Archive

Author Archive

Swaminarayan Satsang – Mandirs Worldwide: Shree Saminarain Temple

October 26, 2009 Visitor Blogs 2 comments

Interview with Tamil Poet A Vennila: Nakheeran

September 22, 2009 Visitor Blogs Leave a comment

நிலவைப் பற்றி  எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.  அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா.

அ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின்  பெயரைக் காணும்போதெல்லாம்  ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம்.   கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா,  ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )


கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா.  மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.

வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார்.   இதோ – சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.



நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

வாசிக்கத் தெரிந்த  நாள் முதல்  அப்பா வாசிக்கச்சொன்னவற்றை மட்டுமே வாசித்தேன்.  பதின் மூன்று வயசுக்கு பிறகு புத்தகபிரியை ஆனேன்.  கிடைத்ததை எல்லாம் வாசித்தேன்.   இருபது வயசுக்கு பின் எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் திரும்பியது.  இதுதான் என்று முடிவெடுத்தேன்.  அதன்பிறகு நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்தான் எனக்குள் இருக்கிறது.   அது குறித்துதான் எனது தேடலும் இருக்குது.  எப்போதும் என்னை நவீன இலக்கியவாதி என்று வெளிப்படுத்திக்கொள்ளவே விருப்பம்.


அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?

அப்பா திராவிடர் கழகத்தில் இருந்ததால் பெரியார் புத்தகங்களை நிறைய வாசிக்கச் சொல்வார்.   வாசித்து முடித்த பிறகு அந்த புத்தகம் குறித்து கேள்விகள் கேட்பார்.  நான் பதில் சொல்வேன்.  அந்த கேள்வி பதில் பொழுதுகளே நல்ல விவாதமாக அமையும். வாசிப்பது அது குறித்து விவாதிப்பது என்று இருந்துவிட்டேன்.   நாமும்  படைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று  எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது.   ஏன் தெரியுமா?  நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்.


எழுதத்தொடங்கிய பிறகும் சில பதிவுகள்தான் செய்திருக்கிறேன். ‘நீரில் அலையும் முகம்’, ’ஆதியில் சொற்கள் இருந்தன’கனவை போலொரு மரணம்’ என்று மூன்று கவிதை தொகுப்புகளும் ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘கனவிருந்த கூடு’என்ற காதல் கடிதங்களின் தொகுப்பும் பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பாக’மீதமிருக்கும் சொற்கள்’ ஆகியவைதான் எனது பதிவுகள்.
நிறைய படிக்க வேண்டும் நிறைவான படைப்புகளை தரவேண்டும் என்று விரும்புகிறேன்.   இதுதான் நான் அதிகம் எழுதாமல் இருப்பதற்கான காரணம்.


தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே;  தலையாய காரணம் என்ன?

கவிதைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க  விருப்பமில்லை.   இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் என்பதால்தான் தலைப்பு வைப்பதில்லை.   இஷ்டத்திற்கு என்று சொன்னது -  சுதந்திரம்!. அப்புறம் முக்கியமான ஒன்று…   தலைப்புகள்,  இது குறித்துதான் என்பதை உணர்த்திவிடுகிறது.     எது குறித்து என்கிற தேடல் இருக்க வேண்டும்.  அந்த தேடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.  அது எனக்கு பிடிக்கும்.   அதனால்தான் அப்படி எழுதுகிறேன்.மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.


ஒரு உறைக்குள் இரு வாள் என்பது மாதிரி ஒரு வீட்டுக்குள் இரு கவிஞர்கள் இருக்கிறீர்கள்.  உரசல்கள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திடுமே?


இருவரும் கவிஞர்கள் என்பதாலும் காதல்திருமணம் என்பதாலும்  நல்ல புரிதல் இருக்கு.  மற்றபடி  இலக்கியம் குறித்தான சூடான விவாதம் அடிக்கடி நிகழும்.    விவாதத்தில்  ஆவி பறக்கும். எனது எல்லாக் கவிதைகளையும் அவர் பாராட்டியிருக்கிறார்.   அவரின் சில கவிதைகளை மட்டுமே நான் பாராட்டியிருக்கிறேன்.    ஹைக்கூ கவிதைகளை அவர்(மு.முருகேஷ்) எழுதிக்குவிக்கிறார்.  எனக்கு அவற்றில் விருப்பமில்லை.  அப்படியிருந்தும் பதினைந்து  ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன்.


காதலித்தால் கவிதை வரும் என்பார்கள்.  கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள்.  நீங்க சொல்லுங்க.  கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

காதல் என்னை காதல் கடிதங்கள்தான்  எழுதவைத்தது.   திருமணம்தான் என்னை கவிதை எழுத வைத்தது.  எனது முதல் தொகுப்பே காதல் கடிதங்களின் தொகுப்புதான்.  ’கனவிருந்த கூடு’ எனும் அத்தொகுப்பில் இருக்கும் கடிதங்கள் அனைத்தும் ஆறு மாதங்களாக நான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களே.  இத்தொகுப்பையும் திருமணத்திற்கு பிறகே வெளியிட்டேன்.


தோழர்களுடன் இணைந்து ‘பூங்குயில்’ சிற்றிதழ் நடத்தினேன்.   அது சம்பந்தமான விழாக்களுக்கு அடிக்கடி அவர் வருவார்.   ஆரம்பத்தில் இலக்கியங்கள் பற்றிய விவாதமாகத்தான் இருந்தது எங்கள் பேச்சு.  பின்பு காதலானது.  1991 முதல் 97 வரை நண்பர்களாக இருந்தோம்.   அப்புறம் ஆறுமாதம் காதலர்கள்.   அதன்பிறகுதான் திருமணம் பற்றிய முடிவுக்கு வந்தோம்.


என்னதான் நானும் அவரும் ஆறு வருடங்கள் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு எனக்குள் ஒரு வித கலக்கம்.   ஒரே பயம்.   அந்த பயம்தான் என்னை கவிதை எழுத வைத்தது.   அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்..என்று தொடங்கும் அந்தக்கவிதை.


ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு வரை தந்தையின் பெயரே இனிசியல்.  திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரே இனிசியல் என்பது தமிழ்வழக்கம்.   இதில் ஏன் முரண்பட்டீர்கள்?


திருமணத்துக்கு பிறகு ஆணின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை.  பெண்ணின் பெயரில் மட்டும் ஏன் மாற்றமிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?    தந்தை பெயர்தான் இனிஷியலாக இருக்க வேண்டும் என்பதும் ஆணாதிக்கம்.   தாய்,தந்தை பெயர்தான் பெயருக்கு முன்னால் இருக்கவேண்டும்.


அ.வெண்ணிலா என்று அடையாளப்பட்டுவிட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளுக்கும் மு.வெ.கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என்று பெயர் வைத்துள்ளேன்.   அன்புபாரதியும் நிலாபாரதியும் இரட்டையர்கள்.


இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது.  ஆண்கள் – பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?

சமீப காலத்தில்  பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும், திருநங்கைகளின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை.  வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு எதார்த்த நிலையை தருபவை.   இதில் பால் வேறுபட்டு புணைப் பெயரை சூடுதல் வரலாற்று திரிபை உண்டாக்கும்.


தமிழ் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன்.   1927 முதல் 2000 வரையிலான கால கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன்.


இவர் தன் மனைவி பெயரில் எழுதியவர்,  இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர் என்று பல பெயர்களை அடித்துவிட்டார் அவர்.   வல்லிக்கண்ணன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளரின் அந்த வழிகாட்டுதல் இல்லாதிருந்தால் என் தொகுப்பில் பிழை நேர்ந்திருக்கும்.


ஆய்வு செய்துதானே ஆவணப்படுத்த வேண்டும்.  பின்பு எப்படி வரலாற்று திரிபு ஆகும் என்று கேட்கலாம்.  சில எழுத்தாளர்களுக்கு குறிப்புகள் இருக்கு.  பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளே இல்லை.   இருபத்து ஏழுகளில் எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுந்த சிரத்தையுடன் தேடவேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரம்தான்.   ஆனால்,  கறுப்பின எழுத்து, தலித் எழுத்து என்று சிலவற்றிற்கு தனித்த அடையாளம் இருக்கு.  பெயர் மாற்றி எழுதுவதால் அடையாளங்கள் வேறுவிதமாக அர்த்தத்தை தந்து விடுகின்றன.

