Archive

Posts Tagged ‘நேர்காணல்’

Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives

June 15, 2012 1 comment

Thankshttp://www.tamiloviam.com/site/?cat=904

மே, ஜூன் 2006: கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம்

அ. வரல் ஆற்றின் திட்டுகள்

ஆ. நள் எனும் சொல்


உலகசினிமா

நாள் : 12/30/2004 11:58:58 AM

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.

தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.

இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம்

என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.


நாள் : 11/11/2004 7:31:16 AM

நனையாத எனது மழைநாட்கள்.

கடந்த ஒருவாரகாலமாக சென்னையில் விடாது பெய்யும் மழையின் காரணமாக வீட்டிலே அடைந்திருந்தேன். நான் மழையின் ரசிகனில்லை. என்னால் கோடையின் அதிகபட்ச அக்னிநட்சத்திர வெயிலில் கூட மதியம் பனிரெண்டு மணிக்கு சூடாக டீகுடித்தபடி நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும். ஆனால் மழையில் பத்து நிமிடங்கள் கூட நிற்கமுடியாது. பயணத்தில் எதிர்படும் மழை அல்லது பின்னிரவில் யாரும் பார்க்காமல் பெய்யும் மழை இந்த இரண்டிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. மற்றபடி மழை தொடர்ந்து பெய்யும் போது நான் ஒரு குத்துச்செடியைப் போல ஒடுங்கிப்போகத் துவங்கிவிடுகிறேன்.

மழை நாட்களில் எந்த வேலை செய்வதற்கும் பிடிக்காது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டேன். மின்சாரத் தடை காரணமாக வீடு அடிக்கடி இருள்வதும் ஒளிர்வதுமாக வேறு இருந்தது. மழையால் நேரம் செல்வது மிக மெதுவாகி வீடு குகையைப் போலச் சிறியதாகிவிட்டது.

ஒரு வேளை பிறந்ததிலிருந்து வெயிலின் தீராத பிரகாசத்தை மட்டுமே அனுபவித்து வந்ததால் கூட மழையின் மீது விருப்பமில்லாமல் போயிருக்ககூடும். எங்களது ஊருக்கு அருகாமையில் கொப்புசித்தம்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரின் வெயில் மிகவும் பிரசித்தமானது. சித்திரையில் அங்கு வெறும்காலோடு எவரும் நடந்து போகமுடியாது. அதை நினைத்துத் தானோ என்னவோ அக்கிராமவாசிகள் தங்களது நிலபத்திரங்களில் சாட்சியாக வெயிலையும் சேர்த்திருக்கிறார்கள். ஆச்சரியமான விபரமது.

ஊரில் எவராவது கடன் வாங்கினாலோ, நிலவிற்பனை செய்தாலோ பத்திரத்தில் உள்ளபடி தான் நடப்பதாகவும் மீறினால் சித்திரை மாதவெயிலில் பகலில் வெறும்காலோடு ஊரை பத்துமுறை சுற்றிவர சம்மதிப்பதாகவும் எழுதி கையெழுத்துப் போடுவார்கள். பத்திரசாட்சிகளில் ஒன்றாக வெயில் இடம்பெறும் நிலப்பகுதியில் பிறந்தவன் என்பதால் இயல்பாகவே வெயிலுக்குப் பழகியிருக்கிறேன்.

ஆனால் சென்னையின் இந்த மழை நாட்களைக் கடந்து செல்வதற்கு தொடர்ந்து ஒரு வாரகாலமும் புத்தகங்கள் படிப்பதும், விருப்பமான திரைப்படங்களை பார்ப்பதுமாக செலவிட முடிவு செய்தேன். அதன்படி தினமும் பரிட்சைக்குப் படிப்பது போல காலை எட்டுமணிக்குத் துவங்கி மாலை ஆறுமணிவரை புத்தகமும் கையுமாக வீட்டில் ஆங்காங்கே இடம்மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். இரவு எட்டுமணிக்கு துவங்கி பதினோறுமணிவரை சினிமா பார்ப்பது என என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த மழை நாட்கள் உபயோகமாகயிருந்தன.

மழை வெறித்த நேற்று படித்து முடித்திருந்த புத்தகங்கள் மேஜையில் குவிந்து கிடப்பதை பார்த்தேன். வியப்பாகதானிருந்தது. வாசித்த புத்தகங்களில் சில திரும்பப் படித்தவை. சில வாங்கிப் படிக்காமலே வைத்திருந்தவை. குறிப்பாக இந்த வாசிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நான்கு.

1) உம்பர்தோ ஈகோவின் கட்டுரைத்தொகுதியான How to travel with a salmon & other essays.

2) Natsume Soseki என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவல் I am a cat .

3) நோபல் பரிசு பெற்ற தென்னாப்பரிக்க நாவலாசிரியரான J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg.

4) தேயிலை எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றி Jason Goodwin எழுதிய பயணக் கட்டுரையான The Gunpowder Gardens.

இதைத்தவிர விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள லியோனார்ட் பெல்டியரின் சூரியனைத் தொடரும் காற்று என்ற சிறைவாழ்க்கை அனுபவங்களை பற்றிய புத்தகம், கங்கைப்பருந்தின் சிறகுகள் என்ற வங்காள நாவல், சங்ககால வரலாற்று ஆய்வுகள், பண்டைத் தமிழர் போர்நெறி, ஆ. இரா. வெங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம், புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றிய நினைவுத் தொகுப்பு. லு¡சுன் கதைகள். சிங்கிஸ் ஐத்மேத்தாவின் ஐமீலா, மற்றும் பெரிய எழுத்து அபிமன்னன் சுந்தரிமாலை.

கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்

1) ஸ்பீல்பெர்க்கின் TERMINAL

2) ஐப்பானிய இயக்குனரான NAGISHA OSHIMA வின் IN THE REALM OF PASSION.

3) பிரேசில் இயக்குனரான KARIM AINOUZ இயக்கிய MADAME SATA.

4) கொரிய இயக்குனரான IM KWON TAEK இயக்கிய கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற. PAINTED FIRE.

5) சீன இயக்குனரான TIAN MING WU இயக்கி பல உலகப் படவிழாக்களில் கலந்து கொண்ட .THE KING OF MASKS.-

6) மம்முட்டி நடித்த காழ்சா என்ற மலையாளப்படம்

7) ராகேஷ் சர்மாவின் குஜராத் கலவரம் பற்றிய டாகுமெண்டரியான THE FINAL SOLUTION

( புத்தகங்களைப் போலவே என்னிடம் நு¡ற்றுக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் சேமிப்பு ஒன்றுமுள்ளது. பெரும்பாலும் நண்பர்கள் எனக்காகச் சேகரித்து தந்த டிவிடிக்கள் )

மழை வெறித்த பிறகும் மனதில் நினைவுகளாக சொட்டிக் கொண்டேயிருக்கும் இரண்டு திரைப்படங்களையும் J.M. Coetzee யின் நாவலை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரைப்படவிழாக்களில் ஈரானிய சினிமாக்களுக்கு இருந்த வரவேற்பும் நெகிழ்வும் தற்போது கொரிய திரைப்படங்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சமீபத்திய கொரியg; படங்களில் பத்திற்கும் மேலாக பார்த்திருக்கிறேன். மென்மையான காதல் கதைகளில் துவங்கி சாகசf; கதைகள் வரை தங்களுக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ளவையாக கொரியப்படங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழாவில் விருதுபெற்ற PAINTED FIRE. திரைப்படம். சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

பதினெட்டாம் நு¡ற்றாண்டைச் சேர்ந்த கொரிய ஒவியரான ஒவானின் நிஜ வாழ்வை விவரிக்கும் இத்திரைப்படம் ஒவியர்களின் உலகத்தையும் அதன் தேடுதலையும் துல்லியமாக சித்திரித்துள்ளது.. ஒவான் எனும் சித்திரக்காரனின் வாழ்க்கை தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ்வதில் துவங்குகிறது. சாலையோரத்தில் உள்ள பிச்சைக்காரனை ஒவான் கரியால் வரைந்த சித்திரம், நகரின் முக்கிய ஒவியர் ஒருவரால் கவனிக்கபடுகிறது.அவர் ஒவானைத் தனது செலவிலே ஒவியம் கற்றுக்கொள்ள ஒரு மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஒவியத்தின் நுட்பங்களை கற்றுக்கொள்ள துவங்கும் போது ஒவியத்திற்கு பின்புலமாக உள்ள மெய்த்தேடல் பற்றியும், ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு பற்றியும் கற்றுக்கொள்கிறான்.

வாலிபவயது அவனை குடியிலும் பெண்களின் மீதான வேட்கையிலும் ஆழந்து போகச் செய்கிறது. கொரியாவின் முக்கிய ஒவியனாக வளரும் ஒவான் தனது சுபாவத்தின் காரணமாகவும் கலையின் மீதுள்ள தனது விடாத தேடுதலின் காரணமாகவும் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கபடுகிறார். ஒவியங்களுக்காக இயற்கையை ஆழ்ந்து கவனிக்க துவங்கிய ஒவான் ஒரு நேரத்தில் அதன் வியப்பில் தன்னைப் பறிகொடுத்துவிட்டு ஒவியனாக இல்லாமல் துறவியை போல தேடித்திரியத் துவங்குகிறான். அவனது புகழ் கொரியா முழுவதும் பரவுகிறது. அவனோ பானை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு மண்பானையில் சித்திரம் வரைந்து தந்தபடி யாரும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் பனிமலையின் தொலைவில் சென்று மறைந்துவிடுகிறான். இப்போதும் அவர் துறவியாக மலைமீது வாழ்வதாக ஒரு ஜதீகம் மட்டும் நிலவி வருகிறது.

தார்கோவெஸ்கியின் ஆந்த்ரே ரூபலாவ் திரைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்கு இணையானது இத்திரைப்படம். தார்கோவெஸ்கியும் ருஷ்ய ஒவியரான ஆந்த்ரே ரூபலாவின் வாழ்க்கையை, மனவேதனைகளையே படமாக்கியிருப்பார். அத்திரைப்படம் ஒளியால் எழுதப்பட்ட ஒவியங்களின் தொகுப்பு போலவேயிருக்கும்.

கொரியத் திரைப்படத்திலும் காட்சிகள் ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக வேனிற்காட்சிகளும், மழைக்காலத்தின் பின்னால் நிலப்பரப்பில் தோன்றும் நிறமாற்றங்களும், ஆகாசத்தில் குருவிக்கூட்டங்கள் நெருநெருவென ஆயிரக்கணக்கில் பறப்பதும் கண்களை அகலவிடாமல் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. இந்த திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. கொரியாவின் பராம்பரிய காற்றுவாத்தியங்களை பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகள் கூட நு¡ற்றாண்டு பழமையானவைகளே.

‘**
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் வெளிவந்துள்ள சிறந்தபடம் என்று காழ்சாவைக் கூறலாம். மம்முட்டி ஊர்ஊராகச் சென்று திரைப்படங்களை திரையிட்டு காட்டும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கமாக ஜான் ஆபிரகாமால் துவங்கபட்ட ஒடேசா இயக்கத்தவர்கள் இது போல கிராமம் கிராமமாக சென்று பதேர்பாஞ்சாலியும் பேட்டில் ஷிப் பொடோம்கினும் என உலகின் சிறந்த படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

மம்முட்டியும் அது போல குட்டநாடு பகுதியின் கிராமம் ஒன்றிற்கு ருஷ்யத் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கொண்டு செல்கிறார். காயலில் பயணம் செய்யும் போது படகில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அவன் குஜராத் பூகம்பத்தில் உயிர்தப்பி வந்தவன். அந்த சிறுவன் மம்முட்டியை பின்தொடர்ந்தே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைத் தன்னோடு தன் வீட்டிற்கு கூட்டிப் போய் தன் குடும்பத்தில் ஒருவனை போல வளர்க்க துவங்குகிறார் மம்முட்டி. குடும்பமும் அவனை ஏற்றுக் கொள்கிறது.

அச்சிறுவனை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி ஒருவன். மம்முட்டி அதை மறுக்கவே சிறுவன் திரும்பவும் குஜராத்திற்கு அனுப்பபட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டு சிறுவன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறான். முடிவில் சிறுவனை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு மம்முட்டியே கொண்டு செல்கிறார்.

பூகம்பத்தில் இடிந்த வீடுகளும் தெருக்களும் மனதை உலுக்குகின்றன. சிறுவன் உடைந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் தனது வீட்டைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது குடும்பமே பூகம்பத்தில் இறந்து போயிருக்கிறது. முடிவில் அகதிகள் முகாமில் சிறுவன் சேர்க்கபடுகிறான். அவனை தத்து எடுத்துக் கொள்வதாக மம்முட்டி மண்டியிட்டு கேட்டும் அரசு அதிகாரிகளால் மறுத்து துரத்தப்படுகிறார். கையறுநிலையில் வேதனையோடு சிறுவனை பிரிந்து வருவதோடு படம் முடிவடைகிறது.

