Archive
Nakkeeran Arulkumar Interview with Naanjil Naadan on the eve of his Sahitya Akademi Award

தினமும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன். மாலை வேலை முடிந்ததும் படிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலாக படித்துவிடுவேன். அந்த வாசிப்புதான் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சைப்படுத்தும் அம்மா சாப்பாடு, ஊர் கோவில், ஊர் நண்பர்களை மறக்க வைத்தது.

நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு
நன்றி: Dyno Buoy
இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.
அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.
இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.
இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.
தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!
Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan
‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.
‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.
‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.
இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?
ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.
கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…
ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?
ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.
கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?
ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.
கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…
ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.
காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.
கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?
ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.
கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…
ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.
கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.
கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.
கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?
ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.
ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?
கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?
ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.
கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..
ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.
கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.
கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்
*****
மும்பையும் நானும்
மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.
நாஞ்சில்நாடன்
*****
கட்டுரை இலக்கியம்
நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.
நாஞ்சில்நாடன்
*****
பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.
ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
நாஞ்சில்நாடன்
நாஞ்சில் நாடன் – முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்
முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று கொண்டிருந்த காலம். அங்கிருந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக ‘ஏடு’ என்றொரு மாத இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அஃதெனது நாற்றங்கால். சங்கத்தின் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவது, இதழுக்கு வரும் நெடுங்கட்டுரைகளைச் சுருக்குவது, துண்டு விழும் இடத்துக்கு நாலுவரித் தகவல்கள் எழுதுவது என்பவை என் பயிற்சிக் களம். பேரறிஞர்களின் 32 பக்கக் கட்டுரைகளை ஆறு பக்கத்துக்கு சுருக்கும் அறிவு கிடையாது எனினும் துணிச்சல் இருந்தது.
‘ஏடு’ சென்னையில் நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அப்படித்தான் ‘தீபம்’ எனக்கு அறிமுகம் ஆனது. எனது முதல் சிறுகதை ‘விரதம்’ அதில் வெளியாகி, அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக, இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டது. நடந்தது ஜூலை 1975-ல். மேளதாளம், பட்டுப் பரிவட்டம், யானை மீது அம்பாரி, மாலை, மங்கலப் பொருட்கள் என என் முதல் சிறுகதைப் பிரவேசம் அது. இதை நான் நேர்காணல்களில், கட்டுரைகளில் பதிவு செய்துள்ளேன். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற அமைப்பு, இன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மூத்த சகோதரர் ப. லட்சுமணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் 1977 ஜூலையில் ‘வாய் கசந்தது’, 1979 நவம்பரில் ‘முரண்டு’ எனும் என் கதைகள் மாதத்தின் சிறந்த கதைகளாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டதுண்டு. ஏனோ என் கதைகளில் ஒன்றுகூட ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒப்பேறவில்லை. அஃதே போல், எனது ஆறு நாவல்களில் எதுவும் சிறந்த நாவலாக அவர்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை. பரிசு பெற்றவர்களில் பலரை இன்று இலக்கிய உலகம் தேடிக் கொண்டிருப்பதும் பெறாதவன் இதை எழுதிக் கொண்டிருப்பதும் காலத்தின் கழைக் கூத்து.
முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் காண என்னையும் கூட்டிக் கொண்டு போனார். 1970களின் முற்பாதி என நினைவு. அவர் என்னை நாவல் எழுதச் சொன்னார். அவர் என்பது கலைக்கூத்தன். மற்றொருவர் நான் சந்தித்தே இராத, ‘தீபம்’ மூலமாகக் கடிதத் தொடர்பில் இருந்த, ‘கல்யாண்ஜி’ எனும் பெயரில் கவிதை எழுதிய வண்ணதாசன்.
அப்போது தீபம், கணையாழி, செம்மலர் போன்ற இதழ்களில் என் கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எதனாலோ ‘தாமரை’யில் நான் எழுதியதே இல்லை. நான் எழுத்தாளனாக உருவெடுக்கும் முன்பே வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி ப. ஜீவானந்தம் எனும் பொதுவுடமைச் சிங்கத்தின் குறுக்கீட்டினால் நின்று போயிருந்தது. பிறகென்ன, நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில் CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.
‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் கணிதத்தில் பயின்றவன். எண்கள் மீதும் கணிதப் பிரயோகங்களின் மீதும் எனக்கு தீராத காதலுண்டு என்று எனது நண்பர்களில் பலர் ஸி. வீரராகவன், எஸ். தியாகராஜன், எஸ். திருமலை, ஸி. விஜயகுமார் என்போர், ஹோமிபாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள். ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ எனும் நாடகத்தை பம்பாயில் நாங்கள் அரங்கேற்றியபோது அதில் வசனமே பேசாத மையப் பாத்திரத்தில் ஹரிஹரன் என்றொரு B.A.R.C நண்பர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அதே நாடகத்தை சென்னையில் வேறொரு நாடகக்குழு அரங்கேற்றிய போது ‘நாற்காலிக்காரர்’ பாத்திரத்தில் நீள உட்கார்ந்திருந்தவர் மாட்சிமை மிகு மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன். நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.
பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ, பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’ என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராய நகர் என பதிப்பகங்களுக்குக் கூட்டிப் போனார்.
ஒன்றும் பயனில்லை. பின்னாளில் தமிழ் நவீன இலக்கிய வானில் முன்னணி எழுத்தாளராகப் பிரகாசிக்கப் போகிற தாரகை ஒன்றின் வரவை நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்த அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை என்பது எத்தனை பெரிய தீப்பேறு? என்றுமே நான் ஒரு DIE HARD SPECIES. அத்தனை சுலபத்தில் தோல்வியைச் சம்மதித்துக் கொடுப்பவன் இல்லை.
பம்பாய் திரும்பிச் சென்றேன். மேற்சொன்ன நண்பர்கள் தலைக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் எட்டாயிரம் திரட்டினோம். BUD என்றொரு வெளியீட்டகம் பிறந்தது. BUD வெளியிட்ட முதலும் கடைசியுமான புத்தகம் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்பதொரு சோக சரித்திரம்.
ஞான. ராஜசேகரன் அட்டைப் படம் வடிவமைத்தார். மூவர்ண அட்டை. அன்று ஆஃப்செட் பிரிண்டிங் அறிமுகமாகி இருக்கவில்லை. BLOCK எடுத்து அச்சிடுவது அல்லது SCREEN PRINTING.
பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் சுப்பராயலு என்பவர் செயலாளராக இருந்தார். மணிக்கொடி சீனிவாசன் என்றும் ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அறியப்பட்டவர் FREE PRESS JOURNAL எனும் பம்பாயில் இருந்து வெளியான ஆங்கிலத் தினசரியில் ஆசிரியராக இருந்தார். சுப்பராயலு அங்கு பணி புரிந்து கொண்டிருந்தார். ஞான. ராஜசேகரனின் அட்டைப்பட ஓவியத்தை வண்ணம் பிரித்து புகைப்படங்கள் எடுத்து PLATE செய்து BLOCK தயார் செய்தோம்.
‘தீபம்’ அலுவலகத்தில் நா. பார்த்தசாரதியின் சகோதரி மகன் ஷி. திருமலை அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் தான். சிறந்த வாசகரும் எடிட்டரும் கூட. என் எழுத்துகள் தீபத்தில் வெளியான போது என்னை மதித்து நட்புப் பூண்டவர், ஊக்குவித்தவர். மறுபடியும் சென்னை வந்த என்னை அவர் அழைத்துக்கொண்டு பாண்டிபஜார் வந்தார். அங்கு K.K. ராமன் என்பவரின் அச்சகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் இருந்த 10 பாயிண்ட் எழுத்துருக்கள் எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ எனும் நாவலில் என்கேஜ் ஆகி இருந்தன. ஆகவே 12 பாயிண்ட் எழுத்துருக்கள் கொண்டு அச்சிடலாம் என்றார். எனக்கு யாதொன்றும் அப்போது அர்த்தமாகவில்லை. முன்பணம் கொடுத்தாயிற்று.
நங்கநல்லூரில் என் சகோதரி வீட்டில் தங்கி இருந்தேன். 1977-ஆம் ஆண்டு பழவந்தாங்கல் அல்லது மீனம்பாக்கம் லோக்கல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது. அதிகாலை ஏழரை மணிக்குச் சகோதரி வீட்டில் காலைப் பலகாரம் சாப்பிட்டு, மத்தியானத்துக்கும் கட்டிக்கொண்டு பொடி நடையாகப் புறப்பட்டுப் போவேன். ஒன்பது மணிக்கு அச்சகம் திறக்கும்போதே போய்விடுவேன். காலி புரூப், பக்கம் புரூப் எல்லாம் நானே பார்த்தேன். முன்னிரவில் மாம்பலத்துக்கு நடந்து, ரயில் பிடித்து, மீனம்பாக்கத்தில் இறங்கி, பின்னி இன்ஜினியரிங் கம்பெனி சுற்றுச்சுவர் ஓரமாக நடந்து, சுடுகாடு – இடுகாடு வழியாக, பேய்க்கும் வழிப்பறிக்கும் அஞ்சி, ரங்கா தியேட்டர் வரும்வரை உயிர் குரல்வளையில் நிலை கொண்டிருக்கும்.
