Archive
வ.உ.சி. – V. O. Chidambaram Pillai: Indian freedom fighters
கட்டுரை: ஆஷ் அடிச்சுவட்டில்… | காலச்சுவடு | ஆ. இரா. வேங்கடாசலபதி
வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி | jeyamohan.in
தமிழ்மணி
ஆ.இரா.வேங்கடாசலபதி – ஆவணப்பதிவு வ.உ.சி. பற்றிய “திலக மகரிஷி’ என்கிற புத்தகம்.
பாலகங்காதர திலகரின் வரலாறு
“சிதம்பரம் பிள்ளை எளிதில் கொள்கையைப் பற்றிக்கொள்பவர் அல்லர். காற்று எப்படி வீசுகிறதோ அப்படித் திரும்பும் நீர்மை, பிள்ளை அவர்களின் பிறவியில் அமையவில்லை. அவர் இருக்கும் வரையில் திலகர் நேயராகவே இருந்தார்’ என்று நவம்பர் 20,1936-இல் தனது “நவசக்தி’ நாளிதழ் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றிப் பதிவு செய்கிறார் “தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.
வ.உ.சி.க்கும் அவரது குருநாதர் பாலகங்காதர திலகருக்கும் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. குறிப்பாக, அன்னிபெசண்ட் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தொடக்கம் முதலே அன்னிபெசண்டின் நேர்மையை அடிப்படையிலேயே சந்தேகித்தவர். சுய ஆட்சிப் பிரச்னையில் திலகருக்கும் பெசண்டுக்கும் ஏற்பட்டுவந்த இணக்கம், வ.உ.சி.யின் குருபக்திக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் இடையே நடந்த சோதனை என்றே குறிப்பிட வேண்டும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் தலைவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் கைகோத்து நின்றிருக்கிறார்கள். தலைவரிடம் கருத்து வேறுபாடு கொண்டதால் திலகருக்கும் வ.உ.சி.க்குமான நட்பும் தொடர்பும் அற்றுவிடவில்லை. மேலும் பலமடைந்தது.
டிசம்பர் 17, 1919-இல் பம்பாய் எக்ஸ்பிரஸ் ரயிலில் திலகர் சென்னை-பெரம்பூர் (பிரம்பூர்) ரயில் நிலையத்தில் வந்து இறங்குகிறார். வ.உ.சி. தலைமையில் அவருக்கு மாபெரும் வரவேற்புத் தரப்படுகிறது. திலகர் ஒரு பணக்காரர் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. அவரிடம் வ.உ.சி. ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.
“”இது தொழிலாளர் காலம். தாங்கள் செல்வர் மாடியில் தங்கினால் ஏழைமக்கள் தங்களைக் காண இயலாது, வருந்துவார்கள். ஆதலால் தாங்கள் எங்களில் ஒருவர் குடிலில் தங்குவதற்கு உளங் கொள்ளல் வேண்டும்” என்கிற வ.உ.சி.யின் விண்ணப்பத்தைக் கேட்ட திலகர் பெருமான் “”சிதம்பரம், எனக்கா விண்ணப்பம்! எனக்கு எந்தக் குடிசையில் இருந்தால் என்ன?” என்று பதிலளித்ததாக திரு.வி.க. பதிவு செய்திருக்கிறார்.
திலகர் சென்னையில் மூன்று நாள்கள் தங்கியிருக்கிறார். ஒருநாள் மாலை சென்னை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அந்த இடம் இப்போதும் “திலகர் கட்டம்’ என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது. அந்தத் திலகர் கட்டத்தின் அருமையை இன்றைய சந்ததியினருக்கு உணர்த்திய பெருமை, பெரியவர் தியாகி “பாரதமணி’ சீனிவாசனைத்தான் சாரும்.
பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி இன்னொரு ஆச்சரியமான ஆவணப்பதிவையும் முன் வைக்கிறார். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த முன்மொழிவுகளை விவாதிப்பதற்கு காங்கிரசில் சிறப்பு மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அந்த மாநாட்டுக்குத் திலகரே தலைவராக வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக “இந்தியர்களுக்கு ஓர் அறிக்கை. லோகமான்ய திலகரே விசேஷ காங்கிரசில் அக்கிராசனம் வகிக்க வேண்டும், என்றொரு அறிக்கையை ராஜாஜி தயாரிக்கிறார். அதில் பெரியார் ஈ.வெ.ரா., ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு நாயுடு முதலானோர் கையெழுத்துடன் வ.உ.சி.யின் கைச்சாத்தும் காணப்படுகிறது.
இலங்கையிலிருந்து இன்றளவும் வெளியாகும் “வீரகேசரி’ நாளிதழின் வாரமலரில், 1933-34-ஆம் ஆண்டுகளில் “பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் ஜீவிய வரலாறு’ என்ற தலைப்பில் வ.உ.சி. ஒரு தொடர் எழுதினார். நிறைவுறாத இந்த வாழ்க்கை வரலாறு, “திலக மகரிஷி’ என்ற பெயரில் வ.உ.சி.யின் வெளிவராத எழுத்துகளின் பட்டியலில் இடம்பெற்று வந்தாலும், தேடப்படாமலும் தொகுக்கப்படாமலும், பதிப்பிக்கப்படாமலும் நின்றுவிட்டது. அதை வேறுபல ஆவணங்களுடன் தொகுத்து வெளிக்கொணர்ந்திருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
திலகரும் காந்தியும் :: நூல் வெளியீட்டு விழா – கண்ணன்
ஆ. சிவசுப்ரமண்யன் ‘வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்’ என்ற நூலின் வழி வ.உ.சி ஆய்வுக்குப் பங்களித்திருக்கும் தமிழின் முக்கிய ஆய்வாளர். மாணவர்களுக்காக வ.உ.சி.யின் தெளிவான ஒரு வாழ்க்கை வரலாறு நூலையும் இவர் எழுதியிருக்கிறார்.
நூல் வாசிப்பு முடிந்த பின்னர் ஆ. சிவசுப்பிரமணியன் உரையாற்றினார்.
அவரது பேச்சின் சாராம்சம்: “பதிப்பு நூல்கள் இன்று தமிழகத்தில் மலினப்படுத்தப்பட்ட சரக்காக இருக்கின்றன. அதுவும் கணிப்பொறியும் ஒளிநகலும் வந்தபிறகு, ஒரு அரிய நூலைக் கண்டெடுத்து ஒளிநகலெடுத்துக் கொடுத்தவர்கள் பதிப்பாசிரியர்கள். பழைய இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்தவர்களும் பதிப்பாசிரியர்கள்; இவர்களும் பதிப்பாசிரியர்கள் – ஏனெனில் இவர்கள் பதிப்பாசிரியர்கள் என்று இந்த நூல்களில் குறிப்பிட்டிருக்கும். மாறாக இந்நூலின் பதிப்பாசிரியர் உண்மையான பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ளார் என்பதை இந்நூலைப் படித்துப் பார்த்து அறியலாம். ஒரு உண்மையான பதிப்பாசிரியரின் உழைப்பு ஒரு நூலாசிரியரின் உழைப்புக்கு நிகரானது.
நம்முடைய நாட்டில் பொதுவாக ஒரு ஒற்றை அணுகுமுறைதான் மேலோங்கியிருக்கும். ஒருவர் சமூக சீர்திருத்தவாதி அல்லது தேசியவாதி அல்லது தொழிற்சங்கவாதி என்றால் அதற்குள்ளேயே அவர்களை அடக்கிவிடுவது. ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் பரிணாம வளர்ச்சியுண்டு. ரானடே போன்றவர்கள் மிதவாதிகள் என்றும் அவர்கள் தீவிரமான தேசிய உணர்வு இல்லாதவர்கள், ஆங்கிலேயச் சார்புடையவர்கள் என்று நமது பாடப் புத்தகங்கள் நமக்குக் கற்றுத்தருகின்றன. ஆனால் ரானடே ஒரு முக்கியமான சீர்திருத்தவாதி. திலகர் ஒரு அழுத்தமானத் தேசியவாதியாக இருந்தபோதிலும் முதன்முறையாக இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தைத் தேசியப் போராட்டத்தில் இணைத்தவர் என்றபோதிலும் சமூக சீர்திருத்தத்திற்கு எதிரானவராக விளங்கினார் என்பதும் ஒரு கசப்பான உண்மை.
வ.உ.சி.யின் கடைசி கால் நூற்றாண்டில், அவர் சிறையிலிருந்து வெளி வந்த பிறகு, அவருடைய அரசியல் பங்களிப்பு மிகக் குறைவு. இதற்குச் சிறை செல்லும் அச்சமும் காரணம் அல்ல. அரசியலிலிருந்து அவர் ஒதுக்கியதும் உண்மை அல்ல. அவர் சென்னை மாகாணத் தமிழர் சங்கத்தைத் துவக்கி காங்கிரசினுள் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பிராமணியத்தை எதிர்த்தார்.
ஆனால் அவர் பிராமண துவேஷி அல்ல. அவர் சிறையிலிருந்தபோது பல பிராமணர்கள் அவருக்கு உதவினார்கள். பின்னரும் பல பிராமணகுல நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். ஆனால் கடைசி ஆண்டுகளில் அவர் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டார் என்ற ஆய்வை அவரது இக்காலகட்டத்தில் சேலத்தில் நடந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க மாநாட்டுத் தலைமை உரையில் அவர் பேசிய கருத்துகளிலிருந்து – பிராமணியத்தை எதிர்த்து வகுப்புவாரி இடஒதுக்கீட்டை ஆதரித்தும் அவர் ஆற்றிய உரையிலிருந்து துவங்க வேண்டும்.
வ.உ.சி. ஒரு சமூக சீர்திருத்தவாதி. இட ஒதுக்கீட்டிற்காகக் குரல் கொடுத்த முதல் தேசியவாதி. திலகர், மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சட்டசபையில் இட ஒதுக்கீட்டைக் கேட்டபோது ‘சட்டத்திற்குக் கீழ்ப்படிவதே உங்கள் கடமை. சட்டம் இயற்றுவதை பிராமணர்களிடம் விட்டுவிடுங்கள்’ என்று கருத்து சொன்னவர். ஜோதிநாத் பூலே இதைக் கண்டித்திருக்கிறார். மேலும் திலகர், தாழ்த்தப்பட்டவர்கள் உயர்கல்வி பெறு வதை எதிர்த்தார். வ.உ.சி., ராமையா தேசிகர் என்ற கண்ணிழந்த தாழ்த்தப்பட்ட வரை உயர்சாதி ஆதிக்கத்திலிருந்த அவரது கிராமத்தில் அவர் வீட்டில் தங்கவைத்தார். சகஜானந்தரையும் தன் வீட்டில் தங்கவைத்து அவரைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திப் பணம் சேகரித்துக்கொடுத்தார். இந் நிலையில் வ.உ.சி.யும் திலகரும் எதிரும் புதிருமானவர்கள்.
இந்நூல் நமக்குக் கற்றுத்தரும் செய்தி – இந்நூலின் முன்னுரையின் சிறப்பு இங்கேதான் வெளிப்படுகிறது: நமக்கு மாற்றான கருத்தைக் கொண்டிருப்பவர்களை ஒதுக்கிவைக்கக் கூடாது. இதுதான் நூலின் மையச் செய்தி. வ.உ.சி. தன் சீர்திருத்தக் கருத்துகளில் இறுதிவரை மாறவில்லை. இந்த நூலில் வ.உ.சி., திலகரைச் சமத்காரமாகத் தன் ‘அரசியல் குரு’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நூல் பதிப்புரையில் சலபதி வெளிப்படுத்தியிருக்கும் வ.உ.சி. பற்றிய கணிப்பு முழுக்கச் சரியானது. பல ஆவணங்களைப் பின்னிணைப்பாக அவர் கொடுத்திருக்கும் பாங்கு முக்கியமானது. தான் வெளியிடும் ஆய்வு நூல்களில், பல பின்னிணைப்புகளைத் தவிர்க்காமல் பிரசுரிக்கும் காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும். இப்பதிப்பு முன்னோடியான பதிப்பு.”
வ.உ.சி. கண்ட பாரதி
சூரியின் டைரி-23: வ.உ.சி. கண்ட பாரதி | சூரியோதயம் – Suriyodayam Tamil
வ.உ.சி. கண்ட பாரதி என்ற இந்நூல் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து மலர்வதாக இந்நூலின் முன்னுரையில் வ.உ.சி. அவர்களின் மைந்தர் திரு வ.உ.சி. சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ளார். (முன்னுரையின் தேதி 1946 நவம்பர் பதினேழாம் நாள்)
முப்பதே பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதற் பதிப்பை சென்னை ஆருத் புக்ஸ் 2002ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. விலை ரூபாய் பத்து மட்டுமே.
