Archive

Archive for the ‘Translations’ Category

Annapurna Devi, Acclaimed but Reclusive Indian Musician

December 28, 2021 3 comments

சித்தார்மேதை ரவிசங்கரின் முதல் மனைவியான அன்னபூர்ணாதேவி காலமானதாக தொலைகாட்சியில் செய்திபடித்தேன். அவர்பற்றின ஒரு கட்டுரையை இங்கு பகிர்கிறேன் கட்டுரை க்ருஷாங்கினி ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்தது. . நீண்டகட்டுரை சுணங்காமல் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

https://www.mansworldindia.com/people/annapurna-devi-the-tragedy-and-triumph-of-ravi-shankars-first-wife/

அன்னபூர்ணாதேவி

Annapurna Devi an undated photo. She played the surbahar, often described as a bass sitar, and the relatively few people who heard her before she stopped performing early in her career were amazed by her mastery of it.

இசை உலகில் பலரும் பலதும் பேசுவது வழக்கம்தான். அப்படிப்பட்ட இசை உலகின் வதந்தியாகிப் போன அன்னபூர்ணாதேவியைப் பற்றி, அதாவது அக்காவைப் பற்றி நான் இப்போது சொல்லப்போகிறேன். அவரை நான் முதன் முதலாக சந்தித்த போது, எனக்குத் தோன்றியது எளியோரைத்தான் தாக்கும் வலிமை என்று. அன்னபூர்ணா தேவி அலாவுதீன் அவர்களின் பெண். மனத்துக்குகந்த பெண். இசையின் பால் எனக்கு ஈடுபாடு உண்டான நாள் முதல் இவரைப் பற்றி எத்தனை எத்தனை இசைஞானிகள் மூலம் எத்தனை எத்தனை ஆச்சிரியமான விவாதங்களை நான் கேட்டிருக்கிறேன். இசை உலகில் குருவுக்கும் குருவானர் அன்னபூர்ணா தேவி. எந்த பொது வெளியிலும் தன் இசை நிகழ்ச்சிகளைக் கொடுக்காதவர். எவரின் முன்பாகவும் சிதார் வாசித்திராதவர். அவரை சந்திப்பதும் கூட மழைநாளின் நிலாப்போல அரிதான ஒன்றுதான். அப்பேர்பட்டவர், என்னை சந்தித்தது, மட்டுமல்லாமல் அவரின் மனதிற்கு நெருக்கமான இடமும் எனக்குக் கொடுத்தார் என்றால், அது எவ்வளவு பெரும் பேறு? நான் தவம் எதுவும் செய்யாமலேயெ எனக்குக் கிடைத்தது. இதன் பின்னணியில் குரு அலி அக்பர்கானின் உயர்ந்த பண்பான உள்ளமும், அவருடைய அன்புமே இருக்கிறது. அவரின் அறிமுகம் என்ற வரமும் எனக்கு ஒரு இசை அரங்கில் அன்பு நிறைந்த அவருடைய உள்ளமும் அவரின் தாராளமான மனத்துடன் எனக்குக் கிடைத்தது. பிரசாதம் போல என்று சொல்ல வேண்டும். அந்தக் கதையைப் பிறகு ஒரு நாள் சொல்கிறேன். ஒரு நாள் எனக்கு இனிய அதிர்ச்சி. திடீரென தொலைபேசி மூலம் அலிஅக்பர்கான் அவர்கள் குடும்பத்துடன் பம்பாயிலிருந்து நிரந்தரமாக கல்கத்தா வந்து தங்கி வசிக்கப் போவதென முடிவெடுத்திருப்பதாக தெரிய வந்தது. அவர் கபீர் தெருவில் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் தகவல் அறிந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டதும், உடனே அவர், ‘நாளை காலை வீட்டுக்கு வா’ என்று கூப்பிட்டார்.

அவருடைய வீட்டுக் கதவு எப்போதும் எல்லோருக்காகவும் திறந்தே இருக்கும். நான் அங்கே சென்றடைந்த போது, அந்த காலை நேரத்தில் அவரது வரவேற்பறையில் அவரை நேசிப்பவர்கள், நண்பர்கள், கலைத்துறையினர், என ஒரு பெருங் கூட்டமே காத்திருந்தது. எல்லோருடனும் சிறிது அளவளாவிய பிறகு அவர், அலிஅஹமத்கானையும் என்னையும் வீட்டிற்குள்ளே அழைத்து சென்றுவிட்டார். நாங்கள் உள்ளே நுழைந்த உடனே மிக அழகான மெலிந்த சுறுசுறுப்பான இளம் பெண் வந்து, அலி அஹமத்கானை (இவர் அலாவுதீன் கானின் இசை ஏற்பாட்டாளராகவும் இருந்தார். பஹதூர் கான் சாஹேப்பின் மாமாவும் கூட) வணக்கம் தெரிவித்தார். ‘அன்னபூர்ணா இவர் பெயர் சந்தியா என்று சொல்லி என்ன அறிமுகம் செய்து வைத்தார். ‘அன்னபூர்ணா’ அவரின் வாயிலிருந்து அந்தப் பெயர் கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன். எத்தனை முயற்சி செய்த பிறகும் கூட குணவான்களுக்கே கூட கிட்டியிராத தரிசனம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சொர்க்கத்தில் இருக்கும் தேவதை மனித உருக்கொண்டு எங்கள் கண் முன்னால் காட்சி அளிப்பதைப் போன்ற நடக்க இயலாத ஒரு செயல் நடந்தாற் போல எனக்கு பரவசமாக இருந்தது. அவருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. ஆனால், அவரே எனக்கு கைகூப்பி வனக்கம் சொல்லிவிட்டு’ எத்தனை நல்ல பெண், எத்தனை பாக்யம் எனக்கு’ என்று சொன்னார். எனது போதை அப்போதுதான் தெளிந்தது. பிரமை கலைந்தது. நான் அவருக்கு வணக்கம் சொல்ல முயன்ற போது அவர் உடனேயே எனது இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக் கொண்டு ‘அடாடா! நான் வணங்கும் அளவிற்குப் பெரிய ஆள் இல்லை. என்று தடுத்துவிட்டார். அவர் தன்னை வணங்க யாரையும் அனுமதிப்பதில்லை என்பதையும் நான் பின்பு அறிந்தேன். அருகிலேயே அலிஅக்பர்கானின் மனைவி அண்ணி நின்றிருந்தார். அவருடைய செயல்களும் பண்பு நிறைந்ததாக இருந்தது.

அன்னபூர்ணாதேவி கண்டிப்பு நிறைந்த ஒரு குரு என்றும், கடுமையான குணமுடையவார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவருடைய செயல்கள் அன்பு நிறைந்ததாகவும் புன்னகையுடன் கூடியதாகவும் ஒரு குழந்தையைப் போலவும் இருந்தது. யாராவது கொஞ்சம் சிரிக்கும்படியாகப் பேசினால் போதும், அவர் விழுந்து விழுந்து சிரிப்பார். அன்றொரு நாள் எத்தனை கேளிக்கை மகிழ்ச்சி என்று எப்படி கழிந்து கொண்டிருந்தது தெரியுமா? உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர், வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே ஜர்தா என்று சொல்வதற்கு பதிலாக தர்ஜா என்று சொல்லிவிட்டார். அதைக் கேட்ட அவர் நிறுத்தவே முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். அவரைக் காணும் ஒவ்வொரு நொடியிலும் அதிசயம் முகிழ்ந்து கொண்டே இருக்கும். அவர் அத்தனை இயல்பானவர், எளிமையானவர். அத்தனை இதயத்திற்கு நெருக்கமானவரும் கூட. முதல் சதிப்பின் போதே நாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்கனெவே நீண்ட நாட்களாக சந்தித்து இருக்கிறோம் என்று தோன்றியது. சில தினங்களுக்கு முன்னால்தான் அலாவுதீன் அவர்களுடனான சந்திப்பே நிகழ்ந்தது. அவர் அப்போது ‘அன்னபூர்ணாவை சாமான்யமானவள் என்று எண்ணி விடாதீர்கள். அலி அக்பர் மற்றும் ரவி சங்கருக்கு எந்தவிதத்திலும் துளியும் குறைந்தவள் அல்ல. என்னுடைய த்ருபத் பாணி முழு பாடமும் அன்னபூர்ணா தேவிக்குத்தான் நான் அளித்திருக்கிறேன். அவள் வெளியில் வாசிப்பதில்லை. நடு நிசியில் யாருமற்ற பொழுதில் அவள் தனக்குத்தானே இசையில் மூழ்கி வாசிப்பாள். இசையின் மூலமாக அவள் கடவுளின் இருப்பை அறிந்து கொள்கிறாள்’ என்றார். அவருடைய வார்த்தை, பேச்சு, தாராள குணம் எல்லாமே நட்பு நிறைந்து இருக்கும்.அவர் ‘நான் வெள்ளிக்கிழமைகளில் நமாஸ் படிக்கிறேன். எல்லா மதமுமே இறைவனை அடையச் செய்யும் வழிமுறைகள். நான் மைஹரில் வசிக்கும் போது, வீட்டில் காளிபூஜை, சரஸ்வதி பூஜை எல்லாமே நடக்கும்.’ குருவாகவும் தந்தையாகவும் இருக்கும் அந்த மாமனிதரிடமிருந்து இசையுடன் கூட இது போன்ற வாழ்வியலும் குழந்தையைப் போன்ற கள்ளம் கபடம் அற்ற தன்மையும் அன்னபூர்ணாதேவிக்குக் கிடைத்திருக்கிறது.

அன்று சிரிப்பு கேளிக்கை கலாட்டா அதன் ஓட்டம் என்றிருந்த போது கண்டிப்பாண குருவான அன்னபூர்ணாதேவி, மிக நெருக்கமான ஆத்மார்த்தமானவராகவும் மாறிப்போனார். அந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. சிறுவயதிலிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன், சிறந்த குணம் கொண்ட சாதனை மனிதர்கள் இறைவனின் அருகாமையில் இருப்பவர்கள் என. அவர்களின் குணம் குழந்தையைப் போல இருக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அலாவுதீன் மற்றும் அக்காவைப் பார்த்த போது, எனக்கு இந்த சொற்கள் நினைவுக்கு மேலெழும்பி வந்தன. அக்காவின் சிரிப்பு எனக்கு எல்லாவற்ரையும் விடவும் பிடித்தமானது. அவர் சிரிக்கும் போது எத்தனை அழகாக இருக்கிறார். அவருடைய ஈர்ப்பும், ஈடு இணையற்ற தனித்துவமும் இந்த சிரிப்பினால் மலர்ந்து மிளிர்கிறது.

அன்றைக்கு காலையிலேயே, கலைத் துறையினர், இசை பாடல்கள், நாடகங்கள், இலக்கியம் என எல்லாவறையும் பற்றி உரையாடல் தொடங்கியது. அப்போது இந்த முழு உலகத்திலும் தனித்து, சுதந்திரமாக சிந்திப்பவர் அக்கா என்று நான் உணர்ந்தேன். அப்பாவை பற்றிய பேச்சு எழுந்தவுடன் அவரின் முகமும் கண்களும் மாறிப்போயின. ‘அப்பாதான் எனக்கு கடவுள்’ என்று பூஜையின் போது உச்சரிக்கப்படும் மந்திரச் சொற்கள் போல, உள் கிளம்பும் தவம் போல அந்த சொற்கள் சொல்லப்பட்டன. அந்த உனர்வு என்னை விழிப்புறச் செய்தது.

விடை பெறுவதற்கு முன்னால் நான் அவரிடம்,’ இன்று காலை நேரம் இத்தனை இனிமையாகக் கழியும் என்று நான் வீட்டிலிருந்து கிளம்பும் போது எண்ணிக்கூட பார்க்கவில்லை’ என்று சொன்னேன். உடனேயே அவர்,’ உங்கள் உள்ளம் அழகாக இருக்கிறது, அதனால் எல்லாம் இனிமையாகவும் அழகாகவும் தெரிகிறது’ என்றார். முதல் நாள் சந்திப்பின் போதே அவர் உரையாடும் போது எப்போதும் அடுத்தவர்களின் மீது அக்கறை கொண்டே அவர்களுக்கு முதன்மை இடம் கொடுத்தே பேசுகிறார் என்பதை அறிந்து கொண்டேன். கடவுளை ஒத்த தனது தந்தையிடமிருந்து அவர் இசையுடன் கூடவே ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுப்படதையும் கற்றுக் கொண்டிருக்கிறார். அதுவே மதத்தின் அங்கம் என்றும் நினைத்திருக்கிறார். பணிவும் அடக்கமும் கொண்டவர்களின் உள்ளத்திலேயே இசை லட்சுமி குடி கொண்டிருக்கிறாள்.

இதன் பிறகு நான் அடிக்கடி கபீர் தெருவுக்கு சென்று வந்து கொண்டிருந்தேன். அவர் என்னுடன் நிறைய நேரம் கழித்தார். எந்த ஒரு உரையாடலையும் இசை அரங்கத்தையும் உயிரோட்டமுள்ளதாக ஆக்குவது, மன நெருக்கம்தான். விவாதங்களின் உரையாடல்களில் சாதாரண கருப்பொருட்களையும் கூட தனித்துவத்துடன் அழகான கையாள்பவர் அவர். எனவே அவரின் கருத்துக்கள் கூடுதல் கவனம் பெறும். என்னை அவர், நீங்கள் என்று கூப்பிடுவதை பல தடவை மறுத்திருக்கிறேன். அவர், ‘என்ன செய்வதம்மா? சிறு வயது முதலே யாருடனும் உரையாடும் போது கைகூப்பி வணங்கி, தாங்கள், ஆமாம் ஐயா, என்று சொல்லும்படி அப்பா கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்தப் பழக்கத்தை இன்றும் என்னால் விட முடியவில்லை,’ என்று சொல்வார்.சிரித்துக் கொண்டே, ‘இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படவேண்டாம். பார்த்துக் கொண்டே இருங்கள், ஒரு நாள் நானும் நீங்களும் வா, போ என்று பேசிக்கொள்ளப் போகிறோம்’ என்பார். ஒரு நாள் எனக்கு சிதார் வாசித்துக் காண்பிப்பதாகவும் கூட உறுதி அளித்திருந்தார்.

இத்தனை இசை ஞானமும், இசையை பற்றிய ஆர்வமும் கொண்ட இந்தப் பெண்ணுக்கு இசை கற்பிப்பதைப் பற்றி இவரின் அப்பா எண்ணிக்கூட பார்க்கவில்லை. இதன் காரனம் ஒரு துயர சம்பவம். அப்பா தனது பெரிய பெண்ணுக்கு-ஜஹன்னாரா தேவிக்கு, முழு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் எல்லாவித்தத்திலும் இசை உலகிற்கு அழகாக தயார் செய்தார். இசை ஞானத்தை புகட்டி உருவாக்கினார். பஹதூர் அவர்கள் என்னிடம், ‘ஜஹன்னாராதேவி மராவா பாடும் பொழுது அப்பாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்’ என்று சொல்லி இருக்கிறார். திருமணம் முடிந்து கணவன் வீடு சென்ற அவருக்கு பாடுவதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டது. அப்படி ஒரு குடும்பத்துடன் அவருடைய திருமணம். அவரை கொடுமைப் படுத்தி, அவரை கண்டபடி இழிந்து பேசி என எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தார், ஜஹன்னாராதேவி. ஆனால், எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட அவரால், தனது அப்பாவை ‘காஃபிர்’ என்று சொன்ன போது, அவமானப்படுத்திய போது தாங்க முடியவில்லை.

‘என் அக்கா கையெடுத்துக் கும்பிட்டு தழுதழுத்த குரலில் ‘என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். என் அப்பாவைப் பற்றி ஏதும் சொல்லாதீர்கள்’ என்று அழுது கொண்டே பணிவுடன் கூறினார். இந்தப் பணிவான வேண்டுகோள் அவர்கள் இன்னமும் அதிகமாக கொடுமைப்படுத்தக் காரணமானது. அப்பாவை ‘காஃபிர்’ என்று சொல்ல என்ன காரணம்? அப்பா இந்துக் கடவுளர்களின் உபாசகர்.’ இதைச் சொல்லும் போது அக்காவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. இந்த வேதனையின் அதன் நெருப்பில் ஜஹன்னாராதேவியின் உயிர் அகாலத்தில் எரிந்து போனது.

இது போன்ற ஒரு துயரமான அனுபவம் காரணமாக அப்பா, இசை உலகிற்குள் அக்காவை நுழையவிடவில்லை. ஆனால், அவர் இந்திய இசை உலகில் வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டாக உருவானார். இசை உலகில் முடிசூடா மன்னர்களான இசை மேதைகளான ஹரிப்ரசாத் சௌராஸ்யா, நிகில் பானர்ஜீ போன்ற பிரபல இசை வித்வாங்கள் அக்காவின் சீடர்கள். அது எப்படி?