இன்றைக்கு  ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.


பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

பெயர் சொல்லும் பிள்ளை என்பது போல் எழுத்தாளர்களின் பெயர் சொல்லும் கதைகளும் இருக்கின்றன.   சில  படைப்புகள் படைப்பாளியைப்பற்றி அறிய ஆவலைத்தூண்டும்.  சிறுகதைகளை அதிகம் படிக்கும் நான் அச்சிறுகதைகளின் ஆசிரியர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்பினேன்.   அதற்கான முயற்சியில் இறங்கினேன்.  இந்த தேடல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தேடலை தீவிரப்படுத்தினேன்.  மூன்று வருட தேடலுக்கு பிறகுதான் ‘மீதமிருக்கும் சொற்கள்’ உருவானது.

எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு.   சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார்.   சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை.  இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள்    இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை.   மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?

‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன்.  இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.  பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார்.  இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த  என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.


இருபத்தைந்தில் திருச்சி முசிறியில் பிறந்த இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  உப்பள மக்களின் வாழ்க்கை பற்றி எழுதிய ‘ வேருக்கு நீர்’ படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அவருக்கா இந்த நிலமை என்று நினைக்கும் போது  கஷ்டமாக இருக்கு.  அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.   அது வெறும் அனுதாபம் குறித்த சந்திப்பாக இருக்கக்கூடாது.   அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.  மீதமிருக்கும் சொற்களில் அவரை வைத்துவிட்டாலும் இன்னும் அவரைப்பற்றிய பதிவுகள் ஏதும் பண்ணனும் என்று விரும்புகிறேன்.

தேவதாசிகளின் போராளி  ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என   நீங்க எழுதியிருப்பதும்  முக்கியமான பதிவு.   ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?

மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன்.  அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது.  தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு,  தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர்.  பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு  முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள்.


கோயிலில் நாட்டியப்பெண்ணாகவும் தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல் இசைப்பவளாகவும் பூஜைக்கு தேவையான பணிகளை செய்பவளாகவும் தேவதாசிப்பெண்களின் முக்கியப்பணிகள் இருந்துள்ளன. தேவதாசிப்பெண்களை இம்முறையில் இருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.   டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் இருவரின் தொடர் முயற்சியால் தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின.

நாட்டின் கலை கலாச்சாரத்தினை காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என்று முட்டுக்கட்டை போட்டனர்.  இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும்.  இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள் என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம்.  தேவதாசிகள் முறை ஒழிப்பு போராட்டத்தில் ராமாமிர்தம் முக்கிய பங்கு வகித்தார்.  அவரின் போராட்டத்திற்கு முத்துலட்சுமியும் உறுதுணையாக இருந்துள்ளார்.   ஆனால் வரலாற்றில் முத்துலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராமாமிர்தத்துக்கு தரவில்லை என்பதுதான் வேதனை.

இசை வேளாளப்பெண்களின் தொழிலாக இருந்த பரதமும் நாட்டியமும் எப்படி மேல் தட்டு நாகரிகமானது என்ற கேள்விக்குறியோடு அந்த கட்டுரையை நிறைவு செய்திருந்தீர்கள்.  எப்படி என்பதற்கான தேடல் தொடர்ந்ததா?

இன்று பரதநாட்டியம் என்றால் ’கலாஷேத்ரா’, கலாஷேத்ரா என்றால் பரதநாட்டியம் என்கிறார்கள்.  இந்த கலாஷேத்ராவை நிறுவியவர் அமரர் ருக்மணி அருண்டேல்.    இவருடைய காலத்திற்கு பிறகுதான் இசை வேளாளப்பெண்களின் பரதநாட்டியம் மேல் தட்டு மக்களின் கலையானது. குறிப்பாக பார்ப்பனப் பெண்களின் கலையானது.

பார்ப்பனப் பெண்ணான ருக்மணி அருண்டேல் பரதநாட்டியத்தின் மேல் ஆர்வம் கொண்டபோது,   தேவதாசிகளின் கலையின் மேல் நீ ஆர்வம் கொள்வதா என்று  பார்ப்பனர்களால் எதிர்ப்பு கிளம்பியது.  பல எதிர்ப்புகளையும் மீறி அந்தக்கலையை கற்றுக்கொண்டதோடு அல்லாமல் அதை கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார்.   இப்படித்தான் இது மேல் தட்டு கலையாக மாறியிருக்கிறது.  பொதுவாக இது மக்களுக்கான கலை என்று அடையாளப்படுதாமல் உயர் சாதிக்கென்று ஆக்கிவிட்டார்.  அதுதான் கொஞ்சம் நெருடுகிறது.

இதைப்பற்றி பேசும்போது இது சம்பந்தமான வருத்தத்தையும் சொல்லவேண்டும்.   தேவதாசி ஒழிப்பு போராட்டத்தால் அரசு செவிசாய்த்தது.    கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து தேவதாசிகளுக்கு சொந்தமான நிலங்களை கட்டாயம் தேவதாசிகளிடம் வழங்கவேண்டும் என்று அரசு சட்டம் போட்டது.   ஆனால் அச்சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தவில்லை.

கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும் பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை.  நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்திவிட்டனர்.   பிழைக்க வழியின்றி சமூக புறக்கணிப்போடு  பல தேவதாசிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது.  இதனால் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி இருவரையும்  தேவதாசிகளின் முன் குற்றவாளிகள் போல் ஆகிவிட்டார்கள்.  பழைய வாழ்வே நல்லாதானே இருந்தது… இப்படி நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டாளே நம் குலத்தை அழிக்க பிறந்தவள்… என்று ராமாமிர்தத்தை தீட்டித்தீர்த்துள்ளார்கள் தேவதாசிப்பெண்கள்.

அடுத்து உங்களின் படைப்பு என்ன?

சாகித்ய அகாதமிக்காக ‘கனவும் விடியும்’எழுதியிருக்கிறேன்.  அடுத்து, கைத்தறி நெசவு  மக்களின் கையொடிந்து போன வாழ்க்கையை பதிவு செய்யும் முயற்சியில் மும்முரமாயிருக்கிறேன்.


காஞ்சீபுரம் பக்கம்தான் என் ஊர் வந்தவாசி ’அம்மையப்பட்டு’ .  கைத்தறி நெசவாளர்களின்  வாழ்க்கையை நன்கு அறிவேன்.   பொதுவாகவே மண்ணின் மரபு மாறிப்போச்சு.  அந்த மாற்றங்களும் அதில் பதிவாகும்.  கம்ப்யூட்டர் காலம் என்னவெல்லாமோ செய்துவிட்டதால் கைநெசவு இல்லாமல் போய்விட்டது.    கைநெசவு கைவிட்டதால் பிழைப்பு தேடி நகரம் சென்று நரகவேதனையை அனுபவிக்கும் அந்த மக்களின் பதிவுக்காக நான் பல காலம் செலவழித்துவருகிறேன்.

படிப்பது, படைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பாடவேண்டும்(நன்றாக) என்பது நெடுநாள் ஆசை. அதற்காக வாய்ப்பாடு கற்று வருகிறேன்.   கைத்தறி நெசவு மக்கள்  பதிவுக்கு பிறகு எனது படைப்பு தனிபாடல் தொகுப்பாக இருக்கலாம்.  ஆசிரியையாகவும் இருப்பதால் நினைத்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை.

உங்க மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பற்றி சொல்லமுடியுமா?

சுற்றி வளைத்து எங்கே வருகிறீர்கள் என்பது புரிகிறது. ( ஒரு சிறிய சிரிப்புக்கு பின் )  ஆசிரியர் என்பதற்கு அர்த்தம் தெரியும். அதன்படி நடக்கிறேன்.   ஆனால் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.

இப்போது எம்.ஏ.உளவியல், பி.எஸ்.சி.கணிதம், எம்.எட். படித்திருக்கிறேன்.  அப்போது  பத்தாம் வகுப்பு படித்ததும் அப்பாவும், அம்மாவும்(வசந்தா) ஆசிரியர் பயிற்சிக்கு படிக்கவைத்தார்கள்.  பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன்.   ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன  என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் படித்த அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலேயே  இப்போது பணியாற்றுகிறேன்..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெண்ஸ் யாரு போன்ல….என்ற குரல்.   ’அவர் வந்திருக்கிறார்’   என்றபடி தொடர்ந்தார்.


