தமாதம் மே அல்லது ஏப்ரல். அதிக வெளிச்சம் கருத்தரிக்கும் வாய்ப்பைக் கூட்டும். அதுதான் அப்படியான கவனம். அந்தக் குதிரை சீக்கிரத்தில் கர்ப்பமடையப்போகிறது’ என்று தொம்ஸன் கூறினான்.
குதிரை வளர்ப்பைப் பற்றிய எல்லாக் கலைகளையும் பயின்றாலும் மார்ட்டினுக்குக் குதிரைச் சவாரியில் அதிக விருப்பம் இருந்தது. அதையும் தொம்ஸனிடம் கற்றான். அவனை இயற்கையான குதிரை ஓட்டி எனத் தொம்ஸன் வர்ணித் தான். ஏறி உட்கார்ந்ததும் குதிரை ஆளை எடை போட்டுவிடும். மார்ட்டினை எந்தக் குதிரையும் இடர்ப்படுத்தவில்லை. வெகு சீக்கிரத்தில் நல்ல குதிரை ஓட்டக்காரனாகத் தேர்ந்துவிட்டான். 2000 ஏக்கர்கள் கொண்ட அந்தப் பண்ணையை அவன் குதிரைமேல் அமர்ந்தபடியே சுற்றிப் பார்வையிட்டான். ஆரம்பத்தில் அவனுடைய பணி வேலிகளைச் செப்பனிடுவது. காட்டு மிருகங்கள் அடிக்கடி வேலியை உடைத்து உள்ளே வந்துவிடும். அவற்றைத் துரத்துவது தான் பெரிய தொல்லை. அவனுடைய அப்பா கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்திய தச்சு வேலை அவனுக்குக் கைகொடுத்தது.
ஒரு நாள் மாலை நேரம் எசமான் அவனை அழைத்தார். அவர் படுக்கை அறைக்கு முன் இருந்த வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து பியர் குடித்தபடி சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அவன் நட்ட அஸ்பென் மரம் கிடுகிடுவெனப் பத்தடி உயரத்துக்கு வளர்ந்துவிட்டது. அந்த மரத்தை உற்றுப் பார்த்தார். ஒரு சோடா முடி அளவான இலைகள்-கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவர் அதைப் பிடித்து ஆட்டுவது போல-எந்த நேரம் பார்த்தாலும் துடித்தபடி இருந்தன. மரத்தின் வெள்ளையான மரப் பட்டைகளில் குறுக்கு மறுக்காகக் கோடுகள் விழுந்திருந்தன. ‘இது என்ன கோடுகள் தெரியுமா?’ என்றார் எசமான். ‘இதைக் கேட்கவா தன்னைக் கூப்பிட்டார்’ என மனத்துக்குள் நினைத்தபடி ‘தெரியாது எசமான்’ என்றான். ‘பண்ணை வேலியில் நிறையப் பொத்தல்கள் உள்ளன. எப்படியோ மான்கள் உள்ளே நுழைந்துவிடுகின்றன. ஆண் மான்களுக்கு அஸ்பென் மரம் நிரம்பப் பிடிக்கும். அவை தங்கள் கொம்புகளைத் தீட்டுவது அஸ்பென் மரத்தில்தான். அவை வளைந்து கொடுப்பதால் மான்களுக்குச் சுகமாக இருக்கும். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் இந்த மரங்களை அம்புகள் செய்வதற்கு மட்டும் பாவித்தார்கள். யாராவது அஸ்பென் மரத்தை வெட்டி வேறு எதற்காவது பயன்படுத்தினால் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை அரசன் வழங்கினான். அது தெரியுமா?’ என்றார். அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்படியா?’ என்றான். ‘அதோ, இலைகள் துடிக்கின்றன, பார்த்தாயா?’ என்றார். அப்பொழுது காற்று ஒரு சொட்டுக்கூட இல்லை. ‘இந்த மரத்துக்கு நடுங்கும் அஸ்பென் என்று பெயர். அப்படி ஏன் பெயர் வந்தது தெரியுமா?’ என்றார். அவர் கேட்ட ஒரு கேள்விக்குகூட அவனுக்கு விடை தெரியவில்லை. ஆனால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலாக இருந்தான். அதற்கிடையில் அவருடைய ஒரே மகள் அலிஸியா துள்ளிக்கொண்டு வந்தாள். அவளுக்கு பதினான்கு வயது தொடங்கியிருந்தது. மிகப் பெரிய அழகியாக வருவதற்குத் திட்டம் போட்டிருந்தாள். இரண்டு பக்கமும் கூரிய முனைகள் கொண்ட நீலக் கண்கள். தகப்பனுடைய காதில் குனிந்து எதையோ சொல்லி அவருடைய கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள். அவள் வந்த தோரணையும் தகப்பனை அழைத்துப்போனதும் அவளை எசமானி என்றே காட்டியன. மார்ட்டின் அதே இடத்தில் பல நிமிடங்கள் நின்றிருந்தான். எசமான் திரும்பவில்லை. தன் அறைக்குப் போகாமல் தொம்ஸனை தேடிச் சென்று அவனிடம் அஸ்பென் மரம் ஏன் நடுங்குகிறது என்று கேட்டான். தொம்ஸனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ‘நடுங்குகிறதா?’ என்ற சொல்லை மட்டும் உதிர்த்தான்.