அப்பா, அண்ணாவை உட்கார்த்தி கற்றுக் கொடுப்பார். அப்போது ஒரு வினாடி கூட சிதாரிலிருந்து கையை எடுக்காமல் பயிற்சி செய்ய வேண்டும் என்று கடுமையாக கட்டளையிட்டுவிட்டு கடைத்தெருவிற்கு செல்லுவார். அவர் அக்காவிற்கு கற்பிக்க மாட்டார். ஆனால், நாள் முழுவதும் அண்ணா, ரவிஷங்கர் மற்றும் எல்லா மாணவர்களுக்கும் பயிற்சிக்கு வாசிப்பதைக் கேட்டு கேட்டு. அவரை அறியாமலே இசை தேவி அவரின் மனத்தினுள் குடி கொண்டு விட்டாள். ஒரு நாள் பயிற்சி செய்து களைத்துவிட்ட அண்ணா, சற்றே இளைப்பாற நிறுத்தி இருக்கிறார். அப்போது அக்கா சிறுமி. அண்ணா நிறுத்திவிட்டத்தைக் கண்டு ‘ அண்ணா, ஏன் நிறுத்தி விட்டிர்கள்?’ என்று அப்பாவைப் போலவே சொல்லி அடுத்த பகுதியை ம, த, நி, ஸா, ம, த, மத, தநி, சாரே, தநி, தநி என்று எந்தத் தவறும் இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். அண்ணா அப்போது தலையைக் குனிந்து கொண்டே இருந்தார். அவர் வாசிப்பதற்கு தயாராக இல்லை. ‘என்ன ஆயிற்று? வாசியுங்கள்’ . அண்ணாவின் கண்களின் பார்வையைக் கண்டு திரும்பிப்பார்த்தால், அங்கே பின்னால் அப்பா அலாவுதீன் நின்று கொண்டிருக்கிறார். அக்கா பயத்தில் சிலையாகிப் போனாள். அப்பா இப்போது கோபப்படப்போகிறார், என்று பயந்து அப்படியே இருந்தார். இறைவனின் கட்டளையைப் போல அவரின் வாயிலிருந்து சொற்கள் புறப்பட்டன, ‘மகளே! நீ தான் சாட்சாத் சரஸ்வதி தேவி. நான் இத்தனை நாட்களாக இதைப் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்’ என்றார்.

அன்றைய நாளிலிருந்து தனது வழ்நாள் முழுவதும் அப்பா தன்னுடைய இசைச் செல்வம் முழுவதையும் அன்னபூர்ணாதேவியிடம் ஒப்படைத்து கொண்டிருந்தார். இந்தியா முழுவதும் சிறந்த மேதைகள் அவரை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் தன் அப்பாவின் இலட்சியத்தை எல்லாவகையிலும் கற்றுக் கொண்டிருந்தார். அப்பாவைப் போலவே, அவரும் உணவு உறக்கம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு பைசா கூட வாங்காமல் நாள் முழுவதும் இசை கற்பித்துக் கொண்டிருந்தார். அவரது லட்சியம் ஒன்றே ஒன்றுதான். அப்பா வாழ்நாள் முழுவதும் நிறைய கஷ்டங்களை சகித்துக் கொண்டும், துரோகங்களை எதிர் கொண்டும், ஏமாற்றங்களைப் பொறுத்துக்கொண்டும் இந்த இசையில் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி இருக்கிறார். அவரின் இசையை அந்தக் கலையை அடுத்த தலைமுறையினருக்கு, இசை மாணவ- மாணவியர்களுக்கு கொடுத்து உயிர்ப்பித்திருக்கச் செய்வதுதான் தனது லட்சியம் என்று கொண்டார். அப்படி கற்பிப்பதன் மூலம் அந்த இசை ஓட்டம் தடைப்படாமல் வெள்ளமென பொங்கிப் பெருகட்டும். இந்தியா முழுவதும் பல இசைப் பிரபலங்கள் அன்னபூர்ணா தேவியை பெரும் தொகையை தருவதாக ஆசைகாட்டி மேடை நிகழ்ச்சி கொடுக்க முயற்சி செய்து தோற்றிருக்கிறார். பம்பாயின் மிகப் பெரிய தொழிலதிபர் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பெரும் தொகையை பரிசாக அளித்து கௌரவப் படுத்துவதாக வேண்டுகோள் விடுத்தார். அன்னபூர்ணாதேவி மறுத்து விட்டார். நான் முதலிலேயே சொன்னேன் அல்லவா, அவர் பின்னிரவில் சிறிது நேரம் மட்டுமே தனக்காக மட்டுமே வாசிப்பார் என்று. கவி காளிதாஸரின் கூற்றுப்படி அந்த இசையை உலகின் உயிர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. கல்கத்தாவின் அலி அக்பர் காலேஜ் ஆஃப் ம்யூசிக்கினுடனான நெருக்கம் பற்றி கூற வேண்டும். அப்போது நான் அவரை குருவாக ஏற்றிருந்தேன். கடுமையாக உழைப்பார். யாராவது ஒருவருக்கு ஒரு ஸ்வரம் கையில் பேசவில்லை எனில் விடமாட்டார். திரும்பவும் வாசி, திரும்பவும் வாசி என்று கடுமையான குரலில் சொல்லுவார். தனித்தனியாக வாசிக்கும் படி கூறும் போது சிலர் பயந்து அப்போது தான் ஸ்ருதி சரியாக சேக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்து ஸ்ருதி சேர்க்க முற்பட்டால், உடனே அக்கா கடுமையான, கூர்மையான குரலில், ‘வாசிக்க சொன்னால், உடனேயே ஸ்ருதி சேர்க்க வேண்டி இருக்கிறதோ? இவ்வளவு நேரம் எப்படி வாசித்துக் கொண்டிருந்தாய்? என்று கோபிப்பார். யாராவது தவறாக கையை தந்தியில் வைப்பதைப் பார்த்துவிட்டால் போதும், ‘நீங்கள் பைரவ் ராகத்தை கொலை செய்கிறீர்கள். நீங்கள் கொலைகாரர்கள்’ என்று கோபிப்பார். வீட்டில் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது, அலி அக்பர் சிரித்துக் கொண்டே சொன்னார், ‘அன்னபூர்ணா சொல்லிக் கொடுக்கும் போது அப்பாவைப் போலவே கோபமாயிருக்கிறார்,’ என்று சொன்னார்.

வேடிக்கை என்னவென்றால், அவர் கடுமையாக திட்டி கோபித்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் இரண்டு நாய்கள் பெரிய குரலில் குரைக்கத் தொடங்கிவிட்டன. உடனேயே அவருக்கிருந்த அத்தனை கோபமும், அத்தனை துயரமும் உண்டானது. அவற்றையெல்லாம் விலக்கி அக்கா சிரித்துக்கொண்டே, ‘பார்த்தாயா, நீங்கள் பைரவ் ராகத்தை எடுத்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவைகள் இரண்டும் என்னமாய் ஹாயாக பேசிக்கொண்டிருக்கின்றன?’ என்றார். அதுதான் அக்கா. ஒரு புறம் கண்டிப்பான குரு. மறுபுறம் குழந்தையைப் போல எளிமை. இலக்கியவாதியைப் போல உரையாடடலில் புலமை.

