Archive

Archive for June 30, 2009

மூன்று தெய்வங்கள் : யமுனா ராஜேந்திரன்

June 30, 2009 Leave a comment

By இனி • Jun 23rd, 2009 • Category: அரசியல் – சமுகம்

1.

மூன்று தெய்வங்கள் என்று சொன்னேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அல்ல, அவரை விடவும் நடிப்புக் கில்லாடிகளான தமிழகத்தின் மூன்று தெய்வங்கள் பற்றிச் சொல்லப் போகிறேன்.

முதல் தெய்வம் ஜெயமோகன். இரண்டாவது தெய்வம் சாருநிவேதிதா. மூன்றாவது தெய்வம் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ் இலக்கியவாதிகளுக்குப் பொதுவாக அரசியல் ஈடுபாடு என்பது இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுப்பதும் இல்லை. தமிழ் இலக்கியச் சூழலில் ஜெயகாந்தன் ஒருவரே நானறிந்தவரை ஒரேயொரு விதிவிலக்கு. ஒப்பமுடியாத அவரது அரசியலுக்கும் அப்பால், தான் சரி எனக் கருதியதை வெளிப்படையாக எழுதியும், கட்சி மேடைகளில் கர்ஜனையுடன் பேசியும் வந்தவர் அவர்.

அவரது பார்ப்பனிய சார்புகளையும் இந்துத்துவ வேர்களையும் தற்போது நிறையக் கட்டுடைப்பு செய்கிறார்கள். அதற்கான அரசியல் காரணங்கள் தமிழ் கலாச்சாரச் சூழலில் உண்டு என்றாலும், ஜெயகாந்தன் ஒரு போதும் இடதுசாரிகளுக்கு எதிராகவும், மார்க்சிய புரட்சிகர மரபு தொடர்பாகவும் இழிவாகப் பேசியவரோ, எழுதியவரோ, அல்லது இவற்றுக்கு எதிராக நிற்பதை ஒரு அரசியலாக ஏற்றவரோ இல்லை. இன்றைய கட்டுடைப்பு விமர்சகர்கள் ஜெயகாந்தனை நிராகரிக்கவும் செய்யலாம்.

எவ்வாறு தமிழ் திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ராமச்சந்திரன் வழி விளிம்புநிலை மனிதர்கள் தமிழ்த்திரைக்குள் பிரவேசித்தார்களோ, அதுபோல ஜெயகாந்தன் வழிதான் விளிம்புநிலை மனிதர்கள் வெளிப்படையாகத் தமிழ் இலக்கியத்திற்குள் பிரவேசித்தார்கள். இந்தத் தமிழ்க் கலாச்சார வரலாற்றை எந்தக் கொம்பனும் புறந்தள்ள முடியாது.

சுஜாதாவின் அடியொற்றியபடி இனிவருகிறார்கள் தமிழ் இலக்கிய வானின் மூன்று தெய்வங்கள். மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பாகச் சுஜாதா பார்ப்பனர் சங்க மாநாட்டு மேடையில் முழங்கினார். அசோகமித்திரன் தமிழகப் பார்ப்பனர்களின் நிலைமையை இரண்டாம் உலகப் போர்க்கால யூதர்களின் துயரநிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார். அசோகமித்திரன் அவரது கதைமாந்தர்கள் போலவே அமைதியானவர். ஆனாலும் என்ன, அமைதியின் பின்னால் பேரழிவின் தடங்களும் இருக்கவே செய்கிறது.

சுஜாதா மரணமுற்றபோது திடும்மென்று சாருநிவேதிதா சுஜாதா எனது ஆசான் என்றார். எஸ்.ராமகிருஷ்ணன் வாத்தியார் என்றார். இலக்கியத்தில் எவரும் கதை அளந்து கொண்டே இருக்கலாம். அரசியலில் மனோரதியத்திற்கோ உணர்ச்சிவசமான கொந்திப்புகளுக்கோ எந்தவிதமான அர்த்தமும் இல்லை. உணர்ச்சிகரமாக்கப்பட்ட அரசியலின் பின்னிருப்பது கூட, உணர்ச்சி ஊட்டுபவரினது அதிகார அபிலாஷைகளும், அவர்தம் பிரபலம் நோக்கிய நடவடிக்கைகளுமாகத்தான் இருக்கிறது.

உணர்ச்சியூட்டும் சாதுரியமான அதிகார நோக்கு கொண்டவராக ‘வாழும் தமிழ்’ கலைஞர் கருணாநிதியை நாம் சுட்டு முடியுமானால், பிரபலத்தை முன்வைத்து முக்கியத்துவம் பெறுவதற்கான எடுத்துக்காட்டாக ‘உணர்ச்சி எழுத்தாளர்’ சாநி, ‘எல்லோர்க்கும் நல்லவர்’ எஸ்ரா, ‘இந்துத்துவக் கும்பமுனி’ ஜெமோ போன்ற மூவரையும் குறிப்பிடலாம்.

இவர்கள் மூவருக்கும் நிறைய பொதுத் தன்மைகள் இருக்கிறது. மூவரும் தமிழ்வெகுஜன சினிமாவை அதில் ஈடுபட்டவர்களினுடனான உறவுக்காக விதந்தோதுபவர்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு உள்ள எல்லாக் கல்யாண குணங்களும் இவர்களுக்கு உண்டு. உணர்ச்சி அரசியல் தமிழக அரசியல். தடாலடியாக உணர்ச்சிவேகமாக உரைகளை வீசினால் நீங்கள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெறுவீர்கள். ஜெயமோகனும் சாநியும் இப்படியான அதிஉணர்ச்சிகரமான தடாலடி அரசியல் அபிப்பிராயங்ளை அவ்வப்போது வெளிப்படையாக எழுதுவார்கள்.

2.

தெருப் புழுதியில் கட்டிப் புரண்டு ‘ங்கோத்தா அம்மா’ ரேஞ்சுக்குச் charuசண்டை போடுகிற, பரஸ்பரம் வன்மத்தைத் தமது சொந்த வாழ்வில் நிறைத்துக் கொண்டிருக்கிற ஜெமோவும் சாநியும்தான் காந்தி பற்றியும் அகிம்சை பற்றியும் பிறருக்குப் போதிக்கிறார்கள். வன்முறை தோற்றுப் போனது பற்றியும் காந்தியம் வெல்லும் என சாநி தீர்க்கதரிசனங்களைச் சிந்தியபோது, ஜெமோ அதனைத் தனது குழிந்த உள்ளங்கையில் பிடித்து புனித தீர்த்தமென அருந்தியபடி ‘ஜெய்ஹிந்த்’ என்று சிலிர்த்துக் கொண்டார்.

இருவரும் தொடர்ந்து வன்முறை,குவேரா, கியூபா, சுதந்திரம், ஈழம், ஆயுதப் போராட்டம், காந்தியஅகிம்சை என கதாகாலட்வேபம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

என்னாவானாலும், சாநி ‘மம்மி ரிட்டர்ன்’ பிரகடனத்துக்குப் பிறகு ஜெமோவுடன் சமரசத்திற்குத் தயாரில்லை.

இந்த இடத்தில் கொஞ்சம் பிளாஸ்பேக்குக்குப் போவோம். சாநிக்கும் ஜெமோவுக்கும் இடையில் என்ன நடந்தது? சாநியின் எழுத்துக்களை விமர்சித்து ஜெமோ ஒரு ஒண்ணரைப் பக்கம் எழுதினார். சாநி ‘லபோ திபோ’ என்று 45 பக்கத்துக்குப் புத்தகமே எழுதி உலகெங்கும் மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்.

தனக்கு மாரடைப்பே வந்து உயிரே போயிருக்கும் என்ற ரேஞ்சுக்குப் புலம்பித் தீரத்துவிட்டார் சாநி.

தனக்கென்று வருகிறபோது இப்படித் ‘தாம் தூமென்று’ உணர்ச்சிவசப்படும் சாநி பிறரைத் துன்புறுத்துவதையும், சக எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதையும், தன்னுடன் முரண்படும் எழுத்தாளர்களுக்கு ‘பூணா சூணா’ என்று தூசனத்திலேயே கடிதம் எழுதுவதையும் தன்னுடைய வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த அறச்சீலர்.

