Archive

Posts Tagged ‘கருத்து’

Nakkeeran Arulkumar Interview with Naanjil Naadan on the eve of his Sahitya Akademi Award

June 6, 2012 Leave a comment
வ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க”என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் செய்திருக்கிறது.
விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் நக்கீரனுக்கான அவரின் நேர்காணல், ஒரு விருது காணலாய்…
நக்கீரன் : நீங்கள் எழுத வந்தக் காலம் வெகு சனப்பத்திரிகைகள் உச்சத்திலிருந்த காலம். ஆனால், நீங்கள் இப்போது வரை தீவிர இலக்கியத்தின் ஆச்சர்யக் குறியீடாக இருப்பது பற்றி…?
நாஞ்சில் நாடன் : ஆமாம். வெகு சனப் பத்திரிகையா ? தீவிர இலக்கியமா ? என்று எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்த வேளையில் சுந்தர ராமசாமிதான் என்னிடம்… கார், ஜீப், இருசக்கர வாகனங்கள் என யாரும் பயணிக்கும் நெடுங்சாலைதான் வெகு சனப் பத்திரிகை. ஓர் அடர் காட்டுக்குள் கம்பு ஊன்றிக்கொண்டு, நடக்கும் பாதைப் போடுவதுதான் தீவிர இலக்கியம். இதற்கு வரையறைகள் கிடையாது. தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. காட்டாற்று வெள்ளம் போல எங்கும் பாயும் வல்லமை கொண்டது.
ஆனால், அந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது ஓர் இடத்தில் நிற்க வேண்டும். அடுத்தவனின் எண்ணத்திற்கு நாம் அடைபட வேண்டும். ஆனால் பணம் புகழ் சீக்கிரமாய் கிடைக்கும். எது வசதி? என்று முடிவெடுத்துக்கொள். என்ற போது கம்பு ஊன்றிக்கொண்டு பாதைப்போட முடிவெடுத்தேன்.
அதற்குப் பின் சிறு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு கமர்ஷியல் பத்திரிகை சிறுகதை ஒன்று வேண்டுமென்று கேட்டது. சற்று யோசிப்புக்கு பின்னர், ஒரு சிறுகதையை எழுதிக் கொடுத்தேன். அந்தச் சிறுகதை அந்த கமர்ஷியல் பத்திரிகையில் பிரசுரமாகி வந்த போது நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என் கதைக்கான பெயர் மாற்றப்பட்டு ‘நீலவேணி டீச்சர்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்ததுதான் என் அதிர்ச்சிக்கு காரணம்.
ஒவ்வொரு எழுத்தையும் வைரத்தைப் போல்தான் நான் என் கதைகளில் பதிக்கிறேன். அதை பித்தளையாக்கும் முயற்சிகள் கமர்ஷியல் பத்திரிகைகள் செய்யத் துணிந்தவை என்பதை அந்த நீலவேணி டீச்சர்தான் அறுதியிட்டு எனக்கு சொல்லிக்கொடுத்தாள். காடுகளைக் கடப்பதென எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்பதையும் கூட.
நக்கீரன் : உங்கள் பழைய காலம் தொட்டு நீங்கள் பார்க்கும் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அதே தீவிரத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார்களா…?
நாஞ்சில் நாடன் : உண்மையாய் சொல்வதானால் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் சம காலத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேட்கையோடு கடந்து கொண்டிருந்த அடர் காடுகளில் சிலர் வெகுகாலம் இளைப்பாறிவிட்டார்கள். சிலர் விஷயங்களில் நோய்வாய்ப்பட்டு விட்டார்கள். சிலர் திக்கு தெரியாத காட்டின் இருளில் அகப்பட்டு விட்டார்கள். இன்னும் சிலர் காடுகளை விட்டு விட்டு ஒத்தையடிப் பாதைகளில் கலந்துவிட்டார்கள்.
நக்கீரன் : தொழில் நிமித்தமாக மும்பை வாசியாக நீங்கள் இருந்த காலம்தான் உங்களின் எழுத்து வேட்கை தீவிரப்பட்டது என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய படைப்புலகம் எங்கிருந்து பிறக்கிறது…?
நாஞ்சில் நாடன் :  1972, என்னுடைய 25வது வயது. வேலைத்தேடி மும்பைக்கு பயணமாகிறேன். மொழி தெரியாது. ஆட்கள் தெரியாது. அந்த உலகம்தான் பின்னாளில் எனக்கு பல கதை மாந்தர்களைக் கொடுத்தது. ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறேன். மொழி அறியாததால் என்னோடு வேலை செய்பவர்களுடன் பேச முடியவில்லை.
எழுத்து மீதான காதலோடு மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகச் சேரப்போனால்… அங்கே பூணூல்காரர்கள் என்னைப் பார்த்ததுமே அப்ளி கேஷன் ஃபார்மைக்கூட தராமல் விரட்டினார்கள். அப்போதுதான் அச்சங்கத்தில் முக்கிய நபராய் இருந்த கலைக்கூத்தன் என்பவரின் அறிமுகம் கிடைக்க… தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பூணூல்காரர்களோடு சண்டையிட்டு என்னை உறுப்பினராக்கிவிட்டார்.

