Archive
புனிதன்: குமுதம் ஆசிரியர் குழு
நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.
பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ‘ஒட்டக் கூத்தன்’ என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.
முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘பொன்னி’யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.
நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.
இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார்.
அப்போதும் என் கவனம் அந்த நாள் ‘பிரசண்ட விகடன்,’ ‘ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?
முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் ’51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?
‘விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.’
விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், ‘ரேடியோ மெக்கானிஸம்’ துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.
தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.,
நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.
தமிழ்வாணன் சீண்டல்
உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.
நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘ இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,’ என்றார்.
தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘என்ன எழுதுவீங்க’ என்று கேட்டார்.
‘கவிதைதான் எழுதுவேன்,’ என்றேன் மகா கர்வத்தோடு.
உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, ‘இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,’ என்றார்.
தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்!
தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.
மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, ‘கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.
திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். ‘என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?’ என்றார்.
‘நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,’ என்றேன் விறைப்பாக.
மறுபடியும் அதே சிரிப்பு. ‘சரி, இப்பபார்,’ என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.
ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! ‘சண்முகம்’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது.
நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். ‘உம்… மேலே புரட்டு…’ புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. ‘சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் – என் இயற்பெயர்.
அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.
கல்கண்டு உதவியாசிரியர்
ஒருநாள், ‘படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?’ என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.
‘ஏதாவது வேலை தேடணும்…’ என்று இழுத்தேன்.
என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது.
‘நீ என் கூடவே இருந்துடு,’ என்றார்.
‘சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,’ என்று விடைபெற்றேன்.
நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.
சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.
தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.
ஆசிரியரும், துணையாசிரியரும் ‘வா, போ’ என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் ‘சக்தி’ பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் ‘ரிசர்வ் டைப்,’ அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.
தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. ‘ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.
மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, ‘அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,’ என்றார்.
பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.
சற்றுப் பொறுத்து, ‘சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,’ என்று கூட்டிப் போனார்.
அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். ‘தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார்.
அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன்.
அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார்.
மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.
குமுதம் நாற்காலி
தமிழ்வாணனிடம் பயிற்சி பெற்றுக் குமுதத்துக்கு வந்தால், தன் பளு ஓரளவு குறையும் என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி., கருதினார்.
குமுதம் மாதம் மூன்று இதழாக வந்துகொண்டிருந்தது அப்போது.
ஆசிரியருக்கு முழு நேரத் துணையாசிரியராய் ரா.கி.ர., பணியாற்றினாலும். ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த ஆனந்த தீர்த்தனும், வக்கீலாய் இருந்த ராம. நாரயணனும், இருவரும் பகுதி நேரத் துணைகளாய் இருந்து வந்தனர்.
நாங்கள் மூவரும்
கண்ணாடி
அணியாமல் ஒரு
காலத்தில்
இருந்திருக்கிறோமா?
இதில் நிற்கும் ஜ.ரா.சு.,
அன்று பிரம்மச்சாரி.
இப்போது தன் மூன்று
பிள்ளைகளுக்கும்
திருமணம்
செய்து முடித்துப்
பேரன்களும்
எடுத்து விட்டார்.
ஜ.ரா. சுந்தரேசன் நான் குடியிருந்த வெள்ளாளர் தெருவிலேயே ஓர் அறையில் தங்கி ரேடியோ அஸம்பிளிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கல்கண்டுக்கு கதைகள் நாடகங்கள் எழுதி வந்தார். அதனால், எனக்கு அவருடைய பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் ஒரே ஜில்லாக்காரர்கள் என்பதால் பாசம் சுரக்க, ‘டா’ உறவில் பழக ஆரம்பித்தோம். இன்று வரை அது நீடிப்பது வேறு விஷயம்.
குமுதத்தில் ’53 வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருற்தார்கள். அந்தப் போட்டியில் ஜ.ரா.சு., கலந்து கொண்டார். பரிசு பெற்றார். அலுவலகத்துக்கு ஜ.ரா.சு., வரப்போக, ஆசிரியர் அவரைக் கவனித்திருந்திருக்கிறார். அவரது எழுத்தும் பிடித்துப் போயிற்று. தமிழ்வாணனிடம் சொல்லிவிட்டுக் குமுதத்தில் இணைத்துக் கொண்டார்.
என்னதான் கல்கண்டில் ‘தேசபந்து’வாகக் கொட்டி முழக்கினாலும், பெரியவர்களுக்கு எழுதவேண்டும்; காதல் கதைகள் தரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளுர இருந்து வந்தது.
நான் கொஞ்சம் வெள்ளை. எதையும் மனசுக்குள் மறைத்து வைக்கத் தெரியாதவன். பட்டதைப் பட்டென்று சொல்லி, கேட்டு, கண்டித்துப் பலரின் வெறுப்புக்கு ஆளான அனுபவம் உண்டு.
அப்படித்தான் ஆசிரியரிடம் நேரில் சென்று, ‘எனக்கும் குமுதத்தில் இடம் வேணும்,’ என்று கேட்டுவிட்டேன்.
அப்புறம் எனக்கும் ஒருவழியாய் குமுதத்தில் துணையாசிரியர் நாற்காலி போடப்பட்டது.
நானும், சுந்தரேசனும் ஏதும் பிரச்சனை கிளாப்பா விட்டாலும், எங்களை வைத்துக் கொண்டு ஆசிரியரும் ரா.கி.ர.,வும் சிண்டு முடியும் தோரணையில் கலாட்டா செய்வது வேடிக்கையாய் இருக்கும்.
‘சீனியர் ஜ.ரா.சு., என்ன சொல்றார்?’ என்பார் ரா.கி.,
‘அதெப்படி? குமுதம் ஆபீஸ்ல முதல்ல சேர்ந்தவர் புனிதன்தானே? அதனால அவர்தான் சீனியர்,’ என்று வக்காலத்து வாங்குவார் ஆசிரியர்.
இது பல சந்தர்ப்பங்களில் பலவித சீண்டல்களாய் வெளிவரும்.
நாம் மூவர்
அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அமர்வதற்கு ரா.கி.ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் ஆகிய நாங்கள் மூவரும் முக்காலியானோம். முக்காலியில் எந்தக் காலுக்குப் பொறுப்புக் குறைச்சல்?
வெளியுலகத்தில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் அத்தனை பேர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று, தனித்தனி அறைகள், எடுபிடிகள், ஆளம்புகள் என்று அமர்க்களப்படும்போது, இங்கு ஒரே ஒரு ஹாலில் மூன்று மேசை நாற்காலியைப் போட்டுக் கொண்டு, எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் எப்படி இந்தியாவிலேயே அதிக வினியோகம் உள்ள பத்திரிகை என்று பாராளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டும் அளவுக்குக் கொண்டு செலுத்த முடிந்தது?
முதல் காரணம் ஆசிரியர் வியத்தகு மேதையாய் இருந்து, வேறு எவருக்கும் கட்டுப்படத்தேவை இல்லாத உரிமையாளராகவும் அமைந்தது. கால நேரம், சொந்த விருப்பு வெருப்பு, உடலுபாதை ஏதும் பொருட்படுத்தாமல் ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்றி வைப்பதே குறிக்கோளாய்க் கொண்டு, பாடுபட்டு உழைத்தோமே நாங்கள் மூவர், அது இரண்டாவது காரணம்.
ஆசிரியரின் கூர்ந்த மதியாகட்டும், அவரது படிப்பறிவாகட்டும், அனுபவங்களைக் கிரகித்துச் சொல்லும் நுணுக்கமாகட்டும், இந்தக் காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் கணிப்பாகட்டும், அவருக்கு முன்னால், நாங்கள் சிசுக்கள்தான்.
‘உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம். நான் வழிகாட்டுகிறேன். நீங்கள் சும்மா என் பின்னால் வந்தால் போதும்,’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுவே, எங்களுக்குச் சுமையேதும் இல்லை என்று எண்ண வைத்து லேசாக்கியது.
ஓர் இதழை ஒருவர் கவனித்தால் போதும், மற்ற இருவரும் இதழ் பொறுப்பிலிருந்து விடுபட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்று கழற்றி விட்டு விட்டார். இதனால் ஒவ்வொருவரும் ஒரு வாரம் பணியாற்றினால், இரண்டு வாரம் ஓய்வு என்ற பிரமையில், அந்த ஒரு வார வேலையில் முனைப்பாக ஈடுபட ஒரு தார்மீக உந்து சக்தி பிறந்தது. ஈடுபட்டோம்.
எவரிடம் எந்தத் திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்வதில், அவருக்கு இணையாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட இயலவில்லை.
தினமும் காலையில் வந்ததும், ஒரு ‘பெப்டாக்’ கொடுப்பார். அதிலே பத்திரிகை பற்றிய கனவுகளை விதைப்பார். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற ஆவலை, நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்வார்.
இவை எல்லாவற்றுக்கும் மேல் அவருக்குப் பிடித்த மாதிரியில் நாங்கள் ஏதாவது எழுதி முடித்தால், தட்டிக் கொடுத்து மனசாரப் பாராட்டிப் புகழ்ந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இன்று வரை நினைத்துப் பெருமிதப்பட வைக்கிறது.
இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டும்தான் என்னால் தர முடியும். இதுதான் அந்தக் காலத்துக் குமுதம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதோ சில அனுவங்கள்.
மக்கள் படிப்பு
இதழ் முடித்த நேரத்தில் ஒரு விச்ராந்தி முகத்தில் தெரியும். அதை ‘விடாயேற்றி உற்சவம்’ என்று வேடிக்கையாய் குறிப்பிட்டுச் சிரிப்பார் ஆசிரியர்.
இந்த உற்சவம் எங்களுக்கு மட்டும்தானே தவிர, ஒவ்வோர் இதழிலும் அவர் முகம் தெரியத் தனிப்பட அவர் படும்பாடு ஏதும் எங்களுக்குத் தெரியாது. தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்.
அந்த ஓய்வு நாட்களில் எங்களுக்கு நோகாமல் அப்படியரு பயிற்சி கொடுப்பார். படிப்றிவுப் பயிற்சி. எனக்கு ஸ்டீன்பெக், பி.ஜி.உட்ஹவுஸ், ஓ ஹென்றி சிறுகதைகள் அவரது நூலகத்திலிருந்து எடுத்துக்கொடுப்பார். இவற்றை ஆபீஸ் நேரத்திலேயே- மாடியில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து படிக்க வேண்டும். அடுத்த நாள் அதில் ரசித்த கட்டங்களைச் சொல்லி, எந்த எழுத்து முறையால் அது எடுபடுகிறது என்று சுட்டிக் காட்டி ஒரு விவாதம் நடக்கும். அடுத்து எழுதும் கதையில் அந்த உத்திகையாளப்பட வேண்டும்.
இதோடு நிறுத்தாமல் வெளியுலகத் தொடர்பு தேவை என்று இன்னொரு நாள் ஊர்சுற்ற அனுப்புவார்! வெறுமனே சுற்றிப் பார்த்து நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது வித்தியாசமான மக்களைக் கவனியுங்கள் அவரை பேட்டி எடுங்கள். படம் எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள். இரண்டொரு பக்கம் போடலாம்,’ என்றார்.
மக்களை பேட்டி முடித்த பிறகு, படம் எடுப்பதற்காக அப்புறமாய் ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அனுப்பி, நேரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட முன் அனுபவம் எனக்கு இருந்தது.
அப்போது எனது நண்பர் ஒருவர் யாஷிகா கேமரா ஒன்று எனக்காக சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். நான் அதற்குமுன் படம் எடுத்ததில்லை. யாஷியா கிடைத்ததும், உற்சாகம் பிய்த்துக் கொண்டது. தோளில் காமெராவை மாட்டிக் கொண்டு, தென் சென்னைப் பகுதியில் சுற்றினேன். சினிமாத் தொழிலாளர்களின் குடிசைக் குடியிருப்புப் பகுதியிலே ஒரு போர்டு கண்ணில் பட்டது.
இங்கே பாம்புகள் படப்பிடிப்புக்கு வாடைகைக்கு விடப்படும்.
‘நம்ம பச்சா கூடப் பாம்பு புடிப்பான் சார்!’ என்றார்.
இப்போது அவரது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘கூப்பிடு, கூப்பிடு,’ என்று காமெரா விரித்தேன்.
மூன்று வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. சும்மா ‘கொழுக் மொழுக்’கென்று இருந்தான். பாவா ஒரு பெரிய நல்ல பாம்பு ஒன்றை அவன் கையில் கொடுத்தார்.எனக்கே பயம். அவர், ‘விஷப் பை எடுத்தாச்சு சார். பயப்படாதே,’ என்றார்.
பையன் பாம்பைத் தூக்கிப் பிடித்தான். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாம்பை இறக்கி விட்டானோ என்னவோ! பையன் கன்னத்தில் ஓங்கி ஒரு போடு போட்ட அதே தருணம், என் காமெரா ‘கிளிக்’ செய்து விட்டது.
பிரிண்ட் போட்டுப் பார்த்தால், அந்த உயிர்த் துடிப்பான காட்சி அந்தி வெளிச்சத்தில் காண்ட்ராஸ்ட்டாய் அற்புதமாய் வந்திருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்து அடைந்த சந்தோஷம்… நண்பர்கள், ஓவியர்வர்ணம் அனைவரையும் கூப்பிட்டுக் காட்டிப் பாராட்டி, ‘யார் எடுத்தது தெரியுமா? நம்ம கார்ஷ் ஆப் ஒட்டாவா,’ என்றது நேற்றுப்போல் இருக்கிறது.
அந்தத் தெம்பிலே குமுதம் அட்டைக்காகவும் நான் அவ்வப்போது வண்ணப் படங்கள் எடுத்தேன். ‘தணிகை’ என்ற பெயரில் அவை அன்றைய குமுதம் இதழ்களில் இடம் பெற்றன.
சுந்தர பாகவதர் ஆனேன்
நாங்கள் முவரும் கட்டாயம் ஆளுக்கு ஒரு கதை ஒவ்வோர் இதழுக்கும் எழுதியாக வேண்டும். எல்லாரும் எல்லாவிதமான கதையும் எழுத வேண்டும்.
மொத்தம் ஐந்து கதைகள் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசம். நகைச்சுவை, கிராமம், இளைமைத் துள்ளல், க்ரைம் விஞ்ஞானம் அல்லது இவற்றில் காதல் ரசம் தூக்கல். இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் மட்டுமே வெளியாருக்கு ஒதுக்கியது. மற்ற மூன்றும் நாங்கள்.இந்த இதழுக்கு எழுதிய கதை வகை, அடுத்த இதழுக்கு எழுதலாகாது. நாங்கள் எழுத வேண்டிய கதைக்கருவைக் கையகலச் சீட்டில் எழுதிக் கொடுத்து ‘அப்ருவல்’ பெற்றுக் கொண்ட பிறகு, அதை ஆசிரியர் அவர்களுடன் பேசி விளக்கம் பெற்று, எந்த உத்தியில் எழுதுவது என்று தீர்மானித்து, பிறகே எழுத வேண்டும். ‘இது நம்ம பத்திரிகை. நமக்குப் பிடிச்ச கதையை நாமதான் எழுதணும். நம்மாலதான் கதைகள்’ என்றே அறிவிப்புக் கொடுத்தார்.
ஜ.ரா. சுந்தரேசன்
ஒருமுறை என் பங்காக நகைச்சுவைக் கதை எழுத வேண்டும். ஆசிரியருடன் பேசி முடித்தக் கதை உருவாக்கியாயிற்று. என்ன உத்தியில் எழுதுவது? அன்று காலை ஒரு காலட்சேபம் பற்றி விரிவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை நினைவூட்டி, அதே காலட்சேப உத்தியில் எழுதும்படி சொல்லிவிட்டார்.கதைப் பிரதியை அவர் படித்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவது வழக்கம். அன்று கதைப் பேசி முடித்ததும், அவர் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், ‘நான் பார்க்க வேண்டியதில்லை. கம்போசுக்கு அனுப்பி விடுங்கள் வந்து பார்த்துக் கொள்கிறேன்,’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாளை மறுநாள் வருவதாய்ச் சொல்லியிருந்தார்.
நானும் எழுதி அனுப்பி விட்டேன். ‘மீசா புராணம்’ என்பது கதைப் பெயர். மனசுக்குள் ‘பக் பக்’தான். அவர் நினைத்தபடி கதை இல்லாவிட்டால், நிர்தரட்சண்யமாய் நிறுத்தி விடுவார். நாளை மறுதினம்தான் பேஜ் தயாராகும். எப்படியும் மெஷின் புரூப் பார்க்க வந்து விடுவார். என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். இரவு போயிருந்திருக்கும்.
அன்று நான் ஆபீஸ் போனபோது, என்னைப் பார்த்து ஒரேயடியாய்ச் சிரித்தார். ‘நல்லாருந்தது. நடுநடுவே இந்த ஸ்டைல்ல கதை எழுதுங்க, என்றார்.
இந்த மாதிரிக் கதைகளுக்காக ‘சுந்தர பாகவதர்’ நாமகரணம் சூட்டிக் கொள்ளப் பெயர் கொடுத்தவர், சீனியர் ரா.கி.ர.தான்.
‘எங்களுக்கு எதற்கு நகை?’ என்று ஒரு சுந்தர பாகவதர் கதை. பேசிப் பேசி எழுதியதில் நீண்டு, அடுத்த இதழில் முடித்து விடலாம் என்று சொல்லி, அதிலும் முடியாமல் கட்டாயம் அடுத்த இதழில் முடியும் என்று அறிவித்து… இப்படித் தொடர்ந்து ஐந்து இதழுக்கு நீண்டது.
வெள்ளாளத் தெருவில் குடியிருக்கும் போது, அதே தெருவில் குடி இருந்த நடிகர் வி.எஸ்.ராகவன் எனக்கும், சுந்தரேசனுக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒருநாள் ஆபீஸ் வந்து, சுந்தரேசன் எதிரில் உட்கார்ந்து, அவர் கதையை நாடகமாக்கப் போவதாகக் கேட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
எந்தக் கதை என்று சுந்தரேசன் கேட்டபோது, ‘சுந்தர பாகவதர்னுட்டு எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேளாக்கும்? அதான் எங்களுக்கு எதற்கு நகை?’ என்றதும் சுந்தரேசன் சிரித்தார்.
அதை எழுதியது நான்தான் என்று அறிந்தபோது, வி.எஸ்.ராகவன் நம்பவில்லை அப்புறம் உறுதி செய்து கொண்டு ஒருவிதமாய் கதை வாங்கிச் சென்று, ‘நகையே உனக்கொரு நமஸ்காரம்!’ என்ற பெயரில் நாடகமாக்கி மேடையேற்றி, எம்.ஜி.ஆர்., கையால் எனக்கும் கேடயம் வாங்கித் தந்தார். வானொலியில் தொடர் நாடகமாய் அது இடம்பெற்றது. அப்புறம் தொலைக்காட்சி நாடகமாகவும் இடம் பெற்றது.
என்னை உசுப்பி விட்டு ஒரு சவால் உணர்வை ஏற்படுத்தி, சுந்தர பாகவதர் ஆக்கியது, ஆசிரியரின் வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
கவிதையிலே கதை
குமுதத்தில் இணைகையில் நான் வித்துவான் தேர்வு முதலாண்டு எழுதியிருந்தேன். தனியாகப் படித்து வித்துவான் பட்டம் பெற ஆவல். இந்த ஏக்கத்தை ஆசிரியரிடம் சொன்னேன்.
அவர் சற்றுப் பதறிப் போய், ‘வேண்டாம் வேண்டாம். பத்திரிகைக்கு உங்கள் தமிழறிவே அதிகம். இதற்கு மேல் வேண்டாம். ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டுங்கள்,’ என்று அறிவுரை வழங்கயதோடு, ‘உங்களுக்குக்கென்ன கவிதை எழுதணும். அவ்வளவுதானே? நடுநடுவே எழுதுங்க,’ என்று சமாதானம் செய்தார்.
அதன்படி ‘கண்ணம்மா’ என்ற பெயரில், மரபுக் கவிதைகளாய் அவ்வப்போது (அறுபதுகளில்) எழுதி வந்தேன். ஒரு முறை கதையன்று பேசும்போது, ‘இது கொஞ்சம் கவிதைத்தனமாக இருக்கே. கவிதையிலே எழுதிப் பாருங்களேன்,’ என்றார்.
பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு, ‘எதிர்பாராத முத்தம் போன்ற கதைக் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை அந்தத் தூண்டுதலில் நானும் ஒரு கவிதைத் கதை தயாரித்தேன்.
பாராட்டி வெளியிட்டார். அதன் பிறகுதான் பகுதி நேரக் கவிஞனின் கவிதைக் கதையே இந்த அளவுக்கு இருக்கும் போது, முழுநேரக் கவிஞரைக் கொண்டு கவிதைக் கதை செய்யச் சொன்னால், இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று ஆசிரியருக்குத் தோன்றியிருக்கும் போலும்.
கவிஞர் சுரதாவை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரிடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையன்றைத் தந்து, இதைக் கவிதையிலே மாற்றித் தர இயலுமா என்று கேட்டார். அவரும் பெருமையோடு ஒப்புக் கொண்டார்.
அலுவலகத்து மாடியிலேயே கவிஞர் சுரதா மீட்டிங் ஹாலில் அமர்ந்து அந்தக் கதைக் கவிதை எழுதித்தர, குமுதத்தில் இடம்பெற்றது பசுமை நினைவு.
பொள்ளாச்சியில் புனிதன்
ஒருமுறை நா.மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியில் விவேகானந்தர் விழா நடத்தினார். அதில் சென்னையிலிருந்து கி.வா.ஜ.,வுடன் ஆசிரியரையும் அழைத்திருந்தார். அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுண்டு. பேச்சுக்காக அவர் மெனக்கெட்டு ஆயத்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது இத்தனை மெனக்கெடல் தேவையா? என்று தோன்றும்.
அப்படி அவர் பொள்ளாச்சியில் சென்று வந்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். நினைவு கூர்ந்து, கூடுமானவரை அவர் வார்த்தையிலேயே தருகிறேன்.
‘நான் மேடையிலே உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்திலேயே, அந்தக் காலேஜ் பிரின்சிபால் உட்கார்ந்திருந்தார். அவர் என் காதுகிட்ட வந்து. ‘இப்ப உங்க புனிதன் வரப் போறார்,’ என்றார்.
‘நான், ‘வரமாட்டார்,’ என்றேன்.
ஏன் அப்படிச் சொல்றீங்க? நான் இங்க வர்றதுக்கு முன்னால அவரைப் பார்த்தேன். பின்னாலேயே வரதா சொன்னாரே,’ன்னார்.
நான், பார்த்திருக்க முடியாது. ஏன்னா, நான் ரயில் ஏர்றப்ப புளிதன்தான் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பிச்சார். என்கிட்ட சொல்லாம அவர் எப்படி வர முடியும்? என்றதும் முகம் ஒருமாதிரியாயிடுச்சு.
‘எனக்கு அப்பவே சந்தேகம்தான்னு சொன்னார்.
அவங்க காலேஜ் ஸ்டாப்பாம் அந்த ஆள். தான்தான் புனிதன்னு சொல்லிக்கிட்டு குமுதத்திலே வர்ற கதையை எடுத்து வச்சிட்டு அதைத்தான் எப்படி எழுதினேன், இன்ஸ்பிரேஷன் எது, காரெக்டர் எப்படி உருவாச்சுன்னெல்லாம் லெக்சர் வேற கொடுப்பாராம். எப்படியிருக்கு?
‘அதுக்கப்புறம் யாராவது புனிதன்னு சொன்னால், ‘யாரு, பொள்ளாச்சி புனிதனா?’ என்று கிண்டலடிப்பார்.
சொல்லச் சொல்ல எழுதுவேன்
அந்த நாளில் ஆசிரியரின் நாவல்கள் குறிப்பாக ஓவியம்- அவர் சொல்லச் சொல்ல நான்தான் பிரதியெடுப்பது வழக்கம்.
அவர் வீட்டுக்கு அழைக்கிறார் என்றால், பெரும்பாலும் எழுதுவதற்காகத்தான் இருக்கும். நீண்ட கைப்பிடியில் பலகை வைத்து, சாய்ந்து உட்கார்ந்து எழுதுவதற்கென்றே டிஸைன் செய்த அந்தப் பிரம்பு நாற்காலியில்தான், அவர் வீட்டில் என்னைப் பார்க்கலாம்.
அவர் டிக்டேட் செய்யும் அழகே அழகு! நடமாடிக் கொண்டு, நடித்துக் கொண்டுகொச்சயாய் அவர் பேசுவதை நான் இலக்கண சுத்தமாய் எழுதி விடுவேன் என்ற அவரது நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றி விட்டேன்.
நான் முறைப்படி 1988ல் ஓய்வு பெற வெண்டியிருந்தது. இருந்தம், ரா.கி.ர.,வைப் போல நானும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
முதல் ரிடையர்மெண்ட்
அந்த நேரத்தில் குமுதத்தில் அக்கறையுள்ள பலர், ‘உங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் உதவியாளர்களும் ஓய்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குமுதத்தின் எதிர்காலம் என்ன?’ என்கிற மாதிரி கேட்டு யோசிக்க வைத்தர்கள்.
அப்போதுதான் நிர்வாகத்தினர், புது ரத்தம் புகுத்த மாலன், பிரபஞ்சன் ஆகிய இலக்கியவாதிகளையும், ப்ரஸன்னா, ப்ரியா கல்யாணராமன் ஆகிய இளைஞர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
இலக்கியவாதிகள் இருவருக்கும் குமுதம் சரிப்பட்டு வரவில்லை. விலகி விட்டனர். நானும் கண்ணியமாய் விலகிக் கொண்டு விட்டேன். உடனடியாய் தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.
அதே நேரத்தில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களும் என்னை கவுரவித்தார். கோகுலம் கவுரவ ஆசிரியராய் இருந்த அழ. வள்ளியப்பா அவர்கள் திடீர் மரணமடைந்திருந்த தருணம் அது. நான் துவக்கத்தில் தேசபந்துவாக கல்கண்டில் மிளிர்ந்ததை அவர் அறிவார். எனவே, அழ. வள்ளியாப்பா அவர்களின் இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். ஏதோ ஒருவகையில் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. வாரமலர் இதழில் அடுத்தடுத்து மேலும் மூன்று தொடர்கதைகள் எழுதினேன்.ஆனந்த விகடனில் ‘அப்புறம் என்ன ஆச்சு?’ என்று சுந்தர பாகவதரின் முதல் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. கல்கியில் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்தேன் பி.எஸ்.எஸ்., என்ற பெயரில்.
நான் குமுதத்தை விட்டு விலகிய பிறகும், ஆசிரியரை விட்டு விலகவில்லை, வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு மேல் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவேன்.
இரண்டாம் அப்பாயின்ட்மெண்ட்
அப்போதே ஆசிரியர் பேச்சில் தெளிவு காணாமல் போயிருந்தது. அவரது உடல் நிலை குறித்து வருத்தம் ஏற்பட்டது.
அக்டோபர் 1990ல் ஜ.ரா.சு., வீட்டுக்கு வந்தார். ஆசிரியர் என்னை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்ததாகச் சொன்னார்.
ஜ.ரா.சு., ஓய்வு பெறப் போவதாகவும், ஊரில் தமது நிலபுலன்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால். தொடந்து பணியாற்ற இயலாது என்றும், ரா.கி.ர.,வுக்கும் அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் என் துணையை ஆசிரியர் எதிர்பார்ப்பதாயும் சொன்னார்.
வீட்டில் உள்ள எவருக்கும் நான் திரும்பக் குமுதத்துக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. வீட்டிலிருந்தவாறே நான் சுதந்திரமாய் எழுவதுதான் எனக்கும் சுகம், அவர்களுக்கும் வசதி என்று நினைத்தார்கள். இரண்டாண்டு காலத்தில் நான் இதற்கு முன் இத்தனை தொடர்கதைகள் எழுதியதில்லையே!
இருந்தாலும் நான் நன்றி மறக்கவில்லை. முகவரி இல்லாமல் இருந்த எனக்கு, முகவரி கொடுத்தவர் ஆசிரியர். தந்தை ஸ்தானத்திலிருந்து நமது குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காட்டியது மறக்க முடியாதது. அவரை இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்தே மதிக்கிறேன். அவரே என் உதவி தேவை என்று ஆள் விட்டிருக்கும்போது, நான் அதைத் தட்டிக் கழிக்கத்தயாரில்லை,’ என்று மீறிக் கொண்டு சென்றேன்.
போகப் போகத்தான் தெரிந்தது, ஆசிரியர் எதை எதிர்பாத்து என்னை மீண்டும் அழைத்தார் என்பது.
பத்திரிகைக்கு இளரத்தம் தேவை என்று இன்றைய ஆசிரியர் குழுவினர் மூவரையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த மூரில் ஒருவரை நான் கொண்டுவந்து சேர்த்தேன்.
மூவருக்கும் பத்திரிகைத் தொழிலில் பயிற்சி தர எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். ரா.கி.ர.,வும் ஓய்வு பெற்று வீடு திரும்பி விட்டார். தொடர்ந்து ப்ரஸன்னாவும் விடைபெற்றுக் கொண்டார்.
ப்ருப் ரீடிங்கிலிருந்து பேஜ் மேக்கப் அமைப்பு முறை வரை அவர்கள் என்னிடம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டார்கள். புரிய வைத்தேன். புரிந்து கொண்டார்கள்.
‘சரியான நேரத்தில் நீங்கள் திரும்ப வந்து பெரிய ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாது,’ என்று மனம் திறந்து எனக்குப் புகழ் மாலை சூட்டினார் ஆசிரியர்.
எனக்கு அதுபோதும். ஆசிரியர் இடறி விழுந்து விட்டதாய்க் கேட்டு ஏப்ரல் 6ம் தேதி அவரைக் காண வீடு சென்றேன். மூக்கிலே கொஞ்சம் சிராய்ப்புத் தெரிந்தது.
இன்னும் இரண்டு நாளில் ஸ்டேட்ஸ் போவதாயும். அதுவரை குமுதத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைத்துச் செல்வதாயும் சொன்னார். அனேகமாய் எனக்கு விடைதரும் விதமாய் இருந்தது அவர் பேச்சு. ஏப்ரல் 17 ஞாயிறு இரவு ப்ரியா கல்யாணராமன் போன் செய்து ஒரு சகாப்தம் முடிந்த செய்தி சொன்னார்.
ஆசிரியர் என்னை ஆளாக்கியதற்கு பிரதியாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு செய்து விட்டதாகவே நிறைவடைகிறேன்.
