Archive

Archive for the ‘Writers’ Category

Writer SV Ramakrishnan: எஸ்.வி. ராமகிருஷ்ணன்

February 10, 2011 7 comments

S.V.Ramakrishnan_18-01-2010

எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராம கிருஷ்ணன் சுங்கம் கலால்ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். தமிழின் முன்னணிஇதழ்களில் கடந்த கால இந்தியாவைச் சித்தரிக்கும் விதமாக இவர் எழுதிய கட்டுரைகளை ‘அது அந்த காலம்’ என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் 2004இல் வெளியிட்டது.

இரண்டு தலைமுறை மூத்தவரான இந்திரா பார்த்தசாரதி யூனிகோடில் அடித்து மின்னஞ்சல் அனுப்புவார்( 70 வயதுக்கு மேல் கணினி கற்றுக்கொண்டு கணினியில் எழுதும் மற்ற இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் எஸ்.வி.ராமகிருஷ்ணன், பாரதிமணி).

Book Name :   அது அந்தக் காலம்
PublishedYear :    Dec.2004
Description
ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதிலுள்ள வரலாறு நகமும் ரத்தமும் சதையுமுடைய மனிதர்களை உள்ளடக்கியது. இதிலுள்ள மனிதர்களுக்குப் பிரதிபலிப்பாக இன்றும் இருக்கிறார்கள். (அசோகமித்திரன்)

Name : வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
Description
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வாழ்க்கையின் அழுத்தமான காட்சிகளையும் யதார்த்தத்தையும் வெகுநேர்த்தியாகச் சித்தரிப்பவை எஸ்.வி.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். கடந்தகாலத்தின் மெல்லிய ஏக்கம் ததும்பும் நினைவுகளையும் கடந்து சென்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் பதிவுகளையும் இக்கட்டுரைகள் ஒரு தலைமுறையின் கனவுச் சித்திரங்களாக நம் நெஞ்சில் எழச் செய்கின்றன. ‘அது அந்தக் காலம்’ தொகுப்பின் மூலம் பெரும் கவனம் பெற்ற எஸ்.வி.ராமகிருஷ்ணனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இது.

ஒரு திருடனின் சுயசரிதை

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

நான் ஒரு திருடன். அதாவது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றான திருட்டு என்ற கலையை முறையாகப் பயின்று பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தவன். இன்று நாய்க்குடைகள் மாதிரி முளைத்து சினிமாவில் பார்த்த உத்திகளைக் கையாண்டு பிழைக்கிறார்களே அது போன்று ‘வந்தேறி’ அல்ல, ரயிலில் மயக்க மருந்து பிஸ் கட்டு கொடுத்துப் பிரயாணிகளின் பொருளை அபகரிக்கும் கீழ்த்தரத் திருடனுமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நான் என் தொழிலை இன்ன தேதியில் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.  முதலில் நான் தொழில் செய்தது பெரியவர்களோடு கூடப் போய் ‘அசிஸ்டெண்ட்’ போலத்தான். கொஞ்ச கொஞ்சமாகத் தேர்ந்த பிறகு தான் என்னைத் தனியாகப் போக அனுமதித்தார்கள்.  நான் தேர்ச்சியடைந்துவிட்டேனென்று என் தகப்பனாரும் பாராட்டினார். இரண்டுமுறை அப்படிப் போய் வெற்றிகரமாகக் கைவரிசையைக் காட்டினவுடன் எனக்கு அசாத்திய தன்னம்பிக்கையும் தைரியமும் வந்துவிட்டன.

இதெல்லாம் நடந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இப்போது எனக்கு வயசாகிவிட்டது. இரவு கண் முழித்தும் ஓடியும் ஒளிந்தும் பணிபுரியும் வயசு தாண்டிவிட்டது. என்னுடைய ஒரே மகன் வேறு லைனுக்குப் போய்விட்டான். பெண்களையும் கட்டிக் கொடுத்து விட்டேன். இன்று நான் ஒரு ‘மாஜி’ திருடன்தான். தொழிலில் இருந்து ரிடையர் ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆனால் சொல்லப் போனால் இவ்வளவு சீக்கிரம் நான் தொழிலை விட்டிருக்க மாட்டேன். இப்போதும் என் உடம்பில் தெம்பு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் நானாகத் தொழிலை விடவில்லை, உலகம் மாறி வரும் வேகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் நான் விலக வேண்டி வந்தது என்பது தான் கொடுமை. என் நீண்ட நாள் ஆற்றாமையை இங்கேயா வது சொல்லிக் கொள்ளுகிறேன்.

நான் தொழில் தொடங்கும் நாட்களில் வீடுகள் காரையால் கட்டப்பட்டிருக்கும். அதாவது செங்கல்களுக்கு நடுவில் காரைச் சாந்து (சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை) பூசிக் கட்டியிருப்பார்கள். சிலசமயம் மண் சாந்து பூசுவதும் உண்டு. அந்த மாதிரி கட்டின சுவர்களில் கன்னம் வைக்க முடியும். அதற்காக எல்லோராலும் அது முடியும் என்று நினைத் துக்கொள்ள வேண்டாம். கன்னம் வைப்பது ஒரு அரிய கலை. கற்றுக் கொண்டு அப்பியாசம் செய்யவேண்டும். எனக்கு இதில் பழுத்த அனுபவம் இருந்தது. ஜாக்கிரதையாகவும் லாகவத்துடனும் செய்ய வேண்டிய வேலை. ஒரு ஆள் புகுந்து போக வேண்டிய அளவில் சுவரில் ஒரு ஓட்டை போட வேண்டும், அதே சமயம் சத்தமில்லாமலும் செய்யவேண்டுமென்றால் சும்மாவா? ஆனால் நான் தொழில் தொடங்கி சில ஆண்டுகள் கழித்து சில விபரீ தங்கள் நிகழலாயின.  காரை எங்கோ காணாமல் போய் சிமெண்ட் வந்து விட்டது. அதற்கு முன்னே தரைக்குத்தான் சிமெண்ட் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது சுவற்றுக்கும் பரவவே கன்னம் வைப்பது கஷ்டமாகிப் போனது. சுவற்றுக்குப் பதிலாக ஜன்னல் வழியாகப் புகுவதே சிலாக்கியம் என்றாயிற்று. ஜன்னல் கம்பிகளை வளைத்தோ அறுத்தோவிட்டு உள்ளே போக வேண்டும்.

வெகு சீக்கிரமே தனி வீடுகள் என்பதே குறைந்து எல்லாம் பயங்கரமான  அடுக்கு மாடிக்  கட்டடங்களாயின. அத்தனையும் கெட்டி கான் கிரீட் கட்டடங்கள். அதிலும் மூன்றாவது மாடியிலும் ஐந்தாவது மாடியிலும் ஏறிக் கன்னம் வைக்கவா முடியும்? முதலில் இந்த மாறுதல்களெல்லாம் பெரிய நகரங்களில் தான் வந்தது. சின்ன ஊர்களில்  அவை வருவதற்கு நாள் பிடித்தது.  அப்போது நாங்கள் அடிக்கடி சிற்றூர்களுக்கு விஜயம் செய்யலானோம். எங்களில் சிலர் பட்டணத்தை விட்டு வெளியூருக்குக் குடிபெயர்ந்ததும் உண்டு. ஆனால் காலம் போகப்போக அவையும் பெரிய ஊர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றிக் கழுதையாகிவிட்டன.

இதே சமயம் நடந்த இன்னொரு நவீனகால அநியாயத்தையும் சொல்ல வேண்டும். வெகு நாளைக்கு முன்னால் எல்லோரும் தங்கள் வீட்டில் தான் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக ‘Safe’ என்ற பலமான இரும்புப் பெட்டகங்களில் (சிலசமயம் பெட்டிகளில்) இருக்கும். சில யுக்திக்காரர்கள் சமையற்கட்டில் ஏதோ பழைய அலுமினியப் பாத்திரத்துக்குள்ளேயோ அல்லது அழுக் குத்துணிக் கூடைக்குள்ளேயோ, அசா தாரணமான இடங்களில் பணத்தை வைப்பார்கள். குறிப்பாக, தனியாக இருந்த சில கிழவிகள் இப்படிச் செய்வதைக் கண்டிருக்கிறேன்.
அங்கேயெல்லாம் பணம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது  அந்தப் புத்திசாலிகளின்  அனுமானம். ஆனால்  அந்த ரகசிய இடங்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிருக்கவில்லை. இதெல்லாம் அனுபவத்தில் உதிக்கும் ஞானம், வீட்டுக்காரர்களின் குருட்டு யோசனைகளைக் கடந்து போகக் கூடியது. அதே போல் எந்தவிதமான இரும்புப் பெட்டி, பெட்டகங்களையும் மறு சாவி போட்டுத் திறப்பதற்கான பயிற்சியும் ஆற்றலும் எங்களுக்கு இருந்தது. குறிப்பாக நான் அதில் ஒரு நிபுணன் என்று பிரசித்தி பெற்றிருந்தேன்.

ஆனால் பின்னால் நடந்தது என்னவென்றால், கையில் நாலு காசு சேர்ந்துவிட்டால் ஒவ்வொருத்தனும் வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் ‘செக்’ மூலமாகப் பண்ண ஆரம்பித்தான். பணக்கார வீடுகளில் பணமாக வைத்துக்கொள்வதே குறைந்து போயிற்று. ஆனாலும் தங்கம், வைர நகைகளை பெட்டகத்துள் வைப்பது தொடர்ந்தது. என் துரதிர்ஷ்டம் சில ஆண்டுகளில் இவையும் வீட்டை விட்டு வெளியேறி வங்கி ‘லாக்கர்’களில் குடியேறத் தொடங்கின. வருமான வரிக்காரர்களுக்குப் பயந்துகூட இப்படிச் செய்தார்கள். பக்கம் பக்கமாக வெவ் வேறு வங்கிகளின் லாக்கர்களில் ஒளித்து வைத்தால் இன்கம்டாக்ஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்பது  அவர்களின் கருத்து. இதெல்லாம் என் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்ட தென்னவோ நிச்சயம்.

நாளடைவில் என் திறமை, அனுபவம் எல்லாமே வீணாகப்போவது போலத் தோன்றிற்று. ஆயிரம் பாடு பட்டு ஒரு வீட்டுக்குள் ஏறி இரண்டாயிரம் பாடுபட்டு இரும்புப் பெட்டியைத் திறந்தபின் அத்தனையும் வியர்த்தம் என்று தெரிந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். கடைசியில், காலம் கெட்டுப் போச்சு, இத்தொழிலுக்கு இனிமேல் நான் லாயக்கில்லை, கூட்டம் கூட்டமாக வட நாட்டில் எங்கெங்கிருந்தோ வந்து புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்களே  அந்தப் பையன்களுடன் என்னால் போட்டி போட முடியாது என்று தீர்மானித்து நான் கௌரவமாக விலகிவிட்டேன்.

இதுதான் என் உத்தியோக சுயசரிதை.

தேர்தல் – 1946 :: “மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு”

1946இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்தான் நான் கண்ட முதல் தேர்தல்.  ஃபர்ஸ்ட் பாரம் என்றழைக்கப்பட்ட ஆறாவது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. இரண்டாவது உலகயுத்தத்தில் நம்மைக் கேட்காமலேயே  பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஜெர்மனி மீது யுத்தப் பிரகடனம் செய்ததிலிருந்து (1939) தோன்றி யுத்தகாலம் முழுதும் நீடித்த காங்கிரஸ் – பிரிட்டிஷ் பிணக்கம் சமீபத்தில்தான் ஒருவழியாக முடிவு பெற்று இணக்கமாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்குச் சில மாதங்கள் முன்பு இங்கிலாந்தில்  (அதாவது பிரிட்டனில் – அப்போதெல்லாம் மூத்த தலைமுறையினர், என் அப்பா அம்மா உட்பட, இங்கிலாந்து என்றுதான் சொன்னார்கள். ஏன், பிரிட்டிஷ் பிரதமராயிருத்த சர்ச்சிலும் கடைசிநாள் வரை அப்படித்தான் சொன்னதாகவும் ஸ்காட்லந்துக்காரர்களின் எரிச்சலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் கூடத் தெரிகிறது.) ஆட்சி மாறியதே. சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் அனுதாபிகள்  (உ.ம். கிரிப்ஸ், பெதிக்-லாரன்ஸ்) நிறைந்த தொழிற்கட்சி சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சியைத் தேர்தலில் முறியடித்து அமோகவெற்றி பெற்றிருந்தது (1945). அந்த முடிவைத் தெரிந்து கொள்வதற்காக அன்று பி.பி.ஸி செய்திகள் வரும்போது என் தந்தை கடமுட என்று சத்தம் பண்ணிக்கொண்டிருந்த ரேடியோவிலேயே காதைப் பதித்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. நியூஸ் கேட்டுவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் கூடத்துக்கு (ஹால்) வந்து நற்செய்தியைச் சொன்னவுடன் அம்மா உடனே பாயசம் பண்ணி எல்லோருக்கும் கொடுத்ததும் ஒரு ‘இனிய’ நினைவு. புதிய லண்டன் அரசு தாமதமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதைத் தங்கள் கொள்கைப்பிரகடனமாகச் செய்துவிட்டது . உடனடியாக சிறையிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட அதைத் தொடர்ந்துதான் இப்போது, 1937இல் இருந்து ஒன்பதாண்டுகளுக்குப்பின், மறுபடியும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது.

தாராபுரத்தில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டோடியது. நாடு முழுவதிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஊரெங்கும் சுவர்களின் மீது “மங்களமான மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு” என்று கொட்டை கொட்டையாக எழுதினார்கள். (கூடாதென்று சொல்ல அப்போது எலெக்ஷன் கமிஷனர் எல்லாம் கிடையாது). ‘வாக்கு’ என்ற பதம் அப்போதும் இன்னும் சில வருடங்கள் வரையிலும்கூட உபயோகித்து நான் கேட்டதாக நினைவில்லை. ஆங்கிலச் சொல்லான ‘வோட்’ ஆனது  (‘ரயில்’ மாதிரியாக) ஓட்டு என்றொரு தமிழ் வார்த்தையாகப் பரிணமித்து  நிலைபெற்றிருந்தது. அதேபோல, தேர்தலில் நிற்பவர் ‘அபேட்சகர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் ‘வேட்பாளர்’ ஆனது இன்னும் பல காலத்திற்குப் பிறகுதான். வடமொழியிலிருந்து வந்த ‘அபேட்சகரின்’ நேரடி சுத்தத்தமிழ் மொழிபெயர்ப்பு.

சினிமா நோட்டீஸ் மாதிரி பிரசாரத் துண்டுக்காகிதங்கள் (அதற்கும் நோட்டீஸ் என்றுதான் சொன்னார்கள்) அச்சடித்து வினியோகிக்கப்பட்டன. இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், வீடு வீடாகப் படியேறி மக்களை நேரில் சந்தித்து நோட்டீசுகளைக் கொடுத்தும் விண்ணப்பித்தும் ‘காந்திக்கட்சிக்கு’ வாக்கு சேகரித்தார்கள். தொண்டர்கள் தெருத்தெருவாக மெகாபோனில் முழங்கிக் கொண்டும் போனார்கள். இன்று காணாமற்போன மெகாபோனைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்றால்  அது சௌகரியமானதொரு சாதனம். மலிவும் கூட. மின்சாரம், பேட்டரி எதுவும் கேட்காது. நாம் போடும் சத்தத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகக் கூட்டும், அவ்வளவுதான். ஒலிபெருக்கி போலக் காதைத் துளைக்காது. அடிக்கடி காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் நடந்தன. மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் (‘மட்டப்பாறைச் சிங்கம்’), ம.பொ.சிவஞான கிராமணி யார், அல்லாப்பிச்சை என்று வெளியூரில் இருந்தும் தலைவர்கள் வந்து பேசினார்கள். அவர்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து என் தந்தையிடம் கொஞ்சநேரம் பேசி விட்டுப் போனார். அவர்தான் காமராஜ நாடார் (அப்போது அப்படித்தான் அவர் பெயர். பின்னாளில் ‘நாடார்’ என்ற பகுதி , காரல் மார்க்ஸின் பாஷையில் சொல்லப்போனால், ‘உதிர்ந்துபோயிற்று’ ) என்று அப்புறம் அப்பா சொன்னார். “அட, அப்பவே தெரிஞ்சிருந்தால் எட்டிப் பார்த்திருப்பேனே  என்று குறைபட்டுக்கொண்டார் அம்மா.

அதென்ன மஞ்சள் பெட்டி என்ற கேள்வி இதைப் படிக்கும் பலர் மனதிலும் எழக்கூடும். அது ஒரு தனிக்கதை. சைமன் கமிஷன் வந்துவிட்டுப் போனதற்குப் பின் 1931இல் வைஸ்ராய் ஒரு கமிஷனை நியமித்தார். அதன் வேலை இந்தியாவுடன் ஒப்பிடக் கூடிய பல நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து நமக்கு தேர்தல் முறைகளைச் சிபாரிசு செய்தல். வெள்ளைக்காரர்கள் எப்போதும் ரொம்ப systematic. (அதை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் எனத் தோன்றுகிறது. உதாரணமாக, அண்மையில் Right to Information Act வந்தது. இயற்றுவதற்கு முன்னர், சில முன்னேறிய நாடுகளிலும், மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, மொரீஷஸ் போன்ற சில கிழக்கத்திய நாடுகளிலும் இதை எப்படிச் செய்திருக்கிறார்கள், சட்டம் மட்டுமில்லாது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ‘காப்பியடித்து’ இயற்றப்போக, இன்று அந்தச் சட்டம் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, சொல்லும்படியாக சாமானிய மக்களுக்குப் பிரயோஜனம் எதுவும் இல்லை). முன்னேறிய மேனாடுகள் போலன்றி  இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் (சுயேச்சை அபேட்சகருக்கும்) தனித்தனிக் கலரில் பெட்டிகள் வைப்பதென்ற கமிஷனின் பரிந்துரை ஏற்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் பங் கெடுத்துக்கொள்ளச் சம்மதித்த 1937இலிருந்து அதற்கு மஞ்சள் பெட்டி என்றாயிற்று. 1946இல் ஜின்னாவின் முஸ்லிம்லீகுக்கு பச்சைப்பெட்டி. மற்றவர்களுக்கு என்ன என்னவென்று எனக்குத் தெரியவில்லை.  சுயேச்சைகளும் கோதாவில் உண்டு.

ஒரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கே சொல்லவேண்டும். அன்று வயதுவந்தவர் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. இத்தனை படிப்பு அல்லது இத்தனை சொத்து என்று வைத்திருந்தார்கள். அந்தத் தகுதி இருந்தால்தான் ஓட்டுப்போடலாம். அதனால் ஜனத்தொகையில் ஓட்டுரிமை பெற்றவர்களின் சதவீதம் இன்றைவிட மிகக்குறைவாக இருந்தது. இங்கே எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பின்னால் 1952இல் இருபத்தோரு வயதானவர் எல்லோருக்கும் வாக்குரிமை வந்தபோது எளியவர்கள் பலருக்கு அது தெரியவில்லை. அப்போது எங்கள் வீட்டில் ஒரு சமையற்கார மாமி இருந்தார். விதவை, வயதான மாது. “ஓட்டுச்சாவடி நம்ம வீட்டில் இருந்து நாலு எட்டில் இருக்கிறதே, நீங்கள் ஒட்டுப்போடப் போகவில்லையா, மாமி?” என்று கேட்டேன். “எனக்கெல்லாம் ஓட்டு கிடையாதப்பா, அதுக்கு சொத்து எதாவது இருக்கணும்” என்று பதில் சொன்னார். இல்லை, இப்போது சட்டம் மாறியிருக்கிறது என்று நான் சொன்னபோதும் மாமிக்கு நம்பிக்கை வரவில்லை. நான் வெறும் பதினைந்து வயதுப் பையனாயிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என் தாயாரும் வந்து வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் போனார்.

1946இல் இருந்து, பின்னால் மறைந்து போன ஒரு பாரிய விஷயம் முஸ்லிம்களுக்கென்று இருந்த ‘தனித்தொகுதி’. தனித்தொகுதி என்றால் இன்று ஷெட்யூல்வகுப்பினருக்கு ஒதுக்கியிருப்பது போல அல்ல. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டளிக்க முடியும். ஒரு முஸ்லிம் லீகர், ஒரு தேசீய முஸ்லிம், ஒரு முஸ்லிம் சுயேச்சை என்று நின்றால், அந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தான் இஸ்லாமிய ஓட்டர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் முஸ்லிமல்லாத அபேட்சகர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்தவ ஓட்டர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போடவும் முடியாது. 37 வருடங்களுக்கு முன் இந்தியர்களைப் பிரித்தாளுவதற்கு ஆங்கிலேயர் கொண்டு வந்த இத்திட்டம் கடைசியில் இந்தியாவையே பிரித்துவிட்டது. மேலே விவரிக்கப்பட்டது 1946 தேர்தலின் அடிப்படையில்தான். ஆனால், பிரித்தல் முழுமை பெற்றபோது (1947) ஆளுவதற்குத்தான், அந்த விஷமத்தை ஆரம்பித்து வைத்த வெள்ளையர் இருக்கவில்லை!

*

சகுனம்

அந்த நாளிலே ரொம்பவே சகுனம் பார்த்தார்கள். எல்லாரும் இல்லாவிடினும் பலபேர். சகுனம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருவது என் கல்லூரித் தோழன் பரமாத்மாதான்1. 1950களின் மத்திய பகுதியில் நானும் அவனும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தோம். இருவரும் ஒரே ஹாஸ்டலில் (சேலையூர் ஹால்) தங்கியிருந்தோம். என் ரூம் நம்பர் 57 என்றால் அவனுடைய அறை 59. கல்லூரியில் என் பாடம் சரித்திரம், அவனுடைய பாடம் பௌதீகம் என்று வெவ்வேறு திசைகளில் இருந்தும் எங்களிருவரின் பல ருசிகள் (சினிமா, சங்கீதம், இலக்கியம்) ஒரே திக்கில் அமைந்ததால் நாங்கள் சீக்கிரத்திலேயே நெருக்கமாகிவிட்டோம். இந்நிலையில் அவனுடைய தந்தை ஹைவேஸ் இன்ஜினீயர் விஸ்வநாதையருக்கு எங்கள் ஊர் தாராபுரத்தில் அசிஸ்டண்ட் இன்ஜினீயராக மாற்றல் ஆயிற்று. அந்தக் காலத்தில் ஏ.இ. என்றால் தாலூக்கா பூராவிலும் நெடுஞ்சாலைத் துறைக்குத் தலைவர். இன்றுபோல் ஊருக்கு மூன்று ஏ.இ.க்கள் அப்போது இருக்கவில்லை. காலாண்டு, அரையாண்டு கல்லூரி விடுமுறை என்றால் நானும் பரமாத்மாவும் ஒன்றாகவே தாராபுரம் சென்று சென்னை திரும்புவோம். தாம்பரத்தில் இருந்து போவது எங்கள் இஷ்டப்படி. ஆனால் லீவு முடிந்து திரும்பும்போது அவனுடைய அப்பா பிடித்துக்கொள்வார். அவர் கொஞ்சம் பழைய மோஸ்தர் மனுஷர். நம்பிக்கைகள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் அவர் மிகவும் ‘கர்நாடகம்’ என்று சொன்னார்கள். அதாவது காலங்காலமாய் இருந்து வரும் மரபைத் தீவிரமாய் அனுசரிப்பவர். இப்போது இந்த வார்த்தை வழக்கில் இருக்கிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. 

தாராபுரத்தில் (அது வெறும் தாலூக்கா தலைநகராயிருந்த அன்றும் சரி, கோட்டத் தலைநகராயிருக்கும் இன்றும் சரி) ரயில் கிடையாது. சென்னை செல்வதற்கு திருப்பூர் அல்லது ஈரோடு வரை பஸ்ஸில் பயணித்து புகைவண்டியைப்2 பிடிக்கவேண்டும். எங்கள் இருவர் வீடுகளும் பார்க் ரோடு எனப்பட்ட மெயின்ரோட்டில் அமைந்திருந்ததால் ஒரு சௌகரியம். வெளியூர் போகும் பேருந்துகள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அப்போது ஒரு நியதி இருந்தது. அப்போது மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand) என்று ஒன்று வந்திராத காலம். பஸ் ஒவ்வொன்றும் அந்தந்தக் கம்பெனியின் ஸ்டாண்டில் இருந்துதான் கிளம்பும். அது திருப்பூர் பஸ்ஸாயிருந்தால்  அதன் ஜி.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டிலிருந்து எங்கள் ரோடு வழியாகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். போகும் போது எங்கள் வீட்டு வாசலில் பெட்டியுடன்4 நின்று கைகாட்டினால் பஸ்ஸை நிறுத்தி எங்களை ஏற்றிக்கொண்டு போவார்கள். ஈரோடு போய் பஸ், ரயிலைப் பிடிப்பதாயிருந்தால் நாங்கள் எஸ்.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகவேண்டும். அந்த பஸ் எங்கள் ரோடு வழியாகப் போவதில்லை.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வெளியூர் போகும் பஸ்களும் கூட டவுன் பஸ் மாதிரி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருக்கின்றன. அதற்காக என்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் போகவேண்டியதில்லை என்று தெரிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலெல்லாம் ஒரு மணி பஸ், பிறகு நான்கு மணி பஸ், அடுத்தது ஆறரை மணிக்கு என்று நீண்ட இடைவெளியில்தான் பேருந்துகள் ஓடின. ஆனால் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். அதன் குறித்த நேரம் 4 மணி என்றால் அதற்கு அரைமணி முன்னதாக நாங்கள் வீட்டில் இருந்து கிளம்பினால் போதும். ஆனால் நல்ல நேரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பரமாத்மாவின் தந்தை திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுவார். அன்று பார்த்து, பகல் 3 மணியில் இருந்து நேரம் நன்றாக இராது. ராகுகாலம், யமகண்டம் என்று ஏதாவது இருந்து தொலைக்கும். அதனால் 2-30 மணிக்கே கிளம்பி விடுங்கள் என்று சொல்லுவார். சின்னப்பையன்களாகிய நாங்கள் அஜாக்கிரதையாய் இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த நாள் சாப்பிட்டபின் ஆபீஸுக்குத் திரும்பாமல் நாங்கள் கிளம்பும்வரை வீட்டிலேயே இருக்கவும் செய்வார். நாலுமணி வண்டிக்கு ஊருக்கு முன் போய் ‘வேகு வேகு’ என்று ஸ்டாண்டில் காத்திருப்பது என்றால் எங்கள் இருவருக்குமே ரொம்ப அழுகை. விஸ்வநாதையரோ தங்கமான குணம் உள்ளவர். எங்களைக் கஷ்டப்படுத்தவும் அவருக்கு இஷ்டம் இல்லை. அதே சமயம் யோகம், நேரம் எல்லாவற்றையும் அவருக்குப் பார்த்தாக வேண்டும். கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தார். அதுதான் ‘பரஸ்தானம் போவது’.

பரஸ்தானம் என்றால் ‘வேறு இடம்’. பகல் இரண்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுக்குப் போவது தொந்தரவாயிருந்தால், அதே நேரத்தில் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பரஸ்தானமாகிய எங்கள் வீட்டில் கொண்டு வைத்து விட்டால் ராகுகாலப் பிரச்சினை தீர்ந்துபோகும். சாமான்களைப் பரஸ்தானத்ததுக்கு எடுத்துக் கொண்டுபோவது நல்ல நேரத்தில் இருந்தால் போதும், பின்னால் எப்போது அந்த ஸ்தானத்திலிருந்து (அதாவது எங்கள் வீட்டிலிருந்து) பஸ் ஸ்டாண்டுக்குப் போகிறான் என்பது பொருட்டல்ல. கொழுத்த ராகுகாலத்தில் போனாலும் ஒன்றும் இல்லை. ஆனால் கிளம்பினவன் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பித் தனது வீட்டுக்கு வரக்கூடாது. அவனுடைய சாமான்களும் திரும்பிவரக்கூடாது. திரும்பினால் பரஸ்தானம் பலனில்லாமல் போகும். எங்கள் வீட்டில் இருந்து நேராக பஸ் ஸ்டாண்டுக்குப் போய்விட்டால் சரி.  எங்கள் வீட்டில் நேரம், காலம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், இந்த உபாயத்தினால் எல்லோருக்கும் திருப்திதான். யாருக்கும் ஆட்சேபணை இல்லை.

திருப்பூர் பஸ்ஸில்தான் போகிறோம், வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம் என்கிற போது கூட எங்கள் வீட்டிலிருந்து ஐந்தே வீடுகள் தள்ளி அமைந்திருந்த அவனுடைய இல்லத்துக்கு நான் போவதற்குப் பதில்தான் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து கொள்வதையே விரும்பினான் பரமாத்மா. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் பெட்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வருவதற்கு சகுனம் பார்ப்பார் அவனது அப்பா. “நீ உள்ளேயே இரு. நான் பச்சைக் கொடி காட்டினபிறகு வந்தால் போதும்” என்று உத்தரவு இட்டுவிட்டு வாசலில் வந்து நிற்பார்.

ஒரு சுமங்கலி தண்ணீர்க்குடத்துடன் சாலையில் நடந்துபோவதைப் பார்த்தவுடன் “நல்ல சகுனம். உடனே வா” என்று மகனை அவசரமாக அழைப்பார். அப்போது பார்த்து “அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று சில நிமிடங்கள் தாமதம் பண்ணி விடுவான் என் நண்பன். அவன் வருவதற்குள் சுமங்கலி போய் ஒரு கழுதை (மூதேவியின் வாகனமான அது நல்ல சகுனமாயிருக்க வழியில்லை) எதிரே வரும். “டூ லேட். மறுபடியும் உள்ளே போ” என்று கோபமாக இரைவார் தந்தை. அந்தக் கழுதை அதற்குள் கத்த ஆரம்பித்தால் (நல்ல சகுனம்) அவனைப் போக அனு மதிப்பார். ஆனால் அதற்குள் பஸ் போய்விடமுடியும். இது மாதிரி ஓரிரண்டு முறை அவர் வாயில் விழுந்தபின், ஒரு மணி நேரம் முன்னதாகவே எப்பொழுது நல்ல சகுனம் அமைகிறதோ அப்போதே கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்து வைத்தான் பரமாத்மா.

*

1. இந்த அதிசயமான பெயர் அவனது வீடு, உற்றார் உறவினர் அளவில்தான் புழங்கியது. கல்லூரியில்  அவன் ‘பத்மநாபன்’ என்றுதான் அறியப்பட்டான். அதுதான் அவனுடைய ‘உத்தியோகபூர்வமான’ (Official) பெயர். நமது தாத்தாக்களின் பெயர்கள் சிலசமயம் நிகழ்காலப் ஃபாஷனுடன் (fashion) ஒத்துப்போவதில்லை என்பதுதான் பிரச்னை.

2. அந்நாளில் ரயில் என்றால் நிஜமாகவே ‘புகைவண்டி’யாகத்தான் இருந்தது. இரவு முழுதும் பிரயாணம் செய்து சென்னை போய்க் காலையில் இறங்கும்போது சட்டை முழுதும் கரி படிந்திருக்கும். முன்னால் இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறியிருந்தால் கரிப்பூச்சு இன்னும் கூடுதலாயிருக்கும். டீசல், எலெக்ட்ரிக்  இன்ஜின் வராத நிலக்கரி காலம்.

3. சொல்லப்போனால் அன்று எங்கள் ஊரில் பேருந்துகள் என்றாலே வெளியூர் செல்பவைதான். உள்ளூர்ப் பேருந்துகள், அதாவது டவுன் பஸ்கள் எதுவும் கோய முத்தூரைவிடச் சின்ன நகரங்களில் ஓடவில்லை. பொடிநடையில் முடித்துவிடக் கூடிய ஒரு மைல், இரண்டு மைல் தூரங்களைக் கடப்பதற்கு இரண்டணா பஸ்சார்ஜ் அழுவதற்கு தாராபுரத்துக்காரர்கள் எவரும் தயாராயிருக்கவில்லை. “கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது” என்பார்கள்.

4. அந்நாளில் ஹோல்டால் எனப்படும் படுக்கையும் இருப்பதுண்டு. படுக்கைக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது என்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து ரயில்வேக்காரர்கள் மனமுவந்து ஒரு ‘இலவசம்’ கொடுத்திருந்தார்கள். கல்லூரி மாணவர்கள்  வெயிட் அதிகமாயிருக்கும் பாடப் புத்தகங்களை அதற்குள் பதுக்குவதும் உண்டு. சலுகையின் துஷ்பிரயோகம் தான் என்றாலும், “சின்னப் பசங்கதானே” என்று ஸ்டேஷன் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்களும் மாணவப் பருவத்தில் அதே வேலையைச் செய்திருக்கக்கூடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்..

 

விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக் கொலை

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

அறுபதாண்டுகள் முன்னால் (அதாவது ஆயிரத்து தொள்ளாயிரத்து  நாற்பதுகளில்) தமிழில் ஜனரஞ்சக நாவல்கள் என்று பார்த்தால் முன்னணியில் நின்றவை ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் எழுத்துக்கள். இத்தனைக்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களும் அப்போதே -வடுவூரார் 1940லும் ஆரணியார் அதற்கும் பதினைந்து ஆண்டுகள் முன்னேயும் – காலமாய் விட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் ஒவ்வொரு நூல்நிலையத்திலும் (நூலகம் என்ற சொல் அப்போது புழக்கத்தில் இல்லை. லைப்ரரிக்கு தமிழ் வார்த்தை நூல்நிலையம்; ரீடிங்ரூமுக்கு வாசகசாலை) நிறையவே காணப்பட்டது மட்டுமல்ல, அவை எப்போதும் சுற்றிலேயும் இருந்தன என்பதும் நினைவிருக்கிறது. அவை இரண்டிலேயுமே இலக்கிய நயம், முக்கியத்துவம், எதுவும் கிடையாது. ஆனால் படிக்க சுவாரசியமாயிருக்கும். பொழுதுபோக்கு இலக்கியம் எனலாம்.

இவர்களில் ஆரணி குப்புசாமி முதலியாரின் நவீனங்கள் (நாவலுக்கு அன்றைய தமிழ்ப்பெயர்) முழுக்க முழுக்க ஆங்கில நாவல்களின் தமிழாக்கம். வேண்டுமென்றேதான் நான் மொழிபெயர்ப்பு என்று சொல்லவில்லை. ஆங்கிலக்கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்கள் மற்றும் ஊர் பெயர்களை முழுவதும் அவர் தமிழ்ப்படுத்தி விடுவார். லண்டன் லட்சு மணபுரி ஆகிவிடும். பாரிஸுக்கு பருதிபுரம்.

மேடலின் என்ற கதாநாயகி பத்மாசனி என்றும், எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரம் ராஜசேகரன் என்றும் புனர் நாமகரணம் செய்யப்படுவார்கள். அவர் கதையை மாற்றுவதில்லையாதலால் அதன் சூழல் என்னமோ மேனாட்டுப்பாணியில் தான் இருக்கும். அந்த நாகரிகம் முதலியாருக்கு ஏற்புடையதல்ல. அதை அவர் ஆங்காங்கே தெளிவுபடுத்தி விடுவார். எப்படியென்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடுநடுவே ஒரு சின்ன உபன்னியாசம் செய்திருப்பார். அதன் ரீதி பின்வருமாறு இருக்கும்: “பார்த்தீர்களா வாசகர்களே, மேலே விவரித்த கேடுகள் அனைத்தும் மேனாட்டு நாகரிகத்தில் ஸ்திரீ புருஷர்கள் நெருங்கிப் பழகுவதால் விளையும் அனர்த்தம் அன்றோ? இதை உணராது நம் நாட்டினர் சிலர் ஐரோப்பியர் போலவே நமது தேசத்திலும் ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து போஜனம் செய்ய வேண்டும் நடனம் ஆடவேண்டும் என்று சொல்லுகிறார்களே, என்ன மதியீனம்!” என்று தன் கருத்துகளைச் சொல்லிவிட்டு “இது நிற்க. நமது பத்மாவதி என்ன ஆனாள் என்று கவனிப்போம்” என்று மீண்டும் கதைக்கு வருவார்.

ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் ரெயினால்ட்ஸ் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரின் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை என்று பரவலாகச் சொன்னார்கள். ஆனால் இது பொத் தாம்பொதுவாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து தான் என்று கூறவேண்டும். நிச்சயமாக அவரின் எல்லா நவீனங்களும் ரெயினால்ட்ஸிடமிருந்து எடுக்கப்படவில்லை. அவரது மூலங்கள் அனைத்தும் மேனாட்டு நாவல்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. உதாரணமாக பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்ஸாந்தர் தூமாவின் (Alexander Dumas) மாண்டி க்ரிஸ்டோ பிரபு என்ற நாவலைத் தமிழில் செய்த முதலியாரது தமிழாக்கம் (இது அவரது புத்தகங்களிலேயே தடிமனானது கூட) ‘தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்ற தலைப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தமிழ் நாவலிலும் தூமாவின் Count of Monte Cristo ஆனவர் மாண்டி கிரிஸ்டோ பிரபுவாகவே வருவார். ஆனால் அவரது பழைய காதலி மெர்சிடெஸ்ஸின் பெயர் மீனாள் என்று மாற்றப்பட்டிருக்கும். முதலியாரின் ‘ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள்’ என்ற புத்தகத்தில் (இது முதலில் ஆனந்த போதினி பத்திரிகையில் தொடராக வந்தது) வரும் சில செயல்களாவது  ஆர்தர் கோனன்டாயிலின் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் இருந்து வந்தவை என்று தெரிகிறது.

முதலியார் தனது நாவல்களின் பெயர்களைத் தன் வாசகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலும் அவர்களைப் படிக்கத் தூண்டுமாறும் வைத்திருப்பார். அந்தக்காலத்து வழக்கப்படி அவற்றில் பலவற்றிற்கும் இரட்டைத் தலைப்புகளும் இருக்கும். உதாரணமாக ‘விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை’. கதையே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய யுத்தியான ‘தபால் குண்டு’டன் தொடங்கும். ஒரு பிரபுவின் பிறந்தநாளை ஒட்டி அவரது மாளிகையில் நடை பெறும் ஆடம்பரமான விழாவின் போது அவருக்கு வரும் ஒரு பிறந்தநாள் பரிசுப் பார்சலை அவர் நண்பர் குழாம் புடைசூழ  ஆரவாரத்துடன் திறப்பார். அந்தோ! அவர்கள் எவரும் எதிர்பார்த்திரா வண்ணம் பார்சலுக்குள் பதுக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறி அவரைக் கொன்று விடும்1. இந்த திடுக்கிடும் சம்பவத்துடன் முதல் அத்தியாயத்தை முதலியார் முடித்து விட, ஆனந்தபோதினிக்காரர்கள் இரக்கமில்லாமல் ‘தொடரும்’ என்று போட்டு விடுவார்கள். திக் திக் என்று இதயம் அடித்துக்கொள்ள வாசகர்கள் அடுத்த இதழுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என் தலைமுறையினருக்கு இந்தக் கஷ்டம் இருக்கவில்லை. ஆனந்தபோதினி பத்திரிகை வெகுநாள் முன்பே நின்று போயிருந்தாலும், அவர்களின் பிரசுராலயம் ஆரணியாரின் முழு நாவல்களையும் அச்சிட்டு வைத்திருந்தது.. நான் மேலே சொன்னதுபோல் அந்நாவல்களும் நூல்நிலையங்களில் தாராளமாகவே கிடைத்தன. மின்சார மாயவன், தபால் கொள்ளைக்காரர்கள், இரத்தினபுரி ரகசியம், மதனகல்யாணி என்று அவருடைய நாவல்களை லிஸ்ட் எடுத்தால் அவைடஜன் கணக்கில் நீளும்..

முதலியாரின் நாவல்களில் பிரபுக்களும் சீமாட்டிகளும் நிறையவே உலா வருவார்கள். பருதிபுரத்தின் பிரதான சாலையில் ஒரு உயரமான கட்டடம் இருக்கும். அதன் சாளரங்களில் திரைச்சீலைகள் (curtains) தொங்கவிடப்பட்டிருக்கும். சூரியன் அஸ்தமித்தபிறகு நாணயமாக உடைதரித்த ஒரு மாது உயர்தரமான வெள்ளைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்திறங்கி அதன் நுழைவாயிலில் மணியடிப்பாள். தீபம் ஏந்திய ஒரு பணிப்பெண் உள்ளேயிருந்து வந்து கதவைத்திறப்பாள். இவளைக் கண்டதும் வந்தனமளித்து (வணக்கம் செலுத்தி) உள்ளே அழைத்துச் செல்வாள். சிலசமயங்களில் ஆடம்பரமாக உடையணிந்த ஒரு கனவான் கிலமாகக் காணப்படும் ஒரு புராதன வீட்டில் நுழைவார். இத்தியாதி. மொத்தத்தில் முதலியாரது நடையும் பிரயோகங்களும் ஒரு தனித்துவம் கொண்டிருந்தன.

பின்குறிப்பு :
1. இந்தத் தந்திரோபாயம் ‘அராஜகவாதிகள்’ (Anarchists) என்றழைக்கப்பட்ட, இன்றைய நமது நக்ஸலைட்டுகள் போன்ற, ஐரோப்பிய பயங்கரவாத இயக்கத்தாரால் அப்போது கையாளப்பட்டது என்று நினைக்கிறேன். சமூகநீதி கோரி இவர்கள் அரசர்களையும் அரசியல் பிரமுகர்களையும் கொல்ல முற்பட்டனர். பின்னாட்களில் I.R.A. எனும் ஐரிஷ் பயங்கரவாதிகளும் இந்த உத்தியைப் பெரிய அளவில் பயன்படுத்தினர். 1980களில் நான் சிலகாலம் இங்கிலாந்தில் இருந்தபோது இது பிரித்தானிய அரசுக்கு ஒரு தலைவலியாக இருந்தது. அஞ்சல் துறையினர், பார்சல்களை எச்சரிக்கையுடன் எப்படித்  திறப்பது என்பது  குறித்து  விளம்பரங்கள் வெளியிட்டார்கள்.

*

தெலுங்கானா பிரச்சினை நடந்தவையும் நடக்கக் கூடியவையும்

எஸ்.வி.ராமகிருஷ்ணன்

சில எரிமலைகள் பல ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு திடீரெனக் குமுறத் தொடங்கும். எப்போது வேண்டுமானால் லாவாவைக்கக்கலாம், சிலசமயம் வெடிக்கவும் செய்யலாம் எனக் கேட்டு இருக்கிறோம். இன்று தெலுங்கானா பிரச்சினை அப்படித்தான் இருக்கிறது.

நாற்பதாண்டு முன் முதன்முறை அவ்வூருக்குப் போனபோது கேட்டது: ஹைதராபாத் வீதியில் யாரோ பேசிக்கொண்டு நடக்கிறார்கள். “தூகானம் குல்லா உந்தா?” என்று கணவன் மனைவியைக் கேட்டது என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் சொல்வதானால் “கடை திறந்திருக்கிறதா” என்று கேட்கிறார். அவருடைய கேள்வியில் இருக்கும் மூன்று சொற்களில் தூகானம் (அதாவது கடை) என்பது தூகான் என்ற ஹிந்தி வார்த்தையின் மருவிய ரூபம், குல்லா (திறந்து) என்பது அசல் ஹிந்தியேதான். உந்தா (உள்ளதா, இருக்கிறதா) என்பது மட்டுமே தெலுங்கு. அவர் தெலுங்கு பேசுவதாகத்தான் எண்ணியிருக்கிறார். ஆனால் இதைத் தெலுங்கு என்று அசல் ஆந்திரர்கள் அதாவது கூட்டு சென்னை ராஜ்யத்திலிருந்து* 1953ல் பிரிந்து ஆந்திரம் என்று ஒரு தனிமாநிலம் – சுதந்திர இந்தியாவின் முதல் பாஷாவாரி மாகாணம்-(அமைத்தவர்கள்) ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சுவையைக் கூட்டும் தமிழின் ‘மெட்ராஸ் பாஷைÕயைப் பற்றி சோழநாட்டுத் தமிழர்கள் நினைப்பது போலத்தான் அவர்களுடைய பேச்சுத் தெலுங்கு. இதைவிட சுத்தத் தெலுங்கு, குறிப்பாக கடற்கரை ஜில்லாக்களின் தெலுங்கு சுந்தரத் தெலுங்கு. அதைப் பற்றி அவர்களுக்குப் பெருமையும் உண்டு. விஜயவாடாவில் இதே  கேள்வி “அங்காடி தீசி உந்தா” என்றிருந்திருக்கும். இந்த உதாரணம் தினசரி வாழ்க்கையில் காணப்படும் ஆந்திரா-தெலுங்கானா வித்தியாசத்தின் ஒரு பிரத்தியட்ச வெளிப்பாடு. சொல்லப் போனால் வெளிப்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று. இதுபோல் பற்பல.

2009 நவம்பர் இறுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா வேண்டி ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தபோது யாரும் அதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர், கட்சி அரசியல் நடத்தும் ஒரு “இந்தக் காலத்து அரசியல்வாதி”தான்.

ஆந்திர மாநிலம் வேண்டி உயிரையே விட்ட அந்தக் காலத்து பொட்டி ஸ்ரீராமுலுவைப் போல் (1953) தியாகியெல்லாம் கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த உண்ணாவிரதத்தின் விளைவு. இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நிச்சயமாக, சொல்லப் போனால் சந்திரசேகர ராவ் உள்பட, எவருமே எதிர்பார்க்கவில்லை. 2009 பொதுத் தேர்தலில் தனித் தெலுங்கானா மாநிலம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக  முன்வைத்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய டி.ஆர்.எஸ். எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருந்தது. தெலுங்கானா பிரிய வேண்டுமென்று சொன்ன ஒரே அகில இந்தியக் கட்சியான பி.ஜே.பி.யின் நிலை அதைவிட மோசம்.

தேர்தலில் தெலுங்கானா பிராந்தியத்தில் கூட முதல்வர் ராஜசேகரரெட்டியின் காங்கிரஸ் நன்றாகவே செய்திருந்தது வருக்கும் வியப்பைத் தந்தது.. அண்மைக் காலத்தில் அப்பகுதியில் கிளைத்து வந்த தெலுங்கானா உணர்வு இப் போது களைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது போலத் தென்பட்டது. வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ராஜ சேகரரெட்டி “நான் இருக்கும்வரை தெலுங்கானா பிரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றே தோள் தட்டி அறிவித்தபோது அதை எவரும் தட்டிக்கேட்கவில்லை. இந் நிலையில் முதல்வர் ரெட்டியின் திடீர் மரணத்துக்குப்பின் ஆளுங்கட்சியினரிடையே தோன்றிய உட்கட்சிப் பூசலும் குழப்பமும் (முக்கியமாக, பழைய முதல்வரின் மகன் ஜகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவி வேண்டிக் கொடி பிடித்தது) கண்ட சந்திரசேகர ராவுக்கு சிறிது நம்பிக்கை மீண்டது. அரசியலில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி, பலவீனமடைந்திருந்த தன் கட்சிக்குப் புத்துயிரூட்டுவதற்கு இதுதான் தருணம் இன்று கருதியே சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் அறிவித்தார். உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்ள அவர் தயாராயில்லை. அதனால், இன்று  எல்லா அரசியல்வாதிகளும் செய்வதுபோலவே தொடங்கி சில நாட்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து ஆளுங்கட்சியினர் வரை பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, கௌரவமாக விரதத்தை முடித்துக் கொண்டார்.

அப்போதுதான் ஒரு திடீர்த்திருப்பம் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் பரவலாக, முக்கியமாக மாணவர்களிடையே நீறுபூத்த நெருப்பு போல இருந்துவந்த தனித் தெலுங்கானா உணர்வு இந்த உண்ணா விரதத்தை சாக்காகக் கொண்டு திடீரென்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது. ஹைதராபாத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது என்னிடம் தனிப்பட்ட முறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் தனது கணிப்பைத் தெரிவித்தார் (அப்போது அவர் இதைப் பேப்பரில் எழுதியதாகத் தெரியவில்லை) அதில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று: இந்தத் தடவை, முன்னால் (1969ல்) ஆனது போல் தீ அடங்காது, தொடரும். இரண்டு: ஆனால் சந்திரசேகரராவ் இதனால் அதிகப் பயன் அடையமாட்டார். ஏனெனில் இயக்கத்தையே மாணவ சமுதாயம் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டதால் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது ஆனால் ராவுடைய தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம் என்பது அவரது ஹேஷ்யம்.  அவரது கணிப்பு ரொம்பவே சரி என்று ஒரு வார காலத்திலேயே புலனாயிற்று.  சந்திரசேகரராவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுகிறார் என்று கேட்டதும் மாணவர்கள் பொங்கியெழுந்தார்கள். அவரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டார்கள். இந்த நிலையில் அவர் விரதத்தை நிறுத்தினால் உத்வேகம் பெற்று வந்த இயக்கம் மறுபடி மந்தகதிக்குத் திரும்பும் என அவர்கள் பயந்தனர். கடைசியில் ராவ் வேறுவழியின்றி உண்ணா நோன்பைத் தொடரலானார். இந் நிலையில் அரசு அவரைக் கைது செய்தது. அவரது உடல்நிலை சீர் குலையவே அவரை நிம்ஸ் (NIMS) என்ற அரசினர் ஆஸ்பத்திரியில் வைத்தது. சிலநாளிலேயே அவர்நிலை கவலைக்கிடமாக, எல்லா அரசியல் தலைவர்களும் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கலாயினர். ஆனால் இம்முறையும் அப்படிச் செய்வது அரசியல் தற்கொலையாக முடியும் என்பதை நன்குணர்ந்தராவ், அதைவிட தான் ஒரு தெலுங்கானாவின் பொட்டி ஸ்ரீராமுலுவாக சரித்திரத்தில் இடம்பெறுவது சிலாக்கியம் எனக் கருதி விரதத்தைத் தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசு இன்னொரு 1952 டிசம்பரை** எதிர்கொள்ளத் தயாராயில்லாத நிலையில் டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில் உள்துறை மந்திரி சிதம்பரம் டி.வி.யில் தோன்றி தனித் தெலுங்கானா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். உடனே ராவ் உண்ணாவிரதத்தை முடித்தார். ஹைதராபாதில் வெற்றிக் களியாட்டங்கள் நிகழலாயின.

டெல்லி முற்றிலும் எதிர்பாராத வகையில் இது ஆந்திரப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதானமாக அப் பிராந்தியத்திலே நிலைகொண்ட பிரஜாராஜ்யமும்(நடிகர் சிரஞ்சீவியின் கட்சி) தெலுங்கு தேசமும் உடனேயே ஐக்கிய ஆந்திரம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பொது ஜன உணர்ச்சியின் தீவிரத்தைக் கண்டு மருண்டுபோன ஆந்திரப் பிராந்திய காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் அதையே இன்னும் கூட ஆவேசமாக முழங்கலாயினர். இல்லாவிடில் அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் முகத்தில் விழிக்க முடியாதென்ற நிலை. சிலநாள் முன்புதான் தனித் தெலுங்கானா கொடுக்கிறோம் என்ற மத்திய அரசு இப்போது தர்மசங்கடத்தில் சிக்கியது. ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸுக்கு முக்கியமான மாநிலமென்றால், அதன் இரு பகுதிகளில் ஜனத்தொகை, தொகுதிகள் எண்ணிக்கை, பணச்செழிப்பு அனைத்திலும் முன்னின்ற ஆந்திரம்தான் தெலுங்கானாவைவிட அதற்கு முக்கியமாயிருந்தது. தவிர, அங்கேதான் தற்போதைய நிலையில் வெற்றி வாய்ப்பும் அதிகம். தனித் தெலுங்கானாவை ஆதரித்துவந்த டி.ஆர்.எஸ். பி.ஜே.பி. இரண்டின் செல்வாக்கும் தெலுங்கானாவில் மட்டுமே. ஆந்திரத்தில் பலம்படைத்த ஒரே எதிரியான சந்திரபாபுவை சிரஞ்சீவியுடன் கூட்டு வைத்துக்கொண்டு எளிதில் சமாளித்துவிடலாம் என்று காங்கிரஸ் தலைமை கணக்குப் போட்டது. (அந்தக் கணக்கு இன்றும் நீடிக்கிறது.).

அதே சமயம், சிதம்பரத்தின் டிவி. அறிவிப்பைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் தனி மாநிலம் என்ற உணர்வு தினம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஐக்கிய ஆந்திரமே நல்லதென்று எண்ணும் தெலுங்கானா பிரமுகர்கள் கூட அதைத் தைரியமாய்ச் சொல்லும் நிலையில் இல்லை. சொன்னால் அவர்கள் வீடு தாக்கப்படலாம், கார் கொளுத்தப்படும் என்ற நிலை. இத்தகைய நெருக்கடிகளில் காலங்காலமாய்க் கைகொடுத்த உபாயத்தை இப்போது மத்திய அரசு கடைப்பிடித்தது.  ஜஸ்டிஸ் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து தெலுங்கானா அமைப்பது குறித்து அனைத்துத் தரப்புகளின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து, ஆராய்ந்து ஒரு வருடத்தில் ரிப் போர்ட் கொடுக்குமாறு பணித்தது. இது ஏமாற்று வேலையென்றும் சிதம்பரத்தின் வாக்கு காப்பாற்றப்படவில்லையென்றும் தெலுங்கானாவில் பலத்த கூக்குரல்கள் எழுந்தன. கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழ, உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமாய்த் தோற்றமளித்தது. டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி.யின் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து துணைத்தேர்தலெனும் பலப் பரீட்சையை அரசின் மீது திணித்தார்கள். சில மாதங்கள் கழித்தே நடந்த அத்தேர்தலில் அவர்கள் அனைவருமே ஜெயித்தும் காட்டினார்கள். அவர்கள் விரும்பியவாறே இப்பகுதியில் தனி மாநிலக் கோரிக்கைக்கு பொதுஜன ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்து  விட்டார்கள். இத்தேர்தலில் மிகப்பெரிய இழப்பு, தெலுங்கு தேசத்துக்குத்தான். காங்கிரஸ் அபேட்சகர்கள் வெறுமனே தோற்றார்கள், அவ்வளவுதான்; சந்திரபாபு கட்சியினர் டெபாசிட்டை இழந்தார்கள். இத்தனைக்கும் 2009 தேர்தலில் தெலுங்குதேசம் தெலுங்கானவில் 39 இடங்கள் பெற்றிருந்தது. (டி.ஆர்.எஸ்.ஸைப் போல் மூன்று மடங்கு.) தெலுங்கானாவில் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் குழப்பமான இந்த அரசியலில் எதையும் சொல்வதற்கில்லை.

சரியோ தப்போ, இப்போது தெலுங்கான முழுதும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி… தனி மாநிலம் வேண்டும் என்ற விருப்பம் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரர்களுக்கும் மற்ற வெளியார்களுக்கும் எதிரான வெறியாகவும் உருவெடுத்துக்கொண்டிருப்பது கவலை தரும் விஷயம். 1969ல் தனித் தெலுங்கானா வேண்டி ஒரு பலமான போராட்டம் நடந்தது. அரசியல் சதுரங்கத்தில் வல்லவரான இந்திரா காந்தி முதலில் விஷயத்தை ஆறவைத்துப் பின் அதன் தலைவர் சென்னா ரெட்டியையே ஆந்திரப் பிரதேச முதல்வராக்கி, அவருடைய பிரஜா சமிதி கட்சியையும் காங்கிரஸில் இணைக்க வைத்தார். இந்தமுறை கிளர்ச்சி பலமாதங்கள் கடந்தும் ஆறுவதாகக் காணோம். தற்போதைக்கு எரியவில்லையே தவிர,  புகைந்து கொண்டேயிருக்கிறது. டெல்லியில் இந்திராவைப்போலவோ ஹைதராபாத்தில் ராஜசேகர ரெட்டியைப் போலவோ சாலக்காக கையாளுவோர் (பீமீயீt லீணீஸீபீறீவீஸீரீ) எவரும் இல்லை. இரண்டு கேள்விகள் – கிரேக்கப் புராணத்தில் வரும் டெமோ கிளின் கத்தி (ஞிணீனீஷீநீறீமீs’ sஷ்ஷீக்ஷீபீ) போல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டிலிருந்தும் சரி உள்நாட்டிலிருந்தும் சரி, முன்போலப் பெரிய முதலீடுகள் வருவதில்லை. போனவருடம் வரை அசுரவேகத்தில் வளர்ந்து வந்த ஹைதராபாத் அம்முதலீடுகளை பெங்களூருக்கும் சென்னைக்கும் இழந்துவிட்டு ஸ்தம்பித்து நிற்கிறது. முதலீட்டாளரைத் தயங்க வைக்கும் அவ்விரண்டு வினாக்கள்:

ஒன்று: இன்றைய ஆந்திரப் பிரதேசம் ஆந்திரம், தெலுங்கானா என்று பிரிக்கப்படுமா.?

இரண்டாவது கேள்வி (அவர்களுக்கு இன்னும் முக்கியமானது): பிரிக்கப்பட்டால் ஹைதராபாத்தின் அந்தஸ்து என்ன?

தெலுங்கானாவைப் பிரிப்பதில் மத்திய அரசுக்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன.

1. இதைக் கொடுத்தால் விதர்ப்பா, கூர்க்காலாந்து என்று பக்கம் பக்க மாக பிரிவினைக் கிளர்ச்சிகள் வீறு கொண்டு எழும்பும். அது பெரிய தலைவலி.

2. பிரிவினை நதிநீர் பங்கீடு முதல் பல விஷயங்களிலும் சச்சரவுக்கு வழிவகுக்கும்.

3. ஆந்திரர்கள் தெலுங்கானா பிரிய சம்மதிக்கலாம், ஆனால் பெரிதும் அவர்களால் (அவர்களுடைய முதல், அவர்களின் தொழில்திறன்) வளர்ந்த ஹைதராபாத் பெரு நகரை இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள். ஹைதராபாத்திலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலை முறை பல லட்சம் ஆந்திரர்கள் பெருநகரில் இருக்கின்றனர். தொழிலதிபர்களில் முக்கால்வாசியும் அவர்களே. நகரம் தெலுங்கானவுக்குப் போனால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காதென்று அஞ்ச இடமிருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரு தீர்வு, நகரை யூனியன் பிரதேசமாக்கி இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக்குவது. அப்படியிருந்தால்தான் முதலீட்டாளர்களும் தொழில் வளர்ச்சியும் திரும்புவதற்கும் ஏதுவாகும்.

3. இதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. அ. சண்டீகரைப் போலன்றி இத்தலைநகர் இரு ராஜ்யங்களுக்கு மத்தியில் அமையாமல், தெலுங்கானாவுக்கு நட்டநடுவே ஆந்திரத்திலிருந்து நூறுமைல் தூரத்திலிருக்கும். ஆ. தெலுங்கானர்கள் இதை எதிர்ப்பார்கள்.

மொத்தத்தில் பார்க்கும்போது ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட் எப்படியிருந்தாலும் டெல்லி அரசு தெலுங்கானாவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகக்கூடும். அதற்கு இருக்கும் ஒரு அனுகூலம், நாடாளுமன்றம், ஆந்திர சட்டசபை இரண்டிற்குமே இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆயுள் இருப்பது. அதற்குள் எவ்வளவோ நடக்கலாம், அப் புறம் பார்க்கலாம் என்ற யோசனை இருக்கிறாற்போல் தெரிகிறது.

அடிக்குறிப்பு
* Composite Madras State
** பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்த தேதி 16-12-52.


எஸ். ராமகிருஷ்ணன் : ஏற்புரை

போர்ஹேஸ் கூறுவார். “உலகத்திலேயே மிகச் சிறந்த கற்பனா கதாபாத்திரங்கள் வாசகர்கள்தான்’’  என்று. வாசகன் என்கிற முகமூடிதான் மிக எளிமையானது. அதை எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்ளலாம். மார்க்வெஸ், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் முன் இன்றும் நான் வாசகன்தான். ஒரு ஷேக்ஸ்பியரைப் படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள்ளும் ஒரு ஷேக்ஸ்பியர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.
என்னுடைய கட்டுரைகள் புனைவுகள் சார்ந்து எழுதப்படுகின்றன. புனைவுகள் ஒரு எழுத்தாளனுக்கு பல சாத்தியங்களை, பரிசோதனை முயற்சிகளை வழங்குகிறது.

ஒரு மனிதன் எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடுகிறான். நினைவுகள்தான் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எழுத்தாளர்கள் தொடர்ந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உலகத்துக்கு எதிராக எதிர்வினை தொடுக்கிறான். அந்த எதிர்வினையை உண்மையாகச் செய்கிறான். அதில் பாசாங்கு இல்லை. போலித்தனம் இல்லை. எப்போதுமே எழுத்தாளன் தன் அகக்குரலுக்கு பயப்படுகிறான். இன்று தமிழில் எழுதப்படும் அனைத்து படைப்பாளிகளின் எழுத்துகளிலும் முன்னோடிகள் இருக்கிறார்கள். அவர்களின் மரபு தொடர்கிறது. இன்று வெளியிடப்பட்ட நான்கு நூல்களிலுள்ள கட்டுரை மற்றும் கதைகள் நான் இந்த உலகத்தின் மீது காட்டும் எதிர்வினை அல்லது அக்கறை என்று சொல்லலாம்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். “நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்” என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் ‘மொட்டைக் கடுதாசி’

மொட்டைக் கடுதாசி – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.

நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும்  – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான். ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகி தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.

ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும்  எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும். கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாக சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான். “தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.

சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில்  இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை !


** மாதவையாவின் இந்த நாவல் முதல் பாகம் 1898 லும் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகள் கழித்தும் வெளி வந்தது.

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை –

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் ‘பட்டக்காரர் சப்ளை’.

பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.

பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.

இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் ‘பட்டக்காரர் சப்ளை’யும் நின்று போனது.


# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம் – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

[%image(20050921-svr_image1.jpg|375|238|கல்யாண ஊர்வலம்-1)%]

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில்1 உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள்.

நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மண்ணெண்ணை வாசம் மல்லிகை மணத்தோடு இழைந்து சுகந்தமான ஒரு நறு மணமாகவே தோன்றும். அந்த வாசனை இல்லாமல் கல்யாண ஊர்வலங்கள் பரிமளிக்க முடியாது.

அந்தக் காலத்தில் கார் என்பது அபூர்வமான வஸ்து. பல குழந்தை கள் காரிலே ஏறியிருந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் ஊர்வலத்துக்குக் கார் வந்து நின்ற உடனேயே, கல்யாணத்துக்கு வந்த குழந்தைகள், முக்கியமாக மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள்  காணாதது கண்ட மாதிரி ஓடி வந்து அதை ஆக்கிரமித் துக்கொள்வார்கள். அப்புறம் மாப் பிள்ளை வரும்பொழுது அவருக்கு பின் ஸீட்டில் எப்படியோ இடம் பண்ணிக் கொடுப்பார்கள். ஊர் வலம் தொடங்கும்போது அவருக்கு இரண்டு பக்கமும் உறவின வாண்டு கள் பெருமை தலைகொள்ளாமல் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும். முன் ஸீட்டில் டிரைவரின் நிலை நெருக்கடி நிலை தான். பரம்பரை பாத்தியதை என் பது போல இது விஷயத்தில் குழந்தைகளுக்கு ஒரு உரிமை இருந்தது. தீபாவளிக்குப் பட்டாஸ் மாதிரி இந்தக் குழந்தைப் பட்டா ளம் இல்லாது மாப்பிள்ளை ஊர் வலம் கிடையாது; சோபிக்கவும் சோபிக்காது.

[%image(20050921-svr_image2.jpg|375|254|கல்யாண ஊர்வலம்-2)%]

சாதாரணமாக மாப்பிள்ளை வெளியூர்க்காரராக இருப்பார் என் பதால் அவர் எப்படி இருக்கிறார் என்ற ஆவல் ஊர்க்காரர்கள் எல் லோருக்கும் உண்டு. ஆகவே ஊர் வலம் போகும் வீதிகளில் எல்லோர் வீட்டு வாசற்படிகளும் நிறைந்து காணப்படும்.

முதல் நாள் ஊர்வலத்தில் மாப்பிள்ளை மட்டும்தான் என்றால் அடுத்த நாள் திருமணம் ஆன பிறகு ராத்திரி ஊர்வலம் இன்னும் வெகு ஜோராக இருக்கும். இதில் பெண் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். அநேகமாக அதே காராகத்தான் இருக்கும். புஷ்ப அலங்காரங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஊர் வலத்துடன் போகும் கூட்டம், வேடிக்கை பார்த்து நிற்கும் கும்பல் இரண்டுமே இன்று கூடுதலாக இருக்கும். “நல்ல ஜோடிப் பொருத் தம்” என்று மகிழ்பவர்களையும் மனதார வாழ்த்துபவர்களையும் தவிர பார்த்து வயிறு எரிபவர்களும் ஊர்க்காரர் கூட்டத்தில் இருப்பர். கல்யாண விருந்தினாலோ அலைச்ச லினாலோ அடுத்த நாள் மணமக்க ளில் யாருக்காவது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டால் “பொல்லாதவர் களின் கண்கள்தாம் காரணம்” என்று சொல்லப்படுவது வழக்கமா யிருந்தது.

நாற்பதுகளுக்கும் முந்தின காலத்தில் ஊர்வலத்திற்காக சாரட்டு வண்டிகளும் நிறைய இருந் திருக்க வேண்டும். சில ஊர்களில் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந் தன. 1950ல் திண்டுக்கல்லில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். பெண்ணின் தந்தையால் “விசாரித் துக் கொண்டு வா” என்று அனுப் பப்பட்டவர் திரும்பி வந்து, “கார் 30 ரூபாய், சாரட்டு (அலங்காரக் குதிரை வண்டி) 12 ரூபாயாம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார். காதைத் தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘அழகான சாரட்டை விட்டுவிட்டுக் கூடப் பணமும் கொடுத்து ஓட் டைக் கார் யாராவது வைப்பார் களா’ என்று எண்ணினேன். எங்கள் ஊரில் சாரட்டு கிடையாது. நான் சாரட்டு ஊர்வலத்தைப் பார்த்த தில்லை. ஆகையால் என் சொந்த நலனும் இதில் கலந்திருந்தது என்னவோ உண்மை. பெண்ணைப் பெற்ற தகப்பனார் பிசினஸ் கொஞ்சம் நொடித்துப் போய் பண முடையில் இருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டிருந்ததனால் பதி னெட்டு ரூபாயை மிச்சம் பண்ணி ராஜாராணி காலம் போல் சாரட்டை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இரண்டு நிமிஷம் யோசனை செய்த வர் “சரி, காரே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். எனக்குத் தலை யில் இடி விழுந்தாற் போலிருந்தது. என்ன செய்வது? அன்று நான் இழந்த சாரட்டு ஊர்வலம் காணும் பாக்கியம் அப்புறம் என்றுமே வாய்க் கவில்லை. மத்திய அறுபதுகளில் நடந்த என் கல்யாணத்துக்கு சாரட்டு வர ‘சான்ஸ்’ உண்டா என்று ஜாடைமாடையாக, ஆனால் ரொம்ப நம்பிக்கையில்லாமல்தான் விசாரித்துப் பார்த்தேன். சாரட்டு என்பது சரித்திரம் ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.

ஊர்வலத்தைப் பற்றிய கதையை ‘மாப்பிள்ளை டிரஸ்’ பற்றி இரண் டொரு வார்த்தைகள் சொல்லாமல் முடிக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பு என்றால் கோட்டு, ஸ¨ட்டு, டை (எல்லாம் மாப்பிள் ளைக்கு மாமனாரின் உபயம்) இன்றி யமையாத அயிட்டங்கள். அவற்றை அணிந்துதான் மாப்பிள்ளை முறுக்குடன் பவனி வருவார். சில மாப்பிள்ளைகளுக்கு ஸ¨ட்டும் ‘டை’யும் அணிவது முதல் தடவை யாகவே இருக்கும்.2 பலருக்கும் தெரிந்தவர் யாராவது டை கட்டி விடுவார்கள். அந்தக் காலத்தில் டெரிலீன் டெரிவுல் போன்ற துணி கள் கிடையாது. கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் உல்லனே உத்த மம். ஸ¨ட் என்பது ‘ஆயுள் பரியந் தம்’ (ஆயுள் முழுவதும்) வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் கருதப் பட்டது. அதனால் பெரும்பாலும் ‘மாப்பிள்ளை டிரஸ்’ கம்பளி ஆடையால்தான் தைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சீதோஷ்ணத்துக்கு அவ்வளவு ஏற்புடையதில்லைதான். அதுவும் கல்யாணம் சித்திரை மாதத்தில் இருந்தால், மாப்பிள்ளை யானவர் குழந்தைகளின் கும்பலின் நடுவே வியர்க்க வியர்க்க உட்கார்ந் திருப்பது காண்போர் மனத்தைக் கரைக்கக்கூடியதொரு காட்சி.

_________________________________________________________________________________

(1. அதாவது டூரர் டாப் என்ற, கேன்வாஸ் துணியால் ஆன கூரையைக் கொண்ட வண்டி. பழைய மாடல்களில் சகஜமாகக் காணப்பட்ட இது பிற்காலத்தில் ஏனோ அருகிப்போயிற்று. நாற்பதுகளில் இருந்தே வெளிவருவது அபூர்வமாயிற்று. வெயிலையும் வெப்பத்தையும் இன்றைய கார்களை விட அது நன்றாகவே சமாளித்தது என்று தோன்றுகிறது.

2. இதற்கும் முந்தின காலத்தில் கோட்டு அணிவது பரவலாக இருந்திருக்கிறது. ஆனால் ஸ¨ட் அபூர்வம். நாற்பதுகளில் இருந்து கோட்டும் மிகக் குறைந்துவிட்டது.)

அது அந்தக் காலம்

சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களைத் தேடி வாங்கினேன். அப்படி வாங்கிய புத்தகங்களில் “அது அந்தக் காலம்” என்ற புத்தமும் ஒன்று.

நான்கு மாதம் என்று நினைக்கிறேன். உயிர்மையில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் “ரயில் பிரயாணத்தின் கதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். மிகவும் நல்ல கட்டுரை. அடுத்த மாதம் அசோகமித்திரன் “இரயில் பயணங்களில்” என்று அதைத் தெடர்ந்து எழுதினார். இது ஒரு போனஸாக அமைந்தது.

நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள் கிடைக்குமா என்று விசாரித்ததில், இவரின் கட்டுரை தொகுப்பு ஜனவரியில் வரவிருப்பதாகச் சொன்னார்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் பற்றி …

எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்க ஆனையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆனணயாராக ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு “அது அந்த காலம்”

இவர் எழுதிய கட்டுரைகள் – ஓம்சக்தி, துக்ளக், தினமணி, கணையாழி, உயிர்மை, போன்ற தொப்புள் சமாச்சாரம் இல்லாத பத்திரிக்கைகளில் வந்தவை.

புத்தகத்தில் 1940கள் காலத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்தில் நான் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. பல வரலாற்றுச் செய்திகள், மிகைப்படுத்தப்படாமல் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். இந்தப் புத்தகத்தை படித்த போது ஒரு வயதானவர் தன் அனுபவத்தை எனக்குச் சொல்லதாகவே எனக்குத் தோன்றியது.

[ … அப்போது மிக சிலரே கார் வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுக்கு ரேஷன் முறையில் கொஞ்சம் பெட்ரோல் கொடுத்த அரசாங்கம், பேருந்துகளுக்கு அடியோடு மறுத்துவிட்டது. விளைவு, எல்லா பஸ்களும் அடுப்புக் கரியில் ஓடின. பஸ்களுக்கு பின் ஒரு ‘டிராம்’ இணைக்கப்பட்டிருக்கும். அதில் கரியை கொட்டி, வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் குமுட்டி அடுப்பு போல பற்ற வைப்பார்கள்….]

சில விஷயம் நாம் கேள்விப்படாதது

[… கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து சிதையில் கஸ்தூரிபாவின் இரண்டு கண்ணாடி வளையல்கள் மட்டும் முழுதாகவும் நிறம் மாறாமலும் இருப்பதைக் கண்டு ஓடோடி வந்து காந்திஜியிடம் சொன்னார். அதை நம்ப மறுத்த மகாத்மாவிடம் நேரில் வந்து பார்க்குமாறு மன்றாடினார். காந்திஜி போய்ப் பார்க்கையில் அவ்வாறே கிடக்கக் கண்டார். கஸ்தூரிபா ஒரு சிறந்த பதிவிரதையாதலால் இப்படி நடத்திருக்கிறது என்று கருதிய காந்திஜி அவற்றை எடுத்துப் பத்திரமாகப் போற்றி வைத்துக்கொண்டார்…]

காலம் எப்படி மாறியுள்ளது என்று இதைப் படித்தால் புரியும்

[ … பல நகரங்களும் சிற்றூர்களும் நதிக்கரையிலேயே அமைந்திருந்தன அதில் சென்னையும் அடக்கம். சென்ற நூற்றாண்டில், தான் தினந்தோறும் கூவம் ஆற்றில் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போனதாகப் பச்சையப்ப முதலியார் எழுதிவைத்திருக்கிறார். ஆனால் இக்கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கூவம் முழுச் சாக்கடையாகவே மாறிவிட்டிருக்கிறது. நல்ல வேளையாக இந்தக் கதி காவேரி, தாமிரவருணி, அமராவதி போன்ற நதிகளுக்கு வந்த்திருக்கவில்லை…]

தண்ணீர் பற்றி அவர் எழுதியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது

[… வீட்டுக் கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரைத் தையரியமாக அப்படியே குடிக்கலாம். ஆற்று நீராக இருந்தால் காய்ச்சிக் குடிப்பது நல்லது என்று சொன்னார்கள். கோடைகாலத்தில் ஆற்றில் நீர் மட்டம் குறைந்த போதும் ஊரில், டைப்பாய்டு வியாதிகள் பரவிய சமயங்களில் சுகாதார இலாகாவினர் இதை வலியுறுத்தினார்கள்……மாடும் மனிதனும் குளிப்பதும், துணி துவைப்பதும் அன்றைய அசுத்தங்கள்….அறுகள் இந்தச் சின்ன அழுக்குகளை ஜீரணம் செய்துகொள்ள முடிந்தது…இன்றைய நதிகள், வரலாற்றில் காணாத இன்றைய ராட்சஸ ஆலைகளின் கழிவுகளால் வந்த அஜீர்ணத்தால் துடித்துக்கொண்டிருக்கின்றன…. சுவையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள இடங்கள் சிலவற்றில் இன்னொரு தண்ணீர் சப்பளை இருந்தது. அது எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரின் உபயம். …சிறு சிறு ஸ்டேஷன்களில் குப்பம்வாழ் ஏழைமக்கள் சட்டிபானைகளோடு தண்ணீருக்கு வந்து நிற்பார்கள். என்ஜின் டிரைவர்கள் கரிசனத்தோடு இவர்களுக்கு என்ஜின் பாய்லரில் கொதித்த வெண்ணீரைத் தாராளமாக வழங்குவார்கள்….]

சில தகவல்கள் ஓ அப்படியா என்று வியக்க வைக்கிறது.

[…நெல் குத்தினால் வரும் அரிசி மனிதனுக்கு உணவென்றால், தவிடு மாட்டுக்கு முக்கியமான உணவு. முன்றாவதாக வரும் உமிக்கும் உபயோகம் உண்டு. உமியைக் குவித்து அதில் ஒரு தணலை வைத்துவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் கனன்று உமி முழுவதும் உமிக்கரியாகிவிடும். அதுதான் குடும்பத்தினர் எல்லோருக்கும் வருடாந்திர உபயோகத்துக்கான பல் பொடி. அதை அப்படியேயோ அல்லது சிறுது உப்பு லவங்கம், சேர்த்தோ உபயோகிப்பார்கள். கரிக்கு(Carbon) ஈறுகளை உறுத்தாமலும் எனாமலைச் சிதைக்காமலும் அழுக்குகள் அனைத்தையும் இழுத்துக் கொள்ள கூடிய சக்தி உள்ளதால் பிரஷ் தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட இந்த உண்மை பன்னாட்டுப் பற்பசைக் கம்பெனிகளின் விளம்பரப் பிரச்சார வெள்ள்த்திற்கு முன்பு இன்று பின்வாங்கி விட்டது….]

பிராமனர் விட்டு ‘பத்து’ பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

[… “பத்து” என்ற ஒரு ஆசாரம் சில வகுப்பினரிடையே, குறிப்பாகப் பிராமணர் வீடுகளில் அனுசரிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் கொட்டு போய்விடக் கூடிய பதார்த்தங்கள் அவ்வளவும் பத்து. உதாரணமாக, முறுக்கு பத்து இல்லை. ஆனால் சாதம், சாம்பார், இட்லி முதலியன பத்து. அவற்றையோ, அவை வைக்கப்படிருக்கும் பாத்திரங்களையோ தொட்டால் கையை அலம்பிக்கொள்ள வேண்டும். இதனால் எல்லாம் அனவாசியமாகப் பெண்களுக்கு வேளை கூடிற்று…இன்று உடற்பயிற்சி இல்லாமல் உடம்பு வலி வருவது போல், அதற்கு நேர்மாறான காரணங்களால் உடம்பு வலி வந்து அவஸ்தைப் பட்டனர் அன்றைய இல்லத்தரசிகள்…]

நாற்பதுகளில் சினிமா, குடும்ப டாக்டர், அடுப்பங்கரை, கலாச்சாரம், போட்டோ, பேனா, கல்யாணங்கள் என்று பல விஷயங்கள் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரலாறு புள்ளிவிபரங்கள் இல்லாமல் அன்றைய வாழ்கையும், மனிதர்களை பற்றியது. இந்த ஆண்டு வந்த மிக முக்கியமான நூலாக இதைக் கருதலாம்.

அசோகமித்திரன் முன்னுரையில் குறிப்பிடுவது போல் ..”இந்த நூலுக்கு ஒரு பெயர் மற்றும் பொருளகராதி தயாரித்தால் அது பல பக்கங்களுக்குப் போகும்…” அது புத்தகத்தைவிட பெரிதாக இருக்கும்.

“அது அந்தக் காலம்”, எஸ்.வி.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம். 119 பக்கங்கள், 60/= ருபாய். படிக்க முன்று, மணி முப்பது நிமிடம் ( நடுவில் இரண்டு காப்பி, நான்கு தொலைபேசி அழைப்பு )

பிகு: நாளை ராமகிருஷ்ணன் “ரயில் பிரயாணத்தின் கதை” மற்றும் அசோகமித்திரன் எழுதிய “இரயில் பயணங்களில்” கட்டுரைகள் ஆகியவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்.

எண்ணெய்க் குளிப் படலம்

எண்ணெய்க் குளிப் படலம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்

Image hosted by Photobucket.com தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது. ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம், பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் (1945) கால தேச வர்த்த மானங்களையட்டி, இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது. ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். அதாவது, அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு. அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம். ‘வயது வந்த’ பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை.

என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம். கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து, என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார். சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம், அரைக்கீரை விதைத் தைலம். (கும்பகோணம் டி. எஸ். ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம்) இவை இருக்கும். சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள், சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது. ஆனால் விலை அதிகம். மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார். அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ, கோட்டு, டர்பன் அணிந்து, நீள தாடி மீசையுடன், நீண்ட நாமமும் தரித்திருப்பார்.

தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம். இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது. ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும். (இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும்) இது எனக்குப் பிடிக்காத ஐட்டம். முக்கியமாக, முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை. அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும். அப்போது வெயிலில் போகக் கூடாது, ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள். அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது. போனால் தலைவலி வரும். ஆக, சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும்.

பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி, வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி, எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும். எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும். தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ, போன்ற ‘ஜோர்’ எல்லாம் வரவில்லை. சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்(தெலுங்குச் சீமையில், அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில், ‘குங்குடிக்காயை’ அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர். நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் (ஷிஷீணீஜீ ழிut) என்று ஆங்கிலத்தில் எழுதினர். ஆனால் ‘குங்குடிக்காய்’ தான் நிஜமான ‘சோப் நட்’. சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும். நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது. ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்tமீஸீபீ ஆகியிருக்கலாம். கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும், மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம். சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக (சிலை ரூபத்தில்) வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ, பாரா மஹால் (தர்மபுரி) யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.) ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள். சீயக்காய் உஷ்ணம், அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள். சீயக்காய், அவரை வகையைச் சேர்ந்த, ஆனால் சாப்பிட லாயக்கில்லாத (uஸீ ணிணீtணீதீறீமீ) ஒரு. காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை. இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள். நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான ‘திரிதோஷ சமனம்’ . பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை (ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஜிலீக்ஷீமீமீ ) நிறையவே கையாளப்பட்டது. அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல. சீயக்காய் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்’ சாதனம். அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது. அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது. இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ, பழங்கஞ்சி (அதாவது நேற்று வடித்த கஞ்சி) யையோ உபயோகித்தனர். எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார், சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர். அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை.

அரப்புக் கலவை தலைக்குத்தான். உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள். வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும். பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது. அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக ‘பயத்தம் மாவை’ மட்டுமே பயன்படுத்தினார்கள்.

ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது. அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் (பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி, இத்தியாதி) வந்தால் , ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது. சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு. உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள். சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு. ஆனால், தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது.

எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு. முக்கியமாகச் சிறுவர்கள் ‘தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள்’ என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள். அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள். இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள்.

சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள். இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. டாக்டர்களிடம் சொன்னால், இது கூடவே கூடாது, கெடுதல் என்றார்கள். அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்.

பின்னாளில் கண்டேன், வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை (அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள்) முக்கியமாக, குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் ‘மாலிஷ்வாலா’ வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும். 1956 வாக்கில் ஸி. ஐ. டி (சி. மி. ஞி) என்ற ஹிந்திப் படத்தில் ‘தேல் மாலீஷ்’ என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆயிற்று. அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார். இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய, பிரபலமானதொரு ஸீன். இன்றும், பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம்.

தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம். அந்த நாட்களில் எல்லோருக்கும் ‘கட்டுக் குடுமி’ இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது. ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து ‘கிராப்’ வந்துவிட்ட படியால், அவர்களின் கவனம் விதவிதமான ‘கட்டிங்’குகளின் பால் திரும்பவே, ‘மாலிஷ்’ கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.

நன்றி: உயிர்மை, மார்ச் 2005

பணம் காசின் பரிணாமம்

பணம் காசின் பரிணாமம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்

ஓரிடந் தனிலே

நிலைநில்லாது லகினிலே

உருண்டோடிடும்

பணங்காசெனும்

உருவமான பொருளே

’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.

Image hosted by Photobucket.comஎனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.

காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.

ஓட்டைக் காலணாவின் பிரதாபத்தைச் சொல்லுமுன் ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்காக அன்றைய நாணயங்களை (coinage) பற்றியதொரு அறிமுகம் தேவைப்படலாம்.

மெட்ரிக் முறையென்பது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பாட புத்தகங்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. முகவை நிறுவை அளவுகளிலிருந்து நாணய மாற்று விகிதம் வரை எல்லாம் திறிஷி (பிரிட்டிஷ்) முறைதான். கடைக்குப் போனால் ஒன்றரை வீசை ரவையை நிறுத்தும் ஒரு படி உப்பை அளந்தும் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் ஏழரை அணா (1-7-6) என்று விலை சொல்லுவார்கள். ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி. அதற்கு ஆங்கிலத்தில் பை (Pie) என்று பெயர். இலங்கையிலும் ஆட்சி செலுத்தி வந்த அதே பிரிட்டிஷார் ரூபாய்க்கு 100 சதம் (Cent) என்று வைத்துப் பள்ளிச் சிறுவர்களின் பாரத்தைக் குறைத்தார்கள். ஏனோ இந்தியாவுக்கு அந்தக் கருணையைக் காட்டவில்லை.

அதோடு கணக்கு நின்றுவிடவில்லை. பனிரெண்டு தம்பிடிகள் சேர்ந்தது ஒரு அணா. அதுபோல் பதினாறு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய் ஆகும். இதெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவில் அதாவது மாகாணங்களில். மகாராஜாக்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்கள் ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட நாணயங்களைத் தத்தம் பாணியில் அச்சடித்தன. உதாரணமாக, திருவாங்கூரில் சக்கரம் இருந்தது. நம்ம ஊரிலே “அவன் கையிலே நாலு காசு சேர்ந்து போச்சு, திமிர் ஏறிடுத்து” என்று சொல்வது போல திருவாங்கூரில் “அவன் கையிலே நாலு சக்கரம் சேர்ந்து போச்சு . . .” என்று பேசுவார்கள். இருபத்தெட்டு சக்கரம் ஒரு ‘சர்க்கார் ரூபாய்’ (திருவாங்கூர் ரூபாய்.) பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல். அதாவது 28 லு சக்கரம். இதில் இரண்டு வினோதங்கள். திருவாங்கூரின் சர்க்கார் ரூபாய் என்பது ஒரு மதிப்புதான். அப்படி ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்படவில்லை. மற்றும் பிரிட்டிஷ் நாணயம் சமஸ்தானங்களில் செல்லுபடியாகும். ஆனால் சமஸ்தான நாணயங்கள் சென்னையிலோ கோவையிலோ செல்லுபடியாகவில்லை.

ஒரு ரூபாய், எட்டணா (இன்றைய 50 பைசா), நாலணா (25 பைசா), மற்றும் இப்போது இல்லாத இரண்டணா, ஓரணா, அரையணா, காலணா, தம்பிடி என்ற நாணயங்கள் இருந்தன. விக்டோரியா மகாராணி காலத்திய (அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட) பழைய ரூபாய் நாணயங்கள் ஏறக்குறைய முழு வெள்ளியால் ஆனவை. முதல் உலக யுத்தத்துக்குப் (1914-1918) பிந்தைய ஐந்தாம் ஜார்ஜ் (1911-35) படம் போட்ட ரூபாய்கள் அதைவிடத் தரம் குறைந்தாலும் கணிசமாக வெள்ளிதான். எனக்குத் தெரிந்த ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் (பட்டம் : 1938) ரூபாய்கள் இரண்டாவது உலக யுத்தத்தினால் (1939-45) மேலும் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் பாவமாக இருந்தன. அவற்றின் வெள்ளி எடை 6/16 தோலா என்று கேட்ட நினைவு. (ரூபாய் நாணயத்தின் எடை ஒரு தோலா.) சுதந்திரம் வரும் தருவாயில் (1947) முதன் முறையாக வெள்ளியே இல்லாமல் நிக்கலினால் ஆன ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் புலி போட்டிருந்தது. வெள்ளியே இல்லாமல் ரூபாயா? நம்ப முடியாத கிழவர்கள் “கலி முற்றிவிட்டது” என்று அங்கலாய்த்தார்கள்.

அரை ரூபாய் என்பது ஏறக்குறைய ரூபாயின் பாதி அளவிலும் நாலணா நாணயம் (இதைப் பொதுமக்கள் ‘பணம்’ என்று சொன்னார்கள்) அதிலும் பாதி சைஸிலும் வட்டமாக இருந்தன. ஆனால் ஒரு பணத்தின் பாதி மதிப்பு கொண்ட இரண்டணாவோ அளவில் நாலணாவைவிடப் பெரிதாகவும் உருவத்தில் சதுரமாகவும் இருக்கும். ஓரணா நாணயம் வட்டமும் அல்லாது சதுரமுமல்லாது ஒரு அலங்காரமான டிசைனில் இருக்கும். இரண்டணாவின் ஒரு சின்ன சைஸ் பிரதி போலக் காணப்பட்ட அரையணா நாணயமும் உண்டு. இவை எல்லாம் நிக்கல் கலந்த அல்லது கலக்காத வெவ்வேறு உலோகக் கலவைகள். அதற்கும் கீழே இருந்த காலணாவுக்கும் தம்பிடிக்கும் அந்த அந்தஸ்து கிடையாது. அவை வெறும் தாமிரத்தினால் அடிக்கப்பட்டவை. மின்சாரம் பெரிய அளவில் தூர இடங்களுக்கு அனுப்பப்படும் வரை (electrical transmission) செம்பின் விலை மதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “என் கிட்டே செப்பால் அடித்த காசு கூடக் கிடையாது” என்ற வாக்கியம் வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தபோது சாதாரணமாகப் பிச்சைக்காரர்களுக்குக் காலணா போட்டார்கள். அதற்கு முன், அதாவது இரண்டாம் உலக யுத்தம் வந்து விலைவாசிகள் கண்டபடி உயரும் வரை, பிச்சைக்காரர்களுக்கு ஒரு தம்பிடிதான் கொடுத்தார்களாம். ஆனால் 1945ல் ஒரு தம்பிடி கொடுத்தால் பிச்சைக்காரர்கள் முறைத்தார்கள். “நீயே வைத்துக்கொள்” என்று கூட எப்போதாவது சொன்னார்கள். பழனி போன்ற கோயில்களுக்குச் செல்பவர்கள் மாத்திரம் பின்னால் வெகுகாலம்வரை கூடத் தம்பிடி கொடுத்தனர். மலை ஏறும் வழி நெடுக இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்குக் காலணா கொடுத்துக் கட்டுபடியாகாது. தவிரவும், தலைக்கு ஒரு தம்பிடி என்றால்கூட அவர்களின் தினசரி கலெக்ஷன் நல்லபடியாக இருக்குமாதலால் இது இருசாராருக்குமே அனுகூலமாக இருந்தது. ஐம்பதுகளில் தம்பிடிகளின் புழக்கம் கடைவீதியில் அடியோடு அற்றுப் போய்விட்டது. ஆனால் பழனியில் சில்லறை விற்கும் வியாபாரிகள் ஒரு ரூபாய்க்கு 150 என்ற விகிதத்தில் தம்பிடி நாணயங்கள் கொடுப்பார்கள். (எண்ணிப் பார்த்தால் இதைவிடக் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் முருகன் தரிசனத்துக்கு மலை ஏறும் அவசரத்தில் யாரும் எண்ணினதாகத் தெரியவில்லை!)

இந்தத் தம்பிடிகள் பிச்சைக்காரர்கள் கைக்குப் போய்த் திரும்ப அதே கடைக்காரர்களிடம் ராத்திரிக்குள் வந்து சேர்ந்துவிடும். அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ரூபாயாகவும் அணாவாகவும் கொடுப்பார்கள். அதிலும் கமிஷன் அடிக்காமல் ஆண்டிகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தின் முழு மதிப்பு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

முதலில் ஒரு ரூபாய்க்கு உலோக நாணயம்தான் இருந்ததாம். அதாவது நோட்டு கிடையாது. எனக்குத் தெரிந்தபோது ஒரு ரூபாய்க்குக் காகித நோட்டும் இருந்தது. அதுவும் யுத்த காலத்தில் தான் தொடங்கிற்றாம். இதிலும் அரசின் மதிப்பைக் குறைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றிலும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு உறுதி மொழி அளித்துக் கையப்பம் வைத்திருப்பார். அதன்படி எவரும் ரூபாய் நோட்டுக்களை ரூபாயாக கஜானாவில் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதற்கு அர்த்தம் அந்த அளவு வெள்ளியைத் திருப்பிக் கொடுக்க அரசு கடமைப்பட்டிருந்தது என்பதே. அதாவது அரசாங்கம் கையிருப்பில் வேண்டிய வெள்ளியை வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி கரன்ஸி நோட்டு அடிக்க முடியாது. அடிப்படை (ஒரு ரூபாய் நோட்டில் நீதித்துறைச் செயலர்தான் கையெழுத்திட்டிருப்பார்.) நாணயமான ரூபாயையே காகிதமாக அடிப்பது என்ற குறுக்கு வழியை ஆங்கில ஆளுகையின் முதல் 180 ஆண்டுகளுக்கு எவரும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் ரூபாயே நோட்டாக வந்த பிறகு இப்போது உயர் மதிப்பு நோட்டுகளைக் கஜானாவுக்குக் கொண்டு சென்றால்கூட அவர்கள் அந்த அளவு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தால் போதும் என்று ஆகிவிட்டது. இது அரசாங்கம் இஷ்டப்படி நோட்டு அச்சடிக்க அனுசரணையாயிற்று. பணவீக்கமும் அதிகரித்தது.

யுத்தத்தினால் அதிகரித்தது பணப்புழக்கமும் பணவீக்கமும் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, கட்டுபாடு ஏற்பட (பின்னால் ராஜாஜி நாமகரணம் செய்த) ‘கண்ட்ரோல் பெர்மிட் லைசென்ஸ் ராஜ்யம்’ அப்போதுதான் தொடங்கிற்று. அதற்குத் தகுந்தவாறு லஞ்ச ஊழலும் கறுப்புச் சந்தையும் தலையெடுத்தன. வியாபாரிகள் பலர் கறுப்புச் சந்தையில் கொள்ளையடித்தனர் என்றால் அதிகாரம் இருந்த இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் பெருகிற்று. திடீரென்று (1945இல் என்று நினைக்கிறேன்) வைஸ்ராயின் நிர்வாக சபை – இன்றைய மத்திய அமைச்சரவை போன்றது – ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து செல்லாது என்றது அந்த ஆணை. தாங்கள் நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தையும் பலர் ஆயிரம் ரூபாய் நோட்டாக வைத்திருக்கக்கூடும். (அப்போதெல்லாம் வங்கியில் பணம் போடும் வழக்கம் இன்று போல வளர்ந்திருக்கவில்லை என்பதை நினைவிற் கொள்க.)

அவர்கள் அந்தப் பணம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லி அந்த நோட்டுகளை ரிசர்வ் பாங்கிலோ அல்லது இம்பீரியல் பாங்கிலோ (ஸ்டேட் பாங்கின் அன்றைய பெயர்) மாற்றிக்கொள்ளலாம். ஒன்று இரண்டு நோட்டுகளைக் கொண்டு போனால் அவர்கள் ஆட்சேபணை இல்லாமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் லட்சக் கணக்கில் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்தவர்களுக்கு மிகக் கஷ்டம். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் சென்னை மாகாணத்தின் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் ஸர். ஆர்தர் ஹோப் என்று பரவலாக நம்பப்பட்டது. சாதாரணமாக பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆர்தர் ஹோப் யுத்தகாலக் காற்று அடிக்கும்போது தூற்றிக் கொண்டவர். வர்த்தக உலகில் பெரும் புள்ளிகள் சிலரைத் துணைக்கு அழைத்து முடிந்த வரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாராம் ஹோப். எங்கள் கோயமுத்தூரின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவர் – கவர்னருக்கு மிக வேண்டியவர் – இரண்டு லட்சம் ரூபாய் இதுபோல் மாற்றிக் கொடுத்தாராம். அந்த நாளில் ஒரு லட்சமே மிகப் பெரிய தொகை. அதை உடையவர்களை ‘லக்ஷ£திபதி’ என்று உசத்தியாகச் சொன்ன காலம்.

ரூபாய் அணா பைசாக் கணக்கு சிக்கலானது. மெட்ரிக் முறை போல் பூஜ்யத்தைச் சேர்த்தால் காரியம் ஆகிவிடாது. உதாரணமாகப் பள்ளிக்கூடத்தில் ஒரு கீழ் வகுப்புக் கணக்கு பின்வரும் ரீதியில் அமைந்திருக்கும்.

ரூ அ பை *

147 13 7 x

16

___________________________

2365 9 4

(* ரூபாய், அணா, பைசா)

இந்தக் கணக்கைப் போடுவதானால் முதலில் 7 தம்பிடியை 16ஆல் பெருக்கி, வரும் 112ஐ 12ஆல் வகுப்பது முதல் கட்டம். மீதி வரும் 4 தம்பிடிகளை அங்கேயே விட்டுவிட்டு வகுத்தலில் தேறும் 9 முழு அணாக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது 13 அணாக்களைப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 208 அணாவுடன் கையில் வைத்திருக்கும் 9 அணாக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை 16ல் வகுத்தால் கிடைக்கும் மீதி 9 அணாவை அணாக் கணக்கில் விட்டுவிட்டு ஈவுத் தொகையாக 13 ரூபாயை கையில் வைத்திருந்து ரூ.147ஐப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 2352 ரூபாயுடன் கூட்டி மொத்தம் 2365ஐ ரூபாய்க் கணக்கில் எழுதினால் கணக்கு முடிந்தது. இதைப் படிப்போருக்குப் ‘போர்’ அடித்தாலோ தலை சுற்றினாலோ நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. பணக் கணக்கு என்பது அப்படித்தான் இருந்தது. இப்போதானால் இந்தக் கணக்கைப் போட பெரும்பாலோர் கால்குலேட்டரை நாடுவார்கள். அன்றோ ஒன்பது வயதுக் குழந்தைகள் இதைக் காகிதம், பென்சில் (அல்லது சிலேட்டு, பலப்பம்) மூலம் கணக்கிட்டார்கள். சில சமயம் தப்பு போட்டுக் குட்டும் வாங்கினார்கள். அல்லது பெஞ்சு மேல் ஏறி நின்றார்கள். நான் கணக்குப் பாடத்தில் மக்காக இருந்ததால் இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல முடியும். இப்போதுகூட நான் எழுதியிருக்கும் மாதிரிக் கணக்கின் விடை தப்பாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வேளையாகக் குட்டி வைக்க எங்கள் வாத்தியார்கள் இன்று இல்லை!

திருவாங்கூர் நாணயத்தைப் பற்றிச் சொன்னேன். அங்கே இரண்டுவித நாணயங்கள் புழங்கியதால், இதைவிடச் சிக்கலான கணக்குகள் கொடுத்துப் பிள்ளைகளின் உயிரை வாங்குவதற்கு சௌகரியமாக அமைந்தது. 137 ரூபாய் ‘சர்க்கார் நாணயத்தை’ பிரிட்டிஷ் நாணயமாக மாற்றுக என்று பள்ளிக்கூடக் கணக்குகள் கொடுப்பார்கள். 137ஐ இருபத்தெட்டு சக்கரத்தால் குணிக்க (பெருக்க) வேண்டும். வரும் விடையை 28 லு சக்கரத்தால் வகுத்தால் பிரிட்டிஷ் நாணய மதிப்பு கிட்டும்.

சுதந்திரம் வந்து பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, 1958ல் என்று நினைக்கிறேன். நேரு அரசு மெட்ரிக் முறையின் அடிப்படையில் அமைந்த நாணயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ரூபாய் அப்படியே இருக்க, இலங்கையின் சதம் போல, அது நூறு புதுக் காசுகள் ஆக்கப்பட்டது. புதுக்காசு ‘நயா பைசா’ என்று பெயர் சூட்டப்பட்டது. சரியான மொழிபெயர்ப்புதான்.

புதிய காசு மக்களுக்குப் பழக்கமாகும் வரை சில வருடங்களுக்குப் பழைய நாணயங்களும் கூடவே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிதாகப் பதிப்பிக்கப்படவில்லை. தவிரவும் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு உருக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஆக காலக்கிரமத்தில் அவை வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஆனால் இது நாலணா, எட்டணா இரண்டுக்கும் பொருந்தாது. புதிய காசுக்கு நாலணா 25 பைசாவாகவும் எட்டணா 50 பைசாவாகவும் கச்சிதமாய்ப் பொருந்தியதால் அவை நீடிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவற்றின் புதிய பதிப்புகள் அணாக் கணக்கில் எழுதப்படவில்லை. 25 பைசா அல்லது 50 பைசா என்றே குறிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் பழைய நாணயங்களும் செல்லும்.

இருபத்தைந்து பைசாவுக்குக் கீழே புதிதாகக் கொண்டுவரப்பட்ட நாணயங்கள் வருமாறு (ஒரு) நயா பைசா, இரண்டு நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா. பின்னால் இருபது பைசா நாணயமும் வெளியாயிற்று (இப்போது காண்பது அரிது.) நாலணா எட்டணா தவிர மற்ற பழைய நாணயங்களான தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா முதலியவை புதிய காசுக் கணக்கில் பொருந்தாததால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதுவரை, பல பொருட்களுக்கு ஓரணா அல்லது இரண்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சுதேசமித்திரன் (தினத்தாள்) ஓரணாவாக இருந்து வந்தது. நயா பைசா மதிப்பில் இது 6ரு பைசாவாகும். தொலையட்டும் என்று பிரதிக்கு ரு பைசா நஷ்டத்தில் அப்பத்திரிகையின் நிர்வாகம் அதை 6 நயாபைசா என்று நிர்ணயித்தது. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது போல் சுதேசமித்திரன் அதிலிருந்து க்ஷீணமடைந்து சில ஆண்டுகளில் மூடப்பட்டது. ‘ஹிந்து’வோ இரண்டணாவுக்கு விற்று வந்த பத்திரிகை. அதன் சரியான நயா பைசா மதிப்பு 12லு வரும். கிட்டிய மதிப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதை 13 நயாபைசா என்று வைத்துவிட்டார்கள். ஆக, நாணய சீர்திருத்தத்தினால் ஹிந்து பத்திரிகை பிரதிக்கு லு பைசா லாபம் அடைந்தது. Unearned income என்று சொல்லலாம்! குமுதம், விகடன், கல்கி போன்ற நாலணாப் பத்திரிகைகள் பாதிக்கப்படவில்லை. நாலணா என்பதற்குப் பதில் 25 நயா பைசா என்று விலையை எழுதினார்கள். விலை அதேதான்.

இதுபோல் பல சாமான்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் கிட்டிய மதிப்பு வியாபாரிகளுக்குத்தான் அனுகூலமாக அமைந்ததே தவிர நுகர்வோருக்கல்ல. ஒன்றரை அணா விற்ற பல பொருள்களும் 10 பைசாவாக உயர்த்தப்பட்டன (+1 பைசா) இதெல்லாம் rounding off என்ற பெயரில் நடந்த அநியாயங்கள். இதனால் ஒரு சிறிய அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்தது என்று கூடக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் (1957-62) தொடங்கி இருந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினாலும் இருக்கக் கூடும். அத்திட்டத்தில் பணவீக்கத்தை உண்டு பண்ணும் அம்சங்கள் நிறையவே காணப்பட்டன. வலதுசாரியான மினூ மஸானியும் இடதுசாரியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவும் இத்திட்டத்தைத் தாக்கிக் காரசாரமாக எழுதினார்கள். ஆனால் பணம் என்னமோ வீங்கிக் கொண்டேதான் போயிற்று.

ஆரம்ப காலத்துக்கென்று, அரை நயா பைசா நாணயம் ஒன்றை அச்சடித்திருந்தால் இதுபோன்ற சில சங்கடங்களை அரசு தவிர்த்திருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாபஸ் பெற்றிருக்கலாம். ஏனோ இதைச் செய்யவில்லை. சில ஆண்டுகளிலேயே பணவீக்கம் ஒரு நயாபைசா, இரண்டு நயா பைசா நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து விரட்டிவிட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு நயா பைசா என்ற காசைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கொள்கை அளவில் (in theory) இன்றும் அது செலாவணியில் இருக்கும் நாணயம்தான். நயா பைசாவைத் தொடர்ந்து பின்னாட்களில் ஐந்து பைசாவும் பின்னர் பத்து பைசாவும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. இன்று இருபத்தைந்து பைசாதான் குறைந்தபட்ச நாணயமாக விளங்குகிறதெனலாம்.

எது எப்படியிருந்தாலும் கணக்கு மிகவும் சுலபமாகிப் போனது. எல்லாத் தொகைகளுக்கும் ஒரு தசம புள்ளியை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்த்தினால் பெருக்கலும் வகுத்தலும் முடிந்து போயின. அல்லது பைசா ரூபாயாகவோ ரூபாய் பைசாவாகவோ ஆகிவிட்டது. இதன் விளைவாகக் கணக்கு வாத்தியார்களின் மகிமையும் குறைந்து போயிருக்கக்கூடும்!

ஆனால் இதற்கெல்லாம் கொஞ்ச காலம் பிடித்தது. ஆரம்ப நாட்களில் பரவலான குழப்பம் இருந்தது. படித்தவர்கள் படிக்காதவர்களைவிட அதிகமாகத் தப்பு செய்தார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது, கல்லூரி மாணவனான நான் சென்னைக்கு ரயிலில் வரும்போது என்னிடம் ஒரு வயதான மாது அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், சென்ட்ரல் வந்தவுடன் அடுத்த நாளைக்காகப் புனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பணமும் கொடுத்தார். நானும் நல்ல பிள்ளையாக ஓடிப் போய் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் புக்கிங் கிளார்க் ஆறு அணாவுக்குப் பதில் தவறுதலாக ஆறு பைசா பாக்கி கொடுத்துவிட்டார். (அப்போது நயா பைசா வந்த புதிது, எல்லோருமே இது போன்ற தப்புகள் செய்து கொண்டிருந்த சமயம்.) நானும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு வந்து பெருமையோடு அந்த அம்மாளிடம் சமர்ப்பித்தேன். அவருக்குக் கழுகுக் கண் போலும், உடனே தப்பைச் சுட்டிக்காட்டினார். நானும் சிரமத்தைப் பாராமல் கௌண்டருக்கு ஓடிச் சரியான சில்லறை வாங்கி வந்தேன். ஆனால் அதைக் கொடுக்கும்போது டிக்கெட்டை அவரிடம் கொடுக்க மறந்துவிட்டேன். சில்லறையைக் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு எண்ணிய அந்த மாமியும் இதை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டார். நான் வீட்டுக்கு வந்த பிறகு என் பாக்கெட்டில் டிக்கெட் இருப்பது கண்டு திடுக்கிட்டேன். ரிசர்வேஷன் இல்லாத டிக்கெட் (அப்போது அது சகஜம்.) உடனே விழுந்தடித்துக்கொண்டு சென்ட்ரலுக்கு ஓடிப் போய் டிக்கெட்டை ‘கான்சல்’ பண்ணி பணத்தைத் திருப்பி வாங்கியதுகூடப் பெரிதில்லை. அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்த ஒரு பொது நண்பரின் பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு துப்புத் துலக்கி அந்த அம்மாளின் விலாசத்தைக் கண்டுபிடித்ததும் பணத்தை அனுப்பி வைத்ததும் ஒரு நீண்ட கதை!

பின் குறிப்பு : ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காரல் மார்க்ஸில் ‘ஸ்டேட்’ போல காலக்கிரமத்தில் அதன் அவசியம் தீர்ந்து போன பிறகு, நயா பைசாவின் ‘நயா’ பகுதி ‘உதிர்ந்து’ போயிற்று (withered away) மக்களும் அவர்களைப் பின்பற்றி அரசும் அதை விட்டு விட்டனர்.

நன்றி: உயிர்மை, மே 2005

ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில்

ரயில் பிரயாணத்தின் கதை

எஸ்.வி. ராமகிருஷ்ணன்

எனக்கு விவரம் வந்தபின் அமைந்த முதல் நீண்ட ரயில் பிரயாணம் 1945ஆம் ஆண்டில். அப்போதெல்லாம் ரயில் என்றால் நிஜமாகவே “புகைவண்டி.’ அதாவது குப்குப்பென்று புகை விட்டுக் கொண்டு சிறுவர்களின் (ஏன், பெரியவர்களின்கூட) கற்பனையைத் தூண்டிவிடும், நிலக்கரியை எரித்துத் தீயாக்கும் நீராவி வண்டி. மலையாளத்தில் அதன் பெயரே தீவண்டிதான். நமது இலங்கைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அழகுத் தமிழில் அதைப் புகை இரதம் என்று அழைக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ரயில் வண்டியில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு என்பது பலருக்கும் எட்டாக்கை . . . அதாவது மிகப்பெரும்பாலானோர்க்கு அப்பாற்பட்டதொரு சங்கதி. வெள்ளைக்கார துரைகளும் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளும் இந்தியர்களில் ஜமீன்தார்களும் அதில் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் வகுப்பு என்பதும் (கடந்த பத்தாண்டுகளில் ஏறக் குறையக் காணாமலேயே போய்விட்ட இன்றைய முதல் வகுப்பின் முந்தைய அவதாரம்) அன்றைய ரூபாய் மதிப்பின்படி மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மற்றும் உயர் மத்திய வகுப்பினரில் சிலருமே அதில் பயணித்தனர்.

மூன்றாவது வகுப்புதான் ஜனதா வகுப்பு. டிக்கெட் இல்லாத பஞ்சை பனாதைகளிலிருந்து மத்திய தர வகுப்பினர் வரை எல்லோராலும் உபயோகிக்கப்பட்டது. இதன் நிலைமை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு மோசமாக இருந்தது. மூன்றாவது வகுப்புப் பெட்டி என்பது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஏறக்கூடியதொரு சங்கப் பலகை. எந்தவிதமான ரிசர்வேஷனும் கிடையாது. உட்கார இடம்கூட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றால் தூங்கும் வசதியைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்று. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்த இந்தோ சைனாவில் ரயில் இதைவிட மோசம் என்று சொன்னார்கள். அங்கே நாலாவது வகுப்பு ஒன்றும் உண்டாம். அதில் ஸீட்டுகளே (பெஞ்சுகள்) கிடையாது, தரையில் உட்கார வேண்டுமாம்.

மூன்றாவது வகுப்பைப் பற்றி இன்னொரு விஷயம். அதில் மின்சார விசிறிகள் கிடையாது என்பது. கோடையில் பயணிகள் பனை ஓலை விசிறிகளைக் கொண்டு வந்து வீசிக்கொள்வார்கள். அதேசமயம் ஒன்று சொல்ல வேண்டும். இன்று போலில்லாமல் பெட்டிகளில் பெரும்பகுதி மரத்தினால் ஆனது. அதனால் இப்போதைய பெட்டிகள்போல் அத்தனை சூடாகவில்லை.

வண்டி கிளம்பும் ஸ்டேஷனில் போர்ட்டர்கள் யார்டில் இருந்து வண்டி வரு முன்பே அதில் ஏறி, சாமான்கள் வைப்பதற்காக மேலே இருக்கும் பலகைமீது ஒரு அழுக்குத் துண்டை விரித்து வைப்பார்கள். சுமார் எட்டணா அல்லது பன்னிரண்டு அணா பேரத்துக்கு அது “ஸ்லீப்பிங் பெர்த்’தாகத் தரப்படும். அந்தப் பலகை மீது ‘For Luggage only’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. ரயிலில் ஏறுவது ஒரு “பிரம்மப் பிரயத்தனம்.’ அப்போதெல்லாம் எல்லோரும் ஏகப்பட்ட சாமான்கள் மூட்டை முடிச்சுகளோடுதான் ரயிலேறுவார்கள். இரும்பினால் ஆன டிரங்குப் பெட்டிகள், ஹோல்டால், தண்ணீர்க் கூஜா இத்தியாதி கண்டிப்பாக இருக்கும். தவிர பட்சணக் கூடைகள், அம்மா பெண்ணுக்காகப் பறித்த (வீட்டு மரத்தில் பழுத்த) மாம்பழம் முதலியவும் அவ்வப்போது இருக்கும். ஹோல்டால் என்பது படுக்கை மட்டுமல்லாமல் எல்லா விதமான கண்டா முண்டா சாமான்களையும் திணிக்கக்கூடியது. லக்கேஜ் எடையைக் குறைவாகக் காட்டுவதற்காகக் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை ஹோல்டாலில் புகுத்திவிடுவதும் உண்டு.

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் வண்டி இப்போதைவிட அதிக நாழிகை நிற்கும். நம்மை ஏற்றிவிட வேண்டியது போர்ட்டரின் பொறுப்பு. எறும்பு தன் எடையைவிட அதிகமான பளுவைத் தூக்குகிறது என்று உயிரியல் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்களே, அதை நமது பழைய காலப் போர்ட்டர்கள் செய்தே காட்டினார்கள்! ரயில் வந்து நின்றவுடன் உள்ளே ஏற்கனவே இருப்பவர்களுக்கும் “வந்தேறி’களுக்கும் ஒரு பெரிய போராட்டம் துவங்கும். ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர் “”ஏன்யா இங்கேயே வந்து விழறீங்க? பின்னால் பெட்டியெல்லாம் காலியாக் கிடக்குது” என்று ஆசை காட்டுவார். பின்புறப் பெட்டிகளின் நிலைமை அவருக்கு எப்படி ஞானதிருஷ்டியில் புலப்பட்டது என்பது ஒரு மர்மம்.

அந்த யுத்தத்தில் உள்ளே ஏறுபவர்களின் உறுதுணையான போர்ட்டரோ இதை ஒன்றும் லட்சியம் செய்யாமல் “”நீங்க பாட்டுக்கு ஏறுங்க சாமி, சாமானை நான் ஏத்திடறேன்” என்று சொல்லிவிட்டுச் சாமான்களைக் கூசாமல் ஜன்னல் வழியாய் உள்ளே தள்ளிவிடுவார் (அன்றைய ரயில் பெட்டியில் ஜன்னல் கிடையாது.) உள்ளே அணிவகுத்து நிற்பவர்கள் “”ஐயோ பாவி என் காலிலே போட்டுட்டியே” என்று கூக்குரலிடுவார்கள். அது எல்லாம் மாய்மாலம் என்று அனுபவ பூர்வமாய்த் தெரிந்து வைத்திருக்கும் போர்ட்டரோ மீதி சாமான்களையும் தள்ளிவிடுவார். அதற்குள் சாமான்களின் உரிமையாளக் குடும்பங்களும் எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே போயிருக்கும். அடுத்த படலம் போர்ட்டருக்குக் கூலி கொடுத்தல். குடும்பஸ்தர் முதலில் பேசிய எட்டணாவைக் கொடுப்பார். உடனே போர்ட்டர் நன்கு மனப்பாடம் செய்யப்பட்ட சில வசனங்களை அவிழ்த்துவிடுவார். “”கஸ்டத்தைப் பார்த்துக் காசு கொடுங்க ஐயா; பிள்ளை குட்டிக்காரன் சாமி. இன்னும் நாலணா போட்டுக் கொடுங்க” என்ற ரீதியில். கடைசியில், கூட இரண்டணா வாங்கிக்கொண்டு திருப்தியடைவார்.

ரயில் கிளம்பும்வரை பயணிகளின் மத்தியில் “டென்ஷன்’ நீடிக்கும். மண்ணின் மைந்தர்கள் வந்தேறிகளுக்கு இடம்விடாமல் தாங்களே ஸீட்டை ஆக்கிரமித்திருப்பார்கள். வேண்டுமென்றே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்வதும் உண்டு. ஆனால் ரயில் நகர்ந்தவுடன் இந்தியா -சீனா மாதிரி உறவுகள் மாறிவிடும். இன்முகம் தலையெடுக்கும். “”நீங்க எங்கே ஸôர் போறேள்?” “”தம்பிக்கு எந்த ஊரு?” போன்ற விசாரிப்புகள் சுமுக உறவுக்கு வழி வகுக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் இரண்டு கட்சிக்காரர்களும் ஒன்றாகிவிடுவார்கள். மட்டுமல்லாது புதிதாக ஏற வருபவர்களை விரட்டுவதில் ஒன்றாகச் செயல்படுவார்கள்.

மூன்றாவது வகுப்பில் உள்ளே சாப்பாடு வராது. சாப்பாட்டு நேரத்தில் வரும் ஜங்ஷன்களில் அருமையான சாப்பாடு கிடைக்கும். காண்டீன் வரை போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டிய நேரத்துக்கு வண்டியும் நிற்கும். காண்டீனில் சாப்பாடு மட்டுமல்லாது டிபனும் காப்பியும் உண்டு. வெஜிடேரியன் காண்டீனும் நான்-வெஜிடேரியன் காண்டீனும் பிளாட்பாரத்தின் இருமுனைகளில் வடதுருவம் தென்துருவம்போல் அமைந்திருக்கும். வெஜிடேரியன் காண்டீனில் காப்பிதான் கிடைக்கும். டீ வேண்டுமென்றால் அசைவ காண்டீனுக்கு (அதாவது பிளாட்பாரத்தின் மறுகோடிக்குத்)தான் போக வேண்டும். தேநீர் அசைவமாகக் கருதப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. காண்டீனைத் தவிர, பிளாட்பாரத்தில் தயிர்சாதம், புளியஞ்சாதம் முதலிய பட்டைச் சோறுகள் கிடைக்கும். அநேகமாக பாக்கு மட்டையில் சுற்றி அழகாகப் “பேக்’ செய்யப்பட்டிருக்கும். பெட்டியில் உட்கார்ந்தபடியே வாங்கலாம். வெளியே இறங்க முடியாதவர்களும் பெண்களும் இந்த வசதியை உபயோகித்துக் கொண்டனர். அதே சமயம் ஆண் துணையற்ற பெண் பாலர்க்கு இரங்கி ஆண்கள் அவர்களின் கூஜாவைக் கொண்டு போய்க் காப்பி வாங்கி வருவதும் உண்டு.

பிளாட்பாரத்தில் வயிற்றுப் பசியைத் தவிர அறிவுப் பசியைத் தீர்க்கும் சாதனங்களும் விற்கப்பட்டன. ரயில் வந்து நின்றதும் “ஹிந்து பேப்பர், சுதேசமித்திரன், தினமணி, இந்து நேசன், சந்திரோதயம்’ என்று ஒப்பித்தவாறு பையன்கள் ஜன்னல்தோறும் முற்றுகையிட்டுப் பத்திரிகை விற்பார்கள். இதில் “இந்துநேசன்’ லக்ஷ்மிகாந்தன் கொலைக்குப் பிறகு நின்று போயிற்று.

கடைசி நிமிஷத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடிப்பவர்களுக்கு டிக்கெட் வாங்க நேரமில்லையென்றால் கார்டினிடம் (Guard) ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ரயிலில் தொற்றிக்கொள்ளலாம். பின்னால் டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரயாணியிடம் வந்து கட்டணத்தை வசூலித்துக் கொண்டு காகித ரூபத்தில் (அட்டை அல்ல) டிக்கெட் கொடுத்துவிட்டுப் போவார். அதற்காகக் கூடுதல் சார்ஜ் ஒன்றும் கிடையாது. டிக்கெட் இல்லாமல் பயணித்து மாட்டிக்கொண்டால் கடைசி ஜங்ஷனிலிருந்து இரட்டைக் கட்டணம் செலுத்தினால் போதும். டிக்கெட் இல்லாமல் பயணிப்பதில் நிபுணர்கள் உண்டு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் அவர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.

அதற்குள் வண்டி நின்றால் அவர்கள் ஓசைப்படாமல் நழுவுவார்கள். இல்லாவிடில் கழிப் பறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்துவதும் உண்டு. அந்தக் காலத்துப் பிரயாணிகளுக்கு இரக்க சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன். யாரும் இன்ஸ்பெக்டரிடம் அவர்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். இத்தனைக்கும் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரயாணிகளே.

