Archive

Posts Tagged ‘Swaminathan’

Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan

June 3, 2012 2 comments

‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.

‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.

‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.

இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.

கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?


ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.

கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…


ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?


ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.

கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?


ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.

 

கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…


ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.

காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.

கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?


ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.

கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…


ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.

கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?


ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.

கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?


ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.

ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?

கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?


ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?


ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.

கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..


ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.

கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?


ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.

கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்

*****

மும்பையும் நானும்


மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.

நாஞ்சில்நாடன்

*****

கட்டுரை இலக்கியம்


நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.

நாஞ்சில்நாடன்

*****

பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்


நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.

ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

நாஞ்சில்நாடன்

Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

May 13, 2012 1 comment

தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து…

கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?

ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே ‘பெரியார் இல்லம்’ என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு

எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.

எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.

கே: உங்களது முதல் கதை குறித்து…


ப: என்னுடைய முதல் கதை ‘கபாடபுரம்’. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை ‘பழைய தண்டவாளம்’. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.

கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?


ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.

கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.

கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் ‘ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது’ என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.

சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.

எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.

கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!


ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.

கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?


ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?

கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!


ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது ‘மாங்கா’ மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.

இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.

கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?


ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.

(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்….)

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****

எனது பயணங்கள்


பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது – இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

*****

நானும் ரஷ்ய இலக்கியமும்


நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்

கே: இலக்கியத்தின், எழுத்தாளரின் பணி எதுவென்று நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தாளன் புதியவற்றைப் படைப்பது ஒருபுறம் என்றாலும், நிறைய நினைவுபடுத்துவதும், கவனமூட்டுவதும், தவறவிடும்போது சுட்டிக்காட்டுவதும் அவனது முக்கியமான பணிகள் என்று கருதுகிறேன். என்னதான் அறம், நீதி போன்றவற்றைச் சொல்லும் பல நூல்கள் நமக்கு இருந்தாலும், அந்த அறக்கோட்பாடுகளை தனிநபர்கள் பின்பற்றவேயில்லை. இன்றைய சகல பிரச்சனைகளுக்கும் காரணம், நமது சுயநலமே. அது தான் இயற்கையை விட்டு நம்மை பிரித்து வைத்து இயற்கையை அழித்து விற்பனை பொருளாக்கி வைத்திருக்கிறது. ஜன்னல் இல்லாத வீடுகளில், வெளிச்சம் வராத இல்லங்களில், இயற்கையின் குரலைக் கேட்க முடியாத சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஒரு பகுதியான நாம், அதைத் துண்டித்துக் கொண்டு வாழ முற்படும்போது மன நெருக்கடிகள் உண்டாகின்றன. அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி கூட நமக்கில்லை. இதையே என் படைப்புகளில் சுட்டிக் காட்டுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஒரு போதும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைத்தது. விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது பாவம் என்று கருதப்பட்டது ஆனால் இன்று? பாக்கெட்டில் பாட்டிலில் மட்டும் தான் குடிநீர் கிடைக்கிறது, இப்படி எளிமையாக கிடைத்த இயற்கையின செல்வங்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது, இதற்கு நாம் காரணமில்லை என்று நினைக்கிறோம். இலக்கியத்தின் பணி இதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மனிதனுடைய அன்றாடப் பிரச்சனைகளை, பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியமல்ல. அதையும் தாண்டி அவன் பின்பற்ற வேண்டிய அறத்தை, மறந்து போன விழுமியங்களை, கவனிக்க மறந்த சுற்றுச் சூழலை, சுட்டிக் காட்டுவதும் இலக்கியத்தின் பணிதான்.

கே: இன்றைய பதிப்புச் சூழல் எப்படி இருக்கிறது?


ப: சமீபமாக புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். புத்தகமும் ஒரு வணிகச் சந்தைப் பொருளாகி விட்டது, அதனால் எது நல்ல புத்தகம் என்று தேர்வு செய்வது சிரமமானதாக இருக்கிறது. புத்தகச் சந்தை விரிவடைவதால் நிறைய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 300 புதிய தமிழ் புத்தகங்களாவது வருகின்றன. அவற்றில் எண்பது சதவீதம் குப்பை. இன்று ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிக்கத் தயாராக இல்லை, பதிப்புத் துறையில் இன்றும முறையான எடிட்டர்கள் கிடையாது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் போது உரிமை வாங்குவதில்லை. மூல எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் கூட கிடையாது, ராயல்டி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலோருக்கு அது கிடைப்பதே இல்லை. ராயல்டி தொகையை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு தரப்படும் ராயல்டியை வைத்து ஒரு பேண்ட் சர்ட் கூட வாங்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் புத்தகத்தின் எண்ணிக்கை ஐந்தாயிரம்தான். அதுதான் இலக்கிய சாதனை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய பதிப்பு சூழல்.

கே: எழுத்தாளர்களிடையே காணப்படும் சர்ச்சைகள், சச்சரவுகளுக்கு என்ன காரணம்?


ப: விஞ்ஞானத்தில், அரசியலில், சமூகத் தளத்தில் இல்லாத சர்ச்சைகளா? எல்லாத் துறைகளிலுமே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது பதவி, அதிகாரம் மற்றும் பொறாமையால் உருவாகக் கூடியது. இலக்கிய சர்ச்சைகளின் நோக்கம் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்கள், ரசனை வேறுபாடுகளால் உருவாகிறது. ஒருவருக்கு சார்த்த்ரை பிடிக்கிறது; மற்றவருக்கு திருக்குறளைப் பிடிக்கிறது, அந்த ரசனை மாறுபாடு இரண்டு கருத்துருவங்களை உருவாக்கிவிடுகிறது.

இன்னொரு தளம் எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே உருவாகும் சண்டை. இதுவும் அபிப்ராய பேதம்தான், மற்றபடி எழுத்தாளர்களும் சராசரி மனிதர்களே. அவர்களின் உணர்ச்சிவேகமும் கோபமும் சண்டைகளை உருவாக்கவே செய்யும். ஆனால் அது முற்றி ஒருபோதும் பகையாவதில்லை. எதிர்துருவங்களாக உள்ள எழுத்தாளர்கள் கூட எளிதாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சூழல் இருக்கவே செய்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு ‘ஈகோ’ இருக்கும். அது மற்றவர்களிடம் காணப்படுவதை விட மேம்பட்ட ஈகோவாக இருக்கும். அதனால் எழுத்தாளர்கள் எதிலுமே உணர்ச்சி வசப்பட்டுச் சட்டென்று கருத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யாரும் வன்முறையைக் கைக்கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில்லை. கோபத்தில் படபடவென எழுதிவிடுகிறார்கள். அதோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால். பிற துறைகளில் அப்படி இல்லை. அந்தப் பகைமை ஒருவனை ஒன்றுமே இல்லாமல்கூட ஆக்கிவிடுகிறது. எழுத்துத் துறையில் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?


ப: விருதும் சர்சையும் உடன்பிறந்தவை. காரணம் எந்த ஒரு சிறந்த எழுத்தாளர் பரிசு பெறும்போதும் யாரோ ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படவே செய்வார். அத்தோடு விருது பெற்றவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளரா என்ற கோபம் உருவாகவே செய்யும். டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் என்ன சாதாரண எழுத்தாளரா?

