Archive

Posts Tagged ‘PaRa’

பா ராகவன் – கும்தம்: விடுதலைப் புலிகள்

May 26, 2009 1 comment

“கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே” என்றார் காண்டீபன்.

“அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?” என்று இன்பம் கேட்டார்.

“கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.”

“அலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ள வேண்டும். வீட்டுக்கே போய் வேலையை முடித்துவிடலாம். காரில் போகும்போது சுட்டுவிடலாம். ஏதாவது விழாவுக்கு வருவான். மேடையில் முடித்து விடலாம்…”

இடம், தேதி, தருணம் தீர்மானித்து, ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டு விட்ட விவரம் தெரியாமல் நண்பர்கள் லொக்கேஷன் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதும். குடித்துவிட்டு மணிக்கணக்கில், சமயத்தில் முழுநாள் கூட உட்கார்ந்து விவாதிப்பார்கள். பேச்சில் சூடு பறக்கும். சிந்திக்கும் கணத்திலேயே செய்து முடிக்கும் வெறி கண்ணில் ஒரு மின்னல்போல் வெட்டும். எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தாலும், ஏதாவது செய்தாக வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணமில்லை

ஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். முந்தைய தலைமுறையின் `ஏதாவதுகள்’ எதுவுமே பிரயோஜனமில்லை. அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஊர்வலம் போனார்கள். கறுப்புக் கொடி காட்டினார்கள். மேடை போட்டுப் புலம்பினார்கள். கைதாகி, அடிபட்டு, எலும்பு முறிந்து படுத்தார்கள். என்றாவது ஒருநாள் ஏதாவது நடக்கும் என்கிற வண்ணமயமான கனவைச் சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்று விட்டார்கள்.

இனி அந்த வழி உதவாது. மறு கன்னத்தைக் காட்டிய பெரியவர்களே, உங்களை மதிக்கிறோம். ஆனால் பின்பற்றுவதற்கில்லை. அறவழிப் போராட்டங்கள் மனிதர்களுக்குப் புரியும். சிங்களர்களுக்குப் புரியாது. எங்கள் பாதை வேறு. எங்கள் பயணம் அபாயகரமானது. பணத்தையல்ல, எங்கள் உயிரை நாங்கள் முதலீடு செய்கிறோம். நாளைய சந்ததிக்கு சுதந்தரம் அசலாகவும், நிம்மதி வட்டியாகவும் கிடைத்துவிட்டுப் போகட்டும்.

இதோ, தொடக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக துரையப்பாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆல்ஃப்ரட் தங்கராஜா துரையப்பா. தமிழர்தான். ஆனால் தொகுதியில் எந்தத் தமிழரோடும் உறவற்றவர். பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960 முதல் 65 வரை யாழ்ப்பாணம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார் என்று உடனே கேட்பீர்கள். தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, சுயேச்சையாக நின்ற துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள். அடுத்த ரவுண்டில் மேலும் எப்படி மேயரானார் என்பீர்கள்.

நாங்கள் அரசியல்வாதிகளல்லர். ஆனால் அருவருப்பு அரசியலின் ஆணிவேர் வரை எங்களுக்குத் தெரியும். கோட்டைக்குப் போகும் வேட்கையில், வோட்டுக்குப் பேசும் பேச்சுகளின் அபத்தம் சாத்வீகிகளுக்குப் புரியாதிருக்கலாம். அந்தத் தலைமுறைதான் அவனை நம்பி உட்காரவைத்தது. எங்களிடம் அது பலிக்காது.

எத்தனைபேர் முயற்சி செய்திருக்கிறார்கள்! அமைதியல்ல, ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய தலைமுறையின் முதல் நபர் தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான் முதல் கனவாக இருந்தது. துரையப்பாவைக் கொல்லவேண்டும். சிவகுமாரன் முயற்சி செய்திருக்கிறார். சத்தியசீலனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது. அவரது தமிழ் மாணவர் பேரவையில் இருந்த அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள். பேரவைக்கு வெளியே இருந்த இளைஞர்களிடையேயும் அது கனவாக இருந்தது. இது கொலையல்ல, களையெடுப்பு.