அன்றைய புகைவண்டிப் பிரயாணத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் ரயில் பிச்சைக்காரர்கள். அதில் பாடுவோர், பாடாதோர் என்ற இருவகை உண்டு. பாடுவோரில் சிலர் தங்கள் காதில் கையை வைத்து அழுத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து நாதம் எழுப்புவர். அவர்களே தங்கள் பாட்டைக் கேட்க விருப்பம் இன்றி காதைப் பொத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றும். நெருப்புப் பெட்டியே தாள வாத்திய மாகப் பயன்படும். இன்னொருவரின் துணை கொண்டு வரும் குருட்டுப் பிச்சைக்காரர்களும் சகஜமான காட்சி. அவர்கள் எல்லோருக்கும் பிச்சை தாராளமாகவே கிடைத்தது. இவர்களைக் குறித்த ஒரு விசேஷமான சங்கதி என்னவெனில் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் என்ன டிக்கெட் செக்கிங் இருந்தாலும் இவர்களில் எவரும் ஒருபோதும் டிக்கெட் வாங்கியதாக வரலாறு இல்லை என்பது. இவர்கள் பின்னால் நடந்து ஒரு புண்ணியமும் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் பிச்சைக்காரர்களைத் “தண்ணீர் தெளித்து’ விட்டிருந்தார்கள் என்று எண்ணுகிறேன்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன என்னுடைய முதல் ரயில் பிரயாணத்தின் ஒரு காட்சி என் மனதில் விரிகிறது. அப்போது நான் மதுரையிலிருந்து தென்காசிக்கு மூன்றாம் வகுப்பில் போய்க்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்ற ரயில் கிளம்பும் தருணத்தில், பாமரள் (“குடிமகள்’ மாதிரி, “பாமரனி’ன் பெண்பால்) போலத் தென்பட்ட ஒரு குடுகுடு கிழவி ஏறி “”இந்த வண்டி விருதுபட்டி போகுமா” என்று கேட்டாள் சிலர் “”போகாது, போகாது, இறங்கு” என்று பதறினார்கள். நல்லவேளையாக அதைக் கேட்ட ஒருவர் மட்டும் “”போகும் பாட்டி, உள்ளே வா” என்று அவளை ஏற்றிக்கொண்டார். “”நீ விருதுபட்டி என்று சொன்னால் இப்போதெல்லாம் யாருக்குப் புரியும்? விருதுநகர் என்று சொல்லு” என்று அறிவுரையும் வழங்கினார். முதலில் விருதுபட்டியாக இருந்ததுதான் பின்னால் ஸ்டைலாக விருதுநகர் என்று மாறினது அப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. “விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்குவது’ எங்கிருந்து வந்தது என்பதும் புரிந்தது. சனியனைப் பற்றிய கதைதான் தெரியவில்லை. இது நடந்தது 1945இல். அப்பொழுதே விருதுபட்டி என்ற பெயர் அறுகிப் போய்விட்டிருந்தது போலும், சில வயதான பட்டிக்காட்டுப் பெண்பிள்ளைகளிடம் தவிர!

ரயிலைப் பற்றிய இந்தச் சித்திரம் 1945-1955 என்ற கால கட்டத்தியது. அதன் பிறகு பெரிய பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இருக்கை வசதி, படுக்கும் வசதி என்று மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குத் தொடர்ந்து யோகம் அடித்தது. அதுவரையில் கீழ் வகுப்புப் பயணிகள் அதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதற்குக் கொஞ்ச காலம் முன்னால், யாருடைய பர்ஸ÷க்கும் எட்டாமல் பெரும்பாலும் காலியாகவே ஓடிக்கொண்டிருந்த பழைய முதல் வகுப்பு எடுக்கப்பட்டு இரண்டாவது வகுப்புக்கு முதல் வகுப்பு என்ற நாமகரணமும் நடைபெற்றது. கூடவே பல வருடங்கள் (யுத்த காலத்திலிருந்து) காணாமற்போய் அண்மையில் திரும்பி வந்திருந்த மத்திய வகுப்பு (இண்டர் கிளாஸ்) இரண்டாம் வகுப்பென்ற பெயரைத் தட்டிக்கொண்டது. இந்த வகுப்புப் பெட்டிகளில் குஷன் தைக்கப்பட்ட ஸீட்டுகள் இருக்கும். பிரயாணிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் உட்காரும் வசதி உறுதிப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் ரிசர்வேஷன் அடியோடு இல்லாத நிலையில் இது ஒரு கூடுதல் அனுகூலந்தான். ஆனால் தூங்கும் பெர்த் வசதி கிடையாது. பாத்ரூம்கள் மூன்றாம் வகுப்பைவிட இன்னும் வசதியுடனும் சுத்தமாகவும் இருக்கும். பிரயாணிகளின் தரமும் ஓரளவு உசத்தியாக இருக்கும். ஆனால் கட்டணம் கணிசமாக அதிகம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து உயர் வகுப்பினர்கூடப் பகல் நேரப் பயணங்களுக்கு மட்டுமே இதைப் பெரும்பாலும் உபயோகித்தனர்.

அடுத்து வந்த ஆண்டுகளில் மூன்றாம் வகுப்பில் தூங்கும் வசதி (ஸ்லீப்பர்)யும் உட்காரும் வசதியும் (ஸீட் ரிசர்வேஷன்) பெருகவே, உட்கார மட்டும் வசதி கொண்ட இந்தப் புதிய இரண்டாம் வகுப்பை நாடுவார் இல்லாமற் போக, அதுவும் ஒருவழியாக நீக்கப்பட்டு மூன்றாம் வகுப்பிற்கே அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இன்னும் நீடிக்கிறது.

பின்னுரை

குளிப்பதற்கு வசதி படைத்த பாத்ரூம்களும் குடி தண்ணீர் வசதியும் கொண்டு மின் விசிறிகள் நிறைந்து ஆர்டர் பண்ணினால் சாப்பாடும் வரும் இன்றைய ஸ்லீப்பர்களைப் பார்த்தால் இவைதான் முந்தைய யுகத்தின் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளா என்று வியப்பாக இருக்கிறது. வேறு எதில் நடந்ததோ இல்லையோ, இந்த விஷயத்தில் மட்டுமாவது சுதந்திர இந்தியாவில் ஒரு காலத்தில் மாக்களாக நடத்தப்பட்ட சாமானியர்கள் மக்களாக உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இரயில் பயணங்களில்

அசோகமித்திரன் – (எஸ்.வி. ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து)

ஆகஸ்ட் 2004இல் மதுரை சென்றுவிட்டு வந்தேன். மிகவும் வசதியான இரயில் வண்டி, வசதியான படுக்கை, நெரிசலேயில்லாத சூழ்நிலை, மிகக் குறைந்த சப்தமெழுப்பும் தொழில்முறை நுட்பம், குறித்த காலத்தில் வண்டி போய்க்கொண்டிருப்பது – எல்லாமே தூக்கம் வராமல் செய்தன. எஸ்.வி. ராமகிருஷ்ணன் ஒரு பத்து வருட இந்திய இரயில் வரலாறைக் கூறியிருந்தார். அவர் கூறியது ஒவ்வொன்றும் மிகையில்லாத உண்மை என்று நான் கூற முடியும். நான் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்பே, அதாவது 1935ýருந்தே இந்திய இரயிலுக்கு அடிமைப்பட்டுவிட்டேன்.

அன்றைய இரயில் கால அட்டவணையைப் பார்த் தால் சில நிலையங்களுக்குப் பக்கத்தில் R என்றும் W என்றும் அல்லது RW என்றும் இருக்கும். எங்கள் குடும்பம் இரயில் குடும்பமாதலால் அந்த ஆங்கில எழுத்துக்களின் பொருள் தெரியும். R என்றால் அந்த நிலையங்களில் சிற்றுண்டி கிடைக்கும். W என்பது தண்ணீர் நிரப்பும் நிலையங்கள். பயணிகள் பெட்டிக்குத் தண்ணீர் கிடைக்காது போனாலும் இஞ்ஜின் தண்ணீர் குடிக்கும். இப்போது அதெல்லாம் கிடையாது.

பயணத்தின்போது R நிலையம் வந்தால் ஒரு பாத் திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரே சமாளிக்கும் சிற்றுண்டிச்சாலைக்குப் போய் காபி வாங்கிக்கொண்டு வரவேண்டும். எங்கள் பயணம் முந்தைய இரவு சிகந்தராபாத்தில் தொடங்கி பெறுவாடா (இன்றைய விஜயவாடா) நிலையத்தில் இரயில் மாறி சூளூர்ப்பேட்டை என்ற நிலையத்திற்கு வந்தடையும்போது அடுத்த நாள் மாலை நான்கு அல்லது நான்கரையாகும். இப்போது அந்த நிலையம் தெலுங்குப்படுத்தப்பட்டு சூளூர்ப்பேட்டா என்றாகிவிட்டது. அந்தச் சிறு நிலையத்தின் சைவ சிற்றுண்டிச் சாலையை நடத்தியவர் என் பள்ளி நண்பன்/விளையாட்டுத் தோழன்/எதிரி சந்தானத்தின் உறவினர். காபி மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் சிறு பையனாக இருந்து சுடச்சுடக் காபி நிறைந்த சொம்பைப் பத்திரமாக அம்மாவிடம் கொண்டு வந்து கொடுப்பது மிகத் தீவிரமான அனுபவம். ரிசர்வேஷன் கிடையாது, எல்லாரும் படுக்கை, டிபன்காரியர், கூஜா, இரும்பு டிரங்கு சகிதம் பயணம் செய்தாக வேண்டும். தோளுயரப் பையன், பெண்ணாக இருந்தாலும் வயது இரண்டரைதான் என்று சாதிக்கும் மக்கள், டிக்கெட்டே இல்லாமல் பயணம் செய்யும் பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள் – இவ்வளவு தடை களையும் மீறிக் காபி வாங்கி வருவது பெருமையாக இருக்கும். அதுவும் சந்தானத்தின் மாமா அல்லது சித்தப்பா கொடுத்த காபி. ரயிலே மொத்தம் ஏழெட்டுப் பெட்டிகளோடு முடிந்துவிடும். ஆதலால் எந்தப் பெட்டியின் கதவு உங்கள் எதிரில் இருக்கிறதோ அதில் ஏறியே தீர்ந்தாக வேண்டும். வண்டியில் ஏற்கெனவே உள்ளவர்கள் ஏறுபவர்களைப் பரம விரோதியாகப் பார்ப்பார்கள். ஏறுபவர்களுக்குப் பெட்டியில் இருப்பவர்கள் மனதில் ஈரமே இல்லாத அரக்கர்களாகத் தோன்றுவார்கள். உண்மையில் இரயில் எந்த நிலையத்தில் நின்றாலும் ஒவ்வொரு கதவருகிலும் தேவாசுரப் போர் நிகழும்.

பெஜ்வாடா – சென்னைக்கிடையேதான் அபூர்வ இசை மேதைகள் அவர்களுடைய மேதைமையைத் திட்டமிட்ட பிரதிபலன் இல்லாது பயணிகளுக்கு அளிப்பார்கள். ஆர்மோனியம்தான் அவர்கள் கையில் எப்படியெல்லாம் செயல்படும்? அந்த நாளில் சினிமா சங்கீதமே ஆர்மோனியத்தால்தான் உருவானது என் றால் அது பொய்யாகாது. சைகல், பங்கஜ்மல்ýக், கே. சி. டே, கண்ணன் பாலாவிýருந்து அன்றைய தமிழ் -தெலுங்கு சினிமா நடிகர்களின் பாடல்கள் வரை அந்த ஆர்மோனியத்தில் விசேஷ ரசாயனமாக உருவாகும். ஒரு தமிழ்க் கட்டுரையில் ராண்டார் கை என்ற தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் ஒரு பாட்டைக் குறிப்பிட்டு “அந்த நாளில் இந்தப் பாட்டைப் பாடாத பிச்சைக்காரரே கிடையாது” என்றார். அந்தப் பாட்டின் முதல் வரி: ஐயா சிறு பெண் ஏழையென்பால் மன மிரங்காதா?

இன்று இரயில் பயணத்தின்போது ஏதோ போட்டோ எடுக்கப் போவதற்குப் போல உடை உடுத்திக்கொண்டு போகிறார்கள். அந்த நாளில் அது சாத்தியமில்லை. இரயில் பயணம் என்றாலே கரி, அழுக்கு. ஆதலால் இரயிலுக்குப் போட்டுக்கொள்வது என்று ஒரு பழைய சட்டை அல்லது பாவாடை தாவணி அல்லது புடவைதான் பொறுக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த “ஐயா சிறு பெண்” பாட்டைப் பயணிகள் பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.

ஒரு ஜீவனுள்ள கதை அல்லது கட்டுரை உடனே படிப்போரை நினைவில் ஆழ்த்தி அவர்களுடைய அனுபவங்களையும் எழுத்தாளருடையதுடன் பொருத் திக்கொள்ளச் செய்யும். எஸ்.வி. ராமகிருஷ்ணனின் கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு.

நன்றி: உயிர்மை

ஐஸூக்கு வந்த மவுஸ்!

ஐஸூக்கு வந்த மவுஸ்! – எஸ்.வி. ராமகிருஷ்ணன்

[%image(20051103-ice_svr1.jpg|226|150|Ice)%]

1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் – இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.

ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகுப்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே  இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.

நான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.

அவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.

அடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, அமீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.

குரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக  (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.

இன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.

ஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.

நன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)

உடைந்த கையை ஒட்டின கதை

உடைந்த கையை ஒட்டின கதை

(1943)

எஸ்.வி. ராமகிருஷ்ணன்

[%image(20051019-svr_hand_small.gif|142|200|SVR Hand Image)%]

என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.

சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.

“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.

எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)

கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.

கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.

நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய்  ‘டேரா’ போடலாம்.

மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.

கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!

சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.

எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!

நன்றி : உயிர்மை(Oct 2005 )


சோஷலிஸம் தோற்றுவிட்டதா?

எஸ்.வி. ராமகிருஷ்ணன்

சுதந்திரம் வருவதற்கு முன்பு இந்திய தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் மகாசபை என்று அழைக்கப்பட்டதுபோலவே செயலும்பட்டது. அதாவது வெறும் கட்சியாக இல்லாமல் இந்தியாவின் தேசிய முன்னணியாக இயங்கியது. வலதுசாரி, இடதுசாரி என்று பலதரப்பினரும் இணைந்து செயல்பட்டனர். அவர்களை இணைத்தது தேசியவாதம், சுதந்திரவேட்கை என்ற அடிப்படைக் கொள்கையும் மகாத்மா காந்தியின் தலைமையுமே. இவற்றில் இடதுசாரியினர் சோஷலிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்தவர்கள். தமிழில் அபேதவாதம் என்று சொன்னார்கள். பின்னால் சமதர்மம் என்ற பதம் வழங்கலாயிற்று. காங்கிரஸிலேயே காங்கிரஸ் சோஷலிஸ்டு என்பது, சுபாஷ்போஸின் பார்வர்டு பிளாக்போல, ஒரு தனி உள்கட்சி (அன்று காங்கிரஸில் உட்கட்சிகள் அனுமதிக்கப்பட்டன). துடிப்புமிக்க இளைஞர்கள் நிறைந்த இக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். தவிர ஆச்சார்யா நரேந்திரதேவ் (வயதில் கொஞ்சம் முதிர்ந்தவர்) பொருளாதார வல்லுநர் அசோக்மேத்தா, டாக்டர் ராம்மனோகர் லோஹியா, அச்சுத்பட்வர்த்தன், யூசுப் மேஹராலி என்று குறிப்பிடத்தக்கவர்கள் பலர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வரலாறு காணாத அடக்குமுறையை ஏவிவிட்டு காந்திஜியிலிருந்து காமராஜ் வரை காங்கிரஸ்காரர்களைக் கூண்டோடு கைலாசமாகச் சிறையிலிட்டபோது இவர்கள் தலைமறைவில் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். பின்னால் பலர் பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். மாறுவேடத்திலிருந்த ஜெயபிரகாஷ் லாகூரில் கைது செய்யப்பட்டு பனிக்கட்டிமீது மணிக்கணக்காக அமர்த்தப்பட்டார் (அதனால் அவரின் கால்கள் நிரந்தரமாக பலவீனமடைந்தன). அதேசமயம் தில்லியில் ஒரு பிரிட்டிஷ் உயர் அதிகாரியின் வீட்டிலேயே மாறுவேடத்தில் பணியில் அமர்ந்த அருணா அஸப்அலி கடைசிவரை (1945) போலீஸôர் கண்ணில் மண்ணைத் தூவிய சாகசச்செயலும் அந்நாளில் பிரபலம். 1947-ல் சுதந்திரம் வந்த கையோடு நாட்டைச் சமதர்மப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று இவர்கள் வற்புறுத்தினார்கள். காங்கிரஸின் மூத்த தலைவர்களோ, அதற்கு அவசரமில்லை, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி சமுத்திரம் பொங்கியதுபோல எழுந்த அகதிகள் புனர்வாழ்வு போன்ற உடனடிப் பிரச்னைகளை முதலில் கவனிக்கலாம் என்று கருதினர். சோஷலிஸ்டு இளைஞர்களோ சுதந்திரம் வந்த உற்சாகம் தணியுமுன் சூட்டோடு சூடாக சமத்துவச் சீர்திருத்தங்களை கொண்டுவராவிடில் ஆறினகஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடும் என்று அஞ்சினர். அவர்களிடம் லட்சியவாதம் உள்ள அளவுக்கு யதார்த்த உணர்வு இல்லை என்று அபிப்பிராயப்பட்ட சர்தார் படேல் அன்றைய நிலைமையில் நாட்டின் சொத்தை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டால் ஆளுக்குக் காலணாதான் (இரண்டு நயாபைசா) தேறும் என்று சொன்னார். மகாத்மாவின் திடீர் மறைவைத் தொடர்ந்து விரிசல் அதிகரித்தது. தாங்கள் காங்கிரûஸவிட்டு வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியபோது யார் போகவேண்டுமானாலும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று படேல் கூறினார். ஓரளவு இடதுசாரிக் கொள்கையுடையவரென அறியப்பட்ட நேரு மௌனம் காத்தார். மார்ச் 1948-ல் நாசிக் நகரத்தில் கூடிய காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் வெளியேறியே விடுவது என்று தீர்மானித்தார்கள். சோஷலிஸ்டு கட்சி என்ற தனி ஸ்தாபனம் உதயமாயிற்று. தேர்தல் சின்னம் ஆலமரம். இரண்டாண்டு கழித்து பழம்பெரும் தலைவர் ஆசார்யா கிருபளானி காங்கிரûஸத் துறந்து பிரஜா மஜ்தூர் கிசான் (விவசாயி – உழைப்பாளி) கட்சியைத் தோற்றுவித்ததைத் தொடர்ந்து இரு புதிய கட்சிகளும் (இருவருமே பழைய காங்கிரஸ்காரர்கள்) இணைந்து பிரஜா சோஷலிஸ்டு கட்சியாயின. 1950-ன் இறுதியில் நிகழ்ந்த படேலின் மரணத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நேருவின் முழு அதிகாரத்திற்குள் வந்தன. 1952 பொதுத்தேர்தல் வரும்போது நேரு ஒரு ஜனநாயக சர்வாதிகாரியாகவே விளங்கினார். பொதுத்தேர்தலில் பிரஜா சோஷலிஸ்டுகள் அகில இந்தியாவில் 10 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் அவை பரவலாக இருந்ததால் அந்த விகிதத்துக்கு எம்.பி., எம்எல்.ஏ. இடங்கள் கிட்டவில்லை. அவர்களைவிட மொத்த வாக்குகள் குறைவாகப் பெற்ற கம்யூனிஸ்டுகளுக்கு அதைவிட அதிக இடங்கள் கிட்டின; காரணம் அவர்கள் பரவலாக இல்லாமல் ஆந்திரம், மலபார் போன்ற சில “பாக்கெட்டுகளில்’ மட்டுமே இருந்தாலும் அங்கு ஆழமாக இருந்ததே (நமது தேர்தல் பிரதிநிதித்துவ முறையின் இந்த முரண்பாடு இன்னும் தொடருகிறது. பட்ங் ரண்ய்ய்ங்ழ் ற்ஹந்ங்ள் ஹப்ப்!). 1952 தேர்தல் முடிவுகளில் பண்டித நேருவுக்கும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்திருப்பது தெளிவாயிற்று. சென்னை மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை கூட இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நேருவுடன் போட்டியிட்ட தொகுதி “அபேட்சகர்’ (வேட்பாளர்) கூட கணிசமான ஓட்டுகள் பெற்றுத்தான் தோற்றார். “”காங்கிரஸின் பெயரில் ஒரு விளக்குக்கம்பம் நின்றாலும் ஜெயித்துவிடும்” என்று எல்லோரும் சொல்லிவந்த நிலைமை மாறிவிட்டது தெரிந்தது. அடுத்த தேர்தலுக்குள் மக்களின் கவனத்தையும் கற்பனையையும் கவர புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 1955 ஜனவரியில் நடைபெற்ற ஆவடி காங்கிரஸில் “சமதர்ம அடிப்படையிலான சமுதாயம்’ (நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற்ண்ஸ்ரீ டஹற்ற்ங்ழ்ய் ர்ச் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) என்பது காங்கிரஸின் லட்சியம் என்ற முக்கியமான கொள்கைத் தீர்மானம் “ஒருமனதாக’ நிறைவேறியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சித்தாந்தரீதியாக சோஷலிஸத்தை நம்பியவர்கள் அனைவரும் 1948-லேயே வெளியேறிவிட்டிருந்தார்கள். அதாவது சர்தார் படேலைப்போல கொள்கைரீதியான வலதுசாரிகளும், அல்லாவிடில் குறைந்தபட்சம், சமதர்மத்தில் அக்கறை கொள்ளாதவர்களுமே காங்கிரஸில் தங்கியிருந்தனர். பின்னால் இப்போது திடீரென்று, இன்றிலிருந்து கூண்டோடு கைலாசமாக கட்சி முழுவதுமே சோஷலிஸ்ட் ஆகிவிட்டது என்று ஆவடியில் தீர்மானம் போட்டபோது ஒருவர்கூட ஆட்சேபிக்காதது விந்தையிலும் விந்தைதான். ஆவடிக்குப்பிறகு, இந்தியாவில் உண்மையான சோஷலிஸ்டுகள் பெரும்பாலும் காங்கிரஸýக்கு வெளியேயும் சந்தர்ப்ப சோஷலிஸ்டுகள் உள்ளேயும் இருந்தார்கள் என்றால் அதிகத் தவறில்லைதான். ஏறக்குறைய இதேசமயத்தில், மாவோ சீனாவையே தான் கண்ட புரட்சிப்பாதைக்கு மாற்றியமைக்க முயன்று கொண்டிருந்தார். அவருடைய செயல்வீரர்கள் அவரது “கொள்கையில் ஊறிய’ (ண்ய்க்ர்ஸ்ரீற்ழ்ண்ய்ஹற்ங்க்) கம்யூனிஸ்ட் தொண்டர்கள். ஒரு சமுதாயப் புரட்சியை தாசில்தார் மூலம் நடத்த முடியாது. நேருஜியிடமோ சோஷலிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சொந்தக் கட்சிக்காரர்கள் அதிகம் இருக்கவில்லை. ஆக இந்தியாவின் சோஷலிஸப் புரட்சி பெரும்பாலும் அரசு இயந்திரம் மூலமாகத்தான் நடந்தது. சட்டங்கள், அரசுடைமை தொழில்கள், இத்யாதி. அதை ராஜாஜி “லைசென்ஸ், கண்ட்ரோல், பெர்மிட் ராஜ்’ என்ற தன் பிரசித்தி பெற்ற சொற்றொடரால் சாடினார். இந்த விஷயத்தில் தன் கட்சியின் குறைபாட்டையும் அதன் விளைவாக தன் சோஷலிஸத்தின் பலவீனத்தையும் உணர்ந்த நேரு ஜாக்கிரதையாகச் செயல்பட்டார். உருக்கு போன்ற கனரகத் தொழில்களில் அரசு பிரவேசித்ததே ஒழிய ஏற்கெனவே தனியார் மூலம் அமைந்திருந்த தொழில்களைத் தேசியமயமாக்குவதில் அவர் நிதானம் காட்டினார். அவரின் இறுதியாண்டுகளில் (1960 – 64) சீனாவுடன் ஏற்பட்ட சச்சரவும் யுத்தமும் அவரது வேகத்தையும், கடைசியில் அவரது ஆயுளையுமே கூட குறைத்தன. அவருக்கு கொஞ்சகாலம் பின் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி முழுக்க முழுக்க ஒரு அரசியல்வாதியாகவே விளங்கினார். தன் தந்தையைப் போலன்றி அவருக்கு “இஸம்’ எதுவும் கிடையாது. உண்மையில் அவர் ஒரு பிரத்யட்சவாதியேதவிர, வலதுசாரியுமல்ல, இடதுசாரியுமல்ல. அரசியல் காரணங்களினால் இடதுசார்பைக் கைக்கொண்டார். காலத்தின் கட்டாயம் எனலாம். துரதிர்ஷ்டவசமாக அவர் அரசியலைப் புரிந்துகொண்டதுபோல பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதனால் பிரதானமாக அரசியல் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு அவருடைய பொருளாதாரக் கொள்கை அமைந்தது. தொழில்களைத் தேசியமயமாக்குவதிலும் கட்டுப்பட்ட பொருளாதாரத்தை நிறுவுவதிலும் தந்தை காட்டிய விவேகமும் நிதானமும் மகளின் ஆட்சியில் காணப்படவில்லை. விளைவு, பணவீக்கம், வரிச்சுமை ஏற்றம், லஞ்சம், ஊழல் பெருக்கம், தனிமனித சுதந்திரம் சுருங்கியது முதலியன. சோஷலிஸம் என்ற பெயரில் அப்போது ஏற்பட்டது உண்மையில் “அரசாங்க முதலாளித்துவம்’தான். அவரைத் தொடர்ந்து வந்த ராஜீவின் குறுகிய ஆட்சிக்காலத்தின்போது காலமும் அதன் கட்டாயங்களுமே பெரிதும் மாறத் தொடங்கி இருந்தன. அப்போதே தொடங்கிய போக்கு அவருக்குப் பின் தீவிரமடைந்து இன்று தாராளமயக்கொள்கை என்று அழைக்கப்படுகிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற இரண்டு பெரிய கட்சிகளுமே இதைக் கொள்கையளவிலும் நடைமுறையிலும் ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்று சோஷலிஸம் என்பது பாஷன் அல்ல என்பது தெரிகிறது. அதேசமயம், இந்தியாவில் சோஷலிஸம் வென்றதா அல்லது தோற்றதா என்றால், இரண்டுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில ஐரோப்பிய நாடுகளின் நிஜமான சோஷலிஸம்போல இந்தியாவில் ஒருபோதும் வரவேயில்லை. புகுத்தப்பட்ட அரசு முதலாளித்துவம் என்பது வேறு ஒருமுறை. அது சோஷலிஸம் ஆகாது.


எரிசக்திக் கொள்கையில் நடந்த இமாலயத் தவறுகள்

எஸ்.வி. ராமகிருஷ்ணன்

இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன் இந்தியாவில் எரிபொருள் பிரச்னை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போதெல்லாம் ரயில்களும் மாட்டுவண்டிகளும்தான் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதியை வகித்தன. பஸ்ஸýம் லாரியும் உண்டு. ஆனால் மிகக் குறைவு. பல கிராமப்புறச் சாலைகளில் அவை போகக்கூட முடியாது.பெரும்பாலான மக்கள் (நகரங்களில்கூட) அடுப்பெரிப்பதற்கு விறகையே உபயோகித்தனர். ஓரளவுக்கு மண்ணெண்ணெயும் உண்டு. தவிர இன்னொரு அடுப்பு எரிபொருள் மாட்டுச்சாணம். அதாவது இன்று அற்றுப்போன வரட்டி. நாட்டின் தேவைக்கு வேண்டிய பெட்ரோலியத்துக்கு மிக அதிகமாகவே பர்மாவில் உற்பத்தியாயிற்று. அந்த பர்மா அன்று (1937 வரை) இந்தியாவின் ஒரு மாகாணம். யுத்தத்தின் போது நிலைமை தலைகீழாயிற்று. 1942-ல் ஜப்பானியர் பர்மாவைக் கைப்பற்றினர். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கிடைத்த சிறிதளவு எண்ணெயிலும் ராணுவ முஸ்தீப்புக்குத்தான் முதலிடம். பெட்ரோலுக்கும் “சீமையெண்ணெய்க்கும்’ கடுமையான ரேஷன், பேருந்துகள் கரியில் ஓடுமாறு மாற்றப்பட்டன. அடுப்புக்கரிக்கும் கிராக்கி அதிகரிக்கவே, காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட்டன. யுத்தம் முடிந்து சுதந்திரமும் ஐந்தாண்டுத் திட்டங்களும் வந்தபின், ஐம்பதுகளில் இந்தியாவின் தொழிற்புரட்சி வலுவடைந்தது. இன்றைய தொழில் மற்றும் தொழில் நுட்பத்தின் அஸ்திவாரம் அன்று இடப்பட்டதெனலாம். அங்கலேஸ்வர் (குஜராத்) போன்ற புதிய எண்ணெய்வளக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது அடுத்த பத்தாண்டுகளில். அப்போது நடந்த முதற்பெரும் தவறு அத்துறையை ஓஎன்ஜிசி என்ற அரசு நிறுவனத்தின் ஏகபோக உரிமை ஆக்கியதே. அதேசமயம் 1965 வரை சொந்த எண்ணெய்வளம் அறியாத பிரிட்டன் வடக்குக் கடலில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்து உடனேயே முழுமூச்சுடன் அதில் இறங்கிப் பெரிய பெட்ரோலியம் உற்பத்தியாளராகி 1990-களில் தினசரி நான்கு மில்லியன் டன் எண்ணெய் எடுத்தது. நாமும் அதே வேகத்தில் செயல்பட்டிருந்தால் அரபி, வங்கக் கடல்களிலிருந்து நமக்கு வேண்டிய முழு அளவு எண்ணெயையும் பெற்றிருக்கலாம். ஆனால் 1990-களில் நமது சுயதேவை பூர்த்தி வெறும் 25 சதவிகிதம்தான் வளர்ந்திருந்தது. அண்மையில் இத்துறையில் தனியாரையும் அனுமதித்தபின் ரிலையன்ஸ் கண்டுபிடித்திருக்கும் வளங்கள் அறுபதுகளிலும் அங்கேதான் இருந்தன; ஆனால் ஓஎன்ஜிசியின் கிட்டப்பார்வைக்கு அவை எட்டவில்லை. அரசு நிறுவனங்களுக்கே உரித்தான மெத்தனத்தினால் நாற்பது ஆண்டுகளுக்கு நமது பொருளாதார முன்னேற்றத்துக்கான பாதையைத் தவறவிட்டு விட்டோம். இப்போதாவது கண்டுபிடித்தோமே என்பதுதான் ஆறுதல். அடுத்தது, இதைவிடப் பெரிய “இமாலயத்’ தவறு. அரசியலைத் தவிர வேறொரு காரணமும் இல்லாமல், 1970-களில் இந்திரா காந்தி நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கினார். மூன்றே ஆண்டுகளில் உற்பத்தி சரிந்து நிலக்கரி விலை நம்ப முடியாத 300 சதவிகிதம் ஆயிற்று என்பதை அரசாங்கமே ஒப்புக்கொள்ள வேண்டிவந்தது. ஊழல்களும் மலிந்து, குறிப்பாக பிகாரில், மாபியாக்களின் ஆதிக்கம் வலுத்தது. அவை இன்னும் நிலக்கரித் தொழிலைத் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றன. தனியார் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் நிலையிலிருந்த அரசாங்கம், அரசுடமை நிறுவனங்களே தவறிழைக்கும்போது செயலிழந்து நின்றது. மொத்தத்தில் வெள்ளைக்காரன் காலத்திலிருந்து நமக்கிருந்த ஓர் அரிய செல்வத்தை இன்று இழந்து நிற்கிறோம். அதேசமயம் நமது ரயில்வே கொள்கையும் தப்பான பாதையில் போகலாயிற்று. குப்குப் என்று புகைவிடும் கரி எஞ்ஜின்களுக்குப் பதில் டீசல் எஞ்ஜின்களைப் போட்டு 48 மணி நேரம் ஓடிய தூரத்தை 36 மணியில் கடப்பதில் பெருமிதம் கொண்டோம். நம்மிடம் இல்லாத (வெளிநாட்டுப்) பெட்ரோலியத்தை நம்புவதைவிட உள்ளூர்ச் சரக்கான நிலக்கரியை உபயோகித்து கொஞ்சம் மெள்ளப் பிரயாணம் செய்வதே விவேகம் என்பதை மறந்தோம். சொல்லிவைத்தாற்போல் 1973 அரபு – இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்தபோது இந்தியப் பொருளாதாரமே சற்று ஆடித்தான் போயிற்று. பணவீக்கத்திலிருந்து அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு வரை எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாது இதே கொள்கைத் தவறு இன்னும் சில துறைகளிலும் செய்யப்பட்டது. காலங்காலமாக நமக்குக் கைகொடுத்துவந்த கால்நடைச் செல்வத்தைத் தொலைத்துவிட்டு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்துக்கு டிராக்டர்களையும் உள்ளூர்ப் போக்குவரத்துக்கு (சிற்றூர்களிலும்கூட) மாட்டுவண்டி, ஜட்காவுக்குப் பதில் ஆட்டோமொபைல் வாகனங்களையும் கைக்கொண்ட கொடுமை அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகளில் முழுமையடைந்தது. கால்நடைகளால் சுற்றுப்புறச் சூழலும் மாசுபடவில்லை. அன்னியச் செலாவணியும் மிச்சம் என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட தில்லி, சென்னை போன்ற மாநகரங்களில் இருந்து கோலோச்சிய மாட்சிமை தங்கிய அரசுகளுக்கு நேரம் இருக்கவில்லை. எண்ணெய் வளம், நிலக்கரி, கால்நடையை விடவும் கூட நவீன கால நாகரிகத்தில் தலையாய முக்கியத்துவம் பெற்றிருக்கும் மின்சக்தியின் நிலையை அடுத்துக் கவனிப்போம். ஐம்பது, அறுபதுகளில் ஏறக்குறைய நாட்டின் நதிகள் எல்லாவற்றிலும் அணைகட்டி விட்டோம். அதனால்தான் இந்தியாவின் லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் ஆண்டுக்கு ஆண்டு பல்கிப் பெருகிய தொழில்களுக்கும் மின்சாரம் கொடுக்க முடிந்தது. ஆனால் மலைச்சரிவுகளில் காடுகள் அழிந்து ஆறுகள் வறட்சி அடைந்துவரும் இன்றைய நிலையில் இன்னும் அதிகப்படியான மின்சக்தியை ஆறுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. நிலக்கரி வளத்தை முழுமையாக உபயோகித்துக் கொண்டிருந்தால் அனல் மின்சாரம் நமது தேவையைப் பூர்த்தி செய்திருக்கலாம். இன்று அது நடக்காத காரியம். அதனால், ஆபத்தானது என்றாலும் அணுமின்சாரத்தைக் கொண்டு ஓரளவு சமாளித்து வருகிறோம். நாம் முன்னேறுவதற்கு மாநில அரசுகளின் மின்வாரியங்களே பெரிய தடையாய் இருக்கின்றன. உற்பத்தி, விநியோகம் இரண்டு திசைகளிலும் பொய்த்துப்போய் நாட்டின் தொழில் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்தி வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் அரசுகளாலும் ஆளுங்கட்சிகளாலும் அரசியல் லாபங்களுக்காக அவை பயன்படுத்தப்படுவதே. உதாரணமாக, இலவச மின்சாரம் கொடுப்பது, மின்திருட்டைக் கண்டுகொள்ளாமல் விடுதல் முதலியன. அரசியல்வாதிகளின் தலையீட்டால் இல்வாரியங்கள் அளவுக்கு அதிகமான ஊழியர்களைச் சுமந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கே திணறுகின்றன. நஷ்டத்தினால் பணமுடை, அதன் விளைவாக விஸ்தரிப்பு, புதுப்பித்தல் இரண்டுமே இயலாத நிலை என்று மின்வாரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழுகிக் கொண்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்குமுன் சீனாவில் மஞ்சுப் பேரரசு காலத்தில் உயர் குடும்பப் பெண்கள் இரும்புக் காலணிகளால் இறுக்கப்பட்டு வளர்ச்சி குன்றிய சிறிய பாதங்களால் தங்கள் சரீர பாரத்தைச் சுமக்க முடியாமல் திணறுவார்கள் என்று படித்திருக்கிறோம். மின்உற்பத்தியும் விநியோகமும் சீர்திருந்தி நம்பகமான சப்ளை கிடைத்தாலொழிய, இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்கள் வருங்காலத்தில் அந்த மஞ்சுப் பெண்மணிகளின் நிலைக்குத் தள்ளப்படலாம்.

வார்த்தை நவம்பர் 2009 இதழில்… (10/29/09)

ஆகாசவாணி – எஸ்.வி. ராமகிருஷ்ணன்

கட்டுரை

சென்ற ‘விய’ வருடத்தில் வாழ்க்கை

எஸ்.வி. ராமகிருஷ்ணன்

வழக்கம்போல் அறுபதாண்டு கழித்து விய வருடம் மறுபடியும் எட்டிப் பார்க்கிறது. அறுபது வருடமென்றால் இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட காலம். இந்த இடைவெளி நமது வாழ்க்கைமுறை பெரிதும் மாறிவிட்ட காலம். 19ஆம் நூற்றாண்டின் சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நவீன இந்தியா உருவான காலம்.

விய வருடத்தில் (1946-47) நம் வாழ்க்கை முறையை இன்றைய வாழ்க்கைமுறையுடன் ஒப்பிட்டால் வியப்பாகவும் திகைப்பூட்டும் அளவுக்கு வித்தியாசமாகவும் இருக்கும். உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இடச் சிக்கனத்தை உத்தேசித்துச் சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறேன். இன்று பட்டிதொட்டியெல்லாம் வியாபித்திருக்கும் செல்பேசி (cell phone) பற்றி நான் சொல்லவரவில்லை. அது நம் கண்ணுக்கு முன்னால் கடந்த பத்தாண்டுக் காலத்தில் பரவிய வசதி. சாதாரணத் தொலைபேசியே (landline) அன்று ஒரு பேரதிசயம். பம்பாய், சென்னை போன்ற பெரு நகரங்களில்கூட மிகக் குறைவாகவே காணப்பட்ட வஸ்து. Mofussil என்று அழைக்கப்பட்ட ஜில்லாக்களை எடுத்துக்கொண்டால், கலெக்டருக்குத் தொலைபேசி உண்டு, தாசில்தாருக்குக் கிடையாது. அந்த அளவுக்கு மட்டாக இருந்தது என்பதை விளக்குவதற்குச் சொல்கிறேன். “அம்மாவின் உடல்நிலை மோசம் உடனே கிளம்பவும்” என்று சென்னையில் வசிக்கும் தனயனுக்குத் தெரியப்படுத்த கோவையில் இருக்கும் தந்தை உபயோகித்த சாதனம் தந்திதான், ஃபோன் அல்ல. பாட்டி போய்விட்டார் என்று லெட்டர் போடுவார்கள். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அந்த நாளில் தபால் அடுத்த நாளே போய்ச் சேர்ந்துகொண்டிருந்தது. விய வருடத்தில் அஞ்சலட்டை (post card) முக்காலணாவிலிருந்து அரையணாவாகக் குறைந்தது. யுத்த காலச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அது அரையணாவிலிருந்து உயர்த்தப்பட்டிருந்ததாகவும் இப்போது யுத்தம் முடிந்ததை ஒட்டி மீண்டும் குறைக்கப்பட்டதாகவும் என் தாயார் அப்போது சொன்னது ஞாபகம் இருக்கிறது. கவர் ஒன்றரை அணா. அப்போது இன்லண்ட் லெட்டர் இருக்கவில்லை (அது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து சுதந்திர இந்தியாவில் ரஃபி அகமத் கித்வாயினால் கொண்டுவரப்பட்டது). தபால் ஆபீஸில் கார்டு, தபால் தலை தவிர கொய்னாவும் விற்றார்கள் என்பது பலருக்கும் அதிசயமாக இருக்கும். ஆம், மலேரியாவுக்கான அந்த மகா ஔஷதத்தைப் பட்டிக்காட்டு ஏழை எளியவர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது இந்த ஏற்பாடு. ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் ஆபீஸ் பூட்டியிருக்கும். ஆனால் தபால் பட்டுவாடா உண்டு. கடிதங்கள் வரும். தபாற்பெட்டியில்** போட்டால் ஞாயிறன்றேகூட எடுப்பார்கள்.