அடுத்த நாளும் அதே நேரத்துக்கு எசமான் அவனை அழைத்தார். முந்திய நாள் அவர் அழைத்த காரணம் என்னவென்று அப்போதுதான் தெரிந்தது. அஸ்பென் மரத்தைப் பற்றிய விடுகதையை அவர் மறந்துவிட்டார். ‘குதிரைகளைப் பற்றி எல்லாம் படித்துவிட்டாயா? என்றார். ‘அப்படியே எசமான்’ என்றான். ‘பண்ணை வேலிகளைத் தினம் சோதிக்கிறாயா?’ என்றார். ‘சோதிக்கிறேன்’ என்று பதில் கூறினான். ‘துப்பாக்கி பிடித்துச் சுடுவாயா?’ என்றார். ‘இல்லையே, எசமான்.’ ‘தொம்ஸன் உனக்குச் சொல்லித் தரவில்லையா? குதிரை பராமரிப்பாளனுக்குத் துப்பாக்கிப் பயிற்சி முக்கியமல்லவா?’ என்றார். மார்ட்டினுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் தொம்ஸன் குதிரை ஓட்டம் சொல்லித் தந்தது போலத் துப்பாக்கிப் பயிற்சியும் கொடுத்தான். அது ஒன்றும் குறி பார்த்துச் சுடும் தந்திரம் அல்ல. எப்படித் துப்பாக்கியில் ரவை போடுவது, எப்படி விசையை இழுப்பது. எப்படிக் கழற்றிப் பூட்டுவது, அவ்வளவுதான். எசமானோ அல்லது தொம்ஸனோ அவனுடைய துப்பாக்கி சுடும் வல்லமையை ஒரு நாள் சோதிக்கக் கூடும் என எதிர் பார்த்து அதற்குத் தயாராக இருந்தான். ஆனால் அவனுக்கான சோதனை வேறு உருவத்தில் வந்தது.
அவர்களிடம் தண்டர்போல்ட் என்று ஒரு குதிரை இருந்தது. உயர்ந்த ஜாதிக் குதிரை. ஒரு நல்ல ரேஸ் குதிரையாக அதற்குப் பயிற்சி கொடுக்கலாம் என்று எசமான் சொல்லியிருந்தார். ஒருநாள் பயிற்சியின்போது அது காலை உடைத்துக் கொண்டது. எசமான் குதிரையைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டார். மார்ட்டின் வேலை பார்த்த அத்தனை வருடங்களிலும் அவர்கள் ஒரு குதிரையைக்கூடக் கொன்றதில்லை. சுடுவதற்கு தொம்ஸன் மறுத்துவிட்டான். ‘இரண்டு நிமிட வேலை அது. நீயே செய்’ என்றான். கடந்த மூன்று வருடங்களாக மார்ட்டின்தான் இந்தக் குதிரையைப் பராமரித்தவன். தண்ணீர் காட்டியவன். அதன் உடம்பை மினுக்கியவன். எத்தனையோ தடவை அதன்மீது சவாரி போயிருக்கிறான். இவன் வேறு வழியில்லாமல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு போய் அதன் முன்னால் நின்றான். ஒரு காலை நொண்டிக்கொண்டு குதிரை இவனையே பார்த்தது. வளைந்து அதன் நெற்றியில் முத்தமிட்டான். குதிரைக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அதன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக் குழாயை வைத்து அதை அழுத்த முடியாமல் நீண்ட நேரம் நின்றான். பின்னர் விசையை அழுத்தினான். பெரிய சத்தம் எழுந்தது, ஆனால் குதிரை ஒன்றுமே செய்யாமல் நின்றபோது அவன் திகைத்துப் பின் வாங்கினான். ஒலி எழுப்பாமல், காலை அசைக்காமல், வாலை ஆட்டாமல் அப்படியே பக்கவாட்டில் சரிந்து குதிரை விழுந்தது. அந்தக் காட்சி அவனுக்கு ஆயுளுக்கும் மறக்க முடியாததாகிவிட்டது. தன் வாழ் நாளில் ஆக நீண்ட இரண்டு நிமிடம்.
