Home
> Uncategorized > அம்மாவின் பொய்கள் – ஞானக்கூத்தன் (1971)
அம்மாவின் பொய்கள் – ஞானக்கூத்தன் (1971)
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களை குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயோ?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
—-
ஞானக்கூத்தன் கவிதைகள் – விருட்சம் – ரூ. 80.00
virutcham@mailcity.com
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments