Archive

Posts Tagged ‘சோழன்’

ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும்

February 10, 2011 1 comment

ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள் | Snap Judgment

பிரபஞ்சன்

முழுமையான தமிழக வரலாறு இன்னும் எழுதப்படவில்லை என்பது, தமிழ் அறிவுலகத்துக்கு ஒரு வசையாக இன்னும்  நீடித்துக்  கொண்டிருப்பது சரிதானா என்பதைத் தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. வெற்றிலை பாக்குக் கடைகள் மாதிரிப் பெருகும் பல்கலைக்கழகங்கள், அவைகளில் வரலாற்றுத் துறைகள், அவைகளில் பல்லாயிரம் சம்பளம் பெறும் பேராசிரியப் பெரு மக்கள், ஆய்வு அறிஞர்கள், அவர்களை மேல் நிர்வாகம் செய்துவரும் உயர்கல்வித்துறை எல்லாம் இவை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்மொழி மற்றும் தமிழ்நாடு பற்றி நமக்கு அக்கறை உண்டு. தமிழக வரலாறு எழுதப்படாமைக்கு என்ன காரணங்கள் இருக்கமுடியும்? பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள், கோயில் சார்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ் வாய்வு முடிவுகள், இன்னும் பதிவு செய்யப்படாமையும், பதிப்பிக்கப் பெற்று வெளியிடப்படாமையும், முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மறுபக்கம், இருக்கக்கூடிய ஆதாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுள்ளன.  ஒரு கோவில்  பழுது பார்க்கப்பட்டு, விழா நடத்தப்படும் போதெல்லாம், குறைந்தது ஐம்பது கல்வெட்டுக்களாவது அழிந்து போகும் அவலம் நேரிடுவது தமிழர் போன்ற பெருமைமிகு இனத்துக்கு எந்த வகையிலும் சிறுமையையே சேர்க்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த அடிப்படைகளை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

இன்று தமிழகம் என்று அறியப்படும் நிலப்பரப்பின்கீழ், மறைந்து போன இன்னும் ஒரு தமிழ்நாடு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் இதை நன்கு அறிவார்கள். என்றாலும், அத்துறைக்குப் போதுமான சௌகர்யங்கள் செய்து கொடுத்து, வரலாற்றைத் தோண்டி எடுத்து ஆவணமாக்கிக் கொள்ளும் ஆர்வமோ, ஈடுபாடோ அரசிடம் இல்லை. உதாரணத்துக்குப் பூம்புகார். காவியங்கள் போற்றிப்புகழும் பழைய பூம்புகார், மதுரை, காஞ்சி, நகரங்கள் மண்ணுக்குள் பெறற்கரிய ஆவணங்களை வைத்துக்கொண்டு காத்துக் கிடக்கின்றன. சங்ககாலத்து நல்லியக்கோடனின் கிடங்கில் கோட்டை (திண்டிவனம் அருகில்) இன்று சுத்தமாக அழிந்தே போயிற்று. ஒரு கோட்டையின் அழிவு, மிகப் பெரிய வரலாற்றுக் கலாச்சார அழிவு என்பதை யாரும் உணரத் தயாரில்லை.

தம் சொந்த ஆர்வம் தூண்ட, தம் பேருழைப்பை நல்கி, பெரும் பொருட் செலவில் சில தனிப்பட்ட ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து சில உருப்படியான மரியாதைக்குரிய ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். இவர் எழுதிய தஞ்சாவூர் எனும் பாரிய ஆய்வு, ஊராய்வுகளில் ஒரு முன் மாதிரி ஆய்வு என்று உறுதியாகச் சொல்லலாம். இது போன்ற ஊர் ஆய்வுகள் பெருகப் பெருக, தமிழ் நாட்டாய்வுக்கு வளம் சேரும் என்பதோடு வரலாறு எழுது வதற்கும் அவை அடிப்படையாக இருக்கும்.

பிற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவனும், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசைக் கட்டியெழுப்பியவனும் ஆகிய இராஜராஜசோழன் தோற்றுவித்த ராஜராஜேச்சுரம் எனும் பெரிய கோயிலுக்கு இவ்வாண்டு ஆயிரமாண்டு நிறைவடைகிறது. ஆயிரம் ஆண்டுகள் ஒரு பெரும் கலாச்சார நிறுவனமாக, தமிழகப் பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் பெரிய கோவிலையும், அது நிலை பெற்ற தஞ்சையையும், குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்வழி அறிந்துகொள்வோம்.