இதன் பிறகு அவரின் அருகாமையை உணர்ந்தது, அவர் பம்பாயில் பலமுறை ப்ரஸிடெண்ஸி கோர்ட்டுக்கு வந்த போதெல்லாம். அப்போது அவருடன் ஷுபேந்து ஷங்கரும் உடன் இருந்தான். ஷுபேந்து ஷங்கர் அவருடைய மகன். நாங்கள் சிலர் அக்காவிடம் இசை பயில செல்வோம்.வெளியிலிருந்து பலர் காலை, மாலை இரவு என்று மாறி மாறி வந்து கொண்டிருப்பார்கள். அவர் வந்திருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. நான் உடனே சென்று பார்க்க போய்விடுவேன். அவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லோரும் அக்காவின் அருகாமையை விரும்பினார்கள். விளையாட்டு, சிரிப்பு, கேளிக்கை எல்லாமாக கலந்த அவருடைய தனித்தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. உறவினர்களுக்கு கொஞ்சம் வருத்தம். அடுத்த நாளிலிருந்து அவர் இசை வகுப்புகள் ஆரம்பித்துவிடுவார் என்று. அதன் பிறகு தோன்றும் போதெல்லாம் வந்து வம்பு பேச முடியாது. ஒருவர் கொஞ்சம் குற்றம் சொல்லும் தொனியில், ‘நாளையிலிருந்ந்து காலை முதல் மாலை வரை இலவச இசை வகுப்புகள் ஆரம்பமாகிவிடும்’ என்றார். சிரித்துக் கொண்டிருந்த அக்காவின் முகம் சட்டென்று மாறி கடுமையானது. முகத்தில் ஒருவகை உறுதியும் கடுமையும் கூடிற்று. குரலும் கடுமையாக ஒலிக்கத் தொடங்கியது. ‘ஆமாம், அது அப்படித்தான்’ என்றார். பேசிக்கொண்டிருந்த அனைவரும் கப்சிப் என்றானார்கள். இதைப் பற்றி இனிமேல் எதுவும் சொல்லக் கூடாது என்று புரிந்து கொண்டனர்.

ஒரு நாள் நான் அதிகாலையில் அவர் வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தேன். உள்ளிருந்து யாரோ சிதாரில் ஆஹ்ரி பைரவ் ராகம் வாசித்துக் கொண்டிருந்தார். அப்படியே அச்சு அசலாக அக்காவின் வாசிப்பை ஒத்திருந்தது, அது. ஆனால், அக்காவோ பகலில் வாசிக்க மாட்டார். யோசித்துக் கொண்டே நான் வீட்டினுள் நுழைந்துவிட்டேன். பார்த்தார், ஷுபேந்து பயிற்சி செய்து கொண்டிருந்தான். நான் ‘ஷுப வாசிப்பில் உங்கள் வாசிப்பின் சாயல் தெரிகிறது’ என்றேன். உடனேயே அக்கா, ‘பார் ஷுப, உன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று உன்னை வாசிக்க பயிற்சி செய்ய வேண்டும் என்று ஏன் சொல்கிறேன் என்று புரிகிறதா?’ என்றார். அப்போது நிகில் அண்ணா, (பிரபல சிதார் இசைக்கலைஞர் நிகில் பானர்ஜி )உயிரோடிருந்தார். நிகில் அண்ணாவின் வாசிப்பில் முழுக்க முழுக்க அக்காவின் சாயல் இருக்கும். முதலில் அப்பா அலாவுதீனிடமும், பின் அலி அக்பர் அண்ணாவிடமும் சிஷ்யராக இருந்து இசை பயின்றவர், அவர். உடன் வாசித்தவரும் கூட. சினிமா சங்கீதமாக இருந்தாலும் கான்பிரன்ஸாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் வாசிப்பார் . அவரின் இறுதி நாட்களில் கல்கத்தாவில் வசித்து வந்தார். அப்போது அவர் தவறாமல் வந்து அக்காவிடம் இசை பயிற்சி எடுத்துக் கொள்வார். அதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை நிகில் அண்ணா என்னிடம், ‘இப்போதும் கூட எனக்கு அன்னபூர்ணாதேவி போன்ற குருவிடம் பயிலும் பாக்யம் கிட்டியிருக்கிறது. இத்தனை பெரிய பாக்யம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?’ என்று பெருமிதத்துடன் சொல்லி இருக்கிறார் உத்தர் பாடாவிலிருந்து விஜயா அக்கா வந்து கற்றுக் கொள்வார். அக்கா அவருக்கு சொல்லிக் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவார். இப்போது அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? மிகவும் அருமையாக வாசிப்பார்.

அன்னபூர்ணாதேவியின் இசை உருவத்தை விலக்கி விடுகிறேன். எப்படிப்பட்ட குரு? இப்போதும் கூட ப்ரெஸிடெண்ட் கோர்ட்டில் நாள் முழுவதும் அவர் அருகில் இருந்து கற்றுக் கொண்ட நாட்கள் பசுமையாய் நினைவிலிருக்கிறது. எங்களில் யாருக்கு டீ பிடிக்கும், யாருக்கு குளிர்பானம் பிடிக்கும், எந்த பானம் பிடிக்கும் எல்லாமே அக்காவிற்கு அத்துபடி. எல்லாமே ஞாபகத்தில் இருக்கும். அவர் இடையில் இடையில் டீ குடிப்பதைத் தவிர வேறு ஏதும் சாப்பிட மாட்டார். ஆனால், எங்களுக்கு எல்லோருக்கும் குடிக்க சாப்பிட என்று கொடுத்துக் கொண்டிருப்பதில் அலுப்பே அடைய மாட்டார். நேரம் கடத்த மாட்டார். மாலை நான்கு மணிக்கு அவர் குளிக்கச் செல்வார். எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போதே இடைவெளியில் தன் துணியைத்தானே துவைத்துக் கொள்வார். தானே தன் கையால் சமைத்த சைவ உணவை சாப்பிடுவார். ஒரு நாள் அவர் எங்களுக்கு ஒரு ஸ்வரத்தை பயிற்சி செய்யச் சொல்லிவிட்டு, குளிக்கச் சென்றுவிட்டார். வாசித்துக் கொண்டே இருக்கும் போதே திடீரென்று அக்காவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.’ம’ வில் யாருடைய விரல் ஒட்டிக் கொண்டு விட்டது? பூபாளத்தில் ‘ம’ எப்போது சேர்ந்தது?’ அதை அவர் அப்போதே மறந்தும் விட்டார். யார் அப்படி வாசித்தது என்பதையும் குறிப்பிட்டு சொன்னார். அந்த அளவுக்கு புத்தி கூர்மையும், செவித்திறனும் கொண்டவர், அவர்.

வகுப்பில் அவர் சொல்லிக் கொடுக்கும் போது, நான் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவரின் குரலிலிருந்து எழும்பும் ஸ்வரங்களையும், நிரவல்களையும் கேட்கத் தொடங்கி விடுவேன். எப்பேர்பட்ட குரல் வளம்? விரலில் தந்தியில் பேசும் அதே இனிய சுத்தமான ஸ்வரங்கள் குரலிலும் பேசும். ஏதோ பெரிய த்ருபத் இசை வித்வானின் வாய்ப்பாட்டு இசையை கேட்டுக் கொடிருக்கிறோமோ என்று தோன்றும். சொல்லிக் கொடுக்கும் நேரம் போக சிறிது நேரம் கிடைத்தாலும், புத்தகம் வாசிக்கத் தொடங்கிவிடுவார். அவருக்கு புத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். கிழக்கு மேற்கு வங்காள இலக்கியங்களை வாசிப்பார். ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டார். அதற்கு அவர் பெரும் எதிரி. ஒரு தடவை ஏதோ ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க வயதான பெண்மணியை சந்திக்க ஒப்புக்கொண்டார். கொஞ்ச நேர உரையாடலுக்குப் பிறகு, எங்களில் ஒருவரின் சிதாரை அவர் கையில் எடுத்துக் கொண்டார். அவர் எத்தனை ஆனந்தப் பட்டாரோ, அந்த அளவிற்கு நாங்களும் ஆனந்தம் அடைந்தோம். அதிசயித்தோம். அக்கா சொல்லத் தொடங்கினார், அந்தப் பெண்மணி வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். சிதார் வாசிக்க எப்படி உட்கார்ந்து கொள்ள வேண்டும், சிதாரை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், அதன் மீது விரல்களை எப்படி படிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கற்றுக் கொடுத்தார், அக்கா. மறு நாள் ஒருவர் அக்காவிடம், ‘இதை அந்த பெண்மணிக்குக் கற்றுக் கொடுக்க என்ன தேவை? அந்தப் பெண்மணி இசைக் கலைஞராகப் போகிறாரா, என்ன?’ எனக் கேட்டார்.

‘எல்லோருமே மேடையில் வாசிக்க வேண்டும் என்பதோ, இசைக் கலைஞர் ஆக வேண்டும் என்பதோ அவசியமற்றது. அவருக்கு என்னை பிடித்திருக்கிறது. அதனால்தான் என்னைப் பார்க்க வந்திருக்கிறார். வந்ததற்கு அவர் இவ்வளவாவது கற்றுக் கொண்டாரே. இனி அவர் எங்காவது சிதார் இசையை கேட்கச் சென்றால், வாசிப்பவர் சிதாரை சரியாக பிடித்துக் கொண்டிடுக்கிறாரா, அவருடைய விரல்கள் தந்தியில் சரியாக படிந்து தொட்டுக் கொண்டிருக்கிறதா இல்லையா? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வார் இல்லையா? இது எதுவுமில்லாமல், சும்மா பேசிக் கொண்டே இருந்தால் எனக்கு தலையை வலிக்க ஆரம்பித்துவிடும்’ என்றார்.

