Archive

Archive for May 15, 2012

கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்

May 15, 2012 2 comments

ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.

குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.

ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.

இதுபோல நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,

உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.

SRaa on Virginia Woolf: How to read the books: புத்தகம் படிப்பது எப்படி?

May 15, 2012 Leave a comment

புதிய புத்தகம் பேசுது – அக்டோபர்10

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்கப்படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.

நான் படிக்கத் துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.

1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (Virginia Woolf) எழுதியிருக் கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது. வர்ஜீனியாவின் கட்டுரை இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி, இப்படிப் படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.

ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது. வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.

ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கப்போவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.

இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (Perception) ,

இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்

மூன்றாவது கற்றல் (Learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுத்தொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளப்படாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தைப் பார்த்துவிட முடியும். அதன் வேர்களைக் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங் களும். புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வு பூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சி களை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்

அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கியக் காரணமாகயிருக்கிறது.

வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.

புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.

ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும். எந்தப் பொருள் பற்றிப் பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ. கவிதையோ எதைப்பற்றிப் பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப் போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.

சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடு வதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்கு கின்றன.

வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதேயில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களைக் கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தைப் பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படிப் புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.

நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டடம் என்று சொல்லிக் கடந்து போவதைப் போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல உடன் வேலைசெய்யும் ஒருவரைப் போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.

ஒரு நண்பனைப் போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.

ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம்.

கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேசப் பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை

கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அதுதான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.

இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மைச் செயல்பாடாக உள்ளது.

புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களைக் கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.

ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனங்களை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாகப் பரிசீலனை செய்கிறான். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போலத் துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.

அதற்காக ரசனை சார்ந்த வாசிப்பு கைவிடப் படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையைக் கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனைப் போல காண்பதைத் தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியைப் போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.

புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கப்படுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினைக் கொண்டாடுகிறான்

வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும் கற்பனைக் கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,

ஏய் வாசகா உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலனின் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.

வர்ஜீனியாவுல்பின் கட்டுரையைப் போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.

இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்றுக் கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது. ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ் சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்கத் துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

May 15, 2012 1 comment
  • வாஸ்கோட காமா,
  • மார்க்கோ போலோ,
  • இபின் பதூதா,- ibn battuta
  • அல்பெரூனி – Alberuni

– உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’

வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக – அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.

Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema

May 15, 2012 2 comments

கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி

விகடன் மேடை – எஸ்.ராமகிருஷ்ணன்
1. ”ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”அதை வீழ்ச்சி என்று நான் ஒப்புக்கொள்கின்றவன் இல்லை. வாழ்வுரிமை பறிபோய், இன்றும் அகதிகளாக முகாமிலும் பல்வேறு தேசங்களிலும் நிர்க்கதியாக நிற்கும் மக்களின் கண்களில், பேச்சில், சிந்தனையில் ஈழப் போராட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வளவு பெரிய மனிதத் துயரத்தை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த தமிழகச் சூழலைத்தான் மனிதாபிமானமற்றுப்போன வீழ்ச்சி என்று சொல்வேன்!”

 

2. ”தமிழில் நோபல் பரிசுக்குத் தகுதியான எழுத்தாளர் என்று யாரைச் சொல்வீர்கள்?”

”கி.ராஜநாராயணன். அவர் ஓர் உன்னதமான கதை சொல்லி. மிகப் பெரிய இலக்கிய ஆளுமை. எளிய விவசாயியாக இடைசெவல் என்ற கிராமத்தில் வாழ்ந்து எழுதியவர். கிராம மக்களின் பேச்சுத் தமிழை இலக்கிய மொழியாக்கியவர். கரிசல் இலக்கியம் என்ற தனி வகையை உருவாக்கிய முன்னோடி. கிராமியக் கதைகள், பாடல்கள், சொலவடைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள் என்று தேடித் தேடிச் சேகரித்து, நமது வாழ்மொழி மரபைக் காப்பாற்றியவர்.
கரிசல் அகராதி என்று வட்டார வழக்கு அகராதியை உருவாக்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து போராடிய விவசாயி. சங்கீத ஞானத்தில் விற்பன்னர். சங்கீத மேதை விளாத்திகுளம் சாமிகளின் சீடர். 50-க்கும் மேற்பட்ட கரிசல் வட்டார எழுத்தாளர்களை உருவாக்கியவர். இவரது ‘கோபல்லபுர கிராமம்’ மிக முக்கியமான தமிழ் நாவல். எகிப்தின் நகுப் மக்பூஸ் (Naguib Mahfouz) நோபல் பரிசு பெற்றபோது, தமிழ் மொழியில் அவருக்கு நிகராக கி.ரா. இருக்கிறாரே என்று தோன்றியது. அந்த ஆதங்கம் எப்போதும் இருக்கிறது!”
3. ”எத்தனையோ இசங்கள் இருக்கின்றன… அவற்றில் உங்களைக் கவர்ந்த இசம்?”
”கம்யூனிசம். எல்லா இசங்களும் அறிவாளி களுக்கானவை. கம்யூனிசம் ஒன்று மட்டுமே சாமான்ய மக்களின் நலனுக்கானது. இசங்கள்பற்றி சுந்தர ராமசாமி நீண்ட கவிதை எழுதிஇருக்கிறார். அதில் எனக்குப் பிடித்தமான வரிகள்…

‘மேற்கே ரொமான்டிஸிஸம்
நேச்சரலிசம்
ரியலிசம்
அப்பால்
இம்ப்ரஷனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்!’ ”
4.”இயக்குநர் பாலாவுடன் வேலை பார்த்த அனுபவம்?”

”ஒரு புத்தகம் எழுதும் அளவு நிறைய அனுபவம் பெற்றிருக்கிறேன். ‘இவன்தான் பாலா’ என்று புத்தகம் வழியாகப் படித்து அறிந்த பாலாவுக்கும் பழகிப் பார்த்த பாலாவுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

திறந்த புத்தகம்போலத் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக் கூடியவர். நட்பை மதிக்கத் தெரிந்தவர். திறமையை அடையாளம் கண்டு கொண்டாடவும் மேம்படுத்தவும் கூடியவர். தான் நினைத்ததை சினிமாவில் காட்சிப்படுத்த 100 சதவிகிதம் முயற்சி செய்யும் பெர்ஃபெக்ஷனிஸ்ட். ஒருநாள் பாலாவைச் சந்திக்க எனது சிங்கப்பூர் நண்பரை அழைத்துச் சென்றேன். அவர் பாலாவின் எளிமையை, வெளிப்படையாகத் தன்னையே கேலி செய்துகொள்ளும் பண்பைக் கண்டு, ‘என்ன அண்ணே, பாலா இப்படி இருக்கிறார்!’ என்று வியந்து பேசினார். ஒன்றரை ஆண்டுகள் அவரோடு சேர்ந்து வேலை செய்தும், அந்த வியப்பு இன்றும் எனக்கும் இருக்கிறது. அதுதான் பாலா.