வ.உ.சி. பாரதியை நேரில் பார்த்தது 1906ம் வருடம் சென்னையில் இந்திய பத்திரிக்கை உரிமையாளர் ஸ்ரீ திருமலாச்சாரியார் அவர்களது வீட்டில். அந்த சந்திப்பு இந்நூலில் வ.உ.சி. அவர்களது வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளது.
அவர்களது
- நட்பு எப்படி வளர்ந்தது,
- எப்படி நெருக்கம் அதிகமானது,
- வ.உ.சியின் உள்ளத்தில் நாட்டுப்பற்று சுடர் விட்டெரிய பாரதி எப்படி காரணமாயிருந்தார்,
- இருவர் தேசப்பணியில் இணைந்து செயல்பட்டது,
- சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் லோகமான்ய திலகர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரோடு பாரதியும், வ.உ.சியும் இணைந்து மிதவாதிகளிடமிருந்து போராடிப் பிரிந்து தனி அமைப்பை உருவாக்கியது,
- சிதம்பரனார் அவர்கள் கிட்டத்தட்ட நான்காண்டுகள் சிறைவாசம் முடித்து,
- புதுவை சென்று பாரதியோடும், அரவிந்தரோடும் அளவளாவி மகிழ்ந்தது, திட்டங்கள் தீட்டியது
போன்ற சுவையான தகவல்களும் நமக்குத் தெரிய வருகின்றன.
மேலும் வ.உ.சியின் தலைப்புதல்வன், அவரது தந்தையின் பெயரைச் சுமந்த உலகநாதன், தந்தையைப் போல் துணிவாகப் பேசுவதைப் பாராட்டி பாரதி “லோகநாயகி புதல்வன்” என்ற தலைப்பில் கவி எழுதிக் கொடுத்ததையும், அது அப்போது சிறையிலிருந்த வ.உ.சிக்கு அனுப்பப்பட்டதையும், அவர் அதைப் படித்து மகிழ்ந்ததையும், இருபத்துஇரண்டு வயதில் அந்த உலகநாதன் மறைந்ததையும், அதைப்போல அந்தக் கவிதை காணாமல் போனதையும் அறியும்போது நம் மனம் நெகிழ்கிறது.
பாரதி, வ.உ.சி. இருவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்த இன்னல்கள் நம் மனதைப் பிழிகின்றன. பாரதி அன்பர்களும், வ.உ.சி. பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்.
பதிவு – கூட்ட எண் 27 :: ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ – சுகந்தி பன்னீர்செல்வம்
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என வீரம் செறிந்த விடுதலைப் போராட்ட செயல்பாடுகளா லும் , அதற்காக அவருக்குக் கிடைத்த சிறைவாசக் கொடுமைகளாலும் பெரிதும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் தமிழ் முகம் தமிழர்கள் பலரும் அறியாதது. அதைப் பற்றிப் பேசியவர் திருமதி.சுகந்தி பன்னீர்செல்வம். இந்த உரைக்காக நூல்களை சேகரிக்க தான் பட்ட சிரமத்தையும், நண்பர் திரு. மு.இராமனாதனின் முயற்சியால் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதியிடமிருந்து ஆய்வு நூல்கள் கிடைத்ததையும் நன்றியோடு விவரித்து உரையைத் தொடங்கினார்.
அந்த நூல்கள்:
- ஆ.இரா. வேங்கடாசலபதியின் “வ.உ.சியும் பாரதியும்” (மக்கள் வெளியீடு,1994)
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இரண்டு நூல்கள்: எஸ். கண்ணனின் “வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை ” (2005),
- ம.ரா. அரசுவின் “வ.உ.சி. வளர்த்த தமிழ்” (2002);
- சாகித்திய அகாதெமி் வெளியிட்டு வரும் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் ம.ரா.அரசு எழுதிய “வ.உ. சிதம்பரனார்”(2005);
- வ.உ.சி கண்ட மெய்ப்பொருள் (டாக்டர். அரங்க இராமலிங்கம்).
‘விவேகபாநு’ பத்திரிக்கையில் ஆரம்பித்த வ.உ.சி-யின் இலக்கியப் பணி பல்வேறு துறை களைச் சார்ந்த கட்டுரைகளாக வளர்ந்தது. அதன் பின்னர் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள்; இலங்கையிலிருந்து பிரசுரமான வார இதழில் எழுதப்பட்ட திலகரின் வாழ்க்கை வரலாறு; அரசியலில் ஈடுபட்ட மக்கள் எழுச்சியைத் தூண்டிய உணர்ச்சிகரமான அரசியல் சொற்பொழி வுகள்; தமிழில் மேடைப் பேச்சு எனும் புது வகை; சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட நீதிநூல்கள்; மெய்யறிவு(நன்னூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல்), மெய்யறம் (திருக்குறள் பாணியில் எழுதப்பட்ட ஒரு அடி கொண்ட பாக்கள்) என்று அவரது மொழித் தொண்டு பரந்தது.
மேலும் அவரை மிகவும் கவர்ந்த ஜேம்ஸ் ஆலனின் சில வாழ்வியல் நூல்களின் மொழிபெயர்ப்புகள்: அகமே புறம் (Out from the Heart), மனம் போல் வாழ்வு(As a man thinketh), வலிமைக்கு மார்க்கம்(From poverty to power), சாந்திக்கு மார்க்கம்(The way to peace). இவற்றைத் தவிர அவர் பதிப்பித்த நூல்கள்: திருக்குறள் மணக்குடவர் உரை, சிவஞான உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை மற்றும் இன்னிலைக்கு விருத்தியுரை. மேலும் கவிதைத் தொகுப்பான அவருடைய பாடல் திரட்டு; தமிழ் மொழியில் கவிதை நடையில் முதலில் எழுதப்பட்ட அவருடைய சுயசரிதை என்ற நூல்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளுடனான உரை. வ.உ.சி-யின் காலத்திற்குப் பிறகு வெளிவந்த நூல்கள்: அவருடைய மேடைப் பொழிவுகளின் தொகுப்பு மற்றும் வ.உ.சி கண்ட பாரதி. ஆக, வ.உ.சி-யின் 16 நூல்களைப் பற்றியும் அமைந்தது அவருடைய பேச்சு. பேச்சாளரின் விண்ணப்பம் வ.உ.சி-யின் படைப்புகளை இணையத்தில் ஏற்றி அவரின் தமிழ் இலக்கியப்பணியைப் பரவலாக உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.
இந்த உரையில் வரும் அனைத்துக் குறிப்புகளும், கருத்துகளும், மேற்கோள்களும் தகுந்த உரிமம் பெறாமல் இந்த ஆய்வு நூல்களிலிருந்து பெற்ற இரவல்களேயாகும்.
வ.உ.சியின் இளம்பிராயத்திலேயே அவருக்கு ஒரு நல்ல இலக்கிய அடித்தளம் அமைந்தது. வ.உ.சியின் முன்னோர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்கினர்; கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். ஒட்டப்பிடாரத்தில் இவருடைய வீட்டிற்குக் “கவிராயர் வீடு” என்ற பெயரும் உண்டு. இளமையில் வ.உ.சிக்குக் கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆதலால், இயல்பாகவே இலக்கிய நூல்களைப் பயிலும் வாய்ப்பினை அவர் பெற்றார். ஆத்தி சூடி, உலகநீதி முதலிய ஒழுக்க நூல்களைப் பலமுறை கேட்டுப் பயின்றார். கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நளவெண்பா, மூதுரை ஆகிய நூல்களைப் பொருளுணர்ந்து கற்றார். மகாபாரதம் மற்றும் திருவிளையாடல் புராணக்கதைகளையும் நீதிக்கதைகளை யும் பாட்டனார், பாட்டியிடமிருந்து விரும்பிக் கேட்டவர்.
தொடக்க காலத்தில் வ.உ.சி யின் மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தோய்ந்திருந்தது. தனிமனித ஒழுக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில், “விவேகபாநு” என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து, “லெளகிகத்திற்கும் வைதீகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை”யாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் ‘விவேகபாநு’வில்தான் வெளியாயின. அவருடைய முதல் கட்டுரை “கடவுளும் பக்தியும்” என்பதாகும். 1936 ஜனவரி 17, தினமணியில் வெளிவந்த “உலகமும் கடவுளும்” என்பதே அவர் எழுதிய கடைசிக் கட்டுரையாகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளில் ஆன்மீகம், அரசியல்,வாழ்க்கை வரலாறு, மொழி, இலக்கியம், மர்றும் பொதுவான பொருள்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
வ.உ.சி யின் கட்டுரைகளின் சிறப்பு அவற்றிலிருந்த எளிமையும் தெளிவும். உதாரணத்திற்கு “கடவுள் ஒருவரே” என்ற கட்டுரையில், “எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறாரென அவர் அறிகின்றிலர். தமது மதத்திற்குரிய கடவுளே உண்மையானவரென்றும், பிற மதத்துவருடைய உண்மையல்லாதவரென்றும் அவர் நினைக்கின்றனர். அவ்வெண்ணந்தான் இவ்வளவு விபரீதங்களையும் விளைவிக்கிறது” என்கிறார். மேலும், “ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் தோன்றிய ஒவ்வொரு பெரியவருடைய அறிவு விளக்கமேயன்றி வேறன்று. ஒருவர் அறிவுக்கு மற்றொருவர் அறிவு எல்லா விஷயங்களிலும் பொருத்த முடையதாக இருக்குமா? சில விஷயங்களில் பொருத்தமின்றித்தானே இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா?” என்று எளிமையாக தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
தாய் நாட்டின் பெருமை உணரப்பட வேண்டும் என்பதை, “ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவர் அவருக்கு தாயென்றால், அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப் பெற்ற தாயினும் மேலென்பதற்குத் தடையென்ன?” என்றும், “வறுமையினும் வியாதியினும் சகிக்கொணாக் கொடியது அடிமைத்தனமே” என்றும் சொல்கிறார்.
இலங்கையில் இருந்து வெளிவரும் “வீரகேசரி” என்னும் நாளிதழில் ‘பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் வரலாறு’ என்னும் தலைப்பில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். இது இவருடைய கட்டுரைப் பணியில் மற்றுமொரு சாதனையாகும்.
மேடைப் பேச்சு:
ஆன்மிக உணர்வும் தமிழ் உணர்வும் வ.உ.சியின் குருதியில் கலந்தவை. இடையில் தோன்றிய அரசியல் ஈர்ப்பு அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றியது. தமிழகத்தில் விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் தலைவரானார். விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் தமிழைப் பயன்படுத்தினார். இன்று பெருவழக்காகவும், இயல்பாகவும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் நடைமுறையில் உள்ள அரசியல் மேடைப்பேச்சு என்பது வ.உ.சியின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அரிய பொருளாகவே இருந்தது. சொற்பொழிவுக் கலையை – மேடைப்பேச்சைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் என்ற வகையில் குறிக்கத்தக்கவர் சுப்பிரமணிய சிவா ஆவார்.
ஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை- அரசியல் சொற்பொழிவை ஒரு கலையாகவே வளர்த்துப் பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து புதிய வரலாறு படைத்தவர்.
வ.உ.சியின் பேச்சுத் தமிழ், ஆழமும் வேகமும் உள்ள ஓர் ஆறு கரைபுரண்டு வெள்ளமிட்டு வரும் அழகை நினைவூட்டும் என சான்றோர்கள் பாராட்டியுள்ளார்கள். அன்றைய சுயராஜ்ய கட்சியிநன் கொள்கை பரப்புச் செயலாளர் அவர். தமிழை எளிமைப்படுத்தி, பொதுக்கூட்டம் கூட்டிப் பேசும் முறையை பிரசித்தமாக்கி, அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் ஆழந்து கிடந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெற வைத்த தமிழ் புரட்சியாளரும் ஆவார்.
மெய்ஞான நூல்கள்:
பால கங்காதிர திலகர் பர்மா சிறையில் அடைப்பட்டிருந்த பொழுது “கீதாரகசியம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவும் “நான் கண்டுணர்ந்த இந்தியா” என்ற வரலாற்று நூலை எழுதி முடித்தார் சிறையில் இருந்தபடியே. அதுபோலவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறையில் இருந்த பொழுது தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூல், நீதிமுறை போதித்தார். அக்குற்றவாளிகளில் சிலர் “பாக்களாகச் செய்து கொடுத்தால் மனனம் செய்து நினைவு கூற இலகுவாக இருக்கும்” என்ற வேண்டிக் கொண்டனர். அதற்கிணங்கி பத்து அதிகாரங்களைக் கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய “மெய்யறிவு” என்ற நூலை இயற்றினார்.
இந்த நூல்
1.தன்னையறிதல்,
2. விதியிலறிதல்,
3. உடம்பை வளர்த்தல்,
4. மனத்தையாளுதல்,
5. தன்னிலையில் நிற்றல்,
6. மறங்களைதல்,
7. அறம்புரிதல்,
8. தவஞ்செய்தல்,
9. மெய்யுணர்தல், மற்றும்
10. மெய்ந்நிலையடைதல்
என்ற அதிகாரங்களைக் கொண்டதாகும். உடல், உள்ளம், உயிர் என்ற மூன்றின் சேர்க்கைதான் நாம். “உடலைப் புறக்கணித்தல் தவறு”, “ஒருவன் முதலில் தான் யார் என்பதை அறிதல் வேண்டும்”, “மறம் களைய வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கருத்துகள் கொண்ட நூல் இது.
அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அனுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும் பயன்களாகும்.
அடுத்ததாக, திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துகளை மையமாக வைத்து எழுதப்பெற்ற நூல் “மெய்யறம்”. தமிழ் இலக்கியங்களுள் வ.உ.சியின் மனத்தை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ.உ.சியின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மனநலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் இந்நூலை இயக்கி உள்ளார்.
இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் 5 இயல்களைக் கொண்டது. ஓர் இயலுக்கு 25 அதிகாரங்கள் என்றும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஒற்றை அடிகள் கொண்டு 1250 அடிகள் உண்டு.
“மானுடப் பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வராய், அரசராய், அந்தணராய் படிப்படியாய் வாழ்வில் உயர்ந்து இறுதியில் மெய்ந்நிலையை அடையலாம்” என்பது அவர் வலியுறுத்தும் கருத்து. மெய்யறத்தைப் பற்றி ராஜாஜி பாராட்டுகையில் “இந்நூலிற் கூறியுள்ள பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய கருத்துகளால் மணப்படுத்தி அற்பக் கல்வி உடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது” என்கிறார்.
மெய்யறத்தின் முதல் பகுதியான மாணவரியலில் முதல் அதிகாரமான மாணவர் கடமை என்ற பகுதியில்:
“மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்
ஆணும் பெண்ணும் அது செயவுரியர்
இளமைப் பருவம் இயைந்ததற்கே
மற்றைய பருவமும் வரைநிலையிலவே
அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்
அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்
தக்க ஆசிரியரால் இன்னியலறிதல்
ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்
இறைவன் நிலையினை எய்திட முயறல்”
மொழி பெயர்ப்பு நூல்கள்:
அடுத்ததாக கலாசாலைகளுக்குப் பாடநூல்கள் விதிக்கும் பாடப் புத்தகச் சபையார் (Text Book Committee) வ.உ.சியின் காலத்திலேயே ஏற்றுக் கொண்ட நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வ.உ.சி மொழிபெயர்த்தவை ஆகும்.
சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் தத்துவ நூல்களை எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலேய எழுத்தாளரின் எழுத்துக்களால் கவரப்பட்ட வ.உ.சி அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சிறைக்காலத்தில் அது ஈடேறியது. ஜேம்ஸ் ஆலன் தமது 24ஆம் வயதில் “ஆசிய தீபம்” (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று.
“கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அவர் கருத்து கொண்டிருந்தார். அவர் இறந்து பிறகு கூட கீழை நாட்டு வழக்கப்படி தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் விருப்பத்திற்கேற்ப, அவர் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாக சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவருடைய ஆணித்தரமான கருத்து.
“அகமே புறம்”-” Out from the Heart” என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலுக்கு சுதேசமித்திரனில் வந்த விளம்பரம்: “இது ஸ்ரீமான் வ.உ சிதம்பரம் பிள்ளையவர்கள் கோயம்புத்தூர் சிறை வீட்டிலிருந்து இயற்றிய இரண்டாவது தமிழ் நூல். இது லெளகிக உன்னத நிலையையும் வைதிக உன்னத பதவியையும்சுலபமாக அடையச் செய்யும் மார்க்கங்களை வரிசைப்படுத்தித் தெளிவாகக் கூறுகிறது. இதனைக் கற்றுணர்ந்து இதில் கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம்”.
இது விளம்பரத்துக்காக எழுதப்பட்ட மிகையான வார்த்தை களல்ல. ஒரு சிறிய அளவிலான சரியான மதிப்பீடாகும்.
“இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வோர் ஆடவரும், பெண்டிரும், சிறுவரும், சிறுமியரும் கற்க வேண்டும் என்பதும், இந்நூல் நமது நாட்டில் நிலவும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நிலைபெற்று, நமது நாட்டில் நிலவ வேண்டும் என்பதும் எனது கோரிக்கை”, என்று பாயிரத்தில் வ.உ.சி அவரின் உள்ளக்கிடக் கையை தெரியப்படுத்தி உள்ளார்.
இந்நூலை மூன்று பாடங்களாகப் பிரித்து, முதல் பாடத்தில் சரீர தீயொழுக்கங்களாக சோம்பலும், மீதூண் (அதிகம் உண்பதும்) எனவும், இரண்டாம் பாடத்தில் நாவின் தீயொழுக்கங்களாக புறங்கூறல், பயனில சொலல், நிந்தித்தல், புன்மொழி பகரல், குதர்க்கம் பேசல் எனவும் குறிப்பிட்டு, மூன்றாவது பாடத்தில் கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்களாக மனத்திருத்தத்தில் நிஷ்காமிய கருமம், கடமை, அசையாத நடுவு நிலைமை, அளவற்ற பொறுமை எனவும் எடுத்து இயம்பியுள்ளார்.
இந்த நூலைப் பற்றி பாரதியார் தனது மதிப்புரையில் கூறுகிறார்: “அகமே புறம் என்ற பெயருடன் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் புதிய நூல்,ஆலன் என்ற பண்டிதரின் ஆங்கில் நூல் ஒன்றிலிருந்து மொழி பெயர்த்தது. எனினும், பிள்ளையவர்கள் அதிலே பரிபூரணமான தமிழ் மணத்தையேற்றியிருக்கிறார்கள். பிற நாட்டுப் பொன்னிலே நமது முத்திரையை வைத்து நமது பொருளாக்கி விட்டார்கள்.
இது மொழிபெயர்ப்பென்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில் சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம். நோய், கீழ்மை, மிடிமை முதலிய தளைகளை இப்பிறப்பில் இன்றே, இப்பொழுதே தொலைத்து நலமெய்த வேண்டுவோர் இந்நூலின் உபதேசங்களைக் கைக்கொள்க. உடலுறுதி, அறிவு, ஆக்கம், தெளிவு, வீடு ஆகிய இன்ப நிலைகளைப் பெற விரும்புவோர்க்கு ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் நல்ல துணையாக அமைந்துள்ளார்கள். இது நன்று.”
இவ்வண்ணமான பாரதியின் மதிப்புரை, வ.உ.சியின் தமிழ் நடையையும் மொழியாக்கச் சிறப்பையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.