வாசகன் எழுத்தாளனுக்கு எப்போதும் மானசீகமான விருதுகளைத் தந்து கொண்டேதானிருக்கிறான். அது ஒரு கைகுலுக்கலாகவோ, ஒரு தேநீரை வாங்கி தருவதாகவோ, ஒரு பேனா பரிசளிப்பதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தப் பரிசு உயர்வானது.

ஒருமுறை பழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அடிவாரத்தில் இட்லிக் கடை வைத்திருக்கும் ஒரு அம்மா என்னைப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தானே!” என்றார். “ஆமாம்” என்றேன். “என் பையன் உங்க புத்தகத்தைப் படிப்பான். இருங்க. நான் போய் அவனை வரச் சொல்றேன்” என்று கூறிவிட்டுப் போனார். அந்தப் பையன் வந்தான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். நான் அவனுடன் பேசிவிட்டு என் அறைக்கு வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து அந்த அம்மா ஒரு தட்டில் ஐந்து இட்லி, சட்னி கொண்டு வந்து கொடுத்து, “எங்களால இதுதான் தம்பி உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது. சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவர் ஏன் அதைக் கொடுக்கிறார்? அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவர் என்னைப் படித்தவரில்லை என்றாலும் அவர் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பினால் அதைக் கொடுக்கிறார். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது போன்ற பரிசும் பாராட்டும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் போதுதான் அவன் நம்பிக்கையும் உத்வேகமும் அடைகிறான். மற்றபடி மிகப் பெரிய விருதுகளை ஒருவித கூச்சத்தோடும், சமயத்தில் அது உருவாக்கக்கூடிய பிரச்சனைகளோடும்தான் எதிர்கொள்கிறான்.

கே: ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் கலந்த சூழலில் இளமையில் வாழ்ந்துள்ளீர்கள். உங்களுக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
ப: இரண்டிலும் எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொண்டேன். மனித வாழ்க்கையின் துயரங்கள், சிக்கல்கள் இவற்றிலிருந்து விடுபட மனிதனுக்கு உதவி செய்ய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அது பகுத்தறிவா மதமா என்று இரண்டு வழிகள் முன்னிருக்கின்றன. நான் இந்த இரண்டிலும் கலந்த இலக்கியம் என்ற மூன்றாவது வழியை நம்புகின்றவன். அது பகுத்தறிவையும் பேசுகிறது. புராணீகத்தையும் ஏற்றுக் கொள்கிறது. இதையேதான் இலக்கியமும் செய்கிறது; அறிவுத் துறைகளும் செய்கின்றன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் எழுத்தின் மிகப்பெரிய வேலை. அந்த நம்பிக்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எழுத்து முன்மொழியத்தான் செய்யும்.

எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களின் மீது விருப்பம் இல்லை. அதேசமயம் வறட்டுப் பகுத்தறிவு வாதத்தையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.

கே: புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து…
ப: இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுதுவும் எழுதப்படுகிறது. அப்படித்தான் ஆங்கில இலக்கியம் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து பிரிட்டிஷ் இலக்கியம், ஐரிஷ் இலக்கியம், அமெரிக்க இலக்கியம் என்று கூறப்படுவது போல்தான் தமிழ் இலக்கியமும். அது சிங்கப்பூரில், மலேசியாவில், கனடாவில், இலங்கையில் இருக்கிறது, அமெரிக்காவிலும் இருக்கிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இலக்கியம் எழுதப்படுகிறது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. சீனர்களைப் பற்றி, மலாய் மக்களைப் பற்றி, தங்கள் வாழ்விடம், சூழல் பற்றி, பௌத்த மதம் பற்றி… இப்படி நிறைய எழுதுகிறார்கள். சிங்கப்பூரில் வாழ்பவர்கள் தமது புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நாடுகளில் தாம் வாழும் சூழல்களை எழுதுகிறார்கள். அதே சமயம் தன்னுடைய வேர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ளவர்கள் அங்குள்ள பன்னாட்டுக் கலாசாரத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழ் அடையாளம் வேர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறார்கள், இன்றைக்கு இலக்கியத்தின் திசை மாறி இருக்கிறது. அது பன்னாட்டுக் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதே காரணம்

ஆனால் அயல்நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழில் எழுதுவது ஒரு பெரிய சவால். அதை எதிர்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அதன் முக்கியமான பலம்

தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதை விடவும் அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம் கொண்டாடப்படுகிறது, எனது யாமம் நாவல் வெளியான உடன் கனடாவில் இருந்து ‘இயல் விருது’ கொடுக்கப்பட்டது. பின்னர்தான் அதற்குத் ‘தாகூர் விருது’ கிடைத்தது. ஆக அவர்கள் எங்கோ தொலைவில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கௌரவத்தை அளிக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் படைப்புக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே எது நடந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் இவர்களை, இவர்களது படைப்புகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். அது என் கடமையும்கூட.

தமிழ் இலக்கியம் உலகு தழுவிய இலக்கியமாக மாற வேண்டும், அதற்கு உடனடித் தேவை ஆங்கில மொழிபெயர்ப்புகள், மற்றும் கல்விப்புலங்களில் தமிழ் இலக்கியம் பாடமாக அறிமுகமாவது. இரண்டையும் அயல்தேசங்களில் வசிப்பவர்கள் முன்கை எடுத்துச் செய்தால் தமிழ் இலக்கியம் உலகின் முக்கிய இலக்கியமாக கொண்டாடப்படும்.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து…
ப: தமிழக அளவில் பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும்தான். இவர்களை நான் அடிக்கடி திரும்பப் படிக்கிறேன். கவிஞர்களில் பிரமீளையும் நகுலனையும் தேவதச்சனையும் விரும்பி படிக்கிறேன். சமகால எழுத்தாளர்களில் சந்திரா, மனோஜ், சங்கர ராம சுப்ரமணியன், லட்சுமி சரவணக்குமார், பவா. செல்லத்துரை இவர்களை விரும்பி வாசிக்கிறேன்.

உலக அளவில் எப்போதும் என்னுடைய ஆசான்களாகக் கருதுவது டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும்தான். இலங்கையில் கவிஞர் சேரனும், உமா வரதராஜனும், கவிஞர் அனாரும், திசேராவும், ரஷ்மியும் முக்கியமானவர்கள். மலேசியாவில் ரெ. கார்த்திகேசுவும் பாலமுருகனும், சிங்கப்பூரில் லதா, ஜெயந்தி சங்கர் இருவரையும் வாசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வாழும் நடேசன், பெர்லினில் வாழும் கருணாகரமூர்த்தி இவர்களும் விருப்பமானவர்களே. என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் அவர்கள்தான்.

கே: எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் நீங்கள். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எழுத்தையே நம்பி வாழ்வது மிகச் சிரமமான ஒன்று. அதற்காக நிறையப் படிக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். உரிய கௌவரம் மரியாதை எதுவும் கிடைக்காது, மாதவருமானம் என்ற ஒன்று ஒரு போதும் கிடைக்காது, கூடுதலாக எழுதியதற்காக நாலு பேர் சண்டை போடுவார்கள். வசை பொழிவார்கள், அத்தனையும் சந்திக்க வேண்டும். நான் இந்த இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறேன். முழுநேர எழுத்தாளனாக வாழமுடியும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறேன். வருவாய் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீள வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வேலை செய்கிறேன். இதனால் ஆறுமாதம் நிம்மதியாக வாழமுடிகிறது. மற்றபடி புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் புத்தகம் வாங்கவும் பயணம் செய்யவும் போதாமல் தானிருக்கிறது

முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு அளவில்லாத சுதந்திரம். என் விருப்பத்துக்கேற்ப என்னால் வாழ முடிகிறது. என்னுடைய நேரம் என் கையில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், அண்ணன், குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்தச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றனர்.

இதன் பாதகம் என்னவென்றால் எதிர்காலத்தைப் பற்றி பயம், நிச்சயமின்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களுமே இதே பதற்றம், போராட்டத்துடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தையாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய வேண்டும். நூறு பேர் முயன்றால்கூட வருஷம் நூறு புத்தகம் ஆங்கிலத்தில் வந்துவிடும். தனிநபர்கள் செய்ய சிரமமானதாக இருந்தால் தமிழ் அமைப்புகள் ஆண்டுதோறும் பத்துப் புத்தகங்களையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம், தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கில இதழ்களுக்கு எழுதலாம். பல்கலைக்கழகங்களில் உரையாற்றலாம். எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், தமிழின் நல்ல புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லையே என்பதுதான். இதை மாற்ற உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வதை ஒரு கூட்டுச் சேவையாக கருதி அதற்கென தனி இணையதளத்தை உருவாக்கலாம். பிரபலமான பதிப்பகங்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும்படி ஆலோசனைகள், பரிந்துரைகள் செய்யலாம். ஒஹென்றி விருதுச் சிறுகதைகள் போல ஆண்டுதோறும் சிறந்த இருபது சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒரு தொகை நூலாக வெளியிடலாம். யூ டியூப்பில் தமிழ் இலக்கியம் குறித்த உரைகளை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தமிழ் நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட்டாகச் செய்யும்போது மட்டும்தான் தமிழ் இலக்கியம் மேம்பாடு அடையும்.

தங்கு தடையில்லாத, தனித்துவமான சிந்தனை ஓட்டம், மேதாவிலாசம் இவற்றைக் காண்கிறோம் எஸ்.ரா.வின் பதில்களில். “தென்றலை எனக்கு நன்கு தெரியும். நியூஜெர்ஸி வாசகர் முருகானந்தம் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தென்றல் பிரதிகளைக் கொண்டு வந்து தருவார். மதுசூதனன் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். தென்றல் அமெரிக்காவில் தீவிரமான தமிழ்ப் பணி செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்” என்கிறார் மாறாத புன்சிரிப்புடன். முக்கிய சந்திப்புக்காக வெளியே செல்லும் அவசரப் பணி இருந்த போதிலும் தென்றலுக்காக நீண்ட நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி கூறி, கேட்ட கேள்விகளைவிட கேளாதவை அதிகம் என்ற உணர்வோடு, விடை பெறுகிறோம்.

*****

கடவுள்


எந்த சக்தி மனிதனுக்கு உதவி செய்கிறதோ, எது மனிதனின் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறதோ, எது மனிதனை மேம்படுத்துகிறதோ, அது எல்லாமே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கு உகந்ததாகத்தானே இருக்க முடியும்? அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நடந்த துவேஷங்கள், மனித அவலங்கள், வெறுப்பு, தீண்டாமை போன்ற விஷயங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது என் முன்னால் இருக்கும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல. கடவுள் தேவைப்படுகிறாரா, இல்லையா என்பதுதான். எனக்கு கடவுள் தேவையானவராக இருக்கிறார். ஆனால் நம்பும்படியானவராக இல்லை.

நான் எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கிறேன். கோவில் என்பது ஒரு கூட்டுவெளி. அங்கே இசையும் சிற்பமும் தியானமும் ஒவியங்களும் ஒன்றுகலந்திருக்கின்றன. ஆகவே அந்த வெளி தனித்துவமானது. தேடித்தேடி கோவில்களுக்குப் போய் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன். வழிபாடுகளை நான் கேலி செய்வதில்லை. அது ஒரு நம்பிக்கை. அதை நம்புகிற மனிதன் ஏற்றுக் கொள்கிறான். நம்ப மறுக்கின்றவன் விலகிப் போகிறான். அவ்வளவே! மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அந்த இடங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வாறு கூடும் பொதுவெளி இன்று குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் டிவியை நமது அகவெளியாக மாற்றிக் கொண்டுவிட்டோம்

எனது இந்தியா


இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது நாம் வரைபடத்தில் பார்க்கும் இந்தியா அல்ல. அது ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி. அதை நாம் கற்பனை செய்யவே முடியாது. அவ்வளவு மாறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், நிலக்காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பயணத்தில் ஒவ்வொரு எட்டுமணி நேரத்திற்குப் பின்னரும் மாறுபட்ட நிலப்பகுதியை, கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை, உடையை, உணவை, மொழியை நாம் சந்திக்கிறோம். வேறெங்குமே இத்தனை வகைகளைப் பார்க்க முடியாது. தமிழகத்துக்குள்ளேயே சென்னையில், செங்கல்பட்டில், காஞ்சிபுரத்தில், ஆரணியில் என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பேசப்படுகிறது. உணவு முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளது. இவ்வளவும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய நதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். மொத்த இந்தியாவுமே நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாசார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைத் தேடும் ஒரு பயணி நதியோடு கூடச் செல்பவனாகவே இருப்பான். நதி வழி நடந்தால்தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும். நான் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை பயணம் செய்து பார்த்திருக்கிறேன். அதன் பழைய பாதை, புதிய பாதை, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு எப்போதுமே வறுமையான நாடு என்ற எண்ணமே மாறிவிட்டது.

அதுபோல இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்ற எண்ணமும் மாறிவிட்டது. இது அளப்பரிய செல்வம் கொண்ட நாடு. அவை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை அல்லது ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது என்பதுதான் நமது பிரச்சனை. இதைப் பயணம்தான் உணர்த்துகிறது. நான் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்ததை விட அதிகம் பயணம் செய்துதான் தெரிந்து கொண்டேன். கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறில்லை. நாம் பார்க்கும் மனிதனின் மொழி, உடை, அணிகலன் என்று பலவற்றில் இருக்கிறது. இந்தியாவில் இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது. இந்தியா இந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் பிரச்சனைகள்


இந்தியா எல்லாவித பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, அது தன் மரபால் பலம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் சமகாலப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமே முதன்மை அளிப்பதால் நமது மரபு என்ன, நமது பாரம்பரிய பெருமைகள் என்ன, நம் பிரச்சனைகளை அந்த மரபான வழிகளின் மூலம் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் அறியாமல் இருக்கிறோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன், உலகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிக அளவு இந்தியால்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் அந்த இளைஞர்களின் ஆற்றலை உழைப்பாக மாற்றவில்லை. இங்குள்ள கலை, மரபுகளைப் பேண முயலவில்லை. கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்திலும் நமக்கு வலிமையான பாரம்பரியப் பின்புலம் உள்ளது. சுயநலத்திற்காக நாம் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பது தனித்துவமிக்கது. அதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

ஆனால் வரலாற்றின் கொந்தளிப்பான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு என்று பார்த்தால், அறிவுத்துறை சார்ந்த இந்தியர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் ஆற்றலை, திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த அறிவுத்துறை மாற்றத்தை இந்தியாவிலும் செய்ய முன்வர வேண்டும். அப்படிச செய்தால் நம்முடைய இயற்கை வளங்களைக் கொண்டே நாம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல மாற்றம் வரும்.