யாராலும் முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. துரையப்பா லேசுப்பட்ட ஆளில்லை என்பதும் ஒரு காரணம். மாநகரத் தந்தை. பாதுகாப்பு பந்தோபஸ்துகள் அதிகம். அரசியலின் மேல்மட்டம்வரை தொடர்புகள் உண்டு. கொழும்பு செல்வாக்கு அதிகம். ஆனாலும் யாழ்ப்பாணம்தான் அவரது தலைநகரம். அங்கே இங்கே நகரமாட்டார். எதிரே யாரும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. போகிற வழியெல்லாம் மூக்குக்கு நேரே இரு கைளையும் உயர்த்திக் கும்பிட்டபடி போகிற பழக்கம் வந்து விட்டது. அத்தனை மக்களுக்கும் நண்பன் என்று சொல்லிக் கொள்வார். வடக்கில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும் தனக்கு உறவு என்பார். கிறிஸ்தவர் என்றாலும் ஹிந்து கோயில்களுக்குப் போவார். கடவுள் ஒரு பொருட்டில்லை என்றாலும் அது ஒரு கம்பீரம். ஆஹா, மத நல்லிணக்கவாதி. நம்மில் ஒருவர். நமக்காக இருப்பவர்.

அவருக்குத்தான் கட்டம் கட்டினார்கள். நாங்கள் கொலை செய்யப் போவதில்லை. கொசு மருந்தடிக்கப் போகிறோம். கொசு மருந்தடிப்பது கொலை என்றால் இதுவும் அப்படியே ஆகுக.

“சீக்கிரம் சொல். எங்கே செய்யப் போகிறோம்?” காண்டீபன் கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தின் மகன். எனவே அப்பாவின் வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாலை வேண்டாம் என்று நினைத்தார்.

இது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. ஒரு பொதுக்காரியம் என்று எடுத்துக்கொண்டு விட்ட பிறகு சொந்த விருப்பு வெறுப்புகள் குறுக்கே வருவது அடுக்காது. இங்கேதான் தடுக்கும். இதுதான் காலை வாரும். இதற்கு உண்ணாவிரதம் தேவலை. ஊர்வலமே போதும். பொதுக்கூட்டம் இதனினும் பெரிது. ஏன் நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை?

போட்டுவைத்த திட்டத்துக்கு மாற்றாக வந்த அனைத்து யோசனைகளையும் அந்த இளைஞன் நிராகரித்தான். “காண்டீபன், நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். இன்பம், நீங்களும். நமது நட்பு எப்போதும் தொடரும். ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றுவது காரியத்தைக் கெடுக்கும். நாம் பேசித்தான் முடிவெடுத்தோம். ஆயிரம் முறை பேசலாம். ஆனால் முடிவு என்பது ஒருமுறை எடுப்பது. இன்னொரு விஷயம். நம்மில் சிலர் இந்தத் திட்டம் பற்றி வெளியே பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேண்டாம், அவர்களும் விலகிக் கொள்ளட்டும். ஒரு துளி பயம் என்பது ஒரு துளி விஷத்துக்குச் சமம். எனக்கு அது இல்லை. எனவே நான் முடித்துவிடுகிறேன்.”

1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்ற போது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.

திட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்து கொள்வார்.

அன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.

துளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப் போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின் மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக் கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார்.

நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறி, யாழ்ப்பாணம்.

இறங்கியதும், “சரி பாப்பம்” என்று பிரபாகரன் விடைபெற்றார். இன்னொரு பஸ் பிடித்து வல்வெட்டித்துறைக்குப் போனார். வீட்டில் அப்பா திருவாசகம் படித்துக் கொண்டிருந்தார். பார்த்ததும் புன்னகை செய்தார். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் புன்னகை. அப்பா என்றால் சாந்தம். “சாப்பிட்டீர்களா அப்பா?”

பிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். நிம்மதியாகத் தூங்கினார். செய்தது பற்றிச் சிந்தனை ஏதுமில்லை. இனி செய்யவேண்டியது பற்றித்தான்.

மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் – 2

ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்கார மாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாகக் கவனிக்க மாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்ல மாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியே விடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்தி விட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக் கொண்டிருந்த போது அந்தச் சிறுவன் முதல் முறையாக வாயைத் திறந்தான். “அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?”

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக் கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்’ என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக் கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாக வேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்க வேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப்பிள்ளை. “திருப்பித் தாக்குவதா?”

“ஆம். அதிலென்ன தவறு?” என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல, இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.

அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.

“தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்து விடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்…”

பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக் கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு இராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.

பிறகு பகத்சிங்கைத் தெரிந்து கொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

“அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்…”

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. “பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?”

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல, திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.

மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் – 3

பந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.

வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம். அழைத்தால் கலந்துகொள்ளும் வைபவமா அது? அத்தனை பேரும் தங்கள் மகள் திருமணமாகவே நினைத்தார்கள். பெரிய பெரிய கோலங்களால் வீதியை நிறைத்து, முகத்தில் புன்னகை ஏந்தி நல்வரவு சொன்னார்கள்.

வேலுப்பிள்ளைக்கு மட்டும் கவலையாக இருந்தது. தம்பியைக் காணோம். எங்கே போனான்? மனைவியிடம் கேட்டுப் பார்த்தார். பதிலில்லை. மூத்த மகன் மனோகரனிடம் கேட்டார். தெரியவில்லை. ஜகதீஸ்வரியிடம் கேட்டார். ம்ஹும். “வினோதினி, உன்னிடமாவது சொல்லிவிட்டுப் போனானா?”

“தெரியவில்லையே அப்பா” என்றார் கல்யாணப்பெண்.

அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளை ராஜேந்திரன் கொழும்புவில் வேலை பார்க்கிறவர். ஓர் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் நல்ல உத்தியோகம், பெரிய சம்பளம். கௌரவமான குடும்பம். சம்பந்தம் அமைந்தது தெய்வச் செயல்.

திருமணத்துக்கு வந்து இறங்கியதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். “எங்கே உங்கள் கடைசிப் பிள்ளை பிரபாகரன்?” கண்ணிலேயே தென்படவில்லையே?

வேலுப்பிள்ளைக்குக் கவலையாக இருந்தது. சில காலமாகவே பிரபாகரனின் நடவடிக்கைகள் அவருக்குக் குழப்பம் தந்தன. யார் யாரோ நண்பர்கள் என்று வருகிறார்கள். இரகசியமாகப் பேசுகிறார்கள். வழியனுப்புவது போல் வெளியே செல்பவன், பலமணி நேரம் கழித்துத்தான் திரும்பி வருகிறான். மாணவர் பேரவைக் கூட்டத்தில் பார்த்ததாக யாரோ வந்து சொல்லிவிட்டுப் போகிறார்கள். யாழ்ப்பாணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய அப்பு சைக்கிள் கடையின் பின்புறம், தண்டவாளத்தில் தனியே அமர்ந்திருந்தான் என்று சொல்வார்கள்.

அரசியல் ஆர்வம் இருந்தால் சரி. தடுப்பதற்கில்லை. பிரபாகரன் வயதை ஒத்த அத்தனை பிள்ளைகளுக்கும் இருக்கிற விஷயம். அவர்கள் மாணவர்கள். அரசால், புதிய கல்வித் துறைக் கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சிங்கள மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் தருவதற்கென்றே தமிழ்ப் பையன்களை பலி கொடுக்கும் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். சும்மா இருந்துவிட முடியாது. ஒரு கட்டத்தில் பல்கலைக்கழகமே போகாத தலைமுறை ஒன்று உருவாகிவிடும்.

அதுதான் அரசின் விருப்பம். பெரிய விளைச்சலற்ற வடக்கு மாகாணத்தின் வளமை முழுதும் கல்வியால் வந்தது. அதில்தான் கைவைக்கிறார்கள்.

´நீ படிப்பது அபாயம். எங்கள் சிங்களப் பிள்ளைகள் படிக்காதிருந்தால் அபாயம். ஒதுங்கு.`

´இவனுக்கு வழி விடு. நீ தொண்ணூறு எடுத்தால் உனக்கு சீட். இவன் அறுபது எடுத்தாலே சீட்.`

தமிழ் இளைஞர்கள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருந்த காலம் அது. பிரபாகரனும் கொதித்திருக்கலாம். தப்பில்லை. ஆனால், இந்தப் பிள்ளையின் நடவடிக்கைகளில் ஏன் இத்தனை பூடகம்? போராட்டக் கூட்டங்களை அறிவிக்கும் போஸ்டர் ஒட்டப் போகிறான் என்றால் வீட்டில் சொல்லிவிட்டே போகலாமே?

“தம்பி, நீ போஸ்டர்தானே ஒட்டுகிறாய்?”

புன்னகைதான் பதில். “அப்பா, கவலைப்படாதீர்கள். இரவு வீட்டுக்கு வந்துவிடுவேன்.”

சில நாள் சொன்னபடி பிரபாகரன் வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாள் வர முடியாமல் போய்விடும். முதலில் கவலைப்படுவார்கள். பிறகு பழகிவிட்டார்கள். ஆனால், சகோதரியின் திருமணத்துக்கு முதல்நாள் கூடவா?

தம்பி வந்து விட்டானா? மாப்பிள்ளை வீட்டார் நாலைந்து முறை கேட்டுவிட்டுப் போய் விட்டார்கள். இன்னும் ஆளைக் காணோம். ´எங்கே போய்விட்டாய், தம்பி?`

வேலுப்பிள்ளை கவலையுடன் பின்புறம் சமையல் நடந்து கொண்டிருக்கும் பந்தலுக்குப் போனார். ஊர்ப் பெண்கள் எல்லோரும் கூடி கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்தார்கள். கொதிக்கும் உலையிலிருந்து வாசனை மிதந்து வந்தது. இங்கே சாம்பார். அங்கே பாயசம். பச்சடி தயார். பொரியல் தயார். ரசம் தயார். யாரப்பா, வடை மாவில் உப்பு போட்டாகி விட்டதா?

ஐயா, தம்பி வந்துவிட்டான். யாரோ சொன்னார்கள். ஆண்டவனே என்று ஒரு கணம் கண்ணை மூடி மனத்துக்குள் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே போனார் வேலுப்பிள்ளை.

பிரபாகரன், மாப்பிள்ளை ராஜேந்திரனின் அறையில் நின்று கொண்டிருந்தார். வணக்கம். பயணமெல்லாம் சுகமாயிருந்தது தானே?

உயரம் சற்று மட்டுத்தான். ஆனால் உறுதியான தேகம். எதையும் தாங்கும் என்பது போல. கையைப் பிடித்துக் குலுக்கும்போது லேசாக வலித்த மாதிரி இல்லை? பலசாலி போலிருக்கிறது. ஆனால், முகத்தில் என்ன ஒரு வசீகரப் புன்னகை. கண்ணில் தீப்பொறி மாதிரி ஏதோ ஒன்று. படித்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று. பிரபா, நீங்கள் என்ன படித்திருக்கீங்கள்? கேட்க நினைத்தார். ஏனோ மறந்து விட்டது. இன்னொன்றும் கேட்க நினைத்தார். அக்கா கல்யாணத்துக்குக் கூட பக்கத்தில் இல்லாமல் அப்படியென்ன வேலை? அதையும் கேட்கவில்லை. கேட்க முடியவில்லை என்பதுதான் சரி.

தாமதமாக வந்தாலும் ஒரு பொறுப்புள்ள தம்பியாக, அந்தத் திருமணச் சடங்குகள் நிறைவடையும் வரை பிரபாகரன் பிறகு உடனிருந்தார். வேலுப்பிள்ளைக்கு நிம்மதி. வினோதினிக்கு சந்தோஷம். அம்மாவுக்குப் பெருமிதம். என்ன இருந்தாலும் பிள்ளை பக்கத்தில் இருப்பது ஒரு பலம் அல்லவா? இப்படியே இருந்துவிட்டால் தேவலை. அப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் பிரபாகரன் அதிக சமயம் எடுக்கவில்லை. 1972-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், ஏதோ ஒரு தினம். நியாயமாக சரித்திரம் அந்தத் தேதியைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அப்போது அவருக்கு வயது சரியாகப் பதினாறு. அதில் சந்தேகமில்லை.

இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார் வந்திருப்பார்கள்?

ஒருவர் இருவர் மாதிரி தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்? பத்திருபது பேர்? அல்லது அதற்கும் மேலே? படுக்கையில் இருந்தபடி கண்ணைத் திறக்காமல் வேலுப்பிள்ளை குழம்பிக் கொண்டிருந்தார். மெல்லத் திரும்பிப் பார்த்தபோது மனைவியும் மகனும் சற்றுத்தள்ளி, பாயில் படுத்திருப்பது தெரிந்தது. நல்லவேளை, பிரபாகரன் இருக்கிறான்.

சில நிமிடங்களில் வெளியே கேட்ட சத்தம் வலுத்தது. பேச்சு சத்தம் மட்டுமல்ல. இப்போது நிறைய பூட்ஸ் சத்தமும் கேட்டது. எனவே, போலீஸ்.

கதவை அவர் திறந்ததுதான் தாமதம். தடதடவென்று இருபது, இருபத்தைந்து போலீஸார் வீட்டுக்குள் நுழைந்து அங்குமிங்கும் தேடத் தொடங்கி விட்டார்கள்.

“ஏய், என்ன நடக்கிறது? இங்கே என்ன செய்கிறீர்கள்? நான் வேலுப்பிள்ளை. மாவட்ட நிலவள அதிகாரி. நீங்கள் தேடும்படியாக என் வீட்டில் ஏதுமில்லை.”

இன்ஸ்பெக்டர் ஒருவர் மெல்ல அவர் அருகே வந்து, நிறுத்தி நிதானமாகக் கேட்டார். “எங்கே உங்கள் பிள்ளை பிரபாகரன்?”

திக்கென்றது வேலுப்பிள்ளைக்கு. பேச்சு வராமல் உள்ளே கைகாட்டினார்.

சற்று முன் அவர் பார்த்த இடத்தில், ஒரு தலையணையும் பாயும்தான் இருந்தன. தம்பி இல்லை..

பா. ராகவன்

மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் – 4
– பா.ராகவன் –

வல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தணியாத தாகம் கொண்டவர்கள். தரப்படுத்துதல் என்கிற பெயரில் தமிழ் மாணவர்களை அரசாங்கம் பழிவாங்கிக் கொண்டிருப்பதில் வெறுப்புற்றிருந்தவர்கள். தமிழ் அரசியல்வாதிகளால் பத்து பைசாவுக்குப் பிரயோஜனமில்லை என்று வருந்திக் கொண்டிருந்தவர்கள். தமிழர்களின் மீட்சிக்கு ஆயுதம் ஒன்றே இறுதி வழி என்று முடிவு செய்து, களம் இறங்கியிருந்தவர்கள்

ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. ஆயுதம் கிடைப்பது. வெடிபொருள்கள் கிடைப்பது. கிடைத்ததெல்லாம் இரண்டாம் தரம். உடைந்த துப்பாக்கிகள். துருப்பிடித்த பிஸ்டல்கள். கெஞ்சிக் கூத்தாடினால் ஏழெட்டு ரவைகள் கிடைக்கும். சுடுவதற்குப் பயிற்சி வேண்டாமா? பயிற்சிக்கு ரவைகளை வீணாக்கினால் புரட்சிக்கு என்ன செய்வது?

தவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மெக்கானிக்கை நட்பாக்கிக் கொண்டு, கிடைத்த உடைந்த துப்பாக்கிகளைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொல்லியிருந்தார்கள். குழுவின் இளம் உறுப்பினராகச் சேர்ந்திருந்த பிரபாகரனுக்கு, அந்த மெக்கானிக்கின் அசிஸ்டெண்டாக வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

துருப்பிடித்த பிஸ்டல்களைக் கழற்றிப் போட்டு ரிப்பேர் செய்யும் மெக்கானிக்கின் கைவிரல்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார் பிரபாகரன். எண்ணெய் போட்டுத் தேய்த்துத் தேய்த்து மெருகேற்றி, பகுதி பகுதியாக மீண்டும் இணைத்து, ஒரு நல்ல உருப்படியாக மாற்றி வைத்து விட்டு மெக்கானிக் எழுந்து போனதும் பிரபாகரன் அதனைக் கையில் எடுப்பார். மீண்டும் பகுதி பகுதியாகக் கழற்றிப் போட்டு விட்டு, மெக்கானிக் செய்தது போலவே திரும்ப இணைத்துப் பார்ப்பார். அதுதான் ஆரம்பம்.

தங்குமிடம்தான் பெரும் பிரச்னையாக இருந்தது. டீக்கடைகளின் பின்புறம். ரயில்வே லைன் ஓரத்து புதர் மறைவுகள். நண்பர்களின் வீடுகள். கோயில் திண்ணைகள். பள்ளிக்கூடத் திண்ணைகள். உலகம் உறங்கும் வரை விழித்திருந்து விட்டு, ஒதுங்கிப் படுப்பார். ஊர் விழிப்பதற்கு முன்னால் எழுந்து போய்விட வேண்டும். எந்த இடமானாலும் சரி. இதுதான் விதி. இதுதான் வாழ்க்கை.

ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதா தம்பி? தங்கதுரை ஆதரவாகக் கேட்பார். பிரபாகரன் சிரிப்பார். என்ன சாப்பிட்டாய்? அடுத்த கேள்வி அநேகமாக அதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாக அந்நாட்களில் பிரபாகரன் உட்கார்ந்து வயிறாரச் சாப்பிட்டது வெகு அபூர்வம். வசதியில்லாமல் இல்லை. இடமில்லை என்பதுதான் விஷயம். போலீஸ் தேடத் தொடங்கி விட்டது என்பது தெரிந்ததுமே தலைமறைவாகியிருக்க வேண்டும். வீடுவரை வந்துவிட்ட பின் தப்பித்தது சற்றே பிழை. இன்னும் கொஞ்சம் முன்கூட்டி யூகித்திருக்க வேண்டும். இப்போது தேடுதல் தீவிரமடைந்திருக்கும். எங்கும் கண்காணிப்புக் கழுகுகள் வட்டமிட்டபடியேதான் இருக்கும்.

இத்தனைக்கும் அன்றைய பிற தமிழ் இளைஞர்கள் செய்ததுபோல், அப்போது அவர் வங்கிக்கொள்ளை எதிலும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பாயிண்ட் பெட்ரோவுக்குப் போகும் பேருந்து ஒன்றில் தீ வைத்த குழுவில் அவர் இருந்தார். மக்கள் இல்லாத பேருந்து. ஷெட்டுக்குப் போய்க்கொண்டிருந்த போது வழியில் நிறுத்தி, ஓட்டுநரை இறங்கி நடந்து போகச் சொல்லிவிட்டு எரித்தார்கள். அதற்குத்தான் போலீஸ் தேடிக் கொண்டிருந்தது.

வெறும் ஆர்வம். ஏதாவது செய்யும் ஆர்வம். கவன ஈர்ப்பில் ஆர்வம். அரசாங்கத்தைப் பதறச் செய்யமாட்டோமா என்கிற தவிப்பு. அப்படியாவது தமிழர்களுக்கு ஏதாவது செய்யமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. ஆனால், இம்மாதிரியான உதிரிச் செயல்கள் பெரிய அளவில் உதவாது என்று மட்டும் அவருக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்க வேண்டும். ஆனால் இதுவல்ல. இப்படியல்ல. எனில் எது? எப்படி?

யோசித்துக் கொண்டிருந்தார். இரவுப் பொழுதுகளில் வயல்வெளியில் இறங்கி வெகுதூரம் நடப்பார். வயல் காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரை வள்ளிக் கிழங்கு. இருட்டில் தடவிப் பார்த்து செடியை உணர்ந்து, கிழங்கைத் தோண்டி எடுத்துக் கொள்வார். மேலும் நடந்து மிளகாய்த் தோட்டம் பக்கமாகப் போய் நாலைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக் கொள்வார்.எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் கிழங்கைக் கழுவி, கையாலேயே தோலைச் சீவிவிட்டு பச்சையாக அப்படியே உண்பார். தொட்டுக்கொள்ளப் பச்சை மிளகாய்.

“கஷ்டம்தான் இல்லை?” யோகச்சந்திரன் என்கிற குட்டிமணி கேட்பார். “இல்லையே” என்பார் பிரபாகரன். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும் பச்சை மிளகாயும் வெகு விரைவில் அவரது இஷ்ட உணவாகி விட்டிருந்ததுதான் காரணம்.

வீட்டை விட்டு வெளியேறி எத்தனை நாளானது என்பதே நினைவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரபாகரன் மறைந்திருந்த இடத்துக்கு வேலுப்பிள்ளை வந்து நின்றார்.

அதிர்ந்து போய்விட்டார் பிரபாகரன். “அப்பா, நீங்களா? இங்கேயா?”

“போலீஸ்காரன் தேடுவது பிழைப்புக்கு. அவனிடம் சிக்காதிருக்க முடியும். பெற்றவன் தேடுவது அப்படியா? தம்பி, என்ன இது? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”

பிரபாகரன் உடனே பதில் சொல்லவில்லை. வெகுநேரம் யோசித்தார். பிறகு சொன்னார். “அப்பா, உங்களுக்கு முழுக்கப் புரியுமா என்று தெரியவில்லை. என்னால் உங்களுக்கு இனி பயனில்லை. என்னை விட்டுவிடுங்கள்.”

தலைமறைவுக் காலத்தில் பிரபாகரனைச் சுற்றி ஒரு சிறு குழு சேர்ந்திருந்தது. தங்கதுரை, குட்டிமணி குழுவிலிருந்தவர்கள் அல்லர். இது வேறு குழு. வேறு இளைஞர்கள். பிரபாகரனைப் போலவே ஆர்வமும் துடிப்பும் மிக்க இளைஞர்கள். அதிகமில்லை. பத்துப் பதினைந்து பேர் இருக்கலாம். ஒரு குழுவாகச் செயல்படலாம் என்று முடிவு செய்திருந்தவர்கள். பிரபாகரனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவர்கள். தமக்குள் பேசி தங்கள் இயக்கத்துக்குப் `புதிய தமிழ்ப் புலிகள்’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

வெளியில் யாருக்கும் தெரியாது. பெயர் அல்ல, அப்படியொரு குழு உருவானது கூட. தலைமறைவு வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. கொஞ்சம் வெளிச்சத்தில் நடமாட முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, பிரபாகரன் பதுங்கியிருந்த இடம் அவரது தந்தைக்குத் தெரிந்தது போலவே போலீஸுக்கும் தெரிந்து போனது. அடுத்த இடம் தேடும் அவசரத்தில் அப்போது இருந்தார் பிரபாகரன். அப்போதுதான் வேலுப்பிள்ளை வந்திருந்தார்.

“சொல் தம்பி. என்ன செய்யப்போகிறாய்?”

இந்தியாவுக்குப் போகப்போகிறேன் அப்பா என்று அவர் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் அப்போது செய்தார்..