ஓர் இயக்குநர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பில்லி வைல்டர் என்ற அமெரிக்க இயக்குநர் சொன்ன பதில் இது: A director must be a policeman, a midwife, a psycho analyst, a sycophant and a fool. இது பாலாவுக்கும் பொருந்தக்கூடியதே!”
5. ” ‘எங்கள் பகல் உங்கள் இரவுகளைவிடக் கருமையானவை’ என்று பார்வையற்றவர்களின் உலகத்தைச் சொல்லும் புதினம் இதுவரை வந்துள்ளதா? விளக்கவும்?”

” ‘நிறங்களின் உலகம்’ என்று தேனிசீருடையான் ஒரு சிறந்த நாவலை எழுதிஇருக்கிறார். அவர் சிறு வயதில் பார்வைஇழந்து, அவதிப்பட்டு, பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்து, பார்வை கிடைத்திருக்கிறது. தனது இருண்ட வாழ்வனுபவத்தை அவர் ஒரு நாவலாக எழுதிஇருக்கிறார். மிக முக்கியமான நாவல் அது!”
6. ”அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கலை – இலக்கியம் ஆரோக்கிய மாக இருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இல்லை என்கிறார்கள் (சினிமா விதிவிலக்கு). உண்மையா?”
”உண்மையே! நாம் இலக்கியப் பெருமை பேசுகிறோமே தவிர, எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை. தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, கிரிக்கெட் – இந்த மூன்றுக்கும் தரப்படும் முக்கியத்துவம் வேறு எந்தத் துறைக்கும் தரப்படுவது இல்லை. காரணம், அதன் உடனடி பரபரப்புத்தன்மை.

இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் இரண்டாம்பட்சமாகவே நடத்துகிறார்கள். தமிழில் முதன்முறையாக நான் தாகூர் விருது வாங்கி இருக்கிறேன். இங்கு பெரும்பான்மை நாளிதழ்களில் அது செய்தியாகக்கூட வெளியாகவில்லை. ஆனால், அஸ்ஸாமிய எழுத்தாளர் அதே விருது வாங்கியது அங்கே முதல் பக்கச் செய்தி. அரசு அதற்காகப் பாராட்டு விழா நடத்துகிறது.

கல்வி நிலையங்கள் அவரைக் கொண்டாடுகின்றன. இதே சூழல்தான் கேரளாவிலும் கர்நாடகாவிலும் இருக்கிறது. அங்கே எழுத்தாளர்களை பப்ளிக் இன்டெலக்சுவல் என்று கருதுகிறார்கள். எல்லா முக்கியப் பிரச்னைகளிலும் கருத்து கேட்கிறார்கள், ஆலோசகர்களாக நியமிக்கிறார்கள். கேரளாவில் எழுத்தாளன்தான் தன் குழந்தையின் கையைப் பிடித்து அட்சரம் எழுதக் கற்றுத் தர வேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த எழுத்தாளருக்கும் இன்று வரை அந்த மரியாதை கிடைக்கவே இல்லை!”
7. ”இணையத்தின் பயன்பாடு அதிகமாகிவிட்ட சூழலில், புத்தகத்துக்கு என்று தனியாக இருக்கும் மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் உங்களை எப்போதாவது சூழ்ந்து உள்ளதா?”
”ஒருபோதும் இல்லை. காரணம், இணையத்தின் வருகையால் தகவல்களைப் பெறுவது மட்டுமே எளிமையாகி இருக்கிறது. அதிலும், பெரும்பான்மை தகவல்களை நம்ப முடியவில்லை. பெரும்பான்மை வாசகர்கள் இன்றும் புத்தகங்களைத் தேடுகிறார்கள். இணையத்தால் புத்தகங்களின் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. நிறையப் புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஈபுக் ரீடர். ஐ-பேட், ஐ-போன் போன்ற உபகரணங்களில் காகிதம் இல்லாத புத்தகங்கள் பெருகி வருகின்றன. ஆனாலும், அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான முக்கியத்துவம் அப்படியே இருக்கிறது.

10 கிராம் உள்ள டூத் பிரஷை என்னால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கையில் வைத்து இருக்க முடியாது. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ போன்ற ஆயிரம் பக்க நாவலை மணிக்கணக்கில் கையில் வைத்து, அதன் எடை பற்றிய கவனமே இல்லாமல் படிக்க முடிகிறதே, அதுதான் புத்தகத்தின் தனித்துவம். புத்தகம் என்பது வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதம் இல்லை. அது மனித வாழ்வின் அழியாத நினைவுத் திரட்டு. எல்லை அற்ற மனித அனுபவங்களை, நினைவுகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைத்திருப்பதே புத்தகங்களின் இருப்புக்கான முதற் காரணம். அது என்றும் மாறாதது!”

 
8. ”அண்ணா ஹஜாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்றால், ஏன்?”

அண்ணா ஹஜாரேவை ஆதரிக்கிறேன். அவர் ஒரு காந்தியவாதி. பல ஆண்டுகாலமாக மக்கள் சேவையில் இருப்பவர். ஆனால், பாபா ராம்தேவை ஆதரிக்கவில்லை. காரணம், அவர் ஒரு மதத் துறவி என்ற அடையாளத்தில் நடமாடும் ஆன்மிக வியாபாரி. 1,000 கோடி சொத்துள்ள ராம்தேவ் ஊழலை எதிர்க்க முன்வந்திருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். ஊழலுக்கு முக்கியப் பிரச்னை, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் பேராசை. இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை, சாமான்ய மக்களுக்கும் இருக்கவே செய்கிறது.

லஞ்சம் வாங்குவதைத் தனது திறமை என்று எண்ணும் மனப்பாங்கு நமக்குள் உருவாகி இருக்கிறது. குற்ற உணர்ச்சி இன்றி அதை நியாயப்படுத்துகிறோம். அந்தத் தொற்றுநோயின் முற்றிய நிலைதான் ஊழல். ஊழல் இன்று தேசிய அடையாளம்போல் ஆகிவிட்டது.

