Archive
கல்கி வளர்த்த சிரிப்பலைகள்
சுஜாதா
சிரிப்பது சுலபம். ஆனால் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். அவ்வளவு சீரியசான விஷயம் நகைச்சவை. நகைச்சுவை என்றால் என்ன? ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து (Conflict), அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை – பரவசத்தைக் கொடுப்பது. (அப்பரவசம் திடீரென்று ஒரு Explosion போல் வரவேண்டும்) முடிந்தால், நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது. மிக உயர்ந்த நகைச்சுவை, நம் சிந்தனையை – சமூகத்தை உயர்த்தும் நோக்கிலே அமைய வேண்டும். இன்னொரு விஷயம் – இருவேறு கருத்துக்களையும் தனித்தனியா பார்த்தால் நகைச்சுவை இருக்காது, இருக்கக்கூடாது என்றே சொல்லாம்.
தமிழில் எல்லாமே சங்க காலத்தில்தான் துவங்குகின்றன என்று சொல்கிறார்கள். பிசிராந்தையார் எழுதின ஒரு பழைய சங்க காலப் பாடலைப் பார்ப்போம் :
”யாண்டு பலவாக நரை இல ஆகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்”
இவை முதல் வரிகள். காரணம் என்ன? ”ராஜா நன்றாகப் பரிபாலனம் செய்ததால் குடிமக்கள் எல்லாரும் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். அதனால் கவலை இல்லை… நரையும் இல்லை” என்பது பழைய பாடலின் கருத்து. மேற்சொன்ன வரிகளுடன் இன்னும் இரண்டு வரி சேர்க்கிறார் இன்றைய கவிஞர் –
”ஆண்டு தவறாமல் வரி கட்டுகிறேன்
மீண்டும் மீண்டும் டை அடித்துக்கொள்கிறேன்!”
இதிலுள்ள முரண்பாடுகள் என்ன? சங்க காலம் – தற்காலம், சங்க காலத் தமிழ் – இன்றையத் தமிழ். ஆதரிச உலகம் (புறநானூற்றுப் பாடல்படி) – யதார்த்த உலகம்.
யோசித்துப் பார்த்தால் இத்தகைய முரண்பாடுகள் எல்லா படைப்பு இலக்கியத்துக்கும் ஆதாரமானவை. ஆர்தர் கோஸ்லர் என்கிற ஆசிரியர் சொல்கிறார். ”The spirit of creation is the spirit of contradiction – it is the break through of appearances towards an unknown reality.”
நல்ல நகைச்சுவை பிறரைச் சிரிக்க வைக்க வேண்டும். இதை இருவிதமாக வகைப்படுத்தலாம். இன்பத்தில் சிரிப்பது. துன்பத்தில் நகைப்பது. உதாரணத்துக்கு ஒரு நாடகக் காட்சி – ஒரு நடிகன் மேடையில் நாற்காலியை நோக்கிப் பேசிக்கொண்டே வருகிறான். ஓரிரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. உட்கார முயலுகையில் யாரோ வேலைக்காரன் நாற்காலியை இழுத்துவிட, அவன் பொத்தென்று விழுகிறான்.
இதையே சற்று மாறுதலாகப் பார்க்கலாம். மேடையில் உட்கார நாற்காலி ஏதுமே கிடையாது. நடிகன் ஆழ்ந்த சிந்தனையுடன் நாற்காலி இருக்கிறதென்று நினைத்து நடந்து செல்கிறான். தன்னிச்சையாக உட்கார வருகிறான். சட்டென்று ஒருத்தர் அவனுக்குக் கீழ் ஒரு நாற்காலி போடுகிறார். இப்போதும் சிரிப்பு வருகிறது. (இது போன்ற காட்சிகளை சார்லி சாப்ளின் படத்தில் பார்க்கலாம்.)
இரண்டாம் நகைச்சுவை சற்று உயர்ந்தது. முதலாவது பிறர் துன்பத்தில் மகிழ்வது. (துச்சாதனன் விழுந்ததைக் கண்டு திரெளபதி சிரித்ததால்தான் ஒரு பாரதப் போரே நிகழ்ந்திருக்கிறது). இத்தகைய தரம் குறைந்த நகைச்சுவையில், வாய் பேசாமலிருப்போர், காது கேளாதவர் இவர்களைப் பின்னி வரும் ‘ஜோக்’குகளைச் சேர்க்கலாம்.
