Archive
Harry Potter and the Sathuragiri Sithargal at Sanjeevi Malai by Dr. CS Murugesan
“சதுரகிரி சித்தர்கள்’ நூலில் டாக்டர் சி.எஸ்.முருகேசன்
சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சஞ்சீவிகிரி என்பது. இந்த சஞ்சீவி மலையில் இருக்கும் அதிசய மூலிகைகள் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!
கருடக்கொடி என்றொரு மூலிகை. இதனை முறைப்படி பக்குவப்படுத்தி ஒருவர் உட்கொண்டால் அவரது உடல் இரும்பு போல் உறுதியாக மாறுமாம்! அவரை அரிவாளால் வெட்டினால் வெட்டின அரிவாளே இரண்டாக உடையுமே தவிர அவர் உடலில் எந்தக் காயமும் ஏற்படாதாம்!
இவை தவிர சதுரகிரியிலும் சில அபூர்வ மூலிகைகள் இருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!
“கனையெருமை விருட்சம்’ என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்!
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், கனி நாய்க்குட்டி போலும் இருக்குமாம்! அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்!
இவையெல்லாம் சித்தர்கள் காலத்தில் இருந்தவை. இப்போது பயன்பாட்டில் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது!
Recent Comments