Ranganna troupe’s drama :: N. Swaminathan

July 21, 2009 1 comment

ரங்கண்ணா குரூப் ‘இதொ அதோ’ன்னு கீரி பாம்பு சண்டைவிடறவன் மாதிரி ஏதோ
சொல்லிட்டு லீவுல போயிட்டாங்க. இந்தக் கவலையோட நான் தூங்கறச்சே
என் கனவுல வந்து ஒரு நாடகம் போட்டாங்க. அதான் இது….

காட்சி – 1

நியு ஜெர்சியில் பல குடும்பங்கள் வாழும் ஒரு அபார்ட்மென்ட்.

ரங்கண்ணாவின் குடும்பத்தில்:

ரங்கண்ணா: ஹா, ஹ,ஹ், ஹா, ஹா…

மங்களம் : அப்படி பேப்பரிலே சிரிப்பா என்ன போட்டுருக்கான்?

ரங்: இந்த கோர்/புஷ் தேர்தல் சர்தார்ஜி ஜோக்கு மாதிரி ஆயிட்டுது.
முதல்ல ஓட்டு வித்தியாசம் 2000ன்னான், அப்புறம், 900ன்னான்,
அப்புறம் 370ன்னான், இப்ப 228தாங்கறான்…

மங்: இதுக்கும் சர்தார்ஜிக்கும் என்ன சம்பந்தம்?

ரங்: ஒரு சர்தார்ஜி பிள்ளைய பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாசில சேத்தான்.
அங்க ஒரு மாசத்துல பையன் மக்குன்னு தெரிஞ்சு ஆறாங்கிளாசுக்கு தள்ளினா.
ஒரு மாசம் கழிச்சு இதுக்கு அவன் லாயக்கில்லனு அஞ்சாம் கிளாசுக்கு
தள்ளிட்டா. அங்க போனா ஒரு மாசத்துல நாலாங்கிளாசுக்கு போன்னு
அனுப்பிட்டா. சர்தார்ஜிக்கு கவலை வந்துடுத்து. சர்தாரிணிட்ட,
உம் புள்ள பெயிலாகி பின்னால பின்னால வர வேகத்த பாத்தா ரொம்ப
கவலயாயிருக்கு. எதுக்கும் நீ உன் பைஜாமாவை இறுக்கி முடிஞ்சிக்கோன்னான்…

மங்: சீ. சீ. உங்களுக்கு ஜோக் சொல்றதுக்கு ஒரு வெவஸ்தயே கெடையாது
நடுக்கூடத்துல சொல்ற ஜோக்கா இது…

சாந்தி/தங்கராஜன் குடும்பம்

சாந்தி: என்னங்க பிரியாணி எப்படி இருக்கு ?

தங்கராஜன்: ரொம்ப நல்லாருக்கு வன்கேழி பிரியாணி.

சாந்தி: என்னங்க, அதுக்குள்ளயும் ரெண்டு காலைத்தின்னாச்சா..
வன்கேழிங்கிறீங்க. எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க.
பண்ணினவளுக்கு பானையும் கரண்டியும்தானா?

அண்ணாமலை வீட்டில்

அண்ணாமலை: எப்படி தத்துவராயர் சுமேரு தமிழைவிடப் பழங்கால மொழின்னாரு?
சுமேரு அருணகிரியார் காலத்ததுன்னு தெரியும். முருகந்தானே
அருணகிரிட்ட “சும்மேரு, சொல்லற”ன்னு சொன்னரு. அவருக்கு நெனவா
எழுதிக்கேக்கணும்.

(மணி சுவாமிநாதன் தலைவிரிகோலமாக ஓடி வருகிறார்)

அண் : என்ன மணி, சட்டையெல்லாம் கிழிஞ்சிருத்து? சண்டை போட்டியா?

மணி: இல்லீங்க. தெருவில ஒத்தரு மணி, மணின்னு கத்துனாரு. என்ன வேணும்
நாந்தான் மணின்னேனா. அவ்வளவுதான். எனக்கு மணியாட்ட உரிமை இல்லியாடான்னு
கத்தி என்னை உலுக்கி சட்டைய கிழிச்சிட்டார். மணி ஆட்டரதே வாழ்வின் குறிக்கோளா
அலையுறாரேன்னு வருத்தமா இருக்கு. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு மணிய
வாங்கி குடுத்து ஆட்டிக்கிட்டு கெடய்யான்னு சொல்லிடலாமா? ரங்கண்ணா
குடுப்பாரா?

அண்: ரங்கண்ணாவா. அவருதான் முன்னமே சொல்லிட்டாரே,
வேற வேல இல்லியாடா ஒங்களுக்குனு.

(ஒரு கார் வந்து நிற்கும் ஓசை. அதிலிருந்து இறங்குகிறார் சர்தார்ஜி.
கையில் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டு நம்பரை பார்க்கிறார்.)

மணி: சார், சர்தார்ஜி வரான், அன்னிக்கு சொன்னேனே, ஒரு சர்தார்ஜி ஜோக்…
ஒரு சர்தார்ஜி டிஜிட்டல் வாட்சு வாங்கினான். அதை உத்து பார்த்தான். என்னடா
பன்னண்டு நம்பரில்ல, நாலுதான் இருக்கு. மணி, நிமிஷம் காட்டற முள்ளை வேற
காணும்னு கத்தினான் …
இத அவருகிட்ட சொல்லிடாதீங்க..ப்ளீஸ்..

மங்களம் எட்டி பார்க்கிறாள்:

மங்: நீங்களும் ஒங்க ஜோக்கும். அப்பவெ சொன்னேன் இந்த பாழாப்போற
சர்தார்ஜி ஜோக் வாணாம்னு, கேட்டேளா ? இப்ப சர்தார்ஜி வந்துட்டான், போட்டு
மொத்தப்போறான், கையில பெரம்பு வெச்சிருக்கான்.

சாந்தி பார்க்கிறாள்:

சா: பாருங்க, சர்தார்ஜி வரான். ரங்கண்ணா வீட்ல இல்ல நுழையறான்? ஏன் ?

தங்க: ரங்கண்ணா அவன் கிளப்புள குடிச்ச பீருக்கு காசு வசூலிக்க வரானா?

சா: என்னங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணும் பின்னால ஆடிக்கிட்டு வருது?

தங்க: டான்ஸ் ஆடற பொண்ணா இருக்கும்.. நீ போயி பாக்கி பிரியாணிய
தின்னுமுடி. பார்வையை மறைக்காத. வெள்ளக்காரி வெள்ளக்காரிதான்..