“மனம் போல வாழ்வு” – As a man thinketh என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் தமிழாக்கம் “எண்ணிய எண்ணியாங் எய்துவ; எண்ணியார் திண்ணியராகப் பெறின்” என்னும் திருக்குறளுடன் பாயிரத்தை ஆரம்பித்திருக்கிறார். “தம்மை ஆக்குபவர் தாமே” என்ற உண்மையை மக்கள் உணருமாறு செய்யக் கருதிய சிறுநூல் “இது முதனூற்குச் சற்றேறக்குறைய சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ, அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன்.
மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில இடங்களில் முதலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்று வ.உ.சி பாயிரத் தில் குறித்திருப்பது அவர் எடுத்திருக்கும் சிரத்தையைக்காட்டுகின்றது.
“வலிமைக்கு மார்க்கம்”. “From Poverty to Power” என்றா ஜேம்ஸ் ஆலனின் நூலின் முதல் பாகமான “The part of Prosperity”இன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதில் துன்பக் கடலைக் கடக்கும் நெறிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. “உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. துக்கத்தால் துயர் உறாத கண்ணே இல்லை.
கவலையும் துன்பமும், துக்கமும் வாழ்க்கையின் மாயைகள் எனலாம். துன்பத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் தப்புவதற்குரிய மார்க்கம், துன்பமோ துக்கமோ அவற்றின் தன்மையைச் சரியாக அறிதலேயாகும்.துன்பத்தை வெறுப்பதாலோ கவனியாது இருத்தலினாலோ தப்பிக்க முடியாது. அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பது மட்டும் போதாது, அது எதன் பொருட்டு வந்ததென்றும், எதனை அது கற்பிக்க நிற்கிறதென்றும் அறிதலே அவசியம்” என உணர்த்தும் நூல்.
இதில் வழக்கிலுள்ள பல வட மொழி வார்த்தைகளை உபயோகித்திருக்கும் வ.உ.சி, அதற்கு இணையானதமிழ் வார்த்தைகளையும் ஆரம்பித்திலேயே கொடுத்திருக்கிறார்.
“சாந்திக்கு மார்க்கம்”, “From Poverty to Power” என்ற நூலின் இரண்டாம் பாகமான “The way to peace” என்பதனின் மொழியாக்கம் இது. இதில் தியான வலிமை, யானும் கடவுளும், ஆன்ம வலிமையை அடைதல், சுயநலமற்ற அன்பை அனுபவித்தல், கடவுளோடு ஐக்கியமாதல், முனிவர்களும், முனிகளும், இரஷிகர்களும் ஊழியம் புரிதல், பூரண சாந்தியை அடைதல் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.
உரை நூல்கள் :
ஆழ்வார் திருநகரில்வாழ்ந்த இரத்தினக்கவிராயர் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு “இன்னிலை”க்கு விருத்தியுரை எழுதி பதிப்பித்தார். அறப்பால், பொருட்பால், இன்பப்பால்,வீட்டுப்பால் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டு 45 பாடல்களால் ஆனது இன்னிலை.
வ.உ.சி அவர்கள் இன்னிலையை ஆய்ந்து அதன் சிறப்பினை, திருக்குறளோடு உள்ள ஒப்பினை அக்குவேர் ஆணிவேராகக் காட்டியுள்ளமை போற்றற்குரியது ஆகும். மேலும், “இந்நூலாசிரியர் போன்றதக்க புலவர் திருக்குறளின் பொருள்களையும் சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நூல் செய்யுள்களதுஅழகு முதலியவை திருக்குறட் செய்யுள்களது அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட் டனவாயிருக்கும்” என முடிவுரையில் முடித்திருக்கின்றார்.
வ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது “சிவஞான போத” சூத்திரங்களுக்காகும். இது பதினான்கு மெய்ப்பொருள் நூல்களில் ஒன்றாகும். மெய்கண்டார் இந்நூலை அருளிச் செய்தார். சிவஞானபோதத்திற்கு முதன் முறையாக சிற்றுரையும் பேருரையும் வழங்கியவர் சிவஞான முனிவர் ஆவார்.
திருக்குறளுக்கும், சிவஞானபோதத்திற்கும் எளிய உரை காண வேண்டும் என்று வ.உ.சி ஆசைப்பட்டிருந்தார். நாள் ஒன்றிற்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாட்களுக்கு சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எழுந்த உரைகள் பல மதக்கோட்பாடுகளையும் அவற்றின் கண்டனங்களையும் காட்டியுள்ளன. ஆனால், வ.உ.சி அவற்றினைத் தமது உரைநடையில் காட்டாது, எளிய, நேரிய உரையினை எழுதியுள்ளார்.
பாடல் திரட்டு:
இது வ.உ.சி எழுதிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் வ.உ.சி எழுதிய பாடல்கள் இதன் முதல் பகுதியாகவும், சிறையிலிருந்த காலத்தில் எழுதிய பாடல்கள் இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 380 பாடல்கள். அவற்றுள் 100 பாடல்கள் கடவுள் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கம் பற்றியும் அமைந்தவை. எஞ்சிய 180 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவுமுறைத் தொடர்பில் அமைந்தார்க்கும் எழுதப்பட்டவை.
இந்த தனிப்பாடல் திரட்டிலிருந்து சில கவிதைத் துளிகள்.
சிறைவாழ்க்கையில் ஒரு நாள் கேழ்வரகுக் கூழை உண்ண நேர்ந்த நாள் – வ.உ.சியின் மனத்தில் பின்னோட்டமாகக் கடந்த காலத்தின் இனிய நினைவுகள். தம் மனைவிக்கு எழுதியது இக்கவிதை.
“முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம் வாதம்
அக்காரம் தேன்பாலோ டட்டூட்டக் – கக்குமென்னா
கேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்
வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து”
இப்பாடல் தொகுப்பில் 350 வெண்பாக்கள், 1 தாலாட்டுப் பாடல், 3 விருத்தப்பாடல்கள், 15 கட்டளைகவித்துறைப் பாடல்கள், 11 நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் அடங்கும்.
சுயசரிதை:
சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம். பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார். இது ஒரு வரலாற்று ஆவணம். அவருடைய குடும்ப வரலாறு; அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில வரிகள் :
இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி:
“சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
‘தம்’ மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்.”
சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:
“தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே”
செக்கிழுத்ததைப் பற்றி:
“திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான் , உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!”