அதற்கான எதிர்ப்பு உணர்வு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் துவங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஊழலுக்கு எதிராக தான் என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்கவும் செயல்படவும் வேண்டும். கடுமையான சட்டமும், சமூக அக்கறைகொண்ட ஊடகங்களும், மக்கள் சக்தியும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம்!”

 

தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறார்களா? எஸ் ராமகிருஷ்ணன் பகீர் பேட்டி

விகடன் மேடை – எஸ்.ராமகிருஷ்ணன்

 

9. ” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”

”அப்படி எந்த விரிசலும் உருவாகவில்லை. அது, உருவாக்கப்பட்ட ஒரு பிரச்னை. என்னையும் என் எழுத்தையும் அறிந்தவர்களுக்கு, அதன் உண்மை தெரியும். எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர்களான பாமா, திலகவதி, தாமரை, தமயந்தி, சந்திரா, உமா மகேஸ்வரி, தாமரைச்செல்வி, அனார், லதா, தென்றல், ஜெயஸ்ரீ, ஷைலஜா, ஜெயந்தி சங்கர், தமிழ்நதி போன்றவர்களுடன் இணக்கமான நட்பும் அன்பும்கொண்டு இருக்கிறேன். அவர்கள் படைப்புகள் குறித்துப் பேசியும் எழுதியும் வருகிறேன். ஆகவே, என்னளவில் எந்த விரிசலையும் நான் உணரவில்லை!”

 

’10. ‘மறைக்காமல் சொல்லுங்கள்… தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”

”வண்ண நிலவன். அவரது ‘எஸ்தர்’ சிறுகதைபோல ஒன்றை எழுதிவிட முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது!”

 

11. ”எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்து கொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்?”
”குடும்பம் அனுமதிப்பதால்தான். அது விட்டுக்கொடுப்பதால் உருவானதுஇல்லை. என்னைப் புரிந்துகொண்டு இருப்பதால் ஏற்படுவது, எனக்குள் சிறகுகள் இருக்கின்றன. அவை பறக்க எத்தனிக்கும் போது நான் கிளம்பிவிடுகிறேன்.

எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியைவிடவும் வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பறியது. வீட்டைப் புரிந்துகொள்ளவே வெளியே போகிறேனோ என்றுகூடத் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்குபோல சீற்றத்துடன் துடித்துக்கொண்டே இருக் கின்றன, சாலையின் பாடலைக் கேட்டுப் பழகியவன் அதில் இருந்து விடுபடவே முடியாது!”

 

12. ”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”

”இப்படி ஒரு கேள்வியை ஏன் நீங்கள் ஒருமுறைகூட அரசியல்வாதிகளிடம், நடிகர் களிடம், பிரபலங்களிடம் கேட்க மறுக்கிறீர்கள்?
ஊடகங்களில் இவர்கள் பிரபஞ்சத்தில் உள்ள சகலத்தையும்பற்றி அபிப்ராயம் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எழுத்தாளன் தனது அறிவை, அனுபவங்களை, விரும்பும் எவருக்கும் பகிர்ந்து தருகிறானே அன்றி… அறியாமையைப் பகிர்ந்து தருவது இல்லை. அதில் என்ன தப்பு இருக்கிறது?

எழுத்தாளன் என்பவன் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறவன் மட்டும் இல்லை. எழுத்தாளனாக இருப்பது என்பது ஒரு பொறுப்பு உணர்ச்சி. தன்னைச் சுற்றிய உலகின் மீதும் மனிதர்களின் மீதும் கொள்ளும் அக்கறை, ஒரு சமூக செயல்பாடு. கண்ணுக்குத் தெரியாத நோயை மருத்துவர் ஆய்வு செய்து கண்டறிவது போன்றதுதான் எழுத்தாளன் வேலையும்.
அதற்கு, கலாசாரம், வரலாறு, மதம், தத்துவம், அறிவியல், மொழி, அரசியல், சினிமா, நுண்கலை, சமகாலப் போக்குகள் என்று அத்தனை துறைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டியது எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு நிறையப் புத்தகங்களைப் படிக்கவும், சலிக்காமல் பயணம் செய்யவும் மக்கள் வாழ்வை நெருங்கி அவதானிப்பதும், வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதும் முக்கியமானது!”

 

13. ”உங்கள் பயண அனுபவத்தில் மெய் சிலிர்க்கவைத்த நிகழ்வு எது?”

”மழை நாள் ஒன்றில் சிலிகுரியில் இருந்து சுக்னா என்ற இடத்துக்கு ஒரு வாடகை காரில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். 25 வயதான காரோட்டி, அந்த மலைப் பாதையில் நிறைய வழிப்பறி கொள்ளைகள் நடப்பதைப்பற்றி பேசிக்கொண்டே வந்தான். எங்கள் வண்டி ஒரு சாலையில் வழி மாறிச் செல்ல ஆரம்பித்தது. ஒரே இருட்டு, மழை வேறு. வழி மாறி விட்டோம் என்றபடியே காரோட்டி, கொஞ்ச தூரம் போய் ஒரு குடிசை அருகே நிறுத்தி விட்டு, யாரிடமாவது வழி தெரிந்துவருவதாக இறங்கிப் போனான்.

யாரோ இருட்டுக்குள் இருந்து விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. பதிலுக்கு கார் ஓட்டியும் விசில் அடித்தான். மாறி மாறி விசில் சத்தம் போனது. பிறகு, அந்த ஆள் இருளில் மறைந்து போய்விட்டு, வேகமாகத் திரும்பி வந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது.
மழையோடு பயணம் செய்து விடிகாலை ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னான், ‘இருளில் ஒளிந்து விசில் அடித்தவர்கள் வழிப்பறி செய்பவர்கள். அவர்கள் ‘வண்டியில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?’ என்று விசில் அடித்துக் கேட்டார்கள். ‘ஒரு ஆள்’ என்று சொன்னேன். ‘கையில் பணம் இருக்கிறதா?’ என்று தனியே அழைத்து விசாரித்தார்கள்.

