Archive

Posts Tagged ‘Obama’

Obama – African American Liberation?

November 5, 2008 Leave a comment

Thanks: http://blog.tamilsasi.com/2008/11/obama-first-african-american-president.html
அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும் சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது குறிப்பாக தலித் அறிவுத்துறையினர் அப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவோ தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரிப்பதையே காட்டுகின்றது.

ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.

அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.

அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் “இயல்பாகவே’ கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது.

வர்க்கக் கொடுங்கோன்மையின் உருத்திரிந்த வெளிப்பாடாகவும், அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமாகவும், அதனைப் பாதுகாக்கும் கவசமாகவும் அங்கே நிலவுகிறது நிறவெறி.

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கச் சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலெட்ஜ் பதிப்பகத்தின் ஒயிட் ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர். பேகின், ஹெர்னன் வெரா மற்றும் பினார் பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

•••

உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.

அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம் கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.

கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.

இருபதாம் நூற்றாண்டில் கருப்பின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் 195060களில் நடந்த சிவில் உரிமை இயக்கத்தின் விளைவாக அதிபர் லிண்டன் ஜான்சன் காலத்தில் நிறவெறிக் கொடுமைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. இதற்கு முன்னர் இவையனைத்தும் சட்டபூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

சட்டம் மாறினாலும் நடைமுறை மாறிவிடுமா என்ன! புதிய சட்டங்களின் கீழ் வெள்ளை நீதிபதிகள் வெள்ளை நிறவெறிக்கு ஆதரவான பொழிப்புரையுடன் “நீதி’ வழங்குகின்றனர். நமது நாட்டில் வன்கொடுமைச் சட்டம் எப்படி தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையைத் தண்டிப்பதில்லையோ அப்படித்தான் அங்கும்.

வெள்ளைப் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்படும் “தேசியக் கூட்டமைப்பு போர்க்கொடி’ இன்றும் தெற்கு கரோலினாவில் பறந்து கொண்டிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் பறந்த தினத்திற்கு மற்ற மாநிலங்கள் விடுமுறை அளித்தாலும் இம்மாநிலம் மட்டும் அதை அங்கீகரிக்கவில்லை. இவற்றை எதிர்த்து கருப்பின மக்கள் இன்றும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் நடைபெறும் குற்றங்களில் கணிசமானவை நிறவெறிக் குற்றங்களே. குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பின மக்களே அதிகம். இதுபோக வறுமை, வேலையின்மை, தகுதியற்ற வேலைகள் முதலியவற்றில் வெள்ளையர்களைவிட கருப்பின மக்களே அதிகம் இருக்கிறார்கள்.

ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருக்கும் அநாகரிகம் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானதல்ல. அமெரிக்காவின் பெருநகரங்களில் வேண்டுமானால் குடியிருப்புகள் கலந்திருப்பது ஓரளவுக்கு இருக்கலாம். அங்கும்கூட, வர்க்கரீதியான பிளவுக்குள் மறைந்துகொண்டு உயிர்வாழ்கிறது நிறவெறி. நமது மாநகரப் பகுதிகளின் குடிசைவாழ் ஏழைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் அதிகம் என்பது போல அமெரிக்க நகர்ப்புறச்சேரிகளில் கருப்பின மக்களே அதிகம்.

மற்றபடி உண்மையான அமெரிக்காவோ சிறு நகரங்களில்தான் கட்டுண்டு கிடக்கிறது. இங்கு வெள்ளையர்களும் கருப்பர்களும் சேர்ந்துவாழ்வது என்பதை இன்றும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பல நூறு வெள்ளையர்கள் வாழும் “டுபுக்கீயு’ நகரின் வளர்ச்சித்திட்டத்தை அமல்படுத்த தொழிலாளிகள் தேவைப்பட்டதால், சில நூறு கருப்பர்களை குடியமர்த்தலாம் என்று அந்நகர நிர்வாகம் 90களின் ஆரம்பத்தில் தீர்மானித்தது. நகரம் விரிவடைவதற்கேற்ப அதன் பராமரிப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு கருப்பினத் தொழிலாளிகள் தேவைப்படுவதால் பல அமெரிக்க நகரங்களில் இப்படித்தான் திட்டமிடுகிறார்கள்.