பல சினிமாக்களில் பார்த்திருக்கக் கூடும், கவுண்டமணி – செந்தில் ஹாஸ்யங்கள். கண்டபடி திட்டுவார்கள், உதைத்துக் கொள்வார்கள், Gut level jokes எனக் குறிப்பிடுவார்கள் ஆங்கிலத்தில். நியாயமாக, இவைகளைக் கண்டு நாம் சிரிக்கக்கூடாது. ஆனாலும் சிரிப்பு வருகிறது. அடி-உதை வாங்குகிற காட்சிகளைப் பார்க்கும்போது. ஏன்? எதனால்? மன வல்லுநர்கள் ஒரு காரணம் சொல்லுகிறார்கள். நம் எல்லாருக்கும் உள்ளுக்குள் ஓர் ஆதிமனித இச்சை புதைந்து இருக்கிறது. Aggression. அந்த இச்சைக்கு ஒரு வடிகாலாக – அதுவும் எந்தவிதமான சமூகப் பொறுப்போ, உபத்திரவமோ இல்லாது – இது அமைகிறது. நமது வாழ்க்கைப் போராட்டத்தில் பலவிதமான கோபங்கள், ஏக்கங்கள், அவமானங்கள் உள்ளன. அவைகளுக்கு வடிகாலாக, யாரையாவது அதட்ட, அடிக்க, அவமானப்படுத்த வேண்டுமென்கிற ஆசை ஒன்று வருகிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் இது போன்ற காட்சிகளில் சிரிப்பது (துன்பத்தைக் கண்டு சிரிப்பது.)
சர்க்கஸ் ப·பூனை உதாரணமாகப் பார்க்கலாம். அவனை மற்றொருவன் அடி அடியென்று அடிப்பான். உதைத்துப் பின்னிவிடுவான். (அசல் வாழ்க்கையில் நாம் யாரையாவது உதைத்தால் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்!) நம்மையுமறியாமல் சிரிப்பதும் இத்தகைய உள் இச்சையின் வெளிப்பாடே.
மிருகங்களை மனிதர்கள் மாதிரி நடக்க வைப்பது பேச வைப்பது ஒரு வித நகைச்சவை. Human Metaphor என்று சொல்லுகிறார்கள். Charles Schulez என்ற எழுத்தாளர் Snoopy என்ற ஒரு நாய் வளர்த்து வந்தார். அது விநோதமான குணங்கள் சில உடையது. அதற்குச் சிலரைப் பிடிக்கும்- வேறு சிலரைக் கண்டால் பிடிக்காது. ‘லுஸி’ என்கிற பெண்ணைப் பிடிக்குமாம். ”எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டால், வாலை விஸ் விஸ் என்று தீவிரமாக ஆட்டுமாம். ”என்னை எவ்வளவு பிடிக்கும்?” இப்போது வாலின் நுனியை மட்டும் ஆட்டுமாம்!
வேறொரு வகை ஹாஸ்யமும் இருக்கிறது. நன்கு யோசித்தால் புலப்படும். மூன்று வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள் – (1) யதார்த்தமான ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது… திடீரென்று கதாநாயகனின் வேட்டி அவிழ்கிறது. (2) கல்லூரியில் வெகு சீரியஸாகப் புரொபஸர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் – அறைக்கு வெளியேயிருந்து நாய் ஒன்று எட்டிப் பார்க்கிறது. (டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திருக்கக்கூடும். திடீரென்று மைதானத்தில் குறுக்கே நாய் ஓடும்) (3.) ஓர் அபாரமான கோரஸ் மியூசிக்… மிகப் பெரிய வயலினிஸ்ட் ஸிம்பனி ஆர்க்கெஸ்டிரா நிகழ்த்துகிறார்… ரசிகர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள். அப்போது வயலின் ஒன்று ஒருத்தரிடமிருந்து நழுவிக் கீழே விழுந்து விடுகிறது. (இத்தகைய காட்சி ஹாஸ்டல் சங்கீதக் கச்சேரியின்போது, கடம் தூக்கிப் போட்டு ‘ஆவர்த்தனம்’ செய்கையில் உடைந்ததைப் பார்த்ததுண்டு.)
மேலே சொன்ன மூன்றிலுமே, நமக்குத் திடீரென்று சிரிப்பு கொப்புளிக்கிறது – ஒரு விதக் குற்ற உணர்வையும் மீறி. மூன்று காட்சியிலுமே ஒரு ஒற்றுமையைக் காணலாம். ரொம்பத் தீவிரமான விஷயத்திலிருந்து, திடீரென்று மிக அற்பமான விஷயத்துக்கு ‘இடம் பெயர்தல்’ நிகழ்கிறது. ”Suddenly jerked into another plane.” ஓர் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து சட்டென்று விடுபடும்போது தன்னிச்சை¨யாகப் புன்னகை வருகிறது. உன்னதமான விஷயமும், அபத்தமான விஷயமும் முரண்படும்போது ஏற்படும் சிரிப்பு.
A GUIDE TO BORING என்ற புஸ்தகம் – ‘போர்’ அடிக்காத புஸ்தகமொன்று இருக்கிறது. ”என் மச்சினிக்கு 1950ல் கல்யாணம் ஆயிற்று” என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து ”இருக்காதே! 50லே நான் லண்டனில் இருந்தேனே? ஒரு வேளை 49லா?” – இதேபோல் சொல்லிக் கொண்டே போக வேண்டும். கேட்கிறவருக்கு பயங்கரமான அலுப்பு வரும் அளவுக்கு! அவர் கொட்டாவி விட்டபடி பறக்கிற ஈயன்றைக் கவனித்துக் கொண்டிருப்பார். இப்படியே விஷயத்துக்கு வராமல் இழுப்பு இழுத்துக் கொண்டே போய் – கடைசியில் சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டு வருவார்கள்.