சா: ஜொள்ளு விடாதீங்க. அவளப்பாத்தா கர்ப்பிணி பொண் மாதிரி இருக்கு.

தங்க: சர்த்தான். சர்தார்ஜி கிளப்புல ஒரு உண்டி இருக்கு. Place your
contributions in the slot னு அது மேல எழுதி வெச்சிருப்பான். ரங்கண்ணா அதை
தப்பா புரிஞ்சிண்டு டான்சர்கிட்ட ஏதோ சில்மிசம் பண்ணி இது மாதிரி ஆயிருக்கும்.
அம்மணி ய டே, கீப்ஸ் த டாக்டர் அவேன்னு தெனாவெட்டா சொல்றச்சயே
நெனச்சேன். நெள, ஹி ஹாஸ் டு ரீப் வாட் ஹி ஸோடு. வா போயி வேடிக்க
பாக்கலாம். அண்ணாமலை சாரயும் மணியயும் அழச்சிட்டு வரேன்.

மணி: அண்ணாமலை சார். சர்தார்ஜி, ஒரு வெள்ளக்காரி, சர்தார்ஜியோட
புள்ள மூணுபேரும் வராங்க.

அண்ணா: இது ஒரு புது சர்தார்ஜி ஜோக்கா? கேட்டதில்லயே.

மணி: இல்ல சார் நெசம்மாவே இங்க வராங்க. பாருங்க.
ரங்கண்ணா வீட்டுக்கு போறாங்க.

அண்ணா: சர்தார்ஜி புள்ளயா?

மணி: ஆமா சார் அவனுக்கும் தாடி இருக்கு. ஒரு சர்தார்ஜி பொண்டாட்டிய
அடிச்சானாம், பொறந்த கொழந்தைக்கு தாடி இல்லைனு.
இது என் கொழந்த இல்லடின்னு. என் குழந்தன்னா தாடி எங்க
போச்சுன்னு கத்தினானாம்.

அண்ணா: நீ அவன்கிட்ட அடிபட்டு சாகப்போறே. இந்த ஜோக்கெலாம்
வாணாம். வா போயிப் பாக்கலாம்.

மணி: சர்தாருக்கு தமிழ் தெரியாது.

அண்ணா: அதான் தப்பு. அவன் கிளப்புல ஓசில பீர் குடிக்கலாம்னு நான்
போயி ரங்கண்ணா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு
“விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்றூ”ன்னு
சொன்னேன். அதக்கேட்டுட்டு சர்தார்ஜி ஒரு ஸ்பூன் பீரை என் வாயில் ஊத்திட்டு:
“தினைத்துணையாக் கொடுப்பினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்”னுட்டு
போயிட்டான். யமகாதகன். வா போகலாம்.

அனைவரும் ரங்கண்ணா வீட்டுக்கு விரைகிறார்கள்.


காட்சி 2

ரங்கண்ணா: வா, சர்தார், வா… மங்களம் காபி குடு.

சர்தார்: நமஸ்தே ரங்கா…

தங்கராஜன், சாந்தி, அண்ணாமலை, மணி உள்ளே வருகிறார்கள்

தங்க: ரங்கண்ணா, நான் சும்மாத்தான் வந்தேன்..
அண்ணாமலையும், மணியும் இருக்காங்க, ஒரு கை கொறையுது,
சீட்டு ஆட்டம் போடலாம்னு..

ரங்கா: ஒக்காருங்க. சர்தார்ஜி என்னை பார்க்க வந்திருக்கார்.

சர்தார்: என்ன அன்னாமலே, கையில் என்ன பொஸ்தகம்? ஞான சைத்தான்யம்?

அண்ணா: இந்த மாதிரி வம்பு வரும்னுதான் அவர் தமிழ்லயும் போட்டிருக்கார். அது ஞான
சைதன்யம்.

தங்க: ரங்கண்ணா உங்களுக்கு இப்படி ஆகும்னு நெனக்கில. அப்பவே சொன்னேன்
பாத்து கைய விடுங்க, எந்த புத்துலே எந்த பாம்பு.. LeTex பத்தி சொன்னேன். நீங்க
கண்டுக்கல. எத்தினி மாசம் இப்ப? மாமிக்கு விசயம் தெரியுமா?

ரங்கா: தங்கராஜு நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. மொதல்ல சர்தார்ஜி என்ன
விசயமா வந்தாருன்னு கேட்டுட்டு அப்புறம் ஒங்கிட்ட பேசரேன். என்ன விசயம் சர்தார்?

சர்தார்: எல்லாம் இந்த சைத்தான் கி பச்சாவால வந்துது. இதொ இருக்கானே, எம்புள்ள .
நியுயார்க்குல படிக்க அனுப்பி இருந்தேன். திடீர்னு வந்து நிக்கறான் இந்த வெள்ளைக்கார
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு. வேண்ட்டம்னு சொன்னா கேக்கல.

ரங்கா: இது ஒம்புள்ளயா ! வளந்துட்டானே. சின்னப்பையன இருக்கறச்சே பாத்தது.
நாளக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட், அங்கிள், அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு கேப்பான்.

சர்தார்ஜி பையன்: அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு இன்னம் எனக்கு தெரியல அங்கிள்.

ரங்கா: ஒனக்கு மத்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. சர்தார், வளைகாப்பு, சீமந்தம்,
பேரனுக்கு காதுகுத்தல் கல்யாணம் பண்ற ஸ்டெஜில வந்து கல்யாணம்னு சொல்றீங்க…
பொண்ணு கர்ப்பமா இல்ல இருக்கு?

சர்தார்: ஆமாம், ரங்கண்ணா, 6 மாசமாம் ? ஆனா அவ வயத்துல இருக்கறது என் பையனோட
கொழந்த இல்ல.

அண்ணா: சர்தார், என்ன இது அசிங்கமாஅநியாயமா இருக்கு. நீங்க தப்பு பண்ணிட்டு ஒங்க பையனுக்கு
கட்டி வெக்கறது மொறையா?

சர்தார்: நான் தப்பு பண்ல. என் பையனும் தப்பு பண்ல.

சாந்தி: எனக்கு தலை வெடிச்சிடும்போல இருக்கு. அந்த பொண்ணு யாரால கர்ப்பமானா?

சர்தார்: ரங்க…

தங்க: (ரங்கண்ணாவை கண்னால் பார்த்துகொண்டே) சாந்தி, நான் நெனச்சது சரிதான்
மங்களம் மாமிய புடிச்சுக்க, மயக்கம் போட்டு விழுந்திரப் போறாங்க.. இந்த சேதியெல்லாம்
அவங்க தாங்க மாட்டாங்க..

ரங்க: என்ன அபாண்டமா இருக்கே?

சர்தார்: ரங்கண்ணா அதைத்தான் சொல்ல வரேன். அவளோட பாய் பிரண்டு பால்.
முழு பேரு Paul Gold King. அவன் பிள்ளைதான் இந்தப்பெண் வயத்துல இருக்கு.