ஆசிரியர் அழைத்ததற்காக குமுதம் அலுவலகத்திற்குள் திரும்ப நுழைந்தேன். இதற்கு மேல் எனக்கு அங்கு வேலை இல்லை என்று இரண்டாம் முறையாக ஓய்வு பெற்று திரும்பி விட்டேன்.
ஆசிரியர் இல்லாத அலுவலகத்துக்குள் எட்டிப் பார்க்கவும் இப்போது மனசு இடம் தர மாட்டேன் என்கிறது.
பின்னுரை
நாற்பது ஆண்டுகள்! குமுதத்தில் எனது நாற்பது ஆண்டு கால நீண்ட பயணம் ஆசிரியர் அவக்ளின் இறுதிப் பயணத்துடன் நிறைவெய்தி விட்டது.
எத்தனை எத்தனையோ இன்ப-துன்ப அனுபவங்கள். அவற்றில் கசப்பையெல்லம் விழுங்கிக் கெண்டு, எண்ணிப் பார்த்துப் பெருமிதம் கொள்ளத்தக்க இன்ப நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு நினைவு கூர்ந்தேன்.
அதில் ஓரளவு தம்பட்ட ஓசை எழுப்பியிருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. அது சாமானியனாய் இருந்த என்னை, இந்த அளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தக்கவனாய் மாற்றிய ஆசிரியரின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகத்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரா.கி. ரங்கராஜன்: முதுமை என்பது லாபமா, நஷ்டமா?
ஜ.ரா. சுந்தரேசன், ரா.கி. ரங்கராஜன், புனிதன்
‘அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிகையில் நீங்கள் எழுதும் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன். ரொம்ப நகைச்சுவையாக, சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள்….’ என்று எனக்கு வரும் ஒரு கடிதம் ஆரம்பிக்குமானால் நான் போச்சுடா சாமி என்று எண்ணிக் கொள்வேன். காரணம், அடுத்து என்ன வரிகள் வரும் என்று புரிந்துவிடும்.
‘ஆனால் நீங்கள் நாலு பேருக்கு உபயோகமானதை எழுதுவது கிடையாது….’, ‘இன்னின்ன பிரசினைகளைப் பற்றி நீங்கள் வாய் திறப்பதில்லை…’, ‘போன வாரம் நீங்கள் எழுதியதில் ஒரு தப்பு’ என்றுதான் கடிதத்தின் அடுத்த பாரா ஆரம்பமாகும்.
இதுபோலத்தான், பாடியிலிருந்து ஒரு பெரியவர் கடிதம் எழுதியிருக்கிறார். ‘நாலு மூலை நிகழ்ச்சிகளைத் தவறாமல் படிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன். மிக அழகாகவும் ஹாஸ்யமாகவும் எல்லாரும் ரசிக்கும்படியாகவும் எழுதி வருகிறீர்கள்’, என்று தொடங்கி, ‘சில தவறுகளையும் செய்கிறீர்கள். உதாரணமாக, சிதம்பரத்திலிருந்து விருத்தாசலத்துக்கு ரயிலில் போனதாக எழுதியிருப்பது தவறு. அப்படி நேரடி ரயிலே கிடையாது’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். (விருத்தாசலத்திற்கு நான் ரயிலில் போனது உண்மை. வேறு மார்க்கமாக இருக்கலாம் எனக்கு நினைவில்லை.)
தபால், தந்தி இலாகாவில் 35 வருட காலம் பணியாற்றிய பின், 1988ல் ஓய்வு பெற்றதாகக் கூறியுள்ள இந்த அன்பர், நான் மூன்று விஷயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். மூன்றும் ஒரிஜினல்!
முதலாவதாக, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு, ஜேபடி முதலிய குற்றங்கள் புரிவோரைச் சிறையில் அடைப்பது வீண் செலவு. பதிலாக, கைவிலங்கு போட்டுத் தெருத் தெருவாக இழுத்துச் செல்ல வேண்டும்.
இரண்டாவதாக, வீட்டுச் சொந்தக்காரர்கள் குடியிருப்போரிடம் வருடா வருடம் வாடகை உயர்த்து கிறார்கள். ஆனால் சொத்து வரியைக் குறைவாகக் கட்டுகிறார்கள். இந்த வரியை தாட்சண்ணிய மில்லாமல் நிர்ணயம் செய்து, குறிப்பிட்ட தேதிக்குள் அதைக் காட்டாவிட்டால் வீட்டை ஜப்தி செய்வோம் என்று பெரிய எழுத்தில் நோட்டீஸ் எழுதி வாசலில் ஒட்ட வேண்டும்.
மூன்றாவதாக, இவர் சொல்லியுள்ள யோசனை :
சுமார் 10, 15 வருடத்துக்கு முன் ரிடையரானவர்களுக்கு, இன்று அவர்கள் பணியில் இருந்தால் என்ன சம்பளம் வருமோ அதை கணக்கிட்டுப் பென்ஷன் தருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1000, 1500 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் இன்று 7000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்கள். வைத்தியச் சலுகைகள் வேறே தனி. இவர்கள் வசதிக் குறைவானவர்கள் அல்ல. தற்போது மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவும் நிதி நெருக்கடியை நினைத்து வசதி படைத்தவர்கள் மனமுவந்து தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அரசாங்கமும் இதற்காக ஒர் அறிக்கை விட வேண்டும்.
எப்படி இந்த யோசனை!
இவர் நேர்மையான மனிதர். தனது முழு முகவரியையும் தந்திருக்கிறார். ஆனால் அதை நான் இங்கே தரத் தயாராயில்லை. காரணம், இவருடைய தியாக சிந்தனை எல்லாப் பென்ஷன்தாரர் களுக்கும் இருக்காது. வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு இவரைத் தாக்கப் புறப்பட்டு விடுவார்கள். இவருடைய பாதுகாப்பை முன்னிட்டே அந்த விலாசத்தைச் சொல்லவில்லை.
இவர் இப்படிச் சொல்ல, ஹிந்துவில் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியுள்ள ஒரு முதியவரோ, எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விபத்து இன்ஷ்யூரன்ஸ் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவ தில்லை என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரொம்பக் காலம் முன்பு இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டதென்றும், இப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட் காலம் அதிகரித்திருப் பதால் எண்பது வயது வரை விபத்து இன்ஷ்யூரன்ஸ் தரப்பட வேண்டும் என்றும் இவர் கூறியிருக்கிறார்.
நியாயம்தான். ஆனால் ஆரோக்கிய வசதிகள் பெருகப் பெருக, ஆயுட் காலமும் நீடிக்கப் போகிறது. பிரசினைகளும் வளரப் போகின்றன. மூப்பே அடையாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான். அது சரியா?
காலம் சென்ற டாக்டர் டி. ஞானசம்பந்தன் ‘Future Scenarios’ என்ற தன் புத்தகத்தில், இதைப் பற்றி ஒரு தனி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். மனிதன் முதுமை அடையாமல் இளமையுடனும் சக்தியுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கு வகை செய்யும் மாத்திரைகள் எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம் என்றும், அப்படி நேர்ந்தால் ஜனத்தொகை பெருகி, சமுதாயம் பெரும் அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து, ஜான் நிதாம் என்பவர் எழுதியுள்ள ஒரு நாவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அந்த நாவலில் ஒரு விஞ்ஞானி, மனிதன் முன்னூறு வருடம் உயிர் வாழ்வதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அதைத் தன மகளுக்கும் மகனுக்கும் மட்டும் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கொடுத்திருக்கிறார். அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒரு நாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார்.
மகள் காச்சு மூச்சென்று கத்துகிறாள். ”இது பயங்கரம்! என்னைச் சுற்றி எல்லாரும் ஒவ்வொருவராய்ச் செத்துக் கொண்டிருப்பார்கள்! ஒவ்வொரு சூழ்நிலையும் செத்துக் கொண்டிருக்கும்! நான் அதைப் பார்த்துக் கொண்டு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து உயிர் வாழ்வதா? சகிக்கவில்லை! வேண்டாம், வேண்டாம்! அந்தத் தனிமை எனக்கு நரகமாக இருக்கும். எல்லாரையும் போல நானும் மூப்பு எய்தி, வயதாகி இறந்து போகவே விரும்புகிறேன்!” என்று அப்பாவிடம் சண்டை போடுகிறாள்.
‘இளமை மருந்து’ சாப்பிட்ட மகனுக்கு வேறு விதமான பிரசினை. அவன் மனைவி படா சண்டை போடுகிறாள். ”உங்களுக்கு இளமை மருந்தைக் கொடுத்த உங்கள் அப்பா எனக்கு ஏன் கொடுக்கவில்லை? இப்போது எனக்கு உலக நியதிப்படி இருபத்தேழு வயது! மருந்து சாப்பிட்டிருந்தால் இருபத்துநாலுதான் ஆகியிருக்கும். சொந்த மருமகளையே ஏமாற்றியிருக்கிறாரே!” என்று மாமனாரைத் திட்டுகிறாள்.
நாவலின் முடிவு என்ன என்பதை டாக்டர் ஞானசம்பந்தன் சொல்லவில்லை. அனேகமாக அந்த விஞ்ஞானி சிண்டைப் பிய்த்துக் கொண்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பார். அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பார்.
ஜ.ரா. சுந்தரேசன்
புனிதன்
ரா.கி. ரங்கராஜன்
நாலு மூலை
சில சண்டைகள், சில தகவல்கள்
கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று ‘ஸங்கீத ஸரிகமபதநி’.
நல்லி குப்புசாமி செட்டியார் இதன் நலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயழிய அப்படி யெஎன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.)
ரொம்ப மேதாவித்தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை
சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்தீ மேதைகளின் வாழ்க்கை வரவாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது.
உதாரணமாக, ஓர் இதழில் குன்னக்குடி வைத்தியநாதன் மாட்டிக் கொண்டிருக்கிறார். இவர் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தபோது தனக்கு வேண்டப்பட்ட சிலரின் பெயர்களைக் கலைமாமணி விருதுக்கு
சிபாரிசு செய்தாராம். தகுதியுள்ள பலரின் பெயர்களை நீக்கிவிட்டாராம். இது பற்றி விளக்கம் கேட்டுப் பத்துக் கேள்லிகள் கேட்டார்களாம். பதில் இல்லையாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மறுபடியும் அந்தக் கேள்விகளை அனுப்பிய பின் குன்னக்குடி பதில் எழுதினாராம். ‘நீங்கள் தகலல் அறியும் உரிமை சட்டத்தின்படி சில தகவல்கள் கோரியிருக்கிறீர்கள். இயல் இசை நாடக மன்றம் அந்த சட்டத்துக்கு உட்படுமா என சட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். பதில் வந்ததும் இது பற்றி முடிவெடுக்கிறோம். என்று அவர் எழுதியிருக்கிறார்.
இதன் இன்னோர் இதழில், சென்னை நகரைத் தவிர வேறு ஊர்களில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிளைக் கேட்க முடியவில்லை என்று டி.ன். சிவராமகிருஷ்ணன் என்ற ரசிகர் அங்கவாய்த்திருக்கிறார். அங்கலாய்ப்போடு
நின்று விடாமல் காரசாரமாத் திட்டியிருக்கிறார். ‘அரக்கோணம், ஆரணி, காட்பாடி, விழுப்புரம் – ஏன், தமிழ்
நாட்டில் பல நகரங்கள் சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத பாலைவனப் பகுதிகள். இங்கெல்லாம் ஆலயங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுவதில்லை. இவற்றை நடத்தும் சபாக்களும் இல்லை. இங்குள்ளவர்களுக்குக் ‘கர்நாடக சங்கீதம்.’ என்றால் என்னவென்றே தெரியாது,’ என்று எழுதியிருக்கிறார்! அந்த ஊர்க்காரர்கள் பாயப் போகிறார்களே என்று பயப் படவில்லை.
தலையங்கங்கள் சபாக்காரர்களையும் வித்வான்களையும் சகட்டு மேனிக்கு சாடுகின்றன.
இவ்வாறு, ‘ஸங்கீத ஸரிகமபதநி’ விவகாரமான விஷயங்களை அங்கங்கே தாளித்திருந்த போதிலும், சங்கீத
ரசிகர்களுக்குத் ¦திரியாத பல செய்திளைத் தருகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் பஞ்சமில்லை.
பழைய ஓலை சுவடிகளில் திவ்வியப் பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களுக்கும் பண்களும் தாளங்களும்
குறிப்பிட்டிருந்ததாயும், அச்சுப் பதிப்பில் அவை மறைத்து விட்டன என்றும் ஒரு கட்டுரை குற்றம் சாட்டுகிறது.
அன்னமாச்சாரியாரைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து அவருக்கு நேரடி சிஷ்யர்கள் இல்லை என்றும், மகன்
பெத்த திருமலாச்சார்லுவும் பேரன் சின்ன திருமலாச்சசார்லுவும் அவரது, கீர்த்தனங்களை செப்புத் தகடுகளில்
பதித்து பாடல் இயற்றப்பட்ட நாள், தேதி, நட்சத்திரம், வருடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாடல் முடிந்ததற்கு
அடையாளமாக இருபுறமும் சங்கு சக்கர அடையாள சின்னங்களையும் பொறித்தார்கள் ¦ன்று தெரிகிறது.
‘தஞ்சை நால்வர்’ குறித்த கட்டுரையில் காணப்படும் சுவையான விடீயங்கள்: நால்வாரில் மூன்றாவது சகோதரரான
சிவானந்தம், தஞ்சை மன்னர் சிவாஜியின் நெருங்கிய நண்பராக விளங்கினார். ஹோலிப் பண்டியகையின் போது அந்த மன்னர் சிவானந்தத்தின் வீட்டுக்கு சென்று அவர் மீது வண்ண நீர் தெளித்துக் கொண்டாடினால். ஆண்களும் நாட்டியமாடலாம் என்ற முறையை சிவானந்தம் முதன் முதல் தொடங்கி, திருமறைக்காட்டில் பண்டார வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டியம் கற்றுத் தந்து அரசவையில் அரங்கேற்றம் செய்து வைத்தார். ஆண்கள் மட்டுமே ஆடி வந்த கதக்களி நடனத்தில் பரத நாட்டிய உத்தி சேர்த்து, ‘மோகினி ஆட்டம்’ என்ற நடனத்தை மலையாள நாட்டில் நிலைபெற செய்தவர் இவர்.
எம்.எம்.தண்டபாணிதேசிகர்’ பட்டினத்தார்’ திரைப்படத்தில் பட்டினத்தாராக நடித்துப் பாடியதைப் பார்த்து, பக்தி மேலீட்டால் பலர் சன்னியாசியாக மாறினார்கள்.
‘அலையாயுதே கண்ணா’ வை இயற்றிய ஊத்துக்காடு வேங்கட சுப்பயரின் சொந்த ஊர் ஊத்துக்காடு அல்ல.
மன்னார்குடியில் பிறந்தவர். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் ஊத்துக் காட்டில் உள்ள மாமன் வீட்டில் வளர்ந்தார். திருமண வீடுகளில் பாடப்படும் ‘கெளரி கல்யாணமே வைபோகமே’ இவர் இயற்றியது.
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பி பாலுஸ்வாமி தீட்சிதர், சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற ஒரு பாண்டு வாத்திய கோஷ்டியைப் பார்த்தார். அந்தக் குழுவில் இசைக்கப்பபட்ட வயலின் வாத்தியத்தில் மோகம் கொண்டு, மணலி சின்னஸ்வாமி முதலியார் கொடுத்த ஆதரவில், மூன்று வருடகாலம் அந்த வாத்தியத்தைப் பயின்றார். அதன் பிறகே கர்நாடக சங்கீதத்தில் வயலின் புழக்கத்துக்கு வந்தது.
நல்ல நாள், கிழமை, ராகு காலம் முதவியவற்றில் மதுரை மணி ஐயருக்கு மிகந்த நம்பிக்கை உண்டு.
‘நவக்கிரகங்கள்தான் நம்மை வழி நடத்தி செல்கின்றன. ஆகவே கிரகங்களின் சக்தி என்னை என்ன செய்யும் என்ற கருத்துக் கொண்ட கிரஹபலமேமி என்ற பாட்டைப் பாட மாட்டேன்’ என்று சொன்னவர் அவர். நிதிசாலசுகமா என்ற கல்யாணி ராகப் பாடலையும் அவர் பாடமாட்டார். ‘அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு பாட வந்து, கச்சேரி முடிந்ததும் மீதிப் பணத்தைக் கை நீட்டி வாங்கி கொள்கிற நாம் இப்படலை பாடத் தகுதியற்றவர்’ என்ற கூறி
சிரிப்பார்.
அபூர்வமாக ஒரே ஒரு இதழில் காணப்பட்ட ஜோக்:
‘என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்…’
‘சரி, நீ என்ன பண்ணறே?’
‘தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?’
அம்மாவாது! அப்பாவாது!!
”இந்தியர்களாகிய நீங்கள் ரொம்ப சுயநலக்காரர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது,” என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.
”எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ரோஷமாகக் கேட்டாராம் என் நண்பர்.
”பின்னே என்ன? நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது ஏதோ இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், நம்மைக் காப்பாற்ற ஆள் வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே குழந்தை பெற்றுப் படிக்க வைத்து வளர்க்கிறீர்கள்,” என்று மேலும் அவர் குற்றம் சாட்டினாராம்.
”உலகம் பூராவும் அப்படித்தானே?”
”இல்லை. அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஐரோப்பியர்கள் முதலிய நாங்கள் அப்படிச் செய்வதில்லை. பதினைந்து பதினாறு வயதானதும் உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள் என்று குழந்தைகளை வெட்டி விடுகிறோம்.”
”வெட்டி விட்டு?”
”எங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தைத் திட்டமிட்டு சீர் செய்து கொள்கிறோம். பிள்ளைகளை வீட்டைவிட்டு அனுப்பி வைக்கும் போது, பெற்றோருக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். பாக்கிக் காலம் பூராவையும் தங்களுக்காகவே செலவிட்டுக் கொள்வதால், வயோதிக காலத்தில் மகனுடைய கையையோ, மகளுடைய கையையோ எதிர்பார்த்து நிற்க வேண்டிய தேவையில்லை. இந்தியர்களைப் பாருங்கள். வளர்த்தேன், படிக்க வைத்தேன், ஆளாக்கினேன். இன்றைக்கு என்னை அம்போ என்று விட்டு விட்டுப் போய்விட்டான் என்று புலம்புகிறார்கள்!” என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.
என்னிடம் இதைச் சொன்ன நண்பர், ”பாசம், பிரியம் என்பதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு கிடையாது. நாங்கள் அப்படி இல்லை என்று அவரிடம் சொல்லி வைத்தேன். ஆனால், சமீபகாலமாக முதியோர்களின் பரிதாப நிலைமையைக் கவனித்தால் வெள்ளைக்கார முறை சரிதானோ என்று தோன்றுகிறது” என்றார்.
இந்த நண்பர் சிறு தொழிற்சாலையன்றை நடத்தி வருகிறார். ஒழிந்த வேளையில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிகளில் பங்கேற்கிறார்.
அவர் விவரித்த பல கண்ணீர்க் கதைகளில் இரண்டை மட்டும் இங்கே சொல்கிறேன்.
1. ·பிளாட்பாரத்தில் வயதான பெண்மணி ஒருத்தி மயக்கம் போட்டுக் கிடப்பதாக ஒரு ·போன் வந்தது. அழைத்து வாருங்கள் என்று சொன்னோம். ஆட்டோவில் அழைத்து வந்தார் அந்த இளைஞர். ‘நடைபாதையில் இந்த அம்மாள் கிடப்பதைத் தற்செயலாகப் பார்த்தேன்’ என்று சொன்னார். அவருடைய பெயர், முகவரியை குறித்துக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு, அந்த அம்மாளுக்கு வைத்திய உதவிகள் செய்தோம். இரண்டு மூன்று நாட்களில் எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு அவர் குணம் அடைந்தார்.
”என்னை இங்கே அழைத்து வந்தவர் எங்கே?” என்று கேட்டார். ”அவர் யாரோ புண்ணியவான். இங்கே உங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார்” என்றோம்.
”அவன் யாரோ இல்லீங்க. என்னுடைய சொந்தப் பிள்ளை. பெண்டாட்டியுடன் சேர்ந்து என்னை அடித்து உதைத்து வாசலில் தள்ளிவிட்டான்!” என்று கண்ணீர் விட்டார் அந்த அம்மாள்.
பிறகுதான் புரிந்தது. அடித்தது உதைத்ததோடு இல்லை. சாப்பாட்டில் நிறைய மயக்க மருந்தைச் சேர்த்துக் கொடுத்து, பேச முடியாத நிலையை ஏற்படுத்தி எங்களிடம் கொண்டு வந்து தள்ளியிருக்கிறான் என்பது.
அவன் கொடுத்திருந்த பெயர், விலாசம் பொய்யானது. அந்த அம்மாள் சரியான விலாசம் சொல்லியதும், அந்த இளைஞனைப் பிடித்து வந்து, அம்மாவை அழைத்துக் கொண்டு போகும்படி சொன்னோம்.
”என் அம்மா அங்கே வந்தால் என் பெண்டாட்டியை இங்கே கொண்டு வந்து விட வேண்டியிருக்கும். எது தேவலை? நீங்களே சொல்லுங்கள்” என்றான் அவன்! ”உங்கள் குடும்பப் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, அம்மா, பிள்ளை இருவரையும் அனுப்பிவிட்டோம்.
2. ஒரு பால்ய விதவை. வசதியுள்ளவர். வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் என்பதற்காக, உறவுக்காரர்களின் குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டு படிப்பு, வேலை, கல்யாணம் என்று அவர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதிலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து சொந்தக்காரக் குழந்தைகளை அந்த மாதிரி ஆளாக்கியிருப்பார். வயது எண்பத்தைந்துக்கு மேலாயிற்று. கடுமையான நோய் பாதித்தது. எல்லோரும் அவரைப் பற்றிக் கதை கதையாக நல்லதையே சொன்னார்களே தவிர, யாரும் தங்களுடன் வைத்துக் கொள்ளத் தயாராயில்லை. எங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். அது சாயங்கால நேரம். ”நான் இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டு¡மா?” என்று கேட்டார். ”ஆமாம்மா. நாங்கள் நன்றாய்ப் பார்த்துக் கொள்கிறோம்” என்றோம். சரியென்று சொல்லிப் படுத்துக் கொண்டார். காலையில் பார்த்தால் இறந்துப் போயிருந்தார். ராத்திரி பூரா எவ்வளவு மனம் புழுங்கினாரோ! அவ்வளவு பேருக்கு அவ்வளவு உதவிகள் செய்தும் இந்த நிர்க்கதிக்கு ஆளானோமே என்று எத்தனை வேதனைப்பட்டாரோ, பாவம்! ஒரே ராத்திரியில் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைக் கூறிய நண்பர் ”எங்கள் தொண்டு நிறுவனத்தில் நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. உண்மையாகவே அனாதைகளாக இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் பணம் படைத்த வயோதிகர்கள் நிறையக் கட்டணம் செலுத்தி வசதியான முதியோர் இல்லங்களில் சேர்ந்து கொள்கிறார்கள். முதியோர் இல்லங்களும் தற்போது ஒரு பிஸினஸாக ஆகிவிட்டன. சில சமயம், நாலைந்து பென்ஷன்காரர்கள் சேர்ந்து ஒரு வீடு அமர்த்தி, சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் ஆள் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எப்படியாயினும் பழைய கூட்டுக் குடும்பத் தத்துவம் காற்றிலே பறந்துவிட்டது. இது கமர்ஷியல் யுகம். அவனவனுக்குத் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரிய காரியமாக இருக்கும் போது அப்பாவாவது, அம்மாவாவது! அந்த பிரிட்டிஷ்காரர் சொன்னது போல, இளம் வயதிலேயே பாசங்களை அறுத்துக் கொண்டு தன்னுடைய வயோதிக காலத்துக்கு ஏற்பாடு செய்து கொள்வதுததான் மேல் என்று தோன்றுகிறது” என்று வருத்தத்துடன் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
”அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதீர்கள். நம்முடைய பண்பாடு, பாவ, புண்ணிய உயர்வு, பெரியவர்களிடம் பக்தி இவையெல்லாம் ஒரு நாளும் மறையாது” என்று தத்துவம் பேசி விடை கொடுத்தேன் நண்பருக்கு.
இருந்தாலும் அன்று ராத்திரி பூரா தூக்கமில்லை.
நாயிடம் அன்பு காட்டுங்கள்
இந்தப் பகுதியில் நான் எழுதும் கட்டுரைக்கு, கட்டுரையிலும் ஒரு பாராவுக்கு, பாராவிலும் ஒரு வாக்கியத்துக்கு, வாக்கியத்திலும் ஒரு வார்த்தைக்கு இப்படியரு பயங்கர பாதிப்பு இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒரு வகையில் பெருமையாக இருக்கிறது. இன்னொரு வகையில் ஜாக்கிரதையாக எழுத வேண்டுமென்ற பயமும் ஏற்படுகிறது.
விஷயம் யாதெனில்,
K4 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் சாலையில் சொறி நாய்கள் நாலைந்து தாவி வருகின்றன என்றும், பிடித்துச் செல்வார் யாருமில்லை என்றும், ‘மாற்ற முடியாத விஷயங்கள்’ என்ற பட்டியலில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தேன்.
ஞாயிற்றுக் கிழமை காலைதான் பத்திரிகை வெளிவந்திருக்கும். பகலுக்குள் மூன்று பெண்மணிகள் வெவ்வேறு நேரத்தில், வெவ்§று இடத்திலிருந்து போன் செய்தார்கள். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் அப்படி நான் எழுதியது ரொம்பத் தவறு என்று மட்டும் அழுத்தமாகச் சொன்னார்கள். ‘சொறி நாய்’ என்றால் வெளிநாய் என்று அர்த்தம் செய்து கொண்டு கார்ப்பரேஷன்காரர்கள் அவைகளைப் பிடித்துக் கொண்டு போய் ரொம்பக் குரூரமான முறையில் கொன்று விடுகிறார்கள் என்றார் ஒரு சகோதரி. (Stray Dog என்பதைத்தான் நான் சொறி நாய் என்று குறிப்பிட்டுவிட்டேன். தெரு நாய் என்று சொல்லியிருக்கலாமோ என்னவோ)
இரண்டாவது சகோதரியும், நாய்கள் கொலை செய்யப்படும் முறை ரொம்பக் கோரம் என்றார். அவர் விவரித்த முறைகளை இங்கே நான் விவரித்தால், பலவீன இதயமுள்ளவர்களுக்கு பயங்கர சொப்பனம் வரும்.
”இந்த நாய்கள் குறுக்கே தாவி ஓடுவதைப் பார்த்தால் பயமாயிருக்கிறதே” என்றேன்.
”நீங்கள் பயப்படவே வேண்டாம். ஒரு கவளம் சோறு போட்டால் வாலைக் குழைத்துக் கொண்டு உங்கள் பின்னாலேயே வரும்” என்றார்.
”பின்னாலேயே வீட்டுக்கு வந்தால்?” என்றேன்.
”வரட்டுமே? வளர்த்துவிட்டுப் போங்களேன். வீட்டுக்கு ஒரு நாய் வளர்க்கலாம். நான் தெருவில் கிடந்த ஒரு அனாதை நாய்க் குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து சோறு ஊட்டி வளர்த்தேன். எவ்வளவு விசுவாசமாயும் பிரியமாயும் பழகுகிறது தெரியுமா? நான் சுவாமி சன்னதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும்போது, ஸ்தோத்திரம் முடியும் வரை பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது,” என்றார். தொடர்ந்து, ”நாய்கள் விஷயத்தில் மட்டுமில்லை, மாடுகளை லாரியில் ஏற்றி அனுப்புகிறார்களே, அது இன்னொரு கொடுமை” என்றார்.
”மாடுகளை வியாபாரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்படவில்லையே?” என்று கேட்டேன்.
”இல்லை. ஆனால் பண்ணைக்குப் போகிற மாடா, கசாப்புக்குப் போகிற மாடா என்று சொல்லிப் பெர்மிட் வாங்க வேண்டும். ஒரு லாரியில் ஐந்து ஆறு மாடுகள்தான் ஏற்றலாம். ஆனால் நாற்பது மாடுகள் கூட ஏற்றுகிறார்கள். இடம் போதவில்லையென்றால் காலை ஒடித்துப் படுக்கப் போட்டுவிடுகிறார்கள். கேரளாவுக்குப் போன மாடுகளை எம்.எல்.ஏ. தாமரைக்கனி தடுத்து நிறுத்தினார் என்று செய்தி வந்ததே பார்த்தீர்கள் இல்லையா?” என்றார்.
பார்த்தேன். மாடு விஷயம் இருக்கட்டும். நாய் விஷயம் சொல்லுங்கள். இப்போதுதான் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்கிறார்களே, அப்புறம் எப்படி குரூரமாகச் கொல்வதாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
”ஆமாம். ஒரு நாய்க்குக் கருத்தடை செய்தால் நூறு நாய்கள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆனால் குரூரமாய்க் கொலை செய்வதுதான் அதிகம். மேனகாகாந்தி கடுமையாகத் தலையிட்ட பிறகு குரூரம் கொஞ்சம் குறைந்திருக்கிறது” என்றார்.
”சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
”அனாதை நாயிடம் அன்பு காட்டுங்கள் என்று எழுதுங்கள். நாய்களுக்காக வீட்டு வாசலில் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கும்படி சொல்லுங்கள். நாய்களிடம் பிரியம் காட்டும்படி எடுத்துச் சொல்லுங்கள் போதும்” என்றார் சகோதரி.
பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் என் நண்பரொருவரின் பதினாலு வயதுத் தம்பி, ஒரு தெரு நாயிடம் பிரியம் காட்டப் போய், அது அவன் கையைப் பிராண்டி, பத்து நாள்கழித்து அவனுக்குக் காய்ச்சல் வந்ததும், ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதும் அவனைக் கூண்டு மாதிரியான இடத்தில் அடைத்து வைத்ததும், அவனுக்கு அருகில் கூட யாரும் போகக் கூடாதென்று டாக்டர்கள் தடுத்ததும், மூன்று நாள் கதறிக் கதறியே அவன் உயிர் விட்டதும், உறவினர்கள் எல்லாருக்கும் கட்டாயமாகத் தடுப்பு ஊசி போடப்பட்டதும் எனக்கு நினைவு வந்தது. ஆனால் அது லட்சத்தில் ஒரு கேஸாக இருக்கலாம் – லட்சத்தில் ஒரு நாய் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது போல.