நான், ‘என் அண்ணனை வீட்டுக்கு அழைத்துப் போய்க்கொண்டு இருக்கிறேன்’ என்று சொன்னேன். அவர்கள் போகச் சொல்லி விட்டுவிட்டார்கள். இல்லாவிட்டால் பணம், பொருளை எல்லாம் அடித்துப் பறித்துப் போயிருப்பார்கள்’ என்றான்.
‘என்னிடம் அதிகப் பணம், பொருள் ஒன்றும் இல்லையே’ என்றதும், ‘அதுதான் பெரிய ஆபத்து. ஒன்றும் இல்லாதவனை ஆத்திரத்தில் கொன்றுவிடுவார்கள்’ என்றான். அவனை மனம் நெகிழ்ந்து பாராட்டியபோது, ‘இந்தப் பாதையில் வழிப்பறி நடக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி வராமல் வேறு பாதையில் போனால், என்னைத் தேடி வந்து அவர்கள் அடிப்பார்கள். நானும் அவர்களுக்குப் பயந்து சிலரைக் கொள்ளையடிக்க அனுமதித்து இருக்கிறேன். இது வழக்கம்தான்.

ஆனால், ஏனோ உங்களை அப்படிவிட மனசு இல்லை’ என்றான். அந்தப் பேய் மழை பெய்த இரவும் ஒருபோதும் மறக்க முடியாத அந்த காரோட்டி முகமும் மனதில் அப்படியே இருக்கிறது!”

 

14. ”எந்த ஓர் இலக்கும் இன்றி பயணங்களை மேற்கொள்பவர்களைப் பற்றி..?”
”இலக்கின்றிப் பயணம் செய்வது ஒரு சாகசம். அதற்கு மனத் துணிச்சலும் தீராத விருப்பமும் தேவை. இரண்டும் இருந்தால் அலைந்து பாருங்கள், உலகம் எவ்வளவு பெரியது என்று அப்போது தெரியும்.

கண்களால் பார்த்து, கடல் உப்பாக இருப்பதை அறிந்துவிட முடியாது. ருசித்துப் பார்க்க வேண்டும். இலக்கு இல்லாத பயணம் என்பது ஒரு தனி ருசி. அனுபவித்துப் பாருங்கள்… அதன் மகத்துவம் புரியும்!”
15. ”நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை, எழுதாமல் இருந்து இருந்தால் பேச்சாளராக ஆகியிருப்பீர்களோ?”

”எழுதத் துவங்குவதற்கு முன்பாக பேசத் துவங்கிவிட்டேன் என்பதுதான் உண்மை. பள்ளி வயதிலே மேடையில் பேசி பரிசு வாங்கி இருக்கிறேன். அதற்குமுக்கியக் காரணம், நான் கேட்ட நல்ல பேச்சாளர்கள், இலக்கியச் சொற்பொழிவுகள்.
ஜெயகாந்தனின் மேடைப் பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருக்கிறேன். தமிழருவி மணியனின் மணியான தமிழ்ப் பேச்சு, நெல்லை கண்ணனின் உணர்ச்சிமயமான சொற்பொழிவு, பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவேசம் மிக்க உரை வீச்சு, பிரபஞ்சனின் தெளிந்த தமிழ், ஞான சம்பந்தனின் நகைச்சுவை பொங்கும் மேடைப் பேச்சு, சீமானின் ஆர்ப்பரிக்கும் முழக்கம் இப்படி எனக்குப் பிடித்த பல பேச்சாளர்கள் முன்பு, நான் வெறும் கத்துக்குட்டியே!

மலேசியாவில் எம்.ஆர்.ராதா பேசிய சொற்பொழிவு சி.டி-யை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். எவ்வளவு கேலி, கிண்டல், பகுத்தறிவுச் சிந்தனைகள்! வாய்விட்டுச் சிரித்து முடியாது. இன்றைக்கும் அடிக்கடி நான் கேட்கிற மேடைப் பேச்சு அதுதான்!”
16.”குழந்தைகளுக்காகவும் நீங்கள் எழுதுகிறீர்கள். பெரியவர்களுக்காக எழுதுவதற்கும் குழந்தை இலக்கியம் படைப்பதற்குமான வேறுபாடு என்ன?”

”கதை கேட்பது, கதை சொல்வது இரண்டும் குழந்தைகளுக்கானது என்று நினைக்கிறோம். அது தவறு. எல்லா வயதினருக்கும் பொதுவான ஆர்வம் அது.
இன்று குழந்தைகளுக்கு நாம் கதை சொல்வது இல்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி, அரக்கன் உயிர் இருக்கிறது என்று கதை சொல்லி சாதம் ஊட்டிவிட்ட அம்மாவின் அன்பு மறைந்து போய், டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடும் குழந்தைகள் வந்துவிட்டார்கள்.

படித்த பெற்றோர்களுக்கும் கதைகள் தெரிவது இல்லை. ஆகவே, குழந்தைகளுக் காகக் கதை சொல்வதும் எழுதுவதும் முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் இரண்டையும் செய்து வருகிறேன்.

குழந்தைகளுக்கு எழுதுவதற்கு எளிமை யான மொழியும் உயர்ந்த கற்பனையும் வேண்டும். நகைச்சுவை உணர்ச்சி கலந்து சொல்லப்பட்டால்தான், குழந்தைகள் விரும் பிப் படிப்பார்கள்.

கதைகளின் வழியாகவே, சிங்கமும், நரியும், முயலும், ஆமையும், தேவதையும், அரக்கனும், நம்மோடு பேசினார்கள். இன்று பெரியவர்கள் வாசிக்கும் கதைகளில் நரிக்கோ, முயலுக்கோ, அணிலுக்கோ இடம் இல்லை. இப்படி கதைக்குள் இருந்தநூற்றுக் கணக்கான உயிரினங்களைத் துரத்தி விட்டது பெரியவர்களுக்கான கதை உலகம்!
நம் வாழ்வோடு இணைந்து வாழும் சக உயிரினங்களை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் சிறார் கதைகள் தேவைப்படு கின்றன. கதை என்பது உலகைப் புரிந்து கொள்ளும் ஒரு வழி. ஆகவே, அது சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டியது அவசியம்!”

 

17.”உங்களுக்குப் பிடித்த உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் யார்? ஏன்?”

”டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, போர்ஹே, மார்க்வெஸ், யாசுனாரி கவாபதா, செல்மா லாகர்லெவ், ஹெமிங்வே, ஆன்டன் செகாவ், ஒரான் பாமுக், ஹருகி முராகமி, ஜோஸ் சரமாகோ, மார்க்ரெட் யூரிசனார், கோபே அபே, சதத் ஹசன் மண்டோ, வைக்கம் முகமது பஷீர், கசான்சாகிஸ், ஹெர்மன் ஹெஸ்ஸே என்று நீண்ட பட்டியல் இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனையாளர்கள்!”

நன்றி – விகடன்
– அடுத்த வாரம்…
18. ”உங்களுக்கு தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?”

19. ”உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே… பயமா?”

20. ”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”

Categories: Uncategorized

S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா

May 15, 2012 Leave a comment

பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

Thanks:

பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்

செகாவின் மீது பனிபெய்கிறது: எஸ்.ஏ.பி.

May 15, 2012 1 comment

உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: புதிய புத்தகம் பேசுது  டிசம்பர்10  

 

இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங் களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் கூட அவர்குறிப்பிடும் நாவல்கள், நோபல் பரிசு பெற்ற நாவல்களைப்படிக்கத் தூண்டுவதாக அமைந்ததில்லை. நாவலின் கதையம்சங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

க.நா.சு. வுக்கு அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக்களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார். உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதிய செகாவின் மீது பனிபெய்கிறது என்ற தொகுப்பு அண்மையில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளை எப்படியும் நாம் படித்தே தீரவேண்டும் என்ற உந்துதலை எஸ்ராவின் இந்த நூல் நமக்கு வன்மையாக உணர்த்துகிறது. அதைவிட அந்தப் படைப்பாளியின் வாழ்வுபற்றியும் அவரது வாழ்வின் முக்கிய சம்பவங்களையும் அவை அவரது படைப்பில் நிலைத்திருப்பதையும் ஒரு சேரத்தருவதுதான் இந்த நூலின் புதுமையாகும்.

ஒரு படைப்பை அறிமுகம் செய்கிறபோது அந்தப்படைப்பாளியின் வாழ்வுபற்றிய முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறுவதில்தான் இந்நூலின் மேன்மையான வெற்றி அடங்கியுள்ளது.

லியோ டால்ஸ்டாய்,
தாஸ்தவெஸ்கி,
மாக்சிம் கார்க்கி,
வான்கா,
கோகல்,
பாசுஅலியேவா,
புஷ்கின்,
வர்ஜினியா உல்ப்,
பெசோ,
எர்னெஸ்ட் ஹெமிங்வே,
ராபர்ட்ருவார்க்,
மாப்பசான்,
ஹொமுசாய்,
ஜார்ஜ் ஆர்வெல்,
அன்டன் செகாவ்

போன்ற மாபெரும் இலக்கியகர்த்தாக்களையும் அவர்களது படைப்புலகையும் படித்து முடிக்கிறபோது நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இந்த நூல் அறிமுகம் படைப்பாளிகளின் துயரமான வாழ்க்கை நமது நெஞ்சை உலுக்குகிறது.

மகாத்மா காந்தியால் ‘மகான்’ என்று அழைக்கப்பட்ட டால்ஸ்டாயின் இறுதிநாள் பற்றிய விவரணையிலிருந்து நூல் துவங்குகிறது. போரும் அமைதியும், அன்னாகரீனினா, புத்துயிர்ப்பு போன்ற பிரம்மாண்ட இலக்கியங்களைப் படைத்த டால்ஸ்டாயின் இறுதிநாள் அஸ்தபோவ் என்ற ரயில்நிலைய ஓய்வறையில் முடிகிறது. மரணநேரத்தில் கூட தனக்காக பதிமூன்று பிள்ளைகளைப் பெற்று பல குழந்தைகளைப் பறி கொடுத்த மனைவியைக்கூடப் பார்க்காத சோகம் நம்மை வாட்டுகிறது. ஆனால் டால்ஸ்டாய் தனது மகள்களின் மீது பாசமழை பொழிவது வியப்பளிக்கிறது.

எழுத்தாளரின் வாழ்வு பற்றியும், அவரது படைப்புச் சூழல் மற்றும் கதா பாத்திரங்கள் குறித்தும் வாசகருக்கு நேர்காணல் போலக் காட்டுவதும், விளக்கிச் சொல்வதும் எஸ்ராவின் தனிச்சிறப்பான உத்தியாகும், இது புத்தகத்தை நாம் கீழே வைத்துவிடாமல் தடுக்கிறது. டால்ஸ்டாய் தனது கடைசிநாளில் தனது நூல்களின் பதிப்புரிமையை நாட்டுக்கே சொந்தமாக்கிட வேண்டும்; தனது நிலங்கள் அனைத்தையும் அவற்றை உழுது கொண்டிருக்கும் விவசாயிகளுக்கே பிரித்து தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது பெயரால் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய் வாசிகளாக மாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்தைவிட ரஷ்ய சமூகமே முதன்மையானது என்று கருதினார். வியப்பூட்டும் இந்தச் செய்திகள் டால்ஸ்டாய் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துகின்றன.

கடைசிவரை தனது நோட்டில் குறிப்பு எழுதியவாறு டால்ஸ்டாய் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எழுத முடியாமல் போனதும் தன் மகளை எழுதச் சொல்கிறார். அவரைத் தனது வீட்டுக்கு வந்து தங்கும்படி கடிதம் எழுதிய ஒரு விவசாயிக்கு தனது இயலாமை குறித்து எழுதி நன்றி தெரிவிக்கிறார். இதுவே அவரது கடைசிக் கடிதமாகும்.

9.11.1910ல் டால்ஸ்டாய் இறந்த தினத்தில் ரஷ்யா முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டுவெளியேறி அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தினர். அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டால்ஸ்டாய் என்ற இலக்கியவாதி தனி மனிதன் இல்லை. அவர் ரஷ்யாவின் ஆன்மா என்று கொண்டாடப்பட்டார். டால்ஸ்டாயைப் பற்றி முழுமையாக விவரங்களை எஸ்.ரா. தெரிவித்துள்ளார். எழுத்தைவிட வாழ்க்கை அதிகப் புனைவும், திருப்பங் களும், புதிர்கள் அடங்கியதாகவும் இருக்கிறது. இதை அந்த மகானின் வாழ்க்கை நமக்கு சுற்றிக் காட்டுகிறது.

அண்டன் செகாவ் பிறந்து 150வது ஆண்டு இது. சிறுகதை உலகின் மிகப்பெரும் மேதையான செகாவின் வாழ்வும் படைப்புகளும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார். செகாவின் மீது பனிபெய்கிறது என்ற கட்டுரை அவரோடும் அந்தக் குதிரையோடும் கொட்டும் பனியில் நம்மையும் நிற்கவைத்துவிடுகிறது.

