Archive

Posts Tagged ‘Travel’

Pon Chinnathambi Murugesan: Marco Polo Travel Journal in Tamil Nadu

July 16, 2012 Leave a comment

“மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்’ – தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் பொன் சின்னத்தம்பி முருகேசன்

ஜெய்லான் தீவை (சிலோன்) விட்டு வெளியேறி மேற்காக 60 மைல் தூரம் கலங்களைச் செலுத்தினால் மாபர் (இந்தியா) எனப்படும் பெரிய பிரதேசத்தை அடையலாம். அது ஒரு தீவு அல்ல. இந்தியா எனப்படுகிற பெரிய கண்டத்தின் ஒரு பகுதி. அதன் பெயருக்கேற்றாற்போல உலகிலேயே மிகவும் புனிதமான வளம் கொழிக்கும் நாடு.

அப்பகுதி நான்கு அரசர்களால் ஆளப்பட்டது. அவர்களின் தலையாய மன்னர் சுந்தரபாண்டி என்று அழைக்கப்படுபவர். அவருடைய ஆளுகைக்குள் மாபர் நாட்டிற்கும் ஜெய்லான் தீவிற்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் நடைபெறுகிறது. அப்பகுதியில் நீர்மட்டம் 60 அடியிலிருந்து 72 அடி மட்டுமே இருக்கும். சில இடங்களில் 12 அடி மட்டுமே இருக்கும்.

முத்துக்குளிக்கும் தொழிலை நடத்துகிற உரிமை மன்னருக்குரியது. கிடைப்பதில் பத்தில் ஒரு பங்கு முத்துக்களை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். 20-ல் ஒரு பங்கு மாந்திரீகர்களைச் சேர்ந்தது. (வளைகுடாப் பகுதியில் ஒரு வகையான பெரிய மீன்கள் திரிகின்றன. அவை முத்துக் குளிப்பவர்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன. வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிராமண வகுப்பைச் சேர்ந்த சில மாந்திரீகர்களை தம்முடன் அழைத்துச் செல்வர். கண்கட்டி வித்தைகளில் தேர்ந்தவர்கள் என்பதால் அவ்வகை மீன்களை மயக்கி அவற்றின் அட்டகாசத்தை தடுத்துவிடுவார்கள். பகலில் மட்டுமே முத்துக்குளிக்கும் பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் மந்திர சக்தியை நீக்கிவிடுவார்கள். ஏனென்றால் நேர்மையற்ற ஆட்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் மூழ்கி முத்துக்குளிப்பதை தடுத்துவிடலாம் அல்லவா? மாந்திரீகர்கள் எல்லாவிதமான விலங்கினங்களையும் பறவையையும் மயக்குவிக்கும் மாய சக்தி படைத்தவர்கள்.)

ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் முத்துக்குளிக்கும் பணி மே மாதம் 2-ம் வாரம் வரை நடைபெறும். இந்தக் காலத்திற்குள் சிப்பிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு தீர்ந்து போய்விடுகின்றன. இந்த வளைகுடாப் பகுதியில் கிடைக்கக்கூடிய முத்துக்களில் பெரும்பாலானவை உருண்டையாகவும், ஒளிமிக்கவையாகவும் உள்ளன. சிப்பிகள் பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய இடங்களைப் “பெத்தலா’ என்று அழைப்பார்கள்.

Sir CP Ramasamy is anti-Gandhian: Eye for an Eye makes sense

July 16, 2012 Leave a comment

‘படியுங்கள்! சுவையுங்கள்!!’ புத்தகத்தில் அப்துற்-றஹீம்

சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஒருமுறை முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்தார். அவருடன் இரு ஆங்கிலேயர்களும் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அய்யர் பஞ்ச கச்சம் கட்டித் தலைக்கு தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தது அந்த ஆங்கிலேயர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே பிரயாணித்தனர். சிறிது நேரம் கழித்து அய்யர் டாய்லெட் போவதற்காகத் தன் தலைப்பாகையை கழட்டி தான் அமர்ந்த ஸீட்டில் வைத்துவிட்டுப் போனார். டாய்லெட் போய்விட்டுத் திரும்பியதும் தலைப்பாகையைக் காணவில்லை! அந்த ஆங்கிலேயர்களைத் தவிர அந்தப் பெட்டியில் வேறு எவருமில்லை. வண்டியும் எங்கும் நிற்கவில்லை.

அந்த ஆங்கிலேயர்களைப் பார்த்து சி.பி.ஆர். கேட்டார், “”எங்கே என் தலப்பாகை” என்று. அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கையை விரித்துவிட்டார்கள். சி.பி.யும் பேசாமல் இருந்துவிட்டார். சிறிது நேரத்தில் அந்த ஆங்கிலேயர்கள் இருவரும் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு டாய்லெட் சென்றார்கள். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆங்கிலேயர்கள் தங்கள் ஸீட்டில் விட்டுப் போயிருந்த தொப்பிகளை எடுத்து ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு தன் இருக்கையில் “கம்’மென்று உட்கார்ந்துவிட்டார் சி.பி.

ஆங்கிலேயர்கள் திரும்பி வந்து தங்கள் தொப்பியைக் காணாமல் திகைத்து சி.பி.யைப் பார்த்து,””எங்கே எங்கள் தொப்பி?” என்று அதட்டலாக வினவினார்கள். ஆனால் சி.பி.ஆரோ சிறிதும் அஞ்சாமல் அமைதியாக, “”அவை என் தலைப்பாகையைத் தேடிப் போயிருக்கின்றன” என்றார். அந்த ஆங்கிலேயர்களின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!