”சரி, எழுதுகிறேன். உங்கள் பெயரையும் டெலிபோன் நம்பரையும் சொல்லுங்கள். யாராவது அனாதை நாயைக் கண்டால் உங்களுக்குத் தெரிவிக்கும்படி எழுதுகிறேன்,” என்றேன்.
டெலிபோன் நம்பரையும் பெயரையும் சொன்னார். ”ஆனால் இதைப் பிரசுரிக்க வேண்டாம். நான் ஏற்கனவே ஏராளமான நாய்களைக் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் விரைவில் பெங்களூருக்குப் போய்விட எண்ணம்,” என்றார்.
”வேறே யாரைத் தொடர்பு கொள்ளச் சொல்லட்டும்?” என்று கேட்டேன்.
”பிராணி நல அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். ஒரு வேடிக்கை சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் சத்தியமான விஷயம்.”
நான் எழுதி முடித்துவிட்டு, திருத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒருவர் வந்தார். திடகாத்திரமான மனிதர். நான் முன்புறத்தில் இருந்ததால், ”பாலகிருஷ்ணன் என்று இங்கே யாரும் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.
”மாடியில் இருக்கிறார்” என்றேன்.
நாலு படி ஏறியவர் திரும்பி வந்தார். ”மாடியில் நாய் இருக்கிறதா?” என்று பயத்துடன் கேட்டார்.
”இல்லை, தைரியமாகப் போங்கள்,” என்றேன்.
நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் எப்படிப்பட்ட திடகாத்திர மனிதருக்கும் நாய் என்றால் ஒரு நடுக்கம்தான். யாரால் அதைப் போக்க முடியும்.
ஏதோ உங்களாலானது…
காலை மணி பத்து இருக்கும். அதற்குள்ளேயே வெப்பமும் புழுக்கமும் ஆளை அழுத்திக் கொண்டிருந்தன. முன் பக்கத்து ஸிட் அவுட்டில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.
டங் டங்கென்று ஒரு சத்தம்.
நிமிர்ந்து பார்த்தால், சட்டை வேட்டி மூக்குக் கண்ணாடியுடன் ஒரு ஆள், பலமான நீளமான உருட்டுக் கட்டையால் கேட்டின் இரும்புச் சட்டத்தைத் தட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
வயதான ஆள்தான். ஆனால் அப்படியன்றும் தள்ளாமையில் கீழே விழுந்து விடுகிற மாதிரி இல்லை. அழுக்கு முகமும் அழுக்கு உடையுமாக இருந்ததால் பிச்சைக்காரன் என்று நன்றாகத் தெரிந்தது.
(பிச்சைக்காரன் என்கிற வார்த்தையைச் சொல்லவே என்னவோ போலிருக்கிறது. கழகத் தமிழ் அகராதியைப் பார்த்தேன். ‘இரவலர்’ என்றுபோட்டிருக்கிறது. ஆனால் அது என்னவோ புலவர், கல்விமான், அறிவாளி என்று ரொம்ப கெளரவம் கொடுக்கிற சொல்லாகத் தோன்றுகிறது.)
இந்த ஆள் முன்பே இரண்டொரு முறை வந்திருக்கிறார். (‘ன்’ என்று சொல்லவும் என்னவோ போலிருக்கிறது) வாயைத் திறந்து, ஐயா, பசிக்கிறது என்றோ, தர்மம் போடுங்க சாமி என்றோ எதுவும் கேட்கமாட்டார். டங் டங் என்று தட்டிவிட்டு நிற்பார். எதாவது சில்லறை போட்டு அனுப்பிவிடுவேன்.
இந்தத் தடவை பேசாமல் இருந்தேன். மறுபடியும் டங் டங் என்று தட்டினர். ‘அப்புறமா வாங்க’ என்றேன். காதுதான் கேட்கவில்லையோ, அல்லது கேட்காத மாதிரிப் பாசாங்கோ, நேரே என்னைப் பார்த்தபடி மறுபடியும் டங் டங் என்று கேட்டில் தட்டினார். கண் நன்றாகத் தெரிகிறது என்று ஊகித்து, கையால் சைகை காட்டி ‘அப்புறமா வாங்க’ என்று மீண்டும் சொன்னேன்.
மேலும் நாலைந்து டங் டங். பிறகு என்னை முறைத்துப் பார்த்தார் – ‘நீயும் ஒரு மனுஷனா!’ என்று சொல்வது போல. பிறகு நகர்ந்து விட்டார்.
அண்டை அயல் வீடுகளிலும் இரும்பு கேட் இருக்கிறது. அங்கே எங்கேயும் கைத்தடியால் டங் டங்கென்று தட்டும் சத்தம் கேட்கவில்லை.
‘வாயைத் திறந்து நான் யாசகம் கேட்கமாட்டேன். ஆனால் நான் வந்து எதிரே நின்றதுமே தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டியது உன் கடமை’ என்று இந்த ஆளைப்போல சொல்லாமல் சொல்கிற பலர் இருக்கிறார்கள்.
மயிலாப்பூரில் இரண்டு ஆசாரமான வைதீகர்களைப் பார்த்திருக்கிறேன். நீட்டாக, சோல்ஜர்கள் மாதிரி வந்து நிற்பார்கள். கடகடவென்று ‘வேதம்’ ஓதுவார்கள். அது வேதம்தானா, அப்படியே வேதமாயிருந்தாலும் சரியாகத்தான் சொல்கிறார்களா என்பது கண்டுபிடிக்க முடியாது. (‘தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேல் குலத்தான் என்று கூவு’ என்று பாரதியார் ரொம்பக் கடுமையாக எழுதியிருக்கிறார்.)
ஐந்து நிமிடம் வேதம் (!) சொல்லி முடித்ததும் இருவரும் பேசாமலே நிற்பார்கள். ‘உன்னைவிட நான் உயர்ந்தவன் என்று தெரிகிறதல்லவா? மரியாதையாக சன்மானம் கொடுத்து அனுப்பு’ என்று மெளனமாய் உணர்த்துகிற தன்மானக்காரர்கள் இவர்கள்.
சாபம் கீபம் இட்டுத் தொலைப்பார்களோ என்ற பயத்தில் நானும் ஏதாவது கொடுத்தனுப்பி விடுவேன்.
ஏழை எளிய உறவினர்கள் பல சமயங்களில் உதவி தேவை என்று வெளிப்படையாகவே கேட்பதுண்டு. என்னால் இயன்றதைச் செய்வேன். வேறு வகையான சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் தமையனாரிடம் ஒரு நாள் ‘ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்கிறே, எனக்கு அஞ்சோ பத்தோ கொடுத்தால் குறைஞ்சா போயிடுவே?’ என்று கேட்டுவிட்டார்.
அவ்வளவுதான். என் அண்ணாவுக்குக் கடும் கோபம் வந்து விட்டது. ‘என்ன இது, அதிகாரப் பிச்சையாக இருக்கிறது? ஒரு பைசா தரமாட்டேன்!’ என்று சொல்லி விரட்டிவிட்டார்.
(”அதிகாரப் பிச்சை!” எத்தனை பொருட்செறிவுள்ள அழகான தமிழ்ச் சொல்! இதைக் கண்டுபிடித்தவர் யாராயிருந்தாலும் வாழ்க!)
இன்றைய தமிழ் நகைச்சுவை எழுத்தாளர்கள் அனைவருக்கும் பிதாமகர் ஒருவர் உண்டு. அவர் பெயர் எஸ்.வி.வி. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய பல அற்புதமான கட்டுரைகள் சமீபகாலமாகத்தான் புத்தக வடிவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.
வாசலில் பிச்சை கேட்டு ஒரு கிழவி நச்சரித்துக் கொண்டேயிருந்தாளாம். இவர் ஏதோ அவசர வேலையில் மூழ்கியிருந்ததால், போ, போ என்று விரட்டிக் கொண்டிருந்தார். அவள் போகவில்லை. அருகில் கிடந்த ஒரு சின்ன குச்சியை எடுத்து, ‘போன்னா போகமாட்டே?’ என்று ஓங்கியிருக்கிறார். அது நிஜமாகவே அந்தக் கிழவி மேல் பட்டதோ, அல்லது அதுதான் சாக்கு என்று அவன் பிடித்துக் கொண்டாளோ –
குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக் கொண்டு தெருவில் விழுந்துவிட்டாள். எஸ்.வி.வி.க்குச் சங்கடமாகி விட்டது. ‘இந்தாம்மா, சத்தம் போடாதே. எழுந்து போய்த் தொலை. காசு கொடுக்கிறேன்’, என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தெருவில் கூட்டம் சேர்ந்துவிட்டது.
ஆளாளுக்கு அந்தக் கிழவியைச் சூழ்ந்துகொண்டு, ‘என்னம்மா, அடி பட்டுடுத்தா? யார் அடிச்சாங்க?’ என்று கேட்க, அவள் மேலும் மேலும் கூவ, எஸ்.வி.வி. மேலும் மேலும் விளக்கம் சொல்ல, படா ரகளையாகிவிட்டது.
‘ஏன் சார், பாவம் கிழவி. ஏதோ பிச்சை கேட்டாள். இஷ்டமானா கொடுங்க. இல்லாட்டி, போன்னு சொன்னா போயிடறாள்! அடிச்சு விரட்டலாமா?’ என்று பல பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.
(நான் மேலே எழுதியிருப்பது அந்தக் கட்டுரையின் சாரமே தவிர, அதே வாக்கியங்கள் அல்ல. ஞாபகத்தில் இருப்பதைச் சொன்னேன்.)
எஸ்.வி.வி.யைத் திட்டியவர்கள் அதன்பின் தங்கள் பாட்டுக்குக் கலைந்து போயிருப்பார்களே தவிர, அந்தக் கிழவிக்கு ஒரு பைசா கொடுத்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
தர்மம் பண்ணுவதிலே யாருக்கும் சந்தோஷம் கிடையாது. தர்மம் பண்ணாதவனைத் திட்டுவதென்றால் மட்டும் எல்லாருக்கும் சந்தோஷம்.
ஷேக்ஸ்பியரின் ‘கிங் ஜான்’, நாடகத்தில்.
‘நான் பிச்சைக்காரனாக இருக்கும் வரையில், பணம் வைத்திருப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன். நான் பணக்காரனாக ஆனதும் பிச்சை எடுப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன்’, என்று ஒரு வரி வருகிறது.
ஐயாமாருங்களே, அம்மாமாருங்களே, இதாங்க உலகம்.
சதுர்த்தி நினைவுகள்
பார்த்தசாரதி பெருமாள், கற்பகாம்பிகை, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் முதலான எல்லாரும் தெய்வங்கள் நான் வழிபடும் கடவுளர்கள். ஆனால் பிள்ளையார் அப்படியல்ல. அவர் என் தோழர்.
சின்ன வயசில் பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போகும்போது வழியில் காணும் பிள்ளையார்களுக்கெல்லாம் நின்று என் நெற்றியில் குட்டுப் போட்டுவிட்டுச் செல்ல ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர் என்னைக் கைவிட்டது கிடையாது. (இந்தக் குட்டுப் போட்டுக் கொள்ளும் முறையில் விஞ்ஞான உண்மையன்று இருப்பதாக அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார். நெற்றிப் பொட்டில் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தில் மூளையைச் சுறுசுறுப்படைய வைக்கும் நரம்புகள் இருக்கின்றனவாம். குட்டுப் போட்டுக் கொண்டால் அவை ‘ஆக்டிவேட்’ ஆகின்றன என்றும், இதுபோன்ற பல வழிபாட்டு முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.
ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படித்த சமயம், என் அப்பா என்னை அடிக்க வந்தததும், நான் தப்பியோடி, அருகிலிருந்து ஒரு பிள்ளையார் கோவிலுக்குள் போய் ஒளிந்துகொண்டதும், துரத்திக் கொண்டு வந்த அப்பா, கோவில் வாசலில் நின்று, ”ஒய் குருக்கள்! அந்தப் பயலை வெளியே விரட்டும்!” என்று சத்தம் போட்டதும் (முன்பே இரண்டொரு முறை சொல்லியிருக்கிறேன்) ஞாபகம் வருகிறது. (ஆசார வைஷ்ணவராகையால்தான் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற கொள்கை வைத்திருந்தார் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது)
கும்பகோணத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் காவேரியில் கும்பேசுவர சுவாமி படித்துறை இருந்தது. அதை ஒட்டி ஒரு பழைய பெரிய மண்டபம், ஊரிலுள்ள பண்டாரம், பரதேசிகளுக்கெல்லாம் அதுதான் வாசஸ்தலம். ஆனால் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பத்துநாள் போல அங்கே ஒட்டடை அடித்து, பெருக்கித் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வார்கள். அங்கே சங்கீதக் கச்சேரிகள் நடைபெறும். இரண்டாவது மூன்றாவது நிலையில் உள்ள வித்வான்கள் பாடுவார்கள். மண்டபம் நிறையக் கூட்டம் இருக்கும். தவறாமல் எல்லா நாட்களும் அங்கே போய் உட்கார்ந்துவிடுவேன் சிநேகிதர்களோடு.
ஆனால் என் தந்தை காலமான சமயம் ஒரு சதுர்த்தி உற்சவர் வந்த போது, ‘தீட்டு’ என்பதால் அங்கெல்லாம் போகக் கூடாதென்று விட்டில் தடுத்துவிட்டார்கள். இருந்தாலும், திருட்டுத்தனமாக ஒரு நாள் போய்விட்டேன். அந்த ஒரு கச்சேரி மட்டும் எனக்கு ரொம்ப ஆழமாய் இருக்கிறது. சிவந்த மேனியும், கட்டுக்குடுமி, சந்தனப் பொட்டும், வைரக் கடுக்கனும், சில்க் முழுக்கைச் சட்டையுமாக ஒருவர் அன்று பாடினார். பெயர் நினைவில்லை. நாற்பது வயதிருக்கும். அருமையான சாரீரம். பிரமாதமாகப் பாடத் தொடங்கினார். மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்யக் கையை உயர்த்தியபோதுதான் அவரும் கவனித்தார். அவையினரும் நீளத்துக்குப் பெரிதாய்க் கிழித்திருந்தது. சலவையிலிருந்து வந்திருந்த சட்டையைச் சரியாய்ப் பார்க்காமல் அப்படியே மாட்டிக் கொண்டு வந்திருந்தார். பாவம். அதன் பிறகு அவருக்கு மூடே போய்விட்டது. கையை உயர்த்தாமல் பாடுவதென்பது எந்த மகா வித்வானாலும் முடியாத காரியம். (பார்க்கப் போனால் மகா வித்வானாக இருக்க இருக்க, கை ரொம்பவுமே மேலே உயரும்) இந்த வித்வானிகளின் நிலை ரொம்பப் பரிதாபமாகிவிட்டது அன்றைக்கு. கொஞ்சம் உற்சாகம் வரும். தன்னை மறந்து பாடுவார். கை உயரும். உடனே கிழிசல் ஞாபகம் வந்து கையைத் தழைத்துக் கொண்டு போய்விடுவார்.
எனக்கு அது ஒரு மறக்க முடியாத வினாயக சதுர்த்தி. அந்த வித்வானுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.
சென்னையில் குடியேறிய பிறகு சில வருடங்கள் பிள்ளையாரை மறந்திருந்தேன். ஆனால் அவர் என்னை மறக்கவில்லை. புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் தன் கோவிலுக்கு எதிரிலேயே நான் குடியிருக்கும்படி பண்ணிவிட்டார். தெருவில் இறங்கினால் அந்தச் சின்னப் பிள்ளையார் கோவிலுக்கு ஒரு கும்பிடு போடாமல் போகமுடியாது. (அந்தக் கோவிலை இப்போது மிக அழகாக கட்டியிருக்கிறார்கள்) அலுவலக நண்பர்கள் எல்லாருமே அந்தப் பகுதியில் வசித்து வந்ததால், குமுதம் காலனியில் ஒன்றாகக் குடித்தனம் போனபோது, அங்கே காம்பவுண்டுக்கு உட்புறமாக ஒரு பிள்ளையார் மூர்த்தி பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்று முனைந்தோம். பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்பது தெரியாமல், மகாபலிபுரத்துக்குப் போகிறவர்களிடமெல்லாம் சொல்லி அனுப்பினோம். இதற்குள் ஒருவர், ”பிள்ளையாரை விலைக்கு வாங்கி வைப்பது கிடையாது. எங்கிருந்தாவது திருடிக் கொண்டுவந்துதான் வைக்க வேண்டும். அதுதான் சம்பிராதாயம்” என்று சொன்னார்.
பிள்ளையாரிடம் எல்லாருக்குமே அபார பக்திதான் என்றாலும், திருட்டில் இறங்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இருக்கவில்லை. எப்படியோ பாடுபட்டு, ஒரு பிள்ளையார் சிலை வாங்கி, மூன்றடி உயரத்தில் ஒரு மேடையும் ஒரு கீற்றுக் கூரையும் போட்டு, தினம் தினம் ‘முறை’ வைத்துக் கொண்டு பூஜை (!) செய்தோம். அது சரிப்பட்டு வராததால் ஒரு குருக்களை ஏற்பாடு செய்தோம். பிறகு நண்பரொருவர் நன்கொடை வசூல் செய்து, தன் கைப்பணமும் நிறைய போட்டு, அழகான பெரிய மண்டபத்துடன் கோவில் கட்டிவிட்டார். சதுர்த்தி உற்சவம் அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. (என்று நினைக்கிறேன்)
வீட்டில் எப்போதும் ஒரு பிள்ளையார் படம் இருக்கிறது. மூக்குக் கண்ணாடியைக் காணவில்லையா, ஸ்கூலிலிருந்து குழந்தை வருவதற்கு லேட்டாகிவிட்டதா, கிரிக்கெட்டில் இந்தியா நன்றாகக விளையாடவேண்டுமா, இரண்டு நாளாய் ஜுரமா, கிரைண்டர் மக்கர் செய்கிறதா – எதுவானாலும் ‘பிள்ளையாருக்குக் காசு வை’ என்பதே எங்கள் தாரக மந்திரம். காசு வைத்ததும் நல்லபடி அருள் செய்வார் எங்கள் பிள்ளையார். உண்டியலில் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும், பத்து ரூபாயும் (அந்தந்த நிலைமைக்கு ஏற்றபடி) சேர்ந்து, வருடமுடிவில் நானூறு ஐந்நூறு ரூபாய் வரை சேர்ந்துவிடும். பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்துக் கொடுப்போம். சினேகிதர்களிடம் கொடுத்து அவர்கள் வீட்டருகே உள்ள கோவில்களுக்கும் கொடுக்கச் சொல்வோம்.
ஒருமுறை காலனி தோட்டக்காரனிடம் முப்பது ரூபாய் போல் சில்லறையாகக் கொடுத்து, ”பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில்களில் உண்டிகளில் போட்டுவிட்டு வா” என்று அனுப்பினேன். ரொம்ப நேரம் கழித்துத் திரும்பினான் – தள்ளாடியபடி.
”என்னடா, போட்டாயா?” என்றான்.
”என்னடா, பேச்சு ஒரு மாதிரியா இருக்கு?”
”ஆழ்தான் பாழ்ட்டேங்கிறேன்ல?” என்றான்.
சொல்லிவிட்டு. போழ்ட்டான். அதழ்கு மேலே கேழ்ட்டு என்ன பிரயோழ்ணம்?
கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்
ஹாஸ்ய எழுத்தாளர்கள் ஹாஸ்யமாகத்தான் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தப் பயிலரங்கத்தில் சுஜாதா, நகைச்சுவையின் பல்வேறு கூறுகளைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பேசினார். பிற இளைஞர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். நான் பழைய காலத்து ஆசாமி. பெருங்காய டப்பா; ஆனாலும் இப்போதும் கொஞ்சம் வாசனை இருக்கும் என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை எழுத்தாளர்கள்தான் ஆங்கிலத்தில் எவ்வளவு பேர்! ஜெரோம் கே.ஜெரோம், ஜேம்ஸ் தர்பர், மார்க் ட்வெய்ன், ரிச்சர்ட் கார்டன், சார்லஸ் டிக்கென்ஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தொழிலை வைத்து நாவல்கள் பலவற்றை கார்டன் எழுதினார் என்றால், சிரிக்க வைத்து கூடவே சிந்திக்கவும் வைத்த கட்டுரைகளை ஜெரோம் கே. ஜெரோம், தர்பார் போன்றவர்கள் எழுதினார்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறார், சம்பவக் குவியல்களில் ஹாஸ்யத்தைப் புகுத்தின பி.ஜி.உட்ஹவுஸ்.
உட்ஹவுஸ் படைத்த பெர்ட்டி ஊஸ்டர் என்கிற சீமானும், அவர் கீழ் பணிபுரியும் ஜீவ்ஸ¤ம் பிரபலமான கதாபாத்திரங்கள். வெள்ளைப் பன்றி வளர்ப்பு இங்கிலாந்தில் ஒரு செழிப்பான தொழில். அதை மையமாக வைத்து எழுதின நாவல் Pigs have wings.
அதில் ஒரு சம்பவம். பெர்ட்டி ஊஸ்டருக்கு ஒரு சமயத்தில் பணம் தேவைப்படுகிறது. கடன் கேட்பதற்காகப் பணக்கார மாமா வீட்டுக்கு வருகிறான். அந்த மாமா பன்றிப் பிரியர். கொழு கொழுவென்ற வெள்ளைப் பன்றிகளை வளர்த்து-அதில் மனசைப் பறி கொடுத்தவர். அங்கு வந்து தங்கியிருக்கும் பெர்ட்டி ஊஸ்டர் சும்மா இருக்க வேண்டியதுதானே? கடன் கேட்பதுதானே நோக்கம்? பொழுது போகாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பன்றிமீது வீசுகிறான்! தற்செயலாக அப்போது எட்டிப் பார்த்த மாமா இந்தக் காட்சியைக் கண்டு, கடுங்கோபம் கொண்டு கடன் கொடுக்க மறுத்துவிடுகிறார்! ஊஸ்டர் சிக்கலில் மாட்டிக்கொள்வதும், தப்பிக்க ஜீவ்ஸிடம் யோசனை கேட்பதும்… இப்படிப் போகிறது கதை.
ஆள் மாறாட்டம்; ஒரே சாயலை உடைய இரண்டு பேர்; ஒரே பெயரை வைத்து தான் தேடின ஆசாமி இவர்தானென்று தவறாக நினைப்பது-இத்தகையவைகளை வைத்து புனையப்பட்ட நகைச்சுவைக் கதைகள், நாடகங்கள் ஏராளம். எல்லவற்றுக்கும் ஆதாரமான புராதனமான கதை, ”The Importance of Being Earnest”. ஆஸ்கார் ஒயில்ட் எழுதின நாவல். சீரியஸ் எழுத்தாளரான இவர்கூட, முற்ற முழுக்க impersonation ஆள் மாறாட்டம் இவைகளை வைத்து நகைச்சுவை மிளிர எழுதி இருக்கிறார்.
ஜெரோம் கே. ஜெரோம், மார்க் ட்வெய்ன் இவர்கள் இரண்டுபேருமே சற்று உயர்ரக ஹாஸ்யப் படைப்பாளிகள். (முதலாமவர் எழுதின ”படகில் மூன்று பேர்” கதை மிகப் பிரபலமானது.) ஜெரோம் ஒரு தடவை வாசக சாலைக்குப் போனாராம். மெடிகல் என்சைக்ளோபீடியா புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். மிக அபாயமான வியாதிகளுக்கான ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி விவரமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும், அவரைப் பயம் பற்றிக்கொண்டது. ஏனென்றால், அந்த அறிகுறிகள் எல்லாம் தனக்கு இருந்தாற்போல் தோன்றியது. சுவாரஸ்யமான, புன்னகை பூக்க வைக்கும் கட்டுரை இது.
மார்க் ட்வெயின் படைத்த ‘டாமி சாயர்’ பாத்திரம் – சாயரின் சாகசங்கள் – மிகப் பிரபலமானது. மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தனை செய்து வேடிக்கையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எறும்புகள் மகா சுறுசுறுப்பானவை என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி இல்லையாம். எறும்புகள் மிகவும் சோம்பேறிகள். நிறைய சுமைகளைக் காரணமின்றி தூக்கிக்கொண்டு இங்குமங்கும் சென்று திரும்பத் திரும்பத் தள்ளாடும். இதே கோணத்தில் ”ஆராய்ச்சி” செய்து எழுதப்பட்ட மிக வித்தியாசமான நகைச்சுவைக் கட்டுரை அது.
இதற்கு மாறாக, அன்றாடம் நாம் பார்க்கும் சம்பவங்களை நயமாக எழுதினார் ஸ்டீபன் லீகாக். பாங்கில் கணக்கு துவக்குபவரைப் பற்றி இவருடைய கட்டுரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். ஒரு மனிதர் புதுக் கணக்கு ஆரம்பிப்பதற்காக பாங்குக்கு மிதப்பாகச் சென்றிருக்கிறார். ‘கவுண்ட்டரில்’ உள்ள பலரைப் பார்த்து, மானேஜரிடம் பேசி கையிலிருந்த பணத்தைச் செலுத்தி கணக்கு ஆரம்பித்துவிட்டார். வெளியே வந்து பார்த்தால், கையில் துளியும் பணமில்லை! வீட்டுக்குப் போகக்கூட சில்லறை இல்லை! மறுபடியும் பாங்குக்குப் போய், போட்ட தொகையை – சற்று முன்னர் கட்டப்பட்ட பணத்தை – எடுக்க முன்வருகிறார். அவரை வினோதமாகப் பார்த்த கிளார்க் ”எவ்வளவு?” என்று கேட்க, ”பூராவும்!” என்று சொல்லி, முழுப் பணத்தையும் எடுத்துவிடுகிறார். ஒரு சாதாரண மனிதனின் விந்தையான – அதே சமயம் இயல்பான என்று கூடச் சொல்லலாம் – மனோபாவம் கட்டுரையில் நன்கு வெளிப்படுகிறது.
தமிழிலும், மேலே குறிப்பிட்டதுபோல் பல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். கல்கி கிருஷ்ணமூர்த்தியை முன்னோடியாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதின இலங்கைப் பயண கட்டுரையை முதலில் வாசித்த போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு! பயணத்தைப் பற்றின பல விவரங்களை அபாரமான நகைச்சுவையுடன் தெளிவான நடையில் எழுதி இருந்தார். அப்போது சித்திரக்காரர் மாலி விகடனில் பணிபுரிந்து வந்தார்; அவர் படம் போட்டிருந்தார். மாலி ஒரு moody type. நடுவில் அவர் படம் வரைவதை நிறுத்தி இருந்தார். என்ன காரணமென்று கேட்டதற்கு, ”கிருஷ்ணமூர்த்தி எழுதணும்; படம் போடணும்” என்றார். அந்தத் தருணத்தில் கல்கி விகடனில் பணி புரியவில்லை.
கேரக்டர்களை – அதாவது தனிப்பட்ட குணநலன்களை – வைத்து ஹாஸ்யமாக நாடோடி எழுதினார். ”இப்படியும் ஒரு பிருகிருதி” முழுக்க முழுக்க குணசித்திர ஹாஸ்யக் கட்டுரைகள். ”என்னைக் கேளுங்கோன்னா!” சற்று வித்தியாசமான கட்டுரைத் தொகுதி. நாடோடி போலவே எஸ்.வி.வியும் ஒரு குடும்பத்தை வைத்து-பெத்தம்மாள், வாசுதேவய்யர் – உல்லாச வேளை என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பெந்தம்மாள் பஸ்ஸிலோ டிராமிலோ பயணம் செய்யும்போது, கண்டக்டர் எச்சில் படுத்தி டிக்கெட்டைக் கிழித்துத் தருகிறார். அவள் அப்போது தன்னுடைய ஆசாரமான பின்னணியைக் குறிப்பிட்டு கண்டக்டருடன் சண்டை போட்டதைத் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். அப்போது பஸ்ஸில் உள்ள பல பயணிகளும், அவளுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தக் கட்டுரை வெளியானது 1940களில் என்று நினைக்கிறேன்.
யானையும் முயல் குட்டியும்
போன வாரம் ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தேன். சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு நண்பரைப் பார்த்தேன். ‘சாப்பிட வருகிறீர்களா?’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இல்லை. இன்னும் கொஞ்ச நேரமாகட்டும்’ என்றேன்.’ எனக்கு ரொம்ப அர்ஜென்ட்டாக ஒரு வேலை இருக்கிறது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறேன்,’ என்றார் அவர். வெற்றிகரமான தொழிலதிபர். நிஜமாகவே அர்ஜெண்ட் வேலை இருந்திருக்கும்.
உள்ளே போகிறவரை கவனித்துக் கொண்டு நின்றேன். ஒரு நாற்காலிதான் பந்தியில் காலியாக இருந்தது. அதை அவர் நெருங்குகையில் ஒரு அம்மையார் – எண்பது வயதிருக்கும் – அங்கே வந்தார். இவர் உடனே, ‘நீங்கள் உட்காருங்கள். எனக்கு அவசரமில்லை,’என்று சொல்லி, நாற்காலியை சரிவரப் போட்டு அந்த மூதாட்டியை உட்கார்த்தி வைத்துவிட்டு வெளியே வந்து விட்டார். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியிருந்தது.
இதே போல் இன்னொரு காட்சி மறுநாள் காலை தெருவில் பார்த்தேன். பார்வை இழந்த ஒருவர் வெள்ளைப் பிரம்பைத் தரையில் தட்டியடி வந்தார். அவர் பின்னே மேலும் இரண்டு பார்வை இழந்தவர்கள். ஒருவர் தோளை ஒருவராக தொட்ட வண்ணம் வந்து கொண்டிருந்தவர்கள் ஒரிடத்தில் நின்றார்கள். அங்கே சாலையைக் கடக்க வேண்டும். அப்போது தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒருவர், கையை உயர்த்தி, போக்குவரத்தை நிறுத்தி, அந்த மூவரையும் தெருவுக்கு மறுபுறம் கொண்டு போய் விட்டுவிட்டு, திரும்பி வந்து தன் வழியே சென்றார். அவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனசுக்குள் ஏற்படுகிற மகிழ்ச்சி லட்ச ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.
ஜைனர்களின் புராணத்தில் படித்த கதையன்று ஞாபகம் வருகிறது. அதை இங்கே சொல்ல வேண்டும்.
மகத நாட்டில் சிரேனிக் என்ற மகாராஜா இருந்தார். தாரிணி என்பது அவருடைய ராணியின் பெயர். அவள் கர்ப்பமாக இருந்த போது, மழையில் நனைய வேண்டுமென்று ஓர் ஆசை ஏற்பட்டது. (பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு விசித்திர விசித்திரமான ஆசைகள் ஏற்படுவதுண்டு. ராணி என்றால் கேட்க வேண்டுமா?) சிரேனிக் மகாராஜா அவளுக்காக விசேடப் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தி, மழையில் சிறிது நேரம் அவளை உலாவ விட்டார். நல்ல காலமாய், உடல் நலம் கெடாமல் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள் ராணி. மேகத்தின் அருளினால் புத்திரன் பிறந்தாக மகிழ்ச்சியடைந்த மகாராஜா அவனுக்கு மேககுமார் என்று சூட்டினார்.