மகாத்மா காந்தியை மக்கள் வெறும் தலைவராகப் பார்க்கவில்லை. கடவுளாகவே மதித்தார்கள். தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னதில் பெருமளவை ஏற்றுக்கொண்டார்கள். ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்படாத எந்தக் கோயிலுக்கும் தான் வரமாட்டேன் என்று காந்தி சொல்லிவிட்டதை ஒட்டிப் பெரிய கோயில்கள் பலவற்றின் கதவுகளும் திறக்கலாயின. விய வருடத்தில் இவ்வாறு திறந்து காந்திஜி விஜயம் செய்த கோயில் பழனி. அந்த ஆண்டில் நீண்ட காலத்துக்கு (ஒரு மாதத்துக்கும் மேற்பட்டு) மகாத்மா சென்னை ஹிந்தி பிரச்சார சபாவில் தங்கினார். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். “All are welcome”. அவரைச் சென்று சந்திக்காத சென்னைவாசிகளே இல்லை எனலாம். காந்தியடிகளின் கையெழுத்துக்காகப் பலரும் அவரை முற்றுகையிடுவது வழக்கம். ஆனால் கையெழுத்து வேண்டுமானால் ஐந்து ரூபாய் கொடுத்துவிட வேண்டும். அந்தப் பணம் ஹரிஜன நிதிக்குப் போய்ச்சேரும்.

அதே காந்தி என்ன முட்டிக்கொண்டாலும் கைகுத்தலரிசி நசித்துக்கொண்டே வந்தது. நகரங்களில் அரிசி என்றாலே மில் அரிசிதான். கைகுத்தலரிசியைப் பார்க்கக்கூடக் கிடைக்காது. அதிலும் வெள்ளைவெளேர் என்று ‘பாலிஷ்’ பண்ணி (அப்போதுதான் பார்வையாயிருக்குமாம்) சத்தில்லாமல் சாப்பிடும் பொல்லாத வழக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் (நல்ல வேளையாக) காந்தியார் பரிந்துரைத்த வெல்லத்தின் நிலைமை இப்படி இருக்கவில்லை. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர் அஸ்கா என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை (refined sugar) உபயோகிக்கவில்லை. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை மட்டுமே பாவித்தார்கள். மேல் தட்டுகளிலும்கூட வெல்லம், அஸ்கா சர்க்கரையின் உபயோகம் பாதிப் பாதியாக இருந்தது. எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் ரேஷன் அட்டைக்குக் கிடைக்கும் அஸ்காவை எங்கள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு எங்கள் பங்கு ‘சீமை எண்ணெயை’ (மண்ணெண்ணெய்) சந்தோஷமாக வாங்கிச் செல்வார்கள்.

ஆமாம், யுத்த காலத்தில் ஆரம்பித்த, ‘கூப்பன்’ என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட ரேஷன் கார்டு வெகுவாக அமலில் இருந்தது. அரிசி, மண்ணெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை என எல்லாவற்றுக்கும் ரேஷன். ‘கூப்பன்’ மாதிரி ஏழை மக்களை வறுத்தெடுத்த இன்னொரு கொடுமையை என் வாழ்நாளில் பார்க்கவில்லை. சிவப்பு நாடா, லஞ்ச ஊழல் எல்லாவற்றாலும் ஊறியிருந்த கூப்பன் முறை மக்களை, குறிப்பாக ஏழைகளை, நிஜமாகவே ‘வயிற்றில் அடித்தது’. பல தடவை அரிசி புழுத்துப் போய் இருக்கும். கடைக்காரர்கள் நிறுவையிலும் அளவையிலும் அநியாயம் செய்வார்கள். ரேஷன் கடைகளில் நீண்ட கியூ நிற்கும். விற்பவர்களின் சந்தை (seller’s market) என்பதால் கடைக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். விய வருடத்தில் அரிசி 8 அவுன்ஸ் போட்டார்கள். ஒரு சமயத்தில் 6 அவுன்ஸாகக் கூடக் குறைந்தது. பாக்கி அவுன்ஸ்களுக்குக் கோதுமை போட்டார்கள். கோதுமை சாப்பிட்டு வழக்கமில்லாத தமிழர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

வாழ்க்கை இன்னும் ‘சிம்பிளாக’ இருந்தது. வீட்டுக்கு வீடு கிணறு இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது.

காரணம், ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்படவில்லை. பல நதிகளும் ஜீவநதிகளாக இருந்தன##. ஆறுகளில் தண்ணீரைத் தவிர மணல் தாராளமாகக் காணப்பட்டது. வீடு கட்டுவதற்காக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது, லாரி லாரியாக அல்ல. ‘ஆற்று மணற்கொள்ளை’ என்பது அன்று எவரும் கேள்விப்படாத பிற்கால அதிசயம். சென்னை, கோவையைவிடச் சிறிய நகரங்களில் (உ.ம்: திருப்பூர்) குழாய்த் தண்ணீர் சப்ளை எதுவும் இருக்கவில்லை. குழாய் இருந்த பெரிய நகரங்களில் கூடப் பெரும்பாலோர் கிணற்றுத் நீரையே உபயோகித்தனர். நல்ல கிணற்று ஜலம் இருக்கும்போது செலவு செய்து பைப்லைன் வைப்பானேன், நகர சபைக்குத் தண்டம் கட்டுவானேன் என்றே பெரும்பாலோரும் எண்ணினர். கிணறு என்றால் சங்க காலத்திலிருந்து வரும் தண்ணீர் சேந்தும் கிணறு. போர்வெல் என்பது அப்போது அறியப்படாத விஷயம்.

நூற்றாண்டின் முதல் 45 ஆண்டுகளிலேயே நாட்டு வைத்தியம் க்ஷீணித்து ‘இங்கிலீஷ்’ வைத்தியத்தின் கை ஓங்கியிருந்தது. ஆனால் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் குறைவாகவே இருந்தார்கள். பெரும்பாலான டாக்டர்கள் எல்.எம்.பிக்கள்தான். தவிர எல்.ஐ.எம் என்ற கூட்டு மருத்துவம் (integrated medicine) படித்தவர்கள் இருந்தார்கள். ஆங்கில மற்றும் ஆயுர்வேத முறைகளைச் சேர்த்துப் பயின்றவர்கள். அவர்களும் பெரும்பாலும் அலோபதி மருந்துகளே கொடுத்தனர். சுலபம், மற்றும் வரும்படிக்கு உகந்ததாயிருந்த காரணத்தால். சல்ஃபா மருந்துகளே மிக வீரியமுள்ளதாகக் கருதப்பட்டன. ஆண்டிபயாடிக்குகளின் சகாப்தம் (ணீஸீtவீதீவீஷீtவீநீ ணீரீமீ) இன்னும் தொடங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். விய வருடத்தில்தான் பெனிசிலின் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது. ஆனால் விலை மிக அதிகம். தவிர அன்றைய பெனிசிலினுக்குக் குளிர் சாதனம் தேவை. அது அன்று பரவலாக இருக்கவில்லை. இன்று நமக்குக் குளிர்விட்டுப் போன டைபாய்டு ஜுரத்திருந்து க்ஷயரோகம் (காசம்) வரையிலான பல நோய்கள் அன்று பயங்கர எமன்களாய் விளங்கின.

இன்று தொழுநோய் என்றழைக்கப்படும் குஷ்டரோகத்துக்கு மருந்து இல்லாததால் அது கர்ம வியாதி என்றே கருதப்பட்டது. அவ்வப்போது காலராவும் எப்போதாவது பிளேக் நோயும் தோன்றி உயிர்களை அள்ளிக்கொண்டு போயின. அப்போதெல்லாம் கார்கள் (பிளஷர் என்று சொல்வார்கள்) மட்டுமின்றி ரேடியோக்களும் மிகக் குறைவாக இருந்த காலம். விய வருடம் வைகாசி மாதம் (மே 1946) லண்டனிலிருந்து வந்திருந்த காபினெட் மிஷனின் இந்திய சுதந்திரம் பற்றிய மிக முக்கியமான முடிவைப் பற்றி ரேடியோவில் சொல்லப்போகிறார்கள். அதை நேரடியாகவும் உடனடியாகவும் கேட்பதற்காக எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே கூடியது நினைவிலிருக்கிறது. முனிசிபல் நகரமான தாராபுரத்தில் அப்போது இரண்டு மூன்று பேர்களின் வீட்டில்தான் வானொலிப் பெட்டி இருந்ததாம். கிராமங்களில் மின்சாரம் இல்லாததும் நகரங்களில் பெரும்பாலான வீடுகள் மின்வசதி வைத்துக்கொள்ளாததும் காரணமாயிருக்கலாம்.

நூற்றாண்டின் தொடக்கத்தில் மாதவையா பிரலாபித்த சமூக அவலங்கள் இன்னும் காணப்பட்டன. போன விய வருடத்தில் பெண்டாட்டியைத் ‘தள்ளி’ வைத்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பாக இருக்கவில்லை. ‘இருதார மணத் தடைச் சட்டம்’ வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் இருந்தன.

** தபால் + பெட்டியின் சந்தியைத் தமிழ்ப்படுத்தி ‘தபாற்பெட்டி’யென்று அந்தக் காலத்தில் எழுதினார்கள் என்பதிலிருந்து இந்தச் சொல் தமிழில் பூரணமாக இணைந்து absorb / integrate ஆகிவிட்டது என்பது தெரிகிறது. இது போன்ற பதங்களைக் களைந்துவிட்டு செயற்கையான சொற்களைப் புனைவதற்கு அவசியம் இல்லை என்றும் தோன்றுகிறது.

## எனக்குத் தெரிந்து ஜீவநதியாக இருந்து அண்மைக் காலத்தில் அந்த அந்தஸ்தை இழந்தது எங்கள் ஊர் அமராவதி. அந்த நாளில் கடுங்கோடையிலும் முழங்கால் தண்ணீராவது ஓடும். இன்று பல மாதங்களுக்கு வற்றிப்போகிறது.

ஓவியங்கள்: என்.சீனிவாசன்

அது அந்தக் காலம்

‘அஸ்கா சர்க்கரை’ என்று கேள்விப்படுகிறோமே, அப்படியென்றால் என்ன ? அந்தப் பெயர் எப்படி வந்தது ? – இந்தத் தகவல்கள், எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய ‘அது அந்தக் காலம்’ என்ற அருமையான கட்டுரைத் தொகுதியில் கிடைத்தது. (உயிர்மை பதிப்பகம் – 120 பக்கங்கள் – ரூ 60/-)

‘அஸ்கா என்றால், நிறத்திலிருந்து சத்துவரையான சர்க்கரைக்கே உரிய எல்லா இயல்புகளும் பாழடிக்கப்பட்டு, நாமெல்லோரும் இன்று விழுந்து விழுந்து சாப்பிடுகிறோமே, அந்த வெள்ளையான படிகச் சர்க்கரை’, என்று எழுதுகிறார் எஸ். வி. ராமகிருஷ்ணன்.

ஆதிகாலத்தில் சென்னை ராஜதானி முழுவதற்கும் ஒரே ஒரு சர்க்கரை ஆலைதானாம். அந்த ஆலை (தற்போது ஒரிஸாவில் உள்ள) ‘அஸ்கா’ என்ற ஊரில் இருந்ததாம், ஆகவே, அங்கே தயாராகும் சர்க்கரையை ‘அஸ்கா சர்க்கரை’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்போல !

அன்புள்ள ஜெயமோகன்,

குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள்

1. மகாத்மா காந்தி தேசத்துரோக  (Treason) குற்றத்துக்காக விசாரிக்கப்படவில்லை ராஜதுரோகக் (Sedition) குற்றத்துக்காகவே விசாரிக்கப்பட்டார். ராஜதுரோகம் என்பது அரசை நிந்தனைசெய்வது, அதன் அடிப்படைகளை எதிர்ப்பது. தேசத்துரோகம் என்பது தேசத்துக்கு எதிராக போர் செய்வது. தேசத்துரோகம் சிலநாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக மாதாஹாரி ·ப்ரான்ஸில் முதல் உலகப்போர் நாட்களில் ராஜத்துரோக வழக்குக்காக மரணதண்டனைக்கு ஆளானார். ஆனால் அது பிரிட்டிஷ் சட்டப்படி பெரும்குற்றம் அல்ல. அரசுக்கு எதிராக போர் செய்தல் என்னும் தேசத்துரோகம் என்பது பெரும்குற்றம். அது மரணதண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனைக்கு உரியது. வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீர் சவார்க்கர் போன்றவர்கள் அக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

2. இரண்டாம் உலகப்போரில்  வெற்றிபெற்றவர்களால் அமைக்கப்பட்ட போர்க்குற்றநீதிமன்றம் ஜெர்மனியில் நியூரம்பர்க் நகரில் நடைபெற்றது, ஆஸ்டர்விட்ஸில் நடந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். போலந்து நாட்டில் உள்ள ஆஸ்விட்ஸ் நகரில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட படுகொலை முகாம்கள் இருந்தன. ஆஸ்விட்ஸ் என்பதே உச்சரிப்பு. ஆஸ்டர்லிட்ஸ் என்று இன்னொரு நகரம் உள்ளது. 1805ல் நெப்போலியன் அங்கே ஒரு பெரும் வெற்றியை அடைந்தார். மற்றபடி அதுஅ ழகிய நல்ல ஊர்.

மேலதிகாரிகளின் ஆணையின்படி நடந்தோம் என்ற குற்றவாளிகளின் விளக்கம் விசாரணை மன்றத்தால் ஏற்கப்படவில்லை. அத்துடன் போரின்போது மேலதிகாரிகளை மீறி ஜெர்மனிய படைவீரர்கள் நடந்துகொண்டார்கள் என்றும் ஏராளமான குற்றச்சாட்டுகள் அப்போது இருந்தன. அந்த ஜெர்மானிய வீரர்கள் கோர்ட் மார்ஷியல் செய்யபப்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். [ நேசநாடுகளிலும் சட்டம் வேறாக இருக்கவில்லை, ராணுவத்தைப்பொறுத்தவரை]

பின்னர் இரண்டாம் உலகப்போர் குற்றநீதிமன்றம் ஜப்பானிய வீரர்களையும் டோஜோவையும் விசாரிக்கக் கூடியபோது அதில் ஒரு இந்திய நீதிபதியும் இருந்தார். ராதா பெனோட் பால் [Radha Benode Pal] வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்களை விசாரித்து தண்டிப்பதில் உள்ள அறப்பிரச்சினையை பற்றி அவர் ஒரு மாறுபாடுக் குறிப்பை எழுதினார்.வென்றவர்கள் அணுகுண்டை பயன்படுத்தி மானுடக்குலம் கண்டிராத அழிவை உருவாக்கினார்கள்.[ போர் குற்ற விசாரணை மன்றத்தில் அதேயளவுக்கு கொடும்போர்க்குற்றங்களைச் செய்த ஸ்டாலினின் ரஷ்யா நீதிபதியின் பீடத்தில் வீற்றிருந்தது] ஜஸ்டிஸ் பாலின் தீர்ப்பு பெரிதும் மதிக்கபப்ட்ட ஒரு  செவ்வியல் தீர்ப்பு. ஆனால் அவரது குரல் தனித்து ஒலித்தது, டோஜோ விசாரணைக்குப்பின் தூக்குத்தண்டனைக்கு ஆளானார்

அன்புடன்

எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாத்

அன்புள்ள எஸ்.வி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

தங்கள் கடிதத்துக்கு நன்றி. நியூரம்பர்க் பற்றிய தகவல் ஒரு நினைவுப்பிசகு . திருத்தியிருக்கிறேன்.தேசத்துரோக- ராஜதுரோக குற்றச்சாட்டுகள் நடுவே உள்ள வேறுபட்டும், நீதிபதி பால் பற்றிய தகவலும் எனக்குப் புதியவை. நன்றி

*

மைத்ரேயன் :: Literature Critics: A Comparison between Tamil & Western World

November 24, 2008 Leave a comment

பொதுவாக ஒரு நாகரிகம் தன் பழமையை இழந்து நவீன யுகத்துக்கு இழுத்து வரப்படும்போது நேரும் ஏராளமான சிதைவுகள், மறு உயிர்ப்புகள், புதுக் கனவுகள், காலியாகும் கூடுகள் என்று ஏதேதோ நடக்கும். இந்தக் காலத்தில் எழுந்ததுதான் மேலை உரைநடை இலக்கியம்.

ஏன் உரைநடை இலக்கியம் 16ஆம் நூற்றாண்டுக்குப்பிறகுதான் எழுந்தது என்பதே ஒரு வசீகரமான வரலாற்றுப் புதிர். அச்செழுத்து கிட்டிய பிறகுதான் அதைப் பொது ஜன இலக்கியமாகக முடிந்தது,

விலை குறைய ஆரம்பித்தது ஒரு புத்தகத்துக்கு என்பது ஓரளவு வசதி இருந்தவர் கூட அவற்றை வாங்க இடம் கிடைத்தது என்றெல்லாம் ஒரு புறமும், பொதுக் கல்வி மேற்கில் பரவ ஆரம்பித்ததும் பலதர மக்களிடம் எழுத்து பரவியதும் பொதுஜன இலக்கியம் எழுந்தது என்றும் ஒரு புறமும் என்று பல விதமான விளக்கங்களுண்டு.

இவை அனேகமாக பொதுப் புத்தி விளக்கங்கள்.

ஆழமான விளக்கங்களுக்கு வால்டர் ஓங் உடைய நூல்களைத் தேடிப் படிக்க வேண்டி வரும்.

இன்னொரு புறம் மக்கள் திரள் வரலாற்றை எழுதிய மார்க்சிய வரலாற்றாசிரியர்களான, எட்வர்ட் P. தாம்ஸன், ரேமண்ட் வில்லியம்ஸ் போன்றாரின் புத்தகங்களையும் படிக்கலாம்.

இந்த குழுவில் இன்னொருவரான பண்பாட்டு விமர்சகர் என்றறியப்படும் ரேமண்ட் விலியம்ஸ், வாழ்நாளில் ஒரு கணிசமான பகுதியை, முன்னைய தலைமுறை எஃப்.ஆர். லீவிஸ் உடைய சில கருத்துகளைத் தம் இலக்காக வைத்துக் கொண்டு அவற்றை அடைவதில் முனைப்பு காட்டினார் என்று எனக்கு இப்போது தெரிய வந்து வியப்படைந்தேன்.

இந்த புத்தகத்தில் பக்கம் 162 இல் இருந்து செல்லும் அத்தியாயத்தில் இதை நீங்கள் காணலாம் . Raymond Williams/ By Fred Inglis *chapter 8 pg 162 to 196 இல் விலியம்ஸ் எப்படி தன் நாவல்களை எழுதத் துன்பப்பட்டார் என்று காணலாம்.

*விலியம்ஸ் தன் நண்பர் எட்வர்ட் பா. தாம்ஸனைப் போலவே 19ஆம் நூற்றாண்டில் மாறிய பண்பாட்டின் கூறுகளை ஆய்ந்தவர். குறிப்பாக கிராமம் எதிர் நகரம் என்ற பண்பாட்டு முரண்களை ஆராய்ந்தவர். இணைப்புகளையும் தொட்டுக் காட்டத் தயங்காதவர். ஃபார்முலா மார்க்சிய அபத்தங்களை இந்த இரண்டு பேரும் தாண்டி யோசிக்கத் தெரிந்த மனிதர்கள். அதனால் ஃபார்முலா கட்சிகள் இவர் இருவரையும் ஒதுக்கியே வைத்திருந்தன.

இவர்களைப் போன்ற இலக்கியப் படைப்புகளில் ஊறி சமூக மாறுதல்களை வெறும் அரசியல் பொருளாதாரச் சட்டகங்களில் மாத்திரம் அடைத்துப் பார்க்காமல், பண்பாடு என்பதை ஒரு மனித வாழ்வின் அத்தியாவசியம் என்று எடுத்துக் கொண்டு ஆய்ந்த வரலாற்றாசிரிய / விமர்ச்கர் குறைவு. இந்தியாவில் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கும் ஒரு அற்பப்பார்வைதான் எங்கும் காணக்கிட்டுகிறது.

யூமா வாசுகி – கவிதை

November 24, 2008 Leave a comment

இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்

ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.

Goat Proverbs in Tamil :: Aaramthinai on Velladu

August 4, 2008 2 comments

கால்நடை வளம் – ஆடு
————————————————————–

சுருங்கச் சொல்லி மக்கள் உள்ளங்களை ‘சுருக்’கெனத் தைப்பது பழமொழி.

விவசாயத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் பழமொழிகள் விளக்கப்படுகின்றன. இது ஓர் இலக்கிய அனுபவமாகவும் உங்களுக்கு அமையலாம்.

1. அக்கிரகாரத்துக்குள் ஓர் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.

2. ஆடி வந்தது, ஆட்டுக்கிடா செத்தது.

3. ஆடி வெப்பல் ஆட்டுக் கிடைக்குச் சமானம்.

4. ஆடு ஊடாடக் காடு விளையாது.

5. ஆடு காற்பணம், புடுக்கு முக்காற் பணம்.

6. ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.

7. ஆடு கிடந்த இடத்தில் புழுப்புத்தானும் கிடையாது.

8. ஆடு திரிந்த இடமும், அகம்படியான் இருந்த இடமும் உருப்படாது.

9. ஆடு கெட்டவன் ஆடித் திரிவான், கோழி கெட்டவன் கூவித் திரிவான்.

10. ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?

11. ஆடு கொடுக்காத இடையன் பசுவைக் கொடுப்பானா?

12. ஆடு கொடுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.

13. ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா?

14. ஆடு தழை தின்பது போல.

15. இரண்டு ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.

16. ஆடு தீண்டாப் பாளையை மாடு தீண்டுமா?

17. ஆடு நனைந்தாலும் குட்டி நனையாது.

18. ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?

19. ஆடு பயிர் காட்டும், ஆவிரை நெல் காட்டும்.

20. ஆடு மிதியாக் கொல்லையும், ஆளனில்லாப் பெண்ணும் வீண்.

21. ஆடு வைப்பதை விட ஆழ உழுவதே நலம்.

22. ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டிலே கரண்டி பாலில்லை.

23. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறும் தம்மா கும்மா, அந்தக் கடன் கேட்கப் போனால் கிய்யா மிய்யா.

24. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, இந்த மதி கெட்ட மாட்டுக்கு மூன்று கொம்பு.

25. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?

26. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக்குட்டித் தீனிக்குப் பஞ்சமா?

27. ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டி தழுவுகிறதா?

28. ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா?

29. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடமில்லையா?

30. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது.

31. ஆனைவால் பிடித்துக் கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா?

32. இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட.

33. எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா?

34. கண்டால் தெரியாதோ கம்பளி ஆட்டு மயிரை.

35. கம்பளி மூட்டையென்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.

36. கம்பளி மேல் பிசின்.

37. கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?

38. கம்பளியில் ஒட்டின கூழைப் போல.

39. கம்பளி விற்ற பணத்துக்கு மயிர் முளைத்திருக்கிறதா?

40. கரடி கையில் உதை பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்.

41. கரடிக்குப் பிடித்த இடமெல்லாம் மயிர்.

42. கரடியால் துரத்தப்பட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்.

43. கலியாணப் பந்தலிலே கட்டின ஆடு போல.

44. காய்ந்த புலி ஆட்டு மந்தையிலே விழுகிறது போல.

45. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்பு போகாது.

46. குட்டிக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.

47. குருடன் ஆடு மேய்க்க எட்டாளுக்கு வேலையா?

48. கொடாத இடையன் சினை ஆட்டைக் காட்டினது போல.

49. கொழுத்த ஆடு குட்டி போட்டாலும், வழுக்கட்டை வழுக்கட்டைதான்.

50. கோனான் கோலெடுக்க நூறாடும் ஆறாடாச்சுது!

51. சண்டை செய்யும் இரண்டு கடாக்கள் நடுவில், நரி நின்று நசுங்கினது போல.

52. செத்த ஆடு காற்பணம், சுமைக்கூலி முக்காற்பணம்.

53. செம்மறியாடு வெளியே ஓட, திருட்டு நாய் உள்ளே.

54. துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி, என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.

55. தொழுவம் புகுந்த ஆடு பிழுக்கை இடாமல் போகுமா?

56. நரிக்கு இடங் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும்.

57. நரிக்கு பெரிய தனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.

58. பெருமைக்கு ஆட்டை அடித்து, பிள்ளை கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான்.

59. முன்னே ஆட்டைப் பிடி, பின்னே மாட்டைப் பிடி.

60. ரெண்டாட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது.

61. வெள்ளாடு குழைகின்றது போல.

62. வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப்புலி விழுந்து விழுந்து அலைந்ததாம்.

Categories: Books, Tamil, Writers Tags: , , ,

சிறுகதை :: வாழ்க்கை – சி.சு.செல்லப்பா

August 1, 2008 Leave a comment

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா.

”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு:

பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே-சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம். அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப்போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண்முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ”ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டிவைக்கிறதுதானே? குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக்குமே – களத்துலே நெல்லு களமாக் கிடக்கும்.”

”இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா……..”

”அது எப்படிச் சிக்கும்? அறுகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக்காரன் ‘இதுக்கு மேலே கூட்டவல்லீங்க, நெல்லு நின்னுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான்? அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு?”

”அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”

”அவன் சொன்னானா? ஏன் சொல்லமாட்டான்? வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக்களத்திலே வச்ச மழை பெய்தால் அவதிப்படறது ஐயன்தானே? அவனவன் பாடுதாண்டா அவனுக்கு. என்னடா, மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக்கிட்டு வருது. இன்னும் களத்துலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக்கிட்டான்.”

மிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்திக்கும் அங்கே ஏது இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.

இருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. ”களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்புக் குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது. ”சாமி, சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ! மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

”காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

”ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”

”ஹ§ம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க: செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

”ஏன்? வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

‘ஹ§ம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே? கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”

”சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க? ஹ§ம், ஏது?”

”அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி. சந்தணக்குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே?”

”வாறேன், போங்க.”

மாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.

நீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டு விட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும், ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.

அந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டி இருந்தன.

சமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஸித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா?’ என்று ஏளனம் செய்கின்றன.

வரப்பு வரப்பாகக் கடந்து கொண்டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…. இருடா. அதென்ன சப்தம்? அழுகைமாதிரி இருக்கே? அதென்னாடா சந்தணம்?” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக்குரல் விழுந்தது.

சந்தணம் விளக்கினான். “ஆமாங்க. நம்ம செங்குளத்து ஐயரு மகன் இறந்து போயிருச்சு, அந்த பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி, சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா?”

“ஆமாடா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா? அடப்பாவமே!”

“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது? அடேயப்பா! சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.

“ஹ§ம்; போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு. அவ்வளவுதான். யாருடா அது அங்கே? வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு?”

‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயிலிருந்து சடாரென்று மாறி தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழவும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடரமுடியவில்லை.

“ஆமாங்க, வேலுதான்-ஏ, தேவாய்யோய்…” என்று கூவினான் சந்தணம்.

“அட, அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை, அவசரக் குடுக்கை! விட்டுப் பார்க்காமே? ஒளிஞ்சுக்கிட்டுத் திரியறான் அவன்.”

“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.

செங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக்கொண்டுவிட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா, “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு? அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார்?” என்று கிண்டல் செய்துகொண்டே நடந்தா‘.

வேலு மேல்துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக் கொண்டே, “ஆமா, பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரில்ல இருக்காங்க?” என்றான்.

மறுபடியும் பல்லவி ஆரம்பம்.

“ஆமாடா, சக்கரையாப் பேசுவே இல்லே? போன வருசத்துக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”

“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க? பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம்?”

“வேலிக்கு ஓணான் சரியான சாக்ஷ¤தான்–தோப்புக்குக்கடவு எங்கேடா? மேற்கே இருந்தா?”

“இல்லீங்க. ஆட்டுக்கார பசங்க துட்டு பண்ணுதுங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.

அழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.

“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத்துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.

“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்றாவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால்களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.

“அதான் சரீங்க, எதிர்க்க நின்னா மாதிரியாத்தான் இருக்கும். வாங்க சாமி-சின்ன சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்.

முதல் தடவையாக மசானத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயே மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. விவரம் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனைதான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது- அந்தக் கோரமான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

முதல் பார்வையில் ஓடையின் எதிர்க்கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக்களிடையே பளிச்சென்று தெரிந்தது. அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின்போது மேலே மேலே அதன் மீது எருக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும்போது எத்தனை குரல்கள் அலறித் துடித்தன! ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது!” என்று எல்லோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட்டேன். அழுகைக் குரல்கள் என்பின் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.

எத்தனையோ மேட்டுத்துண்டுகள் ஆற்றோரங்களிலும் ஓடையடிகளிலும் படிந்து கிடக்கின்றன. அவைமீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்டதில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று. மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு? ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும் நாம் இட்ட காரணப் பெயர் அது.

வேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத்துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது? ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குக்குள்ளும் ஓடிவருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசானமாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு; ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந்தூறுகளிடையே வந்துகொண்டிருந்தோம்.

வேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுக்களை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்துகொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள்போல் பசுந் தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டைகளுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடனே உண்டாயிற்று. “சீககிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.

“இங்கே தோப்பு இல்லாட்டா?” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அது வேறே கேள்வி” என்றேன்.

“எந்த மரத்துலே போடட்டுங்க?” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.

தோப்புக்காரன்–உனக்குத் தெரியாதா? போடு வளுக்கைப் பதமா.”

“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.

சந்தணம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித்தள்ள, வேலு வெட்டிக் கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.

திடீரென்று வேலு ஆரம்பித்தான்: “பாவம், செங்குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மகன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”

இளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏற்றின குளுமையில் கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

“ஆமாடா. அந்த மருமகன் வீட்டோட வந்து இருந்துவிடலாம்; ஐயருக்கு வேறு வழி இல்லை” என்று மாமா தொடர்ந்தார்.

“நல்லதுக்கா மருமகன் வாச்சு இருக்கிறாரு! அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க!” என்று சந்தணம் கலந்துகொண்டான்.

“இன்னைக்குத்தானா தெரியும்? வேணும் அந்த ஐயருக்கு அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜைய வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும் அதை விட்டுப்போட்டு..” என்று மாமா இழுத்தார்.

“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.

“போகுது; அவன் அவன் தலைவிதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன? ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே? அதை இழுத்துப் போட்டிடலாமா? என்ன யோசனை?” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பதுதான் எனக்குத் திகைப்பை ஊட்டியது. வாஸ்வதம்! செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்ப விஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதி நேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமாக அக்கரைகளுக்குத்தான். இது யதார்த்தந்தானே?

என் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.

சந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணைசேர்ந்த நிலம் ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க. புரவிலேயே ஓங்கின கை நம்முதுதான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”

கலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளிவந்தது. “ஆமாடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாச் சேருதில்லே! சிபார்சு செய்யமாட்டே? வேலு! சந்தணம் யோசனையைக் கேட்டியா?”

“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைக் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.

“பாருடா! அனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக!”

இருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். “பண்ணை நிழல்லே நிக்காட்டி எங்களுக்குப் பிழைப்பு ஏது?” என்றான் வேலு.

“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.

மாமா குரலை உயர்த்தி, நிலமா! போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா..? சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப் பாரு, அவுங்கப் போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துவிட்டு போவோம்” என்றார்.

சந்தணம் போய்வந்து, போய்விட்டதாகச் சொன்னான்.

தோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுதுவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றியாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.

விறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில் பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன்; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தௌ¤வில்லை. செய்கை கண்களில் விழுந்துகொண்டிருந்தது. அந்தப் புது ஈர மண்மேட்டைச் சுற்றிவந்து புகைவரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண்டிருந்தன; உள்ளே கனியும் கனலைத் தூண்டிவிடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.

இத்தனை பேரும் அலக்ஷ¤யமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடுகூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழிகிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றன. என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்!

என் நடையிலே மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்துகொண்டிருந்தது.

பண்ணைப் பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் ‘சிந்துமணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடா திருப்பத்தில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணைசேர்ப்பதிலும் அக்கரை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்கவந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்- இப்படி அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரையேற்றுவதில் இவ்வளவு அக்கரையா? இவ்வாறெல்லாம் மறுபடியும் நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.

திடீரெனப் பின்னால் ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.

“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”

அந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.

“வஞ்சமில் லாதமெய்க் காதல்அல் லாதில்லை”
என்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.

பிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அந்த இரு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்துவிட்டன.

பிரபஞ்சம் மாயம்: சந்தேகமில்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம்? சாவா? சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனந்தந்தானே! இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா? அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது! சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கிவிடுகிறது கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம், சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்!

உழன்றேன்; அதன் மறுபக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ்தவம்! சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤! எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ! எல்லாம் இயற்கையின் பகைப்புலத்தில்!

ஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.

இவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே; எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா? நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு! அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறைவேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவர்களைப் போன்றவர்களே அவர்களும். இதுதான் வாழ்க்கை.

Pathivukal.com: Brahmarajan on Jorge Luis Borges

May 21, 2008 Leave a comment

ஜோர்ஜ் லூயி ஃபோர்ஹே – பிரம்மராஜன் –

ஜோர்ஜ் லூயி போர்ஹே (1899–1986) வின் பெயர் பல காரணங்களுக்காக சர்வதேசஇலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஒரு நாவல் கூட எழுதாமல் நவீன–பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த போர்ஹே, லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். அடிப்படையில் போர்ஹே ஒரு கவிஞர். பிறகுதான் அவர் சிறுகதை எழுத்தாளர். எப்படி ஷேக்ஸ்பியரை முதலில் கவிஞர் என்று  அழைத்து பிறகு நாடகாசிரியர் என்று சொல்வோமோ அப்படி.  ஆங்கில–அமெரிக்க இலக்கியங்களின் சங்கமங்கள் நடப்பதும் போர்ஹேவின் புனைகதைகளில்தான். வாழ்தலின்  பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர். அவர் எழுதத் தொடங்கிய போது  இருந்த ஸ்பானிய மொழியின் போதாமையை உணர்ந்து, பிரக்ஞைபூர்வமாக இலக்கிய வகைமைகளை முன்னில்லாத வகையில் பிணைத்தும், லத்தீன் அமெரிக்காவின் பாரம்பரியங்களை மீட்டெடுத்தும், மறுகட்டுமானம்  செய்தும், மொழி ரீதியான  கெட்ட பழக்கங்களை ஒதுக்கியும் ஒரு துல்லியமான மொழியை உண்டாக்கினார்.

போர்ஹேவின் எழுத்துக்களை ஆராயும் போது நவீன லத்தீன் அமெரிக்காவின் எல்லா இலக்கியப் போக்குகளையும் உள்வாங்கிக் கொள்வதற்குச் சமமானதொரு அனுபவம் கிட்டும். தனித்துவமானதொரு அர்ஜன்டீனிய தேசீய கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்காமல் ஒரு விளிம்பு நிலைவாதியாகவே அரசியல் கோட்பாடுகள் கொண்டிருந்தார். போர்ஹேவின் எழுத்துக்கள்–அவை சிறுகதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும், கவிதைகளாகட்டும்– ஒவ்வொன்றுமே தொடர்ச்சியாக வாசகனை சவாலுக்கு இழுப்பவை. தேசீயவாதம், யதார்த்த வகை நாவல், தத்துவார்த்த கறார்த்தன்மை, கொள்கைவாதம், அரசாங்கங்கள் இவற்றை அவரின் எழுத்துக்கள் ஏதாவது ஒரு வகையில் சீண்டிக் கொண்டேயிருப்பவை.

“I believe that some day we will deserve not to have governments” என்று Dr. Brodies’ Report (1970) தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் எழுதியிருக்கிறார். தேசீயவாதமும் யதார்த்தவகை நாவலும் ஒரே தன்மையானவை என்று போர்ஹே கருதினார். விநோத வகை (அல்லது புனைவு) எழுத்துக்களே யதார்த்த வகை எழுத்துக்களுக்கான பொருத்தமான விஷமுறிப்பானாக இருக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் விநோத வகைக் கதைகளில் பயங்கரங்களும் அச்சமும் இலக்கிய ரீதியான, மற்றும் பெளதிக மெய்ம்மை மீறும் சிந்தனைகளால் ஈடு செய்யப் பட்டுவிட்டன. எல்லா விநோத வகை இலக்கியப்பிரதிகளும் யதார்த்த வகைப் பிரதிகளின் ஒற்றைப் பார்வையில் உலகத்தைப் பார்க்கும் தன்மையைக் கேள்விக்குட்படுத்துகின்றன. இந்த நிகழ்முறை திடீரென இருபதாம் நூற்றாண்டில் உருவாகிவிடவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே இதன் வேர்களைப் பார்க்க முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு (கொதிக்-Gothic-நாவல்கள்) விநோதக் கதைகளில் அசுரர்களும், மாயாஜாலங்களும், மந்திரமும் நிஜம் அல்லது யதார்த்தத்தை உறுத்திக் கொண்டேயிருந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் அசுரத்துவம் என்பது மனோவியலின் மூலம் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டது. காரணம் மனோவியலின் மூலமே வேறுவாக இருத்தலையும் பிற (the Other) வாக இருத்தலையும் வியாக்கியானப்படுத்த முடிந்தது. மொழியின் வாயிலா¡க எழுதப்பட்ட இலக்கியப் பிரதிக்கு வெளியே இருக்கும் உலகத்தினைச் சுட்ட வேண்டிய கட்டாயம் முடிந்து போய் இருபதாம் நூற்றாண்டில் புனைகதை தன்னைத் தானே சுட்டிக் கொள்ள வேண்டிய தன்னாட்சியின் அவசியத்தை உணர்ந்து கொண்டு விட்டது. பரிச்சயத்தன்மையையும் அதன் விளைவாக வரும் சலிப்புத்தன்மையையும் நீக்குவதற்கு பெரும்பாலும் சொல்லின் பிடியிலிருந்தும், பார்வைப் புலன்களின் பிடியிலிருந்தும் அகன்று போய் விட்ட முழுமுற்றான வேறு (Absolute Other)வை நவீன புனைகதை எழுத்தாளன் தேர்ந்து கொள்கிறான். வரலாற்றில் கலாச்சார ஒடுக்கு முறைகள் நேரடியாகவும் அவற்றுக்கு இணையான ஆனால் புறம்பான வெளிப்பாட்டு சக்தியையும் உருவாக்குகின்றன. ஹிரோனிமஸ் போஷ் என்பவரின் சித்திரங்களைப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியக் கூடும். தமிழ்நாட்டுக் கோயில்களின் யாளிகள், ரோமானிய கட்டிடக் கலையில் நீர் கொட்டும் வாயாக அமையும் கார்காயில்கள், ·பீனிக்ஸ் பறவைகள், கொம்பு முளைத்த குதிரை எல்லாமே புனைவு, வினோதம் ஆகியவை மனிதனுக்கு, அவனது சாதாரணத்துவத்தை மீறுவதற்குத் தேவைப்பட்டுக்
கொண்டேயிருப்பவை என்பதை உணர்த்தும்.