சாந்தி: பால் கோல்ட் கிங் – அப்ப பால் தங்கராஜனா? என்னங்க இது உங்களுக்கு
நல்லாயிருக்கா ? லேட்டஸ்ட் லேட்டக்ஸ்னு ஏதோ சொல்லிட்டு, எனக்கு குழந்தையே
இல்ல. இந்தபொண்ணுக்கிட்ட போயி வெக்கமில்லாம…

சர்தார்: நீங்க அழாதீங்க. அந்தப் பால் இவரு இல்ல. அது வெள்ளைக்கார பால்.

மங்களம்: கல்யாணத்துக்கு முன்னால..சே..சே.. கேக்கவே நாராசமா இருக்கு.
இது தப்பு இல்லையா? அவளொட பாய் பிரண்டுக்கு கட்டி வெக்கரதுதான் மொறை.

சர்தார்: அவன் எங்கயே ஓடிப்போயிட்டானாமே? என் புள்ள இவளுக்கு வாழ்வு கொடுக்கப் போறானாம்.
புத்தி சொல்றதுக்கு ஒன்னைவிட்டா வேறு யாரு இருக்கா? ரங்கண்ணா நீதான் என் புள்ளக்கி
நல்ல புத்தி சொல்லி திருத்தணும். அதுக்குதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.

ரங்க: நான் என்ன செய்யறது ? தங்கராஜன் என்ன பண்லாம்னு சொல்லுங்க.

தங்க: வேணுன்னா சாந்தி பண்ண பிரியாணிய வெள்ளக்காரிட்ட கொடுக்கலாம். அதைத்தின்னுட்டு
ஒரைப்பு தாங்காம ஓடிடுவா.

சாந்தி: தின்னுமுடிச்சிட்டு கேலியா.. அண்ணாமலை சாரை கேக்கலாம்.

அண்ணா: சரி நான் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன்.

மணி: சார், ஒங்களுக்கு எத்தனியோ பேரு பொண்ணு தர சம்மதமா இருக்காங்க.ஒரு விரக்தில
இந்த பொண்ணை நீங்க கட்டிக்க வேண்டாம்.

அண்ணா: சே, நான் கட்டிக்கரேன்னு சொல்லல. அந்தப் பையன்கிட்ட தனியா பேசப்போறேன்.
புத்தி சொல்லித் திருத்தப் போறேன்.

ரங்கா: நான் அந்தப் பொண்ணோட கொஞ்சம் பேசட்டுமா?
மங்களம் நீ என்ன பண்ற, உள்ள போயி இந்தப்பொண்ணுக்கு ஏதாவது
ஸ்வீட் பண்ணி எடுத்துண்டு வா. பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு.
இங்க வாம்மா.
உம்பேரு என்ன ? இப்படி பக்கத்துல வந்து ஒக்காரு. கைய கால
வலிக்கரதோ? லேசா அமுக்கி விடவா? இதென்ன மார்ல ?
சே, அதை கேக்கல. அது கீழ கருப்பா புள்ளி?
மச்சமா? எனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்.

சாந்தி: அப்படியா? உங்களுக்கு தெரியுமா ? இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே.
எனக்கும் பாத்து பலன் சொல்லுங்க.

தங்க: (கோபத்துடன்) சாந்தி. நீ மொதல்ல வீட்டுக்கு போ. அப்புறம் வந்து பேசறேன்.
மெதுவா மெதுவா தொடலாமான்னு வருவான். அப்புறம் நீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு
குதிப்பே. நான் சட்டி சுட்டதடா, கை வெந்ததடான்னு பாடிக்கிட்டு போகணும். தேவையா இது?


காட்சி – 3

(அண்ணாமலையும் சர்தார் பையனும் இன்னம் வெளியே வரவில்லை)

ரங்கண்ணா: ஏன் சிரிக்கறே மணி?

மணி: இல்லே, உங்களுக்கு ஒரு பழய ஜோக் நெனைவிருக்கா? அண்ணாமலைசார்
மொதல்ல வெளில வருவாரா, இல்ல அந்தப்பையன் வருவானான்னு யோசிச்சேன்.
சிரிப்பு வந்துது.

சர்தார்: அது என்ன ஜோக்?

தங்க: மணிக்கு ஜோக் சொல்ல நேரம் காலம் இல்ல. அந்த பையன் புடிவாதம்மா
இருக்கான் போல. அண்ணாமலை என்ன செய்ய முடியும் ?
எனக்கு நம்பிக்கை இல்ல.

(அண்ணாமலையும் பையனும் முக மலர்ச்சியுடன் வெளியே வருகிறார்கள்)

அண்ணா: சர்தார்ஜி கவலய விடுங்க. உங்க பையன் அவளை இன்னிக்கே மறந்திடுவான்.
ஆனா, ஒரு நிபந்தனை.

சர்தார்: என்ன செய்யணும் ?

அண்ணா: நீங்க அவனுக்கு உங்க பென்ஸ் காரை கொடுக்கணும்மாம். கொடுப்பீங்களா?

சர்தார்: பூ, இவ்வளவுதானெ. இங்கயே கொடுத்திடறேன். இந்தா சாவி.

பையன்: தாங்ஸ். நான் இந்தப் பொண்ணை அவ வீட்டுல விட்டுடறேன்.

சர்தார்: அச்சா, பேட்டா. ரொம்பா நன்றி அன்னாமலே. ஒன்கு என்ன வேணும் கேளு.

தங்க : பேசாம ஹேப்பி அவர்ல எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வெச்சா போறும்
சாந்தியும் மங்களம் மாமியும் வீட்ல இருந்து முறுக்கு சுடட்டும்.

ரங்க : அப்படியே ஒரு ஷக்கலக்க பேபி டான்சுக்கும் ஏற்பாடு பண்ணு சர்தார்.

சர்தார்: ஓ.கே. அப்ப நாங்க கிளம்பரோம். எல்லாருக்கும் நன்றி.

சர்தார்ஜி, மகன், வெள்ளைக்காரப்பெண் மூவரும் போகிறார்கள்.

தங்க: எப்படி அண்ணாமலை இதை சாதிச்சீங்க.

அண்ணா: சிம்பிள். அந்த பையன் கெட்டிக்காரன். அவனுக்கு காரு வேணும். கேட்டா
சர்தார்ஜி தர மாட்டேன்னுட்டான். அதுக்குனு ஒரு பொண்ணை செட்டப் பண்ணி நாடகம்
போட்டு அடாவடி பண்ணீருக்கான். எங்கப்பன் காரை வாங்கி குடுத்துடுங்கன்னான்.

ரங்க: அதிசயம்மா இருக்கே. இருவதாம் நம்பர் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டான்னு
பத்தாம் நம்பர் பஸ்ஸில ரெண்டு தடவை ஏறினவனுக்கு இவ்வளவு சாமர்த்தியமா?

தங்க: நியுயார்க் காலெஜ் அப்ளிகேஷன்ல Fill in Capital போட்டிருக்கான்னு
வாஷிங்டன் போனவன்தானே.

மணி: ஒரு சர்தார்ஜி நடந்து போயிட்டு
இருந்தான். ஏண்டா ஒனக்குதான் காரு இருக்கே,
ஏன் நடக்கிறேன்னா, காரைத்திருடுவாங்கன்னு பயந்து காரைப்பூட்டி சாவிய முழுங்கிட்டேன்
அது வெளிய வர வரைக்கும் நடைதான்னானாம். இவன் எப்படியோ?