தஞ்சாவூரின் இருப்பையும் அதன் சிறப்பையும் இலக்கியங்கள் வழியும், கல்வெட்டு, செப்பேடுகள் வழியும் ஆராய்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். தஞ்சை எனும் பெயரை முதல்முதலாக இலக்கியத்தில் ஆண்டவர் அப்பர் எனும் திருநாவுக்கரசரே. சிறந்த சிவாலயங்கள் இருந்த ஊர்களின் பட்டியலில் தஞ்சையைச் சேர்க்கிறார். அந்தச் சிவாலயத்து இறைவரின் பெயர் தனிக்குளத்தார். தனிக்குளத்தின் அருகில் கட்டப்பட்ட கோயிலாகலாம் இது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினராக அறியப்படும் திருநாவுக்கரசர் தஞ்சையைக் குறிக்கிறார் என்றால், சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகளாகவாவது தஞ்சை எனும் ஊர் நிலைபெற்றிருக்க வேண்டும். அது சோழர்களுக்கு ஆட்படும் முன்னர், பல்லவர்களிடம் இருந்திருக்கிறது. மகேந்திர வர்ம பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணுவே தஞ்சையைக் கைப்பற்றி இருக்கிறார். அந்த வெற்றி கி.பி. 6 அல்லது 7ம் நூற்றாண்டாகலாம்.

திருநாவுக்கரசருக்குப் பின்னர், தஞ்சையைப் பாட்டில் வைத்தவர், பூதத்தாழ்வார். அவரைத் தொடர்ந்து திருமங்கைஆழ்வார். நாயன்மாரும், ஆழ்வார்களும் கருதி வந்து தொழுத சைவ-வைணவக் கோயில்கள் தஞ்சையில் இருந்திருக்கின்றன. அக்காலங்களில் தஞ்சை, கோவில்களால் சிறப்புற்றிருந்திருக்கிறது. பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக முத்தரையர்களின் தலைநகரமாகச் சில காலம் தஞ்சை இருந்துள்ளது. முத்தரையன் ஒருவனிடம் இருந்தே விஜயாலய சோழன், தஞ்சாவூரைக் கைப்பற்றி, பிற்காலச் சோழர் ஆட்சியைக் கி.பி. 850ல் தொடங்கிவைத்திருக்கிறார். அதன் பிறகு சுமார், முன்னூற்று அறுபத்து எட்டு ஆண்டுகள் சோழர் வசம் இருந்த தஞ்சையை மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1218ம் ஆண்டு கைப்பற்றி அந்நகரை எரித்துத் தரை மட்டமாக்கினான்.

நாட்டைக் கைப்பற்றுதல், காரணம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாட்டின் மேல் வேற்று நாட்டு அரசன் படையெடுப்பதும், வெல்வதும், அந்நகரை இடித்துப் பாழ்பண்ணுவதும், நிலத்தைப் பாழ்பண்ணும் நோக்கத்துடன் வரகு விதைப்பதும், கழுதை ஏர் பூட்டி உழுவதும், அங்குள்ள பெண்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாகக் கொணர்ந்தும், தாசித் தொழிலில் ஈடுபடச் செய்ததும் அந்தக் காலத்தில் வீரம் எனப்பட்டது. இதன் பொருள் எல்லாக் காலங்களிலும் மக்கள் என்பவர்கள், ஒரு உயிர்ப் பொருள் என்ற எண்ணம், அவர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது என்கிற புரிதல் வரலாற்றில் பெரும்பாலான மன்னர்களிடம் இல்லை என்பதே வரலாறு நமக்குத் தரும் பாடம்.

விஜயாலயர், ஆதித்த சோழன், பராந்தகன், அரிஞ்சயன், கண்ட ராதித்தன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தகன், இராசராசன் என்று பெரு மன்னர்கள் காலமாகிய நூற்று எழுபத்தாறு ஆண்டுகள் தஞ்சை, தமிழர் வாழ்க்கையில் மிகச் சிறப்புற்று வாழ்ந்த காலமாகும்.

நான் 1965ம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் கல்லூரியில் மாணவனாகப் போய்ச் சேர்ந்தேன். தஞ்சை எனக்குப் புதிய ஊர், புதிய பிரதேசம் இல்லை. என் தாய் மாமன்கள் தஞ்சை காரியமங்கலத்தை அடுத்த இரும்புதலை எனும் சிற்றூரில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். எங்கள் பூர்வீகம், கும்பகோணத்தை அடுத்த அரிசிலாற்றுக்கரைக் கிராமங்களில் ஒன்றான தூவாக்குடி எனும் கிராமமே ஆகும். இங்கிருந்தே, பதினெட்டாம் நூற்றாண்டு ஆற்காட்டு நவாப்புகள், மராட்டியர் கலவரத்தில் குடிபெயர்ந்து ‘அமைதியைத்தேடி’ நூற்றுக்கணக்கான குடும்பங்கள் செய்த பயணத்தில் எங்கள் குடும்பம் புதுச்சேரியை வந் தடைந்தது. எங்கள் குலத்தொழிலாகிய கள் தொழிலுக்கும் புதுச்சேரித் தென்னைமரச் சூழல், பேருதவியாக இருந்துள்ளது.