பயிலரங்கத்தில் வந்த மாணவன் கொண்டு வந்த நகைச்சுவை இதற்கு ஒரு சரியான உதாரணம் –
”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன், எனக்குத் தெரியாது!”
”இப்படியே போங்க…. முதல் தெருவை விட்டுடுங்க… இரண்டாவது தெருவை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க… முதல் சந்தை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது…. முதல் அறையை விட்டுடுங்க… இரண்டாவது அறையை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… அப்புறம் ஒரு அலமாரி இருக்கும்… முதல் ஷெல்பை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க! நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும்!
”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். எனக்குத் தெரியாது!”
இது typical student humour. சற்று extreme form என்று வைத்துக் கொண்டாலும் இழுத்துக் கொண்டு போகிற விதத்தில், என்ன சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் சிரிப்பு வருகிறது.
வாழ்க்கையில் நேரிடையாக எத்தனையோ பார்க்கிறோம். குட்டிப் புகைப்படம் மாதிரி நிறைய விஷயங்கள் பதிகின்றன. ஒரு நாள் சாலையோடு போகிற போது, சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளி நாடக வேஷத்துடன் மூன்று குழந்தைகள் வருவதைப் பார்த்தேன். வேடம் கலையாமலே இருந்தது. மூன்று குழந்தைகளுக்குமே பாரதியார் வேஷம்!
வீட்டில் ஜன்னல் வழியே பார்த்தபோது, மிக மிகச் சின்ன கைக் குழந்தை… பிறந்து மூன்று நாள்தான் ஆகியிருக்கும்… தகப்பனார், உரக்கக் குழந்தையை ”Keep quiet” என்று அதட்டுவது காதில் விழுந்தது. அந்தக் குழந்தைக்கு அழுகையைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது! அதை ஆங்கிலத்தில் அதட்டும் அப்பாவின் பிம்பம் மனத்தில் பதிகிறதல்லவா?
சினிமா உலகில் எனக்கு அனுபவமுண்டு. ஹீரோ தனியாக உட்கார்ந்து இருப்பார். ”ஜெயலலிதா கைது”, ”நரசிம்மராவ் ராஜினாமா” போன்ற எந்த முக்கிய செய்தியும் அவரைப் பாதிக்காது. தனி உலகில் உலவிக் கொண்டிருப்பார். அவர் ‘Mood’ மாறிவிடக்கூடாது என்பதில் பலர் ஜாக்கிரதையாயிருப்பார்கள்… மேலும் சினிமா உலகத்துக்கென்று சில தனிச் சொல்லடைவுகள்… ”ஜெய்ப்பூரில் கட்டாயம் ஒரு ஸீன் தேவை”, ”ரெண்டு கானாப் பாட்டு….. ஒன்று இன்டர்வெல்லுக்கு முன்னாடி… இன்னொன்று பின்னாடி”, ”சண்டை காட்சியில் அவசியம் மழை வேணும்!” – இப்படியாகப் பலவித ‘மூட’ நம்பிக்கைகளையும் கவனித்து இருக்கிறேன்… கதைகளில் பயன்படுத்தியும் இருக்கிறேன்.
இறுதியாக ஓரிரு சொந்த அனுபவங்கள். நான் ஒரு நாய் வளர்த்து வந்தேன். கால்நடை மருத்துவரிடம் அதைக் கூட்டிக்கொண்டு போக நேர்ந்தது. அப்போது அந்த டாக்டருக்கு ஒரு ‘போன்’ வந்தது… அந்த உரையாடல்…
”என்னுடைய நாய் பேனாவை விழுங்கிவிட்டது….”
”சரி… நான் அங்கே வரேன் கொஞ்ச நேரத்திலே.”
”அதுவரை என்ன பண்ணுவது?”
”பென்சிலால் எழுதிட்டிருங்க!”
ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, தனித்தனியே வாக்கியங்களைப் படிக்கும்போது ஹாஸ்யம் இல்லை. இணைத்துப் பார்க்கும்போது நகைச்சுவை ஏற்படுகிறது.
நகைச்சுவை எழுத விரும்புகிறவர்களுக்கு முத்தாய்ப்பாக ஐந்தே யோசனைகள் – 1. நிறையப் படியுங்கள். கல்கி, தேவன், எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் பி.ஜி. வுட் ஹவுஸ் 2. இயல்பாக, ஓரளவு மிகைப்படுத்தி எழுதுங்கள். ஆனால் மிகைப்படுத்தலைக் குறைக்க முயலுங்கள். 3. நேரில் பார்த்ததை – நீங்கள் கண்ட இடங்கள், ஊர்கள் – அதன் தன்மையைச் சொந்த அனுபவத்துடன் கலந்து எழுதுங்கள் 4. இங்கு நிலவுகின்ற கட்டுப்பாடுகள் மிக்க சுதந்திரத்துக்கு உட்பட்டு எழுதுங்கள்- 5. அடிமட்ட, தரம் குறைந்த நகைச்சுவையை அடியோடு தவிர்க்கப் பாருங்கள்.
உங்கள் முயற்சி வெல்க!
Recent Comments