“வரலாற்றில் தேவதாசிகள்’ என்ற புத்தகத்தில் சி.எஸ்.முருகேசன்.
தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.
திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.
கோயிலில் பணிபுரிந்த “வைப்பி’ என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.
தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.
படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.
நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.
அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் “வைப்பி சாவடி’ என்றும் அந்தப் புளியமரம் “அம்பலப்புளி’ என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.
Recent Comments