Archive

Posts Tagged ‘Magazines’

புனிதன்: குமுதம் ஆசிரியர் குழு

August 20, 2012 1 comment

நான் பத்திரிகைத் துறைக்கு வந்ததே ஒரு விபத்து மாதிரிதான்.

பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு எழுத்தில் ஆர்வம். குறிப்பாகக் கவிதைத் துறை. கி.ஆ.பெ., அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று ஓர் அரையணாப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ‘ஒட்டக் கூத்தன்’ என்ற புனைப்பெயரில் எனது கவிதைகள் (மரபு) இடம் பெற்றன.

முருகு சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட ‘பொன்னி’யில் பாரதிதாசன் பரம்பரை என்ற சங்கப் பலகை என் கவிதைக்கு இடமளித்திருக்கிறது.

நானாக இரண்டு மேடை நாடகங்கள் எழுதி, மேடையேற்றி நடித்தும் இருக்கிறேன்.

இத்தனையும் தெரிந்திருந்தும், என் தந்தையார் எனது எழுத்தார்வத்தின் மென்னியைத் திருகியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு என்னைப் பொறியியல் துறையில் புகுந்தே ஆகவேண்டும் என்று. முதலில் கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில், எல்.டி.எம்.,மில் சேர்த்தார். அதை முடிக்கு முன், இரண்டாண்டு போதுமென்று இழுத்து வந்து அவரது விசைத் தறிக் கூடத்தை மேற்பார்க்க விட்டார்.

அப்போதும் என் கவனம் அந்த நாள் ‘பிரசண்ட விகடன்,’ ‘ஆனந்த போதினி பத்திரிக்கைகளில் என் எழுத்தை அச்சேற்றி ஆனந்த படுவதிலேயே குறியாய் இருந்தது. விட்டாரா அப்பா?

முன்னாள் ராணுவத்தினர் தொழில் பயிற்சி முகாமாய் இருந்த ஐ.டி.ஐ., சிவிலியன்களுக்கு திறந்து விடப்படுவதாய் ’51ல் செய்தி வர, அந்தக் கல்லூரியில் தொழில் பயிற்சி பெறும்படி சொன்னார். என்ன தொழில்?

‘விண்ணப்பித்து வை. கிடைக்கிற தொழிலில் சேர்ந்து கொள்.’

விண்ணப்பித்தேன். துரதிர்ஷ்ட வசமாய் நான் பிசிக்ஸ், கணக்குப் பாடங்களில் நல்ல மார்க் எடுத்திருந்ததால், ‘ரேடியோ மெக்கானிஸம்’ துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு (ரூ.25) இடம் கிடைத்தது.

தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடை ராஜாஜி அவர்கள் குடியிருந்த பஸ்லுல்லா ரோடு வெட்டிக் கொண்டு செல்லும் அந்த மூலைத் தென்னந்தோப்புக்கு மத்தியில் இருந்தது அன்றைய ஐ.டி.ஐ.,

நான் சென்னைக்கு வந்து சேர்ந்ததே அப்போதுதான். அதற்குப் பிறகு நான் என் சொந்த ஊரான தர்மபுரி வாசத்தை இழந்துவிட நேரும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தமிழ்வாணன் சீண்டல்

உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் பிரம்மசாரி தமிழ்வாணன், தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த மெஸ்ஸில் ராயவரம் நடராசன் சாப்பிட்டு வந்தார்.

நடராசன் எனது ரேடியோமெக்கானிஸம் வகுப்பு தோழர். எங்கள் விடுதி (பேரக்ஸ்)சில் எனக்கு அடுத்த கட்டில் அவருடையது. நாங்கள் இருவரும் நல்ல தோழர்கள். அவர்தான் ஒருநாள் என்னை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘ இவர் கூடப் பத்திரிக்கைக்கு எழுதுவார் அண்ணே,’ என்றார்.

தமிழ்வாணன் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘என்ன எழுதுவீங்க’ என்று கேட்டார்.

‘கவிதைதான் எழுதுவேன்,’ என்றேன் மகா கர்வத்தோடு.

உடனே கைதட்டி ஒரு கேலிச் சிரிப்பு சிரித்தாரே பார்க்க வேண்டும், எனக்கு மரண அடி. தொடர்ந்து, ‘இப்பல்லாம் கவிதையை யார்சார் படிக்கிறாங்க? நீங்க ஏழெட்டு கதை எழுதிட்டு வந்து கொடுத்துட்டுப் போங்க. அதிலே ஏதாவது ஒண்ணை செலகட் பண்ணிக் கல்கண்டிலே வெளியிடலாம்,’ என்றார்.

தமிழ்வாணன் மட்டும் என்னை இப்படிச் சீண்டி விடாமல் இருந்திருந்தால், நான் பத்திரிகைத் துறைக்கு வந்திருப்பேனா? என்பது சந்தேகம்தான்.

அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள்ளிருந்து ஓர் உத்வேகம். பேரறிஞர்களின் அங்கீகாரம் பெற்றுப் பெரியவர்களுக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சிறுவர்களுக்கான கதைகள் ஏழெட்டு எழுதித் தந்தால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் போடுவதாய் ஒருத்தர் சொல்லப் போச்சா? அதையும் பார்த்விடுவோம்!

தமிழ்வாணன் வீட்டிலிருந்து என் விடுதிக்கு இரண்டு கி.மீ., தூரத்துக்குள்தான் இருக்கும். வந்து சேர்வதற்குள் இரண்டு சிறுவர் கதைகளுக்கான பிளாட் உதயமாயிற்று. அப்போதே முனைப்பாக உட்கார்ந்து எழுதி முடித்து விட்டேன் இரண்டு கதைகளையும்.

மறுநாள் ராயவரம் நடராசனிடம் இரண்டு கதைகளையும் கொடுத்து, ‘கொண்டு போய் உங்கள் தமிழ்வாணனிடம் கொடுத்து விடு,’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதற்குப் பிறகு இரண்டு வாரத்துக்கு மேல் நான் தமிழ்வாணன் இருந்த திசையிலேயே திரும்பவில்லை. பிறகு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, நான் என் விடுதியில் இருந்து பனகல் பார்க் சென்று கொண்டிருந்தேன். பின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது.

திரும்பிப் பார்த்தால், தமிழ்வாணன்! அவரது அட்டகாச சிரிப்போடு என்னை நெருங்கி வந்து தோளில் தட்டிக்கொடுத்தார். ‘என்ன நீ, கல்கண்டு பார்க்கலையா?’ என்றார்.

‘நான் அதெல்லாம் பார்க்கிற வழக்கமில்லை,’ என்றேன் விறைப்பாக.

மறுபடியும் அதே சிரிப்பு. ‘சரி, இப்பபார்,’ என்று அந்த வாரத்துக் கல்கண்டை என் முகத்தெதிரே நீட்டினார்.

ஓவியர் ரவியின் அட்டைப் படம். உள்ளே புரட்டினேன். அட்டையும், அடுத்த பக்கமும் புரட்டியவுடனே என் கதை. சிறுவர்களுக்காக நான் எழுதிய முதல் கதை! ‘சண்முகம்’ என்ற பெயரில் வெளிவந்திருந்தது.

