Archive

Posts Tagged ‘Vijaya Bharatham’

ஜெயமோகன்: “நூலகத்திலே”

March 14, 2009 Leave a comment

விஜயபாரதம் – நவம்பர் 29 1985

நான் படியேறி போனபோது அந்தக் கட்டிடம் லேசாக அசைந்ததா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.. அத்தனை பழைய கட்டிடம். ஒருவேளை வேறு எங்காவது வழி தவறி வந்துவிட்டேனா?

இல்லை சாட்சாத் மைய நூலகமேதான்.

தயங்கியபடி உள்ளே போனேன்.

எக்கச்சக்கம் ஆசாமிகள் கும்பலாகவும் பரவலாகவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“வணக்கம் சார்” என்றேன் ஒரு கண்ணாடிக்காரரிடம்.
“சரிதான்” என்பது போல தலையை அசைத்தார்.
“வந்து நான் இந்த ஊருக்கு புதுசு. நல்ல புஸ்தகங்கள் எங்கயாவது கிடைக்குமானுட்டு”
“இங்கே ‘புஸ்தகங்கள்’ உண்டு.”
“பார்க்கலாமா?”
“தாராளமா”
“ரிஜிஸ்டர் எங்கே?”
“அதெல்லாம் கீப் பண்றதில்லீங்க. பத்து புஸ்தகம் வாங்கினா பத்து புஸ்தகம் இருக்கிறதில்ல. வந்துட்டும் போய்கிட்டும் இருக்கு.. நான் என்ன பண்றது..”

“சரிதான்” என்றேன் அனுதாபத்துடன், “வண்ணதாசன் புஸ்தகங்கள் கிடைக்குமா?”
“வண்ணதாசனா?” – ப்பக் என்று சிரித்தார்.
“அது வண்ணதாசன் இல்லீங்க, கண்ணதாசன்”
“சேசே நான் கவிஞரை சொல்லலை. இவர் இயற்பெயர் வண்ணதாசன்…தமிழில் இருக்கிறதில் நல்ல எழுத்தாளர். தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர். கல்யாண்ஜி என்கிற பேரில் கவிதைகளெல்லாம் எழுதுறவர்.”
“ப்ச்ச இல்லீங்க”

வண்ண நிலவன்?”
“அண்ணங்காரன் புத்தகமே இல்லேங்கிறேன் அப்புறம் அவன் தம்பி பொத்தகத்தை மட்டும் வாங்கி வைப்பமாக்கும்.” நூலகர் சிரித்தார்.
“வண்ணதாசனோட தம்பியா வண்ணநிலவன் யார் சொன்னது?”
“ஹி ஹி பேரு ஒரே போல இருக்கா அதுதான்”

எனக்கு மேற்கொண்டு எப்படி தொடங்குவது என்றே புரியவில்லை. சிறிது தயங்கி “அசோகமித்திரனோட ‘தண்ணீர்’ கிடைக்குமா?
“குடிக்கிறதுக்கா?” என்றார் ஆவலாக.
“ஐயோ தண்ணீர் என்கிற நாவல் எழுதுனது அசோகமித்திரன்”
“அசோகமித்திரன்னு பத்திரிகைல வந்ததா? இந்துமித்திரன்னு ஒண்ணு பாத்திருக்கேன்.சுதேசமித்திரன் நின்னு போச்சு. அ..ஆ…இப்பா சினிமித்திரன் வருதே பாத்தியளா..இப்ப அனுராதா வந்து சிலுக்கை…”

நான் அவரை தொடர அனுமதிக்காமல் “புதுமைபித்தன் கதைகள் இருக்கா” என்றேன்.
“இருக்குமே நம்ம சினிமா கவிஞர்தானே புலமைபித்தன் இருக்கு இருக்கு”
“இது புதுமைபித்தன்”
“பாத்தியளா ஒருத்தர் பேமஸ் ஆயிட்டா அதே மாதிரி பேரை மத்தவனுங்க வைச்சுட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க இல்லீங்க”

“மௌனி?”
“சினிமா டைரக்டர்….”
“மௌலி இல்லை மௌனி”
“இல்லைங்க”
“வேறு என்னதான் இருக்கு?”
“அப்படி கேளுங்க…அன்புத்தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், அண்ணாவின் கட்டுரைகள். அறிஞர் அண்ணா…”
“அது போக”

“அப்புறம் – ஏன் வேண்டும் இன்பத்திராவிடம், புலவர் முத்து சண்முகனார் எளுதுன புத்தகம், வேளவேந்தன், முடியரசு, அடியரசு, தமிலளகன், மதிவாணன், பூவாணன்…”
“வெளியே போறதுக்கு வழி யெங்கேங்க?”
“இப்படித்தான்” சிரித்தபடி கும்பிட்டார்.
போகிற போது நின்றபடி கேட்டேன், “சரி விடுங்க…கம்ப ராமாயணம் இருக்கா?”
“இல்லைங்க ராவணகாவியம் இருக்கு. புலவர் குளந்தை எளுதுனது. டமாஸா இருக்கும்.”

அந்தக் கட்டிடமே என்னை சுற்றிவருவது போல இருந்தது எனக்கு.