அரசர்களுக்குரிய எல்லாக் கலைகளையும் தேர்ச்சி பெற்று, யாவர்க்கும் பிரியமுள்ள அரசகுமாரனாக அவன் இருந்த சமயம், ஜைன மத ஸ்தாபகரான மகாவீரர் மகத நாட்டுக்கு விஜயம் செய்தார். அவருடைய நற்போதனைகளைக் கேட்ட மேககுமார், அரச போகங்களைத் துறந்து துறவியாக வேண்டுமென்று ஆசைப் பட்டான். தந்தையும் தாயும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. அவன் தனது சீடனாக வரட்டும் என்று கூறி மகாவீரர் அவனைத் தன் பரிவாரத்தில் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார்.
முதல் நாள் ஏதோ ஒரு பழைய வீட்டில் எல்லாரும் தங்கினார்கள். அன்றிரவு கழிப்பறைக்கு வெளியே, தரையில்தான் மேககுமார் படுக்க வேண்டியிருந்தது. ராத்திரி பூரா அவனுடைய பாயை மிதித்துக் கொண்டும், சில சமயம் அவனையே மிதித்துக் கொண்டும் போவோரும் வருவோருமாக இருந்தார்கள். ஒரு நிமிடம் கூடத் தூங்க முடியாமல் நரக வேதனையில் மூழ்கியவன், மறுநாள் குருவிடம் சென்று, ‘என்னால இப்படிப்பட்ட கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்குத் துறவு வாழ்க்கை வேண்டாம். நான் பழையபடி அரண்மனைக்குப் போய்விடுகிறேன்,’ என்று வேண்டிக் கொண்டான்.
மகாவீரர் புன்னகை செய்தார். ‘குழந்தாய், உன்னுடைய பூர்வ ஜன்மக் கதை உனக்குத் தெரியமா? முந்தின பிறவியில் நீ யார் என்று அறிவாயா?’ என்று கேட்டார்.
‘தெரியாது, சுவாமி,’ என்றான் மேககுமார்
சொல்கிறேன், கேள். முன் ஜன்மத்தில் நீ ஒரு காட்டில் யானையாக இருந்தாய். சாதாரண யானையாக அல்ல. ஏராளமான யானைகளுக்கும் பற்பல விலங்குகளுக்கும் அரசனாக இருந்தாய். அந்தக் காட்டில் அடிக்கடி தீ விபத்து நிதழ்வதுண்டு. தப்பித்து ஒதுங்கிக் கொள்ள இடமில்லாமல் விலங்குகள் நெருப்பில் மடியும். இதைக் கண்ட நீ, காட்டின் நடுவே பல மரங்களை வெட்டி சாய்த்து, தரைமட்டமாக்கி, பரந்த மைதானம் போல ஓர் இடத்தை ஏற்படுத்தினாய். காட்டில் தீ பரவும் போது விலங்குகள் அங்கே ஒடி வந்து தஞ்சம் புகுந்து உயிரைக் காத்துக் கொண்டன.
அப்படி ஒரு முறை தீ பரவிய போது பல விலங்குகள் அங்கே வந்து சேர்ந்தன. அவைகளுக்குக் காவல் போல நீ படுத்திருந்தாய். அப்போது உன் வலது காலில் கொஞ்சம் அரித்தால், சொறிந்து கொள்வதற்காகத் தூக்கிளாய். தும்பிக்கையால் சொறிந்து கொண்டுவிட்டு, காலைக் கீழே இறக்க நினைத்தபோது, சரியாய் அந்த இடத்தில் ஒரு முயல் குட்டி ஒண்டிக் கொண்டிருப்பதைக் கண்டாய். காலை இறக்கினால் அது நசுங்கி இறந்து விடும் என்கிற நிலைமை. நீ அதன் மீது இரக்கம் கொண்டு, காலை இறக்காமல் தூக்கியது தூக்கியபடியே வைத்துக் கொண்டிருந்தாய். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமல்ல. இரண்டரை நாள்! காட்டுத் தீ அடங்கி, எல்லா மிருங்கங்களும் திரும்பிச் சென்றன. அந்த முயலும் தான் உயிர் தப்பிய அபாயத்தைப் பற்றி அறியாமலே ஓடி விட்டது.
அதன் பின் நீ காலைக் கீழே இறக்கினாய். ஆனால் இரண்டரை நாட்கள் தூக்கியபடியே வைத்திருந்ததால் காலில் ரத்த ஒட்டம் இல்லாமல் போகவே உன்னால் நிற்க முடியவில்லை. நடக்க முடியவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தாய். எழுந்திருக்க முடியாமல் கொஞ்ச நாளில் தவித்துப் பிராணனை விட்டாய்.
ஒரு முயல் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முன் ஜன்மத்தில் நீ செய்த தியாகத்தினால்தான் இந்த ஜன்மத்தில் மானிடப் பிறவியை அடைந்தாய். அதிலும் உன்னதமாக மகத நாட்டின் அரசகுமாரனாகப் பிறந்தாய். அப்படிப்பட்ட நீ இரண்டு மணி நேரம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறாயே? இந்தப் பிறவியில் நீ இரக்க சிந்தனை உள்ளவனாக, ஈ எறும்புக்கும் தீங்கு செய்யாதவனாக, துன்புற்றோருக்கு உதவுகிறவனாக வாழ்ந்தாயானால், இன்னும் எவ்வளவு சிரேஷ்டமான பாக்கியங்கள் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்படித யோசித்துப் பார்.’
மேககுமார் அவர் காலடியில் விழுந்து, ‘என்னை மன்னியுங்கள், மகா குருவே,’ என்றான். மாற்றாரின் துன்பத்தைத் துடைப்பதில் மகிழ்ச்சி கொள்பவனாக, துறவியாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தான்.
இன்னோர் குட்டிக் கதை:
பதின்மூன்று வயது சிறுமியருத்தி, தன் கையால் உழைத்துப் பிழைத்து தன் குடும்பம் மொத்தத்தையும் கைதூக்கிக் காப்பாற்றி ஆளாக்கினாள். அவள் நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தபோது அவளிடம் ஒரு மதபோதகர் வந்தார். ‘பெண்ணே, உனக்கு சில ஸ்தோத்திரங்களைச் சொல்லித் தரட்டுமா?’ என்று கேட்டார்.
‘மன்னியுங்கள். எதுவும் வேண்டாம்,’ என்றாள் அந்த சிறுமி. ‘கடவுளைப் பார்க்கும் போது ஸ்தோத்திரம் சொன்னாயா என்று அவர் கேட்பாரே? என்ன சொல்வாய்?’ என்றார் அவர்.
‘ஒன்றும் சொல்ல மாட்டேன். என் கைகளைக் காட்டுவேன்,’ என்றாள் அந்த சிறுமி.
சாம்பார் வடை நாலு பாக்கெட்
ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா போயிருந்தபோது (‘ஆரம்பிச்சிட்டான்யா!’ என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது) என் மருமகப் பிள்ளையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். அங்கே அவர் ஒரு வீடியோ கேமரா வாங்கினார். வீட்டுக்கு வந்து, தொட்டிலில் அழுது கொண்டிருக்கும் குழந்தை முதல், மாவு கரைத்துக் கொண்டிருக்கும் மனைவி வரை, தெரு, தோட்டம், வாடிப் போன ரோஜாப்பூ உள்படப் படம் பிடித்துத் தள்ளினார். என் மகளும் அவள் பங்குக்கு என்னென்னவோ எடுத்தாள்.
மூன்று மாதம் ஆகிவிட்டது. ஒருநாள், ”என்ன இது, சரியாவே வரலே?” என்ற மாப்பிள்ளையின் முணுமுணுப்புக் கேட்டது. ”நீங்க எப்பவும் இப்படித்தான்! ஒரு பொருளை எப்படி ஹாண்டில் பண்ணணும் என்றே தெரியாது!” என்று என் பெண் அவரைக் குற்றம் சாட்டினாள். ”ஒரு வாரமாய் நீதான் அதை உபயோகித்தாய்! என்ன செய்து தொலைத்தாயோ!” என்று அவர் அவளைக் கோபித்தார்.
”சரி, வாங்கின கடையில் திருப்பிக் கொடுத்து விடலாம்!” என்று மாப்பிள்ளை சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாயிருந்தது எனக்கு. ”வாங்கி மூன்று மாதமாகிவிட்டது. ஏராளமாய் உபயோகித்தாயிற்று! இனிமேல் எப்படி வாங்கிக் கொள்வான்?” என்றேன்.
”நாளைக்கு என்னுடன் வந்து பாருங்கள்” என்றவர், கடையில் வாங்கிய பில்லைத் தேடி எடுத்துக் கொண்டார்.
மறுநாள் அவருடன் போனேன். சூப்பர் மார்க்கெட்டில் நு¨¡ந்தவர், நேரே ஒரு கவுன்ட்டருக்குப் போனார். அங்கிருந்த பெண்ணிடம், காமிராவைக் கொடுத்து, பில்லைக் காட்டினார். அந்தப் பெண் மறுபேச்சுப் பேசாமல், ஒரு பைசா குறைக்காமல் பில்லில் இருந்த தொகையைத் தந்துவிட்டாள்.
போன வாரம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சினேகிதரிடம் சொன்னபோது, அவர் சொன்னார். ”என் உறவுக்காரர் ஒருவருக்கும் அமெரிக்காவில் இதேபோல் அனுபவம். இந்தியாவுக்குத் திரும்புகிற தினத்தன்று ஒரு பான்ட் வாங்கினார். இங்கே வந்து பிரித்தபோது ஓரிடத்தில் தையல் சரியில்லை என்று தெரிந்தது. பான்ட்டை அப்படியே மடித்துப் பெட்டியில் வைத்துவிட்டார். எட்டுமாதம் கழித்து மறுபடி அமெரிக்கா போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதே கடைக்குப் போய், பான்ட்டைக் கொடுத்து, பில்லைக் காட்டிப் பணத்தைத் திரும்ப வாங்கிவிட்டார். எட்டு மாதம் கழித்து!”
அமெரிக்காரனின் பணமென்ன, பவிஷென்ன, நம்ம ஊர் சாதா வியாபாரிகளுடன் ஒப்பிடலாமா? கூடாதுதான். இருந்தாலும் அடிப்படையான நியாயங்களைக் கூட இங்கே சில பேர் கடைப் பிடிப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் மதுரையில் ஒரு கேசட் கடைக்குப் போயிருந்தேன். பிரபலமான பெரிய கடை. என்னமோ ஒரு ‘கானம்’ என்று பெயர். ஒரு டஜனுக்கு மேல் பலவிதமான கேசட்டுகளைத் தேர்ந்தெடுத்து, முதலாளியின் மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் பில் போடும்படி சொன்னேன். ஐந்நூறு அறுநூறு ரூபாய்போல ஆயிற்று.
பணத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தபோது, நான் தேர்ந்தெடுக்காத கேசட் ஒன்றும் இருந்ததைக் கண்டேன். சூலமங்கலம் சகோதரிகளின் ‘கந்த ஷஷ்டி கவசம்’. அதை வேறு யாரோ எடுத்து மேஜை மீது வைத்திருக்கிறார்கள். நான் எடுத்து வைத்திருந்த கேசட்டுகளுடன் அது கலந்துவிட்டது. அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கிறேன் என்று தெரிந்தது. அதே சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கஷ்ட கவசம் ஏற்கனவே சென்னையில் என்னிடம் ஒன்று இருக்கிறது. மதுரையில் என் பிள்ளையிடமும் ஒன்று இருக்கிறது.
”நாளை நான் என் பாங்க்குக்கு அந்த வழியாகத்தான் போக வேண்டும். திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். அநேகமாய் பணம் தரமாட்டார்கள். வேறு ஏதாவது சுவாமி பாட்டாக வாங்கி வருகிறேன்,” என்றான் என் பிள்ளை.
அடுத்த நாள் ஞாபகமாகக் கேசட்டும் பில்லும் எடுத்துக் கொண்டு போனான். கேசட்டின் செல·பன் காகிதம் கூடப் பிரிக்கவில்லை சாயந்தரம் அவன் திரும்பி வந்ததும், ”என்ன பாட்டு வாங்கி வந்தாய்?” என்று கேட்டேன்.
”எதுவுமில்லை. பணமும் திருப்பித் தரமாட்டார்களாம், வேறு கேசட்டும் கொடுக்க மாட்டார்களாம். விற்றது விற்றதுதான் என்கிறார்கள்,” என்றான்.
அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
ஆனால் இன்னோர் அனுபவத்தைச் சொல்கிறேன்.
போன மாதம் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. (நானும் சின்ன மனிதன். விபத்தும் சின்ன விபத்து. ஆகவே பேப்பரிலோ டிவியிலோ நியூஸ் வரவில்லை)
அண்ணா நகரில் மிகப் பிரபலமான ஓட்டலில் மாடியேறிப் போனேன். ஊரிலிருந்து வந்திருந்த குழந்தைகளுக்காக நாலு பிளேட் சாம்பார் வடை வாங்கிக் கொண்டேன். அழகிய சிறு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்துத் தந்தார்கள். அவர்கள் கொடுத்த காகிதப் பையில் போட்டு எடுத்துக் கொண்டு கீழே வந்தவன், நடைபாதையை அடையும் இடத்தில் ஒரு படியை ‘மிஸ்’ பண்ணிவிட்டேன். கால் நழுவி விழுந்ததில், ஒரு பாக்கெட் வெளியே கொட்டிவிட்டது. மற்றவை, பைக்குள்ளேயே கவிழ்ந்துவிட்டன. நல்ல வேளையாக அருகிலிருந்த ஒருவர் என்னைப் பிடித்துக் கொண்டதால், முழங்காலில் லேசான சிராய்ப்பு மட்டும்தான்.
”மேலே போய் வேறே கேளுங்கள்” என்றார் என்னைப் பிடித்துக் கொண்டவர். அருகிலே இருந்த இன்னொருவர், ”அதெல்லாம் தரமாட்டார்கள். காசு கொடுத்துத்தான் வேற வாங்க வேண்டும்.” என்றார். அவநம்பிக்கையோடு மேலே போய் நடந்ததைச் சொன்னேன்.
”நீங்கள் கைதவறிக் கொட்டியதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேஷியர் சொல்லவில்லை. சர்வரை கூப்பிட்டு, வேறே தரச் சொன்னார். கொட்டினது, கவிழ்ந்தது எல்லாவற்றையும் தூரப் போட்டுவிட்டு, நாலு பிளேட் சாம்பார் வடை புதிதாய்த் தந்தார்கள்.
சென்னையிலும், வெளியூர்களிலும் இவர்கள் பல கிளைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முருகன் அருள் மட்டும் காரணமல்ல.
கையிலே நாற்பத்துநாலே ரூபாய்
போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு நான் ஜெயிலுக்குப் போனேன். எப்படி எனில்–
தியாகராயநகர் பர்க்கிட் சாலையில் உள்ள ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கோவிலை எல்லோருக்கும் தெரியும். பஜனை, சொற்பொழிவு, தியானம் என்று பல வகைகளில் ஆன்மீகத்தை வளர்த்து வருகிற இந்தக் கோவிலுக்கு நான் சென்றதில்லை. இந்தியாவில் பல இடங்களில் இத்தகைய மையங்களை நிறுவி, சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இந்த இயக்கத்தினர்.
பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் ரத யாத்திரை நடப்பதைப் போலவே இவர்களும் நடத்துகிறார்கள். உச்சிக்குடுமியும் ஜிப்பாவும் ஜபமாலைகளும் அணிந்து ரதத்தின் முன்னே அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மவர்களுடன் சேர்ந்து குதித்துப் பாடிக்கொண்டு செல்வது பரவசமான காட்சியாக இருக்கும்.
டெல்லியில் இருக்கும் ஹரே கிருஷ்ணா ஆலயத்தைப் பார்த்திருக்கிறேன். வெகு அழகானது. விஸ்தாரமானது. ராதாகிருஷ்ணரைத் தரிசித்த பின் வழவழவென்ற பளிங்குத் தரையில் நடந்து கொண்டிருந்த போது, வாட்ட சாட்டமான ஒரு மனிதர் அசைவில்லாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அருகில் சென்று கவனித்தேன். திகைத்துப் போனேன். அது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நிறுவனரான பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதரின் சிலை. அளவு, தோற்றம், நிறம் யாவற்றிலும் அசல் மனிதர் போலவே அற்புதமாக வடிக்கப்பட்டிருந்தது அந்தச் சிலை. அருகில் ஒரு வெள்ளைக்காரர், தான் மட்டும் தனியாக உட்கார்ந்த மிருதங்கம் அடித்தபடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று பாடிக் கொண்டிருந்தார்.
அவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும் டெல்லி கோவிலுக்குப் போனவன், இதோ கூப்பிடு தூரத்தில் உள்ள தியாகராய நகருக்குப் போனதில்லை. அண்ணா நகர் பாரத் ஸ்டேட் வங்கியில் உயர்ந்த பதவியிலுள்ள நண்பர் எஸ். மோகன்தாஸ் அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கோவிலின் தீவிர அடியார்களில் ஒருவர் அவர்.
சென்ற வாரம் மாம்பலம் டைம்ஸ் இதழில் ஒரு செய்தி படித்தேன். தியாகராய நகர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் சென்னை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காக பஜனை, சொற்பொழிவு முதலான ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறார்கள் என்பது அது. நண்பர் மோகன்தாஸிடம் சொல்ல, அவர் மகா சந்தோஷத்துடன் அழைத்துச் சென்றார்.
நிகழ்ச்சியை நடத்துவதற்காகச் சுமார் இருபது கிருஷ்ண பக்தர்கள் சிறைவாசலுக்கு வந்திருந்தார்கள். ஒருவர் கலிபோர்னியாவிலிருந்து வந்த அமெரிக்கர். மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர் விரஜேந்திர நந்ததாஸ் மகராஜ். காவியுடை தரித்த சன்யாசி. தி.நகர் இஸ்கான் துணைத் தலைவரான சுமித்ரா கிருஷ்ணதாஸ், சிறைச்சாலை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் வசந்தி (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் இவர்தான்) முதலிய பலரும் சென்னை வாசிகள்.
சிறைச்சாலையின் தலைமைக் காவல் அதிகாரியான ஜி. ராமச்சந்திரன் போலீஸ் மிடுக்கையும் விட்டுவிடாமல், மனித நேயத்தைக் காட்டும் புன்னகையையும் நழுவ விடாமல் எங்களை வரவேற்று, சுத்தமாயும் நிசப்தமாயும் இருக்கும் பாதைகளின் வழியே ஒரு கொட்டகைக்கு அழைத்துப் போனார்.
முன்பெல்லாம் கைதிகள், குற்றவாளிகள் என்றால் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இங்கே குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதைக் காண மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சமுதாயச் சீர்கேட்டுக்கு யாரைக் குற்றம் சொல்வது?
நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தைச் சுருக்கமாக மைக்கில் அறிவித்தார் ராமச்சந்திரன். அவர்களைச் ‘சிறைக் கைதிகள்’ என்று குறிப்பிடாமல் ‘சிறைவாசிகள்’ என்று குறிப்பிட்டது கண்ணியமாக இருந்தது.
‘நாம் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறோம்’ என்று ஆரம்பித்து அருமையாகப் பேசினார் சுமித்ரா கிருஷ்ணதாஸ். பொதுப்படையாக எல்லோருக்குமாகப் பேசுவதுபோல் இல்லாமல், தனித்தனியே ஒவ்வொருவரையும் எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு சொல்வது போல இருந்தது இவருடைய பேச்சுப் பாணி.
‘சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் கடவுள் நாமத்தைச் சொல்ல வேண்டும். நான் ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதைத் திரும்பிச் சொல்லுங்கள்’ என்று கூறி ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே’ என்று மூன்று முறை சொன்னார்.
முதல் முறை, முன் பகுதியில் இருந்த சிலர் மட்டுமே திருப்பிச் சொன்னார்கள். ‘வெட்கப்படாமல், கூச்சப் படாமல் சத்தமாகச் சொல்லுங்கள்!’ என்று சுமித்ரா கிருஷ்ணதாஸ் உற்சாகமூட்டினார். ‘நான் இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நான் வேண்டுமானால் போய் விடட்டுமா?’ என்று சிறை அதிகாரி ராமச்சந்திரன் கேட்டார். ‘வேண்டாம், வேண்டாம். நீங்கள் இருங்கள்’ என்று கைதிகள்-இல்லை, சிறைவாசிகள் – கோரஸாகக் குரல் கொடுத்து, உற்சாகமாய், மிக பலமாய் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டார்கள்.
‘இப்போது உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரின் முகத்தைப் பாருங்கள். வந்த உட்கார்ந்த போது எவ்வளவு அலுப்பு, சலிப்பாக, வருத்தமாக இருந்தார்? இப்போது அவர் முகத்தில் எத்தனை சந்தோஷம் பொங்குகிறது பாருங்கள். கடவுள் நாமத்தைச் சில நிமிடம் சொன்னாலே இத்தனை சந்தோஷம் ஏற்படுகிறதென்றால், நாள் பூராவும் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், அந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?’ என்றார் சுமித்ரா கிருஷ்ணதாஸ். உண்மையிலேயே அவர்களுடைய முகங்களில் ஒரு புதிய பொலிவு ஏற்பட்டிருந்தது.
இதன்பிறகு ஹரே கிருஷ்ணா பஜனை, மேளத்துடன், மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகமும் நாதமும் ஓங்கி ஒலிக்க, சிறைவாசிகள் பலரும் எழுந்து வந்து சேர்ந்துகொண்டார்கள். அரை மணி நேரத்துக்கு அமர்க்களமான ஆனந்தம். அந்தக் கலிபோர்னியாக்காரர் பாடிப் பாடிப் பம்பரமாய்ச் சுழன்றார் பரவசத்துடன்.
பிற்பாடு இவர் சொன்ன ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. சிறைவாசிகளிடம், ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இறை வழிபாடு செய்யவும், கடவுள் நாமத்தை சொல்லவும், இங்கே சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, போலந்து முதலான இடங்களில் எங்களைச் சிறைக்குள் அனுமதிப்பதில்லை. அதற்காக, அங்கேயெல்லாம் வேண்டுமென்றே ஏதாவது தப்புத் தண்டா பண்ணி, கைதாகி, ஜெயிலுக்குப் போய்க் கிருஷ்ண பக்தியைப் பரப்புகிறோம்’ என்றார்.
நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்தபோது, பெரிய ஜெயிலுக்கு வந்துவிட்டோம் என்ற உண்மை உறைத்தது. சின்ன ஜெயிலுக்குள் கிடைத்த சிறிது நேர சந்தோஷத்துக்குக் காரணமானவர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர். வெறும் நாற்பத்து நாலே ரூபாயுடன் ஒரு சரக்குக் கப்பலில் ஏறி நியூயார்க்கை அடைந்து, கிருஷ்ண பக்தியைப் பரப்பி, அதன்பின் ஜீவித்திருந்த பதினொரு வருட காலத்துக்குள் நூற்றெட்டு மையங்களை அமைத்து, இன்று உலகெங்கும் சுமார் நூறு வழிபாட்டு நிலையங்கள் அமைவதற்கு அருள்புரிந்த அந்த அதிசய மனிதரை மானசீகமாக நமஸ்கரித்தேன்.
கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்
‘அண்ணா நகர் டைம்ஸ்’ என்ற ஆங்கிலப் பேட்டைப் பத்திரிகையில் வாரம்தோறும் தமது அனுபவங்களை சுவையான ஒரு ந¨ச்சுவைக் கட்டுரையாக தமிழில் எழுதி வருகிறார் பிரபல எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்.
அந்தக் கட்டுரைகள் சிலவற்றை அப்புசாமி.காம் ஸைட்டில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
(நன்றி: அனுமதி அளித்த ரா.கி.ராவுக்கும், அண்ணா நகர் டைம்ஸ¤க்கும்.)
நாலு மூலை
தேவன் அறக்கட்டளை விழாவுக்காக பாரதீய வித்யா பவனுக்குப்ப போயிருக்கவும் வேண்டாம். கால்தவறிக் கீழே விழுந்திருக்கவும் வேண்டாம்.
அண்ணா நகருக்குக் குடி வந்த பிறகு எனக்கு இது இரண்டாவது விழுகை. (இப்படியரு சொல் தமிழில் இருக்கிறதா என்று பேராசிரியர் டாக்டர் மறைமலைதான் சொல்ல வேண்டும்.)
இந்தத் தடவையும் சதி செய்த வில்லன் ஒரு சிவப்புக் கம்பளம்தான். இரண்டு வரிசைகளுக்கும் நடுவே வாசலிலிருந்து மேடை வரை நீளமாக விரித்திருந்த சிவப்பு விரிப்புத்தான். “ஆகா! நமக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு!” என்ற அகங்காரத்துடன் முதல் வரிசையை நோக்கி மார்பை நிமிர்த்திக் கொண்டு நடந்ததால், விரிப்பில் இருந்த சிறிய சுருக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். (விழாக்களுக்குச் செல்லும் வயோதிகர்கள் இதைச் சிவப்புப எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வது நலம்.)
ஒரு இடறு இடறி இரண்டு நாற்காலிகளைத் தாண்டி மூன்றாவது நாற்காலியில் போய் விழுந்தேன். அதில் அமர்ந்திருந்தவர் நல்ல காலமாக ஓர் ஆண்மகன், பெண்ணாக இருந்தால் மேலும் மூன்று நாற்காலிகள் தூரத்துக்கு என்னை எட்டித் தள்ளி விட்டிருப்பார். இந்த நல்லவர், கிழம் நழுவிக் காலில் விழுந்தது என்று அனுதாபப்பட்டவராக என்னை அன்போடு தாங்கிப் பிடித்துக் கொண்டு தன் நாற்காலியிலேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, வேறொரு இருக்கைக்குப் பெருந்தன்மையுடன் போய்விட்டார்.
“என்ன? என்ன?” என்று பலர் கேட்டார்கள். ” யார் விழுந்தது, ரா.கி. ராங்ராஜனா?” என்று சிலர் கேட்டார்கள். “ரா.கி. ரங்கராஜனா? யார் அவர்?” என்று என் பின்னால் ஒருவர் சொல்வதும் காதில் விழுந்தது. ஆகவே இதை நல்ல பப்ளிஸிட்டி என்றும் சொல்ல முடியாது.
வானதி திருநாவுக்கரசு “என்னப்பா? என்ன ஆச்சு?” என்று கேட்டார். தேவன் அறக்கட்டளையின் செயலாளர் சாருகேசியும் எழுத்தாளர் வாதூலனும் வந்து காப்பி சாப்பிடுகிறீர்களா?” என்று பரிவோடு கேட்டார்கள். சற்றுப் படபடப்பாக இருந்ததால் சரி என்றேன். உடனே சென்றார்கள். உடனே மறைந்தார்கள். விழா முடிந்த பிறகுதான் வந்தார்கள். “அடி ஒன்றும் பலம் இல்லையே?” என்றார்கள். காப்பியைப் பற்றி அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தலைக்குமேல் வேலை அப்போது.
ஜ.ரா. சுந்தரரேசன் என் நெருங்கிய நண்பர் என்று ரொம்பப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடையாது. சரியான துரோகி. உள்ளே நுழையும்போதே நான் அவரிடம், “நீங்கள் முன்னால் போங்க. நான் தங்கள் தோளைத் தொட்டாற்போல் வருகிறேன்” என்று சொல்லியிருந்தேன். ஒப்புக் கொள்கிற மாதிரி தலையாட்டியவர், என்னை முன்னால் போகவிட்டு, என் தோளைத் தொட்டாற்போல் பின்னால் வந்தார். நான் விழுந்ததும் எச்சரிக்கை அடைந்து பத்திரமாக வேறொரு வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டு, “அடி கிடி இல்லையே?” என்று கேட்கிற மாதிரி அங்கிருந்தே கையை வீசிச் சைகையில் கேட்டார். பக்கத்து நாற்காலி காலியாக இல்லை. இருந்திருந்தால் தூக்கி அவர்மீது அடித்திருப்பேன்.
விழா முடிந்த பிறகு என்னிடம் வந்தவர், “விழுந்ததுதான் விழுந்தீர். போட்டோவில் விழுந்திருக்கக் கூடாதோ?” என்று சிலேடை வேறே! இவரா என் சிநேகிதர்!
விழுந்து எழுந்தாவது தேவன் விழாவுக்குப் போயிருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். தேவனின் எழுத்துக்கு அடிமை நான். அத்துடன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் என் தந்தையிடம் சம்ஸ்கிருதம் படித்த மாணவர் அவர். அதனால் என்மீது அவருக்குத் தனிப் ப்ரீதி, மேலும் என் முதல் சிறுகதையை ஆனந்தவிகடனில் பிரசுரித்தவரும் அவரே.
இரண்டு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுவது அன்றைய நிரலில் முக்கிய நிகழ்ச்சி. ஒன்று சென்ற வருடம் கல்கியின் சார்பில் நடைபெற்ற நகைச்சுவைப் பயிலரங்கத்தில் பேசிய சிலரின் சொற்பொழிவுத் தொகுப்பு. (என் கட்டுரையும் உண்டு!) ‘கல்கி வளர்த்த சிரிப்பலைகள்’ என்ற இந்தப் புத்தகத்தில், கல்கியின் எழுத்திலிருந்து சில நகைச்சுவை முத்துக்களையும் தொகுத்துச் சேர்த்திருக்கிறார் வாதூலன்.
இரண்டாவது புத்தகம் ‘கல்கியின் கடிதங்கள்’ என்ற தலைப்புக் கொண்டது. டி.கே.சி. ராஜாஜி, கல்கி ஆகியோர் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களுடன், கல்கி தன் மனைவிக்கும், மகனுக்கும், மகளுக்கும் எழுதிய கடிதங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தொகுத்தவர் சுப்ரபாலன்.
ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது. புத்தகங்களை வெளியிட வேண்டிய ஹிந்து என். ராம் ஏழு மணிக்குத்தான் வந்தார். நிகழ்ச்சி நேரத்தைத் தப்பாக எண்ணி விட்டேன் என்று ஏதோ சாக்குச் சொன்னார். அதையாவது மன்னிக்கலாம். தான் இன்னும் இரு புத்தகங்களையும் வாசிக்க முடியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாய் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். இது எப்படி இருக்கு!