யதார்த்த வகைக் கதைகள் மட்டுமே போர்ஹே போன்றவர்களால் ஒதுக்கப்பட்டன. போர்ஹே நேரடிக் கதை (Straightforward Narratives) களையும் எழுதி இருக்கிறார். நேரடிக் கதை என்பது உத்திகளை விலக்கி விடுவது. இந்த மாதிரிக் கதைகளை Dr. Brodie’s Report இல் போர்ஹே எழுதியிருக்கிறார். உத்திச் சிக்கல்கள் இல்லாத பல லகுவான கதைகளை இத்தொகுப்பில் படிக்க முடியும்.குறுக்கீட்டாளர்,ரோசென்டோவின் கதை, மாற்கு எழுதிய வேதாகமம், ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். யதார்த்த வகை இலக்கியப் பிரதியின் ஒருமைத்தன்மை அல்லது ஒற்றை உலகப்பார்வையைத் தாக்குவதற்கு சிறந்த முறையில் பயன்படுவது துப்பறியும் கதை. எட்கர் ஆலன் போ என்ற அமெரிக்க நாவலாசிரியர், மற்றும் ஜி. கே. செஸ்ட்டர்டன் என்ற ஆங்கில நாவலாசிரியர் ஆகியோரை போர்ஹே ஏன் சிலாகிக்கிறார் என்பதும் நமக்குப் புரியும். மனோவியல் நாவலாசிரியர்களையும் போர்ஹே தாக்கியிருக்கிறார். நாவலாசிரியர்கள் கதை சொல்வதற்கு மறந்து போய்விட்டார்கள் என்றார் போர்ஹே. துப்பறியும் கதைகளைப் படித்த பிறகு எடுத்துப் படிக்கப்படும் இலக்கிய நாவல் அமைப்பொழுங்கு சிதைந்து காணப்படுவதாகவும் போர்ஹே கூறியுள்ளார். 1940களின் தொடக்கத்தில் தன் இளம் நண்பரான அடா·ல்ப் பியோய் காசரெஸ் என்பவருடன் இணைந்து நையாண்டித்தனமான துப்பறியும் கதைகளை Bustos Domecq என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். ஒரு பிரதான வெளியீட்டாளருக்காக துப்பறியும் கதைகளின் தொடர் தொகுதிகளைத் தொகுத்தும் கொடுத்துள்ளார்.(The Seventh Circle).

ஒரு அர்ஜன்டீனிய எழுத்தாளர் என்ற வகையில் போர்ஹேவுக்கு கடினமாக பொறுப்புகள் இருந்தன. கிளெரிகலிசமும், தேசீயவாதமும், ராணுவ பலமும் பிரேஸீலைச் சீரழித்து பல சமயங்களில் சர்வாதிகாரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தின. போனஸ் அயர்ஸ் நகரத்தையும் அதன் மனிதர்களையும் புராணிகப்படுத்துவதன் மூலம் தனக்கான எழுத்தாள தர்மங்களை உருவாக்கிக் கொண்டார் போர்ஹே. தனது அர்ஜன்டீனிய வரலாற்றினை அவரது முன்னோர்களின் குழுவிலிருந்து உருவாக்கிக் கொள்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த சர்வாதிகாரத்தை எதிர்க்கவும் அர்ஜன்டீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போர்ஹேவின் முன்னோர் (தந்தை வழி தாத்தாவான கர்னல் ·பிரான்சிஸ்கோ போர்ஹே) உதவி செய்திருக்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரோசாஸ் (Rosas)ம் இருபதாம் நூற்றாண்டில் பெரோனும் (Peron), அர்ஜன்டீனாவை
தங்களின் கட்டை விரலுக்கு அடியில் வைத்துக் கொண்டார்கள். 1946–55 ஆகிய வருடங்களிலும், பிறகு 1974இல் சிறிது காலமும் பெரோன் அர்ஜன்டீனாவின் சர்வாதிகாரியாக இருந்தார். இந்த சர்வாதிகாரத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களில் போர்ஹே முக்கியமானவர். ஆனால் உலகத்திற்கே பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்க வைக்கும்படியாக இருந்த 1940களில்தான் போர்ஹேவின் மிகச் சிறந்த சிறுகதைகள் எழுதப்பட்டன. ஒவ்வொரு நாள் காலையில் அவர் எழுந்து பார்க்கும் போதும் யதார்த்தம் அவருக்கு பீதி உருவாகத் தோற்றம் கொண்டது. பெரோனிசம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய அளவுக்கான பிரச்சனையாக இருந்த போதிலும், பெரோன் மிகவும் பிரபலமான நல்கொள்கையாளராக அர்ஜன்டீனியர்களுக்குத் தெரிந்த ஒரு காலகட்டத்தில் பெரோனை ஒரு நவ–பாசிஸ்ட் சர்வாதிகாரி என்று போர்ஹே விமர்சித்து கண்டனம் செய்தார். மிகுவெல் கேன் நூலகத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து போர்ஹே நீக்கப்பட்டார். அவருக்கு கோழிப் பண்ணை மேலாளராகப் “பதவி உயர்வு” தரப்பட்டது. சர்வாதிகாரங்கள் ஒடுக்கு முறைகளையும், அடிமைத்தன்மைகளையும் மாத்திரம் உருவாக்குவதில்லை. மாறாக மடத்தனங்களையும் உண்டாக்குகின்றன. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறதென்றார் அவர். அதாவது சர்வாதிகாரம் உருவாக்கும் ஒரு வித சோகமான சலிப்புணர்வை சரி செய்ய இலக்கியத்தினால் மாத்திரமே முடியும். பெரோனிசத்தைக் கண்டித்து கவிதைகளையும் விவரணைகளையும் எழுதினார்.

போர்ஹேவுக்கு 15 வயதாகும்போது 1914ஆம் ஆண்டு தன் குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். 1921ஆம் ஆண்டுதான் மீண்டும் போனஸ் அயர்ஸ¥க்குத் திரும்பினார். ஸ்பெயினிலும் ஸ்விட்சர்லாந்திலும் வாழ்ந்த போது லத்தீன், பிரெஞ்சு, மற்றும், ஜெர்மன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். இதே கால கட்டத்தில்தான் அவருக்கு நவீன இலக்கியங்களும் அறிமுகமாயின. மேட்ரிட் நகரில் Rafael Cansinos–Assens என்ற யூத–ஸ்பானியக் கவிஞரைச் சந்தித்து அவருக்கு நண்பரானார் போர்ஹே. 1919ஆம் ஆண்டில் அல்ட்ராயிசம் என்ற சொல்லையும் இயக்கத்தையும் உருவாக்கியவர் ர·பேல் கான்சினோஸ் ஆசென்ஸ். இந்த காலகட்டத்தில் தன்னுடைய இலக்கிய–அரசியல் கருத்துக்களைக் கட்டுரையாக எழுதி
The Sharper’s Cards என்ற தொகுதியாக வெளியிட்டார். இதே காலகட்டத்தில் அவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்புக்குப் பெயர் The Red Psalms. ரஷ்யப் புரட்சியையும் போல்ஷெவிக்குகளையும் புகழ்ந்து எழுதிய போர்ஹேவின் கவிதைகளை இந்த தொகுப்பு உள்ளடக்கியது. போனஸ் அயர்சுக்குத் திரும்பிய போது அவர் அர்ஜன்டீனிய அல்ட்ராயிசத்தின் தந்தை என்றே இலக்கியக் குழுக்களில் அழைக்கப்பட்டார். ஆனால் ஸ்பானிய அல்ட்ராயிசத்தின் போதாமையை–·பியூச்சரிசம் போலவே அதிகபட்சமாக நவீனத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்ததால்–உணர்ந்து அதைக் கை விட்டார். கவிதையின் நோக்கம் திடுக்கிடச் செய்வதல்ல என்பதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டியதாக போர்ஹே எழுதுகிறார்.

முதன் முதலில் எடிட் செய்த இலக்கியப் பத்திரிகை Prisma [Prism]. ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்டு போஸ்டர்கள் மாதிரி இந்தப் பத்திரிகையை அர்ஜன்டீனாவின் சுவர்களில் போர்ஹேவும் நண்பர்களும் ஒட்டினார்கள். இரண்டு இதழ்கள் வந்து நின்று போயிற்று இந்த மியூரல் மேகஸின். 1924இல் ஆல்பிரடோ பியான்ச்சி என்பவரின் உதவியுடன் Proa என்ற பத்திரிகையைக் கொண்டு வந்தார். ஒன்றரை வருடங்கள் நண்பர்களின்
உதவியுடனும் சொந்தக் காசுகள் செலவழித்தும் இந்த இதழை நடத்தினார். 15 இதழ்களோடு அதுவும் நின்று போயிற்று. 1933 லிருந்து கிரிட்டிகா என்ற பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு வந்த வருடம் 1942. முதல் சிறுகதைத் தொகுதியின் தலைப்பு The Garden of Branching Paths. மற்றொரு ஏடான El Hogar, பாப்புலர் சொசைட்டி வார இதழாக இருந்த போதிலும் வெளிநாட்டு இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பகுதியில் போர்ஹேவுக்கு இடம் தந்திருந்தது.

முழுமையான வேலை என்று பார்க்கத் தொடங்கியது 1937இல் முனிசிபல் நூலகத்தின் மிகுவெல் கேன் கிளையில் துணை நூலக அதிகாரியாக. நூலகத்தின் இயக்குநர் மற்றும் இரண்டு அதிகாரிகள் போர்ஹேவுக்கு மேலே இருந்தனர். ஏற்கனவே அந்த நூலகத்தில் பதினைந்து பேர் செய்யக் கூடிய வேலையை 50 பேர் செய்து கொண்டிருந்ததாக எழுதுகிறார். மிகவும் கடையாந்தர வேலையாக இருந்த போதிலும் அதையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

1938ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். செப்டிசீமியா என்ற நோய் தாக்கப்பட்டு தன் ஸ்வாதீனம் மீண்டும் வருமா என சந்தேகம் கொள்ளத் தொடங்கினார் போர்ஹே. தனக்கு மீண்டும் எழுதுவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும் என்ற பயம் அவரைப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய அறிவார்த்த சிந்தனை சரியாகத்தான் இயங்குகிறதா என்று
சோதிக்க விரும்பினார். கவிதைகளையும் புத்தக விமர்சனங்களையும் அவர் ஏற்கனவே எழுதியிருந்ததால் புதியதாக ஒரு கதையை எழுதிப் பார்க்கத் தீர்மானித்தார். கதையை வெற்றிகரமாக எழுத முடிந்தால் தன் நிலைமை சரியாக இருக்கிறது என்று தீர்மானித்துக் கொள்வதாய் முடிவு செய்தார். அதன் விளைவுதான் Pierre Menard, Author of Don Quixote. இந்தக் கதை இதன் முன்னோடிக் கதையான An Approach to Al-Mutasim போல கட்டுரையின் வடிவத்தையும் நிஜக்கதையின் வடிவத்தையும் உள்வாங்கிக் கொள்கிறது. இதன் உச்சபட்சமான சாதனைதான் டுலோன், உக்பார்,ஓர்பிஸ், டெர்ஷியஸ். இந்தக் கதையின் கற்பனா உலகம் மனிதர்கள் வாழும் உலகத்தினை பதிலீடு செய்வதாக அமைகிறது.

ஊடு இழைப்பிரதி என்று சொல்லக் கூடிய Inter-textuality யைப் போர்ஹே ஸ்ட்ரக்சுரலிஸ்டுகளுக்கு முன்பே முன்னோக்கி விட்டவர். எல்லையற்ற பிரதிகளின் வனமாக நூலகத்தினை சித்தரித்தவர் (The Library of Babel) போர்ஹே. சிறு வயதிலிருந்தே அவரது தந்தையின் நூலகத்தில் பல ஆங்கில நூல்களைப் படித்து வளர்ந்தவர். இந்த உலகத்தையே ஒரு புத்தக அலமாரியாகவோ அல்லது பல புத்தக அலமாரிகள் கொண்ட பிரம்மாண்டமான நூல் நிலையமாகவோ பார்த்தவர் போர்ஹே. ஆனால் நூலகத்தினை சந்தோஷமான ஒரு இடமாகச் சித்தரிக்கவில்லை. பீதிக்கனவுத் தன்மையதாகவே பேபல் நூலகம் தோற்றமளிக்கிறது. அடுத்து மொழியை மனிதர்களால் பகிரப்படும் குறியீடுகளாக கருதினார். ஒவ்வொரு மொழியும் தத்தம் விதமாக உலகத்தினை பார்வை கொண்டு அந்த மொழி பேசுபவர் கிரகித்துக் கொள்ளும் விதம் என்பதால் ஒரு மொழிக்கான சரிநிகர்கள் மற்ற எல்லா மொழிகளில் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் போர்ஹேவின் ஸ்பானிய மொழியே ஆங்கிலத்தில் சிந்தித்து ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

போர்ஹேவின் கதாபாத்திரங்கள் பல வேறுபட்ட வாழ்க்கைத் தளத்திலிருந்து வருபவர்கள். வாசகன் இந்தக் கதைகளில் இளவரசிகளை, மாட்டுக்காரர்களை, துப்பறியும் நிபுணர்களை, மந்திரவாதிகளை, அடியாள்களை, பைபிள் விற்பவர்களை, போலீஸ் இன்ஸ்பெக்டர்களை, பத்திரிகையாளர்களை, பெரும் பயணக்காரர்களை, பன்மொழி விற்பன்னர்களை, ராணுவ வீரர்களை, இறையியல்வாதிகளை, நூலகர்களை, எழுத்தாளர்களை, சாதாரண கடைகளில் வேலை பார்க்கும் எழுத்தர்களை பார்க்க முடியும். ஆனாலும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு தனியான மனோவியல் இயக்கங்கள் கிடையாது. ஒரு கதாபாத்திரத்தின் இரண்டு அல்லது மூன்று பிரதான செயல்பாடுகளை வைத்து அதன் குணநலன்களைக் கட்டுமானம் செய்கிறார். குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தைப் படித்துப்பார்த்து அதன் மீது பரிதாபப்படுவதற்காக போர்ஹே அவற்றை எழுதவில்லை. எனவே போர்ஹேவின் கதைகள் யாவும் மிகத் தூய விரவணைகள் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த மாதிரிப் பாத்திரங்கள் முழுமையான
அறிவார்த்தத்திலிருந்து உருவாக்கப்படுபவை. ரத்தமும் சதையுமானவை அல்ல. எனினும் மூன்றே வரிகளில் கூட ஒரு பாத்திரத்தை வாசகனின் முன் நிறுத்துவதற்கு அவரால் முடியும்.

1935ஆம் ஆண்டு ஒரு கலைக்களஞ்சியத்தின் தலைப்பு என்று தோன்றுபடியான சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். A Universal History of Infamy என்பதுதான் அது. இந்தத் தொகுப்பில் ஜப்பானிலும், அரேபியாவிலும், சீனக்கடல்களிலும் நடந்த அவமதிப்பும் பழியும் நிறைந்த விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவற்றில் பல போர்ஹேவால் மீண்டும் ஒரு முறை திருத்தி சொல்லப்பட்டவை. சில இலக்கிய மூடர்கள் இவற்றை இலக்கியத் திருட்டு என்று கூட நினைத்ததுண்டு–இவற்றின் மூலங்களை போர்ஹே ஒப்புதல் செய்திருந்தும் கூட. 1933ஆம் ஆண்டுக்கும் 1934க்கும் இடையில் Critica இதழில் சிறு சிறு வரைவுகளாக இவற்றை எழுதினார். இந்த வரைவுகளில் இம்மானுவல் ஸ்வீடன்போர்க், ரிச்சட் எ·ப் பர்ட்டன், ஹெர்பர்ட் ஆஸ்பரி, ஸர் பெர்சி ஸைக் ஆகியவர்களிடமிருந்து கருத்தாக்கங்களையும் கதாபாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு மறு கண்டுபிடிப்பு செய்தார் போர்ஹே. ஒரு வித புராணிகத் தன்மையான அதிர்வுகளுடன் நிஜ தகவல்களையும் கற்பனையானவற்றையும் இவற்றில் கலந்திருக்கிறார். இக்கதைகள் பலவற்றில் ஒரு விநோத ஸர்ரியல் ரீதியான நம்பகத்தன்மை இருக்கிறது. பிறகு பல வருடங்கள் கழித்து, இதைத்தான் போர்ஹேவுக்குப் பிறகு வந்த இளம் புனைகதையாளர்கள் மேஜிகல் ரியலிசம் என்று கூறவிருந்தார்கள். அந்தத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

They are the irresponsible game of a young man who dared not write stories and so amused himself by falsifying and distorting (without any aesthetic justification whatever) the tales of others.

இதுவன்றி, ஒரு புத்தகம் தனித்துவ ஒருமையாக இயங்குவதில்லை என்பதையும் ட்டி. எஸ். எலியட்டின் பாரம்பரியமும் தனித்துவத்திறனும் கட்டுரையின் கருத்தை ஒட்டி ஆனால் தனக்கே உரித்தான வகையில் வேறு ஒரு கட்டுரையில் சுட்டுகிறார். கணக்கிடப்பட முடியாத உறவுகளின் அச்சு என்ற நிலையில் புத்தகங்கள் செயல்பட்டு, தம் உறவினை மனிதர்களுடன் ஏற்படுத்துகின்றன. பெர்னாட் ஷா பற்றியதொரு சாதாரண கட்டுரையில் இந்த அரிய கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்:

A book is not an autonomous entity: it is a relation, an axis of innumerable relations. One literature differs from another, be it earlier or later, not because of the texts but because of the way they are read: if I could read any page from the present time–this one, for instance–as it will be read in the year 2000, I would know what the literature of the year 2000 would be like.
[“Note on (toward) Berard Shaw”]
ஒரு புதிய எழுத்தானது உடனடியாக நிஜ வாழ்விலிருந்து சடக்கென்று வியாபகங் கொள்வதில்லை. மாறாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் பல நூற்றாண்டு இலக்கியங்களின் வாயிலாக சுற்றி வளைத்துப் பயணித்த பின்னரே உருவாகிறது. குறைந்தபட்சம் போர்ஹேவைப் பொறுத்த வரையில் இதுதான் உண்மை. புதிய கதைகள் என்று சொல்லப்படுபவை எல்லாமே ஒரு வகையில் தப்பிக்க இயலாதபடிக்கு பழைய கதைகளின் மறு கண்டுபிடிப்புகள் அல்லது மாறுபாடுகளாகும். இதை ஒரு தீர்ப்பாகச் சொல்லி நியாயப்படுத்த முடியாதென்றாலும் கூட அவருடைய ·பிக்ஷன்ஸ் என்ற
தொகுப்பில் இடம்பெறும் கதைகள் எல்லாம் கதைகள் பற்றிய கதைகளாக அமைந்துள்ளன. ஒரு வகையில் இதை பின்நவீனத்துவ கருத்தாக்க மொழியில் விளக்குவதானால் “சீனப்பெட்டிகளில் உலகம்” என்று கூறலாம். கதைக்குள் நாடகங்கள் வருவதும் கதைக்குள் ஒருவன் ஏற்கனவே எழுத்தப்பட்ட நாவலை வரிக்கு வரி புதிதாக எழுத முயல்வதும், அடிக்குறிப்பில் முழுமையான கதை இடம் பெறுவதையும் காணலாம். இவற்றை கதை பற்றிய கதை என்றோ கதை மீறும் கதை என்றோ கூறலாம். The Garden of Forking Paths என்ற தலைப்பிலான கதையானது ஒரு கதை பற்றிய
புதிர்– ஒரு உளவாளி-விவரணையாளனால்,  சொல்லப்பட்டு எழுதப்பட்ட கதை. இதில் நேர்கோட்டுத் தன்மையிலான ஐரோப்பிய வழியான ஹீராக்ளிடசின் காலத்தை மறுத்து கீழை நாடுகளின் சமவட்ட காலம் என்ற கருத்தாக்கம் சிலாகிக்கப்படுவதால் இந்தக் கதையே நான்காவது பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது–அடிப்படையில் இது ஒரு துப்பறியும் கதை போலத் தோன்றினாலும் கூட. 1941 ஆம் ஆண்டிலேயே
ஸ்ட்ரக்சுரலிச விவரணையியலினை (Structuralist Narratoloy) இந்தக் கதை முன்னோக்கி இருக்கிறது. விவரணையை போர்ஹே கிளைபிரிதல்களின் திட்டமாக அலசுகிறார். கதையின் ஒவ்வொரு புள்ளியிலும் கதை சொல்பவன் இரண்டு பிரிவுகளைச் சந்திக்கிறான். இந்த இரண்டும் இரண்டு சாத்தியங்களாக இருப்பதால் ஏதாவது ஒன்றையே ஒரு நேரத்தில் அவன் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி ஒன்றை அவன் தேர்ந்தெடுக்கும் சமயத்தில் இன்னொரு கிளைபிரிதல் வந்து நிற்கிறது. இப்படி முடிவே இல்லாத சாத்தியங்களை உண்டாக்கிக் கொண்டு போகிறது கதை. இறுதியில்
புனைகதைப் பிரதியின் உயிர்த் தோற்றவியல் புலப்படுத்தப்பட்டு விடுகிறது.
கதை பற்றிய கதை பிரத்யேகமாக போர்ஹேவுக்கோ பின்நவீனத்துவவாதிகளுக்கோ சொந்தமானதல்ல. இது செர்வான்டிஸ் டான் க்விக்ஸாட் எழுதியபோதே தொடங்கிவிட்ட அம்சம்தான். கதை எழுதுவது பற்றிய சட்டத்திட்டங்களையே கதைக்கான விஷயங்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் சில நவீன எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டது. மேலும் இந்த இலக்கியார்த்தமான முழுமைகளாகப்பட்டவைகள் (Literary Entities), என எழுதுபவன் (இந்த இடத்தில் யதார்த்த வகை எழுத்தாளன் என்று வைத்து கொள்ளலாம்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நடைமுறை நிகழ்வுகள் எந்த அளவுக்கு புறவயமானவையோ, நிஜமானவையோ அன்றி கற்பிக்கப்பட்டவையோ அதற்கு நிகரான அளவுக்கே புனைவுக் கதைகளை எழுதுபவனுக்கு நிஜமாகிறது, கற்பிக்கப்பட்டதாகிறது, அல்லது புறவயமாகிறது. ஆனால் தனது எழுதும் முறையைப் பற்றிச் சொல்லும் போது போர்ஹே Baroque என்ற வரையறையையே தேர்ந்தெடுக்கிறார். எல்லா மொழி நடைகளின் இறுதி வடிவமும் பரோக் என்ற நிலையைச் சென்றடையும் என்றும் வாதிடுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் அதற்கு முற்பட்ட கட்டிடக் கலையிலும், இசையிலும், ஓவியத்திலும் நிகழ்ந்த அதிகபட்சங்களைக் குறிப்பதற்கு உண்டாக்கப்பட்ட வார்த்தையே பரோக் ஆகும். போர்ஹே பரோக் என்பது அறிவு ரீதியானது என்றும், பெர்னாட்ஷாவை மேற்கோள் காட்டி அறிவு ரீதியான பிரயத்தனங்கள் யாவும் அடிப்படையில் நகைச்சுவையுணர்வு மிக்கவை என்றும் எழுதியிருக்கிறார். நீதிக்கதை என்று சொல்லிவிடக் கூடிய அளவுக்கு எளிமையான ஒன்று போர்ஹேவும் நானும். (1956) இந்தக் கதையை 1980களில் சத்யன் மீட்சி பத்திரிகையில் மொழிபெயர்த்திருக்கிறார். “ஆசிரியனின் மரணம்” குறித்த எத்தனையோ விவாதக் கட்டுரைகளை விட போர்ஹேவின் இந்தக் கதை ஆசிரியனின் மரணத்தை சிறப்பாக விளக்குகிறது. பொய்யான, எழுதப்பட்ட “நானுக்கும்” நிஜமான (?) போர்ஹேவுக்கும் இடையிலான முரண்களையும் எதிரிடைகளையும் மிகச் சிக்கனமாக ஒன்றரைப் பக்கங்களில் சாதித்து விடுகிறது இந்த விவரணை. ஆனால் “எழுதப்பட்ட” ஆளுமையிலிருந்து தொடர்ந்து “சாட்ஷாத் நான்” பின்வாங்கிக் கொண்டிருப்பதாக சித்தரிப்பு வருகிறது. நிஜமில்லாத, எழுதப்பட்ட நானைப் பற்றிய ஆட்சேபணையும் எதிர்ப்பும் எழுத்தின் வாயிலாக வருகிறது எனும்போது இந்த எதிர்ப்பு யாரிடமிருந்து புறப்படுகிறது? கதையில் பேசுபவர் யார்? “எனக்குத் தெரியவில்லை எங்கள் இருவரில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறார் என்று?” என்று எழுதுகிறார் போர்ஹே. இங்கே ஆசிரியன் அவனுடைய எழுத்தினாலே மறைக்கப்பட்டு காணாமல் போகிறான். தான் ஒரு நாள் உடல் ரீதியாக இறக்கப் போவதைப் போலவே இந்த கதை எழுத்துக்குள் தன்னைப் புகுத்தி விட்டு இறந்து போகிறான். ஆசிரியனின் மரணம் குறித்து விசாரித்து எழுதியிருக்கிறார் மிஷல் ·பூக்கோ ஆசிரியன் என்பது என்ன? (1969) என்ற கட்டுரையில். மிஷல் ·பூக்கோ அந்தக் கட்டுரையில் எழுதுபவர் என்பது அவன் (அ) அவள் (அ) எதுவாக இருந்த போதிலும் அது இன்னும் சாகவில்லை என்றுதான் சொல்கிறார். அல்லது இறந்து போயிருந்தால் அது எப்போதுமே இறந்துதான் போயிருக்கிறது என்கிறார். ஆசிரியனின் மரணம் பற்றிய சமகால கருத்தாக்கங்கள் போர்ஹேவின் கதையில் உள்தொக்கியும் ரோலான் பார்த் (Roland Barthes: The Death of the Author)தின் கட்டுரையில் வெளிப்படையாகவும் இருந்த போதிலும் இவர்கள் இருவருமே ஆசிரியனை இடம் மாற்றின வடிவமாகவே வைத்திருக்கிறார்கள். அனுபவத்தின் ஒருமையானது (முழுமை என்றும் கூட சொல்லலாம்) ஆசிரியனால் உறுதியளிக்கபட்டது மாறிப் போய் ஆசிரியனின் படைப்புக்களால் உறுதியளிக்கப்படுகிறது. ஆசிரியன் என்ற ஆளுமையிடமிருந்து இடம் பெயர்ந்து அவனது எழுத்துக்களுக்குச் சென்று விட்டது இந்த உறுதியளிப்பு. ஆனால் இந்தக் கருத்தாக்கத்திலும் பிரச்சனைகளுக்குக் குறைவில்லை. எழுத்துக்கள் என்பது ஆசிரியனின் மாறு வேஷங்கள்தானே? “கடந்து செல்லும் அநாமதேயத்தன்மை” என்பதன் மூலம் எழுத்துக்களில் நிறைந்திருப்பது ஆசிரியன் அல்லாமல் வேறு யார்? ஆசிரியனின் இருப்பு பற்றிய ஒரு மேலோட்டமான கருத்தாக்கத்திலிருந்தும் ஆசிரியனின் மரணம் பற்றியதொரு மேலோட்டமான சிந்தனையிலிருந்தும் மறு சிந்தனை செய்வதற்கு நவீன பிரஞ்சு விமர்சகரான ·பூக்கோ (Michel Focault) வழி சொல்கிறார். ஆசிரியனை ஒரு
முழுமை என்று கூறுவதை  விட்டு விடுங்கள் என்பவர் ஆசிரியனை பிரதிகளில் இடம் பெறும் செயல் என்று சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார். ஆனால் இந்தச் செயல்பாடானது ஒரு பரந்துபட்ட கலாச்சாரத்திற்குத் தகுந்த படியும், ஒரு சமூக ஒழுங்குக்கும், மற்றதற்கும் மாறுபாடு கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.  The Other (The Book of Sand) என்ற சற்றே நீண்ட கதையில் கனவிலிருந்து வந்த ஒரு பாத்திரம், நிஜமான பாத்திரத்தை கனவு காணப்பட்ட பாத்திரம் என்று கூறுவது மட்டுமின்றி நிஜவாழ்க்கைக்கு வந்துவிட யத்தனமும் செய்கிறது. ஒரு வகையில்
பார்ப்போமானால் இது Borges and Myself என்ற கதையின் மறுபக்கமாகவும் தோன்றக் கூடும். இறப்பு பற்றிய சிந்தனை குறைந்து போய் ஒரு வித அமானுஷ்யத்தன்மை இந்தக் கதைக்கு வந்து விடுகிறது. மேலும் போர்ஹேவின் கருத்துப்படி நாம் வாழும் இந்த உலகமே ஒரு துணைக் கடவுளினால் காணப்பட்ட கனவாகும். இதே பின்னணியில்தான் வட்டச் சிதிலங்கள் கதையையும் அலசிப்பார்க்க வேண்டும். வட்டச் சிதிலங்களில் வரும் மனிதன் கனவு காணுதலின் வழியாக வேறு ஒருவனை இந்த உலகிற்குள் உலவச் செய்கிறான். ஆனால் இறுதியில் தானே வேறு ஒருவரால் காணப்பட்ட கனவு என்பதை உணர்ந்து கொள்கிறான். இந்தக் கதை முதலில் 1970களில் கசடதபற இதழில் பிரமிளின் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. இன்றைக்கான புதிய மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்தே ஒரு புதிய மொழி பெயர்ப்பு இந்த நூலில் இடம் பெறுகிறது.

போர்ஹே ரத்தினச் சுருக்கத்திற்கு பேர் போனவர். லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர் யூலியோ கோர்த்தஸார் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“எல்லா அலங்காரமான வாக்கியங்களையும், திரும்பக் கூறல்களையும், தொடர் புள்ளிகளையும், பயனற்ற ஆச்சர்யக் குறிகளையும், நீக்குவதற்குக் (எனக்கு) கற்றுத் தந்தார் போர்ஹே. இந்தப் பழக்கம் இன்றும் மோசமான இலக்கியத்தில் காணப்படுகிறது, அதில் ஒரு வரியில் சொல்லப்பட
வேண்டிய விஷயம் ஒரு பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் ”
(Julio Cortazar en la Universided Central de Veneuela”, Escritura No.1, Jan-June 1976, p. 162.)
இருப்பினும் போர்ஹே பேரவை (The Congress) போன்ற நீண்ட கதைகளையும் எழுதியிருக்கிறார். இதற்கடுத்து இந்தத் தொகுதியில் இடம் பெரும் சற்று பெரிய கதை என்று அலெ·ப் மற்றும் நித்தியமானவர்கள் ஆகிய கதைகளைச் சொல்லலாம். டாக்டர் பிராடியின் அறிக்கையில் இடம் பெறும் கதைகளிலேயே மிகச் சிறந்தது என போர்ஹேவால் கருதப்படும் கதை மாற்கு எழுதிய வேதாகமம். ஒரு பேட்டியில் T.S. எலியட்டின் பாதிப்பு அவருக்கு இருந்ததா என்று கேட்கப்பட்ட போது, கிடையாது என்றவர் எலியட்டைப் பார்க்கிலும் யேட்ஸ் (W. B. Yeats) சிறந்த கவிஞர் என்று கூறியிருக்கிறார். சிறந்த விமர்சகர்களாக அவர் ஏற்றுக் கொள்வது எமர்சனையும் கோல்ரிட்ஜையும் தான். வால்ட் விட்மன் மீது அபாரமான பிரேமை கொண்டிருந்தார். கார்ல் சாண்ட்பர்க்கின் கவிதைகளும் அவருக்கு விருப்பமானவை. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸிஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தின் சில பகுதிகளை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் ஜாய்சின் எழுத்து நடையை போர்ஹே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அடிப்படையில்தான் நவீன பிரெஞ்சு சிம்பாலிஸ்ட் கவிஞரான மல்லார்மேவின் கவிதைகளையும் விமர்சிக்கிறார் போர்ஹே. ஜாய்சும் மல்லார்மேவும் அதிகபட்ச எழுதுதலுக்கு உள்ளானவர்கள் என்பது போர்ஹேவின் கருத்து. எழுதும் போது எழுத்தை அது வரும் திசையில் வழிப்படுத்த வேண்டுமே தவிர இதோ நானிருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக எழுதக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“When I write, I write because a thing has to be done. I don’t think a writer should meddle too much with his own work. He should let the work write itself. . .  (Paris Review Interviews: 4th Series. P. 126)
போர்ஹே தேர்ந்தெடுக்கும் நாயகர்கள் கொலைகாரர்களாகவும் அடியாட்களாகவும் இருப்பது பற்றி அவர் பதில் அளிக்கும் போது அப்படிப்பட்டவர்களிடமும் ஒரு வித மலினப்பட்ட காவியத்தன்மை இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இருபதாம் நூற்றாண்டில் காவியப் பரிமாணங்களுடன் புனைகதை எழுதுபவர்கள் குறைந்து போய் விட்டனர். Seven Pillars of Wisdom எழுதிய T. E. Lawrence, மற்றும் Rudyard
Kipling போன்றவர்கள் மாத்திரமே விதிவிலக்குகளாக இருக்கின்றனர். இவர்களை விட்டால் ஹாலிவுட் ஸ்டுயோக்களிலிருந்து வெளிவந்த ‘வெஸ்ட்டர்ன்’ வகை திரைப்படங்களில்தான் காவியத்தன்மையைப் பார்க்க முடிகிறது என்றும் தன் கருத்தினை முன் வைத்தார். இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கதைகளில் வரும் ரோசென்டோ, மான்க் ஈஸ்ட்மேன் மற்றும் கிறிஸ்டியன் சகோதரர்களை மேற்குறிப்பிட்ட வகை நாயகர்களாக நாம் அறிய வாய்ப்பிருக்கிறது. தெரு ஓரத்து மனிதன் இத்தகைய நாயகனைக் கொண்ட பிரசித்தமான கதை.
“பிரதேச நிறம்” (Local Colour) என்ற ஒன்றை போர்ஹேவின் கதைகளில் பார்க்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இறந்தவன் என்ற கதை பிரேஸீலில் இருந்து உருகுவேவுக்குச் சென்று அங்கிருக்கிற அடியாள் தலைவன் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொள்ள நினைக்கிற ஒட்டலோரா என்பவனைப் பற்றியது. மேற்குறிப்பிட்ட கதைகளிலும் இந்தக் கதையிலும் யதார்த்தவியலின் வழியாகப் பிரதேச நிறத்தினை காண விரும்புபவர்கள் தவறு செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். தொடக்கத்தில் எவரிஸ்ட்டோ காரிகோ என்கிற கவிஞனைத் தன் முன்னோடியாகக் கொள்ள போர்ஹே நினைத்ததுண்டு. எவரிஸ்ட்டோ காரிகோ, “பிரதேச நிறம்” உள்ள கவிதைகளை எழுதிய, “ஆபத்தான தெருக்கள் மற்றும் தெளிவான சூரியாஸ்தமனங்களின்” கவிஞர். அவர் தன்னைச் சுற்றியிருந்த பளபளப்பான, ஸ்தூலமான வாழ்க்கையைத் தன்
கவிதையில் பதிவு செய்தவர். ஆனால் எவரிஸ்ட்டோவைப் போல தான் ஆபத்தான சூழ்நிலைகளில் வாழப்பிறந்த ஒரு தெருக் கவிஞன் அல்லவென்றும் மாறாக பயந்த சுபாவமுள்ள, கண்பார்வைக் குறைவான, பயம் நிறைந்த, புத்தகங்களை நேசிக்கிற பூர்ஷ்வா இளைஞன் என்பதையும் உணர்ந்து கொண்டார். என்றாலும் அத்தகைய பிரதேசத்தில் (பாலெர்மோ பிரதேசம், கத்தியை லாவகமாகப் பயன்படுத்திய அடியாட்களுக்கும், கேபரேக்களுக்கும், வேசிகளின் விடுதிகளுக்கும் பெயர் பெற்றது) போர்ஹேவின் இளமைக்காலம் அமைந்தது. ஆனால் இந்த வன்முறை நிறைந்த
உலகிலிருந்து பாதுகாப்பாக அவர் “தன் தந்தையின் நூலகத்தில் எண்ணிக்கையற்ற ஆங்கிலப் புத்தகங்களுடன்” வாழ்ந்தார். எனினும் தன் பால்யகாலத்து நாயகனான எவரிஸ்ட்டோவை அவர் மறக்கவில்லை. எவரிஸ்ட்டொ 1912 ஆம் ஆண்டு காசநோயில் இறந்தார். எவரிஸ்ட்டோ காரிகோ என்ற நூலை போர்ஹே 1930 ஆம் ஆண்டு எழுதினார். எவரிஸ்ட்டோ பற்றிய நூல் என்பதை விடவும் பழைய போனஸ் அயர்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகளாகவே அந்த நூல் அமைந்து போனது. இது போர்ஹேவின் வெற்றிகரமான நூல் அல்ல. இருந்தும் அவர் 1955இல் இதை திருத்தம் செய்து எழுதினார்.

“பிரதேச நிறம்” குறித்த அவரது விரிவான தர்க்கங்களை அவரது மிக முக்கியமான கட்டுரையான ‘The Argentine Writer and Tradition’ இல் பார்க்கலாம். ஒரு நாட்டுக்கே (அ) பிரதேசத்திற்கே உரித்தானது என்பது “பிரதேச நிறம்” என்பதைத் தவிர்த்து விட்டே இயங்க முடியும் என்றார் போர்ஹே. மொகம்மது எழுதிய குர் ஆன் நூலில் எங்குமே ஒட்டகம் என்ற சொல் காணப்படுவதில்லை. மொகம்மது ஒரு அரேபியர், ஒட்டகங்கள் என்பவை அரேபியாவின் யதார்த்தமாக இருக்கும் போது, அவருக்கு ஒட்டகங்கள் தனித்துவமான முறையில் அரேபியாவுக்குச் சொந்தமானவை என்று எழுத வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இதற்கு மாறாக அரேபிய தேசீயவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்தான் ஒவ்வொரு பக்கத்திலும் ஒட்டகங்களை இட்டு நிறப்புவார்கள் என்கிறார் போர்ஹே. இதிலிருந்து போர்ஹே எடுக்கும் முடிவு பின்வருமாறு: அர்ஜன்டீனாவின் பிரதேச நிறம் என்பது சமீப ஆண்டுகளில் ஐரோப்பியாவிலிருந்து வந்ததுதான். ஆனால் தேசீயவாதத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இதை அயல்நாட்டு சமாச்சாரம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அர்ஜன்டீனிய எழுத்தாளர்கள் ஸ்பானிய இலக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வறட்டுத்தனமாக அடம் பிடிப்பவர்களுக்கும் இந்தக் கட்டுரையில் விளக்கம் தந்திருக்கிறார். நிஜத்தில், ‘ஒரிஜினல்’ ஸ்பானிய இலக்கியத்திலிருந்து விலகி வந்து எழுதுவதே அர்ஜன்டீனியாவின் சிறந்த பாரம்பரியமாக இருக்கும். ஸ்பெயினிலிருந்து விருப்பத் தேர்வுடன் பின்வாங்குவதே அதற்கு சரியான செயலாக்கமாக இருக்க முடியும் என்றார்.