தொம்ஸன் நீண்ட நோயில் படுத்ததும் குதிரைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய கடமை மார்ட்டின்மேல் விழுந்தது. குதிரைகளுக்கு வைக்கோல், ஓட்ஸ், தண்ணீர் காட்ட வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும். அவற்றின் குளம்புகளை அடிக்கடிப் பரிசோதிப்பதற்குத் தவறக் கூடாது. இன்னொரு முக்கியமான கடமை தடுப்பூசி போடுவது. அத்துடன் லாயத்தில் குளவி கூடுகட்டி இருக்கிறதா என்பதைத் தினம் சோதிப்பான். குதிரைக்குப் பிரதான எதிரி குளவி. இத்தனை பிரச்சினைகள் போதாதென்பதுபோல இந்தச் சமயத்தில்தான் எசமானின் மகள் அலிஸியாவுக்கு மார்ட்டின்மேல் காதல் ஏற்பட்டது. நீலக்கண் அழகி அவள். மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். மிக நுட்பமான அறிவு அவளுக்கு என அவளுடைய ஆசிரியைகள் புகழ்ந்தார்கள். பெற்றோருக்கு ஒரே புத்திரி. மார்ட்டினோ பெரிய படிப்பு ஒன்றும் இல்லாமல் கூலிக்கு வேலைசெய்பவன். அவனுக்கு வயது 21; அவளுக்கு 17. அதுதான் சங்கதி.
பெரிய காரியங்கள் எல்லாம் சின்ன விசயங்களில்தான் ஆரம்பமாகும். மான்களில் அதி உயரமானதும் எடை கூடியதும் மூஸ்மான்தான். அது ஒருநாள் வேலியை உடைத்துப் பண்ணைக்குள்ளே வந்துவிட்டது. இந்தச் செய்தியைக் கொண்டுவந்தது அலிஸியா. மூஸ்மானைக் கண்டதும் மார்ட்டின் திகைத்துவிட்டான். அவன் சவாரிசெய்த குதிரையிலும் பார்க்க அது பெரியது; 1500 றாத்தல் எடையிருக்கும். காட்டுக்காளான் போலப் பக்கவாட்டில் படர்ந்திருக்கும் கொம்புகள். இரண்டு மூன்று மணிநேரமாக அதைத் துரத்தித் துரத்திப் பண்ணைக்கு வெளியே கலைத்தான், வேலியைச் செப்பனிட்டுவிட்டு வியர்வை உடம்பில் வழிய லாயத்துக்குத் திரும்பினான். அவர்களிடம் அப்போது நாற்பது குதிரைகள் இருந்தன. அலிஸியா குதிரைச் சவாரிக்கான உடுப்பு அணிந்து கம்பீரமாக அவளது குதிரை மேல் ஆரோகணித்திருந்தாள். திடீரென்று முதல் நாள் இரவு ஏதோ அவளுக்கு நடந்து விட்டது போல வித்தியாசமான பெண்ணாகத் தெரிந்தாள். இரண்டு கைகளாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஆடையை பிடித்து இழுத்து உடம்பிலிருந்து விடுவித்துக்கொண்டாள். அது அவனை என்னவோ செய்தது. ‘ஏ பிலிப்பினோ, என்னோடு சவாரிப் போட்டிக்கு வா’ என்றாள். அவனை அவள் பெயர் சொல்லி அழைத்ததே கிடையாது. அவளுடையது அதிவேகமான குதிரை. இவன் தரையைப் பார்த்தபடி பேசாமல் நின்றான். ‘என்ன பயந்துபோய் விட்டாயா?’ என்று சீண்டினாள். மார்ட்டின் வழக்கமாக ஏறும் குதிரை வேகத்துக்குப் பேர் போனது அல்ல, ஆனால் நாளுக்கு 100 மைல் தூரம் களைப்பில்லாமல் ஓடக்கூடியது. அதில் ஏறினான். அவள் தன் குதிரையை முடுக்கிவிட்டாள்.
மார்ட்டின் நிதானமாகப் பின் தொடர்ந்தான். அவளோ குதிரையின் முதுகோடு வளைந்து படுத்துக்கொண்டு அதன் ஓர் அங்கமாகவே மாறி குதிரையை வேகமாக ஓட்டினாள். நீண்ட நேரத்துக்குப் பின்னும் அவனது குதிரை களைப்பு தெரியாமல் ஒரே வேகத்துடன் ஓடியது. மிகச் சமீபமாக வந்துவிட்டான். இன்னும் சில நிமிடங்களில் அவளை முந்தி விடலாம். கடைசி நிமிடத்தில் குதிரையை இழுத்துப் பிடித்து வேகத்தைக் கட்டுப்படுத்தினான். எசமானின் மகளிடம் தன் திறமையைக் காண்பிப்பதற்கு? அவனுக்கு என்ன பைத்தியமா ‘என்ன, பிலிப்பினோ, நீ எனக்கு விட்டுக் கொடுத் தாயா?’ என்றாள். அவன் ‘இல்லையே’ என்றான். ‘சரி சரி பேசாதே. நீ இரண்டாவதாக வந்ததற்கு உனக்கு ஒரு பரிசு தர வேண்டும்’ என்று சொல்லியபடி அவனை அணுகிக் குதிரை மேல் அமர்ந்தபடியே அவனுக்கு ஒரு முத்தம் தந்தாள். அன்று அவன் லாயத்துக்குத் திரும்பிய பின்னர் ஒன்றுமே செய்யவில்லை. சாப்பிடவில்லை. குதிரைகளைக் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் வைக்கோல் மெத்தையில் படுத்தபடி அவள் இரண்டு கைகளாலும் உடுப்பை இழுத்து உடம்பிலிருந்து விடுவித்ததைத் திருப்பி திருப்பி நினைவுக்குக் கொண்டுவந்தபடி தூங்கிப்போனான்.