ஜெமோவின் கழிசடை மனதுக்கு திகசி, மனுஷ்யுபுத்திரன், எம்.ஜி.ஆர் குறித்த அவரது வக்கிரமான தாக்குதல்களே போதும். இயற்கையாக நேர்கிற முதுமையையும் உடல் ஊனத்தையும் முன்வைத்து தனது அரிப்பைத் தீரத்துக் கொள்கிற வக்கிர மனம் கொண்ட நபர் ஜெமோ.

இவர்கள் இருவரும்தான் அகிம்சை குறித்துப் பேசுகிற மகான்கள்.

ஜெமோ சாநி விளையாட்டு பரஸ்பரம் இருவரதும் அங்கீகாரம் நோக்கிய எலி பூனை விளையாட்டு. சாநியின் உடல்நலம் குறித்து ஜெமோ விசாரித்த கொஞ்சநாளில் கருணாநிதி-ஜெமோ jeamooooவிவகாரத்தில் சாநி ஜெமோவுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதுவார். பிற்பாடு என்ன கெட்ட காலமோ ஜெமோவுக்குச் சனிபிடித்து சாநியை விமர்சிக்க மறுபடி சாநிக்குச் சாமி வந்து ஜெமோ எதிர்ப்புச் சன்னதம் ஆடுவார்.

‘நான் கடவுள்’ என்கிற பாசிஸ்ட் படத்துக்கு அதனது வசனத்திற்காக ஜெமோவுக்குச் சாநி புகழ் மாலை சூடுவார். மனுஷ்யபுத்திரனிடம் போய் எனது விமர்சனத்தில் ‘என்னமோ’ தவறுகிறது, என்னவெனத் தெரியவில்லை என்பார். ‘இட்லரும் ஊனமுற்றவர்களைக் கொன்றான். அகோரியும் கொல்கிறான். இது பாசிஸ்ட் படம்’ என மனுஷ்யபுத்திரன் சொல்ல, அப்போது, அந்த நிமிசம் தான் இவருக்கு ஞான திருஷ்டி வந்து தனது விமர்சனத்தில் தவறிய ‘என்னவோ’ ஞாபகம் வந்ததாம். அயோக்கித்தனம். பாசிசம் என்கிற மனித விரோதம் ‘என்னவோ’ ஆக, வசனம் மட்டும்தான் தனக்கு மனதில் நிற்கிறது என்கிற நேர்மையாளன்தான் சாநி.

சாநியை நான் ஏன் ‘உணர்ச்சி’ எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறேன் என்பதை அவர் எழுத்துக்களைக் கொஞ்சமேனும் வாசித்தவர் அறிவர். மழித்த அல்லது மழிக்கப்படாத ‘உலகு தழுவிய அல்குல்’ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அவர், திபுக்கென்று உலக புரட்சிகர இயக்கங்களின் ஞாபகத்திலீடுபட்டு, கியூபாவில் (கியூபா இல்லை கூபா – சாநி) சுதந்திரம் பற்றியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் மீதான மனிதஉரிமை மீறல் பற்றியும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் வன்முறை பற்றியும், திடும்திக்கென்று அதிர்ச்சிகரமாக எழுதுவார்.

ஈழத்தில் வன்முறை தோற்றுவிட்டது எனக் கூறும் சாநி, காந்தியமே இனி உலகு இருளுக்கான அகல்விளக்கு எனவும் எழுதுகிறார். சாநியின் புரமவைரி ஜெயமோகன் சாநியின் இந்தப் பொன்மொழிக்காக அவரை வாழ்த்தியும் இருக்கிறார். கடன் திருப்பிக் கொடுத்து ஆயிற்று. ‘நான் கடவுள்’ வசனத்திற்கு சாநி போட்ட ‘சபாசு’க்கு, ஈழ வன்முறை குறித்து சாநி எழுதிய கட்டுரைக்கு ஜெமோ ‘சபாசு’ போட்டிருக்கிறார்.

சாநியும் சரி ஜெமோவும் சரி கதை விடுவதில் மன்னர்கள். சாநியின் ‘நான் கடவுள்’ கட்டுரையைப் படியுங்கள். சாநி எவ்வளவு அண்டப் புழுகன் என்பது அப்போது தெரியும். அகோரியின் பாத்திர வளர்ச்சியை அவனது கொலைச் செயல்பாட்டை சாநி அளவு ஜெமோ கூட தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தி டெமான்ஸ்ரேட் செய்திருக்க மாட்டார்.

‘நான் கடவுள்’ பட விமர்சனத்தில் அகோரிக்கு கடவுள்தன்மையை வழங்குகிற சாநியின் கருத்தாக்கத்தை உருவிவிடுங்கள். அந்தக் கட்டுரையில் மிஞ்சுவது வெங்காயம். பின்னால் சாநி ஏற்கிற பாசிசக் கூற்றை வைத்துக் கொண்டால், சாநியின் கட்டுரை ஒரு தன்வயமான மோசடிக் கட்டுரை. எப்படி ஒரு எழுத்தாளன் ஒரே சமயத்தில் பாசிஸ்ட்டாகவும் பாசிச எதிர்ப்பாளனாகவும் இருக்க முடியும்?

இதுதான் சாருநிவேதிதாவின் அரசியல் தரிசனம். புல்ஷிட்.

வேலுபிரபாகரன் படங்களின் வசனத்தை விட என்ன புண்ணாக்கு ஜெமோவின் நான் கடவுளில் இருக்கிறது என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியவில்லை. கடவுளை நிந்தனை செய்யும் திராவிட மரபைத் தனதாகக் கோரிக்கொள்கிற அயோக்கியத்தனம்தான் ஜெமோவின் நான் கடவுள் வசனங்கள்.

இந்த வசனங்களைப் புகழ்கிற சாருவுக்கான நன்றியைத் திருப்பிச் செலுத்தும் செயல்தான் ஈழம் பற்றிய சாநியின் கட்டுரைக்கான ஜெமோவின் புகழ்மாலை. அதைச் சாநிக்குத் தனியே மின்னஞ்சல் செய்யாமல் வலைத்தளம் மூலம் எட்டச் செய்ததூதன் சாநிக்கு ஜெமோ மேல் உள்ள கோபத்திற்கான காரணமாக இருக்கும்.

அது கிடக்கட்டும் சனியன். பிரச்சினை என்னவென்றால், வேறு எந்த தத்துவ மசிர் மாறுபாடுகளும் இருவருக்குள்ளும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்வதுதான்.

3.

எஸ்.ரா, ஜெமோ, சாநி மூவருக்குமே எதிர்ப்பு அரசியல் பற்றிப் பேச எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் இல்லை.

இன்குலாப் போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமது சொந்த வாழ்வில் ஒடுக்குமுறைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்ட எத்தனையோ தமிழக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு காரணங்களுக்காக நான் அதனை இங்கு விரிவாக எழுதாமல் தவிர்க்கிறேன்.

தமது எழுத்துக்கள் தமது பிழைப்பைக் கெடுக்கும் என்றால் எத்தகைய சமரசத்திற்கும் தயாரானவர்கள்தான் இந்த மூன்று தெய்வங்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய கட்டுரைகளை அதன்மீது வந்த விமர்சனங்களை அடுத்து தனது வளைத்தளத்திலிருந்து அகற்றியவர்தான் ஜெயமோகன்.

‘மன்னிப்புக் கோராவிட்டால் திரைத்துறையில் பணியாற்ற முடியாது’ என்ற திரைப்படத் துறையினரின் தடையைக் கடந்து, நான் கடவுளுக்கும், அங்காடித் தெருவுக்கும் எவ்வாறு ஜெமோ வசனமெழுத எப்படி முடிந்துது என்பதை ஜெமோ எப்போதும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. என்ன சமரசத்திற்கு அவர் ஆட்பட்டார் என்பதும் ரகசியம் போல் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுரைகள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் ஜெமோவின் எதிர்ப்புக் குணாம்சம்.