என் வீட்டுல நான் ஒரே பொண்ணு.  அப்படி இருந்தும் எனக்கு செல்லப்பெயர் கிடையாது.  என்னம்மா என்னை இத்தனை பெயர் சொல்லி அழைக்கறீங்க என்று என் மகள்கள் கேட்பார்கள்.  அத்தனை செல்லப்பெயர்களில் அவர்களை அழைப்பேன்.   அது ஏன் என்றே தெரியவில்லை எனக்கு செல்லப்பெயர் வைக்கவில்லை.  அதுக்கு வட்டியாகத்தான் அவர் வெண்ஸ்..வெண்ஸ்… என்று கூப்பிடுகிறார்’ என்றவர் பேச்சை நிறுத்தினார்.

இதைப்போய்   எதுக்கு சொல்லனும் என்று ஜாடையொளி சிந்தியிருப்பாரா  வெண்ணிலாவின் அவர். ’ம்..இருக்கட்டும்’ என்று அங்கே பதில் சொல்லிவிட்டு,    ’என் மேல் அவருக்கு ரொம்ப பிரியம்….’  என்று இங்கே சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிறிய சிரிப்பு.     வெளியே இப்படிச் சொன்னாலும் இன்னும் தன்  கணவரின் காதலை முழுமையாக பெறவில்லை வெண்ணிலா.


சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து…

நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து

கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்

கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.

என்று அவர் எழுதியிருக்கும் கவிதை அதைத்தான் உணர்த்துகிறது.

எழுத்தாக்கம் :  கதிரவன்

Thenkachi Ko Swaminathan: Interview: Iniya Uthayam

September 21, 2009 Visitor Blogs 1 comment
இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன்படுத்துங்கள்!
தென்கச்சியார் நேர்காணல்

தென்கச்சியார் என்று வாசகர் களாலும், வானொலி நேயர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கை யைத் தொடங்கி, பின்னர் 24 ஆண்டுகள் சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தென்கச்சியார் தற்போது வசிப்பது சென்னை மடிப்பாக்கத்தில்.

விவசாய நிகழ்ச்சிகளை மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி யில், கொச்சை நீக்கி இவர் வழங்கி யதால், விவசாய நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி அடைந்த தோடு, கி. ராஜநாராயணனால் “இதுவே மக்கள் தமிழ்’ என்று பாராட்டப் பெற்று, இன்று அரசு வானொலி, தனியார் பண்பலை வானொலி என அனைத்து வானொலி நிலையங்களுக்கும் இலக்கணமாகவும் அமைந்து விட்டது. விவசாய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், சமூக வாழ்வில் ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றைத் தனது வாழ்க்கை முறையாகக் கடைப் பிடித்துவரும் தென்கச்சியார், இத்தகைய நற்பண்புகளை வானொலி மூலம் மனித மனங்களில் நடவு செய்ய விரும்பியவர். இதனால் அறிவுரையாக வலியுறுத்தித் திணிக்காமல், எளிய குட்டிக்கதைகள் மூலம், சக மனிதனின் தோள்மீது கைபோட்டுப் பேசும் உரையாடல் தன்மையைத் துணையாக வைத்துக் கொண்டு இவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சிதான் “இன்று ஒரு தகவல்’.

உலக வானொலி வரலாற்றில் மாபெரும் சாதனையாக மட்டுமின்றி, முன்னுதாரணமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர். பிறகு தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி.

இவர் 17 வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் “குயில்’ இதழில் (14. 07. 1959) வெளிவந்தது. அப்போது தொடங்கிய எழுத்துப் பயணம் இன்றும் தொடர்கிறது இவரிடம். தமிழ் குட்டிக்கதை இலக்கியத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கும் இவரை “இனிய உதயம்’ இதழுக்காகச் சந்தித்தோம்…

உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக் கும் “தென்கச்சி’யின் தாத்பரியம் என்ன? உங்கள் சொந்த ஊர், பால்யம், நீங்கள் சென்னைக்கு வந்த காலம், அன்றைய சென்னையின் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

“”தென்கச்சி என்பது இன் றைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் இருக் கிற சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். அது தான் காலப்போக்கில் தென்கச்சி ஆயிற்று. காஞ்சி என்பது கச்சி என்று ஆகும். “கச்சி ஏகம்பனே’ என்பது காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரரைக் குறிக்கும்.

எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். காஞ்சியில் பல்லவ மன்னர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள் கொள்ளிடக்கரை யில் குடியேறி தென்காஞ்சிபுரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். அதுதான் இன்றைய தென்கச்சி.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கத்தி, கேடயங்கள் இப்போதும் எங்களிடம் உண்டு. ஆயுத பூஜை சமயத்தில் அதை யெல்லாம் எடுத்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆயுதங்களைத் தொட்டு வணங்கச் சொல்வார்கள். அப்படியே செய்திருக்கி றேன்.

இப்போதெல்லாம் அந்தக் கத்திகளை எடுத்துக் கொண்டு யாரும் சண்டைக்குப் போவதில்லை. கொள்ளிடத்தில் மீன் வெட்டுவதற்குப் போவ துண்டு. வலை இல்லாமல் மீன் பிடிக்கிற கலையில் நாங்கள் வல்லவர்கள்.

இரவு பத்துமணிக்கு மேல் புறப்படுவார்கள். ஒருவர் கையில் கத்தி இருக்கும். ஒரு சிறுவன் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு இருக்கும். ஆற்றில் இறங்கி நடக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எதிரே வருகிற மீன்கள் கண்கள் பூத்துப் போய் அப்படியே நின்றுவிடும். வாள் வைத்திருப்பவர் அதை வெட்டுவார். கூடை வைத்திருப் பவர் அதன்மேல் கவிழ்ப்பார். மேல்புறம் இருக்கிற வளையம் வழியாக கையை உள்ளேவிட்டு மீன் துண்டுகளை வெளியே எடுப்பார். தன் தோளில் இருக்கிற சாக்குப் பையில் போட்டுக் கொள்வார். அவ்வளவுதான்.

இதில் வாள் வைத்திருப்பவர் மிகவும் புத்திசாலியாக இருப் பார். குறிபார்த்து வெட்ட வேண்டியவர் அவர். கூடை வைத்திருப்பவர் அவ்வளவு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. துண்டு மீனை எடுத்துத் தோளில் கிடக் கிற சாக்கில் போடத் தெரிந்தால் போதும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தலையில் சுமக்கிறவர் சுத்த மக்காக இருக்க வேண்டும். அவர் சுயமாகச் சிந்திக்கக்கூடாது. மற்றவர்கள் பின்னாடியே போகவேண்டும். அவ்வளவுதான். இதில் எனக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமக்கிற வேலைதான் கொடுப்பார்கள். அதில் புரமோ ஷன் கிடைப்பதற்குள் நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டேன். இவையெல்லாம் பழைய ஞாபகங்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமி நாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரை யும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்ப தாகக் குறிப்பிடுவார். என்னோடு தென்கச்சி ஒட்டிக் கொண்ட கதை இதுதான்.

ஆரம்பப்பள்ளி தென்கச்சியில். அப்புறம் ஆடுதுறை குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்புகள். பிறகு கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப்பள்ளி யில் 9, 10, 11-ஆம் வகுப்புகள். அதன் பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அப்புறம் கோவை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி. (விவசாயம்) பட்டப் படிப்பு.

1965-ல் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக்கான உத்தரவு வந்து விட்டது. பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங் களில் நான் பெயில்! வேலைக்கு லீவு போட்டுவிட்டு கோவைக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி “பாஸ்’ ஆனேன்.

பாளையங்கோட்டையில் ஒருவருடம் வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனிய னுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஒரு வருடம். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்பு றம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி பஞ்சா யத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஒரு வருடம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச் சிக்கு வந்துவிட்டேன். அங்கே பத்து வருடம் சொந்த விவசாயம் பண்ணினேன். டிராக்டர் எல்லாம் நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்றேன். வெற்றி கிடைத்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். ஏழு வருடங் கள் அப்படியே நீடித்தேன். அதன்பிறகுதான் வானொலிக்கு வந்தேன்.”

வானொலியோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

“”ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் தற்செயலாக செய்தித் தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி விவசாய ஒலிபரப் புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 ணீ வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். விண்ணப் பித்தேன். அதிகச் சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலையில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-லிருந்து 1984 முடிய திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. அப்புறம் ஒரு பதவி உயர்வு. ஆசிரியர் என்று ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வானொலியில் 2-1-1985 அன்று சேர்ந்தேன். அப்புறம் ஒரு பதவி உயர்வு- உதவி நிலைய இயக்குனர். 2002, ஜூன்- 30 அன்று பணி நிறைவு.”

“இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை எப்போது தொடங்கினீர்கள்? அந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று ஆரம்பத் திலேயே எதிர்பார்த்தீர்களா?

“”சென்னை வானொலியில் “இன்று ஒரு தகவல்’ என்கிற நிகழ்ச்சி 1988-ஆம் வருடம், ஜூலை மாதம், முதல் தேதி தொடங்கியது. அப்போது இயக் குனராக இருந்த கோ. செல்வம் அவர்கள் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, “நாளைமுதல் இன்று ஒரு தகவல் என்கிற நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். அதில் மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்.

“சார்… நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்றேன். “நீங்க ஒரு மாசம் இதை வழங்கி னால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்ப டைக்கலாம்!’ என்றார். “அப்படியானால் சரி!’ என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குனருக்கும் அதை வேறு யாருக்கும் மாற்ற விருப்பமில்லை. பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து அதை நானே வழங்கும்படி ஆயிற்று. பல தரப் பினரும் விரும்பிக் கேட்டார்கள். அது நான் எதிர்பாராத ஒன்று தான்.”

ஒரு நடமாடும் பேரகராதி யைப் போல நீங்கள் தரும் விஷயங்கள், குட்டிக் கதைகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கும் ரகசியம் என்ன? உங்கள் வாசிப்புத் தளம், கடைசியாகப் படித்த புத்தகம் பற்றி…

“”இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் எதுவும் என் சொந்த சிந்தனை இல்லை. மற்றவர்களின் சிந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்தி, வேடிக்கை சேர்த்து சொல்கிறேன்; அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதுபோல குட்டிக்கதைகள் என்னிடம் எதுவும் கொட்டிக் கிடக்க வில்லை. உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அதை எடுத்து ஊடகங்கள் வழியே மறுபடியும் உலகத்துக்கு வழங்கு கிறேன்; அவ்வளவுதான். என்னுடைய வாசிப்புத் தளம் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்தவை துப்பறியும் கதைகள் தாம்! சின்ன வயதிலிருந்து இன்றுவரை அவற்றைத்தான் விரும்பிப் படிக்கிறேன்.

மற்றபடி ஊடகத்தேவை- மக்கள் சேவை இவற்றிற்காக ஆன்மிகம், இலக்கியம், விஞ்ஞா னம், தத்துவம் இப்படி எல்லாவற் றையும் தேவைக்கு ஏற்ப படிப்ப துண்டு. கடைசியாக படித்த புத்தகம் “ஆகாய ஆசை கள்.’ ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லிசேஸ். ‘வர்ன்’ஸ்ங் ஞ்ர்ற் ண்ற் ஸ்ரீர்ம்ண்ய்ஞ்’ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்.”

ஒரு சின்னஞ்சிறு குட்டிக்கதையை ஒரு சிறுகதைபோல விரித்துச் சொன்னா லும், உங்களது ரசிகர்கள் பொறுமை யாக ரசிக்கிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியா? உங்களது வசீகரமான கனிவான குரலா?

“”பொதுவாக கதை கேட்கிற ஆர்வம் எல்லாருக்குமே உண்டு. ஆகவே எதைச் சொன்னாலும் அதை ஒரு கதை மாதிரி சொன் னால் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். சிறிய கதை யைப் பெரிய கதை மாதிரி சொன்னாலும் பொறுமையாகக் கேட்பதற்குக் காரணம், கடைசி யில் ஒரு நகைச்சுவை வரும் என் கிற எதிர்பார்ப்பாக இருக்கலாம். மற்றபடி குரலில் வசீகரம்- கனிவு என்பதெல்லாம் கேட்கிறவர் களின் மனதைப் பொறுத்தது. அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் விரும்புகிற பொருள் அழகாய் இருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்.

கேட்கிறவர்கள் அல்லது வாசிக்கிறவர்களை ஒன்றை எதிர்பார்க்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக ஒன்றைச் சொல்கிறபோது சுவாரசியம் வந்துவிடுகிறது. உதாரணத் துக்கு ஒன்றைச் சொல்ல லாம். “விபத்து’ என்ற தலைப்பைக் கொடுத்து பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதச் சொன் னார் வகுப்பு ஆசிரியர்.

ஒரு மாணவன் எழுதிய கட்டுரை இது:

“ஒரு முப்பது மாடிக் கட்டிடத் தின் மேல் மாடியில் வெளிப்புறமாக நின்றுகொண்டு ஒருவன் வெள்ளையடித்துக் கொண்டிருந் தான். துரதிருஷ்டவசமாக அவன் கால் நழுவிக் கீழே விழுந் தான். அதிர்ஷ்டவசமாக அப் போது தெருவில் ஒரு வைக்கோல் லாரி வந்து கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வைக்கோலின் நடுவில் ஒரு கடப்பாறை செருகப்பட் டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் அந்தக் கடப்பாறையில் விழவில்லை. துரதிருஷ்டவசமாக அவன் அந்த வைக்கோலிலும் விழாமல், தெருவில் விழுந்து செத்துப் போனான்.’

இதுதான் சுவாரசியம் என்பது.”

குழந்தைகளுக்கு வாய்வழி கதை சொல்லும் மரபை நாம் தொலைத்து விட்டதால் இன்றைய தலைமுறை எதை யேனும் இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

“”அப்படி நினைக்கத் தேவையில்லை. ஊடகங்கள் இல்லாத காலத்தில் வாயின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது தாத்தா, பாட்டி களுக்குப் பதிலாக ஊடகங்கள் கதை சொல்லுகின்றன. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். காலம் தோறும் சிலவற்றை இழப்போம். சிலவற்றைப் பெறுவோம். இது உலக மரபு. இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை.”

வானொலி ஊடகம் நம்மைப் போன்ற ஒரு வளரும் சமுதாயத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

“”உதாரணத்துக்கு ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

“ஆமாங்க.’

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’

“சொல்லுங்க டாக்டர்.’

“கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

“எங்கே டாக்டர்?’

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

“பெரிய விபத்தா டாக்டர்?’

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.’

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல் லாம் உடனடியா ரத்தம் செலுத் தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’

“சரி.’

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச் சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என் னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார் கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல் கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

“ஹலோ!’

“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

“என்ன ஆச்சு டாக்டர்?’

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’ மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கி றோம்.’

மறுநாள் மருத்துவமனைக் குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்க ளைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

ஹாரிபாட்டர், ஐரோப்பிய ஆங்கில காமிக்ஸ் கதைகள் என்று நம் கலாச்சாரத்தோடு ஒட்டாத கதைகளை இன்றைய வளரும் தலைமுறை வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டர் போல தமிழ்க் கதை வழி மரபுகள், நாட்டார் வழக் காறுகளைக் கதைக்கூறுகளா கவும் நம்முடைய மரபார்ந்த வரலாற்றிலிருந்து பாத்திரங் களையும் அமைத்து கதை யெழுதும் ஆற்றல் நம்மில் ஒருவருக்குக்கூட இல்லையா? அல்லது முடியாதா?

“”எது நல்லது, எது கெட்டது என்பதைக் காலம்தான் முடிவு செய் கிறது. எனவே மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்று மில்லை. ஊடகங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால் உலகக் கலாச்சாரம் என்ற ஒன்றே விரைவில் உருவாகிவிடும் என்று தோன்றுகிறது. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் பிடிக் காதவர்கள் “காலம் கெட்டுப் போச்சு’ என்று சொல்லிக் கவலைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.”

இன்றைய யுவன்- யுவதி களுக்கு முதலில் நட்பு பிறகு காதல் என்ற கண்ணோட் டமும், வாழ்க்கை முறையும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் காதலின் உண்மையான ஜீவனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே? குடும்ப நல நீதிமன்றத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த தமிழன் காலப்போக்கில் குடும்ப அமைப்பை இழந்து விடுவான் என்று நம்புகிறீர்களா?