போர்ஹேவின் முதல் கவிதைத் தொகுப்பான Fervor de Buenos Aires, 64 பக்கங்களை கொண்ட புத்தகமாக வெளிவர அவர் தந்தை பண உதவி செய்தார். அவசரமாகவும் அச்சுப்பிழைகளுடனும் (வெறும் 300பிரதிகள்) வெளியிடப்பட்டது. விலைக்கு விற்கப்படவில்லை. இலவசமாகத் தரப்பட்ட இந்த தொகுதி வேறு ஒரு விநோதமான முறையிலும் விநியோகிக்கப்பட்டது. Nosotros என்ற ஸ்தாபிக்கப்பட்ட இலக்கிய ஏட்டின் ஆசிரியர் ஆல்பிரடோ பியான்ச்சியிடம் சுமார் 100 பிரதிகளை போர்ஹே எடுத்துச் சென்றார். அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் குளோக் அறையில் பிற ஆசிரியர்கள் தங்கள் ஓவர்கோட்டுகளை கழற்றி வைப்பது பழக்கம். “இந்தப் புத்தகங்களை உனக்காக நான் விற்க வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்று பியான்ச்சி வினவியபோது போர்ஹே கூறினார். “இல்லை. அவற்றை நான் எழுதியவன் என்றாலும் கூட நான் முழுமுற்றான பைத்தியம் இல்லை. இந்தப் புத்தகங்களை அங்கே தொங்கும் கோட் பாக்கெட்டுகளில் ரகசியமாக வைத்து விட முடியுமா என்று உங்களைக் கேட்கலாம்
என்று நினைத்தேன்” என்றார் போர்ஹே. பியான்ச்சி பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டு ஒத்துழைத்தார். அவசரம் அவசரமாக புத்தகத்தை வெளியிட்டு விட்டு தனது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சையின் பொருட்டு ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டார் போர்ஹே. 1924 ஆம் ஆண்டு போனஸ் அயர்சுக்கு தன் குடும்பத்துடன் திரும்பியபோது அவர் ஒரு கவிஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டார் என்பதையும் அவரது கொரில்லாத்தனமான புத்தக விநியோக யுக்தி பலனளித்திருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார்.

இந்த காலக்கட்டத்தில்தான் அவர் இரண்டு பெண்களுடன் நல்ல சிநேகிதத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள்: Victoria Ocampo மற்றும் Elsa Astete Millan. விக்டோரியா ஓகேம்ப்போ மிகவும் பாதிப்பு செலுத்திக் கொண்டிருந்த இலக்கிய ஏடான Sur இன் ஆசிரியை மற்றும் மொழிபெயர்ப்பாளர். 17 வயது அழகியான எல்ஸா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. ஆயினும் கூட 1967 ஆம் வருடம், ஏறத்தாழ நாற்பது வருடங்கள் கழித்து போர்ஹேவும் எல்சாவும் சந்தித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் விரைவிலேயே தோல்வியில் முடிந்தது வேறு விஷயம்.

1927 ஆம் ஆண்டு வரை அவர் என்னவெல்லாம் எழுதினாரோ அவை எல்லாவற்றையும் போர்ஹே புறக்கணித்ததற்குக் காரணம் அவை பிற இலக்கிய ஆசிரியர்களிடமிருந்து அவர் வருவித்துக் கொண்ட நடையைக் கொண்டிருந்ததாக நினைத்ததுதான். பின்னாளில் இது தொடர்பாக உண்டான தர்மசங்கடமான உணர்வைத் தவிர்ப்பதற்காக அவர் பல புத்தகப் பிரதிகளை வாங்கி எரித்தழித்தார்.

நாவல்கள் எழுதுவது பற்றி அவர் மிகக் கடுமையான, கறாரான கருத்துக்களைக் கொண்டிருந்தார். அமெரிக்க நாவலாசிரியரான பால் தோரொ அவரைச் சந்தித்த சமயத்தில் ஆங்கில நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி (ஹார்டி ஒரு சிறந்த கவிஞரும் கூட) நாவல்களை எழுதியிருக்கவே கூடாதென்றும் கவிதைகளுடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் போர்ஹே கருத்துத் தெரிவித்திருக்கிறார். வாஸ்தவமாக ஹார்டி தன் கடைசி இலக்கிய காலத்தில் கவிதைகளை மட்டுமே எழுதினார். (பார்க்க The Brass Plaque Said ‘Borges’, Paul Theroux, ‘The Old Patagonian Express’ 1979) ருட்யார்ட் கிப்ளிங் என்ற ஆங்கில நாவலாசிரியரின் கதைகளை விட கவிதைகளே அதிகம் தனக்கு விருப்பமானவை என்றும் போர்ஹே இந்த சந்திப்பில் கூறினார். நீண்ட நாவல்கள் எழுதுவது பற்றி போர்ஹேவுக்கு நல்ல அபிப்ராயமே இருந்ததில்லை. இதை The Garden of Forking Paths, [1942, later part of Ficciones, 1944]. தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறியலாம்:

“Writing long books is a laborious and impoverishing act of foolishness: expanding in five hundred pages an idea that could be perfectly explained in a few minutes. A better procedure is to pretend that those books already exist and to offer a summary, a commentary.”
பல தொகுதி நாவல்களை எழுதிய ஜெர்மன் நாவலாசிரிரான ராபர்ட் மியூசில், [The Man Without Qualities, 3 volumes], தாமஸ் மன், Remembrance of Things Past என்ற 6 தொகுதி நாவல்களை எழுதிய பிரஞ்சு நாவலாசிரியர் மார்சல் புரூஸ்த் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்கள் என்னவாக இருந்திருக்கும் என்பது பற்றி அறியமுடியவில்லை. மேலும் போர்ஹேவின் இன்னொரு மேற்கோளை இங்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
“The central problem of novel-writing is causality.”    [“El arte narrativo y la magia” [Narrative Art and Magic, 1932] in Discusion [Discussion, 1932]]

அவருடைய கண்பார்வை சுமாராகப் படிக்க முடியும்படி இருந்த காலங்களிலேயே அவர் ஒரு நாவலை கடைசி பக்கம் வரை படிக்க வேண்டிய கடமையின் கட்டாயத்தில் இருந்தார் என்றும், நாவல் எழுதும் சபலம் சிறிதுகூட இருந்ததில்லை என்றும் எழுதியிருக்கிறார். ஆனாலும் நாவல்களை விடப் பன்மடங்கு பெரிதான, பல தொகுதிகளால் ஆன கலைக் களஞ்சியங்களைப் படிப்பதற்கு அவர் விரும்பினார். குறிப்பாக என்சைக்குளோபீடியா பிரிட்டானிகாவின் 11வது பதிப்பு அவருக்கு மிக அத்யந்தமான ஒரு நூலாக இருந்திருக்கிறது. தாமஸ் ப்ரெளன் எழுதிய Anatomy of Melancholy என்ற பெரிய நூலைப் படிப்பதற்கு அவருக்கு சலிப்பு ஏற்பட்டதில்லை. ஜெர்மன் என்சைக்குளோபீடியாவான ப்ராக்ஹாஸ் (சுருக்கமான) பதிப்பும் அவரது தனிப்பட்ட நூலகத்தில் ஒரு பிரத்யேக இடம் பிடித்திருந்தது. ஆங்கில விமர்சகரும் ஆங்கில மொழியின் முதல் அகராதியைத் தொகுத்தவருமான டாக்டர் ஜான்சனின் ஆங்கில அகராதியை மீண்டும் மீண்டும் படிக்க விரும்பினார்.

1950களின் தொடக்கத்தில் அவருடைய நண்பர்களான Nestor Ibarra வும் Roger Callois யும் போர்ஹேவின் கதைகளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவில் வெளிவரும் வரை போர்ஹேவைப் பற்றி, அர்ஜன்டீனாவிலும் சரி உலக இலக்கிய வட்டங்களிலும் சரி, யாருக்கும் அதிகம் தெரியாது. இந்த இருவரின் உழைப்பின் காரணமாகத்தான் 1961 ஆம் ஆண்டு Fomentor Prize (International Publisher Prize) அவருக்குக் கிடைத்தது. ஆறு ஐரோப்பிய வெளியீட்டு நிறுவனங்கள் இணைந்து வழங்கிய இந்த விருதினை நவீன
ஐரிஷ் நாவலாசிரியரும் நோபல் விருது பெற்றவருமான சாமுவெல் பெக்கட்டுடன் போர்ஹே பகிர்ந்து கொண்டார். இந்தப் பரிசு அறிவிப்புக்குப் பிறகு போர்ஹேவின் நூல்கள் பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த நிலவரத்துடன் நாம் இதற்கு முற்பட்ட போர்ஹே நூல்களுக்குக் கிடைத்த வரவேற்பினையும் ஒப்பிட வேண்டும். 1932 இல் வெளிவந்த History of Eternity வெறும் 37 பிரதிகள்தான் விற்றது. 1966 ஆம் ஆண்டு Ingram Merril Foundation தனது வருடாந்திர விருதினை போர்ஹேவுக்கு வழங்கியது.

தனது வாழ்நாளில் கண்பார்வை இழப்புடன் அவர் போராட வேண்டி இருந்தது. கண்பார்வை இழப்பு அவருடைய குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த ஒரு நோய் என்றாலும் கூட ஒரு கோடையின் அந்தி மங்கும் நேரம் போல அவரது இளம்பிராயத்திலிருந்தே அவசரமில்லாமல் அது வந்து கொண்டிருந்தது. இதைப் பற்றி பரிதாபப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தன் வாழ்க்கை பற்றிய கட்டுரையில் எழுதுகிறார். 1927இல் தொடங்கி போர்ஹே மொத்தம் எட்டு கண் அறுவைச் சிகிச்சைகளைச் செய்து கொண்டார். இதற்கு மிஞ்சியும் 1950 இல் அவருக்கு முற்றிலும் பார்வை இல்லாமல் போயிற்று. இன்னொரு குரூரமானதும் விநோதமானதுமான தற்செயல் தகவல் என்னவென்றால் போர்ஹேவுக்கு முன்னர் அர்ஜன்டீனியா தேசீய நூலகத்தின் இயக்குநர்களாக இருந்த Jose Marmol மற்றும் Paul Groussac ஆகிய இருவருமே கண் பார்வை இழந்து போனவர்கள். பெரோன் ஆட்சியில் தன் முனிசிபல் நூலகர் பதவியை ராஜினாமா செய்த போர்ஹே ஆங்கில இலக்கியம் போதித்து தன்
வாழ்க்கையை நடத்தி வந்தார். 1955 ஆம் ஆண்டு பெரோனின் வீழ்ச்சிக்குப் பிறகு வந்த அரசாங்கத்தில் அவர் அர்ஜன்டீனியாவின் தேசீய நூலக இயக்குநராகப் பதவி அமர்த்தப்பட்டார். போர்ஹேவின் நண்பிகளான Esther Zembroain de Torres மற்றும் Victoria Ocampo ஆகிய இருவருமே இத்தகையதொரு சாத்தியப்பாட்டினைக் கற்பனை செய்திருந்தார்கள். VictoriaOcampo வின் இலக்கிய ஏடான Sur சார்பாக பல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் போர்ஹேவை அர்ஜன்டீனியாவின் தேசீய நூலகத்தின் இயக்குநராக ஆக்க வேண்டும் என்று மனு சமர்ப்பித்தனர். இந்தத்
திட்டம் நடக்கவே முடியாதது என்று போர்ஹே நினைத்தாலும் அது நிறைவேறி, இன்னொரு முறை பெரோன் 1975இல் ஆட்சிக்கு வரும்வரை பதவியில் இருந்தார். Poem of the Gifts (1950) என்ற கவிதையில் 9,00,000 புத்தகங்களையும் தந்து பார்வை இழப்பினையும் தந்த கடவுளின் அற்புத எதிர்மறைத் தன்மையைப் பற்றி எழுதினார்.

1955 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆண்டு வரையிலான போர்ஹேவின் இலக்கிய எழுத்துக்கள் யாவும் கவிதைகளாகவே இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இந்த காலகட்டத்தில், கவிதை எழுதும் பொருட்டு சுதந்திரக் கவிதையைக் கைவிட்டு, பாவகை அமைப்புகள் கொண்ட பாரம்பரியக் கவிதை வடிவங்களை, அதிலும் குறிப்பாக 14வரிக் கவிதை வடிவமான சானெட்டைத் தேர்ந்தெடுத்தார். திருத்தங்கள் செய்வதற்கான எழுதப்பட்ட காகிதங்களை அவர் வைத்துக் கொள்ள முடியாதென்பதால் தன் மனதிலேயே ஞாபகம் கொண்டு எழுதுவது எளிதாக இருந்தது. உரைநடையை
ஞாபகத்தில் வைத்துக் கொள்வதை விட பேரிலக்கிய வடிவத்தில் அமைந்த கவிதைகளை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமாக இருந்தது. சானெட்டுகள் தவிர 11அசைகளைக் கொண்ட நான்கு வரிச் செய்யுள்–கவிதைகளையும் இந்த காலகட்டத்தில் அவர் எழுதினார். அவருடைய தாத்தாவின் மரணம் பற்றி, முதலாம் பேரரசர் சார்ல்ஸ் கில்லட்டீனில் தலை வெட்டப்பட்டது பற்றி, திராட்சை மது பற்றி, குறுவாள்கள் பற்றி, அமெரிக்க நாவலாசிரியர் எட்கர் ஆலன் போ பற்றி. . . இப்படியாக விஸ்தாரமானதும் வேறுபட்டதுமான பல தலைப்புகளில் கவிதைகள் எழுதினார்.

7 Nights என்ற போர்ஹேவின் கட்டுரைத் தொகுதியில் உள்ள 7 கட்டுரைகளில் ஒன்றில் [“On Blindness”] தனது பார்வையிழப்பினைப் பற்றி உரத்த சிந்தனை செய்திருக்கிறார். Other Inquisitions (1952) என்ற கட்டுரைத் தொகுதிக்கு அடுத்து மிக முக்கியமானது இந்தக் தொகுதி.

1970க்குப் பிறகு வந்த இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் [Doctor Brodie’s Report, Book of Sand] போர்ஹே நேரடிக் கதைகளைக் (Straightforward Narratives) கொண்டவை என்று அதன் முன்னுரைகளில் எழுதினார். ஆயினும் மணல் புத்தகம் போன்ற மேஜிகல் ரியலிசம் மிகுந்த கதைகள் அதில் இருக்கின்றன. இதுவல்லாது உடலைச் சில்லிட வைக்கும் மாற்கு எழுதிய வேதாகமம் கதையும் இந்தக் காலகட்டத்தியதுதான். நேரடிக் கதைகளில் இத்தகைய விநோதங்களை போர்ஹே தவிர வேறு எந்த விநோதவாதியாலும் சாதிப்பது கடினம். மாற்கு எழுதிய வேதாகமம்
கதையானது போர்ஹேவின் நண்பருக்கு வந்த கனவாகும். Hugo Rodriguez Moroni என்பது அந்த நண்பரின் பெயர். இந்தக் கனவைக் கதையாக எழுதியது பற்றிக் கூறும் போது போர்ஹே சொல்கிறார்.

“But after all, writing is nothing more then a guided dream”
[Introduction to Doctor Brodie’s Report, p.13]
கடவுள் கொள்கை என்ற ஒன்று போர்ஹேவிடம் இருக்கிறதா, கடவுள் கொள்கையை அவர் மறுப்பவரா என்று ஒரு பேட்டியாளர் கேட்டபோது, போர்ஹே தனிநபர் கடவுள் (In the past, I tried to believe in a personal God, but I do not think I try anymore) என்ற கொள்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார். சொல்லப் போனால் கடவுள் என்பவர் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார் என்பது போர்ஹேவின் வாதம். இதற்குப் பக்கபலமான பெர்னாட் ஷாவின் மேற்கோள் ஒன்றைத் தருகிறார்: “God is in the Making”. ஆனாலும் ஆன்மரீதியான உள்ளுறை
அனுபவங்களுக்கு அவர் கதைகளில் குறைவே இல்லை. எடுத்துக் காட்டாக ரகசிய அற்புதம் என்ற கதை. போர்ஹேவைப் பொருத்தரை பிரபஞ்சத்தைத் தரிசிப்பது என்பது ஆன்மரீதியான அனுபவம். ஒரே ஒரு சொல்லில் கூட பிரபஞ்சத்தைத் தரிசிக்க முடியும். அவர் சொல்கிற மாதிரி ஷேக்ஸ்பியரின் ஒரு வரியை மேற்காட்டுபவர் கூட ஷேக்ஸ்பியராகவே ஆகிவிடுகிறார். மேலும் இந்த உலகம் அல்லது பிரபஞ்சமானது ஒரு குறையுள்ள துணைக்கடவுளால் படைக்கப்பட்டது என்ற கருத்தை முன் வைக்கிறார் போர்ஹே. இதை மேலும் விரிவாக்கும் போது தீவினைகள், நோய்கள், உடல்
வலிகள் போன்ற முழுமையின்மைகளுக்கு விளக்கம் தர முடியுமானால் இவ்வாறுதான் முடியும். ஒரு முழுமுற்றான கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் இந்தப் பிரபஞ்சம் இன்னும் மேன்மையாகச் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும்.
போர்ஹேவின் படைப்புக்கள் குறித்த சிறந்த ஞானமுள்ள அறிஞரான Jamie Alazraki கூறுவது போல் இந்தக் கருத்தினை போர்ஹே “A Vindication of the Fales Basilides,” என்ற கட்டுரையில் விரிவுபடுத்தி எழுதியிருக்கிறார். Gnostic களின் கொள்கைப்படி கடவுளுக்கும் மனித யதார்த்தத்திற்கும் இடையில் வானத்தின் 365 தளங்கள் இருக்கின்றன. இந்த 365இல் ஒவ்வொரு வானமும் ஏழு துணைக் கடவுளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றில் மிகக் கடைசியில் இருந்த குறைபாடுள்ள தேவர்களால்தான் நம் கண்ணுக்குப் புலனாகும் இந்த வானம் உருவாக்கப்பட்டது. அதனுடன் நாம் நடக்கும் இந்த நிலையற்ற பூமியும். இந்த பூமியை அவர்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டார்கள். (Stabb, Martin S. Borges Revisited. Boston: Twayne, 1991) பேஸிலைடிஸின் இந்தக் கருத்தாக்கத்திற்கும் போர்ஹேவின் பேபல் நூலகம் சிறுகதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை வாசகன் கவனிக்கலாம். மேலும் (பிரபஞ்சத்தின்) படைப்பு என்பது யதேச்சையான உண்மை என்பதையும் நாஸ்டிக்குகளின் இரண்டாவது கருத்தாக்கத்திலிருந்து போர்ஹே ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இரண்டாவது கருத்தாக்கம் Valentinus என்பவருடையது. இங்கு வானசாஸ்திரத்தின் அடிப்படைக் கருத்தாக்கம் ஒன்றினையும் இதில் பார்ப்பது சாத்தியம். (அதாவது Big Bang Theory) போர்ஹேவின் ஒற்றைக் கடவுள் கொள்கையின் நிராகரிப்பு என்பது பல-கடவுள் கொள்கைக்கு இட்டுச் செல்லும் பன்மைகளின் வழிபாடாகிறது. பிரபஞ்சமாகட்டும் அல்லது எழுதப்பட்ட பிரதியாகட்டும் பன்மைகளின் பெருக்கமே பின்நவீனத்துவத்தின் ஆதாரமான கொள்கையாகும். மேலும் யூத-கிறித்தவ மரபுக் கடவுள் கொள்கையையும் போர்ஹே மறுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கடவுள் இல்லாது போன பிரபஞ்சத்தில் உண்மை, தனிநபர் ஒழுக்கம் பற்றிய சட்டதிட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு இடமிருக்குமா? இதற்கும் பதில் வைத்திருக்கிறார் போர்ஹே. ஒரு முரடன் (அ) அடியாளுக்கு தான் செய்யக் கூடாத சில விஷயங்கள் எவை என்பது தெரிந்திருப்பது போலவே ஒரு எறும்புக்கும் ஒரு புலிக்கும் அவை செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன என்பதும் தெரிந்திருக்கும். தார்மீக சட்டங்கள், கடவுளர்கள் இன்றியும் பிரபஞ்சத்தில்* இயங்கத்தான் செய்யும் என்பது போர்ஹேவின் கருத்து. (பார்க்க: Amelia Barili, Conversations with Jorge Luis Borges, 1998).

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கான முன்னோடிகளைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் என்றார் போர்ஹே. அவரைப் பாதித்த ஒரே ஒரு தத்துவவாதியைச் சொல்லச் சொன்னால் ஷோப்பன்ஹீரைத்தான் கூறுவார் போர்ஹே. இதற்கு அடுத்து அவரைப் பாதித்த தத்துவ ஆசிரியர் ஸ்பினோசா. ஆங்கிலத் தத்துவவாதியான எ·ப். ஹெச். பிராட்லியை மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுவார். மத்தியகால இத்தாலியக் கவிஞர் தாந்தே போர்ஹே மீது ஆழ்ந்த பாதிப்பு செலுத்தினார். ஜெர்மானிய தத்துவ ஆசிரியர்களை ஜெர்மன் மொழியில் படிக்கத் தொடங்கி தொடர முடியாமல் போனதால் ஜெர்மன் கவிதையில் அவருக்கு ஈடுபாடு உண்டாயிற்று. கதே தவிர ஹென்ரிக் ஹெய்ன் என்ற கவிஞரையும் விரும்பிப் படித்தார் போர்ஹே. ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்த வரை ருட்யார்ட் கிப்ளிங்குக்கு அடுத்து தாமஸ் டீக்வென்சியையும் ஸ்டீவென்சனையும்
பிடிக்கும். அமெரிக்க இலக்கியம் என்றால் முதலில் அந்த நாடோடிக் கவி நாயகனான வால்ட் விட்மேன். பிறகு அவர் வழி வந்தவர் என்று போர்ஹே கூறும் கார்ல்சாண்ட்பர்க். ஸ்பானிய மொழியில் அவரது முதல் தேர்வு செர்வாண்டிஸ்தான். ஷேக்ஸ்பியரை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டினாலும் அவர் மீது போர்ஹேவுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருக்கவில்லை. ஷேக்ஸ்பியர் மிகவும் படோடோபமாகவும் கவனக் குறைவாகவும் எழுதியவர் என்பது போர்ஹேவின் வாதம். அல்லது ஏதோ ஒரு இத்தாலியத்தன்மையும் யூதத்தன்மையும் ஷேக்ஸ்பியரிடம் இருந்ததாகக் கருதினார். எனவே போர்ஹேவின் சிறந்த இலக்கியவாதிகளின் பட்டியலில் ஷேக்ஸ்பியர் இல்லை. இவ்வளவு ஆங்கில ஆசியர்களைப் படித்திருப்பதாலும் அவர்களைச் சிலாகிப்பதாலும் அர்ஜன்டீனிய இலக்கிய வட்டத்தில் போர்ஹேவை ஒரு “ஆங்கிலேயர்” என்று சிலர் நையாண்டி செய்ததாகக் குறிப்பிடுகிறார்:

“. . .My fondness for such a northern past has been resented by my more nationalistic countrymen, who dub me an Englishman, but I hardly need point out that many things English are utterly alien to me: tea, the Royal Family, ‘manly’ sports, the worship of every line written by the uncaring Shakespeare.”
[An Autobiographical Essay, 1971]
செக்ஸ் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு அம்சங்களும் போர்ஹே கதைகளில் பிரச்சனை மிகுந்தவையாக இருக்கின்றன. இந்த இரண்டின் இல்லாமைகளும் சாதாரணமாகத் தோன்றினாலும் அவை அவற்றின் தவிர்க்கப்படுதலினை விநோதமாக்கிக் காட்டுகின்றது. எம்மா சுன்ஸ் கதையில் எம்மா அந்த அந்நியனுடன் கலவியில் ஈடுபடுவதைத் தவிர வேறு எங்கேயும் செக்ஸ் சம்மந்தப்பட்ட விவரணைகளோ குறிப்புகளோ காணப்படுதில்லை. போர்ஹேவின் புனைகதை உலகில் இடம் பெறும் பெண்கள், (எம்மா தவிர) தனிநபர்களாக இன்றி சீரழிந்த, அடையப்பட வேண்டிய
வஸ்துக்களாகவோ வம்சவிருத்திக்கோ (அல்லது சந்தோஷத்திற்கோ அல்லாது) ஆண்களுக்கிடையிலான உறவுகளில் பேரம் பேசுவதற்கான பொருள்களாகவே இருக்கின்றனர். இறந்தவன்,குறுக்கீட்டாளர், ரோசென்டோவின் கதை, இந்த மூன்று கதைகளில் வரும் முறையே சிவப்பு முடி கொண்ட பெண், ஜூலியானா பர்கோஸ், லா லூஜனேரா, ஆகிய பெண்கள் தமக்கான விருப்பு வெறுப்புகள் உள்ளவர்களாகச்
சித்திரிக்கப்படவில்லை. குறுக்கீட்டாளர் கதையின் அடிநாதமாக ஓடுவது நில்சன் சகோதரர்களுக்கிடையே நிலவும் ஒருபால் காமத்துவம் என்றும் அதை நிலைப்படுத்தும் பொருட்டு ஜூலியானா கொல்லப்பட வேண்டி வருகிறாள் என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர். [Herbert J. Brant, The Queer Use of Communal Women in Borges’ “El muerto” and “La intrusa”, Indiana University-Purdue University Indianapolis]. ஹோமோ செக்ஷ¥வாலிட்டி போர்ஹேவுக்கு இருந்திருக்கலாம் என்ற ஹேஷ்யமும் அர்ஜன்டீனிய இலக்கிய வட்டங்களில் நிலவுகிறது.
1956 இல் எழுதப்பட்ட கதையான The Sect of the Phoenix இல், செக்ஸ் என்பது ரகசியம் என்று உணர்த்தப்படுகிறது. Tlon, Ucbar, Orbis Tertius என்ற கதையில் வரும் மேற்கோளில் புணர்ச்சி செயல்பாடு அருவருப்பானது என்பதாக வருகிறது: “Copulation and Mirrors are abominable”. தனது கதைகளில் காதல் இடம் பெறுவதில்லை என்பதை போர்ஹே ஏற்றுக் கொள்கிறார். உல்ரிக் (‘Ulrike’-from The Book of Sand) என்ற கதை ஒன்றுதான் இதற்கு விதிவிலக்கு என்றும் எழுதியிருக்கிறார். உல்ரிக் கதையில் வரும் பெண் பாத்திரம் போர்ஹேவின் பிற பெண்களை விடக் கூடுதல்
ஆளுமை மிக்கது.

போர்ஹேவின் எந்த ஒரு கதையும் அல்லது கவிதையும் மிகச்சாதாரணமாகத் தொடங்கி ஒன்று அல்லது இரண்டு வரிகளைப் படித்ததும் நாம் இதுவரை சாதாரணமானது என்று கருதிய ஒரு அனுபவம் அப்படி இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கவிதையும் எல்லையற்ற தீர்க்கப் பார்வைகளின் சாளரமாக மாறிவிடுகிறது. இந்த தீர்க்கப் பார்வைகள் நமது வாழ்வுகளையும்,
அடுக்குகளாக அமைந்த வரலாறுகளையும், நாமறிந்த விண்கோள்களையும், பிரபஞ்சங்களையும் இன்னும் நடந்திராத எதிர்கால நிஜங்களையும் தாண்டி தூரத்துத் தொடுவானங்களுக்கு இட்டுச் செல்கின்றன. இவை யாவும் ஒரே சமயத்தில் நிகழக் கூடியனவாகவும், ஒன்றிலிருந்து மற்றது துல்லியமாய் வேறுபட்டும் படிகத் தெளிவுடனும் இருக்கின்றன. இவை எல்லாம் அந்த சாரளம் திறந்து விட்ட சூன்யத்திலிருந்து பிறந்தவை. ஒருவரின் ஞாபகத்தையே மூழ்கடித்து அடுத்த நாள் வாழ்வுக்கு தகுதியற்றதாகவும் இவற்றால் ஆக்கிவிட முடியும். போர்ஹேவின் புனைகதைப் பிரபஞ்சம் எல்லையற்ற வகையிலும் மனிதப் புரிதலால் அடக்கி ஆளமுடியாததாகவும் அமைந்து விடுகிறது. எல்லையற்ற பக்கங்கள் கொண்ட புத்தகமாகவும், எண்ணிக்கையில் அடங்காத நூல்களைக் கொண்ட நூலகமாகவும் சிற்றடக்கப் பெரும்பொருளாகவும் இது உருப்பெரும். உப்புச் சப்பற்ற பெயர் கொண்ட ஒரு சாதாரண நகரத்தின் தெருவிலும் இந்த அனுபவம் நேரக் கூடும். அல்லது உருகுவேயின் தட்டைச் சமவெளியில் தொடங்கி நட்சத்திரங்களை இணைத்துக் கொள்ளக் கூடும்.

போர்ஹேவின் சர்வதேசீயம் பற்றிக் குறிப்பிடும் போது தத்துவவாதியும் கலாச்சார வரலாற்றாசிரியருமான George Steiner எழுதுகிறார்:

அவரது சர்வதேசீயக் கலாச்சாரம் மிக ஆழமாக போர்ஹே உணர்ந்த ஒரு உத்தியாகும். உலகில் உறையும் சகல பொருட்களின் இதயங்களிலிருந்து வீசும் பெரும் காற்றுக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயங்குதல் ஆகும் அது. கற்பனையான புத்தகத் தலைப்புகளையும், கற்பனை செய்யப்பட்ட குறுக்குக் குறிப்பீடுகளையும், வாழ்ந்திராத ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகளையும் மேற்காட்டுகையில் நிஜத்தின் தெரிவிப்புக் கட்டங்களை மீண்டும் ஒன்று சேர்த்து சாத்தியமிக்க பிற உலகங்களின் வடிவங்களை உருவாக்குகிறார். மொழி விளையாட்டுக்களின் மூலமோ அல்லது எதிரொலிப்பதன் மூலமோ லைடாஸ்கோப்பினைத் திருப்பி சுவற்றின் வேறு ஒரு பகுதியில் ஒளியைப் படச் செய்கிறார்.
போர்ஹே விநோதப் பிரபஞ்சங்களை மாத்திரம் சிருஷ்டிக்க வில்லை. விநோத விலங்கியலையும் உருவாக்கினார். இதை புனைகதை தவிர்த்த வேறு கட்டுரைகளுடன் சேர்க்கலாம். பெரும்பான்மையான உலக இலக்கிய, புராணிகங்களில் குறிப்பிடப்படும் விநோத விலங்குகள் கச்சிதமான விளக்கத் தெளிவுகள் பெறுகின்றன போர்ஹேவின் மூலம். ஒரு அகராதி வடிவத்தில் போர்ஹே இதை வடிவமைத்திருக்கிறார். அதன் பெயர் The Book of Imaginary Beings (1969).Margarita Guerrero என்ற பெண் (எழுத்தாளர்?) இந்த அகராதிக்கு இணையாசிரியர். கா·ப்கோ, எட்கர் ஆலன் போ
போன்றவர்கள் கற்பனை செய்த மிருகங்கள் எப்படி இருக்கும்? விளக்கம் தருகிறார் போர்ஹே. புத்தரின் பிறப்பினை முன்னறிவித்த யானை, தத்தவவாதி இமானுவல் ஸ்வீடன்போர்க்கின் நரகத்தில் இருந்த விலங்குகள், ஜப்பானின் எட்டுத் தலை நாகம், மகாபாரதத்தில் அர்ஜூனனைத் துரத்திய உலுப்பி என்ற பாம்பு போன்றவற்றைப் பற்றி இந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.
அமெரிக்கப் பல்கழைக் கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக 1961 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சான் ·பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையில் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் உரைகள் நிகழ்த்தினார். 1963 ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். தனது பால்யகால நிகழ்ச்சிகள் நடந்த பிரதேசங்களையும் பழைய நண்பர்களையும் சந்தித்தார். மீண்டும் 1967 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகம் ஒரு வருடம் பேராசிரியாக அமெரிக்காவில் வந்து தங்கும்படி அழைப்பு விடுத்தது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில்தான் அவரது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாள நண்பரான நார்மன் தாமஸ் டி ஜியோவானியை போர்ஹே சந்தித்தார். 1973 இல் பெரோன் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது போர்ஹே தனது தேசீய நூலக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்தார். போர்ஹேவுக்கு 1975 ஆம் ஆண்டு மிக முக்கியமானது. காரணம் அவருடைய தாயார் அவரது 99 வயதில் காலமானார். அதே ஆண்டில் போர்ஹேவின் கதைகளும் கவிதைகளும் அடங்கிய தொகுதியான The Book of Sand வெளியானது.

1969 ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசின் அழைப்பினை ஏற்று டெல் அவீவ் நகருக்குப் பயணம் செய்தார். 1973ஆம் ஆண்டு Fifth Biennial Jerusalem Prize அவருக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் வருடம் ஜப்பானிய கல்வித் துறை போர்ஹேவுக்கு ஜப்பானுக்கு வருகை தர அழைப்பு விடுத்தது. 1980 இல் ஸ்பானிய அரசு வழங்கக்கூடிய பரிசுகளிலேயே மிக உயர்ந்த பரிசான Cervantes Prizeஐ ஸ்பானிய எழுத்தாளர் Gerardo Diego உடன் பகிர்ந்து கொண்டார். நோபல் விருது தவிர்த்த மற்ற பல முக்கியமான விருதுகளை போர்ஹே பெற்றிருக்கிறார். 1986 ஆம் ஆண்டு போர்ஹே ஜெனிவாவில்
காலமானார். இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடைய காரியதரிசியான Maria Kodama என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

My Encounter with Balakumaran – Icarus Prakash

May 6, 2008 3 comments

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செயபிரகாசா?

1990 அல்லது 19991 என்று நினைக்கிறேன். எனக்கு அப்பொழுது வயது பதினெட்டுக்குள்ளாகத்தான் இருந்தது. பாலகுமாரனின் பல நாவல்களை வாசித்து, எனக்குள் இலக்கிய ஜுரம் ( என்று நான் நினத்திருந்தேன்) பரவியிருந்த நேரம்.

எனக்கு அவரை சந்தித்து பேசி, நான் உங்களின் மகா வாசகன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் உத்வேகம் இருந்தது. அத்தருணத்தில், அவரது அனைத்து படைப்புகளையும் வாசித்துவிட்டிருந்தேன். அவர் வசித்து வந்தது, என் வீட்டிலிருந்து ஒரு 60 பைசா தூரத்தில்தான், எனினும் நேரடியாகச் செல்ல தைரியம் வரவில்லை. ” சரி, இப்ப எதுக்கு வந்தே?” என்று எழக்கூடிய கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

இதற்கான மார்க்கம் ஒரு நாள், ஹிண்டு பத்திரிகை மூலமாக வந்தது. engagements பகுதியில், ஞானக்கூத்தன் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில், பாலகுமாரன்,’பெரிய வாத்தியார்’ , மாலன் , பெயர் நினைவில் இல்லாத இன்னொரு பெரிய எழுத்தாளர் போன்றோர் பேசுவதாக மூன்று வரியில் செய்தி வந்திருந்தது. இடம் திருவல்லிக்கேணியில் எதோ ஒரு மாடா தெருவில் என்பதாக நினைவு. போனால் உள்ளே விடுவார்களா என்பது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதில் முழு முகவரி இல்லாததால் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்பதுதான் என் கவலை. பாலகுமாரனுக்கே போன் செய்து கேட்டால் என்ன என்றொரு யோசனை. உடனே செயல்படுத்தினேன். டைரக்டரியில் எண் கண்டுபிடித்து சுழற்றியவுடன்,

” வணக்கம். பாலகுமாரன் பேசறேன்” என்றார்.

படபடப்பை கட்டுப்படுத்திக்கொண்டு, வணக்கம் சொல்லி விஷயத்தைக் கூறியதும், ” அந்த விழா இன்னிக்கு இல்லயே சார்” என்றார். ஹிண்டு செய்தியைக் கூறியதும், அருகில் இருந்தவரிடம் ” ஏம்மா, ஞானக்கூத்தன் புத்த்க வெளியீடு இன்னிக்கா?” என்று கேட்டது லேசாக காதில் விழுந்தது. அருகில் இருந்தவர் அதை ஆமோதித்தார் போலும். என்னிடம், ” ஆமா. இன்னிக்குத்தான் சார். என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டதும், நான் சொன்னேன். முகவரி தந்து, வரும் வழியையும் தெளிவாகக் கூறினார்.

இடத்தைக் கண்டுபிடித்து, சென்று சேர்வதற்குள், விழா துவங்கிவிட்டிருந்தது. சுமார் 75 பேர் உட்காரக்கூடிய ஹால் அது. சரியாக முப்பத்து நான்கு பேர் தான் இருந்தனர். நாலைந்து பேர் வருவதும் போவதுமாக இருந்தனர். மேடையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. கண்ணாடி அணிந்திருந்த ஒருவர் மேடையில் பிரதானமாகத் தெரிந்தார். ( அவர்தான் ஞானக்கூத்தன் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்). “பெரிய வாத்தியாரும், இன்னும் சில பேரும் மேடையில் இருந்தனர். வெளியிடப்பட்ட கவிதை தொகுப்பை சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். மேடையில் பாலகுமாரன் இல்லை. சரி, ‘டகால்ட்டி’ கொடுத்து விட்டாராக்கும் என்று நினத்துக் கொண்டு, கண்களை இப்படியும் அப்படியுமாக அலையவிட்டால், ஒரு மூலையில் பாலகுமாரன், மாலன் இருவரும் தரையில் சம்மணமிட்டு தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘ம்… மாட்டிகினாரு’ என்று நினத்துக் கொண்டே அவர் அருகில் சென்று அமர்ந்தேன்.

நீலநிற டெனிம், வெள்ளை நிற ஜிப்பா. வலது கைவிரலில் புகை. இடது கையில் கிங் சைஸ் பாக்கெட். பக்கத்தில் மாலன். இப்போது டிவியில் பார்க்கிறோமே, அதே மாதிரி. ( என்ன காயகல்பமோ?). மாலன் எழுதிய சிலவற்றை வாசித்து இருக்கிறேன். ‘ஜனகன மண’ மிகவும் விருப்பம். ( அவரது யட்சிணி என்ற sci-fi நாடகத்தை ரேடியோவில் கேட்டதுண்டா? நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய அந்நாடகத்தில் இரண்டு பிரதான பாத்திரங்கள் மட்டுமே. நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஒரு ரோபாட்.).

மும்முரமாக இருவரும் பேசிக்கொண்டிருந்ததால், எப்படி குறுக்கிடுவது என்று சிந்தித்துக்கொண்டே அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கலானேன். இலக்கியம் பற்றியும், ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றியும், எழுதிக்கொண்டிருக்கும் கதைகள் குறித்தும் சீரியசாக பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது என் எண்ணம்.( அப்ப என் வயசும் அனுபவமும் அப்படி) அது அவ்விதமில்லை என்பது சற்று நேரத்திலேயே புரிந்தது. பாலகுமாரன் தன் ஆஸ்துமா குறித்து பேச, மாலன் அது பற்றி தனக்குத் தெரிந்த வைத்திய முறைகள், இதில் பிரபலமான மருத்துவர்கள் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார். இடையிடையே தத்தமது குடும்பத்தினர் குறித்த விசாரிப்புகளும் நடந்தன.

எழுத்தாளன் என்பவன் எழுத்தாளன் தவிர வேறொருவனில்லை என்றும், அவன் கவலைப் பட இலக்கியம் தவிர யாதொரு விஷயமுமில்லை என்ற என் எண்ணம் தவறாய்ப்போனதில் அதிர்ச்சி எதும் ஏற்படவில்லை. காரணம், இது இவ்வாறாகத்தான் இருக்கும் என உள் மனத்தில் ஊகித்திருந்தேனோ என்னவோ. எனினும் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வது என்ற எண்ணத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

அடுத்து மாலன் பேசவேண்டிய முறை வந்ததும், எழுந்து மேடைக்கு சென்றார். தனியாக அமர்ந்திருந்த பாலகுமாரனிடம் வணக்கம் சொன்னேன். ” நாந்தான் சார் காலையிலே உங்களுக்கு போன் பண்ணேன்” என்றதும் அவர் ” அப்படியா?” என்றார்.

” என்ன பண்றே?”
” பிளஸ் டூ பரிட்சை எழுதிட்டு, TNPCEE க்கு தயார் பண்ணிட்டு இருக்க்கேன் சார்.
உங்க கதையெல்லாம் படிச்சிடுவேன் சார்”

பேசிக்கொண்டிருந்த போதே, என்ன என்னவோ சொல்ல வேண்டும் என்று பரபரக்கின்றது, காயத்ரி, சியாமளி, விஸ்வநாதன், இன்னும் எவ்வளவோ பாத்திரங்கள் பற்றியும், மெர்குரிப்பூக்களில் ஸ்ட்ரைக்கில் உயிரிழக்கும் கதாபாத்திரத்தின் மனைவி சாவித்திரி, உண்மையில் என் நண்பனின் சித்தி என்பது போன்றவற்றையும் சொல்லத்துடிக்கிறேன்.