அவருக்கு இசை மீது ஈடுபாடும் ஆர்வமும் இருந்ததைப் போலவே இலக்கியத்தின் மீதும் ஆர்வம் உண்டு. இதே ப்ரெஸிடண்ட் கோர்ட்டில் ஒருநாள், இரவில் எங்கேயோ புல்லாங்குழல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவர் அதைக் கேட்டு ஒரு கவிதை எழுதினார், அதன் பொருள் ‘ஆள் அரவமற்ற இந்த இரவில் ஏன் அவன் இப்படி புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கிறான்? மனம் தொட்ட அந்த வலி, ஊமை வலியின் உட்கரு இன்னமும் கூட உயிரின் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கிறது’ அவர் இத்தனை நன்றாக எழுதுவார் என்பது யாருக்கும் தெரியாது.

ஷுப, நிகில் அண்ணா இவர்களில் வாசிப்பில் நாங்கள் அக்காவின் இசையை உணர்வோம். இன்று அவர்களில் ஒருவர் கூட உயிருடன் இல்லை. அக்கா இதனால் தடைப்பட்டுப் போய்விடவில்லை. நம் நாட்டிலும், அயல்நாட்டிலும் எண்ணற்ற சீடர்களுக்கு இசையை கற்பித்துக் கொண்டே இருக்கிறார். ஷுப, அயல் நாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போதே மறைந்தான். அதற்கு சில தினங்களுக்கு முன் அவன் கல்கத்தா வந்திருந்தான். இங்கு அவன் சிதாரும் வாசித்தான். அப்போது ராமகிருஷ்ணா மெஷின் இன்ஸ்டிடியூட்டில் ஒரு நாள் முழுவதும் அவனோடு எங்களுக்கு கழிந்ந்தது. ‘நீண்ட நாட்களுக்கு பின் இந்தியா வந்து அம்மாவிடம் இசை பயின்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நிறைய விஷயங்கள் வசப்பட மாட்டேன் என்கிறது. அம்மா சொல்லிக் கொடுத்தால் எத்தனை சுலபமாக வாசிக்க வருகிறது. இந்த முறை பம்பாயில் எத்தனை மகிழ்சியாக நாட்கள் கழிந்தன. காலையிலிருந்து இரவு வரை சிதார் இசை பயில்வது, வம்பளப்பது, என்று. அப்புறம் அம்மாசொல்வாள், ‘இப்போது தூங்கு’ என்று. நான் வியந்து கேட்டேன், என்ன நீங்கள் எல்லாம் உணவே சாப்பிட மாட்டீர்களா என்று. அம்மா திடுக்கிட்டு விட்டாள். ‘ அட! ஆண்டவனே, சரியாகத்தான் சொன்னாய். நாங்கள் சாப்பிடவில்லை என்றால், நீயுமா சாப்பிடாமல் இருப்பாய்? எனக்கு கொஞ்சமும் நினைவில்லை, பார்த்தாயா?’ என்று சொன்னாள். அடுத்த நாள் முதல் விதம் விதமாக மீனும் கறியுமாக வாங்கி அம்மா சமைத்துப் போட்டாள். எத்தனை நாட்கள் ஆகிவிட்டன, இப்படி சாப்பிட்டு. இது போல நான் சாப்பிட்டதே இல்லை. மைஹர் வீட்டு சமையல். . .’

ரவிஷங்கரைப் பற்றிய கருத்தென்ன அக்காவிற்கு? என் அப்பாவின் கலையை அவர் உலகம் முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கிறார். எனவே, நான் அவருக்கு நன்றியுடன் இருக்கிறேன் அவருக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதைப்பற்றி கேள்வி எழுப்பும் போது ‘அவர் மிகப் பெரிய இசைக் கலைஞர். உலகத்திலுள்ள எந்த விருதிற்கும் அவர் தகுதியானவர்தான்’ என்றார். அக்கா தனது விஷயத்தில் மிகவும் விலகி பற்றற்றே இருந்தார். எந்த விருதின் மீதும் அவருக்கு ஆசை கிடையாது. அவருக்கு பத்மபூஷன் தேசிகோத்தம் விருதுகள் கிடைத்துள்ளது. யாராவது துயரத்தில் இருந்தால், யாருக்காவது கஷ்டம் ஏற்பட்டால், அது பற்றிய செய்தி கேட்டவுடன் அக்கா மிகவும் கவலைப்படுவார். இதுதான் அவரின் வெற்றி. அவர் அனுபவிக்காத துயரங்கள் இல்லை. ஆனாலும், அவர் எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் அருகில் சென்றுவிட்டால், யாருக்கும் எந்த துக்கமும் நினைவில் இருக்காது. அக்காவின் உள்ளிருக்கும் தவம் நெருப்பைப் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அந்த புண்ணிய நெருப்பில் அவரின் எல்லா துயரங்களும் எரிந்து சாம்பலாகும். ஸ்ரீ அரவிந்தரின் மொழியில் சொல்லுவதென்றால்,’ பர்பெக்ட் பர்பெக்ஸனிஸ்ட்’

(இலக்கிய பத்திரிகை, ‘நவ கல்லோல்’ இதழில் 2007ம் ஆண்டு ஆண்டுமலரின் வெளிவந்த கட்டுரை.)

ஹிந்தியில்- சந்தியா சென்
.

அன்னபூர்ணாதேவியைப்பற்றிய இன்னமும் சில குறிப்புகள்.

ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி, 1926ம் ஆண்டு மைஹரில் அல்லாவுதீன் கானுக்கும் மதன் மஞ்சரி தேவிக்கும் பிறந்தவர், அன்னபூர்ணா தேவி.அலாவுதீன், மைஹர் கரானாவை தொடங்கியவர். உடன் பிறந்தவர்கள் அலி அக்பர் கான், ஜஹன்னாரா கான், ஷரிஜா கான். மருமகன்கள்-ஆஷிஷ் கானா ஆலம் கான்,தயனேஷ் கான், அமரேஷ் கான், ப்ரனேஷ் கான், மனிக் கான் ஆகியோர். தற்போது முப்மையில் வசித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய இசை உலகில் மிக அரிதான மேதை மாசற்றவர். அவர்தான் அன்னபூர்ணா தேவி. ஆனால், இவரின் இசை வெள்ளத்தைக் கேட்ட அதிர்ஷ்டசாலிகள் மிகச் சிலரே. ஏறக்குறைய 60 ஆண்டு காலமாக சுக் பஹார் மற்றும் சிதார் இசைக் கலைஞரான அன்னபூர்ணாதேவி பொது மக்கள் பார்வையிலிருந்தும், இசையின் ஓசையிலிருந்தும் காணாமல் போய்விட்டார். அவர் தனது நீண்ட மௌனத்தை உடைத்துக் கொண்டு பேசத் தொடங்கிய போது அவர் தனது அரங்க நிகழ்ச்சிகளைத் துறந்து ஒரு சந்யாசியைப் போல வாழ்ந்து கொண்டிருந்தார். அந்த மௌனம் சிதார் மேதை பண்டிட் ரவிஷனங்கருடன் தனக்கு நிகழ்ந்த திருமணம் என்ற பந்தத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற் கொண்ட மௌனவிரதம். ‘பண்டிட் ஜீக்கு மனவருத்தம் ஏற்படத்தொடங்கியது நாங்கள் இருவருமாக இணைந்து வாசிக்கும் போதும், அதைப் பற்றி விமர்சனம் வெளி வரும் போதும் எனக்கு அதிகமான பாராட்டும், கைதட்டலும் கிடைத்தது. அவருக்கு ஏனோ அது பிடிக்கவில்லை. 1950களில் நாங்கள் இருவருமாக இணைந்து வாசித்தோம். அந்த வேறுபாடு எங்கள் மண வாழ்வை பாதித்துவிடக் கூடாது என்பதனால்தான் நான் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். அவர் இதை நேரடியாக என்னிடம் கூறி என் அரங்க வாசிப்பை நிறுத்த சொல்லவில்லை. ஆனாலும், வேறு பல வழிகளில் எனக்கு அத்தகைய பாராட்டுக் கிடைப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்பதை குறிப்புணர்த்தினார். எனவே, எனக்கு குடும்பம், கலை இரண்டும் முன்னால் நின்ற போது நான் குடும்பத்தைத் தேர்வு செய்தேன். நான் எனக்குள்ளேயே ஆராய்ந்த போது நான் குடும்பம் உடையாமல் காப்பதை புகழும் பெயரும் எடுப்பதைக் காட்டிலும் முக்கியமானது எனக் கருதினேன்.