இரண்டு ஆசான்கள் என்ற கட்டுரையில் அண்டன் செகாவ், மாபசான் ஆகிய இரண்டு இலக்கியச் சிகரங்களை எஸ்ரா ஒப்பியல் ஆய்வுசெய்கிறார். இந்த இருவரையும் ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தவர்கள் எந்தக் கதையையும் சுலபமாக எழுதிவிடமுடியும் என்று எழுத்தாளர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். இருவருமே நாற்பது வயதுகளில் இறந்து போனவர்கள். இருவருமே தங்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் பதிமூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறரர்கள். இருவருமே வாழ்வின் பெரும் பகுதியைப் பயணங்களிலும் எழுதுவதிலும் கழித்திருக்கிறார்கள். சொந்த வாழ்விலும் இருவரும் இளமையில் துயரமான அவல வாழ்வில் உழன்றிருக்கிறார்கள்.

செகாவ், மாபசான் ஆகிய இருவரின் கதைகள் பெண்களின் அகவுலகைப் பெரிதும் விவரிப்பவை. மனித அவலங் களைப் பிரதிபலிப்பவை. மனித அவலங்களைப் பிரதிபலிப்பவை. ஒதுக்கப்பட்ட மனிதர்கள் மீது இருவரும் அக்கறையுடன் எழுதியவர்கள். செகாவ், 40 வயதிலும் மாபசான் நாற்பத்திரண்டு வயதிலும் மரணமடைந்தனர். அதிலும் மாபசான் மோசமான முறையில் காலமானார். என்ற செய்தி இதுவரை அறியாத செய்தியாகும். ஆனால் இந்த இருவரும் சூறாவளியைப்போல் எழுதிக் குவித்தார்கள்.

ரஷ்ய இலக்கிய மகுடங்களில் ஒன்றாய் திகழ்ந்தவர் தாஸ்தவெஸ்கி. அவரது இளமைப்பருவம் ஆறாத மனத்துயரங்களோடு கடந்தது. அவரது தந்தை மிகயில் அந்திரேவிச் பெரும் குடிகாரர். தன் மனைவியைச் சந்தேகித்துச் சித்ரவதை செய்தே சீக்கிரம் சாகடித்த குடிகாரர். குடிபோதையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவர்கள் பச்சைச் சாராயத்தை வற்புறுத்தி வாயில் ஊற்றினர். பின்பு அவரது வாயையும் மூக்கையும் இறுக மூடியதால் மூச்சுமுட்டி இறந்தார். இந்தக் கொலைக்கு அந்த விவசாயிகள் இருவரின் மகள்களை இவர் சீரழித்ததாய் கூறப்பட்டது. தந்தையின் கொலைச் செய்தியைக் கேட்டதும் தாஸ்தவெஸ்கி உடல்நடுநடுங்கக் கீழே விழுந்தார். கையைக் காலை உதைத்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு இது காக்காய் வலிப்பு என்றார். அவருக்கு அதிர்ச்சியில் முதல் தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது அப்போதுதான். அது அவரது வாழ்வின் கடைசிவரை தொடர்ந்தது.

தாஸ்தவெஸ்கியின் முதல் படைப்பு “பாவப்பட்ட மக்கள்” பெரும் பாராட்டைப் பெற்றது. அது ரஷ்ய இலக்கியத்தின் முதல் சமூக நாவல் என்று கொண்டாடப் பட்டது. கோகலை மிஞ்சிய படைப்பாளி என்று புகழ்ந்தனர். இது தாஸ்தவெஸ்கிக்கு எழுதுவதில் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவரது படைப்புகள் தனிரகமானவை. அவர் நாலரை ஆண்டுகள் ஜார் ஆட்சியாளர்களால் சைபீரியச்சிறையில் கொடுமையை அனுபவித்தனர். அவரது வாழ்வின் எல்லா அம்சங்களையும் தனது படைப்புகளின் கதாபாத்திரங்களில் உலவவிட்டவர். இந்நூலில் எஸ்ரா அவரது வெண்ணிற இரவுகள் நாவலைப்பற்றி திறம்பட்ட ஆய்வினை முன்வைத்துள்ளார்.

மாக்சிம் கார்க்கி தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த மனிதர்களைப் புனைவுடன் தனது கதைகளில் நடமாட விடுகிறார். அவரது வகை வகையான கதைகளிலிருந்து வகைவகையான கதைகள் பிறந்துள்ளன. கார்க்கியின் சிறுகதைகளில் சிரஞ்சீவித்தன்மை கொண்டதாக இன்றும் திகழ்வது இசர்கில் கிழவியின் கதைதான். இன்றைய மாந்திரீக எதார்த்தப் படைப்புகளுக்கெல்லாம் முன்னோடிப்படைப்பு அது. கார்க்கியின் கதைகளில் அடைபடாத தான்தோன்றித் தனமான நாயகர்கள் டாங்கோ, லாரா, லோய்கோ சோபார் கதையில் அவர்களைப் படிக்கும் போது வாசிப்பது போல இருக்காது. நம்ம ஊரில் பார்ப்பது போல இருக்கும்.இசர்கில் கிழவியின் இளம் பருவத்துக் காதல் அனுபவங்கள் கார்க்கியின் இளம் பருவத்தின் சாட்சி போலவே இருக்கிறது என்கிறார் எஸ்ரா.

தஜிகிஸ்தான் பெண் எழுத்தாளர் பாசுஅலியேவா எழுதிய மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது என்ற சிறந்த நாவலை நூலில் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.

இந்த நாவலை தோழர் பூ.சோமசுந்தரம் மூலத்தின் சுவை குன்றாமல் கவிதை நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். சுவாரியப் பழமொழிகளும், மலைகளும் பனித்துளிகளும், கிழவர் உமர்தாதாவும் நம்மை அந்த மண்ணுக்கே இட்டுச் செல்லும்.

புஷ்கினின் சூதாட்ட ராணி கதையும் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாசையின் பிறந்தநாள் கதையும் அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வான்கோவின் தம்பி என்ற கட்டுரையை ஓவியர்களும், வீடில்லாத புத்தகங்களை எழுத்தாளர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

வர்ஜினியா உல்ப் ஒரு பென்சில் வாங்குவதற்கு கடைவீதிகளையும் காட்சிகளையும் பார்த்து எழுதியிருப்பது அற்புதமான ரசனை அனுபவத்தைத் தருகிறது.

கடலும் கிழவனும் நாவலை எழுதி நோபல் பரிசு பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே அவரது நெருங்கிய சகாவான அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ருவாக் எழுதிய கிழவனும் சிறுவனும் என்ற நாவல் பற்றிய கட்டுரை மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது.

ஹெமிங்வே எழுத்தாளராகப் பரிணமிப்பதற்கு முன் அவர் கற்ற பாடங்களை வாசித்தால் அனைவருக்கும் பயன்படும். அதேபோல் இடதுசாரிக் கண்ணோட்டமுடைய பெர்கரின் ஓவியங்கள் பற்றிய கலை விமர்சனம் பற்றிய கட்டுரையும் பயனுள்ளதாகும். படைப்புலகம் பற்றிப் பரந்து விரிந்த ஞானம் உள்ள ஒருவரால்தான் இதுபோன்ற ஒரு நூலை எழுத முடியும். இதைப்படிக்காமல் அதை உணர முடியாது.

எஸ்.ராவின் இந்த அருமையான நூலை உயிர்மை பதிப்பகம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.

கால்களால் சிந்திக்கிறேன் – எஸ்.ராமகிருஷ்ணன்

May 15, 2012 1 comment

மாற்று மருத்துவம் – ஏப்ரல்10

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சி முத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும் போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது.

புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரூ நடத்தல் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

உடல் ஒரு அதிசயம். அது கால்களின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை என்கிறார் தோரூ.

நடக்கும் வழியை கண்டு கொள்வதும் அன்றாடம் நடப்பதன் வழியே காற்றையும் மரங்களையும் பறவைகளின் ஒலியையும் வீழ்த்து கிடக்கும் இலைகளையும் உதிர்ந்து கிடக்கும் பறவையின் சிறகுகளையும் கண்டு கொள்ளலாம். நடத்தல் ஒரு கண்டுபிடிப்பு. எதை எப்போது கண்டுபிடிப்போம் என்று தெரியாது என்கிறார் தோரூ.

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

நடத்தலுக்கு ஏன் எப்போதுமே இயற்கை யான சூழல் தேவைப்படுகிறது. மரங்கள் அடர்ந்த பாதையில் அல்லது தனிமை நிரம்பிய சாலை களில் மட்டுமே ஏன் நடந்து போகவேண்டும். நடப்பதற்கு பிரதான சாலையோ அல்லது வணிக மையங்களையோ ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்விக்கு தோரூ சொல்லும் பதில் அற்புதமானது.

நாம் நடக்கும் போது நாம் தனியாகவும் நம் மனது தனியாகவும் இயங்க கூடாது. வணிகமையம் ஒன்றினுள் நடந்து சென்றால் அது உங்கள் ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள், அடுத்த திட்டங்கள் என்று தூண்டிவிட்டு உங்கள் நடையை விட வேகமாக உங்கள் மனது அலைந்து கொண்டிருக்கும். அதே வேளையில் தனிமையான இயற்கையான சாலையில் நடக்கும்போது மனதில் தூய்மையான காற்றும் இயற்கையான காட்சிகளும் மட்டுமே நிரம்பும். அப்போது தான் கால்களும் மனதும் ஒன்றாக நடக்கும். அது தான் நடத்தலின் ஆனந்தம்.

நடை பயிற்சி நம்மை பயத்திலிருந்து வெளியேற்றுகிறது. உலகம் மீது நாம் காரணமின்றி கொண்டுள்ள அச்சத்தை அது விலக்கிவிடுகிறது. அதே நேரம் எல்லா விலங்குகளும் தன் இரைதேடி குடிநீர் தேடி அலைந்து கொண்டுதானிருக்கின்றன.  தானும் அப்படியான இயற்கையின் ஒரு பகுதியே என்று மனிதனை உணர வைக்கிறது.

புதிய பாதைகள் விட பழைய பாதைகளே நடப்பதற்கு பிடித்தமானதாக இருக்கின்றது. புதிய பாதைகள் பரபரப்பான இயக்கத்துடன் ஓடுகின்றன. பழைய பாதைகளோ கைவிடப்பட்ட மனிதனை போல கண்டுகொள்ளப்படாமல் ஒதுங்கியிருக்கின்றன. அப்பாதைக்கு யாரோ நடப்பது மட்டுமே ஒரே ஆறுதல் தரக்கூடிய செயல்பாடு.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தினசரி பலமைல் நடக்க கூடியவர். அவருடன் ஒரு நாள் துணையாக நடந்த பத்திரிக்கையாளர் அதை பற்றி எழுதிய குறிப்பு முக்கியமானது கிருஷ்ணமூர்த்தி சாலையில் நடக்கும் போது காற்றில் மிதந்து செல்வது போல லகுவாக நடக்கிறார். வழியில் யாராவது நிறுத்தி பேசினால் அவர் நின்று பேசுவதில்லை. கடந்து சென்றபடியே இருக்கிறார். தற்செயலாக ஏதாவது ஒரு மரத்தையோ, நாயையோ கண்டதும் அவரது முகம் மலர்ச்சி கொள்கிறது. அதை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.

சில வேளைகளில் அதை பார்த்து மிக நட்புணர்வோடு புன்னகை புரிவார். சாலை களோடு அவர் மௌனமாக எதையோ பேசிக்கொண்டு வருவது போலவே அவரது பார்வையிருக்கும். நீண்ட தூரம் நடந்து திரும்பிய போதும் அவரிடம் களைப்போ, அசதியோ காணப்படாது. மாறாக மிகுந்த புத்துணர்வும் சந்தோஷமும் முகத்தில் பீறிடும் என்கிறார்.

நடத்தலின் போது எதை உணர்ந்து கொண்டீர்கள் என்றதற்கு தோரூ சொன்ன பதில் ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் நடந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு இயற்கையின் விசை என்னை நடக்க வைக்கிறது. அது என்னை ஈர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையில் எனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அழைத்து கொண்டு போவது போல இயற்கை என்னை வசீகரமாக முன் அழைத்து போது போல உணர்கிறேன்.

அது தான் முற்றான உண்மையும் கூட

http://thoreau.eserver.org/walking.html

Tamil Nathy on EssRaa Essays and Internet Articles: எஸ்.ராமகிருஷ்ணனின், ‘மலைகள் சப்தமிடுவதில்லை’

May 15, 2012 Leave a comment

Thanks: புதிய புத்தகம் பேசுது  ஜனவரி10  தமிழ்நதி

கிராமங்களில் குழந்தைகள் திருவிழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல, புத்தகக் கண்காட்சிக்கான ஆர்வக்குறுகுறுப்புடன் கூடிய எதிர்பார்ப்பு இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது. முன்னாரவாரங்களான புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்தேறியது. அவற்றுள் ‘மலைகள் சப்தமிடுவதில்லை’என்ற கட்டுரைகளின் தொகுப்பை முதலில் வாசிக்கத் தேர்ந்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் பெரும்பாலும் கதைத்தன்மை கொண்டவை. புனைவும் அ புனைவும் கலந்த ஒருவித வசீகரம் அவற்றில் இருக்கும். குறிப்பிட்ட துறைசார் ஆர்வமுடையவர்களாலன்றி ஏனையோரால் உட்செல்லமுடியாதிருந்த வறண்ட தன்மைகளிலிருந்து கட்டுரை வடிவத்தை ஈரலிப்பான வெகுஜன வடிவமாக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் தொகுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய இணையதள வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. அவற்றில் பலவற்றை இணையம்வழி ஏற்கெனவே வாசித்திருந்தபோதிலும், தொகுப்பாக வாசிக்கும்போது கோர்வையான அனுபவத்தை அடையமுடிந்தது.

