Archive

Posts Tagged ‘பாரா’

வாத்தியாரோடு கச்சேரி – பாரா

March 2, 2009 1 comment

பா ராகவன்

நீண்ட நெடு நாள்களுக்குப் பிறகு நேற்றிரவு எதிர்பாராவிதமாக திரு. வண்ணநிலவனுடன் பேசவேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டு போன் செய்தேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் தொடங்கி வெகுநேரம் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம்.

எத்தனை வருஷங்கள் கழித்துப் பேசினாலும், எந்தத் தருணத்தில் பேசினாலும், என்ன பேசினாலும் – மாறாத அதே குரல், அதே கனிவு, அதே எளிமை, அதே பண்பு. நான் இதுகாறும் சந்தித்த எழுத்தாளர்களுள் சற்றும் அகந்தையோ, தன் படைப்புகள் குறித்த துளி பெருமையோ கூட இல்லாத ஒரு மாபெரும் மனிதர் அவர். இப்படிக்கூட ஒருவர் இருக்க முடியுமா என்று ஒவ்வொருமுறையும் வியப்பு ஏற்படும் – அவருடன் பேசும்போது.

வண்ணநிலவனின் எழுத்து ஓர் அழகென்றால் அவரது மனம், நிகரே சொல்ல முடியாத பேரழகு வாய்ந்தது.

எழுபதுகளின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவரென அறியப்படும் திரு. வண்ணநிலவன், திருநெல்வேலிக்காரர். அவர், வண்ணதாசன், விக்கிரமாதித்தன் எல்லாரும் ஒரு செட்.

தாமரை இதழில் எழுத ஆரம்பித்து கோமலின் சுபமங்களா காலம் வரை மிகத்தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தவர் வண்ணநிலவன். அவரது கடல்புரத்தில், ரெய்னீஸ் ஐயர் தெரு, கம்பாநதியெல்லாம் தமிழ் நாவல் இலக்கிய சரித்திரத்தில் தனித்தனி அத்தியாயங்கள்.

வண்ணநிலவனின் எழுத்துகள், மேலோட்டமான வாசிப்புக்கே விளங்கக்கூடியவைதான். மிக எளிமையாக எழுதுபவர் மாதிரிதான் தெரியும். ஆனால் தமது நாவல்களில் பல அபூர்வமான பரிசோதனைகளைச் செய்தவர் அவர். டெக்னிகலாக அணுகி, அவரது படைப்புகளைக் கட்டுடைத்துப் பார்த்தால் அவசியம் பிரமிப்பு வரும்.

நம்மால் எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத விதத்தில் சொற்களை நெய்யக்கூடியவர் அவர். சொல்லும் அதன் பொருளும் அழிந்துபோய், மௌனத்தின் சங்கீதத்தை படைப்பெங்கும் பரவச் செய்வதில் அவர் ஒரு விற்பன்னர். அவரது ‘மனைவியின் நண்பர்’ என்கிற ஒரு சிறுகதையை முதல்முறை படித்தபோது பிரமைபிடித்தமாதிரி ஆகிவிட்டது எனக்கு. மிகவுமே நெருடலான விஷயம், அந்தக்கதையின் கரு.

ஒரு பெட்டிக்கடைக்காரரின் மனைவிக்கும் ஊரில் இருக்கிற இன்னொரு வசதி படைத்த நபருக்குமான உறவு அக்கதையில் கூறப்பட்டிருக்கும். அது எந்த விதமான உறவு என்பது, வாசிப்பவரின் சிந்தனைத் திறத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். வண்ணநிலவன் மிகத்தெளிவாக ‘மனைவியின் நண்பர்’ என்று தான் சொல்லியிருந்தார்.

பாம்பும் பிடாரனும், எஸ்தர், ஞாயிற்றுக்கிழமை போன்ற அவரது பல அமரத்துவம் பெற்ற கதைகளை வாசித்தவர்களுக்கு எழுத்து அவருக்கு எப்படிப்பட்டதொரு தவம் என்பது விளங்கும்.

ஆனால் வண்ணநிலவன் என்கிற மனிதருடன் அறிமுகமாகி, பழகி, பேசத் தொடங்கிவிட்டால், அவரது படைப்புகள் அவரைக்காட்டிலும் பேரிலக்கியமில்லை என்றே தோன்றும். சுந்தரராமசாமி, அசோகமித்திரன், கி.ரா. போன்ற படைப்பாளிகளின் எழுத்துத் தரத்துடன் ஒப்பிட்டால் தன்னுடையது ஒன்றுமே இல்லை என்று திரும்பத்திரும்பச் சொல்லுவார். “எழுத்தாளன்னா, எழுத்தாளனா வாழணும்யா” என்பார். அவரது பேட்டிகளிலும் இதைச் சொல்லியிருக்கிறார்.