நான் அவரை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். ‘உம்… மேலே புரட்டு…’ புரட்டினேன். நடுப் பக்கத்துக்கு அப்பால் என்னுடைய அடுத்த கதை. ‘சுந்தரம் என்ற பெயரில். நான் கொடுத்தனுப்பிய இரண்டு கதைகளையும் வெளியிட்டு இருந்தார். சண்முகம் +சுந்தரம் =சண்முக சுந்தரம் – என் இயற்பெயர்.

அன்றிலிருந்து தமிழ்வாணனுக்கும் எனக்கும் நட்பு இறுகியது.

கல்கண்டு உதவியாசிரியர்
ஒருநாள், ‘படித்து முடித்த பிறகு என்ன செய்யப் போறே?’ என்றார் என்னிடம் கொஞ்சம் சீரியஸாக.

‘ஏதாவது வேலை தேடணும்…’ என்று இழுத்தேன்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாக நான் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு -படிப்பு முடியுமுன்னரே- ஆளாகியிருந்த நேரம் அது.

‘நீ என் கூடவே இருந்துடு,’ என்றார்.

‘சரி. இப்ப நான் என் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக வேண்டியிருக்கு. அதான் சொல்லிக்கிட்டுப் போக வந்தேன்,’ என்று விடைபெற்றேன்.

நான் திருமணம் முடித்துக் கொண்டு உறவிலே பெண்- திரும்பி வந்து தமிழ்வாணனைப் பார்க்கக் குமுதம் அலுவலகம் சென்றேன்.

சிந்தாதிரிப் பேட்டை அருணாசல நாயக்கன் தெருவிலிருந்து குமுதம் அலுவலகம், இப்போதுள்ள கெல்லீஸ் கட்டிடத்துக்குப் பெயர்ந்த வேளை அது.

தமிழ்வாணனின் உதவியாளராக, கல்கண்டு துணையாசிரியராக, அப்போது ரா.கி.ரங்கராஜன் இருந்தார்.

ஆசிரியரும், துணையாசிரியரும் ‘வா, போ’ என்று ஒருமையில் பேசிக்கொள்வது வேடிக்கையாக இருக்கும். விசாரித்தபோது தெரிந்தது. இங்கு வருமுன்னர் இருவரும் ‘சக்தி’ பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்று! ரா.கி.ர., அப்போதெல்லாம் கொஞ்சம் ‘ரிசர்வ் டைப்,’ அவரிடம் பேசுவதற்கு எனக்கு கூச்சமாய் இருக்கும்.

தமிழ்வாணனுக்கு அடுத்த சீட் ரா.கி.ர.,வுடையது. நான் போயிருந்த சமையம் அந்த சீட் காலியாக இருந்தது. ‘ரங்கராஜன் சார் வரலியா? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன்.

மணியடித்து ஆபிஸ் பையனை வரவழைத்து, ‘அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தரைக் கொண்டா,’ என்றார்.

பையன் ரிஜிஸ்தரைத் கொண்டு வந்து என் முன் பிரித்து வைத்தான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. 1952, ஜூன் மாத ஆரம்பத்திலேயே என் பெயர் பதிவாகியிருந்தது. நான் இரண்டாவது வாரம்தான் சேர்ந்தேன்.

சற்றுப் பொறுத்து, ‘சரி, வா. முதலாளியைப் பார்த்து விட்டு வரலாம்,’ என்று கூட்டிப் போனார்.

அப்போதுதான் நான் முதன் முதலாக ஆசிரியர் எஸ்.ஏ.பி., அவர்களை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தது. ஏதோ காலங் காலமாய் உடனிருந்து பழகியவரைப் போன்ற அன்னியோன்னியத்துடன் அவர் புன்னைகைத்து கை குலுக்கியபோது, சிலிர்த்துப் போனேன். ‘தமிழ்வாணன் உங்களைப் பற்றிச் சொன்னார். நல்லா செய்யுங்க. செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு, என்றார்.

அதற்கு மேல் அங்கு இருக்கத் தேவையில்லை என்ற பாவைனையில் தமிழ்வாணன் என்னை ஜாடையாக நோக்கித் தலையசைத்தார். நானும் எழுந்து கொண்டேன். அவருடன் வெளி நடந்தேன்.

அப்போது எனக்குப் பத்திரிகைத் துறையில் முன் அனுபவம் என்று சொல்லப் போனால், பள்ளியில் படிப்பு முடித்த கையோடு வந்த தேர்தலுக்கான, ஓட்டர் லிஸ்ட் புரூப் பார்த்த அனுபவம்தான். தாலுகா ஆபிஸில் ஓய்வு பெற்ற தாசில்தார் முனுசாமி முதலியார் புரூப் திருத்த நல்ல பயிற்சி அளித்திருந்தார். அதுவே பெரிய தகுதி போல் த.வா., பாராட்டினார்.

மற்றபடி பத்திரிக்கை தயாரிக்கத் தேவையான அத்தனை அறிவுக்கும் அஸ்திவாரம் போட்டவர் தமிழ்வாணன்தான்.

குமுதம் நாற்காலி

தமிழ்வாணனிடம் பயிற்சி பெற்றுக் குமுதத்துக்கு வந்தால், தன் பளு ஓரளவு குறையும் என்று ஆசிரியர் எஸ்.ஏ.பி., கருதினார்.

குமுதம் மாதம் மூன்று இதழாக வந்துகொண்டிருந்தது அப்போது.

ஆசிரியருக்கு முழு நேரத் துணையாசிரியராய் ரா.கி.ர., பணியாற்றினாலும். ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த ஆனந்த தீர்த்தனும், வக்கீலாய் இருந்த ராம. நாரயணனும், இருவரும் பகுதி நேரத் துணைகளாய் இருந்து வந்தனர்.

நாங்கள் மூவரும்
கண்ணாடி
அணியாமல் ஒரு
காலத்தில்
இருந்திருக்கிறோமா?
இதில் நிற்கும் ஜ.ரா.சு.,
அன்று பிரம்மச்சாரி.
இப்போது தன் மூன்று
பிள்ளைகளுக்கும்
திருமணம்
செய்து முடித்துப்
பேரன்களும்
எடுத்து விட்டார்.

ஜ.ரா. சுந்தரேசன் நான் குடியிருந்த வெள்ளாளர் தெருவிலேயே ஓர் அறையில் தங்கி ரேடியோ அஸம்பிளிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.கல்கண்டுக்கு கதைகள் நாடகங்கள் எழுதி வந்தார். அதனால், எனக்கு அவருடைய பரிச்சயம் ஏற்பட்டது. இருவரும் ஒரே ஜில்லாக்காரர்கள் என்பதால் பாசம் சுரக்க, ‘டா’ உறவில் பழக ஆரம்பித்தோம். இன்று வரை அது நீடிப்பது வேறு விஷயம்.

குமுதத்தில் ’53 வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டி வைத்திருற்தார்கள். அந்தப் போட்டியில் ஜ.ரா.சு., கலந்து கொண்டார். பரிசு பெற்றார். அலுவலகத்துக்கு ஜ.ரா.சு., வரப்போக, ஆசிரியர் அவரைக் கவனித்திருந்திருக்கிறார். அவரது எழுத்தும் பிடித்துப் போயிற்று. தமிழ்வாணனிடம் சொல்லிவிட்டுக் குமுதத்தில் இணைத்துக் கொண்டார்.