தஞ்சாவூர் பற்றிய ஜானகிராமனின் பதிவுகள், அவர் காலத்திய, அவர் பார்த்த தஞ்சாவூர் இல்லை. அவர் தந்தை மற்றும் மூதாதையர் மூலம் அவர் செவிக்கு வந்து சேர்ந்த தஞ்சையையே அவர் எழுதினார். அவர் காலத்திலேயே தஞ்சை வரளத் தொடங்கி இருந்தது. என்றாலும் காவிரியில் தண்ணீர் இருந்தது. என் 1965க்குப் பிறகான தஞ்சையிலும் வெண்ணாறும், வடவாறும், புது ஆறும் நுரை பொங்க, இருகரையும் தொட்டு வெள்ளம் ஓடியதை நானே கண்டிருக்கிறேன். ஆளோடிய ஊருக்கெல்லாம் உள்ள அழகு, தஞ்சைக்கும் உண்டு. காவேரியைப் பார்க்க என்றே, அதன் கரையில் அமர்ந்து இலக்கியம் பேச என்றே, பிரகா ஷும், எம்.வி.வெங்கட்ராமனும், கரிச்சான் குஞ்சுவும், நானும் திருவையாற்றுக்குப் பயணம் மேற்கொள்வோம். தியாகையர் சந்நிதிக்கு மேற்புறம், காவேரியில் கால் நனைத்துக் கொண்டு வெள்ளை மணற்பரப்பில் அமர்ந்து பேச மிகச் சௌக்கியமாக இருக்கும்.

ஆறோடும் ஊரின் அதிகாலைகள் மிக அழகியவை. நிகரற்றதும், தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காததுமான டிகிரி காபியோடு விடியும் தஞ்சை வைகறை ஈடற்றது என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அனேகமாக எங்கள் காலைகள். வெண்ணாற்றங்கரையிலேயே இருக்கும். அங்குள்ள அக்ரகாரத்தில்தான் எங்கள் சம்ஸ்கிருத குருவின் வீடு இருந்தது. அழகிய கோலம் போட்ட தெருவாசலைக் கொண்ட வீடு எங்கள் குருவினுடையது. ஒரு நாளின் ஒப்பற்ற விடியலை தன்னைப் போலவே பிரசாசிக்கச் செய்து கொண்டிருந்தாள் எங்கள் குருவின் மகள். ஜானகிராமன் கட்டுண்டு கிடந்த ‘நிகுநிகு கூந்தல்’ அவளுக்கும் இருந்தது. அவள் கூந்தலில் ஜானகிராமனின் வாசம் என்ற தைலம் பூசி இருந்தது. இலக்கியம், காலம் காலமாகச் சிலவற்றை ‘விளங்கச்’ செய்வதையே தன் பணியாகக் கொண்டிருந்தது. நிலவை அழகிய பொருள் என்று கொண்டாடியவர்கள் கவிஞர்களாகவே இருந்தார்கள்.

தஞ்சாவூரில்தான் யமுனா வாழ்கிறாள். நான்தான் பாபுவாக இருந்தேன். பிரகாஷும் கொஞ்சகாலம் அந்தப் பாத்திரம் வகித்தார். எனக்கு அதனால் பொறாமை இல்லை. யமுனாவின் வீட்டைக் கண்டடைந்தது எங்கள் சாதனை என்று நான் உள்ளபடியே நம்புகிறேன். தஞ்சை ரயில்வே நிலையத்து அருகில் உள்ள துக்காம்பாளையத் தெருதான் யமுனா ஆட்சி செய்த பிரதேசம். தெருவின் நடுவாக, தெருவில் இருந்து நான்கு படிகளை மிதித்தேறிமேல் எழுந்து நிற்கும் வீடே யமுனாவின் அரண்மனை. மராட்டியர்களின் வீட்டின் அடையாளங்களில் ஒன்று அவைகளின் தளம் குள்ளமாக கையெட்டும் தூரத்தில் இருக்கும். பக்கத்து வீடுகளில் பேசி அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மராட்டியக் குடும்பம் இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டோம். எனக்குத் தஞ்சாவூர் என்பது இரண்டு தெருக்கள். ஒன்று துக்காம்பாளையத் தெரு. மற்றது குதிரை கட்டித் தெரு. அங்கு சுமதி இருந்தாள். மதுவிலக்கை ஒழித்துத் தி.மு.க. ஆட்சி, மதுக் கடையைத் திறந்த அந்த முதல் இரவு 12 மணிப்பொழுதில், கூடிய பெரும் கூட்டத்தின் ஊடறுத்து முதல் விஸ்கி பாட்டில் வாங்கிய பெருமை எனக்குண்டு.