வண்ணநிலவன் எழுத்தாளனாக வாழத்தான் இன்றுவரை முயற்சி செய்துகொண்டிருக்கிறார். நடுவில் அவர் துக்ளக் வார இதழில் பணியாற்றிக்கொண்டு ‘துர்வாசரா’க எழுதியது, சுப மங்களாவில் பணியாற்றியது எல்லாம் கூட அந்தந்தச் சமயத்து நிர்ப்பந்தங்களினால்தான். அவரால் எழுத்தாளனாக அல்லாமல் வேறு என்னவாகவும் வாழ முடியாது என்பதே உண்மை.

மூன்று வருடங்களுக்கு முன்னர் குமுதம் குழுமத்திலிருந்து ‘ரிப்போர்ட்டர்’ வாரம் இருமுறை இதழைத் தொடங்கும் யோசனை மிகத்தீவிரமாக இருந்தபோது, அந்தப் பத்திரிகையில் யார் யாரையெல்லாம் பணியாற்ற / எழுத அழைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. வண்ணநிலவன் அவர்களின் பெயரை ஆசிரியர் குழுவில் இருந்த பலபேர் சொன்னார்கள்.

ரிப்போர்ட்டரின் பொறுப்பாசிரியர் இளங்கோவன், வண்ணநிலவனின் நெருங்கிய நண்பர். பேசி, அலுவலகத்துக்கு வரவழைத்து, ஒரு தனியறையில் நாற்காலி, மேசை போட்டு உட்காரவைத்துவிட்டுப் போனார்.

எனக்கு வெகு குஷியாகிவிட்டது. ஏனெனில் வண்ணநிலவனுக்கு அங்கே ஒதுக்கப்பட்டிருந்த அறை, என்னுடைய அறைக்குப் பக்கத்து அறை. சரி, இனி நமக்குப் பொற்காலம் தான்; ஜங்ஷனில் இவரை நிறைய எழுதவைத்தே தீருவது என்று முடிவு செய்துகொண்டேன். இளங்கோவன் முன்னதாக, “அவரை நீ ஏதாவது எழுதச்சொல்லிப் படுத்தாதே. அவர் ரிப்போர்ட்டருக்காக வந்திருக்கார்” என்று எச்சரித்துவிட்டுப் போனதையெல்லாம் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, “எனக்கு ஏதாவது எழுதுங்கள் சார்” என்று ஒரு பல்லவியைத் தேர்ந்தெடுத்து வேளைக்கு மூணு டோஸ் வீதம் அவருக்கு ஏற்ற ஆரம்பித்தேன். வண்ணநிலவன் மாதிரி ஒரு அக்மார்க் படைப்பிலக்கியவாதியை, அவரது அரசியல் ஞானத்தை முன்வைத்து ஒரு அரசியல் பத்திரிகையில் முழுவதுமாகப் பயன்படுத்துவது என்பது என்னால் ஜீரணிக்கக் கூடியதாக இல்லை அப்போது.

அவரும் ஆகட்டும், எழுதுகிறேன்; முதலில் ஒரு சிறுகதை எழுதுகிறேன். அப்புறமொரு குறுநாவல் என்று வார்த்தைகளில் சாக்லெட் தோரணம் கட்டிவிட்டு வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே போனார். ரிப்போர்ட்டரிலும் அவரை சக்கையாகப் பிழிந்துகொண்டிருந்தார்கள்.

எனக்கென்னவோ, வண்ணநிலவன் ஜங்ஷனுக்குக் கதை தருவார் என்கிற நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமாக போய்க்கொண்டிருந்தது. இறுதியில் ஒருநாள் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. உடம்புக்கு என்னவோ சரியில்லை என்று தகவல் மட்டும் வந்தது. அப்புறம் விசாரித்ததில் உண்மையிலேயே கொஞ்சம் தீவிரமாகத்தான் அவர் நோயால் தாக்கப்பட்டிருந்தார். மீண்டு எழுந்தபிறகும் அவரால் வரமுடியாமல் போய்விட்டது.