என்னதான் கல்கண்டில் ‘தேசபந்து’வாகக் கொட்டி முழக்கினாலும், பெரியவர்களுக்கு எழுதவேண்டும்; காதல் கதைகள் தரவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு உள்ளுர இருந்து வந்தது.

நான் கொஞ்சம் வெள்ளை. எதையும் மனசுக்குள் மறைத்து வைக்கத் தெரியாதவன். பட்டதைப் பட்டென்று சொல்லி, கேட்டு, கண்டித்துப் பலரின் வெறுப்புக்கு ஆளான அனுபவம் உண்டு.

அப்படித்தான் ஆசிரியரிடம் நேரில் சென்று, ‘எனக்கும் குமுதத்தில் இடம் வேணும்,’ என்று கேட்டுவிட்டேன்.

அப்புறம் எனக்கும் ஒருவழியாய் குமுதத்தில் துணையாசிரியர் நாற்காலி போடப்பட்டது.

நானும், சுந்தரேசனும் ஏதும் பிரச்சனை கிளாப்பா விட்டாலும், எங்களை வைத்துக் கொண்டு ஆசிரியரும் ரா.கி.ர.,வும் சிண்டு முடியும் தோரணையில் கலாட்டா செய்வது வேடிக்கையாய் இருக்கும்.

‘சீனியர் ஜ.ரா.சு., என்ன சொல்றார்?’ என்பார் ரா.கி.,

‘அதெப்படி? குமுதம் ஆபீஸ்ல முதல்ல சேர்ந்தவர் புனிதன்தானே? அதனால அவர்தான் சீனியர்,’ என்று வக்காலத்து வாங்குவார் ஆசிரியர்.

இது பல சந்தர்ப்பங்களில் பலவித சீண்டல்களாய் வெளிவரும்.

நாம் மூவர்

அன்றைய குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., அமர்வதற்கு ரா.கி.ரங்கராஜன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் ஆகிய நாங்கள் மூவரும் முக்காலியானோம். முக்காலியில் எந்தக் காலுக்குப் பொறுப்புக் குறைச்சல்?

வெளியுலகத்தில் அதிக சர்குலேஷன் உள்ள பத்திரிகைகளில் எல்லாம் அத்தனை பேர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று, தனித்தனி அறைகள், எடுபிடிகள், ஆளம்புகள் என்று அமர்க்களப்படும்போது, இங்கு ஒரே ஒரு ஹாலில் மூன்று மேசை நாற்காலியைப் போட்டுக் கொண்டு, எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் எப்படி இந்தியாவிலேயே அதிக வினியோகம் உள்ள பத்திரிகை என்று பாராளுமன்றத்திலேயே சுட்டிக் காட்டும் அளவுக்குக் கொண்டு செலுத்த முடிந்தது?

முதல் காரணம் ஆசிரியர் வியத்தகு மேதையாய் இருந்து, வேறு எவருக்கும் கட்டுப்படத்தேவை இல்லாத உரிமையாளராகவும் அமைந்தது. கால நேரம், சொந்த விருப்பு வெருப்பு, உடலுபாதை ஏதும் பொருட்படுத்தாமல் ஆசிரியரின் எண்ணத்தை ஈடேற்றி வைப்பதே குறிக்கோளாய்க் கொண்டு, பாடுபட்டு உழைத்தோமே நாங்கள் மூவர், அது இரண்டாவது காரணம்.

ஆசிரியரின் கூர்ந்த மதியாகட்டும், அவரது படிப்பறிவாகட்டும், அனுபவங்களைக் கிரகித்துச் சொல்லும் நுணுக்கமாகட்டும், இந்தக் காரணத்தால் இது இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லும் கணிப்பாகட்டும், அவருக்கு முன்னால், நாங்கள் சிசுக்கள்தான்.

‘உங்களுக்கு எந்தக் குழப்பமும் வேண்டாம். நான் வழிகாட்டுகிறேன். நீங்கள் சும்மா என் பின்னால் வந்தால் போதும்,’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதுவே, எங்களுக்குச் சுமையேதும் இல்லை என்று எண்ண வைத்து லேசாக்கியது.

ஓர் இதழை ஒருவர் கவனித்தால் போதும், மற்ற இருவரும் இதழ் பொறுப்பிலிருந்து விடுபட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலாம் என்று கழற்றி விட்டு விட்டார். இதனால் ஒவ்வொருவரும் ஒரு வாரம் பணியாற்றினால், இரண்டு வாரம் ஓய்வு என்ற பிரமையில், அந்த ஒரு வார வேலையில் முனைப்பாக ஈடுபட ஒரு தார்மீக உந்து சக்தி பிறந்தது. ஈடுபட்டோம்.

எவரிடம் எந்தத் திறன் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, வெளிக் கொணர்வதில், அவருக்கு இணையாக இன்னொருவரைச் சுட்டிக் காட்ட இயலவில்லை.

தினமும் காலையில் வந்ததும், ஒரு ‘பெப்டாக்’ கொடுப்பார். அதிலே பத்திரிகை பற்றிய கனவுகளை விதைப்பார். அவற்றை நனவாக்க வேண்டும் என்ற ஆவலை, நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்ற வேகத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்வார்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் அவருக்குப் பிடித்த மாதிரியில் நாங்கள் ஏதாவது எழுதி முடித்தால், தட்டிக் கொடுத்து மனசாரப் பாராட்டிப் புகழ்ந்ததையெல்லாம் எப்படி மறக்க முடியும்? இன்று வரை நினைத்துப் பெருமிதப்பட வைக்கிறது.

இந்த இடத்தில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டும்தான் என்னால் தர முடியும். இதுதான் அந்தக் காலத்துக் குமுதம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதோ சில அனுவங்கள்.

மக்கள் படிப்பு

இதழ் முடித்த நேரத்தில் ஒரு விச்ராந்தி முகத்தில் தெரியும். அதை ‘விடாயேற்றி உற்சவம்’ என்று வேடிக்கையாய் குறிப்பிட்டுச் சிரிப்பார் ஆசிரியர்.

இந்த உற்சவம் எங்களுக்கு மட்டும்தானே தவிர, ஒவ்வோர் இதழிலும் அவர் முகம் தெரியத் தனிப்பட அவர் படும்பாடு ஏதும் எங்களுக்குத் தெரியாது. தெரியாதவாறு மறைத்துக் கொள்வார்.

அந்த ஓய்வு நாட்களில் எங்களுக்கு நோகாமல் அப்படியரு பயிற்சி கொடுப்பார். படிப்றிவுப் பயிற்சி. எனக்கு ஸ்டீன்பெக், பி.ஜி.உட்ஹவுஸ், ஓ ஹென்றி சிறுகதைகள் அவரது நூலகத்திலிருந்து எடுத்துக்கொடுப்பார். இவற்றை ஆபீஸ் நேரத்திலேயே- மாடியில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து படிக்க வேண்டும். அடுத்த நாள் அதில் ரசித்த கட்டங்களைச் சொல்லி, எந்த எழுத்து முறையால் அது எடுபடுகிறது என்று சுட்டிக் காட்டி ஒரு விவாதம் நடக்கும். அடுத்து எழுதும் கதையில் அந்த உத்திகையாளப்பட வேண்டும்.