எஸ்.ரா. மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ பற்றி ஒரு கடுமையான விமர்சனம் எழுதினார். ‘அமரோஸ் பெரோஸ்’ உள்பட பல ssraaaaaaபடங்களின் பாதிப்பினை அக்கட்டுரையில் அவர் சுட்டிக் காட்டினார். கொஞ்ச நாட்களில் அக்கட்டுரை அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் எஸ்.ராவின் விமர்சன ஆளுமை.

எஸ்.ரா நிஜத்தில் ஒரு தனிரகம். காம்ரேட் என விழித்து ஜெயகாந்தனுக்கு ரெட்சல்யூட் அடிப்பார். திரைப்பட இயக்குனர் லிஞ்குசாமி நல்ல இலக்கிய வாசகர் என விளித்து, அவருக்கு அறிவுஜீவி வேசம் கட்டுவார். ஜெயமோகன் இவருடைய ‘யாமம்’ நாவலுக்கு விதந்து விமர்சனம் எழுதினால், தனது வலைத்தள முகப்பில் அதனைப் போட்டுக் கொள்வார். எஸ்.ரா முன்பு சொன்ன, விஷ்ணுபுரம் ஜெமோவின் இந்துத்துவச் சாயம் கொண்ட நாவல் எனும் கூற்றை நீங்கள் மறந்து போய்விட வேண்டும்.

எஸ்.ரா.எல்லோர்க்கும் நல்லவராக விரும்புகிறவர். தடாலடி வேலைகளை அவர் செய்வதில்லை. இருந்தாலும் என்ன ‘பிறமலைக் கள்ளர்’ கோபமோ பா. வெங்கடேசனின் ‘காவல்கோட்ட’த்தை மட்டும் அவர் கடாசித்தள்ளிவிட்டார். முக்குலத்து மாணிக்கம் முத்துராமலிங்கத் தேவர் குறித்த திரைப்பட வசனகர்த்தாவான எஸ்.ராவுக்கு இப்படிக் கோபம் வருவதிலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

எஸ்.ரா. ஈழ இலக்கியம் எனும் அளவிலோ அல்லது ஈழஅரசியல் எனும் அளவிலேயோ அக்கறையுடன் எழுதிய எதுவும் என் கண்ணில் தட்டுப்படவில்லை. முக்கியமான தனக்குப் பிடித்த நாவல்களின் பட்டியலில் கோவிந்தனதும், ஷோபா சக்தியினதும் நாவல்களைப் பட்டியலிட்டிருந்தார்.

எஸ்.ராவின் பட்டியல்களின் மீது எனக்கு எப்போதுமே அவ்வளவாக மரியாதையில்லை. எடுத்துக் காட்டுச் சொல்கிறேன் பாருங்கள் : 2008 ஆம் ஆண்டு வெளியான முக்கியமான படங்கள் என அவர் சில படங்களை 2009 ஆரம்பத்தில் தனது வலைத் தளத்தில் வரிசைப்படுத்துகிறார். அதில் சோடர்பர்க்கின் ‘சேகுவேரா’ படத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

இப்படி ஒருவர் தனது ரசனை அடிப்படையில் எதனையும் வரிசைப் படுத்துகிறபோது, புத்தகமானால் வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்து வேண்டும், திரைப்படம் என்றால் திரைப்படம் பார்த்த அனுபவத்தில் வரிசைப்படுத்தவேண்டும். ‘சேகுவேரா’ திரைப்படம் முதலில் பிரான்ஸ் கேன் திரைப்படவிழாவில் 2008 பிற்பகுதியில் திரையிடப்பட்டது. பிற்பாடு 2009 ஆரம்பத்தில்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளியாகியது. குறுந்தகடு 2009 மத்தியில்தான் வெளிவந்தது. அமெரிக்கா ஐரோப்பா தவிர அந்தத் திரைப்படம் வேறு எந்த நாடுகளிலும் திரையிடப்படவில்லை.

இந்தியாவிலோ தமிழகத்திலோ அல்லது குறுந்தகடிலோ அல்லது இணையத்திலோ இத்திரைப்படத்தினைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. இந்தத் திரைப்படத்தினை அவர் கேன் திரைப்படவிழாவில் மட்டுமே பார்த்திருக்க முடியும். அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எஸ்.ரா. எந்த அடிப்படையில் சேகுவேரா படத்தை 2009 ஆரம்பத்தில், தான் படம் பார்த்த பாவனையில் வரிசைப்படுத்துகிறார்?

அவரது முன்வைப்பு முற்றிலும் நம்பகத்தன்மையற்றது, போலித்தனமானது.

சாநியை பாரிசுக்கு அழைத்த எதிர்ப்பிலக்கியம் பேசச் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாரு நிவேதிதா எதிர்ப்பிலக்கியவாதியென்றால், தமிழின் முதல் எதிர்ப்பலக்கியவாதி பெங்களுர் சரோஜாதேவிதான். முதல் எதிர்ப்பிலக்கியப் பிதாமகன், பதிப்பாளர், தமிழில் முன்முதலாக பரந்த விநியோகக் கட்டமைப்புடன் மஞ்சள் பத்திரிக்கை நடத்திய அன்றைய அதிமுக ஜேப்பியார்தான்.

‘இந்தியா டுடே’ வெளியிடுகிற செக்ஸ் புள்ளிவிவர இதழ்களை எதிர்ப்பு அரசியலின் அங்கமாகக் கொள்வோமாயின், சாருவும் எதிர்பிலக்கியவாதி என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பாலுறவு இலாபகரமான சந்தைக்குரிய பண்டமாகிவிட்ட இன்றைய உலகமயச்சூழலில் ஆண் பெண் குறிகளைச் சரக்கு விளையாட்டுப் பொருள்களாக்கி, பாலுறவை வெளிப்படையாக எழுதுவதற்கு எந்தவிதமான எதிர்ப்புத் தன்மையும் இல்லை, அது புரட்சியும் இல்லை.

இந்தியாவிலும் தமிழகத்திலும், ஈழப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை, காவல்துறையின் ஒடுக்குமுறை, தூக்குத் தண்டனைக்கு எதிரான இயக்கம் என எத்தனையோ வெகுமக்கள் போராட்டங்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ கருத்தரங்குகளை எழுத்தாளர்கள் முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். இப்படியான எந்த நிகழ்வுகளிலும் பங்குபற்றாதவர்கள் தான் இந்த மூன்று தெய்வங்கள்.

இவர்கள்தான், இப்போது, மிகப் பெரும் மானுடப் பேரழிவு ஈழத்தில் நடந்திருக்கிற சூழலில், ஒடுக்குமுறையின் குரூரம் குறித்துப் பேசவேண்டிய கூறைப் பின் தள்ளிவிட்டு, காந்தியம் பற்றியும் அகிம்சை பற்றியும் பேசுகிறார்கள். கியூபா பற்றியும் சேகுவேரா பற்றியும் பொறுக்கித்தனமாக எழுதுகிறார்கள். உலகப் புரட்சிகர அனுபவங்களை முற்றிலும் கொச்சைப்படுத்துகிற வேலையை இவர்கள் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பொறுக்கித் தனத்தின் உச்சம் என்னவென்றால், ஜெயமோகனுக்கு அரசியலிலும் சினிமாவிலும் இலக்கியத்தின் அளவு அக்கறை இல்லையாம். இதை எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்கிறார்?

ஈழும் கொழுந்து விட்டெறிகிற நேரத்தில், தமிழகத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறபோது, ஓட்டுப் போடப் போகாமல், சினிமாப்பட வசன வேலையில் சென்னையில் இருக்கிறபோது பேசுகிறார்.

உம்மை எந்த மடையன், தமிழகத் தேர்தல் பற்றியும், ஈழம் பற்றியும் எழுது எழுதெனக் கேட்டான்? ஓட்டுப் போடப் போகாமல் தமிழகத் தேர்தல் அரசியல் பற்றி எழுதும் ஜெமோ, தனக்கு அதிகமும் ஈடுபாடில்லாத சினிமா வேலை இருந்ததால்தான் ஓட்டுப் போடப் போவில்லையாம். சினிமா வசனம் எழுதுகிறவேலை என்னய்யா இலக்கியச் சேவை? கன்றாவி, வசந்தபாலன் எல்லாம் உம்மைக் காட்டி பின்நவீனத்துவம் என்றெல்லாம் பேசுகிறார். காலம் சாமி எல்லாம் காலம்.