தினமும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன். மாலை வேலை முடிந்ததும் படிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலாக படித்துவிடுவேன். அந்த வாசிப்புதான் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சைப்படுத்தும் அம்மா சாப்பாடு, ஊர் கோவில், ஊர் நண்பர்களை மறக்க வைத்தது.

மொழி ஒரு விஷயமாக இல்லாது போய், சக தொழிலாளிகளோடு நண்பர்களான போது… ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் தருணத்தில்… அவன் ஊருக்குப் போகிறான். நம்மால் முடியலையே… என்ற ஏக்கம் எல்லோருக்கும் கண்ணீராக முட்டிக்கொண்டு நிற்கும். அடுத்தக் கணம் அவனாவது அவன் அம்மா, அப்பாவைப் பார்க்கப்போகிறானே என ஆசுவாசப்படுத்திக்கொண்டு… படியில் நின்றபடி கையசைக்கும் ஊர் போகும் நண்பனுக்கு கண் துடைத்தபடி கையசைப்போம்.
இப்படியான வாழ்வு சம்பவங்கள் மும்பையில் நான் இருந்த பதினேழு வருடங்களில் கிடைத்தது. அச்சம்பவங்களிலிருந்து என் கதை உலகம் பிறந்தது. பிறக்கிறது. பிறந்து கொண்டேயிருக்கிறது.
நக்கீரன் : ஓர் எழுத்தாளரிடம் கேட்க கூடாத கேள்விதான்… வாசகனை அசைத்துப்போடும் உங்கள் படைப்புகளிலேயே உங்களை அசைத்தப் படைப்பு எது…?
நாஞ்சில் நாடன் : நான் முன்னரே சொன்னது போல்… என் தேடல்களில் கிடைக்கும் மனிதர்கள் கதை மாந்தர்களாக வலம் வருவது போல், இங்குள்ள கேவலமான அரசியலும் என் கதைகளில் வலியோடு இருக்கிறது. மகாரஷ்டிராவில் விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், அவர்கள் வயிற்று வலியால் செத்துப்போனார்கள் என சத்தியம் செய்தது இங்குள்ள அரசியல்.
மனம் வெதும்பிய நான் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ரயில் பெட்டியில் அமர்ந்து சில ரொட்டித் துண்டுகளையும் உருளைக் கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமயம் ஒரு விவசாயி என் இருக்கைக்கு வருகிறார். ஒரு பாலித்தீன் பையில் சில துணிகளும், ஒரு வாட்டர் கேனில் பாதிக் குடிக்கப்பட்ட தண்ணீரையும் கொண்டு வந்தவரின் முகத்தில் அப்படியொரு சோகமும், வலியும் விரவிக்கிடந்தன.
மெல்ல… தயக்கத்தோடு என் அருகே வந்து என்னிடம் இருக்கும் ரொட்டித் துண்டுகளை கவனிக்கும் அவர், ஹமீ கானா… என்ற போது, நான் அழுதே விட்டேன். அதற்கு அர்த்தம் ‘யாம் உண்போம்’என்பது. எனக்கு கொடுங்கள் என்றால் பிச்சைக் கேட்பது போல் ஆகிவிடும் என்பதால் அந்த விவசாயி ‘ஹமீ கானா’ என்று கேட்ட அந்தத் தருணம், அவரின் விரக்தியான கண்கள்… மகாராஷ்டிரா விவசாயிகளின் கொடும் பசியை மறைக்கச் செய்யும் அரசியலை கிழித்தெறிந்தன. அந்த நிஜக் கதைதான் இந்தச் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘யாம் உண்போம்’ கதை.
அதே தொகுப்பில் ‘தன்ராம் சிங்’ என்றொரு கதை. அதில் ஒரு கூர்க்காவாக வரும் தன்ராம் சிங் என்னோடு வாழ்ந்தவன். பணி மாற்றலாகி கோவையில் குடியேறிய போது என் அலுவலக வாசலில் நின்றிருந்தவன். மட்டன் பிரியனான அவனால் மட்டன் வாங்கி உண்ணும் வரும்படியைக்கூட கொடுக்காத இந்தச் சமூகத்தில், அவன் உண்ணுவது குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் ஆடுகளின் காதுகள் தான்.
எங்கோ ஒரு மாநிலத்திலிருந்து இங்கே வாழ வந்திருக்கும் அவன் வேறு யாருமில்லை. எந்த மும்பையில் கூலி வேலை செய்து கொண்டு அப்பா, அம்மா, சாப்பாடு, ஊர் என ஏக்கம் கொண்டலைந்து கொண்டிருந்தானோ அந்த நாஞ்சில் நாடனாகத்தான் அவனையும் பார்த்தேன்.