இதோடு நிறுத்தாமல் வெளியுலகத் தொடர்பு தேவை என்று இன்னொரு நாள் ஊர்சுற்ற அனுப்புவார்! வெறுமனே சுற்றிப் பார்த்து நமக்கு என்ன ஆச்சு? ஏதாவது வித்தியாசமான மக்களைக் கவனியுங்கள் அவரை பேட்டி எடுங்கள். படம் எடுத்து வர ஏற்பாடு செய்யுங்கள். இரண்டொரு பக்கம் போடலாம்,’ என்றார்.

மக்களை பேட்டி முடித்த பிறகு, படம் எடுப்பதற்காக அப்புறமாய் ஒரு போட்டோகிராபரைப் பிடித்து அனுப்பி, நேரத்துக்குக் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட முன் அனுபவம் எனக்கு இருந்தது.

அப்போது எனது நண்பர் ஒருவர் யாஷிகா கேமரா ஒன்று எனக்காக சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார். நான் அதற்குமுன் படம் எடுத்ததில்லை. யாஷியா கிடைத்ததும், உற்சாகம் பிய்த்துக் கொண்டது. தோளில் காமெராவை மாட்டிக் கொண்டு, தென் சென்னைப் பகுதியில் சுற்றினேன். சினிமாத் தொழிலாளர்களின் குடிசைக் குடியிருப்புப் பகுதியிலே ஒரு போர்டு கண்ணில் பட்டது.

இங்கே பாம்புகள் படப்பிடிப்புக்கு வாடைகைக்கு விடப்படும்.

‘நம்ம பச்சா கூடப் பாம்பு புடிப்பான் சார்!’ என்றார்.

இப்போது அவரது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. ‘கூப்பிடு, கூப்பிடு,’ என்று காமெரா விரித்தேன்.

மூன்று வயதுதான் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு. சும்மா ‘கொழுக் மொழுக்’கென்று இருந்தான். பாவா ஒரு பெரிய நல்ல பாம்பு ஒன்றை அவன் கையில் கொடுத்தார்.எனக்கே பயம். அவர், ‘விஷப் பை எடுத்தாச்சு சார். பயப்படாதே,’ என்றார்.

பையன் பாம்பைத் தூக்கிப் பிடித்தான். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பாம்பை இறக்கி விட்டானோ என்னவோ! பையன் கன்னத்தில் ஓங்கி ஒரு போடு போட்ட அதே தருணம், என் காமெரா ‘கிளிக்’ செய்து விட்டது.

பிரிண்ட் போட்டுப் பார்த்தால், அந்த உயிர்த் துடிப்பான காட்சி அந்தி வெளிச்சத்தில் காண்ட்ராஸ்ட்டாய் அற்புதமாய் வந்திருந்தது. ஆசிரியர் அதைப் பார்த்து அடைந்த சந்தோஷம்… நண்பர்கள், ஓவியர்வர்ணம் அனைவரையும் கூப்பிட்டுக் காட்டிப் பாராட்டி, ‘யார் எடுத்தது தெரியுமா? நம்ம கார்ஷ் ஆப் ஒட்டாவா,’ என்றது நேற்றுப்போல் இருக்கிறது.

அந்தத் தெம்பிலே குமுதம் அட்டைக்காகவும் நான் அவ்வப்போது வண்ணப் படங்கள் எடுத்தேன். ‘தணிகை’ என்ற பெயரில் அவை அன்றைய குமுதம் இதழ்களில் இடம் பெற்றன.

சுந்தர பாகவதர் ஆனேன்

நாங்கள் முவரும் கட்டாயம் ஆளுக்கு ஒரு கதை ஒவ்வோர் இதழுக்கும் எழுதியாக வேண்டும். எல்லாரும் எல்லாவிதமான கதையும் எழுத வேண்டும்.

மொத்தம் ஐந்து கதைகள் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசம். நகைச்சுவை, கிராமம், இளைமைத் துள்ளல், க்ரைம் விஞ்ஞானம் அல்லது இவற்றில் காதல் ரசம் தூக்கல். இந்த ஐந்து கதைகளில் இரண்டு கதைகள் மட்டுமே வெளியாருக்கு ஒதுக்கியது. மற்ற மூன்றும் நாங்கள்.இந்த இதழுக்கு எழுதிய கதை வகை, அடுத்த இதழுக்கு எழுதலாகாது. நாங்கள் எழுத வேண்டிய கதைக்கருவைக் கையகலச் சீட்டில் எழுதிக் கொடுத்து ‘அப்ருவல்’ பெற்றுக் கொண்ட பிறகு, அதை ஆசிரியர் அவர்களுடன் பேசி விளக்கம் பெற்று, எந்த உத்தியில் எழுதுவது என்று தீர்மானித்து, பிறகே எழுத வேண்டும். ‘இது நம்ம பத்திரிகை. நமக்குப் பிடிச்ச கதையை நாமதான் எழுதணும். நம்மாலதான் கதைகள்’ என்றே அறிவிப்புக் கொடுத்தார்.

ஜ.ரா. சுந்தரேசன்

ஒருமுறை என் பங்காக நகைச்சுவைக் கதை எழுத வேண்டும். ஆசிரியருடன் பேசி முடித்தக் கதை உருவாக்கியாயிற்று. என்ன உத்தியில் எழுதுவது? அன்று காலை ஒரு காலட்சேபம் பற்றி விரிவாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதை நினைவூட்டி, அதே காலட்சேப உத்தியில் எழுதும்படி சொல்லிவிட்டார்.கதைப் பிரதியை அவர் படித்த பிறகுதான் அச்சுக்கு அனுப்புவது வழக்கம். அன்று கதைப் பேசி முடித்ததும், அவர் ஊருக்குக் கிளம்ப வேண்டியிருந்ததால், ‘நான் பார்க்க வேண்டியதில்லை. கம்போசுக்கு அனுப்பி விடுங்கள் வந்து பார்த்துக் கொள்கிறேன்,’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். நாளை மறுநாள் வருவதாய்ச் சொல்லியிருந்தார்.

நானும் எழுதி அனுப்பி விட்டேன். ‘மீசா புராணம்’ என்பது கதைப் பெயர். மனசுக்குள் ‘பக் பக்’தான். அவர் நினைத்தபடி கதை இல்லாவிட்டால், நிர்தரட்சண்யமாய் நிறுத்தி விடுவார். நாளை மறுதினம்தான் பேஜ் தயாராகும். எப்படியும் மெஷின் புரூப் பார்க்க வந்து விடுவார். என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். இரவு போயிருந்திருக்கும்.

அன்று நான் ஆபீஸ் போனபோது, என்னைப் பார்த்து ஒரேயடியாய்ச் சிரித்தார். ‘நல்லாருந்தது. நடுநடுவே இந்த ஸ்டைல்ல கதை எழுதுங்க, என்றார்.

இந்த மாதிரிக் கதைகளுக்காக ‘சுந்தர பாகவதர்’ நாமகரணம் சூட்டிக் கொள்ளப் பெயர் கொடுத்தவர், சீனியர் ரா.கி.ர.தான்.

‘எங்களுக்கு எதற்கு நகை?’ என்று ஒரு சுந்தர பாகவதர் கதை. பேசிப் பேசி எழுதியதில் நீண்டு, அடுத்த இதழில் முடித்து விடலாம் என்று சொல்லி, அதிலும் முடியாமல் கட்டாயம் அடுத்த இதழில் முடியும் என்று அறிவித்து… இப்படித் தொடர்ந்து ஐந்து இதழுக்கு நீண்டது.

வெள்ளாளத் தெருவில் குடியிருக்கும் போது, அதே தெருவில் குடி இருந்த நடிகர் வி.எஸ்.ராகவன் எனக்கும், சுந்தரேசனுக்கும் பழக்கமானவர்தான். அவர் ஒருநாள் ஆபீஸ் வந்து, சுந்தரேசன் எதிரில் உட்கார்ந்து, அவர் கதையை நாடகமாக்கப் போவதாகக் கேட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

எந்தக் கதை என்று சுந்தரேசன் கேட்டபோது, ‘சுந்தர பாகவதர்னுட்டு எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேளாக்கும்? அதான் எங்களுக்கு எதற்கு நகை?’ என்றதும் சுந்தரேசன் சிரித்தார்.
அதை எழுதியது நான்தான் என்று அறிந்தபோது, வி.எஸ்.ராகவன் நம்பவில்லை அப்புறம் உறுதி செய்து கொண்டு ஒருவிதமாய் கதை வாங்கிச் சென்று, ‘நகையே உனக்கொரு நமஸ்காரம்!’ என்ற பெயரில் நாடகமாக்கி மேடையேற்றி, எம்.ஜி.ஆர்., கையால் எனக்கும் கேடயம் வாங்கித் தந்தார். வானொலியில் தொடர் நாடகமாய் அது இடம்பெற்றது. அப்புறம் தொலைக்காட்சி நாடகமாகவும் இடம் பெற்றது.

என்னை உசுப்பி விட்டு ஒரு சவால் உணர்வை ஏற்படுத்தி, சுந்தர பாகவதர் ஆக்கியது, ஆசிரியரின் வெற்றி என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

கவிதையிலே கதை

குமுதத்தில் இணைகையில் நான் வித்துவான் தேர்வு முதலாண்டு எழுதியிருந்தேன். தனியாகப் படித்து வித்துவான் பட்டம் பெற ஆவல். இந்த ஏக்கத்தை ஆசிரியரிடம் சொன்னேன்.

அவர் சற்றுப் பதறிப் போய், ‘வேண்டாம் வேண்டாம். பத்திரிகைக்கு உங்கள் தமிழறிவே அதிகம். இதற்கு மேல் வேண்டாம். ஆங்கிலத்தில் ஆர்வம் காட்டுங்கள்,’ என்று அறிவுரை வழங்கயதோடு, ‘உங்களுக்குக்கென்ன கவிதை எழுதணும். அவ்வளவுதானே? நடுநடுவே எழுதுங்க,’ என்று சமாதானம் செய்தார்.

அதன்படி ‘கண்ணம்மா’ என்ற பெயரில், மரபுக் கவிதைகளாய் அவ்வப்போது (அறுபதுகளில்) எழுதி வந்தேன். ஒரு முறை கதையன்று பேசும்போது, ‘இது கொஞ்சம் கவிதைத்தனமாக இருக்கே. கவிதையிலே எழுதிப் பாருங்களேன்,’ என்றார்.

பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு, ‘எதிர்பாராத முத்தம் போன்ற கதைக் கவிதைகள் என்னைக் கவர்ந்தவை அந்தத் தூண்டுதலில் நானும் ஒரு கவிதைத் கதை தயாரித்தேன்.

பாராட்டி வெளியிட்டார். அதன் பிறகுதான் பகுதி நேரக் கவிஞனின் கவிதைக் கதையே இந்த அளவுக்கு இருக்கும் போது, முழுநேரக் கவிஞரைக் கொண்டு கவிதைக் கதை செய்யச் சொன்னால், இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று ஆசிரியருக்குத் தோன்றியிருக்கும் போலும்.

கவிஞர் சுரதாவை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரிடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கதையன்றைத் தந்து, இதைக் கவிதையிலே மாற்றித் தர இயலுமா என்று கேட்டார். அவரும் பெருமையோடு ஒப்புக் கொண்டார்.

அலுவலகத்து மாடியிலேயே கவிஞர் சுரதா மீட்டிங் ஹாலில் அமர்ந்து அந்தக் கதைக் கவிதை எழுதித்தர, குமுதத்தில் இடம்பெற்றது பசுமை நினைவு.

பொள்ளாச்சியில் புனிதன்

ஒருமுறை நா.மகாலிங்கம் அவர்கள் பொள்ளாச்சியில் விவேகானந்தர் விழா நடத்தினார். அதில் சென்னையிலிருந்து கி.வா.ஜ.,வுடன் ஆசிரியரையும் அழைத்திருந்தார். அப்போதெல்லாம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுண்டு. பேச்சுக்காக அவர் மெனக்கெட்டு ஆயத்தம் செய்து கொள்வதை பார்க்கும் போது இத்தனை மெனக்கெடல் தேவையா? என்று தோன்றும்.

அப்படி அவர் பொள்ளாச்சியில் சென்று வந்த பிறகு, அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். நினைவு கூர்ந்து, கூடுமானவரை அவர் வார்த்தையிலேயே தருகிறேன்.

‘நான் மேடையிலே உட்கார்ந்திருக்கிறேன். பக்கத்திலேயே, அந்தக் காலேஜ் பிரின்சிபால் உட்கார்ந்திருந்தார். அவர் என் காதுகிட்ட வந்து. ‘இப்ப உங்க புனிதன் வரப் போறார்,’ என்றார்.

‘நான், ‘வரமாட்டார்,’ என்றேன்.

ஏன் அப்படிச் சொல்றீங்க? நான் இங்க வர்றதுக்கு முன்னால அவரைப் பார்த்தேன். பின்னாலேயே வரதா சொன்னாரே,’ன்னார்.

நான், பார்த்திருக்க முடியாது. ஏன்னா, நான் ரயில் ஏர்றப்ப புளிதன்தான் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பிச்சார். என்கிட்ட சொல்லாம அவர் எப்படி வர முடியும்? என்றதும் முகம் ஒருமாதிரியாயிடுச்சு.

‘எனக்கு அப்பவே சந்தேகம்தான்னு சொன்னார்.

அவங்க காலேஜ் ஸ்டாப்பாம் அந்த ஆள். தான்தான் புனிதன்னு சொல்லிக்கிட்டு குமுதத்திலே வர்ற கதையை எடுத்து வச்சிட்டு அதைத்தான் எப்படி எழுதினேன், இன்ஸ்பிரேஷன் எது, காரெக்டர் எப்படி உருவாச்சுன்னெல்லாம் லெக்சர் வேற கொடுப்பாராம். எப்படியிருக்கு?