“”முந்தைய கேள்விக் கான பதிலை மறுபடி யும் ஒருமுறை படித் துக் கொள்ளுங்கள்.

“இனவிருத்திக்காக இயற்கை செய்கிற தூண்டுதல் உணர்வின் தொடக்கம்தான் காதல் என்பது.’

காதலைவிட்டு விலகி நின்று பார்த்தால் தான் இந்த உண்மை புரியும். காதலில் தோற்றுப்போனவர்களைத்தான் தெய்வீகக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

நேற்றைய மனிதர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படி வாழ்ந்தார்கள். இன்றைய மனிதர்கள் எப்படி விரும்புகிறார் களோ அப்படி வாழ்கிறார்கள். நாளைய மனிதர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வாழ்வார்கள். உங்கள் ஆட்டத்தை நீங்கள் சரியாக ஆடி முடியுங்கள்; அது போதும். அடுத்த காட்சி யைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

உங்கள் பயண அனுபவங் களிலிருந்து “இனிய உதயம்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

“”பணிநிறைவுக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டே வாங்கினேன். சிங்கப்பூர், லண்டன், குவைத், தாய்லாந்து, இலங்கை இவை யெல்லாம் நண்பர்களுடன் போய் நான் பார்த்துவிட்டு வந்த நாடுகள். அந்த மானுக்கும் ஒரு முறை போய்விட்டு வந்தேன். சும்மா போய் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு சில கூட்டங் களில் பேசினேன். அவ்வளவு தான். சுவையான செய்திகள் என்று ஏதும் இல்லை.

என்னுடைய நீண்ட கால நண்பர் ச.ஆ. கேசவன் (இனாம் மணியாச்சி) அமெரிக்கா போய் விட்டு வந்தபிறகு சொன்ன வார்த்தைகள் சுவையானவை. “எப்படி இருக்கிறது அமெரிக்கா?’ என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

“அமெரிக்கா பணக்காரர் களின் நரகம். இந்தியா ஏழைகளின் சொர்க்கம்.’ ”

தானத்தில் சிறந்ததாக உங்கள் பார்வையில் உயர்ந்து நிற்பது?

“”ஆந்திராவில் புயல்… அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டி னார்கள்.

சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், “என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.

“ஆந்திராவில் வீடிழந்தவர் களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்’ என்று சொன்னார்கள். அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். “கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வ ளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.”

இரண்டாயிரமாண்டு தமிழர் இலக்கியத்தில் உங்கள் இதயம் நிறைந்த படைப்பு?

“”இதற்குப் பதில் சொல்கிற அளவுக்கு நான் நல்ல படைப்புகள் அனைத் தையும் படித்ததில்லை. இரண்டாயிரமாண்டு படைப்பு என்பதைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதயங்களில் நிறைந்து நின்று கொண்டிருக்கிற ஒரு படைப்பு திருக்குறள்.”

“காமத்தைக் கைவிட காமத் தில் மூழ்கு’ என்ற ஓஷோ- “அறிந்த தினின்றும் விடுதலை பெறு’ என்ற அறிஞர் கிருஷ்ண மூர்த்தி- இவர்கள் இருவரில் உங்கள் சாய்ஸ்?

“”காமத்தில் மூழ்கினால் அதை அறிந்துகொள்ளலாம். அறிந்து கொண்டபின் அது தேவை இல்லை; விட்டுவிடலாம். விடுதலை பெறலாம். இருவர் கருத்திலும் முரண்பாடு தெரியவில்லையே?

விடுதலை பெற்ற குரு ஒருவரி டம் சீடன் கேட்கிறான்: உங்களு டைய தெளிவான அமைதி நிலை யின் ரகசியம் என்ன?

குரு சொல்கிறார்: தவிர்க்க முடியாததோடு மனசார ஒத்துப் போதல்தான்!”

வாழ்வின் தலைசிறந்த தத்து வம் என்று நீங்கள் நினைப்பது?

“” ”இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!’ சீன ஞானி லாலோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை. “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!”

நம்மிடமிருந்து சென்ற சிலம்பம், களரி போன்றவை கராத்தே, குங்ஃபூ என்று நமக்கே திரும்பி வருகிறது. யோகக்கலையும் தியானமும் பணக்காரர்களுக்கு மட்டுமே வசமாகும் விலை உயர்ந்த விஷயங்கள் ஆகிவிட்டன. தமிழன் தனது அடையாளங் களை, மொழி உட்பட இழந்து வருவது பற்றி?

“”இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராவும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்கள் கையில் “தமிழ்’ பத்திர மாக இருக்கிறது.”

ஈ.வே.ரா. பெரியார் உலகம் முழுவதும் சென்ற டைந்திருக்க வேண்டிய தமிழர்களின் புரட்சிப் பெட்டகம். அவரது கருத்துகளை இத்தனை காலமாக முடக்கிவிட் டோம். இப்போது அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது பற்றி…

“”பெரியார் நாட்டுடைமை ஆகி விட்டார். பெரியாரின் கொள்கை கள் நாட்டுடைமை ஆகிவிட்டன. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆகவேண்டும். அதில் தவறில்லை. அவருடைய கருத்துகள் உருமாறி விடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுகி றார்கள். இரு தரப்புமே பெரியா ரின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள்தாம். இதில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.”

சிரிக்கச் சிரிக்க கதை சொல் கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?

“”நல்ல இதயமுள்ள வாசகர் களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

“ஈழத்தமிழர்கள்!”

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

கு.ஞானசம்பந்தன்

September 15, 2009 Visitor Blogs Leave a comment

‘எனக்குப் பிடிக்கும்’ என்ற பொதுத் தலைப்பில் வாரம்தோறும் ஒருவர் தங்களது விருப்பங்களைச் சொல்கிறார்கள்!

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தமிழ்நாட்டின் நகைச்சுவைத் தென்றல். எந்த மன்றங்களிலும் தன்னுடைய ஜோக்குகளால் ஜொலிப்பார். வகுப்பறையோ, தெருமுனையோ, பட்டிமன்றமோ… நகைச்சுவைச் சரவெடிகள். அனைவரையும் காந்தமாகக் கவர்வதும் அதுவே!

”கலர் கலரா பஸ் விடுறாங்க. நான் ஒரு புது பஸ்ல உட்கார்ந்துஇருந்தேன். ஒரு பெரியவர் அதுல ஏறினார். பார்க்க ஏழை மாதிரி தெரிந்தார். ‘முன்னால ஒரு பஸ் நிக்குது பாருங்க… அதுல போனீங்கன்னா, ரெண்டு ரூபாதான். இதுல எட்டு ரூபா. அதனால அதுல ஏறிக்கோங்க’ன்னு சொன்னேன். அவரு கண்டுக்கலை. ‘அதுல போனீங்கன்னா ஆறு ரூபா உங்களுக்கு மிச்சமாகுமே’ன்னேன். என்னை நின்னு முறைச்சுட்டு சொன்னார், ‘அதெல்லாம் டிக்கெட் எடுக்கிறவன் பிரச்னை’னு. என்னால சிரிப்பை அடக்க முடியலை.

இது மாதிரி நம் வாழ்க்கையோடு கலந்துபோன விஷயம்தான் நகைச்சுவைங்கிறது. மனசுல நினைச்சதை ஓப்பனா போட்டு உடைச்சா, அது சூப்பர் காமெடியா இருக்கும். இதை மேடைக்குக் கொண்டுவந்து அசத்துன வங்கள்ல முதல் மனுஷன் வாரியார் சுவாமிகள். எனக்கு அவர்தான் குரு. அவருக்கு ‘சொல்லின் செல்வர்’னு பட்டமே உண்டு. அவரு பேசிட்டு இருக்கும்போது ஒருத்தர் ஏதோ அவசரம்னு எழுந்து போனார். உடனே வாரியார், ‘நான் சொல்லிட்டு இருக்கும்போது சிலர் போவாங்கங் கிறதுக்காகத்தான் இந்தப் பட்டமா?’ன்னு யோசிக் காமக் கேட்டார். டைமிங் ஜோக்குகளை வாரி இறைக் கிறதுனால அவர் வாரியார்.

திருக்குறளார்முனுசாமி யும் திருச்சி ராதாகிருஷ்ணனும் மேடைகளை நகைச்சுவை மன்றங்களாக மாற்றி அமைச்சவங்க.

‘சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே
சொந்தமான கையிருப்பு – வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்தச் சிரிப்பு’ன்னு எழுதினார் மருதகாசி.