பழம் பெரும் எழுத்தாளரான பரணீதரன் (‘மெரீனா’) புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஹிந்துவில் தொடர்ச்சியாக வேடிக்கையான கட்டுரைகளை எழுதி வருகின்ற வி. கங்காதரும், ஹிந்து துணை ஆசிரியர் ஸி.வி. கோபாலகிருஷ்ணனும் (ஸிவிஜி) தேவனின் பரம ரசிகர்கள். தேவன் அறக் கட்டளை சார்பாக இருவருக்கும் பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டினார்கள்.
தேவனின் படைப்புக்களில் ஒவ்வோர் பகுதியாகக் குறிப்பிட்டு என்னென்ன விதத்தில் அது சிறப்பு என்று கங்காதர் பாராட்டியது பிரமிப்பைத் தரும் பேச்சாக இருந்தது. அடுத்து, ஸிவிஜியும் நன்றாகவே பேசினார்.
இந்த விழாவுக்குப் போனதில் எனக்குக் காலில் மட்டுமல்ல, மண்டையிலும் அடி. எப்படி என்கிறீர்களா?
ஒருத்தர் நம்மைப் பார்த்து ‘ரொம்ப யங்காத் தெரியறீங்க’ என்று புகழ்ந்தால், நம்மை வயசானவங்கன்னு அவுங்க நினைக்கிறாங்கன்னு அர்த்தமாம்.
– பொன்மொழி பொன்னப்பா.
அண்ணா நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏன் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று இரண்டு வாரம் முன்பு கிண்டல் செய்தேன் அல்லவா? அதற்கு இங்கே பழிக்குப் பழி.
இந்த விழாவில், பரணீதரன் ஒருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும், முதல் வாக்கியம் முதல் கடைசி வாக்கியம் வரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள்! அதுவும் முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்தாளரான தேவனின் ரசிகர்கள் நிறைந்த தமிழர்களின் கூட்டத்தில்! தமிழிலேயே பிறந்து தமிழிலேயே வளர்ந்த அக்மார்க் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சண்டை மாருதம் செய்தார்கள்!
புத்தி, புத்தி இனிமேல் எந்தப் பேச்சாளர்களையும் கேலி செய்ய மாட்டேன். கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.
திருப்பதி லட்டு
ரா.கி.ர
நாற்பத்தைந்து வயதாகியிருந்தபோது ஒரு முறை திருப்பதிக்குப் போனேன் (நாற்பத்தைந்து வயது என்று சும்மா ஒரு மாறுதலுக்காகத்தான் சொல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, நாற்பது வருடங்களுக்கு முன்பு, பற்பல வருடங்களுக்கு முன்பு என்று சொல்லி சொல்லி எனக்கும் போரடித்துவிட்டது. உங்களுக்கும் போரடித்து விட்டிருக்கும்.)
சென்னையிலிருந்து கீழ்த்திருப்பதிக்குப் போக பஸ்ஸோ, ரயிலோ இருந்தது. கீழேயிருந்து மலைக்குப் போகும் பஸ்களுக்குத்தான் நெருக்கடி அப்போதெல்லாம். எப்படியோ ஒரு வழியாக மலையை அடைந்து, ஒரு தேவஸ்தான சத்திரத்தில் படுத்துத் தூங்கிவிட்டு காலை ஏழு மணி சுமாருக்குக் கோவிலை அடைந்தால்–
கூட்டமே கிடையாது. கியூவும் இல்லை. பிரதான வாயில் வழியாக நேரே உள்ளே போய் வெங்கடேசப் பெருமாளைக் கண்குளிர தரிசித்தேன். ரொம்பக் குறைவாகவே பக்தர் கூட்டம் இருந்தது. ஆகவே ஜரகண்டி ஜரகண்டி என்று யாரும் பிடித்துத் தள்ளவில்லை. முடிக் காணிக்கை செலுத்திய ஆந்திர கிராமவாசிகள் ‘ஏழு கொண்டலவாடா, கோவிந்தா!’ என்று விண்ணதிரக் கூவினார்கள். (இப்போதெல்லாம் நாகரிகம் அதிகரித்து விட்டது. ‘கோவிந்தா! கோவிந்தா!’ கோஷமிடுவதற்குக் கூச்சப்படுகிறார்கள்.)
தரிசனம் முடிந்தபின் மறுபடி வெளியே வந்தேன். வாசலில் கூட்டம் இல்லை. எனவே மறுபடியும் ஒருமுறை பிரதான வாசல் வழியாகவே நேரே போய் மறுபடியும் தரிசனம் செய்தேன். இப்படி மூன்று முறை உள்ளே போய் விட்டுத் திரும்பினேன்.
இந்த சம்பவத்துக்கு முன்பும் பின்புமாகப் பல முறைகள் திருப்பதி போயிருக்கிறேன். வருடத்திற்கு மூன்று முறை போய் வருவது சாதாரண விஷயமாக இருந்தது.
தரிசனம் மட்டுமல்ல, திருப்பதி லட்டு வாங்கி வருவதிலும் எந்தக் கஷ்டமும் ஏற்பட்டதில்லை. இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று விலை மட்டும் உயர்ந்துகொண்டு போயிற்று. ஆனால் அன்றைய லட்டு பத்துநாள்கூடக் கெடாமலே இருக்கும். திராட்சை, ஏலம், முந்திரி, கிராம்பு எக்கச்சக்கம். அதே தரம் இன்று இருக்கிறது என்று சொல்ல முடியாது.
பக்தர்களின் கூட்டம் ஏற ஏற லட்டுக்கு கிராக்கியும் அதிகமாகிவிட்டது. கோவிலுக்கு எதிரில் இருந்த ஒரு பாங்கில் விற்பனை செய்தார்கள். பிறகு தனித் தனியாகக் கவுண்ட்டர்கள் வைத்தார்கள். நடுவில் ஒருமுறை, தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்கிற மாதிரி, ஒருவர், ‘இப்படி வாங்க, நான் வாங்கித் தருகிறேன்’ என்று என்னை ஒரு கடைப்பக்கம் அழைத்துச் சென்று பத்து லட்டுகள் கொடுத்தார். அவ்வளவும் போலி! ஒரே நாளில் நாற்றம் எடுத்துவிட்டது. இப்படி ஒரு போட்டித் தொழிற்சாலை நடைபெறுவதை தேவஸ்தானத்தில் கண்டுபிடித்து, வெகு விரைவில் ஒழித்துவிட்டார்கள்.
சமீபத்தில் திருப்பதிக்குப் போயிருந்த போது, கோவிலுக்கு வெளியே மகா நீளமான க்யூ நின்றிருப்பதைக் கண்டேன். லட்டு வாங்குவதற்காகக் காத்திருந்த க்யூ அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தது. பெருமாள் படம் போட்ட பாலிதீன் பையில் டஜன் கணக்கில் லட்டு வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனந்தம்! பரமானந்தம்! கோட்டையைப் பிடித்துவிட்ட மாதிரி ஒரு வெற்றிப் பெருமிதம்! சுவாமி தரிசனத்தை விட லட்டு தரிசனமே பெரிது போலும்!
யோசித்துப் பார்த்தேன்.
இந்த லட்டு சமாச்சாரம் திருப்பதிப் பெருமாளுக்கு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. பழனி பஞ்சாமிர்தம் என்றால் புரிகிறது. பழனி முருகனுக்கு (எல்லா முருகனுக்குமே) பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கு அப்படி எதுவும் பண்ணுவதில்லையே? எங்கிருந்து வந்தது லட்டு?
வைணவப் பெரியவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டுமென்று நினைத்தபோது திருவஹீந்திரபுரம் உருப்பட்டூர் ஸெளந்தரராஜன் என்ற அன்பர் அறிமுகமானார். (அகப்பட்டுக்கொண்டார் என்றும் சொல்லலாம்) மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தாராபுரம் கூட்டுறவு நூற்பு ஆலையில் மானேஜிங் டைரக்டராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். ஸ்ரீ வேதாந்த தேசிக ரிஸர்ச் ஸென்டரின் போஷகர்களில் ஒருவரான இவர் ‘ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம்–சில முக்கிய விஷயங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். லேட்டஸ்டாக, ‘ஏன்–என்ன–எதற்கு?’ என்ற புத்தகத்தை இயற்றி, எனக்கு அனுப்பி, என் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
வைஷ்ணவர்களுக்கு மட்டுமே உரித்தான விஷயங்களைக் குறித்து, வைஷ்ணவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய நடையில் கேள்விகளும் பதில்களுமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. வைஷ்ணவர் அல்லாதார்க்கும் பயன்படக்கூடியதாகச் சில பொதுவான கருத்துக்களையும் அதில் கூறியிருக்கிறார். ஓரிடத்தில், ‘ஒருவன் மரிக்கும் போது அவன் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவனிடம் பகைவர்களாக நடந்து கொண்டவர்களைச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ஏற்கெனவே செய்துள்ள பாவமூட்டைகளின் கனம் தாங்காமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், மேலும் பாவத்தைச் சம்பாதிக்காமல் தவிர்ப்பதற்காக நம்மிடம் பகைமை பாராட்டுவோரிடம் பாசத்துடன் பழகுவது நல்லது’ என்று கூறியிருக்கிறார். இன்னோரிடத்தில், சின்ன வயதிலேயே கோவிலுக்குப் போகும் பழக்கம் ஏற்பட்டால்தான் பெரியவர்களான பிறகு எந்த ஊரில், எந்தக் கண்டத்தில் இருந்தாலும் அங்கே கோவில் இருக்கிறதா என்று விசாரித்து அறிந்துகொண்டு போக வேண்டும் என்று மனம் தூண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அரை வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு நீர் அருந்தி, மீதி கால் வயிற்றைக் காலியாக விட வேண்டும் என்றும், சாப்பிடும் போது பேசக்கூடாது என்றும், சாப்பிடும் சாப்பாட்டை நிந்திக்கக்கூடாது என்றும்–இதுபோல எல்லா மனிதர்களுக்கும் பொதுவான குறிப்புகள் பல தந்திருக்கிறார் ஸெளந்தரராஜன். (போன் எண்: 484 3986).
திருப்பதி லட்டு எப்போது எப்படி ஆரம்பித்தது என்று கேட்பதற்கு இவரே தகுந்த நபர் என்று தோன்றியதால் கேட்டேன்.
‘இன்று நேற்றல்ல, திருப்பதி கோவில் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து இது இருந்து வருகிறது. திருப்பதி §க்ஷத்திரத்தின் முக்கிய அம்சமே ஸ்ரீனிவாசர்–பத்மாவதி திருமணம்தான். கல்யாணமென்றால் கட்டாயம் லட்டு இருக்க வேண்டும். லட்டு இல்லாமல் கல்யாணம் இல்லை. வெங்கடாசலபதி–பத்மாவதித் தாயார் விவாகத்தின் போது ஆரம்பமான லட்டு, காலம் செல்லச் செல்ல ரொம்ப முக்கியத்துவம் பெற்று வருகிறது’ என்றார் ஸெளந்தரராஜன்.
உண்மைதான். முக்கியத்துவம் என்றால் முக்கியத்துவம், உங்க வீட்டு முக்கியத்துவம் எங்க வீட்டு முக்கியத்துவம் இல்லை. திருப்பதிக்குப் போவதற்கு முன்னால் யாரிடமேனும் சொல்லிக்கொண்டால், ‘வரும்போது லட்டு வாங்கி வா’ என்கிறார்கள். வந்தபிறகு சொன்னால், ‘லட்டு வாங்கி வந்தாயா?’ என்று கேட்கிறார்கள்.
‘நன்றாய்ப் பெருமாளை சேவித்தாயா?’ என்று யாரும் கேட்பது கிடையாது.
(அண்ணாநகர் டைம்ஸில் ரா.கி.ர எழுதியது.)
நாங்கள் மூன்று பேர்
நாங்கள் மூன்று பேர்
பாக்கியம் ராமசாமி
சரித்திரத்தில், கி.மு., – கி.பி., என்ற பாகுபாடு இருப்பதுபோல, இளைஞர் வாழ்க்கையில், க.மு.,- க.பி., என்ற பிரிவுகள் இருப்பது, எல்லாரும் அறிந்ததே. (க.மு., கல்யாணத்துக்கு முன்; க.பி., கல்யாணத்துக்குப் பின்!)
என், 23வது வயதில், பத்திரிகை காரியாலயத்தில், நான் வேலையில் சேர்ந்த போது, பிரம்மச்சாரியாகத் தான் இருந்தேன்.
“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்…’ போல, வீட்டுக்கு ஒருத்தர் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில், அப்போது எனக்கு ஒரு பிடிப்பு இருந்தது.
அதாவது, ஒரு வீட்டில் மூன்று, நாலு சகோதரர்கள், இரண்டு, மூன்று சகோதரிகள் என்று கூட்டுக் குடும்பமாக, அந்தக் காலத்தில் இருப்பர்.
அந்தக் கும்பலில், யாராவது ஒருத்தராவது, திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
ஏனெனில், அந்த ஒருத்தனாவது, சுயநலமில்லாமல், குடும்பத்தின் மொத்த நன்மையைக் கருதி, மற்றவர்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு, பிணக்குகளைத் தீர்க்கும், பொது மனிதனாகத் திகழ்வான் என்பது என் அனுமானம்.
ஆகவே, நானும் வாய்க்கு வாய், “எனக்குக் கல்யாணம் வேண்டாம். குடும்ப மொத்தத்தின் சேவைக்காக என்னை அர்ப்பணம் செய்து கொள்கிறேன்…’ என்று சொல்லி, சுதந்திர பிரம்மச்சாரியாக, ஓட்டல் சாப்பாடு, ரூம் வாழ்க்கை என்று இருந்தேன்.
நான் வேலை பார்த்த காரியாலயத்தில், ஆசிரிய இலாகாவில் மூன்று பேர் இருந்தோம். ரா.கி.ர., புனிதன், நான், மூவரும் சேர்ந்து செய்கிற காரியத்தை, ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒருத்தரே செய்வார். ஆகவே, ஆசிரிய இலாகாவில் நாலு பேர் இருந்தோம் என்பதே சரி.
நான் ஓட்டலில் சாப்பிடும் பிரம்மச்சாரியாதலால், “ஐயோ பாவம்… நாக்கு செத்திருக்குமே…’ என்று நண்பர்கள், அவ்வப்போது தங்கள் வீட்டு விசேஷங்களின் போதெல்லாம் சாப்பிட அழைப்பர். கிராக்கி செய்யாமல், அழைப்புகளைப் பெருந்தன்மையாக (அல்லது சிறுந்தன்மையாக) ஏற்றுக் கொள்வேன்.
எங்கள் மூவரில், ரா.கி.ர., மூத்தவர். பதவியிலும், வயதிலும் அனுபவத்திலும் சீனியர்.
ரா.கி.ர.,வும் புனிதனும், “நீ… வா… போ…’ போட்டுப் பேசிக்கொள்வர். நானும், புனிதனும், “வாடா… போடா…’ என்று பேசிக் கொள்வோம். (இரண்டு பேரும் சேலம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாதலால் இணக்கம் அதிகம்) எங்க மாவட்டத்து வட்டார வழக்கு வார்த்தைகளை பயன்படுத்திப் பேசிக் கொள்வதில், மகா சந்தோஷம்.
“சாமி… மெரமணை பிரமாதம்…’ என்று பேசிக் கொண்டால், ரா.கி.ர., முழிப்பார். “என்னடா மெரமணை…’ என்பார்.
“சாமி ஊர்வலம் போவதைத்தான், எங்க வட்டாரத்தில், “மெரமணை’ என்போம்…’ என்று, அவருக்கு விளக்குவோம்.
தர்பீஸ் பழத்தை, எங்கள் வட்டாரத்தில், “கோச்சாப் பழம்’ என்போம்.
அந்த வார்த்தையைக் கேட்டாலே, ரா.கி.ர., காதைப் பொத்திக் கொண்டு, “சகிக்கலையே…’ என்று ஓடுவார்.
“தர்ப்பீஸ் மட்டும் வாழுதோ…’ என்போம்.
ரா.கி.ர., தஞ்சை மாவட்டக்காரராதலால், சங்கீதம், வெற்றிலை போடுதல் ஆகிய பழக்கம் உண்டு. வெற்றிலையை, அவருடைய பெட்டியிலிருந்து எடுத்து, இரண்டு சீவலுடன், ஒரு கசக்குக் கசக்கி, நான் வாயில் திணித்துக் கொண்டால், “ஐய்யோ… ஐய்யோ… ஏய்யா இப்படிக் கொலை பண்ணுறீர்?’ என்று பதைத்து, …
“இரும்… நான் மடிச்சுத் தர்றேன்…’ என்று ஒரு வெற்றிலையை எடுத்து, அழகாக நீவித் துடைத்து, சுண்ணாம்புத் தடவி, நரம்பு கிள்ளி, இரண்டாகக் கிழித்து, இரண்டு சீவலை வைத்து அழகாகச் சுருட்டி மடித்து, “இப்ப போட்டுக்கோய்யா…’ என்று எனக்குத் தருவார்.
அவரை எரிச்சல் மூட்டுவதற்காகவே, குறும்பாக நான் வெற்றிலையை வெறுமே சுருட்டி வாயில் அடைத்துக்கொண்டு, இரண்டு சீவலையும் போட்டுக் கொள்வேன்.
“இப்படிப் போட்டுக் கொள்வதும் ஒரு ருசிதான்…’ என்று சொல்வேன்.
எனக்குக் கல்யாணமானதும், ரா.கி.ர., என்னை, “வாங்க… போங்க…’ என்று, மரியாதை போட்டுக் கூப்பிடத் துவங்கினார்.
ஒரு தரம், ஆசிரியர் தன்னிடம், “நீங்களெல்லாம் வா… போ… என்றுதான் கூப்பிட்டுக் கொள்வீர்களா… தனியாக இருக்கும்போது, அப்படி அழைத்துக் கொள்ளலாம்… ஆனால், வெளியார் யாராவது ஆபீசுக்கு வந்திருக்கும் போது, அப்படி அழைத்துக் கொள்வது, பார்க்க நன்றாக இருக்காது… ஆபீசுக்கான மரியாதையாகவும் இருக்காது…’ என்பது போல கூறியதாகத் தெரிந்தது.
ஆசிரியர் எல்லாரையும், ஆசிரிய இலாகா உதவியாளர் கண்ணபிரான் உட்பட, “வாங்க… போங்க…’ போட்டுத்தான் அழைப்பார். ஆகவே, ஆசிரியரை அனுசரித்து, ரா.கி.ர., என்னை, மரியாதையாக கூப்பிடத் துவங்கினார்.
ஆரம்பத்தில் எனக்குக் கூச்சமாயிருந்தது. “என்ன சார்… என்னைப் போய், வாங்க, போங்கன்னு கூப்பிட்டுக் கொண்டு?’ என்றேன்.
அப்புறம், “இதுவும் நன்றாகத்தான் இருக்கு… நமக்கு கல்யாணமாகி, ஒரு மெச்சூரிட்டி வந்திருப்பதால் தான், ரா.கி.ர., அப்படிக் கூப்பிடுகிறார்…’ என்று நினைத்து, “ங்க’ அழைப்பில் மகிழ்ச்சியோடு இருந்தேன்.
ஆனால், புனிதனுக்கும், எனக்கும் இடையில் மட்டும், அந்த “ங்க’ போட்டுப் பேசிக்கொள்ளும் வழக்கம் அமலாகவில்லை.
ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களாதலால், “அடா… புடா…’ தான் சுவையாக இருந்தது.
மூவருமே, புரசைவாக்கம், வெள்ளாளத் தெருவாசிகளாக இருந்ததால், ஏதாவது மீட்டிங், ஈட்டிங் (ஓட்டல்) போவதாக இருந்தால், ஒருத்தர் வீட்டுக்குச் சென்று இன்னொருத்தர் குரல் கொடுப்போம்.
ஒருநாள், என் வீட்டு வாசலிலிருந்து, “அவன் இருக்கானா?’ என்று, கேட்டார் புனிதன்.
என் மனைவி, ஏதோ காரியத்தில் இருந்தவள், “இல்லையே… போயிட்டானே…’ என்று, அதே, “ன்’ போட்டு அவசரமாகப் பதிலளித்து விட்டாள்.
இதை பெரிய ஜோக்காக எடுத்துக்கொண்டு, சிரித்து மகிழ்ந்தோம்.
அப்புறம் நான் யோசித்தேன். புனிதனிடம் மெதுவாக ஒருநாள் கூறினேன். “டேய் பி.எஸ்.எஸ்… ரா.கி.ர., “ங்க’ போட்டு மரியாதையாகக் கூப்பிடுகிறார். நீயும், நானும் கூட இனிமேல், “ங்க’ போட்டு மரியாதையாக பேசிக்கொள்ளலாமாடா… அது ரொம்ப டிகினிபைடாக இருக்குமே…’ என்றேன்.
புனிதன் சிரித்துவிட்டு, “நீ வேணுமானால், மரியாதையாகக் கூப்பிட்டுப்போ… ஆனால், நான் உன்னை வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன்…’ என்று ஒப்பந்தத்துக்கு வர மறுத்து விட்டார்.
அவர், “வாடா… போடா…’ என்றுதான் கடைசி வரை கூப்பிட்டு வந்தார். எனக்கும், அவர் கடைசி வரை, “அவன்’ தான்.
ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சு., புனிதன்
விழுந்து விழுந்து எழுந்த குழந்தை
ஏழெட்டு நாட்கள் முன்பு சாயந்தரம் ஐந்து மணி வாக்கில் ‘வாக்கிங்’ போய்க் கொண்டிருந்தேன். (‘ஜாகிங்’கை விட மெதுவாகப் போனால் ‘வாக்கிங்’. வாக்கிங்கைவிட மெதுவாகப் போனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. Inching என்று சொல்லலாமோ?) இன்ன இடத்துக்குப் போவதென்கிற இலக்கு ஏதும் இல்லாமல் நடந்துகொண்டிருந்தபோது, “கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?” என்ற வரிகளை நினைத்துக் கொண்டு (இது கண்ணதாசன் தானே?) நிமிர்ந்து பார்த்தபோது டவர் பார்க்கை அடைந்திருப்பதை உணர்ந்தேன்.
இந்தப் பார்க் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சில வாரங்களுக்கு முன் ஹிந்துவில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று உள்ளே போக எண்ணினேன். வாசலில் பசும்பச்சை வெள்ளரிப் பிஞ்சுகளை வண்டியில் குன்றாகக் குவித்து வைத்துக் கொண்டு மிளகாய்ப் பொடியும் சேர்த்து விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். வெள்ளரிப் பிஞ்சென்றால் எனக்கு உயிர். இருபது பிஞ்சுகளை ஒரே மூச்சில் சாப்பிடுவேன். ஆனால் உயிரான விஷயங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று டாக்டர் எச்சரித்திருந்ததால், ஐஸ்கிரீம் வண்டியை நோக்கிக் கை நீட்டும் குழந்தையைத் தாயார்க்காரி தரதரவென்று அப்பால் இழுத்துக் கொண்டு போகிற மாதிரி, ஆசையை நெட்டித் தள்ளிவிட்டு நடந்தேன்.
உள்ளே நுழைவதற்கு சுழல் கதவு. அதைக் கண்டால் எப்பவுமே எனக்கு பயம் – நடுவில் சிக்கிக் கொண்டு ‘நாலு பேர்’ சிரிக்கிற மாதிரி செய்து கொண்டு விடுவோம் என்று. (எஸ்கலேட்டர் என்றாலும் அப்படித்தான். அதுவும் அந்த கடைசிப்படி! ஆனால் ஒவ்வொருவர் எத்தனை லாகவமாய் அதைக் கடக்கிறார்கள்!)
சுழல் கதவை வேறு யாராவது தள்ளிக் கொண்டு போனால், அடுத்த வளைவுக்குள் புகுந்துகொண்டு உள்ளே போய் விடலாம் என்றெண்ணி இரண்டு நிமிடங்கள் நின்றேன். யாரும் வரவில்லை. ஆனால் பார்க்கின் உள்ளேயிருந்து வெளியே போக ஒரு சுடிதார் மங்கை வந்தாள். அவள் அந்தப் பக்கம் தள்ளட்டும், நாம் இந்தப் பக்கம் புகுந்துவிடலாம் என்று தோன்றியது. மேலும் ஒரு நிமிடம் நின்றேன். அந்தச் சுடிதாரிணி, பெரியவர் முதலில் உள்ளே வரட்டும் என்று நினைத்தவள் போல அங்கேயே நின்றாள். என்னடா இது வம்பு என்று திகைத்தேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தப் பெண் சுழல்
கதவின் குழாய்களைத் தொடாமல், அதற்கும் சுவருக்கும் இருந்த இடைவெளி வழியாகவே வெளியே வந்து விட்டாள் – கடவுள் அவளுக்கு அவ்வளவு மெல்லிய தேகத்தைக் கொடுத்திருந்ததால்.
எப்படியோ உள்ளே நுழைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்க் சுத்தமாகத்தான் இருந்தது. குப்பை கூளம் கண்ணில் படவில்லை. ஆனால் பாதைகளில் தரை காய்ந்து கெட்டியாகி, லேசான செம்மண் நிறத்துடன் கரடுமுரடாக இருந்தது. பசும் புல்வெளிகள் அதிகமில்லை. செடிகளைக் காட்டிலும் மரங்களே அதிகம். உள்ளத்தில் குதூகலம் ஏற்படுத்துகிற நீரூற்றுகள் இல்லை. அது ஒரு செவ்வாயோ, புதனோ, எனவே அதிகமான நடமாட்டம் இல்லை. ஒரு மரத்தின் கீழே இருந்து வட்ட மேடையின் ஓரமாக உட்கார்ந்து தலைக்கு மேலே காக்கை எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.
கொஞ்சம் தள்ளி ஒரு தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், பொத்தான் போடாத ஷர்ட்டுடன் ஒரு நரைத் தலையரும் உட்கார்ந்திருந்தார்கள். அது சிறிய புல்தரை. எவர் சில்வர் தூக்கில் கொண்டு வந்திருந்ததை உண்டுவிட்டு, பாட்டிலிலிருந்து நீர் குடித்தார்கள். வயதான பெண்மணி வெற்றிலை பாக்கை மென்றுவிட்டுப் புளிச்சென்று துப்பினாள்.அவர்கள் போன பிறகு அங்கே வந்து உட்காரக்கூடிய நபரை நினைத்துப் பரிதாபம் ஏற்பட்டது.
சில தெரு நாய்கள் மகா பயங்கர வேகத்துடன் ஒன்றையன்று துரத்திக் கொண்டு ஓடின. கடித்தால் என்னாவது என்று குலை நடுங்கி, காலைத் தூக்கி வைத்துக் கொண்டேன்.
எதிரில் வண்ண வண்ணமான உடைகளுடன் டவரில் ஜனங்கள் ஏறுவதும், இறங்குவதும் ஓர் அழகான காட்சியாக இருந்தது.
ஆறு மணிக்குப் பிறகு டவரின் மேலே போக அனுமதி கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ஆறரை, ஆறே முக்காலுக்குக் கூட ஜனங்கள் அங்கே போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.
இடுப்பில் ஒயர்ப் பையும், கையில் கோலாட்ட சைஸில் குச்சியுமாகச் சில பெண்கள் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குறி சொல்கிறவர்கள். ஆசையாயிருந்தது, குறி கேட்கலாமா என்று, ஆனால் அவர்களில் யாரும் என் பக்கம் வரவில்லை. ஓர் இளம் ஜோடியை நோக்கிப் போய்விட்டாள் ஒருத்தி.
‘சுண்டலேய்!’ என்று கூவிய வண்ணம் ஒரு சிறுவன் அலுமினியத் தூக்குடன் சென்றான். கூடவே ஒரு தோழன். “வீட்லே கேட்டாங்கன்னா கை தவறிக் கொட்டிடிச்சுன்னு சொல்லிடுவேன்” என்று சுண்டல் பையன் ஒரு பொய் நாடகத்துக்கு வசன ஒத்திகை பார்த்துக் கொண்டு போனான்.
முப்பது வயதில் ஒரு கணவனும், இருபத்தைந்து வயதில் ஒரு மனைவியும், தங்களுடைய மூன்று வயதுக் குழந்தையுடன் போனார்கள். குழந்தையின் ஒரு கையை இவனும் மறு கையை அவளும் பிடித்து நடத்தினார்கள். ஆனால் அது தரையில் கால் பதிக்காமல் எம்பி எம்பி ஊஞ்சலாடியது.
கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்கள் நிறைய வர ஆரம்பித்தார்கள். பல வகையான வயது, பல வகையான நிறம், பல வகையான தோற்றம். ஆனால் என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான முகங்களில் உல்லாசமோ சிரிப்போ தென்படவில்லை. இறுக்கமாக இருந்தன. இன்றைய சமூகத்தின் அழுத்தும் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஒரு வேளை என் மனத்தினுள் இருந்த இறுக்கத்தை அவர்கள் முகத்தில் கற்பனை செய்து கொண்டேனோ என்னவோ. கவலை நிறைந்த முகங்கள். கவலையைப் பகிர்ந்து கொள்ளும் முகங்கள். கவலையே இல்லாததுபோல் பாசாங்கு செய்யும் முகங்கள்…
எழுந்து கொண்டேன். வந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் இழந்துவிட்ட மாதிரி இருந்தது. அப்போது ஒரு காட்சி :
மிகச் சிறிய வழுக்கு மரம். மூன்று வயதுக் குழந்தைகள் மட்டுமே ஏறி விளையாடக் கூடியது. ஏறும் படிகளும் மூன்றேதான். அதில் மேலே ஏறி, பலகையில் வழுக்கி மறுபுறம் இறங்க வேண்டும். ஒரு தந்தை தன் குழந்தையை ஏணியினருகே அழைத்துப் போனார். அது ஏணி வழியே ஏறாமல் முன்புறமாக ஓடிவந்து, சறுக்க வேண்டிய பலகையில் ஏற முயன்றது. முழு உயரம் கூட ஏற முடியவில்லை. வழுக்கி வழுக்கி விழுந்தது. “அப்படியில்லை. இங்கே வா, இப்படி ஏறி அங்கே உட்கார்ந்து வழுக்கணும்” என்று அதன் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அது, மறுபடி வழுக்கும் இடத்துக்கே திரும்பி, இரு புறத்தையும் பிடித்துக் கொண்டு ஏறவே முயன்று கொண்டிருந்தது. எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்று மனித உள்ளத்துக்குள் இருக்கும் விடா முயற்சியையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி.
அந்தக் குழந்தை வெற்றி பெற்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உள்ளம் லேசாகி உதட்டில் புன்னகையுடன் வீட்டுக்கு நடந்தேன்.