சிறுகதையைப் போல மிககச்சிதமாகவும் நேர்த்தியாகவும் படமாக்கபட்டுள்ளது.எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் பகட்டான நடிப்பும் வன்முறைகூச்சல்களும் கிடையாது. நடிகர்கள் தாங்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்பது தெரியாமல் நிஜமனிதர்களாக நடமாடுகிறார்கள். சிறுவன் படம் முழுவதும் குஜராத்திமொழியிலே பேசுகிறான். பாஷை புரியாமலும் அவனது உணர்ச்சி நம்மை கலங்கசெய்கிறது.

*** இதுபோலவே J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg. ருஷ்ய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறுசம்பவத்தை பற்றியது. அவரது வளர்ப்பு பையன் ரகசிய அரசியல் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறிந்து காவல்துறை அவனைக் கைது செய்து அழைத்துப் போய்விடுகிறது. அவனை மீட்பதற்கும் தன்னைப் போலவே அவனும் சிறைவாழ்விற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தோடு அவனைப்பற்றிய விபரங்களை தேடியலையவதுமாக ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான வெளிப்படுத்தபடாத அன்பை முன்வைக்கிறது. கோட்ஷியின் நாவல். (தமிழில் இந்நாவல் தற்போது சா. தேவதாஸால் மொழிபெயர்க்கபட்டு வருகிறது.).

உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைத் தொடரைப் படித்து முடித்தபோது இத்தனை கேலியாகவும் எளிமையாகவும் எழுத முடிகிறதே என்று வியப்பாகயிருந்தது. அத்தோடு ஈகோ தமிழ் இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ அறிவுஜீவியாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இங்குள்ள பலரும் மிரண்டு போயிருந்தது நினைவிற்கு வந்தது. சமகால எழுத்தாளர்களில் ஈகோ மிக முக்கியமானவர். விருப்பமும் நேரமுமிருந்தால் அவரது Name of the Rose நாவலை வாசித்துப் பாருங்கள். சினிமா ரசிகராகயிருந்தால் சீன்கானரி நடித்து இந்நாவல் படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பாருங்கள் பிறகு புரியும் உம்பர்தோ ஈகோ எப்படிபட்டவர் என்று.

** சற்றே நீண்ட, கலவையான கட்டுரையாகிவிட்டது. கடந்த ஒரு மாதமாகவே பயணம், புத்தகவேலை என்று இழுத்துக் கொண்டு போகிறது வாழ்க்கை. தொடர்ந்து எழுதுவதற்கு விருப்பமிருந்தும் சந்தர்ப்பங்கள் குறைவாகயிருக்கின்றன. அதை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். இனி முன்போல தொடரும் என்று நம்புகிறேன்.

**


நாள் : 10/20/2004 12:35:32 PM, எஸ் ராமகிருஷ்ணன்

காணிக்காரர்கள்

கன்யாகுமரி மாவட்டத்தின் கீரிப்பாறை மலையில் உள்ள வெள்ளாம்பி பகுதியில் வசிக்கும் காணிக்காரர்கள் மரங்களின் மீது வீடு கட்டிக்கொண்டு குடியிருந்து வரும் ஆதிவாசிகளாகும். இயற்கை குறித்து ஏரளமான கதைகளும் பாடல்களும் இந்த ஆதிகுடிகளிடம் நிரம்பியிருக்கின்றன. எரிக் மில்லர் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வாளர் இவர்களை பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் நான்கு நாட்கள் காணிக்காரர்கள் சென்னைக்கு வருகை தந்து இங்குள்ள பள்ளிமாணவர்களுக்கு தங்கள் கதைகளை, பாடல்களை விளையாட்டை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்டில் ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பத்துக்கும் குறைவான குழந்தைகளே வந்திருந்தார்கள். மொத்தப் பார்வையாளர்களும் சேர்ந்தால் இருபத்தைந்து பேர் இருக்க கூடும். காணிக்காரர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் ஹைடெக் வசதிகளுடன் உள்ள ஹாலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த காணிகளில் பலரும் சர்வசாதாரணமாக மில்லரின் லேப்டாப்பை இயக்கியதும், அவரது டிஜிட்டில் காமிராவை உபயோகித்து படமெடுத்தது. பார்வையாளர்களுக்கு மிக விநோதமாக இருந்தது. முருகன் என்ற காணிக்கார இளைஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

காணிகளின் கலைக்குழு என்று அழைத்துக் கொள்ளும் பத்து குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களது கதையும் பாடல்களும் மலையாளம் கலந்தே காணப்படுகின்றன. கதைகளில் பெரும்பாலும் காட்டுவிலங்குகள் பற்றியும் காட்டிலிருக்கும் அரிய மூலிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். தமிழகத்தின் மற்ற இடங்களில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் அதன் மாற்றுவடிவங்களில் இங்கே காணமுடிகிறது. குறிப்பாக குலைகுலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுற்றிவா. (நரியே என்பது நிறைய என்று பொருள் என்று காணிவிளக்கி சொன்னார்) கொள்ளையடிச்சவன் எங்கயிருக்கான் கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி என்ற விளையாட்டு பாடல்வழியே காட்டிலிருந்து என்ன பொருட்கள் கொள்ளையடிக்கபடுகின்றன என்ற விபரத்தை காணிகள் பாடுகிறார்கள்.

அது போலவே நண்டு ஊறுது நரியுறுது என விரல்களை பிடித்துவிளையாடும் விளையாட்டில் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு மரமாக கொள்கிறார்கள். ஒரு குரங்கு மரத்தில் தாவி குதிக்கிறது என்று சொல்லி ஒவ்வொரு விரலாக தாவுகிறார்கள். பிறகு மழைவந்துவிட்டது குகைக்குள் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியபடியே தோள்பட்டை அடியில் கக்கத்தினுள் விரலை நுழைந்து கிச்சுகிச்சு காட்டுகிறார்கள். கக்கம் தான் குகை என்று சொல்வது சுவாரஸ்யமான கற்பனையாகயிருக்கிறது.

அது போலவே நான்கு சிறுமிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு தலைவாறுவதற்கு ( ஈருளி) பேன் சீப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த விளையாட்டில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு சிறுமிகள் தங்கள் கால்களை ஒன்றுசேர்த்தபடியே சுழன்றுவருவது வேடிக்கையாகயிருந்தது.ஞங்கிலி பிங்கிலி என்ற நகைச்சுவை பாடல் அர்த்தம் ஏதுவுமற்ற வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.

சென்னை நகர குழந்தைகள் மிகுந்த நாகரீகத்துடன் வாய்விட்டு சிரிப்பதற்கு கூட கூச்சத்துடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணிகளிடம் உள்ள கற்பனைதிறனை காணும் போது வியப்பாகயிருக்கிறது. அவர்கள் இயற்கையை காட்சிபடிமமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களது பாடல்கள் அதற்கு சாட்சியாகயிருக்கின்றன. பகல் என்பது ஒரு மீன் இரவு என்பது ஒரு வீரன். பகல் போய்க்கொண்டேயிருக்கிறது. இரவு நம்மை சுற்றிலும் காவல்காக்கிறது என்று அவர்களின் பாடல் ஒன்று துவங்குகிறது. நவீனகவிதையின் விதைகள் இங்குதானிருக்கின்றன.

காணிகள் ஒடுக்கமான முகத்துடனும் குள்ளமான உடல்வாகையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர் தற்போது பள்ளியிறுதியாண்டை முடித்த இருவர் மட்டுமே. காட்டுவேலைகள் செய்து வாழ்ந்து வரும் அவர்கள் மரங்களில் பரண்வீடு அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். தற்போது அவர்களுக்கு என தனியான பள்ளியொன்று கட்டப்பட்டிருக்கிறதாம்.

பரபரப்பும் ஆர்ப்பட்டமும் மிக்க சென்னைநகரை காணிகளில் பலரும் முதல்முறையாக கண்டிருக்கிறார்கள். நகரில் கேட்கும் கூச்சலும் இடைவிடாத பேச்சும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. எதற்காக இப்படி கத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள். சென்னையில் அவர்கள் மிக ஆசையாக காலணிகளை வாங்கியதை காட்டினார்கள். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பிலும் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க அலை மோதும் கூட்டத்திற்கும் இடையில் காணிகளின் குரல் வெளித்தெரியாமலே போய்விட்டது.

காணிக்காரர்கள் ஒவ்வொரும் தங்கள் பையில் சிறிய கூழாங்கல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.ஊர் ஞாபகம் வந்தால் அதை கையில் வைத்து உருட்டிக் கொள்வோம் என்று சிரித்தபடி சொன்னாள் ஒரு காணிக்காரப்பெண்.

மரங்களில் வீடு கட்டிவாழ்வோம் என்று மலைவாசி சொன்னதை கேட்ட சென்னை சிறுமியொருத்தி நீங்கள் எல்லாம் பறவைகளா என்று கேட்டது தான் மாநகரின் நிஜம். காணிகளை பார்க்கும் போது இயல்பாகவே சில சந்தேகம் நம்மைபற்றி வருகிறது. சென்னையில் சூரியனை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஏறிட்டு பார்ப்பவர்கள் எவ்வளவு சதவீதமிருப்பார்கள்? காகம் குருவி தவிர வேறு பறவைகளை குழந்தைகள் கண்டிருக்கிறார்களா? கதைகளையும் பாடல்களையும் நாம் மனதிலிருந்து மெல்ல அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை தொலைக்காட்சிக்கு தந்துவிட்டோம். குழந்தைகள் தொலைக்காட்சியில் தான் கதைகேட்டுவளர்கிறார்கள். இன்றைக்கும் ஒரு ஆய்வுப்பொருளாக மட்டும் ஆதிவாசிகள் மிஞ்சியிருப்பது தான் நமது துரதிருஷ்டம். யோசித்துப் பார்க்கும் போது புரிகிறது காணிகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று..


நாள் : 10/8/2004 2:57:25 PM

உலகமயம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்கம் இது. உலகமயமாக்கலும் அதன் சமூக, கலாச்சார விளைவுகளும் பற்றியது இக்கருத்தரங்கம். குறிப்பாக ஒவ்வொரு மொழியிலும் உலகமயமாக்கல் அங்குள்ள இலக்கியங்களில் எப்படி பிரதிபலிக்கபட்டிருக்கின்றது என்பதைக் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.

அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் , ஹிந்தி மொழிகளை சேர்ந்த 35 படைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மதியம் சிறுகதை அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். இன்று காலை நடைபெற்ற சமகால இலக்கியம் பற்றிய அமர்வில் உரையாற்றினேன். கருத்தரங்கில்
* பிரபஞ்சன்,
* ஜெயகாந்தன்,
* சா.கந்தசாமி
* அசோகமித்ரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகமயமாக்கல் பற்றி தமிழில் அதிகம் நு¡ல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக படைப்பிலக்கியத்தில் அது குறித்த தீவிரமான பார்வைகள் உருவாகவில்லை. நான் உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் குறித்து எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் மொழி கல்வபிப்புலங்கள் மற்றும் தொடர்பு சாதனத்திலிருந்து மெல்ல விலக்கபட்டு வருவதையும் தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் துறைகள் புறக்கணிக்கபடுவதையும் பற்றி எடுத்துரைத்தேன்.

பிரபஞ்சன் ந.பிச்சமூர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கவிதையில் உலகமயமாக்கல் பற்றி மிக விளக்கமாகச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து தமிழில் உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிய நு¡ல்களை வெளியிட்டுவருகிறார்கள். அது போலவே பிரளயன் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறார். உலகமயமாக்கலின் போது உலகம் ஒரே கிராமமாகிவிடும் என்கிறார்கள். அது நிஜம். ஆனால் கிராமங்கள் உயிரோடு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் தீவிரமாக இப்பிரச்சனைகள் விவாதிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக வந்த எழுத்தாளர்கள் வாசித்த கட்டுரைகளில் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

இந்த நாட்டுப்புறப்பாடல் உலகமயமாக்கல் என்பது காலனியாக்குவதிலிருந்து துவங்குகிறது என்பதையே காட்டுகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் புதிய விவாதங்களை உருவாக்கியதோடு பரஸ்பரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு பகிர்ந்து கொள்ளலை உருவாக்கியது. ஹிந்தியில் சமகால தமிழ்சிறுகதை தொகுப்பு ஒன்றை தொகுக்கும் திட்டம் ஒன்றும் இங்கு முடிவு செய்யபட்டுள்ளது.


கட்டபொம்மன் காடு

சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.

அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.

அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.

காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.

பாலாஜி: 10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.


Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan

June 3, 2012 2 comments

‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.

‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.

‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.

இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.

கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?


ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.

கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…


ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?


ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.

கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?


ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.

 

கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…


ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.

காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.

கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?


ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.

கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…


ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.

கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?


ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.

கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?


ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.

ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?

கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?


ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?


ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.

கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..


ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.

கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?


ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.

கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்

*****

மும்பையும் நானும்


மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.

நாஞ்சில்நாடன்

*****

கட்டுரை இலக்கியம்


நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.

நாஞ்சில்நாடன்

*****

பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்


நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.

ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

நாஞ்சில்நாடன்

Tamil Writer Charu Nivethitha Interview in Webulagam (archives – Nov 2000)

May 16, 2012 Leave a comment

சாரு நிவேதிதா

தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?