எத்தனையோ புகழையும் பட்டங்களையும் வாங்கிய கதாநாயகர்களுக்குக்கூட சிலை வெச்சு இந்த மக்கள் பெருமைப்படுத்தலை. ஆனா, அமெரிக்காவுல சார்லி சாப்ளினுக்கும் இங்க நம்ம கலைவாணருக்கும் சிலை இருக்குன்னா… அதுக்குக் காரணம், அவங்க நடிப்பல்ல… சிரிப்பு.

பதற்றமான வாழ்க்கை இது. அவசர வாழ்க்கை யால வந்த அவஸ்தையைக் குறைக்க சிரிச்சுப் பழகுங்க. சிரிக்கிற மாதிரி சொல்லிப் பழகுங்க. அப்ளிகேஷனை நிரப்பிட்டு இருந்தான் ஒரு பையன். ‘அப்பா, மதர் டங்க்னு போட்டிருக்கு. என்ன எழுதணும்?’னு கேட்டான். உடனே அவரு, ‘ரொம்ப நீளம்னு எழுது’ன்னார். அதாவது மனைவி ரொம்ப பேசுவாங்கிறதை அப்படிச் சொன்னார்.

இப்படித்தான், ஒரு வீட்ல பையனை அப்பா திட்டிட்டு இருக்கும்போது சென்சஸ் எடுக்க வந்துட்டாங்க. ‘பையன் பேரு என்னங்க?’ன்னு அவரு கேட்டதும் கோபத்துல இருந்த அப்பா, ‘அவன் பேரு சனியன்’னார். சமையல்கட்டுல இருந்து ஒரு சத்தம் வந்துச்சு, ‘உங்க பேரைக் கேட்கலைங்க… நம்ம பையன் பேரைக் கேட்கிறாரு’ன்னு. ‘நான்சென்ஸ்’னு திட்டிட்டுப் போயிட்டாரு அந்த சென்சஸ் அதிகாரி. இந்த மாதிரி வீட்டுக்குள் சிரிச்சுப் பழகினால்தான் வெளியில சிரிக்க முடியும்.

சின்ன வயசுல இருந்தே எல்லாத்தையும் கூர்ந்து கவனிப்பேன். சோழவந்தான் ஊர்க்காரன் நான். பட்டிக்காடும் இல்லாம பட்டண மும் இல்லாம நடுத்தரமான ஊரு அது. அதனாலதான் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தை எங்க ஊர்ல வெச்சு எடுத்தாங்க.நாடகம், கோயில் திருவிழான்னு எங்க கூடுனாலும் போயிடுவேன். கிராமத்துப் பசங்க பார்லிமென்ட் மாதிரி கூடுற இடம் சைக்கிள் கத்துக்கிற மைதானம். ஆள் ஆளுக்கு வந்து கூடி நின்னு கும்மி அடிப்பாங்க. சைக்கிள்ல ஏத்திவிட்டுடுவாங்க. ஆனா, இறங்கத் தெரியாது. எங்கயாச்சும் எலெக்ட்ரிக் கம்பம் இருந்துச்சுன்னாதான் அதைப் பிடிச்சுட்டு நிக்க முடியும். அந்த மாதிரி கம்பம் இல்லைன்னா சுத்திட்டே இருக்க வேண்டியதுதான். அப்படி நிறுத்தத் தெரியாம சுத்தினவங்கதான் இப்ப மெகா சீரியல் டைரக்டரா இருக்காங்க.

கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் கலைவாணர், காளி என்.ரத்தினம், ஏ.கருணாநிதி, தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன்னு சிரிப்புக்காரங்க படமாத் தேடித் தேடிப் பார்த்தேன். நம்பியாரை வில்லனாத்தானே தெரியும். ஆனா, அவரு நகைச்சுவை மன்னன். அவரும் ஏ.கருணாநிதியும் ஒரு குகைக்குள்ள போவாங்க. ‘இந்த சிவப்புக் கம்பளத்தில் கால் படாமல் உள்ளே போனால், உள்ளே இருக்கும் சிம்மாசனத்தில் உட்காரலாம்’னு போட்டிருக்கும். பறந்துதான் போகணும். உடனே இவங்க என்ன பண்றதுன்னு யோசிப்பாங்க. கீழ குனிஞ்சு அந்தக் கம்பளத்தைச் சுருட்டி கக்கத்துல இடுக்கிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுடுவாங்க. தியேட்டரே குலுங்கும். இது மாதிரியான படமா பார்த்ததுனால எல்லாத்தையும் எகனமொகனையா யோசிக்க வெச்சது.

சிரிக்கவைக்கிறவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஆனா, அவனை மக்களுக்குப் பிடிக்கிறதுக்கு முன்னால படுற அவமானங்கள், சிரமங்கள் அதிகம். எதுவுமே காயப்படாம வராது. ஆனா நகைச்சுவையாளன், காயங்களை அதிகமாக வாங்கி வாங்கித்தான் வளர்றான். பெரிய பில்டப்போட சொல்ற கதையை முடிக்கும்போது, யாருமே சிரிக்காமப் போயிடலாம். என்ன ஜோக் சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுனவங்களை நாம எதுவும் பண்ண முடியாது. ஒரு ஊர்ல பட்டிமன்றம் பேசப் போனேன். முன்னால பத்துப் பதினஞ்சு பொம்பளைங்க உட்கார்ந்துட்டு இருந்தாங்க. நான் பேசினதைப் பார்த்துச் சிரிச்சாங்க. உடனே ஒரு கிழவி எந்திருச்சு, ‘ஐயா பேசிட்டு இருக்காக… பொம்பளைக ஏன் வெட்கமில்லாமச் சிரிக்கீங்க?’ன்னு தடை போட்டிருச்சு. என் பேச்சுக்குத்தான் சிரிக்கிறாங்கன்னு சொல்லி, அந்தக் கிழவிக்குப் புரியவைக்க நான் பட்டபாடு பெரும்பாடு.

சில ஆளுங்க சிரிச்சான்னா நிறுத்த மாட்டான். ஜோக் சொல்லலேன்னாலும் சிரிப்பான். ஒரு தடவை நான் பேசிட்டு இருந்ததைக் கேட்ட ஒரு பையனுக்குச் சிரிச்சு சிரிச்சு ஜன்னி வந்திருச்சு. அவனைத் தூக்கிட்டுப் போனாங்க. அதுக்குப் பிறகு எனக்குப் பேச்சே ஓடலை. அரை மணி நேரம் கழிச்சு அவனே வந்து உட்கார்ந்து, ‘பேசுங்க சார்’னப்பதான் மறுபடி ஆரம்பிச்சேன்.

வீட்டை வெச்சு எந்த ஜோக் சொன்னாலும் ஜனங்களுக்குப் பிடிக்கும். புருஷன்-பொண்டாட்டி சண்டை நடக்காத வீடு உண்டா? ஆனா, ஒரு வீட்டுல மட்டும் எப்பப் பார்த்தாலும் கணவன்-மனைவி சிரிப்புச் சத்தம்தான் கேட்டதாம். அந்தத் தெருவே பொறாமைப்பட்டு போய் அவங்ககிட்ட கேட்டப்போ… அப்ப புருஷன், ‘எனக்குக் கோபம் வந்தததும் அவ மேல ஒரு டப்பாவை வீசுவேன். மண்டையில விழுந்துச்சுன்னா நான் சிரிப்பேன். குறி தவறிடுச்சுன்னா அவ சிரிப்பா. அதுனாலதான் சிரிப்புச் சத்தம் எப்பவும் கேட்குது’ன்னானாம்.

ஒரு வீட்டுல அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை. ‘போடா நீதான் முட்டாள்!’, ‘போடி நீதான் முட்டாள்!’னு மாறி மாறித் திட்டியிருக்காங்க. பேப்பர் படிச்சுட்டு இருந்த அப்பா, ‘நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துடாதீங்க’ன்னாராம். மக்களுக்குப் புரியும் வார்த்தையில சொன்னா மட்டும்தான் ஜோக் ஜெயிக்கும். இல்லேன்னா… சொன்னதும் செத்துப்போகும்.