ஆனால், விதி வலியது. இரண்டு நாடுகளின் இரண்டு வரம்பெற்ற இசை மேதைகள் இணைவு காப்பாற்றப்பட முடியாமல் போனது. இத்தகைய தியாகத்தை செய்து முடித்த பின்னரும் கூட. ‘என்னால் இயன்ற அளவு திருமண உறவைக் காப்பாற்ற முயன்றேன். என் அப்பா உஸ்தாத் அலாவுதீன் கான் இசையைப் பற்றிய ஞானத்தை எங்கள் அனைவருக்கும் புகட்டி இருக்கிறார். அவர் தனது மகளின் மண முறிவை கண்டிப்பாக விரும்ப மாட்டார். ஆனால், பண்டிட் ஜீக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது’ என்றார்.

20ம்- நூற்றாண்டின் மிகப் பெரிய இசைமேதை அலாவுதீன் மகள் அன்னபூர்ணாதேவி, அவரின் சகோதரர் உஸ்தாத் அலி அக்பர்கான், மற்றும் இன்று பெரிய இசை மேதைகளாயிருக்கும் பலருடனும் தன் சிறு வயது முதலே சிதார் கற்றார்.

அலாவுதீன் முதலில் அன்னபூர்ணாவுக்கு த்ருபத் கற்றுக் கொடுத்தார். ஆனால், பினாட்களில் அன்னபூர்ணாதேவியை சுர்பஹார், என்ற இசைக் கருவியில் கவனம் செலுத்தச் சொன்னார். அது சிதாரைப் போன்றே இருந்தாலும், இன்னமும் கூடுதல் கனமுடையது, கையாள்வதில் கூடுதல் கவனமும் தேவை.

அன்னபூர்ணாதேவி 1961ம் ஆண்டில் ரவிஷங்கருடனான திருமண உறவை (1941-61) முறித்துக் கொண்டார். அதன் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு,1982ம் ஆண்டு, தனது மாணவரை ,ரூஷிகுமார் பாண்டேயை திருமணம் செய்து கொண்டார். ரூஷி குமார் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை அதாவது, ஏப்ரல் 20013 வரை தனது குருவுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு கவனித்து வந்தார்.

அன்னபூர்ணா- ரவிஷங்கர் திருமண உறவை முன்னெடுத்தது, ரவிஷங்கரின் அண்ணாவான பிரபல கதக் நடன மேதையான உதய்ஷங்கர்தான். உதய்ஷங்கர், இந்திய நடனவகையில் ஐரோப்பியாவில் செய்முறை நுணுக்கங்களைப் புகுத்தி, அதை உலகம் முழுவதும் பரப்பினார். உதய்ஷங்கர், இரு நாடுகளில் இரு பிரபலமான குடும்பத்தின் இரு இசை மேதைகளின் நிகழ்த்துக்கலைஞர்களின் திருமண இணைவு மிக அரிதானது என்று அலாவுதீனிடம் பேசினார். ஆரம்பத்தில் மிகவும் தயங்கிய அலாவுதீன் பின்னர் சம்மதித்தார்.

1941ம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. அதன் பிறகு ஓராண்டில் மகன் ஷுபேந்திர ஷங்கர் பிறந்தான். ஆனால், 1992ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் அன்னபூர்ணாவின் மகன் இறந்தான். அன்னபூர்ணாதேவின் கூற்றுப்படி,’யாராலும் கவனிக்கபடாத, மிகத் துயரமான, அகால மரனம் அது’ . ஏன் இந்த அலட்சியம்? பண்டிட் ரவிஷங்கருக்கு, தனது குடும்பத்தையும்-மனைவி சுகன்யாவையும், மகள் அனுஷ்கா ஷங்கரையும் கவனித்துக் கொண்டு ஷுபேந்திராவையும் கவனிக்க முடியவில்லயாம். ஷுபோவும் அவருடைய குடும்பத்தில் ஒருவன்தானே? அதை ஏன் அவர் அப்படி கருதவில்லை? இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது’ என்கிறார்.

தனது குருவான அலாவுதீனிடம் மிகவும் மரியாதையுடனும், குருபக்தியுடனும் தான் இருந்திருக்கிறார், ரவிஷங்கர் என்பதும் உறுதி. ‘பண்டிட்டிற்கு குருபக்தி அதிகம். அவரால் இயன்றதனைத்தையும் செய்திருக்கிறார்’ என்றும் சொல்கிறார், அன்னபூர்ணாதேவி.

அன்னபூர்ணாதேவியும், ரவிஷங்கருமாக இனைந்து அவர்களின் திருமணத்திற்குப் பிறகு பல இடங்களில் இந்தியாவின் முக்கியமான பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளைக் கொடுத்திருக்கின்றனர். இன்னமும் அந்த இசை கேட்ட புண்ணியவான்கள் தங்கள் மனதில் பசுமையுடன் அவற்றை நினைவு கூறுகின்றனர். சில மேடை நிகழ்ச்சிகளுக்குப் பின், 1956க்குப் பின் புற உலகத்திலிருந்தும் இசை அரங்குகளிலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொண்டு ப்ரீச்கேண்டி அடுக்ககத்தினுள் தன்னை சுருக்கிக் கொண்டுவிட்டார். ரவிஷங்கர் தனது துணைவி கமலா சாஸ்திரியுடன் அமெரிக்காவுக்கு சென்று குடியேறிவிட்டார். அதன் பிறகு, 1980ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே அவர் அன்னபூர்ணாதேவி வீட்டிற்கு வந்து அவரை சந்தித்திருக்கிறார்.

உடல் நலம் அனுமத்திக்கும் வரை அன்னபூர்ணாதேவி தனது மாணவர்களுக்கு சிதார் கற்பித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரிடம் சீடராக இணைய இமாலய தடைகளைத் தாண்டி வரவேண்டும். அப்படி வென்று சிஷ்யர்களாகி இன்று இசை உலகிம் முழுவதும் இசையைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களில் சிலர் இவர்கள், குழல் மேதை பண்டிட் ஹரிப்ரசாத் சௌராச்யா, பண்டிட் நித்யானந்த ஹல்திபுர், சரோட் இசைக் கலைஞர் உஸ்தாத் ஆஷிஷ் கான், பண்டிட் பசந்த் கப்ரா, பண்டிட் பிரதீப் பரோட் மற்றும் பண்டிட் சுரேஷ் வியாஸ் போன்றோர்.

அலாவுதீனின் மறைவிற்குப் பிறகு, அவரின் மாணவர்கள் பலருக்கும் இசைப் பயிற்சி முடியாமல் பாதியில் நின்று போனது. அதை அன்னபூர்ணாதேவையைத் தவிர வேறு யாராலும் புகட்ட முடியாது. அதில் உஸ்தாத் பஹதூர்கான் அலாவுதீனின் மருமகன், பேரன் உஸ்தாத் ஆஷிஷ்கான் மற்றும் நிகில் பானர்ஜியும் அடக்கம்.

‘இப்பொழுது பெர்கின்சன் நோயினால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், மனம் நல நிலையில் இருக்கிறது,’ என்கிறார் ஹல்திபுர். இவரும், இவருடைய மற்றொரு மாணவனான சுரேஷ் வியாஸும் தங்களது குருவை கண்ணிமை போல பாதுகாத்து வருகின்றனர்.
‘அவர் தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்ப்பார். ரேடியோவில் செவ்வியல் இசை கேட்பார். அவர் கற்பிப்பதை நிறுத்தி நீண்ட காலம் ஆயிற்று. எந்த கஷ்டமும் இல்லாமல் அவரின் வாழ்க்கை தொடர வேண்டும்’,ஹல்திபுர் கூறினார்.