அப்படித்தான் அவர்கள் காதல் ஆரம்பமானது. தினம் தினம் சந்தித்துக் கொண்டார்கள். அவள் குதிரைச் சவாரிக்கான உடுப்பில் இருப்பாள். இவன் என்ன வேலை செய்துகொண்டிருந்தானோ அந்தக் கோலத்தில் புறப்படுவான். அவன் பயத்தில் நடுங்கிக் கொண்டே அவளிடம் வருவான். ‘பிலிப்பினோ, பிலிப்பினோ’ என அவனை அழைத்து ஆணையிடுவாள். ‘என்னை விட்டுவிடு. இது சரியாக வராது’ என அவன் கெஞ்சுவான். ‘ஏ பிலிப்பினோ, உனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காதுகளுக்கு நடுவில் மண்டையில் உனக்கு ஒன்றுமே இல்லை’ என்பாள். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘எசமானிடம் குதிரை சுடும் துப்பாக்கி இருக்கிறது’ என்பான். ‘முட்டாள், உன்னைத் திருத்த முடியாது. அஸ்பென் மரம்போல நீ எப்பவும் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்’ என்பாள்.
ஒருநாள் அவன் கேட்டான். ‘எதற்காக அஸ்பென் மரம் நடுங்குகிறது?’ அவள் சொன்னாள். யூதாஸ் இஸ்காரியத் யேசுவின் 12 சீடர்களில் ஒருவன். அவன் முப்பது வெள்ளிப் பணத்துக்காக ஒரு துரோகச் செயலைச் செய்தான். மதகுருமார்களுடன் யேசுவைத் தேடி படை வீரர்கள் வந்தபோது யேசுவின் கன்னத்தில் முத்தமிட்டு யூதாஸ் அவரை அடையாளம் காட்டிக் கொடுத்தான். யேசுவைப் படை வீரர்கள் பிடித்துக்கொண்டு போன உடனேயே தன் குற்றத்தை உணர்ந்து யூதாஸ் வெள்ளிப்பணத்தை மதகுரு மார்களிடம் வீசி எறிந்துவிட்டு, துக்கம் தாளாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான். யேசு சிலுவையில் அறையப்படு முன்னர் அவன் இறந்துபோனான். யூதாஸ் தூக்கில் தொங்குவதற்குத் தேர்வு செய்தது அஸ்பென் மரம். அந்தக் கணத்திலிருந்துதான் அஸ்பென் மரம் நடுங்குகிறது என்பது பரம்பரைக் கதை.’
அலிஸியா அந்தக் கதையைச் சொல்லிவிட்டுத் தன் இரண்டு கைகளாலும் மார்ட்டினின் கன்னத்தைத் தொட்டுப் பிடித்துக்கொண்டு. ‘மரம் நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் உனக்கு நான் இருக்கிறேன்’ என்றாள். அவள் சொன்னதை நம்புவதற்கு அவனுக்குப் பெரிய ஆசை. அந்த வீட்டில் அவள் ஓர் இளவரசி போலத்தான் வாழ்ந்தாள். ஒரே செல்லப் பெண். சின்ன வயதில் இருந்து அவள் வைத்ததுதான் சட்டம். அவளை மீறி வீட்டிலே ஒன்றும் நடந்தது கிடையாது. மார்ட்டினை மணமுடிக்கப் போவதாகப் பிடிவாதமாக, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். தகப்பன் எவ்வளவோ முயன்று பார்த்தார். ஒரு நாள் மனைவியிடம் சொன்னார். ‘குதிரைவால்போல இவள் வளர வளர இவளுடைய புத்தி கீழே போகிறதே. இவளை என்ன செய்வது?’ தாயாருக்கு மகளின் குணம் தெரியும். அவர் கணவரிடம் சொன்னார். ‘இழு என்று எழுதியிருக்கும் கதவைத் தள்ளித் திறக்கப் பார்க்கிறீர்கள். அவளை உங்களால் மாற்ற முடியாது. அவள் விருப்பத்துக்குவிடுங்கள்.’ இறுதியில் ஒருநாள் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பல வருடங்கள் அவர்களுக்குப் பிள்ளையே பிறக்காமல் கடைசியில் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘ஹனிதா’ என்று பெயர் சூட்டினார்கள்.