அப்போது எனக்குப் பதினான்கு வயது-ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டது. எனக்கு அந்தப் பெண் அபூர்வமாய்த் தோன்றினாள். உறவு தொடர்ந்தது. பிரபஞ்ச ரகசியங்களைப் போல் மர்மங்களையும் புதிர்களையும் கொண்டதாக இருந்தது அவள் உடல்.

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் காதலித்துக் கொள்ளவில்லை. உடலின் மர்மங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம். உடல் களியாட்ட வெறியென மாறியது. மனமும் சிந்தனையும் அற்றுப் போன சூன்யத்தின் பெரு வெடிப்பு அது. இருத்தலில் இருந்து சூன்யத்திற்குச் சென்ற நிகழ்வு அது.

பள்ளி இறுதி வகுப்பு வரும்போது நான் பள்ளிக்கூடம் செல்ல முடியாதவனானேன். காச நோய் கடுமையாக என்னைத் தாக்கியிருந்தது. தினமும் ஒன்று என 150 ஊசி போட்டார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான உணவு வகைகள் கொடுக்கப்பட்டன. இப்படியாக, போக இருந்த உயிர் காப்பாற்றப்பட்டது. “ஒரு வேளை செத்தே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த விசாரணை என்னை மரணம் பற்றிய ஆதாரமான கேள்விக்குள் தள்ளியது.

சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம் என்று எல்லா சமய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். ஆய்வுக் கட்டுரைகள் சமயப் பத்திரிகைகளில் பிரசுரமாயின, நிவேதிதா என்ற பெயரில்.

கேள்வி : உங்கள் தத்துவ விசாரணை அத்துடன் முடிந்ததா?

பதில் : இல்லை . . திருவண்ணாமலைப் பகுதி மலைகளில் திரிந்தேன். பல துறவிகளைச் சந்தித்தேன். ஒரு துறவியிடம் இருந்து ஹடயோகம் பயின்றேன். பிராணாயாமம், நௌலி போன்ற பயிற்சிகள் கற்றேன்.

சேஷாத்திரி சுவாமிகள், விவேகானந்தர், ரமணர், சுவாமி சிவானந்தா என்று பல ஞானிகளின் உபதேசங்களைக் கற்றேன். ரிஷிகேசம், இமயமலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்தேன்.

மக்கள் குளிராலும், பனியாலும், பட்டினியாலும் செத்து மடிவதைக் கண்டேன். வருடத்தில் ஆறு மாதங்கள் அதிகப் பனியால் மக்கள் வாழ்வை இழந்து படும் இன்னல்கள் என்னை மிகவும் பாதித்தது.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கதறிக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.

அதன் பின் ஒரு மார்க்சீயத் தோழரை சந்தித்தேன். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அவரே எனக்கு அறிமுகப் படுத்தினார். அதிலிருந்து மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாக மாறினேன். கிரேக்கத் தத்துவவாதிகளிலிருந்து துவங்கி, கீர்க்கேகார்ட், விட்ஜென்ஸ்டைன், ஹைடேக்கர், சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ வரை வந்தேன். இன்றளவும் ஒரு மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாகவே இருந்து வருகிறேன் . . .

கேள்வி : அப்படி என்றால், தற்போது நீங்கள் மார்க்சீயர் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில் : சார்த்தர் ஒரு முறை சொன்னார்-Marxism is the only unsurpassable philosophy of our time என்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரீதா எழுதி வெளிவந்த Spectre of Marx  என்ற புத்தகம் கூட மார்க்சீயத்தை மிகவும் சாதகமான முறையிலேயே அணுகியிருப்பதாக அறிகிறேன்.

“பசியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முன்னால் எனது நாசியாவுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை” என்று சார்த்தர் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருபுறம் கலையும் இலக்கியமும் . . . மறுபுறம் பசியால் சாகும் குழந்தை . . . இரண்டுக்கும் நடுவே ஊடாடிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் குரூரம் என்னை ஒரு மனநோயாளியாக ஆக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எழுத்தைப் பற்றிக் கொள்கிறேன்.

கேள்வி : சிறு பத்திரிகைகளில் தீவிரமாக எழுத ஆரம்பித்தது எப்போது?

நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது “பிரக்ஞை” என்ற பத்திரிகையின் தீவிர வாசகனாக இருந்தேன். பிறகு சென்னை வந்த போது அதன் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களைச் சந்தித்தேன். வீராச்சாமி என்னை வெகுவாக ஈர்த்தார். ஆனாலும் நான் அப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.

1978 ல் தில்லி சென்றேன். கொல்லிப் பாவை, படிகள் போன்ற பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. படிகள் பத்திரிகை என்னை மிகவும் ஊக்குவித்தது. வெங்கட்சாமி நாதனுடன் ஏற்பட்ட நட்பு மறக்கவே முடியாதது. சுமார் இரண்டு வருட காலம் அவரோடு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது விவாதிக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான்.

அப்போது இலக்கிய வெளிவட்டம் என்ற ஒரு பத்திரிகை வந்தது. அதன் ஆசிரியர் நடராஜன் வத்தாயிருப்புக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தார். அதிலும் என்னுடைய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தன. நடராஜன் அப்போது கிழிந்த ஜாக்கெட்டுகளுக்கு ஒட்டுப் போடும் டைலராக வேலை பார்த்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

அவரிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் குடும்பம் என்ற அமைப்பினால் அமுங்கிப் போனவர்களில் அவரும் ஒருவராகப் போனது நமது துரதிர்ஷ்டம்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்”, “ஸீரோ டிகிரி” என்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன?

சார்த்தரையே மீண்டும் குறிப்பிட்ட விரும்புகிறேன். “ஒரு ஐரோப்பியனாக இருந்த என்னை மூன்றாம் உலகத்தை நோக்கித் திருப்பியவர் ஃப்ரான்ஃஸ் ஃபானன்” என்றார் சார்த்தர். Wretched of the Earth என்ற நூலை வாசித்திருப்பீர்கள். சேகுவாராவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் சார்த்தர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மாவோயிஸ்டுகளோடு மட்டுமே அவர் உரையாடி வந்தார். அதனால் தான் அவரால் அப்போது ஸ்ட்ரக்சுரலிசத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

இந்தப் பின்னணியில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவத்தைப் பாருங்கள். “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்” நாவலில் ஒரு வாசகம் வருகிறது. The main threat to existentialism is non-availability of good quality condoms” ” மார்க்சீயவாதிகள் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கிண்டலே அந்தத் தலைப்பு. ஒரு வேளை சுய கிண்டலாகவும் இருக்கலாம்.

Zero visibility என்பார்கள். பார்வையே தெரியாத பனி மூட்டம். பனி என்பது மரணம். பச்சையின் எதிர்முனை பனி. பச்சை துவக்கம். பனி முடிவு. பனி என்பது apocalypse. மகாபாரதம் apocalypse ல் முடிகிறது. One Hundred Years of Solityde  நாவலும் apocalypse இலேயே முடிகிறது. பனியைப் பற்றி யோசிக்கும் வேளையில் ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. லட்சக் கணக்கான பூத உடல்களை அப்புறப்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறார்கள் நாஜிகள். பனிப்பாறைகளாய் உறைந்து கிடக்கும் நதியில் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் நதியில் யூத உடல்களைப் போடுகிறார்கள்.

ஸீரோ டிகிரியில்-வாழ்வின் அவலத்தால் துரத்தப்பட்டு பனிப் பாலையில் தனித்து அலைகிறான் ஒருவன். அவன் சொர்க்கத்துக்கு செல்லவில்லை. நாம் பின் தொடரவில்லை. மார்க்கமேதும் விளங்கவில்லை. மஹிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் ரூபமென பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளிவிட்டு மண்டியிட்டுக் கதறுகிறான்.

கிரேக்கத் துன்பவியல் காவியங்களில் கேட்கும் “கோரஸ்” இது.

இது ஒரு விதமான விளக்கம். இதே போல் joy, celebration, laughter, estacy, frenzy, eroticism, parady, humour என்பதாகவும் “ஸீரோ டிகிரியை வாசிக்கலாம்.

It is a blend of Apollonian and Dionysian Characters.. இந்த விதத்தில் “ஸீரோ டிகிரி” யை ஒரு “நீட்ஷேவிய நாவல்” என்று சொல்லலாம்.

அதோடு, Nothingness என்பதற்கு எதிர்ப்புள்ளியிலிருந்து அந்த நாவல் உடலை மையப் படுத்துவதையும் ஒருவர் மிகச் சுலபமாக கண்டு கொள்ளமுடியும். உடல் Carnival ஆக மாறுகிறது. “எல்லா” அர்த்தங்களுக்கும் அறிவுக்கும் உடலே ஆதாரம். ஆரோக்கியமும் வலிமையும் முக்கியப் பண்புகளாக அங்கீகரிக்கப் பட வேண்டும்” என்று ஜாரதூஷ்ட்ராவில் நீட்ஷே எழுதுவதையும் இங்கே ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொரு இடத்தில் நீட்ஷே எழுதுகிறார் : “A mere disciplining of feelings and thoughts amounts to almost nothing . . . one must first persuade the body . . . It is decisire for the fate of peoples and humanity that one begins inculcating culture in the proper place-not in the ‘soul’ . . . the proper place is the body ; gestures, diet, physiology ; the rest will follow 

இங்கே நாம் தாவோவுக்கும், நீட்ஷேவுக்கும் உள்ள ஒற்றுமை-உடலை மையப்படுத்தும் ஜென் பௌத்தம்-ஜப்பானிய Martial arts-

நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஹடயோகம் எல்லாவற்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் “உன்னதம்” பத்திரிகையின் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் புதுவகை எழுத்து அல்லது நவீன எழுத்து என்று ஏதோ ஒரு அசட்டுத் தனமான தலைப்பு-தலைப்பு சரியாக நினைவில்லை-அந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்-ஈரோட்டில். முக்கியமான பேச்சாளரான எம்.டி.எம் வராததால்-பார்வையாளனாகச் சென்றிருந்த என்னை பேசுமாறு அழைத்தார் சித்தார்த்தன். நான் அப்போது, “நவீன எழுத்து என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்து விட்டு, வேட்டை பற்றியும், விதவிதமான சமையல் முறைகள் பற்றியும், மலையேற்றம், ஸ்கீயிங், பயணம் பற்றியும் பேசினேன். அந்தப் பேச்சைப் பற்றி உன்னதம் பத்திரிகையில் சித்தார்த்தன் குறிப்பிடும்போது

“நவீன எழுத்து பற்றிப் பேசுங்கள் என்றால் சமையல் பண்ணி சாப்பிடுவது பற்றிப் பேசினார் சாரு” என்று எழுதி என்னை ஒரு முட்டாளாகச் சித்தரிக்க முயன்றார்.

இவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு முதலில் நீட்ஷேவைப் பயில வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நேநோ என்று ஒரு கதைக்கு பெயர் வைத்திருக்கிறீர்களே?

Nine என்பதன் மூலவார்த்தை. ஒன்பது என்பது விளிம்பு. My preoccupation with numbers-Nine is mystical. It is a precipice. You will fall into an abyss-numberless-void-beginning of nothingness.. இங்கிருந்து தான் ஸீரோ டிகிரி துவங்குகிறது. But ‘Nano‘ is a story of procreation and mysteries of sexuality..

பனிவெளியில் முடியும் மரணத்துக்கும்-வாழ்வுக்கும் இடையிலான நாவல் ஸீரோ டிகிரி என்றால் நேநோ அதற்கு மாறாக ஸீரோ டிகிரி எங்கே முடிகிறதோ அங்கே துவங்குகிறது.

ஒன்பது என்பது முடிவின் துவக்கம். பாறை விளிம்பிலிருந்து பார்த்தால் அதல பாதாளம், எண்களைப் பற்றிய விஞ்ஞானத்தில் ஒன்பது அலளவiஉயட குணாம்சங்களைக் கொண்டது. வான வாஸ்திரத்தில் அது ரௌத்திரம், போர், mystical .

ஆனால் அதுவே ஜனனத்தின் குறியீடு. கருவியலைப் பயின்று கொண்டிருந்த போது அது எனக்குக் கிடைத்தது. Nano Seconds  என்று சொல்வார்கள். கலவியின் போது கருவணு கருமுட்டையை அடைய எடுத்துக் கொள்ளும் பாலம் சூயnடி ளநஉடினேள. ஒரு நொடியில் .000000009 அளவு அது. கருவணுவின் உருவமும் ஒன்பதை ஒத்திருக்கும்.

இவ்வளவு அற்புதமாக, அதிசயத்தைப் போல் உருவாகும் உயிர் எவ்வளவு சாதாரணமாக, அபத்தமாக அழிக்கப்படுகிறது என்ற துக்கத்தின் வெளிப்பாடே நேநோ சிறுகதை. ஜனனம்-மரணம்-வாழ்வின் குரூரம் பற்றிய கதை அது. ஒரே ஒரு கருவணு கருமுட்டையைச் சென்று அடைவதற்குள் லட்சக்கணக்கான கருவணுக்கள் சிதைவுறுகின்றன. அழிந்து போகின்றன. ஜனன கேந்திரத்திலேயே ஒரு பேரழிவு. பிறகு உயிரின் துளிர்ச்சி என்று இந்த வினை மாறி மாறிச் சென்று கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் நீட்ஷேவைப் படித்துக் கொண்டிருந்த போது “நேநோ”வுடன் இணைந்து போகும் ஒரு பகுதியைக் கண்டேன்.