‘அதுக்கப்புறம் யாராவது புனிதன்னு சொன்னால், ‘யாரு, பொள்ளாச்சி புனிதனா?’ என்று கிண்டலடிப்பார்.

சொல்லச் சொல்ல எழுதுவேன்

அந்த நாளில் ஆசிரியரின் நாவல்கள் குறிப்பாக ஓவியம்- அவர் சொல்லச் சொல்ல நான்தான் பிரதியெடுப்பது வழக்கம்.

அவர் வீட்டுக்கு அழைக்கிறார் என்றால், பெரும்பாலும் எழுதுவதற்காகத்தான் இருக்கும். நீண்ட கைப்பிடியில் பலகை வைத்து, சாய்ந்து உட்கார்ந்து எழுதுவதற்கென்றே டிஸைன் செய்த அந்தப் பிரம்பு நாற்காலியில்தான், அவர் வீட்டில் என்னைப் பார்க்கலாம்.

அவர் டிக்டேட் செய்யும் அழகே அழகு! நடமாடிக் கொண்டு, நடித்துக் கொண்டுகொச்சயாய் அவர் பேசுவதை நான் இலக்கண சுத்தமாய் எழுதி விடுவேன் என்ற அவரது நம்பிக்கையை இறுதிவரை காப்பாற்றி விட்டேன்.

நான் முறைப்படி 1988ல் ஓய்வு பெற வெண்டியிருந்தது. இருந்தம், ரா.கி.ர.,வைப் போல நானும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

முதல் ரிடையர்மெண்ட்

அந்த நேரத்தில் குமுதத்தில் அக்கறையுள்ள பலர், ‘உங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் உதவியாளர்களும் ஓய்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். குமுதத்தின் எதிர்காலம் என்ன?’ என்கிற மாதிரி கேட்டு யோசிக்க வைத்தர்கள்.

அப்போதுதான் நிர்வாகத்தினர், புது ரத்தம் புகுத்த மாலன், பிரபஞ்சன் ஆகிய இலக்கியவாதிகளையும், ப்ரஸன்னா, ப்ரியா கல்யாணராமன் ஆகிய இளைஞர்களையும் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இலக்கியவாதிகள் இருவருக்கும் குமுதம் சரிப்பட்டு வரவில்லை. விலகி விட்டனர். நானும் கண்ணியமாய் விலகிக் கொண்டு விட்டேன். உடனடியாய் தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன்.

அதே நேரத்தில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களும் என்னை கவுரவித்தார். கோகுலம் கவுரவ ஆசிரியராய் இருந்த அழ. வள்ளியப்பா அவர்கள் திடீர் மரணமடைந்திருந்த தருணம் அது. நான் துவக்கத்தில் தேசபந்துவாக கல்கண்டில் மிளிர்ந்ததை அவர் அறிவார். எனவே, அழ. வள்ளியாப்பா அவர்களின் இடத்தை நிரப்ப என்னை அழைத்தார். ஏதோ ஒருவகையில் பத்திரிகைப் பணி தொடர்ந்தது. வாரமலர் இதழில் அடுத்தடுத்து மேலும் மூன்று தொடர்கதைகள் எழுதினேன்.ஆனந்த விகடனில் ‘அப்புறம் என்ன ஆச்சு?’ என்று சுந்தர பாகவதரின் முதல் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது. கல்கியில் தொடர்ந்து சினிமா விமர்சனம் செய்தேன் பி.எஸ்.எஸ்., என்ற பெயரில்.

நான் குமுதத்தை விட்டு விலகிய பிறகும், ஆசிரியரை விட்டு விலகவில்லை, வெள்ளிக்கிழமைதோறும் மாலை ஐந்து மணிக்கு மேல் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவேன்.

இரண்டாம் அப்பாயின்ட்மெண்ட்

அப்போதே ஆசிரியர் பேச்சில் தெளிவு காணாமல் போயிருந்தது. அவரது உடல் நிலை குறித்து வருத்தம் ஏற்பட்டது.

அக்டோபர் 1990ல் ஜ.ரா.சு., வீட்டுக்கு வந்தார். ஆசிரியர் என்னை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைத்ததாகச் சொன்னார்.

ஜ.ரா.சு., ஓய்வு பெறப் போவதாகவும், ஊரில் தமது நிலபுலன்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால். தொடந்து பணியாற்ற இயலாது என்றும், ரா.கி.ர.,வுக்கும் அடிக்கடி உடல் நலம் இல்லாமல் போவதால் என் துணையை ஆசிரியர் எதிர்பார்ப்பதாயும் சொன்னார்.

வீட்டில் உள்ள எவருக்கும் நான் திரும்பக் குமுதத்துக்குச் செல்வதில் விருப்பம் இல்லை. வீட்டிலிருந்தவாறே நான் சுதந்திரமாய் எழுவதுதான் எனக்கும் சுகம், அவர்களுக்கும் வசதி என்று நினைத்தார்கள். இரண்டாண்டு காலத்தில் நான் இதற்கு முன் இத்தனை தொடர்கதைகள் எழுதியதில்லையே!

இருந்தாலும் நான் நன்றி மறக்கவில்லை. முகவரி இல்லாமல் இருந்த எனக்கு, முகவரி கொடுத்தவர் ஆசிரியர். தந்தை ஸ்தானத்திலிருந்து நமது குடும்பப் பிரச்னைகளுக்கு அவர் தீர்வு காட்டியது மறக்க முடியாதது. அவரை இன்றும் என் தந்தை ஸ்தானத்தில் வைத்தே மதிக்கிறேன். அவரே என் உதவி தேவை என்று ஆள் விட்டிருக்கும்போது, நான் அதைத் தட்டிக் கழிக்கத்தயாரில்லை,’ என்று மீறிக் கொண்டு சென்றேன்.

போகப் போகத்தான் தெரிந்தது, ஆசிரியர் எதை எதிர்பாத்து என்னை மீண்டும் அழைத்தார் என்பது.

பத்திரிகைக்கு இளரத்தம் தேவை என்று இன்றைய ஆசிரியர் குழுவினர் மூவரையும் கொண்டு வந்து சேர்த்தார்கள். அந்த மூரில் ஒருவரை நான் கொண்டுவந்து சேர்த்தேன்.

மூவருக்கும் பத்திரிகைத் தொழிலில் பயிற்சி தர எஞ்சியிருந்தது நான் மட்டும்தான். ரா.கி.ர.,வும் ஓய்வு பெற்று வீடு திரும்பி விட்டார். தொடர்ந்து ப்ரஸன்னாவும் விடைபெற்றுக் கொண்டார்.

ப்ருப் ரீடிங்கிலிருந்து பேஜ் மேக்கப் அமைப்பு முறை வரை அவர்கள் என்னிடம் கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டார்கள். புரிய வைத்தேன். புரிந்து கொண்டார்கள்.

‘சரியான நேரத்தில் நீங்கள் திரும்ப வந்து பெரிய ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். மறக்க முடியாது,’ என்று மனம் திறந்து எனக்குப் புகழ் மாலை சூட்டினார் ஆசிரியர்.