***
அந்த உணவகம் பிரதான சாலையிலிருந்து ஒதுங்கியிருந்தது. மங்கிய வெளிச்சமும் பழசாகிப்போன தரை விரிப்பும் அது வசதியானவர்கள் செல்லும் உணவகம் அல்ல என்பதை நினைவூட்டியன. மேசைகளும் நாற்காலிகளும் தரையிலே பூட்டப்பட்டிருந்தன. விவசாயிகளும் குடியானவர்களும் அங்கங்கே அமர்ந்து ஏதோ பானம் அருந்தினார்கள். சுவரிலே மாட்டியிருந்த டிவி பதினெட்டு நாள் தொடர் புரட்சிக்குப் பின்னர் பதவி பறிபோன எகிப்து அதிபர் முபாரக்கைத் திருப்பித் திருப்பி காட்டியது. டிவிக்கு முன் இருந்தாலும் அதை நிமிர்ந்து பார்க்காமல் அந்தப் பெண் உட்கார்ந்திருந்தார். அவர் உணவுக்கு ஆணை கொடுக்கவில்லை. யாருக்காகவோ காத்திருப்பது தெரிந்தது. ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன். ‘நான்தான் ஹனிதா’ என்றார். அவருக்கு முப்பத்தோரு வயது இருக்கும். அந்த வயதில்தான் ஒரு பெண் அவருடைய அழகின் உச்சத்தில் இருக்கிறார் என்று ஆராய்ச்சி சொன்னது. அந்த ஆராய்ச்சி முடிவு சரியானதுதான். கறுப்பு முடி. உடலை இறுக்கிய உடை. அதற்கு மேல் குளிர்கால அங்கி அணிந்திருந்தார். முழங்கால் வரை உயர்ந்து நின்ற கறுப்பு பூட்ஸ்கள். கழுத்தைச் சுற்றி மெல்லிய ஸ்கார்ஃப். ஒரு சிறிய நாட்டின் இளவரசி போன்ற அழகான தோற்றத்தோடு அவர் அந்த உணவகத்தில் சற்றும் பொருத்தமில்லாமல் அமர்ந்திருந்தார்.
‘உங்களுடைய சிறுவயது ஞாபகம் என்ன?’ என்று கேட்டேன். ‘நான் பிறக்கும் முன்னரே என்னுடைய தாத்தாவும் பாட்டியும் இறந்துவிட்டார்கள். எனக்குத் தெரிந்தது என் அம்மாவும் அப்பாவும்தான். என் அம்மா சாதாரண குதிரைக்காரனான அப்பாவைக் காதலித்துப் பிடிவாதமாக மணந்துகொண்டார். அவர் சொல்லித்தான் எனக்கு அது தெரியும். ஆனால் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தியதை ஒருநாளாவது நான் கண்டது கிடையாது. அம்மா என் அப்பாவை ‘ஏ பிலிப்பினோ’ என்றுதான் இறுதிவரை அழைத்தார். என் தகப்பனும் கணவன் போல நடக்காமல் ஒரு கீழ்ப்படிதலான வேலைக்காரன் போலவே நடந்தார். வீட்டு நாயை அதட்டுவது போலவே அம்மா அப்பாவுடன் பேசுவார். அம்மாதான் பண்ணைக்கு முதலாளி. அப்பா ஒரு சேவகன். ஒரேயொரு மாற்றம் என்னவென்றால் மணமுடித்த பின்னர் அப்பா அம்மாவின் படுக்கையறையைப் பகிர்ந்துகொண்டதுதான்.
‘உங்களுடைய அம்மா அவ்வளவு மோசமானவரா?’ ‘அப்படிக்கூடச் சொல்ல முடியாது. அவருடைய புத்திக் கூர்மையும் வியாபாரத் தந்திரங்களும் அதிசயிக்கவைப்பவை. பண்ணையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார். அவர் சிந்திப்பார், அப்பா அதற்குச் செயல்வடிவம் கொடுப்பார். மாடுகள், ஆடுகள், பன்றிகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டுக் குதிரையில் மட்டுமே முதலீடு செய்தார். இன்றைக்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட உயர் ஜாதிக் குதிரைகள் இருக்கின்றன. உயர்ஜாதிக் குதிரை வேண்டுமானால் எங்களிடம்தான் வர வேண்டும். அப்படி ஒரு பெயர். இந்தப் பெரிய வெற்றிக்கு அம்மாவுடைய அயராத உழைப்புதான் காரணம். இருபது வருடங்களாகப் பாடுபட்டு ஒரு புதுஜாதிக் குதிரையை அம்மா உருவாக்கியிருக்கிறார். சொக்கலட் நிறம். மணிக்கு எட்டு மைல் வேகத்தில் நீண்ட தூரம் நடக்கக் கூடியது. அமெரிக்காவின் குதிரை இனப்பெருக்க வரலாற்றில் அம்மாவுக்கு இடம் உண்டு. அம்மா இறந்த பிறகு பண்ணை நிர்வாகம் என் கைக்கு வந்தது. பண்ணையை இன்னும் விரிவாக்கி, கோடை விடுமுறையில் சிறுவர் சிறுமியருக்குக் குதிரையேற்றத்தில் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறேன். என்னுடைய சின்ன வயது ஆசை இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது.’