வ.உ.சி வாழ்ந்த வாழ்க்கை என்பது உலகம் அறிந்த ஒரு திறந்த புத்தகம் போன்றது. அதில் ஒளிவு மறைவு என்பதற்கே இடமில்லை. அதற்கு அணி சேர்த்தாற் போன்று அவர் வரைந்த சுயசரிதம் அமைகின்றது. சுயசரிதையில் உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டு, அனைத்தும் சொல்லும் பாங்கும், தம்முடைய தவறு, குற்றம், குறை போன்றவற்றையும் மறைக்காமல் எழுதிச் சொல்லும் பாங்கும் உலகோர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது.
பதிப்பு நூல்கள் :
தன்னை “திருக்குறள் அன்பன்’ என்று அறிமுகம் செய்து கொண்டவர் வ.உ.சி. “தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னை பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களேயாயி னும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” என வ.உ.சி கூறியுள்ளார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை ஓதுவதும், திருக்குறளைச் சுட்டுவதும் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் எடுத்தாள முடியுமோ அங்கெல்லாம் குறளடிகளைக் கையாண்டார்.
திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் பதிப்பித்தவர் வ.உ.சியே ஆவார். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி திருமலையர், மல்லர், கவிப்பெருமாள் என்ற பதின்மர் உரைகளில் அச்சமயத்தில் தமிழ்நாட்டில் பயின்று வந்தது பரிமேலழகருரை ஒன்றே. மற்ற உரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும், தேடுவிக்கவும் முயன்று, அதன் பலனாக அவருக்குக் கிடைத்தது மணக்குடவருடைய பிரதி ஒன்றே. அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றியது. வ.உ.சி க்கு அவ்வுரையில் கண்ட எளிமையும் தம்மனமொத்த கருத்துப் பரிமாற்றலும்அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது. அதைப் பதிப்பித்தது மட்டுமன்றி, தானும் ஒரு உரை நூல் எழுதினார். அவருடைய உரையில் பரிமேலழகரினின்றும் பல அதிகாரங்களை மாற்றியும், கருத்துக்களில் புது வீச்சினை வரைந்தும் ஒரு புது வழியைக் காட்டியுள்ளார்.
தொல்காப்பியம் இளம்பூரணம் உரையை பதிப்பித்ததும் அவருடைய இலக்கியப் பணிகளில் ஒன்றாகும். எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ம் ஆண்டு அச்சிடத் தொடங்கி, 1928-ல் எழுத்ததிகாரம் வெளிவந்தது. 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் பகுதிகள் தனிநூலாக வெளிவந்தன. 1936-ல் எஞ்சிய மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் தனிநூலாக வெளியாயின. ஏடுகளிலும் அச்சேடுகளிலும் பொழிப்புரையாகக் கொடுக்கப்பட்டிருந்த உரைப்பகுதி இவரால் பதவுரையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இடத்திலும் கற்போர் எளிதில் உணருமாறு பொருள் தொடர்பு நோக்கி, நூற்பாவின் சொற்களும், அவற்றின் பொருள் சொற்களும் பிரிக்கப்பட்டு அடையாளங்கள் இட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
தமிழறிஞர்:
அவருடைய நூல்கள் மொத்தம்- 16.
அவை மொழியாக்கம் -4,
உரைநூல்கள்-3,
பதிப்புகள்-3,
மெய்ஞ்ஞானம்-2,
பாடல் திரட்டு-1,
சுயசரிதை -1 மற்றும்
அரசியல் பெருஞ்சொல் என்று அவருடைய அரசியல் மேடைப்மொழிவுகளின் தொகுப்பு,
வ.உ.சி கண்ட பாரதி என்ற மற்றுமொரு தொகுப்பு.
வ.உ.சி யின் சுயசரிதையும், வ.உ.சி கண்ட பாரதியும் தொகுத்து பதிக்கப்பட்டது 1946-ல், அவரது மறைவுக்குப் பின்.
வ.உ.சி யின் இலக்கியப் பணி ஒரு மேடைப்பேச்சாளராக, கட்டுரையாளராக, மொழி பெயர்ப்பாளராக, பதிப்பாளராக நின்று விடாமல் தமிழை, தமிழ் இலக்கியங்களை மற்றவருக்கு போதித்த சிறந்த ஆசிரியராகவும் இருந்தார்.
சுவாமி சகஜானந் தருக்கு, பிற்காலத்தில் சிதம்பரத்தில் நந்தனார் கழகம், நந்தனார் பாடசாலை ஏற்படுத்திய அவருக்கு தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்து தமிழ் பயிற்சி ஊட்டினார். ராஜாஜியும் வ.உ.சி யிடம் திருக்குறள் பயின்றதாக சரித்திரம் சொல்லுகிறது.
தம்முடைய வாழ்வின் இறுதி நாட்களில் அன்றாடம் தம்முடைய வீட்டில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். “தூத்துக்குடி சைவசித்தாந்த சபை” என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம், தொடர்பான சொற்பொழிவுகளை பல இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்தி வந்தார்.
தம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை – ‘மேடைத்தமிழ்’ என்னும் துறையை வழங்கினார். தம்முடைய ஆன்மிக எழுத்துகளால், பின்னாளில் பல்கிப் பெருகித் தழைத்த ‘வாழ்வியல் நூல்கள்’ என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார்.
இன்று மில்லியன் கணக்கில் ‘வாழ்வியல் நூல்கள்’ விற்பனையாகும் நேரத்தில், வ.உ.சியின் தமிழ் மொழியாக்கங்களை நம் தமிழகம் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. இவை கருத்துக் கருவூலப் பெட்டகங்கள்; நம் வாழ்வுடன் இணைந்து பொருள் உணர வைப்பவை. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நீதிப்பாட (Moral Science) வகுப்புகளுக்கு பாடநூல்களாக இவைகளை மீண்டும் கொணர்ந்தால் சமூகமும், நாடும் உயரும். ‘அகமே புறம்’ சிறிய அளவிலான நூல்-56 பக்கங்கள்; ‘மனம் போல வாழ்வு’-59 பக்கங்கள்; ‘வலிமைக்கு மார்க்கம்’- 100 பக்கங்கள்; ‘சாந்திக்கு மார்க்கம்’-102 பக்கங்கள். சாத்தியப்பட்டால் இணையதளத்தில் ஏற்றி வ.உ.சி யின் தமிழ்த் தொண்டைப் பரப்ப முயற்சிக்கலாம்.
செல்வமும், செல்வாக்குமாக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936), தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த தன்னலமற்ற தேசபக்தரான, கப்பலோட்டிய தமிழரான, திருக்குறள் அன்பரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தமிழ் தொண்டை நாம் மறவாதிருப்போம்.