அவனுக்கு ஒரு முறை இன்லேண்ட் லெட்டர் வருகிறது. இறப்புச் செய்தியைத் தாங்கி வந்த அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு அவனைப் போலவே இங்கே வந்திருக்கும் அவன் “உறவு கூர்க்காக்களுக்கு” தெரியப்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அவன் ஊர் சேர்வதற்குள் இன்லேண்ட் லெட்டரில் புதைக்கப்பட்ட அந்த மரணச் செய்தியைப் போல மரணமானவனும் புதைக்கப்பட்டு நாட்கள் கடந்திருந்தன.
அம் மரணத்திற்கு வந்தவர்கள் பாதி வழியிலேயே ஒரு கடற்கரையில் கூடி அந்த இன்லேண்ட் லெட்டர்களை கொழுத்தி விட்டு மீண்டும் கூர்க்காக்களாக திரும்பினார்கள். மொட்டையடித்த தலையோடு தன்ராம் சிங் திரும்பி வந்தான். அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கொருமுறை மொட்டையடித்துக்கொள்ளும் தலையை வைத்திருந்தான் தன்ராம் சிங்.
அந்த தன்ராம் சிங்கை கதையாக்கிய போது… ‘ஆயிரம் வலிகள் சுமந்து ஒரு குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு மாதத்திற்கொருமுறை உங்கள் வீட்டைத் தட்டும் கூர்க்காவுக்கு ஐந்து ரூபாய் கொடுக்க கூட நீங்கள் யோசிக்க வேண்டாம்’ என்று முடிந்தது அக்கதை. அவ்விரண்டு கதைகளுமே என்னை அசைத்துப் பார்த்தவைதான்.
நக்கீரன் : சாகித்ய அகாடமியை விமர்சனப்பூர்வமாகவே தாக்கி வந்த தங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்…?
நாஞ்சில் நாடன் : பலமுறை நான் திட்டி தீர்த்துக்கொண்டிருப்பதால் எனக்கு ஒரு விருது கொடுத்து வாயை அடைக்கலாம் என்று நினைத்ததோ என்னவோ அகாடமி… என சிரித்தவர், தொடர்ந்து…  சாகித்ய அகாடமி விருது தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் முட்டாள் தனமானது தான். இதை எப்போதும் கூறுவேன்.
நக்கீரன் : அதே நேரத்தில் உங்களுக்கு இவ்விருது கொடுக்கப்பட்டிருப்பதின் மூலம் அகாடமி விருது தேர்ந்தெடுத்தலில் ஒரு சரியான மாற்றம் நிகழ்ந்திருப்பதை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?
நாஞ்சில் நாடன் : அப்படி ஒரு சரியான மாற்றம் நிகழ்ந்தால் சந்தோஷம். ஆனால் இந்த விருதுக்கான படைப்பாளிகளின் படைப்புகளை தேர்ந்தெடுப்பவர்கள் தீவிர இலக்கிய வாசனையைக்கூட நுகராதவர்களாக இருக்கிறார்கள். இது மாற வேண்டும்.
ராஜேந்திர சோழன், வண்ணநிலவன், வண்ணதாசன், ஞானக்கூத்தன். ந.முத்துசாமி என ஆகச் சிறந்த படைப்பாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்களுக்கெல்லாம் எப்போதோ சாகித்திய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு காரணம் மேற்கூரிய தீவிர இலக்கிய வாசனை நுகராதவர்களால் தான்.
இவர்களுக்கே இன்னும் கிடைக்காத போது, ஜே.பி.சாணக்கியா, பாலை நிலவன் வரிசையில் நிற்கும் இன்னும் பல படைப்பாளிகளுக்கு இவ்விருது கனியும் காலம் எப்போது என யோசித்தால் வருத்தமே அடைகிறேன். சாகித்திய அகாடமியின் இந்த விருதை நான் வாங்கும் போது கூட இந்த வருத்தம் எனக்குள்ளிருக்கும். அப்படி வருத்தப்படாமல் நான் வாங்கினால் நானும் ‘விருது விரும்பர்களில்’ ஒருவனாகி விடுவேன் என்கிறார்… உண்மையாய்.
சந்திப்பு : அருள் குமார்

நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு

June 4, 2012 1 comment

நன்றிDyno Buoy

இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.

இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.

இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.

தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!