‘உங்கள் அப்பா பற்றிச் சொல்லவில்லையே?’ ‘ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அப்பா பண்ணைக்கு வந்த அன்று ஒரு அஸ்பென் மரத்தை நட்டார். அன்றிலிருந்து அந்த மரத்தில் அவருக்கு ஒரு பற்று. அஸ்பென் மரம் விதையிலிருந்து முளைப்பதில்லை. வாழைமரம்போலக் கிழங் கிலிருந்து தானாகவே முளைத்துப் பெருகும். அதை அழிக்க முடியாது. ஒருமுறை காட்டிலே தீப்பிடித்த போது பல மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால் அஸ்பென் மரம் மறுபடியும் கிழங்கிலிருந்து முளைத்து எழுந்துவிட்டது. சங்கிலிபோல அதன் சந்ததி ஆயிரமாயிரம் வருடங்கள் தொடரும். இன்று எங்கள் பண்ணையில் எண்ணுற்றுக்கு மேற்பட்ட அஸ்பென் மரங்கள் நிறைந்து கிடக்கின்றன. மாலை வந்துவிட்டால் அப்பா வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் அமர்ந்து இந்த மரங்களைப் பார்த்தபடி தன் பொழுதைக் கழிப்பார்.
‘நீங்கள் திருமணம் செய்யப் போவதில்லை என்று பேசுகிறார்களே. அது உண்மையா?’ ‘அப்படியெல்லாம் இல்லை. அப்பாவின் சந்ததி என்னுடன் முடிவுக்கு வராது. சங்கிலிபோல அது தொடரும். அதற்கு முன்னர் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. என்னிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அப்பாவுக்காகச் செலவழிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். என் அப்பாவை நினைத்து நான் கலங்காத நாள் இல்லை. எங்கேயோ பிறந்து இங்கே வந்து வேலைக்காரனாகவே தன் வாழ்நாளைக் கழித்துவிட்டார். ஐம்பது வருடங்களாக அவர் பண்ணையை விட்டு வெளியே போனதில்லை. அவரிடம் அன்பு செலுத்துவதற்கு வீட்டிலே ஒருவர்கூடக் கிடையாது. அறியாத வயதில் நானும் அவரைக் கேவலமாக நடத்தினேன். தினம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் நான் என் சப்பாதுக்களை உதறிக் கழற்றி அப்படியே காலால் எற்றிவிடுவேன். அப்பா அவற்றை எடுத்துவைப்பார். ஒரு நாள்கூட என்னைக் கண்டித்தது கிடையாது. இப்போது நான் வெட்கப்படுகிறேன். அவருக்குப் பார்கின்ஸன் வியாதி. அவரால் தானாக ஒன்றும் செய்ய முடியாது. கைகளும் தலையும் நடுங்கியபடி இருக்கும். அவருடைய கடைசிக் காலத்தை மகிழ்ச்சியாக ஆக்குவதுதான் என் ஒரே கடமை.’
‘அவருக்கு உங்களை அடையாளம் தெரியுமா?’ ‘சில வேளைகளில் தெரியும். அடிக்கடி கண்கள் வெளியே பார்க்காமல் அவர் மண்டைக்குள் திரும்பிவிடும். அவர் வாய் ஓரங்களில் துப்பல் காய்ந்து வெள்ளையாகத் தெரியும். எப்போது சாப்பிட்டார் என்பது மறந்துபோகும். திடீரென்று பிலிப்பினோ மொழியில் எதுவோ சொல்வார். இத்தனை வருடங்களில் அவர் அந்த மொழி பேசியது கிடையாது. இரவு பகல் வித்தியாசம் தெரியாது. இரவு இரண்டு மணிக்கு என்னை எழுப்பி வெளியே போவதற்கு கையைக் காட்டுவார். அவரைச் சக்கர நாற்காலியில் உட்கார்த்தித் தள்ளி வராந்தாவில் விடுவேன். அவர் நட்ட அஸ்பென் மரம் பெரிதாக வளர்ந்து அங்கே நிற்கும். அதைச் சுற்றி இன்னும் நூற்றுக்கணக்கான மரங்கள். நடுங்கும் இலைகளைப் பார்த்தபடியே அவர் நெடுநேரம் இருப்பதை நான் சிறுமியாக இருந்தபோது அவதானித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு வித்தியாசம். அஸ்பென் இலைகள் நடுங்கும். அவருடைய கைகளும் தலையும் நடுங்கும். கூர்ந்து பார்க்கும்போது அங்கே பெரிய உரையாடல் நடைபெறுவது தெரியவரும்.’
சலசலவென ஓடிய ஆறு திடீரென்று உறைந்ததுபோல மௌனம் கூடியது. ஹனிதா குனிந்து, கலையழகுடன் கூர்மையாக்கப்பட்ட அவருடைய கை நகங்களை நோக்கினார். பின் எழுந்து நின்றார். இரண்டு கைகளாலும் உடம்போடு ஒட்டியிருந்த ஆடையைப் பிடித்து இழுத்து உடம்பிலிருந்து விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து கண்களைச் சுழற்றி அந்த மலிவான உணவகத்தை பார்த்தார். அவர் கண்கள் போய் நின்ற இடங்களில் அமர்ந்திருந்த ஏழை விவசாயிகள் ஒவ்வொருவராக எழுந்து கைகளை நெற்றியில் தொட்டு வணக்கம் சொன்னார்கள்.