சாந்தி : இந்த வேடிக்கய பாருங்க. அப்பாவும் புள்ளயும் அந்த பொண்ணை உள்ள வெச்சு
காரைத்தள்ளிட்டு போறாங்க.

மணி: (உரக்க) சர்தார், பெட்ரோல் இல்லியா கார்ல?

சர்தார்: இருக்கு, இருக்கு. அதை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்னு காரைத்தள்ளிட்டு போறோம்.

மணி: அதான் சார் இந்தப்பசங்க இவ்வளவு காசு சம்பாரிச்சிட்டாங்க.

அண்ணா: மணி, ஒண்ணு சொல்றேன் தப்பா நெனக்காத. சர்தார்ஜிங்க உழைப்பாளிங்க.
அதனால உசர்ந்தாங்க. இந்திய சனத்தொகையில அவங்க 2%தான். அதுனால உனக்கு திமிர்
வரப்படாது. பொறாமை ப் படக்கூடாது. அவன் தாடி வெச்சிருக்கான், தலைப்பா
கட்டிருக்கான்னு இளக்காரம் பண்ணாத. அது அவனோட உரிமை. கிளப் வெச்சான்,
பேப்பர் நடத்தரான்னு வயிறு எரியாத. நீயும் பண்ணிப் பாரு. நாகரீகமா பேசு. நாராசமா பேசாத.
மல்லாந்து எச்சி துப்புனா ஒம் மூஞ்சி மேலதான் விழும்.

சாந்தி: என்னங்க இது, இன்னிக்கி தேங்ஸ்கிவிங். இப்ப போய் சீரியசா ஏதோ பேசிக்கிட்டு.
…ஒரு பாட்டு பாடவா?

தங்க: பாடு சாந்தி பாடு, இசை என்னும் நாத வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எனக்காக…

சாந்தி : போதும் பேசாம இருங்க.
(பாடுகிறாள்)

Turkey Dinner, turkey dinner,
Gather round, gather round,
Who will get the drumstick?
Yummy, yummy drumstick,
All sit down, all sit down.

Cornbread muffins, chestnut stuffing,
Puddin’ pie, one foot high,
All of us were thinner
Until we came to dinner;
Me oh my! Me oh my!

மங்களம்: ஏண்டியம்மா, எனக்கு புரியற மாதிரி தமிழ்ல ஏதாவது பாடப்படாதோ ?

கல்யாண சமயல் சாதம்
நல்ல கெளரவப்பிரசாதம்
அதுவே எனக்கு போதும்

புளியோதரை என்னும் சோறு
பொறுத்தமாய் ஒருசாம்பாரு
பூரி கெழங்கு லட்டு
பொரித்த கத்தரி கூட்டு

அழைத்திடுவோம் அனைவரையும்
ஆசையோடு வயிறார
உண்டிடுவோம்
கிடைத்த வாழ்வுக்கெல்லாம்
படைத்தவனுக்கு நன்றி
சொல்லியே.

(கைத்தாங்கலாக ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் மேடைக்கு ஏற்றப்படுகிறார்)

ரங்கபாஷ்யம்: நான் இதுல வரலைன்னு உங்களுக்கு கொறை வெக்கப்படாது, வந்து ஒரு
வார்த்தை சொல்லுன்னாள். சொல்றதுக்கு என்ன இருக்கு?

இன்னிக்கு தேங்ஸ் கிவிங் டேன்னு சொன்னா. என் வயசில தெனமும் நான் தூங்கி காலையில கண்
முழிச்சாலே கடவுளுக்கு நன்றி சொல்லிடுவேன். தெனமுமே எனக்கு தேங்ஸ் கிவிங்தான்.
லோகமே ஒரு நாடகம். ஆட்டுவிப்பான் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரேன்னு சொல்லுவா.
நாமும் குழந்தை, பையன், இளைஞன், சம்சாரி, தோப்பனார், தாத்தான்னு பல வேஷங்கள்
போடறோம். மத்தது எல்லாம் மறந்து போய் அந்த பாத்திரமா மாறிடறோம். இதான் சாச்வதம்னு
பகவானை மறந்திடறோம். அப்படி மறக்காம அவன் திருவடிகளை மனசில வெச்சிங்கோ.
எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துங்கோ. எம்பெருமான் கிருபை எல்லோருக்கும் உண்டு.

வணக்கம்.

(நிறைவு பெற்றது)

(என் கனவில் வந்து நாடகம் போட்ட ரங்கண்ணா குழுவினருக்கு நன்றி. )

Categories: Authors Tags: , , , , ,

Rangabashyam group on Bharathi Dasan songs :: லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்

July 21, 2009 Leave a comment

ரங்கபாஷ்யம் குழுவில் பாரதிதாசன் பாடல் பற்றி யார் எழுதுவது
என்ற குழப்பத்தில் யாரும் எழுதாதிருந்தபோது, “அய்யா, இது
விழா முடியும் நாள். சட்டு புட்டுனு எழுதிக்குடுங்க” என்று
சிலரைக்கேட்டு வாங்கியதை இங்கு வெளியிடுகிறேன்.
=====================================
ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்:

கனக. சுப்புரத்தினம்ங்கிற பேரை பாரதி *தாசன்*னு மாத்திண்டார்.
தாசன்னா யாரு. பகவானுகிட்ட சரணாகதி அடஞ்சு சேவகம்
பண்றவன். சரணாகதியப் பத்தி நா வெவரிக்க தேவையில்லை.

நிகமாந்த தேசிகன் சொல்லிட்டு போயிட்டார்.
உகக்குமவை உகந்து,
உதவா அனைத்தும் ஒழித்து
மிகத்துணிவு பெற உணர்ந்து
காவலென வரித்து
புகலில்லாத தவமறியேன் என்று
பகவான் காலைப்பிடித்துக்கொள்ளுதல்..

ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கலாம்… ராகமாலிகையில பிச்சு ஒதற வேண்டிய பாட்டு..

சம்சார சோக மயமே யலாது சுக
சஞ்சார மேது இகமே பொலாது இதில்
சந்தேகமேதுன் சுகமே நிலையாகும்

இந்த மேல் பாராவிலேயே he tells it all..

நீயே கதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைத்தனன் பரனருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா

நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின் பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா

சீராருநன் மயிலம் நன்மயிலம்
வளமியலும் நலம்பயிலும்
திருவடி நிழலென அமையும்
தருவின மழகொடு குளிரும்

சிங்கார கோகிலம் கீதமோக மிருதங்கம்
சிற்றலை போய்மோதப் பட்சி ஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாட ரங்கமாம்
சுப்புரட்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்

சுகமெது வெனிலுன தருளெனவே
சொலும் இதிற் பிறிதொரு பொருள் கனவே

சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
திரவாரா திராய் கெம்பீரா

என்னடா ஒரு வைஷ்ணவன் முருகன் பாட்டை புகழறான்னு
நெனக்காதேள். எனக்கு சிவ-வைஷ்ணவ பேதம் இல்ல.
அரியும் சிவனும் ஒண்ணுதான்.
தவிர மாமாவைப் பாடினா என்ன, மருமகனைப்பாடினா என்ன?
same family தானே..