ஜெமோ தான் இப்படியென்றால் எஸ்.ராவும் அதைத்தான் சொல்கிறார். அரசியலில் தனக்குப் பெரிய அறிவோ ஈடுபாடோ இல்லை என்கிறார். பெத்தாம் பெரிய அரசியல்வாதி முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு வசனம் எழுத நியமிக்கப்பட்டவர், காவல்கோட்டத்துக்குப் பின்னணியான வரலாறு-அரசியல் பற்றியெல்லாம் நுண்தளத்தில் வெளுத்துக் கட்டியவருக்கு, ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் பெரிதாக அறிவில்லையாம்.

எவனப்பா உம்மை ஈழப்பிரச்சினை பற்றி எழுது எழுது எனக் கேட்டவன்?

கேரளா பற்றின அரசியல் கட்டுரை எழுதும்போதே சாநி பாடிய புராணமும் இதுதான். தான் அடிப்படையில் எழுத்தாளன், இப்போது அரசியல் பற்றி எழுத நேர்ந்திருக்கிது என்கிறார். அடிப்படையில் படுகேவலமான வேடதாரிகள் இவர்கள்.

ஈராக் யுத்தத்தைக் கடுமையாக எதிரத்த காலஞ்சென்ற ஹெரால்ட் பின்ட்டரோ, உலக அளவிலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுக்கிற அருந்ததி ராயோ ‘உங்களை’ மாதிரி ஒரு போதும் பேசமுற்படமாட்டார்கள்.

அரசியல் கோடிக்கணக்கான மக்களது உரிமைகள் தொடர்பான, அவர்களது உயிர்வாழ்தல் தொடர்பான பிரச்சினை. உங்களுக்கு அக்கறையோ ஈடுபாடோ அறிவோ அல்லது இவைகளைத் தேடிச் செல்லும் மனமோ இல்லையானால், எவரும் உங்களை அதுபற்றி அபிப்பிராயம் சொல்லுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்க மாட்டார்கள்.

நீங்கள் மூன்றுபேரும் உங்களுக்கு அடிப்படை ஈடுபாடோ அக்கறையோ நுண்அறிவோ இல்லாத துறை பற்றி அதிரடியாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

4.

சாநியும் ஜெமோவும் ஈழப் பிரச்சினை குறித்து, அரசியல் மற்றும் கலாச்சாரம் என முன்பாக ஏதும் எழுதியிருக்கிறார்களா?

சாநி இரண்டு மாஸ்டர் பீஸ்கள் எழுதியிருக்கிறார். முதலாவது மாஸ்டர் பீஸ் பாரிஸ் சின்னக் கதையாடல்-சாநி வகை எதிர்க்கதையாடல் ‘கோ-புரடக்ஸனான’ சிறுகதை ‘உன்னத சங்கீதம்’.

இரண்டாவது ‘தமிழகச் சஞ்சிகையில் வரமுடியாத’ புரட்சித்தன்மை கொண்ட( சாநியின் இணையத்தில் வந்திருக்கிற) ‘கலாகௌமுதி’க் கட்டுரை.

கலாகௌமுதிக் கட்டுரையை விடவும் கடுமையான ஈழத்தமிழர் குறித்த கட்டுரைகளை தமிழகத்தில் உயிர்மையும், காலச்சுவடும் நெஞ்சுரத்துடன் வெளியிட்டிருக்கிறது. எந்தவொரு மதிமுக, திமுக பத்திரிக்கையிலும் வந்திருக்கக் கூடிய கட்டுரைதான் அது. கோரிக் கொள்கிற மாதிரியான அப்படியான எந்தக் கலகப் புண்ணாக்கும் அந்தக் கட்டுரையில் இல்லை.

முதலாவது மாஸ்டார் பீஸான உன்னத சங்கீதத்தில் சாநி தெரிவிக்கும் ஈழப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி அவரது ஈழம் குறித்த, குறிப்பான அறிவுக்கு ஒரு சான்று-

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான். ஈழப் போராட்ட வரலாறு பற்றிய நூற்றுக்கணக்கான தமிழ்-சிங்கள-ஆங்கில நூல்கள் எதிலும் காணக்கிடைக்காத சாநியின் நுண்விவர வரலாறு இது.

உன்னத சங்கீத்தின் இன்னொரு சிறப்பு, நபக்கோவின் பிரசித்தி பெற்ற நாவலான லோலிடாவின் தமிழ் உல்டாவாகவும் அக்கதை இருப்பதுதான்.

ஜெயமோகன் அவ்வப்போது, திண்ணை, காலம், ஜெமோ வலைத்தளம் என, எழுதிய ஈழ இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனிஇன்டியன்’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அப்புறமாக ஈழத்தமிழர்களின் தமிழகத் தமிழர்கள் குறித்த பார்வையெனத் தான் கற்பித்துக் கொண்டது குறித்து, தனது அவுஸ்திரேலியப் பயணத்தை முன்வைத்து ஜெமோ ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஈழக்கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன் குறித்த, திண்ணையில் ஜெமோவின் பினாமியான சூர்யா அல்லது சூரியா எனும் அனானியால் பகிரங்கப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் ஷோபாசக்தியின் ‘கெரில்லா’ நாவல் குறித்த பதிவுகள் வலைத்தள விமர்சனம் இரண்டும் ஈழத்தின் விடுதலைப்போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டிய ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும்.

மனிதனின் இயல்பான மிருகத்தனத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப்போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கெரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும். வ.ஐ.சா.ஜெயபாலன் குறித்த கடிதத்தில் ஆயுதப் போராட்ட இயக்கத்துடனான அவரது தொடர்புகள் ஒருவிதமான அசூயை கலந்த தொனியில் எழுதப்பட்டிருக்கிறது.

சூர்யாவுக்கு ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டு பகிரங்கப்படுத்தபட்ட அக்கடிதத்திற்கு ஜெயபாலன் எழுப்பிய கடுமையாக ஆட்சேபத்தினையடுத்து, திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராமும் ஜெமோவுக்கு கண்டனம் தெரிவித்ததாக ஞாபகம் இருக்கிறது.

இதுவன்றி தளையசிங்கம் மரணம் பற்றி ஜெமோ தத்துப் பித்தென்று உளறியதும், அதனை மறுத்து தளையசிங்கத்தின் சகோதரரான பொன்னம்பலம் மறுப்புரைத்ததும் அறியவரப்பட்ட செய்தி.

பிற்பாடு ஜெமோ ஈழத்தமிழர்களுக்கு உலக இலக்கிய, இந்திய இலக்கிய வாசிப்பில்லை என எழுதினார். கவிஞர் மு.புஷ்பராஜன் ‘ஈழத்தமிழர்கள் விரல்சூப்பிக் கொண்டிருக்கவில்லை’ எனக் காட்டமாகப்; பதில் எழுதியதன் பின் ஜெமோ வாயைத் திறக்கவில்லை.

சேரனையும் நா.சுகுமாரனையும் முன்வைத்து, பாலுறவையும் வன்முறையையும் முன்வைத்து, தமிழ் புரட்சிகரக் கவிதைகள் பற்றி எழுதப்பட்ட ஜெமோவின் கட்டுரை புரட்சிகர இலக்கியம் தொடர்பான ஒரு நகைச்சுவைக் கட்டுரை என்பதற்கு மேல் எதனையும் மேலாகச் செல்ல முடியாது.

புவியரசு, கங்கை கொண்டான், இன்குலாப், ஆத்மநாம் போன்றவர்களை அறிந்தவர்கள் இக்கட்டுரையை முற்றிலும் நிராகரித்து விடுவார்கள். இன்குலாபை கவிஞர்களின் கவிஞர் என எழுதினார் கோவை ஞானி. ஜெமோவுக்கு இது ஒரு நினைவூட்டு.

தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தினால் ஈழத்தமிழர் மீதாகச் சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த மாணிக்கப் பரல்கள் தவிர சாநியோ ஜெமோவோ ஈழத்தமிழர்களின் அவலவாழ்வும் போராட்டமும் குறித்து எதுவும் எழுதியர்கள் இல்லை.