ஏப்ரல் 2016: சிவாஜியின் குரல்
ஒரு வருடமாக நாங்கள் டெலிபோனில் தொடர்ந்து பேசினோம். சில சமயங்களில் நான் ஒரு கேள்வி எழுதி மின்னஞ்சலில் அனுப்புவேன்; அவர் பதில் எழுதுவார். இது ஒரு நேர்காணல்போல நடக்கவே இல்லை. அவரும் நினைக்கவில்லை; நானும் அப்படி எண்ணவில்லை. திட்டமிட்டதெல்லாம் கிடையாது. செல்பேசியில் கோடு மெள்ளமெள்ள நிரம்புவதுபோல தகவல்கள் நிரம்பின. ஒருநாள் பேசும்போது அவர் போகிறபோக்கில் ‘சிவாஜியின் குரல் ரேடியோவுக்கு ஏற்றதில்லை’ என்றார். நான் ‘என்ன?’ என்று அலறினேன். ‘இல்லை, நான் சொல்லவில்லை. அதற்கு ஒரு கதை இருக்கிறது’ என்றார். நான் சொல்லுங்கள் என்றதும் அவர் சொல்லத் தொடங்கினார்.
இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. நான் அப்போது அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் மேலதிகாரிகள் ஒரு முடிவெடுத்திருந்தார்கள். முன்னணி நடிகர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள் இப்படிப் பிரபலமானவர்களை நேர்காணல் செய்து அவர்கள் குரலிலேயே அதைப் பதிவுசெய்து பாதுகாக்கவேண்டும். அதுதான் அந்த ஆளுமையுடைய உத்தியோகபூர்வமான வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக இருக்கும். அந்த முடிவின்படி அவர்கள் இந்த வேலையை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதிகாரிகள் என்மேல் வைத்த நம்பிக்கை பிழைக்காமல் நான் செயல்படவேண்டும். சிவாஜியின் குரலைப் பதிவுசெய்ய முடிவெடுத்தோம். வழக்கம்போல அனுமதிபெற டெல்லிக்கு எழுதினேன். அவர்கள் அனுமதி தரவில்லை. நூறு கேள்விகள் கேட்டார்கள்.
‘யார் இந்த சிவாஜி? இவர் பிராந்தியப் பிரபலமா, இந்தியப் பிரபலமா அல்லது உலகப் பிரபலமா?’ நான் பதில் எழுதினேன். அவர்களுக்குத் திருப்தி இல்லை. நிராகரிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். அவர்களை நேரிலே சந்திக்க டெல்லி போனேன். எனக்கு வயது அப்போது 33தான். என்னை உருட்டி எடுத்துவிட்டார்கள். நானும் விடவில்லை. அவர்களுடன் சரிக்குச் சமனாக சண்டையிட்டேன். ‘சிவாஜி இந்தியப் பிரபலம் கிடையாது. அவரை உலகக் கலைஞர்களுடன் ஒப்பிடலாம்’ என்று வாதாடினேன். ஒருவாறு அனுமதி கிடைத்து சென்னை திரும்பினேன். அப்பொழுதுதான் சிவாஜிக்கு ஒரு முன்கதை இருப்பது எனக்குத் தெரியவந்தது.
சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்து, இன்னும் வேறு சில படங்களிலும் நடித்து அப்போது பிரபலமாகியிருந்தார். வானொலி நாடகங்களுக்கு அப்போதெல்லாம் நல்ல வரவேற்பு. அதில் நடிக்க விரும்பிய சிவாஜி அதற்காக விண்ணப்பித்தார். ஒரு நாடகத்தில் நடிப்பதற்கு அவருக்குக் குரல் தேர்வு நடந்தபோது அதில் அவர் சித்தியடையவில்லை, அவரை நிராகரித்துவிட்டார்கள். சிவாஜியால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் அன்று ஒரு சபதம் எடுத்தார். ‘இனிமேல் என் வாழ்க்கையில் அகில இந்திய வானொலிக்கும் எனக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது. அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின் வாசல்படியை என்றென்றும் மிதிக்கமாட்டேன்.’
இந்த விசயம் எனக்கு ஆரம்பத்திலேயே தெரியாது. சிவாஜியிடம் போய் அவருடைய சம்மதத்தைப் பெற என்னைத்தான் அனுப்பினார்கள். தோற்கப்போகும் ஒரு முயற்சியில் என் மேலதிகாரிகள் நேரடியாக இறங்கத் தயாராக இல்லை. சிவாஜியை நினைத்தவுடன் தொடர்புகொள்ள முடியாது. அவர் புகழின் உச்சியில் இருந்த சமயம் அது. அவரைப் பிடித்து, இவரைப் பிடித்து ஒருநாள் சிவாஜியைச் சந்திப்பதற்கு நேரம் வாங்கிவிட்டேன். சொன்ன நேரத்துக்கு அங்கே போனேன். அன்பாக வரவேற்றார். நான் வந்த விசயத்தைச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார். முடிவில் ‘அப்படியா, பார்க்கலாம்’ என்றார். அடுத்த தடவை போனேன். நான் ஏற்கனவே வந்து அவரைச் சந்தித்த விசயத்தை நினைவூட்டினேன். ‘அப்படியா, பார்க்கலாம்’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அப்படியா, பார்க்கலாம்’ என்றால் என்ன பொருள்? இப்படி ஒரு வருடம் ஓடிவிட்டது. நானும் விடுவதாக இல்லை. ‘ஐயா நீங்கள் மாபெரும் கலைஞர். உலகத்தரத்தில் மக்களால் உயர்த்திவைக்கப்பட்டிருக்கிறீர்கள். எப்பவோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நடந்துபோன ஒரு விசயத்துக்காக இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் இழக்கலாமா? உங்கள் அதிகாரபூர்வமான சுயசரிதை உங்கள் சொந்தக் குரலிலேயே பதிவுசெய்யப்பட்டு என்றென்றும் பாது காக்கப்படும் என்பது எத்தனை பெருமையானது. அதை மறுக்கலாமா? தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்றல்லவா நினைப்பார்கள்.’
சிவாஜி கொஞ்சம் மனம் இளகினார். அத்துடன் அவருக்கும் என்னைப் பிடித்துக்கொண்டது. அன்பாகப் பழகினார். ஆரம்பத்தில் இருந்த நிலை மாறிவிட்டது. நான் சொல்வதைக் கேட்க ஆரம்பித்திருந்தார். ‘சரி. ஆனால் ஒரு கண்டிசன், வானொலி நிலையத்துக்கு எல்லாம் வரமுடியாது. இங்கேயே பதிவு செய்ய வேண்டும். அத்துடன் நான்தான் என்ன தேதி, எத்தனை மணி நேரம் என்பதைத் தீர்மானிப்பேன்’ என்றார். நான் ‘சரி’ என்றேன். என் மேலதிகாரி குமாரிடம் பயந்துகொண்டே சிவாஜி சம்மதித்ததையும் அவருடைய நிபந்தனையையும் சொன்னேன். அவர் அருமையான அதிகாரி. ‘சரி, அப்படியே செய்யலாம்’ என்றார்.
ஆனால் பின்னர்தான் பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வந்தது. மிக உயர்ந்த ஒலிப்பதிவுக்கருவிகள் நிலையத்தில்தான் இருந்தன. இவற்றையெல்லாம் அவர் வீட்டுக்கு எடுத்துப்போக முடியாது. ஆண்டாண்டு காலமாகப் பாதுகாக்கப்படவேண்டிய ஒலிப்பதிவை இப்படி அரையும்குறையுமாகச் செய்யவேண்டுமா என்றுபட்டது. மறுபடியும் அவரிடமே போனேன். உயர்தரத்தில் ஒலிப்பதிவு செய்து பாதுகாக்கப்படவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி சென்னை நிலையத்தில் பதிவுசெய்ய அவருடைய ஒப்புதலையும் ஒருவாறு பெற்றுவிட்டேன்.
ஒருநாள் காலை அவர் வீட்டுக்குப் போய் அழைத்தேன். முதன்முதல் அவருடைய பளிச்சிடும் வெள்ளைநிற பென்ஸ் காரில் அவருடன் அமர்ந்து நிலையத்துக்குப் புறப்பட்டேன். ஒரு பென்ஸ் காரில் பயணம்செய்வது எனக்கு அதுவே முதல்தடவை. ஸ்டூடியோ வந்தபோது எப்படியோ கதை பரவிவிட்டது. 150 – 200 பேர் குழுமி விட்டார்கள். என்னுடைய மேலதிகாரி தடபுடலான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரிய மாலை அணிவித்து வரவேற்றார்கள். மங்கலமான மேளதாளத்துடன் நாதஸ்வரம் ஒலிக்க, அவரை உள்ளே அழைத்துப் போனோம். பல வருடமாக சிவாஜியின் மனதிலிருந்த காயம் அந்த ஒருநாள் வரவேற்பில் ஒரேயடியாக மறைந்து போனது.
ஒலிப்பதிவு செய்தீர்களா?
ஆமாம், ஒன்பது மணிநேரம் ஒலிப்பதிவு செய்தோம். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று பல நாட்களில் பதிவு முடிந்தது. ஒலிப்பதிவின் ஆரம்பத்திலேயே சிவாஜி இப்படிச் சொல்வார். ‘இதுதான் என்னுடைய உத்தியோகபூர்வமான சுயசரிதை. இந்த ஒலிப்பதிவை நான் இந்தத் தம்பியின் தொடர்ந்த வற்புறுத்தலால்தான் செய்யச் சம்மதித்தேன்.’ அந்தப் பெரிய மனிதர் ஆரம்பத்திலேயே பின்னொரு காலத்தில் எவருக்கும் சந்தேகம் எழாத விதமாக என்னுடைய பணியின் முக்கியத்துவத்தைப் பதிவுசெய்துவிட்டார். இன