அன்னபூர்ணாதேவி பொதுமக்களின் பார்வையிலிருந்து விலகி பலகாலம் ஆகிவிட்டது. நம் நாட்டு பிரமுகர்களும், அயல்நாட்டுப் பிரமுகர்களும் மேதைகளும் நிறைய வேண்டுகோள் விடுத்தும், அவர் அரங்க இசைக்கு மறுத்தவர். முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியும் அவர்களில் ஒருவர். அவர் அன்னபூர்ணாவின் இசை ரசிகர். இந்திராகாந்தியைப் பார்த்து வியப்பவர் அன்னபூர்ணாதேவி.

[tamil] Tamil Glossary List, K. Ramanitharan

March 10, 2008 1 comment

[tamil] Tamil Wor(l)ds (Was: Tamil word for Cheese)
From     “K. Ramanitharan”

Date     Thu, 30 Mar 2000 20:26:37 -0600
Delivered-To     mailing list tamil@tamil.net
மொழி வளர்ச்சியிலே கலைச்சொல்லாக்கம் என்பது ஒரு முக்கியகூறு. அண்மையிலே இணையத்திலே கட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஒக்ஸ்போர்ட் அகராதி (http://www.oed.com/) ஓராண்டுக்கு எத்தனை புதிய  சொற்களை ஆங்கிலத்திலே உள்வாங்குகின்றது என்பதைக் காணும்போது, தமிழிலே அத்தகைய சீரான சூழல் இலை என்றேபடுகின்றது.

இரவீனின் கருத்து பொருத்தமானதே என்றே நினைக்கின்றேன். தமிழ்ச்சொல் ஆக்கத்துக்குப், உலகுபடப் பரந்திருக்கும் மொழி, அறிவியல்/கலை வல்லுநர்களை ஒன்று திரட்டிய ஒரு பொதுக்குழுவே அமைக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றேன். வட்டாரவழக்கென்றாலும், அ·து எழுத்துவடிவிலே இடப்படும்போது, எல்லோர்க்கும் பொதுமொழியாகவே நிர்ணயிக்கப்படுதல் அவசியமாகின்றது. அந்த அளவிலே வேறுவேறு பிராந்தியங்களிலே ஒரே மொழியினைப் பேசுகின்றவர்களிடையே மொழி விலகலை அறிவியல்/ கலை சம்பந்தப்பட்ட அளவிலேனும் ஒன்றிணைத்து வைத்திருக்கும்.

ஆனால், இதிலே சில சிக்கல்கள் இருக்கின்றதை ஆங்காங்கே  அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று, இதுவரை நாள் இவ்வாறு பயன்படுத்திவிட்டோமே இனியெப்படி மாற்றுவது என்ற சிந்தை.

இரண்டாவது, பொருத்தமோ இல்லையோ, பெரும்பான்மை இதைத்தான் பயன்படுத்துகின்றது அவ்வாறே பயன்படுத்தவேண்டும் என்ற மனப்பாங்கு.

இன்னொன்று, தன்முனைப்பு ஓங்கிய தன்மையிலே ஒரு பொருந்திய முடிவுக்கு வராதிருத்தல்.

கணணி, கணிணி எது பொருத்தமானது என்பதைப் பற்றி தமிழின் பொருளடிப்படையிலே ஒரு முடிவுக்கு வருதலுக்கு முன்னர் () அது இப்படித்தான் என்றால் இப்படித்தான்  என்ற தொனியிலும் அதட்டலாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது (தமிழிணையத்தின் 97ம் ஆண்டின் சித்திரை, வைகாசி மாதச்சுவடிகள் இதற்குச் சான்று). கோ தற்போது இணையத்திலே இல்லாதபோதும், கண்ணன், அந்த தொடர், ‘கணிணி கணிணி  கணிணிதான் ஐயா’  அஞ்சலை வாழ்க்கைமுழுவதற்கும் மறக்கமாட்டார் என்று  எண்ணுகின்றேன்;-)))

http://www.tamil.net/list/1997-05/msg00547.html

நியூசிலாந்து நந்தன் இலங்கையிலே வழங்கியதைக் கணிணி என்று மாறுபடக் குறித்தாலும்,முனைவர். கல்யாணசுந்தரத்திடம் சிங்கப்பூரிலே கணிப்பொறிஞர்  எஸ். ரங்கராஜன் கூறியதுபோலவே (http://www.tamil.net/list/1997-05/msg00498.html) கணிணி எனவே நிலைப்பட்ட வழங்கவேண்டுமென்று கூறினார்.
http://www.tamil.net/list/1997-05/msg00528.html

(சொன்ன சுஜாதா, கணிப்பொறி என்றே பின்னும் குறிப்பிடுகின்றார் என்பது வேறு விடயம்)

நான் கோவிடம் வாங்கிக்கட்டியதுடன் அரைச்சரணாகதியுடன்
http://www.tamil.net/list/1997-05/msg00520.html
கணக்கிடுவதினாலே கணணி  என்றும் கணிப்பதாலே கணிணி என்றும் சொல்லி ‘பூ என்றும் சொல்லலாம் தம்பி சொன்னமாதிரி (புஷ்பம்) என்றும் சொல்லலாம்’ என்று வௌவால் விளையாட்டுக் காட்ட முயன்று கொண்டிருந்தேன்.
http://www.tamil.net/list/1997-05/msg00531.html

இது தொடர்பாக, திரு. ஜெயபாரதியின் தமிழாதாரத்துடன் விளக்கமான அஞ்சலொன்று வந்தது.
(இணையச்சுவடியிலே 97 வைகாசி, ஆனி மாதங்களிலே அதைக் காணமுடியவில்லை; அது சுவடியில் எம்மாதத்துக்குரியதென்று யாராவது தந்தால் பயனுடையதாக இருக்கும்).

தவிர, ஜெயபாலசிங்கம் electronics என்பதற்கு இலத்திரனியல் என்றும் அருண்மொழி மின்னணுவியல் என்றும் வாதாடியும் கொண்டிருந்தார்கள்
(http://www.tamil.net/list/1997-05/msg00611.html).

இது பிறகு electron என்பதற்குத் தமிழ் என்ன என விவாதமாய் விரிந்தது. data என்பதற்கு தரவு என்றும் விபரம் என்றும் civil engineering என்பதற்கு குடிசார் எந்திரவியலென்றும் வேறொரு பதமும் அவரவர் கற்கைக்கேற்ப  மாறுபட்டிருக்கின்றன.

(இவ்வளவுக்கும் பின்னர், கணிணி என்பதனை இரண்டு வருடங்களாக, சென்ற ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். பின்னர், தமிழ்நாட்டு அரசினது ‘தானிட்டதே தமிழ்’ என்ற திணிப்புத் தோரணையை  எதிர்க்குமுகமாக, மீண்டும் கடந்த ஒரு வருடமாக, கணணி என்பதையே  பயன்படுத்துகின்றேன். மீள ஓர் ஒருங்கிணைப்புக்குழுவின் (குறைந்தபட்சம், க்ரியா தமிழகராதி/அகரமுதலி போல, ஒரு பல்நாட்டு அறிஞர்குழுவினைக் கருத்திலெடுத்து ஒரு முடிவுக்கு வரும்வரை அவ்வாறே பயன்படுத்தவும் திண்ணம்))

சாமுவேல் கந்தையா கூறிய தமிழ் கலைச்சொற்றொகுதிகள் பற்றி, அந்நிகழ்வுகளிலே ஈடுபட்ட ஒரு சிலரை அறிந்த குமாரபாரதி ஏதாவது கூறமுடியும்.

ஆயினும், இந்தச்சில அகராதிகள் பற்றி:

இவற்றிலே பௌதீகம், பிரயோக கணிதம், இரசாயனம் சம்பந்தப்பட்டவை  சில க.பொ.த. உயர்தரம் கற்கும்போது, உலோனியின் திரிகோணகணித நூலின் தமிழாக்கம்,  பரட்டின் (??) பிரயோககணித நூல்களின் தமிழாக்கம் என்பவற்றுடன் (கருணாகரனின் பௌதீக கற்கைநூல்கள்)  கையிலே அகப்பட்டிருந்தன. இந்த நூல்கள் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் இலங்கை அரசாங்க அச்சகத்தினால், அரசகரும மொழித் திணைக்களத்தினாலே வெளியிடப்பட்டவை. பின்னர், வழக்கொழிந்து போனவை (போக்கப்பட்டவைய அறியேன்).

