Archive

Posts Tagged ‘Puthagam Pesuthu’

நாஞ்சில் நாடன் – முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்

April 24, 2012 2 comments

முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று கொண்டிருந்த காலம். அங்கிருந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக ‘ஏடு’ என்றொரு மாத இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அஃதெனது நாற்றங்கால். சங்கத்தின் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவது, இதழுக்கு வரும் நெடுங்கட்டுரைகளைச் சுருக்குவது, துண்டு விழும் இடத்துக்கு நாலுவரித் தகவல்கள் எழுதுவது என்பவை என் பயிற்சிக் களம். பேரறிஞர்களின் 32 பக்கக் கட்டுரைகளை ஆறு பக்கத்துக்கு சுருக்கும் அறிவு கிடையாது எனினும் துணிச்சல் இருந்தது.

‘ஏடு’ சென்னையில் நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அப்படித்தான் ‘தீபம்’ எனக்கு அறிமுகம் ஆனது. எனது முதல் சிறுகதை ‘விரதம்’ அதில் வெளியாகி, அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக, இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டது. நடந்தது ஜூலை 1975-ல். மேளதாளம், பட்டுப் பரிவட்டம், யானை மீது அம்பாரி, மாலை, மங்கலப் பொருட்கள் என என் முதல் சிறுகதைப் பிரவேசம் அது. இதை நான் நேர்காணல்களில், கட்டுரைகளில் பதிவு செய்துள்ளேன். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற அமைப்பு, இன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மூத்த சகோதரர் ப. லட்சுமணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் 1977 ஜூலையில் ‘வாய் கசந்தது’, 1979 நவம்பரில் ‘முரண்டு’ எனும் என் கதைகள் மாதத்தின் சிறந்த கதைகளாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டதுண்டு. ஏனோ என் கதைகளில் ஒன்றுகூட ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒப்பேறவில்லை. அஃதே போல், எனது ஆறு நாவல்களில் எதுவும் சிறந்த நாவலாக அவர்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை. பரிசு பெற்றவர்களில் பலரை இன்று இலக்கிய உலகம் தேடிக் கொண்டிருப்பதும் பெறாதவன் இதை எழுதிக் கொண்டிருப்பதும் காலத்தின் கழைக் கூத்து.

முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் காண என்னையும் கூட்டிக் கொண்டு போனார். 1970களின் முற்பாதி என நினைவு. அவர் என்னை நாவல் எழுதச் சொன்னார். அவர் என்பது கலைக்கூத்தன். மற்றொருவர் நான் சந்தித்தே இராத, ‘தீபம்’ மூலமாகக் கடிதத் தொடர்பில் இருந்த, ‘கல்யாண்ஜி’ எனும் பெயரில் கவிதை எழுதிய வண்ணதாசன்.

அப்போது தீபம், கணையாழி, செம்மலர் போன்ற இதழ்களில் என் கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எதனாலோ ‘தாமரை’யில் நான் எழுதியதே இல்லை. நான் எழுத்தாளனாக உருவெடுக்கும் முன்பே வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி ப. ஜீவானந்தம் எனும் பொதுவுடமைச் சிங்கத்தின் குறுக்கீட்டினால் நின்று போயிருந்தது. பிறகென்ன, நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில் CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.

‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் கணிதத்தில் பயின்றவன். எண்கள் மீதும் கணிதப் பிரயோகங்களின் மீதும் எனக்கு தீராத காதலுண்டு என்று எனது நண்பர்களில் பலர் ஸி. வீரராகவன், எஸ். தியாகராஜன், எஸ். திருமலை, ஸி. விஜயகுமார் என்போர், ஹோமிபாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள். ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ எனும் நாடகத்தை பம்பாயில் நாங்கள் அரங்கேற்றியபோது அதில் வசனமே பேசாத மையப் பாத்திரத்தில் ஹரிஹரன் என்றொரு B.A.R.C நண்பர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அதே நாடகத்தை சென்னையில் வேறொரு நாடகக்குழு அரங்கேற்றிய போது ‘நாற்காலிக்காரர்’ பாத்திரத்தில் நீள உட்கார்ந்திருந்தவர் மாட்சிமை மிகு மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன். நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.

பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ, பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’ என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராய நகர் என பதிப்பகங்களுக்குக் கூட்டிப் போனார்.

ஒன்றும் பயனில்லை. பின்னாளில் தமிழ் நவீன இலக்கிய வானில் முன்னணி எழுத்தாளராகப் பிரகாசிக்கப் போகிற தாரகை ஒன்றின் வரவை நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்த அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை என்பது எத்தனை பெரிய தீப்பேறு? என்றுமே நான் ஒரு DIE HARD SPECIES. அத்தனை சுலபத்தில் தோல்வியைச் சம்மதித்துக் கொடுப்பவன் இல்லை.

பம்பாய் திரும்பிச் சென்றேன். மேற்சொன்ன நண்பர்கள் தலைக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் எட்டாயிரம் திரட்டினோம். BUD என்றொரு வெளியீட்டகம் பிறந்தது. BUD வெளியிட்ட முதலும் கடைசியுமான புத்தகம் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்பதொரு சோக சரித்திரம்.

ஞான. ராஜசேகரன் அட்டைப் படம் வடிவமைத்தார். மூவர்ண அட்டை. அன்று ஆஃப்செட் பிரிண்டிங் அறிமுகமாகி இருக்கவில்லை. BLOCK எடுத்து அச்சிடுவது அல்லது SCREEN PRINTING.

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் சுப்பராயலு என்பவர் செயலாளராக இருந்தார். மணிக்கொடி சீனிவாசன் என்றும் ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அறியப்பட்டவர் FREE PRESS JOURNAL எனும் பம்பாயில் இருந்து வெளியான ஆங்கிலத் தினசரியில் ஆசிரியராக இருந்தார். சுப்பராயலு அங்கு பணி புரிந்து கொண்டிருந்தார். ஞான. ராஜசேகரனின் அட்டைப்பட ஓவியத்தை வண்ணம் பிரித்து புகைப்படங்கள் எடுத்து PLATE செய்து BLOCK தயார் செய்தோம்.

‘தீபம்’ அலுவலகத்தில் நா. பார்த்தசாரதியின் சகோதரி மகன் ஷி. திருமலை அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் தான். சிறந்த வாசகரும் எடிட்டரும் கூட. என் எழுத்துகள் தீபத்தில் வெளியான போது என்னை மதித்து நட்புப் பூண்டவர், ஊக்குவித்தவர். மறுபடியும் சென்னை வந்த என்னை அவர் அழைத்துக்கொண்டு பாண்டிபஜார் வந்தார். அங்கு K.K. ராமன் என்பவரின் அச்சகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் இருந்த 10 பாயிண்ட் எழுத்துருக்கள் எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ எனும் நாவலில் என்கேஜ் ஆகி இருந்தன. ஆகவே 12 பாயிண்ட் எழுத்துருக்கள் கொண்டு அச்சிடலாம் என்றார். எனக்கு யாதொன்றும் அப்போது அர்த்தமாகவில்லை. முன்பணம் கொடுத்தாயிற்று.

நங்கநல்லூரில் என் சகோதரி வீட்டில் தங்கி இருந்தேன். 1977-ஆம் ஆண்டு பழவந்தாங்கல் அல்லது மீனம்பாக்கம் லோக்கல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது. அதிகாலை ஏழரை மணிக்குச் சகோதரி வீட்டில் காலைப் பலகாரம் சாப்பிட்டு, மத்தியானத்துக்கும் கட்டிக்கொண்டு பொடி நடையாகப் புறப்பட்டுப் போவேன். ஒன்பது மணிக்கு அச்சகம் திறக்கும்போதே போய்விடுவேன். காலி புரூப், பக்கம் புரூப் எல்லாம் நானே பார்த்தேன். முன்னிரவில் மாம்பலத்துக்கு நடந்து, ரயில் பிடித்து, மீனம்பாக்கத்தில் இறங்கி, பின்னி இன்ஜினியரிங் கம்பெனி சுற்றுச்சுவர் ஓரமாக நடந்து, சுடுகாடு – இடுகாடு வழியாக, பேய்க்கும் வழிப்பறிக்கும் அஞ்சி, ரங்கா தியேட்டர் வரும்வரை உயிர் குரல்வளையில் நிலை கொண்டிருக்கும்.

தங்கை வீட்டுக் கிணற்று நீர் தரையோடு தரையாகக் கிடக்கும். சென்னையின் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் இரவும் குளிக்காமல் கிடக்க ஏலாது. கால் – கால் வாளியாகச் சுரண்டிக் கோரிக் குளித்து சாப்பிட்டுப் படுக்க பதினொன்றாகிவிடும்.

தினசரி ஒன்றரை பாரம் புரூப் தருவார் காசிராமன். ஒரு பாரம் என்பது 16 பக்கங்கள். எனக்கு வேலையில்லாத நேரத்தில், அச்சகம் இருந்த கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த கலைஞன் பதிப்பகம் போவேன். தீவிர எழுத்தாளர் பலரின் புத்தகங்களை அன்று கலைஞன் மாசிலாமணி வெளியிட்டு வந்தார். அங்கு போய் உட்கார்ந்து சா. கந்தசாமி, அசோகமித்திரன், ஆ. மாதவன் என வாசிப்பேன். பெரியவர் மாசிலாமணி காந்தியவாதி, தமிழிலக்கியப் போக்குகள் உணர்ந்தவர். அவருடன் உரையாடுவது சுவாரசியமான அனுபவம். எனக்கு அப்போது தமிழிலக்கியச் சூழல் புதியது. எப்போதும் அந்த மிரட்சியுடன் இருந்தேன். இன்றும், கோவையில் அவரது மகள் வீட்டில் ஓய்வுக்கு மாசிலாமணி அவர்கள் வந்து தங்கி இருக்கும்போது எமக்குள் நீண்ட உரையாடல் நடக்கிறது.

‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று ‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ‘தீபம்’ திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளிவந்திருக்காது.

அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக் காணப் பரவசம். ஆனால் 12 பாயிண்ட் எழுத்தில், புத்தகத்தின் பக்கங்கள் மண் புற்றுபோல் வளர்ந்து கொண்டே போயின. எட்டாயிரம் ரூபாய் திகையுமா என படபடக்க ஆரம்பித்தது மனது. கடன் தரும் செழிப்புடன் அன்று உறவினர்களும் இல்லை. அச்சாக சரியாக 19 நாட்கள் எடுத்தன. 456 பக்கங்கள். 19 X 24 = 456, கணக்கு சரிதானா? எனது விடுமுறையும் தீரும் தருவாயில் இருந்தது. பிறகு பைண்டிங் கட்டிங் எனச் சில நாட்கள்.

முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும் BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். பாண்டிபஜாரின் ரத்னா கபேயா, கீதா கபேயா, இன்று நினைவில் இல்லை.

மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் புத்தகம் கையில் இருந்தது. அன்று எனக்கும் தெரியாது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவலாக அது கொண்டாடப்படப் போகிறது என்று. நன்றியுடன் கையெழுத்திட்டு அச்சுக்கோர்த்த இளம் பெண்களுக்கும், அச்சக உரிமையாளர் காசிராமனுக்கும், கலைஞன் மாசிலாமணிக்கும், தீபம் திருமலைக்கும் முதல்படிகள் தந்தேன். அன்று சகோதரி வீட்டுக்கு நடக்கும்போது சுடுகாட்டு, இடுகாட்டுப் பேய்கள் என்னை மரியாதையுடன் கண்டு வணக்கம் செய்தன.

பெயர் குறிப்பிடாமல், ஒரு முழுப்பக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என்று மட்டும் அச்சிட்டு, முந்திய ஆண்டில் தனது 55 வயதில் காலமானவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் என்னை ‘அவையத்து முந்தி இருக்கச்’ செய்தவர். நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். ஆயிரம் படிகளைப் பாரி நிலையத்தாரிடம் விற்பனைக்குக் கொடுத்து 180 படிகளைப் பம்பாய்க்குப் பார்சல் அனுப்பி கையில் சில படிகளுடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன்.

அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில், பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பா, தி.க.சி., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஆ. மாதவன், சா. கந்தசாமி. பூமணி. சு. சமுத்திரம், பேராசிரியர் கனக சபாபதி, அக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்), பேராசிரியர் கா. சிவத்தம்பி என புகழ்பெற்ற பலர்.

வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு? ஆயின 32 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன. ‘சொல்ல மறந்த கதை’ எனத் திரைப்படம் ஆனது. சேரன் முதலில் நடித்த தங்கர்பச்சான் இயக்கிய படம்.

இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.


ஜனவரி 2010.புத்தகம் பேசுகிறது இதழில் இருந்து..