ஏன் சார் என்று தொலைபேசியில் கேட்டதற்கு, ‘பத்திரிகைப்பணி ஏற்கெனவே செய்ததுதான். ஆனாலும் என்னவோ ஒட்டலய்யா’ என்றார். அவர் பிறவி எழுத்தாளர். எழுத்தாளராகவே வாழ நினைப்பவர். ஒட்டத்தான் செய்யாது. அதனாலென்ன? எழுதுங்கள் சார் என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். ஜங்ஷனில் அவரது பேட்டி ஒன்று மட்டும் விரிவாக, சுமார் இருபது பக்கங்களூக்கு வந்தது. மனம் திறந்து பல விஷயங்களை அந்தப் பேட்டியில் பேசியிருந்தார்.

அதோடு அவரவர் தனிக்காரியங்களில் மூழ்கிவிட, வண்ணநிலவனுடன் நான் அப்புறம் பேசவே முடியாமல் போய்விட்டது. மீண்டும் நேற்றைக்குத்தான். நேற்றுக்கூட அப்படியொரு உத்வேகம் வந்து அவரைத் தொடர்பு கொண்டதற்குக் காரணமாக இருந்தது, என் நண்பன் வெங்கடேஷ்.

அவனது சமாச்சார் இணையத்தளத்துக்கு ஏப்ரல் 14 தொடங்கி ஒரு தொடர் நாவல் எழுதமுடியுமா என்று என்னைக் கேட்டான். ஏற்கெனவே இருக்கிற கமிட்மெண்டுகளை எண்ணிக் கொஞ்சம் பயந்து தயங்கினேன்.

“இந்த சான்ஸை விடாதடா. கூட எழுதறது யார் தெரியுமா? வண்ணநிலவன்! நானும் ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன்” என்றான்.

வண்ணநிலவனிடம் ஒரு சிறுகதை எழுதி வாங்குவதென்பது எப்பேர்ப்பட்ட பாடு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இவன் மட்டும் எப்படி அடுத்தடுத்து அவரை நாவல்கள் எழுதவைக்கிறான் என்பது எனக்குத் தீராத ஆச்சர்யம். சி·பி தமிழில் சிலகாலம் முன்னர்தான் வண்ணநிலவன் ‘காலம்’ என்கிற சிறப்பான நாவல் ஒன்றை எழுதி முடித்தார். இப்போது சமாச்சாரில் மீண்டும் ஒரு நாவல்! வெள்ளித்திரை என்று தலைப்புக் கொடுத்திருக்கிறார். அவர் சென்னைக்கு வந்த காலத்தில் இருந்த தமிழ் சினிமா உலகைச் சுற்றி நடக்கிற கதை என்று சொன்னார்.

வண்ணநிலவன் எழுதுகிறார் என்கிற உற்சாகத்தில் நானும் எழுத ஒப்புக்கொண்டிருக்கிறேன். இணையத்தில் நான் எழுதப்போகிற முதல் புனைகதைத் தொடர் இது. பத்தொம்பதே முக்கால் காதல் கதைகள் என்று தலைப்பு கொடுத்திருக்கிறேன்.

பதினாறு வருஷங்களுக்கு முன்னர் ஒரு சமயம் ஒரு தியாகராஜ உற்சவத்தில் முதல்முறையாக மேடை ஏறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அது, நான் வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டு ஓரளவு தேறியிருந்த சமயம். முதல்மேடை. முதல் அனுபவம். என்னை உற்சாகப்படுத்தும் விதமாக என் குரு தானும் என் பக்கத்தில் அமர்ந்து சாதிஞ்சனே வாசித்த காட்சி நினைவுக்கு வருகிறது. சொதப்பினாலும் அவர் சமாளித்துவிடுவார் என்பது ஒரு சௌகரியம் என்றபோதும் ஆசிரியரின் அருகில் அமர்ந்து வாசிக்கிற பயம் கடைசிவரை கூடவே இருந்தது.

வீணை என் சுதர்மம் இல்லை என்று தீர்மானமாக விட்டு விலகி எழுத வந்து பத்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. முதல் சிறுகதை, முதல் தொடர்கதை, முதல் நாவல், முதல், கட்டுரைத் தொடர், முதல் புத்தகம், முதல் பரிசு எல்லாம் பார்த்தபிறகு இப்போது அந்தப் பழைய சந்தோஷ பயம் எட்டிப்பார்க்கிறது. வாத்தியாருடன் சேர்ந்து கச்சேரி செய்கிற பயம்.

எனக்கும் சரி, வெங்கடேஷ¤க்கும் சரி. வண்ணநிலவன் எங்கள் வாத்தியார்களுள் ஒருவர்.