ரா.கி.ரங்கராஜன் – 1: யோசனை கேட்க வராதீர்கள்!
மறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.
அவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’ ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ”மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்” என்று அவரை எச்சரிப்பார்.
உண்மையில் ‘முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்’ என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.
”தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி” என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. ‘அடேங்கம்மா! எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்!’ என்று தப்பாக பிரமிப்பார்கள்.
நான் ‘கிருஷ்ண தேவராயன்’ என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.
ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் ‘படகு வீடு’ கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் !
கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் ‘விடியப் போகிறது! எல்லோரும் எழுந்திருங்கள்!’ என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.
எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.
ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.
இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.
இது எப்படி இருக்கு!
மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
எனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.
[ நன்றி: http://www.appusami.com ]
நண்பர் கடுகு
சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ். ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமாக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம்.
சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.
டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது.
டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச் செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைப் பெயரே நிரந்தரமாகி விட்டது.
குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமானபோது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்த போது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப் பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64ம் வருட வாக்கில்.
அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அமரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.
அஞ்சல் துறையை விட்டு விலகிய பின் ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பல வருடம் பயிற்சி பெற்றதால் ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு ‘எழுத்துரு’ செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (கணினி பற்றி நான் சுத்த சுயம்பிரகாச ஞான சூன்யம். ‘எழுத்துரு’ என்றால் என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுவிடாதீர்கள். கீழே விழுந்து விடுவேன்.)
டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, கடுகு மூன்று பேரும் பால்ய நண்பர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் இவரைப் பார்ப்பதற்காக பெஸன்ட் நகர் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். காரில் உட்கார்ந்தபடியே பேசினாராம். உடல் நலம் குன்றி, பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஸ்ரீதரின் மனைவி அவர் சொல்வதை விளக்கிச் சொன்னதாகவும் கடுகு வருத்தத்துடன் சொன்னார்.
கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’. சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய ஒரே புத்தகம் இதுதான் என்றும், இது ஒரு ரத்தினம் என்றும் சுஜாதா எழுதினார். (இரண்டு பாகங்கள்; நந்தினி பதிப்பகம், போன்: 9444187365)
இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு (‘சுரபி’) என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர்.தான் கை கொடுத்தார்.
அவருடைய மகள் ஆனந்தி -அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி – அவள் அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ் பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.
நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிலிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும் தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது.
கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்கு தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)
நான்ஏன் பஃபேயை வெறுக்கிறேன் என்றால்…
‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.
முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.
இனி, பத்திரமாக ஒரு மேஜையை அடைய வேண்டியதுதான் என்று தீர்மானித்த போதுதான் அதிர்ச்சி. உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை எதுவும் காணோம். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அனுபவஸ்தர்கள். பஃபேக்கு பழக்கப்பட்ட புத்திசாலிகள். தட்டை லாகவமாகப் பிடித்துக் கொண்டு ஸ்பூனையோ, விரலையோ உபயோகித்து ருசித்துக் கொண்டிருந்தார். ஜாடியில் கைவிட்ட குரங்கு மாதிரி நான்தான் அத்தனை ஐட்டங்களையும் சின்னத் தட்டில் வைத்துக் கொண்டு முழித்தேனே தவிர, அவர்கள் முதலில் ரஸமலாய் சாப்பிட வேண்டியது; அதன்பின் பொங்கல்; அதன் பின்னர் வடை -இப்படி அவ்வப்போது விழுங்கிக் கொண்டிருந்தார்கள். (கணக்குப் பார்த்தால் நான் எடுத்துக் கொண்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கூட இருக்கும்.)
‘‘என்ன, செளக்கியமா?’’ என்று முதுகுப் பக்கமாய் யாரோ விசாரித்தார்கள். ‘‘ஓ, நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றபடி திரும்பினேன். தட்டின் அபாயமான முனையில் ரிஸ்க்கான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த சாம்பார் சற்றே வெளியுலகத்தைப் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. ஒரு குண்டு அம்மையாரின் காஞ்சிபுரத்தில் ஒர துளி பட்டதோ- அல்லது பட்டதாக அவர் நினைத்துக் கொண்டாரோ- ஒரு முறைப்பு முறைத்தார். ‘‘ஹி…. ஹி…’’ என்றேன். (தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி.)
அந்தக் கணத்தில்தான் எப்படிப்பட்ட பயங்கரமான போர்க்களத்தின் நட்டநடுவே நான் இருக்கிறேன் என்று புரிந்தது. கூட்டம் எக்கச்சக்கமாய் உள்ளது. எல்லோருமே தீனிப் பண்டாரங்கள். எல்லாத் தட்டுகளிலும் வழிய வழியச் சாம்பார், சட்டினி. ஆரம்பத்தில் நான் கண்ட நாசூக்குக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. பேச்சும் வேகம்; அசைவுகளும் வேகம். ‘‘ஆயிரம் சொல்லுங்க… டோனி செய்தது மடத்தனம்தான்’’ என்று அடித்துப் பேசினார் ஒருவர். எனக்கும் அவருக்கும் சில அங்குலமே இடைவெளி. வேறொருத்தர், ‘‘அவளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு’’ என்று சொல்லி நெற்றியில் படீரென்று அடித்துக் கொண்டார். ஒரு கறுப்புக் கண்ணாடிப் பெண், ‘‘ஈஸி இன்ஸ்டால்மெண்ட்’’ என்று தன் கையை நீட்டி வளையலை இன்னொரு பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
நின்று கொண்டே, தட்டில் இருப்பதைத் தின்று கொண்டே, மறு கையையும் ஆட்டியபடி பேச சிலரால் எப்படி முடிகிறது என்ற வியப்புடன் நான் சாப்பிடவும் முடியாமல், கையை நீட்டவும் முடியாமல், தட்டைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் கோமாளி மாதிரி தடுமாறினேன். ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தமிழர்கள் என்ற அவப்பெயர் உண்டு. ஆனால் அத்தனை உணர்ச்சி வசப்படுகிறவர்களும் இங்கே குழுமியிருந்ததுதான் ஆச்சரியம்! எனக்கு இன்விடேஷன் கொடுத்த செல்வராமன் கண்ணில் பட்டிருந்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டிருப்பேன். படவில்லை. இவ்வளவு அமளிகளுக்கு நடுவே ஒரு சர்வர் நீள அகலமான பெரிய ட்ரேயில் இரண்டு குடம் சாம்பாரை நிரப்பிக் கொண்டு வேகமாக நீந்தி என்னைக் கடந்து சென்றார். எனக்குக் குலை நடுங்கியது.
கொஞ்சம் சாம்பாரோ, இட்லி விள்ளலோ மேலே விழுந்துவிட்டால்தான் என்ன, அதற்கு இப்படி அலட்டிக் கொள்ள வேண்டுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரணம் என்னவெனில் இந்த மாதிரி விசேஷ வைபவங்களுக்குப் போவதற்காகவே நான் வைத்திருந்த தும்பைப் பூ வெள்ளை கதர் வேட்டியும் கதர் சட்டையும் அன்றைக்கு அணிந்து கொண்டிருந்தேன். துளி கறை பட்டாலும் அக்கிரமப் பளிச்செனத் தெரியும்; ஒரு ட்ரே சாம்பார் கொட்டினால்..?
அங்கிருந்து நகர்ந்து தளத்துக்கு வரும் மாடிப்படியின் கைப்பிடி ரெய்ல்ஸில் சாய்ந்தாற்போல் நான் நின்றிருந்தேன். இறங்கிச் செல்வோரும், ஏறி வருவோரும் என் முதுகைச் செல்லமாய் உரசிக் கொண்டே போனார்கள் அல்லது வந்தார்கள். ‘‘சீச்சீ1 அங்கே போய் வாங்கித் தர்றேன். அங்கிள் வச்சிருக்கிறதை எடுக்கக் கூடாது’’ என்று ஒரு தாயின் குரல் கேட்டது. பார்த்தால் அவள் தோளிலிருந்த இரண்டு வயதுக் குழந்தை என் தட்டை- தட்டில் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க, தட்டிப் பறிக்க- முயன்று கொண்டிருந்தது. தாய் அதன் கையை மடக்கி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தாள். முள்ளின் மீது துணி விழுந்தாலும் துணியின் மீது முள் விழுந்தாலும் துணிக்குத்தான் ஆபத்து என்று ஏதோ ஒரு பழைய சினிமாவில் கேட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. குழந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றாலும் என் வேட்டி சட்டைக்குத்தான் அபாயம் என்பதை உணர்ந்தபோது என் கை மேலும் அதிகமாக நடுங்கியது. காலில் எதுவோ தட்டுப்பட, கீழே பார்த்தேன். சாப்பிட்ட தட்டுகளைப் போடுவதற்காக நீல நிறத்தில் பெரிய பிளாஸ்டிக் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தட்டை அதில் வைத்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன். நடையைக் கட்டினேன்.
வயிற்றெரிச்சலான பின்கதை ஒன்று இதற்கு உண்டு. அடு்த்த வாரத்தில் ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செல்வராமனைப் பார்க்க நேரிட்டது. ‘‘சுஜியின் டான்ஸ் புரோகிராம் எப்படியிருந்தது?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அருமையாயிருந்தது. ஆனால் எனக்குத்தான் டயமில்லை. மாமனாரை ரயிலேற்றிவிட வேண்டியிருந்ததால் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு புறப்பட்டு விட்டேன்’’ என்றேன். ‘‘நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்! டிபன் சாப்பிட்டேளோல்லியோ?’’ என்றார். ‘‘சாப்பிட்டேனே…’’ என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ‘‘பஃபேயானதால சாப்பிடச் சிரமப்பட்டு விட்டேன்’’ என்று சொல்லி விட்டேன். ‘‘பஃபேயா? டைனிங் டேபிள் போட்டு, வந்தவர்களை உட்கார்த்தி வைத்து சர்வர்கள் பரிமாறும்படியான்னா ஏற்பாடு பண்ணினேன் ஸ்வாமி? போளி, பாதாம்கீர், ஸமோஸா’’ என்றவர் என் முகத்தைப் பார்த்து, ‘‘நீங்க பாலாம்பிகா ஹாலுக்குத்தானே வந்தேள்?’’ என்றார்.
‘‘ஆமாம்’’ என்றேன்.
‘‘எந்த ஃப்ளோர்?’’
‘‘இரண்டாவது ஃப்ளோர்!’’
‘‘அட ராமா! எங்காத்து ஃபங்ஷன் மூணாவது ஃப்ளோர்லன்னா நடந்தது? ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு…’’
நான் மடையன்தான். ஆனால் செல்வராமன் சொல்லும் மீதியையும் கேட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு அல்ல.
-‘அம்பலம்’ மின்னிதழில்
டாக்டர் ருத்ரன்
‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.
‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், அவளுடைய நட்புக்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் ஜாதி எங்கே வந்தது? நகர்புற வாழ்க்கையில் ஜாதியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தானே காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.
‘நீங்கள் நினைப்பது தப்பு. ஆரம்பத்தில் ஜாதி வித்தியாசங்கள் பெரிதாய்த் தெரியாது. மணந்துகொண்டு இல்லறம் தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி வித்தியாசங்கள் தோன்றும். பரம்பரை பரம்பரையாக மனசுக்குள் ஊறி வந்திருக்கும் யதார்த்தங்கள் முளைக்க ஆரம்பித்து விசுவரூபம் எடுக்கும். பெற்றோர்களும் உறவினர்களும் அந்த சிறிய தீயை ஊதிவிட்டுப் பெரிதாக்குவார்கள். பல பேர்களின் வாழ்க்கையில் இதைப் பார்த்திருக்கிறேன். ஒரே ஜாதியாக இருந்தால் ஓரளவு பிழைப்பார்கள். வேறு வேறு ஜாதியாக இருந்தால் பிரச்னைதான், என்று அழுத்தமாகச் சொன்னார் டாக்டர்.
பதினைந்து வருஷங்களுக்கு மேலாக டாக்டர் ருத்ரனை எனக்குத் தெரியும். பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதியவர். டிவியில் பேட்டிகள் கொடுத்தவர். விவாத அரங்குகளில் பங்கேற்றவர். அவருடன் டெலிபோனில் சில முறைகள் பேசியிருக்கிறேன தவிர நேரடியாகப் பார்த்தது கிடையாது. (என்று நினைக்கிறேன்)
சில வருஷங்களுக்கு முன் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பாத்திரத்தில் சைக்கியாரிஸ்டாகவே நடித்தார் ருத்ரன். விஜய்க்கு அதில் இரட்டை வேடங்கள். குறிப்பிட்ட சில சொப்பனங்கள் பின்னர் அசலாகவே நடக்கின்றன என்பது விஜய்யின் அனுபவம். அதனால் பயம் ஏற்பட்டு மனநல நிபுணரான டைரக்டர் ருத்ரனிடம் சென்று ஆலோசனை கேட்க, ‘இஎஸ்பி’ எனப்படும் அந்த மனநிலை உண்மையானதுதான் என்றும் கனவின்படி நடப்பது நிச்சயம் என்றும் அவர் விளக்குகிறார்.
தற்கொலைகள் ஏன் நடக்கின்றன என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருப்பதைப் படித்ததும் அவரை சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. போனில் தொடர்பு கொண்டு, எப்போது வந்தால் அவருக்கு சௌகரியமாக இருக்கும் என்று கேட்டேன்.
அதிர்ச்சியுடன், ‘நீங்கள் என்னைப் பார்க்க வருவதாவது! நானே உங்களைப் பார்க்க வருகிறேன்,’ என்று கூறிய டாக்டர் ருத்ரன். இரண்டு வாரங்களுக்கு முன்பு என் இல்லத்துக்கு வருகை தந்தார். கூடவே உமா மகேஸ்வரி என்ற சைக்காலஜிஸ்ட் பெண்மணியும் வந்தார்.
மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வந்த டாக்டர் ருத்ரன் ஒன்பதரை மணி வரைப் பல விஷயங்களைப் பற்றி சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார். புராண காலத்து மகரிஷிகளைப் போல கம்பீரமான தாடி. இரு கைகளாலும் அடிக்கடி மாற்றி மாற்றி அதை உருவிக்கொண்டு பேசுகிறார். கண்களில் நல்ல தீட்சண்யம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி உரையாடுகிறார். மனித உறவுகள் செம்மைப்பட வேண்டுமானால் eye – contact மிக முக்கியம் என்பது அவர் வலியுறுத்தி சொல்லும் விஷயங்களில் ஒன்று. கண்ணுக்கு கண் நேரே பார்த்துப் பேசினால் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி வெளிப்படும் என்கிறார்.
சிறு வயது முதல் தன்னிடம் தனியான அன்பு செலுத்தி, டாக்டராகப் பட்டம் பெறும்படி வளர்த்தவர் தன் அத்தைதான் என்று நன்றி விசுவாசத்துடன் தெரிவித்த டாக்டர் ருத்ரன், தான் வழிபடும் தெய்வம் காமாட்சி அம்மன் என்கிறார். நெற்றியில் பளிச்சென்று துலங்கும் சிவப்புக் குங்குமம் அதற்கு சான்று கூறுகிறது. காலம் சென்ற டாக்டர் மாத்ருபூதம்தான் தனக்கு குரு என்றார். (மாத்ருபூதம் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் ருத்ரன் சீரியசான மனிதராக இருக்கிறார்).
பேசிக் கொண்டிருந்தபோதுதான் நான் முதலில் குறிப்பிட்ட காதல் கல்யாணப் பிரச்சனை வந்தது. குடும்பத்தில் எதிர்ப்பு இருப்பதே இவர்களில் பெரும்பாலோருக்குப் பிரச்சனை. பையனை வெளியே அனுப்பிவிட்டுப் பெண்ணிடம் தனியே விசாரிப்பேன். ஏன் அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று விவரத்தைக் கேட்டு வைத்துக் கொண்டு பிறகு பையனைக் கூப்பிட்டுப் பேசுவேன். சிக்கல் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகிவிடும்’ என்றார் டாக்டர்.
ஆனால், வெறும் விரக்தி, தோல்வி மனப்பான்மை, கசப்புணர்ச்சி – இப்படிப் பல காரணங்களுக்காக ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. வெறுமென பேசி, விவாதித்து, ஆலோசனை கூறி அனுப்புவது பழைய நடைமுறை. இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு விதமான மன நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாத்திரை மருந்துகள் வந்திருக்கின்றன. தக்கபடி ப்ரிஸ்கிருப்ஷன் தருகிறேன் என்கிறார் டாக்டர் ருத்ரன். ஆனால், அவற்றை சரியானபடி உட்கொள்ளாவிட்டால் பலன் இருக்காது என்றவர், தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி ஒரு தாயைப் பற்றியது என்றார். வளர்த்து பெரியவனான மகனுக்கு மனச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது என்று இவரிடம் அழைத்து வந்தாராம் அந்தத் தாய். இவரும் மருந்துகளைத் தந்தாராம். ஆனால் அவன் சில நாட்களில் இறந்து விட்டான். பின்னர் அந்த அம்மா இவரைப் பார்க்க வந்தார். தகுந்த சிகிச்சை தரவில்லை என்று சண்டை பிடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவருக்கு ஆச்சர்யமான அனுபவம். என் பிள்ளை நீங்கள் கொடுத்த மருந்துகளை சரியாகவே சாப்பிடவில்லை. அதனால் தான் இறந்துவிட்டான். இப்போது எனக்கு அவனைப் போலவே மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறது. மருந்து கொடுங்கள், ஒழுங்காக சாப்பிடுகிறேன்’ என்றாராம் அந்தத் தாய்.
இந்தத் தலைமுறை இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்றும், அது தவறு என்றும் டாக்டர் ருத்ரன் அபிப்பிராயப்படுகிறார். ‘உடனே படிப்பு, உடனே வேலை, உடனே வெளிநாடு, உடனே எக்கச்சக்க சம்பளம் என்று அவசரம் காட்டுவது, வாழ்க்கையைப் பற்றிய விரிவான, ஆழமான பார்வையைத் தடுக்கிறது’ என்கிறார்.
நாலைந்து உறவினர்களுடன், சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் ஆலோசனை க்ளினிக் நடத்தி வருகிறார் ருத்ரன். (ஃபோன்: 24811140, 23727738). ஆனால் குறிப்பிட்ட சில கிழமைகளில் மட்டும்தான் அவரை சந்திக்க முடியும்.
Kavinjar Vaali: ‘I tried to cast Sivaji Ganesan and Jeyandira Saraswathi in my Plays’
‘நினைவு நாடாக்கள்’ நூலில் கவிஞர் வாலி
திருவானைக்கோவில். அங்கு ஒரு எலிமெண்டரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியின் பராமரிப்பில் உள்ளது. அங்கு “காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத,பள்ளி மாணவர்களை வைத்துப் போட்டேன்.
அதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க இரு பையன்கள் வருவார்கள். இருவரும் 20-வது வயதை நெருங்கிக் கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் இருக்கலாம்.
குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை- நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.
இன்னோர் இளைஞன் நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன். பக்கத்தில் உள்ள ப.ந.ப. பஸ் டெப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன். ஏற்கெனவே “பாய்ஸ் கம்பெனியில்’ இருந்து பழக்கப்பட்டவன்.
அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!
நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த வேத பாடசாலை மாணவன்தான்- காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!
நாடகத்தை வேடிக்கை பார்த்த ப.ந.ப. பஸ் டெப்போ பயிற்சி மெக்கானிக்காகப் பணி புரிந்த பையன் – கணேச மூர்த்தி- சிவாஜி கணேசன் என்றால் உங்களுக்கு நன்றாகப் புரியும்!
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews
Jeyamohan
http://www.jeyamohan.in/?p=6321
ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .
1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.
மதியம் திங்கள், ஜனவரி 11, 2010
எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)
வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.
‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.
எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?
தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.
‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.
ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.
கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.
சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:
”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”
7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”
தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.
கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”
தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.
கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?
தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?
இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.
‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.
வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.
இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:
”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”
இறுதியில் இப்படி வருகிறது.
”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”
பதில் சொல்லவில்லை.
”வரலையா?”
”வந்துச்சு.”
”என்ன செஞ்சே?”
”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”
”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”
இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.
”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.
நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”
கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…
எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.
சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?
இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?
இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.
அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.
நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.
Writer Sujatha about Islam: Reading Quran as a Non-Muslim: Dinamani Ramzan Malar 2003
இஸ்லாத்தை பற்றிய எழுத்தாளர் சுஜாதாவின் அனுபவங்கள்
“திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று ‘குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா’ என்றார்.
நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், ‘தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.
‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்.
அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ‘அண்ணல் நபிகளார் வாழ்வினிலே’ போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘இஸ்லாமியச் சிந்தனைகள்’, நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.
எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.
‘சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!’
‘திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்’ என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!
தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)
Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam
வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
சந்திப்பு . தளவாய் சுந்தரம்
தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை.
1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டுஒருசாராரும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். அது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.
யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது, யதார்த்தம் என்ற பெயல் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,
கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துôரம் கடந்து தானே செல்கிறது. அது யதார்த்தமா, இல்லையா?
2) புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே, அந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?
புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெயவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி, நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, பிரேம் ரமேஷ், உமா வரதராஜன், முத்துலிங்கம். லட்சுமி மணிவண்ணன், காலபைரவன் என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே நினைக்கிறேன்.
எது யதார்த்தம் என எதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாயி”ருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.
புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுôடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும், உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.
கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்றசாதாரண நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது
3) இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா?
சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும், அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும், இடமிருந்திருக்கிறது.
பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. இதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.
கார்க்கி, செகாவ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ, ஜாக் லண்டன், ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.
அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுôறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள்.? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.
4 ) உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?
நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும், துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.
உப பாண்டவம் போன்று ஒரு இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது.
பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.
என்னைப் பொருத்தமட்டில் அந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
5) தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக எழுதி முடிக்கபடவில்லை இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காப்பி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்றன அதற்கான உங்களது எதிர்வினை?
ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.
6)இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிûயி”ல் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில், பாடல்களில், பேச்சில், நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை ஒடுக்கபட்ட உடலின் குரலாக பெண் கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்
சிறுகதையி”லும் அடிநிலை மனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே ஏழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
மாலதி மைத்ரி, தென்றல், குட்டிரேவதி, ராணி திலக், ஸ்ரீநேசன் போன்றவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. சிறுககைளி”ல் ஜே. பி. சாணக்யா, ஸ்ரீராம். லட்சுமி மணிவண்ணன். காலபைரவன் போன்றவர்கள் புதிய தளங்களை உருவாக்கி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து நான் தொ.பரமசிவத்தின் எழுத்துக்களையும். தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகளையும் ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். மொழிபெயர்ப்பில் ஜி. குப்புசாமியின் செயல்பாடு மிகவும் கவனிக்கபட வேண்டியது.
7) இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள்?
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோஸ் சரமாகோ வின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக தி ஸ்டோன் ராப்ட், தி காஸ்பல் அக்கார்டிங் டு ஜீசஸ் கிரைஸ்ட் இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர் ஆர்கன் பாமுக் என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது மை நேம் இஸ் ரெட் என்ற நாவல் மார்க்வெஸின் நுôற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.
ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன. மார்க்வெஸின் புதிய நாவல் மெமரீஸ் ஆப் மை மெலன்கலிக் வோர்ஸ் ஆங்கிலத்தில் இன்னமும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவில்லை. அது மிகச்சிறந்த நாவல் என்று எனது நண்பரும் முக்கிய லத்தீன் அமெரிக்க சிறுகதை எழுத்தாளருமான பெர்னான்டோ úஸôரான்டினோ மெயில் அனுப்பியிருக்கிறார். வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.
6) தமிழ் ஆலக்கிய விமர்சனம் என்ன வகையில் உள்ளது என்று கருதுகிறீர்கள்? தமிழ் விமர்சகர்கள் படைப்பாளிக்கு ஊக்கம் தருபவராக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒரு படைப்பாளி என்னும் முறையில் சொல்ல முடியுமா?
இன்று தமிழில் இலக்கிய விமர்சகர்களேயில்லை. தற்போது விமர்சகர்களாகயிருப்பவர்கள் பலரும் தங்களுக்கு பரிச்சயமான கோட்பாடுகளை பரிசோதித்து பார்ப்பதற்கான சோதனை எலியாக தான் இலக்கியபடைப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முறையானதொரு இலக்கிய கோட்பாடுகள், தத்துவங்களின் பரிச்சயமும், தமிழ் இலக்கியத்தின் தேர்ச்சியும் இல்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சன தந்தைகள் எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்று முடிவு செய்யும் கலாச்சார காவலர்களாக தங்களை கருதிக் கொண்டு வெட்டுக்கத்திகளுடன் தணிக்கையாளர்களை போல செயல்பட்டிருக்கிறார்கள். அன்றைய இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாக தான் காணப்படுகிறது.
இன்னொரு பக்கம் இலக்கிய விமர்சனம் என்ற பெயல் துதிபாடுதலும் ஆராதனைகளும் மிக அதிகமாக நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் போர்ஹே, தமிழ் கால்வினோ, தமிழை காப்பாற்ற வந்த பின்நவீனத்துவ டொனால்டு பார்த்தல்மே, தமிழ் காப்கா. என தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அங்கீகார பட்டங்கள் தந்தது உள்ளுர் விமர்சகர்களை தவிர வேறு யார்.?
புதுக்கவிதையை பற்றி உப்பு பெறாத இரண்டு விமர்சன கட்டுரை தொகுதிகளை வெளியிட்டுவிட்டு சாகித்ய அகாதமி பதவியையும் சர்வதேச அரங்கங்களில் கட்டுரைவாசிக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ளும் அபத்தம் வேறு எங்காவது இருக்கிறதா என்ன? ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிக் கொண்டு அரைகுறையாக கற்றுக் கொண்ட விமர்சனபாடங்களை தமிழ் இலக்கியவாதிகளின் மீது ஏவிவிடும் உளறல் இன்னொரு புறம் பின்நவீனத்துவ விமர்சனமாக பெருகிக் கொண்டிருக்கிறது.
பல்கலை கழகங்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயி”ல்லை. மாறாக நல்ல நாவல்களை, கவிதைகளை பரிட்சைக்குரிய பத்துமார்க் கேள்விகளாக உருமாற்றி வகுப்பெடுத்து சராசரி ரசனை அளவை கூட சிதைந்து விட்டிருக்கிறார்கள். விதிவிலக்காக உள்ள தொ.பரமசிவம். அ.கா.பெருமாள், அ.மார்க்ஸ் வீ. அரசு போன்ற பேராசியர்கள் கூட கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய விமர்சனத்தை விடவும் நாட்டார்கலைகள், மொழித்துறை, நாடகம், அரசியல் நிகழ்வுகள் சார்ந்து தான் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனத்துக்குரிய விமர்சகர்களாக மதிக்கபட்ட தமிழவன், நாகார்ஜூனன், எம்.டி.முத்துகுமாரசாமி, எஸ்.சண்முகம் போன்றவர்கள் இப்போது எழுதுவதேயில்லை.
அமெரிக்க பல்கலை கழகங்களில் பணியாற்றிக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஏ.கே.ராமானுஜமும் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் செய்த பங்களிப்பின் ஒரு பகுதியாவது இங்குள்ள கல்விதுறை அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கிறதா?
மிகைல் பக்தின் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகினை பற்றி விரிவாக 300 பக்க நுôலை எழுதியிருக்கிறார்.. இதாலோ கால்வினோ செவ்விலக்கியங்களை எப்படி வாசிப்பது என்று தனிப்புத்தகமே எழுதியிருக்கிறார். உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைகள் மொழியலையும் மறைக்கபட்ட சரித்திரத்தையும் பேசுகின்றன. இவர்களை போலவே டெரிதாவும் லக்கானும் மிஷைல் பூக்கோவும் எழுதிய விமர்சனங்கள் நம் கையில் வாசிக்க கிடைக்கின்றன. இவர்கள் எவரும் எழுத்தாளர்களை புகழ்ந்து கொண்டாடுவதற்கு விமர்சனத்தை பயன்படுத்தவில்லை. மாறாக படைப்பை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள். தமிழில் இந்தவகை விமர்சனங்கள் இல்லை. அதனால் தான் இன்றைய இலக்கியவிமர்சகர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
9)தற்போது உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது?
எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில், சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும் போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.
எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி, எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக தான்உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.
10) இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் இப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.
11) சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா?
சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா.. சமகாலம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அதன் வேர்கள் எந்த நுôற்றாண்டில் ஒடிக் கொண்டிருக்கின்றன என்று சுலபத்தில் அறிந்து கொண்டுவிட முடியாது.
சோபாக்ளிசின் ஒடிபஸ் ரெக்சினை வாசிக்கும் போது அது நம் காலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால் நாடகம் எழுதப்பட்டு இரண்டாயிரமாண்டு கடந்துவிட்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈகோவின் நாவல்கள் பல நுôற்றாண்டுகளுக்கு முந்திய ரகசிய அமைப்பான டெம்பிளார்களையும் மடாலயங்களையும் நினைவுகள் அழிந்து போகும் தீவையுமே பேசுகின்றன. அதற்காக அதை கடந்த காலத்தின் கதை என்று விலக்கிவிட முடியுமா? அந்துவாந்த் சந்த் எக்சுபரின் குட்டி இளவரசன் எந்த சமகாலத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறீர்கள்,
காலம் பற்றிய நமது புரிதல் தெளிவற்றது. நான் காலத்தை சதா திசைகளற்று பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்றை போல தான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அருகாமை மரங்களும் வானில் பறக்கும் பறவையின் நிழலும் தண்ணீல் பிரதிபலிக்கின்றன. ஆனால் நம் குடத்தில் அள்ளும் தண்ணீல் பிம்பங்கள் ஒட்டிக் கொண்டு வருவதில்லையே. என்றால் எங்கே பிரதிபலிப்பாகிறது பிம்பம்? தோற்றம் கடந்த நிஜம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லையா?
12) தங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?
புத்தரை தொடர்ந்து பத்தாண்டுகளாக பயின்று வருகிறேன். இந்தியசமூகத்தை, மனதை புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா, சாரநாத், நாகார்ஜூன கொண்டா என பௌத்த வாழ்விடங்களை தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்ததை கொண்டாடும் பலரும் அதன் சமூககருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றயாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுபடிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தபட்டு வருகிறார் உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை. பௌத்த அரசியலை மேற்கொள்பவர்கள் வன்முறையை தங்களது ஆயுதமாக கொள்வதையும் சுயமோகத்தில் உறிப்போயிருப்பதையும் காணும்போது இவர்கள் எந்த புத்தரைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தேகமாகதானிருக்கிறது.
