Archive

Posts Tagged ‘Sugumaran’

State of Tamil Short Story circuit: Literature – Poet Sugumaran

February 10, 2011 Leave a comment

‘செம்மை’யான நஞ்சுண்டர்!

நண்பர் நஞ்சுண்டன் ஒரு சிறு கதைச் செம்மையாக்க முகாமைச் சென்ற மாதம் நடத்தினார். முகாமுக்காக அவர் தேர்வு செய்திருந்த இடம் – தரங்கம்பாடி.

மதத்தைப் பரப்புவதற்காக வந்த பார்த்தலூமியோ சீகன்பால்க் தமிழறிஞர் சீகன்பால்க் அய்யராக உருமாற்றம் பெற்ற இடம். அவர் கட்டிய தேவாலயத்துக்கு எதிரில் இருந்த மையத்தில் முகாம். தங்குமிடத்துக்கு அடுத்த தெருவில் அவர் உருவாக்கிய அச்சுக்கூடம். முதன் முதலாகத் தமிழ்மொழி அச்சேறிய இடம். தேவாலயத்தின் பலிபீடத்துக்கு அருகில் சீகன் பால்க்கின் சமாதி. பார்த்துக் கொண்டிருந்தபோது சில நூற்றாண்டுகள் பின்னோக்கி நடந்ததுபோலத் தோன்றியது.

அறிமுகமானவர்களும் புதியவர்களுமாக பத்துப் பதினைந்து கதைக்காரர்கள். அவர்கள் எழுதிய சிறுகதைகளை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தலாம் என்பது முகாமின் செயல்திட்டம். இந்தத் திட்டத்தை நஞ்சுண்டன் செயல்படுத்திய விதம் அறிவியல் பூர்வமாக இருந்தது. கணினிகள், உடனடியான கதைப் பிரதிகள், அவற்றின் ஒவ்வொரு கட்டத் திருத்தத்தையும் காட்ட வெவ்வேறு வண்ணத்தாள்கள், மேல்நோக்கு எழுத்தாளர்களாக தேவிபாரதி, சூத்ரதாரி போன்ற சீனியர்கள், வேளாவேளைக்கு சிற்றுண்டியும் பேருண்டியும் என்று பெரும் நிறுவனங்கள் செய்யத் திணறும் திட்டத்தை இயல்பாக நிறைவேற்றினார். அவ்வப்போது பேராசிரியராக மாறி கண்டிக்கவும்செய்தார்.

இன்று தமிழ்ப் பதிப்புலகில் எடிட்டரின் தேவை தவிர்க்க இயலாதது என்று படுகிறது. மிகக் காத்திரமான படைப்புகள் கூட இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தப்பட்டிருக்கலாமோ என்ற ஏக்கத்தைத் தரும் பின்னணியில் ‘நஞ்சுண்டர்’களின் இடையீடு அவசியம். படைப்புக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவில் அந்த உறவைச் செம்மைப்படுத்தும் மூன்றாவது பார்வை எடிட்டருடையது. படைப்பு ஓர் அனுபவம் என்பதையும் மீறி மொழிக்கு வலு சேர்க்கும் பங்களிப்புக்கூட. ஒரு படைப்பாளி தன் காலத்தின் மொழியையும் நிகழ்வுகளையும் படைப்பில் வரலாற்றுவயப்படுத்துகிறான். ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டில் தென்னை மரம் இருந்ததா, இல்லையா?’ என்ற கேள்விக்கு நமக்கு விடையளிக்கக் கூடிய முதன்மை ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாகக் கருதப்படுவதன்  காரணம்  இதுதான்.  மொழியைக் கையாளுவதிலும் இது உதவும்.  ‘பதினைந்து குதிரைகள் நடந்து வந்தது’ என்பதைச் செம்மைப்படுத்த ஒருவர் இருப்பது குறுக்கீடல்ல; உதவி. படைப்பின் மீதான அக்கறைக்கும் மொழியின் மீதான மரியாதைக்குமான உதவி.

முகாமில் கலந்து கொள்வதையொட்டி பதினைந்து தொகுதிகளிலிருந்து சுமார் நூறு கதைகளையாவது வாசித்திருப்பேன். ஜே.பி. சாணக்கியா, என்.ஸ்ரீராம் முதல் பா. திருச்செந்தாழை, எஸ் செந்தில்குமார், கே.என்.செந்தில்வரை. எல்லா எழுத்தாளர்களின் தொகுப்பிலும் முக்கியமான மூன்றோ நான்கோ கதைகள் இருக்கின்றன. புதிய கதையாடல்களும் நேர்த்திகளும் இந்தக் கதைகளில் இருக்கின்றன.

எனினும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் தொகுப்பை வாசிக்கும்போது கிடைத்த இலக்கிய முழுமை இவற்றில் ஏன் இல்லை? ஓர் எழுத்தாளன் இங்கே இருக்கிறான் என்று அறிவிக்கும் தொகுப்பாக ஏன் எதுவும் இல்லை? ஆகச் சிறந்த கதைகளும் பரவாயில்லாத கதைகளும் கொண்ட தொகுப்பு வண்ணநிலவனின் ‘எஸ்தர்’. அவரது முதல் தொகுப்பு. அது ஒரு எழுத்தாளனின் வருகையைக் கட்டியம் கூறியது. இன்றைய சிறுகதைத் தொகுப்புகள் ஏன் அப்படி இல்லை? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

வழக்கமான இலக்கியக் கூட்டங்களைப் போலவே சிறுகதைச் செம்மையாக்க முகாமிலும் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட தனி உரையாடல்கள் சுவாரசியமாக இருந்தன. டேனிஷ் கோட்டைக்கு அருகில் கடற்கரையில் கூடி உட்கார்ந்து பேசியதில் இரவு மந்தமாக நகர்ந்தது. முகாமின் முதல் நாள் மாலை நஞ் சுண்டனின் மகன் சுகவனம் குட்டிக் கச்சேரி நிகழ்த்தினான். மழலை கலையத் தொடங்கும் குரல் அவனுக்கு. அந்தக் குரலில் உச்ச ஸ்தாயியைத் தொட அவன் செய்த சாகசம் வியப்படையச் செய்தது. ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற பாரதி பாடலை அவன் பாடிய விதம் ஒரு சவால். இந்தப் பாடலை எல்லாப் பாடகர்களும் ‘பிருந்தாவன சாரங்கா’வில்தான் அதிகம் பாடியிருக்கிறார்கள். சுகவனம் பாடியது – ‘யதுகுல காம் போதி’யில். பாரதி அந்தப் பாடலை இயற்றியது அந்த ராகத்தில்தான். எல். வைத்தியநாதன் மட்டுமே பாரதியைப் பொருட்படுத்தி  ஏழாவது மனிதன் படத்தில் அதேராகத்தில் மெட்டமைத்திருந்தார்.