இராசராசன் மிக இளவயதிலேயே தந்தை தாயை இழந்தவன். தந்தையோடு தாய் உடன்கட்டை ஏறியதை அவன் பார்த்திருக்கக்கூடும். பாட்டியாலும், அக்கா குந்தவைப் பிராட்டியாலும் வளர்க்கப்பட்டவன்.  கி.பி.985ல்  அரசுப் பொறுப்பு ஏற்றான். இவனது பெரிய சாதனை, பெரிய கோவில். மன்னர்கள் அரண்மனைகள் மறைந்தன. கோவில்கள், சத்திரம் சாவடிகள் போன்றவை நிலைபெற்றன.  இவன்  எடுத்த  கோவில் 1009-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பற்ற கலைச்சிறப்புகள் கொண்ட கலைச்சின்னம் ஒன்று நம்மோடு இருப்பது நம் பெருமைகளுள் ஒன்று. சிவன் கோயில்கள், இறைவனுக்கு முன்னால் தேவாரம் ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்ததை, ராசராசன் முறைமைப்படுத்தி ஒழுங்குறச் செய்திருக்கிறான். 1010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி செப்புக்குடம் விமானத்தின் மேல் வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் என்.சேதுராமன் எழுதுகிறார். இவர் காலத்தில்தான் திரு முறைகளில் முதல் ஏழும்  தொகுக்கப்பட்டிருக்கின்றன. தேவாரம் ஓத எனவே 48 ஓதுவார்களை நியமித்து இருக்கின்றான்.

தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்பை குடவாயில் பாலசுப்ரமணியன் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

மன்னனின் பெயராலேயே ராஜ ராஜேச்சுரம் என்று வழங்கிய கோயில், பிரஹத் ஈஸ்வரம் என்று வடமொழிப் பெயராலும், பெரிய கோவில் என்று மக்களாலும் வழங்கப் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுவரை இதன் வரலாறு அறியப்படாமல்தான் இருந்திருக்கிறது. ஜி.யூ. போப் இக்கோயிலைக் காடு வெட்டிச் சோழன் கட்டினான் என்று எழுதுகிறார். 1886-ல் சென்னை அரசால் நியமனம் பெற்ற ஹுல்ஷ் என்ற ஜெர்மன் கல்வெட்டாராய்ச்சியாளரே, இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து இதைக் கட்டியவன் ராஜராஜன் என்று பதிவு செய்கிறார்.

முதன்முதலாகக் கோவிலைக் கட்டிய கலைஞர் பெயரையும், கோவிலோடு தொடர்புடைய அனைவர் பெயரையும் கல்வெட்டில் பதிவு செய்து, நன்றி செலுத்திய மன்னன் ராஜராஜனாகத்தான் இருப்பார். வீரசோழன் குஞ்சரமல்லன் என்கிற பெருந்தச்சனே முதல் தலைமைக் கட்டடக் கலைஞன் என்பதும், அவன் துணையாளர்களாக மதுராந்தகன் நித்தவினோதன் மற்றும் இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகியோர் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம். அக்காள் குந்தவை, மகன் ராஜேந்திரன், அமைச்சர், ஈசான சிவபண்டிதர் என்கிற ராஜகுரு முதலான பலருக்கும் கல்வெட்டில் இடம் கிடைக்கிறது.

அவன் இயற்பெயர் அருண்மொழி என்பதும் கல்வெட்டே நமக்கு உணர்த்துகிறது. ராஜராஜனுக்குக் காஞ்சி கயிலாசநாதன் ஆலயமே மனம் கவர்ந்ததாய் இருந்து, அதன் விரிவாக்கமாகவே இப்பெயர் கோவிலை எடுப்பித்திருக்கிறான். எடுத்தேன் என்று சொல்லாமல், ‘எடுப்பித்தேன்’ என்று பணிவுடன் சொல்லிக் கொள்ளும் பணிவும் இவனிடம் இருந்திருக்கிறது. கற்களே இல்லாத தஞ்சையில், பல ஆயிரக்கணக்கான டன் கற்களைப் புதுக் கோட்டை மாவட்டத்து குள்ளாண்டார் கோவில் பகுதியில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து கட்டி இருக்கிறான் அவன்.