5.

கியூபப் பிரஜைகளைச் சுதந்திரமாகவிட்டால் தொண்ணூறு சதமானவர்கள் கியூபாவை விட்டு ஓடிப்போய்விடுவார்கள் என தடாலடியாக எழுதுகிறார் சாநி.

குவேராவை காந்தியுடன் ஒப்பிட முடியாது எனும் ஜெமோ, குவேரா தனிமனித மூப்புக்கு கொண்ட ஒரு சாகசவாதி என எழுதுகிறார். சான்றுக்கு குவேரா பற்றிய காஸ்டநாடாவின் நூலை நல்ல நூல் என்கிறார். முன்பாகவே அ.மார்க்சும் அந்தப் புத்தகம் நல்ல புத்தகம் எனச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். பகத்சிங் விடயத்திலும் காந்தியை நிலைநாட்ட அ.மாரக்சின் புத்தகம் ஜெமோவுக்கு உதவுகிறது.

ஆச்சரிப்படத்தக்க விதத்திலான ஒற்றுமை என்ன வென்றால், பகத்சிங் மற்றும் சேகுவரா திருவுருக்களைக் ‘கட்டு’ உடைத்துவிடுவதென்று அ.மாரக்சும் புறப்பட்டிருக்கிறார். ஜெமோவும் புறப்பட்டிருக்கிறார். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் ஜெமோ, அமா இருவரும் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான்.

கியூபாவிலிருந்து மியாமிக்கு ஓடிப்போனவர்கள் கியூபப் புரட்சியின் கருத்துருவம் பிடிக்காமல் ஓடிப்போனவர்கள். பாடிஸ்டா அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நாடுகடந்த கியூபா அரசும் கூட அமைத்தார். பிறிதொரு வகையில் கியூபாவிலிருந்து விலகுகுகிற கியூப இளைய தலைமுறையினர் கலாச்சாரக் காரணங்களுக்காக, இலக்கியம் மற்றும் இசை குறித்த கியூபாவின் கட்டுப்பாடுகளை மீறி ஓடிப் போகிறார்கள்.

இப்போது நிலைமை வேறு. முன்னொரு காலத்தில் கியூபாவில் தடைசெய்யப்பட்டிருந்த மரியா வர்கஸ் லோசாவின் நாவல்கள் உடனடியில் இப்போது வெளியாகிறது. இசை குறித்த எந்தக் கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. கியூப இசைச் சாதனைக்கு சான்றாக ‘புனாவிஸ்டா இன்டர்நேசனல்’ விவரணப்படத்தை சாநிக்குப் பரிந்துரைக்கிறேன்.

கியூபாவில் சிறுதொழில் முகவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுமுதலாளிகள் தோன்றுகிறார்கள். வேற்றுநாட்டவர்கள்; புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளில் கியூபாவில் வாங்கிக் குடியேறலாம். இப்படி நிறைய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது. முன்னொருபோது இலத்தீனமெரிக்க நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த கியூபா இன்று சகல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் தற்போது அந்நியப்பட்டிருக்கிற ஒரே நாடு வடஅமெரிக்காதான்.

‘தவறு எங்கள் பக்கமும் இருக்கலாம்’ என கிலாரி பில்கிளின்டன் பேசுகிற காலம் இது.

கியூபக் கலைஞர்களின் சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் முன்னிட்டு இரண்டு அமெரிக்கக் கலைஞர்களின் ஆக்கங்களைச் சாநிக்குப் பரிந்துரைக்கிறேன். ‘அபோகலிப்ஸ் நவ்’ திரைப்பட இயக்குனர் பிரான்ஸிஸ் கொப்போலா, கியூபாவில் கலைஞனின் சுதந்திரம் குறித்து எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியூபா சென்ற ‘பிளட்டுன்’ திரைப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன், ஃபிடலைச் சந்தித்து இரண்டு விவரணப்படங்கள் தந்திருக்கிறார். மூன்றாமுலக மக்களும் கியூப மக்களும் ஃபிடலை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அந்த விவரணப்படத்தில் சொல்கிறார்கள். ‘தங்களுக்கென அடையாளம் தந்த தலைவன்’ ஃபிடல் என கரீபிய ஆப்ரிக்க முதியவர் சொல்கிறார். இது கியூபாவின் சமீபத்திய அரசியல் கலாச்சாரச் சித்திரம்.

கியூபாவின் அனைவருக்குமான கல்வி மற்றும் மருத்துவம் சம்பந்தமான சாதனைகளில் உலகில் கியூபாவுடன் ஒப்பிட எந்த நாடும் இல்லை. இது கியூபா குறித்த பிறிதொரு பரிமாணம்.

இதே கியூபாவில் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறை ஒப்பீட்டளவில் நிலவி வருகிறது. ஓற்றைக் கட்சி இருக்கிறது. வீட்டுவசதிப் பிரச்சினை இருக்கிறது. கியூபாவுக்கு தற்போது பயணம் செய்யவும் மியாமியிலிருந்து கியூபஉறவுகளுக்கு பணம்தரவும் ஆன தடையை ஒபாமபா அரசு தளர்த்தியிருக்கிறது.

இலத்தீனமெரிக்காவில் முன்னாள் கெரில்லாக்கள் அனைவரும் தேர்தல் அரசியலைத் தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்கர்கள் என்ற தேசியப் பெருமிதம் அவர்களுக்கிடையில் வளர்ந்து வருபதால்தான் அமெரிக்கா இந்தப் புவிப்பரப்பில் தனிமைப்பட்டிருக்கிறது.

இலத்தீனமெரிக்காவில் நிகரகுவா, பொலிவியா, எல்ஸல்வடோர் என வறிய நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் தமது சின்னஞ்சிறு தேசியம் குறித்த குறைகள் இருக்கிறது. அதுபோல பெருமிதமும் இருக்கிறது. மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்கிற மக்கள் அவ்வாறு ஆவதற்கான காரணம் பொருள்தேட்டம்.

சாநி கேனத்தனமாக உளறுகிறமாதிரி இருந்திருந்தால் கியூபா உள்ளிட்ட இலத்தீனமெரிக்க நாடுகளில் இருந்து தொண்ணூறு சதவீதமானவர்கள் இலத்தீன் அமெரிக்காவை விட்டே ஓடியிருக்க வேண்டும்.

முன்பாக இந்த நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்கு ஓடியவர்கள் அமெரிக்க ஆதரவு ராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகவே வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். மறுதலையாக கியூபாவிலிருந்து ஓடியவர்கள், பெரும்பாலானவர்களாக மயாமியில் வாழ்கிறவர்கள். பாடிஸ்டாவின் அரசியலை ஆதரித்த காரணங்களுக்காக ஓடினார்கள்.

இந்த அரசியல் யதாரத்தங்கள் ஏதும் அறியாத முட்டாளாக ஈழப்பிரச்சினையும் ஆயுதவிடுதலைப் போராட்டமும் குறித்துப் பேசுகிற வேளையில் கியூபாவின் மீது பாய்கிற ஒட்டுண்ணியாக சாநி இருக்கிறார்.

6.

அமாவும் ஜெமோவும் பாராட்டுகிற கஸ்டநாடா இலத்தீனமெரிக்காவில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கை விரும்புகிறவர். சாவேசினதும் கியூப அரசினதும் எதிர்மறை விமர்சகர். சே கியூபாவை விட்டுப் போனதற்கு பிடல்-சேகுவேரா முரண்பாடே காரணம் என்பதை முன்வைப்பவர் இவர். இந்த வாதத்தை அமாவும் முன்வைக்கிறார் ஜெமோவும் முன்வைக்கிறார். இவர்கள் இருவருடையதும் வாசிப்பு எனக்கு மெய்சிலிர்க்கிறது.

