Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema
கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி
விகடன் மேடை – எஸ்.ராமகிருஷ்ணன்
1. ”ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!”
2. ”தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?”
”கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது ‘கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!”
3. ”எத்தனையோ இசங்கள் இருக்கின்றன… அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?”
”கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்…
‘மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ”
4.”இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?”
”ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். ‘இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.
திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர் நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, ‘என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.
ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது: A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!”
5. ” ‘எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?”
” ‘நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!”
6. ”அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை – இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?”
”உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் – இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.
இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.
கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது. அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!”
7. ”இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?”
”ஒருபோதும் இல்லை. காரணம், இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.
10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!”
8. ”அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?”
அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது.
லஞ்சம் வாங்குவதைத் தனது திறமை என்று எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது.
அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!”
தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி
விகடன் மேடை – எஸ்.ராமகிருஷ்ணன்
9. ” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”
”அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும்கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை!”
’10. ‘மறைக்காமல் சொல்லுங்கள்… தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”
”வண்ண நிலவன். அவரது ‘எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது!”
11. ”எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?”
”குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.
எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும் வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன, சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது!”
12. ”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”
”இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்?
ஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி… அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது?
எழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.
அதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, நுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது!”
13. ”உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது?”
”மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.
யாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.
மழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், ‘இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் ‘வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். ‘ஒரு ஆள்’ என்று சொன்னேன். ‘கையில் பணம் இருக்கிறதா?’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.
நான், ‘என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.
‘என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், ‘அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, ‘இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.
ஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது!”
14. ”எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..?”
”இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.
கண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்… அதன் மகத்துவம் புரியும்!”
15. ”நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ?”
”எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.
ஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே!
மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள்! வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்!”
16.”குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன?”
”கதை கேட்பது, கதை சொல்வது இரண்டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.
இன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
படித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.
குழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.
கதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்!
நம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்!”
17.”உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார்? ஏன்?”
”டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார், கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்!”
நன்றி – விகடன்
– அடுத்த வாரம்…
18. ”உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?”
19. ”உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே… பயமா?”
20. ”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”
ஒரு எழுத்தாளனின் நிலை என்ன என்பதை அழகாக சொல்கிறார்