எழுத்து ஆளுமைகள், அனுபவம் – அக்கறைகள் என்ற இரண்டு பகுதிகளாக ‘மலைகள் சப்தமிடுவதில்லை’ வகைபிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ‘தஸ்தாயெவ்ஸ்கி யோடு அலைந்த நாட்கள்’என்ற கட்டுரை மூலமாக, அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் முகத்தை ஓரளவாவது தரிசிக்கவும், அவரது எழுத்து நோக்கிய தேடலுக்கும் தூண்டுகிறார் எஸ்.ரா. ஒரு வாசிப்பானது குறிப்பிட்ட பிரதியினுள்ளேயோ அன்றேல் வெளியிலேயோ. மேலதிக வாசிப்பை நோக்கிச் செலுத்தவேண்டும் என்பதன் அடிப்படையில் எஸ்.ரா.வின் எழுத்துகள் என்னைப்போல புதிதாக எழுத்துலகில் பிரவேசிப்பவர்களுக்கு உந்துதலளிக்கக்கூடியதொன்று. 

“அவருடைய எழுத்தில் அடிக்கடி வெயில் ஊர்கிறது, அடிக்கடி அவர் வெறுமையான சாலையைப் பார்த்துக்கொண்டு ஏதேதோ நினைவுகள் பொங்க நிற்கிறார்.”என்று எனது நண்பர்களில் ஒருவர் சொன்னார். “வெயில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் ஊரவில்லை. மேலும், காலந்தப்பிய காலத்தினுள் வேறு வேறு சாலைகளில் அவர் நின்று கொண்டிருக்கிறார் இடங்கள் மாறுகின்றபோது வாசிப்பவனின் அனுபவமும் மாறுகிறதுதானே”என்றும் பதிலளித்தேன்.

வாசகர்களுக்கும் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கும் முன் எழுந்துநிற்கும் பூதாகரமான கேள்வி ‘வாசிப்பினை எங்கிருந்து ஆரம்பிப்பது?’என்பதுதான். நான்குவழிச் சந்திப்பொன்றில் வழியைத் தேரமுடியாத மனதின் மலைப்பினையத்தது அது. ‘எப்படி வாசிக்கிறீர்கள்?’ என்ற கட்டுரையில்,

‘கடந்த பத்தாண்டுக் காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு துறை சார்ந்து வாசிப்பது என்று முடிவுசெய்து அதன்படி வாசித்துவருகிறேன்’

என்று எஸ்.ரா. குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறான ஒழுங்கமைப்பை வாசிப்பில் செயற்படுத்தமுடியுமா என்று வியப்பாக இருந்தது.

‘எழுத நினைத்த நாவல்’என்ற கட்டுரையில், நாவல் எழுதும் நோக்கத்துடன் காடொன்றில் போய்த் தங்கிவிட்டு எழுதமுடியாமல் திரும்பிவந்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். புதிய இடங்கள் பார்ப்பதற்கேயன்றி,படைப்பதற்கல்ல என்பதை அவர் சொல்லிச்செல்லும்போது இடையிடையே காடு காட்டும் முகம் அழகாக இருக்கிறது. எழுதப்படாத நாவலைப் பற்றி எழுதுவதற்குக் கூட தமிழில் ஒரு தளம் இருக்கிறது. அடையாளப்படுத்தலின் வெளிச்சம் விழாமையினால் எழுதப்பட்ட நாவல்கள்கூட பதிப்பகங்களில் தேங்கிக் கிடப்பதும் இச்சூழலில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. இனந்தெரியாத துயரத்தை, ஏக்கத்தை, பரிதவிப்பை அவை கிளறிவிட்டுவிடுகின்றன.‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் இடம்பெற்றிருக்கும் ‘பதிலற்ற மின்னஞ்சல்கள்’என்றொரு கட்டுரையை ஈழப்போர் அன்றேல் ஈழத்துக்கான போர் ‘முடிந்த’பிற்பாடு எழுதியிருக்கிறார். அதில் கீழ்க்கண்டவாறு குமுறியிருக்கிறார். 

“ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைமுகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்தபிறகும் அதைப்பற்றிய எந்தவிதமான கலக்கமும் இன்றி, இனி ஈழம் செய்யவேண்டியது என்னவென்று இலவசப் புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?”

எஸ்.ராமகிருஷ்ணன்: உலகம் – சிறுகதை

May 15, 2012 Leave a comment


உலகம் – சிறுகதை

 

  • அறையிலிருந்த இருளைப் போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார்.
  • சந்தேகம் ஒரு காட்டை போன்றது. ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக் கூடாது.
  • காகிதங்களை வெள்ளைக்காரர்கள் மலம் துடைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஓதுவார் அதைக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
  • தேவாரம் ஒரு பாடல் அல்ல — ஒரு ஜோதி அல்லது — ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிராகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்கக்கூடும். ஆனால் கோவிலின் கற்தூண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது.
  • ‘காற்று உடலுக்குள் சென்று வெளியேறி வருவதை நம்புகிறாயா? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது. ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்காதது என்றால் நம்பமாட்டாயா?’நன்றி: kumudam.com

‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்

May 15, 2012 1 comment

 

 

‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது போலும். அது தன்னோடு வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பாக ஏதோ காரணம் காட்டி வெளியேற்றி விடுகிறது. அவர்களும் எங்கோ தொலைவில் ஊரை மறந்து வாழத் துவங்கியதும் சட்டென அவர்கள் மீது விருப்பம் கொண்டது போல ஊர் திரும்பவும் தன் நாவால் அவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உணவில், பேச்சில், செய்கைகளில், நினைவுகளில் தன் ஊரைக் கொண்டிருக்கிறான்.

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் என்னோடு ஒட்டியிருக்கிறது எனது கிராமம். என் பால்யத்தைப் போலவே ஊரின் பால்யமும் வேதனையும், ரகசியமான சந்தோஷங்களும் நிரம்பியது. ‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.”