Home > Uncategorized > ஹைதரதாபாத் ப்ளூஸ் 2

ஹைதரதாபாத் ப்ளூஸ் 2


படத்தின் தாத்பர்யத்துக்கு திருவள்ளுவரையும் மாங்கல்யதாரண மந்திரத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

‘மங்கலம் என்பது மனைமாட்சி – மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு!’

ஒருவன் ஒரு பெண்ணுடன் சுகித்திருப்பதற்காக மட்டும் நம் திருமணம் அமைக்கப் பெறவில்லை. இனிய இல்லறம் நடத்தி, நல்ல சந்ததிகளைப் பெற்று, அந்த இல்லறத்தை பாரம்பரியப் பெருமையோடு வளரச் செய்ய வேண்டும். இதுதான் அதன் நோக்கம்.

வள்ளுவர் சொன்ன அதே கருத்துதான் நம் திருமண விவாக மந்திரத்திலும் இடம் பெற்றிருக்கிறது. பெண்ணின் தந்தை தன் மகளை மணமகனிடம் தாரை வார்க்கும்போது சொல்லும் மந்திரம் இதுதான்.

‘ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்தம்
ஹேம பீஜம் விபாவஸோ
அநந்த புண்யம் பலதம் அதஸ்
ஸாந்திம் ப்ரயச்சமே.’

இந்த மந்திரத்தின் பொருள்: ‘நன்மக்களைப் பெறுவதற்காகவும், இந்த ஆடவனும் – இந்த கன்னியும் இணைந்து சகல இல்லற நற்கர்மங்களையும் செய்யும் பொருட்டும், நான் இந்தக் கன்னியை தானம் செய்கிறேன்!’

திரைப்படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. பிறன்மனையை நோக்குவதாலேயே ஒழுக்கம் கெட்டுப் போவதாக வாய் சொல்லில் அளக்கும் ஹீரோ. காலையில் எழுந்து அமைதியாக காபி குடித்துக் கொண்டு ஹிந்து படிப்பதை விரும்புவதில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். தொடர்ந்து வரும் என்.ஆர்.ஐ. வேலையில்லா திண்டாட்டம் நையாண்டி, என்னதான் ‘தீன் திவாரே’ மாதிரி சுவாரசியமான படங்கள் எடுத்தாலும் நாகேஷ் குகினூர் பழசை மறக்கவில்லை என்று மெச்சவைக்கிறது.

குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் உள்ள ஆணின் அலட்சியங்கள், முக்கியமான விவகாரங்களில் வாதிட முடியாமல் தட்டிக்கழிக்கும் ஆண் மனோபாவம் போன்றவை மறுபாலாருக்கு மிகவும் பிடிக்கும். இருந்தாலும் பெண் மட்டுமே குழந்தை பிறப்பையும், மக்கட்செல்வத்தையும் விரும்புவதாக சித்தரித்திருப்பது இயக்குநருக்கு இன்னும் மணமாகாத அனுபவத்தை பறைசாற்றுகிறது. தினசரி இரவு நண்பர்களுடன் தண்ணியடிப்பது, ஜாலியாக சீட்டாடுவது போன்றவை பெண்களை முகஞ்சுளிக்க வைக்கும் என்பதை ஏனோ படம்பிடிக்காமலேயே விட்டிருக்கிறார்.

முழு நீளப் படமாக பார்க்கும்போது இடையே தொய்வு விழுகிறது. கில்லி போன்ற விறுவிறுப்பு தேவையற்றது என்றாலும், விவாகரத்து காட்சிகளில் இயல்புநிலை காணாமல் போய், வெகுஜனத்தனம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், மருமகளுக்கு அட்வைஸ் கொடுக்கச் செல்லும் மாமியார்-மாமனார் சந்திப்பு; விஷயம் தெரிந்து டென்ஷன் ஆகிப் போகும் நாகேஷ் — அக்மார்க் ஹைதராபாத் நீலத்தை நிலைநிறுத்துகின்றனர். இறுதியில் எதனால் மனம் மாறினார், காதலினாலா, insecured உணர்வுகளினாலா, பாரதீயப் பெண்மணியின் அடியைப் பின்னொற்றியா, நண்பர்களின் அழுத்தத்தினாலா, தனிமையை வெறுத்ததினாலா, ஆணின் நிழலை விரும்பியதாலா என்று நிறைய உணர்ச்சிகளை சொல்லியிருக்கவேண்டிய ஹீரோயின், சறுக்கியிருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பலவீனம் ஹீரோயின். ஒரிஜினலில் வெளிப்பட்ட ஆளுமைத்தனம், சுதந்திர சிந்தனைப் போக்கு எதுவும் கண்களால் காட்டாமல், சோனியா அகர்வாலுக்குச் சொல்லும் முந்தாநாள் பரிட்சைக்கு இரவு முழுதும் படித்த சோர்வுற்ற கண்களுடன் indifferent முகத்துடன் மெழுகு பொம்மையாக வந்து போகிறார்.

இரண்டாம் ஏமாற்றம், பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமாகும் மும்பை-ரிடர்ண்ட் மேலாளர் கதாபாத்திரம். ‘சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோயா’ய் ராமனை மல்லுக்கட்டும் சூர்ப்பநகையாக காட்சியமைக்காமல், கோவலனை இழுக்கும் மாதவியாய் தோற்றுவிக்க இயலாமையினால் — விபச்சாரி போன்ற மனப்பானமையை விதைத்து ஹீரோயிஸத்தை வளர்க்கும் ‘மதுர’வாக நாகேஷை முன்னிறுத்துகிறது.

பாடல்கள் ஆங்காங்கே வந்து போகிறது. பதினைந்து நாள் விசிட்டில், பெண் பார்த்து, நாயுடு/ரெட்டி/ராஜுவுக்குள் தேர்ந்தெடுத்து, அரை மணி நெரம் பேசி, போலி அமெரிக்கன் accent (அசையழுத்தம்?) போட்டு, நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் நிகழ்வுகள், மெல்லிய புன்னகையை வரவைக்கும். ஆனால், அனைத்து சூடான விவகாரங்களையும் தொட்டுச் செல்லவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது போன்ற ஆழமற்ற ஓரினப் புலம்பல் காட்சியையும் ஆரம்பத்தில் இருந்தே அலசி வந்திருக்கலாம். அதிர்ச்சியூட்டுவதற்கு பயன்பட்டாலும், ‘எதற்கு’, ‘என்ன சொல்ல வருகிறது’ என்று விளங்கவில்லை.

ஹைதராபாத் ப்ளூஸ் எனக்கு மிகவும் பிடித்த கருதுகோள். திரைப்படமாக எடுப்பதை விட, தனியார் தொலைகாட்சிகளில் குறுந்தொடராக வந்தால், கணவன்-மனைவி இடையே எழும் சாதாரண பிரச்சினைகளை, இயல்பான நகைச்சுவையோடு, நம்பும்படியான கதாபாத்திரங்களை வைத்து, ஒன்ற வைக்கலாம்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: