Archive
S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா
பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.
பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.
அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான், அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.
பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!
அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.
பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.
நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.
பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.
Thanks:
Recent Comments