புத்தத்தினை புந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. அதே போலவே பெரியாரை இந்து மத எதிர்பாளர் என்று சுருக்கி அவரை ஒரு திராவிட கட்சிதலைவரை போல கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன்.
பெரியாரைப்பற்றிய இன்றைய விமர்சனங்கள் யாவும் அவதுôறுகளாவே உள்ளது. அவரின் சீரிய விவாதங்களை மூடிமறைப்பதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பெரியாரை நுட்பமாக வாசித்த எவரும் அவரை துதிபாட மாட்டார்கள். மாறாக தமிழ்சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது என்று கட்டாயம் புரிந்து கொள்வார்கள். பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார். அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியபாடுகளையும் உருவாக்கியிருக்கிறார்.
புத்ததிற்கு ஒருவர் மதம் மாறுவது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவன் எந்த மதத்தினை சார்ந்து இருந்தாலும் அவன் பௌத்தனாக வாழமுடியும். பௌத்தம் ஒரு மதமல்ல ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்.
அதே நேரம் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் பௌத்தமும் முழுமையாக ஸ்தாபனமயமாக்கபட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள். அதற்குள் நுôறு துணைபிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம், என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி தரும் வழிபாடுகள், பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று எளிய வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும், என் மறைமுகஅதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுபாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இது போன்ற பௌத்தநெறியை தான் .
13) ஊர்சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?
நான் சுற்றுலா பயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலை கூட யமுûயி”ன் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல்வெளிகளின் பின்னிருந்து தான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்க கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. குறிப்பாக எந்த ஊருக்குப் போகப்போகிறேன் என்ற திட்டம் கூட கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகைஒவியங்களை கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கபட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்பட தயராகதானிருக்கிறது. ஒரேயொரு வேறுபாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர்சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது.
14) தொலைகாட்சி தொடர்களிலும் சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் திரைத்துறைக்குள் எழுத்தாளருக்கு உள்ள சாத்தியஙகள் சாத்தியமின்மை பற்றி சொல்ல முடியுமா?
எழுத்தாளின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளன் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பபட்டு விடுகிறது சினிமாவில் கதை என்பது எழுதப்படுவதில்லை மாறாக உருவாக்கபடுவது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பல ஆயி”ரம் செலவு செய்கிறார்கள். அனால் அந்த செலவில் நுôறு ரூபாய் கூட புத்தகம் வாங்குவதற்கு செலவிடப்பட்டிருக்காது.
எந்த சினிமா நிறுவனத்திலும் நுôலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. தந்திபேப்பரும் வார ஆதழ்களும் தவிர்த்து மருந்துக்கு கூட ஒரு நாவலோ சிறுகதை புத்தகமோ கதைவிவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை.
சினிமாவிற்கான நல்ல கதைகள் இல்லை என்பது பொய். நல்ல கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வரவில்லை என்பது தான் நிஜம். அதனால் தான் தமிழில் மிக அபூர்வமாகவே அழகி, ஆட்டோகிராப். காதல் போன்ற படங்கள் வெளிவருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் பெருமழைக்காலம், காழ்சா, அகலே என்று மூன்று மலையாள படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிக யதார்த்தமான, ரசனைமிக்க படங்கள். திரையரங்களில் அரங்கம் நிரம்பி வழிய தான் ஒடிக்கொண்டிருந்தது. இதில் அகலே என்ற படம் கண்ணாடி சிற்பங்கள் என்ற டென்னிசி வில்லியம்சின் உலகப்புகழ் பெற்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஷியாம பிரசாத் இயக்கியது. இந்த அளவிற்கு கூட தமிழில் முயற்சிகள் நடைபெறவில்லை என்பது கவலைக்குயதாகவேயி”ருக்கிறது.
15) தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது எருவானது. உலகசினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது.?
கல்லுô நாட்களில் இருந்தே மதுரையி”ல் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலகதிரைப்படங்களை காணும் பழக்கம் எனக்கு உருவாகியி”ருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் அபிரகாமால் துவக்கபட்ட ஒடேசா என்ற திரைப்பட இயக்கத்தின் நண்பர்களின் நட்பு தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமாபயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்படவிழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாகியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகதிரைப்படங்களை பார்த்து வருகிறேன். டெல்லி கல்கத்தா பெங்களுர் என பல்வேறு திரைப்படவிழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அந்த்ரே தார்கோவெஸ்கியும், லுôயி புனுவலும், பெலினியும் குரசேவாவும் எனக்கு பிடித்தமான இயக்குனர்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களை திûயி”டுவதை தவிர்த்து அதைப்பற்றிய முறையான அறிமுகமோ, தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியோடர் பாஸ்கரன், வெ. ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனிநபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமவை புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சினிமாவை பற்றி எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. இலவசமாக உலகின் சிறந்த படங்கள் திரையிடப்படும் போது கூட அங்கு தமிழ் எழுத்தாளர்களோ, கவிஞர்களோ வந்து பார்ப்பதேயில்லை என்பது தான் உண்மை.
சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவி இயக்குனர்களும் துணை இயக்குனர்களுமிருக்கிறார்கள். இவர்களில் இருநுôறு பேராவது நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்வதற்கு கூட தமிழில் உலக சினிமாவை பற்றிய புத்தகங்களில்லை.
தற்போது சென்னையை தவிர்த்த சிறுநகரங்களில் வசிப்பவர்கள் கூட ஹாலிவுட் திரைப்படங்களை தவிர்த்து வேறு திரைப்படங்களை காண்பதற்கான சாத்தியம் டிவிடி வழியாக உருவாகி உள்ளது. ஆனால் எந்த படங்களை பார்ப்பது எப்படி தேர்வு செய்வது எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. நவீன ஒவியம், இசை போலவே சினிமாவினை ரசிப்பதற்கும் ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் தேவை. ஆகவே இதற்கான மாற்றுமுயற்சிகளில் ஒன்றாக சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் நண்பர்கள் சிலரையும் ஒன்றிணைத்து உலகசினிமாவிற்கான ஒரு புத்தகத்தை உருவாக்கினேன். இந்த புத்தகம் உருவாவதற்கு மூன்று அண்டுகள் கால அவகாசம் தேவைபட்டது.
16) ஒரு சிறுபத்திக்கை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?
நான் 1984ல் எழுத துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகயிருந்த எனது எழுத்து இன்று பல்வகை பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. அது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
17) ஆனந்த விகடனில் வெளியான உங்கள் துணையெழுத்து தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அது இதுவரையில்லாத உங்கள் எழுத்தில் ஒரு ரொமான்டிசிசத்தை துணையெழுத்து கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமிருக்கிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி.. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிக்கையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டது தான். நான் கட்டுரைகளை புனைவுமொழியில் எழுதுகின்றவன்.
தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழக்கொழிந்து போன வார்த்தைகளையும் புள்ளிவிபரங்களும் கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுதிணற வைப்பதாகவேயிருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை ஆனால் அதன் மொழி புனைவு தன்மை மிக்கது. உம்பர்த்தே இகோவை வாசித்த பாருங்கள் பெரிய விஷயங்களை கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ, ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.
காருகுறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டது அதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரை பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று துணையெழுத்தில் அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெவித்ததோடு காருகுறிச்சிக்கு நினைவாக பூஜையில் வைக்கபட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். இது போலவே பிரமீள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.
நினைவுமண்டபம் அனுப்புவதை விடவும் புத்தகவெளியீடுகள், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமீள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமீள் பெயரால் அரங்கம் கட்டிதருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறி ஒரு செயல்பாடாக தான் துணையெழுத்தின் எதிர்வினை அமைந்திருந்தது.
17) தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள்.?
எப்போதுமே சிறுபத்திரிக்கைகள் மாற்றுக்குரலுக்கு உரிய களத்தை உருவாக்குவதற்கு தான் முனைந்திருக்கின்றன. சிறு பத்திரிக்கை என்பதே ஒரு எதிர்திசையில் செல்லும் நீரோட்டம் தான். அதன் நோக்கம் வாசகர்களை விருத்தி செய்வது அல்ல. குறிப்பிட்ட ஒரு நோக்கம் சார்ந்து நண்பர்களால் தங்களது கைப்பணத்தை செலவு செய்தது தான் சிறுபத்திக்கைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்று தமிழில் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் யாவரும் சிறுபத்திக்கையில் எழுதி வந்தவர்களே. சிறுபத்திரிக்கைகளின் தேவை எப்போதுமே இருந்து வரக்கூடியது தான்.
இடைநிலை இதழ்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இவை எந்த விததத்தில் தன்னை இடைநிலையாக நினைத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. பத்தாயிரம் பேர் படிப்பதால் அது இடைநிலை இதழாகிவிடாது. அதுவும் சிறுபத்திரிக்கை தான். இடைநிலை இதழ் என்றால் தமிழ்சினிமா விமர்சனமிருக்கும் நாலு கலர்பக்கமிருக்கும். இத்தோடு ஒன்றிரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் வெளியிடப்படும் என்பது தானா? தமிழுக்கு தேவை தீவிரமான சிந்தனை தளத்தை உருவாக்க கூடிய இதழ்கள். இதை எத்தனை பேர் வாசகர்களாகயிருக்கிறார்கள் என்பதை வைத்து முடிவுசெய்ய முடியாது. இதே நேரம் சிறுபத்திரிக்கை என்ற பெயல் துதிபாடும் குழுக்களை உருவாக்கி கொள்வதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை..
18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?
சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகபோராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளை போல ஆங்காங்கே தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டு பிடிக்கபடவேயில்லை. எத்தனை எழுத்தாளர்கள் அந்த முகாம்களுக்கு சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள். தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம். குஜராத் கலவரம் என எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் ஆல்லை.
உண்மையை சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை. நான் இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது பதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளுமளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை துôக்கமற்று செய்திருக்கிறது.
தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கபட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடிவைத்து தகர்க்கபடுவதும். கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், சாதி கிராமங்களில் முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில் கூட மதவாதம் கலக்கபட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பபடுவதையும் சமூகபிரச்சனைகளாக நாம் கண்டுகொள்வதேயில்லை. அதைப் பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.
நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சீரழிவுகளை தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வைகளை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.
19)அரவான் என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள்.?
வியாச பாரத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கபடவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில் அரவான் கிருஷ்ணனால் தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண் பெண் என இரண்டு உடல் கொண்டவானாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.
அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மனிதனையும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கபட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.
20)இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
பௌத்த விகாரை ஒன்றை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் கதாவிலாசம் என்று தமிழின் முக்கிய சிறுகதையாசியர்களை பற்றி ஒரு பத்தியை எழுதிக் கொண்டுவருகிறேன். இணையத்தில் அட்சரம் என்ற பெயல் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் .எழுதுகிறேன். இயற்கையை பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நுôறு குழந்தைகள் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனிநுôலாக வெளிவரயிருக்கிறது.
21 ) இரண்டுவருடமாக சென்னைவாசியாகி விட்டீர்கள் எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை ?
எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும். சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும், தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகை போல ஒரு தீராத்தனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின்இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைகாட்சியில் ஆழ்ந்துபோயிருக்கும் அவர்கள் முகங்களை கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போது தான் சற்றே பயமாக இருக்கிறது.
மறுமொழி
மூக்கன்
2/3/2005 , 7:23:01 PM அருமையாக இருந்தது திரு.ராமகிருஷ்ணன்.
உங்கள் கதாவிலாசமும் விகடனில் படித்து வருகிறேன்.
நேரம் கிடைக்கும்போது, இங்கேயும் எழுதுங்கள்.
PK Sivakumar
2/3/2005 , 7:41:59 PM Very good interview. Very thought provoking points. Each answers of yours have to be pondered, analysed and discussed more and thus would form an essay by itself. Punaivin Baaniyil Katurai ezuthuvathu ponra muyarchikal Tamilil illai enbathu ponra statements anaivarum yosika vendiya onru.
Ungalai patri pesum pothu Nanbarkalidam sonnathu ninaivuku varukirathu. La.sa.raku apuram kavithaiyaaka vurainadai ezuthubavar s.ra. enna, la.sa.ra.vin kavithai nadai thatuva vaathiyai pola sikalaanathu. ungal kavithai nadai, naataar kalai pola elimaiyanathu enru. Your interview makes me remember it again.
Thanks and regards, PK Sivakumar
மூர்த்தி
2/3/2005 , 9:37:29 PM மதிப்புமிகு எஸ்.ரா அவர்களுக்கு,
அருமையான கேள்விகள். மிகவும் அருமையான பதில்கள். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்ப எவ்வளவு புகழ்வரினும் தன்னடக்கமான பதில்கள். இது இதுதான் உங்களுக்கு மென்மேலும் புகழைச் சேர்க்கும். வாழ்க தங்களின் தமிழ் இலக்கிய பயணம்.
அவர் கேட்க மறந்த கேள்வி ஒன்று:
இணையத்தில் இலக்கியம் என்று ஏதும் படைக்கப்படுகிறதா இல்லையா?
தங்கமணி
2/3/2005 , 10:59:05 PM அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்களைப்பற்றிய அறிமுகம் மிகவும் நல்லவைகயில் எனக்குக் கிடைக்கவில்லை. வாசிப்பு என்ற வகையில் தாவரங்களின் உரையாடலையும், துணையெழுத்தையும் தவிர நான் உங்களின் எழுத்தெதையும் வாசிக்கவில்லை; அதனால் நான் முன்முடிவுகளை தவிர்க்கும்வண்ணம் இப்போதுதான் உபபாண்டவம் வாங்கினேன். இன்னும் வாசிக்கவில்லை.
இந்த நேர்காணல்/பதிவு பலபக்கங்களை கொண்டதாக இருப்பதையே இதன் உண்மைத்தன்மைக்கு சான்றாக நினைக்கிறேன். யதார்த்தத்தின் பரிமாணங்கள், புனைவின் உண்மைத்தன்மை (Chuang Tzu வின் பட்டாம்பூச்சி கனவு நினைவுக்கு வருகிறது), காலம், விமர்சன உலகம் என்று அழகாக, பின்புற அரசியல் நோக்கங்களின்றி, பார்வைகளின் (தரிசனங்களின்) வழியில் விரிகிறது உங்கள் பதிவு..
//பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்// என்ற வரிகளைப்படிக்கும் போது தி.ஜானகிராமனின் புத்த சாமியார் (அன்பே ஆரமுதே) ‘சாமியாரில் ஏதம்மா புத்தசாமியாரும், வேற சாமியாரும்’ என்பது நினைவில வந்தது. உண்மையில் பெளத்தம் சாட்சிப்படுத்தலின் மூலம் மனதை புறங்காணும் வழிமுறைகளை மிக எளிய முறையிலும், அழகாகவும் செய்துள்ளது. அதை நிறுவனமயமாக்கப் பட்ட மதங்கள் எளிதில் மூடிமறைக்க முயல்வதும், பெளத்தமே நிறுவனமயமாக்கப்பட்டதும் மிக இயல்பானதே.
காலம் பற்றிய புரிதல் மிக அழகானது. காலம் என்பது மனம் கடந்த நிலையில் இல்லாதொழிந்து, இக்கணமே நிலைக்கிறது. இக்கணத்தின் விரிவோ எல்லையும், திசையும் இல்லாதாது. அதனாலேயே மகா இலக்கியங்கள் அல்லது நாட்டார் கலை வந்த வடிவங்கள் எல்லாம் எல்லா காலத்தையும் (காலம் கடந்தும்) பிரதிபலிக்கும் தன்மைகொண்டவையாக இருக்கின்றன. காலம் பற்றிய அற்புதமான காட்சிப்படுத்தலை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வின் கடைசி பக்கங்களில் கண்டபோது எனக்குள் எழுதவேண்டும் என்ற தவிப்பும், தேவையும் முற்றாக தீர்ந்துபோனதை உணர்ந்தேன்.
எழுத்தாளனின் சமூக அக்கறையைப் பற்றிய பதிலும் முக்கியமானது; இங்கு துரஷ்டிரவசமாக தமிழ் வலைபதிவுகளில் எழுத்து ஒருவித மீடியா தன்மையை கொண்டிருப்பதாலும், எழுதுபவர்கள் எழுத்தாளர்களாய் இருப்பவர்களை விட பத்திரிக்கையாளர்களாய் இருப்பதும் சங்கராச்சாரியாரின் கைது போன்றவை கவனஈர்ப்பைப் பெறுகின்றன.
உங்கள் விரிவான பதிவை வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றி!
s.velumani
2/4/2005 , 3:06:10 AM very good interview. pl do write regularly in atcharam.
கறுப்பி
2/4/2005 , 12:21:29 PM மிக அருமையான நேர்காணல் எஸ்.ராமகிருஷ்ணன்
புதிய கதை எழுத்து என்று பல இடைக்கால இலக்கியவாதிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இடைக்காலங்களில் யதார்த்தவாத எழுத்து என்று விட்டு வெறும் சமூகப்பாடம் சொல்லும் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருந்தன. அன்றைய கால எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித்தனும் ஜீ.நாகராஜனும் இப்போது இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் புதிய கதை எழுத்தைப் படைக்கவில்லையா. இடைக்காலங்களில் எழுத்தின் தன்மையில் ஒரு வித தேக்கம் கண்டு தற்போது அது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி விட்டது என்பதே என் கருத்து.
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுய அனுபவத்தை மட்டும் படைப்பாக்கி எழுத்தாளர்கள் தந்து கொண்டிருந்தமையால் தான் பெண்மொழி வெளியே வரவில்லை. பெண்கள் பெண்களுக்கான குடும்ப பாலியல் பிரச்சனைகளை தமது பிரச்சனைகளை எழுத்தில் கொணரும் பொழுது அவளது வாழ்க்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தி பெண் எழுத்தாளர்கள் கொச்சைப் படுத்தம்படும் தன்மை இருந்து கொண்டும் வந்தது. ஆனால் தற்போது அதை எதிர்நோக்கும் துணிவு, தன்மை பெண்களிடம் (மிகக்குறைந்த அளவிலேலும்) வந்து விட்டது.
sukumaran
2/9/2005 , 6:35:56 AM Dear Ramakrishnan,
Read your Interview in your blog.It was unpretentious and lively.
With regards
sukumaran
கணேசன்
2/9/2005 , 11:57:30 AM உங்களைப் போல் ஊர் சுற்றி..தெருவில் படுத்து இலக்கில்லாமல் அலைய ஆசை!
நினைத்தபடி வாழ அனைவருக்கும் கொடுப்பினை இல்லை…
வாழ்ந்த படியே (ஆசைகளை) நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதம் பற்றிய உங்களின் கருத்து உண்மை.
அன்புடன்,
கணேசன்.
7/23/2005 , 9:36:36 AM p
Karunharamoorthy.Po – பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.
3/21/2006 , 4:25:42 PM பௌத்தம் என்கிற சிந்தனை- வாழ்வியல் முறைமை புறந்தள்ளப்பட்டு அது ஸ்தாபனமயப்பட்டு வெறும் அரசியலாகவும் அதைத்தொடரும் வெறுப்பாகாகவும் வளர்ந்து நிற்பதற்கு இலங்கை மிகச்சிறந்த உதாரணம்.
புத்தர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்) சூழ்ந்த சமூகத்தில்தான் வாழ்ந்தோம், வாழ்கிறோம். ஆனாலும் பௌத்தம் பற்றி எதுவும் அறியமுடிந்ததில்லை. பௌத்த அரசுகள் புத்தர்சிலைகளை தமிழர் பகுதிகளில் நாட்டிச்செல்வதில் காட்டிய அக்கறையை பௌத்தர்களாக நடந்து காட்டுவதில் செலுத்தவில்லை.
பௌத்த சிந்தனை முறைமையை பற்றி முற்றாக அறிந்துகொள்ள தமிழில் இதுவரை ஏதொரு நூலும் கிடையாது. பத்து வருஷங்களாக ஆழ்ந்து பௌத்தத்தைப் பயிலும் நீங்கள் ஏன் பௌத்தம் பற்றிய ஒரு விரிவான நூலை எழுதக்கூடாது?
Nanjil Nadan in Uyirmmai Magazine: உயிர்மை Notes & Writings from and on நாஞ்சில் நாடன்
சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்
மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
” எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் –என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது: அ.ராமசாமி
சொல்லில் சுழன்ற இசை
உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை மெஹ்தி ஹஸன் ரசிகர் குழு, Saint Gobain Glass நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாஞ்சில் நாடன்
இசை இறை அனுபவம் என்று சொல்கிறார்கள். அதை விவரிக்க முடியாது. வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். வாத்தியங்கள் ஊமை மொழியில் தானே பேசுகிறது. தங்கமே தமிழ் பாட்டு பாடு என எளிதாக சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால் பாடிக்கொண்டிருந்த தமிழ் பாடல்களை என்ன செய்தோம். நாட்டுப்புற ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொல்வார், குமரி மாவட்டத்தில் அறுபத்து மூன்று வகையான நிகழ்த்துக்கலைகள் இருந்தது என்று. ஆனால் அதில் இப்போது பதினோரு கலைகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த தலைமுறையில் அதுவும் கூட இல்லாமல் போய்விடலாம் அந்த கலைகளில் பயன்படுத்திய வாத்தியங்களை இனி மியூஸியத்தில் கூட பார்க்க முடியாது. ஷாஜியின் இசை குறித்த இந்நூல் தமிழுக்கு அபூர்வ வரவு.
பாரதி மணி
என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார்.
என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!
ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து)
Nanjil Nadan – Kaalachuvadu: காலச்சுவடு சஞ்சிகையில் நாஞ்சில் நாடன்
பதிவுகள்: அற்றைத் திங்கள்
மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல
அ. கார்த்திகேயன்
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கியதாகவும் திமுகவிற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அரசியல் தீவிரம் தனக்கு இருந்ததாகவும், நாளடைவில் அந்த ‘மயக்கம்’ அகன்றதையும் சுவாரசியமாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு தான் அடைந்த அவமானங்கள், காயங்கள், ஏமாற்றங்கள், ஆற்றாமைகளைச் சொற்கோலங்களாக தன் பேச்சில் வெளிப்படுத்த, ‘மிதவை’ நாவலின் காட்சியலைகள் பார்வையாளர்களின் மனத்திரையில் தெரிய ஆரம்பித்தன.
திராவிட மாயையினின்று தான் விடுபடப் பழந்தமிழ் வாசிப்புதான் மிகவும் உதவியாக இருந்தது என்றும் நிறைய வாசிக்கும்போதுதான் படைப்பாளிக்கு ஏராளமான சொற்கள் கிடைக்குமென்றும் காத்திரமான படைப்புக்கு அச்சொற்களே வழி வகுக்கும் என்றும் தெரிவித்த அவர், தான் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாவல்வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதாகப் பெருமைபடக் கூறினார். படிப்பதன் மூலம் படைப்பில் நல்ல சொல்லாட்சிகளைக் கொண்டு வர முடியுமெனத் திடமாக நம்புவதாகவும் தனது எழுத்தில் நாஞ்சில் நாட்டுச் சொற்களைக் கூடுமானவரைக் கொண்டுவரத் தான் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்க்கை பற்றிய புரிதல் வாழும் போதுதான் கிடைக்கும். தமது 25 வருட எழுத்து வாழ்க்கையில் அந்தப் புரிதலைப் பல்வேறு கோணங்களில் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன், இன்றைய அரசியல் நிலை குறித்து தனது படைப்புகள் கவலை மற்றும் கோபம் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். படைப்புகளில் அவை குறித்துக் கவன ஈர்ப்பு பெற வைப்பதையும், பண்பாட்டுக் கூறுகள் குறித்துத் தனக்கு ஏற்படும் அதிர்வுகளைப் படைப்பாக்கங்களில் பதிவு செய்வதையும் தனது கடமையென்றும் கூறினார்.
படைப்பு என்பது கதை சொல்வது மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூறுகளை, தகவல்களை அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் செல்வது எனக் கூறியவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
தங்களது நாவல் (தலைகீழ் விகிதங்கள்) திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டுமென்றும் தன்னுடைய அடையாளம் எது என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் விடையளித்தார்.
பாடப் புத்தகங்களை மீறி நமது குழந்தைகள் ஏராளமானவற்றை அறிந்து கொள்வதுடன் நவீன வாழ்வு தரும் அதிர்ச்சிகரமான அலைகளிலிருந்து மீள வாழ்வைப் புதிய கோணத்தில், புதிய வார்ப்பில் எதிர்கொள்ள வேண்டுமெனவும் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
o
பதிவு: கருத்தரங்கு – நாஞ்சில் நாடன் படைப்புகள்
வலி தரும் எழுத்து
அ.கா. பெருமாள்
நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரியும் நெய்தல் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நாஞ்சில் நாடன் படைப்புகள் கருத்தரங்கு 24.01.2007 புதன்கிழமை திருச்சிலுவைக் கல்லூரியிலுள்ள செசில் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கின் முதல் அமர்வில் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி தன் தலைமை உரையில், “தென்மாவட்டப் படைப்பாளிகளில் முக்கியமானவரான நாஞ்சில் நாடனைப் பற்றிய இந்தக் கருத்தரங்கை நாஞ்சில் நாடனின் பாராட்டு நிகழ்ச்சியாகவும் கருதலாம்” என்று குறிப்பிட்டார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் அருட்சகோ. சோபி முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோ. ஜெரார்டின் ஜெயம் வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வின் தொடக்கத்தில் நெய்தல் கிருஷ்ணன் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். “நாஞ்சில் நாடன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று நெய்தல் அமைப்பு முடிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மனதில் நெருடலை ஏற்படுத்தாத இடத்தில் நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விப் புலத்திற்கும் நவீன இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதும்தான் இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம்” என்றார்.
நாஞ்சில் நாடனின் நாவல்கள் பற்றி எம். வேதசகாயகுமார் பேசினார். “நாஞ்சில் நாடன் கவிதை, சிறுகதை போன்ற வடிவங்களின் மூலம் படைப்புலகுடனான தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இவரது நாவல்களின் மறு வாசிப்பு புதிய உணர்வைக் கொடுக்கிறது. நாஞ்சில் நாடனின் அனுபவ வாழ்வின் பரப்பு சுருங்கியது. ஆனால் பொய்ச் சாயம் கலவாதது. படைப்பிற்கென அனுபவ வாழ்வை வலிந்து பெறும் அவலம் இவருக்கு என்றுமே இருந்ததில்லை. நிகழ்வுகளை ஒரு மையத்தில் குவித்து உணர்வுகளை எழுப்பி வாழ்க்கைச் சிக்கல்களைத் தனக்குச் சாதகமான தளத்தில் இனங்கண்டு வாழ்வைப் படைப்பிற்கென்று எளிமைப்படுத்த நாஞ்சில் நாடன் முனையவில்லை. நாஞ்சில் நாடன் அவரது படைப்புகளிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்” என்றார்.
தொடர்ந்து, ‘நாஞ்சில் நாடனின் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் பேசிய சின்னசாமி, “நாஞ்சில் நாடனின் சிறுகதை, நாவல்களைவிடக் கட்டுரைகளை முக்கியமாகக் கருதலாம். இவர் கட்டுரைகளுக்காக எடுத்துக்கொண்ட விஷயங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. சாதாரண வாழ்க்கையுடன் உறவுடையவை. இவரிடம் மனிதாபிமானமும் ஆர்வமும் அதிகம். இவரது நூலின் தலைப்பு ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்பது. கம்பராமாயணப் பாடலில் வரும் வரி இது. எல்லாம் விதியின் மேல் காரணம் காட்டிப் பேசுவது இப்பாடல். இந்தத் தொனி நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் சற்று இடம்பெயர்ந்து வருகிறது. மனிதனின் பிழை எதுவும் இல்லை; எல்லாம் சமூகத்தின் பிழை என்ற கருத்து பொதுவாக இழையோடுகிறது. கட்டுரைகளில் வரும் எள்ளல் தொனி படிக்கும் வேகத்தைக் கூட்டுகிறது. இவரது படைப்புகளைப் போலவே கட்டுரைகளும் என்பதற்கு வட்டார வழக்குச் சொற்களை இவர் லாகவமாகக் கையாளும் திறன்தான் அடையாளம். கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நூல் பற்றி அ.கா. பெருமாள் பேசும்போது, “தமிழகத்தில் சாதி பற்றிய நூற்கள் நிறையவே வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தங்கள் சாதியின் புகழ்பாட எழுதப்பட்டவை. வெளிநாட்டு ஆய்வாளர்கள் சாதி பற்றி எழுத ஆரம்பித்தபோது திரட்டப்பட்ட தகவல்கள்கூட இன்றைய நிலையில் பரிசீலனை செய்ய வேண்டிய அளவில்தான் உள்ளன. நாஞ்சில் நாடனின் நூல் இந்த இடத்தில் வேறுபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள்வழி வேளாளர், மருமக்கள்வழி வேளாளர், சைவ வேளாளர், துளுவ வேளாளர், செட்டி வேளாளர் என்னும் ஐந்து வேளாளர் உட்பிரிவுகளில் மக்கள்வழி, மருமக்கள்வழி வேளாளரை மட்டுமே இவர் பதிவுசெய்திருக்கிறார். நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றி 1909இல் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, 1921இல் தாணம்மாள், 1986இல் பேரா. எல். சி. தாணு ஆகியோர் எழுதிய கட்டுரைகளை இன்று திரும்பிப் பார்க்கின்றபோது நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒத்துப் போவது தெரிகிறது. அவரது படைப்பைப் போலவே இந்த நூலும் யதார்த்தமான பதிவு” என்றார்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாவது அமர்வில் ஜெயமோகன் பேசினார். “உலகம் முழுக்க வானத்தைப் பார்ப்பது, மண்ணைப் பார்ப்பது என்ற பார்வை இருக்கிறது. மண்ணுக்கு அப்பால் வானத்தைப் பார்த்து உலகத்துத் துக்கத்தை வெளிப்படுத்திய பழைய பாடல்களை இன்று படித்தாலும் உணர முடியும். ஒட்டுமொத்த பார்வை வானத்தைப் பார்க்கும்போது புரியும். ஆனால் மண்ணைப் பார்ப்பது வித்தியாசமானது. இது யதார்த்தமானது. இந்த மண்ணிலேயே சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தேடிக் கண்டடைவதற்கான முயற்சிதான் யதார்த்தவாதம்.