ஆயினும் அந்நகரத்தின் வெள்ளையர்களோ இதனை ஏற்காமல் கலவரம் செய்தார்கள். “கருப்பர்கள் வந்தால் குற்றங்கள் அதிகரிக்கும், நகரின் சமூகநலத் திட்ட ஒதுக்கீட்டை கருப்பர்களே அபகரிப்பார்கள், அதிகப் பிள்ளைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதால் நாம் சிறுபான்மையாகி விடுவோம்’ என்ற பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வெள்ளையர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் இக்கருத்துக்கள் உடனே செயல்வடிவம் பெற்றன. வெள்ளை நிறவெறி அமைப்பான “கூகிளக்ஸ்கிளான்’ கருப்பர்களைத் தாக்குவதற்கு முன்பு செய்யும் சிலுவை எரிப்புச் சடங்கை நடத்தியது. கொடியங்குளத்தில் நடந்தது போலவே கருப்பின மக்களின் இல்லங்கள் சூறையாடப்பட்டன.

“கழிப்பறை கழுவுவதற்கும், விவசாய வேலைகளுக்கும் கருப்பர்கள் இல்லாமல் முடியுமா’ என்று இந்நகரின் வெள்ளையர்களுக்குப் “புரிய வைத்து’, அவர்களைச் சமாதானப்படுத்தி கருப்பர்களைக் குடியமர்த்துவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தேவைப்பட்டது. அமெரிக்காவின் எல்லாச் சிறுநகரங்களும் இப்படி இரத்தக் கறையோடுதான் உருவாகின்றன. இப்போதும் இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கின்றன நகரங்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலம், தொழிற்சாலைகள் நிறைந்த நவீனமான மாநிலம். அங்கே ஒரு பிரபலமான நகரம் ஆலிவட். 1992ஆம் ஆண்டு கணக்கின்படி 1600 வெள்ளையர்களும், ஒரு சில கருப்பின மக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கிருக்கும் ஆலிவட் கல்லூரியில் பிடிக்கும் மொத்தமுள்ள 700 மாணவர்களில் 55 பேர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களில் எவரும் கருப்பரில்லை என்பதோடு 130 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே கருப்பர்.

அந்த ஆண்டு மாணவர்களிடம் மோதல் வெடிக்கிறது. கருப்பின மாணவன் ஒரு வெள்ளை மாணவியிடம் நெருங்கிப் பேசினான் என்று வெள்ளையின மாணவர்கள் சண்டை போடுகிறார்கள். அவர்களுக்காக “கிளான்’ நிறவெறி அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் முற்றிலும் வெள்ளையினப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதாவது “இயல்பாகவே’ நிறவெறியர்கள். இவர்களுக்கு கருப்பின மாணவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டுமென்றோ, கருப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது.

கலவரத்தின் முடிவில் 55 கருப்பின மாணவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேசிய அளவில் இது பிரச்சினையான பிறகு, கருப்பின மக்களும் நாடு முழுவதும் போராடிய பிறகு, கல்லூரி நிர்வாகம் தனது மரியாதையைத் திரும்பப் பெறுவதற்கு மெல்ல மெல்ல முயன்றது. அதன் பின்னர்தான் கணிசமான அளவிற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் கருப்பின மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது நடந்தேறுவதற்கும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் சூழ்நிலை பொதுவில் இப்படித்தான் இருக்கிறது. கருப்பின மக்களின் மீதான வெறுப்பை வெள்ளையின மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்தும், சமூகச் சூழ்நிலைகளிலிருந்தும் இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை நிறவெறி இயக்கங்களுக்கான ஆளெடுப்பு பெரும்பாலும் மாணவர்களிடமிருந்துதான் துவங்குகிறது. அமெரிக்கப் பள்ளி மாணவர் வன்முறையிலும், சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதிலும் வெள்ளையின மாணவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகார மாணவர்களில் பலர் வெள்ளை நிறவெறி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் பல வழக்குகளிலிருந்து அம்பலமாகி இருக்கிறது.