What was it that the Hellene guaranteed himself by means of these mysteries, Eternal life. the eternal returen of life ; the future promised and hallowed in the past ; the triumphant. Yes to life beyond all death and change ; true life as the over-all continuation of life through procreation, through the mysteries of sexuality-For the Greeks the sexual symbol was therefore the venerable symbol par excellence, the real profundity in the whole of ancient piety. Every single element in the act of procreation, of pregnancy, and of birth aroused the highest and most solemn feelings. In the doctrine of the mysteries, pain is pronounced holy : the pangs of the woman giving birth hallows all pain. That there may be the eternal joy of creating that the will to life may eternally affirm itself, the agony of the woman giging birth must also be there eternally. All this is meant by the word Dionysuys . . .”

Twilight of the Idols என்ற புத்தகத்தில் What I owe to the Ancients என்ற கட்டுரையில் நீட்ஷே.

இப்படியாக, நேநோ சிறுகதை கிரேக்க புராணங்கள், கருவியல், தத்துவம், எண் கணிதம் என்று பல தளங்களில் விரியும் ஒன்று.

மௌனி மற்றும் புதுமைப் பித்தன் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நான் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்கிறேன். அங்கே நான் ஒரு எழுத்தாளன் என்று அறிய நேர்கிற பெண்கள், தாங்களும் கதை என்று எதையோ எழுதி-அநேகமாக அது மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை, அல்லது முதல் காதல் என்பதாக இருக்கும். கற்பனையே கலக்காத அச்சு அசல் உண்மைச் சம்பவங்கள். என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அழகான பெண்கள் என்றால் பொய் சொல்லி விடுவேன். அதை வைத்து மேற்கொண்டு பேசவும், பழகவும், எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா என்று மனம் கணக்குப் போடும்.

அந்த மாதிரிக் கதைகளின் தரத்தில் இருக்கிறது புதுமைப் பித்தன் கதைகள். அவருக்கு எழுதத் தெரியவில்லை. வாயிலேயே வைக்க வழங்காத சமையலைப் போல் இருக்கிறது அவர் கதைகள்

நான் ஒரு Connoisseur.. மிகத் தேர்ந்த சமையல்காரன், உலகின் அற்புதமான பதார்த்தமான அக்கார வடிசல் அதி ருசியாய் சமைப்பேன். ஓலன் போன்ற வழக்கொழிந்து போன உணவு வகைகளும் தெரியும். அதே போல் அசைவ உணவு வகையில் lobster, நியூசிலாந்திலிருந்து இங்கே இறக்குமதியாகும் ஒரு வகை மீன், trout மீன் என்று நூற்றுக்கணக்கான உணவு வகைகள்-பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உணவு வகைகள் எனக்கு அத்துப்படி, என் நண்பன் ஒருவன் என் சமையலைச் சாப்பிட்டு விட்டு ‘Creativity’ யின் உச்சம் இது. இதில் நூற்றில் ஒரு பங்கையாவது உன் எழுத்தில் காண்பிக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான். (அவனுக்கு என் எழுத்து பிடிக்காது)

சமையல் என்பது ஒரு கலை. ஆனால் அதை நாம் பெண்களுக்கென ஒதுக்கி விட்டதால் ஏதோ தினந்தோறும் மலம் கழிப்பது தான் வாழ்வின் ஆதாரமான கடமை என்பது போலவும், அந்த ஆதாரமான செயல் தடங்கல் ஏதும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதையோ தின்ன வேண்டும் என்பது போலவும் தான் சமையல் என்கிற கலை உருமாறியிருக்கிறது. பாவம் பெண்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் கை விரல்களாலேயே நிலக்கரியைச் சுரண்டுவார்களாம். நகங்கள் கிழிந்து குருதி ஓடும் தொழிலாளர்களின் அவலம் பற்றி அப்போதைய ரஷ்ய இலக்கியங்கள் சொல்லுகின்றன. அந்தத் தொழிலாளர்களின் நிலையில் இருக்கிறார்கள் நமது பெண்கள்.

——————

நாட்டுப் புறத்தானை ஒருவழியாக தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறான் இவன். அனால் என்ன துரதிர்ஷ்டம். அங்கேயும் வந்து “உங்களைத் தானுங்க . . .” என்கிறான் நாட்டுப் புறத்தான். சரி தொலையட்டுமென்று “உனக்காகத் தான் காத்திருந்தேன்” என்கிறான் இவன்.

“ஆமாங்க-தெரியுங்க-” என்று அவன் பின் தொடர்கிறான். இவன் அவனுடைய மூக்கை கவனிக்க அவன் “ஆமாங்க-என்னைப் பாத்தாலே மறுக்காதுங்க-என் மூக்குங்க-” என்கிறான்.

இப்படியாக “ஆமாங்க . . சரீங்க” என்றபடி உரையாடல் தொடர்கிறது. ஸில்க் ஷர்ட்காரன் நாட்டுப் புறத்தானை “டா” போட்டுப் பேசுகிறான். இதில் ஒரு குளறுபடி என்னவென்றால் அந்த நாட்டுப்புறத்தானும் பிராமண பாஷை பேசுவது தான். கவனியுங்கள்.

“அவங்க-ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்ட சொன்னாரு-கொடுத்தாரு-” நாட்டுப்புறத்தான் கதையின் போக்கில் “பட்டிக்காட்டான்” ஆகி விடுகிறான்.

“உங்களைப் பார்த்தே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக்காட்டான்.

கடைசியில் கதையின் ‘labyrinth’ என்னவென்றால் வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று நினைத்து அந்தப் “பட்டிக்காட்டான்” அதே அடையாளமுள்ள (சில்க் சட்டை, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம்) மற்றொருவனைப் பிடித்து விடுகிறான். எப்படி இந்தத் தவறு நேர்கிறதென்றால், அன்று சாயங்காலம் “ஜவஹர்” அவ்வூருக்கு வருகிற படியால் அய்யங்கார் சில்க் சட்டைக்கும், விசிறி மடிப்புக்கும் ரஜா கொடுத்து விட்டு ஜிப்பாவும் குல்லாவுமாக வந்து விட்டார். கதாநாயகனோ அன்று எதேச்சையாக சில்க் சட்டையும், விசிறி மடிப்புமாக வந்து விட்டான். கதையின் முத்தாய்ப்பைக் கவனியுங்கள் . . .

“தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில்-பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய் விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக , ஒன்றுமே புலப்படாமல் “பைத்தியக்காரத்தனம்” என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது”

இப்படி கதை எழுதுகிறவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

மௌனியையும், புதுமைப் பித்தனையும் Philistines என்கிறேன் நான்.

ஆனால் என்னுடைய முக்கியக் குற்றச்சாட்டு இது இல்ல. அவர்கள் எழுதிய கதைகள் குப்பைக் கூடைக்குப் போயிருக்க வேண்டியவை-இலக்கியமாகத் தேறாதவை என்பது தான்.

பாரதி அப்படி அல்ல.

தலித்துகளைப் பற்றி அவர் எழுதிய “ஆறில் ஒரு பங்கு” என்ற கதை சர்வதேசத்தரம் வாய்ந்தது அல்ல எனினும் அவர் கவிதைகள் பல உலக கவிதைகளுக்கு நிகரானவை. மேலும் அவர் கவிஞர் மட்டுமல்ல. பத்திரிகையாளர். விடுதலைப் போரளி. சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களையும் செழுமைப் படுத்தியவர். மிகப் பெரிய கலகக் காரர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத Dionysian Spirit ஐ என்னால் பாரதியின் எழுத்தில் மட்டுமே காண முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அவரை மாயாவாதக் கவிஞர் என்று குறுக்குவது வறட்டுத் தனம். பாரதி கஞ்சா உட்கொண்டது உட்பட அவரது வாழ்வும் எழுத்தும் Unique ஆனவை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காதவை.

சிறு பத்திரிகை தளத்தில் தாஸ்தாவ்ஸ்கி கொண்டாடப் பட்ட அளவுக்கு டால்ஸ்டாய் கொண்டாடப் படவில்லை. உங்கள் இலக்கிய மதிப்பீட்டின் படி டால்ஸ்டாய் தானே உங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்-என்பது சரியா?

என்னைக் கிண்டல் செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி என்றே இதைப் புரிந்து கொள்கிறேன். டால்ஸ்டாய் ஒரு நீதிமான். உய்விப்பவர். மன்னிப்பு வழங்குபவர். புத்துயிர்ப்பு அளித்து பரலோக சாம்ராஜ்யத்துக்கு இட்டுச் செல்பவர்.

கிறித்தவம் குறித்து நீட்ஷே எழுதியவற்றை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் தாஸ்தாவ்ஸ்கி குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர். சூதாடி. சைபீரிய சிறைச்சாலைகளில் இருந்தவர். நோயாளி. பதிப்பகத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியாமல் வழக்குகளைச் சந்தித்தவர். அப்படி ஒரு முறை அவரது நரம்பு வியாதியின் காரணமாக குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியவில்லை. பதிப்பகத்தார் கடைசித் தவணையாக ஒரு தேதியைக் குறிக்கிறார். கடும் குளிர். உடல் உபாதை. கொடிய வறுமை. நரம்புத் தளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. பேனாவைத் தொடவே முடியவில்லை. மீண்டும் சைபீரியாவா என்று பதறுகிறார். அப்போது அவரிடம் ளுஉசiநெ ஆக வந்து சேர்கிறாள் அன்னா என்ற இளம் பெண்.

தாஸ்தாவ்ஸ்கியின் கதை சொல்லும் வேகம், அவரது passion, உக்கிரம், வெறி எல்லாம் சேர்ந்து அவள் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள், அவரது மரணம் வரை உற்ற துணையாகவும் காதலியாகவும் இருக்கிறாள்.

தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போன்றது. குற்றவாளிகளின் உலகம் அது. ஒரு பத்தாண்டுக் காலம் நான் தாஸ்தாவ்ஸ்கியின் உலகத்தில் வாழ்ந்தேன் என்று சொல்லாம். எனது எழுத்தியக்கத்தின் எக்ஸிஸ்டெஷியலிச கால கட்டம் அது.

பின்னர் லெவி ஸ்ட்ராஸ், ரொலான் பார்த், ஃபூக்கோ என்று ஸ்ட்ரக்சுரலிசத்தின் பக்கம் நகர்ந்த போது போர்ஹேஸ், நபகோவ் போன்றவர்களைக் கண்டடைந்தேன். தாஸ்தாவ்ஸ்கியை விட நபகோவ் இப்போது எனக்கு மிகுந்த நெருக்கமானவராக இருக்கிறார். விளக்கங்கள் இல்லாத-புதிர்களும் மர்மங்களும் நிறைந்த உலகம் அது. பதிமூன்று வயதுப் பெண்ணின் மேல் ஐம்பது வயதுக்காரனுக்கு எப்படிக் காதல் ஏற்படும்?

Lolita வில் விளக்கங்கள் இல்லை.  It just happens..

நபகோவ் தாஸ்தாவ்ஸ்கியை நிராகரிக்கிறார். “அவர் ஒரு க்ரைம் ரைட்டர் . . . தினசரிகளில் க்ரைம் நியூஸ் படித்து எழுதுகிறவர்’ என்கிறார் நபகோவ். தாஸ்தாவ்ஸ்கிக்கு தினசரிகளைப் படிப்பது பெரிதும் விருப்பமான விஷயம் என்றாலும் அவரது எழுத்தை நான் அப்படி நிராகரிக்க மாட்டேன். மேலும் ஒரு சுவாரசியமான தகவல்-நபகோவ் ஒரு வண்ணத்துப் பூச்சி சேகரிப்பாளர். உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக் கழகங்களில் நபகோவின் வண்ணத்துப் பூச்சி ஆய்வுகள் பாடத் திட்டத்தில் உள்ளன. “நான் இலக்கியத்தில் சாதித்ததை விட வண்ணத்துப் பூச்சி ஆய்வில் சில பெருமைக்குரிய சாதனைகளைச் செய்திருக்கிறேன்” என்கிறார் நபகோவ். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பெரும் சாகசங்களைக் கொண்டவை. சுவாரசியமானவை. இலக்கியம் தவிர வேறு துறைகளையும் நலம் பயில வேண்டியுள்ளது. ஆனால் இலக்கியமே தயிர்வடையாக இருக்கும் தமிழ்ச் சூழலில் என்னுடைய எதிர்பார்ப்பு அதிகபட்சமானது தான்!
எந்த ஒரு கலைஞனும் தன்னுடைய காலத்திற்கு உணர்வுள்ளவனாக ஏன் இருக்க வேண்டும்? துசுசு டோல்க்கீன் போன்றவர்கள் கற்பனையின் உச்சத்தில் தானே சிறந்த எழுத்தாளராகிறார்? ஒரு political allegrory யைக் கூட அவர் மறுத்தார் என நான் படித்திருக்கிறன்.