குஜராத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய லகுலீசர் என்ற ஞானி, சைவத்தின் ஒரு பெரும்பிரிவான பாசுபதத்தை நிலைநாட்டி இருக்கிறார். இதன் பிரிவுகளாகப் பிற்காலத்தில் காளாமுகம், காபாலிகம், மஹாவிருதம் ஆகியவை தோன்றின. கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவில் பாசுபதம் தமிழகத்துக்குள் நுழைகிறது. ராஜராஜன், சைவத்தில் பாசுபதப்பிரிவை ஏற்றவனாக இருந்தான்.

சிற்பம் என்ற நுணுக்கத்தின் பல அற்புதச் சிலை வெளிப்பாடுகள் கொண்ட கோவில் பெரிய கோவில். அதற்கு நிகராக ஓவியத்திலும் முழுமை கண்டிருக்கிறது இக்கோவில். ராஜராஜன் காலத்து ஓவியங்கள் அருமை தெரியாத நாயக்க மன்னர்கள், அவ்வோவியங்களின் மேலேயே, சுண்ணாம்பு பூசி, தம் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். வரலாற்றின் ஒரு செழும் பண்பாட்டுத் தளத்தை நாயக்கர்களின் மூடமை அழித்தது. கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகால தமிழ் வரலாற்றைத் தமிழர்கள் தங்கள் அறியாமையாலும், அதிகார வெறியினாலும், கோயில் குட முழுக்கு என்ற பெயராலும், இன்றுவரை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

முடியாட்சியோ, மன்னர் ஆட்சியோ, நிலப்பிரபுத்துவ ஆட்சியோ, அவைகளின் கலை வெளிப்பாடு எத்தனை சிறப்புற்றவை ஆயினும், அக்கலைகளின் உன்னதங்களை ஏற்றுக்கொள்ளும் நாம் அவைகளைப் போற்றிப் பாதுகாக்கவும் கடமைப்பட்ட நாம், அந்த ஆதிக்கவாதிகளின் அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ் ஆர்வலர், வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஒரு சிலர் நீங்கலாக பலரும் இந்த ஆதிக்க வெறியை வீரம் எனும் பெயரால் வழிபடுவதை ஏற்றுக்கொள்வது ஜனநாயகப் போக்குக்கு எதிரானது. ராஜராஜனின் போர்கள், நியாயத்தின் அடிப்படையில் நடந்ததாகச் சொல்லமுடியாது. அவர் மகன் ராஜேந்திரன் கங்கையை வென்றதாகச் சொல்வதையும், கடாரத்தைக் கொண்டதாகச் சொல்வதையும் ஒரு பெருமை மிகு நிகழ்வாகச் சொல்வதற்கில்லை. பேரரசுக் கட்டுமானத்தின் முதல் அழிவுக்கும் கடைசி அழிவுக்கும் உள்ளாகிறவர்கள் மக்கள். அதிகமாகத் துயரமுறுவோர் பெண்கள். இராஜராஜனை நியாயப்படுத்துவது, அமெரிக்க புஷ்ஷை நியாயப்படுத்துவதாகும்.

ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது, தஞ்சாவூருக்குச் செல்கிறேன். இலக்கியம் தொடர்பான வேலைதான். ஆறுகள் கெட்டு, அமுக்குக்கோவணம் போல சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. ஆற்று மணல், அதற்கென்றே தோன்றி இருக்கும் வெள்ளைச் சட்டை அணிந்த மிகப்பெரும் கொள்ளைக்காரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோரைகள், குத்துச்செடிகள் மிகுந்து ஆறுகள் பாழ்பட்டுவிட்டன. தெருக்களும் மக்களும் உலர்ந்து, நைந்து காணப்படுகிறார்கள். சுழன்றும் கனன்றும் வீசும் ஈரமற்ற காற்றால் புல்தரை பொசுங்குகிறது. அரசியல் தொழில் மட்டும் கிளைவிட்டுப் பரவிச் செழிக்கிறது. ஊர் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சீனிவாசா நகர் மற்றும் ராஜராஜன் நகர் கட்டிடங்களின் கீழ்தான் ராஜராஜனின் அரண்மனை புதைந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

அரண்மனைகள் அப்படித்தான் அழியும். இனியும் அழியும்.