ஃபிடல் ஒரு அரசுத்தலைவர். ஓரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர். சேகுவேரா ஒரு மனோரதியமான புரட்சியாளர். முதலும் முடிவுமாக சேகுவேரா சர்வதேசியவாதி. ஃபிடலின் ஒப்புதலின்படிதான் சேகுவேரா ஆப்ரிக்கா சென்றார். அங்கிருந்து மீண்டு மாறுவேடத்தில் பொலிவியா சென்றார். எந்த இரண்டு புரட்சியாளர்களும் போலவே அவர்களுக்கிடையிலும் அரசியல் முரண்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் மற்றும் சீனா தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு இருந்தது.

சோவியத் யூனியனின் அரசியல் பொருளியல் அணுகுமுறைகள் குறித்து முதலில் அதிருப்தி வெளியிட்ட ஃபிடல், பிற்பாடு கியூபாவின் அன்றைய நலன்கருதி சோவியத் யூனியனை ஆதரித்தார். சேகுவேரா அவ்வாறு இருக்கவில்லை. சேகுவேரா மரணமுற்று நாற்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிறைய புதியநூல்களும் விவரணப்படங்களும் வந்திருக்கின்றன. அமாவும் ஜெமோவும் இவ்வகையில் செய்வது பச்சை அயோக்கியத்தனம்.

பொலிவியாவில் அல்லாவிட்டால் கியூபாவிலேயே சேகுவேரா கொல்லப்பட்டிருப்பார் என எழுதுகிற ஜெமோ, இதற்கான ஆதாரம் என்ன என்பதை முன்வைக்கவேண்டும். வரலாறு இந்தக் கழிசடைத் தனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. சேகுவேராவின் மனைவியும் மகளும் மகனும் கியூபாவிலிருந்துதான் சேகுவேராவின் தொகுப்பு நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சோடர்பர்க்கின் சேகுவேரா குறித்த ஐந்து மணிநேரத் திரைப்படத்தின் 20 பிரதிகளை சோடர்பரக் ஃபிடலின் கியூபாவுக்குத்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.

ஜான் ஆப்ரஹாம் பற்றியும் கோதார்த் பற்றியும் ஜெமோ எழுதுகிறார். இலத்தீனமெரிக்க நேர்த்தியற்ற சினிமா,சாஞ்சினோஸ், இந்தியாவில் அதனை விளைந்த ரித்விக் கடக், மிருணாள் சென் போன்றவர்கள் குறித்த எந்த அறிவும் அற்ற, மேல்போக்கான கருத்துக்கள் ஜான் ஆப்ரஹாம் பற்றிய ஜெமோவின் கருத்துக்கள்.

ஜெமோ அங்காடித்தெரு, நான் கடவுள், கஸ்துரிமான், முடிந்தால் மணிரத்னம் படம் என்பதற்கு அப்பால் போகாத ஒரு பிரகிருதி. ஜான் ஆப்ரஹாமின் படங்களைக் குறித்துப் பேசுவதற்கான திரைப்படக்கலை குறித்த எந்த தகைமையுமற்ற அறிவிலி ஜெயமோகன்.

செய்நேர்த்தியை நிராகரித்தவர், காரணத்துடன் நிராகரித்தவர் ஜான் அப்ரஹாம். இது கலை ஈடுபாடின்மையாக ஜெமோவுக்குத் தோன்றலாம். ஆனால் மக்கள் மீதான ஈடுபாட்டை முன்வைத்து நிலவிய கலைமதிப்பீடுகள் மீதான நிராகரித்தலை வலியுறுத்திய ஒரு தலைமுறைத் திரைக் கலைஞர்களின் கோட்பாடாக இருந்தது நேர்த்தியற்ற சினிமா மீதான அக்கலைஞர்களின் பார்வை.

இப்படியான எந்த வரலாற்று அறிவும் இல்லாமல், காதல், நான் கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிற ஒரு அற்பத்தனமான சினிமாப் பார்வை கொண்ட ஜெயமோகனது ஜான் ஆப்ரஹாம் பற்றிய கூற்று வக்கிரம் கொண்டது.

ஜெமோவின் சில தனிப்பட்ட புலம்பல்களுக்கு அவ்வப்போது நான் பதிலளிப்பதில்லை. எஸ்.வி.ஆர், அ.மா, யமுனா ராஜேந்திரன், அ.முத்துக்கிருஷ்ணன் போன்றோர் இந்துத்துவம்-இஸ்லாம் குறித்த ஒற்றை அரசியலை முன்வைக்கிறார்கள் என எழுதுகிறார் ஜெமோ.

ஜெமோ நால்வரதும் எழுத்துக்களை வாசித்தவன் இல்லை என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். அமாவின் அரசியல் இஸ்லாம் குறித்த விமர்சனமற்ற நிலைபாட்டை நான் முற்றாக நிராகரித்திருக்கிறேன். அமாவின் அழிவுவகைப் பின்நவீனத்துவத்தை நான் ஏற்பவன் இல்லை. ஜெமோ முட்டாள்தனமாகத் தனது இந்துத்துவ அரசியல் சௌகரியத்திற்காக நால்வரையும் ஒற்றைச் சிமிழில் அடைக்கிறார்.

ஜெமோ செய்து கொண்டிருக்கிற இன்னொரு மோசடி நான் நேசுகுமாரையும் அவரையும் ஒருவர் எனச் சொல்லி எழுதியதாகவும், அதனால் மனஉளைச்சல் தாளாது எனக்குப் பல மின்னஞ்சல் அனுப்பி மன்றாடியதாகவும் எழுதியிருக்கிறார். இதே விதமான விளையாட்டை திண்ணையில் நேசகுமாரும் எடுத்துப்போடுகிறார்.

ஜெமோ, நேசகுமார், சூர்யா என்கிற சூர்யா, அரவிந்தன் நீலகண்டன் தொடர்பாக நான் எழுதிய ‘ஸைபர் வெளி’ பற்றிய கட்டுரை பதிவுகள் வலைத்தளத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்தக் கட்டுரையில் நான் சொன்ன விடயங்களில் இன்னும் நான் தெளிவாக இருக்கிறேன்.

அச்சு ஊடகங்களை விடவும் ஸைபர் வெளியல் இந்துத்துவம் செயல்வோகத்துடன் இருக்கிறது. புனைபெயரில் எழுதுகிற பலர் ஒன்றே போலத் தோற்றம் தருகிறார்கள். இவர்களுக்கிடையில் பொதுத் தன்மைகள் இருக்கிறது. இவர்கள் தத்தமது சொந்த அடையாளங்களுடன் வராத வரையிலும் இவர்கள் ஒரே பெயரில் எழுதுவதாகவே கொள்ள முடியம்.

அதனோடு மறைந்துநின்று கொண்டு மற்றவர்களை கேவலமாக எழுதுகிறவர்களில் இந்த நால்வரில் முக்கியமானவர் சூர்யா என்கிற சூரியா. அதே ஜெயமோகனின் எழுத்து நடை. ஜெயமோகன் புராணம் என்பது தவிர இவர் எதுவும் எழுதியதில்லை.

நான் அந்தக் கட்டுரைகளில் கேட்ட பொதுவான விடயம் சொந்தப் பெயரில் அடையாளங்களுடன் வந்து எழுதுங்கள் என்பதுதான். சொந்தப் பெயரில் முத்தம் கொடுக்கலாம் கொலைவெறியாட்டமும் ஆடலாம். இப்படியானவர்களோடு விவாதிப்பது எளிது என எழுதினேன்.

நேசகுமார் நான் ஜெமோ இல்லை என்றார். ஆடிப்படைவாத இஸ்லாமியமர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்றார். அவர் கருத்துத்தளம் புரிகிறது. அவரது இஸ்லாமிய வெறுப்பு புரிகிறது. அவரது அர்.எஸ்.எஸ்.சார்பு புரிகிறது. அவர் நவீன இலக்கியம் அதிகமும் அறிந்தவர் அல்ல எனவும் பரிகிறது. அவர் ஜெமோ இல்லை என்பதும் புரிகிறது. நல்ல விடயம். அரவிந்தன் நீலகண்டன் சுயவாக்குமூலம் தந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது தெளிவாக இருக்கிறது.

சூர்யா அல்லது சூர்யா தனது சொந்தப் பெயர் அல்லது அடையாளம் தெரிவிக்காததற்குக் காரணம் என்ன தெரியுமா?