” கதை படிக்க நேரமிருக்கா?”
” பாட்டிக்கு தெரியாம லெண்டிங் லைப்ரரியிலேந்து எடுத்து படிச்சிடுவேன் சார்”
” ஒழுங்கா பாடத்த படி. கதை புஸ்தகமெல்லாம் அப்புறமா படிக்க்கலாம்”

சரிங்க சார் என்று கூறிய நேரம், மேடையில் இருந்து பெரிய வாத்தியார், ‘பாலகுமாரன், அடுத்து நீங்க தான். வாங்க” என்று அழைத்தார். ( பெரிய வாத்தியாரையும் அப்பத்தான் நேரில் பார்க்கிறேன். அப்பா, என்ன உசரம் என்று நினத்துக் கொண்டேன்).

பாலகுமாரன் பேசும் போது, கவிதையைப் பற்றி பேசாமல், எழுதிய ஞானக்கூத்தன் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். தான் அப்போதுதான் ஊரிலிருந்து வந்ததால் தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை என்று சொன்னார் . அவர் முடித்ததும் கூட்டமும் முடிந்தது. கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். பாலகுமாரனைச்சுற்றியும் நாலைந்து பேர். என்னிடம் ஒருவர் , நாற்பது பக்க நோட்டுடன் வந்து எதற்கோ பெயர் விலாசம் கேட்டு எழுதிக்கொண்டார். இலக்கிய உள்வட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக மிதப்பு ஏற்பட்டது.

பாட்டி இரண்டு மணி நேரந்தான் பர்மிஷன் தந்திருந்தது நினவுக்கு வரவும் கிளம்பினேன். ‘தில்லகேணி’யிலிருந்து மந்தைவெளி தூரம் குறைவானாலும், நேர் பஸ் இல்லை என்ற எரிச்சலுடன் பசியும் சேர்ந்து கொண்டது.

என் முதலும் கடைசியுமான எழுத்தாள சந்திப்பு அதுவே. அதன் பிறகு எனக்கு எற்பட்ட தொடர்பெல்லாம் அவரவர்களின் எழுத்து மூலமாக மட்டுமே.

பிறகு படிப்பு, மேல்படிப்பு, உத்தியோகம், சொந்தத் தொழில் என்று ஆனபடியால், என் மனங்கவர்ந்த எந்த எழுத்தாளர்களுடனும் ( பெரிய வாத்தியார் உட்பட) நேரடி மற்றும் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ள சமயம் கிட்டியதில்லை. வாசிப்பதை மட்டும் விடாமல் தொடர்கிறேன். ரா.கி.கி மூலம் எனக்கு ஏற்பட்டிருப்பது ‘interactive writing’ என்னும் புதிய அனுபவம்.

Thanks RKK.

பல்வேறு எழுத்தாளர்கள், தமிழ், ஆங்கில புத்தகங்கள், கவிதைகள் வாசித்த பிறகு, பாலகுமாரனின் எழுத்துகளைப் பற்றி இன்றைய மனநிலையில் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முற்பட்டால், கிளப்பின் பல ராயர் மற்றும் ராயைகளின் விரோதத்தை பெற வேண்டிவரலாம் என்பது என் எண்ணம். இந்த எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.

Please correct me if i am wrong.

அன்று ஏற்பட்ட சந்திப்பு 12 வருடங்கள் கழித்து இன்று ஏற்பட்டால், அது எவ்விதமாயிருக்கும் என்று யோசிக்கும் பொழுது, இதழ்க்கடையோரம் எழும் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை.

அவ்வளவே

அன்பன்
ஜெ.பி, சென்னை.

இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி

நா. பார்த்தசாரதி எழுதிய சிறுகதையிலிருந்து
(நடையழகு: கதையிலிருந்து மாதிரிக்காக சில பகுதிகள்)

……

தனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி – முடிவில் அந்தப் பொய்களும், அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் – அவருக்கு ஒருங்கே சலித்துப் போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப்புகழ் கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. உணர்வினால் வாழ முடியாத உயரத்துக்குத் தங்களையே உயர்த்திக்  கொண்டு விட்டவர்களுக்கு இப்படி ஒரு சலிப்பு வருவதும் இயற்கைதான். தனி அறிவினால் மட்டுமே வாழ்ந்தால் உணர்வின் ஈரப்பசையில்லாத அந்த அறிவு வாழ்க்கை ஒருநாள் காய்ந்து முறிந்து போகுமென்று தோன்றியது.

திருவாளர் பொன்னப்பாவும் அப்படிக் காய்ந்து முறிந்து போகிற நிலையில் தான் இருந்தார். இப்போது அவரை யாரும் கவனிப்பாரில்லை. அவருடைய அபிப்பிராயங்களையும் யாரும் இலட்சியம் செய்வதில்லை. சமுதாய வளர்ச்சி என்ற பாதையில் கருத்துக்கள் வளராமலும் மனம் விரிவடையாமலும் – முடமாகிப் போன சிந்தனையாளனைப்போல பின் தங்கிவிட்டார் அவர். பரந்த சிந்தனையும் மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற போது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகராகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன.

தான் சொல்கிற ஒரு கருத்து அல்லது அபிப்ராயம் நியாயமா, தனக்கே மனப்பூர்வமானதா, என்று சிந்தித்துச் செயற்படுவதைவிடத் தான் சொல்கிற கருத்து அல்லது அபிப்ராயத்தை – மற்றவர்கள் கவனிக்கிறார்களா – என்று சிந்தித்துச் செயல்படும் தாழ்வு மனப்பான்மை அவருக்கு வந்து விட்டது. தன் அபிப்ராயத்தால் பலரும் உடனே பாதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஒரு வக்கிர குணமும் அவருக்கு வந்திருந்தது. எதைப்பற்றி எழுதினாலும் தீவிரமாகத் தாக்கி எழுத வேண்டும் என்ற வெறியும் அவரிடம் முறுக்கேறியிருந்தது. சராசரியான நல்ல அறிவாளி ஒருவனுக்குச் சமூகத்தையும், மற்றவர்களையும் பொறுத்து இருக்க வேண்டிய குறைந்தபட்சமான சமூகபாவமும் இல்லாமல் வறண்டு போயிருந்தார் அவர்.

அப்பாவித் தமிழ்ப் பண்டிதர்கள் மேலும், புதிதாக முன்னேறும் இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் மேலும் அக்கினித் திராவகத்தை வாரி இறைப்பது அவருடைய பேனாவின் மரபாகிவிட்டது. பி.சு. பொன்னப்பா – என்பது அவருடைய முழுப் பெயராக இருந்தாலும் ஒர் இலக்கிய அரக்கனுக்காகப் பயப்படும் – பயங்கலந்த நிர்ப்பந்த மரியாதையோடு – ‘பி.எஸ்.பி’ என்று அன்பர்கள் மெதுவான குரலில் அவர் பெயரைச் சொல்லி வந்தார்கள்.

‘பி.எஸ்.பி’யின் விமரிசனம் சில சமயங்களில் பக்தர்கள் புரிந்துகொள்ள முடியாத ‘பரம்பொருள் தன்மை’ போல ஆகிவிடும். அவருடைய விமரிசனக் கணைகளுக்கு  நிகழ்கால ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கடந்தகால மேதைகளும் ஆளாவதுண்டு. ஒருமுறை, “கம்பனில் சில பகுதிகளைத் தவிர மற்றவைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுதான்” — என்று ஒரு கருத்தை வெளியிட்டு அது காரசாரமான அபிப்ராய பேதங்களைக் கிளப்புவது கண்டு மகிழ்ந்தார். இன்னொரு முறை. திருக்குறளைத் தலையைச் சுற்றி நெருப்பில் போட வேண்டும்’ – என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

இவ்வளவுக்கும் திருக்குறளையோ கம்பனையோ அவர் முழுதும் படித்ததுகூட இல்லை. ஏனோ காரணமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள்மேல் ஏற்பட்டு விட்ட ஒரு வெறுப்பைப்போலக் கம்பன்மீதும் குறள் மீதும்கூட அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் கம்பனையும், திருவள்ளுவரையும் இப்படித் தூக்கி எறிந்து எழுதிய இதே பேனாவால் மறுநாள் ‘யாருக்கும் அதில் எந்த நயமிருக்கிறது’ என்றே புரியாத ஒர் ஏழாந்தரமான கொச்சைத் தமிழ் நாவலை – முதல் தரமானது என்று பாராட்டிப் புகழ் மாலை சூட்டுவார்.

‘பி.எஸ்.பி’ கம்பனை ஏன் குறை கூறுகிறீர்கள்?’ – என்று கேட்டால், “மில்டனைப் போலவோ, ஹோமரைப் போலவோ அவன் பாடவில்லையே?” – என்று விநோதமாக அதற்கும் ஒரு பதில் ரெடிமேடாய் வைத்திருப்பார். “அது ஏன்? கம்பன் எதற்காக மில்டனையும் ஹோமரையும் போலிருக்க வேண்டும்?” – என்று கேட்டால் பதில் வராது அவரிடமிருந்து.

“இன்ன நாவலைப் புகழ்கிறிர்களே; அது ரொம்பச் சுமாராக இருக்கிறதே?” என்று கேட்டாலோ,

“அதெப்படி? ஜேம்ஸ் ஜாய்ஸ், கா·கோ போன்று தமிழில் எழுத முயன்றிருக்கிறாரே அவர்?” என்பதாக அதற்கும் ஒரு விநோதமான பதில் தான் வரும் அவரிடமிருந்து. விநோதமில்லாத பதில்கள் அவரிடமிருந்து தான் வராதே.

தமிழை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்கிற அவர் – தெரியாத யாராவது இங்கிலீஷில் சிறு தவறுபட எழுதினாலோ பேசினாலோ, அசிங்கமாகக் கேலி செய்வார். அதற்கு என்பதை ‘அதுக்கு’ என்றும் ‘சிறியது’ என்பதைச் ‘சின்னது’ என்றும் தோன்றினாற்போலத் தமிழில் தாம் எழுதுவதை மற்றவர்கள் கேலி செய்ய முடியாதபடி மிரட்டி வைத்திருக்கும் அவர் – மற்றவர்களைத் தாராளமாகக் கேலி செய்வார். விதேசி மனப்பான்மையோடு சுதேசி மொழிகளையும் நூல்களையும் விமரிசனம் செய்து வந்தார் அவர். அவருடைய விருப்புக்கள் விநோதமானவை. வெறுப்புக்களும் கூட விநோதமானவைதான்.

பன்னீராயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்துக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானாமே ஒரு பைத்தியக்காரப் பாண்டியன். அதுபோல் முடிந்தால் தொண்ணூறாயிரம் தமிழ்ப் பண்டிதர்களைக் காவுகொடுத்துப் புதுமை இலக்கியத்துக்கு ஒரு விழாக் கொண்டாட வேண்டுமென்பது அவர் ஆசை. நல்ல வேளையாக அந்த ஆசை இன்று வரை நிறைவேற வில்லை. ஆனால் வேறு ஒர் ஆசை மட்டும் நிறைவேறியது. காரசாரமான அபிப்ராயங்களோடு – கடுமையான விமரிசனப் பத்திரிகை ஒன்று நடத்த வேண்டுமென்ற ஆசை அவருக்கு நீண்ட காலமாய் இருந்தது. பத்திரிகைக்கு ‘இலக்கிய் ராட்சஸன்’ – என்று பெயர் வைத்தார். பத்திரிகையின் இலட்சியங்கள் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன:

(1) இந்தப் பத்திரிகைக்கு முந்நூறு வாசகர்கள் போதும்.

(2) தமிழ்ப் பண்டிதர்கள், மரபுவழிக் கவிதை எழுதுவோர் ஆகியவர்கள் இந்தப் பத்திரிகையைப் படிக்கக் கூடாது.

(3) இந்தப் பத்திரிகை கடைகளில் தொங்காது.

(4) எல்லாப் பத்திரிகைகளும் அட்டையில் இளம் பெண்கள் படத்தைப் போடுவது போலல்லாமல் இந்தப் பத்திரிகையில் கிழவிகள், கிழவர்கள் படமே போடப்படும்;
இளம் பெண்கள்போல் தோன்றும் கிழவிகள் படம்கூடப் போடப்படாது.

(5) இந்தப் பத்திரிகையில் சோதனைகளுக்கே முதலிடம் உண்டு.

இத்யாதி நிபந்தனைகளுடன் பத்திரிகை வெளிவந்தது. இதழில் முதல் பக்கத்தில் பி.எஸ்.பி. எழுதிய புதுமுறை வசன கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. அக்கவிதை பின் வருமாறு:

விளக்கெண்கெண்யின் ‘வழ வழ’

“ஜிலு ஜிலுக்கும் விளக்கெண்ணெய்
சிவு சிவு பிசு பிசு –
சிவு சிவு வழ வழ
வழ வழ கொழ கொழ
கொழ கொழ விளக்கெண்ணெய்
கருகரு மயிர்க் கும்பல்
கருத்தடரும் உயிர்க்காடு – ”

இக் கவிதையில் மனத்தினால் எட்டிப் பிடிக்க முடியாத பல அரிய உண்மைகள் அடங்கியிருக்கும் மர்மங்களை இதைப் படைத்த கலைஞராகிய பி.எஸ்.பி அவர்களே அதே  இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். துர்த் தேவதைகளுக்கும் பக்தர்கள் ஏற்படுவது போல் பி.எஸ்.பி.யின் ‘இலக்கிய ராட்சஸனுக்’கென்று சில வக்கிரமான  வாசகர்களும் உக்கிரமாக மூளைக்கொதிப்படைந்த பக்தர்களும் கிடைத்தனர். ‘ஒட்டுமொத்தமாகத் தமிழ் நாட்டை அலசும் ஒரே ஏடு’ – என்ற நீடுமொழியுடன் ‘இலக்கிய ராட்சஸன்’ – பவனி வரத்தொடங்கினான். இலக்கிய ராட்சஸன் 250 பிரதிகள் தமிழ் நாட்டை அலசின.

”எஸ்ராபவுண்டின் கவிகளும் எழுத்தச்சனும்’, ‘உருஉத்திப்பார்வையும் கரு – அமைந்த சதைகளும்’, ‘மூட்டைக் கடை முகுந்தன்’, ‘கவிதை நூல் விமர்சனம்’ போன்ற சில மூளைக்குழப்பத் தலைப்புக்கள் இலக்கிய ராட்சஸனில் அடிக்கடி தென்படலாயின.

‘இலக்கிய ராட்சஸனில்’ எழுதும் எழுத்தாளர்களுக்கும் துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு வரவதைப் போல் பி.எஸ்.பியின் உயிரற்ற தமிழ்நடை வக்கிரத் தாக்குதல்கள் எல்லாம் ஏகலைவ நியாயமாகக் கைவந்தன. அதில் மர்ம – பலராமன் என்றொரு இளைஞர் அடிக்கடி வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தார். இலக்கிய ராட்சஸன் ஆசிரியர் கூட இந்த மர்ம – பலராமனின் குழப்பக் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டி வந்தார். மர்ம – பலராமன் எழுதாமல் ஒரு இலக்கிய ராட்சஸன் ஏடுகூட வராது என்ற அளவிற்கு ஒரு பிணைப்பு இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் ‘இலக்கிய  ராட்சஸன்’ ஆசிரியர் பி.எஸ்.பி யைச் சந்திக்க மர்ம – பலராமன் வந்து சேர்ந்தார். பி.எஸ்.பி. மர்ம – பலராமனை உற்சாகமாக வரவேற்றார். “உங்க அபிப்ராயங்கள் எழுத்துக்களிலே முப்பதுகளுக்கு முந்தியதைப் பாராட்டியும் – இருபதுகளுக்குப் பிந்தியதைத் தாக்கியும் காரசாரமாக எழுதுறீங்க. ரொம்ப அழுத்தம் இருக்கு: ஆழமும் இருக்கு” என்று இரபத்தேழு வயது நிரம்பாத மர்ம – பலராமனைப் பாராட்டினார் பி.எஸ்.பி. மர்ம – பலராமனுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது. “கம்பனைக் குப்பையில் போடு” என்றொரு திறனாய்வு எழுதியிருப்பதாக உடனே பி.எஸ்.பியிடம் கூறினார். மர்ம – பலராமன். ”ஆகா!தாராளமாக வெளியிடலாம்!” என்று அதை வாங்கிக் கொண்டார். பி.எஸ்.பி. இருபத்தேழு வயது நிரம்பாத மர்ம – பலராமனை முழு வக்கிரமாக வளர்த்து ஊக்கப் படுத்தினார். பி.எஸ்.பி. மர்ம – பலராமனுக்குத் துணிவு குடம் குடமாகப் பொங்கலாயிற்று.

விமர்சகர் பி.எஸ்.பி. ‘விவாகரத்து’ என்று ஒரு நாவல் எப்போதோ எழுதியிருந்தார். ஒரு விதவை மாமி – மாவரைப்பதில் ஆரம்பமாகிற நாவல், அந்த மாமி மாவரைத்து முடிகிறவரை நூறு பக்கம் நினைவோட்டமாக வளர்கிற பாணி. அந்த நாவலைத் ‘தமிழிலக்கியத்தில் வெளிவந்துள்ள யதார்த்த இலக்கிய சிகரம்’ என்பதாக வர்ணித்து மர்ம – பலராமன் இலக்கிய ராட்சஸனிலேயே ஒரு கட்டுரை எழுதினார்.அதுவும் இலக்கிய ராட்சஸனில் அபாரமாக வெளிவந்தது. பி.எஸ்.பி. ஏதாவது ஸெமினார்கள். இலக்கிய அரங்குகளில் பேசினால்கூடத் தமிழ்இலக்கியத்தின் பிதாமகர்களாகக் குறிப்பிடும் பத்துப் பேர் மர்ம – பலராமனைப் போல் ‘இலக்கிய ராட்சஸ’னில் – வக்கிற கட்டுரைகளைப் படைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். மர்ம – பலராமனை பி.எஸ்.பி.  உற்சாசப்படுத்த அவர் சிறுபிள்ளைத் தனமாக எழுதுவதில் கடைசி எல்லைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

ஒரு நாள் திடீரென்று மர்ம – பலராமனிடமிருந்து வந்த ஒரு கட்டுரையைப் படித்து பி.எஸ்.பி. திடுக்கிட்டார். ஏனென்றால், ”பி.எஸ்.பி.யின் சமீபகாலத்து நாவலான ‘அடுப்பங்கரை’ – யில் ஆழமோ – பாத்திரங்களின் வார்ப்படமோ – சரியாக இல்லை என்றும், பி.எஸ்.பி. இனிமேல் நாவலே எழுதக் கூடாது” என்றும் மர்ம – பலராமன் தனக்குத் துரோணர் போன்ற பி.எஸ்.பி யையே கடுமையாகத் தாத்கியிருந்தார். ‘இந்த இருபத்தேழு வயதுப் பயலுக்குத் தன்னைத் தாக்குகிற துணிவு வருவதாவது?” – என்று திகைத்துச் சீறினார் பி.எஸ்.பி. பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமானாக இருந்தார். அவர் இப்போது. மர்ம – பலராமனிடம் பெருகிய துணிவு வெள்ளம் பி.எஸ்.பி.யின் சமீப நாவல் ‘வெறும் குப்பை’ என்று அடித்துச் சொல்கிற அளவு முறுசி வளர்ந்திருந்தது.

அந்தக் கட்டுரையைப் போடாமல் நிறுத்தியதோடு உடனே ‘சமீப காலமாக உனக்கு மூளை குழம்பி விட்டது’ என்று கோபமாக மர்ம – பலராமனுக்குக் கடிதம் எழுதினார் குரு பி.எஸ்.பி.

”உங்களுக்குத்தான் மூளை குழம்பிருப்பதாக நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்தில்ருந்து தெரிகிறது.” – என்று உடனே அவருக்குக் காரமாகப் பதில் எழுதினான் மர்ம – பலராமன். ‘தான் மற்றவர்களைத் திட்டுவதற்குச் சரியான கருவியாகப் பயன்யடும் ஒர் ஆள் இவன்” என்று தானே தேர்ந்து எடுத்து முறுக்கிவிட்ட ஒரு பொடியன் ‘தன்னையே திட்டுவதா?” – என்று கொதித்தெழுந்தார் பி.எஸ்.பி. உடனே கொதிப்போடு கொதிப்பாக மர்ம – பலராமனின் கட்டுரையைத் திருப்பி அனுப்பியதோடு நிற்காமல், அந்த இதழ் ‘இலக்கிய ராட்சஸனில்’ ”இலக்கிய விமர்சனமும் சிறுபிள்ளைத்தனங்களும்”என்ற தலைப்பில் மர்ம – பலராமனைத் தாக்கு தாக்கென்று தாக்கித் தள்ளினார். அப்போது தான் தம்முடைய இணையற்ற குரு ஸ்தானம் நினைவு வந்தவர்போல். அவர் சீடனைத் தாக்கிய மூன்றாம் நாள் சீடன் ‘இலக்கியக் கொம்பன்’ – என்ற பேரில் புதிய விமர்சனப் பத்திரிகை ஒன்று தொடங்கியிருப்பது தெரியவந்தது. மர்ம – பலராமனை ஆசிரியாகக் கொண்ட ‘இலக்கியக் கொம்பனில்’ – ”பி.எஸ்.பியின்   சமீபக் குப்பைகள்” – என்ற கட்டுரை முதல் இதழிலேயே வந்திருந்தது. அதில் பி.எஸ்.பி.யைக் காரமாகத் தாக்கியிருந்தார் மர்ம – பலராமன். பி.எஸ்.பி.க்குக் கோபமான கோபம் வந்தது. மர்ம – பலராமனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விட வேண்டும் போலக் கோபம் அவ்வளவு அதிகமாக வந்தது பி.எஸ்.பி.க்கு.

வறண்டுபோன ஒரு விமர்சகன் அளவு மீறிக் கோபப்படும் போதுதான் இரண்டாவத விமர்சகன் பிறக்கிறானோ என்னவோ? ஆனால் இந்த பி.எஸ்.பிஎன்ற பரமசிவனிடம் வரம் வாங்கிய பஸ்மாசுரனோ இவர் தலையில் கையை வைத்துப் பொசுக்கியே விட்டான். எப்படி என்று கேட்கிறீர்களா? இரண்டே மாதங்களில் ‘இலக்கிய ராட்சஸன்’ நின்றுவிட்டது. புதிய பத்திரிகையாகிய ‘இலக்கியக் கொம்பன்’ பிரமாதமாக நடக்கத் தொடங்கிவிட்டது. இப்போது பி.எஸ்.பி.யின் துர்த்தேவதை ஸ்தாபனம் பறிபோயிற்று. புதிய விமர்சனத் துர்த்தேவதையாக இருபத்தேழு வயது நிரம்பிய மர்ம – பலராமனின் சீடர்களாகிவிட்டனர். மர்ம – பலராமன் ‘ தனக்கு முன்னும் தமிழே இல்லை, பின்னும் தமிழே இல்லை’ – என்ற பாணியில் ஹ¤ங்காரச் சவால் விடலானான். ‘திருவள்ளுவர் ஆழமாகச் சொல்லத் தவறிவிட்டார்’, ‘கம்பர் வசன கவிதை எழுதத் தெரியாதவர்’ – போன்ற கண்டனக் கட்டுரைகள் ‘இ-கொம்பனில்’ வெளிவந்து தமிழர்களின் மூளையைக் குழப்பலாயின.

இனிமேல் ‘இ.கொம்பனின்’ கொழுப்பு எப்போது அடங்குமென்று தானே கேட்கிறீர்கள்?

இ.கொம்பனிலிருந்து இன்னொரு இரண்டாவது விமர்சயன் பிரியும்போது நிச்சயமாக இ.கொம்பம் பொசுங்கிப் போகும். கவவைப்படாதீர்கள். அதுவரை பொறுமையாயிருங்கள்.

(ஆகஸ்ட் 1966)

Categories: Books, Tamil, Writers Tags: , , ,

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan

February 28, 2008 1 comment

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ” என்றேன்.

“எதுக்குப்பா?”

“தொடுங்களேன்!”

சற்று வியப்புடன் தொட்டார்.

“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’” என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”

“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.

“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!” என்றேன்.

“அசந்து போய், கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”

“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!” என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். ‘ரம்யா கிருஷ்ணன்’ என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மாஅப்பாவுடன் ஜட்கா வண்டியில் ‘ஜகதலப்ரதாபன்’ சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது… இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி&யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் ‘ஆபிச்சுவரி’ பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்… ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!.

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்… முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் ‘கொட்டு மேளம்’ கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்… ‘நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?’ என்று.

நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்… ‘நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!’ என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். ‘ஆ’ கதையைப் படித்துவிட்டு, என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

கல்கி வளர்த்த சிரிப்பலைகள்

February 27, 2008 1 comment

சுஜாதா

சிரிப்பது சுலபம். ஆனால் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். அவ்வளவு சீரியசான விஷயம் நகைச்சவை. நகைச்சுவை என்றால் என்ன? ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து (Conflict), அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை – பரவசத்தைக் கொடுப்பது. (அப்பரவசம் திடீரென்று ஒரு Explosion போல் வரவேண்டும்) முடிந்தால், நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது. மிக உயர்ந்த நகைச்சுவை, நம் சிந்தனையை – சமூகத்தை உயர்த்தும் நோக்கிலே அமைய வேண்டும். இன்னொரு விஷயம் – இருவேறு கருத்துக்களையும் தனித்தனியா பார்த்தால் நகைச்சுவை இருக்காது, இருக்கக்கூடாது என்றே சொல்லாம்.

தமிழில் எல்லாமே சங்க காலத்தில்தான் துவங்குகின்றன என்று சொல்கிறார்கள். பிசிராந்தையார் எழுதின ஒரு பழைய சங்க காலப் பாடலைப் பார்ப்போம் :

”யாண்டு பலவாக நரை இல ஆகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்”

இவை முதல் வரிகள். காரணம் என்ன? ”ராஜா நன்றாகப் பரிபாலனம் செய்ததால் குடிமக்கள் எல்லாரும் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். அதனால் கவலை இல்லை… நரையும் இல்லை” என்பது பழைய பாடலின் கருத்து. மேற்சொன்ன வரிகளுடன் இன்னும் இரண்டு வரி சேர்க்கிறார் இன்றைய கவிஞர் –

”ஆண்டு தவறாமல் வரி கட்டுகிறேன்
மீண்டும் மீண்டும் டை அடித்துக்கொள்கிறேன்!”

இதிலுள்ள முரண்பாடுகள் என்ன? சங்க காலம் – தற்காலம், சங்க காலத் தமிழ் – இன்றையத் தமிழ். ஆதரிச உலகம் (புறநானூற்றுப் பாடல்படி) – யதார்த்த உலகம்.

யோசித்துப் பார்த்தால் இத்தகைய முரண்பாடுகள் எல்லா படைப்பு இலக்கியத்துக்கும் ஆதாரமானவை. ஆர்தர் கோஸ்லர் என்கிற ஆசிரியர் சொல்கிறார். ”The spirit of creation is the spirit of contradiction – it is the break through of appearances towards an unknown reality.”

நல்ல நகைச்சுவை பிறரைச் சிரிக்க வைக்க வேண்டும். இதை இருவிதமாக வகைப்படுத்தலாம். இன்பத்தில் சிரிப்பது. துன்பத்தில் நகைப்பது. உதாரணத்துக்கு ஒரு நாடகக் காட்சி – ஒரு நடிகன் மேடையில் நாற்காலியை நோக்கிப் பேசிக்கொண்டே வருகிறான். ஓரிரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. உட்கார முயலுகையில் யாரோ வேலைக்காரன் நாற்காலியை இழுத்துவிட, அவன் பொத்தென்று விழுகிறான்.

இதையே சற்று மாறுதலாகப் பார்க்கலாம். மேடையில் உட்கார நாற்காலி ஏதுமே கிடையாது. நடிகன் ஆழ்ந்த சிந்தனையுடன் நாற்காலி இருக்கிறதென்று நினைத்து நடந்து செல்கிறான். தன்னிச்சையாக உட்கார வருகிறான். சட்டென்று ஒருத்தர் அவனுக்குக் கீழ் ஒரு நாற்காலி போடுகிறார். இப்போதும் சிரிப்பு வருகிறது. (இது போன்ற காட்சிகளை சார்லி சாப்ளின் படத்தில் பார்க்கலாம்.)

இரண்டாம் நகைச்சுவை சற்று உயர்ந்தது. முதலாவது பிறர் துன்பத்தில் மகிழ்வது. (துச்சாதனன் விழுந்ததைக் கண்டு திரெளபதி சிரித்ததால்தான் ஒரு பாரதப் போரே நிகழ்ந்திருக்கிறது). இத்தகைய தரம் குறைந்த நகைச்சுவையில், வாய் பேசாமலிருப்போர், காது கேளாதவர் இவர்களைப் பின்னி வரும் ‘ஜோக்’குகளைச் சேர்க்கலாம்.

பல சினிமாக்களில் பார்த்திருக்கக் கூடும், கவுண்டமணி – செந்தில் ஹாஸ்யங்கள். கண்டபடி திட்டுவார்கள், உதைத்துக் கொள்வார்கள், Gut level jokes எனக் குறிப்பிடுவார்கள் ஆங்கிலத்தில். நியாயமாக, இவைகளைக் கண்டு நாம் சிரிக்கக்கூடாது. ஆனாலும் சிரிப்பு வருகிறது. அடி-உதை வாங்குகிற காட்சிகளைப் பார்க்கும்போது. ஏன்? எதனால்? மன வல்லுநர்கள் ஒரு காரணம் சொல்லுகிறார்கள். நம் எல்லாருக்கும் உள்ளுக்குள் ஓர் ஆதிமனித இச்சை புதைந்து இருக்கிறது. Aggression. அந்த இச்சைக்கு ஒரு வடிகாலாக – அதுவும் எந்தவிதமான சமூகப் பொறுப்போ, உபத்திரவமோ இல்லாது – இது அமைகிறது. நமது வாழ்க்கைப் போராட்டத்தில் பலவிதமான கோபங்கள், ஏக்கங்கள், அவமானங்கள் உள்ளன. அவைகளுக்கு வடிகாலாக, யாரையாவது அதட்ட, அடிக்க, அவமானப்படுத்த வேண்டுமென்கிற ஆசை ஒன்று வருகிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் இது போன்ற காட்சிகளில் சிரிப்பது (துன்பத்தைக் கண்டு சிரிப்பது.)

சர்க்கஸ் ப·பூனை உதாரணமாகப் பார்க்கலாம். அவனை மற்றொருவன் அடி அடியென்று அடிப்பான். உதைத்துப் பின்னிவிடுவான். (அசல் வாழ்க்கையில் நாம் யாரையாவது உதைத்தால் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்!) நம்மையுமறியாமல் சிரிப்பதும் இத்தகைய உள் இச்சையின் வெளிப்பாடே.

மிருகங்களை மனிதர்கள் மாதிரி நடக்க வைப்பது பேச வைப்பது ஒரு வித நகைச்சவை. Human Metaphor என்று சொல்லுகிறார்கள். Charles Schulez என்ற எழுத்தாளர் Snoopy என்ற ஒரு நாய் வளர்த்து வந்தார். அது விநோதமான குணங்கள் சில உடையது. அதற்குச் சிலரைப் பிடிக்கும்- வேறு சிலரைக் கண்டால் பிடிக்காது. ‘லுஸி’ என்கிற பெண்ணைப் பிடிக்குமாம். ”எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டால், வாலை விஸ் விஸ் என்று தீவிரமாக ஆட்டுமாம். ”என்னை எவ்வளவு பிடிக்கும்?” இப்போது வாலின் நுனியை மட்டும் ஆட்டுமாம்!

வேறொரு வகை ஹாஸ்யமும் இருக்கிறது. நன்கு யோசித்தால் புலப்படும். மூன்று வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள் – (1) யதார்த்தமான ஒரு நாடகம்  நடந்து கொண்டிருக்கிறது… திடீரென்று கதாநாயகனின் வேட்டி அவிழ்கிறது. (2) கல்லூரியில் வெகு சீரியஸாகப் புரொபஸர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் – அறைக்கு வெளியேயிருந்து நாய் ஒன்று எட்டிப் பார்க்கிறது. (டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திருக்கக்கூடும். திடீரென்று மைதானத்தில் குறுக்கே நாய் ஓடும்) (3.) ஓர் அபாரமான கோரஸ் மியூசிக்… மிகப் பெரிய வயலினிஸ்ட் ஸிம்பனி ஆர்க்கெஸ்டிரா நிகழ்த்துகிறார்… ரசிகர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள். அப்போது வயலின் ஒன்று ஒருத்தரிடமிருந்து நழுவிக் கீழே விழுந்து விடுகிறது. (இத்தகைய காட்சி ஹாஸ்டல் சங்கீதக் கச்சேரியின்போது, கடம் தூக்கிப் போட்டு ‘ஆவர்த்தனம்’ செய்கையில் உடைந்ததைப் பார்த்ததுண்டு.)

மேலே சொன்ன மூன்றிலுமே, நமக்குத் திடீரென்று சிரிப்பு கொப்புளிக்கிறது – ஒரு விதக் குற்ற உணர்வையும் மீறி. மூன்று காட்சியிலுமே ஒரு ஒற்றுமையைக் காணலாம். ரொம்பத் தீவிரமான விஷயத்திலிருந்து, திடீரென்று மிக அற்பமான விஷயத்துக்கு ‘இடம் பெயர்தல்’ நிகழ்கிறது. ”Suddenly jerked into another plane.” ஓர் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து சட்டென்று விடுபடும்போது தன்னிச்சை¨யாகப் புன்னகை வருகிறது. உன்னதமான விஷயமும், அபத்தமான விஷயமும் முரண்படும்போது ஏற்படும் சிரிப்பு.

A GUIDE TO BORING என்ற புஸ்தகம் – ‘போர்’ அடிக்காத புஸ்தகமொன்று இருக்கிறது. ”என் மச்சினிக்கு 1950ல் கல்யாணம் ஆயிற்று” என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து ”இருக்காதே! 50லே நான் லண்டனில் இருந்தேனே? ஒரு வேளை 49லா?” – இதேபோல் சொல்லிக் கொண்டே போக வேண்டும். கேட்கிறவருக்கு பயங்கரமான அலுப்பு வரும் அளவுக்கு! அவர் கொட்டாவி விட்டபடி பறக்கிற ஈயன்றைக் கவனித்துக் கொண்டிருப்பார். இப்படியே விஷயத்துக்கு வராமல் இழுப்பு இழுத்துக் கொண்டே போய் – கடைசியில் சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டு வருவார்கள்.

பயிலரங்கத்தில் வந்த மாணவன் கொண்டு வந்த நகைச்சுவை இதற்கு ஒரு சரியான உதாரணம் –

”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன், எனக்குத் தெரியாது!”

”இப்படியே போங்க…. முதல் தெருவை விட்டுடுங்க… இரண்டாவது தெருவை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க… முதல் சந்தை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது…. முதல் அறையை விட்டுடுங்க… இரண்டாவது அறையை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… அப்புறம் ஒரு அலமாரி இருக்கும்… முதல் ஷெல்பை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க! நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும்!

”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். எனக்குத் தெரியாது!”

இது typical student humour. சற்று extreme form என்று வைத்துக் கொண்டாலும் இழுத்துக் கொண்டு போகிற விதத்தில், என்ன சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் சிரிப்பு வருகிறது.

வாழ்க்கையில் நேரிடையாக எத்தனையோ பார்க்கிறோம். குட்டிப் புகைப்படம் மாதிரி நிறைய விஷயங்கள் பதிகின்றன. ஒரு நாள் சாலையோடு போகிற போது, சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளி நாடக வேஷத்துடன் மூன்று குழந்தைகள் வருவதைப் பார்த்தேன். வேடம் கலையாமலே இருந்தது. மூன்று குழந்தைகளுக்குமே பாரதியார் வேஷம்!

வீட்டில் ஜன்னல் வழியே பார்த்தபோது, மிக மிகச் சின்ன கைக் குழந்தை… பிறந்து மூன்று நாள்தான் ஆகியிருக்கும்… தகப்பனார், உரக்கக் குழந்தையை ”Keep quiet” என்று அதட்டுவது காதில் விழுந்தது. அந்தக் குழந்தைக்கு அழுகையைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது! அதை ஆங்கிலத்தில் அதட்டும் அப்பாவின் பிம்பம் மனத்தில் பதிகிறதல்லவா?

சினிமா உலகில் எனக்கு அனுபவமுண்டு. ஹீரோ தனியாக உட்கார்ந்து இருப்பார். ”ஜெயலலிதா கைது”, ”நரசிம்மராவ் ராஜினாமா” போன்ற எந்த முக்கிய செய்தியும் அவரைப் பாதிக்காது. தனி உலகில் உலவிக் கொண்டிருப்பார். அவர் ‘Mood’ மாறிவிடக்கூடாது என்பதில் பலர் ஜாக்கிரதையாயிருப்பார்கள்… மேலும் சினிமா உலகத்துக்கென்று சில தனிச் சொல்லடைவுகள்… ”ஜெய்ப்பூரில் கட்டாயம் ஒரு ஸீன் தேவை”, ”ரெண்டு கானாப் பாட்டு….. ஒன்று இன்டர்வெல்லுக்கு முன்னாடி… இன்னொன்று பின்னாடி”, ”சண்டை காட்சியில் அவசியம் மழை வேணும்!” – இப்படியாகப் பலவித ‘மூட’ நம்பிக்கைகளையும் கவனித்து இருக்கிறேன்… கதைகளில் பயன்படுத்தியும் இருக்கிறேன்.

இறுதியாக ஓரிரு சொந்த அனுபவங்கள். நான் ஒரு நாய் வளர்த்து வந்தேன். கால்நடை மருத்துவரிடம் அதைக் கூட்டிக்கொண்டு போக நேர்ந்தது. அப்போது அந்த டாக்டருக்கு ஒரு ‘போன்’ வந்தது… அந்த உரையாடல்…

”என்னுடைய நாய் பேனாவை விழுங்கிவிட்டது….”

”சரி… நான் அங்கே வரேன் கொஞ்ச நேரத்திலே.”

”அதுவரை என்ன பண்ணுவது?”

”பென்சிலால் எழுதிட்டிருங்க!”

ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, தனித்தனியே வாக்கியங்களைப் படிக்கும்போது ஹாஸ்யம் இல்லை. இணைத்துப் பார்க்கும்போது நகைச்சுவை ஏற்படுகிறது.

நகைச்சுவை எழுத விரும்புகிறவர்களுக்கு முத்தாய்ப்பாக ஐந்தே யோசனைகள் – 1. நிறையப் படியுங்கள். கல்கி, தேவன், எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் பி.ஜி. வுட் ஹவுஸ்  2. இயல்பாக, ஓரளவு மிகைப்படுத்தி எழுதுங்கள். ஆனால் மிகைப்படுத்தலைக் குறைக்க முயலுங்கள். 3. நேரில் பார்த்ததை – நீங்கள் கண்ட இடங்கள், ஊர்கள் – அதன் தன்மையைச் சொந்த அனுபவத்துடன் கலந்து எழுதுங்கள் 4. இங்கு நிலவுகின்ற கட்டுப்பாடுகள் மிக்க சுதந்திரத்துக்கு உட்பட்டு எழுதுங்கள்- 5. அடிமட்ட, தரம் குறைந்த நகைச்சுவையை அடியோடு தவிர்க்கப் பாருங்கள்.

உங்கள் முயற்சி வெல்க!

Categories: Kalki, Laugh, Smiles, Sujatha, Writers