அவர் பாட்டுல உள்ள சத்தை எடுத்திண்டு, சக்கையை உதறுமாறு
கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.

எம்பெருமான் அருள் எல்லோருக்கும் உண்டு.

அடியேன்
பாஷ்யம்
============================
ரங்கண்ணா ராமன்:

இதான் பெரியவர மொதல்ல எழுதவிடக்கூடாதுங்கரது..
எவ்வளவு பாட்டு எழுதிருக்கார் பாரதிதாசன்..கிளுகிளுப்பா ஒரு பாட்டைப் போடாம..

கையில் ஒரு பிட்சர் பீர்ரொட சர்தார்ஜி கிளப்பில் இருக்கிறதா கற்பனை பண்ணிங்க,
ரம்பா மாதிரி ஒரு பெண்ணு ஆடறா..

“பட்டாணி வண்ணப் புதுச்சேலை-அடி
கட்டாணி முத்தே உன் கையாலே – எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை-
உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே!

ஆவணி வந்தது செந்தேனே -ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே- எனைப்
போவேன்று சொன்னாய் நொந்தேனே- செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே !

பூவோடி விழிக்கொண்டையிலே?- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே- நீ
வா வா என்ரன் அண்டையிலே – என்று
கூவா யோகருங் குயிலே !”

ஒரு விசிலடிச்சு ஒன்ஸ் மோர் கேக்க தோணலே ?

=============================

மணி சுவாமிநாதன்

பாரதிதாசன் வாரம்னு வெச்சு ஒனக்கு பிடிச்ச பாரதிதாசன்
பாட்டை போடு என்பது ஒரு வகை உளவியல் சோதனை.
டாக்டர் லோகநாதன் சொல்லுவாரே Hermaneutic Testingங்கோ
என்னவோ..ஒரு மரம் வரைடாங்கறது. அவன் வரையறத வச்சு
அவனுடைய மன பாதிப்புகளை, உள் மன எண்ணங்களை வெளிய
வரவழைக்கிறது.

எனக்கு புடிச்ச பாவேந்தர் வரிகள் :

“இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்திரம் உண்டாகுமோ?

சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில் (இணையத்தில்)
தீதினி நீங்காதடி- சகியே
தீதினி நீங்காதடி !”

=============================
S. அண்ணாமலை

எனக்கு புடிச்ச பாட்டு:

மேசை விளக்கேற்றி நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்

ஆசைத்தமிழ் படித்தேன் என்னருமை
அம்மா அருகில் வந்தார்

மீசைத்தமிழ் மன்னர்- தம் பகையை
வென்ற வரலாற்றை

ஓசையுடன் படித்தேன் அன்னை மகிழ்
வுற்றதை என்ன சொல்வேன் ?

செந்தமிழ் நாட்டினிலே – வாழ்கின்ற
சேயிழையார் எவரும்

வந்த விருந்தோம்பும்- வழக்கத்தை
வாய்விட்டு சொல்லுகையில்

அந்தத்தமிழ் அன்னையின் – முகத்தினில்
அன்பு பெருகியதை

எந்த வகை உரைப்பேன் ! – கேட்ட பின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார் !

கிட்ட நெருங்கி எனைப்- பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்

சொட்டுவது போலே- வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்

கட்டுக் கரும்பான- இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்

எட்டுவகைச் செல்வமும் – தாம் பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார் !

(இன்னிக்கு நடக்குமாய்யா இது.
Sorry , Mommy, I can’t read Tamil னு சொல்லிட்டு
போயிடாதா பிள்ளை)
======================================

தகர டப்பா

தகரம்ன்னா ஒங்களுக்கு எளக்காரம்.
எவர் சிலவர் பாட்டை நான் எழுதரதுதானே மெறை.

ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைபெண்களும் வேண்டும் என்று சொல்வர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்…

ஏழைங்க கூட மதிக்கரதில்லன்னு சரியா சொன்னாரு..

சே, ஒரு பாட்டுல கூட தகரத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சு.

=====================
வெட்டி

கொடுவாளை எடுத்து வெட்டற சமாசாரம் எனக்கு புடிச்சது.
எல்லோரும் அதச்சொல்லி சொல்லி நாற அடிச்சிட்டாங்க. எனக்கு புடுச்ச
வெட்டர பாட்டு இங்க..

தங்கக் கதிர்தான் தன்
தலை சாய்ந்ததே
சிங்கத் தமிழர்- தம்
செல்வம் உயர்ந்ததே

பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள்
செங்கை பிடிப்போம்
போத்துக்கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவொம்..

வெட்டும் இடமெல்லாம் – நாம்
வேண்டிய பொன் கிட்டும்
எட்டுத்திசை பாடும்- நம்
இன்பத்திருநாட்டை !

===========================

சாந்தி தியாகராஜன்:

பெண் விடுதலயப்பத்தி பாரதிதாசன் சொன்னத
எழுதணும்னு ஆசை. ஆனா அவரு கோவிச்சுப்பாரு.
அதோட இல்ல. அவரு இப்ப கொஞ்சம் சரியில்ல.
இந்தப் பாழாப்பொன்ன சர்தார்ஜி கிளப்புல எவளயோ
பாத்து ஜொல்ளு விடரதா தகவல் வந்திச்சு. அதுனால
இந்த ப்பாட்டை போடறேன்.

“புதுக்கோயில் மதில் மேலே முத்து மாமா – இரண்டு
புறா வந்து பாடுவதேன் முத்து மாமா

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா

ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா- கோழி
ஒன்றை ஒன்று பர்ப்பதென்ன முத்து மாமா?

எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா….”

அவருக்கு புரிஞ்சா…ம்.ம்.. I may get lucky ….

================================

குப்பன்:

என்னைக் கடைசியா வந்து கேக்கறீங்க. ஒரு பாட்டு சமாசாரத்துல
கூட கடைசியா. சரி ஆகட்டும்.

“வெறிமது உண்போர் நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டெதுக்கடி? சகியே
நிறை முக்காடெதுக்கடி ?”

தெரியாத்தனமா இந்த பாவேந்தர் பாட்டை எழுதினதுக்கு
சர்தார்ஜி கிளப்புல தான் ரகசியமா பீர் குடிச்சிட்டு
நடனம் பாக்கப்போனத எழுதினதா நெனச்சு ரங்கண்ணா
கீச்சி போட்டாரு. “நம்ம எல்லாருமே மொகமூடிதான்.
முக்காட எடுத்தா எல்லாருக்கும் வேல போயிடும், தெரிஞ்சிக்க”ன்னு
பெரியவரும் திட்டினாரு.
சரி, இந்தப்பாட்டை போடுங்க..

“சித்திரச்சோலைகளே, -உமை நன்கு
திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலமே, – உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தன்ர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்த அந்தக்காலத்திலே – எங்கள்
தூய்மை சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே

மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வையமெல்லாம் வகுத்தார்- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக்கூட்டங்களே- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ?- இனிப்
புலிகள் நரிக்கு புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்து கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை – சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.”

================================================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்