இலக்கியம் என்றாலே இளக்காரமாகப் பார்க்கிற சினிமா உலகத்தில் இயக்குனராக அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். ஆகவே, ரகசியப் பெயரில் எழுதுகிறாராம். சொந்த அடையாளல் சொல்ல முடியாதாம். என்ன நம்பகமான பெகாறுத்தமான பதில் பாருங்கள். இன்றைய தேதிக்கு விநியோகமாகிற பாதி இலக்கியப் பத்திரிக்கைகளை சினிமா உதவி இயக்குனர்கள்தான் விலை கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் இன்றைய திகதிக்கு கால்தடுக்கி விழுந்தால் எதிரில் ஒரு இலக்கியவாதியை வசனகர்த்தாவாகப் பாரக்கலாம். சூர்யா அல்லது சூரியா என்ன கதை அளக்கிறார் பாருங்கள்.

இதில் ரொம்பவும் வேக்கையான விடயம் என்னவென்றால், இந்தக் கட்டுரையால் நிரம்பவும் பதட்டமும் கலவரமும் அடைந்தவர் ஜெமோதான்.

ஏன் சொந்தப் பெயரில் எழுத முடியாது என்பதற்கு அவர்தான் வியாசங்கள் எழுதினார். அரவிந்தன் நீலகண்டன் நேசகுமார் எல்லோருக்கும் அறிவித்து மறுப்பும் எழுதச் சொன்னார்.

சூர்யா அல்லது சூர்யா ஜெயமோகன் அல்லது ஜெயமோகனின் பினாமி என நான் எழுதினேன். ஏனென்றால் சூர்யா அல்லது சூரியாவின் திண்ணை மற்றும் பதிவுகள் எழுத்துக்களின் பண்புமூன்று வகையில் மட்டுமே எழுதப்பட்டது. முதலாவதாக ஜெயமோகனின் நூல்களை எப்படி வாசிக்க வேண்டும் என ஜெமோவின் நடையில் தத்துவ விளக்கங்களுடன் அவர் எழுதினார். ஜெமோ மீதான விமர்சனங்களை நரகல் நடையில் அவர் எதிர்கொண்டார். ஈழத்தமிழ் இலக்கியம் பாலான அரசியல் என்ளலை முன்வைத்தார்.

இவர் ஒன்று ஜெயமோகன் அல்லது ஜெயமோகனின் பினாமி என நான் எழுதினேன். ஐம்பதாணடு கால நவீனத் தமிழிலக்கியத்தையும் சிறுபத்திரிககை விவாதங்களையும் அறிந்த, இணையத்தில் மட்டுமே எழுதிய, விட்டால் ஜெமோவின் ‘சொல்புதிதில்’ மட்டுமெ எழுதிய சூர்யா அல்லது சூரியா அதன்பின்னாக இணைய உலகைவிட்டே காணாமல் போய்விட்டார். ஜெயமோகன் இருக்கிறார்.

இதில் எங்கே அவதூறு இருக்கிறது? ஸைபர் ரியாலிட்டியின் புகைமூட்டமும் நிஜமும் குறித்த இந்துத்தவாதிகள் குறித்த ஒரு தேட்டம் இது. இதனை ஏதோ நேசகுமார் ஜெமோ ‘டபுள்ஆக்ட்’ விசயமாகத் தொடர்ந்து ஜெமோ முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் செய்கிற இன்னொரு கயமைத்தனம் அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மன்றாடியதாக எழுதிக் கொண்டிருப்பது.

ஜெமோ நிறைய மனப்பிராந்தியில் வாழ்கிறவர் என்கிற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. ஜெமோ, நீங்கள் எதுவும் எனக்கு மின்னஞ்சல் செய்யவில்லை என்பதை நான் இப்போது உறுதிப்படுத்தகிறேன். அன்றைய சூழலில் பரஸ்பரம் மின்னஞ்சல் அனுப்புகிற அல்லது பெறுகிற இணக்கம் எம் இருவருக்குமே இல்லை. அப்புறம் எப்படி நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மன்றாடுவது சாத்தியம்?

எனக்கு நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடன் நட்போ உரையாடலோ எப்போதும் சாத்தியமில்லை. அது போல உம்முடனும் நட்போ உரையாடலோ சாத்தியமில்லை. தயவு செய்து உளறிக் கொட்டி மற்றவர்களை அரக்கர்கள் மாதிரி சித்தரிக்கிற கேனத்தன்ததை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

வன்முறை ஆயதப்போராட்டம் என்பதை காந்தியை முன்வைத்து இந்திய அரசுக்கும், 500 தடவைக்கும் மேலாகப் .பிடலைக் கொல்லத் திட்டமிட்ட அமெரிக்க அரசுக்கும், இனக்கொலை மன்னன் மகிந்த ராஜபக்சேவுக்கும் போதியுங்கள்.

அறம், முறம், புறம், சுரம் என்கிற அளவில் நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். அதை விட்டுவிட்டு பெரிய ‘புடுங்கிகள்’ மாதிரி பிரபாகரன் பற்றியும், சேகுவேரா பற்றியும் அளந்து கொண்டிருக்க வேண்டாம்.

7.

எஸ்ரா என் மாதிரியே நினைக்கலாம், என சாநி சொன்னதால் கதி கலங்கிப் போயிருப்பார் போலிருக்கிறது. சாநிக்கும் ஜெமோவுக்கும் விழுந்த மொத்து தனக்கும் விழக் கூடாது என்கிற முன்னுணர்வுடன் ‘எல்லோர்க்கும் நல்லவர்’ ஈழப் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

சோகமான விடயம் என்னவென்றால் நண்பர் நாகார்ஜூனன் வலைப்பதிவு மூலம்தான் ஈழப்பிரச்சினையே இவருக்குத் தெரிகிறது. இலக்கியமென்றால் இணையத்திலிருக்கிற அத்தனை செய்திகளையும் வெட்டி ஒட்டி ஆராய்ச்சி செய்கிற எஸ்ராவின் அரசியல் அக்கறை நாகார்ஜூனன் தளத்திலும் தமிழ் வெகுஜனப் பத்திரிக்கை மற்றும் ஊடக தளத்திலும்தான் நிற்கிறது.

எஸ்ராவின் அரசியல் அறிவை உருவாக்குகிறவர்கள் தமிழ் வெகுஜன ஊடகத்துக்காரர்கள்தான்;. எத்தனைக் கேவலமான நிலைமை பாருங்கள்.

எஸ்ராவின் அசட்டுத்தனம் அல்லது நேர்மை என்னவென்றால் பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது. கீழ் வரும் ஐந்து பாயிண்டகளில் எஸ்ரா யாரைக் குறிப்பாகச் சொல்லுகிறார் என்று ஒரு தெளிவில்லை. பொத்தாம் பொதுவாக வாய் வீச்சு வீசுகிறார்.

எவன் எவன் ஈழத்துக்கு அட்வைஸ் செய்தான் என்று எழுதும் நேர்மை எஸ்ராவுக்கு இருக்கிறதா?

எஸ்ராவின் முதல் மேற்கோள் இது : நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்ரா அவர்களே, யார் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

எஸ்ராவின் இரண்டாவது மேற்கோள் இது : ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாறிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?

இந்த அறிவுவேசைத்தனத்தை, வன்முறை-அகிம்சை எனும் எதிர்மையில் செய்து கொண்டிருப்பது யார்? அது சாநியும் ஜெமோவும் அல்லவா? பெயரைக் குறிப்பிடாமல் எதற்கு குசுகுசுத்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கறீர்கள் எஸ்ரா அவர்களே?

இது எஸ்ராவின் மூன்றாவது மேற்கோள் : பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

செய்தி அப்புறமாகப் பிராக்கெட்டில் வதந்தி என எழுதுகிறீர்கள். செய்தியா வதந்தியா நிஜமா? புனைவுக்கும் நிஜத்துக்கும் பிம்பத்திற்கும் யதார்த்ததிற்கும் இடையிலான இடைnளியை மயங்கவைப்பது இலக்கியத்துக் பொருந்தும். அரசியலில் இதற்கு அர்த்தமில்லை. குறைந்தபட்ச அறிவு நேர்மை உங்களுக்கு இருந்திருந்தால் இதுபற்றிக் கூட அடர்த்தியான ஒரு கட்டுரையை உங்களால் எழுதியிருக்க முடியும். வார்த்தைகளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள். இயலாமையைச் சுரண்டும், அவலத்தைச் சுரண்டும் தமிழக உணர்ச்சிகர பொதுப்புத்திதான் உங்களுக்குள் செயல்படுகிறது கதாமகனே.