தங்கை வீட்டுக் கிணற்று நீர் தரையோடு தரையாகக் கிடக்கும். சென்னையின் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் இரவும் குளிக்காமல் கிடக்க ஏலாது. கால் – கால் வாளியாகச் சுரண்டிக் கோரிக் குளித்து சாப்பிட்டுப் படுக்க பதினொன்றாகிவிடும்.
தினசரி ஒன்றரை பாரம் புரூப் தருவார் காசிராமன். ஒரு பாரம் என்பது 16 பக்கங்கள். எனக்கு வேலையில்லாத நேரத்தில், அச்சகம் இருந்த கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த கலைஞன் பதிப்பகம் போவேன். தீவிர எழுத்தாளர் பலரின் புத்தகங்களை அன்று கலைஞன் மாசிலாமணி வெளியிட்டு வந்தார். அங்கு போய் உட்கார்ந்து சா. கந்தசாமி, அசோகமித்திரன், ஆ. மாதவன் என வாசிப்பேன். பெரியவர் மாசிலாமணி காந்தியவாதி, தமிழிலக்கியப் போக்குகள் உணர்ந்தவர். அவருடன் உரையாடுவது சுவாரசியமான அனுபவம். எனக்கு அப்போது தமிழிலக்கியச் சூழல் புதியது. எப்போதும் அந்த மிரட்சியுடன் இருந்தேன். இன்றும், கோவையில் அவரது மகள் வீட்டில் ஓய்வுக்கு மாசிலாமணி அவர்கள் வந்து தங்கி இருக்கும்போது எமக்குள் நீண்ட உரையாடல் நடக்கிறது.
‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று ‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ‘தீபம்’ திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளிவந்திருக்காது.
அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக் காணப் பரவசம். ஆனால் 12 பாயிண்ட் எழுத்தில், புத்தகத்தின் பக்கங்கள் மண் புற்றுபோல் வளர்ந்து கொண்டே போயின. எட்டாயிரம் ரூபாய் திகையுமா என படபடக்க ஆரம்பித்தது மனது. கடன் தரும் செழிப்புடன் அன்று உறவினர்களும் இல்லை. அச்சாக சரியாக 19 நாட்கள் எடுத்தன. 456 பக்கங்கள். 19 X 24 = 456, கணக்கு சரிதானா? எனது விடுமுறையும் தீரும் தருவாயில் இருந்தது. பிறகு பைண்டிங் கட்டிங் எனச் சில நாட்கள்.
முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும் BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். பாண்டிபஜாரின் ரத்னா கபேயா, கீதா கபேயா, இன்று நினைவில் இல்லை.
மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் புத்தகம் கையில் இருந்தது. அன்று எனக்கும் தெரியாது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவலாக அது கொண்டாடப்படப் போகிறது என்று. நன்றியுடன் கையெழுத்திட்டு அச்சுக்கோர்த்த இளம் பெண்களுக்கும், அச்சக உரிமையாளர் காசிராமனுக்கும், கலைஞன் மாசிலாமணிக்கும், தீபம் திருமலைக்கும் முதல்படிகள் தந்தேன். அன்று சகோதரி வீட்டுக்கு நடக்கும்போது சுடுகாட்டு, இடுகாட்டுப் பேய்கள் என்னை மரியாதையுடன் கண்டு வணக்கம் செய்தன.
பெயர் குறிப்பிடாமல், ஒரு முழுப்பக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என்று மட்டும் அச்சிட்டு, முந்திய ஆண்டில் தனது 55 வயதில் காலமானவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் என்னை ‘அவையத்து முந்தி இருக்கச்’ செய்தவர். நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். ஆயிரம் படிகளைப் பாரி நிலையத்தாரிடம் விற்பனைக்குக் கொடுத்து 180 படிகளைப் பம்பாய்க்குப் பார்சல் அனுப்பி கையில் சில படிகளுடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன்.
அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில், பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பா, தி.க.சி., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஆ. மாதவன், சா. கந்தசாமி. பூமணி. சு. சமுத்திரம், பேராசிரியர் கனக சபாபதி, அக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்), பேராசிரியர் கா. சிவத்தம்பி என புகழ்பெற்ற பலர்.
வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு? ஆயின 32 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன. ‘சொல்ல மறந்த கதை’ எனத் திரைப்படம் ஆனது. சேரன் முதலில் நடித்த தங்கர்பச்சான் இயக்கிய படம்.
இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
—
ஜனவரி 2010.புத்தகம் பேசுகிறது இதழில் இருந்து..
யூமா வாசுகி – கவிதை
இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்
ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.
Recent Comments