சுதேசிப் போர்க்கப்பல் தளபதி வ.உ.சி – கட்டபொம்மனைப் பாடாத பாரதி
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம்.
“ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரிட்டிஷாருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர்.
“”வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை’ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வியாபாரம் அல்ல, அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய கம்பெனிக்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு வசூல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ’ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரிட்டிஷ் அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய ஆரம்பத்தன. தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது.
ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது.
சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் “”வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது” என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான். ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை.
கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது.
வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.
கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர். “”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை’ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் பிரச்சினையை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்த னர். வியாபாரிகள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர்.
நிலைமை எல்லை மீறியது. நிர்வாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் பிரச்சினையை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த வியூகம் பிரமிக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரிட்டிஷ் அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும்.
வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான்.
உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர விசுவாசியான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டு கிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார். சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார். பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது.
எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “”எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடி யிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று “”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக் கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது.
மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை.
சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை. எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை.
சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்தக் காலத்தில் தொழிற்சங்கங் களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “”மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி.
காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக் கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது.
சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “”இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “”ஆம்” என்று அவர் சொன்னவுடன், “”முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார். இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி.
அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.
1925ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்’ என்று பெரியாரை பெருமையுடன் குறிப் பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)
பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “”இம்மகாநாட் டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமண ரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்ப தையும் மனுஸ்மிருதியையும் கண்டிக் கிறார், சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “”தவறு என்று தெரிந்தால் வள்ளுவ ரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.
சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார். 1939இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “”வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.
பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் “கவுரவிக்க’ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது. 1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:
“”கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.
இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “”நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.
எந்த எதிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது “சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.
இளமதி பதில்கள் – செம்மலர் ஆகஸ்ட்10
ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள வ.உ.சி. எழுதிய “திலக மகரிஷி” வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தீர்களா?
விஸ்வநாத் பிரசாத் வர்மா என்பவர் “லோகமான்ய திலகரின் வாழ்வும் தத்துவமும்” என்று 1970-களில் அவரின் வாழ்வை விரிவாக எழுதியிருக்கிறார்.
பக்தி பூர்வமாக எழுதப்பட்ட அந்த நூலும் 1930 களில் வ.உ.சி எழுதிய இந்த நூலும் பெரிதும் பொருந்தி வருவது கண்டு ஆச்சரியப் பட்டேன். எந்த அளவுக்கு நூல் நாயகரின் நோக்கிலிருந்து அவரது வாழ்வைச் சொல்லியிருக்கிறார் வஉ.சி. இதன் காரணமாக திலகரின் வருணாசிரம ஆதரவுச் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளையும் நியாயம் போல விவரித்துச் செல்கிறார். 1920 களிலேயே பெரியாரோடு சேர்ந்து வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். 1930 களிலும் சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் வ.உ.சி. அப்படிப்பட்டவர் இன்னொருவரின் வாழ்வை எழுதும்போது அன்னாரின் சகல செயல்பாடுகளையும் பிரமாதப்படுத்தியே விவரித்திருக்கிறார். இந்த நூலை மட்டும் படிக்கிற எவரும் வ.உ.சி. யைத் தவறாகப் புரிந்து கொள்கிற ஆபத்து உள்ளது. ஏனிப்படி எழுதினார்? பதிப்பாசிரியர் கூறுவது போல ‘தம் (அரசியல் ) குருநாதருக்குச் செய்யும் ஒரு அஞ்சலியாகவே ‘இப்படி எழுதி விட்டாரோ?
Picks from Tamil Blogs
- A Tamil Month: : V Sanjay Kumar: Bloomsbury India
- A radio host is gunned down for his controversial views - HISTORY
- Is Lying On the Radio...Legal? | On the Media | WNYC Studios
- Top Library Resources for Women’s History Month
- A Conversation with James Powell, CEO of Boydell & Brewer
- Exploring Black History Through Film
- எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கம் ஜனவரி 21, 2023 – கணியம்
- 10 Popular DRM-Free E-Books for Public Libraries
- Q&A: How China’s ‘sharp power’ is growing and evolving | Social Media News | Al Jazeera
- The Japanese call this practice tsundoku, and it may provide lasting benefits - Big Think
Top Posts
- Goat Proverbs in Tamil :: Aaramthinai on Velladu
- Faneuil hall street performers #boston
- ZENIT - Vatican Economist: Recession Caused by Low Birthrate
- Shree Ganesh Art Writings: Sanskrit Pillaiyaar: Drawing with Letters: Chathurthy
- Gayatri - Valvey Mayama
- Priya Oh Priya - Paniyil Nanaiyum Malargal Rendu Puthithai Kathaigal: Ilaiyaraja
- How does Ilaiyaraja teach songs to singers? Alaikal Oivathu Illai: Siritha Mugamum Kandu: Vaazhvellam Anandhamey: Tough to Mimic Carnatic Music
- Brain Teaser. What familiar English word contains the three letters XOP in that order and all in a row?
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
Archives
- December 2021
- August 2020
- March 2020
- January 2017
- October 2015
- September 2013
- March 2013
- February 2013
- January 2013
- December 2012
- November 2012
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- May 2012
- April 2012
- March 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- October 2011
- September 2011
- August 2011
- July 2011
- June 2011
- May 2011
- April 2011
- March 2011
- February 2011
- January 2011
- December 2010
- November 2010
- October 2010
- September 2010
- August 2010
- July 2010
- June 2010
- May 2010
- April 2010
- March 2010
- February 2010
- January 2010
- December 2009
- October 2009
- September 2009
- August 2009
- July 2009
- June 2009
- May 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- July 2008
- May 2008
- April 2008
- March 2008
- February 2008
- January 2008
- November 2007
- October 2007
- August 2007
- July 2007
- June 2007
- May 2007
- April 2007
- March 2007
- February 2007
- January 2007
- December 2006
- November 2006
- October 2006
- September 2006
- August 2006
- July 2006
- June 2006
- May 2006
- April 2006
- March 2006
- February 2006
- January 2006
- August 2005
- July 2005
- June 2005
- May 2005
- April 2005
- March 2005
- February 2005
- January 2005
- December 2004
- November 2004
- October 2004
- September 2004
- August 2004
- July 2004
- June 2004
- May 2004
- April 2004
- March 2004
- February 2004
- January 2004
- December 2003
Top Clicks
- None
Recent Comments