ஒரு கிராமத்தில் பட்டிமன்றம் போனோம். இரண்டு அணியினருக்கும் பெஞ்சு போட்டு இருந்தாங்க. நடுவரான எனக்குப் போட அந்த ஊருல யாரு வீட்டுலயும் நாற்காலி இல்ல. என்ன பண்றதுன்னு ரொம்ப யோசிச்சு… ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டாங்க. பார்த்ததுமே தெரிஞ்சது… சுடுகாட்டுக்குப் பொணம் தூக்கிட் டுப் போற நாற்காலி அதுன்னு. எத்தனை பேரைப் பார்த்ததோன்னு பயந்து நடுங்கிட்டேன். ரெண்டு பக்கமும் கை வெச்சு ஜம்முனு உட்காரவே தோணல. விறைச்சுப் போயி உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு ஒருத்தர் ரெண்டு பத்தியைப் பொறுத்தி, வாழைப்பழத்துல குத்தி எடுத்துட்டு வந்து என் முன்னாடி வெச்சார். பிணக்கோலம் பொருத்தமா தான் இருக்குன்னு நெனச்சேன். நாற்காலியை மறந்துட்டு ஜோக் சொல்வேன். அடுத்த நிமிஷமே அது ஞாபகம் வந்திரும். ஆனாலும் பட்டி மன்றம் சுவையாத்தான் போச்சு. ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு ஆள் ஓடி வந்து, ‘அப்பத்தா செத்துப்போயிட்டா!’ன்னு என் சேரைப் புடுங்கின காட்சியைத்தான் இன்னிக்கும் மறக்க முடியலை. விட்டுதுடா சனின்னு நின்னுட்டே தீர்ப்புச் சொல்லிட்டு, அந்த ஊரைத் திரும்பிப் பார்க்காம வந்துட்டேன்.

தனக்கு வந்த கஷ்டத்தை அடுத்தவங்ககிட்ட சொன்னா, பாதியாக் குறையும். அது மாதிரி நகைச்சுவையை இன்னொருத் தரிடம் சொன்னா, அது ரெண்டு மடங்காக் கூடும். அமங்கலமா பேசக் கூடாது. ஆபாசம் கூடாது. யாரையும் நோகடிக்கக் கூடாது… இந்த மூணுதான் நகைச்சுவைக்கு உள்ள கட்டுப்பாடு. பத்துப் பேர் இருக்கிற இடத்துல ஒன்பது பேரு சிரிச்சு, ஒருத்தன் மனம் புண்பட்டதுன்னா அது நல்ல நகைச்சுவை இல்ல. இந்த நாகரிகத்தைத்தான் நான் இத்தனை வருஷமும் ஒழுங்காக் கடைப் பிடிச்சுட்டு வர்றேன். எத்தனை பேரு காப்பி அடிச்சாலும், புதுசு புதுசா ஊறிக்கிட்டே இருக்கு. அது வற்றாத ஜீவநதி!”

கோணாங்கி

September 15, 2009 Visitor Blogs Leave a comment

‘நீநாடாறு மாதம், காடாறு மாதம் அலைபவன். உன்னைக் கேள்வி கேட்க யாருண்டு?’ என்று வண்ணதாசன் சொன்னது கோணங்கியை!

‘மதினிமார்கள்’ கதையில் தொடங்கி ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ வரை அவர் எழுதிய கதைகள் தமிழில் புது மொழி பேசுபவை. புனை கதைகளை நவீன மந்திரங்களுக்குள் குழைத்துத் தரும் எழுத்துப் பறவை கோணங்கி.

”நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு ஒருவர் வந்தார். அவரது சட்டையில் சில குழந்தைகளின் முகங்கள். ‘இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் கடலுக்குள் போய்விட்டார்கள். இனி வர மாட்டார்கள்’ என்று கலங்கிய கண்களுடன் சொன்னார். தனுஷ்கோடியை நோக்கி வந்த ரயிலை, அப்போது அடித்த புயல் உள்ளே இழுத்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியே சமாதியானார் கள். அதில் உள்ள முகங்களைத்தான் காட்டினார். அவருக்கு தனுஷ்கோடி வாத்தியார் என்று பெயர் வைத்தோம். ஐந்து பைசா, பத்து பைசா என கை நிறைய வசூலித்து, அவருக்குக் கொடுத்தோம். கடலுக்குள் போன ரயில் என்ன ஆனது என்று யோசித்தேன். ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தனுஷ்கோடி பாலத்தின் படத்தைப் போட்டிருந்தார்கள். இரண்டு கைகளை யும் விரித்து நிற்கும் பூதம் போல அது இருந்தது. அந்தப் பூதம்தான் குழந்தைகளைக் கொண்டுபோனதாக நினைத்தேன். அந்த இடம், நிலம், கடல்… இப்போது எப்படி இருக்கும்? என்னுடைய கற்பனைப் பயணத்தின் ஆரம்பம் அதுதான்.

கிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளி வரை செல்லும் சிமென்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவது மாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடுபாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயக்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குருமலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன்.

பழைய வீடுகள் சொன்ன சேதியில்

இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. எந்த ஊருக்குப் போனாலும் நான் தேடிப் பார்ப்பது அந்தக் கிராமத்துக்கு ஒரு காலத்தில் தாகம் தணித்த கிணறுகளை. பெண்கள் தங்களது அந்தரங்கத்தைப் பரிமாறிக்கொள்ளும் இடம் அதுதான். கிணற்றடிப் பெண்களின் தோற்றத்தில்தான் எல்லாக் கிராமங்களும் மறைந்திருக்கின்றன. நாகலாபுரத்தில் பார்த்த பம்பை, ஆதக்காள், வேடப்பட்டி பாட்டி எனது கதைகளில் உலவுகிறார்கள். பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழுதப்பட்டுஇருக்கிறது.
வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசுகள் என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள் வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். வெளிப்படையாகத் தெரியும் கட்டடங்களைவிட, அதை எழுப்புவதற்கு முன்னால் இடிக்கப்பட்ட பாழடைந்த பங்களாக்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன. பட்டினியும் வறுமையும் பின்துரத்த புதுமைப்பித்தன் அலைந்த சென்னைத் தெருக்கள், ஜி.நாகராஜன் களைத்தெறிந்த மதுரைத் தெருக்கள், கிருஷ்ண லீலா, பவளக் கொடி, நல்ல தங்காள், கோவலன் கதைகளை நாடகமாடி முடித்த தென்னகத்தின் அத்தனை கலைத் தெருக்களையும் கால்களால் அளந்தும் களைப்பு வரவில்லை. ஓடிய கால்களுடன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

மத்தியப்பிரதேசம் மண்மாடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்தால் மாங்கி, தூங்கி என்ற இரண்டு மண் மலைகள் இருக்கின்றன. நிர்மல் சாகர் முனிமகாராஜ் என்ற தமிழ்ச் சமணன் சமாதி அங்கே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து போனவன் அவன். காட்டுப் பூக் களைப் பறித்து அவனது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். கல்லும் மணலுமான விநோதப் பரப்பில் நடக்கும்போது வனதேவதைகள் நமக்குப் பாதுகாப்பாக வரும். சூரியனின் நிழல் படாத உஜ்ஜயினியில்தான் விக்கிரமாதித்தனின் 32 சிம்மா சனங்கள் இருக்கின்றன. புதிர்க் கதைகளுக்கான 24 கம்பளங்கள் இருக்கின்றன. அங்கு உட்கார்ந்து எனக்கும் கதைகளைத் தருமாறு கேட்கிறேன். காலன், எமன், தூதன் மூவருக்குமான கோயில் அங்குதான் இருக்கிறது. அந்தச் சிறு கோயில் ஏதோ ஒன்றை எனக்கு ரகசியமாகத் தருகிறது.

ஆந்திராவின் அமராவதிச் சிற்பங்கள் நம்முடைய கலையை அப்படியே சொல் கிறது. ஆனால், அங்கு முழுமையாக இல்லை. அதில் பாதி சென்னை மியூஸியத் தில்தான் இருக்கிறது என்றார்கள். இங்கு வந்து பார்த்தேன். இதிலும் முழுமையாக இல்லை. லண்டன் மியூஸியத்தில் இருப்பதைத் தெரிந்து… அங்கும் போய்ப் பார்த்தேன். ஆக, அமராவதிச் சிற்பங்களை முழுமையாகப் பார்த்துவிட்டேன்.