ஏழ்மையினாலும், இந்த நிறவெறிக் கொடுமைகளினாலும் கருப்பின மாணவர்கள் பலர் தமது படிப்பை முடிக்காமலேயே வெளியேறுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்த விலகல் போக்கு வெள்ளையினத்தில் இல்லை என்பதோடு, நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் உயர்கல்வியை முடித்தவர்கள் என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

உணவகங்கள், விடுதிகளில் கடைபிடிக்கப்படும் நிறவெறித் தீண்டாமையை எதிர்த்து 1950களிலேயே கருப்பின மக்கள் போராடினார்கள். அதன்படி இந்தத் தீண்டாமையைத் தடைசெய்து 1964ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இன்றும் அமெரிக்க உணவகங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறவெறி இருக்கின்றது. பதிவு செய்யப்படும் பல்லாயிரம் புகார்கள் இதனை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

நமது கிராமங்களில் இரட்டைக் குவளை இருக்கிறது. ஆனால் இந்த வடிவத்திலான பச்சையான தீண்டாமை நகரங்களில் இல்லை என்று பொதுவில் கூறலாம். ஆனால் அமெரிக்காவிலோ எல்லா நகரங்களின் உணவகங்களிலும் நிறவெறித் தீண்டாமை பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு புள்ளி விவரங்களின்படி, உணவகங்களின் சமையல் மற்றும் கோப்பை கழுவும் வேலைகளில் மட்டுமே கருப்பினத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உணவு, மது விநியோகிக்கும் வேலைகளில் கருப்பர்கள் மிகக்குறைவு. கருப்பர்கள் நேரடியாக விநியோகித்தால் வெள்ளையின வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.

சாப்பிட வருபவர்களில் கருப்பின வாடிக்கையாளர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? அதைத் தவிர்ப்பதற்காகவே கருப்பினத்தவர்களுக்கு மட்டும் “மேசைக் கட்டணம், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம்’ என்று தீட்டி விடுகிறார்கள். கருப்பின மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகளை விற்க மாட்டார்கள். அல்லது விலையை அதிகம் வைத்து விற்பார்கள்.

வீட்டிலிருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது அங்கே சகஜம். ஆனால் கருப்பினக் குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்தச் சேவை கிடையாது. “பூவுலகின் சொர்க்கமான அமெரிக்காவிலா இப்படி’ என்று நீங்கள் வியப்படைந்தாலும் அங்கே இவையெல்லாம் இயல்பான விசயங்களாகவே இருந்து வருகின்றன.

அமெரிக்காவெங்கும் 1800 கிளைகளைக் கொண்டிருக்கும் ஷோனி என்ற பிரபலமான உணவக நிறுவனத்துக்கு எதிராக, 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை கறுப்பின மக்கள் தொடுத்த வழக்குகளில், அதன் நிறவெறிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நட்டஈடாக மாத்திரமே 105 மில்லியன் டாலரைச் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். அதேபோல 1500 கிளைகளைக் கொண்டிருக்கும் டென்னி என்ற நிறுவனம் இதேகாலத்தில் 55 மில்லியன் டாலரை நட்டஈடாகச் செலுத்தியிருக்கிறது.

இன்றைக்கு இந்த நிறுவனங்கள் தமது பிராண்ட் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்றே அடக்கி வாசிக்கின்றன. என்றாலும் நிறவெறியோ புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. இப்போது கருப்பர்களுக்கென்றே தனிக் கிளைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கருப்பின மக்கள் நெருங்கமுடியாத உயர்கட்டணங்களைக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள் வர்க்கரீதியாக வெள்ளை நிறவெறியை நிலைநாட்டுகின்றன. இது பிரபலமான உணவகங்களின் கதை.

உள்ளூர் அளவில் செயல்படும் உணவகங்களிலோ இன்றும் நிறவெறி கேட்பாரின்றிக் கோலோச்சுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தேசிய ஊடகங்கள் செய்தியாகக் கருதி வெளியிடுவதேயில்லை. கருப்பின ஊழியர்கள் பணியாற்றும் பல கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் மீதிச்சில்லறை வாங்கும் வெள்ளையர்கள் கருப்புக் கைகளைத் தொடுவதில்லை என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வெள்ளைத் திமிரின் வீரியம் பார்ப்பனத் திமிருக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதைத்தான் இச்செய்திகள் காட்டுகின்றன.

“தாங்கள் நிறவெறியர்கள் அல்ல’ என்று கூறிக்கொள்ளும் வெள்ளையர்கள் கூட கருப்பின மக்களுக்கு எதிரான “வெள்ளைக் கருத்தை’ மனதில் தாங்கியபடிதான் வாழ்கின்றனர். “”கருப்பர்களில்தான் கிரிமினல்கள் அதிகம், கருப்பினக் குடியிருப்புகளில் நடந்து சென்றால் வழிப்பறி செய்வார்கள், வெள்ளையினப் பெண் ஒரு கருப்பனிடம் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவாள்” இவ்வாறெல்லாம் நீள்கிறது அந்தச் சித்திரம்.

ஒரு வகையில் முசுலீம்களைப் பற்றி இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் சித்திரத்திற்கு ஒப்பானது இது. வெள்ளையின மக்களிடம் மட்டுமல்ல, அவர்கள் கையிலிருக்கும் ஊடகங்கள், அரசியல், போலீசு, நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டிலும் இந்தப் பொதுக்கருத்து பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது.

1989ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் குறித்த கதையே இதற்குச் சான்று.

“”நானும் ஏழு மாத கர்ப்பிணியான என் மனைவி கரோலும் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கருப்பின இளைஞன் எங்களை வழிமறித்து, என் மனைவியைக் கொன்றுவிட்டு, என்னையும் சுட்டுக் காயப்படுத்தி, வழிப்பறி செய்து விட்டான்” என்று போலீசில் புகார் கொடுத்தான் சார்லஸ் என்ற வெள்ளை இளைஞன்.

உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது. சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். “அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்’ என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மட்டும் இதுபோன்று 67 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கருப்பின மக்கள் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வெள்ளைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இருந்தும் இன்று வரை அமெரிக்க “மனசாட்சி’ ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.

“”அமெரிக்காவில் கொலைசெய்யப்படும் வெள்ளையர்களில் 90% பேரைக் கொல்பவர்களும் வெள்ளையர்கள்தான்” என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை இப்படி அறைந்து கூறினாலும் வெள்ளையன் ஒருவன் கொல்லப்பட்டவுடனே, ஒரு சராசரி வெள்ளையனின் சந்தேகப் பார்வை முதலில் கருப்பின மக்களை நோக்கியே திரும்புகிறது.

இந்த வெள்ளையினக் கருத்தின் பலத்தில்தான் அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூத்தது கூகிளாக்ஸ்கிளான். 1920 ஆம் ஆண்டு மட்டும் இவ்வமைப்பில் 50 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

வெள்ளை அங்கிகளைப் அணிந்து கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் சிலுவையை எரித்து சடங்கு நடத்தி “வெள்ளை அதிகாரம்’ என்று கூக்குரலிட்டுக் கொண்டே கருப்பர்களைத் தாக்கிக் கொலை செய்வார்கள். இவர்கள் கொலை செய்யும் முறைகளோ வலிமையான மனதைக் கொண்டவர்களையே பதைபதைக்கச் செய்யும். இன்றைக்கு கிளான் வலுவிழந்து பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வந்தாலும் தனது வேரை மாத்திரம் விட்டுவிடவில்லை.

இது போக ஒயிட் ஆரியன் ரெசிஸ்டன்ஸ், வோர்ல்டு சர்ச் ஆஃப் தி கிரியேட்டர், யூத் ஆஃப் ஹிட்லர், பிலிட்ஸ்கிரிக், கிரேசி ஃபிக்கிங் ஸ்கின்ஸ், ரோமான்டிக் வயலன்ஸ், தி ஆர்டர் என்று பல்வேறு பெயர்களில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் செயல்படுகின்றன.

தற்போது அமெரிக்காவில் இதுபோல 300 குழுக்களும், இவற்றில் 50,000 உறுப்பினர்களும், 1,80,000 ஆதரவாளர்களும் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இவற்றின் இணையத் தளங்களைப் பல இலட்சம்பேர் பார்ப்பதாகவும் தெரிகிறது. இந்த வெள்ளை நிறவெறிக் குழுக்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருக்கும் புதிய நாஜி இயக்கங்களோடும் தொடர்புண்டு. இவர்களுக்கு உள்ளூர் அளவில் அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

இவர்களுக்கென்றே பத்திரிக்கைகளும், இணையத் தளங்களும், கேபிள் டி.வி.க்களும் உண்டு. இவர்கள் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள கார்ட்டூனில் எரிந்து கொண்டிருக்கும் கருப்பின இளைஞனின் படத்தைப் போட்டு “இக்காட்சி பேஸ்பால் விளையாட்டை விட இனிமையானது’ என்று எழுதியுள்ளனர். இவர்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அதில் கருப்பின மக்களைத் தாக்குவது, கொடூரமாகக் கொலை செய்வது, கருப்பினத் தேவாலயங்களைக் குண்டு வீசித் தாக்குவது, மற்றும் பல்வேறு வேற்றினத்தவரைத் தாக்குவதையும் தொடர்ந்து செய்கின்றனர்.

இவற்றில் பல தாக்குதல்கள் புகார்களாகவே பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்டதிலும் பெரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 1850க்குப் பிறகு கருப்பரைக் கொன்ற குற்றத்திற்காக இதுவரை ஒரு வெள்ளை நிறவெறியனுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தகையதொரு அங்கீகாரம் நிறவெறிக்கு இருப்பதனால்தான் வெள்ளை நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கே தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் யாரை ஆதரிக்க வேண்டுமென பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்கின்றனர். சென்ற தேர்தலில் புஷ்ஷை ஆதரிக்குமாறு

கூகிளாக்ஸ்கிளான் தனியாக ஒரு வீடியோவையே வெளியிட்டது. அதற்கு முந்தைய தேர்தலில் அல்கோரைத் தோற்கடிப்பதற்கு புஷ் புளோரிடா மாநிலத்தில் கருப்பின மக்களை வாக்களிக்க முடியாமல் செய்ததை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் நியமிக்கப்பட்ட பல வெள்ளையின நீதிபதிகள் நிறவெறிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். எனவே வெள்ளை நிறவெறி அமைப்புகள் தீவிர மனநோய் முற்றிய ஒரு சிறு கூட்டமல்ல. அமெரிக்கச் சமூகத்தின் உருத்திரட்டப்பட்ட வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் நிறவெறிக் கொடுமைகளில் போலீசின் அட்டூழியங்கள் முக்கியமானவை. 82 முதல் 92 வரை போலீசை எதிர்த்து கருப்பின மக்கள் தொடுத்த 3000 வழக்குகளை எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரித்திருக்கிறதெனில் பதிவு செய்யப்படாத புகார்களை ஊகித்துக் கொள்ளலாம். போலீசை எதிர்த்து யாரும் எளிதில் புகார் தெரிவிக்க முடியாது என்ற நிலை நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிற்கும் பொருந்தும்.

போலீசின் நிறவெறிக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பிரபலமானது. இங்கு வசிக்கும் 35 இலட்சம் மக்களில் 2,80,000 பேர் மட்டுமே கருப்பினத்தவர். ஆனால் போலீசை எதிர்த்த புகார்களில் 50% கருப்பின மக்களுடையது. இங்கிருக்கும் 8,300 போலீசுக்காரர்களில் வெறும் ஏழு பேர்தான் கருப்பினத்தவர். ஏழு பேர் லத்தீன் அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். 1992ஆம் ஆண்டு நடந்த ரோட்னி கிங் வழக்கு தொடர்பான கலவரத்தை இந்தப் பின்னணியில் பார்த்தால் போலீசின் நிறவெறியைப் புரிந்து கொள்ள முடியும்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 30.4.92 அன்று ரோட்னி கிங் எனும் கருப்பின இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை ஒரு போலீஸ் வாகனம் பின்தொடர்ந்து சென்று மறித்து நிறுத்தியது. உடனே மேலும் சில போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டன. “காரை ஏன் உடனே நிறுத்தவில்லை’ என்று சீறிய இரு போலீசு அதிகாரிகள் ரோட்னி கிங்கைக் கொடூரமாகத் தாக்கினர். எந்தத் தவறும் செய்யாத ரோட்னி கிங்கை மற்ற போலீசாரும் சேர்ந்து தாக்கத் தொடங்குகின்றனர்.

அருகில் இருக்கும் கடை ஒன்றின் மேலாளரான ஜார்ஜ் ஹாலிடே என்ற வெள்ளையர் இக்காட்சியினைத் தனது வீடியோவில் பதிவு செய்கிறார். 81 விநாடிகள் ஓடுகிறது அந்த வீடியோபதிவு. அதற்குள் ரோட்னி கிங் மீது விழுந்த அடிகள் 56. பல இடங்களில் எலும்பு முறிந்த நிலையில் ரோட்னி கிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஊடகங்களில் வெளியான இந்த வீடியோக்காட்சி உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஆனால் வெள்ளை அதிகாரவர்க்கம் இதனைப் பத்தோடு பதினொன்றாகக் கருதியது. சிமி வேலியில் நடந்த இவ்வழக்கிற்கான ஜூரிகளில் ஒருவர் கூட கருப்பர் இல்லை. வீடியோ ஆதாரம் இருந்தபோதும் “குற்றவாளிகளில்லை’ என்று கூறி போலீசு அதிகாரிகளை விடுவித்தது அந்நீதிமன்றம்.