ஒரு எழுத்தாளர் அரசியல் பிரக்ஞை கொண்டவராக இருந்தாக வேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல. கட்டாயம் அல்ல. போர்ஹேஸுக்கு அரசியல் தெரியாது. தென்னமெரிக்காவின் கொந்தளிப்பான, புரட்சிகரமான அரசியல் சூழலிலிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டவர். இடது சாரி எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியவர். அவருக்கும் ஹுலியோ கொர்த்தஸாருக்கும் நடந்த கடும் விவாதங்களுமே கொர்த்தஸாரைப் போல், மார்க்வெஸைப் போல்அரசியல் பிரக்ஞை கொண்டவர்களகாக இருக்க வேண்டும் என்று நலம் நிர்ப்பந்திக்க முடியாது.

இன்னும் ஒரு வேடிகக்கை என்னவென்றால், மாரியோ வார்காஸ் லோஸா-தென்னமெரிக்காவின் மிகச் சிறந்த கதை சொல்லியான அவர் பெரூவில் பயங்கரவாத அரசின் பக்கம் நின்றவர், புரட்சியாளர்களை எதிர்த்தவர். சில காலம் ஃபாஸிஸ அரசின் ஜனாதிபதியாக இருந்தவர்.

ஆனால் அவருடைய Real Life of Alejandro Majtaவை நீங்கள் படித்தால் நீங்களே புரட்சியாளராக மாறி விடுவீர்கள். ஊடிnஎநசளயவiடிளே in Conversations in the Cathedral  -நாவலில் பெரூவின் அவலத்தை-ஒரு தேசமே குப்பைத் தொட்டியாகக் கிடப்பதை-பெரூவின் கொடூரமான-ரத்தக் கறை படிந்த அரசியலை எவ்வளவு வலுவாக எழுதிருக்கிறார்! முழுக்கவும் இந்திய நிலைமைக்குப் பொருந்தி வருகிற ஒரு நாவல் அது. தெருவில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அடித்தே கொல்லும் அந்த முனிசிபாலிட்டி ஊழியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

லோசாவினால் இது எப்படி சாத்தியமாகிறது? கூடு விட்டுக் கூடு பாய்கிறான் லோஸா. அலெஜாந்த்ரோ மாய்த்தா என்ற புரட்சியாளனாக-முனிசிபாலிட்டி ஊழியனாக-ரேடியோ நாடக சீரியல் எழுதும் கதை வசன கர்த்தாவாக-புரட்சிகரப் பாதிரியாக-இன்னும் நூற்றுக்கணக்கான பாத்திரங்களாக மாறுகிறான் லோஸா. இதைத் தான் Travelling into the other என்கிறேன். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கோ other என்பதே இல்லை,

இங்கே தான் வாசிப்பு என்ற செயல்பாடும் வருகிறது. போர்ஹேஸின் வாசிப்பு எப்படிப்பட்டது? அவர் ஒரு நடமாடும் நூலகம் என்பார்கள். இந்தியச் சமூகத்தைப் பற்றி ஒரு பத்து புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வதை விட போர்ஹேஸின் “கூhந றயல வடி ஹட-ஆரவயளiஅ” என்ற ஒரே ஒரு சிறுகதையின் மூலம் நலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். வரலாறு, மானுடவியல், மொழியியல், அமைப்பியல் வாதம் போன்ற பல துறைகளில் அறிஞர்களில் கண்டு பிடித்த ஆய்வு முடிவுகளை போர்ஹேஸ் வெகு எளிதாக தனது கதைகளினூடே கண்டடைகிறார். போர் ஹேஸுக்கு அமைப்பியல்வாதம் தெரியாது என்றாலும் கூட அமைப்பியல்வாதிகள் எதிர் கொண்ட பல புதிர்களை போர்ஸேஸின் எழுத்து விடுவிக்கிறது.

மண்ணில் ஆழமாக ஒரு துளையிட்டால் நீர் பீறிட்டு அடிக்கும். ஆழம் எவ்வளவு போகிறதோ அவ்வளவு வீர்யமாகவும் உக்கிரமாகவும் இருக்கும் நீரூற்றின் வேகம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கிய வெளிவட்டத்தில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் நீட்ஷே இந்த உதாரணத்தைக் கொடுத்திருப்பதைப் படித்தேன்.

நான் டோல்க்கீனை இன்னமும் படித்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இவரது எழுத்தை தர்மு சிவராமு எனக்கு அறிமுகப்படுதினார். இதே போல் கார்லோஸ் காஸ்டனாடாவைப் படிக்க வேண்டுமென ஒரு நண்பர் சிபாரிசு செய்கிறார். இதோடு, நானே தெரிவு செய்து சிலரை இன்னமும் படிக்காமல் வைத்திருக்கிறேன். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு வேளை டோல்க்கினின் நீரூற்று வெகு உக்கிரமானதாக இருக்கலாம்.

இரண்டு விதமான செயல்பாடு-ஒன்று-அரசியல் போராட்டம் பற்றிய பிரக்ஞை. இரண்டு-துறவு மனப்பான்மையுடன் செயல்படுவது-தத்துவத் தேடல்-இது போன்று, கலைஞனின் செயல்பாட்டை இப்படி இரண்டு எல்லைகளுக்குள் குறுக்க முடியுமா?

இந்த விஷயத்தை வேறொரு விதமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறோம். தென்னமெரிக்காவிலம், இன்னும் உலகின் பல்வேறு மூலைகளிலும், அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களுக்கெல்லாம் சேகுவாராவின் பெயர் ஒரு குறியீடாகவே மாறியிருக்கிறது. இதே போல் Richard Feynmann, Stephen Hawking  போன்றவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளவை அதிகம்.

ஆக, கலைஞன் என்று தனியாக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களை விட பெரியாரின் பங்களிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
பயணம் பற்றி கூறினீர்கள், நீங்கள் சொல்லும் பெரியாருக்கு என்ன பயணம் இருக்கிறது? உங்களுடைய இலக்கிய / அரசியல் கொள்கையில் பெரியாரின் இடம் என்ன?

இரண்டு விதமான பயணங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இருக்கிறார். நரசிம்மன் என்பது பெயர். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனது வட இந்தியப் பயணங்களில் அவரே எனது வழிகாட்டி. என்னோடு உடன் வராவிட்டாலும் ஒவ்வொரு இடமாக எனக்கு சொல்லித் தருவார். இமாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் ரோத்தங் பாஸுக்கு எப்படிப் போக வேண்டும்-தேசிய நெடுஞ்சாலை எண் : 1 என்ற அந்தச் சாலையின் அகலம் எவ்வளவு-அங்கிருந்து எப்படி எப்படிச் சுற்றி இந்தியாவின் மற்றொரு எல்லைப் புற மாவட்டமான லஹோல் ஸ்பிட்டிக்கு வர வேண்டும்-எவ்வளவு காலம் ஆகும்-அங்கே இருக்கும் பனிக் குகைகள்-வளைவுகள்-இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் பெயர்-அவரைச் சந்தித்தால் என்னென்ன சாதகங்கள்-என்று மணிக்கணக்கில் சொல்லுவார். இமயமலைப் பிராந்தியத்தில்-அவர் கால் படாத இடமே இல்லை என்பது என்னுடைய எண்ணம். ரிஷிகேஷ் பற்றிச் சொல்லுவார். காசியிலுள்ள அத்தனை இடங்களும், சந்து பொந்துகளும் படித்துறைகளும் அவருக்கு அத்துப்படி. காசியில் சுடுகாட்டுப் பொறுப்பாளராக இருக்கும் ஹரிசிங்-அங்கே கங்கைக் கரையில் மரணத்துக்காகக் காத்திருக்கும் முதுமையின் விளிம்பில் நிற்கும் ஆண்கள், பெண்கள்-என்று ஏராளமாகச் சொல்லுவார். போய்ப் பார்த்தால், எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் தான் தெரிந்தது-அவர் சென்னைக்கு வடக்கே சென்றதே இல்லை என்று.

போர்ஹேஸும் அதிகம் பயணங்கள் செய்ததில்லை. இந்தியாவுக்கு அவர் வந்ததே இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் நிபுணர். காரணம்-வாசிப்பே அவரது பயணமாக இருந்தது.

பெரியாரும் அப்படியே. உலகம் பூராவையும் சுற்றுவதை விட அதிக அளவு தமிழ்நாட்டில் சுற்றியவர் அவர்.

இலக்கியவாதிகளுக்கு அரசியல் பிரக்ஞை தேவை? அரசியல்வாதிகளுக்கு-பெரியார் போன்றவர்களுக்கு இலக்கியம் தேவையில்லையா? எழுத்தாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?

பெரியாருக்கு பியானோ வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மைக்ரோ பயாலஜியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு மலையேற்றம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? பெரியாரின் துறை வேறு. அதில் அவர் ஒரு சாதனையாளர். அவர் சிந்தித்த பல விஷயங்கள் அவரது காலத்திற்கு மிகவும் முன்னால் சென்றவை. Some people are born posthumously என்பார் நீட்ஷே. இது நீட்ஷேவுக்கே மிகவும் பொருந்தும் என்று சொல்லுவார்கள். இது பெரியாருக்கும் பொருந்தும். அவரது சிந்தனைகள் அவரது இறப்புக்குப் பின்னும் புதிதாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான சொற்களைப் பேசியவராக அவர் இருக்கக் கூடும். ஒரு நாளில் ஐந்து கட்டங்கள். இப்படியே ஐம்பது ஆண்டுகள். மலைப்பாக இருக்கிறது.

மூத்திரம் போவதற்கான டியூபைப் பிடித்துக் கொண்டு ஊர் ஊராக கலைந்த அந்தப் பெரியவர் ஒரு நாவலின் முக்கியப் பாத்திரமாகவே எனக்குள் கற்பிதங் கொண்டிருக்கிறார். பெரியாரின் இயக்கத்தை இலக்கியத்துக்குள் கடத்துவதே எனது எழுத்தின் அடிப்படை என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாகக் குறுக்க முடியுமா? முடியாது. வில்லியம் பர்ரோஸுக்கும் பெரியாரின் நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. பெரியார் வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆலன் கின்ஸ்பெர்கின் நிர்வாணப்படம் நமக்குத் தெரியும். க்ஷநயவ றசவைநசள என்று அழைக்கப்பட்ட-பின்னாளில் ஹிப்பி இயக்கத்துக்கு முன்னோடியாகவும் உந்து சக்தியாகவும் இருந்த-வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக் போன்ற எழுத்தாளர்களின் கலக இயக்கத்தோடு பெரியாரின் வாழ்வும், எழுத்தும், பேச்சும் இணைத்துப் பார்க்கத்தக்கது. எழுத்தாளர்கள் தங்கள் தேசம், மதம், ஜாதி போன்றவற்றுக்கு விசுவாசிகளாக இருந்த வேளையில் பெரியார் ஒருவர் தான் தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்ற மூன்றையும் ஒருவர் துறக்க வேண்டும் என்று சொன்னார்.

How can a literary person possess anything?? இந்த விதத்தில் பெரியாரை ஒரு literary phenomenon என்று சொல்லுவேன்.

இதற்கும் மேலாக, நீட்ஷேவுக்கும் பெரியாரின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது விரிவான ஆய்வுக்குரியது என்பதால் பிறகு இது பற்றிப் பேசுவேன்.
நீங்கள் கூறும் இலக்கிய அளவுகோல்களின் படி சுந்தர ராமசாமியின் பள்ளம், கி.ராஜநாராயணனின் கதவு போன்று இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, நீங்கள் தமிழ் எழுத்தை வறட்சியாகப் பார்ப்பது ஏன்?

நீங்கள் இப்படி இரண்டு கதைகளைக் குறிப்பிட்டால் நான் என் பங்குக்கு இரண்டு கதைகளைக் குறிப்பிடுவேன். ஏற்கனவே சொன்ன எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை. லா.ச.ராவின் வேண்டப்படாதவன். இப்படியே ஒரு பட்டியல் போட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளின் முக்கியமான கதைகள் என்று ஒரு முப்பது தேறுமா? போனால் போகிறதென்று மௌனிக்கு ஒரு கதை, புதுமைப் பித்தனுக்கு ஒரு கதை என்று கொடுத்தால் கூட முப்பது தேறுமா என்பது சந்தேகம். சரி, ஒரு பேச்சுக்கு-முப்பது கதைகள் தேறுகின்றன என்று வைத்துக் கொண்டால்-இது ஒரு மொழிக்கு வெட்கக் கேடான விஷயம் இல்லையா?

நான் குறைந்த பட்சம் பதினைந்து உலகச் சிறுகதைகளையேனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கடல்கன்னி என்று ஒரு கதை. இதற்கு இணையான ஒரே ஒரு தமிழ்க் கதையை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கொர்த்தஸாரின் ‘சந்திப்பு’ என்று ஒரு கதை. ரத்த வேட்கை-என்று ஒரு Sadean கதை. மொழியில் பலவித சோதனைகளைச் செய்து பார்க்கும் ரொனால்ட் சுகேனிக்கின் ஒரு சிறு கதை. ‘மழை’ என்ற மேஜிகல் ரியலிசக் கதை.

இங்கே தமிழில் பிரச்சனை என்னவென்றால்-இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது Apollonian Character. பொருள்?  Individual as seperate from the rest of reality.. எனவே Individual தனிமைப் பட்டுப் போகிறார்.