அதே ஆந்திரத்தில் நாகார்ஜுனகொண்டா சிற்பக்கூடம் என்னையே செதுக்கியது. ஆந்திரா, பௌத்தத்துக்கு முக்கியமான இடம். சமணம் செழித்த கர்நாடகா காட்கலா நான் பல முறை பார்த்தது. இந்த நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000 அன்று அஜந்தாவில் இருந்தேன். ஒரு முறை பார்த்தால் உணர முடியுமா அஜந்தாவை? ஜப்பான் ஓவியன் ஒருவனை நான் பார்த்தேன். அஜந்தாவை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னான்.

நாளந்தாவுக்கும் கயாவுக்கும் மத்தியில் ராஜகிரகம் என்ற நகரம் இருக்கிறது. பதவி, ஆசை, அதிகாரம் அத்தனையும்விட்டு வெளியேறிய புத்தன் அங்குதான் தங்கினான். அவனது காலடி பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உருவானதாக ஐதீகம். அடுத்தது என்ன என்று அங்கே இருந்துதான் புத்தன் யோசித்தான். ஓர் இரவு அங்கு தங்கியிருந்தபோது, ஒளியற்ற இரவாக அந்த நிலவு தெரிந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரத்தைத்தான் என்னுடைய ‘பாழி’ நாவலில் கொண்டு வந்தேன். அது அசோகரின் மனைவி ஊர். அங்கு இருக்கும் ஆபு மலையைவிட்டு விலக அதிக நாட்கள் ஆகும். இப்படி என்னுடைய பயணம், மறைக்கப்பட்ட இடங்களைத் தோண்டிப் பார்ப்பதாக அமையும்.

போதி தர்மா, மார்க்கோபோலோ, யுவான் சுவாங் ஆகிய மூன்று பயணிகள் எனக்கு மலைப்பை ஏற்படுத்துபவர்கள். எந்த வசதியுமற்ற காலத்தில், தமது மன தைரியம் மட்டுமே அவர்களது மூலதனம். வானம், பூமி இரண்டு மட்டும்தான் பக்கத்துணை. அதில் போதி தர்மாவின் தைரியம் அசாத்தியமானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேடன் அவன். பௌத்தத் தத்துவத்தில் தேர்ந்த ஞானியாக மாறி, நாகப்பட்டினம், தனுஷ்கோடி வழியாக இலங்கை போய், அங்கே இருந்து சீனாவுக்குப் போனவன். தமிழகக் குஸ்தி யையும் கேரளக் களரிப் பயிற்றையும் அங்கு அறிமுகப்படுத்தியவன்.

தெரிந்த இடங்கள், பார்த்துப் பார்த்துச் சலித்த இடங்கள் என்று இல்லாமல் தொல்லியல் துறை யாலேயே தொலைக்கப்பட்ட பகுதிகளைத் தேடி வருகிறேன். எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பிய வரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும். மதுரை போய்த் திரும்பலாம் என்று கோவில்பட்டியில் இருந்து பஸ் ஏறினால், மனம் என்னை மறுநாள் காலையில் காரைக்காலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அந்தக் கடல் மாமல்ல புரத்தை நோக்கித் தள்ளுகிறது. சிற்பங்கள், தஞ்சாவூருக்கு அழைக்கின்றன. பெரிய கோயில், என்னை மீனாட்சியை நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் மதுரைக்கு வருகி றேன். இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் இலக்கியத் தலைகள் எல்லாரையும் ஒரு தட்டு, செல்லக் குட்டு வைத்துவிட்டுத்தான் அவர்களிடம் இருந்து விடு படுகிறேன்.

இன்னமும் அலுப்புத் தட்டாமல் என்னை அரவணைத்துக்கொள்கிறது தனுஷ்கோடி. கடந்த 20 ஆண்டுகளில் 200 தடவைகள் தனுஷ்கோடி போயிருக்கிறேன். கறுப்பு ரயில், தனுஷ்கோடி, அல்பரூனி பார்த்த சேவல் பெண், திறந்த விழிகளுடன் தூங்கும் ஸ்த்ரீகள், ராமனின் கற்பனையான தற்கொலைப் பாலம் எனப் பல கதைகளுக்கு அதுதான் கரு. ‘பாழி’ நாவலும் அதுதான். தனுஷ்கோடி புயலில் அடித்துச் செல்லப் பட்ட ரயிலில் சமாதியான பிணங்கள், எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் என எல்லாவற்றின் எச்சங்களும் இன்னமும் இருக்கின்றன. செத்துப்போன பெண்களின் நகைகளைத் திருடி வாழ்ந்த ஒருவன் இன்று அங்கு பைத்தியமாக அலைகிறான். கடைசியாக பச்சைக் கொடி அசைத்து அந்த ரயிலை அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தேன். அந்த மணல் பரப்பில் கால்களைப் பதித்து நடக்கும்போது நானும் சில நாய்களும் மட்டும்தான் சுற்று எல்லையில் இருப்போம். என்னுடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சை இழுத்து நின்றுவிடும் நாய்கள். தனியாகப் போவேன். ரப்பர், தோலில் செய்யும் செருப்புகள் தேயும் என்பதால், டயர் செருப்புகளைப் பயன்படுத்துவேன். புனை கதை நூலகமாக, மணல் நூலகமாக எனக்கு அது தெரிகிறது. அந்த ரயிலில் நானும் போய்க்கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!”

Categories: Authors Tags:

TV Watching Habits in India: Media viewers: Family Time

September 8, 2009 Visitor Blogs Leave a comment

Hinduism: Religion: Special Aradhana, Abishekam: Festival Celebrations

September 2, 2009 Visitor Blogs Leave a comment

விநாயகர் சிலையைக் கடலில் கரைக்க செல்லும் வழியில், பக்தர்கள் பீரை குலுக்கி, தானும் குடித்து, சிலையின் மீது பீறிடச் செய்தும் கலாட்டா செய்துகொண்டு வந்தனர். [சென்னை, திருவல்லிக்கேணி]

தஞ்சாவூர் பெரிய கோவில் மகாநந்திக்கு பிரதோஷத்தை முன்னிட்டு குடம், குடமாக மஞ்சள் கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

Cars & Automobile Manufacturing: Two-wheeler Sales, Marketing: Industry Analysis

September 2, 2009 Visitor Blogs Leave a comment

Energy Independence in India: Nuclear Power: Atomic Plants: Electricity Generation

September 2, 2009 Visitor Blogs Leave a comment

Controlling the World Markets: China & Mineral Exports

September 1, 2009 Visitor Blogs Leave a comment

China Tightening Control of Rare Earth Minerals – NYTimes.com: “China currently accounts for 93 percent of production of so-called rare earth elements — and more than 99 percent of the output for two of these elements, vital for a wide range of green energy technologies and military applications like missiles.

Deng Xiaoping once observed that the Mideast had oil, but China had rare earth elements. As the Organization of the Petroleum Exporting Countries has done with oil, China is now starting to flex its muscle.”

Rare-minerals-wealth-oil-china-asia-exports-economy-wealth-stats

பசுமை அரசியல் / பொறியியல் உலகை உய்விக்கும் என்று பேசும் மேற்கின் இடதும், நடுவும் ஒரு பெரும் முட்டுக்கட்டையை சந்திக்கப் போகின்றன. உலகின் 93% சதவீதம் அபூர்வ மண் கனிமங்கள் சீனாவில் உள்ளனவாம். மீதம் இருக்கும கனிமங்களையும் சீன நிறுவனங்கள் தம் கட்டுப்பாட்டில் கொணரப் பெரும் முயற்சி செய்து வருகின்றன.

இதனால் என்ன ஆகும்?

சீனா இப்போது இந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதைக் கடுமையாகக் குறைத்து வருகிறதாம். அத்தோடு நிற்காமல் இவற்றைப் பயன்படுத்தி தொழிலுற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களை அந்த உற்பத்திக்கான தொழிற்சாலைகளைச் சீனாவுக்கு மாற்றும்படி வற்புறுத்துகிறதாம்.

அராபியர் எண்ணெயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது போல சீனா இந்த அபூர்வக் கனிமங்களைப் பயன்படுத்துகிறது என்று குறை சொல்வது பன்னாட்டு நிறுவனங்கள். காப்புரிமையைத் தாம் ஆயுதமாகப் பயன்படுத்துவ்து மேற்கத்தியர் கண்களில் படாதது பற்றி நமக்குத் தெரியும்.

இந்தியாவில் என்ன இருக்கிறது உலகச் சந்தையை இப்படிக் கட்டுப்படுத்த?