“தமிழ் யதார்த்தவாதத்தின் முதல் படைப்பு மாதவையாவிலிருந்து தொடங்குகிறது. மண்ணின் பிரச்சினையை விண்ணில் எதிர்நோக்காத பார்வையை இவர் தடம் பதித்த பின்னர் வந்த படைப்பாளிகளில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, ஆ. மாதவன் என்ற வரிசையில் வருபவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் நாஞ்சில் நாடனுக்குத் தனி இடம் உண்டு. இந்த வரிசையில் வருபவர்களில் நான்கு பேர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள். நாஞ்சில் நாடன் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்தவர், எவரையும் புண்படுத்தாதவர். இவரிடம் இழையோடும் சிரிப்பும் மண்ணின் மணமும் இவரை இனம் காட்டுகின்றன” என்றார்.
இறுதியாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார். “நான் எழுத ஆரம்பித்தபோது என்னைத் தட்டிக்கேட்டு உணர்த்தியவர் சுந்தர ராமசாமி. ‘நாஞ்சில், நம்மிடம் நிறைய எதிர்பார்க்க அதிகம் பேர் இல்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதே தொனியை இப்போது எனக்கு ஜெயமோகன் உணர்த்துகிறார்.
“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் உணர்வு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
டாக்டர் வ. ஜெயசீலி வரவேற்றுப் பேசினார். பேரா. ஜாக்குலின் நன்றி கூறினார். செல்வி மெர்லின்மேரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். முதல் அமர்விலும் மூன்றாம் அமர்விலும் கவிஞர் ராஜ்குமார் பாடிய பாட்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியது இக்கருத்தரங்கின் சிறப்பு. இன்னொரு சிறப்பு பேரா. அ. பெர்னார்டு, சந்திரா இருவரும் முறையே நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் அறிமுகப்படுத்தியது. சொற்புனைவு இல்லாமல் அறிமுகப்படுத்த முடியும் என்பதைச் சந்திரா இக்கருத்தரங்கில் நிரூபித்தார். நவீன இலக்கிய அரங்குகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இவரது அறிமுக உரைகளைக் கொள்ளலாம்.
தமிழர் பண்பாடு
குமரி மண்ணின் மரபு :: நாஞ்சில்நாடும் விளவங்கோடும்
குமாரசெல்வா
உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது”
(மத்தேயு 26 : 73)
விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான்.
“வணிகரே! பழங்கள் உள்ளனவா?”
“இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?”
“பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?”
“ஒரு ரூபாய்.”
“ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?”
“தருகிறேன்.”
“அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.”
“பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?”
“வேல மயிரு காட்டாத ரெண்டு பழம் இனிஞ்சி எடுவிலே இஞ்ச.”
தனது வட்டாரச் சுபாவத்தை ஒருவனால் ஒருபோதும் திரைபோட்டு மறைக்க முடியாது. மனத்தில் ஆழப்பதிந்த அது எந்த வகையிலாவது பேச்சில் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் விளவங்கோட்டுக்காரனால் இன்னொரு வட்டாரம் சார்ந்த மொழியில் தொடர்ந்து உரையாட முடியவில்லை.
தாய்த் தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்வி, “நீங்கள் தமிளும் மளையாளமும் களந்து பேசுகிறீர்களே?” என்பதாகும். அப்போதெல்லாம், நாங்கள் மலையாளிகள் அல்ல என்றும் தமிழன் இழந்த நிலப்பரப்பில் முதன்முதலாக அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவை மலையாளிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்கள் நாங்கள்தானென்றும் அதற்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் சுடப்பட்டு இறந்தும் வீட்டுக்கொருவர் ஊனம்பட்ட கதைகள் குறித்தும் நாங்கள் பேசும் தமிழ் சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் பட்டியலிட்டு மிகப் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்த நேரிடும்.
இதற்கு ஒரு படி மேலே போய் இலக்கியவாதிகள் என்னிடம், “ஒங்க நாஞ்சில் தமிழ் அருமை” என்று கூறுவதுண்டு. நாஞ்சில் நாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நான் அவர்களுக்கு விளக்குவது இருக்கட்டும், முதலில் ஒட்டுமொத்தக் குமரிமாவட்டத்தையும் ‘நாஞ்சில்நாடா’க மாற்றியவர்கள் யாரென்று தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.
குமரி மண்ணின் மேற்குக் கரையோரமாக இருக்கும் எங்கள் விளவங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்னும் அடைமொழியை ஏன், எதற்கென்று தெரியாமலேயே போட்டுக்கொள்கிறார்கள். மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொள்ளும் முயற்சி இது. தென்னைமரமேறும் சாதியைச் சேர்ந்த மனோகரனுக்குத் திராவிட அரசியலில் தன்னை வெள்ளாளராக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அடுத்தது இலக்கியவாதிகள். “ஹெப்சிபாவின் கதை மாந்தர்கள் தென்மாவட்டமான நாஞ்சில் பகுதியின் கிறிஸ்தவச் சமயத்திலிருந்து விளைந்தவர்கள்”- சிற்பி. பாலசுப்ரமணியன்.
“கன்னியாகுமரி மாவட்டமும் திருவனந்தபுரத்தின் தமிழ்ப் பகுதியும் இங்கு நாஞ்சில்நாடாகக் கருதப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த பகுதியாக உள்ள இதனை உழவுக்கருவியால் நாஞ்சில் என்று வழங்குகின்றனர்.” (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப:13)
“அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்கள் மட்டுமே நாஞ்சில்நாடு என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டபோதிலும் அகஸ்தீசுவரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்களுமே பொதுவாக நாஞ்சில்நாடு எனக் கருதப்படுகிறது என்பதைக் குமரிமாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களிலுள்ள வாசகர்களுக்கு விளக்குவது அவசியம் என்று கருதுகிறேன்” (என். ராமகிருஷ்ணன், ஜி.எஸ். மணி – குமரிக்கடலின் புயற்பறவை)
மேற்கூறியவற்றிலிருந்து இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் என்று நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தாராளவாதப் போக்கில் ஒலிப்பது வெள்ளாளக் கருத்தியல் புனைவாகும்.
1684 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இன்றைய குமரிமாவட்டம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தையும் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையும் தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவையும் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. இதில் மூன்று முக்கிய இயற்கைப் பிரிவுகள் அடங்கியுள்ளன. வடகிழக்குப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டதாகும். விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் அதிகமாக இதன் பாதிப்பில் உள்ளன. ‘காணிகள்’ என்று சொல்லப்படும் ஆதிவாசிகள், ரப்பர் தொழிலில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள், பனையேறிகள், கேரளம் முழுக்கச் சென்று கட்டடம் கட்டும் உழைப்பாளர்கள், வாழை, மரிச்சினி கிழங்கு, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் இவ்விரு தாலுகாக்களையும் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய மூன்று புறங்களும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம்வரை 68 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இப்பகுதிகளில் மீனவர்களும் இசுலாமியர்களும் பிறசாதி மக்களும் வசிக்கிறார்கள். மலையின் ஆதிக்கத்தில் உள்ள சமவெளிப் பிரதேசமான தோவாளைப் பகுதியின் சில பாகங்களே நாஞ்சில்நாடாகும். அகஸ்தீசுவரம் தாலுகாவில் காற்றாடிமலை, மருத்துவா மலை, கல்மலை இருப்பதுபோலத் தோவாளை தாலுகாவிலும் தாடகை, மகேந்திரகிரி மலைகள் உள்ளன. மகேந்திரகிரி மலையின் வடக்குப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் பறளியாறு, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களின் வழியாக ஓடித் திருவெட்டாற்றில் கலந்து தேங்காய்ப்பட்டணம் கடலோடு சேர்கிறது. நாஞ்சில்நாட்டின் வேளாண்மைக்காகப் பறளியாற்றின் குறுக்கே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ‘பாண்டியன் அணை’ கல்குளம் தாலுகாவில் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு பண்பாட்டுத் தொடர்பை ஓரளவு வைத்திருப்பது தோவாளை தாலுகா என்பதால்தான் நாஞ்சில்நாட்டை மொத்தத்திற்கும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆரல்வாய் மொழிக் கணவாய் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கும் வகையில் அமைந்து, நெல்லையைத் தாய்த் தமிழகத்தின் எல்லையாகவும் குமரியைத் தொல்லையாகவும் ஆக்கிவிட்டது.
தமிழகத்தோடுள்ள தொடர்பு நிலவியல் எல்லை என்பதையும் தாண்டி வரலாற்றிலிருந்தே அதற்கான ஆதாரங்களை நாம் கண்டுகொள்ள முடியும். நாஞ்சில் நாட்டைப் பாண்டியர்களும் அதன் பின் சோழ மன்னர்களும் ஆண்டபோது, விளவங்கோடு பகுதிக் குறுநில மன்னர்களான ஆய் மற்றும் வேணாட்டரசர்களின் கீழ் இருந்துவந்தது. பாண்டிய மன்னர்கள் ஆய்க்குறுநில மன்னர்கள்மீது தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே ஆய் மன்னர்களின் ஆதிக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் மேற்குப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றனர். இந்தப் பேரரசு – சிற்றரசு மோதல்தான் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்களைக்கூட ‘நாஞ்சில் நாடு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கல்வெட்டுக் குறிப்புகள் அகஸ்தீசுவரம் தாலுகாவிலுள்ள பல பகுதிகள், அதாவது கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், வடசேரி இவையெல்லாம் ‘புறத்தாய நாடு’ என்பதன் கீழ் அடங்கியிருந்ததாகக் கூறுகிறது. இது தவிரக் கல்குளம் தாலுகாவில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருந்த தகவலையும் அறிகிறோம். உழக்கிலே கிழக்கு மேற்கு என்றாற்போல முஞ்சிறைச் செப்புப்பட்டயங்களைப் பார்க்கும்போது, முடாலநாடு, தெங்க நாடு, ஓமாயநாடு, குறும்பனைநாடு என்று பலநாடுகள் இருந்திருக்கும்போது பண்பாட்டுக்குள்ளே மாற்றங்களும் வித்தியாசங்களும் உருவாகாமலா இருக்கும்?
வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் மொழிசார்ந்தும் பண்பாடுசார்ந்தும் எத்தனையோ பிரிவுகள் இந்த இரண்டாயிரத்துக்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட, மொத்தத் தமிழ்நாட்டில் 1.29 சதவீதம் நிலமுடைய, இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. சேரநாட்டு அரசதிகாரத்தின் கீழாகவும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் சோழர்களின் அதிகாரத்திலும் மலையாள ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கையின் கீழும், பல்வேறு அரசியல் போராட்டங்களின் களமாகவும் இப்பகுதி திகழ்ந்துள்ளது. இயேசுவின் சீடரான தோமா, பிரான்சிஸ் சேவியர், வாஸ்கோடகாமா, இஸ்லாமியரான முகிலன், அய்யா வைகுண்டர், நாராயண குரு, டிலனாய், றிங்கல் தௌபே, புத்தசமயம், சமணசமயம், விவேகானந்தர் தவம், பீர்முகமது அப்பா ஞானி இன்னும் எத்தனையோ சிந்தனைகள் முட்டி மோதிநிற்கும் களம் இது. எழுத்தாளர்களிடம் இந்த வேறுபாடுகள் மிகப் பெரியதாக விளங்குகின்றன.
ஒரே சாதிசார்ந்த, ஒரே மதம்சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசனும் ஐசக் அருமைராசனும். ஆனால் எழுத்தில் வேறுபடுகிறார்கள். ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த ஐசக் அருமைராசனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள். இருவருமே புன்னைக் காடு பற்றி எழுதி இருந்தாலும் இரண்டுமே வேறுபட்டவை. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் சாதிசார்ந்தும் தோப்பில் மீரானின் சாய்வு நாற்காலி சமயம்சார்ந்தும் வெளிப்படுகின்றன. மீனவர் சமுதாயத்திலிருந்தும் ஆதிவாசிகள் சமூகத்திலிருந்தும் காத்திரமான படைப்புகள் இன்னும் வெளிப்படவில்லை. தமிழவன், லஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் எழுத்துக்களும் ஏனைய குமரிமாவட்ட எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பவை. புனைகதை எழுத்துக்களைவிடக் கவிதைகளில் இந்த வேறுபாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ‘நாஞ்சில் இலக்கியமாக’ எப்படிப் பொதுவாக்க முடியும்?
இந்த உண்மையை உணர்ந்த நாஞ்சில் நாடன் கூறுகிறார், “பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையையும் நீல. பத்மநாபனின் தலைமுறைகளையும் ஹெப்சிபா ஜேசுதானின் புத்தம் வீட்டையும் தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களையும் ஜெயமோகனின் ரப்பரையும் ஐசக் அருமைராசனின் கீறல்களையும் எனது நாவல்களையும் நாஞ்சில் வட்டார வழக்கு நாவல்கள் என்கிறார்கள். இது எவ்வளவு நகைப்புக்குரிய பகுப்பு. இவர்கள் எழுதுவது எல்லாம் ஒரு மொழியா? ஒரு வட்டாரமா? எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மொழி, வாழ்க்கை, பண்பாடுகள்” (‘எனது நாவல்களும் வட்டார வழக்கும்’ கட்டுரையிலிருந்து.)
ஒரு வட்டாரம் அதற்குள்ளேயே சுழலும்போது மதம் அல்லது சாதியின் மேட்டிமைப் பண்பால் இறுகிவிடக்கூடிய அபாயம் உண்டு. பிறசமூகங்களுடன் கலப்பை ஏற்படுத்தும்போது அந்த வட்டாரம் படைப்பிற்குள் விரிவடைந்து இன்னொரு பரிமாணம் பெறுகிறது. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவல் இதற்கு உதாரணம். அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்கள் நாவலில் வரும் நல்ல பெருமாள் உதாரணம். ஒரு வட்டாரம் எனப் பகுத்த எல்லைக்கு உள்ளேயும் நமக்குத் தெரியாத வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு வாஸவேச்வரம் கிருத்திகாவும் பா. விசாலமும் அழகிய நாயகி அம்மையாரும் சாட்சிகள்.
பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் குழந்தைக்குப் புலையர் சாதி தேவி பால்கொடுப்பது, இரவில் ஓலைச்சூட்டுப் பந்தம் கொடுக்க இஸ்லாமியரிடையே குடியமர்த்தப்பட்ட இந்து அப்பா, ஆங்கிலப் பள்ளியை சரஸ்வதி கோயில் என்று கூறிக் கொளுத்த மறுக்கும் தாழ்த்தப்பட்ட கறுப்பன், முன்சிறை சின்னான் ஆசான் போன்றவர் மாணிகளின் மருத்துவப் பணிகளை விதந்தோதுவது போன்ற சித்தரிப்புகள் மீரானைப் பெருந்தன்மை மிக்க படைப்பாளியாக்குகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பார்த்துப் படிக்க வேண்டிய மிகப் பெரிய முன்னுதாரணத்தை மிகப் பிந்தி இலக்கிய உலகில் வெளிப்பட்ட இந்த மூத்த எழுத்தாளர் தருகிறார்.
விளவங்கோடு வட்டாரத்தில் ஜோசப்பிலிப், அசோகஜெயன், ஜெயடேவி, ஜே. ஆர். வி. எட்வர்ட், அதங்கோடு கலா போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் எழுத்துக்களில் கேரள எல்லைப் பகுதியில் அரிசி கடத்துபவர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், வயோதிகக் காலத்திலும் பனையேறிப் பிழைப்பவர்கள், கேரளா சென்று பிழைக்கும் கட்டடத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் போன்றவர்களின் அவலங்கள் வெளிப்படுகின்றன. குமரிமாவட்டத்தின் இதரப் பகுதி எழுத்தாளர்களிடமிருந்து தனித்தும் வித்தியாசப்பட்டும் எழுதும் இவர்கள் ஒவ்வொரு தொகுப்புடன் அடங்கிப்போனதால் தாய்த் தமிழகம் இவர்களை அறியும் வாய்ப்பு இல்லாமற்போய்விட்டது.
விளவங்கோடு வட்டாரத்தில் தற்போது குறும்பனை பெர்லின், புத்தன்துறை தாமஸ் போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களிடையே தோன்றி எழுதுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைச் சற்றுப் பொறுத்திருந்து மதிப்பிடலாம். அதுவரைக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி நிலைநிறுத்துவோம். ஆதிவாசிச் சமூகம் இவர்களைப் போல் தனக்குள்ளிருந்து ஒரு எழுத்தாளனை நாளை தரலாம். சுரேஷ்சாமியார் காணி என்ற பழங்குடி பாரதி போன்ற காணி மக்களின் முன்னேற்றத் தொண்டர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது. இந்த வித்தியாசங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ‘குமரி மண்ணின் எழுத்து மரபு’ எனக் கூறலாமே தவிர, ‘நாஞ்சில்’ என்பதன் கீழாகவோ அதற்கெதிராகத் தக்கலையில் சிலர் ‘வேணாடு’ என்று நிலைநிறுத்துவதுபோலவோ செயல்பட்டால் அவை எல்லாம் சாதியை நிலைநிறுத்தும் மரபுகளாக மாறிவிடும்.
விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, “வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி” என்றது நினைவுக்குவருகிறது.
‘ஆனந்த விகட’னில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளக்கமளிக்க பெருமாளைத் தொடர்புகொண்டதாகவும் அவர் அளித்த தமிழக வரலாற்று ஆவணங்களைக் கொண்டு, தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக நிற்க முடிந்தது எனவும் நாவலாசிரியர் நாஞ்சில் நாடன் நினைவுகூர்ந்ததோடு மண்டிகர் வாழ்க் கையை அற்புதமாக அவர் பதிவு செய்துள்ள விதத்தையும் பாராட்டினார்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார், இதழ் நடத்தியிருக்கிறார், பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன் “நான் சுமார் நாற்பது வருடங்களாகச் சுக்குப்பால் குடித்து வருகிறேன் குடிக்கும் ஒவ்வொரு முறையும் நாக்கு பொத்ததுண்டு. ஆனால் ராஜமார்த்தாண்டனோடு பலமுறை இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டபோது வார்த்தைகளில் சூடேறி நட்புறவு பொத்ததில்லை என்று கூறினார்.
பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருக்குக் குறிப்பறிந்து உதவி செய்ய ஒரு செட்டியார் நண்பர் எப்போதும் உடனிருப்பார் என்று வ.ரா. தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே சு.ரா.விற்கு நண்பராக எம்.எஸ். இருந்தார் என வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாள் கூறினார். சு.ரா. வீட்டில் நிகழும் இலக்கிய விவாதங்களில் எம்.எஸ். இருப்பார். ஆண்டுகள் குறித்தோ ஆசிரியர் பெயர் குறித்தோ சந்தேகம் வரும்போது எம்.எஸ். பக்கம் சு.ரா. திரும்புவார். அதற்குரிய பதிலை மட்டும் ஒரு சில சொற்களில் அவர் கூறுவார். அளவாகவே பேசுவார். உணவிலும் கட்டுப்பாடு உண்டு. தமது அடையாளம் சு.ரா.வின் நண்பர் என்றிருக்க வேண்டும் எனக் கருதுவார். காகங்கள் முதல் கூட்டத்தின் முடிவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நாஞ்சில் நாடன் நாவல் குறித்த தமது விமரிசனக் கட்டுரையைப் படித்தார். நாஞ்சில் நாடன் அவரைக் குறிப்பிடும்போது ‘நோய்களை அண்டவிடாதவர்’ என்பார். ‘காலச்சுவடு’ முதல் இதழின் உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘ஒரு மாதிரி இதழ்’ தயாரித்து அளித்தார். செயல் திறன் மிக்கவர் என்று அ.கா. பெருமாள் தமது பாராட்டுரையை நிறைவுசெய்தார்.
நாஞ்சில் நாடன் | நடுநிலைச் செம்மல் விருது |
சென்னை சங்கமம்
தமிழ் இயல் கருத்தரங்கம்
சொற்பந்தல்களைத் தாண்டி ஓர் அரங்கம்
பழ. அதியமான்
‘நாவலின் எதிர்காலம்’ நாஞ்சில் நாடனின் கையில் இருந்தது. தமிழ் நாவலின் வரலாற்றில் தமிழ் பேசும் மற்ற நாடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்கத் தமிழ் நாவல் வரலாற்றை மறுபடியும் பேசும்படியாயிற்று. ஒரு நாவல் எழுதிப் புகழ் பெற்றவர்கள் உள்பட சக நாவலாசிரியர்களை வஞ்சனையில்லாமல் புகழ்ந்தார். நாட்டில் நடைபெறும் சமூகச் செயல்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஓர் எழுத்தாளனால் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்டார். நொய்டாவில் நடந்த உடல் உறுப்புத் திருட்டு, பாலியல் வன்முறையாகத் திரிக்கப்படுவதாகப் பத்திரிகைகள்மீது குற்றம்சாட்டினார். இன்று நொய்டாவில் நடந்தது நாளை ஏன் சென்னை, திருப்பூரில் நடக்காது என்று கோபமும் வருத்தமும்கூடிய தாங்கொணாத் துயரத்தோடு வினவினார். வலி நிரம்பிய வாழ்க்கையின் வேதனையைப் பற்றிப் பேசாமல் நம் கதைகள் தொடர்ந்து காப்பி ஆற்றிக்கொண்டிருக்க இயலாது என்று முடித்தார் தீர்க்கமாக. பிரபஞ்சனின் தொனியிலிருந்து மாறுபடாததாகவே நாஞ்சில் நாடனின் குரல் அன்று ஒலித்தது.
வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
பெருமாள்முருகன்
சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளனுக்குப் பலவிதத் தடைகள் உள்ளன. சுதந்திரமாகப் படைப்பை உருவாக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்க எழுத்துக்கள்போல ஒரு ஊரில் ஒரு பண்ணையார், அவனிடம் ஒரு அடிமை என்பதாகச் சாதிப் பெயர்களை அடையாளப்படுத்தாமல் எழுதினால் பிரச்சினையில்லை சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும்போது மனம் தன்னை அறியாமலே சில எச்சரிக்கைகளுக்கு ஆளாகிவிடுகிறது. ஆகவே நிலவுடைமைகொண்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பற்றி எழுதப்பட்டவையான வட்டார இலக்கியங்கள் தமக்கெனச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டன என்று சொல்லலாம்.
சாதிக்கு மேன்மைதரும் வகையாக எழுதுவது அல்லது கீழ்மைதரும் விசயங்களைத் தவிர்த்துவிடுவது என்னும் வரையறை இவற்றிற்குள் செயல்பட்டுள்ளது. ஒரு சாதியின் ஒரு குடும்பத்துப் பிரச்சினைகளை எழுதிவிட்டால் போதும். ஒரு சாதிக்குள்ளேயே நிகழும் பங்காளித் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றை எழுதுவது என்பதான வரையறைகள் காணப்படுகின்றன. ஆர். சண்முகசுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பலரது நாவல்களை அவ்வாறு காணலாம்.
சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கனல் – 4
4.1.97 சனிக்கிழமை
நேர் நிரை – சிறுகதை. நாஞ்சில் நாடன். ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர் 96.
கூழைக் கொம்புப் பசு. காளையங்கன்றுகள். கடைசி ஈத்து. (பிரசவம். மிருகங்கள் சம்பந்தப்பட்டு). கிடாரியா கிடேரியா? ஆனை அறுகம் புல். பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. தொழுப்பிறப்பு. பின் ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குப் பூறி லாடம் அடிக்க வேண்டும். காலால் பசு ஒற்ற ஆரம்பித்தது.
நல்ல தமிழ். பின்னணியையும் வாழ்க்கை முறையையும் கண் முன்னே நிறுத்த உதவும் மொழி.
பால்ராஜ் தன் சகோதரி பேரின்பத்திற்குத் தன் வீட்டுப் பசுங்கன்றைத் தர விரும்பி அவள் வீட்டுக்குச் செல்கிறான். கதையின் முக்கால் பங்கு இந்த விஷயத்தை நுட்பத்துடன் சொல்கிறது. அடுத்தது கங்காதரனைப் பற்றியது. சுகவாசி, மண்ணோடு சம்பந்தமில்லாமல், உழைப்பில் ஈடுபடாமல் இருக்கிறான். கங்காதரன் ஓட்டலில் உணவருந்தும்போது பால்ராஜ் வந்து அவன் மேஜைமீது உட்கார்ந்து கொள்கிறான். கங்காதரன் இடம் மாறுகிறான். கங்காதரனிடம் உழைப்பும் இல்லை; காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. பால்ராஜின் வாழ்க்கை, பேரின்பத்தின் வாழ்க்கை விரும்பும்படி இருக்கிறது.
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
குமாரசெல்வாவின் கட்டுரை (காலச்சுவடு, மார்ச் 2011) தொடர்பான எனது கருத்துகள்:
ஒட்டுமொத்த குமரிமாவட்டத்தையும் நாஞ்சில்நாடாகக் கருதும் மயக்கம் பெரும்பான்மையான குமரி மக்களிடமும் இருக்கிறது. ‘நாஞ்சில் நாடு’ என்பது ஒட்டுமொத்த குமரி மண்ணையும் குறிப்பதல்ல என்பது அநேகருக்குத் தெரியாது. நாகர்கோவில் – கோவை ரயிலுக்கு ‘நாஞ்சில் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென எழுந்த கோரிக்கை இந்த அறியாமையின் விளைவே.
குமரி மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள கிழக்கு x மேற்கு என்ற எதிர்வு, நாஞ்சில் நாடு x விளவங்கோடு எதிர்வின் நீட்சியாகவே தெரிகிறது. இது இப்போது மறைந்துவருகிறது என்றாலும் அதன் சுவடுகள் பலரது மனங்களிலும் இன்னும் அழியாமல் உள்ளன.
‘விளவங்கோட்டான்’ என்னும் பதத்தைப் ‘பண்பாடற்றவன்’ என்னும் பொருளில் பிரயோகிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பிரயோகிப்பவர்களில் பெரும்பாலோரும் கற்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். பிடிவாதம், மனஉறுதி, பின்வாங்காமை இவை விளவங் கோட்டுச் சுபாவங்களாம். குமரி மாவட்ட விடுதலைப் போரில் விளவங்கோட்டுப் பிற்பட்ட வகுப்பினர்கள் காட்டிய தீவிரமும் உறுதியும் அவர்களுக்கு இந்த நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அது கிண்டல் கேலியாக எதிர்மறைப் பொருளில் மாறிய கதையின் பின்னணி தெரியவில்லை. ‘விளவங்கோட்டான்’ என்பது ஒட்டுமொத்த விளவங்கோட்டு மக்களையும் குறிப்பதில்லை. விளவங்கோட்டு உயர்சாதியினர் இதற்குள் அடங்கமாட்டார்கள்.
நாஞ்சில்நாட்டு மக்கள் நெல்லையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள். விளவங்கோட்டு மக்களோ திருவனந்தபுரம் மாவட்டத்துடன் தொடர்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவர்கள். கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணையப் போராடினாலும் கேரளத்து மக்களுடன் தொடர்ந்து பரிமாற்றமும் மணஉறவும் செய்துவருபவர்கள் விளவங்கோட்டு மக்கள்.
குமாரசெல்வா கட்டுரை ஒரு ஆழமான ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி மட்டுமே. நுட்பமாய் ஆய்ந்து பட்டியலிட எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.
எதிர்வினை
தமிழர் பண்பாடு என்னும் கற்பிதம்
மதிகண்ணன்
குமரி மரபு, நாஞ்சில் மரபாக மாறிப்போனதாகக் கூறவரும் கட்டுரையில் ‘உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது’ (மத்தேயு 26:73) என்னும் விவிலியத்தின் வரிகளை முன்னொட்டாகக்கொண்டு தொடங்குகிறார் குமார செல்வா. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் லயோலோ கல்லூரியின் தொடர்பு மற்றும் பண்பாட்டியல் துறையால் சு. சமுத்திரத்தின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பின் நவீனத்துவக் கருத்தரங்கில் மலையாளம் கலந்த தன் பேச்சுமொழியில் அற்புதமாகப் படைப்பாளராகத் தான் பரிணாமப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார் குமார செல்வா. அந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கவனிக்கவைத்த மிகச் சிறந்த பேச்சுகளில் குமார செல்வாவினுடையதும் ஒன்று. அந்த உரையினூடே தான் பள்ளிக் கல்வி முடிக்கும்வரை பாடத்திட்டத்திற்கு வெளியே தனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே நூல் பைபிள் மட்டுமே எனக் குறிப்பிட்டார் அவர். இளமைக் காலந்தொட்டு தொடர்ந்த பாதிப்பின் வழிப்பட்டதாகவே இந்தக் கட்டுரையின் முன்னொட்டை என்னால் பார்க்க முடிகிறது. அது அவரது நம்பிக்கை / உள்ளுணர்வு / ஊறிப்போன அகம் சார்ந்த விஷயமன்றி வேறல்ல. பழையதொரு (புனித / பாவ) நூலின் வரிகள் அதற்கு எதிர்மறைப் பொருள் தரும் படைப்பிற்கோ கட்டுரைக்கோ முன்னொட்டாக இருக்குமாயின் அதுவும்கூட எழுத்தாளரின் அகம் சார்ந்த விஷயம்தான். இதுவும் பண்பாட்டின் அங்கம்தான் எனில் பண்பாடென்பது மொழி சார்ந்ததா? மதம் சார்ந்ததா?
வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதக்கூடிய பலரையும் நாஞ்சில் இலக்கியவாதிகள் என்பது தவறு. சிறு பகுதியிலேயே இத்தனை மொழி, வாழ்க்கை, பண்பாடுகள் எனில் ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை, ஒரே பண்பாடு என்பது சாத்தியமா?
a
Nakkeeran Arulkumar Interview with Naanjil Naadan on the eve of his Sahitya Akademi Award

தினமும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன். மாலை வேலை முடிந்ததும் படிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலாக படித்துவிடுவேன். அந்த வாசிப்புதான் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சைப்படுத்தும் அம்மா சாப்பாடு, ஊர் கோவில், ஊர் நண்பர்களை மறக்க வைத்தது.

34 comments:
//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//
//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //
எஸ்.ரா. Yes.Rocks.
எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.
எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂
//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//
அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.
இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.
படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))
நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி
அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பிளீஸ் ஹெல் மீ…
கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,
அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…
முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…
நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?
பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//
அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂
அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.
அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.
அனுஜன்யா
முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது
சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .
நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க
இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,
////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////
என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?
அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!
பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!
வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது
இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….
வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு
வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்
அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.
அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
http://www.kaveriganesh.blogspot.com
நல்ல பகிர்வுக்கு நன்றி
சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.
எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.
அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.
விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை
உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …
எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.
ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.
அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.
– ராஜசுந்தரராஜன்
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.
அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.
எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.
//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்