தீர்ப்பைக் கண்ட கருப்பின மக்கள் குமுறி வெடித்தனர். வெள்ளை நிறிவெறிக்கு எதிராக நவீன அமெரிக்கா அத்தகைய ஒரு கலவரத்தை ஒருபோதும் கண்டதில்லை. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பற்றி எரிந்தது. ஏனைய நகரங்களிலும் வன்முறை வெடித்தது. கருப்பின மக்களுடன் லத்தீனியர்களும் சேர்ந்து கொண்டனர். கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர், 2400 பேர் காயமடைந்தனர்.

கருப்பின மக்களின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சிய அரசு. இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டது. இம்முறை நடுவர்களில் இரண்டு கருப்பர்களும் ஒரு லத்தீனியரும் இடம் பெற்றனர். இறுதித் தீர்ப்பில் வீடியோ காட்சியில் அடிக்கும் இரண்டு போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. வீடியோ பதிவில் சிக்கிக் கொள்ளாமல் அடித்த போலீசு அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தத் தண்டனை ஒரு கண்துடைப்பு என கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் வெள்ளை நிறவெறியினால் கட்டமைக்கப்பட்ட போலீசு எந்திரத்தை அதற்கு மேல் தண்டிப்பதை அங்கே எண்ணிப்பார்க்கவே முடியாது.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் போலீசு தலைமையகத்தில் இருக்கும் கணினித் திரைகளில் “ஒரு நீக்ரோவை எதிர்கொண்டால் முதலில் சுடு! பின்பு கேள்வி கேள்!’ என்ற முத்திரை வாக்கியமே ஒளிர்ந்து கொண்டிருக்குமாம். இப்படிப் போலீசுத்துறை முழுவதும் புரையோடியிருக்கும் நிறவெறியைச் சகிக்க முடியாமல், அமெரிக்காவின் போலீசுத் துறைகளில் மிக அரிதாகவே இருக்கும் கருப்பின அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த அப்பாவிக் கருப்பின இளைஞர் அமடோ தியாலோ, போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தது தூரத்திலிருந்த போலீசுக்கு துப்பாக்கி போல தெரிந்ததாம்! இதை எதிர்த்தும் கருப்பின மக்கள் போராடினர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.

கருத்துக் கணிப்பு ஓன்றின்படி, போலீசுக்கு அஞ்சி தெருவில் தனியாக நடமாடவே பயப்படுவதாகப் பெரும்பான்மையான கருப்பின மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி பயப்படுவதாக வெள்ளையின மக்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசின் நிறவெறி மட்டுமல்ல, அது தோற்றுவிக்கும் அலட்சியம் கூட பல கருப்பின மக்களைக் காவு வாங்குகிறது.

டெக்சாகோ, அமெரிக்காவிலிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இதன் வெள்ளையின மேலதிகாரிகள் கருப்பினப் பணியாளர்களைக் கேவலமாகப் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இதனைக் கண்டித்து 1348 கருப்பினத் தொழிலாளிகள் வழக்கு தொடுத்து, 176 மில்லியன் டாலரை நட்டஈடாகப் பெற்றனர். இதன் சேர்மன் வேறு வழியின்றி தொழிலாளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பின மக்கள் 12 சதவீதம் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களில் அவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளனர். முக்கியமாக மேலாண்மை நிர்வாகிகளில் கறுப்பினத்தவர் அறவே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெள்ளையருக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்குமெனில், அதே உயர்வுக்காக ஒரு கருப்பினத்தவர் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஷெல் ஆயில், கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தியாவில் கால் பதித்திருக்கும் இவ்விரண்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் இயல்பான கூட்டாளிகள் என்பதை அவர்களது அமெரிக்க வரலாறே எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க அரசின் உயர்பதவிகளில் இருக்கும் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறவெறியைக் கக்கியிருக்கிறார்களை. விரிவஞ்சி அவற்றை இங்கே எடுத்துரைக்க முடியவில்லை. அரசு செயல்படுத்தும் பல நடவடிக்கைகளிலும் நிறவெறி அன்றாட விசயமாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் என்று அறிவித்தால், அதனைக் கருப்பின விவசாயிகள் பெற முடியாது. நிறவெறியின் காரணமாகவே பல கருப்பின விவசாயிகள் திவலாகியிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சியின் அதிபர்களாக இருந்த ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் வெள்ளை மாளிகையை அப்பட்டமான நிறவெறி ஆட்டிப் படைத்தது. 1988 தேர்தலில் தந்தை புஷ் தனது பிரச்சாரத்தில் வெளிப்படையான நிறவெறி துவேசத்தைக் கக்கினார்.

நேரடி சாட்சியங்கள் இல்லாத ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வில்லியம் ஹார்ட்டன் எனும் கருப்பின இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி அத்தேர்தலில் நிறவெறியைப் பல்வேறு வகைகளில் தூண்டிவிட்டது குடியரசுக் கட்சி. “இத்தகைய கிரிமினல்களின் கையில் நாடு போகவேண்டுமா?’ என்பதே தேர்தலின் முத்திரை முழக்கமாக இருந்தது. பின்லேடன், சதாம் ஹூசைன் போன்ற வெளிநாட்டு வில்லன்கள் இல்லாத போது கருப்பின மக்கள்தான் அமைதிக்கும் ஒழுங்குக்கும் எதிரான குறியீடாக அமெரிக்காவில் சித்தரிக்கப் படுகின்றனர்.

இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.

அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.

Categories: Elections, USA Tags:

எரிக் ஃபானர் நேர்காணல் :: மைத்ரேயன்

November 2, 2008 Leave a comment

சில பேருக்கு அமெரிக்க உண்மை தெரிகிறது, அதுவும் தெளிவாகத் தெரிகிறது. எரிக் ஃபானர் ஒன்றும் வாயில் நுரைகக்கும் இடது சாரி இல்லை. ஆனால் அவர் ஒன்று சொல்கிறார். அமெரிக்க பெரும் நிறுவனங்கள் உலகளாவிய சந்தையில் போட்டி போட முடியாத நிலையில் இருக்கின்றன, எனவே அவை அமெரிக்க அரசாங்கத்தைத் தம் தொழிலாளரின் நலன்களுக்கான பளுவைச் சுமக்கச் சொல்கின்றன.

லாபமெல்லாம் பணக்காரர்களுக்கு, நஷ்டமெல்லாம் அரசாங்கத்துக்கு – என்ன ஒரு முதலியம், என்ன ஒரு சோசலிசம்!

இதைக் கவனித்தால் இதேதான் இந்தியாவில் பல பத்தாண்டுகளாக நேருவிய மரமண்டைகள் பயின்று வந்தன, இதேதான் திராவிடியப் புல்லுருவிகள் அரசாக நடத்துகிறார், மேற்கு வங்கத் தேசத் துரோகிகளும், ஏன் நாக்சலைட்களுமே இதைத்தான் பயின்று வருகின்றனர்.

அழிப்பெல்லாம் அரசாங்கம், நல்லதெல்லாம் நாங்கள் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே ரயில்வே நிலையங்கள், தார்ச்சாலைகள், கல்விக் கூடங்கள், மின்கம்பங்களை எல்லாம் உடைத்துக் குண்டு வீசி அழித்து மக்களுக்கு நல்லது செய்து விட்டு, மக்களுக்கு எந்த வசதியும் அரசு செய்து தரவில்லை நாங்கள்தான் செய்கிறோம் என்று கட்டப் பஞ்சாயத்து செய்யும் அற்பமிருகக் கூட்டம் இந்த நாக்சலைட் கூட்டம். எனவே இவர்களும் அரசாங்கத்தைச் சுரண்டுவதை நியாயப் படுத்துகிறார் என்று சொன்னேன்.

ரஷ்யத் திருடர்களின் அரசும், சீன ராட்சதர்களின் ‘கம்யூனிசக் கட்சி உயரதிகாரிகளின்’ அரசும், இதாலிய பெர்லுஸ்கோனியின் அரைப் பாசிச கிருஸ்தவ ஜனநாயக அரசும், புஷ் – சேனியின் குடியரசுககட்சி பெரும்தனக்காரர்களின் அரசும் எல்லாம் இதே கொள்கைகள் கொண்டவைதான்.

மக்கள் நம்பிக்கைக்கு உரிய அரசைக் கைப்பற்றி, அதை ஓட்டாண்டியாக்கி, எல்லா நன்மைகளையும் தம் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அரசு நம்பத்தக்கது அல்ல, அதை ஒழித்து எங்களை மாத்திரம் நம்புங்கள் என்று சொல்லும் விஷக்கிருமிக் கருத்தியல் இவர்களது.

அதுதான் ஃபானர் சொல்கிறார்: வால்மார்ட் தன் ஊழியர்களின் உடல்நலக் காப்புக்கான கட்டணத்தைக் கொடுக்கத் தயாரில்லை, எனவே அதை அரசாங்கம் ஏற்கவேண்டும் என்று செய்தித்தாள்களில் தேர்தலுக்கு முன் விளம்பரம் கொடுத்து வருகிறது. என்று சுட்டுகிறார்.

மகெய்னோ, ஒபாமாவோ, அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது அவர் உள்ளர்த்தம் என்று நான் புரிந்து கொள்கிறேன். அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு உவப்பில்லாத எதையும் தேர்தல் கொணராது என்றும் அவர் கருதுகிறார்போல எனக்குப் படுகிறது.

Interview with Historian Eric Foner: ‘Life Is Getting More Difficult for Americans’ – SPIEGEL ONLINE – News – International: “As Americans prepare to vote, historian Eric Foner speaks to SPIEGEL about the current crisis of confidence in the United States, the roots of US exceptionalism and the country’s ever-changing concept of freedom.”

American Election: An Illusion Of Democracy
By Dr. Elias Akleh

Once again, as it has been happening every four years, the American people are suckered into surrendering their necks to a different yoke of slavery through the process of so-called “democratic election” of their president. Little they know that this president, and his administration, is but a tool used by the power elite – international financiers, military industrialists, energy companies and corporatocracy – to control resources, transfer wealth upwards, keep the populace in check, enslave them, suppress their dissent, and conscribe them into wars of greed against their human neighbors

அமெரிக்க வாக்காளர் மீது பரிதாபப்படுங்கள் – Maithreyan

October 3, 2008 Leave a comment

அமெரிக்காவைப் பார்த்து விட்டுத்தான் பொத்ரியோ (baudrillard) ஊடகம்தான் நிஜம், வேறு நிஜம் ஏதும் கிடையாது என்று ஒரு அறிக்கை விட்டு அறிவு ஜீவிகளுக்குப் பெரிய எரிச்சலையும் குதூகலத்தையும் ஒரே நேரம் உருவாக்கினார் எனபது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் கீழே இந்தத் தேர்தலில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியை ஒருவர் வருணித்திருக்கிறார். எத்தனை தூரம் வெறும் பிம்பங்களின் அடுக்குகளுக்குப் பின்னே இந்த வேட்பாளர்கள் ஒளிந்து கொண்டு மக்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் என்று பாருங்கள்.

இதனால் நான் ஜனநாயக முறையைத் தூர எறிந்து விட்டு சோவியத் சமுகத்தை நாடப் போகிறேன் அல்லது சொல்கிறேன் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம். இதிலேயே உணமையைக் காண்பது இத்தனை துன்பமாக இருக்கிற்தென்றால் சோவியத் சமூகங்களில் உண்மையின் வாசனையை எங்காவது பிடித்தால் கூட குலாக்/ சைபீரியச் சிறை அல்லது துப்பாக்கிச் சனியனைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்தக் கண்ணறாவியே (ஜனநாயக்ச் சாக்கடையே) பரவாயில்லை என்கிறேன். என்றாலும் என்ன விதமான சாக்கடை என்று தெரிந்து கொள்வது நம் சாவு எதனால் என்றாவது தெரிந்து கொள்ள உதவும்.

ரசாயனக் குட்டையா, அணுக்கதிரிய வீச்சா, வெறும் மூளைஜுரக் கொசுக்களின் தாக்குதலா என்று தெரிந்து கொள்வது ஆயிரத்தில் ஒருவராவது தப்பிப் பிழைக்க உதவலாம் இல்லையா?

A Billion Little Pieces | The New York Observer: “Get Out the Ritalin! It’s the Attention Deficit Democracy: It’s Wall Street to McCain to Letterman to Palin to Couric to Biden to Obama; ‘You’re Sitting There Watching McCain Get Makeup Put on His Face,’ Says Dave Writer”