எனக்கு அதுபோதும். ஆசிரியர் இடறி விழுந்து விட்டதாய்க் கேட்டு ஏப்ரல் 6ம் தேதி அவரைக் காண வீடு சென்றேன். மூக்கிலே கொஞ்சம் சிராய்ப்புத் தெரிந்தது.

இன்னும் இரண்டு நாளில் ஸ்டேட்ஸ் போவதாயும். அதுவரை குமுதத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைத்துச் செல்வதாயும் சொன்னார். அனேகமாய் எனக்கு விடைதரும் விதமாய் இருந்தது அவர் பேச்சு. ஏப்ரல் 17 ஞாயிறு இரவு ப்ரியா கல்யாணராமன் போன் செய்து ஒரு சகாப்தம் முடிந்த செய்தி சொன்னார்.

ஆசிரியர் என்னை ஆளாக்கியதற்கு பிரதியாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு செய்து விட்டதாகவே நிறைவடைகிறேன்.

ஆசிரியர் அழைத்ததற்காக குமுதம் அலுவலகத்திற்குள் திரும்ப நுழைந்தேன். இதற்கு மேல் எனக்கு அங்கு வேலை இல்லை என்று இரண்டாம் முறையாக ஓய்வு பெற்று திரும்பி விட்டேன்.

ஆசிரியர் இல்லாத அலுவலகத்துக்குள் எட்டிப் பார்க்கவும் இப்போது மனசு இடம் தர மாட்டேன் என்கிறது.

பின்னுரை

நாற்பது ஆண்டுகள்! குமுதத்தில் எனது நாற்பது ஆண்டு கால நீண்ட பயணம் ஆசிரியர் அவக்ளின் இறுதிப் பயணத்துடன் நிறைவெய்தி விட்டது.

எத்தனை எத்தனையோ இன்ப-துன்ப அனுபவங்கள். அவற்றில் கசப்பையெல்லம் விழுங்கிக் கெண்டு, எண்ணிப் பார்த்துப் பெருமிதம் கொள்ளத்தக்க இன்ப நிகழ்வுகளில் சிலவற்றை இங்கு நினைவு கூர்ந்தேன்.

அதில் ஓரளவு தம்பட்ட ஓசை எழுப்பியிருக்கிறேன் என்பதை நான் மறுக்கவில்லை. அது சாமானியனாய் இருந்த என்னை, இந்த அளவு தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தக்கவனாய் மாற்றிய ஆசிரியரின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகத்தான் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan

June 3, 2012 2 comments

‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.

‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.

‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.

இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.

கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?


ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.

கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…


ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?


ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.

கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?


ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.

 

கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…


ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.

காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.

கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?


ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.

கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…


ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.

கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?


ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.

கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?


ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.

ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?

கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?


ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?


ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.

கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..


ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.

கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?


ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.

கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்

*****

மும்பையும் நானும்


மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.

நாஞ்சில்நாடன்

*****

கட்டுரை இலக்கியம்


நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.

நாஞ்சில்நாடன்

*****

பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்


நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.

ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

நாஞ்சில்நாடன்

TV, Media Updates from Tamil Nadu: Magazines, Journals, Periodicals

July 16, 2009 Leave a comment

எனக்குப் பத்திரிகையும் பதிப்பகமும் மீடியாவும்தான் சந்தோஷத்தைத் தருவன. அதுவும் புதிய முயற்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பன. அந்த வகையில்,

1. நேற்று திரிசக்தி என்ற ஆன்மிக இதழும், தேவதை என்ற பெண்கள் இதழும் வெளியாயின. திரிசக்திக்கு, பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர். தயாமலர் தேவதைக்கு ஆசிரியர். இவர் அவள் விகடனின் முன்னாள் ஆசிரியர்.

2. நான் விரும்பிப் படிக்கும் ஆங்கில வணிக இதழான மிண்ட், சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. சென்ற திங்கள் (13.07.2009) முதல் சென்னைப் பதிப்பு வந்திருக்கிறது. பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் சாஃப்ட் லாஞ்ச். மிகவும் உபயோகமாக இருக்கிறது.

3. ஆகஸ்டு மாதத்தில், மாலனை ஆசிரியராகக் கொண்டு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கான ஓர் தமிழ் வார இதழைத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆங்கில இதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் வரவிருக்கின்றன.

4. விகடனின் அடுத்த குழந்தை – டாக்டர் விகடன். எஸ்.நாகராஜகுமார் பொறுப்பாசிரியர். இவர் மறைந்த எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் வளர்ப்பு மகன்.

5. ஆகஸ்டு 23 முதல், சேலத்தில் புகழ்பெற்ற லோக்கல் சேனலான பாலிமர், இப்போது உலகமெங்கும் தெரியும் அளவுக்குத் தன் பரப்பை விரிக்க இருக்கிறது. ஜெயா டிவியில் இருந்த முரளிராமன் மற்றும் அவரது நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர், பாலிமருக்கு வந்துவிட்டனர்.

Journalist Annadurai: MS Venkatachalam

April 29, 2009 Leave a comment

பத்திரிகையாளர் அண்ணா

எம்.எஸ். வேங்கடாசலம்

ஓம்லேண்ட்(Homeland) என்னும் ஆங்கில வாரஇ இதழை 1957ம் ஆண்டு ஜனவரித் திங்களில் தொடங்கிட அண்ணா திட்டமிட்டிருந்தார். அதற்இகான அடிப்படைப் பணிகள் நிறைய இருந்தமையால், அவருஇடைஇஇய விருப்பத்தின்படி 1956 நவஇஇம்இஇபர் மாதத்திலேயே அதன் துணை ஆசிரியராக நான் பொஇறுஇப்இஇபேற்றேன். இடையில் பொதுத்இதேர்தல் குறுக்கிட்டதால் 1957 ஜுன் திங்களில்தான் இதழ் வெளியிடப்பட்டது. துவக்க காலத்தில் ஆதிராவிடநாடு இதழுக்கான அலுவலகமே ‘ஓம்லேண்ட்’ இதழுக்கும் அலுவஇலகமாக விளங்கியது. திராவிட நாடு அலுவல்களையும் வரவு செலவுகளையும் நிர்வகித்து வந்த ஈழத்து சிவானந்த அடிகளே இதையும் நிர்வகித்து வந்தார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஏடுகள் – நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகள் – அனைத்தும் வரவழைக்கப்பட்டன. டெல்லிஇயிலிருந்து வெளிவந்த ‘இந்து ஸ்தான் டைம்ஸ்’ (Hindustan Times), பம்பாயிலிருந்து வெளிவந்த ‘டைம்ஸ் ப் இண்டியா’ (Times of India), கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘அமிர்த பசார் பத்திரிகா’ (Amrita Bazaar Patrika), பெங்களுரிலிருந்து வெளிவந்த ‘டெக்கான் எரால்ட்’ (Deccan Herald), நாகபுரியிலிருந்து வெளியிடப்பட்ட ‘இடவாடா’ (Hitavada) ஆகிய நாளிதழ்கள் அனைத் தும் வரவழைக்கப்பட்டன. இலண்இடனில் இருந்து ‘மான்செஸ்டர் கார்டியன்’ (Manchester Guardian), மலேசியாவிலிருந்து ‘தமிழ் முரசு’ ஆகியவையும் வரவழைக்கப்பட்டன. இவை தவிர ‘தாட்’ (Thought), ‘ராடிக்இகல் ஹியூமனிஸ்ட்’ (Radical Humanist), ‘மேன்கைன்ட்’ (Mankind) கிய இதழ்களும் வரவழைக்கப்பட்டன. அந்தக் காலத்திலேயே இந்த இதழ்களுக்கென்று செலவிடப்பட்ட தொகை மாதம் சுமார் ரூ. 300-க்கு மேல்!

