Archive
கர்நாடகா: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி: ஆச்சார்ய தரிசனம்
தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி – சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.
தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்…?
ஒன்றா, இரண்டா… அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ – அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்.”
தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?
தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே – சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.
அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.
இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?
சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு – செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்.”
நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே…?
நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.
பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.
மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன… படாடோபமான அரண்மனை என்ன… சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!
எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்.”
பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?
பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது
இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்… நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்.”
மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?
அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.
தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?
மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை… உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது… பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை… அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது.”
புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை – சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க… வெளியே வந்தால் – பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.
சென்னையில் சாதுர்மாஸ்யம்
சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் – சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.
அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.
அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.
தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் – புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.
நன்றி – கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி
Nanjil Nadan in Uyirmmai Magazine: உயிர்மை Notes & Writings from and on நாஞ்சில் நாடன்
சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்
மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
” எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் –என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது: அ.ராமசாமி
சொல்லில் சுழன்ற இசை
உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை மெஹ்தி ஹஸன் ரசிகர் குழு, Saint Gobain Glass நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாஞ்சில் நாடன்
இசை இறை அனுபவம் என்று சொல்கிறார்கள். அதை விவரிக்க முடியாது. வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். வாத்தியங்கள் ஊமை மொழியில் தானே பேசுகிறது. தங்கமே தமிழ் பாட்டு பாடு என எளிதாக சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால் பாடிக்கொண்டிருந்த தமிழ் பாடல்களை என்ன செய்தோம். நாட்டுப்புற ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொல்வார், குமரி மாவட்டத்தில் அறுபத்து மூன்று வகையான நிகழ்த்துக்கலைகள் இருந்தது என்று. ஆனால் அதில் இப்போது பதினோரு கலைகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த தலைமுறையில் அதுவும் கூட இல்லாமல் போய்விடலாம் அந்த கலைகளில் பயன்படுத்திய வாத்தியங்களை இனி மியூஸியத்தில் கூட பார்க்க முடியாது. ஷாஜியின் இசை குறித்த இந்நூல் தமிழுக்கு அபூர்வ வரவு.
பாரதி மணி
என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார்.
என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!
ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து)
Recent Comments