Archive

Posts Tagged ‘Viviliyanur’

Training Vanchinathan to take care of British’s Tirunelveli Collector Ashe

July 16, 2012 Leave a comment

‘வில்லியனூர் விடுதலை வீரர்’ நூலில் முத்து. சுந்தரமூர்த்தி

நீலகண்ட பிரம்மச்சாரியைச் சந்திக்க வந்த வாஞ்சி தர்மாலயத்தில் தங்கியிருந்தார். வாஞ்சியின் புரட்சிகர நோக்கத்தையும் வீறுகொண்ட எழுச்சியையும் கண்டு வியப்படைந்து வ.வே.சு.ஐயர் வாஞ்சியைத் தமது புரட்சிப் பாசறையில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டார். இதன் வாயிலாக ஆஷைக் கொல்லவும் திட்டம் வகுத்தார். தக்கதொரு சமயத்தில் வாஞ்சியிடம் தன் திட்டத்தை அவர் சொல்ல வாஞ்சியும் ஆஷ்துரையைச் சுட்டுக் கொல்வதாக உறுதியளித்தார்.

நடுவில் செங்கோட்டைக்குச் சென்று சில வேளைகளை முடித்துக் கொண்டு புதுச்சேரி வந்த வாஞ்சிக்கு வ.வே.சு. அய்யர் ஒரு மாத காலம் பயிற்சி அளித்தார். ஒவ்வொரு நாளும் ஐயர் அதிகாலை 4 மணிக்கு தர்மாலயம் வந்து வாஞ்சியை அழைத்துக்கொண்டு கருவடிக்குப்பம் ஓடைக்குச் சென்றார்.

அங்கு வாஞ்சிக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி வில்லியனூர் முத்துக்குமாரசாமி பிள்ளை குடும்பத்தினருக்குச் சொந்தமான சித்தானந்த சுவாமி கோயில் தோப்பில் வாஞ்சிக்குத் துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்காக முத்துக்குமாரசாமிபிள்ளை சுட்டுக் காலியான வெற்றுத் தோட்டாக்களையும், 5 முறை சுடக் கூடியதுமான பிரஞ்சு வகை கைத்துப்பாக்கிகளையும் கொண்டு வாஞ்சிக்குப் பயிற்சியளித்தார். இவ்விரு துப்பாக்கிகளைப் பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வாங்கி வருவதற்கு அக்காலத்தில் தடையேதுமில்லை.

1911- மே மாத இறுதியில் ஒருநாள் இரவு 11 மணி அளவில் கைத்துப்பாக்கியைப் பாரதமாதா பொம்மைக்குள் ஒளித்து எடுத்துக்கொண்டு தர்மாலயத்திலிருந்து முத்துக்
குமாரசாமிபிள்ளை, நாகசாமி ஆகியோர் வாஞ்சியை நடைப்பயணமாக வில்லியனூர், பாகூர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் சென்று, அங்கிருந்து ரயிலில் அனுப்பி வைத்தனர்.

வழி அனுப்பி வைத்தபோது வீரவாஞ்சியிடம், “”ஆஷ்துரை செத்தான் என்று தெரிந்த பின்னர்தான், நீ தப்ப முயல வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அதே ரிவால்வரை நீ உன் வாயில் வைத்து சுட்டுக்கொள்” என்று கூறி தமது கையை நகத்தால் கீறி வந்த செங்குருதியைத் தொட்டெடுத்து வாஞ்சியின் நெற்றியில் வீரத்திலகமிட்டு, கட்டித் தழுவி, அந்நாளில் போர்க்களம் செல்லும் வீரனை வழியனுப்புவது போன்று வழியனுப்பி வைத்தார் முத்துக்குமாரசாமிபிள்ளை.

இந்தத் திட்டம் எதுவும் பாரதியாருக்கோ அரவிந்தருக்கோ தெரியாது.