சென்ற ஆண்டு பின்னரைப்பகுதியில் இவற்றினை வலையிலே இடத்  தேடிக்கொண்டிருந்தபோது, இலண்டன் பத்மநாப ஐயர், எங்கிருந்தோ ஒளியச்சுப் பண்ணி வைத்திருந்த சில தொகுதிகளினைப் பெற்றுக்  கொண்டேன்.  வேறு சிலவற்றினை யாழ் பல்கலைக்கழகத்திலிருப்பின், யாரிடமாவது ஒளியச்சுச் செய்து பெற்றுக் கொள்ள முயல்வதாகவும் அவர் கூறினார்.

(பலருக்கு மறந்து போயிருக்கக்கூடும்; ‘மதுரைத்திட்டம்’ தமிழ் இலக்கியங்களுக்கு என்று தொடங்கியபோது, ‘யாழ் திட்டம்’ என்பது தமிழிலே அறிவியற்படைப்புகளுக்காக  ஆரம்பிப்பது பற்றி பேசப்பட்டது. (வேண்டுமானால், ‘ஒருதலைராகம்’ சந்திரசேகர் மாதிரி ‘வெள்ளை ரோஜா-குருவி’ கதை சொல்லிவிட்டு, உனக்குமா ரூபா?’ என்று பாலாவையும் கண்ணனையும் கேட்கலாம்;-))

பிறகு அப்படியே பேச்சேதுமின்றி நின்றுவிட்டது. அந்த அளவிலே, ஆரம்பத்துக்கு இவற்றை இடலாமோ என்ற எண்ணத்திலேதான் பெற்றுக்கொண்டேன். அதில், நான் தேடிய பௌதீக, பிரயோக கணித, இரசாயனச் சொற்றொகுதிகள் இல்லாதபோதும், வேறுபல இருந்தன). இலங்கையிலே இந்தவருடம் colorful தமிழிணையம் ’00 fancy show (as it was last year in Madras) [No business is like show business;-))] நடைபெறுவதாக இருந்தால்,  ஓரிரண்டை இலங்கைத்தமிழரின் தமிழிலே விஞ்ஞானத்துக்கான பங்களிப்பாகப் போட்டுக்கொள்ளுதல் அழகூட்டும் என்பதாக ஓர் எண்ணம் இருந்தது.

ஆயினும், அவை இரண்டு காரணங்களுக்காக வலையிலே இடவில்லை (என் சோம்பேறித்தனத்தினைத் தவிர;-)))

1. இலங்கை அரசாங்கத்தின் பதிப்புரிமை பெறவேண்டுமோ என்பது எனக்குத் தெரியவில்லை (தமிழிணையம் ’00 இன் இலங்கைப் பிரதிநிதிகளுடன் பேசிக்கொள்ளாமற் செய்வது நல்லதல்ல என்று பட்டது)

2. இலங்கை அரசு இந்தச் சொற்றொகுதிகளை எல்லாம் மீளாய்வு செய்து, புதிய சொற்களுடன் மேம்படுத்திய பதிப்புகளை இந்த  கார்த்திகையிலே வெளியிடஇருப்பதாக, அதனுடன் சம்பந்தப்பட்ட  பேராசிரியர் ஒருவர் கூறியதாகச் சொல்லப்பட்டது. (இந்தச்செய்தி வந்தது, தமிழிணையம் சிங்கப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னராகும். தமிழிணையம் இலங்கையிலே நடக்காதது மிகவும் மனமகிழ்ச்சிக்குரிய விடயம் என்பது வேறு விடயம்)

தமிழ்நாட்டிலும் இதே போல எத்தனையோ சொற்றொகுதிகள் அப்படியே அறியாது தேங்கி பயன்படாது நிற்கலாம்.

ஆனால், இப்போது இத்தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது  உண்மையானால், தமிழ்நாட்டு, மலேசிய சிங்கப்பூர் அறிஞர்களுடன் கலந்தாலோசிக்காமற் செய்யப்படுவது மிகவும் பயனற்ற ‘சுப்பற்றை கொல்லைக்குள் சுத்திச்சுத்தி’சகதி பண்ணும் சமாச்சாரமாகவே இருக்கும்.

(தமிழிணைய மகாநாடுகள் இணையத்திலே திறப்புவிழாக்களையும் பூனாவிலே
அரசுதயாரிக்கும் மென்பொருளின் விற்பனைக்கண்காட்சி விழாவாகவும் முடியாமல்,
இதற்கும்  ஏதாவது செய்யுமா என்று யாரிடம் கேட்பது என்று யாராவது சொல்லமுடியுமா?
தான் அங்கீகரித்த உருத்திட்டத்தினையே நடைமுறைப்படுத்த முடியாத தமிழ் இணைய
கண்காட்சி ஒன்றுகூடல்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமோ தெரியாது:-(()

[போன வருடம் எழுதிய அதே மடலின் கருத்தைத்தான் மீளப் பேசவேண்டும்;
TAB (Tamil Encoding Scheme OR Tamilnadu Encoding Scam? No offence to any individual, but I wonder what the tamil nadu technical committee ‘boss’ does  beyond acting as a salesman for C-DAC) கொண்டு வந்தாகி இத்தனை நாளாயிற்று;  எத்தனை பேர் அரைத்திருப்தி முழுத்திருதியாக இருக்கின்றார்கள் என்பது வேறுவிடயம்; பல எழுத்துரு அமைப்பாளர்கட்கு இது நடப்பது பற்றி விபரமே தெரியவில்லை.])

இதேபோல, தமிழிலே ஓர் அகராதியை/அகரமுதலியை இணையத்திலே இடும் வேலை எத்துணை அவசியமாகின்றது. இல்லாவிட்டால், எழுபது எண்பதாண்டு பழைய கொலோன் அகராதியிலிருந்து நாளுக்கொரு சொல்லை யாராவது  கிண்டி எடுத்து அறோ அறு என்று இனியும் அறுபட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

நாகு தொடங்கிய அகரமுதலி தொடர்ந்து வளர்ந்து கொண்டிந்தால், மிகவும் பயனுடையதாக இருந்திருக்கும். ஏனையோரின் உற்சாகமின்மை, அவரினையும் சோர்வடையச் செய்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.

குறைந்தபட்சம், இத்தனை தமிழ் எழுத்துருக்களை வர்த்தகரீதியிலே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்கூட, இதனை எண்ணாமல் இருக்கின்றது ஏனென்று தெரியவில்லை. ‘மதுரைத்திட்டம்’ போல,  பழைய + புது அகராதிகளை வைத்துக் கொண்டு, கொஞ்சப்பேர் சிரமதானம் செய்வதிலே ஆரம்பிக்கலாமோ? ஒன்று மட்டும் நிச்சயம்; அரசே அரசே என்றால், அகராதி வரப்போவதில்லை;

அதனால், அகராதியை இணையத்திலே உள்ளிட்டு முடிக்கும் ஒவ்வொருவருக்கும் இறுதியிலே கணிணிமாமணி பட்டம் அய்யன் அகராதிக்கு வலை கண்ட விழாவிலே வழங்கப்படும் என்று இத்தால் உறுதி செய்து முரசறைகின்றோம். (கூடவே, real audio இலே நேரடி ஒலி/ஒளி பரப்புமுண்டு என்பதையும் அறிக;-))

கீழே கையிலிருக்கும் இலங்கை சொற்றொகுதிப்பட்டியல்:

(பத்மநாப ஐயருக்கு என்றும்போல் நன்றி; if history on the survival of eelam tamil  literature will be written in the future, it can be dedicated to this man, only to this man.)

1. மனையியற் சொற்றொகுதி: (Glossary of Home Science) 1959 [Eng->Tam] 265 pgs

2.  உடற்றொழிலியலும் உயிரிரசாயனவியலும் (Technical terms in Physiology &
Biochemistry)
1965  [Eng->Tam] 122 pgs

3. உடலமைப்பியலும் இழையவியலும் (Glossary of technical terms in Anatomy and
Histology)
1965  [Eng->Tam] 106 pgs

4. நோயியற் சொற்றொகுதி (Glossary of Technical Terms in Pathology) 1965
[Eng->Tam] 58 pgs

5. உயிரியல் விஞ்ஞானம் (technical terms in biological sciences) 1961 [Tam->Eng]
290 pgs
(இத்தொகுதி, தாவரவியல், விலங்கியல், உடற்றொழிலியல்-உடனலவியல்,பயிர்ச்செய்கை
என்பவற்றினை உள்ளடக்கியது)

6. பிறப்புரிமையியல்-குழியவியல்-கூர்ப்பு (Glossary of Technical terms: Genetics-Cytology-Evolution)
1964  [Eng->Tam] 69 pgs

Categories: Glossary, Ramani, Translations