இது எஸ்ராவின் நான்காவது மேற்கோள் : ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

நல்ல விடயம். முதலாக அறிவுவேசைத்தனத்தை செய்கிற ஜெமோ உங்கள் நூலுக்கு எழுதிய விமர்சனத்தை உங்கள் வலைத்தளத்திலிருந்து அகற்றி விடுங்கள். தமிழ்சினிமாவுக்கு வசனம் எழுதுவதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வையுங்கள். தமிழ் சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கிற தார்மீகத் தண்டனையாக அது இருக்கும். செய்வீர்களா எஸ்ரா?

குறைந்தபட்சம் கோணங்கியோடு புதுதில்லி வரை போய் ஈழத்தமிழருக்காகப் பேச உங்களுக்கு வாய்ப்பிருந்தது. அதனையாவது நீங்கள் செய்திருக்கலாம் இல்லையா எஸ்ரா?

இரு எஸ்ராவின் கடைசி மேற்கோள் : நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.

சாநி, ஜெமோ, எஸ்ரா மூவருக்கும் எவ்வளவு பாதுகாப்பு உணர்வு பாருங்கள். எதுவேனும் தத்துப் பித்தென உளறிவிட்டாலும் அறிவோ ஈடுபாடோ இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளலாம். அறிவும் ஈடுபாடும் எப்படி வரும்? தேடலும் படிப்பும் இருந்தால்தான் வரும். அக்கறை இருந்தால்தான் வரும். தீவிரமான அரசியல் இந்த இரண்டுக்கும் ஆபத்து. ஆள்பவருக்குச் சார்பாக எழுதினால் இது இரண்டையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

அறிவோ அக்கறையோ ஈடுபாடோ இல்லாமல் இலக்கிய விமர்சனம் எழுதினால் அவர்களை மூவரும் நார் நாராகக் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாநி துருக்கிக்குப் போய் ஓரான் பாமுக்கையும், தென்அமரிக்கா போய் மரியா வர்கஸ் லோசாவையும் இழுத்து வந்துவிடுவார். ஜெமோ தாஸ்தாயவ்ஸ்க்கி, உளவியல், உபநிடதம்,அகோரி, வைணவம் என்று கலந்துகட்டி ஜமாயத்துவிடுவார்.

எஸ்.ரா. வுரலாற்று ஆய்வுகளைப் புரட்டோ புரட்டென்று புரட்டி பா.வெங்கடேசனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.

ஆனால் அரசியலை மட்டும், அதுவும் விடுதலை அரசியல் பற்றி, அக்கறையில்லாமல், அறிவு இல்லாமல், ஈடுபாடில்லாமல், நாங்கள் இலக்கியவாதிகளாக்கும் எனப் பீடிகையோடு எழுதுவார்கள்.

எவரும் எதையும் யாரும் எழுதலாம். எழுதாமலும் விடலாம். அது அவரவரர் தெரிவு. அதற்கான சுதந்திரத்தை எவரும் தட்டிப் பறித்துவிட முடியாது.

முஷ்டிமைதுனம் செய்து கொண்டிருக்கும் போதும் எழுதலாம், கக்கூசுக்குப் போகும் போதும் எழுதலாம், பூஜையிலிருக்கும் போதும் எழுதலாம். சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதும் எழுதலாம். ஆனால் எதை எழுதினாலும் அதனை ஈடுபாட்டுடன் அக்கறையுடன் அறிவுடன் எழுதவேண்டும். இல்லையெனில் எழுதக் கூடாது. அதனைத் தான் மானுடவிடுதலையில் அக்கறையும் ஈடுபாடும் அறிவுத் தேட்டமும் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் மூன்றுபேரும் இந்த விடயத்தில் சொல்சிலம்பம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்.

பெரிய மேதாவிகள் போலவும் எல்லாம் அறிந்த தெய்வங்கள் போலவும் வாசகர்களைக் கேனயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஈடுபாடில்லாத, அக்கறையில்லாத, அறிவில்லாத விடயங்கள் குறித்து எழுத வேண்டாம்.

உங்களுக்கு அலப்பறை பண்ண எத்தனையோ மைதானங்கள் இருக்கிறது. அங்கே போய் உங்கள் கூட்டுக் கும்மியை அடித்துத் தொலையுங்கள். இரவில் அப்பவும் தூக்கம் வரவில்லையானால், கால்களுக்கிடையில் கைகளையிறுக்கிப் பொத்திக்கொண்டு படுங்கள்.

Charu Nivedhita, Paithiyakkaaran, Jeyamohan, French Translations by நாகார்ஜுனன்

June 30, 2009 Leave a comment

எழுத்தாளர் சாரு நிவேதிதா இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதி தற்போது வெளியிட்டிருக்கும் Mummy Returns பகுதி-1 பதிவை வாசித்தேன். இரு ஆண்டுகள் முன்பு 2007 செப்டம்பர் தீராநதி இதழில் கடற்கரய் என்னுடன் நிகழ்த்திய நேர்காணலில் என்னை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை இது.

அத்துடன், “இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்துகொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்” என்கிறார் சாரு நிவேதிதா.

பைத்தியக்காரன் என்பவர் சாரு நிவேதிதா குறித்து எழுதிய இந்தப்பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் உள்ள சாரு குறித்த பல கருத்துக்களுடன் எனக்கு ஒப்புதலும் இல்லை. பைத்தியக்காரன் என்பவர் எழுதும் எந்த விஷயத்துக்கும் என்னைப் பொறுப்பாக்க முடியாது. பொறுப்பாக்குவதில் பொருளில்லை.

பைத்தியக்காரன் என்பவருக்கு ஏற்கனவே எழுதிய மின்-அஞ்சலில், “சாரு நிவேதிதாவுக்கு நான் பதில் எழுதின பிறகு, அதை அவர் பிரசுரித்த பிறகு, இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம்” எனவும் “சாரு நிறைய வாசிக்கக்கூடியவர். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை என்னுடன் நெருங்கிப் பழகியவர். ஒரே தலைமுறையைச் சார்ந்த பலரும் பரஸ்பரம் பலரின் எழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டோம். அது அருமையான காலகட்டம், இடைநிலை-இதழ்களின் கை ஓங்காத காலகட்டம், அப்போது யாருக்கு யார் யாரை அறிமுகம் செய்தோம் என்பது அவ்சியமற்றதல்லவா..” என்றும் எழுதியிருக்கிறேன்.

இப்போது பின்வரும் மின்-அஞ்சலை சாரு நிவேதிதாவுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அன்புள்ள சாரு

(தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் குறித்த) என் பதிலை வெளியிட்டதற்கு நன்றி. இத்துடன் இந்த விஷயம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தேன்.

தற்போது மம்மி ரிட்டர்ன்ஸ்-1 பதிவில் என்னைப் பற்றி இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியதை வெளியிருட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறீர்கள்:

“இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்து கொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்.”

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! பைத்தியக்காரன் என்பவர் எழுதிய பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் வந்த விஷயங்களுடன் எனக்கு எவ்வித ஒப்புதலும் இல்லை. என்னை நோக்கிய உங்கள் எதிர்வினை அவசியமற்றது.

இதற்குமேல் நேரில்தான் பேசவேண்டும்.

தங்கள்
நாகார்ஜுனன்

சாரு நிவேதிதாவுடன் பேசிவிடலாம் என என்னிடமிருந்த அவருடைய கையகத்தொலைபேசி எண்ணை அழைத்தேன். தொடர்பு சரிவரக் கிட்டவில்லை. என்மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். என்மீது கோபம் தேவையில்லை, அவசியமற்ற கோபம், ஆற வேண்டும் என விரும்புகிறேன். – நாகார்ஜுனன்.