இங்கே Dionysian spirit  இல்லை. Chorus இல்லை. நாம் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதனால் Joy இல்லை-pleasure of the text இல்லை-Carnival  இல்லை-immediacy  இல்லை-sorrow  இல்லை-தமிழ் வாழ்வின் துக்கமும் சந்தோஷமும் கொண்டாட்டமும் கோரஸாக மாறவில்லை.

இதுவே தமிழ் இலக்கியத்தின் குறைபாடு, தயிர்வடை sensibility  என்று சொன்னதற்கு விளக்கம் கேட்டவர்கள் இப்போது நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர் கொள்ள வேண்டும்.

தலித்தியம், பெண்ணியம்-இதை பிரதிநிதித்துவப் படுத்துவது தான் இலக்கியத்தின் அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டுமா?

இலக்கியத்துக்கு இலக்கியம் என்பதைத் தவிர வேறு எவ்வித முன் நிபந்தனைகளும் கிடையாது. ஆனால் தலித்துகள், பெண்கள் என்ற பகுதிகளிலிநது தமிழில் பதிவுகளே இல்லை. அதனால் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. Apologia  வை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ‘நான் ஒரு தலித்-அதனால் முப்பது ரன்கள் எடுத்து விட்டால் அது செஞ்சுரி’ என்று சொன்னால் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய ஒவ்வொரு 4 ஐயும் ‘வெள்ளை இன-வெறிக்கு எதிரான அடி’ என்று கூறினான்.

ஆனால் இங்கோ அச்சு பிச்சு என்று உளறி வைத்து விட்டு தலித் இயக்கம் என்கிறார்கள். இதற்கு உதாரணம் இமயம். அவர் எழுத்து எனக்குSanctum Sanctorum  ஐயே நினைவு படுத்துகிறது. அவர் எழுத்தில்”புனிதப் புளிப்பு” தாங்க முடியவில்லை. க்ரியா ராம கிருஷ்ணன் போன்றவர்கள் இந்தப் புனிதங்களை தூக்கி விடுவதன் அரசியலும் இதனால் தான்.

வேறு சிலர் வெறும் கோபதாபங்களையும், ஏச்சுகளையும், வகைகளையும் எழுதி தலித் எழுத்து என்கிறார்கள். தான் ஒரு தலித் என்பதனாலேயே தான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒரு இசைக் கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப் போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?

ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்குச் சென்று வருவதற்கு எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவே தான் எழுத்துக்கும்.

மலும், தலித், பெண் என்றெல்லாம் இனிமேல் ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால்-ஒரு மேட்டுக்குடி பிராமணப் பெண்ணை விட ஒரு தலித் ஆண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறான். ஒரு தலித் ஆணை விட தலித் பெண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறாள். ஒரு தலித் பெண்ணை விட ஒரு ஏழை பிராமணப் பெண் பாலியல் ரீதியாக அதிக ஒடுக்கு முறைக்கு ஆளாகிறாள். இவர்கள் எல்லோரையும் விட அலிகளின் நிலைமை மிகவும் அவசியமானது. இன்னும் நிறைய விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். சிறு குற்றவாளிகள்-நாடோடிகள்-செக்ஸ் தொழிலாளிகள்-ஹோமோ செக்ஷுவல்கள்-அனாதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள்-பிச்சைக்காரர்கள் என்று இவர்கள் எழுதினால் அந்த எழுத்தையும் தலித்தியம் என்று சொல்ல முடியுமா?

எந்த எழுத்துமே Universalise  ஆக மாற வேண்டும். Mediocrity  க்கு இலக்கியத்தில் மன்னிப்பே கிடையாது.

எதார்த்தவாதம் பிரதிநிதித்துவம் செய்யும் பொது மனிதனின் அக / புறப் பிரச்சனைகளை பேசிய காலம் போக, சாதி-குலக் குறி நோக்கிச் செல்லும் போக்கு, தனித்த அடையாளக் கூட்டமைப்பு போன்றவைகளைப் பெருக்கும் நிலை ஆரோக்யிமானதா?

இன்றைய நிலையில் பெரியாரையே நாம் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன அரசியல் போக்குகளின் செல்வாக்கையே தமிழ் எழுத்திலும் காண முடிகிறது. வெகு ஜனத் தளத்தில் சாதிச் சங்கம் என்றால் இலக்கியத்தில் சாதீய இலக்கியம். சுய இரக்கம், மத்திய தர வர்க்க மதிப்பீடுகள், தாங்களே அதிக பட்சம் ஒடுக்கப்பட்டதான கற்பிதங்கள், ஜாதி அபிமானம் போன்றவை இவ்வகை எழுத்துக்களின் அடையாளங்கள். இந்த வகையில் தமிழ் எழுத்து இன மைய வாதத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது.

தனது அடையாளத்தைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த அடையாளத்தை transcend செய்ய வேண்டும்.

வில்லியம் பர்ரோஸ்-அமெரிக்க ராணுவத்தின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக தன்னை / தனது உடலை தகுதியில்லாததாக ஆக்கிக் கொள்வதற்காக போதை ஊசிகளை தனது உடலில் ஏற்றிக் கொண்டான். அப்போது அவன் குறிப்பிட்டான்-நான் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு (போதை) ஊசியும் அமெரிக்க ராணுவம் வியத்நாமில் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிரானது. அவனது  Naked Lunch   போன்ற நாவல்களும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை தாண்டிச் செல்லக் கூடியது. தமிழ் இலக்கியம் உலகத்தரமான எழுத்தை உருவாக்க முடியாததன் காரணம்-இந்த transcendence  இங்கே நடக்கவில்லை என்பது தான்.

நன்றி !

சந்திப்பு : ஆர்.முத்துக்குமார்
வெப்உலகம்.காம்

Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

May 13, 2012 1 comment

தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து…

கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?

ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே ‘பெரியார் இல்லம்’ என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு

எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.

எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.

கே: உங்களது முதல் கதை குறித்து…


ப: என்னுடைய முதல் கதை ‘கபாடபுரம்’. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை ‘பழைய தண்டவாளம்’. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.

கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?


ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.

கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.

கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் ‘ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது’ என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.

சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.

எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.

கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!


ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.

கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?


ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?

கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!


ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது ‘மாங்கா’ மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.

இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.

கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?


ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.

(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்….)

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****

எனது பயணங்கள்


பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது – இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

*****

நானும் ரஷ்ய இலக்கியமும்


நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்

கே: இலக்கியத்தின், எழுத்தாளரின் பணி எதுவென்று நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தாளன் புதியவற்றைப் படைப்பது ஒருபுறம் என்றாலும், நிறைய நினைவுபடுத்துவதும், கவனமூட்டுவதும், தவறவிடும்போது சுட்டிக்காட்டுவதும் அவனது முக்கியமான பணிகள் என்று கருதுகிறேன். என்னதான் அறம், நீதி போன்றவற்றைச் சொல்லும் பல நூல்கள் நமக்கு இருந்தாலும், அந்த அறக்கோட்பாடுகளை தனிநபர்கள் பின்பற்றவேயில்லை. இன்றைய சகல பிரச்சனைகளுக்கும் காரணம், நமது சுயநலமே. அது தான் இயற்கையை விட்டு நம்மை பிரித்து வைத்து இயற்கையை அழித்து விற்பனை பொருளாக்கி வைத்திருக்கிறது. ஜன்னல் இல்லாத வீடுகளில், வெளிச்சம் வராத இல்லங்களில், இயற்கையின் குரலைக் கேட்க முடியாத சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஒரு பகுதியான நாம், அதைத் துண்டித்துக் கொண்டு வாழ முற்படும்போது மன நெருக்கடிகள் உண்டாகின்றன. அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி கூட நமக்கில்லை. இதையே என் படைப்புகளில் சுட்டிக் காட்டுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஒரு போதும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைத்தது. விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது பாவம் என்று கருதப்பட்டது ஆனால் இன்று? பாக்கெட்டில் பாட்டிலில் மட்டும் தான் குடிநீர் கிடைக்கிறது, இப்படி எளிமையாக கிடைத்த இயற்கையின செல்வங்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது, இதற்கு நாம் காரணமில்லை என்று நினைக்கிறோம். இலக்கியத்தின் பணி இதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மனிதனுடைய அன்றாடப் பிரச்சனைகளை, பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியமல்ல. அதையும் தாண்டி அவன் பின்பற்ற வேண்டிய அறத்தை, மறந்து போன விழுமியங்களை, கவனிக்க மறந்த சுற்றுச் சூழலை, சுட்டிக் காட்டுவதும் இலக்கியத்தின் பணிதான்.

கே: இன்றைய பதிப்புச் சூழல் எப்படி இருக்கிறது?


ப: சமீபமாக புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். புத்தகமும் ஒரு வணிகச் சந்தைப் பொருளாகி விட்டது, அதனால் எது நல்ல புத்தகம் என்று தேர்வு செய்வது சிரமமானதாக இருக்கிறது. புத்தகச் சந்தை விரிவடைவதால் நிறைய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 300 புதிய தமிழ் புத்தகங்களாவது வருகின்றன. அவற்றில் எண்பது சதவீதம் குப்பை. இன்று ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிக்கத் தயாராக இல்லை, பதிப்புத் துறையில் இன்றும முறையான எடிட்டர்கள் கிடையாது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் போது உரிமை வாங்குவதில்லை. மூல எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் கூட கிடையாது, ராயல்டி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலோருக்கு அது கிடைப்பதே இல்லை. ராயல்டி தொகையை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு தரப்படும் ராயல்டியை வைத்து ஒரு பேண்ட் சர்ட் கூட வாங்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் புத்தகத்தின் எண்ணிக்கை ஐந்தாயிரம்தான். அதுதான் இலக்கிய சாதனை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய பதிப்பு சூழல்.

கே: எழுத்தாளர்களிடையே காணப்படும் சர்ச்சைகள், சச்சரவுகளுக்கு என்ன காரணம்?


ப: விஞ்ஞானத்தில், அரசியலில், சமூகத் தளத்தில் இல்லாத சர்ச்சைகளா? எல்லாத் துறைகளிலுமே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது பதவி, அதிகாரம் மற்றும் பொறாமையால் உருவாகக் கூடியது. இலக்கிய சர்ச்சைகளின் நோக்கம் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்கள், ரசனை வேறுபாடுகளால் உருவாகிறது. ஒருவருக்கு சார்த்த்ரை பிடிக்கிறது; மற்றவருக்கு திருக்குறளைப் பிடிக்கிறது, அந்த ரசனை மாறுபாடு இரண்டு கருத்துருவங்களை உருவாக்கிவிடுகிறது.

இன்னொரு தளம் எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே உருவாகும் சண்டை. இதுவும் அபிப்ராய பேதம்தான், மற்றபடி எழுத்தாளர்களும் சராசரி மனிதர்களே. அவர்களின் உணர்ச்சிவேகமும் கோபமும் சண்டைகளை உருவாக்கவே செய்யும். ஆனால் அது முற்றி ஒருபோதும் பகையாவதில்லை. எதிர்துருவங்களாக உள்ள எழுத்தாளர்கள் கூட எளிதாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சூழல் இருக்கவே செய்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு ‘ஈகோ’ இருக்கும். அது மற்றவர்களிடம் காணப்படுவதை விட மேம்பட்ட ஈகோவாக இருக்கும். அதனால் எழுத்தாளர்கள் எதிலுமே உணர்ச்சி வசப்பட்டுச் சட்டென்று கருத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யாரும் வன்முறையைக் கைக்கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில்லை. கோபத்தில் படபடவென எழுதிவிடுகிறார்கள். அதோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால். பிற துறைகளில் அப்படி இல்லை. அந்தப் பகைமை ஒருவனை ஒன்றுமே இல்லாமல்கூட ஆக்கிவிடுகிறது. எழுத்துத் துறையில் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?


ப: விருதும் சர்சையும் உடன்பிறந்தவை. காரணம் எந்த ஒரு சிறந்த எழுத்தாளர் பரிசு பெறும்போதும் யாரோ ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படவே செய்வார். அத்தோடு விருது பெற்றவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளரா என்ற கோபம் உருவாகவே செய்யும். டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் என்ன சாதாரண எழுத்தாளரா?

வாசகன் எழுத்தாளனுக்கு எப்போதும் மானசீகமான விருதுகளைத் தந்து கொண்டேதானிருக்கிறான். அது ஒரு கைகுலுக்கலாகவோ, ஒரு தேநீரை வாங்கி தருவதாகவோ, ஒரு பேனா பரிசளிப்பதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தப் பரிசு உயர்வானது.

ஒருமுறை பழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அடிவாரத்தில் இட்லிக் கடை வைத்திருக்கும் ஒரு அம்மா என்னைப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தானே!” என்றார். “ஆமாம்” என்றேன். “என் பையன் உங்க புத்தகத்தைப் படிப்பான். இருங்க. நான் போய் அவனை வரச் சொல்றேன்” என்று கூறிவிட்டுப் போனார். அந்தப் பையன் வந்தான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். நான் அவனுடன் பேசிவிட்டு என் அறைக்கு வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து அந்த அம்மா ஒரு தட்டில் ஐந்து இட்லி, சட்னி கொண்டு வந்து கொடுத்து, “எங்களால இதுதான் தம்பி உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது. சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவர் ஏன் அதைக் கொடுக்கிறார்? அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவர் என்னைப் படித்தவரில்லை என்றாலும் அவர் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பினால் அதைக் கொடுக்கிறார். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது போன்ற பரிசும் பாராட்டும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் போதுதான் அவன் நம்பிக்கையும் உத்வேகமும் அடைகிறான். மற்றபடி மிகப் பெரிய விருதுகளை ஒருவித கூச்சத்தோடும், சமயத்தில் அது உருவாக்கக்கூடிய பிரச்சனைகளோடும்தான் எதிர்கொள்கிறான்.

கே: ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் கலந்த சூழலில் இளமையில் வாழ்ந்துள்ளீர்கள். உங்களுக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
ப: இரண்டிலும் எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொண்டேன். மனித வாழ்க்கையின் துயரங்கள், சிக்கல்கள் இவற்றிலிருந்து விடுபட மனிதனுக்கு உதவி செய்ய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அது பகுத்தறிவா மதமா என்று இரண்டு வழிகள் முன்னிருக்கின்றன. நான் இந்த இரண்டிலும் கலந்த இலக்கியம் என்ற மூன்றாவது வழியை நம்புகின்றவன். அது பகுத்தறிவையும் பேசுகிறது. புராணீகத்தையும் ஏற்றுக் கொள்கிறது. இதையேதான் இலக்கியமும் செய்கிறது; அறிவுத் துறைகளும் செய்கின்றன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் எழுத்தின் மிகப்பெரிய வேலை. அந்த நம்பிக்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எழுத்து முன்மொழியத்தான் செய்யும்.

எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களின் மீது விருப்பம் இல்லை. அதேசமயம் வறட்டுப் பகுத்தறிவு வாதத்தையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.

கே: புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து…
ப: இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுதுவும் எழுதப்படுகிறது. அப்படித்தான் ஆங்கில இலக்கியம் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து பிரிட்டிஷ் இலக்கியம், ஐரிஷ் இலக்கியம், அமெரிக்க இலக்கியம் என்று கூறப்படுவது போல்தான் தமிழ் இலக்கியமும். அது சிங்கப்பூரில், மலேசியாவில், கனடாவில், இலங்கையில் இருக்கிறது, அமெரிக்காவிலும் இருக்கிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இலக்கியம் எழுதப்படுகிறது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. சீனர்களைப் பற்றி, மலாய் மக்களைப் பற்றி, தங்கள் வாழ்விடம், சூழல் பற்றி, பௌத்த மதம் பற்றி… இப்படி நிறைய எழுதுகிறார்கள். சிங்கப்பூரில் வாழ்பவர்கள் தமது புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நாடுகளில் தாம் வாழும் சூழல்களை எழுதுகிறார்கள். அதே சமயம் தன்னுடைய வேர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ளவர்கள் அங்குள்ள பன்னாட்டுக் கலாசாரத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழ் அடையாளம் வேர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறார்கள், இன்றைக்கு இலக்கியத்தின் திசை மாறி இருக்கிறது. அது பன்னாட்டுக் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதே காரணம்

ஆனால் அயல்நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழில் எழுதுவது ஒரு பெரிய சவால். அதை எதிர்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அதன் முக்கியமான பலம்

தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதை விடவும் அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம் கொண்டாடப்படுகிறது, எனது யாமம் நாவல் வெளியான உடன் கனடாவில் இருந்து ‘இயல் விருது’ கொடுக்கப்பட்டது. பின்னர்தான் அதற்குத் ‘தாகூர் விருது’ கிடைத்தது. ஆக அவர்கள் எங்கோ தொலைவில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கௌரவத்தை அளிக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் படைப்புக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே எது நடந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் இவர்களை, இவர்களது படைப்புகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். அது என் கடமையும்கூட.

தமிழ் இலக்கியம் உலகு தழுவிய இலக்கியமாக மாற வேண்டும், அதற்கு உடனடித் தேவை ஆங்கில மொழிபெயர்ப்புகள், மற்றும் கல்விப்புலங்களில் தமிழ் இலக்கியம் பாடமாக அறிமுகமாவது. இரண்டையும் அயல்தேசங்களில் வசிப்பவர்கள் முன்கை எடுத்துச் செய்தால் தமிழ் இலக்கியம் உலகின் முக்கிய இலக்கியமாக கொண்டாடப்படும்.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து…
ப: தமிழக அளவில் பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும்தான். இவர்களை நான் அடிக்கடி திரும்பப் படிக்கிறேன். கவிஞர்களில் பிரமீளையும் நகுலனையும் தேவதச்சனையும் விரும்பி படிக்கிறேன். சமகால எழுத்தாளர்களில் சந்திரா, மனோஜ், சங்கர ராம சுப்ரமணியன், லட்சுமி சரவணக்குமார், பவா. செல்லத்துரை இவர்களை விரும்பி வாசிக்கிறேன்.

உலக அளவில் எப்போதும் என்னுடைய ஆசான்களாகக் கருதுவது டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும்தான். இலங்கையில் கவிஞர் சேரனும், உமா வரதராஜனும், கவிஞர் அனாரும், திசேராவும், ரஷ்மியும் முக்கியமானவர்கள். மலேசியாவில் ரெ. கார்த்திகேசுவும் பாலமுருகனும், சிங்கப்பூரில் லதா, ஜெயந்தி சங்கர் இருவரையும் வாசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வாழும் நடேசன், பெர்லினில் வாழும் கருணாகரமூர்த்தி இவர்களும் விருப்பமானவர்களே. என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் அவர்கள்தான்.

கே: எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் நீங்கள். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எழுத்தையே நம்பி வாழ்வது மிகச் சிரமமான ஒன்று. அதற்காக நிறையப் படிக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். உரிய கௌவரம் மரியாதை எதுவும் கிடைக்காது, மாதவருமானம் என்ற ஒன்று ஒரு போதும் கிடைக்காது, கூடுதலாக எழுதியதற்காக நாலு பேர் சண்டை போடுவார்கள். வசை பொழிவார்கள், அத்தனையும் சந்திக்க வேண்டும். நான் இந்த இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறேன். முழுநேர எழுத்தாளனாக வாழமுடியும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறேன். வருவாய் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீள வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வேலை செய்கிறேன். இதனால் ஆறுமாதம் நிம்மதியாக வாழமுடிகிறது. மற்றபடி புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் புத்தகம் வாங்கவும் பயணம் செய்யவும் போதாமல் தானிருக்கிறது

முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு அளவில்லாத சுதந்திரம். என் விருப்பத்துக்கேற்ப என்னால் வாழ முடிகிறது. என்னுடைய நேரம் என் கையில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், அண்ணன், குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்தச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றனர்.

இதன் பாதகம் என்னவென்றால் எதிர்காலத்தைப் பற்றி பயம், நிச்சயமின்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களுமே இதே பதற்றம், போராட்டத்துடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தையாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய வேண்டும். நூறு பேர் முயன்றால்கூட வருஷம் நூறு புத்தகம் ஆங்கிலத்தில் வந்துவிடும். தனிநபர்கள் செய்ய சிரமமானதாக இருந்தால் தமிழ் அமைப்புகள் ஆண்டுதோறும் பத்துப் புத்தகங்களையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம், தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கில இதழ்களுக்கு எழுதலாம். பல்கலைக்கழகங்களில் உரையாற்றலாம். எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், தமிழின் நல்ல புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லையே என்பதுதான். இதை மாற்ற உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வதை ஒரு கூட்டுச் சேவையாக கருதி அதற்கென தனி இணையதளத்தை உருவாக்கலாம். பிரபலமான பதிப்பகங்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும்படி ஆலோசனைகள், பரிந்துரைகள் செய்யலாம். ஒஹென்றி விருதுச் சிறுகதைகள் போல ஆண்டுதோறும் சிறந்த இருபது சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒரு தொகை நூலாக வெளியிடலாம். யூ டியூப்பில் தமிழ் இலக்கியம் குறித்த உரைகளை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தமிழ் நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட்டாகச் செய்யும்போது மட்டும்தான் தமிழ் இலக்கியம் மேம்பாடு அடையும்.

தங்கு தடையில்லாத, தனித்துவமான சிந்தனை ஓட்டம், மேதாவிலாசம் இவற்றைக் காண்கிறோம் எஸ்.ரா.வின் பதில்களில். “தென்றலை எனக்கு நன்கு தெரியும். நியூஜெர்ஸி வாசகர் முருகானந்தம் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தென்றல் பிரதிகளைக் கொண்டு வந்து தருவார். மதுசூதனன் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். தென்றல் அமெரிக்காவில் தீவிரமான தமிழ்ப் பணி செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்” என்கிறார் மாறாத புன்சிரிப்புடன். முக்கிய சந்திப்புக்காக வெளியே செல்லும் அவசரப் பணி இருந்த போதிலும் தென்றலுக்காக நீண்ட நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி கூறி, கேட்ட கேள்விகளைவிட கேளாதவை அதிகம் என்ற உணர்வோடு, விடை பெறுகிறோம்.

*****

கடவுள்


எந்த சக்தி மனிதனுக்கு உதவி செய்கிறதோ, எது மனிதனின் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறதோ, எது மனிதனை மேம்படுத்துகிறதோ, அது எல்லாமே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கு உகந்ததாகத்தானே இருக்க முடியும்? அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நடந்த துவேஷங்கள், மனித அவலங்கள், வெறுப்பு, தீண்டாமை போன்ற விஷயங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது என் முன்னால் இருக்கும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல. கடவுள் தேவைப்படுகிறாரா, இல்லையா என்பதுதான். எனக்கு கடவுள் தேவையானவராக இருக்கிறார். ஆனால் நம்பும்படியானவராக இல்லை.

நான் எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கிறேன். கோவில் என்பது ஒரு கூட்டுவெளி. அங்கே இசையும் சிற்பமும் தியானமும் ஒவியங்களும் ஒன்றுகலந்திருக்கின்றன. ஆகவே அந்த வெளி தனித்துவமானது. தேடித்தேடி கோவில்களுக்குப் போய் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன். வழிபாடுகளை நான் கேலி செய்வதில்லை. அது ஒரு நம்பிக்கை. அதை நம்புகிற மனிதன் ஏற்றுக் கொள்கிறான். நம்ப மறுக்கின்றவன் விலகிப் போகிறான். அவ்வளவே! மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அந்த இடங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வாறு கூடும் பொதுவெளி இன்று குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் டிவியை நமது அகவெளியாக மாற்றிக் கொண்டுவிட்டோம்

எனது இந்தியா


இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது நாம் வரைபடத்தில் பார்க்கும் இந்தியா அல்ல. அது ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி. அதை நாம் கற்பனை செய்யவே முடியாது. அவ்வளவு மாறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், நிலக்காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பயணத்தில் ஒவ்வொரு எட்டுமணி நேரத்திற்குப் பின்னரும் மாறுபட்ட நிலப்பகுதியை, கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை, உடையை, உணவை, மொழியை நாம் சந்திக்கிறோம். வேறெங்குமே இத்தனை வகைகளைப் பார்க்க முடியாது. தமிழகத்துக்குள்ளேயே சென்னையில், செங்கல்பட்டில், காஞ்சிபுரத்தில், ஆரணியில் என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பேசப்படுகிறது. உணவு முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளது. இவ்வளவும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய நதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். மொத்த இந்தியாவுமே நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாசார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைத் தேடும் ஒரு பயணி நதியோடு கூடச் செல்பவனாகவே இருப்பான். நதி வழி நடந்தால்தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும். நான் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை பயணம் செய்து பார்த்திருக்கிறேன். அதன் பழைய பாதை, புதிய பாதை, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு எப்போதுமே வறுமையான நாடு என்ற எண்ணமே மாறிவிட்டது.

அதுபோல இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்ற எண்ணமும் மாறிவிட்டது. இது அளப்பரிய செல்வம் கொண்ட நாடு. அவை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை அல்லது ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது என்பதுதான் நமது பிரச்சனை. இதைப் பயணம்தான் உணர்த்துகிறது. நான் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்ததை விட அதிகம் பயணம் செய்துதான் தெரிந்து கொண்டேன். கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறில்லை. நாம் பார்க்கும் மனிதனின் மொழி, உடை, அணிகலன் என்று பலவற்றில் இருக்கிறது. இந்தியாவில் இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது. இந்தியா இந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் பிரச்சனைகள்


இந்தியா எல்லாவித பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, அது தன் மரபால் பலம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் சமகாலப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமே முதன்மை அளிப்பதால் நமது மரபு என்ன, நமது பாரம்பரிய பெருமைகள் என்ன, நம் பிரச்சனைகளை அந்த மரபான வழிகளின் மூலம் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் அறியாமல் இருக்கிறோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன், உலகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிக அளவு இந்தியால்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் அந்த இளைஞர்களின் ஆற்றலை உழைப்பாக மாற்றவில்லை. இங்குள்ள கலை, மரபுகளைப் பேண முயலவில்லை. கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்திலும் நமக்கு வலிமையான பாரம்பரியப் பின்புலம் உள்ளது. சுயநலத்திற்காக நாம் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பது தனித்துவமிக்கது. அதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

ஆனால் வரலாற்றின் கொந்தளிப்பான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு என்று பார்த்தால், அறிவுத்துறை சார்ந்த இந்தியர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் ஆற்றலை, திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த அறிவுத்துறை மாற்றத்தை இந்தியாவிலும் செய்ய முன்வர வேண்டும். அப்படிச செய்தால் நம்முடைய இயற்கை வளங்களைக் கொண்டே நாம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல மாற்றம் வரும்.

நாஞ்சில் நாடன் – முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்

April 24, 2012 2 comments

முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று கொண்டிருந்த காலம். அங்கிருந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக ‘ஏடு’ என்றொரு மாத இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அஃதெனது நாற்றங்கால். சங்கத்தின் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவது, இதழுக்கு வரும் நெடுங்கட்டுரைகளைச் சுருக்குவது, துண்டு விழும் இடத்துக்கு நாலுவரித் தகவல்கள் எழுதுவது என்பவை என் பயிற்சிக் களம். பேரறிஞர்களின் 32 பக்கக் கட்டுரைகளை ஆறு பக்கத்துக்கு சுருக்கும் அறிவு கிடையாது எனினும் துணிச்சல் இருந்தது.

‘ஏடு’ சென்னையில் நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அப்படித்தான் ‘தீபம்’ எனக்கு அறிமுகம் ஆனது. எனது முதல் சிறுகதை ‘விரதம்’ அதில் வெளியாகி, அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக, இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டது. நடந்தது ஜூலை 1975-ல். மேளதாளம், பட்டுப் பரிவட்டம், யானை மீது அம்பாரி, மாலை, மங்கலப் பொருட்கள் என என் முதல் சிறுகதைப் பிரவேசம் அது. இதை நான் நேர்காணல்களில், கட்டுரைகளில் பதிவு செய்துள்ளேன். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற அமைப்பு, இன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மூத்த சகோதரர் ப. லட்சுமணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் 1977 ஜூலையில் ‘வாய் கசந்தது’, 1979 நவம்பரில் ‘முரண்டு’ எனும் என் கதைகள் மாதத்தின் சிறந்த கதைகளாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டதுண்டு. ஏனோ என் கதைகளில் ஒன்றுகூட ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒப்பேறவில்லை. அஃதே போல், எனது ஆறு நாவல்களில் எதுவும் சிறந்த நாவலாக அவர்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை. பரிசு பெற்றவர்களில் பலரை இன்று இலக்கிய உலகம் தேடிக் கொண்டிருப்பதும் பெறாதவன் இதை எழுதிக் கொண்டிருப்பதும் காலத்தின் கழைக் கூத்து.

முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் காண என்னையும் கூட்டிக் கொண்டு போனார். 1970களின் முற்பாதி என நினைவு. அவர் என்னை நாவல் எழுதச் சொன்னார். அவர் என்பது கலைக்கூத்தன். மற்றொருவர் நான் சந்தித்தே இராத, ‘தீபம்’ மூலமாகக் கடிதத் தொடர்பில் இருந்த, ‘கல்யாண்ஜி’ எனும் பெயரில் கவிதை எழுதிய வண்ணதாசன்.

அப்போது தீபம், கணையாழி, செம்மலர் போன்ற இதழ்களில் என் கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எதனாலோ ‘தாமரை’யில் நான் எழுதியதே இல்லை. நான் எழுத்தாளனாக உருவெடுக்கும் முன்பே வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி ப. ஜீவானந்தம் எனும் பொதுவுடமைச் சிங்கத்தின் குறுக்கீட்டினால் நின்று போயிருந்தது. பிறகென்ன, நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில் CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.

‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் கணிதத்தில் பயின்றவன். எண்கள் மீதும் கணிதப் பிரயோகங்களின் மீதும் எனக்கு தீராத காதலுண்டு என்று எனது நண்பர்களில் பலர் ஸி. வீரராகவன், எஸ். தியாகராஜன், எஸ். திருமலை, ஸி. விஜயகுமார் என்போர், ஹோமிபாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள். ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ எனும் நாடகத்தை பம்பாயில் நாங்கள் அரங்கேற்றியபோது அதில் வசனமே பேசாத மையப் பாத்திரத்தில் ஹரிஹரன் என்றொரு B.A.R.C நண்பர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அதே நாடகத்தை சென்னையில் வேறொரு நாடகக்குழு அரங்கேற்றிய போது ‘நாற்காலிக்காரர்’ பாத்திரத்தில் நீள உட்கார்ந்திருந்தவர் மாட்சிமை மிகு மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன். நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.

பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ, பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’ என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராய நகர் என பதிப்பகங்களுக்குக் கூட்டிப் போனார்.

ஒன்றும் பயனில்லை. பின்னாளில் தமிழ் நவீன இலக்கிய வானில் முன்னணி எழுத்தாளராகப் பிரகாசிக்கப் போகிற தாரகை ஒன்றின் வரவை நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்த அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை என்பது எத்தனை பெரிய தீப்பேறு? என்றுமே நான் ஒரு DIE HARD SPECIES. அத்தனை சுலபத்தில் தோல்வியைச் சம்மதித்துக் கொடுப்பவன் இல்லை.

பம்பாய் திரும்பிச் சென்றேன். மேற்சொன்ன நண்பர்கள் தலைக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் எட்டாயிரம் திரட்டினோம். BUD என்றொரு வெளியீட்டகம் பிறந்தது. BUD வெளியிட்ட முதலும் கடைசியுமான புத்தகம் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்பதொரு சோக சரித்திரம்.

ஞான. ராஜசேகரன் அட்டைப் படம் வடிவமைத்தார். மூவர்ண அட்டை. அன்று ஆஃப்செட் பிரிண்டிங் அறிமுகமாகி இருக்கவில்லை. BLOCK எடுத்து அச்சிடுவது அல்லது SCREEN PRINTING.

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் சுப்பராயலு என்பவர் செயலாளராக இருந்தார். மணிக்கொடி சீனிவாசன் என்றும் ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அறியப்பட்டவர் FREE PRESS JOURNAL எனும் பம்பாயில் இருந்து வெளியான ஆங்கிலத் தினசரியில் ஆசிரியராக இருந்தார். சுப்பராயலு அங்கு பணி புரிந்து கொண்டிருந்தார். ஞான. ராஜசேகரனின் அட்டைப்பட ஓவியத்தை வண்ணம் பிரித்து புகைப்படங்கள் எடுத்து PLATE செய்து BLOCK தயார் செய்தோம்.

‘தீபம்’ அலுவலகத்தில் நா. பார்த்தசாரதியின் சகோதரி மகன் ஷி. திருமலை அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் தான். சிறந்த வாசகரும் எடிட்டரும் கூட. என் எழுத்துகள் தீபத்தில் வெளியான போது என்னை மதித்து நட்புப் பூண்டவர், ஊக்குவித்தவர். மறுபடியும் சென்னை வந்த என்னை அவர் அழைத்துக்கொண்டு பாண்டிபஜார் வந்தார். அங்கு K.K. ராமன் என்பவரின் அச்சகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் இருந்த 10 பாயிண்ட் எழுத்துருக்கள் எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ எனும் நாவலில் என்கேஜ் ஆகி இருந்தன. ஆகவே 12 பாயிண்ட் எழுத்துருக்கள் கொண்டு அச்சிடலாம் என்றார். எனக்கு யாதொன்றும் அப்போது அர்த்தமாகவில்லை. முன்பணம் கொடுத்தாயிற்று.

நங்கநல்லூரில் என் சகோதரி வீட்டில் தங்கி இருந்தேன். 1977-ஆம் ஆண்டு பழவந்தாங்கல் அல்லது மீனம்பாக்கம் லோக்கல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது. அதிகாலை ஏழரை மணிக்குச் சகோதரி வீட்டில் காலைப் பலகாரம் சாப்பிட்டு, மத்தியானத்துக்கும் கட்டிக்கொண்டு பொடி நடையாகப் புறப்பட்டுப் போவேன். ஒன்பது மணிக்கு அச்சகம் திறக்கும்போதே போய்விடுவேன். காலி புரூப், பக்கம் புரூப் எல்லாம் நானே பார்த்தேன். முன்னிரவில் மாம்பலத்துக்கு நடந்து, ரயில் பிடித்து, மீனம்பாக்கத்தில் இறங்கி, பின்னி இன்ஜினியரிங் கம்பெனி சுற்றுச்சுவர் ஓரமாக நடந்து, சுடுகாடு – இடுகாடு வழியாக, பேய்க்கும் வழிப்பறிக்கும் அஞ்சி, ரங்கா தியேட்டர் வரும்வரை உயிர் குரல்வளையில் நிலை கொண்டிருக்கும்.

தங்கை வீட்டுக் கிணற்று நீர் தரையோடு தரையாகக் கிடக்கும். சென்னையின் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் இரவும் குளிக்காமல் கிடக்க ஏலாது. கால் – கால் வாளியாகச் சுரண்டிக் கோரிக் குளித்து சாப்பிட்டுப் படுக்க பதினொன்றாகிவிடும்.

தினசரி ஒன்றரை பாரம் புரூப் தருவார் காசிராமன். ஒரு பாரம் என்பது 16 பக்கங்கள். எனக்கு வேலையில்லாத நேரத்தில், அச்சகம் இருந்த கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த கலைஞன் பதிப்பகம் போவேன். தீவிர எழுத்தாளர் பலரின் புத்தகங்களை அன்று கலைஞன் மாசிலாமணி வெளியிட்டு வந்தார். அங்கு போய் உட்கார்ந்து சா. கந்தசாமி, அசோகமித்திரன், ஆ. மாதவன் என வாசிப்பேன். பெரியவர் மாசிலாமணி காந்தியவாதி, தமிழிலக்கியப் போக்குகள் உணர்ந்தவர். அவருடன் உரையாடுவது சுவாரசியமான அனுபவம். எனக்கு அப்போது தமிழிலக்கியச் சூழல் புதியது. எப்போதும் அந்த மிரட்சியுடன் இருந்தேன். இன்றும், கோவையில் அவரது மகள் வீட்டில் ஓய்வுக்கு மாசிலாமணி அவர்கள் வந்து தங்கி இருக்கும்போது எமக்குள் நீண்ட உரையாடல் நடக்கிறது.

‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று ‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ‘தீபம்’ திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளிவந்திருக்காது.

அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக் காணப் பரவசம். ஆனால் 12 பாயிண்ட் எழுத்தில், புத்தகத்தின் பக்கங்கள் மண் புற்றுபோல் வளர்ந்து கொண்டே போயின. எட்டாயிரம் ரூபாய் திகையுமா என படபடக்க ஆரம்பித்தது மனது. கடன் தரும் செழிப்புடன் அன்று உறவினர்களும் இல்லை. அச்சாக சரியாக 19 நாட்கள் எடுத்தன. 456 பக்கங்கள். 19 X 24 = 456, கணக்கு சரிதானா? எனது விடுமுறையும் தீரும் தருவாயில் இருந்தது. பிறகு பைண்டிங் கட்டிங் எனச் சில நாட்கள்.

முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும் BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். பாண்டிபஜாரின் ரத்னா கபேயா, கீதா கபேயா, இன்று நினைவில் இல்லை.

மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் புத்தகம் கையில் இருந்தது. அன்று எனக்கும் தெரியாது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவலாக அது கொண்டாடப்படப் போகிறது என்று. நன்றியுடன் கையெழுத்திட்டு அச்சுக்கோர்த்த இளம் பெண்களுக்கும், அச்சக உரிமையாளர் காசிராமனுக்கும், கலைஞன் மாசிலாமணிக்கும், தீபம் திருமலைக்கும் முதல்படிகள் தந்தேன். அன்று சகோதரி வீட்டுக்கு நடக்கும்போது சுடுகாட்டு, இடுகாட்டுப் பேய்கள் என்னை மரியாதையுடன் கண்டு வணக்கம் செய்தன.

பெயர் குறிப்பிடாமல், ஒரு முழுப்பக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என்று மட்டும் அச்சிட்டு, முந்திய ஆண்டில் தனது 55 வயதில் காலமானவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் என்னை ‘அவையத்து முந்தி இருக்கச்’ செய்தவர். நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். ஆயிரம் படிகளைப் பாரி நிலையத்தாரிடம் விற்பனைக்குக் கொடுத்து 180 படிகளைப் பம்பாய்க்குப் பார்சல் அனுப்பி கையில் சில படிகளுடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன்.

அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில், பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பா, தி.க.சி., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஆ. மாதவன், சா. கந்தசாமி. பூமணி. சு. சமுத்திரம், பேராசிரியர் கனக சபாபதி, அக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்), பேராசிரியர் கா. சிவத்தம்பி என புகழ்பெற்ற பலர்.

வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு? ஆயின 32 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன. ‘சொல்ல மறந்த கதை’ எனத் திரைப்படம் ஆனது. சேரன் முதலில் நடித்த தங்கர்பச்சான் இயக்கிய படம்.

இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.


ஜனவரி 2010.புத்தகம் பேசுகிறது இதழில் இருந்து..