நாள்தோறும் அவற்றில் வெளிவந்த செய்திகளில் முக்கியமானவற்றைக் குறித்து வைத்து அண்ணாவிடம் காண்பிக்க வேண்டும். அவற்றை யெல்லாம் பார்த்துவிட்டு, அண்ணா அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கச் சொல்வார்; ஆங்கிஇலத்தில் உள்ளதைத் தமிழில், தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில்! இதுதான் துவக்கத்தில் எனக்கு இடப்பட்ட பணி, பயிற்சி!

இவற்றிற்கிடையே எப்படியாவது கட்டுரைகள் எழுதவேண்டும்; அவை திராவிடநாடு இதழில் வெளிவரவேண்டும் என்பது எனது உள்ளக்கிடக்கை. நான் ஏற்கெனவே படித்தும் எழுதியும் பழக்கப்பட்டிருந்த தமிழ் நடைக்கும், திராவிடநாடு இதழில் வெளிவந்த தமிழ் நடைக்குமிடையே வியப்பூட்டும் வேறுபாடுகள் இருந்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால், தொடக்க காலத்தில் எனக்கு அது ஒரு புது மொழி போலவே தோன்றியது. அண்ணாவின் கட்டுரைகளிலிருந்த அடுக்குச் சொற்கள், தொடர்கள், அவற்றிலிருந்த சரளமான ஓட்டம் சிந்தையைத் தொடவல்ல நளினம்; இவற்றையெல்லாம் பெருமளவு எதிரொலிக்கின்றவகையில் அந்த இதழின் துணை ஆசிரியர் இராம.அரங்கண்ணல் அவர்கள் தீட்டி வந்த பல்வேறு கட்டுரைகள்; இவை யனைத்தையும் மிகவும் ஊன்றிப் படித்தேன், ஒன்றுவிடாமல்! அவற்றை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டேன், மெல்ல மெல்ல!

மிகுந்த ஆர்வத்துடன் ஓரிரண்டு திங்கள்களில் எழுதத் தொடங்கினேன். ஆனால், எதை எழுதுவது என்பது சற்றும் புரியாத நிலை. மிக முக்கியமான நிகழ்ச்சி பற்றியோ, செய்தி பற்றியோ எழுதத் தோன்றும். அவற்றைப் பற்றி அண்ணா எழுதியிருப்பார்! அல்லது அரங்கண்ணல் எழுதியிருப்பார். அவர்கள் அதுவரை எழுதிடவில்லை யெனினும், அவற்றைப் பற்றி, கை தேர்ந்த எழுத்தாளர்களான அவர்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று கருதி, எனக்குள் அப்போதைக்கப் போது ஏற்படும் ஆசைகளை அடக்கிக் கொள்வேன். எனவே, மிகச் சாதாரண விஷயத்தை மட்டும் எனது எழுத்துக்குக் கருப்பொருளாக எடுத்துக் கொள்வேன்.

அப்படித் தேடிக்கொண்டிருந்த வகையில் நல்ல கருப்பொருளொன்று எனக்குக் கிடைத்தது – அல்லது அதை நல்ல கருப்பொருள் என்று நானே கருதிக்கொண்டேன். அன்றைய சோஷியலிஸ்ட் கட்சியின் மாத இதழான ‘மேன்கைண்ட்’ ஆசிரியராக, கட்சியின் தலைவராக அப்போது இயங்கிவந்த இராம் மனோகர் லோகியா இருந்தார். அவர் நல்ல எழுத்தாளர் என்றும் தரமான பேச்சாளர் என்றும் பெயரெடுத்தவர். ஆங்கிலேயருக்கு மட்டுமன்றி ஆங்கிலத்துக்கும் தான் எதிரி எனக்காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். ‘ஆங்கிலமே வெளியேறு’ என்று குரலெழுப்பி, அதற்கென்று ஓர் இயக்கத்தைக்கூட நடத்தி வந்தார். இந்தியை அரியணை ஏற்றிட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று சூளுரைத்தவர்.

அந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, தி.மு.க. கட்சியைத் தாக்கியும் கேலி செய்தும். ‘தி.மு.க. பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், அது மக்கள் இயக்கமல்ல – மக்களிடம் சென்றடையவில்லை! முதலியார் என்ற குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மட்டுமே இதற்கு தரவு அளிக்கின்றனர். தி.மு.கழகம் என்றால் ‘முதலியார் கட்சி’ என்று கூடத் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்படுகிறது’ என்று எழுதியிருந்தது, அந்த ஏடு! இது எனக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன்; எழுதித் தள்ளினேன்; ஆத்திரம் தீர! பின்னர் அடிகளிடம் கொடுத்தேன், அவருடைய ஒப்புத லுக்காக! அவர் அண்ணாவிடம் கொடுத்தார். அதைப் படித்த அண்ணா சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டார்: “இந்த ‘மேன்கைண்ட்’ பத்திரிகை தமிழ்நாட்டில் எவ்வளவு பிரதிகள் விற்பனை ஆகுமென்று நினைக்கிறாய்? அதிகமாகப் போனால் 50 போகுமா?”

“ஆம், அண்ணா!”

“50 பிரதிகள் விற்பனை என்றால், அதிகமாகப் போனால் 100 அல்லது 200 பேர் அதைப் படித்திருப்பார்களா?”

“ஆம், அண்ணா!”

\ “நமது பத்திரிகை எவ்வளவு விற்கிறது?”

“சுமார் 10,000 பிரதிகள்!”

“படிப்பவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

“ஒரு இலட்சத்தைத் தாண்டக் கூடும்.”

“சுமார் 100 பேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை நீ ஒரு இலட்சம் பேருக்கு எடுத்துச் சொல்லுகிறாயே, என்ன புத்திசாலித்தனம் இது?” என்று கேட்டுவிட்டு, “எழுதுவதற்கு ஒரு இலக்கணம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது எழுத்து நாம் கொண் ட கொள்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும், வலுவேற்றும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்! பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே எழுதவேண்டும். கண்டவற்றை எழுதி நம்முடைய நேரத்தையும் வாசகர்களுடைய பொன்னான நேரத்தையும் வீணாக்கக் கூடாது” என்றார்.

எவ்வளவு பொன்னான கருத்து, இது! எழுத்துலகில் ஈடுபடுவோருக்குத் தாரக மந்திரமன்றோ இது?

‘திராவிடநாடு’ இதழைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் பொங்கல் மலரை மிகச் சிறப்பாகத் தயாரிப்பது வழக்கம். அரங்கண்ணல் மற்றும் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவற்றில் இடம்பெறும். அவற்றைத் தேர்வு செய்வதில் அண்ணா மிகுந்த கவனம் செலுத்துவார்.